வாழ்வே நீதானடி! அத்தியாயம் -11

அத்தியாயம் – 11
அங்கிருந்த இரு நாட்களிலும் பெற்றோரிடம் அதிகம் பேசிக் கொள்ளாமல் தனித்தே தனது யோசனையிலேயே மூழ்கி இருந்தான். தம்பியிடம் மட்டும் அன்னைக்கு எப்படி விஷயம் தெரிந்தது என்று கேட்டறிந்து கொண்டான்.
என்ன முயன்றாலும் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பதற்கான தீர்வு கிடைக்கவில்லை. அவள் இதை எப்படி எதிர்கொள்வாள் என்று எப்படி யோசித்தாலும் புரியவில்லை. நேரத்தை நெட்டி தள்ளிவிட்டு அங்கிருந்து கல்லூரிக்கு கிளம்பினான். கிளம்பு போது கூட மறைமுகமாக தனது சத்தியத்தை மறந்து விடாதே என்று கூறினார்.
ஹாஸ்டல் சென்று இறங்கியவனின் முகத்தைக் கண்டு திவாகரும், சேகரும் அதிர்ந்து போயினர்.
“மச்சி என்னடா உடம்புக்கு முடியலையா? என்னவோ போல இருக்கியே?”
பையை ஓரமாக வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தவன் சலிப்புடன் “மச்…ஒன்னுமில்லடா” என்றான்.
“நிறைய வேலையாடா? ரொம்ப டயர்ட்டா தெரியிற…கொஞ்சம் நேரம் படுத்து தூங்கிட்டு அப்புறமா படிக்க ஆரம்பிடா” என்றான் சேகர்.
அதற்க்கு பதிலேதும் பேசாது இறுக்கி கண்களை மூடி படுத்துக் கொண்டான். அவனது குடும்ப சூழ்நிலையை எண்ணியும், வேலையின் காரணமாகவும் சோர்வாக தெரிகிறான் என்றெண்ணிக் கொண்டனர் நண்பர்கள்.
தான் வந்ததை ஹரிணிக்கு போன் மூலம் தெரிவிக்காது விட்டான். கஷ்டப்பட்டு கவனத்தை படிப்பில் செலுத்திக் கொண்டிருந்தான். தேர்வு நேரமாக இருந்ததால் அவளும் படிப்பில் கவனமாக இருந்ததால் முதலில் அவனிடமிருந்து போன் வராததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நாட்கள் ஓடியது அவளது கண்ணில் படாமலே தானுண்டு படிப்புண்டு என்று சுற்றிக் கொண்டிருந்தான். அவன் ஊரிலிருந்து வந்த மூன்றாவது நாள் மாலை நேரம் ஹரிணி அவனது மௌனத்தை கண்டு கொண்டாள்.
‘என்ன ஹச்சு ஊருக்கு போயிட்டு வந்து போன் கூட பண்ணல? அப்படி விழுந்து விழுந்து படிக்கிறானா?’ என்று எண்ணி அவனது போனுக்கு முயற்ச்சித்தாள்.
ரிங் போய் கொண்டிருந்ததே தவிர எடுப்பதற்கான அறிகுறியே காணவில்லை. யோசனையுடன் ஹர்ஷாவின் எண்ணை விட்டு திவாகரின் எண்ணுக்கு அழைத்தாள்.
“டேய் திவா! எங்கடா உன் பிரெண்ட்? போனும் பண்ணல நான் அடிச்சாலும் எடுக்கல?” என்றாள் கடுப்பாக.
“இங்கே தான் இருக்கான் ஹரிணி. எக்ஸாம் வருதில்ல படிச்சிட்டு இருக்கான்” என்றான்.
அதைக் கேட்டதும் கடுப்பானவள் “ஏன் உனக்கும், எனக்கும் எக்ஸாம் இல்லையா? அவனுக்கு மட்டும் தான் நடக்குதா? கடுப்பேத்தாம அவன் கிட்ட போனை கொடு” என்று அதட்டினாள்.
அவனோ என்னிடம் கொடுக்காதே என்று மறுத்தான்.
