Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் -12

அத்தியாயம் – 12

உடலில் உள்ள உதிரமெல்லாம் வடிந்து போன உணர்வு அவனுக்கு. இனி, என்ன இருக்கிறது தன் வாழ்வில்? தான் குடும்பத்திற்காக பார்ப்பது போல் அவர்கள் தனக்காக யோசிக்கவில்லையே? தன் உணர்வுகளுக்கு அங்கு மரியாதை இல்லையா? என்று யோசித்து வெற்றிடத்தை வெறித்தபடி நின்றான்.

கோபம், அழுகை ஆங்காரம் எல்லாம் கலந்த கலவையாக அவன் முன்னே வந்து நின்றாள் பவானி.

“அவ்வளவு சொன்ன பிறகும் அவளை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டீங்க இல்ல?”

இயலாமையுடன் கூடிய பார்வையில் “மாமா என் காலில் விழுந்துட்டாங்க பவானி” என்றான் நெஞ்சில் எழுந்த வலியுடன்.

“இப்படிப்பட்ட பெண்ணை பெத்தா ரோட்டில் போறவன் வரவன் காலில் தான் விழனும்” என்றாள் எரிச்சலாக.

அவனோ “பவானி! மாமா எவ்வளவு பெரிய மனுஷன். ஊரில் அவருக்கு எவ்வளவு மரியாதை இருக்கு. அவர் போய் என் காலில்” என்றவன் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டான்.

“ஏன் அண்ணே நீங்க  அதை செய்யல? உங்க  காதல் உங்களுக்கு  வேண்டாமா? விருப்பம் இல்லாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க அவ என்னவெல்லாம் சாகசம் பண்றா…ஆனா நீங்க விரும்பின பெண்ணை கல்யாணம் பண்ணிக்க எதுவுமே செய்யாம பழியை தூக்கி அடுத்தவங்க பேர்ல போடுறீங்க”.

அவளின் கேள்வி சாட்டையடியாக அவனை தாக்க “என்னம்மா செய்ய சொல்ற? பெத்தவங்களை எதிர்த்துகிட்டு அவ கழுத்தில் தாலியை கட்ட சொல்றியா?” என்றான்.

“செஞ்சா தான் என்ன? உங்களுக்கு விருப்பம் இல்லேன்னு தெரிஞ்சும் அவங்க தங்கச்சிக்காக உங்க வாழ்க்கையை பணயம் வைக்கும் போது நீங்க அவ கழுத்தில் தாலி கட்டினா தப்பு என்ன?”

“ம்ச்..பவானி நீ சின்ன பொண்ணும்மா. உனக்கு வாழ்க்கையை விளையாட்டா பார்க்கிற. தாலி கட்டிட்டா பிரச்சனை முடிஞ்சுதுன்னு நினைக்கிற. அதற்குப் பிறகு உள்ள வாழ்க்கையை நீ புரிஞ்சுக்கல. எல்லா உறவுகளையும் ஒதுக்கிட்டு வாழ்ந்திட முடியாதும்மா” என்றான்.

அவனை முறைத்து “ஆமாம் அவளை கட்டிக்கிட்டு உறவுகளோட சந்தோஷமா வாழ்ந்திடுவீங்க. இந்த நிமிஷத்தோட உங்களுக்கும் எனக்குமான பேச்சும், உறவும் முடிஞ்சு போச்சு” என்றவள் தோட்ட வீட்டினுள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

ஒரு அழகிய பந்தமாக தொடங்கப்பட வேண்டிய உறவு ஆரம்பிக்கும் முன்பே ஒவ்வொரு உறவாக வெட்டிக் கொண்டு செல்வதைக் கண்டு கலங்கி நின்றான். தனக்கு இந்த வாழ்க்கை நிறைய வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டான்.  ஆனால் மலரின் நிலையை எண்ணி பயந்தான். கார்த்திகா எந்தக் காரணம் கொண்டும் அவளை காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

வீட்டிற்குள்ளோ இவனது மனதிற்கு நேர்மாறாக இருந்தது நிலைமை. அங்கம்மாள் மிகுந்த உற்சாகத்துடன் மாப்பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ஊருக்கு போயிட்டு உங்க வீட்டு ஆளுங்க கிட்ட பேசி சீக்கிரம் தேதி வைக்கிற வேலையை பாருங்க மாப்பிள்ளை” என்றார்.

“ஆமாங்க அத்தை. என் பொண்ணு கல்யாணத்தை அப்படி இப்படி பண்ணிட முடியாதில்ல. நல்லா தடபுடலா நடத்தனும்” என்றார் பெருமையுடன்.

கார்த்திகா தூணோரம் சாய்வாக அமர்ந்தபடி தந்தை பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். அனைத்து தடைகளையும் கடந்து தான் நினைத்ததை சாதிக்கப் போவதற்கான அறிகுறி அவள் முகத்தில் தெரிந்தது.

அலமேலுவும் சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் அண்ணனிடம் “அண்ணே! என் பொண்ணுக்கு நீங்க எடுக்கிற புடவை நகை எல்லாம் பிரமாதமா இருக்கணும். நீங்க பொண்ணு எடுக்கிற இடம் ஏப்பை சாப்பையான இடமில்லை சொல்லிட்டேன்” என்றார் மிரட்டலாக.

கோவிந்தன் அவர்களின் உற்சாகத்தில் கலந்து கொள்ளாமல் ஒருவித தவிப்புடன் அமர்ந்திருந்தார். தங்கை அப்படி சொன்னதும் வேறுவழியில்லாமல் “அப்படி எல்லாம் எங்க வீட்டு மருமகளை விட்டுடுவோமா என்ன அலமு?” என்றார்.

அப்போது காப்பி எடுத்துக் கொண்டு வந்த பிரபாவிடம் “என்ன அண்ணி என் பெண்ணை மாமியார் கொடுமை பண்ணுவீங்களா? என்றார் அலமு.

பிரபாவோ மனதிற்குள் ‘க்கும்…அம்மாவும் பொண்ணுமா சேர்ந்து என்னை கொடுமை பண்ணாம இருந்தா சரி தான்’ என்று எண்ணிக் கொண்டார். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாமல் ஒரு அசட்டு சிரிப்புடன் “எங்க வீட்டுக்கு வர மகாலட்சுமி அண்ணி அவ” என்றார்.

அங்கம்மாளோ மருமகளை ஒரு பார்வை பார்த்து விட்டு “நானிருக்கும் போது என் பேத்தியை இந்த வீட்டில் ஒரு சொல்லு சொல்ல விட்டுடுவேனா” என்றார்.

சண்முகம் அங்கு நடப்பவற்றை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வீட்டில் தன் மகள் ராணி போல வாழப் போகிறாள் என்றெண்ணி கண் கலங்கினார். அந்த வீட்டின் மொத்த சந்தோஷத்தையும் அவள் துடைத்தெறியப் போகிறாள் என்பதை அவர் உணரவில்லை.

அன்றைய பொழுது பெரியவர்கள் எல்லாம் உற்சாகத்துடன் திருமண சடங்குகளுக்கான முறைகளைப் பற்றியும், செய்ய  வேண்டியவை பற்றியும் பேசிக் கொண்டிருக்க, சிறியவர்கள் மூவர் அவரவர் அறையில் அடைந்திருந்தனர். கார்திகாவோ எழுந்து குதிக்க முடியாமல் தனது உற்சாகத்தை மறைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு அவளது அறையில் அமர்ந்திருந்தாள்.

விஜயனை நேரடியாகப் பார்த்து என்னை விட்டுவிட்டு அவளை மணக்க நினைத்தாயே பார் ஒரே நாளில் அனைத்தையும் மாட்டிட்டேன்னு சொல்லணும் என்று நினைத்தாள். ஆனால் இனி திருமணம் வரை நேருக்கு நேர் சந்திக்க அனுமதி கிடைக்காது என்று தெரியும்.

திருமணம் முடிந்து பார்த்துக் கொள்ளலாம் அவனை என்று எண்ணி அமைதியாக இருந்தாள்.

மாலையே அவர்களை அழைத்துக் கொண்டு சண்முகம் கிளம்பி விட்டார். திருமணம் பேசி முடிவான பிறகு அங்கிருக்க வேண்டாம் என்று கூறி தங்கள் ஊருக்கு கிளம்பி விட்டனர். வழியனுப்ப அனைவரும் வாயிலுக்கு வர, இறுகிய முகத்துடன் விஜயனும் வந்து நின்று கொண்டான். பவானி கார்த்திகாவை திரும்பி கூட பார்க்கவில்லை. என்னிடம் நெருங்காதே என்று முகத்தில்  அறைந்தார் போல் கூறி விட்டாள். திருமணத்திற்கு பிறகு அவளை ஒரு கை பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவர்கள் சென்றதும் இழவு விழுந்த வீடு போலானது. விஜயன் தோப்பிற்கு செல்லாமல் தன்னறைக்குள் முடங்கிக் கொண்டான். பிரபாவோ துக்கத்தை அடக்க கொல்லையை சுத்தம் செய்ய போய் விட்டார். மலரும், பவானியும் தோட்ட வீட்டிற்குள் புகுந்து கொண்டனர். கோவிந்தன் மட்டும் அன்னையிடம் சிக்கிக் கொண்டார்.

“இங்கே பாரு கோவிந்தா அலமு சீக்கிரமே தேதிய குறிச்சிடுவா. நாம வெள்ளனவே எல்லா வேலையும் முடிச்சிடனும். நமக்கு நேரமே பத்தாது சொல்லிட்டேன்” என்றார்.

அவரோ உள்ளுக்குள் இருந்த வருத்தத்தை வெளிக்காட்டாதவாறு “ம்ம்..சரிம்மா” என்றார்.

“எங்க உன் பொண்டாட்டி? எவ்வளோ வேலை இருக்கு என்ன பண்ணிட்டு இருக்கா?” என்றார் கோபமாக.

“கொல்லையில இருக்காம்மா”.

அங்கம்மாளோ கோபத்துடன் “சரியா போச்சு! பிள்ளை கல்யாண வேலை இருக்கு இவ விளக்கமத்தை தூக்கி கிட்டு போயிட்டாளுக்கும்” என்று நொடித்துக் கொண்டார்.

வேலையாளை அனுப்பி அவரை கூடி வர சொல்ல சோர்ந்த முகத்துடன் வந்தவர் “என்னத்தை காப்பி தண்ணி வேணுமா?” என்றார்.

மகனை பார்த்து முறைத்தவர் “உன் பொண்டாட்டிக்கு கூறு கேட்டு போச்சு கோவிந்தா” என்றார் கடுமையாக.

அவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல் பிரபா நிற்க, கோவிந்தனோ அன்னையிடம் எதிர்த்து பேச முடியாமல் மௌனமாக நின்றார்.

“என்ன இந்த முழி முழிக்கிற? உன் பிள்ளைக்கு கல்யாணம் பேசி இருக்கோம். நீ என்னவோ பேயறைஞ்ச மாதிரி நிக்கிற?” என்றார் எரிச்சலாக.

பிரபாவோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “கொல்லை குப்பையா கிடந்துச்சு அத்தை அது தான் பெருக்க போனேன்” என்றார்.

“அடியே இவளே! நானென்ன பேசுறேன் நீ என்ன பதில் சொல்ற? கல்யாண வேலை கிடக்கு. நீ என்னன்னா தொடப்பத்தை தூக்கி கிட்டு சுத்திகிட்டு இருக்க. உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு” என்றார் எரிச்சலாக.

மனதிற்குள் ‘கிறுக்கு பிடிக்காத குறை ஒன்னு தான்’ என்று நொடித்துக் கொண்டவர் “நாளைக்கேவா கல்யாணம். இப்போ தானே முடிவாகி இருக்கு பார்த்துக்கலாம்” என்று அசட்டையாக சொல்லி விட்டு சென்று விட்டார்.

மருமகளின் செயலைக் கண்டு அங்கம்மாளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன இவ இப்படி பேசிட்டு போறா என்று பார்த்தார்.

சிந்தனையுடனே எழுந்து உள்ளே சென்றவர் பவானியைத் தேட அவளை காணவில்லை என்றதும் தோட்டத்திற்கு சென்றார்.

“பவானி! அடியே சின்ன சிறுக்கி…எங்கே இருக்க?” என்றார் சத்தமாக.

பட்டென்று தோட்ட வீட்டின் கதவை திறந்து கொண்டு வந்தவள் “என்ன பாட்டி? எதுக்கு இப்படி கத்துற?” என்றாள் எரிச்சலாக.

“சித்த என்னோட வா! பரண் மேல இருக்கிறதெல்லாம் சுத்தம் பண்ணுவோம்” என்றார்.

“அதென்ன இழவுக்கு சுத்தம் பண்ணனும் இப்போ? பண்டிகை எல்லாம் தான் முடிஞ்சு நாளாச்சே” என்றாள் கடுப்பாக.

தாவங்கட்டையில் கையை வைத்து அவளை மேலும் கீழுமாக பார்த்தவர் “என்னடி ஆத்தாளுக்கும், மவளுக்கும் பேய் பிடிச்சிருக்காடி. அவ என்னடான்னா சிலுப்பி கிட்டு போறா. நீ என்னடான்னா இழவை பத்தி பேசிட்டு இருக்க. மரியாதையா வா வந்து சுத்தம் பண்ணிக் கொடு” என்றார்.

“முடியாது! எனக்கு உடம்பு வலிக்குது” என்று முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளை முறைத்து விட்டு “சரி சரி அவளை வர சொல்லு. நான் பண்ணிக்கிறேன்” என்று கூறி விட்டு நடந்தார்.

“பாட்டி! செங்கையை கூப்பிட்டு செய்ய சொல்லுங்க. மலர் இனி இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டா” என்றாள் கோபமாக.

சட்டென்று திரும்பியவர் “ஏன் செஞ்சா என்ன குறைஞ்சு போயிடுவாளா?” என்றார்.

“அவ எதுக்கு செய்யணும்?”

“சோறு போட்டு வளர்ததுக்கு செஞ்சா தப்பில்லை” என்றார் வன்மத்துடன்.

அதுவரை அவர்கள் பேசுவதை கேட்டபடி சுருண்டு படுத்திருந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து வந்து “நான் வரேன் பாட்டி” என்று அவர் பின்னே சென்றாள்.

பவானி டென்ஷனாகி “ஏய்! நீ போகாதே! அவங்க பேசுற பேச்சுக்கு வேண்டாம் மலரு” என்று கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவளது பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொண்டவள் “இத்தனை வருஷம் சாப்பிட்ட சோத்துக்கு என் கடமையை செய்ய விடு” என்றாள் கண்களில் வலியுடன்.

அவளது வார்த்தைகள் நெஞ்சில் பதிய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட “மலரு! இதெல்லாம் நல்லாயில்ல. நாங்க என்னைக்காவது உன்னை அப்படி நினைச்சிருக்கோமா? வேண்டாம் மலரு” என்றாள்.

மெல்ல அவள் கைகளில் இருந்து கையை விடுவித்துக் கொண்டவள் பாட்டியின் பின்னே சென்றாள்.

அவசரமாக அன்னையிடம் ஓடியவள் “உங்க அண்ணன் பொண்ணு தானேம்மா மலரு. அவ இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னமே எப்படி நடத்துறாங்க பாட்டி. தயவு செய்து உங்க மௌனத்தை உடைச்சு அவளுக்கு உதவி செய்யப் பாருங்கம்மா” என்று கெஞ்சினாள்.

அவளை வெற்றுப் பார்வை பார்த்தவர் “ஊருக்கு தான் நான் பெரிய வீட்டு மருமக. வீட்டுக்குள்ள உங்க பாட்டிக்கு வேலைக்காரி. அதை தாண்டி எதையுமே நான் செஞ்சிட முடியாது” என்றார்.

அவளோ ஆத்திரமாக “அப்போ ஏன் மா அவளை இங்கே வளர்த்தீங்க? அப்படியே விட்டிருக்க வேண்டியது தானே?” என்றாள்.

“மனசு கேட்காம அழைச்சிட்டு வந்துட்டேன். நம்ம் மனுஷங்க மனசாட்சியோட இருப்பாங்கன்னு நினைச்சு” என்றார் முந்தானையால் கண்களைத் துடைத்தபடி.

அன்னையை பரிதாபமாக பார்த்துவிட்டு “இந்த நிமிஷம் வரை இந்த குடும்பத்தில் பிறந்ததை பெருமையா நினைச்சிட்டு இருந்தேன் மா. ஆனா இப்போ அருவெறுப்பா உணருறேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.

பாட்டியின் பின்னே சென்ற மலர் இறுகிய முகத்தோடு பாட்டி சொன்ன வேலைகளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்திலேயே அவள் மனதின் எண்ணங்கள் தெரிந்தது. இனி, தன் வாழ்க்கையில் எதுவுமில்லை. அது இழுத்துச் செல்லும் பாதையில் செல்லலாம். இறந்த பின்பு ஆன்மா எங்கு சென்றால் என்ன என்கிற நிலையில் இருந்தாள் அவள்.

 

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் – 11

அத்தியாயம் – 11

தன் வீட்டிலிருந்து பாட்டி வீட்டுக்கு கிளம்பும் போது அத்தனை உற்சாகமாக கிளம்பிய மகள் ஒருவாரத்திற்குள் காய்ந்த சருகை போல கிடக்கும் நிலை கண்டு அந்த தகப்பனுக்கு மனம் உடைந்து போனது.

என்ன இல்லை அவளுக்கு? இளவரசியாக வளர்த்த தங்களை மறந்து யாரோ ஒருவனுக்காக உயிரை விட துணிந்திருக்கிறாளே என்று எண்ணி அழுது விட்டார்.

தந்தை முன் முடியாமலிருப்பது போல் போர்த்திக் கொண்டிருப்பது போல் படுத்திருந்த கார்த்திகாவிற்கு கூட ஒரு நிமிடம் தந்தை யின் அழுகை அசைத்துப் பார்த்தது. நாம பண்றது தப்போ என்று அந்த நிலையில் சற்றே யோசித்தாள். அதை தொடர்ந்திருந்தால் அனைத்தும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மீண்டும் அவளது மனம் முருங்கை மரம் ஏற, கல்யாணம் ஆகிடுச்சுன்னா அப்பா சரியாகிடுவாங்க என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

அலமேலுவோ அழுகையை அடக்குவது போல் நின்றிருந்தார். மகளின் அருகே சென்று தலையை வருடிக் கொடுத்தவர் “உன் விருப்பத்தை மீறி இந்த அப்பான் என்ன செய்துடுவேன் கார்த்தி. என் கிட்ட சொல்லி இருக்கலாமே? அதுக்குள்ள எதுக்கு அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்த? உனக்கு ஏதாவது ஆகி இருந்தா எங்க நிலைமை என்ன? கருவேப்பில்லை கொத்தாட்டம் ஒரே ஒரு பிள்ளையை வச்சிருக்கோம்” என்று புலம்பினார்.

அதுவரை கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தவள் மெல்ல அப்போது தான் கண் விழிப்பது போல கண்களை திறந்து தந்தையைப் பார்த்தாள். வலிய வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன் “அப்பா!” என்றாள்.

அவளது கையைப் பற்றிக் கொண்டவர் “நான் இருக்கேன்மா உனக்கு” என்றார் அழுத்தமாக.

மெல்ல எழுந்தமர்ந்து தந்தையின் முகத்தைப் பார்த்து “என்னை மன்னிச்சிடுங்கப்பா. எனக்கு வேற வழி தெரியல. மாமா மட்டும் தான் என் வாழ்க்கையில் வேணும்னு நினைச்சேன். எல்லோரும் வேண்டாம்னு சொல்லிடுவாங்கன்னு தான் இப்படி பண்ணிட்டேன்” என்றாள் பொய்யான அழுகையுடன்.

அவளின் கண்ணீரை உண்மை என்று நம்பியவர் அதை தடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து எழுந்தார்.

தந்தையின் முகத்தில் இருந்த தீவிரத்தைக் கண்டு அன்னையிடம் கண்களாலேயே காரியம் வெற்றி தான் என்று உணர்த்தினாள்.

அதை அறியாது மருமகனிடம் பேசிவிடும் தீவிரத்துடன் கூடத்திற்கு சென்றார்.

அதே நேரம் தோப்பில் தந்தையின் முன்பு நின்றவன் “என்னய்யா செய்யப் போறீங்க? இந்த திருமணம் நடந்தா ஒருத்தருக்குமே நிம்மதி இருக்காது. இப்படியொரு திருமணம் தேவையா சொல்லுங்க?” என்றான் விஜயன்.

அவரோ குழப்பத்துடன் “எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல விஜயா? அவ கிணத்துல குதிச்சு உன்னைத் தான் கட்டிக்கணும்னு சொல்றா. அதை மீறி நாம ஏதாவது செய்யப் போக அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன செய்றது?” என்றார் பயத்துடன்.

அவரை கூர்ந்து பார்த்தவன் “அப்போ மலருக்கு ஏதாவது ஒன்னு ஆனா பரவாயில்லையா? என்றான் தீவிரமான குரலில்.

அவனது கேள்வியில் அதிர்ந்தவர் “என்னப்பா சொல்ற? மலரு…அது” என்று இழுத்தார்.

“அவளும் சாகுறதுக்கு முயற்சி பண்ணினா என்ன செய்வீங்க?” என்றான் வெறுப்பான குரலில்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல விஜயா…என்றவர் சற்று நேரம் அமைதியாக யோசித்து “பேசாம நீ மலரை கூட்டிட்டு எங்கேயாவது போயிடு. எல்லாம் சரியானதும் இங்கே வந்துடலாம்” என்றார்.

“அதானே பார்த்தேன்…அப்போ நீங்க முடிவெடுக்க மாட்டீங்க? இதை நீங்க சொல்லனும்னு அவசியம் இல்ல. ஊருக்கு பெரிய மனுஷனா இருக்கிற நீங்க வீட்டில் நடக்கிற பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல மாட்டீங்க. இந்த ஊர் தலைவர் நீங்க. உங்க வீட்டுப் பிள்ளை இப்படி பெண்ணை இழுத்திட்டு போனா நாளை இந்த ஊர் உங்களை எப்படி மதிக்கும்? அதே நீங்க சரியான முடிவெடுத்து சேர்த்து வச்சா எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கும்” என்றான் அவரை ஆழ்ந்து பார்த்தபடி.

“எல்லாம் சரி டா ஆனா என் தங்கச்சி மனசு வருந்தினா இந்த குடும்பத்துக்கே ஆகாம போயிடும்” என்றார் கலக்கமான குரலில்.

