அத்தியாயம் - 3

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,114
113
நெருப்பு ரதங்கள் - 3

மயிலாப்பூர் நகரத்தின் முக்கியமான பள்ளியின் உணவு நேர இடைவேளை, உணவு அருந்தியபடியும், கதை பேசியபடியும், தீவிரமாக பாடப்புத்தகங்களைப் பார்வையிட்டப்படியும் மாணவிகள். அணிவகுத்து நின்ற செடிகள் சற்றே வெயில் வாடி வதங்கிப் போயிருக்க காலையில் சிரித்த செம்பருத்திகள் தங்கள் இதழ்களை மூடிக் கொண்டு மெளனியாய் தவறு செய்த பிள்ளையினைப் போல தலைகவிழ்ந்து நின்றது.

தென்றல் ஆடைகளோடு விளையாடி கூந்தலைக் கலைத்து கொஞ்சியபடியே கலவையான உணவின் மணத்தைச் சுமந்து வந்தது. பள்ளிக்கு உள்ளேயே சிறு குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த பார்க்கின் மர நிழலில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இந்தக் கதையின் கதாநாயகிகள் அபிநயா, மதுமதி,சுனிதா,காவ்யா உணவை ருசிக்காமல் தங்கள் முன்னால் அமர்ந்திருக்கும் காவ்யாவின் முகத்தை கவலையோடு பார்த்தபடியே அமர்ந்திருந்தார்கள்.

இந்த லட்டரை முதல்ல கிழிச்சி போடு காவ்யா ? தப்பித் தவறி உங்க வீட்லே யார் கண்லேயாவது பட்டுடப் போகுது.

கிழிக்க வேண்டாம் சுனிதா

பின்னே பொக்கிஷமா பாதுகாக்கப் போறீயா அவங்க வீட்டைப் பற்றி தெரியும் இல்லை மதுவின் இந்தக் கேள்விக்கு சுனிதா அமைதியானாள்.இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை எந்த முன்னறிவிப்பும் இல்லை என்று தோழியைப் பார்க்க சென்றபோது காலில் பெரும் தழும்போடு காயம் பாதி ஆறிய நிலையில் படுக்கையில் இருந்த காவ்யாவின் உருவம் இப்போதும் கண்முன்னே வந்தது தோழிகளுக்கு.

பொட்டைப் பிள்ளைக்கு ஆம்பிளைப் பய கூட என்னா பேச்சு ? நானெல்லாம் இவங்க அப்பாரைக் கல்யாணம் பண்ணிக்கிற வரையில் யாரையும் ஏறெட்டுக் கூட பார்த்தது இல்லை, இவ பண்ண காரியம் நாளைக்கு எங்க சாதிசனத்துக்கு தெரிஞ்சா பிள்ளையை லட்சணமா வளர்த்திருக்கேன்னு என்னையத்தான் கரிச்சி கொட்டுவாங்க.

இந்த பாருங்க குட்டிகளா உங்களுக்குத்தான் படிக்கிற வயசுலே தேவையில்லாம கெட்டுப் போகாதீங்க காவ்யாவின் அம்மாவின் வார்த்தைகள் தேளாய் கொட்டிட தலைகுனிந்து வெளியே வந்தததை இன்னும் அவர்கள் மறக்கவில்லை, இத்தனைக்கும் ட்யூசன் கிளம்பும் போது யாரோ முன்பின் அறியாதவன் அட்ரஸ் கேட்டிருக்கான் அதற்குத்தான் இத்தனை ரகளையும் அவர்களிடம் இந்த விஷயத்தை சொன்னால்....நினைக்கவே பயமாயிருந்தது.

எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, தினமும் பின்னாடியே வர்றானே நாம கண்டுக்காம இருந்திட்டா போயிடுவான்னு நினைச்சேன் காலையிலே சட்டுன்னு இந்த லட்டரை கையிலே திணிச்சிட்டுப் போயிட்டான். ரோட்லே நின்னு பேச பயமா இருந்தது. ஸ்கூலுக்கு வந்து பார்த்தா லவ்லட்டர் அதுவும் இரத்தத்தில் ! நான் என்னடி பண்றது இப்போ போகும் போது வழியே வந்து கலாட்டா பண்ணுவானோ ?! மீண்டும் அழுகிடத் துவங்க.... இப்படி நம்ம பயந்துட்டே இருக்கிறதாலதான் இவனுங்களுக்கு எல்லாம் கொழுப்பு ஏறிப்போகுது. பேசாம எங்கக்காவை இன்னைக்கு இருந்து ஒரு நாலு நாள் உன்கூட வரச்சொல்றேன். அவதான் பிசியாச்சே போலிஸ் டிரஸ்ஸைப் பார்த்ததும் பயந்து போயிடுவான். மேற்கொண்டு ஏதாவது வாலாட்டினா எங்க அக்கா பாத்துக்குவா என்று சுனிதா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். மற்றவர்களுக்கும் அவள் சொல்வதுதான் சரியென்று பட்டது எல்லாரும் தலையாட்ட காவ்யாவும் சற்றே பயம் நீங்க தெளிந்தாள்.

நேரமாச்சி கிளாஸ்க்கு போவோம் வா....அபியும் மதுவும் தோழியை ஆறுதலாக அழைத்துச் செல்ல உணவுகளை பிரசவிக்காமல் டப்பாக்கள் கர்ப்பமாகவே பயணித்தது.

புனித பெண் தெய்வமான மகா அம்பா தேவியின் ஆகுபெயர் மும்பை. சமீபகாலமாகவே குற்றங்களுக்கு குடியுரிமை எடுத்துக் கொண்டதைப் போல, மணிரத்தனித்தின் படத்தில் பார்த்ததை விடவும் அதிகமான ரத்தசேறுகளைத் தன்னுள் பூசியபடியே அதை உலரவிடாமல் இருந்தது.

உப்புக்காற்று முகத்தில் வந்து மோத தன் சிக்ஸ்பேக் உடலை கர்வமாய் கடலுக்கு காட்டியபடியே கையில் பியர் பாட்டிலுடன் இன்னும் சற்று நேரத்தில் எட்டப்போகும் மும்பையின் துறைமுகத்தின் எல்லைப் பார்த்து கொண்டு நின்றான் அவன். தற்சமயம் ஒட்டுமொத்த மும்பையும் அலறும் டானாக உருவெடுத்து நிற்பவன். அரசியல்வாதியில் இருந்து காவல் துறையினர் புதிதாக உருவெடுக்கும் சில்லரை ரவுடிகள் வரையில் அஜய் என்ற பெயர் ஒருவித பயத்தையே உருவாக்கியிருந்தது.

இத்தனைக்கும் எல்லாரும் அவனை நேரில் பார்த்தது இல்லை. அஜய் பையாவிடம் இருந்து ஒரு போன் மட்டும்தான். அவனின் குரலில் வழிந்தோடும் கொடூரம் கேட்பாரை நடுநடுங்கிட வைக்கும். அஜய் என்ற பெயரைக் கேட்டாலே அலறும் படி தன்னை உருவாக்கிக்கொள்ள அவனுக்கு பிடித்த நேரம் என்னவோ ஐந்து வருடங்கள் தான். அதற்கு முன்பு அவனின் வாழ்க்கையை அதில் அவனின் பயங்கலந்த அந்த ராத்திரியை இப்போது கூட அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வதில் அஜய்க்கு ஒரு ஆனந்தம். அஜய் பையா போன்....என்று பவ்யமாய் செல்போனை நீட்டிவிட்டு அகன்றான். சொல்லு ரஜீவ் ? கடுமையின் கணம் கூடிப்போன அந்த குரலில் கடலலைகள் கூட ஒருவிநாடி நின்று பின் திரும்பி கப்பலை அசைத்தன.

தொடரும்.