இதை உணர்ந்து கொண்டவளோ “திவா! அவன் இப்போ போனை வாங்கலேன்னா நான் ஏறி குதிச்சு உங்க அறையில் வந்து நிப்பேன்னு சொல்லு” என்றாள் மிரட்டலாக.
அவள் சொன்னதைக் கேட்டு கொண்டிருந்தவன் அவசரமாக போனை வாங்கி “என்ன ஹனி? எதுக்கு படிக்கிறப்ப டிஸ்டர்ப் பண்ற” என்றான் ஹர்ஷா.
அவனது குரலில் தெரிந்த தடுமாற்றதிலேயே விஷயம் ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்தவள் “புக்கை மூடி வச்சிட்டு உடனே கிளம்பி லைப்ரரிக்கு பின்னாடி வா” என்று கூறி அவனது பதிலை கேட்காமலே போனை அனைத்தாள்.
கையிலிருந்த போனையே வெறித்துக் கொண்டிருந்தவன் நிலைமை கையை மீறி போய் கொண்டிருப்பதை உணர்ந்து ‘இனி சொல்ல வேண்டிய கட்டத்துக்கு வந்து விட்டதை அறிந்து கொண்டான்’ பெருமூச்சுடன் எழுந்து சட்டையை அணிந்து கொண்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த திவாகர் “என்னடா உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஏதாவது பிரச்சனையா? நீ கொஞ்ச நாளா சரியில்லையே” என்றான்.
“வந்து சொல்றேன்-டா” என்று கூறி விட்டு கல்லூரி லைப்ரரி நோக்கி நடக்க தொடங்கினான்.
அவனுக்கு முன்பே அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தவள் அவசரமாக அவன் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு “ஹப்பா மூணு நாளாச்சு ஹச்சு. இதுக்கே இப்படி இருக்கே எக்ஸாம் முடிஞ்சு நீ போன பிறகு எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல” என்றாள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு.
அவளது பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் பதறி போனவன் ‘மூணு நாள் பார்க்காமல் இருந்ததற்கே இப்படி பேசுகிறவள் தான் சொல்லப் போவதை எப்படி எடுத்துக் கொள்வாள்’ என்று பயப்பட ஆரம்பித்தான்.
அவனது மௌனத்தைக் கண்டு மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “என்னடா ஏன் ஒரு மாதிரியா இருக்க” என்றாள்.
மெல்ல அவளிடமிருந்து கைகளை உருவிக் கொண்டவன் “எக்ஸாமுக்கு ஒழுங்கா படிக்கிறியா ஹரிணி” என்று கேட்டான்.
“ம்ம்..அதை விடுடா! நீ சொல்லு? ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க? நீ ஏன் போன் பண்ணவே இல்ல” என்றாள்.
“எல்லோரும் நல்லா இருக்காங்க” என்றான் சோர்வாக.
அப்போது தான் அவனை ஊன்றி கவனித்தவள் அவனது விலகலான நடத்தையும் கவனித்தாள்.
அவன் முன்னே சென்று நின்று “சொல்லு ஹர்ஷா! என்ன பிரச்சனை?” என்றாள் கைகளை கட்டிக் கொண்டு.
அவளை நிமிர்ந்து பார்க்கவே சங்கடப்பட்டுக் கொண்டு அவளைப் பார்த்தவன் “நான் சொல்றதை சரியா எடுத்துக்கோ ஹரிணி” என்றவனை கையை நீட்டி இடைமறித்தவள் “சொல்ல வேண்டியதை சொல்லு ஹர்ஷா” என்றாள் இறுகிய குரலில்.
அவள் அப்படி சொன்னதும் மேலும் அவனது நிலை மோசமானது. பேச ‘நா’ எழவில்லை…இதமாக காதற்று வீசிக் கொண்டிருந்த போதும் அவனுக்கு வியர்த்தது. தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் தவித்தான். எவரிடமும் பயமில்லாமல் பேசவும் சண்டயிட முடிந்தவனால்அவள் முன்பு நிற்கவே பயந்தான்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் வேகமாக சென்று அவன் சட்டையின் காலரை பற்றி “இப்போ சொல்ல போறியா இல்லையா?” என்றாள் கோபத்துடன்.