தன் மனதில் எழுந்த ஆதங்கத்தினை எப்படி வெளிப்படுத்துவதென தெரியாமல் கண்களை மூடி நின்றவன் “அப்போ உங்க பையன் வாழ்க்கையை விட உங்க தங்கை கண்கலங்க கூடாது அது தான் முக்கியம் இல்லையா?” என்றான் வெற்றுக் குரலில்.

அவர் குரலில் இருந்த உணர்வை புரிந்து கொள்ளாதவர் “உனக்கு தெரியாது விஜயா வீட்டுப் பெண்கள் கலங்கினா குடும்பத்துக்கு ஆகாது” என்றார்.

இதற்கு மேலும் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை போக உள்ளுக்குள் எதுவோ உடைந்த உணர்வுடன் “சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றான்.

“நில்லு தம்பி” என்றவரை ஒருவித நப்பாசையுடன் பார்த்தான். அவர் தன் மனதை புரிந்து கொண்டாரோ என்று. ஆனால் அவரோ “நானும் வரேன். மாப்பிள்ளை வந்திருப்பார்” என்றார்.

எதுவும் பேசாமல் அமைதியாக பைக்கை எடுத்தவனின் மனது ரணமாகி இருந்தது. அவர் கூறியது போல மலரை அழைத்துக் கொண்டு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்தான். தான் விரும்பும் பெண்ணை மணக்க இத்தனை தடைகளா? அதுவும் சொந்தத்திலேயே கூடவே வளர்ந்த ஒருத்தியை மணக்க இத்தனை போராட்டமா? தனது மனமே இத்தனை வலியுடன் இருக்கிறதே, அவளின் நிலை என்னவோ? எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் உள்ளுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்பாள். அவளுக்கு எந்த விதத்தில் நிம்மதியை அளிக்கப் போகிறேன். நிச்சயம் மாமாவிடம் கூறி விட வேண்டும். தன் மனதில் மலருக்கு மட்டுமே இடம் இருக்கிறது என்பதை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

கோவிந்தனுக்கும் மகனின் ஆசை புரிந்தாலும் கார்த்திகாவின் செயல் அவரை பயமுறுத்தி இருந்தது. அவன் தான் வேண்டும் என்று கிணற்றில் குதித்தவளை மீறி இன்னொருத்திக்கு எப்படி மணம் செய்து வைக்க முடியும் என்றெண்ணினார். மகன் மீது ஆசை வைத்துள்ள மலர் நடப்பவற்றை அமைதியாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அப்படி என்றால் அவளின் ஆசையில் அத்தனை தீவிரம் இல்லை என்று தானே அர்த்தம் என்று தானே ஒரு அர்த்தத்தை கற்பித்துக் கொண்டார். அவள் மனதை மாற்றி வேறொருவனுக்கு கட்டி கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டார்.

அவரவர் சிந்தனையில் இருந்தபடியே வீடு வந்து சேர்ந்தனர். முதலில் இறங்கி உள்ளே சென்றார் கோவிந்தன். விஜயன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே நுழையும் நேரம் கோவிந்தன் தங்கை கணவரிடம் பாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

அதை பார்த்துக் கொண்டே சென்றவன் நேரே அத்தையின் கணவரின் முன்பு சென்று நின்றான்.

அவனைப் பார்த்தவர் கோவிந்தனை மறந்து “மருமகனே! உங்களை தான் தேடிட்டு இருந்தேன்” என்றார் கலக்கமான குரலில்.

இறுகிய முகத்துடனே “சொல்லுங்க மாமா” என்றான்.

விஜயனின் குரல் கேட்டதும் அங்கு வந்த அங்கம்மாள் அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டதும் தூணோரமாக சாய்ந்து நின்றார். மலரும் ஒரு ஓரமாக நின்று கவனிக்கலானாள்.

“என் பொண்ணு இப்படி ஒன்னை பண்ணி வைப்பான்னு நினைக்கவே இல்ல. அவளுக்கு உங்க மேல விருப்பம் இருக்குன்னு சொல்லி இருந்தா அடுத்த நிமிஷம் மச்சான் கிட்ட பேசி உங்க கல்யாணத்தை நடத்தி வச்சிருப்பேன்” என்றார்.

அவர் அப்படி சொன்னதும் அவனது உள்மனது குத்த ஆரம்பித்தது. இவரும் தன் மகளின் மனதை பார்க்கிறாரே தவிர என்னுடைய சம்மதத்தைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கென்று ஒரு விருப்பம் இருக்கும் என்று இவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் என்று யோசித்தான்.

அவரோ கோவிந்தனிடமும் “என் பெண்ணோட ஆசையை நிறைவேற்றி வச்சிடுங்க மச்சான்” என்று கையைப் பிடித்துக் கொண்டார்.

நிலைமை கை மீறி போய் கொண்டிருந்ததை கண்டவன் மாமனிடம் பேசிவிட முடிவு செய்தான்.

“மாமா! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க” என்று அவன் ஆரம்பித்ததும் அதுவரை ஒதுங்கி நின்ற அங்கம்மாள் “விஜயா! மாப்பிள்ளையை பேச விடு” என்று தடுத்தார்.

பாட்டியை முறைத்தவன் மாமனிடம் திரும்பி “மாமா! கல்யாணத்துக்கு ரெண்டு பேரின் விருப்பமும் முக்கியம். இங்கே நீங்க எல்லோரும் கார்த்திகாவின் மனசை மட்டும் பார்க்குறீங்க. எனக்கு இதில் விருப்பமான்னு யாருமே யோசிக்கல” என்றான் சற்றே கோபமாய்.

அதுவரை உள்ளே இருந்து நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அலமேலுவும், கார்த்திகாவும் அதிர்ந்து போய் வேகமாக கூடத்திற்கு வந்தனர்.

சண்முகமோ மருமகனின் பேச்சில் இருந்த விருப்பமின்மையை உணர்ந்து கொண்டவர் உள்ளுக்குள் அதிர்ந்தார். அவனது பேச்சை மகள் கேட்டால் மீண்டும் ஏதாவது செய்து கொள்வாளோ என்று பயந்து அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கும் முன் அந்த செயலை செய்திருந்தார்.

அனைவரின் முன்பும் படாரென்று மருமகனின் காலில் விழுந்து விட்டார்.

“மாப்பிள்ளை!”

“மச்சான்!”

“என்னங்க!”

“அப்பா!” என்று அங்கிருந்தவர்கள் அலறிக் கொண்டு அவர் அருகில் சென்றனர்.

அவரோ “என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுங்க மாப்பிள்ளை” என்று அவர் கேட்க, அவனோ விதிர்த்துப் போய் மாமனை தூக்கினான்.

யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. அனைவரின் முகமும் வேதனையை சுமந்தது. ஊரே மரியாதையாக வணங்கும் ஒருவர் தன் மகளின் பொய்யான நடத்தைக்காக சொந்த மருமகனின் காலில் விழுந்திருந்தார்.

அவரின் செயல் கண்டு மலர் உடைந்து போனாள். அவளது மனம் உள்ளுக்குள் கதறியது. இப்படியொரு தந்தை கிடைக்க கார்த்திகா கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் தந்தையின் பாசத்தை தவறாக பயன்படுத்தும் அவளை எண்ணி வேதனை அடைந்தாள். தனக்கு இப்படியொரு உறவு இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதோ என்று எண்ணினாள்.

விஜயனோ அவரின் செயலால் சுக்கு நூறாக உடைந்திருந்தான். தன் மாமன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான். அவரின் உயரம் கண்டு அவனுக்கு எப்போதுமே பெருமை உண்டு. சண்முகம் இருக்கும் ஊரில் அவரின் பேச்சுக்கு மறு பேச்சு என்பதே எழாது. அன்பானவர், பண்பானவர் என்று  அவர் மீது அத்தனை மரியாதை வைத்திருந்தார்கள். அவை அனைத்தையும் தனது செயலால் நாசப்படுத்தி விட்டாள் என்று கார்த்திகாவின் மீது கொலைவெறி எழுந்ததது.

சண்முகமோ எவரை பற்றியும் கவலைப்படாது அவனது கைகளைப் பற்றிக் கொண்டு “மருமகனே! என் பெண்ணை கை விட்டுடாதீங்க” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

அதுவரை சிறு நம்பிக்கையாவது இருந்தது அவன் மனதில். ஆனால் மாமன் செய்த விஷயத்தில் முற்றிலுமாக நம்பிக்கை தொலைந்து போனது. முடிந்தது! எல்லாம் முடிந்தது! இனி, எதுவும் நம் கையில் இல்லை. இதற்கு பிறகு மறுக்க நமக்கு வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொண்டவனின் மனம் இறுகிய இரும்பாக மாறி போனது.

தன்னிடம் கேட்டுக் கொண்டிருந்த மாமனிடம் “என்ன மாமா செஞ்சீங்க? என் காலில் விழுந்து என் மனசை காயப்படுத்திடீங்க. அது பாவம் மாமா…உங்க விருப்பம் போல நடக்கும்னு உத்திரவு போட்டா செஞ்சிட்டு போறேன்” என்றான் உள்ளுக்குள் அழுது கொண்டு.

கலங்கிய கண்களுடன் “ரொம்ப சந்தோஷம் மருமகனே! அவ எங்க வீட்டு மகாலட்சுமி. அவளுக்கு உங்க மேல கொள்ளை ஆசை மருமகனே. என் பொண்ணு ஆசைப்பட்டதை செய்யலேன்னா நானெல்லாம் ஒரு தகப்பனா?” என்றவரை பார்த்தவரின் விழிகள் கோவிந்தனை இகழ்ச்சியாகப் பார்த்தது.

மகனின் பார்வையை உணர்ந்து கொண்டவர் தலையை குனிந்து கொண்டார்.

அலமேலுவுக்கும், கார்த்திகாவிற்கும் அவர் காலில் விழுந்தது அதிர்ச்சியாக போனது. அவர் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. மகளுக்காகத் தானே விழுந்தார் என்று அலமேலு சமாளித்துக் கொண்டார். ஆனால் கார்த்திகாவின் மனதில் வடுவாக அமர்ந்து கொண்டது. அதிலும் விஜயன் மீது கோபமாக வந்தது. இவன் ஒத்துக் கொண்டிருந்தால் அப்பா விழுந்திருக்க மாட்டாரே என்று அப்போதும் அவன் மீது தவறை கண்டுபிடித்தாள்.

அவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னவுடன் சந்தோஷத்தோடு அவனை அணைத்துக் கொண்டார் சண்முகம். அங்கம்மாளோ மாப்பிள்ளையிடம் “என்ன இருந்தாலும் அவன் காலில் நீங்க விழுந்தது தப்பு மாப்பிள்ளை. நாம சொன்னா அவன் கேட்காம போயிடுவானா என்ன” என்றார் பேரனை முறைத்தபடி.

பாட்டியை நிமிர்ந்தும் பார்க்காது “நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன்” என்று அங்கிருந்து சென்றான்.

கொல்லைபுறம் வந்தவனுக்கு மூச்சு அடைத்தது. உடல் அனலில் இட்ட புழுவாக துடித்தது. தன்னைச் சுற்றி உள்ள அனைவரும் அவர்களின் ஆசையை தன் மீது துணித்து விட்டனர் என்பதை உணர்ந்தவனுக்கு நெஞ்சு வலித்தது.

ஓரிடத்தில் நிற்க முடியாமல் மெல்ல நடந்தவனின் பார்வையில் கண்கள் வெற்றிடத்தை வெறிக்க, தோட்ட வீட்டில் சோக சித்திரமாக அமர்ந்தவளின் மீது பார்வை படிந்தது. அவளைக் கண்டதும் அவளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்கிற எண்ணமே எழுந்தது.

அவள் முன்னே சென்று நின்றவன் “மலரு!” என்று முதன் முறையாக பெயரை சொல்லி அழைத்தான்.

அவன் அழைத்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அந்த நிமிடம் தன்னை மறந்து “இத்தனை நாள் இல்லாம இப்போ வந்து என் பெயரை சொல்லி கூப்பிடுறீங்களே மாமா! போச்சு! எல்லாம் முடிஞ்சு போச்சு!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகை அவனை புரட்டி போட்டது. அவனால் அந்த சூழ்நிலையை கையால முடியவில்லை. குடும்பத்தை எதிர்த்து மலரை கைபிடிக்க எதுவோ தடுத்தது. ஆனால் அதை அவளது அழுகை அசைத்துப் பார்த்தது.

சற்றே தீவிரமான முகத்துடன் “இதெல்லாம் வேண்டாம் மலரு! நாம எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிடலாமா?” என்றான்.

அதுவரை உணர்ச்சிப் பெருக்கில் அழுது கொண்டிருந்தவள் அவனது வார்த்தையைக் கேட்டு சட்டென்று அழுகையை நிறுத்தி விட்டு “அவ எனக்கு செஞ்சதை நாம அவளுக்கு திருப்பி செய்யணுமா மாமா? நட்புக்கு துரோகம் பண்ணி அதன் மேல இந்த வாழ்க்கையை அமைச்சுக்க பார்க்கிறா. அதோட நான் இந்த வீட்டில் கிடைச்ச அன்பால தான் இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறேன். அவங்களுக்கு எதிரா என்னால ஒரு விரலை கூட அசைக்க முடியாது. வேணாம் மாமா! இந்த ஜென்மத்தில் இது தான் விதின்னு இருந்தா அப்படியே நடக்கட்டும் விட்டுடுங்க. இனிமே என்கிட்டே வந்து பேசாதீங்க” என்று கண்ணீர் வழிய கூறி விட்டு தோட்ட வீட்டினுள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.

அவள் சொல்லிவிட்டு சென்ற செய்தியில் இருந்த உண்மை அவனை தாக்க ‘இந்த உணர்வு அவளுக்கு ஏன் இல்லாமல் போனது? இத்தனை பேரின் நிம்மதியை குலைக்க அவளால் எப்படி முடிகிறது? அப்படி என்ன சாதித்து விடப் போகிறாள் இந்த வாழ்க்கையின் மூலம்? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கான விடை தான் தெரியவில்லை.

வாழ்நாள் முழுவது வரும் பந்தத்தை வெறுப்பும், பொய்யும் கலந்து ஆரம்பிப்பது அந்த வாழ்க்கைக்கு என்ன கொடுக்கும்?

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் – 8

அத்தியாயம் – 8

மலர் எப்பொழுதும் போல அமைதியாக பிரபாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தாள். பவானி கோபமாக அவர்கள் இருவரையும் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.

“ஏம்மா அண்ணன் உங்களுக்கு பிள்ளை தானே? உங்களுக்கு தானே முதல் உரிமையிருக்கு. பாட்டி கிட்ட உங்க உரிமையை ஏன் விட்டுக் கொடுக்குறீங்க?” என்றாள் எரிச்சலாக.

அவளை முறைத்து “சத்தம் போடாம பேசப் பழகு பவானி. பாட்டி காதில் விழுந்திட போகுது” என்றார்.

“இன்னும் எத்தனை காலத்துக்கு தான் அவங்களை கண்டு பயந்துகிட்டு இருப்பீங்க? உங்க பையன் கல்யாணத்துல உங்களால முடிவெடுக்க முடியல. அப்புறம் அம்மான்னு எதுக்கு இருக்கீங்க?” என்றாள் கோபமாக.

மகளை திரும்பி பார்த்தவரின் விழிகளில் வேதனை “எனக்கு மட்டும் இல்லையா என்ன? வேண்டாம் விடு பவானி! பேசி பேசி வேதனையை அதிகமாக்காதே” என்றார்.

அவர்களின் பேச்சில் முகம் இறுக, ஒருவரையும் நிமிர்ந்து பார்க்காது அங்கிருந்து வெளியேறினாள் மலர்.

கலங்கிய கண்களுடன் “அவ என்ன பாவம்மா செஞ்சா? அண்ணனுக்கு மலர் தான் சரியா இருப்பா. என்னால வேற யாரையும் அண்ணியா நினைச்சு பார்க்க முடியல” என்றாள்.

மகளின் கைகளைத் தட்டிக் கொடுத்து “குடும்பங்களில் எல்லா நேரமும் நாம நினைக்கிறது நடந்திடாது. குடும்பம் நல்லா இருக்கணும்னா விட்டுக் கொடுத்தா தான் முடியும்மா” என்றவரை முறைத்தவள் “அப்போ அவங்க வாழ்க்கை என்னவானாலும் பரவாயில்லை. இந்த குடும்பத்தின் வாரிசு அண்ணன் தானே. அதுக்கு பிடிக்காத வாழ்க்கையை கொடுத்து வாழ சொன்னா எப்படி குடும்பம் நல்லா இருக்கும்?” என்றாள் கோபமாக.

“எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை கிடைப்பதில்லை பவானி. கிடைத்த வாழ்க்கையை வாழப் பழகிடுவாங்க. இது உனக்கு இப்போ புரியாது. பாட்டி வரதுக்குள்ள நீ போய் உன் அறையை சரி பண்ணு” என்றார்.

அன்னையை சற்று நேரம் முறைத்துக் கொண்டிருந்தவள் கடுப்புடன் சமையலறையிலிருந்து வெளியேற அப்போது அங்கே வந்த கார்த்திகா “பவானி இன்னைக்கு பாட்டி கிட்ட கேட்டு படத்துக்கு போகலாமா?” என்றாள் உற்சாகத்துடன்.

அவளை ஏளனமாக பார்த்து விட்டு பதிலேதும் சொல்லாமல் நகர இருந்தவளை கையைப் பிடித்து நிறுத்திய கார்த்திகா “என்ன பவானி?” என்றாள் குழப்பத்துடன்.

“முதல்ல கையை எடு! உனக்கு போகணும்னா எங்கே வேணா போ. என்னை கூப்பிடாதே” என்றாள் எரிச்சலுடன்.

அவளை குழப்பமாக பார்த்த கார்த்தி “எதுக்கு இப்ப்போ இவ்வளவு கோபப்படுற? சரி போக வேண்டாம் விடு…நாம இங்கேயே இருப்போம்” என்றாள்.

அவளின் இயல்பான பேச்சைக் கேட்டு எரிச்சலடைந்த பவானி “இதோ பார்! என் கிட்ட வந்து பேசுறதை நிறுத்து. உன்னோட நாடகத்தை எல்லாம் உன் பாட்டியோடவே வச்சுக்கோ” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றாள்.

செல்பவளையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகாவின் மனதில் அவள் மீதான துவேஷம் எழுந்தது. அப்படி என்ன அவளிடம் இருக்கு என்று அண்ணனும், தங்கையும் தாங்குறாங்க. நீங்க விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் தான் இங்கே உரிமைக்காரி. என்னை பகைச்சுக்காம இருந்தா இவளுக்கு நல்லது என்று எண்ணிக் கொண்டே சமயலறைக்குள் சென்றாள்.

அவளது மனதிற்குள் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக அத்தனை காழ்புணர்ச்சி மலர் மீது உருவாகி இருந்தது. எதனால் என்று அவளாலும் அதை நியாயபடுத்த இயலவில்லை. ஒரு மனது தான் செய்வது தவறு என்று உரைத்தாலும் அதை ஏற்கும் மன நிலையில் இல்லை.

மாமாவிற்கு இயல்பாக என் மீது தானே ஈர்ப்பு வந்திருக்க வேண்டும். தன்னை விட அழகில்லாதவள் மீது எப்படி வந்தது? தன்னை பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் தனது பார்வை கிட்டாதா என்றிருக்க, மாமன் மட்டும் மலரை பார்த்தால் கோபம் வராதா? என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அதே சமயம் உள்ளுக்குள் பயமும் இருந்தது. அவர்களின் காதலை பிரித்து திருமணம் செய்து கொண்டால் தனது வாழ்க்கை நன்றாக இருக்குமா என்கிற எண்ணமும் இருந்தது.

அனைத்தையும் மீறி மஞ்சள் கயிறு மேஜிக் அனைத்தையும் மாற்றி விடும் என்கிற நம்பிக்கையில் சாப்பிட சென்றாள்.

அங்கம்மாளும், அலமேலுவும் கார்த்திகாவின் தந்தைக்கு தகவல் சொல்லி அனுப்பி விட்டு அவரின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

முதல் நாள் நடந்த சம்பவங்களின் தாக்கத்துடன் எழுந்த விஜயன் எவரிடமும் பேசாமல் தனது வேலைகளை முடித்துக் கொண்டு தென்னந்தோப்பிற்கு சென்றான்.

அவனுக்கு முன்னமே அங்கிருந்த கோவிந்தன் மகனை பார்த்ததும் அவனிடம் பேச சென்றார். அவரை பார்த்ததும் பேசாமல் விலகிச் சென்று வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். சற்று நேரம் வரை பொறுத்தவர் வேலையாட்கள் முன்பு “விஜயா! எனக்கு களைப்பா இருக்கு இளநி எடுத்துகிட்டு மோட்டர் அறைக்கு வா” என்று கூறி நில்லாமல் அங்கிருந்து சென்றார்.

தந்தையின் நோக்கத்தை உணர்ந்து கொண்டவன் அங்கிருந்த ஆட்களில் ஒருவனிடம் இளநீரை கொடுத்தனுப்பி விட்டு விடுபட்ட வேலைகளை கவனிக்கலானான்.

அவரோ விடாது அந்த ஆளிடம் அவனை அழைத்து வரும் படி கூறினார்.

உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு அவரிருந்த அறைக்குச் சென்றான்.

அவனை கண்டதும் “விஜயா!” என்று ஆரம்பித்தவரை இடைமறித்து “வேலையைப் பத்தி பேசுறதுன்னா பேசுங்க ஐயா. வேற எதுவும் பேச நான் தயாரில்லை” என்றான்.

அவரோ அவனை முறைத்து “இப்போ என்ன நடந்திடுச்சுன்னு இப்படி கோபப்பட்டுகிட்டு இருக்க?” என்றார்.

பதில் பேசாது வெளியேற போனவனை “நில்லு விஜயா! நாம இதை இப்ப்போவே பேசியாகணும்” என்றார்.

இருகைகளையும் கட்டிக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்து “சொல்லுங்க என்ன பேசணும்?” என்றான்.

“ஒரு பொண்ணு மேல ஆசை வைக்கிறது தப்பில்லை. ஆனா ஆசைப்படுகிற பெண்ணைத் தான் எல்லோரும் கட்டிகிடனும்னா இந்த உலகத்தில் கல்யாணமே நடக்காது” என்றார்.

அவரையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு “நான் என்னைப் பற்றி பேச வரல. ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கும் போது அதை நம்ம பிள்ளையா நினைச்சு வளர்க்கணும். நீங்க அப்படித்தான் வளர்த்தீங்களா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

அதைக் கேட்டு கோபமடைந்தவர் “உனக்கு தெரியாது? மலரை நான் பவானி மாதிரி தான் நினைக்கிறேன்” என்றார்.

அவரை ஆழ்ந்து பார்த்தவன் “அப்போ பவானிக்கும் இப்படித்தான் துரோகம் பண்ணுவீங்களா? அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளையை விட்டுட்டு வேற ஒருத்தனுக்கு கட்டி கொடுத்து” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

“பதில் சொல்லுங்க ஐயா? பவானிக்கு உங்களால இப்படி செய்ய முடியுமா? முடியாது தானே! ஏன்னா அவ நீங்க பெத்த பொண்ணு. மலர் உங்க கிட்ட அடைக்கலம் தேடி வந்தவ. அவளுக்கு எது நடந்தாலும் கேட்க ஆளில்லை அது தானே?”

அவன் பேசப்பேச அப்படியே அங்கிருந்த திட்டில் அமர்ந்தவர் “என்னை பார்த்தா விஜயா இப்படி கேட்கிற? எனக்கு யாருக்கும் கெடுதல் இல்லாம தீர்ப்பு சொல்லத்தானே தெரியும். அந்தப் பிள்ளை உன்னைத்தான் கட்டிக்கணும்னு சொல்லி கிணத்துல விழுந்து உயிரை விடத் தயாரான பிறகு என்ன செய்ய சொல்ற?”

“எது உண்மையான நேசம் அன்புன்னு உங்களால புரிஞ்சுக்க முடியலேன்னா தீர்ப்பு சொல்லக் கூடாது ஐயா. நீங்க சொல்லலேன்னாலும் என்னை தடுக்காம இருந்திருக்கலாமே?”

“நீ உன்னை மட்டும் பார்க்கிற விஜயா. கல்யாணத்தில் கட்டிக்க போகிறவங்களை மட்டும் பார்க்க கூடாது. இதுல நம்ம மொத்த குடும்பத்தோட நிம்மதியும் இருக்கு”.

“என்ன பேசுறீங்க ஐயா? அப்போ என் நிம்மதியை அழிச்சிட்டு குடும்பத்துக்காக நாங்க வாழ்க்கையை விட்டுக் கொடுக்கணுமா:”.

“இங்கே பாரு விஜயா…இப்போ உனக்கு எல்லாமே கஷ்டமா தான் தெரியும். கல்யாணம் முடிஞ்சிட்டா இதெல்லாம் மறைஞ்சிடும். வருடங்கள் கடந்த பிறகு நீயே நினைச்சு பார்த்து சிரிப்ப” என்றார்.

“என்னை விடுங்க ஐயா! மலருக்கு என்ன நியாயம் பண்ண போறீங்க? உங்க தங்கை பெண்ணுக்காக பார்த்த நீங்க அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?”

“பொண்ணுங்க மனசு கஷ்டப்பட்டாலும் காலப் போக்கில் மனசு மாறி கிடைக்கிற வாழ்க்கையை ஏத்துக்க பழகிடுவாங்க”.

“இதை ஏன் கார்த்திகாவுக்கு சொல்லல நீங்க? உங்க தங்கை பொண்ணு என்பதாலையா?”

பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தவர் கடுப்பாகி “விஜயா! போதும் நிறுத்து! நம்ம விருப்பங்களுக்கு மதிப்பளிக்கிறதை விட சொந்தங்களுக்கு மதிப்பு கொடுத்து நம்ம விருப்பங்களை விட்டுக் கொடுத்திடனும்” என்றார்.

“வேண்டாம் ஐயா விட்டுடுங்க! என் வாழ்க்கை உங்க கையில் ஆனா மலரோட வாழ்க்கையை கெடுக்க உங்க யாருக்கும் உரிமை இல்லை. என்னால முடிந்த வரை இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்த போராடுவேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

கோவிந்தனுக்கு அவன் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிய சற்று நேரம் ஆனது. இவனது இந்த பிடிவாதம் என்னென்ன பிரச்சனைகளை கொண்டு வரப் போகிறதோ என்கிற பயம் வந்தது.

தோப்பில் சென்று நின்றவனின் மனது பற்றி எரிந்து கொண்டிருந்தது. கார்த்திகாவிடம் நேரடியாக பேசி விட வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது. ஆனால் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது நிச்சயமாக பாட்டி அதற்கான சந்தர்பத்தை கொடுக்க மாட்டார் என்றே தோன்றியது. மலருக்கு என்ன சொல்லப் போகிறோம் என்கிற எண்ணமே தலைவலியை வரவழைத்தது.

ஒரு ஓரமாக போடப்பட்டிருந்த திட்டில் அமர்ந்து விட்டான். மனமும், உடலும் சோர்ந்து போயிருந்தது.

அறையை விட்டு வெளியே வந்த கோவிந்தன் மகன் அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டு கலங்கினார். அவனை என்றுமே இப்படி பார்தததில்லை. அன்னையிடம் எதற்கும் பேசி பார்க்கலாமா என்கிற எண்ணம் வந்தது. மகனது நல்வாழ்விற்க்காக அதை செய்து பார்த்து விடுவோம் என்று எண்ணி வீட்டிற்கு கிளம்பினார்.

தந்தையின் மனதில் ஓடிய எண்ணங்களை அறியாது தோப்பிலேயே அமர்ந்து விட்டான் விஜயான் இரவு வரை.

அதே நேரம் அவனது வீடு அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது.

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் – 7

அத்தியாயம் – 7

நடப்பவற்றை எண்ணி மூச்சு முட்ட நின்றவனை நாலா பக்கமும் சூழ்ந்து கொண்டு அவனை தங்களது முடிவிற்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.

முஷ்டிகள் இறுக வாயை இறுக மூடி அனைவரையும் பார்த்தவனின் கண்களில் உறுதி தெரிந்தது. என்னவானாலும் இதற்கு ஒத்துக் கொள்ள கூடாது என்று பேரனின் முகத்தில் தெரிந்த உறுதியைக் கண்டு கொண்ட அங்கம்மாள் அதை உடைத்து விட முடிவு செய்தார்.

“அவன் என் பேரன். நம்ம பேச்சை மீறி என்னைக்கு பேசி இருக்கான். எல்லாம் கிளம்புங்க! நடக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு” என்றார்.

கார்த்திக்காவோ மாமனின் முகத்தை பார்த்தவண்ணம் “மாமா சொல்லட்டும் பாட்டி. என்னை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம்னு வார்த்தை வந்தால் தான் நகர்வேன்” என்றாள் அழுத்தமாக.

பவானிக்கு அவளின் பேச்சைக் கேட்டு உடலெல்லாம் பற்றி எரிந்தது. எதையாவது எடுத்து அவளை விளாசி விடலாமா என்று பார்த்தாள். மலருக்கும் அண்ணனுக்கும் இருக்கும் காதல் அறியாதவளா அவள். அப்படி இருந்தும் அவர்களை பிரிப்பது போல ஒரு செயலை எப்படி செய்யலாம்? என்றெண்ணி மனம் புழுங்கியபடி நின்றாள்.

யார் பேசினாலும் என் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்பது போல அசையாமல் நின்றவனை அத்தையின் அழு குரல் அசைத்தது.

“ஒத்தை பிள்ளையை பெத்து வளர்த்து அது ஆசைப்பட்டதை செய்து கொடுக்க முடியாமா பலி கொடுக்க போறேனே” என்று அழ ஆரம்பித்தார்.

அதுவரை இறுக்கிப் பிடித்திருந்த வாயைத் திறந்தவன் “பொருள் மேல ஆசைப்பட்டா வாங்கி கொடுத்திடலாம். இது மனசு சம்மந்தப்பட்ட விஷயம் அத்தை. எல்லோருமா மிரட்டி கல்யாணத்தை பண்ணிட முடியாது” என்றான் கடுப்பாக.

பேரனின் இந்தப் பேச்சு அங்கம்மாளிற்கு புதிது. அவர் மனதில் நெருடல் எழ மகனை முறைத்தவர் “நம்ம பேச்சை கேட்டு நடக்கிறது தான் நம்ம பிள்ளைகளுக்கு அழகு. நான் உன்னை அப்படித்தான் வளர்த்தேன். ஆனா உன் பிள்ளையை நீ அப்படி வளர்க்கல சாமி” என்றார் கோபமான குரலில்.

அன்னையின் கோபத்தைக் கண்டு செய்வதறியாது மகனை முறைத்து பின் பிரபாவின் அருகில் சென்றவர் யாரும் எதிர்பார்க்கும் முன் அவரை அறைந்திருந்தார்.

“நீ பிள்ள வளர்த்த லட்சணத்தை பார்த்துக்கோடி” என்றார் எரிச்சலாக.

அன்னையை அடித்ததும் அவரின் கையைப் பிடித்துக் கொண்ட விஜயன் “ஐயா! என் மேல உள்ள கோவத்தை என் கிட்ட காட்டுங்க. அம்மாவை அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க” என்றான் மிரட்டலாக.

தந்தையும் மகனும் அடித்துக் கொண்டு நிற்பதை பார்த்த பிரபா கண்ணீருடன் மகனின் கைகளைப் பற்றி “கார்த்தியை கல்யாணம் பண்ணிக்கோ விஜயா” என்றார்.

அன்னை அழுவதை பார்த்ததும் கலங்கிப் போனவன் “அம்மா! நான்…” என்றவன் மேலும் பேச முடியாமல் தலையை கோதிக் கொண்டு இருளை வெறித்தான். அவனது மனதில் ஆறாத காயம் ஏற்பட்டது.

சற்று நேரம் இருளை வெறித்தபடி நின்றிருந்தவனின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

மெல்ல அனைவரின் பக்கமும் திரும்பியவன் எவரின் கண்ணையும் நோக்காது “சம்மதம்” என்று கூறி விட்டு விடுவிடுவென்று அங்கிருந்து சென்றான்.

அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளிவிட்டவளின் இதழில் வெற்றிப் புன்னகை.

குளியலறையின் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த மலரோ அவனது வார்த்தைகள் காதில் விழுந்ததும் அப்படியே மடங்கி கீழே அமர்ந்தாள். அவளது மனமோ கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது. சொல்லிட்டான் சம்மதம் சொல்லிட்டான் என்று.

கண்கள் கண்ணீரை தாரை தாரையாக பொழிய ஆரம்பித்தது. மனம் அசைவற்று போனது. முடிந்தது எல்லாம் முடிந்தது. இதை எதிர்பார்த்திருந்தாலும் முடிவை அறிந்த பிறகு வாழ்க்கையை வாழும் ஆவல் முற்றிலுமாக தொலைந்து போனது.

தனதறைக்கு சென்று கதவை சாத்தியவன் மனதும் ரத்தக்கண்ணீர் வடித்தது. அவளுக்கு என்ன சமாதானம் சொல்வேன்? என் மீது நம்பிக்கை வைத்திருந்திருப்பாளே அவளை ஏமாற்றி விட்டேனே என்று உள்ளுக்குள் கதறினான். ஜன்னலோரம் நின்று தோட்டத்து இருளை வெறித்தான். இந்த நிமிடமே எங்காவது ஓடி விடலாமா என்று யோசித்தான்.நிச்சயமாக கார்த்திகாவோடு தன்னால் வாழ இயலாது. இப்பொழுதே மூச்சு முட்டுகிறது. இனி மலரை எப்படி பார்ப்பேன்? நான் எதையாவது செய்து அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று நம்பிக்கை வைத்திருந்திருப்பாள். கையாலாகாதவன் போல் சம்மதம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன் என்று தன்னை எண்ணியே வெறுப்படைந்தான்.

தோட்டத்தில் இருந்தவர்களோ மெல்ல ஒவ்வொருவராக அங்கிருந்து சென்றனர். கார்த்திகாவின் கையைப் பற்றிக் கொண்ட அலமேலு அன்னையுடன் அவரது அறைக்குச் சென்றார்கள்.

உள்ளே நுழைந்தது கதவை சாத்திய அலமேலு அங்கம்மாளிடம் “நாளைக்கே அவரை வர சொல்றேன் அம்மா. சீக்கிரம் கல்யாணத்தை வச்சிடணும்” என்றார் தீவிரமாக.

மகளை கூர்ந்து பார்த்த அங்கம்மாள் “ஏன் அப்படி சொல்ற அலமு?”

“உன் பேரன் மனசு என் பொண்ணு மேல இல்லம்மா. அவனுக்கு அந்த குட்டியை பிடிச்சிருக்கு போல. அவன் மனசு மாறுவதுக்குள்ள கட்டி வச்சிடணும்” என்றார் தவிப்பாக.

“ம்ம்…நான் இதை எதிர்பார்க்கல. ஆனா நீ சொல்றது எனக்கு சரியாப்படல அலமு. வேறிடத்தில் மனசை வைத்தவனுக்கு உன் பெண்ணை கட்டிக் கொடுக்கிறது நல்லதில்லை. வேற நல்ல இடமா பார்த்து பண்ணலாம்” என்றார்.

அதைக் கேட்டு கோபமடைந்த அலமு “ஏன் மா? அவளை உன் பேரனுக்கு கட்டி வைக்கப் போறியா?” என்றார்.

மகளை முறைத்தவர் “புரியாம பேசாதே! வேறொருத்தி கிட்ட மனசை கொடுத்தவனை கட்டிகிட்டா என் பேத்தி வாழ்க்கை வீணா போயிடும்னு சொன்னேன். அதுக்காக அவளை இந்த வீட்டு மருமகளாக்க எப்போதும் சம்மதிக்க மாட்டேன்” என்றார்.

அதுவரை இருவர் பேசுவதையும் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகா “என் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதீங்க பாட்டி. மாமாவை எப்படி என்னை சுத்தி வர வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்” என்றாள்.

பேத்தியை கவலையாக பார்த்து “விஜயனை நீ புரிஞ்சுக்கல கார்த்தி. இவனை விட நல்லவனா உன்னை பிடிச்சு சம்மதிக்கிறவனா உனக்கு கட்டி வைக்கிறேன். இவன் வேண்டாம் உனக்கு” என்றார்.

பாட்டியின் கைகளை கோபமாக தட்டி விட்டவள் “இந்த முறை என்னை காப்பாத்திட்டீங்க. மாமாவை கல்யாணம் பண்ணி வைக்கலேன்னா நிச்சயமா ஏதாவது செய்துகுவேன்” என்றாள் மிரட்டலாக.

அலமுவோ மகள் அப்படி கூறியதும் ஒ-வென்று அழ ஆரம்பித்தவர் “ஏன்மா என் பொண்ணு உயிரை எடுக்காம விட மாட்டீங்க போல இருக்கே. அவ கட்டிக்க ஆசைப்படுறது அவ மாமனை தானே? எங்க அண்ணன் பிள்ளையை மருமகனாக்கிறது அவ்வளவு பெரிய குத்தமா?” தாயாரை முறைத்தார்.

அங்கம்மாளுக்கு நிலைமை கை மீறி போய் விட்டது என்பது புரிந்து போனது. இனி யார் தடுத்தாலும் நடப்பது தான் நடக்கும் என்று புரிந்து கொண்டார். இதில் பேரன், பேத்தி இருவருடைய வாழ்க்கையும் பாதிப்படையும் என்பதையும் எண்ணி மனம் வருந்தினார்.

தன்னை தேற்றிக் கொண்டு “சரி சரி சும்மா அழாதே! நாளைக்கே மாப்பிள்ளைக்கு தாக்கல் சொல்லிவிடு. அவர் வந்ததும் மற்றது எல்லாம் பேசி முடித்திடலாம்” என்றார்.

அவரின் வார்த்தைகளை கேட்ட தாய், மகள் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது. ஒருவழியாக தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டோம் என்று எண்ணி மகிழ்ந்து போனார்கள்.

கார்திக்காவோ மலரை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். உன்னிடம் என்ன இருக்குன்னு என் மாமா உன்னை காதல் பொங்க பார்த்தார்? என்னை பார்க்கிறவங்க அத்தனை பேரும் இவ்வளவு அழகான்னு சொல்லாம இருக்க மாட்டாங்க. ஆனா உன்னால என் சொந்த மாமா என்னை திரும்பி கூட பார்க்கல. இப்போ பாரு அவர் இனி என்னைத் தவிர வேற யாரையும் திரும்பி பார்க்க முடியாதபடி செஞ்சிட்டேன். எனக்கு மட்டுமே சொந்தம் என்று தான் செய்ததை எண்ணி பெருமிதம் கொண்டாள்.

மருமகளின் அருகே படுத்திருந்த பிரபாவோ அவளை மகனுக்கு கட்டி வைக்க முடியாமல் போனதில் வருத்தத்தில் இருந்தார். அவளது முதுகையே வெறித்து பார்த்தபடி படுத்திருந்தார். மறுபக்கம் திரும்பி படுத்திருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. பவானி அவளது கைகளை அழுந்தப் பற்றியபடி அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மெல்லிய குரலில் “மலரு! என்னை பேச விடு. நான் போய் அப்பா கிட்ட சொல்றேன். அண்ணன் உன்னைத் தான் விரும்புதுன்னு. நாளைக்கு காலையில எல்லோர் முன்னாடியும் சொல்றேன் மலரு. எனக்கு அவ செஞ்சது துளி கூட பிடிக்கல” என்றாள் கண்ணீருடன்.

“வேண்டாம் பவானி…என் தலையெழுத்து இது தான் விட்டுடு”.

“எனக்கு அவ அண்ணியா வர வேண்டாம் மலரு. என்னைக்கும் நீ தான் என் அண்ணி” என்றாள் அழுகையுடன்.

“அந்த வார்த்தைக்கு மதிப்பில்லாம போச்சு பவானி” என்று லேசாக குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

“எனக்கு அவளைக் கண்டாலே பிடிக்கல. நம்ம கூடவே இருந்துட்டு எப்படி இந்த மாதிரி செய்ய முடிஞ்சுது. உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கிறது தெரியாமலா இதை செஞ்சிருக்கா? பெண்ணா அவ பிசாசு” என்றாள் ஆத்திரமாக.

பதில் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள்.

“இந்த அண்ணன் கூட எதுக்கு ஒத்துகிட்டு? யார் சொன்னாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லனுமா வேண்டாமா?” என்றாள் எரிச்சலுடன்.

“அவங்களுக்கு வேற வழியில்ல பவானி. எல்லோருமா சேர்ந்து மடக்கினா என்ன பண்ணுவாங்க?”

அவளது குமட்டில் இடித்தவள் “இப்பவும் அண்ணனை விட்டுக் கொடுக்காத…இத்தனை பாசம் வச்சிருக்கிற உன் கிட்ட இருந்து அவ பிடுங்கிட்டு போயிட்டாளே? என்னால இதை ஒத்துக்கவே முடியாது” என்று புலம்பினாள்.

அவளது கையைத் தட்டிக் கொடுத்த மலர் “இது தான் நிதர்சனம் பவானி. இதை ஏத்துகிட்டு தான் ஆகணும்” என்றாள் சோர்வான முகத்தோடு.

“அப்போ எங்கண்ணனை விட்டுட்டு எங்கப்பா பார்க்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டப் போறியா?” என்றாள் ஆத்திரமாக.

அவள் அப்படி கேட்டதும் தலையணையில் முகம் புதைத்து அழுதவள் “ஒன்னு நான் உயிரை விடனும் இல்லேன்னா யாருக்காவது கழுத்தை நீட்டனும். எனக்கு இதை தவிர வேற வழியில்லையே” என்றாள்.

அவளது நிலையை உணர்ந்து கொண்ட பவானி அவசரமாக வாரி அணைத்துக் கொண்டு தானும் சேர்ந்து அழ ஆரம்பித்தாள்.

அன்றைய பொழுது அனைவரின் மனதிலும் பாரத்தை ஏற்றி விட்டு சென்றது.

மறுநாள் காலை வழமை போல தனது காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் பிரபா. அவரது கண்கள் வீங்கி சிவந்திருந்தது. முகத்தில் எதையும் வெளிக்காட்டாது நடமாடிக் கொண்டிருந்தார்.

கோவிந்தனும் வயலுக்கு போய் விட்டு வீடு திரும்பியவர் நடுக்கூடத்தில் வந்தமர்ந்தார். அப்போது அங்கு வந்த அங்கம்மாள் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு “இன்னைக்கு முனியனை வர சொல்லு. மருமக பிள்ளைக்கு தாக்கல் சொல்லி அனுப்பனும்” என்றார்.

அன்னையை புரியாத பார்வை பார்த்து “யாருக்கும்மா?” என்றார்.

மகனை முறைத்து “என்ன இப்படி கேட்டுட்ட? பிள்ளைங்க கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாச்சு. அடுத்து நடக்க வேண்டியதை பார்க்க வேண்டாமா?” என்றார்.

அதைக் கேட்டதும் சற்றே அதிர்ந்து போனவர் மகனை எண்ணி வருத்தமடைந்தார்.

“சரி மா வர சொல்றேன்” என்று முடித்துக் கொண்டார்.

அப்போது அங்கே வந்த அலமு “முதல்ல தரகரை வர சொல்லு அண்ணே. வீட்டுல பெண்ணை வச்சுகிட்டு கல்யாணம் பண்றது தப்பு. மலருக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து தள்ளி விட்ட பின்ன இதுக கல்யாணத்தை பண்ணிக்கலாம்” என்றார்.

அக்காவின் பேச்சைக் கேட்டு அன்னையின் முகத்தை பார்க்க, அவரோ “என்ன அலமு பேசுற? கல்யாணத்துக்கு பார்க்கறது உடனே முடியுமா என்ன? முதல்ல இவங்க கல்யாணத்தை முடிப்போம். அவளுக்கு அப்புறமா பண்ணுவோம்” என்றார்.

அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பிரபாவிற்கு தன் அண்ணன் மருமகளின் வாழ்வை எண்ணி கவலை சூழ்ந்தது.

அம்மாவும், மகளுமே முடிவு செய்யட்டும் என்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கோவிந்தன்.

“இங்கே பாரு அலமு. முதல்ல உன் பொண்ணு கல்யாணம் முடியட்டும். அப்புறம் அவளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கட்டி கொடுத்திடுவோம்” என்றார்.

அன்னையின் அருகில் குனிந்து “மடியில நெருப்பை கட்டின மாதிரி இருக்கும்மா அவளை பார்க்கும் போது. அதுக்கு தான் அவளை கட்டி கொடுத்திட்டா நிம்மதியா இருக்குமில்ல” என்றார் மெல்லிய குரலில்.

