அத்தியாயம் – 4
கருணாகரனின் வீட்டில் குட்டி போட்ட புலி போல அவன் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் மனதில் ஆயிரம் குழப்பங்கள் தோன்றி மறைந்தது. சற்று முன்னர் அவனுக்கு வந்த அலைப்பேசி அழைப்பு அவனது தன்னம்பிக்கையை உலுக்கி இருந்தது. தனக்கு நிச்சயமாக தெரிந்த ஒன்றை மாற்றி, இல்லை என்று சொல்லும் போது தனது பல நாள் திட்டங்கள் அனைத்தையும் கடல் அலைப் போல அழித்தது போன்ற தோற்றத்தை உருவாக்கியது.
நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்று “ஐயா எல்லாம் அவன் கிட்ட இருக்குன்னு சொல்றார் முருகேசா. அவனே சொன்னானாம்”.
“அவன் கிட்ட இருப்பதற்கு வாய்ப்பே இல்லைங்க”.
“நானும் அதை தான் நினைச்சேன். ஆனா அவன் ஏன் பொய் சொல்றான்?”
“நம்மள வேவு பார்க்க நினைக்கிறானோ?”
“இந்நேரம் சும்மா இருப்பான்னு நினைச்சியா? நம்ம கூட்டத்திலேயே ஆள் வச்சிருப்பான். இது வேற முருகேசா. ஐயாவை கவனமா இருக்க சொல்லணும்”.
“ஐயா கிட்ட நீங்களே சொல்லிடுங்க”.
“அதெல்லாம் இருக்கட்டும் ஆவடி பக்கம் அவனுங்க ஆளை தொடுத்துகிட்டு போனானுங்களே என்னாச்சு? எதுவும் கிடைச்சுதா?”
“நானும் அந்த போனுக்காக தான் காத்திட்டு இருக்கேன்” என்று சொல்லும் போதே அவனது போன் அடிக்க ஆரம்பித்தது.
போனை எடுத்து பேசியவன் ஆரம்பத்தில் சாதரணமாக பேச, போக போக குதிக்க ஆரம்பித்தான்.
“அவன் இழுத்திட்டு போகும் வரை என்னடா பண்ணிட்டு இருந்தீங்க? அறிவுகெட்டவனுங்களா!”
“என்ன முருகேசா! என்ன பிரச்சனை?”
போனை அணைத்துவிட்டு பயத்துடன் “ஐயா! அது வந்து ஆவடி பக்கம் செத்து போனவனோட பிரெண்டை துரத்திகிட்டு போன நம்ம ஆட்களை அடிச்சு போட்டுட்டு அவனை கேசவன் ஆட்கள் தூக்கிட்டு போயிட்டாங்களாம்” என்றான் எச்சிலை விழுங்கியபடி.
அவ்வளவு தான் அதுவரை இருந்த அமைதி பறந்து போக, பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்து “கையில் கிடைச்சவனை கொண்டு வரதுக்கு துப்பில்லாத ஆட்களையா அனுப்பின? என்ன பண்ணுவியோ தெரியாது இன்னும் அரை மணி நேரத்துல அவன் இங்கே இருந்தாகணும்” என்றார் ஒற்றை விரலை காண்பித்து மிரட்டலாக.
கருணாகரனுக்கு தெரியும் கேசவனிடம் சென்ற ஆளை மீட்பது நடவாத காரியம் என்று. இறந்தவனின் நண்பன் வாயை திறக்கும் முன் அவனை எப்பாடு பட்டாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணினான்.
சரியாக அந்நேரம் அவனது போன் இசைக்க, அதில் தெரிந்த எண்களை கண்டு விழிகள் வெறித்தது. கேசவன் தான் அழைத்திருந்தான்.
அமைதியான முகத்தோடு போனை எடுத்தவன் காதில் வைத்ததும் “கருணா! நீ இவனைத் தேடி ஆள் அனுப்புவதை விட, வேற வேலை இருந்தா பார்! நமக்கு நேர விரயம் இவன். இவன் மூலியமா எதுவும் தெரியாது”.
“என்ன என்னை ஆழம் பார்க்கிறியா கேசவா? ஐயா கிட்ட எல்லாமே உன்கிட்ட தான் இருக்குன்னு சொல்லி இருக்க. அப்புறம் எதுக்கு இவனை தூக்கின?”