அதற்கு மேலும் அவளது பொறுமையை சோதிக்க மனமில்லாமல் “நம்ம விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு ஹரிணி” என்றான் மெல்லிய குரலில்.
அவனது சட்டையிலிருந்து கையை எடுத்தவள் அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே “ஒ…அதுக்கு” என்றாள் கேள்வியாக பார்த்தபடி.
அவள் முகம் பார்க்காது “என் கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க”.
அவளோ குழப்பமான சிந்தனையுடன் “புரியல…சத்தியமா? எதுக்கு?”
“அவங்க அனுமதி இல்லாமல் நான் எந்த முடிவும் எடுக்க கூடாதுன்னு சத்தியம் பண்ண சொன்னாங்க. கல்யாண விஷயத்தில் அவங்க அனுமதியில்லாமல் முடிவு பண்ணக் கூடாதாம் ” என்றான்.
அவன் சொன்னதில் இருந்த அர்த்தத்தை சற்று நேரம் உள் வாங்கியவள் “சத்தியம் பண்ணுறதுக்கு முன்னாடி என்னை கேட்கனும்னு தோணலையா?” என்றாள் இறுகிய குரலில்.
“இப்போ இருக்கிற சூழ்நிலையில் காதலா? குடும்பமான்னு பார்த்தா குடும்பத்துக்கு தானே முக்கியத்துவம் கொடுக்க முடியும். அதுதான் சத்தியம் பண்ணிட்டேன். அதனால தான் உன்னை கேட்கல’ என்று கூறி அவள் தலையில் தணலை அள்ளிக் கொட்டினான்.
அதுவரை பொறுமையாக இருந்தவள் “கேட்டு இருக்கணும்! இதுல சம்மந்தபட்டது நீங்க மட்டுமில்ல நானும் தான். சத்தியம் பண்ணுவதற்கு முன்னாடி என்னை கேட்டு இருக்கணும். இது நீயும் உன் குடும்பமும் மட்டும் சம்மந்தபட்டது இல்லை” என்றாள் ஆத்திரமாக.
“இல்ல ஹரிணி!” என்று ஆரம்பித்தவனை தடுத்தவள் “அதெப்படிடா திடீர்ன்னு குடும்ப பாசம் வந்துச்சு. என்னை காதலிக்க ஆரம்பிக்கும் போது, ஹாஸ்டல் சுவரேறி குதிக்கும் போது உனக்கு குடும்பம் இல்லாம அனாதையாவா இருந்த?” என்று கேட்டவளின் கழுத்தை பாய்ந்து பிடித்திருந்தான்.
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் பொல்லாதவனாகிடுவேன்” என்றவனின் கையைப் பிடித்து தட்டி விட்டு “இப்போ மட்டும் நல்லவனாவா இருக்க” என்றவள் அங்கிருந்த கல்லில் சென்று அமர்ந்து கொண்டாள்.
தான் அவளை காயப்படுத்தி விட்டதை உணர்ந்து கொண்டவன் அவசரமாக சென்று அவள் அருகில் அமர்ந்து “என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்கோ ஹரிணி. எனக்கு அந்த நேரத்தில் குடும்பம் தான் முக்கியமா பட்டது. அதோட அப்பாவோட நிலைமையும், குடும்பம் இப்போ இருக்கிற சூழ்நிலையும் என்னோட காதலை விட்டுக் கொடுக்க சொன்னது” என்றான்.
வெறுப்புடன் அவனைப் பார்த்தவள் “எப்படி-எப்படி? உன்னோட காதலை குடும்ப சூழலுக்காக விட்டுக் கொடுத்துட்ட. ஆனா, உன் காதல் உனக்கு மட்டும் சொந்தமானதா இருந்தா நீ செய்ததில் தவறில்லை. நானும் சம்மந்தபட்டிருக்கேன். எனக்கும் உயிரும், உணர்வும் இருக்கு. என்னோட சம்மதமில்லாமல் நம்ம காதலை எப்படி நீ விட்டுக் கொடுப்ப?” என்றாள் கத்திப் போன்ற குரலில்.