மகளை முறைத்தவர் “அடியே! அவன் என் பேரன். கொடுத்த வாக்கை காப்பாத்துவான். நீ பேசாம இரு” என்றார்.

அந்தப் பக்கமாக காப்பி டம்ளருடன் சென்று கொண்டிருந்த மலரின் காதில் இவர்கள் பேசியது விழ, மனமோ சுக்கு நூறாக உடைந்து போனது.

இறுகி போன முகத்தோடு காப்பியை எடுத்துக் கொண்டு தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்தவள் கீழே அமர்ந்து விட்டாள். விழிகள் சூனியத்தை வெறிக்க, மனமோ இந்த வீட்டில் இனி தன் நிலைமை என்ன என்பதை உணர்ந்து கொண்டதன் வலி நிறைந்திருந்தது….

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் – 6

அத்தியாயம்-6

காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பியவனை நிறுத்திய கோவிந்தன் “விஜயா தோப்புல இருக்கிற மோட்டார் ரிப்பேரா இருக்குப்பா. அதை கொண்டு கொடுத்து வாங்கிட்டு வர சொல்லு யாரையாவது” என்றார்.

“ம்ம்..டவுனுல வேலை இருக்குங்க ஐயா. நானே எடுத்திட்டு போறேன்” என்றபடி வண்டியை உதைத்துக் கிளப்பினான்.

தனது தந்தையின் ஜாடையில் இருப்பவனை பார்த்துக் கொண்டே சமயலறைக்கு சென்றார். அங்கு இலை போடப்பட்டு தண்ணீர் வைக்கப்பட்டிருந்ததை கண்டதும் “என்ன ஒரு இலை போட்டிருக்கே பிரபா?” என்றார்.

கணவரின் முகம் பார்க்காது “அத்தைக்கு சுகமில்லையாம் மெதுவா சாப்பிடுறேன்னு சொன்னாங்க” என்றார்.

அமரப் போனவர் மனைவியின் வார்த்தையைக் கேட்டு “என்னாச்சு அம்மாவுக்கு?” என்று கேட்டு அவரை பார்க்க கிளம்பினார்.

“வயித்து பிரச்சனை தான் கஷாயம் போட்டுக் கொடுத்திருக்கேன். சரியாகிடும் நீங்க உட்காருங்க” என்றார்.

மனைவியின் குரலில் தெரிந்த ஏதோவொரு உணர்வு அவரை போக விடாமல் தடுக்க, அமைதியாக அமர்ந்தார். பதார்த்தங்களை பரிமாறினாலும் கணவரை நிமிர்ந்து கூட பார்க்காது இருந்தார் பிரபா. மனைவியின் முகத்தில் தெரிந்த சோகத்தை புரிந்து கொண்டவர் அதன் காரணத்தையும் அறிந்திருந்தார்.

மெல்ல தொண்டையை கனைத்து “என்னாச்சு பிரபா?” என்றார்.

விழியுர்த்தி அவரை பார்த்தவர் “எதுவுமே ஆகல அது தான்” என்று கூறி விட்டு அடுப்பை கவனிக்க சென்றார்.

“நான் என்ன பண்றது பிரபா? அம்மாவுக்கு விருப்பம் இல்லாதப்ப எப்படி பேசுறது?”

முந்தானையில் கையை துடைத்துக் கொண்டே வந்தவர் “நான் எதுவுமே சொல்லலையே. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணுமில்லையா?”

“விடு பிரபா! மலருக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணத்தை செஞ்சுடுவோம்”.

“எங்க அதுக்கும் தான் வழியை அடைக்கிறாங்களே. நல்லா செஞ்சா தானே நல்ல வரனா வரும்” என்றார் எரிச்சலாக.

சாப்பிட்டு முடித்து கையை கழுவிக் கொண்டு வந்தவர் “நீ ஒண்ணும் கவலைப்படாதே பிரபா. நான் பார்த்து செஞ்சிடுறேன்”.

“ம்ம்ம்..”

யோசனையுடனேயே வெளியே வந்தவரை வரவேற்பறையில் கேட்ட குரல் கலைத்தது. முதல்நாள் தகவல் சொல்லி அனுப்பியபடி தரகர் வந்திருந்தார். அவரின் குரல் கேட்டு உள்ளே படுத்திருந்த அங்கம்மாள் அவசரமாக நாற்காலியில் வந்து அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து அலமேலுவும் வந்து நின்றார்.

வெளியே பல பேச்சு குரல்கள் கேட்கவும் சிறியவர்களும் வந்து நின்றனர். தரகரை பார்த்ததும் பவானிக்கு உள்ளுக்குள் பயம் வந்தது.

“வாங்க…”

“ஐயா! நீங்க சொல்லியனுப்பின மாதிரி கொஞ்சம் வரன்கள் கையில இருந்தது. மாப்பிள்ளைங்க போட்டோவும் இருக்கு” என்று கூறி பையிலிருந்து நான்கைந்து போட்டோக்களை நீட்டினார்.

கார்த்திகா எதுவுமே தெரியாத மாதிரி “பவானி! உனக்கு கல்யாணமாடி” என்று கிசுகிசுத்தாள்.

மலருக்கோ அது தனக்கானது என்று உணர்ந்ததும் உள்ளுக்குள் அடைத்தது. கண்கள் தன்னை அறியாமலே கலங்கியது.

பவானியோ “ச்சே! சும்மா இரு கார்த்தி” என்றாள் எரிச்சலாக.

தரகரிடம் இருந்து வாங்கிய போட்டோக்களை அன்னையிடம் கொடுத்தவர் “சொல்லுங்க..” என்றார்.

அவர் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார். ஒரு சில வசதியான மாப்பிள்ளையை பற்றி கேட்ட அங்கம்மாள் அது தங்களுக்கு ஒத்து வராது என்று ஒதுக்கி வைத்தார்.

மலரையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகாவிற்கு அவளை சீண்டி பார்க்கும் எண்ணம் வந்தது.

“பாட்டி! பவானிக்கு நல்ல பெரிய வீட்டு மாப்பிள்ளை தானே பார்ப்பீங்க” என்றாள் எதுவுமே தெரியாத மாதிரி.

அவளைத் திரும்பி பார்த்து முறைத்தவர் “நீ இங்கே என்ன பண்ற? மலருக்கு தான் கலயாணத்துக்கு பேசுறோம். முதல்ல உள்ளே போங்க” என்றார்.

அதைக் கேட்டு உற்சாகமாக சிரித்துக் கொண்டு “வாங்க நாம போவோம்” ன்று முன்னே சென்றாள்.

மலருக்கு கண்கள் கலங்கி பார்வையை மறைத்து. கால்கள் தடுமாற ஆரம்பித்தது. அவளது உணர்வை புரிந்து கொண்ட பவானி கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டு மெல்லிய குரலில் “நான் அண்ணன் கிட்ட பேசுறேன் மலரு. நீ கலங்காதே” என்றாள்.

“வேண்டாம் பவானி…நீ எதுவும் சொல்லாதே” என்றாள்.

“இந்த பாட்டியை பார்த்தாலே எரிச்சலா இருக்கு மலரு. அத்தை கூட கூட்டணி வச்சுக்கிட்டு உன்னை கல்யாணம் பண்ணி அனுப்ப பார்க்குது” என்றாள்.

அவளது பேச்சிற்கு பதில் எதுவும் கொடுக்காமல் அமைதியாக நடந்தாள்.

“இவங்க நினைப்பெல்லாம் நடக்காது. கார்த்திக்கு அண்ணன் மேல எந்த உணர்வும் இல்லை. அவ கிட்ட உங்க ரெண்டு பேரையும் பத்தி சொன்னா புரிஞ்சுப்பா” என்றவளை பயத்துடன் பார்த்த மலர் “வேண்டாம் பவானி. இதை பத்தி நீ யார் கிட்டேயும் பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு” என்று கையை நீட்டினாள்.

“அடியே என் அண்ணி! உன்னை” என்றவள் “அண்ணன் பார்த்துக்கும் எல்லாத்தையும் நீ கவலைப்படாதே” என்றவள் அவள் கைகளில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தாள்.

தரகரிடம் பேசி ஒரு மூன்று நான்கு வரன்களை பற்றி அறிந்து கொண்டு மலரின் ஜாதகத்தையும் அவரிடம் கொடுத்தனுப்பி தகவல் தெரிவிக்க கூறினார்.

நடந்த பேச்சு வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த பிரபாவிற்கு முகம் விழுந்து விட்டது. அன்னையும், மகளும் மிக சாதாரண இடங்களையே தேர்ந்தெடுத்து கொடுத்திருந்தனர். கோவிந்தனுக்கும் அவர்களின் பேச்சை மீற முடியவில்லை. தரகர் கிளம்பியதும் அவரும் தன் வேலைகளை பார்க்க கிளம்பி விட்டார்.

அன்று முழுவதும் கார்த்திகாவை விட்டு விட்டு மலரின் பின்னேயே அலைந்து கொண்டிருந்தாள் பவானி. கார்த்திகாவும் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். அவளுக்கு சிந்திக்க வேண்டி இருந்தது. மலருக்கு மாப்பிள்ளை பார்ப்பது விஜயனுக்கு தெரியும் போது அவன் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறான் என்று சிந்தித்தாள். மலரை போன்று அவன் அமைதியாக இருந்து விட மாட்டான் என்றும் தோன்றியது. நிச்சயமாக தனது காதலை சொல்லத் தயங்க மாட்டான். அப்படி அவன் சொல்லி அனைவரும் ஒத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது? என்று யோசிக்கலானாள்.

அவனிடம் சென்று தான் அவனை விரும்புவதாக சொல்லி விடலாமா? இல்லை பாட்டியிடம் சென்று எனக்கு சீக்கிரம் மாமாவை கல்யாணம் செய்து வையுங்கள் என்று கூறி விடலாமா என்று யோசித்தாள். இதெல்லாம் சரியாக வருமா? விஜயன் அனைவரையும் பேசி சரி கட்டி விட்டால் மலரிடம் தோற்றுப் போய் விடுவோம் என்று தோன்றியது. எப்படியாவது அவர்களின் காதலை உடைத்து விஜயனை கைப் பிடிக்க வேண்டும் என்கிற வெறி எழுந்தது.

தன்னை நினைத்தே அவளுக்கு அதிசயமாக இருந்தது. விஜயன் மீது அதுநாள் வரை எந்த உணர்வும் தோன்றியதில்லை. இப்பொழுதும் கூட அவன் மீது தனக்கு காதலோ, ஈர்ப்போ இல்லை என்றாலும் தன்னுடைய அழகை கண்டு கொள்ளாமல் மலரின் மீது அவன் பார்வை செலுத்தியது தான் தவறாகி போனது. அனைவரும் திரும்பி பார்க்கும் தன்னை விட்டுவிட்டு மலரின் மீது ஆசை வைத்தது அவன் தவறு. அடைக்கலமாக போன வீட்டில் அந்த வீட்டுப் பிள்ளையை காதலிப்பது தவறு. அதனால் தான் எனக்கு அவர்களை பிரிக்கும் வெறி எழுகிறது என்று கூறிக் கொண்டாள்.

பல்வேறு சிந்தனைகளில் உழன்றபடி இருந்தவள் உறுதியான ஒரு முடிவிற்கு வந்தாள். விஜயன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை பொறுத்து தனது நாடகத்தை அரங்கேற்றி விடலாம் என்று முடிவு செய்து கொண்டாள்.

இரவு உணவிற்குப் பிறகு தந்தையும், மகனும் கொல்லையில் கயிற்று கட்டிலில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

“போன வேலை என்னாச்சு விஜயா?”

“அம்பது மூட்டை உரத்துக்கு சொல்லி வச்சிட்டு வந்திருக்கேன். நாளைக்கு அனுப்புறேன்னு சொல்லி இருக்கான்”.

“ம்ம்..மோட்டார் என்னைக்கு தரேன்னு சொல்லி இருக்கான்?”

“அதுக்கு பார்ட்ஸ் கைவசம் இல்லையாம். அதனால நாள மறுநாள் தரேன்னு சொல்லி இருக்கான்”.

“ஒ…சரி. இன்னைக்கு தரகரை வர சொல்லி இருந்தேன்” என்றார் இருளை வெறித்தபடி.

“என்னப்பா பவானிக்கு என்ன அவசரம்? இன்னும் ஒரு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாமே” என்றான் தந்தையை பார்த்தபடி.

மகனை பார்த்து சிரித்தவர் “பவானிக்கு இல்ல விஜயா. நம்ம மலருக்கு தான். உங்க அத்தையும், பாட்டியும் அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொன்னாங்க” என்றார்.

காதில் விழுந்த செய்தியில் அதிர்ந்து போனவன் “என்னப்பா சொல்றீங்க? மலருக்கா?” என்றான்.

அவனது அதிர்ச்சியைக் கண்டு புரியாத பார்வையுடன் “ஆமாம் விஜயா…அவளுக்கும் கல்யாணம் பண்ணனும் இல்ல” என்றார்.

தந்தையிடம் எப்படி சொல்வது என்கிற பதட்டத்தில் கட்டிலிலிருந்து எழுந்து கொண்டவன் தலையை கோதியபடி “அப்பா!…நான்..” என்றவன் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான்.

அப்போதும் புரியாது “என்ன விஜயா?” என்றார்.

நீண்ட பெருமூச்சுடன் “அப்பா! எனக்கு மனைவியா மலர் வரணும்னு நினைக்கிறேன்” என்று பட்டென்று சொல்லி விட்டான்.

இப்ப்போது விழிப்பது கோவிந்தனின் முறையாகி போனது.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. இப்ப்படி ஒன்று வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார்.

அவனோ சொல்லி முடித்து விட்ட திருப்தியில் நின்றிருக்க, அவர்கள் இருந்த இடத்திற்கு பின்னே லேசான அழுகை சத்தம் கேட்க, இருவரும் சுதாரித்துக் கொண்டு திரும்பிய போது கார்த்திகா வேகமாக அழுது கொண்டே கிணற்றை நோக்கி ஓடினாள்.

விஜயன் என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ளும் முன்னே கிணற்றில் குதித்திருந்தாள்.

இருவருக்கும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தொம்மென்று எழுந்த சத்தத்தில் வீட்டிற்குள் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு கொல்லைக்கு வந்தனர்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட விஜயன் அவசரமாக கிணத்தருகில் சென்று உள்ளே இறங்க ஆரம்பித்தான். கார்த்திகா கிணற்றில் விழுந்து விட்டாள் என்று தெரிந்ததும் அலமேலு மயங்கி விழ, அவரை சுற்றிக் கொண்டனர்.

கோவிந்தனுக்கு நடக்கின்ற சம்பவங்களை கண்டு நெஞ்சு வலி வரும் போல தோன்றியது. பவானிக்கு அவள் எதற்கு கிணற்றில் விழுந்தாள் என்று புரியாமல் யோசித்தாள். மலருக்கு மட்டும் அவளின் செய்கைக்கான காரணம் நன்றாக புரிந்தது. இனி, அடுத்து நடக்க இருப்பவைகளும் என்னவென்று புரிந்து போனது. அவளது மனம் அந்த நிமிடம் உயிர்ப்பை இழந்தது.

கிணற்றில் விழுந்தவளை தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் போட்டான். அனைவரும் அவளை சூழ்ந்து கொள்ள, வயிற்றிலிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு அவள் மெல்ல கண்களைத் திறந்தாள். இருகைகளையும் கட்டியபடி ஒதுங்கி நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான் விஜயன்.

அலமேலு பெண்ணிடம் “ஏண்டி இப்படி பண்ணின? நல்லாத்தானே இருந்த?உனக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்கப்பாருக்கு என்ன பதில் சொல்லுவேன்?” என்று அழ ஆரம்பித்தார்.

அவளோ யார் முகத்தையும் பாராது கண்களை அழுந்த மூடிக் கொண்டாள். அவளது உதடுகள் இறுக்கமாக மூடிக் கொண்டன.

அலமேலுவை முறைத்த அங்கம்மாள் “நீ முதல்ல அழுவுறதை நிறுத்து. அவ எதுக்கு இப்படி செஞ்சான்னு தெரிஞ்சுக்காம பேசிட்டே போறது” என்று அதட்டினார்.

மெல்ல அவள் அருகில் அமர்ந்து “அம்மாடி! ராசாத்தி! கண்ணைத் திறந்து பாரு. இந்த பாட்டி கிட்ட சொல்லு உனக்கு என்ன குறை?’ என்றார்.

அப்போதும் கண்ணைத் திறக்காமல் இருக்கவே,அவளது கைகளைப் பற்றிக் கொண்டு “அம்மாடி! உனக்கு என்ன குறை இருந்தாலும் சொல்லு ராசாத்தி. இந்த பாட்டி நிறைவேற்றி வைப்பேன்” என்றார்.

அவர் சொன்னதும் கண்களை அவசரமாக திறந்தவள் “எனக்கும் மாமாவுக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வை பாட்டி” என்றாள்.

அங்கிருந்த அனைவரும் அவள் சொன்னதைக் கேட்டு விழிக்க, விஜயனோ கூர்மையான பார்வையுடன் அவளை ஆராய்ந்தான். அவள் தாங்கள் பேசியதை கேட்டே கிணற்றில் விழுந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் அதற்கான காரணமாக இதையும் யூகித்தான்.

அதனால் அவனுக்கு அதிர்ச்சியில்லை. ஆனால் கோவிந்தனுக்கு இது அடுத்த அதிர்ச்சி.

அவளது பேச்சைக் கேட்ட அங்கம்மாள் “அடியே! இதுகாகவா கிணத்துல குதிச்ச? என் கிட்ட சொல்லியிருந்தா நாளை பார்க்க சொல்லியிருப்பேன் இல்ல” என்றார்.

அலமேலுவோ “என்னடி பண்ணி வச்சிருக்க? எங்க கிட்ட சொல்லாம இப்படி கிணத்துல குதிச்சு” என்று அழ ஆரம்பித்தார்.

நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்த விஜயனின் உள்ளமும், உடலும் இறுகி இருந்தது. கார்த்திகா எதற்கு இப்படி பேசுகிறாள் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு தன் மேல் காதல் இருப்பது போல் தெரியவில்லை. பின்னர் ஏன் இப்படி சொல்கிறாள் என்று கண்களை இடுக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை எழுப்பி அமர வைத்த அங்கம்மாள் “இங்கே பாரு கார்த்தி…நீ தான் நம்ம வீட்டு மருமகன்னு என்னைக்கோ முடிவானது. இதுக்கு எதுக்கு கிணத்துல குதிச்ச?” என்றார்.

அவளோ தலையை கவிழ்த்துக் கொண்டிருந்தவள் “நீங்க சொல்றீங்க…மாமாவுக்கு என்னை பிடிக்கணுமே” என்றாள் மெல்லிய குரலில்.

அவளது கையைப் பிடித்துக் கொண்ட அங்கம்மாள் “என்னடி இது பேச்சு! என் பேரனுக்கு உன்னை பிடிக்காம போகுமா? என்ன உனக்கு இப்போ? அவன் வாயால உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லணும் அவ்வளோ தானே?” என்றவர் விஜயன் பக்கம் திரும்பி “இங்கே வா விசயா…வந்து இவ கிட்ட சொல்லு கல்யாணம் செஞ்சுகிறேன்னு” என்றார்.

அவளின் நாடகத்தைக் கண்டு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தவன் பாட்டியின் பேச்சில் வெடித்து சிதறிட எண்ணி வாயைத் திறந்க்கு நேரம் அவனது தந்தை கையைப் பிடித்து அழுத்த, அத்தை அவன் காலில் விழுந்திருந்தார்.

“ஐயா மருமவனே! பிடிக்குதுங்குற வார்த்தையை தவிர வேற எதுவும் சொல்லிடாதே…நான் வச்சிருக்கிறது ஒரே ஒரு உசுரு. அதை என்னை விட்டு பிரிச்சிடாதே” என்று அழ ஆரம்பித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காதவன் அப்படியே உறைந்து நின்றான்.

நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த பவானி வெளியில் சொல்ல முடியாத வேதனையுடன் நின்றிருந்தாள். மலரோ எந்த நேரம் உடைந்து விழுந்து விடுவது போல உடல் தொய்ந்து நின்றிருந்தாள். மெல்ல இருளில் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

கண்கள் தாரை தாரையாக கண்ணீரை சிந்த, உள்ளமோ ‘முடிந்தது! எல்லாம் முடிந்தது’ என்று கத்திக் கொண்டிருந்தது.

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் – 5

அத்தியாயம் – 5

கார்த்திகா வந்து மூன்று நாட்களுக்கு மேலாகி இருந்தது. அவள் வந்ததில் இருந்து மலருக்கு வேலை குறைவாக இருந்தது. அங்கம்மாள் பேத்தியுடன் அவள் இருக்க வேண்டும் என்பதற்காக எதுவும் சொல்லாமல் இருந்தார்.

மூவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தாலும், கார்த்திகா தன்னிடம் சற்று ஒதுக்கம் காட்டுவது போல் தோன்றியது மலருக்கு.

அன்று காலை விஜயன் வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, அவனை அழைத்த கோவிந்தசாமி “இன்னைக்கு நுங்கு இறக்கி கொண்டு வந்து போடுப்பா. அத்தைக்கும், கார்த்திகாவுக்கும் பிடிக்கும்” என்றார்.

“ம்ம்..சரிப்பா” என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

பெண்கள் மூவரும் குளத்தில் குளிப்பதற்காக துணியை எடுத்துக் கொண்டு கிளம்பினர். போகும் வழி எல்லாம் வளவளத்துக் கொண்டே சென்றாள் பவானி.

அங்கே சென்று நீரைக் கண்டதும் மலர்ந்து போன கார்த்திகா குஷியாகி துணியை வைத்துவிட்டு நீரில் பாய்ந்தாள். மலரோ படியில் அமர்ந்தபடி அவளை பார்க்க ஆரம்பித்தாள். பவானியும் நீரில் இறங்கியவள் “என்ன மலரு உட்கார்ந்துட்ட? இறங்கலையா?” என்றாள்.

“இல்ல..கொஞ்ச நேரம் கழிச்சு இறங்குறேன்”.

அவளை விநோதமாக பார்த்துவிட்டு நீரில் பாய்ந்தாள். அப்போது மலரின் அருகே வந்தமர்ந்த ஊர்கார பெண்மணி ஒருத்தி “என்ன மலரு கார்த்திகா வந்திருக்கு போல?” என்றார்.