“உனக்கு வேலையை குறைக்க தான் கருணா. தேவையில்லாத ஆணியை பிடிங்கிட்டு இருக்க இல்ல. டாகுமென்ட்ஸ் என்கிட்ட தான் இருக்குன்னு தெரிஞ்சும் இவனை தூக்க ஆள் அனுப்பின உன்னோட புத்திச்சாலித்தனத்தை என்ன சொல்றது?”
“வேண்டாம் கேசவா! உன்னோட ஆட்டத்தை நிறுத்து! டாகுமென்ட்ஸ் என் கையில் கிடைக்கட்டும் உன்னை போட்டு தள்ளுகிற ஆள் நானாக தான் இருப்பேன்”.
“உனக்காக காத்திருக்கிறேன் கருணா! சீக்கிரம் வா” என்று கூறி போனை அனைத்தவன் எதிரே இருந்த கார்த்தியிடம் போனை கொடுத்துவிட்டு இறந்தவனின் நண்பனின் முன்பு சென்று நின்றான்.
கை, கால்கள் கட்டப்பட்டு கண்களில் பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். எதுவுமே பேசாமல் சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் கேசவன்.
கட்டப்பட்டு இருந்தவனோ அவனது பார்வையில் பயந்து போய் “சார் என்னை விட்டுடுங்க..எனக்கு எதுவும் தெரியாது” என்று பிதற்றினான்.
தாவங்கட்டையை தேய்த்தபடி அவன் முன்னே குனிந்தவன் “உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு ஒத்துகிறேன். ஆனா உன் நண்பனோட முதுகு பை எங்கேன்னு மட்டும் சொல்லு?” என்றான் மிரட்டலாக.
“நீங்க என்ன கேட்குறீங்கன்னு தெரியல சார்”
“உன் நண்பன் தினமும் வேலைக்கு போகும் போது ஒரு பை எடுத்திட்டு போவானே அந்தப் பை எங்கேன்னு கேட்கிறேன்”.
அவனோ பயத்துடனே “அவன் இறந்த அன்னைக்கு அதை எடுத்திட்டு போனானே” என்று முடிக்கும் முன்னே “இல்ல! அது வேற பை! எப்போதும் கொண்டு போகிற பை இல்லை” என்றான் அழுத்தமாக.
“சார்! எனக்கு எதுவும் தெரியாது..என்னை விட்டுடுங்க சார்” என்று அழ ஆரம்பித்தான்.
மெல்ல எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டவன் “ இங்கே பார்! நீ இங்கே இருக்கிறது உனக்கு பாதுகாப்பு. வெளியே போனா உன்னை போடுறதுக்கு ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கு. அதனால நான் கேட்கிறதுக்கு நல்லா யோசிச்சு பார்த்து பதில் சொல்லு”.
அவன் சொன்னதில் மேலும் பயந்து போனவன் “சார் நீங்க சொல்லி தான் இறந்த அன்னைக்கு அவன் வேற பை எடுத்திட்டு போனான்னு தெரியும்” என்றான்.
அவன் கண்களில் பொய்யில்லை என்பதை புரிந்து கொண்டாலும், அவனிடமிருந்து சிறிதளவாவது உண்மையை வாங்கிவிட வேண்டும் என்று விரும்பினான்.
“நல்லா யோசி! அன்னைக்கு உங்க ரூமுக்கு யாராவது வந்தாங்களா? அவன் யார் கிட்டேயாவது எதையாவது கொடுத்து அனுப்பினானா?”
“சார்! நீங்க சொல்ற மாதிரி எனக்கு எதுவும் தெரியல சார். அவனுக்கு இங்கே யாரும் பிரெண்ட்ஸ் கிடையாது என்னை தவிர. மான்ஷனில் இருக்கும் ஒரு சிலர் கிட்ட மட்டும் தான் நல்லா பேசுவான். மற்றபடி ரொம்ப அமைதியானவன்”.
“அமைதியானவன் பண்ற வேலையா அவன் பண்ணி இருக்கான்? ஆறு மாசமா போதை கடத்தல் பண்ணிட்டு இருந்திருக்கான். இப்போ அடுத்த கட்டத்துக்கு நகரும் போது தான் சிக்கி இருக்கான். அவனோட பை எங்க இருக்குன்னு தெரிகிற வரை உன்னை இங்கிருந்து அனுப்ப மாட்டேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அதைக் கேட்டவன் அதிர்ந்து போய் “சார்! சார்!” என்று கத்தினான்.
