Categories
Uncategorized

சந்திரோதயம்-3

Free Download WordPress Themes and plugins.

சந்திரோதயம்-3

பள்ளியிலிருந்து அழைப்பு வந்தவுடன் வருணா வீட்டிலிருந்தும், சந்துரு தன்னுடைய வேலையிடத்திலிருந்தும் பதறியடித்துக்கொண்டு பள்ளியை வந்தடைந்தனர்.

இருவரும் வேறு வேறு பாதையில் வந்ததால் வருணா வரும் வழியிலேயே சந்துருவை அழைத்து “ஜி! என்ன விஷயம்ன்னு உங்ககிட்ட சொன்னாங்களா? என்கிட்ட எதுவுமே சொல்லலை… பயமா இருக்கே! இந்த ஆரோ என்னத்தை செஞ்சு வச்சான்னு தெரியலையே”, என புலம்ப ஆரம்பித்திருந்தாள்.

அவளுடைய அந்த சந்தேகம் சந்துருவுக்கும் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “முதலில் எடுத்த உடனே நம்ம பசங்க தப்பு செஞ்சுருப்பாங்க அப்படின்னு நீயே நினைக்காதே வருணா! என்னனு போய் தெரிஞ்சுக்கிட்டு பிறகு முடிவு பண்ணலாம். பசங்க ஏதாவது நல்லது செஞ்சா அதை பாராட்டுவதற்கு கூட நம்மளை வர சொல்லிருக்கலாம். நீ இதைப் பத்தியெல்லாம் யோசிக்காம சீக்கிரமா வந்து சேரு… முதல்ல வண்டி ஓட்டுறப்ப போன் பேசாம வா!” என சற்றே அதட்டலாக கூறி அழைப்பை துண்டித்து விட்டு பள்ளியை நோக்கி விரைந்தான்.

வருணா முதலில் வந்து சேர்ந்தாலும் சந்துரு வரும்வரை பிரின்ஸிபல் அறைக்கு செல்ல விரும்பாமல் பள்ளியின் கேட் அருகில் நின்று கொண்டாள். சந்துரு வந்த பின்னர்தான் இருவரும் இணைந்து பிரின்ஸிபல் அறைக்கு சென்றனர்.

இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் உட்காருங்கள் என்று கூட சொல்லாமல் பிரின்ஸிபல் கத்த ஆரம்பித்து விட்டார். “வீட்டுல என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? பிள்ளைங்களை ஆரம்பத்தில் சோ்க்குறப்பவே இங்க ஒழுக்கத்துக்குதான் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம் அப்படின்னு நான் சொன்னேனா? இல்லையா? நீங்களும் எங்க பசங்களை மாதிரி யாருமே இருக்க முடியாது அப்படின்னு சொல்லிதானே சேர்த்துட்டு போனீங்க…

இப்ப நடந்ததுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?”, என தலையும் இன்றி, வாலுமின்றி ஆவேசமாக பேசியதில் பயந்துபோன வருணா சந்துருவை சற்று குனியுமாறுக் கூறி அவனது காதில் “ஜி! இப்ப என்ன ஆச்சுனு இந்தம்மா இந்த கத்து கத்துறாங்க? எதுக்குன்னு புரியலையே? என்ன விஷயம்ன்னு நான் கேட்கட்டுமா?”, என முணுமுணுத்தாள்.

ஏற்கனவே பிரின்ஸிபல் ஒழுக்கம் என்ற ஒரு வார்த்தையை உபயோகித்ததில் சரியான கடுப்பில் இருந்த சந்துரு அவரிடம் அக்கடுப்பை காட்ட முடியாமல் தன்னுடைய அருமை மனைவியிடம் “வாயை மூடு”, என பதிலுக்கு முணுமுணுத்து விட்டு “சாரி மேடம்! பசங்க ஏதோ தப்பு பண்ணிருக்காங்கன்னு எனக்கு புரியுது. ஆனா என்னன்னு சொல்லி நீங்க சொன்னீங்கன்னா கண்டிப்பா நாங்க கண்டிக்கிறோம். இனிமே அது தப்பா இருந்தா தொடராது அப்படின்னு சொல்லி நான் உறுதிமொழி கொடுக்கிறேன்”, என சற்று அமைதியாகவேக் கூறினான்.

