Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript கலரான கைப்பை காதல் | SudhaRaviNovels

கலரான கைப்பை காதல்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
கலரான கைப்பையில் காதல்



அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே

இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே

உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன்

உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்

இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா



என்ற பாடல் ஸ்டீரியோவில் அலறிக் கொண்டிருக்க பாடல் அலற காரணமான சித்ரா தன்னுடைய மொபைல், லேப்டாப் இரண்டையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.



சித்ராவின் இந்த நிலையை பார்த்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்த அவளது இளைய மகன் நந்தன் சற்று திகைத்து தான் போனான். ஏனென்றால் வீட்டில் பாடல் அலறிக்கொண்டு இருந்தால் அம்மாவின் நடனமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் என்பது அவன் சிறுவயதிலிருந்தே அறிந்து பழக்கப்பட்ட விஷயமாகும்.



அப்படி இருக்கும் பொழுது தனக்கு பிடித்த பாடலை பற்றி சிறிதும் கண்டு கொள்ளாமல் ஏதோ யோசனையில் தன்னுடைய பார்வையை செலுத்திக் கொண்டிருந்த அம்மாவை பார்த்து பயந்தவன் தாங்கள் குடியிருக்கும் அதே அபார்ட்மெண்டில் இன்னொரு தளத்தில் குடியிருக்கும் தன்னுடைய பாட்டிக்கு அழைப்பு விடுத்தான்.



அவனது அழைப்பை ஏற்ற சித்ராவின் அம்மா "என்னாச்சு நந்து கண்ணா?", என மிகவும் பாசமாக வினவினார். அவரது பாசமான குரலில் "பாட்டி! அம்மாவை ஏதாவது திட்டுனீங்களா? எதையோ யோசிச்சுக்கிட்டே உட்கார்ந்து இருக்காங்க", என அழுகுரலில் கூறியவன் மீண்டும் தன்னுடைய அம்மாவை திரும்பி பார்த்தான்.



அதற்கு அவனது பாட்டியோ "யோசிச்சிக்கிட்டு இருக்காளா? அப்படின்னா ஏதோ பெருசா பிரளயம் வெடிக்க போகுதுன்னு அர்த்தம். நீ எதுவும் கண்டுக்காதே! கொஞ்ச நேரம் பாரு... அப்பவும் சரியாகலைன்னா கிளம்பி இங்க வந்துடு. நைட்டுக்கு உனக்கு நான் அடைதோசையும், அவியலும் செஞ்சி தரேன். சாப்டுட்டு இங்கேயே படுத்து தூங்கு", என மிகவும் எளிதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.



ஆனால் நந்தனுக்கு மனம் கேளாமல் தன்னுடைய அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு "என்னம்மா இப்படி உட்காாடந்து இருக்கீங்க?", என சித்ராவை உலுக்கினான். மகனின் உலுக்கலில் அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த சித்ரா "இதை பாரு", என தன்னுடைய மொபைல் மற்றும் லேப்டாப்பை காட்டினாள்.



நந்தனும் என்ன இருக்கிறது எனப் பார்த்தால் இரண்டிலுமே கேலண்டர் ஓபன் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட தேதியை காட்டிக்கொண்டிருந்தது.அதை பார்த்தவுடன் அவனுக்கு புரிந்துவிட்டது. பாட்டிக் கூறிய பிரளயம் தன்னுடைய அப்பாவிடம்தான் வெடிக்கப் போகுது என்பதை அவன் உணர்ந்து கொண்ட நொடியில் "என்ன உனக்கு தெரிஞ்சதா இல்லை உங்க அப்பா மாதிரியே நீயும் மறந்துட்டியா?", என சித்ரா சிலிர்த்துக் கொண்டாள்.