“ஆமாக்கா”

“நல்ல தளதளன்னு தக்காளி பழம் மாதிரி வளர்ந்து நிற்கிறா…உனக்கு போட்டியா வந்துடுவா போல இருக்கே” என்றார்.

புரியாத பார்வை ஒன்றை பார்த்தாள் மலர்.

அவள் அருகில் நெருங்கி அமர்ந்து “நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ மலரு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன் மாமனை உன் முந்தானையில் முடிஞ்சுக்க பாரு. இல்லேனா இவ தட்டிகிட்டு போயிடுவா”.

அதிர்ந்து போய் அவரை பார்த்தவளுக்கு நாவெழவில்லை.

“என்ன பார்க்கிற? உன் மாமனை கட்டிகிறது தான் உனக்கு நல்லது. நான் சொல்றதை சொல்லிபுட்டேன் அப்புறம் உன்னிஷ்டம்” என்று எழுந்து சென்றார்.

அவர் சொல்லிவிட்டு சென்ற செய்தியில் மனம் பதறி போனது. விஜயனுக்கும் தன் மீது ஈர்ப்பிருக்கிறது என்று புரிந்தாலும் இது நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றே எண்ணினாள். அவன் பார்வை தன்னை தீண்டிச் செல்லலும் போது அதிலிருக்கும் உரிமையை ரசித்திருக்கிறாள். ஆனால் பாட்டி இந்த திருமணத்தை விரும்ப மாட்டார். விஜயன் தனக்காக பேசினாலும் எடுபடுமா? என்று யோசித்தாள். கார்த்திகா வேறு இந்த முறை வந்ததிலிருந்து விஜயனிடம் ஆர்வம் காட்டுவது போலத் தோன்றியது.

இதுவரை எந்த விஷயத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. அத்தையும், மாமாவும் தன்னை வேற்று ஆளாக பார்க்கவில்லை என்றாலும் பாட்டியின் நடவடிக்கையால் அந்த வீட்டிலிருந்து அன்னியபட்டாள். கிடைத்ததை வைத்து மகிழ்வாகவே நாட்களை ஒட்டிக் கொண்டிருந்தாள். என்று விஜயனின் ஆர்வமான பார்வையைக் கண்டாளோ அன்றிலிருந்து மனம் அவனுடனான வாழ்க்கைக்கு ஆசைப்பட துவங்கியது. அது கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பயாமும் வாட்டியது.

சிந்தனையுடன் அமர்ந்திருந்தவளை இருவரின் சத்தமும் நிதர்சனத்திற்கு கொண்டு வந்தது. அவர்களின் ஆட்டத்தைக் கண்டு தனது குழப்பத்தை ஒதுக்கி வைத்தவள் தானும் நீருக்குள் இறங்கினாள். மூவரும் சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது விஜயனும் வேலையாளுடன் வந்து சேர்ந்தான். புதுசாக இறக்கப்பட்ட நுங்கு காய்களை கூடத்தில் வைத்து அந்தாள் வெட்ட, கார்த்திகா குதித்துக் கொண்டு விஜயனிடம் சென்றவள் “ஹையோ நுங்கு கொண்டு வந்துட்டீங்களா மாமா…நானே கேட்கனும்னு நினைச்சேன்” என்றாள்.

அவளைப் பார்த்து புன்சிரிப்புடன் நகர்ந்து விட்டான்.

பவானியும், மலரும் உடை மாற்றிக் கொண்டு அங்கு வர, கார்த்திகா அவர்கள் இருவரையும் பார்த்து “மாமா எனக்காக நுங்கு கொண்டு வந்திருகாங்க சீக்கிரம் வாங்க” என்றாள்.

அவளின் அந்த வார்த்தையில் மலருக்கு மனம் சுணங்கி போக, பவானியிடம் “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் அப்புறம் சாப்பிடுறேன்” என்று கூறி தோட்டத்து பக்கம் சென்றாள்.

அதை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகாவின் இதழ்களில் வெற்றிப் புன்னகை.

மரங்களடர்ந்த இடத்தில் ஓரமாக போடப்பட்டிருந்த கல்லில் சென்றமர்ந்தவளின் மனதில் சஞ்சலம். கார்த்திகாவின் வார்த்தை சாதரணமானதாக இருக்கலாம் ஆனால் அது தன் மனதில் ஏன் இதனை தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்? விஜயன் மீது உள்ள காதலால் தானே? தனது காதல் கை கூட வாய்ப்பில்லை என்று மனதிற்கு தெரிந்தாலும் எதாவது ஒரு மாயாஜாலம் நிகழ்ந்து நடந்து விடாதா என்கிற ஆசை இருக்கத் தான் செய்கிறது.

யோசனையுடன் அமர்ந்திருந்தவளின் முன்னே பனையோலையில் நுங்கு நீட்டப்பட்டது. கைக்குரியவனை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போய் எழுந்து நின்றாள்.

அவளை விழியெடுகாமல் பார்த்தவன் “வாங்கிக்கோ மலர்” என்றான்.

அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பதை பாட்டி பார்த்து விட்டால் இரண்டு மூன்று நாளைக்கு திட்டி தீர்த்து விடும். அதனால் பயந்து கொண்டு எவரும் பார்க்கிறார்களா என்று பார்த்தாள்.

அதை கண்டு கொண்டவன் “யாரும் பார்க்கல…அப்படியே பார்த்தாலும் என்ன தப்பு? நுங்கு தானே கொடுக்கிறேன்” என்றான் குறும்புடன்.

அவனது பேச்சைக் கேட்டு வெட்கம் அடைந்தவள் குனிந்த தலையுடன் அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளைத் தேடி வந்த கார்த்திகா இந்தக் காட்சியை மாட்டுக் கொட்டகையின் பின்னே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனமோ விஜயன் மீது கோபத்தை கொட்டிக் கொண்டிருந்தது. என்னிடம் பேசுவதற்கு முயற்சி கூட எடுக்காமல் புன்சிரிப்புடன் விலகி சென்றவன் இவளைத் தேடி வந்து பேசுகிறான். அப்படி என்னிடம் இல்லாதது இவளிட்ம் என்ன இருக்கிறது? என்று பல்லைக் கடித்தாள்.

இவளை இத்தனை நாள் அமைதியானவள் என்று நினைத்தேன். இவள் ஊமை குசும்பி. இங்கேயே இருந்து கொண்டு மாமனை வளைத்திருக்கிறாள். விட மாட்டேன்! இவளை திரும்பிக் கூட பார்க்க விடாமல் செய்ய வேண்டும். என்னை பார்க்கும் ஒவ்வொருவரும் இத்தனை அழகா என்று ஒரு நிமிடம் மலைத்து நிற்பார்கள். ஆனால் இந்த மாமா என்னை திரும்பியும் பார்க்காமல் இவளின் பின்னே செல்கிறார். என்னைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளனும்னு சொல்ல வைக்கிறேன் என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.

மலருக்கோ அத்தனை நேரம் இருந்த மன நிலை மாறி அவனது கரிசனம் உள்ளுக்குள் உற்சாகத்தைக் கொடுத்தது. அவன் கொடுத்த நுங்கை ரசித்து உண்டாள். தன்னை ஒருத்தி வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அறியாது தன் கையிலிருப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அந்த மெல்லிய உறவு கார்த்திகாவின் மனதில் புயலை எழுப்பியது. விஜயன் மீது அவளுக்கு பெரிதாக ஈர்ப்பு இருந்ததில்லை. அவனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை கூட இருந்ததில்லை. வீட்டில் செய்து வைத்தால் கட்டிக் கொள்ள தயாராக இருந்தாள். ஆனால் தனது தோழியாக இருந்தவளின் மீது அவனது பார்வை செல்கிறது என்று எந்த நிமிடம் உணர்ந்தாளோ அப்போதிருந்து அவன் மீது உரிமை உணர்வு எழுந்தது.

இந்த உணர்வு எப்படிபட்டது என்று கேட்டால் அதற்கு பதிலில்லை. ஆனால் விஜயனுக்கு தன் மீது எந்த உணர்வும் ஏன் தோன்றவில்லை? அவளை விட தான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டோம் என்கிற கோபம் உள்ளுக்குள் கனன்றது. அவர்கள் இருவரையும் ஒன்று சேர விடக் கூடாது என்கிற எண்ணம் வலுபெற்றது.

இது எதையுமே அறியாது அவரவர் சிந்தனையில் உல்லாச மனநிலையில் இருந்தார்கள் விஜயனும், மலரும். அதே நேரம் அன்னையின் அறையில் அமர்ந்திருந்த அலமேலு மெல்ல “ஏன்மா இந்த பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து தாட்டிவிட வேண்டியது தானே? இன்னும் ஏன் இங்கே வச்சிருக்கீங்க?” என்றார்.

மகளை புன்னகையுடன் பார்த்து “இந்த வருஷம் முடிச்சிடுவோம்…உங்க அண்ணிகாரிக்கு இந்த வீட்டு மருமகளாக்கிடனும்னு எண்ணம் இருக்கு…எனக்கு பயந்து கிட்டு வாயை மூடிகிட்டு இருக்கா” என்றார்.

“ஏன் மா என் பொண்ணு இருக்கிறப்ப அடுத்த வீட்டு பொண்ணை எதுக்கு மருமகளாக்கணும்?” என்றார் கோபமாக.

“நான் இருக்கிறப்ப அவ நினைப்பெல்லாம் வேலைக்காகாது. நீ இருக்கிறப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டிடுவோம். வா! உங்கண்ணன் கிட்ட பேசி இப்போவே மாப்பிள்ளை பார்க்க சொல்லிடுவோம்” என்றார்.

“அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்கிறதுக்கு நாள் ஆச்சுன்னா அதுவரை என் பொண்ணு காத்துகிட்டு இருக்கனுமா? பேசாம விசயனுக்கும் என் பொண்ணுக்கும் கல்யாணத்தை பண்ணிட்டா என்ன?”

“அடியே! வீட்டுல இருக்கிற பொண்ணுக்கு பண்ணிட்டு தான் பண்ணனும். பவானிக்கு கூட மெதுவா பண்ணினா யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க. ஆனா இது அடுத்த வீட்டு பெண்ணை வளர்கிறோம். அவளுக்கு பண்ணாம பண்ணினா ஊர்ல இருக்கிறவளுங்க நாக்கு மேல பல்லை போட்டு பேசுவாளுங்க”.

“என்னமோ போ அம்மா…நம்ம வீட்டு பிள்ளைக்கு கல்யாணம் பண்ண எவ்வளவு தான் யோசிக்கிறது”.

“நீ கவலையை விடு. இன்னைக்கு நான் போடுற போடுல கோவிந்தன் அடுத்த வாரமே மாப்பிள்ளையோட வந்து நிற்பான்” என்றார்.

இருவரும் பேசிக் கொண்டு கூடத்திற்கு வர, அன்னையைப் பார்த்ததும் எழுந்து கொண்ட கோவிந்தன் “என்னம்மா அக்கா என்ன சொல்லுது?” என்றார்.

“தம்பிக்கு பொறுப்பே இல்லேன்னு சொல்றா”

“என்னம்மா!” என்று அதிர்ந்து விழித்தார்.

“வயசு பெண்ணை எத்தனை நாளைக்கு வீட்டிலேயே வச்சிருக்க போறீங்கன்னு கேட்கிறா” என்றவர் நாற்காலியில் அமர, கோவிந்தன் யோசனையுடன் அன்னையை பார்த்தார்.

“தரகரை வர சொல்லு கோவிந்தா. நல்ல இடமா கொண்டு வர சொல்லி முடிச்சிடுவோம்”

“சரிம்மா வர சொல்றேன்”

“ரொம்ப வசதியான இடமெல்லாம் வேண்டாம். சுமாரான வசதி போதும்”.

“ஏன்மா நம்ம பொண்ணு தானே போய் கஷ்டப்படும்”.

மகனை கூர்ந்து பார்த்தவர் “நான் சொன்னது மலருக்கு கோவிந்தா” என்றார் அழுத்தமாக.

அவரும் தாயைப் பார்த்து “நானும் மலருக்கு தான் சொல்றேன் அம்மா” என்றார்.

“இங்கே பார் கோவிந்தா! ஏதோ ஆதரவில்லாம இருந்த பிள்ளையை நம்ம வீட்டு பிள்ளையா நினைச்சு நல்லபடியா வளர்த்துட்டோம். இப்பவும் அந்த பிள்ளைக்கு நல்ல வாழ்க்கையை தான் அமைச்சு கொடுக்க போறோம். அதுக்காக நம்ம வீட்டு பிள்ளைக்கு செய்யுற அளவுக்கு எல்லாம் செய்ய வேண்டிய தேவையில்லை”.

“அம்மா! எனக்கு பவானிக்கும், மலருக்கும் வித்தியாசம் தெரியாதும்மா. ரெண்டுமே நான் வளர்த்த பிள்ளைங்க தான். பவானிக்கு என்ன உண்டோ அதே அதான் மலருக்கும்”.

“என்ன தம்பி இப்படி சொல்ற? என்னைக்கு அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பிச்சே? நீ பேசுற ஞாயம் எல்லாம் அம்மாவுக்கு தெரியாதா? அம்மா சொல்ற மாதிரி ஒரு இடத்தை முடிச்சு கடமையை முடிப்பியா? அதுவும் என் பிள்ளைன்னு சும்மா புலம்பிகிட்டு” என்றார் அலமேலு.

இவர்களின் பேச்சு சத்தத்தில் அங்கு வந்து தூணோரமாக நின்ற பிரபாவிற்கு கண்கள் கலங்கியது. தாய் தந்தையை இழுந்து நிற்கும் அந்த பெண்ணிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பதில் கூட சிக்கலா? தங்கள் வீட்டிற்கு மருமகளாக்கி கொள்ளவில்லை என்றாலும் நல்லதை செய்ய கூட முடியாமல் இப்படியொரு இடைஞ்சலா என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்.

கோவிந்தசாமி சற்றே யோசனையுடன் இருவரையும் பார்த்து “தரகரை வர சொல்றேன்…ஆனா நல்ல மாப்பிள்ளையா கிடைச்சா காசு பணத்தை பத்தி யோசிக்காம நல்ல செஞ்சு அனுப்ப்புவேன் சொல்லிட்டேன்” என்றார்.

அவரின் பேச்சில் கோபமடைந்த அலமேலு ஏதோ சொல்ல வர, கண்களால் சைகை செய்து அமைதியாக இரு என்றவர் “சரி நீ முதல்ல தரகரை வர சொல்லு” என்று கூறி எழுந்து கொண்டார்.

தனது காதலுக்கு குழி பறிக்கும் வேலை நடக்கிறது என்பதை அறியாத விஜயன் மனதிற்குள் அவளோடு பேசிக் கொண்டிருந்தான். அன்னையும், தந்தையும் தனது விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்து விட மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினான். பாட்டியை எப்படியாவது சமாளித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டான்.

தனது எண்ணங்கள் பொய்யாய் போக போவதை அறியாமல் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான்.

