Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 1 | SudhaRaviNovels

அத்தியாயம் - 1

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,827
113
அத்தியாயம் – 1

அன்று தமிழகம் முழுவதும் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றத்திற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. மக்கள் தங்களின் ஒட்டு சரியான கட்சிக்குத் தான் சேர்ந்ததா என்கிற ஆவலுடன் காத்திருந்தார்கள். அதிலும் மக்களின் தேசம் கட்சி கொடுத்த ஒரு வாக்கிற்காகவே தங்களின் ஓட்டை அந்தக் கட்சிக்கு போட்டிருந்தார்கள்.

சமீப காலமாக தமிழகம் எங்கும் ரவுடிகளின் ராஜ்யமாக மாறிக் கொண்டிருந்த வேளையில் இந்த தேர்தல் வர, அதை வைத்து அவர்கள் கொடுத்த ஒரு வாக்குறுதி மக்கள் மனதில் அழுந்தப் பதிந்தது.

அது என்னவென்றால் ரவுடி ராஜ்யமாக மாறிக் கொண்டிருக்கும் மாநிலத்தை சரியான ஒரு காவற்காரன் கையில் கொடுக்க வேண்டும் என்பதே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிவதாசை தமிழகத்திற்கு கொண்டு வருவோம் என்பதே அந்த வாக்குறுதி.

சிவதாஸ் என்றாலே குற்றவாளிகளுக்கு தொடை நடுங்கும். எத்தனை பெரிய ரவுடியாக இருந்தாலும் சிவதாஸின் ட்ரீட்மென்ட்டில் உண்மையை கக்கி விடுவான். ஆறடி உயரமும் இரும்பு போன்ற தேகமும், இறுகிய முகமும் கொண்டவன் சிவதாஸ். போலீஸ் எனபது அவனது வாழ்க்கை.

தமிழகத்தில் பணியில் இருந்த போது அவனது ஜீப் சத்தத்தைக் கேட்டாலே அரண்டு போய் அனைவரும் வீடடங்கி விடுவர். அவன் இருக்கும் ஊரில் குற்றம் செய்யக் கூட யோசிப்பார்கள். இப்போது அவனிருப்பது மகாராஷ்டிராவில். அங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் மக்களின் வேண்டுகோள். அது நிறைவேற்றி வைக்கப்படும் என்பதை சொல்லியே தேர்தலில் ஜெயித்திருந்தார்கள் மக்கள் குரல் கட்சி.

ஒரு மாநிலமே தன் வரவை எதிர்பார்த்திருக்க, அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாது தன் கையில் கிடைத்தவனை வெளுத்துக் கொண்டிருந்தான்.

“சாலே! இந்த சிவதாஸ் கிட்டேயேவா?” என்று மேலும் நாலு மிதி மிதித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கே வந்த அவனது நண்பன் “தாஸ்! போன் வந்திருக்கு உனக்கு” என்றான்.

நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு “ம்ம்...இவனுக்கு சாப்பாடு கொடுத்து ரெஸ்ட் எடுக்க வை. நைட் பார்த்துகிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

போனை எடுத்து “சிவதாஸ் ஹியர்” என்றான் இறுகிய குரலில்.

அந்தப் பக்கம் வந்த செய்தியில் அவனது முகம் மாற “இஸ் இட்? எப்போ ஜாயின் பண்ணனும்?” என்றான் விறைப்பாக.

“இம்மெடியட்! இந்த வீக்கே”.

“ம்ம்..” என்று உறுமலுடன் ஒத்துக் கொண்டவன் “ஷிட்!” என்று கைகளை காற்றில் வீசி தனது எரிச்சலை அடக்கிக் கொண்டான்.

அப்போது அங்கே வந்த ஷர்மிந்தர் “என்னாச்சு தாஸ்?” என்றான் அவனது முகத்தில் தெரிந்த எரிச்சலை கவனித்தபடி.

“எனக்கு ட்ரான்ஸ்பர் தமிழ்நாட்டுக்கு” என்றான் கடுப்புடன்.

ஷர்மிந்தரோ “வா! பாய்! வா! உன் ஊருக்கே ட்ரான்ஸ்பாரா? அதுக்கு ஏன் கோபப்படுற?” என்றான் புரியாமல்.

“இந்த கேசை பாதியில் விட்டுட்டுப் போறது எனக்குப் பிடிக்கல. சிவதாசுக்கு ஒரு விஷயத்தை பாதியில் விடுவது பிடிக்காத விஷயம்” என்றான் நெற்றியைத் தட்டியபடி.

