Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 15 | SudhaRaviNovels

அத்தியாயம் - 15

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 15

மாமா வந்து சென்ற பிறகு எப்பவும் போல நாட்கள் அதே வேகத்தோடு தான் சென்றது. புதிதாக எந்த பிரச்னையும் இன்றி சாதரணமாக தான் சென்றது. மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் நேரம் மீண்டும் மாமா வந்து நின்றார்.

அவரை பார்த்ததும் அக்கா தங்கை இருவருக்கும் உள்ளுக்குள் பயம் எழ ஆரம்பித்தது. நிச்சயம் ஏதோவொரு பிரச்சனையுடன் தான் அவர் வந்திருக்கிறார் என்று எண்ணினார்கள்.

“என்னப்பா திடீர்னு வந்திருக்க? அந்த மாப்பிள்ளை வீட்டுல எதுவும் பிரச்சனையா?” என்றார் வசந்தா.

சிரித்த முகத்துடன் “அதெல்லாம் இல்லம்மா. இது வேற. தங்கச்சி லான்ட் ஒன்னு துடியலூர் பக்கம் இருக்குதில்ல அதை கேட்டு பார்ட்டி ஒன்னு வந்திருக்கு. நல்ல விலைக்கு கேட்கிறாங்க. அதை முடிச்சு விட்டு பசங்களுக்கு பாங்கில் பணத்தை போட்டு விட்டுடலாமேன்னு தான் கேட்க வந்தேன்” என்றார்.

அதுவரை இழுத்துப் பிடித்திருந்த சுவாசத்தை வெளியே விட்டவர்கள் “எங்களை கேட்கணுமா மாமா? உங்களுக்கு சரின்னு தோணுச்சுன்னா பண்ணிடுங்க” என்று விட்டாள் வர்ஷினி.

அதை கேட்டதும் சந்தோஷத்தோடு சிரித்தவர் தனது பையிலிருந்து ஒரு சில காகிதங்களை எடுத்து வைத்து “இதை படிச்சு பார்த்திட்டு கையெழுத்துப் போடுங்கம்மா” என்றார் இருவரையும்.

மாமா நீட்டிய காகிதங்களை வாங்கிக் கொண்ட வர்ஷினி சிலவற்றை படித்து பார்த்துவிட்டு ஒவ்வொன்றாக கையெழுத்துப் போட ஆரம்பித்தாள். அடுத்து தான்யாவும் கையெழுத்து போட்டு மாமாவிடம் கொடுத்து விட்டாள்.

“லான்ட் அவங்க பேரில் ரெஜிஸ்டர் பண்ண ஒரு நாள் ரெஜிஸ்டறார் ஆபிஸ் போக வேண்டி இருக்கும். நான் எப்போன்னு சொல்றேன்” என்று எழுந்து கொண்டார்.

“சரி மாமா” என்றனர் இருவரும்.

பாட்டியோ “ஏன் ராஜேந்திரா அந்த மாப்பிள்ளை வீட்டில் மறுபடியும் பேசினாங்களா?” என்றார்.

அக்கா பெண்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “இல்லம்மா நானே அவங்க கிட்ட இப்போ கல்யாணம் பண்ணலன்னு சொல்லிட்டேன்” என்றார்.

அதைக் கேட்டு கடுப்பான வசந்தா “என்னமோ போ நீயும் இவளுங்களோட சேர்ந்து ஆடு” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

வர்ஷினியோ மாமனின் கைகளைப் பற்றிக் கொண்டு “நன்றி மாமா!” என்றாள்.

அவளது கைகளை விலக்கி விட்டு “வாழ்க்கையில் எல்லாவற்றிலும் கவனமா இருக்கணும் வர்ஷு” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறி விட்டார்.

அவர் ஏன் அப்படி சொன்னார் என்று புரியாமல் திகைத்து நின்றவளை பிடித்து உலுக்கிய தான்யா “என்னக்கா?” என்றாள்.

“மாமா ஏன் அப்படி சொல்லிட்டுப் போனார் தான்யா?”

“ம்ச்...நாம தனியா இருக்கோம். கவனமா இருக்கணும்னு சொல்லிட்டு போறார் அக்கா”.

“எதுக்கு என் கிட்ட மட்டும் சொல்லிட்டுப் போறார்? என் விஷயம் எதுவும் தெரிஞ்சிருக்குமோ?’

