அத்தியாயம் -26

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 26

காதலுமில்லாமல் ஈர்ப்புமில்லாமல் சூழ்நிலைக்காக ஒரு திருமணம் நடத்த ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. மணப்பெண்ணை அலங்கரிக்க தோழிகளுமில்லை, சுற்றி நின்று ஆர்ப்பரிக்க சொந்தங்களுமில்லை. அவன் கொடுத்த புடவையை அணிந்து கொண்டு ஆபரணங்களை எல்லாம் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சிலவற்றை மட்டும் அணிந்து கொண்டாள் சக்தி.

தலையை பின்னி பூ வைத்து, முகத்தில் லேசாக பவுடர் போட்டு கண்களில் மை தீட்டி போட்டும் வைத்துக் கொண்டு காத்திருந்தாள். அது என்ன மாதிரியான மனநிலை என்றே தெரியவில்லை.

அவள் அறிந்து இப்படியொரு திருமணத்தை பார்த்ததில்லை. பெயருக்கு கூட அங்கு பெண்கள் இல்லை. வீட்டை சுற்றிலும் தடிதடியாக காத்தவராயன் போல ஆட்கள் மட்டுமே நின்றனர். வாழை மரங்கள் வாயிலில் கட்டப்பட்டிருக்கவில்லை, பட்டாடை உடுத்திய பெண் பிள்ளைகள் எங்கும் நடமாடவில்லை. ஸ்பீக்கரில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே ஒலிக்கவில்லை. மொத்தத்தில் திருமண வீட்டிற்கான எந்தவித நிகழ்வும் அங்கிருக்கவில்லை.

ஆனால் எங்கிருந்தோ இரு ஐயர்கள் வரவழைக்கப்பட்டு நடுக்கூடத்தில் ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டுக் கொண்டிருந்தன. கத்தியும், ரத்தமும் மட்டுமே பார்த்த அந்த வீடு முதன்முறையாக மந்திரங்களின் ஒலியில் குளித்துக் கொண்டிருந்தது.

லேசாக அறைக் கதவு தட்டப்பட, மெல்ல எழுந்து சென்று திறந்தாள். அங்கு கார்த்தி அவளை மணவறைக்கு வரும்படி கூறினான். எதுவும் கூறாமல் தலையசைத்து விட்டு மெல்ல அடியெடுத்து மணவறையை நோக்கி நடந்தவளின் மனம் கலங்கி தவித்து அழுது கொண்டிருந்தது.

‘அண்ணா! நீ எங்கே இருக்க? நீ இருந்திருந்தா இப்படியொரு திருமணத்தை அனுமதித்திருப்பியா? உன்னை தேடி வந்த நான் எங்கே வந்து நிற்கிறேன் பார்! உனக்கு என்னாச்சு? ஏன் எங்களை எல்லாம் தவிக்க விட்டு இப்படி அமைதியா எங்கேயோ இருக்க? எப்படியாவது வந்துடு அண்ணா. நான் உன் பின்னாடியே ஓடி வந்துடுறேன். நம்ம கிராமத்துக்கே போய் நிம்மதியா இருக்கலாம்’.

எத்தனை மெதுவாக நடந்தாலும் மணவறை அருகே சீக்கிரமே சென்று விட்டாள். அவள் யோசனையுடனே நிற்பதை கண்ட ஐயர் “உட்காரும்மா” என்றார். அவரது குரலில் சுயத்திற்கு வந்தவள் அவனை நிமிர்ந்தும் பாராது தலையை குனிந்தபடியே அமர்ந்தாள்.

அவளது மனதின் பாதையை உணர்ந்து கொண்ட கேசவன் அமைதியாக ஐயர் சொன்னபடி செய்து கொண்டிருந்தான். சற்று நேரத்தில் மங்கள நானை அவன் கையில் கொடுத்து “கட்டுங்கோ” என்றார்.

மங்கள வாத்தியங்கள் ஒலிக்காமல் பெற்றவர்களின் அன்பான கண்ணீர் இல்லாமல் கேசவனின் அடியாட்களின் முன்பு அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.

அவளது கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் அவன் கைகளை நினைத்ததுச் சென்றது. அதை கவனித்த ஒருவன் “அண்ணே! அண்ணி அழுவுது” என்றான்.

அதை கேட்டு அவளது முகவாயை நிமிர்த்தி அவளது கண்களோடு தனது கண்களை கலக்க விட்டவன் “இந்த நிமிஷத்திலிருந்து இந்த கேசவன் உன்னுடையவன். நீ எதற்காகவும் அழக் கூடாது. கேசவனோட பொண்டாட்டி தைரியமா இருக்கணும்” என்றான் ஆழ்ந்த குரலில்.

மிரட்சியான பார்வையுடன் சுற்றி இருப்பவர்களை பார்த்துவிட்டு மெல்ல தலையசைத்து ஒப்புக் கொண்டாள்.