"உங்க பிறந்தநாள் எனக்கு எப்படிம்மா மறக்கும்?", என உடனே தன் அன்னையை சமாதானப்படுத்திய நந்தன் "அப்பாகிட்ட அப்புறமா சீக்ரெட்டா சொல்லிடனும்", என தன்னுடைய மனதில் குறித்துக் கொண்டான்
.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவனது எண்ணத்தை முகம் பார்த்தே படித்த சித்ரா "உங்க அப்பாகிட்ட ஞாபகப் படுத்துற டகால்டி வேலையெல்லாம் நீ செய்யக் கூடாது. அந்த மனுஷர் என்ன செய்யறாருன்னு பார்ப்போம். பொண்டாட்டிக்கு பிறந்தநாள் வருது. இப்ப இருந்தே என்ன வேணும் ஏது வேணும்னு கேட்குறது இல்லாமல் அதை மறந்துவிட்டு மலேசியா போய் உட்கார்ந்து இருக்காரு.



கல்யாணமாகி 25 வருஷமாச்சு... ஆசையா ஒரு பிறந்தநாள் வாழ்த்து இல்லை",என சித்ரா தன்னுடைய ஸ்டைலில் புலம்பிக் கொண்டிருந்தாள். அதை பார்த்த நந்தனுக்கு போன வருடம் தன்னுடைய அப்பா அம்மாவின் பிறந்த நாளுக்காக வாங்கித்தந்த ஆன்டிக் நகை செட் கண் முன்னாடி வந்து சென்றது. அதனை இப்போது கூறினால் தனக்கு அடி விழும் என்பதை உணர்ந்து கொண்டவன் "சரிம்மா! நான் பாட்டியை போய் பார்த்துட்டு அங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்", என அவ்விடத்தை விட்டு நழுவிச் செல்லும் பொழுதே தன்னுடைய அண்ணனுக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டான்.



நந்தனின் மெசேஜை பார்த்த அவனது மூத்தவனான ரிஷியும் உடனே சித்ராவிற்கு அழைத்து அவள் பேசும் முன்னரே "அம்மா! அடுத்த வாரம் உங்க பிறந்தநாள் வருது. நான் எனக்கு பிடிச்ச கிப்ட் தருவதைவிட உங்களுக்கு பிடிச்ச கிப்ட் தரணும்னு ஆசைப்படுறேன். என்ன வேணும்னு சொல்லுங்க அம்மா? போன வாரமே கேட்கணும்னு நினைச்சேன். ஆனா சம்பளம் வந்ததுக்கப்புறம் கேட்கலாம்னு கேட்கலை. இப்ப சம்பளமும் வந்துடுச்சு. நீங்க எது ஆசைப்பட்டாலும் நான் வாங்கி தரேன்", என முன்னரே சரணாகதி அடைந்து விட்டான்.



கணவரின் மறதியில் மண்டை சூடாகி இருந்த சித்ராவுக்கு மகனின் விசாரிப்பில் மணாலியில் இருக்கும் ஒரு உன்னத நிலை ஏற்பட்டுவிட்டது. "நீ கேட்டதே போதுண்டா ராஜா! இருந்தாலும் உன்னோட மனசு கஷ்டப்படக்கூடாது. அதனால ஏதோ உன்னால முடிஞ்சதா அந்த Sephora மேக்கப் செட் ஆர்டர் பண்ணிடு... அப்படியே சம்பளம் வந்தவுடனே வாங்கி தரேன்னு சொன்ன Michael kors பேக்கை வாங்கி பிறந்த நாளுக்கு முதல்நாள் கிடைக்கிற மாதிரி அனுப்பிவிடு", என எளிதாக கூறிய தாயை ஒன்றும் சொல்லாமல் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே ரிஷி அழைப்பை துண்டித்து வைத்துவிட்டான்.



பிறந்தநாளுக்கான தினம் நெருங்க நெருங்க சித்ராவின் கோபமும், ஆத்திரமும் மலேசியாவில் இருக்கும் தன்னுடைய கணவரிடம் அதிகரித்துக் கொண்டிருந்ததன. ஆனால் அது எதையும் வெளியில் காட்டாமல் அமைதியாகவே நடமாடிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. இல்லையென்றால் எப்போது போன் செய்தாலும் ஏதோ ஒரு வழக்கு இருவருக்குமிடையில் வந்து கொண்டே இருக்கும். அதெல்லாம் இல்லாமல் மனைவி இவ்வளவு அமைதியாக அமைதியாக இருப்பதை பார்த்து அகமகிழ்ந்த குமார் வானத்தில் பறப்பதைப் போன்று உணர்ந்தார்.



