Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 3 | SudhaRaviNovels

அத்தியாயம் - 3

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
206
169
43
அத்தியாயம் – 3

நன்மங்கலம் காட்டுப் பகுதியில் அடர்ந்த ஆட்கள் யாருமில்லாத அந்த இடத்தில் பத்து பேர் நின்றிருந்தனர். அவர்களின் முகங்களில் கவலையும், அடுத்து என்ன என்கிற கோபமும் இருந்தது.

“ஏண்டா உங்கப்பா மந்திரியா இருந்து இப்படியொரு வேலையை செஞ்சிட்டாரே?” என்று கோபப்பட்டான் ராஜேஷ்.

அவனை முறைத்த பிரபு “அவரு என்னடா பண்ண முடியும்? மக்களுக்கு ரொட்டித் துணடு போட்டா தான் ஆட்சியை பிடிக்க முடியும்னு கட்சி மேலிடம் சொல்லும் போது என்ன செய்ய முடியும்?”

“நீ என்ன சொன்னாலும் இப்போ மாட்டி இருக்கிறது நாம தானே? உன்னை உங்கப்பா எப்படியாவது காப்பாத்திடுவாறு. ஆனா நாங்க?” என்றான் வீரா.

சுற்றி இருந்த மற்றவர்கள் முகங்களிலும் அதே கேள்வி இருந்தது. அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு “என்னை நம்பலையாடா நீங்க? அவன் என்ன பெரிய பு...யா? அரசாங்கத்தில் வேலை பார்ப்பவன் தானே? பார்த்துக்கலாம் விடுங்கடா”.

“இல்லடா பிரபு! அவ்வளவு ஈஸியா அவனை எடை போடாதே. இனி நாம ரொம்ப கவனமா இருக்கணும்” என்றான் ரமேஷ்.

“அப்போ ரத்னாவை எப்படி கொண்டு போகிறது?”

அவனது கேள்வியை கண்டு அனைவரின் கண்களிலும் கலவரம்.

“என்ன பேசுற பிரபு? கொஞ்ச நாளைக்கு எதையும் செய்யாம இருக்கிறது தான் நமக்கு நல்லது. அவன் நம்ம மேல ஒரு கண்ணை வச்சிருப்பான்”.

“டேய்! நாம என்ன கிரிமினலா? எந்த இடத்திலேயும் ஆதாரத்தை விடாம செஞ்சிட்டு இருக்கோம். இப்படியொரு கூட்டம் இருக்கிறது அந்தப் பயலுக்கு தெரியவே தெரியாது” என்றான் இகழ்ச்சியாக.

“நாம எதையாவது செய்யப் போய் அது அவனோட கவனத்துக்கு போயிட்டா சிக்கி சின்னாபின்னம் ஆகிடுவோம் பார்த்துக்க”.

“இல்லடா அப்படி எல்லாம் விட முடியாது! நாம விட்டாலும் அவனுங்க விட மாட்டானுங்க. பெண்ணை இன்னும் நாலு நாளைக்குள்ள அங்கே கொண்டு போகலேன்னா பிரச்சனையாகிடும்”.

அப்போது ரமேஷின் போன் அடித்திட அதை எடுத்து பார்த்தவனின் முகம் மாற “அவ தான் அடிக்கிறா. ரெண்டு நாளா சாமியை பார்க்கனும்னு கேட்டுகிட்டு இருக்கா. இப்போ நான் என்ன சொல்றது?”

போனையும் அவனையும் மாறி மாறி பார்த்த பிரபு “கல் மண்டபத்துக்கு வர சொல்லிடு” என்றான் தீவிரமான பார்வையுடன் பிரபு.

அதில் பயந்து போன வீரா “டேய் வேண்டாம்டா! இது சரியான நேரமில்ல” என்றான்.

அனைவரின் மௌனமும் அதையே பிரபுவிற்கு உணர்த்த “பயந்துடீங்களாடா? நாம இதுக்கெல்லாம் பயப்படுகிற ஆளுங்களா? கச்சிதமா ப்ளான் பண்ணி காரியத்தை முடிச்சிட்டு கொஞ்ச நாளைக்கு அமைதியா இருப்போம்”.

அவனது பேச்சில் தெரிந்த தைரியமும் தெனாவெட்டும் அனைவரையும் சமாதானப்படுத்த, சற்றே இளகி வந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானார்கள். சற்றே நெருங்கி நின்று சில பல விஷயங்களை பேசியவர்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.