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் – 4

அத்தியாயம் – 4
அவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டு கார்த்திகாவின் மனதில் லேசான சஞ்சலம் குடி கொண்டது. மலர் மீது நிறைய அன்பு உண்டு அவளுக்கு. ஆனால் விஜயன் மாமா மீது அவளை விட தனக்கு உரிமை அதிகம் என்று எண்ணி இருந்தாள்.
இப்போது அது இல்லை என்றுணர்ந்த போது ஏனோ மலரின் மீது பொறாமை எழுந்தது. ஒரு பார்வைக்காக இத்தனை யோசிக்கிறோமோ என்று எண்ணினாள். அதே சமயம் விஜயன் மீது தனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை என்பதை உணர்ந்தே இருந்தாள். பின்னர் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டவள் ஒரு பார்வை தானே இதற்காகவா இவ்வளவு யோசிக்கிறோம் என்று தூக்கிப் போட்டுவிட்டு எல்லோருடனும் சென்று அமர்ந்தாள்.
பவானியும் அவளருகில் சென்றமர அங்கம்மாள் மகளை குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார். கோவிந்தசாமியோ தங்கையை பெருமிதமாக பார்த்தபடி அமர்ந்திருந்தார்.தந்தையின் அருகில் நின்று அங்கு நடப்பவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜயன்.
கார்த்திகா பாட்டியிடம் செல்லம் கொஞ்சியபடி இருந்ததை ஏக்கம் நிறைந்த விழிகளுடன் பார்த்திருந்தாள் மலர். அதை கண்டு கொண்ட அங்கம்மாள் “மலரு! போய் எல்லோருக்கும் காப்பி தண்ணி போட்டு எடுத்துகிட்டு வா” என்று விரட்டினார்.
அதுவரை தூணோரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபா மருமகளை முந்திக் கொண்டு சமயலறைக்குச் சென்றார். அவரின் பின்னே சென்ற மலரின் முகத்தில் சற்றே வேதனை நிறைந்திருந்தது. இது எப்பொழுதும் அவளுக்கு வரும் சோர்வு தான். எல்லோரும் கூடியிருக்கும் வேளையில் தான் மட்டும் அந்தக் குடும்பத்துக்கு பொருந்தாதவள் என்ற எண்ணம் வந்துவிடும்.
அவளின் முகத்தைப் பார்த்தே மனதை படித்த பிரபா “நீ போய் தோட்டத்தில் இரு மலரு. நான் எல்லோருக்கும் காப்பியை கொடுக்கிறேன்” என்றார்.
அவரிடம் மறுக்காமல் சரியென்று தலையாட்டிவிட்டு அமைதியாக தோட்டத்திற்கு சென்றாள். அங்கு மாட்டுத் தொழுவத்தை தாண்டி தட்டுமுட்டு சாமான்களை எல்லாம் போடும் அறை ஒன்று. சற்றே விசாலமான அறை தான். இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த அறை தான் அவளுக்கு அடைக்கலம் கொடுக்கும். வழக்கம் போல அந்த அறைக்குள் சென்று ஜன்னலோரம் நின்றாள்.
அந்த அறை போல அவளது மனமும் வெற்றிடமாக இருந்தது. அத்தையும், மாமாவும் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டாலும் அது தன் வீடாக தோன்றவில்லை. என்னதான் பவானி தன்னிடம் அன்பாக பழகினாலும் மனம் ஓரடி விலகியே நின்றது. சமீபமாக விஜயனின் பார்வைகள் சொல்லும் செய்தி மனதிற்கு இதமாக இருந்தாலும் அது நடக்குமா? என்கிற சந்தேகமும் இருந்தது.
இப்படி தன்னுடைய எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தவளுக்கு அறையில் எழுந்த சிறிய சத்தம் கலைத்தது. மெல்ல திரும்பி பார்க்க அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தவண்ணம் நின்றிருந்தான் விஜயன்.
நேரடியாக அவனது விழிகளை சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்து கொள்ள, அவனோ அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு தொண்டையை செருமியவன் “எல்லோரும் அங்கே இருக்க இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்க்க தைரியமின்றி “இல்ல…சும்மா தான்” என்றாள்.
அவளது மனம் புரிந்தாலும் தனியே விட பிரியமில்லாமல் “தனியா என்ன பண்ற வா அங்க வந்து உட்காரு” அவளை பார்வையால் வருடியபடியே.
அங்கே நடக்கும் நிகழ்வுகளை பார்க்க பிடிக்காமல் மெல்ல நிமிர்ந்து “இல்ல கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன்” என்றாள்.
அவளது விழிகளில் ஆழ்ந்து பார்த்து “எனக்காக வா மலர்” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவனிடம் மறுக்க எண்ணினாலும் அந்தக் குரல் அவளுள் ஏதோ செய்திட “ம்ம்..” என்றாள்.
அவளை ஒருநிமிடம் ரசனையுடன் பார்த்து விட்டு “நான் போறேன்..வந்துடு” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.
விருப்பமில்லாவிட்டாலும் அவன் சொன்னதற்காக மெல்ல உள்ளே சென்று ஒரு தூணோரம் அமர்ந்து கொண்டாள்.
அலமேலுவும், கார்த்திகாவும் தாங்கள் ஊரிலிருந்து கொண்டு வந்த பொருட்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.
தனது பெட்டியிலிருந்து பவானிக்கு பாவாடை சட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு மலரை பார்த்தவளின் மனம் ஒரு நிமிடம் தயங்கி பின் தன்னிடம் இருந்த பழைய பாவாடை தாவணி ஒன்றை எடுத்து கொடுக்க செய்தது.
தனக்கு கொடுத்ததை பார்வையிட்டுக் கொண்டிருந்த பவானி மலருக்கு கொடுத்ததை பார்க்கவும் “இது நீ போன முறை வந்தப்ப கட்டிட்டு இருந்தது தானே?” என்றாள்.
அதற்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “ஆமாம் பவானி…நிறைய தடவை கட்டல அதுதான் மலருக்கு கொடுத்தேன்” என்றாள்.
அவர்களின் இந்த உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த இருவரின் முகங்களில் ஒருவருக்கும் கோபமும், மற்றவருக்கு வருத்தமும் எழுந்தது.
அப்போது மலரிடம் திரும்பிய பவானி “அதை அவ கிட்டேயே கொடு மலரு. எங்கப்பா மலருக்கு புதுசு தான் வாங்கி கொடுப்பாங்க. பழசெல்லாம் அவ கட்ட மாட்டா” என்றாள் கோபமாக.
கார்த்திகாவோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “இதிலென்ன இருக்கு…நான் தான் சொன்னேனே அதிகம் கட்டேலேன்னு” என்றாள் விடாப்பிடியாக.
மகளின் செய்கை அலமேலுவிற்கு பெரும் திருப்தியளித்தது. அவள் மலருடன் பழகுவதை சிறிதும் விரும்பவில்லை. இப்பொழுதாவது மகளுக்கு புத்தி வந்ததே என்று எண்ணிக் கொண்டார்.
“வேண்டாம் கார்த்தி. மலருக்கு எங்கப்பா வாங்கி கொடுப்பாங்க. நீ பழசெல்லாம் கொடுக்க வேண்டாம்” என்று கூறி மலர் கையிலிருந்ததை பிடுங்கி அவளிடம் கொடுத்தாள்.
அங்கு நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த அங்கம்மாள் “இந்தா பவானி என்ன பண்ணிட்டு இருக்க நீ? ஏன் அவ பழசை கட்டினா என்ன? அப்பன், ஆத்தா இல்லாம வளருகிறவளுக்கு புதுசு கேட்குதோ” என்றார் எரிச்சலாக.
அதுவரை அவர்களின் பேச்சுகளை கேட்டுக் கொண்டிருந்த மலருக்கு பாட்டியின் பேச்சு கண்ணீரை வரவழைக்க நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை விஜயனிடம் சென்றது. அவனுக்கு தன் மீதே கோபம் எழுந்தது. தோட்டத்தில் இருந்தவளை அழைத்து வந்து இந்தப் பேச்சுக்களை கேட்க வைத்து விட்டேனே என்று மனம் புழுங்கினான். தான் எதுவும் கூறினால் அதுவும் அவளை பாதிக்கும் என்பதை அறிந்து பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
ஆனால் கோவிந்தசாமியோ பொறுமையை இழந்தவராக “அம்மா! என்ன பேச்சு இது! அவளும் என் பொண்ணு மாதிரி தான். என் பெண்ணுக்கு என்ன செய்வேனோ அதே அளவுக்கு அவளுக்கும் செய்வேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
அண்ணனின் கோபத்தை உணர்ந்து கொண்ட அலமேலு மகளிடம் “கார்த்தி! உன்கிட்ட இன்னொரு புது துணி இருக்கே அதை அவளுக்கு கொடு” என்றார்.
ஏனோ கார்த்திகாவிற்கு மலருக்கு கொடுக்க மனம் வரவில்லை. அன்னை சொன்னதிற்காகவும், மாமாவின் கோபத்திற்கு பயந்தும் எடுத்துக் கொடுத்தாள்.
மலரோ இறுகிய முகத்தோடு அதை வாங்கி வைத்துக் கொண்டாள். சிறிது நேரம் அனைவரும் கதைகளைப் பேசிக் கொண்டிருக்க, மலர் முள்ளின் மீது அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தாள்.
விஜயனுக்கும் அங்கிருக்க மனமில்லை. மலரின் முகத்தில் தெரிந்த வலி அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. தாய், தந்தையை இழந்தது அவள் குற்றமா? இந்த பாட்டி ஏன் அத்தை மகளுடன் சேர்ந்து அவளை வாட்டி எடுக்கிறது என்று காய்ந்தான்.
மலருக்கோ அங்கிருந்து எப்போதடா போவோம் என்று அமர்ந்திருந்தாள். சற்று நேரம் பழைய கதைகளை எல்லாம் பேசி முடித்தவர்கள் உணவருந்த கிளம்பினார்கள். மலர் அவசரமாக அத்தையுடன் சமயலறைக்கு சென்று ஒத்தாசை செய்தாள். அப்போது அங்கு வந்த அங்கம்மாள் அவளைப் பார்த்து “நீ போ மலரு..கோவிந்தனும், விசயனும் சாப்பிட்ட பிறகு வா” என்றார்.
அவரிடம் தலையசைத்து விட்டு கார்த்திகா கொடுத்த துணியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
பவானியின் அறைக்குள் செல்ல அங்கே இருவரும் இருப்பதைப் பார்த்து மெல்ல புன்னகைத்தபடி தனது பெட்டியில் கையிலிருந்த துணியை வைத்தாள்.
அப்போது பவானி “என்ன மலரு சமையல்கட்டுல இருந்து ஓடி வந்துட்ட? பாட்டி விரட்டிடுச்சா?” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.
ஆமாம் என்று தலையசைத்தவளை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகாவின் மனதில் ஒரு யோசனை தோன்ற அவசரமாக எழுந்தவள் “பவானி எனக்கும் பசிக்குது வா சாப்பிட போகலாம்” என்றாள்.
அவளை பார்த்து முறைத்த பவானி “என்ன கிண்டலா கார்த்தி? அப்பாவும், அண்ணனும் சாப்பிட்ட பிறகு தான் நமக்கு சாப்பாடு போடும் பாட்டி” என்றாள் கடுப்பாக.
அவளோ மலரை பார்த்துக் கொண்டே “அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு பசிக்குது. நான் இப்போ சாப்பிட்டே ஆகணும். என்னோட வந்தா உனக்கும் கிடைக்கும்” என்றாள்.
பவானியோ மலரிடம் கண்ணை காட்டி சிரித்து விட்டு “வா உன் ஆசையை ஏன் கெடுப்பானேன். ஆம்பளைங்க சாப்பிட்ட பிறகு தான் நம்மள சாப்பிட விடும்” என்று அவளுடன் நடந்தாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மலர் அமைதியாக தனது கட்டிலில் அமர்ந்து கொண்டு தோட்டத்தை பார்க்க ஆரம்பித்தாள்.
பேசிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவர்களை கண்ட அங்கம்மாள் “இங்கே என்ன பண்றீங்க பொண்ணுங்களா?” என்றார்.
அவர் அருகில் சென்று தோளை அணைத்துக் கொண்ட கார்த்திகா “எனக்கு ரொம்ப பசிக்குது பாட்டி” என்றாள் பாவமாக.
அவளது தாடையைப் பிடித்து கொஞ்சி “கொஞ்ச நேரம் பொறுத்துக்கடா அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிச்சதும் நீ சாப்பிடலாம்” என்றார்.
அவளோ வயிற்றை பிடித்துக் கொண்டு “பாட்டி ரொம்ப பசிக்குது. அவங்க சாப்பிட்டு முடிக்கும் வரை தாங்க முடியாது” என்றாள்.
சற்று யோசனை செய்தவர் “பிரபா அந்தப் பக்கம் இலையைப் போடு. இதுங்க ரெண்டும் உட்காரட்டும்” என்றார்.
அங்கம்மாள் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் மயக்கம் வரும் போலிருந்தது. எவருக்காகவும் ஒத்துக் கொள்ளாதவர் பேத்தி கூறியதை கேட்டதும் ஒத்துக் கொண்டது அதிசயமாக இருந்தது.
பவானியோ அவசரமாக அன்னையிடம் “அம்மா மலருக்கும் சேர்த்து போடுங்க. நான் போய் அவளைக் கூட்டிட்டு வரேன்” என்று ஓடப் போனாள்.
அவளை தடுத்து நிறுத்தியவர் “இரு அவ எதுக்கு? நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. அவ எங்களோட சாப்பிடுவா” என்றார்.
பாட்டியை முறைத்த பவானி “முடியாது பாட்டி! அவளும் எங்களோட உட்காரட்டும்” என்றாள்.
அவள் எதிர்த்து பேசியதில் எரிச்சலடைந்தவர் “ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு” என்றார் பல்லைக் கடித்தபடி.
அன்னைக்கும் மகளுக்கும் நடக்கட்டும் போராட்டத்தைக் கண்ட கோவிந்தசாமி “பவானி! அம்மா தான் சொல்லுது இல்ல. பேசாம உட்கார்ந்து சாப்பிடு” என்றார் அதட்டலாக.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கார்த்திகாவின் அருகில் அமர்ந்தவள் மெல்லிய குரலில் “நீ சொல்லு கார்த்தி பாட்டி கிட்ட அது கேட்கும்” என்றாள்.
இலையில் கவனத்தை வைத்துக் கொண்டே “அவ அப்புறம் சாப்பிடட்டும் பவானி” என்று கூறியபடி உணவருந்த ஆரம்பித்தாள்.
அவளது பதில் பவானியின் மனதில் சுருக்கென்று குத்த ‘என்ன இவள் அத்தை மாதிரி யோசிக்கிறாளே என்னாச்சு இவளுக்கு’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த விஜயனுக்கு பாட்டியும், அத்தையும் சேர்ந்து மலரை ஒதுக்குவது பிடிக்கவில்லை. அன்னையின் முகத்தைப் பார்த்தவனுக்கு அதில் தெரிந்த இறுக்கம் அவரது மன நிலையை உணர்த்தியது. மனதிற்கு பிடிக்காமல் ஏனோ தானோவென்று சாப்பிட்டு விட்டு அன்னையின் அருகில் சென்றவன் “அத்தை இருக்கிற வரை பாட்டி இப்படி தான் ஆடுவாங்கம்மா. விடுங்க சரியாகிடும்” என்று மெலிய குரலில் சமாதானப்படுத்தினான்.
அவரோ “என்னை படுத்தினா பரவாயில்லப்பா. மலரப் போய் படுத்துறாங்க. அதுவே வாயில்லைப் பூச்சி. ம்ம்…அது பொறந்த நேரம் சரியில்ல வேற என்ன சொல்றது” என்று புலம்பிக் கொண்டே நகர்ந்தார்.
அன்னையை பார்த்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். தங்களது அறையில் அமர்ந்திருந்த மலரோ போனவர்களை காணவில்லை என்று எழுந்து வந்து பார்க்கும் போது கார்த்திகாவும், பவானியும் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்டதும் மீண்டுமொரு முறை மனம் முறிந்து போனது.
தான் அந்த வீட்டில் இருப்பதே அதிகப்படி இதில் சலுகைகளை எல்லாம் எதிர்பார்க்க கூடாது என்று தெரிந்தாலும் இப்படி உடைந்து போவதை தடுக்க முடியவில்லை. அதிலும் கார்த்திகா வந்திறங்கியதில் இருந்து காட்டிய ஒதுக்கம் மனதை புண்படுத்தியது. எப்போதிலிருந்து அவள் மாறி போனாள் என்று புரியவில்லை. சோர்வுடன் கால்களை கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தவளை கார்த்திகாவின் குரல் நிதர்சனத்திற்கு கொண்டு வந்தது.
“நான் சொன்னேன் இல்ல பவானி. பாட்டிக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் சொன்னவுடனே சாப்பிட வச்சிடுச்சு பாரு” என்றவளின் பார்வை பெருமையாக மலரிடம் படிந்து மீண்டது.
பவானியோ மலரின் அருகில் சென்று “நான் சாப்பிட்டுட்டேன் மலரு. நீ போய் சாப்பிடு. இந்த பாட்டி தான் கூப்பிட விடாம பண்ணிடுச்சு” என்றாள்.
உள்ளுக்குள் இருந்த அழுத்தத்தை மறைத்துக் கொண்டு “பரவாயில்ல பவானி” என்று வெளியில் சென்றாள்.
“எனக்கு எல்லாத்தை விட மாமா கூட உட்கார்ந்து சாப்பிட்டது தான் ரொம்ப சந்தோஷம்” என்று அவள் காதில் படும்படி கூறினாள்.
சிந்தனையுடனே சென்று கொண்டிருந்தவளின் நடை தடுமாறியது கார்த்திகாவின் பேச்சில்.

Categories
On-Going Novels Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம் -3

அத்தியாயம்- 3

மறுநாள் விடியலின் முன்பே வீடு பரபரத்தது. பக்கத்தூரிலிருந்து ஆள் வந்திருந்தது. அத்தை வீட்டு காரியக்காரர் பக்கிரிசாமி சேதி சொல்ல வந்திருந்தார்.

மலரும், பவானியும் மெல்ல அடுப்பங்கரையிலிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கம்மாளும், கோவிந்தசாமியும் பக்கிரிசாமியை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

பவானி அவர்களைப் பார்த்து நொடித்துக் கொண்டு “பொறந்தா அத்தை வீட்டு காரியகாரரா பொறக்கணும் மலரு. எப்படி கவனிக்கிறாங்க பாரு” என்றாள்.

அவள் சொன்னதில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்தாள்.

“என்ன சேதி பக்கிரி?”

தோளில் கிடந்த துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு “அம்மாவும், பாப்பாவும் நாளைக்கு ரயிலுல கிளம்புராங்கம்மா. ஒரு பத்து நாளு இருக்கலாம்னு ஐயா சொல்லிவிட்டாங்க” என்றான்.

அதைக் கேட்டதும் மலர்ந்த முகத்துடன் “அலமு வருதா? மாப்பிள்ளை வரலையா?” என்றார்.

“ஐயாவுக்கு முக்கியமான சோலி இருக்குதுங்களாம் அது தான் அம்மாவையும், பாப்பாவையும் மட்டும் அனுப்பி வைக்கிறதா சொல்ல சொன்னாங்க”.

அவசரமாக எழுந்து கொண்ட அங்கம்மாள் உள்பக்கம் பார்த்து “பிரபா! காரியகாரருக்கு சாப்பாடு எடுத்து வை. அவர் சாப்பிட்டிட்டு கிளம்புவார்” என்றவர் அவர் பக்கம் திரும்பி “என்ன நான் சொன்னது சரி தானே” என்றார்.

பவானியோ மலரின் கையைப் பிடித்துக் கொண்டு “கார்த்திகா வராலாம் மலரு. நமக்கு கொண்டாட்டம் தான். பாட்டிக்கிட்ட வாங்க வேண்டியதை எல்லாம் அவ கிட்ட சொல்லி வாங்கிக்கலாம்” என்று குதித்தாள்.

அப்போதும் பெரிதாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மென்சிரிப்புடன் “அவ வந்தா நல்லா இருக்குமில்ல” என்றாள்.

“ம்ம்…நிறைய தீனி கிடைக்கும். பாட்டி நம்மள கண்டுக்கவே கண்டுக்காது. பேத்திய தூக்கி மடியில வச்சுகிட்டே அலையும்” என்றாள் குறும்சிரிப்புடன்.

“பெரியவங்கள அப்படி எல்லாம் சொல்லக் கூடாது பவானி”.

“என்ன பெரியவங்க? உன்னைக் கண்டா எப்படி பேசுது? அதே கார்த்திய கண்டா எங்கண்ணன் கிட்ட போய் பேசு பேசுன்னு சொல்லும். அதுக்கு கார்த்திய மட்டும் தான் பிடிக்கும்” என்றாள் எரிச்சலாக.

“என்ன இருந்தாலும் நான் யாரோ தானே?”

அவளை முறைத்து “ நான் அவங்க பேத்தி தானே? கார்த்திகா கிட்டேயும் என்கிட்டேயும் ஒரே மாதிரியா இருக்கு?”

அப்போது அங்கே வந்த அங்கம்மா “இங்க எதுக்குடி நின்னுகிட்டு தரையை தேச்சிட்டு இருக்கீங்க? எவ்வளோ வேலை கிடக்கு போய் பார்க்கலாமில்ல?” என்றவர் சிறிது தூரம் சென்று திரும்பி வந்து “அடியே மலரு! மச்சு அறையை போய் சுத்தம் பண்ணு. பாப்பாவுக்கு தூசி ஒத்துக்காது” என்று கூறிவிட்டு சமையலறை பக்கம் சென்றார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்த பவானி முகவாயில் கையை வைத்து அதிசயமாக பார்த்து “மலரு இது நேத்து பார்த்த அங்கம்மாவா? எப்படி நொண்டி நொண்டி நடந்துச்சு? இப்போ பாரேன் பொண்ணு வருதுன்னவுடனே ஏன்னா வேகம்?” என்றாள்.

அவள் தலையில் லேசாக கொட்டி “வாயை அடக்கு காதுல விழுந்திட போகுது” என்றவள் ஒட்டடை குச்சியும், துடைப்பமும் எடுத்துக் கொண்டு மச்சு படியில் ஏறினாள்.

அப்போது அங்கு வந்த விஜயன் அவள் கையிலிருந்தவற்றை பார்த்து “இதெல்லாம் எடுத்திட்டு எங்கே போறே?” என்றான்.

அவன் தன்னிடம் பேசியதும் நிமிர்ந்து பார்க்காது மெல்லிய குரலில் “பாட்டி மச்சு அறையை சுத்தம் பண்ண சொன்னாங்க” என்றாள்.

அதைக் கேட்டு முகம் சுளித்தவன் “சிவப்பியை கூப்பிட்டு பண்ண சொல்ல வேண்டியது தானே? நீ வச்சிட்டு போ நான் அம்மா கிட்ட சொல்றேன்” என்றான்.

அவன் சொல்வதைக் கேட்டு என்ன செய்வதென்று புரியாமல் நிற்க, சமயலறைக்கு சென்ற அங்கம்மாள் வேலைக்காரியிடம் சத்தம் போட்டுக் கொண்டே வருவதை பார்த்ததும் அவசரமாக படியேறி அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவளின் பயத்தையும் செய்கையையும் கண்டவனுக்கு முகம் சுருங்கி போனது. மாடிபடியையே பார்த்துக் கொண்டு நின்றவனை அங்கம்மாள் அழைத்தார்.

“என்ன பேராண்டி மச்சு அறையே பார்க்குறீங்க? அந்த அறைக்கு சொந்தக்காரி நாளைய மறுநாள் வந்துடுவா” என்றார் பெருமிதமாக.

அவனிருந்த மன நிலையில் பாட்டியிடம் பேசப் பிடிக்காமல் “ம்ம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவர் ‘என் பேத்திக்கு சேர வேண்டிய சொத்து. வேற எவ கண் படாமலும் காப்பாத்தணும்’ என்று கூறிக் கொண்டு தனதறைக்கு சென்றார்.

மாமியார் கொடுத்துவிட்டு சென்ற வேலையில் நாத்தனாருக்கும், மருமகளுக்கும் வேண்டிய பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் இறங்கினார் பிரபாவதி. அப்போது சமையல்கட்டின் உள்ளே மெதுவாக எட்டிப் பார்த்த கோவிந்தசாமி “பிரபா நம்ம சாமிகண்ணு வீட்டுள் மாடு கண்ணு போட்டிருக்காம். ஆளை விட்டு சீம்பால் வாங்கிட்டு வர சொல்லி தயார் பண்ணிடு. அலமுவுக்கு அதுன்னா பிரியம்” என்றார் தங்கையின் நினைவில்.

அவரை நிமிர்ந்து பார்க்காமலே “சரிங்க” என்றார்.

அவரின் புறக்கணிப்பை உணர்ந்து கொண்டவர் மெல்லிய குரலில் “அம்மா எதுவும் சொல்லிடுச்சா பிரபா?” என்றார்.

தலையை நிமிர்த்தாமலே “இல்லேங்க! வேலை இருக்கு நீங்க கிளம்புங்க” என்றார் பிடிவாதமாக.

“என்னன்னு நீ சொல்லு” என்றார் பிடிவாதமாக.

செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு “மலருக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாங்களே அத்தை. அவளை எனக்கு மருமகளா ஆக்கிகனும்னு ஆசைங்க. ஆனா உங்கம்மா அவளை துரத்துவதிலேயே இருக்காங்க” என்றார் கண்களில் வலியுடன்.

அவசரமாக வெளியே எட்டி பார்த்துவிட்டு பிரபாவின் பக்கம் திரும்பியவர் “அம்மாவுக்கு இதுல விருப்பமில்லை போல பிரபா” என்றார் தயங்கிய குரலில்.

“என் பிள்ளைக்கு பொண்ணு பார்க்க கூட நான் ஆசைப்பட கூடாதா?” என்றார்.

“இங்க பாரு பிரபா நம்ம வீட்டில் அம்மா என்ன சொல்லுதோ அது தான் முடிவு. அந்த பிள்ளையும் நம்ம பிள்ளை தானே. அதுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து ஜாம்-ஜாம்னு கல்யாணத்தை பண்ணிடுவோம்” என்றார்.

அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு “சொல்லிட்டீங்க இல்ல கிளம்புங்க” என்றார்.

மனைவியின் கோபம் புரிந்தாலும் இதில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்திருந்தார். அன்னைக்கு தங்கை மகளை விஜயனுக்கு மணம் செய்து கொடுக்க வேண்டும் என்கிற அவா இருப்பதை உணர்ந்தே இருந்தார். தங்கைக்கும் அந்த ஆசை இருப்பது தெரியும். இவர்களை மீறி மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவர் தயாரில்லை.

சிந்தனையுடனே தோப்பிற்கு கிளம்பி சென்றார்.

சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு மச்சு அறையை சுத்தம் செய்துவிட்டு வந்தவளை சோர்வாக பார்த்து “நீ எதுக்கு இதெல்லாம் பண்ற மலரு?” என்று கேட்டவரின் குரல் தானாக உள்ளே சென்றது. அவருக்கு தெரியும் பாட்டி தான் செய்ய சொல்லி இருப்பார் என்று.

“பாட்டி பண்ண சொன்னாங்க அத்தை”.

“ம்ம்…சின்னவ எங்கே? உன்னை விட்டுட்டு எங்க போனா? கூடமாட ஒத்தாசை பண்ணலாம் இல்ல” என்று கடிந்து கொண்டார்.

குடத்திலிருந்த தண்ணீரை செம்பில் மொண்டு குடித்துக் கொண்டிருந்தவள் “அவ பாட்டு கேட்டுட்டு இருக்கா அத்தை” என்றவள் அவர் அருகில் அமர்ந்து உதவ ஆரம்பித்தாள்.

பிரபவதியின் மனமோ மலருக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது. இந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு நல்லவன் கையில் அமைய வேண்டுமே என்று வேண்டிக் கொண்டார். கார்த்திகா மலரிடம் நன்றாகவே பழகுவாள். ஆனால் அலமேலு அவள் அன்னையைப் போன்றே மலரை வேலைக்காரியை போன்றே நடத்துவார். அதை எண்ணி மனம் வேதனை அடைந்தது.

அண்ணனும், அண்ணியும் இருந்திருந்தாள் அவளை ராணி போல வளர்த்திருப்பார்கள். எல்லாம் விதியின் செயல். கோவிந்தசாமி பவானிக்கும், மலருக்கும் எந்த வித்தியாசம் காட்டுவதில்லை. விஜயனும், பவானியும் கூட அவளிடத்தில் அன்பாகவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் அங்கம்மாள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவள் இந்த வீட்டை சேர்ந்தவள் அல்ல என்பதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பார்.

அதே நேரம் நீடாமங்கலத்தில் தங்களது பயணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள் அலமேலுவும், கார்த்திகாவும்.

“அம்மா! தீவாளிக்கு எடுத்த பாவாடை சட்டையில் ரெண்டு புதுசா அப்படியே இருக்கு. பவானிக்கு ஒன்னும், மலருக்கு ஒன்னும் எடுத்து வச்சிடவா?” என்றாள்.

“எடுத்து வை..ஆனா மலருக்கு புதுசு வேண்டாம். உன்னோட பழைய பாவாடை தாவணி எதுவும் இருந்தா எடுத்து வை. அதை கொடுத்துக்கலாம்”.

“என்னம்மா நீங்க? அதெல்லாம் பழசை அவளுக்கு கொடுக்க வேண்டாம்” என்றாள் முறைத்துக் கொண்டே.

“இங்க பாரு கார்த்தி அம்மா சொன்னா புரிஞ்சுக்கணும். யார் யாரை எங்கே வைக்கனுமோ அங்கே வைக்கணும்” என்றார் நைச்சியமாக.

அன்னையை முறைத்தவள் “அவ யாரும்மா? அத்தையோட அண்ணன் பொண்ணு தானம்மா. அவளைப் போய்…”.

“உனக்கு இப்போ புரியாது கார்த்தி” என்றவர் ஊருக்கு செல்ல வேண்டியவற்றை தயார் செய்ய சென்றார்.