சித்ராவின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பெரிய மகனிடமிருந்து பிறந்தநாளுக்கு முதல் நாளே அவனது கிப்ட் வந்துவிட்டது. அதனை தன்னுடைய அம்மா,அப்பா,பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, தன்னுடைய தூரத்து சொந்தம் என அனைவரிடமும் காட்டி மகிழ்ந்த சித்ரா தன் கணவரிடம் அதனைப் பற்றி மூச்சே விடவில்லை.



அவரும் எப்பொழுதும் போல் பேசிவிட்டு "ஏதாவது சொல்லனுமா சித்ரா?", என கேட்டதற்கு "சொல்றதுக்கு எதுவுமே இல்லை", எனப் படங்களில் உரைப்பது போல் ஆழ் குரலில் உரைத்த மனைவியை வித்தியாசமாக பார்த்தவர் எதுவும் பேசாமல் வீடியோ காலை கட் செய்து விட்டார். குமார் அழைப்பைத் துண்டித்த அந்த நொடியில் சித்ரா பூகம்பமாக வெடிக்கத் தயாரானாள்.



ஆனால் அவளை குளிர்விக்கும் விதமாக இரவு 12 மணிக்கு நந்தன் தன்னுடைய அண்ணனையும் வீடியோ காலில் வரவழைத்து அவன் அம்மாவிற்கு தெரியாமல் ஆர்டர் செய்திருந்த கேக்கை வெட்டவைத்து அவளது மகிழ்ச்சியை சிறிது கூட்டினான். சித்ராவின் அம்மா, அப்பாவும் இரவு நேரம் என பார்க்காமலும், முதுமையிலும் தங்களது தூக்கத்தை தொலைத்து மகளின் பிறந்தநாளை கொண்டாட அவளது வீட்டிற்கு வந்திருந்தனர்.



அதெல்லாம் சித்ராவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும் தன்னுடைய கணவர் எந்த வித வாழ்த்தும் தெரிவிக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது. அவளட அதை வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அடிக்கொரு தடவை மொபைலை நோக்கியவண்ணம் இருந்த மகளின் மனநிலையைப் புரிந்த அவளது அம்மா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை என சிரித்துக்கொண்டார்.



சித்ராவின் மொபைலும் இரவு 12 மணியில் சில நிமிடங்கள் கழிந்த பின்னர் அலறத்தொடங்கியது. குமார்தான் அழைத்து விட்டாரோ என ஆர்வமாக அதனை எடுத்த சித்ராவிற்கு சப்பென்று ஆகி போனது. ஏனெனில் அழைத்தது சித்ராவின் அத்தை பெண். அழைப்பை ஏற்றவுடன் "சித்ரா! என்ன ஏதுன்னு கேட்காமல் zoom வா என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.



அவர் துண்டித்ததும் சித்ராவும் zoom மீட்டிங்க்கு தனக்கு வந்திருந்த அழைப்பின் மூலம் சென்ற பொழுது அவளது சொந்த பந்தங்கள் என ஏறத்தாழ 50 பேர் கூடி அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடினர். பிறந்தநாள் வாழ்த்து பாடியவர்கள் அத்துடன் சென்றிருந்தால் பரவாயில்லை. அதில் ஒரு குசும்புக்கார உறவினர் " சித்ரா! உன் வீட்டுக்காரர் விஷ் பண்றதுக்காகதான் நாங்க எல்லாரும் இவ்வளவு நேரம் கழிச்சு போன் பண்ணுனோம். இல்லைன்னா 12 மணிக்கு கூப்பிட்டு விஷ் பண்ணிருப்போம். அவா் என்ன கிப்ட் உனக்கு அனுப்பி இருக்காரு? எனக் கேட்டு சித்ராவின் கோபத்தில் சற்று காந்தாரி மிளகாய் தேய்த்துவிட்டார்.