அறையை விட்டு வெளியேறியவன் கார்த்திக்கிடம் “இவனுக்கு எதுவும் தெரியாது கார்த்தி. அன்னைக்கு அவன் அந்தப் பையை யாரிடமாவது கொடுத்திருந்தா தான் உண்டு. அது கூட இவனுக்கு தெரியாது.
ஆனா இவனை வெளில விடாதே நம்ம கிட்டேயே இருக்கட்டும்”.
“இவனை எதுக்கு நாம வச்சிருக்கணும் கேசவா? ஒன்னும் தேறலேன்னா அனுப்பிடலாமே”.
“நமக்கு இவன் தேவை இல்ல தான். ஆனா கருணாகரன் இவனை விட மாட்டான். தீர்த்திட்டு தான் மறுவேலை பார்ப்பான். கொஞ்ச நாள் இங்கே இருக்கட்டும்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று சென்று காரில் அமர்ந்தான்.
அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டா கார்த்தி எதையும் பேசாது காரில் அமர்ந்து ஓட்ட ஆரம்பித்தான். சிறிது நேரம் வரை இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே. முதலில் அதை உடைத்த கேசவன் “இறந்தவனோட குடும்பத்தை பத்தி விசாரிச்சியா?”
“விசாரிச்சிட்டேன்! நாம எதிர்பார்க்கிற எதுவும் இல்லை. அவன் குடும்பத்துக்கு இவன் இந்த வேலை செஞ்சது தெரியாதுன்னு தோணுது”.
“ஒருவேளை டாகுமேன்ட்சை இவன் அவங்க கிட்ட கொடுத்திருந்தா?”
அதுக்கு வாய்ப்பில்லேன்னு தோணுது”.
“ம்ம்..எதுக்கும் அந்த குடும்பத்து மேலையும் கண்ணை வை. அவங்களுக்கு தொடர்பில்லேன்னா கருணாகரன் அவங்களை தொந்திரவு செய்வதை தடுக்கணும்”.
“அது எதுக்கு வேண்டாத வேலை? அவன் என்னவேனா செய்யட்டும். நமக்கு தேவை அந்த டாகுமென்ட்ஸ்”.
“சரி! நான் இப்போ எண்ணூர் கொடோவுனுக்கு போகணும். புது சரக்கை சரி பார்க்கணும்”.
இருவரும் பேசிக் கொண்டே எண்ணூர் கோடோவுனுக்கு சென்றனர். அங்கு அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த அவனது ஆட்கள், கேசவன் சரக்கை சரி பார்க்கவென்று உள்ளே செல்ல, கார்த்தி வெளியே நின்றே அங்கிருந்தவர்களிடம் நிலவரத்தை விசாரிக்க ஆரம்பித்தான்.
மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த இடத்தை தாண்டி இரும்பு கதவுகள் போடப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான். அங்கே அறையை சுற்றிலும் நான்கு பெரிய மேஜைகள் போடப்பட்டிருந்தது.
நான்கில் மூன்று மேஜையில் பழங்கால லிங்கங்கள் வைக்கப்பட்டிருந்தது.
அவற்றை பார்த்ததும் இரு கை கூப்பி “தென்னாடுடைய சிவனே போற்றி எல்லார்க்கும் இறைவா போற்றி” என்று கும்பிடு போட்டான்.
அந்நேரம் உள்ளே நுழைந்த கார்த்தி இதழில் எழுந்த சிரிப்பை மறைத்தபடி “செய்யுறது திருட்டு! அவரையே திருடிட்டு அவரையே கும்பிடு போடுறியா?” என்றான்.
சரேலென்று திரும்பியவனின் பார்வயில் என்ன இருந்தது என்று கார்த்தியால் உணர முடியவில்லை. ஒற்றை விரலை உயர்த்தி “கார்த்தி! வேண்டாம்” என்று கூறிவிட்டு மெல்ல ஒரு மேஜை மேலிருந்த லிங்கத்தின் அருகே நகர்ந்தான்.