“எப்போ ஜாயின் பண்ணனும்?”

“இந்த வீக்” என்றவனின் பார்வை நண்பனை பார்த்து ஒரு மாதிரியாக சிரிப்பது போல இருந்தது.

அதை புரிந்து கொண்ட ஷர்மிந்தர் “தாஸ்! அப்போ முடிச்சிடுவ?” என்றான் கிண்டலாக.

“சூர்!” என்று தோளை குலுக்கியபடி தன் சுழற்நாற்காலியில் சென்றமர்ந்தான்.

சிவதாசிடம் சிக்கி இருந்த குற்றவாளி, அவன் தமிழ்நாட்டிற்கு செல்லப் போகிறான் என்கிற செய்தியை அறிந்ததும் தான் இனி தப்பிவிடுவோம் என்று நம்பினான். அதனால் அவன் முகத்தில் சற்று தைரியம் வந்திருந்தது. அதைப் போலவே அங்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

சிவதாஸின் மேலதிகாரிகள் அவனை அழைத்து அவன் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கேஸ் அனைத்தையும் ஷர்மிந்தரிடம் ஒப்படைத்து விட்டு கிளம்ப தயாராகும் படி கூறினார்கள். இந்த செய்திகள் அனைத்தும் ஊடங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்த ரவுடிகள் அனைவரும் இதை கேக் வெட்டி கொண்டாடினர். இனி, தங்களுக்கு விடுதலை என்றே சொல்லி அத்தனை கொண்டாட்டம். அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் எதையும் சிறிதளவு கூட காட்டிக் கொள்ளவில்லை.

அன்று இரவு ஸ்டேஷனை விட்டு கிளம்பி தன் இருப்பிடத்திற்கு செல்லாமல் ஒரு பாழடைந்த கட்டிடம் இருக்கும் இடத்திற்கு சென்றவன், ஷர்மிந்தருக்கு முன்னமே சொல்லியபடி அந்த இடத்தில் லொகேஷனை ஷேர் செய்தான். அதன்படி சற்று நேரத்தில் அந்த குற்றவாளியை சுமந்தபடி ஷர்மிந்தரின் ஜீப் வந்து சேர்ந்தது. அவனை இழுத்துச் சென்று ஓரிடத்தில் கட்டிப் போட்டவன் அவன் முன்னே ஒரு நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

ஷர்மிந்தர் அந்த கட்டிடத்தின் வெளியே காவலுக்கு நிற்க, உள்ளே சிவதாஸின் ட்ரீட்மென்ட் ஆரம்பித்திருந்தது. எல்லாம் முடிந்து தான் தப்பிவிடுவோம் என்கிற எண்ணத்தில் இருந்தவனுக்கு மீண்டும் சிவதாசின் முன்னே இருப்பது பீதியைக் கொடுக்க, பயத்துடன் அவனைப் பார்த்தான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,827
113
தனது மீசையை லேசாக வருடிக் கொண்டே “சோ நான் போயிடுவேன்னு நினைச்சு சந்தோஷப்பட்ட? அப்படித்தானே?” என்றான் மிரட்டலாக.

“இல்...இல்ல!”.

மீசையை அழுத்தமாகப் பிடித்து திருகியவன் “நான் போயிட்டா நீ தப்பிச்சிடுவ? ரைட்!” என்றான் கூர்மையான பார்வையுடன்.

கண்களில் கலவரம் எழ எதுவும் பேசாமல் சிவதாசையே பார்த்தான்.

அதைக் கண்டு கோபம் எழ சட்டென்று அவனது நெஞ்சின் மீது காலை வைத்து ஒரு தள்ளு தள்ளி இருந்தான். அந்த நாற்காலி பத்து குட்டி கரணம் அடித்து தலைகுப்புற விழுந்தது. அதில் அந்த குற்றவாளிக்கு தலையில் செம அடி.

மெல்ல எழுந்தவன் அவனது சட்டையைப் பற்றி தூக்கி “என்ன பண்ணின எப்படி பண்ணின? எல்லாம் இப்போ வந்தாகணும். இது உனக்கு பைனல் வார்னிங். இப்போ நீ சொல்லலேன்னா உயிரோடவே போக முடியாது”.

“கொன்னுடு! என்னால சொல்ல முடியாது” என்றான் அழுத்தமாக.

“ம்ம்ம்...” என்று தலை ஆட்டிக் கொண்டவன் “அப்படி எல்லாம் உன்னை கொன்னுட மாட்டேன். வலிக்கணும்! வலின்னா என்னன்னு தெரியனும். ஒவ்வொரு நிமிடமும் செத்துட மாட்டமான்னு தவிக்கணும். அப்படி வச்சு செஞ்சு தான் கொல்லுவேன்” என்றான் அவனது விழிகளைப் பார்த்துக் கொண்டே.

“நீ என்ன சொன்னாலும் என்கிட்டே இருந்து எதையும் வாங்க முடியாது”.

அவனது பேச்சு சிவதாஸின் உடலை மேலும் இறுகச் செய்ய ‘ரைட்!” என்றவன் மெல்ல நடந்து சென்று ஒரு பெரிய பெட்டியை எடுத்து வந்தான்.

அதை பார்த்ததும் உள்ளுக்குள் பயம் எழ, பீதியுடன் அவனைப் பார்த்தான்.

சிவதாசோ அவனை நிமிர்ந்தும் பாராது மடமடவென்று அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த சில பல வயர்க்களை எடுத்து கரென்ட்டில் கொடுக்க ஆரம்பித்தான். அது தனக்கான தண்டனை தான் என்பதை புரிந்தவன் “சிவதாஸ் ! தேவையில்லாம என் மேல கை வைக்காதே” என்று சொல்லி முடிக்கும் முன் அவனது பல் பெயர்ந்து கீழே விழுந்து கிடந்தது.

“என் பேரை சொல்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா” என்றான் கண்களை உருட்டி.

அடுத்து அவன் பேச யோசிக்க, அதை பார்த்துக் கொண்டே அவனது உடல் எங்கும் அந்த வயர்களை பிணைத்தான். அதிலும் ஒவ்வொரு விரல் நுனியிலும் அந்த வயர்களை பிணைக்க, இப்போது அவனுக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது.

சிவதாசோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அந்த பெட்டியிலிருந்த ஒரு சுவிட்சை தட்ட, அது மெல்ல எதிரே இருந்தவனின் உடலில் கரெண்ட்டை செலுத்த ஆரம்பித்தது. தன் கையில் ஒரு ரிமோட்டை வைத்துக் கொண்டவன் சிறிது சிறிதாக ஷாக்கை அதிகமாக்க தொடங்கினான்.

முதலில் சாதரணமாக அமர்ந்திருந்தவன் ஷாக் அதிகமாக ஆக கத்த ஆரம்பித்தான். உடல் தூக்கி போட ஆரம்பித்தது. ஒரேடியாக கொடுக்கமால் விட்டு-விட்டு கொடுத்து அவனது பயத்தை அதிகப் படுத்தினான்.

அவனது கண்களில் தெரிந்த பயத்தை அவதானித்துக் கொண்டே கூட்டுவதும் இறக்குவதுமாக இருந்தான். அவனுக்கோ உடலெல்லாம் வலி எடுக்க, அதோடு எதிர்பாராமல் அவன் அதிகமாக கொடுத்து மொத்தமாக தன்னை முடித்து விடுவான் என்கிற பயமும் எழுந்தது.

அவனது மனதில் நினைத்ததைப் போல “என்ன பார்க்கிற நீ நினைக்கிறது சரி தான். நான் போறதுக்கு முன்னாடி உன்னை முடிச்சிட்டு போயிடுவேன். என்னை யாரும் கேட்க முடியாது” என்றான் அழுத்தமாக.

வலியுடன் “அப்போ உண்மை உனக்கு வேண்டாமா?” என்றான் அதிர்ச்சியாக.

லேசாக தோள்களை குலுக்கி “வேண்டாம்! நான் இந்த கேசை பார்க்க போறதில்லை. அப்போ அது எதுக்கு எனக்கு. ஆனா நான் பிடிச்ச உன்னை யார் கிட்டேயும் விட மனமில்லை” என்று கூறி விகாரமாக பார்த்தான்.

அவனது பதிலில் ஆடிப் போனவன் “என்னை ஒன்னும் செஞ்சிடாதே நான் எல்லாவற்றையும் சொல்லிடுறேன்” என்று கெஞ்சினான்.

அத்தனை நேரம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தவன் இப்போது சரியாக வழிக்கு வந்தான்.

அந்த நிமிடத்திலிருந்து சிவதாஸின் ஆட்டம் தொடங்கியது. அவனிடமிருந்து உண்மையை வாங்கிய பின், அன்று இரவும், மறுநாளும் நகரமே அல்லோகலப்பட்டது. ஒவ்வொருவனும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தான். ஆனால் சிவதாசிடமிருந்து தப்பிக்க முடியாமல் போனது.