தனது அலமாரியில் இருந்து துணிமணிகளை எடுத்து ட்ரன்க் பெட்டிக்குள் வைத்தவள் பவானிக்கும், மலருக்கும் வேண்டியவற்றையும் எடுத்து வைத்தாள். இந்த முறை மூணு பேரும் சேர்ந்து நல்லா ஊர் சுத்தணும். இந்த முறை நாங்க மூணு பேர் மட்டும் செட்டிமண்டபத்தில் உள்ள காளி கோவிலுக்கு போகணும் பாட்டிக்கு தெரியாம என்று பலவாறு யோசித்துக் கொண்டாள்.

கார்த்திகாவின் மனதில் அந்த நிமிடம் வரை விஜயன் மேல் எந்த சிந்தனையும் இல்லை. ஒரே வயதை ஒத்த மூவரும் நல்ல தோழிகள். கள்ளம் கபடமின்றி மூவரும் எங்கும் ஒன்றாக சுற்றி திரிவார்கள் அகரத்தூரில் இருக்கும் போதெல்லாம். பாட்டி தான் மலரிடம் நெருங்கி பழகாதே என்று திட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை எல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ள மாட்டாள்.

கார்த்திகா வரும் நேரங்களில் மட்டும் மலரை அதிகமாக எதுவும் சொல்ல மாட்டார் அங்கம்மாள். பேத்தியின் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை ரசித்தபடி மலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார். ஒன்றாக உறங்கி, ஒன்றாக உண்டு ஒன்றாக ஊரை சுற்றி வருவார்கள். ஊரில் இருக்கும் அனைவருக்கும் இவர்களின் நட்பை கண்டு அதிசயிப்பார்கள்.

அவர்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. தங்களின் உலகத்தில் உலவிக் கொண்டிருப்பார்கள். இந்த முறையும் இருவருடனும் நன்றாக ஊரை சுற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இரவெல்லாம் உறக்கம் வராமல் விழித்திருந்தாள். மறுநாள் காலை ரயிலில் ஏறி அமர்ந்த பிறகும் அன்னையைப் போட்டு படுத்தி எடுத்தாள் ஒவ்வொரு ஸ்டேஷன் வரும் போதும் ஊர் வந்துவிட்டதா என்று கேட்டு. அவர்களுடன் காவலுக்கு அன்னம்மக்காவும், அவங்க புருஷனும் ரயிலில் பயணம் செய்தார்கள்.

அன்று மாலை கும்பகோணம் ஸ்டேஷனில் சென்று இறங்கியவர்களை வரவேற்க விஜயன் வந்திருந்தான். இரெட்டை மாடுகள் பூட்டிய வண்டி அவர்களுக்காக காத்திருந்தது. அதைப் பார்த்ததும் “மாமா! வண்டிக்கு புது பெயின்ட் அடிச்சீங்களா? ரொம்ப அழகா இருக்கு” என்றாள்.

புன்னகையுடன் “ஆமாம் கார்த்தி” என்றவனை பார்த்த அலமேலு “என்ன மருமகனே சௌக்கியமா?” என்றார்.

“எனகென்ன அத்தை நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? மாமா எப்படி இருக்காங்க?”

“எல்லோரும் நல்லா இருக்காங்க?” என்றவர் வண்டியில் ஏறி அமர்ந்தார்.

இருவரும் ஏறி அமர்ந்த பின்னர் கம்பியை மாட்டிவிட்டு “கிளம்பு ராசு” என்றவன் அத்தையிடம் “நான் பைக்கில பின்னாடியே வரேன் அத்தை” என்று கூறிவிட்டு அவர்களைத் தொடர்ந்தான்.

தங்களின் பின்னே வருபவனை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகா அன்னையிடம் “மாமா வண்டி ஓட்டுறது அழகா இருக்கில்ல” என்றாள்.

மருமகனை பெருமையாக பார்த்துக் கொண்டவர் “அவனுக்கென்னடி! சுயவரம் வச்சா நீ நான்னு பொண்ணு கொடுக்க போட்டி போடுவானுங்க” என்றார்.

அன்னையை கிண்டலாகப் பார்த்து “உடனே உங்க அண்ணன் மகன் புராணத்தை ஆரம்பிச்சிடுவீங்களே” என்று கூறி சிரித்தாள்.

இருவரும் வம்பு வளர்த்தபடியே வீடு வந்து சேர்ந்தனர். இவர்களின் வண்டி சத்தத்தைக் கேட்டே பவானியும், மலரும் வாயிலிலேயே நின்றிருந்தனர். வீட்டை நெருங்கும் முன்னே வண்டியிலிருந்து குதித்து அவர்களிடம் ஓடினாள் கார்த்திகா. மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக் கொண்டு வளவளக்க ஆரம்பித்தனர்.

அலமேலு இறங்கியதும் “மூணு பேரும் வீட்டுக்குள்ள போய் பேசுங்க. அம்மா திட்டும்” என்று கூறி விட்டு உள்ளே சென்றார்.

ராசு அவர்களின் பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல, பவானியும் கார்த்திகாவும் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களின் பின்னே சென்ற மலர் மெல்ல விழியுர்த்தி விஜயனைப் பார்த்தாள். அவனும் அந்த சமயம் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையைக் கண்டதும் அவசரமாக தனது பார்வையை தாழ்த்திக் கொண்டாள். தங்களின் பின்னே வந்த மலரை பார்க்கும் எண்ணத்தில் திரும்பயவளின் பார்வையில் இந்த காட்சி விழுந்தது.

மனமோ ‘ஓஹோ..அப்படி போகுதோ’ என்று கணக்கு போட்டு சிரித்தது.

அதன் பின்னர் பவானி என்ன பேசினாள் என்று மண்டையில் ஏறவே இல்லை. அவர்கள் இருவரின் பார்வையும் பின்னி பிணைந்திருந்த காட்சி மட்டுமே முன்னே வந்து நின்றது. அது என்ன மாதிரி உணர்வு என்றே புரியவில்லை. விஜயன் தன்னை எப்படி பார்க்கிறான் என்று அவனை பார்த்தாள்.

பவானியை எப்படி பார்த்தானோ அப்படீயே அவளையும் பார்த்தான். உள்ளுக்குள் ஏதோ பட்டென்று உடைந்தது.

Categories
Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

அத்தியாயம்-2

அத்தியாயம் – 2

இதமான மன நிலையுடன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு தென்னந்தோப்பிற்கு சென்றான். அவனுக்கு முன்னே அங்கே இருந்த கோவிந்தசாமி அங்கிருந்தார்.

அவரது குரல் தோப்பு முழுவதும் கேட்டது.

“நாளைக்கு லோடு அனுப்பனும். இன்னும் பாதி மரத்து காய் இரக்கல சுறுசுறுன்னு வேலை செய்யுங்கப்பா” என்று விரட்டிக் கொண்டிருந்தார்.

பைக்கிலிருந்து இறங்கிய விஜயன் தந்தையின் அருகில் சென்று “என்னங்கையா இன்னுமா முடியல?” என்றான்.

“சுளுவா செய்ய வேண்டியதை ஒவ்வொருத்தனும் நிதானமா செஞ்சிட்டு இருக்கான்” என்று புலம்பினார்.

நெற்றி சுருங்க ஒரு முறை பார்த்தவன் குனிந்து தனது வேட்டியை தார்பாச்சி கட்டிக் கொண்டு “எல்லாரும் கொஞ்சம் கீழ வாங்க” என்று குரல் கொடுத்தான்.

அவனது குரல் கேட்டதுமே மரத்தின் மீதிருந்தவர்கள் சரசரவென்று கீழே இறங்க, மற்றவர்கள் அனைவரும் குழுமி விட்டனர்.

அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்த மரத்தின் மீது படு வேகமாக ஏற ஆரம்பித்தான். மேலே ஏறியதும் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் காய்களை பறித்து கீழே போட ஆரம்பித்தான். சுமார் மூன்று, நான்கு நிமிடங்களுக்குள் அந்த மரத்தின் காய்களை பறித்து போட்டு விட்டு இறங்கி விட்டான்.

அவனது வேகத்தையும், செயலையும் பார்த்தவர்கள் அமைதியாக குற்ற உணர்வுடன் நிற்க, “இந்த வேகத்தில எடுத்தா நீங்களும் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு பிள்ள, குட்டிய பார்க்க போகலாம் இல்ல. மெதுவா செஞ்சா உங்களுக்கும் நேரம் விரயம் ஆகும். எங்களுக்கும் நாளைக்கு அனுப்ப வேண்டிய லோடு மறுநாள் தான் போகும்” என்றான்.

“சரிங்கையா…இனி, வேகமா பறிச்சு போடுறோம்” என்று கூறி விட்டு அவரவர் பணியை பார்க்க சென்று விட்டனர்.

அதன் பிறகு அசுர வேகத்தில் வேலை நடந்தது. அதை பார்த்த கோவிந்தசாமிக்கு மகனை பற்றி பெருமை தாங்கவில்லை. அவர்களை திட்டவில்லை, கோபமாக முகத்தை கூட காட்டாமல் அவர்களின் தவறை உணர்த்தி வேலை வாங்கி விட்டான்.

“ஐயா! மில்லு வரை போறேன். இன்னைக்கு என்ன அரைக்க சொல்லி இருந்தீங்க?”

“அரப்பு தூளு கம்பனிகாரன் வந்திருந்தான். அந்த மெஷினை மட்டும் ஓட்ட சொல்லி இருக்கேன்”.

“ஒ…சரிங்கையா நான் போய் பார்த்துக்கிறேன்” என்று கூறி அங்கிருந்து கிளம்பினான்.

அதே நேரம் பவானியும், மலரும் முத்தையா தோப்பில் மரத்தின் மீதிருந்தனர். காய்த்து குலுங்கிய மரத்தில் எதை பறிப்பது எதை விடுவது என தெரியாமல் கொண்டாட்டத்தில் இருந்தனர்.

ஆளுக்கு நான்கு காய்களை மடமடவென பறித்து போட ஆரம்பித்தனர். அப்போது ‘டூம்…டூம்’ என்று அதிர்வுடன் கூடிய பைக் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“குமரேசன் வரான் போல இருக்குடி…சீக்கிரம் குதி ஓடிடலாம்” என்று பரபரத்துக் கொண்டே மரத்திலிருந்து குதித்தாள் பவானி.

மலரின் முகத்தில் பயரேகை வந்தது. இருவரும் அவசரம் அவசரமாக ஆளுக்கு ரெண்டு மாங்காய்களை கைகளில் எடுத்துக் கொண்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்தனர். அப்போது தோட்டக்காரனின் குரல் கேட்க ஆரம்பித்தது.

“ஏய்! யாரது! இந்தா நில்லுங்க!” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான்.

அவனை திரும்பியும் பாராது பாவடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு படுவேகமாக ஓடினர். அப்போது அவர்களை மறிப்பது போல குறுக்கே வந்து வண்டியை நிறுத்தினான் குமரேசன். அவனது பார்வை இருவரையும் குறுகுறுவென ஆராய்ந்தது.

மலர் அவனைக் கண்டு நடுநடுங்கிப் போனாள். பவானியோ கொஞ்சமும் அசராமல் “வழியை விடுறீங்களா நாங்க போகணும்” என்றாள்.

மலரை பார்த்தபடியே “என் தோட்டத்து காய் உங்க கையில எப்படி  வந்துச்சு? நான் கொடுத்தா ஞாபகம் இல்லையே” என்றான் கிண்டலாக.

அவன் சொன்னதும் மலர் கையிலிருந்த மாங்காய்கள் கீழே விழுந்தது. அவளது கைகள் நடுங்கத் தொடங்கி இருந்தது. பவானியோ சிறிதும் கண்டு கொள்ளாமல் “நாங்க தான் பறிச்சோம். சரி நேரமாச்சு வழியை விடுங்க” என்றாள் கடுப்பாக.

தனது பார்வையை மலரிடமிருந்து பவானியிடம் திருப்பியவன் “உனக்கு தைரியம் தான்…எங்க தோப்புல வந்து திருடிட்டு என் கிட்டேயே வாயாடிகிட்டு இருக்க” என்றான்.

பேசிக் கொண்டே இருந்தவனின் பார்வை இருவரையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது. மரத்தில் ஏறுவதற்காக தூக்கி செருகி இருந்த பாவாடை இருவரின் கெண்டை கால்களையும் மறைக்க மறந்திருந்தது. அவனது பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட மலருக்கு பவானியின் மீது கோபம் வந்தது. அவளை எப்படியாவது அழைத்துக் கொண்டு சீக்கிரம் ஓடி விட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது. அவசரமாக தூக்கி செருகப்பட்டிருந்த பாவாடையை இழுத்து விட்டுக் கொண்டாள்.

அப்போது மில்லுக்கு சென்று கொண்டிருந்த விஜயனின் பைக் அந்த தோப்பு வழியாக செல்ல, அண்ணனின் பைக் சத்தத்தை அறிந்து கொண்ட பவானி “அண்ணே!” என்று கத்தினாள்.

தங்கையின் குரல் கேட்டதும் பைக்கை நிறுத்திவிட்டு எங்கிருக்கிறாள் என்று கண்களாலேயே தேட ஆரம்பித்தான். அவன் பார்வையில் விழுந்த மூவரையும் கண்டதும் முகத்தில் கடுமை ஏறிக் கொண்டது. பைக்கை நிறுத்தி விட்டு அவர்களிடம் வந்தவன் பவானியைப் பார்த்து “இங்கே என்ன பண்றீங்க?” என்றான் வார்த்தைகளை கடித்து துப்பி.

அண்ணனின் கோபத்தைக் கண்டு தலையை குனிந்து கொண்டவள் “மாங்கா பறிக்க வந்தோம்” என்றாள் மெல்லிய குரலில்.

விஜயன் வந்து நிற்பதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் மலரை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் குமரேசன். அவனது பார்வை செல்லும் பாதையை அறிந்தவனுக்கு கோபம் துளிர்த்தது. மலர், பவானி இருவரையும் முறைத்து “முதல்ல இங்கேருந்து கிளம்புங்க. இந்த பக்கமெல்லாம் வரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல…இனிமே, இந்த பக்கம் பார்த்தேன் தொலைச்சிடுவேன்” என்று மிரட்டினான்.

அண்ணன் திட்டிய பிறகும் ஏதோ பேச வாயைத் திறந்தவளின் கைகளை இறுக பற்றி “பேசாம வா பவானி” என்று கூறி இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அவர்கள் இருவரும் ஓடுவதை பார்த்த குமரேசன் “ஏன் மச்சான் அவங்களை விரட்டி விட்ட?” என்றான் வருத்தமான குரலில்.

அவன் முன்னே ஒற்றை விரலை நீட்டி “இங்கே பார் உன் வேலை எல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ. என் தங்கச்சி பக்கம் கண்ணு போனுது சும்மா இருக்க மாட்டேன்”என்று கடுமையாக எச்சரித்து விட்டு தனது பைக்கை நோக்கி சென்றான்.

“என் முறை பெண்ணை தானே பார்த்தேன் மச்சான்” என்று கிண்டலாக கத்தினான்.

தனது வண்டியின் அருகே சென்றவன் அவனது சொல்லில் கோபம் கொண்டு அதே வேகத்தோடு அவனருகில் வந்து “ஏய்! உன் பார்வை கூட அவ மேல படக்கூடாது” என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டினான்.

அதை சிறிதும் சட்டை செய்யாது தனது வண்டியில் ஏறி அமர்ந்தான்.

அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான் விஜயன்.

குமரேசன் குடும்பமும், விஜயன் குடும்பத்தை போல் அந்த கிராமத்தின் தலைக்கட்டு குடும்பமே. இரு குடும்பங்களுக்கும் பரம்பரையாக தீராத பகை. அன்னம் தண்ணி புழங்க மாட்டார்கள். அதிலும் குமரேசனின்  நடத்தை மோசமானதாக இருந்ததால் கிராமத்து பெண் பிள்ளைகள் அனைவரும் அந்த தோப்பின் பக்கம் வரவே பயப்படுவார்கள்.

அவனது தோப்பில் மாங்காய் திருட வந்த தங்கையை மனதில் வறுதெடுத்துக் கொண்டே வண்டியில் சென்றான் விஜயன்.

தோப்பிலிருந்து வெளியேறியவர்கள் ஊருக்குள் செல்லும் போது மலரின் முகம் சோர்ந்திருந்தது. உள்ளுக்குள் விஜயனின் கோப முகம் வந்து போனது. பவானியோ எதை பற்றியும் கவலைப்படாது வழக்கம் போல வளவளத்துக் கொண்டே வந்தாள்.

“ஏண்டி பொண்டுவளா இந்த நேரத்துக்கு எங்கேடி போயிட்டு வரீங்க?” என்றது திண்ணையில் உட்கார்ந்திருந்த பாட்டி ஒன்று.

“உனக்கு தான் மாப்பிள்ளை பேசி முடிக்க மாப்பிள்ளை வீட்டுக்கு போயிட்டு வரோம்” என்றாள் இடக்காக.

“அடியே சீமை சிறுக்கி! என்கிட்டேயே உன் எகத்தாளத்தை காட்டுறியா? உங்க ஆத்தா உச்சி உறுமுற நேரத்துக்கு பொட்ட புள்ளைய ரோட்டில உலாத்த விட்டிருக்காளேன்னு கேட்டா வாய் ரொம்பத் தான் நீளுது” என்று தோளில் இடித்துக் கொண்டார்.

“பேய் பிசாசெல்லாம் எங்களை ஒன்னும் செய்யாது பாட்டி. மனுசப் பிசாசுங்க தான் மோசம்” என்றவளின் கையைப் பிடித்து இழுத்து “பேசாமா வா பவானி” என்றாள்.

அவளை முறைத்து “இவ்வளவு அமைதியா இருக்க கூடாது மலரு” என்று கூறிக் கொண்டே அவளுடன் நடந்தாள்.

அவர்களுக்கு முன்பே வீடு சென்றடைந்திருந்த விஜயனின் பைக் அவர்களை வா-வா-வென்றழைத்தது.

“அண்ணே வந்துடுச்சு போல மலரு…பின் பக்கமா ஊட்டுக்குள்ள போய் இருந்துக்குவோம். அது கிளம்புற வரை கண்ணுல பட வேண்டாம்” என்று கூறி கொண்டே மெல்ல கொல்லை வழியாக இருவரும் உள்ளே நுழைந்தனர்.

சரியாக பின்கட்டு வாயிலின் முன்பு கந்தையனிடம் நின்று பேசிக் கொண்டிருந்தான் விஜயன்.

‘ஏ! அண்ணன் நிக்கிது! வைக்கப் போருக்கு பின்னே மறைந்சுக்குவோம்’ என்று கிசுகிசுத்து விட்டு அவளையும் இழுத்துக் கொண்டு வைக்கப் போருக்கு பின்னே மறைந்தார்கள்.

அவனிடம் பேசி விட்டு கொல்லைக்குள் வந்தவன் காளை கட்டி வைத்திருக்கும் இடத்திற்கு சென்றான். அது வைக்கோல் போருக்கு நேர் எதிரே இருந்தது.

“போச்சு! நாம வெளியவும் வர முடியாது, உள்ளாரவும் போவ முடியாது…ஐயோ! அரிக்குது வேற’ என்று சொரிந்து கொண்டே புலம்ப ஆரம்பித்தாள்.

மலரோ தன்னவனின் செயல்களை அவனறியாமல் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.

விஜயனுக்கு மயிலு மீது அத்தனை பாசம். அவன் சிறு வயதாக இருந்த போது பிறந்தவன் அவன். தம்பியை போன்று அவனிடம் விளையாடுவான். வளர வளர மூர்க்கமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான். அப்படியும் விஜயனைக் கண்டால் குழந்தை போல அவனிடம் விளையாடுவான்.

அவனை கட்டி வைத்திருக்கும் மரம் நூறு வருடங்களைக் கடந்தது. மிகவும் ஆழமாக வேர் விட்டு பலமாக இருந்தது. ஆனால் மயிலுவின் ஆக்ரோஷத்தில் அந்த மரமே ஆட்டம் காணும். வேலையாட்கள் அனைவரும் அதனருகே செல்லக் கூட பயப்படுவர். அவனது வேலைகளை செய்வது விஜயன் மட்டுமே.

அன்றும் விஜயனைக் கண்டதும் கொம்பால் லேசாக முட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

“என்னடா! இன்னைக்கு குளிக்கலாமா குளத்துக்கு போவமா?” என்று தலையை வருடியபடி கேட்டான்.

இப்படியும் அப்படியுமாக தலையை உருட்டி குதித்தது. அவனது கொண்டாட்டத்தைக் கண்டு மெல்ல கட்டி இருந்த கயிற்றை விடுவித்தவன் லேசாக தளர்த்தி இறுக்கிப் பிடிக்கும் முன்னே அவனது கையை உதறி வைக்கோல் போரை நோக்கிப் பாய்ந்திருந்தான்.

அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த பவானியும், மலரும் அலறிக் கொண்டு இருவரும் இரு பக்கமும் பாய்ந்திருந்தனர்.

கொல்லையில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் பதறி போய் ‘ஐயோ’ என்று அலறிக் கொண்டு ஆளுக்கொரு திசையில் ஓடத் தொடங்கினர். ஆனால் இதெல்லாம் ஒரு நிமிடம் தான். தனது கையை உதறிக் கொண்டு பாய்ந்தவனை அதே வேகத்தோடு பாய்ந்து மூக்கணாங்கயிற்றை வலுவாக பிடித்திருந்தான்.

மலரும், பவானியும் மயிலு தங்களை குத்தி தள்ளிடுவான் என்று பயந்து இறுக கண்களை மூடிக் கொண்டு நின்றனர்.

மயிலை மரத்தில் கட்டிவிட்டு இருவரின் முன்பும் வந்து நின்றவன் “கண்ணத் திறங்க ரெண்டு பேரும். இவ்வளவு பயம் இருக்கிறவங்க எதுக்கு வைக்கப் போருக்குள்ள மறைஞ்சுக்கணும்?” என்றான் கிண்டலாக.

இருவரின் உடலும் நடுக்கத்தில் இருந்தது. பவானி மட்டும் சட்டென சுதாரித்துக் கொண்டவள் அண்ணனைப் பார்த்து முறைத்து “அப்போ வேணும்னே தான் அவிழ்த்து விட்டியான்னே?” என்றாள் கோபமாக.

தங்கையிடம் பேசினாலும் பார்வையை மலரின் மீது வைத்தவன் “இல்லையே! என் கையை மீறி வந்துட்டான்” என்றான்.