அவர்களுக்கெல்லாம் புன்னகை முகமாகவே "அது எல்லாம் வெளியில் சொல்ல விரும்பலை", என தனது கெத்தை சற்றும் தளரவிடாமல் பேசிய சித்ரா மனதுக்குள் இந்த மனுஷர் நாளைக்கு போன் போடட்டும் அப்புறம் இருக்கு கச்சேரி என கருவிக் கொண்டாள். பிறந்தநாள் வாழ்த்துகள் அந்த நொடியிலிருந்து அவளது முகப்புத்தகத்திலும், தொலைபேசி வாயிலாகவும் வந்தவண்ணமே இருந்து கொண்டிருந்தன.



உலகமே வாழ்த்தினாலும் உரியவர் வாழ்த்தவில்லை என்றால் அந்த நாள் இனித்திடுமா என்ன? பாலும் புளித்ததடி, தேனும் கசந்ததடி என்னும் நிலையில்தான் சித்ராவின் நாள் ஆரம்பித்தது.



அன்றைய நாள் விடிந்த பின்னர் குளிக்காமல், பல் விளக்காமல் சோக உருவமாக சுற்றிக்கொண்டிருந்த சித்ராவை கண்ட நந்தன் "அம்மா! அப்பா வேலையா இருப்பாரும்மா. அப்புறமா கூப்பிட்டு பேசுவார். முதல்ல போய் குளிங்க. குளிச்சிட்டு ஏதாவது சாப்பிட செஞ்சு கொடுங்க", என கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.



"இருபத்தஞ்சு வருஷம் வாழ்க்கைடா... நான் என்ன விக்டோரியா கிரீடத்தையாக் கேட்டேன்?ஒரே ஒரு வாழ்த்து. மிஞ்சிப் போனா எனக்கு புடிச்ச மாதிரி நாலஞ்சு மேட்சிங் ஆக்சஸரீஸ். அதைத் தவிர நான் வேற என்னடா கேட்டிருக்கப் போறேன்? இந்த மனுஷரை கட்டிக்கிட்டு ஒரு பிறந்த நாள் கொண்டாட முடியலை", என சித்ரா புலம்பியதில் "இப்போ இவங்களுக்கு வாழ்த்து வரலைன்னு அர்த்தத்தில் புலம்புறாங்களா? இல்லைன்னா கிப்ட் வரலைன்னு சொல்லி நினைக்கிறாங்களா?", என தன் மண்டையை நந்தன் குழப்பிக் கொண்டிருந்தான்.



சித்ரா மேலும் அவ்வாறே சுற்றி கொண்டிருக்கவும் வேறு வழி இல்லாமல் தன்னுடைய பாட்டியை அழைத்து வந்தான்.வந்தவரும் நேராக சித்ராவின் முன் சென்று "என்ன இப்படி இருக்க? உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் வீடியோ காலுக்கு வரணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நீ இப்படி இருக்கிறதை பார்த்தா உன் மதிப்பு என்ன ஆகுறது? போனவாரம் நொய்டால வாங்குனியே லிப்ஸ்டிக். அது எப்படி இருக்குன்னு இன்னைக்குதானே பார்க்கணும்னு சொன்ன", என ஞாபகப்படுத்தியதும்,



"நல்லவேளைம்மா! ஞாபகப்படுத்துனீங்க. இந்தா இப்ப வரேன்", என உடனே சிறுபிள்ளையாக துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிய மகளை பார்த்தவர் இவ வளா்ந்துட்டாளா இல்லையான்னு எனக்கு இத்தனை வருஷமா புரியலையே பாவம் என் மருமகன் என நொந்து கொண்டு அவரே அன்றைய உணவினைத் தயாரிக்க சென்றார்.



ஒருவழியாக வீடியோ காலில் பேசுபவர்களுக்காக தன்னுடைய மிகவும் சிம்பிளான பச்சைப் புடவை கட்டி அதற்கு ஏற்றவாறு சென்றமுறை புஷ்கர் சென்ற பொழுது வாங்கிய பொருத்தமான அணிகலன்களை அணிந்து கொண்டு நைகா லிப்ஸ்டிக்கும் தன் உதட்டில் இட்டுக்கொண்டு சித்ரா தயாரானாள்.