சரியாக இரெண்டே நாட்களில் அந்த கேஸ் முடிவிற்கு வந்தது. மகாராஷ்டிராவே அல்லோகலப்பட்டது. சிவதாஸ் அங்கிருந்து போவதை பற்றி பத்திரிக்கைகள் அனைத்தும் பக்கம் பக்கமாக எழுதியது. மக்களோ எப்படியாவது அவனை அங்கேயே இருக்க வைக்க வேண்டும் என்று நினைத்தனர்.

இது எதுவுமே அவனை பாதிக்கவில்லை. எடுத்த கேசை நினைத்த மாதிரி முடித்த திருப்தியிலேயே சென்னையை நோக்கி கிளம்பினான். தமிழ்நாட்டின் ஊடகங்கள் அனைத்தும் சுனாமி மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாக தலைப்பு செய்தி போடப்பட்டது.

முதன்முறையாக ஒரு போலீஸ் அதிகாரியைப் பற்றி இப்படி நாடெங்கும் பேச்சு எழுந்தது. அதிலும் அவனுக்கு கருஞ்சிறுத்தை என்று பெயர் வைத்து அழைத்தனர். அவனும் அப்படித்தான் இருப்பான். நெடு நெடுவென்று வளர்ந்திருந்தவனின் நிறம் கருப்பு. கூறிய விழிகளில் எப்பொழுதும் வேட்டையாடும் பாவமே நிறைந்திருக்கும். சிரிப்பு என்கிற ஒன்றை அறிந்திராத இதழ்கள். அழுத்தமாக மூடிக் கிடக்கும்.

சிவதாஸ் சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கி இருந்தான். அவனைச் சுற்றி பத்திரிக்கை ரிபோர்டர்கள் சூழ்ந்து கொள்ள, தனது கூலர்சை கழட்டி சட்டையில் மாட்டிக் கொண்டவன் அங்கிருந்த ஒவ்வொருவர் மீது ஆராய்ச்சி பார்வையை வீசினான்.

“சார்! நீங்க திரும்ப வந்தது எப்படி இருக்கு? அதுவும் இந்த மாநிலமே உங்களை எதிர்பார்த்து காத்திருப்பது” என்று கேள்வி கேட்டார் ஒருவர்.

“எப்படி இருக்கணும்? நான் வேலையை செய்ய வந்திருக்கேன்”.

“உங்களை பார்த்தாலே ரவுடிகள் எல்லாம் நடுங்குறாங்களே சார். அது எப்படி?”

அவனை கூர்ந்து பார்த்தவன் “அப்படியா?” என்று நிறுத்திக் கொண்டான்.

“நீங்க இங்கே வந்ததால இதுவரை நடந்து வந்த ரவுடி ராஜியத்தை ஒழிச்சிடுவீங்கன்னு எதிர்பார்க்கலாமா சார்?”

அவனை அருகே கூப்பிட்டவன் “நீ நிறைய சினிமா பார்ப்பியா? இதை மாதிரியான கேள்விகளை அவாய்ட் பண்ணிடுங்க. இங்கே என்னுடைய தேவை இருக்கு என்று என்னை அழைச்சிருக்காங்க. என்னுடைய வேலைக்காக இங்கே வந்திருக்கேன். நான் ஒன்னும் சினிமா நடிகை இல்ல வளைச்சு வளைச்சு கேள்வி கேட்க. எங்க வேலையை பார்க்க விடுங்க” என்றவன் அனைவரையும் தள்ளிக் கொண்டு காரில் ஏறி விட்டான்.

அவனது முரட்டுத்தனமான பதிலை கேட்டு சற்றே பயத்துடன் ஒதுங்கி வழி விட்டு விட்டனர். புதிதாக வந்திருந்த நிருபர் “என்னப்பா இப்படி பேசிட்டு போறார்” என்றார் அதிர்ச்சியாக.

“அவர் அப்படி பேசலேன்னா தான் அதிசயம். ஆனா இனி நமக்கு அடிக்கடி செய்தி கிடைக்கும்” என்று சந்தோஷமாக அங்கிருந்து சென்றனர்.

அதே நேரம் அவனது பேட்டியை பார்த்துக் கொண்டிருந்தவளின் இதழ்களோ “நீ அவ்வளவு பெரிய ஆளா? ம்ம்...நீயெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க முடியாது மச்சான்” என்றாள் இகழ்ச்சியாக சஞ்சலா.
 
  • Love
Reactions: Kothai suresh
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!