பிரபு முன்னே நடக்க அனைவரும் அவனை தொடர்ந்தனர். காட்டின் உட்பகுதிக்குச் சென்றவன் அங்கிருந்த சிதிலமடைந்த பழங்கால கட்டிடங்கள் இருக்கும் பகுதிக்கு சென்றான். மிகவும் தொன்மையான அந்த கட்டிடத்தின் வாசலுக்குச் சென்றவன் ஒரு நிமிடம் நின்று பின்னே வந்தவர்களைப் பார்க்க அவர்களும் அவனை தீவிரமான முகத்தோடு பார்த்தனர். பின்னர் அமைதியாக ஒருவர் பின் ஒருவராக அந்த கட்டிடத்தின் உள்ளே சென்றனர்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
206
169
43
அந்த கட்டிடத்தின் எல்லா இடமும் உடைந்து கிடக்க, ஒரே ஒரு சுவரு மட்டும் நின்றிருக்க, அதில் ஒரு கதவும் இருந்தது. அதன் அருகே சென்ற பிரபு மெல்ல அதன் மீது கை வைத்து தள்ள முயன்றான். அவனோடு ரமேஷும் சேர்ந்து கொள்ள, கரகரவென்ற சப்தத்துடன் அது திறந்து கொண்டது. கதவின் அந்தப் பக்கம் இருளடைந்து காணப்பட்டது.

பிரபுவே ஓரடி எடுத்து வைத்து உள்ளே செல்ல, அவனை அனைவரும் தொடர்ந்தனர். கடைசியாக வந்தவன் மறக்காமல் கதவை இழுத்து சாற்றி விட்டே முன்னேறினான். இருளில் கண்கள் தெரியாமல் போக, மெல்ல தன் மொபைலை எடுத்து லைட்டைப் போட்டவன் எதிரே தெரிந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சற்று தூரம் நடந்து வந்தவன் கீழே குனிந்து ஒரு கல்லை நகர்த்தி அதன் உள்ளே இறங்க ஆரம்பித்தான்.

அவனை பின்பற்றி அனைவரும் அந்த சுரங்கத்தினுள் நுழைந்தனர். எங்கும் பேரமைதி. வவ்வால்களின் சப்தமும், சுரங்கத்தின் ஒருவித வாடையும் அவர்களை வேகமாக நடக்கச் சொல்லியது. சுமார் பத்து நிமிட நடைக்குப் பிறகு ஒரு சிறு கீற்று வெளிச்சம் தெரிய, அதை நோக்கி முன்னேறியவன் அங்கு தெரிந்த படியில் ஏற ஆரம்பித்தான்.

மேலே ஏறி நின்றவன் தலைக்கு மீதிருந்த கல்லை பலம் கொண்ட மட்டும் நகர்த்தினான். அது கீச்சென்ற சப்தத்துடன் நகர ஆரம்பிக்க, ஒரு ஆள் நுழையும் அளவிற்கு நகர்த்தியவன் முதலில் வெளியே சென்றான். அவனை தொடர்ந்து வந்தவர்களும் அனைவரும் மேலே வந்திருந்தனர்.
அதுவொரு தியான மண்டபம். சுற்றிலும் சின்னஞ்சிறிய விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருக்க, சுவரெங்கும் கருப்பு வண்ணம் அடிக்கப்பட்டு பார்ப்பவர்களை பயமுறுத்தும் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தது.

பல முறை அங்கு வந்து சென்றிருந்த அவர்களுக்கே அங்கிருந்த சித்திரங்கள் பீதியை கொடுத்தது. அந்த மண்டபத்தின் நடுநாயகமாக இருந்த சிம்மாசனமும் அதன் பின்னே எழுதப்பட்டிருந்த வாசகங்ளும் அங்கிருந்த அனைவரையும் நிமிர வைத்தது.

நானே இவ்வுலகத்தின் அதிபதி! அளப்பரிய சக்தியை கொண்டவன் நானே! எம்மை தொடர்பவரே இவ்வுலகத்தில் வாழ தகுதியானவர்கள்! எம் எதிரியின் கூட்டத்தை அழிக்க உதவுபவர்கள் எனது தளபதிகள். என்னிலிருந்து ஒரு பாதியை அவர்களுக்கு வழங்கிடுவேன். எமக்காக இவ்வுலகத்தை ஆளப் போகிறவர்கள் அவர்களே! என்கிற வாக்கியம் இருந்தது.
அதை படித்தவர்கள் பிரபு முன்னதாக சென்று அந்த சிம்மாசனத்தின் முன்னே கால் மடக்கி தலையை குனிந்து “தளபதியின் வணக்கம்” என்று சொல்ல, அவனை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

ஒவ்வொருவராக அனைவரும் வணக்கத்தை வைத்து முடிக்கும் நேரம், தூரத்தில் எங்கோ காலடி ஓசை கேட்க தொடங்கியது. அந்த ஓசை கேட்கத் தொடங்கியதுமே அனைவரின் உடலும் இறுக, எழுந்து நின்று யாரையோ எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். சுமார் ஐந்து நிமிட காத்திருக்குப் பின் தலைமுதல் கால் வரை கருப்பு அங்கி அணிந்த உருவம் ஒன்று உள்ளே நுழைந்தது.