வழக்கமாக காலை நேரத்தில் அழைக்கும் குமார் அன்று காலையிலும் அழைக்கவில்லை. மதியமும் அழைக்கவில்லை சரியாக ஆறு மணிக்கு மாலை 6 மணிக்கு அழைத்தவர் "சித்ரா zoom வா", எனக்கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். அவர் அழைப்பை துண்டித்ததும் அழைத்த ரிஷி "அம்மா அப்பா என்னை zoom க்கு வரச் சொல்லி இருக்காரு", என்றவாறு அவனும் அழைப்பைத் துண்டித்து விட்டான்.



"என்னடா இது? இந்த மனுஷர் இன்னிக்கி பேமிலி மீட்டிங் போடுறாரா? போடட்டும்.பசங்க முன்னாடியே கச்சேரி வைக்கிறேன் என அவரை தாளித்துக் கொண்டு வந்திருந்த அழைப்பை ஏற்றாள்.



சித்ராவின் அம்மாவும் அப்பாவும் அப்பொழுது அங்கேதான் இருந்தார்கள். நந்தனும் அவர்களின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவன் திடீரென வாயில் அழைப்பு மணி சத்தத்தைக் கேட்டு எழுந்து சென்றான். அங்கே ஒருவர் கையில் சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்ட மிகப்பெரிய பொக்கேயுடனும், ஒரு பெரிய கேக் பார்சலுடனும் நின்றுகொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொருவர் கையில் ஒரு மிகப்பெரிய அட்டைப் பெட்டியுடன் இருந்தார். டெலிவரி பண்ண வந்திருக்கோம் என அவர்கள் கூறியதும் நந்தன் அவர்களிடம் கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டு மூன்றையும் உள்ளே கொண்டு வந்தான்.



ஒவ்வொரு முறையும் அவன் வந்து செல்லும் பொழுது தன்னுடைய அம்மாவை உற்றுப் பார்த்தான். ஆனால் சித்ரா வந்த பரிசுகள் எதையும் கவனிக்காமல் தன்னுடைய கணவனை எவ்வாறெல்லாம் வறுத்து எடுக்கலாம் என ஆழ்ந்த யோசனையுடன் தன்னுடைய லேப்டாப்பை நோண்டி கொண்டிருந்தாள். குமாரும்,ரிஷியும் இணைந்ததும் குமார் முதலில் "நந்தா! அந்த பொக்கே எடுத்து உங்க அம்மாகிட்ட கொடு", எனக் கூறினார்.



நந்தனும் அதை எடுத்து அம்மாவின் கையில் கொடுத்த போதுதான் சித்ரா அதனையே பார்த்தால். அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே குமார் "சித்ரா! இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? என்னோட அம்மா, தங்கச்சி இவங்க ரெண்டு பேர் மட்டுமே உலகமாய் இருந்த என்னோட உலகத்துல மூன்றாவதாக என்ன பிச்சி எடுக்க வந்த என்னோட சித்ராங்கி இந்த உலகத்துல அவதரித்த நாள். என்னுடைய உடம்பில ஓடுற ஒட்டு மொத்த ரத்தமும் சித்ராங்கின்னுதான் சொல்லும்.அதை குறிப்பிட்டுதான் இந்த சிவப்பு ரோஜாக்களை உனக்கு நான் தருகிறேன்", என உணர்வுபூர்வமாக உரைத்தவர் நந்தனியடம் திரும்பி கேக்கை எடுத்துக்கொண்டு வந்து வைக்கச் சொன்னார்.