சந்துருவின் அமைதியில் நிதானத்திற்கு வந்த பிரின்ஸிபல் “முதல்ல உட்காருங்க”, என அவர்களை அமர வைத்துவிட்டு தன் முன்னால் இருந்த தண்ணீரை எடுத்து மடக் மடக் என்று குடித்தார். அதற்கும் வருணா மனதில் கவுண்டர் கொடுத்து கொண்டிருந்த பொழுது சந்திரு அவளது காதில் மட்டும் விழுமாறு “வாயை திறந்த கொன்னுடுவேன்”, என மிரட்டி அமைதி காக்க வைத்தான்.

தண்ணீர் குடித்து முடித்த பிரின்ஸிபல் “மிஸ்டர் சந்துரு! வீட்ல உங்க பசங்க எப்படி நடந்துக்குறாங்கன்னு எனக்கு தெரியாது. இங்க சேர்ந்த புதுசுல எந்தவித தொந்தரவும் இல்லை. ஆனா இப்ப ஒரு ஒரு வாரமா உங்க பையன் அவன் கிளாஸ்ல இருக்குற பொண்ணுங்க எல்லார்கிட்டயும் ஐ லவ் யூ சொல்லி இருக்கான். அவங்களும் சின்ன குழந்தைங்கதானே!

அதுக்கு அர்த்தம் தெரியாமல் வீட்ல போய் என் கிளாஸ்ல இருக்கிற ஒருத்தன் இப்படி சொன்னா அப்படின்னு சொல்லிட்டு அதே வார்த்தையை அவங்களும் பேசியிருக்காங்க. பெத்தவங்களுக்கு எல்லாம் ரொம்ப ஷாக்.ஆனாலும் சரி சின்ன குழந்தைங்கன்னு சொல்லி அவங்களும் என்கிட்ட ஆரம்பத்துலயே கம்ப்ளைன்ட் பண்ணலை. முதலில் கம்ப்ளைன்ட் இருந்தாங்கன்னா அப்பவே உங்களை கூப்பிட்டு கண்டிக்க சொல்லியிருப்பேன்.

கிளாஸ்ல இருக்கிற பிள்ளைங்ககிட்ட சொன்னது பத்தாதுன்னு பக்கத்து கிளாஸ், அதைவிட பெரிய வகுப்பில் இருக்குற பொண்ணுங்களை பார்க்கிறப்ப எல்லாம் ஐ லவ் யூ சொல்லிருக்கான். இதைப்பத்தி ரெண்டு மூணு பேரன்ட்ஸ் நேத்திக்கு வந்து கம்ப்ளைன்ட் பண்ணினாங்க. அதுக்கடுத்து கிளாஸ்ல சின்ன குழந்தைங்ககிட்ட விசாரிச்சா பொண்ணுங்ககிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கான். அதோட நிறுத்தாம இன்னிக்கு கிளாஸ் எடுக்க வந்த டீச்சர் எல்லார்கிட்டயும் சொல்லிருக்கான்.

நீங்க கேட்கலாம், ஐ லவ் யு அப்படிங்கிற வார்த்தை சாதாரணமா அன்பை பரிமாற சொல்றதுதானேன்னு! அந்த வார்த்தை சொன்னதோட நிக்காம ஏன் இப்படி சொல்றேன்னு கேட்டதற்கு அவன் கொடுத்த பதில்தான் உங்களை வர வைக்க காரணம்”, என கூறி நிறுத்தினார்.

“டேய் ஆரோ!”, என மனதில் அவனை வறுத்து எடுத்துக்கொண்டு சந்துரு பிரின்ஸிபலிடம் அடுத்து கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில்தான் வருணா தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

வருணா அமர்ந்த விதத்தை பார்த்த பிரின்ஸிபல் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சந்துருவின் புறம் திரும்பியவர் “நீங்க வீஎடுத்தனர்.சோ, திட்டியோ கண்டிக்க வேண்டாம்.