“பொய் சொல்லாதீங்க அண்ணா” என்றாள் கோபமாக.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றவன் “நீங்க ரெண்டு பேரும் என்னை ஏமாத்திட்டு உள்ளே போக முயற்சி செஞ்சு இங்கே வந்து எதுக்கு ஒளிந்து கொண்டீங்க?” என்றான் கூர்மையான பார்வையுடன்.

மலர் வாயத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. தலையை அழுத்தமாக மண்ணில் புதைத்துக் கொண்டாள்.

பவானிக்கு அண்ணன் எங்கே வருகிறான் என்று புரிந்ததும் “அது வந்து முத்தையா தோப்புக்கு போனதுக்கு திட்டுவேன்னு” என்று தயங்கினாள்.

இருவரையும் முறைத்தவன் “தப்புன்னு தெரிந்தும் எதுக்கு செய்றீங்க? அந்த குமரேசன்  மோசமானவன். இனி, மாங்கா வேணும்னா என்கிட்ட சொல்லுங்க. நம்ம தோப்பிலருந்து இறக்குறேன்” என்றான்.

“சரிண்ணா” என்று தலையை ஆட்டியவள் மலரிடம் “திருடி திங்குற மாங்காவுக்கு தான் ருசி அதிகம்னு அண்ணனுக்கு தெரியல” முணுமுணுத்தாள்.

அவள் சொன்னதில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி விழியை உயர்த்தி விஜயனைப் பார்த்தாள் மலர்.

“விளையாட்டுதனமா இல்லாம மலர் மாதிரி கொஞ்சம் பொறுமையா இரு பவானி” என்று அதட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதில் கடுப்பாகி மலரின் மண்டையில் நச்சென்று கொட்டி “நீயும் தான என்னோட வந்த…அண்ணன் என்னை மட்டும் திட்டிட்டு போகுது” என்று வெடுவெடுத்துக் கொண்டே உள்ளே ஓடினாள்.

மெல்ல அடியெடுத்து அவளின் பின்னே சென்றவள் வாயிலில் நுழையும் முன்பு திரும்பி பார்க்க, அங்கே அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான்.

அவள் திரும்பி பார்த்ததும் கண்களை சிமிட்டி மெல்லிய சிரிப்பை படர விட்டான். அதில் வெட்கமும், அதிர்ச்சியும் ஒன்று சேர அவசரமாக அங்கிருந்து ஓடினாள்.

Categories
Sudha Ravi வட்டத்துக்குள் சதுரம்

வட்டத்துக்குள் சதுரம் – அத்தியாயம் – 1

அத்தியாயம்- 1

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்

தாங்க என் வெள்ளை உள்ளத்

தண்தாமரைக்குத் தகாது கொலோ?

சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக

உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொன் கரும்பே!

சகல கலாவல்லியே!

கண்களை மூடி தன்னை மறந்து இறைவனிடம் தன் பிரார்த்தனையை வைத்துக் கொண்டிருந்தாள் மலர்.

பூஜையைறையை கடந்து சென்றவனின் விழிகள் ஒரு நிமிடம் தயங்கி பின் வேகமாக அங்கிருந்து நகர்ந்தது.

அகரத்தூர் கும்பகோணம் அருகில் இருக்கும் மிகச் சிறிய கிராமம். தென்னகத்தின் பெருமையை போற்றும் வண்ணம் இயற்க்கை எழிலுடன் கூடிய அழகானதொரு கிராமம்.

அகரத்தூரின் முக்கிய பிரமுகர் கோவிந்தசாமி. பரம்பரை பரம்பரையாக நிலச்சுவாந்தார்களாக வாழ்கின்ற குடும்பம். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு பல குடும்பங்களின் ஜீவனத்திற்கு வழிவகை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்று கட்டுகள் கொண்ட அரண்மனை போன்ற வீட்டின் வாயிலில் பந்தலிடப்பட்டு மர நாற்காலிகளும், பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கும். ஊர் விவகாரங்கள் முழுவதும் அங்கு தான் அலசப்படும்.

கோவிந்தசாமியிடம் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது. அவ்வூர் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். மிகவும் தன்மையான மனிதர். எவர் மீது பகையோ, வெறுப்போ காட்டாமல் அனைவரையும் அரவணைத்து செல்பவர்.

அவரது குடும்பத்தினர் மனைவி பிரபாவதி, மூத்த பிள்ளை விஜயன், இரெண்டாவது பெண் பவானி. இவர்களுடன் கோவிந்தசாமியின் தாயார் அங்கம்மாளும், பிரபாவதியின் அண்ணன் மகள் மலர்.

மலரின் தாய், தந்தை ஒரு விபத்தில் இறந்து போன பின் ஆதரவின்றி தவித்தவளை தன்னுடன் அழைத்து வந்தார் பிரபாவதி. அங்கம்மாளுக்கு அது பிடிக்காமல் போனது. அதனால் மலரை காணும் போதெல்லாம் கரித்து கொட்டுவார். அதிலும் அவள் வளர வளர அவள் மீதான துவேஷம் கூடிக் கொண்டே போனது.

அதற்கு காரணம் அவளின் அழகும், அமைதியும். கோவிந்தசாமியின் சகோதரி சாவித்திரியை நீடாமங்கலத்தில்  கட்டி கொடுத்திருந்தார்கள். சாவித்திரி, கந்தசாமி தம்பதிக்கு கார்த்திகா என்றொரு மகள் உண்டு. கோவிந்தசாமியின் அளவிற்கு வசதி இல்லை என்றாலும் கந்தசாமியும் நிலச்சுவான்தார் தான்.

தங்களின் ஒரே மகளை மிகவும் செல்லமாக வளர்த்து வருகின்றார்கள் கந்தசாமி தம்பதிகள். சாவித்திரி அடிக்கடி அண்ணன் வீட்டிற்கு சென்று தனது உரிமையை நிலைநாட்டி வருவார். மலர், பவானி, கார்த்திகா மூவரிடையே அழகானதொரு நட்பு மலர்ந்திருந்தது.

“விஜயா! இங்க  வா”

வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையில் கம்பீரமாக நடந்து வந்து தந்தையின் முன் நின்ற விஜயன் “சொல்லுங்க ஐயா” என்றான்.

“இந்தப்பய சொல்றதை கேட்டியா? சாத்தங்குடி முனியன் கிட்ட இவன் பொண்ணு கல்யாணத்துக்கு ஆயிரம் ரூபா வாங்கி இருக்கான் போன வருஷம். வட்டியை ஒழுங்கா கட்டிக்கிட்டு தான் இருந்தானாம். ஒரு ரெண்டு மாசமா வட்டி கட்ட முடியலையாம். அதுக்கு நேத்து இவன் வீட்டு முன்னாடி வந்து கலாட்டா பண்ணிட்டு போயிருக்கான்”.

 “ ஏன் எலியா ரெண்டு மாசமா வட்டி கட்டல?” என்றான் அழுத்தமான குரலில்.

இருகைகளையும் மடித்து கட்டிக் கொண்டு பவ்யமாக  விஜயனை நிமிர்ந்து பார்க்காது “அது வந்துங்கையா…கையில தோது படல” என்றான் தயங்கியபடி.

“வழக்கமா உனக்கு கொடுக்கிற சம்பளத்தை கொடுத்துகிட்டு தானே இருக்கோம். அப்புறம் ஏன் பணத்தை கட்டல? என்றான் சற்றே கடினமான குரலில்.

உள்ளே போன குரலில் “கொஞ்சம் செலவாச்சுங்கையா” என்றான்.

“எதுக்கு அந்த ஆட்டக்காரி சரோஜாவுக்கு தானே செலவு பண்ணின?” என்றான் கத்தி போன்ற குரலில்.

அதை கேட்டதுமே படாரென்று கோவிந்தசாமி காலில் விழுந்தவன் “ஐயா! என்னை மன்னிச்சுடுங்க. என் பொண்டாட்டி, பிள்ளை எல்லாம் பயந்து சாவுதுங்க. காப்பாத்துங்கையா” என்று கதற ஆரம்பித்தான்.

மகனை திரும்பி பார்த்த கோவிந்தசாமி எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து உள்ளே சென்றார்.

தந்தை உள்ளே சென்றதும் “ஆட்டக்காரிக்கு செலவு பண்ணும் போது பொண்டாட்டி பிள்ளை ஞாபகம் வரலையாடா உனக்கு” என்றான் கோபமாக.

அவனோ பாய்ந்து விஜயனின் கால்களை இறுக பற்றிக் கொண்டு “ஐயா! சின்னையா! தெரியாம பண்ணிட்டேன் காப்பாத்துங்கையா” என்று அழ ஆரம்பித்தான்.

“எலியா! முதல்ல காலை விடு! எழுந்திரு! முனியன் கிட்ட நான் பேசிக்கிறேன். ஆனா, நம்ம பண்ணையில இனி உனக்கு வேலையில்ல” என்று கடித்து துப்பினான்.

அதைக் கேட்டதும் மீண்டும் “ஐயா! என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க” என்று அழ ஆரம்பித்தான்.

அவனை முறைத்து “முதல்ல அழுகையை நிறுத்து” என்று அதட்டி “உன் வீட்டம்மாவுக்கு தான் வேலை. அவங்க கையால வாங்கி சாப்பிட்டா தான் உனக்கெல்லாம் அறிவு வரும்” என்று கூறி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

எலியனோ “என்னை மன்னிச்சிடுங்கையா! எனக்கே வேலை கொடுங்க” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.

அவனை ஒரு பொருட்டாக கொள்ளாமல் வீட்டினுள் நுழைந்தான்.

முதல்கட்டை தாண்டி உள்ளே நுழைந்தவனுக்கு தேக்கு மர உத்திரத்தில் சங்கிலி பூட்டிய ஊஞ்சலில் ராணி போன்று அமர்ந்திருந்த பாட்டியை கண்டு சிரிப்புடன் சென்றமர்ந்தான்.

“வாய்யா! காலமே பிராது கொடுக்க வந்துட்டானுங்களா எடுபட்டவனுங்க”.

“ஆமாம் பாட்டி…நீங்க சாப்பிடலையா?”

“க்கும்…வீட்டுல மூணு பொண்டுக இருக்குன்னு பேரு ஒருத்தியும் அடுப்பங்கரையை விட்டு எட்டி பார்க்கல” என்று தோளில் இடித்துக் கொண்டார்.

அதைக் கண்டு மென்னகையுடன் எழுந்து கொண்டவன் “நான் சாப்பிட போறேன் நீங்களும் வாங்க” என்றழைத்தான்.

“நல்லாருக்குய்யா நீ சொல்றது. வீட்டு ஆண்பிள்ளைகள் சாப்பிடாம பொம்பளைங்க சாப்பிடுறதா?” என்று கேட்டு முகவாயில் கையை வைத்துக் கொண்டார்.

சிரிப்புடனே “என்னோட தானே சாப்பிட கூப்பிட்டேன். அதுவும் உங்க வயசுக்கு நீங்க ஏன் மெதுவா சாப்பிடனும்?”

லேசாக முறைத்து “எந்த வயசானாலும் பொம்பளை ஆம்பளைக்கு முன்னாடி சாப்பிட கூடாது”.

“அடடா பாட்டி! எந்த காலத்தில் இருக்கீங்க? ஆண், பெண் ரெண்டு பேருமே சமம் தான். உங்களுக்கு மட்டும் பசிக்காதா என்ன? விடுங்க! என்னோட வந்து சாப்பிடுங்க”.

“நீ சாப்பிடு! எங்களால இதெல்லாம் மாத்திக்க முடியாது” என்று கறாராக சொல்லிவிட்டு தனதறையை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.

‘ம்ம்ம்..இவங்களை எல்லாம் மாத்த முடியாது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே சமையலறையை நோக்கி சென்றவனின் பார்வை அங்கு வாயிலில் நின்றவளைக் கண்டதும் மலர்ந்தது.

அதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது பார்வை தன் மீது படிந்ததும் கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

அவளது அந்த செயலைக் கண்டு அவனிதழ் புன்முறுவல் பூத்தது. அவளைக் கண்டதும் வேகம் மட்டுப்பட, சமையலறை சீக்கிரம் வந்துவிட போகிறதே என்ற எண்ணத்துடன் மெல்ல நடந்தான். தலையை குனிந்திருந்தாலும் தன்னருகே வந்து  கொண்டிருக்கும் விஜயனை எண்ணி அவள் இதயம் தாளம் போட ஆரம்பித்திருந்தது.

அந்நேரம் ரேடியோவில் பாடல் ஒலிக்க அவர்களின் மோன நிலையை அது கலைத்தது.

நம்தன நம்தன நம்தனனம்

தாளம் வரும் புது ராகம் வரும்

பல பாவம் வரும்

அதில்  சந்தன மல்லிகை வாசம் வரும்

என்று ரேடியோவுடன் பாடிக் கொண்டே சடையை கையில் பிடித்து சுத்திக் கொண்டே அங்கு வந்து நின்றாள் பவானி விஜயனின் தங்கை.

அவளைக் கண்டதும் அவசரமாக அடுப்பங்கரைக்குள் நுழைந்து கொண்டாள் மலர். தான் வந்ததையும் மறந்து நின்ற அண்ணனை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவள் லேசாக தொண்டையை கனைத்து “அண்ணா! தவம் பண்றியா?” என்றாள் கிண்டலாக.

தன்னை சமாளித்துக் கொண்டு “உனக்கு வாய் அதிகமாகிட்டே போகுது” என்று முறைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

“குடித்தனம் நடத்துற வீட்டுல கொட்டாயில போடுற மாதிரி ரெக்கார்டை போடாதீங்கன்னு சொன்னா கேக்குறாளா இந்த பிள்ளை. அடியே! அந்த கருமத்தை அணைச்சு தொலை” என்று கோபமாக சத்தம் போட்டார்அங்கம்மாள்.

“இதுக்கு இதே வேலையா போச்சு…நிம்மதியா ஒரு பாட்டை கூட கேட்க விட மாட்டேங்குது” என்று முணுமுணுத்துக் கொண்டே கால்களை டங்கு டங்கென்று வைத்து நடந்து சென்றாள்.

மகளை முறைத்த பிரபாவதி “மெதுவா நட பவானி! பெண்ணா பூ போல நடக்கணும்” என்று அதட்டினார்.

பந்தி பாயில் அமர்ந்து இலையில் வைக்கப்பட்டிருந்த இட்லியை எடுத்து வாயில் போட்டவன் “விடுங்கம்மா! சின்ன பெண்ணை எப்போதும் பாட்டி ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க. அவ இஷ்டத்துக்கு இருக்கட்டும்” என்றான்.

“நீ கொடுக்கிற இடம் தான்யா இவ இந்த ஆட்டம் ஆடுறா. நாளை இவ போற வீட்டுல நம்ம வளர்ப்பை பத்தி ஒரு வார்த்தை குறையா வந்துட கூடாது” என்று கூறிக் கொண்டே அவன் இலையில் பதார்த்தங்களை வைக்க ஆரம்பித்தார்.

அன்னையும், தமையனும் பேசியவற்றை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் மலரின் அருகில் சென்று மெல்லிய குரலில் “மலரு முத்தையா தோட்டத்துல மாங்கா காய்ச்சு தொங்குதாம். இன்னைக்கு போகலாமா?”

கண்கள் மலர தலையசைத்தாள். அதைக் கண்டு நச்சென்று மண்டையில் ஒரு கொட்டு கொட்டி “வாயை தொறந்து பதில் சொல்லாத ஊமைச்சி” என்று செல்லமாக கடிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

மகள் செல்வதை பார்த்த பிரபவாதி “அடியே! நில்லு! அரிசி உளுந்து ஊற போட்டிருக்கேன். வந்து ஆட்டி வை” என்றார் சத்தமாக.

“வசந்தாவ ஆட்ட சொல்லும்மா” என்று சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து ஓடினாள்.

தாடையில் கையை வைத்துக் கொண்டு செல்பவளையே பார்த்துக் கொண்டிருந்தவர் ‘இவளை நினைச்சாலே எனக்கு உள்ளுக்குள்ள பயமா இருக்கு தம்பி. புகுந்த வீட்டுல எப்படி தான் குப்பை கொட்ட போறாளோ. காலையிலருந்து இங்க எட்டி கூட பார்க்கல. மலரு தான் என் கூடவே நிற்குது” என்று புலம்ப ஆரம்பித்தார்.

இலையை மடித்து விட்டு எழுந்து கொண்டவன் “கவலைப்படாதீங்கம்மா தங்கச்சி நல்ல பேர் வாங்கிடும்” என்று கூறி அங்கிருந்து வெளியேறினான்.

மௌனமாக நடப்பவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்த மலருக்கு ஏக்கமாக இருந்தது. அத்தையும், மாமாவும் நன்றாக பார்த்துக் கொண்டாலும் இது தனது வீடில்லை என்பதை பாட்டி அவளை ஒதுக்கி வைப்பதில் நினைவுக்கு கொண்டு வருவார். அவருக்கு அவள் எது செய்தாலும் குற்றம். அதிலும் விஜயன் வீட்டிலிருக்கும் போது அவன் முன்னே சென்று விட்டால் அன்று முழுவதும் திட்டி தீர்த்து விடுவார்.

பல்வேறு யோசனைகளுடன் அவன் சாப்பிட்ட எச்சில் இலையை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு செல்லும் நேரம் உள்ளே நுழைந்த அங்கம்மாள் “பேரன் சாப்பிட்டப்ப இவ இங்கே இருந்தாளா?” என்றார் கோபமாக.

சற்றே பயத்துடன் “இல்லத்தை…இப்போ தான் இலையை எடுக்க வர சொன்னேன்” என்றார்.

அதற்கு பதிலேதும் சொல்லாது “ம்ம்ம்..” என்று விட்டு சென்றமர்ந்தார்.

அப்போது அன்னையின் முன்பு வந்து நின்ற கோவிந்தசாமி “எதுக்கும்மா என்னை வர சொன்ன?” என்றார்.

உணவை எடுத்து வாயில் வைத்து கொண்டு “இந்த மலருக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க சொன்னேன். எத்தனை நாளைக்கு அடுத்த வீட்டு பிள்ளையை நம்ம வீட்டுல வச்சுக்க முடியும். கலயாணத்தை பண்ணி பொறுப்பை அடுத்தவன் கையில் ஒப்படைச்சிடனும்” என்றார்.

பிரபாவதிக்கு மாமியாரின் பேச்சு ஏமாற்றத்தை கொடுத்தது. மலரை தன் மகனுக்கே கட்டி வைக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. தன் வீட்டு மருமகளாக்கி கொள்ள உள்ளம் நினைத்தாலும் மாமியாருக்கு அதில் விருப்பமில்லை என்றறிந்து தனது ஆசையை அடக்கிக் கொண்டார். இப்போது அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று சொன்னதும் மனம் நொந்து போனார்.

“நம்ம சந்தானம் கிட்ட சொல்லி இருக்கேன்ம்மா. நல்ல மாப்பிள்ளையா கொண்டு வர சொல்லி இருக்கேன்” என்றார்.

“பணம் காசை பார்க்காத. பையன் நல்லா இருந்தா தட்டி விட்டுடு. நம்ம கடமை குறையும். வயசு பையன் இருக்கிற வீட்டுல பெண்ணை வச்சு கிட்டு நெருப்பை கட்டிகிட்டு இருக்க வேண்டியிருக்கு”.

“ஆமாம்மா! அப்படியே நம்ம பவானிக்கும் மாப்பிள்ளை பார்க்க சொல்லிடலாமா?”

நிமிர்ந்து பார்த்து முறைத்தவர் “என் பேத்திக்கு எதுக்குடா அவசரமா பார்க்கணும்? நல்லா பொறுமையா அந்தஸ்த்தான குடும்பமா பார்க்கலாம்”.

அவரின் பேச்சில் முகம் சுருங்கி கலங்கி நின்ற கண்களை அவரறியாமல் துடைத்துக் கொண்டு உணவை பரிமாறினார் பிரபாவதி.

மனமோ மலரை எண்ணி அழுதது. பவானியை போன்று அவளையும் தன் மகளை போல தான் வளர்த்தார். கோவிந்தசாமியும் அன்னையின் முன் தனது அன்பை காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், மலரின் மீது அவருக்கு தனி பாசம் உண்டு.

தோட்டத்தில் இலையை போட்டுவிட்டு கிணற்றில் இறைத்து வைத்திருந்த நீரில் கையை கழுவிக் கொண்டு நடந்து வந்தவள் எதிரே நின்ற விஜயனை கண்டதும் திகைத்து பின் ஓரமாக ஒதுங்கி நின்றாள்.

மாட்டு தொழுவத்தில் இருந்த மாடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தவன் காற்றில் வந்த கொலுசொலியில் தன்னவளை கண்டு கொண்டான். கணேசனிடம் பேசிக் கொண்டே மெல்ல விழிகளால் அவளை தேட ஆரம்பித்தான்.

வாழை மரத்தின் பின்னே ஒளிந்து நின்று கொண்டிருந்தவளை கண்டு மெல்லிய சிரிப்பொன்று மலர்ந்தது.

அவன் தன்னை பார்த்து விட்டான் என்றுணர்ந்து கொண்டவளின் மேனியில் சிறு நடுக்கம் எழுந்து மறைந்தது.

“கணேசா! அந்த வாழமரத்து பின்னாடி தானே நல்லபாம்பு  போச்சு” என்றான் குறும்பாக.

அவன் சொல்வதை புரிந்து கொள்ளாத கணேசன் தலையை சொரிந்து கொண்டே “எப்போங்கையா” என்றான்.

அதற்குள் வாழை மரத்தின் பின்னே ஒளிந்திருந்தவள் அவசரமாக வெளியே வந்திருந்தாள்.

அவளை நேருக்கு நேர் பார்த்தவனின் விழிகள் முகவடிவை வருட ஆரம்பித்திருந்தது. பயத்தில் துளிர்த்த வியர்வை துளிகள் வைரமென மினுமினுக்க, கூர் நாசியின் இடது புறமிருந்த சிகப்பு கல் மூக்குத்தி ஜொலி ஜொலிக்க, பயத்தில் பற்களிடையே மாட்டியிருந்த உதடுகள் மேலும் அழகு சேர்த்தது.

தன்னை கவனிக்கிறான் என்றதும் வெட்கத்துடன் வேகமாக அங்கிருந்து ஓடினாள். காற்றில் கலந்த அவளது கொலுசொலியை ரசித்தபடி வாயிலை நோக்கி சென்றான் மயக்கத்துடன்.