“அக்கா! நீ தானே பெரியவ அதனால சொல்லிட்டுப் போறார். தேவையில்லாம நினைக்காம காலேஜிற்கு கிளம்பு”.

மனதிற்குள் எழுந்த குழப்பத்துடனேயே கல்லூரிக்கு கிளம்பி வந்தவளின் பார்வை அயர்ன் கடைகாரர் அருகே நின்றிருந்த பஜ்ரங் மீது படிந்தது. சமீப நாட்களாக இந்த ஆள் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனித்திருந்தாள். நிச்சயம் அது தங்களின் வீட்டை நோட்டம் விட தான் என்பது தெரிந்தது. ஆனால் யாருக்காக இதை செய்கிறார் என்று புரியவில்லை. அவரை பார்த்தால் அவளுக்கு பயம் வரவில்லை. ஏனோ அவர் தங்களுக்கு காவலாக இருக்கிறார் என்கிற எண்ணமே எழுந்தது.

தான்யா வருவதற்கு நேரம் எடுக்க, ஒரு நிமிடம் யோசித்தவள் சட்டென்று முடிவெடுத்து அவர் முன்னே சென்று நின்றாள்.

அவள் தன் முன்னே வந்து நின்றதும் உள்ளுக்குள் திடுக்கிட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாது இதழில் எழுந்த புன்னகையுடன் எதுவும் பேசாமல் நின்றார்.

அவளோ ஆராயும் பார்வையுடன் “நீங்க யார் சொல்லி இங்கே இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’ என்று நேரடியாக கேட்டாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவளின் தைரியத்தை மனதிற்குள் பாராட்டி விட்டு போனை எடுத்து சித்தார்த்தின் பாட்டிக்கு அழைத்து விட்டு போனை அவாள் கையில் கொடுத்தார்.

“ஹலோ” என்று அந்தப் பக்கம் வயதான பெண்மணி குரல் கேட்டதும் யோசனையுடன் அவளும் ஹலோ சொல்லி விட்டு காத்திருந்தாள்.

அந்தப் பக்கம் ஒரு நிமிடம் பேரமைதிக்கு பின் “ஹவ் ஆர் யூ பேட்டி?” என்றார்.

“பைன் மேம்! நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் உன்னுடைய சித்தார்த்தின் பாட்டி”.

“வாட்! ப்ளீஸ்! எனக்கு அப்படி யாரையும் தெரியாது. இவரை இங்கிருந்து போக சொல்லுங்க”.

“பேட்டி! உன்னுடைய இழப்புகளுக்காக நான் மிகவும் வருத்தப்படுறேன். பட் தயவு செய்து சித்தார்த்தை வெறுத்து விடாதே. அவன் உனக்கு மட்டும் தான் கணவன்”.

ஒரு நிமிடம் மனதிற்குள் எழுந்த கோபத்தை அடக்க போராடியவள் பின்னர் ஒரு முடிவுடன் “என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு காதல். அதனால இழக்க கூடாதவை எல்லாவற்றையும் இழந்துட்டேன். சித்தார்த்தோ அவரை சார்த்தவர்களையோ சந்திப்பதை வெறுக்கிறேன். எனக்கு எந்த உதவியோ, பாதுகாப்போ உங்களிடம் இருந்தோ உங்கள் பேரனிடம் இருந்தோ தேவை இல்லை. என்னை மன்னிச்சிடுங்க. இனிமே இவர் இங்கே இருக்க கூடாது” என்று சொல்லிவிட்டு அவர் கையில் போனை கொடுத்து விட்டு சென்று விட்டாள்.

பஜ்ரங் அவள் பேசியதை கேட்டு வருத்தப்பட்டுக் கொண்டே போனை வாங்கி காதில் வைத்தார்.

நீண்ட பெருமூச்சுடன் “அவள் சொன்னபடி நீ அங்கிருந்து கிளம்பிடு பஜ்ரங். ஆனா உனக்கு கோயம்பதூரில் வேலை இருக்கு. கேஷ்வி அங்கே வரப் போறா. அவளை உன் கண்காணிப்பில் வைத்துக் கொள். நிச்சயம் வர்ஷினிக்கு அவள் பிரச்சனை கொடுப்பாள்” என்றார்.

அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவர் மெல்ல அங்கிருந்து கிளம்பினார். தங்கையுடன் கிளம்பியவள் அவர் அங்கிருந்து செல்வதை பார்த்து நிம்மதி அடைந்தாள். ஆனால் மனமோ எதற்கு சித்தார்த்தின் பாட்டி தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்தார் என்று யோசித்தது. ஒருவேளை இது சித்தார்த்தின் வேலையோ என்று எண்ணினாள். அதே சமயம் அன்று வீதியில் விட்டு விட்டு சென்றவன் இதுவரை ஒரு அதைப் பற்றி என்னவென்று கேட்க கூட இல்லை. இதில் என் சித்தார்த்தாம் என்று மனதிற்குள் எரிச்சலடைந்தாள்.

அதே எண்ணவோட்டத்துடன் கல்லூரியில் நுழைந்தவளை எதிர் கொண்டான் சரவணன். அவனை பார்ததும் மேலும் கோபம் எழ “என்ன?” என்றாள்.

“உன் கிட்ட பேசணும் வர்ஷினி”.

“உங்க பிரெண்ட் பத்தி பேசுவதாக இருந்தால் நான் தயாராக இல்லை”.

அவள் அப்படி சொன்னதுமே தயங்கியவன் “நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறமா முடிவு பண்ணலாமே?”

“முடியாது”.

“அவன் ஏதோ பெரிய சிக்கலில் இருக்கான் வர்ஷினி” என்றவனை கையை காட்டி இடைமறித்தவள் “போதும்! உங்க பிரெண்ட்ஷிப்பை உங்களோட வச்சுக்கோங்க. நான் எதையும் கேட்க தயாரில்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

சரவணன் அப்படியே திகைத்து நின்று விட்டான். அவளது கோபம் தவறில்லை என்றாலும் தான் சொல்வதை ஒரு நிமிடம் நின்று கேட்டிருக்கலாம் என்று தோன்றியது.

அதே நேரம் குஜராத்தில் இருந்து சென்னைக்கு ப்ளைட் ஏறி இருந்தாள் கேஷ்வி. அவளது எண்ணம் முழுவதும் நிறைந்திருந்தது வர்ஷினி தான். அவளுக்கு தேவையான தகவல்கள் அனைத்தையும் திரட்டி கொடுத்திருந்தார் தாதாஜி. என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் அவளுக்கு பக்கவாக திட்டமிட்டு கொடுத்திருந்தார். அதனால் ஒருவித திமிருடன் தான் பயணித்துக் கொண்டிருந்தாள்.

தனது கம்பனியில் சில பல ஏற்பாடுகளை செய்து வைத்துவிட்டு சித்தார்த்தும் ஹைதராபாத் செல்லும் விமானத்தில் ஏறி இருந்தான். அவர்களின் பெரிய பிசினெஸ் டீல் முடிப்பதற்காக அங்கு செல்வதாக ஏற்பாடு. அதனால் அவன் அங்கு கிளம்பி இருந்தான். சித்தார்த் ஹைதராபாத் கிளம்பதில் இருந்து அவனை தொடர ஆரம்பித்தார்கள் தினுவின் ஆட்கள்.

அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அவனை எந்த இடத்திலும் மிஸ் செய்து விடக் கூடாது என்று. தன்னை கண்காணிப்பவர்களை அறிந்து கொண்டவன் இதழில் எழுந்த சிரிப்புடனே ஹோட்டல் அறையில் நுழைந்து கொண்டான்.

அவனை தொடர்ந்தவர்கள் ஹோட்டலை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து நின்றனர். ஹோட்டலின் ஜன்னல் வழியே அனைத்தையும் கவனித்துக் கொண்டான். பின்னர் போனை எடுத்து ஒரு சில அழைப்புகளை மேற்கொண்டான். அவற்றை முடித்து விட்டு நிம்மதியாக படுக்கையில் விழுந்தான். காவலுக்கு நின்றவர்கள் மிகுந்த கவனத்துடன் ஹோட்டலை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஹோட்டலில் இருந்து ஒரு பிரான்க் கால் காவல் நிலையத்திற்கு சென்றது. அந்த ஹோட்டலில் பாம் வைக்கப்பட்டிருப்பதாக. அதை கேட்டதும் ஹைதராபாத் போலீஸ் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கினர். அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஹோட்டல் சுற்றி வளைக்கப்பட்டது. பாம் ஸ்குவாட் வந்திறங்கினார்கள். அதே சமயம் ஹோட்டலை சுற்றி இருந்தவர்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காவலுக்கு இருந்தவர்களோ தவிப்புடன் ஹோட்டலின் அருகே செல்ல முயற்ச்சிக்க, போலீசாரால் அவர்கள் அனைவரும் விரட்டப்பட்டனர்.