உடனே அவன் அருகில் சென்ற ஒருவன் சில கருவிகளை கொடுத்தான். குனிந்து லிங்கத்தை நன்றாக ஆராய்ந்தவன் கண்களை மூடி தியானித்து விட்டு, மெல்ல கருவியால் லேசாக சுரண்டி பார்த்து அதன் தன்மையை ஆராய்ந்தான். சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. தீவிரமான முகத்தோடு மிக கவனமாக ஆராய்ந்து முடித்துவிட்டு கார்த்தியிடம் அதன் மதிப்பை கூறினான்.
“அவ்வளவா?”
“ம்ம்...மிக புராதனமானது” என்றவன் யோசனையுடன் சுற்றி வந்துவிட்டு கார்த்திக்கிடம் “பத்திரமா தயார் செய்து வைங்க” என்று அடுத்த லிங்கத்தை ஆராய சென்றான். அங்கிருந்தவர்களில் ஒருவனின் கண் மட்டும் அந்த லிங்கத்தை விட்டு நகரவில்லை. சற்று நேரம் கழித்து மெல்ல அறையை விட்டு அவன் வெளியேறினான்.
அவன் சென்றதும் கார்த்தியை அழைத்த கேசவன் “அவனை தொடர்ந்து போ கார்த்தி. யாருக்கு நியுஸ் கொடுக்கிறான்னு பார்” என்று விட்டு மீண்டும் லிங்கத்தை ஆராய ஆரம்பித்தான்.
கேசவன் சொன்னதை வைத்து சென்ற கார்த்தி ஒரு மரத்தின் பின்னே மறைவாக நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டான். மெல்ல அவனறியாது பதுங்கி நின்று அவனது உரையாடலை கவனிக்க ஆரம்பித்தான்.
“ஆமா சார்! அவ்வளவு தேறும்னு சொன்னான்”.
“.....”
“நானே கேட்டேன் சார்! அவன் இதை எப்படி வெளில கொண்டு போக போறான்னு சொல்றேன். முடிஞ்சா நீங்க தூக்கிடுங்க”.
“....”
“என்னால முடிந்தவரை அவனோட ப்ளான் என்னன்னு சொல்ல முடியும். அதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது. அவன் கொஞ்சம் சந்தேகப்பட்டாலும் என்னை போட்டு தள்ளிடுவான்”.
“....”
“சரி சார்! நான் நிச்சயமா சொல்றேன். எனக்கு சேர வேண்டியதை அனுப்பிடுங்க” என்று கூறி போனை அனைத்தான்.
அவனது உரையாடல் முடிந்ததுமே அவசரமாக தான் இருக்குமிடத்தில் நன்றாக மறைந்து கொண்ட கார்த்திக்கிற்கு அவன் யாரிடம் பேசினான் என்கிற தகவல் மட்டும் தெரியவில்லை. அவன் அங்கிருந்து நகருவரை மறைந்திருந்து விட்டு மெல்ல வெளியேறினான். கேசவன் அதற்குள் தனது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்திருந்தான்.
எதுவுமே தெரியாத மாதிரி கார்த்தி அவன் அருகில் சென்றான்.
அவனைப் பார்த்ததும் “கார்த்தி! நாளைய மறுநாள் இரவு மூன்றாவது மேஜை மேல இருந்தவரை தூக்கிடலாம். எங்கே எப்படின்னு கொஞ்ச நேரத்தில் சொல்றேன். நம்ம ஆட்களில் முக்கியமானவங்களை வர சொல்லு” என்று கூறிவிட்டு அங்கிருந்த விசாலமான அறைக்குச் சென்றான்.
கார்த்திக் நம்பகமானவர்களை அழைத்தவன், சற்று முன் யாரிடமோ தங்கள் குழுவின் ரகசியத்தை பகிர்ந்து கொண்டவனையும் அழைத்துக் கொண்டான். அனைவரும் உள்ளே சென்று நிற்கவும், அங்கு மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த வரைபடத்தின் மீது பார்வையை பதித்திருந்தவன் நிமிர்ந்து பார்த்து “மூன்றாவது மேஜை பொருளை நாளைய மறுநாள் கை மாத்தப் போறோம். அதுக்கு நீங்க எல்லாம் தயாரா இருக்கணும்” என்றான் கூர் விழிகளால் அளந்தபடி.