அப்போது குறும்புக்கார அடியாள் ஒருவன் “அண்ணே! இந்த இங்கிலீஷ் கண்ணாலத்துல எல்லாம் கண்ணாலம் முடிஞ்சவுடனே கிஸ் அடிப்பாங்களே அதெல்லாம் கிடையாதா?” என்றான் சத்தமாக.

அதை கேட்டதும் சுற்றி நின்றவர்கள் கொல்லென்று சிரிக்க, சக்தியின் மனமோ ‘ஐயோ! இவன் குரங்கு மூஞ்சியை தூக்கிகிட்டு வந்துட போறான்’ என்று பயந்தே போனாள்.

கார்த்திக்கும் சிரித்தபடி “டேய்! போங்கடா! சக்தி பயந்துட போகுது! கிளம்புங்க போய் பிரியாணியை சாப்பிடுங்க” என்று விரட்டினான்.

அதே நேரம் அமைச்சருக்கு கேசவனின் திருமண விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவன் மீது ஏற்கனவே கடுப்பில் இருந்தவர் அடிபட்ட புலியை போன்று குறுக்கும் நெடுக்கும் கோபத்துடன் நடந்து கொண்டிருந்தார்.

“நல்லா தெரியுமாடா? கேசவனா கல்யாணம் பண்ணி இருக்கான்?”

“ஆமாம் சார்!”

முகத்தில் அத்தனை ரௌத்திரம். உள்மனமோ ‘நான் இங்கே அந்த டாகுமெண்ட்டை தேடி நாய் மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன். உனக்கு இந்த நேரத்தில் மஜா கேட்குதா?’ என்று அவனை வறுதேடுத்துக் கொண்டிருந்தார்.

“அந்த பொண்ணு எந்த குப்பத்தை சேர்ந்தவ?”

“குப்பம் இல்லைங்க. டாகுமென்ட் எடுத்தான்னு நடு ரோட்டில் குத்தி போட்டானே அவன் தங்கச்சி. பொண்ணு சும்மா தளதளன்னு இருக்கு சார்”.

“என்ன! அவன் தங்கச்சியா?”

“ஆமாம் சார்!”

அவன் சொன்ன செய்தியை நன்றாக உள்வாங்கி கொண்டவர் சற்று நேரம் யோசனையுடன் நடந்தவர் சடாரென்று நின்று “டேய்! அந்த பொண்ணுக்கும் டாகுமென்ட்டுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு. அது தான் பொண்ணுங்க பக்கமே திரும்பாதவன் கட்டி இருக்கான். உடனே அந்த பொண்ணோட கிராமத்து வீட்டுக்கு போய் தேட ஆள் ஏற்பாடு பண்ணுங்கடா” என்றார் வெறியுடன்.

அந்நேரம் அவரது போன் அடிக்க, செகரட்டரி எடுத்து பேசிவிட்டு “சார் லைனில் இருக்கார்” என்று பவ்யமாக நீட்டினான்.

தன்னுடைய கோபத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு “சொல்லுங்க” என்றார் சாதரண குரலில்.

“இன்னும் எத்தனை நாளைக்கு அந்த டாகுமென்ட்ஸ் தேடி அலையை போற? அதுவரை நம்ம ப்ராஜெக்ட் கிடப்பில் கிடக்கணுமா?”

“இல்ல இப்போ தான் கொஞ்சம் க்ளு கிடைச்சிருக்கு. தேடி பிடிச்சிடலாம்”.

“இங்கே பார்! எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. பல்லாயிரம் கோடிகளை இன்வெஸ்ட் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கேன். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. ஒரு மாசம் டைம் டுப்ளிகேட் ரெடி பண்ணி வேலையை ஸ்டார்ட் பண்ற”.

“என்ன டுப்ளிகேட்டா?”

“ஏன் நீ எதுவுமே செஞ்சதில்லையா? வரிசையா உன்னோட கணக்கெல்லாம் சொல்லவா?”

“வேண்டாம்! நான் ஏற்பாடு பண்றேன். அனா அந்த பழைய டாகுமென்ட் யார் கையிலாவது கிடைச்சிட்டா?”

“அதை அழிக்க உனக்கு சொல்லியா கொடுக்கணும்”

“சரி! பண்ணிடுறேன்”

டங்கென்று அந்தப் பக்கம் போன் வைக்கப்பட்டது. அதற்குள் அமைச்சருக்கு ஏசியை மீறி வியர்த்து வழிந்தது. கை நீட்டி காசு வாங்கும் போது இனித்த மனதிற்குள் இப்போது பயம் பிடித்துக் கொண்டது.