அவள் விடாது பேசுவதைக் கண்டு எரிச்சலைடைந்தவன் “இவ்வளவு தூரம் சொல்றேன் இதை கூட உன்னால புரிஞ்சுக்க முடியலையா? எங்க அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டதும் படிப்பை விட்டுட்டு போக இருந்தவனை எங்க அம்மாவோட தைரியம் தான் இன்னைக்கு என்னை இங்கே உட்கார வச்சிருக்கு. அப்படி இருக்கும் போது அவங்க கேட்பதற்காக காதலை விட்டுக் கொடுத்தா என்ன தப்பு?” என்றான் ஆவேசமாக.
அதைக் கேட்டதும் மிகுந்த கோபம் அடைந்தவள் எழுந்து அவன் முகத்தில் ஓங்கி அறைந்து “என் பின்னாடி சுத்தி ஹாஸ்டல் சுவரேறி குதிச்சு காதலை சொல்லும் போது இந்த குடும்பம் எங்கே போச்சுடா? அப்பவும் குடும்பம் இருந்துது தானே?” என்றாள்.
அவளது கோபத்தின் அளவைக் கண்டு சற்று பணிந்தவன் “புரிஞ்சுக்கோ ஹரிணி…என்னோட சூழ்நிலை தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றான்.
அவன் மறுபடியும் மறுபடியும் சூழ்நிலையை காரணமாக காட்ட ஆத்திரமடைந்தவள் அவன் கன்னத்தில் மாறி-மாறி அறைந்து “அப்போ கல்யாணம் பண்ணி இருந்தாலும் சூழ்நிலை சரியில்லேன்னா விட்டு-விட்டு போயிருப்ப…அப்படித்தானே! உனக்கெல்லாம் எதுக்குடா காதல். போடா போ! போய் உங்கம்மா ஒரு கோலிசோடா விக்கிற பெண்ணா பார்ப்பாங்க, போய் கட்டிக்கோ” என்று ஆத்திரம் தீர அவனை அடித்தாள்.
அதைக் கேட்டதும் பொறுமை இழந்தவன் “என்னடி சொன்ன? என் குடும்பத்தை பார்த்தால் உனக்கு கிண்டலா இருக்கா? நல்ல நேரம்-டி இப்போவே உன் குணம் தெரிஞ்சு போச்சு. நான் தப்பிச்சேன்” என்றான்.
அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவள் கொஞ்சமும் அசராது “தெரிஞ்சு போச்சில்ல இடத்தை காலி பண்ணு. காத்தாவது வரட்டும்” என்றாள் ஆத்திரமாக.
அவனுக்கு தான் சொல்ல வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்ல முடியாமல் அதன் அர்த்தங்கள் மாறி போனதில் அவளின் அதிக கோபத்துக்கு ஆளானான். தான் செய்வது தவறு என்பதால் அவள் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டவன் ஒரு கட்டத்துக்கு மேல் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு “ஹரிணி! உன்னோட கோபம், வருத்தம் எல்லாமே எனக்கு புரியுது. எதுவுமே இதோட முடிஞ்சு போயிடல. நிச்சயமா எங்க அம்மா சம்மதத்தோட உன்னை என் வாழ்க்கையில் கொண்டு வர முயற்சி பண்ணுவேன். அதுவரை என்னை மன்னிச்சிடு” என்றான்.
வேகமாக அவன் கைகளை உதறியவள் “இன்னுமா உன்னை நம்புவேன்னு நினைக்கிற? வேண்டாம் ஹர்ஷா! இனி, நீ என் வாழ்க்கையின் கடந்த காலம். என் வாழ்க்கையில் உனக்கு இடமில்லை…போ! போயிடு!” என்றவள் அவன் முகம் பார்க்காது திரும்பி நின்று கொண்டாள்.