அந்த கேக்கை ஓபன் செய்ததில் ஹாப்பி பர்த்டே யுவர் லவிங்கிலி சித்ராங்கியின் சித்திரம் என இருந்தது. சித்ராங்கி என்பது குமார் திருமணமான புதிதில் சித்ராக்கு வைத்த செல்லப்பெயர் .அது வீட்டில் யாருக்குமே தெரியாது. அதனை அவர் இப்போது கூறிக் கொண்டிருப்பதை கண்டு சித்ராவிற்குதான் முகத்தில் வெட்கம் பூக்க ஆரம்பித்தது. அந்த வெட்கத்தை ரசித்துக்கொண்டே "சித்ராங்கி! இந்த கேக்கை வெட்டி அப்படியே மாமா சார்பா நீயே ஒரு வாய் எடுத்து சாப்பிடு", எனக் கூறியதும் சித்ரா மிகவும் ஸ்டைலாக கேக் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டாள்.



அப்போது அவளது உடையை பார்த்தவர் "சித்ராங்கி! உன்கிட்ட அந்த சாண்டல் வித் மெரூன் கலா்ல ஒரு சாரி இருக்குமே!அதை கட்டிக்கிறியா?போன தடவை ஹைதராபாத் போனப்ப வாங்கிட்டு வந்த அந்த முத்து செட் இருக்குமே. அதை போடுறீயா?", என சினிமாக்களில் ஹீரோக்கள் கேட்பதுபோல் கேட்டவுடன் சித்ராவிற்கு தலைகால் புரியவில்லை. இதோ வா்றேன் மாமா என துள்ளிக் குதித்துக் கொண்டு தன்னுடைய அறைக்கு உடைமாற்ற சென்றுவிட்டாள்.



குமாரும் சரி சித்ராவும் சரி தங்களின் மகன்களும், பெரியவர்களும் இருப்பதை சுத்தமாக மறந்து விட்டனர். சித்ரா தன்னுடைய அம்மா அப்பா இருப்பதை மறந்து விட்டாள் என்றால் குமாருக்கு அவர்கள் இருப்பதே தெரியாது. அதனால் அவர் தன்னுடைய காதலை தான் கை பிடித்தவளிடம் கலர்கலராக கூறிக்கொண்டிருந்தார்.



உடைமாற்ற சென்ற சித்ராவும் ஐந்தே நிமிடங்களில் அழகான மேக்கப்புடன் வந்து நின்று மாமா இது நல்லா இருக்கான்னு பாருங்க எனக் கேட்டதும் "எனக்கு நீ எப்போதுமே அழகு சித்ரா! ஆனா இப்ப ரொம்ப அழகாயிருக்க", என குமார் கூறியதில் மிகுந்த வெட்கப்பட்டு சித்ரா போங்க மாமா எனக்கு வெட்கமா இருக்கு என கூறிக்கொண்டே கேக்கை கட் செய்தாள்.



அம்மாவின் அருகில் தான் நின்று கொண்டிருப்பதால் தனக்குதான் ஊட்டுவார் என எண்ணிய நந்தன் வேகமாக வாயை திறக்க அதற்கு முன்னர் சித்ரா லேப்டாப் திரையின் வழியாக தன் கணவருக்கு இது உங்களுக்கு மாமா என கூறிவிட்டு அந்த கேக்கை தன்னுடைய வாயில் வைத்துக் கொண்டாள்.



அடுத்து அந்த பாக்சை பாரு சித்ராங்கி என குமார் கூறியதும் அதனை பிரிக்க உள்ளே பல வண்ண நிறங்கள் சேர்ந்த ஒரு கைப்பை இருப்பதை கண்டாள். அது மிகவும் நல்ல பிராண்ட் ஆகவும் இருந்ததில் சித்ராவுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் "நான் இந்த மாதிரி கலர் கலரா யூஸ் பண்ண மாட்டேன் மாமா", என கூறிக்கொண்டே கைப்பையின் உள்ளே ஆராய்ந்தாள். தனது கணவர் வேறு ஸ்பெஷல் கிப்ட் வைத்திருக்கிறாரோ என ஆராய்ந்த போது அது வெற்றிடமாக இருந்தது. இவ்வளவு நேரம் அவர் கூறிய காதல் மொழிகள் சித்ராவிற்கு பிடித்திருந்தாலும் இப்பொழுது கைப்பை வெறுமையாக இருப்பதை பார்த்து "என்ன மாமா வெறும் காலியானதாக கொடுத்து இருக்கீங்க? அதுவும் எனக்கு பிடிக்காத மாதிரி", எனக் கூறியதும் குமார் நகைத்துக் கொண்டார்.