கருணா இல்லாதது வேறு கை ஒடிந்த மாதிரி இருந்தது. இந்த திட்டத்தில் தனக்கு ஒத்துழைத்தவர்களை அன்று மதியமே வீட்டிற்கு வரவழைத்து மீட்டிங் போட்டார். அனைவருமே போனில் சொல்லப்பட்ட விதம் செய்வது சரி என்றே கூறினார். அதே சமயம் ஒரிஜினல் டாகுமெண்டை தேடிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

அதன்படி முதல் வேலையாக சக்தியின் கிராமத்து வீட்டிற்கு ஆளை அனுப்பினார் அமைச்சர். அவரது ஆட்கள் சென்று பூட்டியிருந்த வீட்டை அக்குவேறு ஆணிவேராக அலசி ஒன்றும் கிடைக்காமல் திரும்பினர்.

அப்போது அவருக்கு கேசவனிடமிருந்து அழைப்பு வந்தது.

ஹாலின் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டிருந்தவனின் இதழ்களில் கிண்டலான புன்னகை “என்ன தல? போன இடத்தில் எதுவும் கிடைச்சுதா?”.

“கேசவா! நீ ரொம்ப விளையாடுற...மரியாதையா சொல்லிடு டாகுமென்ட் எங்கே இருக்கு?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
“எத்தனை கோடி வாங்குன? உன்னோட சுய லாபத்துக்காக ஒவ்வொருத்தனையும் அழிச்சு முன்னேறின. அடுத்து மொத்தமா ஊரையே அழிக்க முயற்சி பண்ற பாரு ரொம்ப தப்பு தல. வேண்டாம் விட்டுடு!”

இத்தனை நாள் அந்த டாகுமெண்ட்சில் இருப்பது அவனுக்கு தெரியாது என்றெண்ணிக் கொண்டிருந்த அமைச்சருக்கு அவன் கூறியதை கேட்டதும் தூக்கிவாரி போட்டது.

“என்ன சொல்ற கேசவா?” என்றார் உறுமலாக.

“கோடி கோடியா சம்பாத்திச்சு வச்சு யாரை சந்தோஷப்படுத்த போற? ஒரு நாள் நிம்மதியா தூங்க முடியுமா உன்னால?”

“கேசவா! நிறுத்து! டாகுமென்ட்ஸ் பற்றி என்ன தெரியும்”.

ஒரு நிமிட ஆழ்ந்த மௌனத்திற்கு பிறகு “எல்லாமே தெரியும்” என்றான் அழுத்தமான குரலில்.

அந்தப் பக்கம் அப்படியொரு அமைதி. இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சொன்னதை கேட்டு கொலையும், கடத்தலையும் செய்து வருபவன் அவன். அதை தாண்டி யோசிக்க தெரியாதவன் என்றே எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் விஷயம் மிக மோசமாக போய் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்ததும் அவரது மூளை வேகமாக செயல்பட ஆரம்பித்தது.

“எவ்வளவு வேணும்?”

“ஹா..ஹாஹா!” என்று கூடமே அதிர சிரிக்க ஆரம்பித்தான்.

தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்த சக்தி அந்த சப்தத்தில் பயந்து போய் கதவை திறந்து கொண்டு ஓடி வந்தாள்.

சிரித்துக் கொண்டிருந்தவனின் பார்வை அவள் மீது படிய, கண்களில் பயத்துடனும் உடலில் நடுக்கத்துடனும் நின்றவளின் மீது சுவாரசியமாக ஓட ஆரம்பித்தது.

அமைச்சரோ “கேசவா! சொல்லு உன் பங்கு எவ்வளவு வேணும்?”

போனை காதில் வைத்தபடி எழுந்து சக்தியின் அருகே மெல்ல வந்தவனின் பார்வை அவளின் உதடுகள் மீது அழுத்தமாக பதிய “எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதே” என்றான்.

அவளோ அவனது நெருக்கத்தையும், பார்வையின் அர்த்தத்தையும் புரியாது பேந்த பேந்த விழித்தபடி நின்றாள்.

“இங்கே பார் கேசவா! நமக்குள்ள ஒரு முடிவுக்கு வருவோம். உனக்கு வேண்டியதை சொல்லு. என்னால எவ்வளவு முடியும்னு சொல்றேன். டீல் போட்டுக்குவோம்” என்றார் பதமாக.

ஒரு கை உயர்ந்து அவளது கன்னம் தொட்டு லேசாக வருட, அவளை பார்த்துக் கொண்டே “நீ கொடுக்கிறது எனக்கு பத்தாதே. எதையும் நானே எடுத்து தானே பழக்கம்” என்றவந்து கரங்கள் அவளது உதடுகளை வருடின.

அதுவரை பயந்து கொண்டு நின்றவள் அவனது விரல்கள் உதட்டை வருடவும் விழி உயர்த்தி அவன் முகத்தை பார்த்துவிட்டு அடுத்த நிமிடம் சிட்டாக தனது அறை நோக்கி ஓடினாள்.