அதுவரை எதற்குமே அழுது அறியாதவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. சிறிது நேரம் அவளது முதுகையே வெறித்துக் கொண்டிருந்தவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
எத்தனை நேரம் தன்னை மறந்து அந்த இருளில் நின்றிருந்தாளோ, காற்றில் பறந்து வந்து அவளது காலை தட்ட, மெல்ல நினைவிற்கு வந்தவள் சோர்வுடன் ஹாஸ்டல் அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தாள். மனமோ உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தது.
ஹர்ஷாவின் நிலையும் மிக மோசமாக இருந்தது. தலை கலைந்து போய் சட்டையெல்லாம் கசங்கி போய் கண்கள் சிவக்க அறைக்குச் சென்றவனை சுற்றிக் கொண்டனர் திவாகரும், சேகரும்.
“டேய்! என்ன பிரச்சனை? சொல்லுடா? ஏன் என்னவோ போல இருக்க?” என்று பிடித்து உலுக்கினான் சேகர்.
வெற்றிடத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தவன் “என்ன சொல்ல சொல்ற சேகர்? எங்க அம்மா சத்தியம் கேட்டதையா? அந்த சத்தியம் எங்க காதலுக்கு சமாதி கட்டினதையா? எதை சொல்ல சொல்ற?” என்றான் கரகரத்த குரலில்.
அதிர்ந்து போன திவாகர் “ என்ன சத்தியம்? என்னடா என்னென்னெவோ சொல்ற?” என்றான் பதட்டத்துடன்.
சோர்வான குரலில் நடந்தவைகளை எல்லாம் சொல்லி முடித்தான். அவன் சொன்னதைக் கேட்டவர்கள் இருவரும் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தனர்.
அவர்களுக்கும் இதற்க்கான தீர்வு என்னவென்று புரியவில்லை. ஹரிணியின் கோபம் நியாயமனது என்றே புரிந்தது. ஆனால் இதில் யாரும் எதுவும்செய்ய முடியாது என்று புரிந்தது.
மூவரும் படிப்பை மறந்து, உணவை மறந்து விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தனர். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. பலமான யோசனைக்கு பின்பு திவாகரும், சேகரும் ஹரிணியிடம் மறுநாள் பேசுவது என்று ஹர்ஷாவிற்கு தெரியாமல் முடிவெடுத்துக் கொண்டனர்.
அதன்படி காலையில் ஹர்ஷாவிற்கு தெரியாமல் அவளை சந்திக்க சென்றனர். காண்டீனில் மற்றவர்களுடன் அமர்ந்து எதுவுமே நடக்காதது போல உணவருந்திக் கொண்டிருந்தவளைக் கண்டு குழம்பி போயினர்.
அவள் அருகே சென்று “ஹரிணி உன்னோட கொஞ்சம் பேசணும் வரியா?” என்றான் திவாகர்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் இறுகிப் போக தோழிகளிடம் “போயிட்டு வந்திடுறேன்” என்று கூறி விட்டு அவர்களோடு நடந்தாள்.
சேகர் சற்று தயக்கத்துடன் “ஹரிணி! அவன் பாவம் அவனோட நிலைமையை புரிஞ்சுக்கோ” என்று ஆரம்பித்தவுடன் தடுத்தவள் “திவாகர், சேகர் உங்க ரெண்டு பேர் மேலையும் நல்ல மதிப்பு வச்சிருக்கேன். தயவு செஞ்சு அவனை பத்தி என்கிட்ட பேசி உங்க மரியாதையை கெடுத்துக்காதீங்க. அதோட அவனை பத்தி பேசுவதா இருந்தால் அதற்கு நானும் தயாராக இல்லை” என்று கூறி இருவரையும் கூர்ந்து பார்த்தாள்.
அவள் அப்படி கறாராக பேசியதும் அதிர்ச்சியடைந்து நின்றார்கள்.
“விட்டுடுங்க திவாகர். இனிமே, இதில் பேசுறதுக்கு எதுவுமில்லை” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டாள்
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 5
“Petti Kodutha Seematti” – Sudha Ravi
“Petti Kodutha Seematti” – Sudha Ravi