அதே சமயம் சித்தார்த்தின் நண்பனான போலீஸ் அதிகாரி ஷ்யாம் சுந்தர் அவன் அறையில் நின்றிருந்தான். இருவரும் வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டிருந்தனர். ஷ்யாமோ நண்பனை முறைத்து “என்னடா பண்ணி வச்சிருக்க? உன்னால நானும் பிரச்சனையில் மாட்டிக்குவேண்டா” என்றான்.

அவனது தோளில் தட்டி “டோன்ட் வொர்ரி என் ஆளு சரண்டர் ஆகிடுவான்” என்றான் சிரிப்புடன்.

“சரி நீ எப்படி கிளம்ப போற?”

“ஒன் மினிட்” என்றவன் தன் மொபைலை எடுத்து வந்து அதில் இருந்த போட்டோக்களை அவனிடம் காண்பித்து ‘இதுகளை எல்லாம் மடக்கி வை. நான் என் வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன்” என்றான்.

அவனது மொபைலில் இருந்து அனைத்தையும் தனது மொபைலுக்கு மாற்றிக் கொண்டவன் “டன்! நான் முடிச்சிடுறேன். நீயும் சக்சஸ்புல்லாக உன்னுடைய மனைவியை கூட்டிட்டு வா’ என்றான் சிரிப்புடன்.

அதைக் கேட்டு சிரித்த சித்தார்த் “குற்றவாளிகளை கூட பிடிச்சிடலாம் அவளை கொண்டு வரது ரொம்ப கஷ்டம்” என்றான்.

அவனது முதுகில் தட்டி “நாங்க எல்லாம் இருக்கோம் சித்து! உனக்கு எப்போ எந்த உதவி வேண்டும் என்றாலும் தயங்காம கேளு. உங்க ஊரிலேயே என் பிரெண்ட் சிவதாஸ் இருக்கான். அவன் கிட்ட சொல்லிட்டா போதும் உன் தாத்தா குடும்பத்தை மொத்தமா சிக்க வச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான்”.

“ப்ளீஸ்! அந்த ஆளை என் தாத்தான்னு சொல்லாதே. எதுக்கும் அந்த சிவதாஸ் நம்பரை எனக்கு கொடு தேவைப்படும்”.

“ம்ம்...அவன் கிட்ட பேசிட்டு கொடுக்கிறேன் சித்து. அவன் ஒரு மாதிரியான ஆள் பேசிட்டு கொடுத்தா நல்லது”.

“ஓகே...நீ எல்லாவற்றையும் கிளியர் பண்ணு நான் கிளம்பிடுறேன்”.

ஷ்யாம் அங்கிருந்து கிளம்பி சித்தார்த் கொடுத்திருந்த போட்டோவை வைத்து அனைத்து ஆட்களையும் பிடித்து கொண்டு சென்று விட்டான். அதன் பின்னர் ஹோட்டலை விட்டுக் கிளம்பிய சித்தார்த் சென்னை செல்லும் விமானத்தில் ஏறினான். ஒரு நிமிடத்தையும் வேஸ்ட் செய்யாமல் கோயம்பத்தூரில் அடுத்த-அடுத்த ஏற்பாடுகளை செய்து கொண்டான்.

கேஷ்வி சென்னையில் இருந்து கோயம்பத்தூர் சென்று இறங்கி இருந்தாள். தாதாஜியின் ஏற்பாட்டின்படி அவளுக்கு தங்குவதற்கு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் மறுநாள் நடக்க வேண்டிய வேலைகளை தாதாஜியின் ஆட்களிடம் முடிவு செய்து கொண்டு அமைதியாக கண் மூடி அமர்ந்து விட்டாள்.

மறுநாள் விடியலில் நடக்க இருக்கும் சம்பவங்களைப் பற்றி அறியாமல் அக்காவும், தங்கையும் தங்களுக்குள் பேசி சிரித்தபடி படுத்திருந்தனர்.
 
  • Like
Reactions: Sumathi mathi