அனைவரும் சம்மதமாக தலையசைத்தவுடன் “இப்போ நிலைமை மோசமா இருக்கிறதால நிறைய பாதுகாப்பு சோதனைகளை தாண்டி பொருளை எடுத்திட்டுப் போகணும். நாம போகிற வழியில் நிறைய தடங்கல் இருக்கும். ஒரு மணிக்கு பிளைட் கிளம்புது. பதினொரு மணிக்கு பொருள் ஏர்போர்ட்டில் இருந்தாகணும்”.
அதுவரை அமைதியாக இருந்த கார்த்திக் “ஏர்போர்ட்டில் சோதனைகளை எப்படி சமாளிக்கப் போறோம்?”
அவனை நிமிர்ந்து பார்த்தவன் “நம்ம ஆட்கள் அங்கே இருப்பாங்க அவங்க எல்லாவற்றையும் பார்த்துப்பாங்க. ஏர்போர்ட் போகிற வரை தான் நாம பாதுகாப்பு கொடுக்கணும். அதன் பிறகு அவன் பொறுப்பு”.
அங்கிருந்த அனைவரும் கேசவன் திட்டத்தை சொல்வதற்காக காத்திருக்க, கருப்பு ஆடு மட்டும் மிக கவனமாக அவனது திட்டத்தை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தான். தனது முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாது நின்றிருந்தான்.
கேசவனும், கார்த்தியும் அவனது நடவடிக்கைகளை கண்டு கொள்ளாத மாதிரி இருந்தாலும் அவன் மீது கவனத்தை வைத்திருந்தனர்.
வரைபடத்தை நோக்கி குனிந்தவன் மெல்ல தனது திட்டத்தை விளக்க ஆரம்பித்தான். அனைவரும் கவனமாக ஒவ்வொன்றையும் கேட்டுக் கொண்டனர். சிறு தவறு கூட இல்லாதவாறு கச்சிதமாக தீட்டப்பட்ட திட்டத்தில் எவ்வாறு உள்ளே புகுந்து தூக்குவது என்று குழம்பி போனான் அந்த கருப்பு ஆடு.
தனக்கிருந்த குழப்பத்தை வெளிக்காட்டதாவரு ‘நாம சொல்லிடுவோம் சார் பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவார்’ என்றெண்ணிக் கொண்டு அனைவருடனும் அங்கிருந்து வெளியேறினான்.
அனைவரும் அறையை விட்டு வெளியேறியதும் “என்ன கார்த்தி யார் என்று தெரிஞ்சுதா?” என்றான் கூர்மையான பார்வையுடன்.
“இல்ல கேசவா! அவன் ரொம்ப கவனமா பேசினான். நம்ம திட்டத்தை தெரிஞ்சுகிட்டு பொருளை தூக்கப் போறாங்களாம்” என்றான் சிரிப்புடன்.
“அது தானே எனக்கு வேணும்! சின்ன சந்தேகம் கூட வராமல் முடிப்போம்” என்றவாறு அவன் தோளில் கைப் போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
அதே நேரம் விசாலாட்சி அம்மன் கோவிலின் தூணோரம் சாய்ந்து அமர்ந்திருந்த இருவரின் முகத்திலும் கலக்கம். ஒருத்திக்கு காதலனை எண்ணி கலக்கம். மற்றவளுக்கு உயிரான அண்ணனை எண்ணி வேதனை.
சோர்வான முகத்தோடு இருந்தவளின் கைகளைப் பற்றிய தேனு “வேலையினால பிசியா இருந்திருப்பாங்க சக்தி. நீவேனா பாரு சீக்கிரம் கூப்பிட்டு பேசுவாங்க” என்று சமாதானப்படுத்தினாள்.
கலங்கிய கண்களை துப்பட்டாவில் துடைத்துக் கொண்டவள் “நானும் இந்த பத்து நாளும் அப்படித்தான் காத்திருந்தேன் தேனு. ஆனா அண்ணன் கூப்பிடவே இல்ல. எனக்கென்னவோ உள்ளுக்குள்ள பயமா இருக்கு” என்றாள்.
“தேவையில்லாம நினைக்காதே சக்தி! நல்லதே நினை! கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும்”.
அதற்கும் சமாதானம் ஆகாதவள் “நானும் அப்பாவும் சென்னைக்கு போய் பார்த்திட்டு வந்திட்டா நிம்மதியா இருக்கும் தேனு. நான் இப்போவே அப்பா கிட்டேயும், அப்பத்தா கிட்டேயும் சொல்றேன்” என்று கூறி எழுந்து கொண்டாள்