அதை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவன் “தல! முதல்ல நீ எவ்வளவு வாங்கினேன்னு சொல்லு” என்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினான்.

“எனக்கு வேண்டியது டாகுமென்ட். அடுத்து இந்த விஷயம் வெளியே போக கூடாது”.

தாடையை தடவிக் கொண்டு “அப்போ சரி! ஒரு ஆயிரம் கோடி தள்ளிடு. நான் பார்த்துக்கிறேன்” .

அவன் கூறிய தொகையை கேட்டதும் “என்ன ஆயிரம் கோடியா?”

“ம்ம்...ஊரையே அழிக்க ஏற்பாடு பண்ற. அதுக்கு இந்த தொகை ரொம்ப கம்மி” என்றான் இளக்காரமான குரலில்.

“கேசவா! நான் நினைச்சா உன்னை அழிக்க ரொம்ப நேரம் ஆகாது”.

“நினைச்சு தான் பாரேன்” என்றவன் போனை அனைத்து சட்டை பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டவன் நேராக சக்தியின் அறைக்கு சென்றான்.

அவளோ அவனது விரல் தீண்டிய இதழ்களை தேய்த்து தேய்த்து கழுவிக் கொண்டிருந்தாள். அவள் வெளியே வரும் வரை அங்கேயே காத்திருந்தவன் “நீ என்னோட ரூமுக்கு மாறிடு. உனக்கு தேவையானதை எல்லாம் அங்கேயே வச்சுக்கலாம்” என்று கூறி அதிர்ச்சியை கொடுத்து விட்டு வெளியேறினான்.

அவன் சொன்ன செய்தி அதிர்வை கொடுத்திருக்க, இதை எப்படி சமாளிக்க என்று புரியாமல் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள். அவனுடன் ஒரே அறையிலா? ஐயோ! அவனை பார்த்தாலே பயமா இருக்கே...என்ன செய்றது? என்று பலவாறு யோசித்தும் புரியவில்லை. அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்க, அவசரமாக எழுந்தவள் கதவை திறக்க அங்கே கார்த்தி நின்றிருந்தான்.

“சக்தி! உன்னோட திங்க்ஸ் எல்லாம் கேசவன் ரூமுக்கு எடுத்திட்டு போயிடலாம். நீ எடுத்து வச்சிடு நான் கொண்டு வைக்கிறேன்” என்று கூறி விட்டு நகர இருந்தவனை அவள் குரல் நிறுத்தியது.

“அண்ணே! நான்..னா..ன்...இங்கேயே இருக்கிறேனே”.

அவளது பயத்தை புரிந்து கொண்டவன் “பயப்படாதே சக்தி...கேசவன் நல்லவன். நிச்சயமா உன்னை காயப்படுத்துகிற எதையும் அவன் செய்ய மாட்டான்” என்றான் ஆதரவாக.

அவன் அப்படி சொன்னதும் என்ன சொல்வதென்று தெரியாமல் வெறுமனே தலையசைத்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், மெல்ல தனது ஆடைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் ஊரிலிருந்து கொண்டு வந்த பை கண்ணில் பட்டது. மெல்ல அதன் ஜிப்பை ஓபன் செய்து உள்ளே இருந்தவற்றை எடுக்க ஆரம்பித்தாள். சில பல ஆடை மற்றும் அண்ணனுக்காக ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த கோவில் பிரசாதங்களும் இருக்க, நீளமான கவர் ஒன்றும் இருந்தது. சற்றே கனமான கவருடன் ஒரு சிறிய கவரோன்றும் இருந்தது. மெல்ல சிறிய கவரை பிரிக்க, அதிலிருந்த கடிதம் கீழே விழுந்தது. தனது சம்பள பணத்தில் தங்கைக்காக ஒரு மொபைல் வாங்கி அனுப்பி இருந்தான்.

அந்த கடிதத்தை எடுத்து படித்தவளின் கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. டப்பாவை கூட பிரிக்காமல் அந்த மொபைல் அப்படியே இருந்தது. அதை ஓரமாக வைத்து விட்டு மற்றொரு கவரை கையில் எடுத்து அது என்னவென பார்க்க எண்ணினாள். அப்போது மீண்டும் கதவு தட்டப்பட, அதை அப்படியே தனது பைக்குள் வைத்து ஜிப்பை மூடி விட்டு எழுந்து சென்றாள்.

*************************************தொடரும்**********************************
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
57
34
18
Appo அந்த mobile layum எதோ இருக்கு அந்த file yum ava kita தான் இருக்கா..... Enna aaga pooguthoo.... அந்த அமைச்சர் ku vera எல்லா therinjidichi... Avanga rendu peroda கல்யாணம் mudinjiduchi.. இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode