அத்தியாயம் - 13

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,826
1,984
113
அத்தியாயம் – 13

வீட்டிற்கு சென்ற பின்னும் அவளால் அவனது குரலில் இருந்து விடுபட முடியவில்லை. தன்னை விட்டு விட்டு சென்று விட்டான் என்கிற கோபத்தை தாண்டி அவனது குரலில் தெரிந்த வலி அவளை வேதனை கொள்ள செய்தது. அவளது மனம் அவனுக்கு ஏதோவொரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்று அடித்துக் கூறியது. ஆனால் அதையும் மீறி அவனது திருமண புகைப்படம் அவள் கண்முன்னே தோன்றி அவன் மீது எழுந்த பரிதாபத்தை அடித்து உடைத்து.

போன் வந்ததில் இருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த தான்யாவிற்கு அவளின் வலி நன்றாக புரிந்தது. மெல்ல அவள் அருகே வந்தமர்ந்தவள் “என்னக்கா? யார் போன் பண்ணினது?” என்றாள்.

தங்கையை திரும்பி பார்த்தவள் “சித்தார்த்” என்றாள்.

அவனது பெயரைக் கேட்டதும் கோபமடைந்தவள் “எதுக்கு போன் பண்ணினார்? அது தான் நம்ம குடும்பத்தையே நாசம் பண்ணிட்டு போயாச்சு? இன்னும் என்ன மிச்சம் இருக்கு?”

“எதுவும் சொல்லல தானு ஆனா அவர் குரலில் ஏதோ வலி இருந்தது”.

அக்காவை முறைத்து பார்த்தவள் “இவ்வளவு பட்டுமாக்கா அவரை நம்புற? உன்னுடைய காதலால மொத்த குடும்பமும் சிதைஞ்சு போச்சு. மிச்சம் இருக்கிறது நீயும் நானும் தான். இதுல அவருக்கு வேற கல்யாணம் வேற ஆகிடுச்சு. இன்னும் உனக்கு அவர் மேல நம்பிக்கையா?” என்றாள் வெறுப்புடன்.

தங்கையின் கேள்விகள் அவளது இதயத்தை தாக்க கண்ணீருடன் எழுந்தமர்ந்தவள் “அவரோட காதல் வேணா பொய்யா இருக்கலாம் தானு. ஆனா நான் உண்மையா தானே காதலிச்சேன். எனக்கு அந்த வலி இருக்கும் தானே?”

“அம்மா அப்பா போனதை விடவா இந்த வலி பெரிதாக இருந்துட போகுது?”

“தான்யா!”

“பின்ன என்ன அக்கா? உன்னுடைய காதல், கல்யாணம் அதன்பின் நடந்தவைகள் எல்லாவற்றையும் யோசிச்சு பார். ஆறு மாசம் ஆச்சு. இப்போ வரை உன்னை அந்த இடத்தில் விட்டுட்டுப் போனதற்கான விளக்கமும் இல்லை, நம்ம குடும்பத்தில் நடந்த இழப்பை பற்றிய விசாரணையும் இல்லை. இதுல இன்னொரு கல்யாணம் வேற. இப்போ திடீர்னு உன்னைக் கூப்பிட்டு பேச முயற்சி செஞ்ச உடனே நீயும் ஐயோ அவர் குரலில் வேதனை தெரியுதுன்னு சொல்ற, முட்டாளா இருக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்கு அக்கா” என்று விட்டாள்.

தங்கையின் பேச்சில் இருந்த கோவமும் உண்மையும் விளங்க அவளது கைகளைப் பற்றிக் கொண்டவள் “உண்மை தான் தானு. தப்பு தான். இனி என்ன சூழ்நிலை வந்தாலும் சித்தார்த் என் வாழ்க்கையில் இல்லை. போதும் இந்த காதலால் நாம பட்டது” என்று விட்டாள்.

அக்காவின் கண்களை துடைத்து விட்டவள் “தப்பா நினைச்சுக்காதே அக்கா. எனக்கு உன் மனசு புரியுது. ஆனா நம்மோட இந்த எமோஷனல் அட்டச்மென்ட்டை வைத்து தான் இந்த ஆண்கள் நம்மோட வாழ்க்கையில் விளையாடிடுறாங்க. நம்மோட முடிவுகள் ஒரு முறை தவறாக போகலாம். அதற்காக ஒவ்வொரு முறையும் நம்பி ஏமாற கூடாது”.

“சின்ன பெண்ணாக இருந்தாலும் உனக்கு இருக்கிற தெளிவு எனக்கு இல்லாமல் போயிடுச்சே”.

மெல்லிய சிரிப்புடன் “இது நீ எனக்கு கொடுத்தது தான் அக்கா. அம்மா எனக்கு சொல்லி கொடுத்ததை விட நீ எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் அதிகம்”.

அந்நேரம் உள்ளே வந்த வசந்தா “ரெண்டு பேருக்கும் பசியில்லையா? பேசிகிட்டே உட்கார்ந்திருக்கீங்க?”

“இல்ல பாட்டி ரொம்ப நாளைக்குப் பிறகு நானும் தான்யாவும் மனசு விட்டு பேசினோம் அது தான்”.

“ஒ...சரி சீக்கிரம் வந்து சாப்பிடுங்க. மாமா வரேன்னு போன் பண்ணினான். என்னவோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

இருவருக்கும் மாமா ஏன் வருகிறார் என்கிற யோசனை எழுந்தது. அதிலும் முக்கியமான விஷயம் என்ன பேசப் போகிறார் என்கிற கேள்வியும் இருந்தது. உணவருந்தி விட்டு இருவரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு மணி நேரம் கழித்து மாமா வந்து சேர்ந்தார்.

அவர் இத்தனை தடவை இங்கு வந்து போன போது ஒரு தடவை கூட மாமன் மனைவியோ, பிள்ளைகளோ வரவில்லை. அவர்களுக்கு எல்லாம் மாமா செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை. தேவை இல்லாத சுமையை தூக்கி சுமப்பதாக எந்நேரமும் சண்டை தான். அதை உணர்ந்திருந்த இரு பெண்களும் அவருக்கு தொந்திரவு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

மகனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த வசந்தா “என்ன முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன ராஜேந்திரா?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,826
1,984
113
“சொல்றேன் மா” என்றவர் வர்ஷினியை கூப்பிட்டு அருகே அமர வைத்துக் கொண்டு “உனக்கொரு நல்ல இடத்தில இருந்து மாப்பிள்ளை வந்திருக்கு வர்ஷும்மா. நம்ம குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சு கிட்டு அவங்களே கேட்ருக்காங்க” என்றார்.

அவர் என்னவோ பேசப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு பேரதிர்ச்சி. இதற்காகவா வந்திருக்கிறார்? இப்போது நான் என்ன பதில் சொல்ல என்று திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

வசந்தாவோ “நல்ல விஷயம் தான். மாப்பிள்ளை பையன் என்ன பண்றான்?”

“அவர் துணிக் கடை வச்சிருக்காரும்மா. டிகிரி படிச்சிருக்கார். அவங்கப்பா மாதிரி இந்த தொழிலில் அவருக்கு விருப்பம் அதனால லோன் போட்டு கடையை ஆரம்பிச்சு நல்லா நடத்திகிட்டு இருக்கார். நல்ல பேர் அவருக்கு தொழிலில்” என்றார்.

வர்ஷினிக்கோ காது செவிடாகி இருந்தது. இப்படியொரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. பேயறைந்த முகத்துடன் தங்கையைப் பார்த்தாள். அவளுக்கும் அதிர்ச்சி தான்.

“நல்லது நடக்கட்டும் ராஜேந்திரா. என்ன தான் இருந்தாலும் நான் எத்தனை நாளைக்கு புள்ளைங்களுக்கு துணையா இருக்க முடியும். ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்திட்டா நிம்மதியா இருக்கும்” என்றார்.

“பாட்டி! என்ன இது! அக்கா இன்னும் படிப்பே முடிக்கல”.

அவளை திரும்பி முறைத்த வசந்தா “உங்களுக்காக மாமா இவ்வளவு தூரம் முன்னே நின்னு செய்றேன்னு சொல்றதே பெருசு. நல்ல இடமா கல்யாணம் செஞ்சுகிட்டு போயிட்டா அப்புறம் என்னத்துக்கு படிப்புன்னு கேட்கிறேன்?” என்றார் கோபமாக.

அதுவரை திகைத்துப் போய் அமர்ந்திருந்தவள் பாட்டியின் பேச்சில் சுதாரித்துக் கொண்டு “என்னை தப்பா நினைச்சுக்காதீங்க மாமா. இப்போ என்னால கல்யாணம் செய்துக்க முடியாது. ஒரு டிகிரியாவது வேணும் எனக்கு” என்று விட்டாள்.

தங்கை மகளை பார்த்தவர் “நீ சொல்றதெல்லாம் சரிம்மா. உங்களுக்கே தெரியும் நான் என் குடும்பத்து எதிர்ப்பை மீறி தான் இதெல்லாம் செய்துகிட்டு இருக்கேன். வயசு பொண்ணுங்களை தனியாவும் விட முடியாது. பாட்டியை உங்களுக்கு துணையாக வைத்தாலும் என்னால அங்கே நிம்மதியா இருக்க முடியலம்மா”.

“இருந்தாலும் மாமா...”

“எத்தனை நாளைக்கு பாட்டியை நம்பி இருக்க முடியும் நீங்க? இங்கே உங்களுக்கு தெரிஞ்சவங்க அக்கம் பக்கத்தில் இருந்தாலும் பாதுகாப்பு இல்லாம இருப்பதை தெரிஞ்சுகிட்டு யாராவது வம்பு பண்ணினா என்ன செய்வீங்க?”.

அவரின் கேள்விகள் சரியானதாக தோன்றினாலும், அவளால் யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏதாவது செய்ய வேண்டும் என்கிற யோசனை எழுந்தது. ஆனால் பாட்டியோ திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று யோசித்தார்.

“மாமா! நான் ஒன்னு சொல்றேன் கேட்பீங்களா?”

“சொல்லும்மா”.

“இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு எங்க ரெண்டு பேரையும் ஹாஸ்டலில் சேர்த்து விட்டுடுங்க. எல்லோரும் பயமில்லாம இருக்கலாம்”.

வசந்தா அவசரமாக “அதெல்லாம் வேண்டாம்! சின்னவளை மட்டும் ஹாஸ்டலில் சேர்த்திட்டு இவளுக்கு அந்த மாப்பிள்ளையை பேசி முடிச்சிடலாம்” என்றார்.

மாமாவோ அவளது பதிலுக்காக காத்திருந்தார்.

“ப்ளீஸ் மாமா! என்னால இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது. இதை இதோட விட்டுடுங்க. நான் சொன்ன மாதிரி ஹாஸ்டல் பற்றி யோசிங்க மாமா”.

அவருக்குமே படிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மனமில்லை என்றாலும் தனது பொறுப்பை முடித்து விடலாம் என்கிற எண்ணத்தில் தான் பேச வந்தது. அவள் சொன்ன யோசனை நல்லதாக தோன்ற “சரிம்மா! நீ சொன்ன மாதிரியே செய்திடலாம்” என்றார்.

அதைக் கேட்டதும் “என்ன ராஜேந்திரா அவ தான் சொல்றான்னு நீயும் ஒத்துக்கிற. நல்ல இடமா வரும் போது முடிச்சிடனும். அவ இஷ்டத்துக்கு விடாதே’ என்று கோபமாக பேசினார்.

“நீ சும்மா இரும்மா. இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு படிப்பு அவசியம். நான் அவளோட விருப்பத்தை தெரிஞ்சுகிட்டு போக தான் வந்தேன். கூடிய சீக்கிரம் ஹாஸ்டல் பார்த்து ரெண்டு பேரையும் சேர்த்து விட்டுடுறேன். ரெண்டு பேரும் நல்லா படிங்க. அது தான் தங்கச்சி மாப்பிள்ளை ரெண்டு பேருடைய ஆத்மாவை சாந்தி அடைய வைக்கும்” என்று எழுந்து கொண்டார்.

தான்யா ஓடிச் சென்று அவரின் கைகளைப் பற்றிக் கொண்டவள் “தேங்க்ஸ் மாமா! எங்களுக்குன்னு யாருமில்லேன்னு நினைக்க வைக்காம உங்க குடும்பத்தை எதிர்த்துகிட்டு எங்களுக்காக செய்றீங்களே. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல”.

அவளது தலையை வருடிக் கொடுத்தவர் “என்னடா நீ இப்படி சொல்லிட்ட. சின்ன பிள்ளையா ஒழுங்கா படிச்சு நல்ல வேலைக்குப் போ. அது தான் நீ எங்களுக்கு செய்கிற நல்லது” என்றவர் வர்ஷினியிடம் “நீ எதைப் பற்றியும் கவலைப்படாம படிம்மா. மாமா நான் இருக்கேன்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பாட்டி தான் அவர் சென்றதும் முகத்தை ‘உர்’ என்று வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார். அவரது வாயோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

‘அறிவில்லாம தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளை படின்னு சொல்லிட்டு போறான். வந்த மாப்பிள்ளை பிடிச்சு போட்டு கல்யாணத்தை பண்ணாம’ என்று திட்டிக் கொண்டிருந்தார்.

அவர் அருகே சென்று அமர்ந்த தான்யா ‘அவர் என்ன கோழியா பாட்டி பிடிச்சு அமுக்கிறதுக்கு?” என்றாள் கிண்டலாக.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,826
1,984
113
“போட்டேன்னா பாரு!”

பஜ்ரங் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்துவிட்டு பாட்டிக்கு போன் செய்து சொல்லி விட்டான். அதை எல்லாம் கேட்டதும் அவரின் முகம் வேதனை அடைந்தது. தன் பேரனை காதலித்த ஒரே காரணத்திற்காக அந்த குடும்பமே சிதைந்து போய் விட்டதே என்று வருந்தினார். சற்று நேரம் யோசனையுடன் இருந்தவர் சில பல முடிவுகளை எடுத்து விட்டு பஜ்ரங்கை அழைத்து தான் சொன்னவற்றை செய்ய சொன்னார்.

“நல்ல ஹாஸ்டலா பார்த்து அவருக்கு யார் மூலமாகவாவது சொல்லுங்க. அவங்க கட்டுகிற பணத்தை தவிர மீதியை நாம கட்டுவோம்.. ஆனா அவங்களுக்கு எக்காரணம் கொண்டு அது தெரிய கூடாது” என்று விட்டார்.

“ஓகே மேம்!”

அவனிடம் பேசி விட்டு கண் மூடி நாற்காலியில் சாய்ந்து விட்டார். அப்போது அவரது மடியில் யாரோ தலை வைத்து படுப்பது தெரிந்ததும் புன்னகையுடன் அவனது தலையை வருட ஆரம்பித்தார். அப்போது அவனது கண்ணீரால் அவரது மடி நனைந்து போனது. வருடிக் கொண்டிருந்த கைகள் அப்படியே நிற்க ‘சித்தார்த்! என்னாச்சு? ஏன் இந்த அழுகை?” என்றார் அதிர்ச்சியுடன்.

மெல்ல நிமிர்ந்து பார்த்தவன் “நான் யார் பாட்டி?” என்றான் நேருக்கு நேர்.

அவனது கேள்வியில் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் “என்ன கேட்கிற சித்து?”

“நான் உங்க பேரனா?”

அவனது கேள்வி அவரது நடுமண்டையில் ஆணியை அடிக்க “என்ன...என்ன கேட்கிற? எதுக்கு இந்த சந்தேகம் இப்போ?” என்றார் நடுக்கத்துடன்.

அவரது கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டவன் “எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு பாட்டி. நான் பிம்லா தேவியின் மகன் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு” என்றான் கலங்கிய கண்களுடன்.

அதுவரை கலக்கத்துடன் இருந்தவர் சற்றே நிமிர்வுடன் “நீ பிம்லா தேவிக்கு தான் மகன் இல்லை. நீரஜ் மல்ஹோத்ரா என்கிற என் பிள்ளையின் மகன் தான் . என்னுடைய ஒரே பேரன்” என்றார் அழுத்தமாக.

அவரது பதிலில் சற்றே ஆசுவாசம் அடைந்தாலும் “முறையற்ற பிள்ளை தானே” என்றான் கசப்பான குரலில்.

அவனை முறைத்தவர் “யார் சொன்னார்கள் அப்படி? நீரஜின் முதல் மனைவியின் மகன் நீ”.

“பாட்டி!”

“ம்ம்...உன் அம்மா சாகஷி நீரஜின் காதல் மனைவி. அவர்கள் இருவருக்கும் தான் முதலில் திருமணம் நடந்தது. அவர்களின் திருமணத்தை முறையாக ரெஜிஸ்டர் செய்யாதது தான் அவர்களின் தவறாக போனது. அதை உன் தாத்தா தனது வசதிக்காக உபயோகித்துக் கொண்டார். சாதாரண வீட்டுப் பெண்ணை மருமகளாக ஏற்க மனமில்லாமல் இந்த பேயை என் மகனுக்கு கட்டி வைத்தார். உன்னை உன் அம்மா சுமந்த போது இவளும் கர்ப்பமாக இருந்தாள். இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவம் நடந்தது. ஆனால் இவளின் பிள்ளை பிரசவத்தில் இறந்து போய் விட, பிழைத்திருந்த உன்னை இவளிடம் வைத்துவிட்டு இறந்த பிள்ளையை சாக்ஷியிடம் வைத்து விட்டார். இந்த பாவத்திற்கு தான் பின்னாளில் பிம்லாவால் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

அவர் சொன்னதை கேட்க-கேட்க அவனது மனம் துவண்டு போனது. இத்தனை காலம் தாய் என்று நினைத்து இருந்தவர் யாரோ என்று சொல்லும் போது மனம் துடித்துப் போனது.

பேரனிடம் சொல்லக் கூடிய விஷயம் இல்லை என்றாலும் சொல்ல வேண்டும் என்கிற தயக்கத்துடன் “உன் தாத்தா செய்த பாவங்களில் மகனுக்கு கட்டாயமாக திருமணத்தை முடித்து வைத்து அவளுடன் வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தினார். அது தான் கொடுமை. நீரஜ் அந்த சமயத்தில் தான் மிகவும் மனம் உடைந்து போனான். தன் மனைவிக்கு செய்யும் துரோகமாகவே எண்ணி பைத்தியக்காரன் போல திரிந்தான்” என்றார்.

“ஏன் பாட்டி என்னால் முடியாது என்று உதறி சென்றிருக்கலாமே?”

அவனை கூர்மையாகப் பார்த்து “நீ அதை செய்தாயா? உன்னால் ஏன் முடியவில்லை?”

“பாட்டி...அது..”

“உன்னை விட மோசமான சூழ்நிலையில் இருந்தான் நீரஜ். அதோட அவனது மாமனாரும், மச்சான்களும் அவனை முண்ட விடாமல் இழுத்துப் பிடித்திருந்தனர். இப்போது உன்னை வைத்திருப்பதை போல”.

“ம்ம்...அம்மா...அம்மா எங்கே இருக்காங்க?”

நீண்ட பெருமூச்சுடன் “பிள்ளையை பறி கொடுத்திட்டு பைத்தியமாக ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள். இந்த பாவமெல்லாம் தான் என் கணவரை கடைசி நேரத்தில் தவிக்க வைத்தது. பிம்லாவையும், அவள் குடும்பத்தையும் தெரிந்து கொண்ட பின்னர் தான் சொத்துக்களை எல்லாம் உன் பெயரில் எழுதி வைத்துவிட்டு அவர்களுக்கு ஒரு செக்கும் வைத்துவிட்டு போனார்”.

“நான் என் அம்மாவை பார்க்கணும் பாட்டி”.

அவனை கூர்ந்து பார்த்தவர் “முடியாது! நீ முதலில் பிம்லாவையும் அவளது குடும்பத்தையும் உன் கைக்குள் கொண்டு வா. கேஷ்வியுடனான உனது திருமண வாழ்க்கைக்கு ஒரு முடிவு கொண்டு வந்த பின்னர் உன் அம்மாவை பார்க்க அனுமதி தருகிறேன்”.

அதுவரை இருந்த தயக்கம், பயம் எல்லாம் போக மனதிற்குள் ஒரு வெறி எழுந்தது. எச்சில் என்று தன்னை காயப்படுத்திய அவர்கள் அனைவரையும் ஓட வைக்க வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தான்.

அந்நேரம் அவனைத் தேடி கேஷ்வி அங்கே வந்தாள். நேரே அவனிடம் வந்தவள் “ஹாய் டார்லிங்! உங்களை எங்கெல்லாம் தேடுவது?” என்று அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

உள்ளுக்குள் எழுந்த அருவெறுப்பை முகத்தில் காட்டாதவாறு “ஹாய் ஸ்வீட்டி! நான் பிரெஷ்அப் ஆகிட்டு வரேன்’ என்று கண் சிமிட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவனது நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்த பாட்டியின் இதழ்களில் மெல்லிய புன்னகை. பேரன் புத்திசாலி தான். என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்து விட்டான் என்பதை அறிந்து கொண்டார்.