அவர் உள்ளே நுழைந்ததும் நின்று கொண்டிருந்தத அனைவரின் தலையும் குனிந்தது. அங்கே பேரமைதி.

கருப்பு அங்கி அணிந்த மனிதன் அவர்களை சற்று நேரம் ஆராய்ச்சிப் பார்வை பார்த்துவிட்டு, லேசாக தொண்டையை செருமியவர் “ம்ம்...சாத்தான் அனைவரையும் வரவேற்கிறார்” என்றார் அந்த சிம்மாசனத்தை பார்த்தபடி.

அவரின் முன்பு இடுப்பு வரை குனிந்து வணங்கியவர்கள் “அவருக்காக எங்கள் உடல், உயிர் அனைத்தையும் தர தயாராக இருக்கின்றோம்” என்றனர்.

இடுப்பில் தொங்கிய கயிற்றை ஒரு கையால் பற்றிக் கொண்டு அங்குமிங்கும் நடந்தவர் “இங்குள்ளவர்களுக்கு அவரைப் பற்றி நாம் தான் தெரியப்படுத்த வேண்டும். அவர் வெகு காலமாக காத்திருக்கிறார். இவ்வுலகம் அவருடையது. அதை அவருக்கு நாம் தான் கைப்பற்றிக் கொடுக்க வேண்டும்”.

அனைவரும் கைகளை முன்னே நீட்டி “நாங்கள் அனைவரும் அவரின் தூதுவர்கள். அவருக்காக அனைத்தையும் செய்வது எங்கள் கடமை” என்று சபதம் எடுத்தனர்.

பிரபுவின் முன்னே வந்து நின்றவர் “அந்தப் பெண் எப்போது வருகிறாள்? சாத்தான் காத்திருக்கிறார்” என்றார்.

குனிந்த தலை நிமிராது “எதிர்பாராத தடங்கல் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதனால் கால தாமதம் ஆகும் நிலை” என்றான்.

“என்ன சொல்கிறாய்?”

“ஆம்! புதிய கமிஷனர் பொறுப்பேற்று இருக்கிறான். அவனை சமாளிப்பது சிரமம். அதனால் பொறுத்திருந்து தான் செயல்பட வேண்டும்”.

“அவனை அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் பெண் இந்த வார இறுதிக்குள் இங்கு வர வேண்டும். ரத்தம் கேட்கிறார்! மாரீசனை துணைக்கு வைத்துக் கொள். அவளின் ரத்தம் அவரின் பாதத்தில் விழ வேண்டும்”.

பிரபு பதிலளிக்கும் முன் அவனை முந்திக் கொண்ட ராஜேஷ் “கொண்டு வருகிறேன்” என்றான்.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
206
169
43
பழுப்பு நிற கண்கள் உயர்ந்து அவனைப் பார்த்து விட்டு அவன் முன்னே சென்று நின்று “செய்! அவர் உன்னை பாதுகாப்பார்” என்றார்.

அனைவரும் அவரை வணங்க, அடுத்த நிமிட காலடி ஓசை வேகமாக அங்கிருந்து வெளியேறியது. அவர் சென்றது அறிந்ததும் அனைவரும் நிமிர்ந்தனர். பிரபுவின் முகத்தில் சிந்தனை ரேகை படர்ந்தது. ராஜேஷோ எப்படியாவது முடித்து விட வேண்டும் என்கிற உறுதியோடு தாங்கள் வந்த வழியே நடக்க ஆரம்பித்தான்.

சிவதாசிற்கு சிறிதளவேனும் சந்தேகம் வந்தால் மொத்த கூட்டத்தையும் பிடித்து விடுவான் என்கிற யோசனையோடு சென்றனர்.

அதே நேரம் சஞ்சலா தனது லாப் டாப்பின் முன்பு அமர்ந்திருந்தாள். திரையில் தெரிந்தவற்றை சற்று நேரம் உற்று பார்த்துக் கொண்டிருக்க, அவளது சந்தேகம் உறுதியானது. அவர்களின் நடமாட்டத்தை உணர்ந்து கொண்டாள்.

நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டவள் பலத்த சிந்தனையோடு நடக்க ஆரம்பித்தாள். அவனுங்க வெளியில் வர ஆரம்பிச்சிட்டானுங்க. அந்தப் பெண்ணுக்கு ஆபத்து எப்போ வேண்டுமானாலும் நெருங்கலாம். எதையாவது செய்ய வேண்டும். அவளை எப்படியாவது அவர்களின் கையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

அப்போது உள்ளே வந்த பார்த்தி, அவளது சிந்தனையுடன் கூடிய முகத்தை பார்த்தவன், லேப் டாப்பில் தெரிந்த விபரங்களையும் பார்த்தவன் “எதையும் யோசிக்காம பேசாம படுத்து தூங்கு. இப்போ நம்முடைய சிறு அசைவு கூட அவனை நம்மை நோக்கி நகர வைக்கும்” என்றான்.

அவனை இகழ்ச்சியாகப் பார்த்தவள் “அப்போ அந்த பெண்ணோட கதி?”

அவளை முறைத்தவன் “இந்த ஒரு பெண்ணை பார்த்தா நாம மொத்தமா மாட்டுவோம். அப்புறம் அந்த கும்பலை நம்மால எதுவுமே செய்ய முடியாது” என்றான் அழுத்தமாக.

எதுவும் பேசாமல் அமைதியாக சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

அவளை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே “நீ புத்திசாலின்னு நினைக்கிறேன். எதுவும் செய்யாம அமைதியா இரு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சென்றதுமே திரையை வெறித்தபடியே அமர்ந்திருந்தவள் மெல்ல எழுந்து சென்று கதவை சாற்றி விட்டு தனது பையிலிருந்து ஒரு போனை எடுத்து மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

“அந்த வீட்டை விட்டு எங்கேயும் போயிடாதே! உன் கண்காணிப்பில் சிறு தவறு நிகழ்ந்தாலும் ஒரு உயிர் போயிடும்”.

“இல்ல மேம்! நான் இம்மியளவு கூட அசையல. ஆனா அந்த பொண்ணு தான் அடிக்கடி வாசலுக்கு வரதும் போவதுமா இருக்கு”.

“சந்தேகப்படுகிற மாதிரி யாரும் வந்தாங்களா?”

“இல்ல மேம்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் “மேம்! அந்த பொண்ணு எங்கேயோ வெளியே கிளம்புது. முகத்தில் லேசான பதட்டம் தெரியுது”.

அவனது பதிலை கேட்டவளும் சற்றே பதட்டம் அடைய “நீ பாலோ பண்ணு ஜெகன். அப்படியே எனக்கும் ஷேர் பண்ணு. நான் வரேன்” என்று போனை அனைத்து விட்டு படபடவென்று முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு தனக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

மெல்ல கதவை திறந்து வெளியே யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

அதே சமயம் அப்துல் அந்த ஏரியாவிற்குள் நுழைந்திருந்தான். நான்கு நாட்களாக எங்கள் குரல் கூட்டத்தின் அனைத்து தகவல்களையும் திரட்டி, எங்கெங்கு இருக்க கூடிய சாத்தியகூறுகள் இருக்குமிடங்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து தேடலை தொடங்கி இருந்தனர். அப்படித்தான் அப்துல் இங்கு வர வேண்டியதாக இருந்தது.

சஞ்சலா ஒரு ஆட்டோவைப் பிடித்து ஜெகன் சென்று கொண்டிருக்கும் இடத்தை சொல்ல, ஆட்டோ கிளம்பியது. தூரத்தில் இருந்தே அவளது உயரம், எடை, நடை ,உடை தன்னை யாரும் கவனித்து விடுவார்களோ என்கிற உஷாரான பார்வை என்று அனைத்தையும் கவனித்து விட்டவனுக்கு சஞ்சலா தான் அவள் என்பது உறுதியானது.

அவளைத் தொடர்ந்து அடுத்து வந்த ஆட்டோவை நிறுத்தி அவள் செல்லும் ஆட்டோவை தொடரும்படி சொல்லிவிட்டு, தனது டீமிற்கு அழைத்து விவரத்தை பகிர்ந்து கொண்டான்.


சிவதாசிற்கும் தகவல் தெரிவிக்கப்பட, உடனே அப்துலை அழைத்தவன் “வெளியே தெரியாத மாதிரி கொண்டு வந்துடு. எங்கேயும் தகவல் வெளியே போக கூடாது. அவள் நம்ம கிட்ட தான் சிக்கி இருக்காள் என்கிற விவரம் வெளியே போக கூடாது. நம்ம விசாரணை இடத்துக்கு கொண்டு வந்துடு” என்று கூறி வைத்து விட்டான்.
 
Need a gift idea? How about a tea mug?
Buy it!