ஆனால் இந்த மாதிரி நடக்கக் கூடாதுன்னு புரிய வச்சுடுங்க… ஸ்கூல்ல நாங்க பார்த்துப்போம். பேரண்ட்ஸ் உங்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடாதுன்னு சொல்லிதான் வரவழைச்சேன். இப்ப பசங்களை கூட்டிட்டு நீங்க வீட்டுக்கு போகலாம்”, என உரைத்துவிட்டு அவர்கள் வெளியேறும் வரை கூட பொறுக்காமல் தான் முதலில் வெளியேறிவிட்டார்.

அதிர்ச்சியில் அமர்ந்திருந்த வருணாவை உலுக்கி எழுப்பிய சந்துரு “வா! ரெண்டு பேரையும் கூட்டிட்டு வீடு போய் சேருவோம். உங்க அப்பா வேற அப்ப இருந்து என் மொபைலுக்கு கால் பண்ணிட்டு இருக்காரு.உன் மொபைலை எடுத்து பாரு. உனக்கும் பண்ணியிருப்பாரு”, எனக் கூறி தன்னுடைய மகன்களை அழைப்பதற்கு அவர்களது வகுப்பிற்கு சென்றான்.

வருணா தன்னுடைய மொபைலுக்கும் ராஜேந்திரனிடம் இருந்து வந்திருந்த மிஸ்டுகால் எண்ணிக்கைகளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள். அவள் அவரை அழைக்கவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் ராஜேந்திரனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதனை அட்டென்ட் செய்தவள் “என்னப்பா இத்தனை கால் பண்ணியிருக்கீங்க?”, என எரிச்சலாகவே வினவினாள்.” இல்லை! ஸ்கூல்ல இருந்து ஏதோ பிரச்சனைன்னு சொல்லிட்டு நீ ஓடுனதா உங்கம்மா சொன்னா. அதான் உனக்கு போன் பண்ணேன். என்ன உன் மூத்த மகன் அங்கேயும் உன் மானத்தை வாங்கிட்டானா?”, என நக்கலாக வினவினார்.

“என் மகன் என்னோட மானத்தைதானே வாங்குறான். உங்க மானத்தை இல்லைதானே! நீங்க இப்ப பேசாமல் போனை வைங்க. வீட்ல வந்து என்ன விஷயம்ன்னு சொல்றேன்”, என கடுப்புடன் உரைத்துவிட்டு வருணா அழைப்பை துண்டித்த பொழுது சந்துரு தன்னுடைய இரு கைகளிலும் மகன்களை பிடித்தவாறு வந்து சேர்ந்தான்.

வருணாவிற்கு தனது மகன்களை கண்டதும் கோபம் உச்சத்திற்கு ஏறியது. முறைக்க ஆரம்பித்தவள் சந்துரு “வருணா! போய் வண்டியை எடு”, என அரட்டியதில் அமைதியாக செல்ல ஆரம்பித்தாள். அவளது முறைப்பையும், தந்தையின் அதட்டலையும் சற்றும் கண்டுகொள்ளாத இளங்கன்றுகள் இரண்டும் அப்பாவும், அம்மாவும் இருவரும் சேர்ந்து பள்ளியிலிருந்து அழைத்து செல்ல வந்திருப்பதற்கு மகிழ்ந்து போயினர்.

வருணா தன்னுடைய ஹோண்டா ஆக்டிவாவை எடுக்கும்பொழுது சந்துருவின் கையிலிருந்து விடுபட்ட ஆரோகன் தன் அம்மாவின் முன்னால் வந்து ஏறிக்கொண்டான். வழக்கமாக அவர்களது அப்பா இருக்கும் பொழுது இருவரும் அம்மாவின் வண்டியில் ஏறமாட்டார்கள். ஆனால் இன்று ஆரோகனின் நடவடிக்கையில் பெற்றோர்கள் இருவருமே சற்று புருவத்தை உயர்த்தினாலும் பிரின்ஸிபலிடம் வாங்கிய பேச்சுகளின் விளைவாக வீட்டிற்கு போய் கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என நினைத்துக்கொண்டு அந்த நேரத்தில் அமைதியாக வண்டியை எடுத்தனர்.

நால்வரும் வீடு வந்து சேர்ந்த பொழுது ராஜேந்திரன் வாசலிலேயே காத்திருந்தார். காத்திருந்தவர் சந்துருவுடன் கை கொடுத்தவாறு வந்த தன்னுடைய செல்லப் பேரன் ஆத்ரேயனை ஓடி வந்து தூக்கி கொண்டதுடன் இல்லாமல் ஆரோகனை பார்த்து “என்னடா! ஸ்கூல்ல உங்க அம்மா,அப்பாவுக்கு நல்லா பாட்டு கச்சேரி வாங்கி கொடுத்துருக்க போல… கிரேட்! இப்படியே இரு”, என சிறு பையனிடம் பேசுகிறோம் என்று எண்ணாமல் நக்கலாக கூறிவிட்டு உள்ளே சென்றார்.

அவர் பேசியதில் ஒன்றுமே புரியாத ஆரோகன் தன்னுடைய அம்மாவிடம் “அம்மா! ஸ்கூல்ல பாட்டுக்கச்சேரி வச்சாங்களா?யாரு பாடினாங்க? நீங்க ஏன் என்னையும், ஆத்ரேயனையும் கூப்பிடலை?”, என பாவமாக வினவினான்.

அதுவரை அமைதியாக இருந்த சந்துரு வருணாவிடம் “உங்க அப்பா இன்னிக்கு வாயை திறந்து ஏதாவது பேசினா பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை வருணா!”, எனக் கூறிவிட்டு உள்ளே நுழைந்து விட்டான். “நாட்டுல மாமியாரு,மருமக பஞ்சாயத்துதான் பெருசுன்னு சொல்லுவாங்க. இங்க என்னை பெத்தவரும், கட்டிக்கிட்டவரும் பண்ற பஞ்சாயத்துல நம்மள மத்தளத்தை விட மோசமான நிலைமைக்கு ஆளாக்குறாங்க”, என மைண்ட் வாய்ஸில் எண்ணிக்கொண்டு வருணாவும் ஆரோகனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

இவர்கள் உள்ளே செல்வதற்கான இரண்டு நிமிடங்களில் ராஜேந்திரன் இளையவனைத் தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டு “ஆரோ என்ன தப்பு செய்தான்?”, என கேட்டுக்கொண்டிருந்தார். இதுநாள் வரை பொறுமை காத்து வந்த சந்துரு இப்பொழுது பொறுமையை கை விட்டு விடக்கூடாது என்று எண்ணிய வருணா பள்ளியிலிருந்து பிரின்ஸிபல் அழைத்தது முதல் அவர் கூறியது வரை கடகடவென்று அனைத்தையும சொல்லிவிட்டாள்.

அவள் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ராஜேந்திரன் “அதுதான் பிறந்ததிலிருந்தே பொம்பள பிள்ளைங்க கையிலேயே வளர்ந்த அவன் எப்படி இருப்பான்? அப்படிதான் இருப்பான்”, என மேலும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் சந்துரு வாயை திறந்து “நாங்களும் அப்படி நினைச்சுதான் ஆரோகன் செஞ்சது தப்புதான். மன்னிச்சிடுங்க. இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறோம் அப்படின்னு பிரின்ஸிபல்கிட்ட சொன்னோம்.

அதுக்கு அவங்க ஆரோகனா? அவக் எப்பவுமே யார் கூடவும் பேச மாட்டான். அவனோட தம்பி கூட மட்டும் தான் பேசுவான். டீச்சர்ஸ் என்ன சொன்னாலும் அமைதியா கேட்டுப்பான். எல்லார்கிட்டயும் ஐ லவ் யூ சொல்லி வம்பு இழுக்கிறது ஆத்ரேயன் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதோட அவன் ஏன் அப்படி சொன்னான்ங்கிற காரணத்தை சொன்னதுதான் எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அந்த காரணத்தை நீங்களே உங்க செல்லப்பேரன்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க”, என அவரது வயதை மனதில் வைத்துக்கொண்டு சற்று அமைதியாக அழுத்தத்துடன் பேசி முடித்தான்.

ஆத்ரேயன் இவ்வாறு கூறினான் என சந்துரு உரைத்ததிலேயே அதிர்ச்சியாகி இருந்த ராஜேந்திரன் அவன் ஏன் இவ்வாறு கூறினான் என்கிற காரணத்தை நீங்கள் தான் கேட்க வேண்டும் என கூறியவுடன் தனது மடியில் இருந்த பேரனை பார்த்தவர் “நீயா அப்படி சொன்ன? ஏன் கண்ணா இப்படி சொன்ன?”, என அழுது வடியும் குரலில் கேட்டார்.

“நீங்கதானே தாத்தா எனக்கு கதை சொன்னீங்க! அந்தக் கதையில் எல்லாம் இப்படிதானே வந்துச்சு”, என ஆத்ரேயன் உரைத்ததும்” என்னது? ஐ லவ் யூ சொல்ல சொல்லி உங்க தாத்தா சொன்னாரா?”, என வருணா உச்ச டெசிபலில் கத்தினாள்.

ராஜேந்திரனுக்கும் அது அதிர்ச்சியாகதான் இருந்தது. நாம எப்படா இவனுக்கு ஐ லவ் யூ சொல்லி கொடுத்தோம் என அவர் தன்னுடைய மனதில் எண்ணி பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஜானகி நிலைமையை தன் கையில் எடுத்தவர் ஆத்ரேயனின் அருகில் வந்து “ராஜா! தாத்தா உனக்கு ராமாயணமும், மகாபாரதமும்தானே டெய்லி சொல்லுவாரு. அவரு எப்ப உனக்கு இப்படி சொல்லி தந்தாரு?”, என பொறுமையாகக் கேட்டார்.

“அச்சோ! பாட்டி! உங்களுக்கு இது கூட தெரியாதா? தாத்தாதான் சொன்னாரு. மகாபாரதம் சொல்றப்ப கிருஷ்ணரை சுத்தி எப்பவும் கோ்ள்ஸ் இருந்துகிட்டே இருப்பாங்க அப்படின்னு. நானும் ஏன்னு கேட்டேன். அதுக்கு தாத்தா சொன்னாரு. அவர் எல்லாரையும் லவ் பண்ணினாரு. அவங்களும் அவரை லவ் பண்ணினாங்க.அதே மாதிரி ராமாயணத்தில் இராமர் அவரோட டீச்சர் கூட ஒரு இடத்துக்கு போறப்பதான் சீதா ஆண்ட்டியை பார்த்தாராம். அப்ப டீச்சர் இருக்கிற இடத்திலதானே நாம ஐ லவ் யூ சொல்லணும். அதனாலதான் நான் ஸ்கூல்ல சொன்னேன்”, என ஆத்ரேயன் கூறிய காரணத்தில் வருணா தன்னுடைய முறைப்பை தந்தையை நோக்கி செலுத்திக் கொண்டிருந்த பொழுது சந்துரு வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

இராஜேந்திரன் தன்னுடைய மனைவியிடம் “நான் இந்த மாதிரி எல்லாம் சொல்லலை. அவனுக்கு அன்பு செலுத்தினாங்க அப்படின்னு சொன்னா புரியாதுன்னு லவ் வச்சிருந்தாங்கன்னு சொன்னேன். ஐ லவ் யூ ன்னு சொல்லி தரலை ஜானு! நீயாவது என்னை நம்பு…இதுக்கு நான் காரணமில்லை”, என அழ ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் இப்பிரச்சனைக்கு காரணமானவனோ இதெல்லாம் ஒரு விஷயமா என்பதுபோல் “தாத்தா! நீங்க சொன்னீங்களே! ஒரு பேட் ஆன்ட்டியும் ராமரை லவ் பண்ணினதாலதான் பெரிய சண்டை வந்துச்சு.அப்ப உங்ககிட்ட நான் ஏன் தாத்தா ராமா லவ் பண்ணுறப்ப அது குட் சொன்னீங்க. இப்ப ஏன் இந்த ஆன்ட்டியை மட்டும் பேட் சொல்றீங்க அப்படின்னு கேட்கிறப்ப நீங்க என்ன சொன்னீங்க?”,என அவரிடமே அக்கேள்வியை மறுபடியும் கேட்டான்.

அவருக்கு அது நன்றாகவே ஞாபகம் இருந்தது. “ராமா அவர் ஒரு ஹீரோ. அதனால ஹீரோ லவ் சொல்லலாம். பட் அந்த பேட் ஆன்ட்டி அவங்களே சொன்னது தப்பு. எப்பவுமே ஹீரோ மட்டும்தான் லவ் சொல்லணும்”, இந்த பதிலைதான் ராஜேந்திரன் ஆத்ரேயனிடம் கூறியிருந்தார். “அதுக்கு நான் சொன்னதுக்கும் நீ செஞ்சதுக்கும் என்னடா சம்பந்தம்? என மனத்தாங்கலுடன் கேட்டவரிடம் “நான் ஹீரோ தாத்தா! அதனால்தான் நானே போய் ஐ லவ் யூ சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு? என கேட்டவன் அவரது மடியில் இருந்து இறங்கி

“டேய் ஆரோ! வா! நாம போய் அந்தப் பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்திருக்கிற ஆலியாவை பார்த்துட்டு வரலாம்”, என தன்னுடைய அண்ணனை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான்.அவர்கள் இருவரும் வெளியேறியதும் தன்னுடைய மகள் மருமகனை பார்த்து “அந்த முனிவர் மாதிரி வரணும்னு சொல்லிதான் அவனுக்கு இந்த கதையெல்லாம் சொன்னேன். ஆனா இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லையே!”, என ராஜேந்திரன் புலம்ப ஆரம்பித்ததும்

சந்துருதான் “சின்ன பசங்க தெரியாத்தனமா விளையாட்டுக்கு சொல்லி இருப்பாங்க. இனிமே அந்த மாதிரி சொல்லக்கூடாதுன்னு சொன்னா புரிஞ்சுப்பான். எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுங்க மாமா! நீங்க என்ன வேணாலும் செய்யுங்க. ஆனா என் பையனுக்கு முனிவர் கதை சொல்றேன், முனியாண்டி கதை சொல்றேன் அப்படின்னு சொல்லி எதையும் சொல்லாமல் முடிஞ்சா முனியாண்டி விலாஸில் கூப்பிட்டு போய் சாப்பிட வச்சு பழக்கப்படுத்துங்க. வேற எதுவும் செய்ய வேண்டாம்”, என உரைத்ததுடன் பாதியில் விட்டுவிட்டு வந்த வேலையை தொடர்வதற்கு சென்றுவிட்டான்.

வருணாவும் பிரின்ஸிபலிடம் வாங்கிய கச்சேரியை சற்று சான்ஸ் கிடைத்துவிட்ட திருப்தியில் தன்னுடைய தந்தைக்கு நடத்தினாள். இந்நிகழ்ச்சியின் பின்னர் ஆத்ரேயனின் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துவிட்டன.

எப்பொழுதும் ஆரோகன் சுற்றும் பெண் தோழிகள் அனைவரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஆரோகனை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டான். வருணா செய்து வைக்கும் காலை நேர உணவு, மதிய நேர உணவு அனைத்திலும் வகுப்பில் இருக்கும் அந்த பொண்ணுக்கு பிடிக்கும், இந்த பொண்ணுக்கு பிடிக்கும் எனக்கூறி எக்ஸ்ட்ராவாக வருணாவின் ஹோண்டா ஆக்டிவா சில பல உணவு மூட்டைகளை சுமக்குமாறு செய்தான்.

ஆரோகனை டாமினேட் செய்ய ஆரம்பித்து இவனது பேச்சுக்களை, ஏவல்களை செய்யுமளவிற்கு அவனை பழக்கிவிட்டான்.

அதற்குப்பின் வந்த காலகட்டம் ஆத்ரேயனுக்கு குதூகலமாகவும், ராஜேந்திரனுக்கு குளிர் காய்ச்சலுடனும் கடந்தது. வருணாவும், ஜானகியும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ராஜேந்திரனை முனிவர் மாதிரி வளர்க்கிறேன்னு சொல்லி இந்த காலத்து முனிவர் மாதிரியேதான் வளர்த்திருக்கிறார் என நக்கல் அடித்துக் கொண்டனர்.

சிறுப் பையன் போகப்போக மாறி விடுவான் என அவர்கள் உணர்ந்து இருந்த காரணத்தினாலேயே இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பள்ளியிலிருந்து வந்த பின்னர் சந்துரு மகனை அருகில் இருத்தி இவ்வாறெல்லாம் கூறுவது தவறு என எடுத்துரைத்த பின் அவனும் சரி என்று கேட்டுக்கொண்டான்.

ஆனால் பள்ளியில் தானே கூறக்கூடாது என பக்கத்து வீட்டுப்பெண், எதிர்த்த வீட்டுப்பெண் என ஒவ்வொருவரிடமும் காணும் நேரம் எல்லாம் ஐ லவ் யூ என கூறிக் கொண்டிருந்தான். நடை, உடை, பாவனைகள் அனைத்தையும் டிவியில் பார்த்து பார்த்து தன்னைத்தானே செதுக்கிக் கொள்ள ஆரம்பித்து விட்டான்.

இவன் இவ்வாறு தன்னை மெருகேற்றிக் கொள்ள மூத்தவனோ தன் அன்னை, பாட்டி என்று அவர்களிடம் அடைக்கலமாக ஆரம்பித்தான். எந்தளவிற்கு பள்ளி செல்லும் முன்னர் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தானோ அந்தளவிற்கு இப்பொழுது வீட்டிலேயே அடைந்து கிடக்க ஆரம்பித்தான்.

படிக்கும் நேரங்களில் வர்ணா படிடா என்று சொன்னால் படிக்கிறேன் படிக்கிறேன் எக அலுத்துக் கொள்ளும் ஆத்ரேயன் பக்கத்து வீட்டு ஆலியா வந்தவுடன் தான்தான் அண்ணனுக்கும் சேர்த்து ஹோம்வொர்க் செய்வதுபோல் சீன் கிரியேட் செய்ய ஆரம்பித்தான். இதெல்லாம் எங்க போய்தான் முடியுமோ என வருணா சந்துருவிடம் அவ்வப்பொழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய அட்டகாசங்களை பெருக்கிக் கொண்டு ஆரோகனை தன் வழியைப் பின்பற்றுமாறு பழக்கி வைத்திருந்த ஆத்ரேயனுக்கு கொள்ளளவு நன்மைகள் கிட்டின. இவற்றில் மட்டுமல்ல உணவு விஷயத்திலும் இருவரும் மாறுபட்டு வளர ஆரம்பித்தனர்.

ஆரோகன் சுத்த சைவமாகவும், ஆத்ரேயன் ஊர்வன, பறப்பன, நீந்துவன நடப்பன என எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் டேஸ்ட் செய்பவனாகவும் மாறுபட்டு வளர்ந்து இரட்டையர்களின் இலக்கணத்தையே மாற்றிக் கொண்டிருந்தனர்.

இருவருக்கும் சேமிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே வரவேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளுக்கான காயின் பேங்கை(உண்டியல்) பழக்கி வைத்திருந்தனர்.அவ்வப்பொழுது சந்துரு, வருணா இல்லையென்றால் இருவரின் பெற்றோர்களோ நாணயங்களை தந்து அந்த காயின் பேங்கில் போடுவது ஆத்ரேயன், ஆரோகனின் வழக்கமாக இருந்தது.