உடனே "சித்ரா! அந்த கைப்பை கலரா இருக்குது பார்த்தியா? அது அத்தனையும் உன்னோட முகத்தில் வர்ற வர்ணஜாலங்கள். அந்த வர்ணஜாலங்களுக்குள்ள வெற்றிடமாக இருக்கிற கைப்பையில் நிரம்பியிருப்பது முழுக்க என்னோட காதல் மட்டுமே! கலரான கைப்பையில் காதல்", எனக் கூறினார்.



தன்னுடைய முகத்தில் சிறிது சோகத்தை காட்டி "இதெல்லாம் நேரா வந்து தரணும்னு டிக்கெட் போட்டு வெச்சிருந்தேன். கொரோனா கொடூரமா என்னோட பிளானை கொலை பண்ணிடுச்சு. நேத்துதான் அந்த டிக்கெட்டை கேன்சல் பண்ணுனேன் என்றதுடன் இன்னொரு கிப்ட் உனக்கு இருக்கு சித்ரா", எனக் கூறினார்.



அது என்ன மாமா என சித்ரா ஆசையுடன் கேட்டதும் அவரது அறையில் இருந்த கிட்டாரை எடுத்து வைத்துக்கொண்டு "ஹாப்பி பர்த்டே டு மை சித்ராங்கி! ஹாப்பி பர்த்டே டு மை சித்ராங்கி!", என அவர் பாட ஆரம்பித்தவுடன் அதுவரை பொறுமையாக இருந்த ரிஷியும், நந்தனும், சித்ராவின் பெற்றோர்களும் சேர்ந்துகொண்டு ஹாப்பி பர்த்டே பாடலை பாடினார்கள்.



மகன்களின் குரலுடன் மாமனார் மாமியார் குரலைக் கேட்டவுடன் குமாருக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. "சித்ரா! அத்தை மாமா இங்க இருக்காங்களா?", எனக் கேட்டவர் அவர்கள் திரையின் முன்னே வரவும் நான் அப்புறமா பேசுகிறேன் என அழைப்பை துண்டித்து விட்டு ஓடிவிட்டார்.



அதற்கடுத்து மகன்கள் பேசிய கிண்டல் மொழிகளும் பெற்றவர்கள் கூறிய கலாய்ப்புகளும் சித்ராவின் காதில் எட்டவே இல்லை. கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு அந்த கைப்பையை தனது முகத்தின் அருகில் வைத்துக்கொண்டு அந்த கைப்பையில் இருக்கும் நிறங்கள் போன்ற வர்ண ஜாலங்களை தன்னுடைய முகம் காட்டுகிறதா என சித்ரா ஒப்பிட்டு நோக்க ஆரம்பித்து விட்டாள்.



அன்று முதல் அவள் எங்கே கைப்பையை தூக்கினாலும் வீட்டில் இருப்பவர்கள் கலரான கைப்பையில் காதலுடன் சித்ரா என அவளை கலாய்த்து கொண்டிருந்தார்கள். கலரான கைப்பை யாரேனும் பரிசளித்தால் உங்களின் முக வர்ண ஜாலங்களுக்கு அவர்களின் காதலை உங்களுக்கு பரிசு அளிக்கிறார்கள் என்பதைஅறிந்துகொள்ளுங்கள்
...
 

Ramya Mani

Well-known member
May 24, 2019
73
2
53
Superb Deepi akka.... 1000 பேர் பரிசு கொடுத்தாலும் ஆத்துக்காரர் தர பரிசுதான் பெஸ்ட்... அவரோட வாழ்த்து தான் பர்ஸ்ட்....
 
  • Like
Reactions: Kripnythaa

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
Superb Deepi akka.... 1000 பேர் பரிசு கொடுத்தாலும் ஆத்துக்காரர் தர பரிசுதான் பெஸ்ட்... அவரோட வாழ்த்து தான் பர்ஸ்ட்....
Thanks Ramya