அதுபோன்றே அந்த வார இறுதியில் ஆத்ரேயனை அழைத்து “டேய்! இந்தா இதுல 30 காய்ன்ஸ் இருக்கு. அவனுக்கும் அதே அளவுதான் கொடுத்திருக்கேன்… அதனால நீ அவனோட உண்டியலில் கையை வைக்க கூடாது, சரியா?”, என்ற சந்துருவை மேலும், கீழும் பார்த்தவன்

“எல்லாம் சரிதான் அப்பா! நீங்க எங்க உண்டியல்ல கை வைக்காதீங்க”, எனக்கூறிவிட்டு தான் பேசிய வார்த்தைகளில் அதிர்ந்து நின்ற தந்தையை திரும்பிக்கூட பார்க்காமல் தன்னுடைய பெண் தோழியான ஆலியாவின் தோளில் கையைப் போட்டவாறே “அவர் எப்பவுமே இப்படிதான்… இதையெல்லாம் நீ கண்டுக்காதே!”, எனக் கூறி அழைத்துச்சென்றான்.

சந்துரு ஆத்ரேயன் உரைத்துவிட்டு சென்றதில் “இவனைப் பாரு வருணா!”, எனக் கூறியதும் அதுவரை அவ்விடத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ராஜேந்திரன் “நீங்க என்னதான் இருந்தாலும் வெளியாளா இருக்கிற அந்த சின்ன பொண்ணு முன்னாடி அவனை அப்படி குறைச்சு பேசலாமா? அவன் ஏன் ஆரோகனோட உண்டியலில் கையை வைக்க போறான்?”, என பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

அவரிடம் பேசுவது வேஸ்ட் என்று நினைத்துக்கொண்டு சந்துரு வருணாவின் அருகில் வந்து தலையில் அடித்துக்கொண்டு “உங்கப்பாவுக்கு என்ன பட்டாலும் ஒன்னும் செய்ய முடியாது… நீயே அதற்கான காரணத்தை சொல்லி”, எனக் கூறிவிட்டு தங்களின் அறைக்குள் நுழைந்து விட்டான்.

” அப்பா! நீங்க வேற புரியாம பேசாதீங்க. இவன் என்ன பண்றான் தெரியுமா?வீட்ல எந்த இடத்துல சில்லரை காசிருந்தாலும் எடுத்துட்டு போய் அவனோடு உண்டியலில் போட்டுக்குறான். அதுபோக ஆரோகிட்ட எவ்வளவு காசு இருக்குன்னு கவுண்ட் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு கவுன்ட் பண்றப்ப அவனோட காசை எடுத்து தன்னோட உண்டியலில் போட்டுக்குறான்.

நீங்க தான் ஏதோ முனிவர் பேரு வச்சா அவரை மாதிரியே வருவான் அப்படின்னு சொன்னீங்க. ஆனா ஆத்ரேயன் செய்றதெல்லாம் பார்க்கிறப்ப நிஜமாவே இந்த காலத்து சாமியாா் மாதிரிதான் இருக்கு “, என்று வழக்கம்போல் வார்த்தைகளில் குத்திவிட்டு வருணாவும் நகர்ந்துவிட்டாள்.

என்னதான் பேரன் தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணனாக மாறினாலும் ராஜேந்திரனின் மனம் இதெல்லாம் சிறிது காலத்திற்கு மட்டுமே என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவரே ஆத்ரேயன் கட்டுக்கடங்காத ஆறாகதான் இருப்பான் என்பதை உணர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி அதற்கு அடுத்து வந்த வாரத்திலேயே நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியின் விளைவாக வருணாவிற்கு ஏற்பட்ட கோபத்தில் ராஜேந்திரன் சிக்கி சின்னாபின்னமானாரா? இல்லையெனில் ஆத்ரேயனின் பழக்கங்கள் முன்புபோலவே மாறினவா?

1 reply on “சந்திரோதயம்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *