அத்தியாயம் - 5

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,520
1,086
113
நெருப்பு ரதங்கள் - 5

நான்கு கழித்து பள்ளிக்கு வந்த காவ்யாவை பிள்ளைகள் சூழ்ந்து கொண்டார்கள். என்னாச்சு காவ்யா நீ ஏன் வரவேயில்லை. வீட்லே ஏதும் பிரச்சனையா ?

அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை, வீட்டிலே கொஞ்சம் வேலை, அவள் கரங்களில் ஒரு சாக்லேட் பெட்டி, கலர்கலராக சரிகைகள் ஒட்டப்பட்டிருந்த இனிப்புகள் அவர்கள் அனைவரையும் பார்த்து சிரித்தன.

என்னடியிது ?! ஏது இத்தனை சாக்லேட்ஸ்.

காவ்யாவின் முகத்தில் வெட்கச்சிவப்புகள், எல்லாம் அவர் கொடுத்தது ?

யாரு ?

அதான் அன்னைக்கு லட்டர் கொடுத்தானே அவன்தான். சுனிதா நான் அவனை லவ் பண்றேன் என்று சொல்லும் காவ்யாவை நம்ம இயலாத பார்வை பார்த்தார்கள் தோழிகள்

என்னடி சொல்றே ? அவன் தொந்தரவு பண்றான்னு நாலுநாள் முன்னாடி அழுதுட்டு இப்போ லவ் பண்றேன்னு சொல்றீயே ? வேண்டாம் காவ்யா உங்க அம்மா அப்பாவை பற்றி நினைச்சுப் பார்த்தியா ? அவனைப் பார்த்தா நல்லவன் போலத் தெரியலையே என்று கவலைக்குரலில் சுனிதா பேசிட, சட்டென காவ்யா சிரிப்பை மறந்தவள் போல....

சுனிதா நானும் வேண்டான்னுதான் நினைச்சேன். யாருக்கு நான் என்னை நல்லவன்னு ப்ரூப் பண்ணனும், எனக்குன்னு என்னைப் புரிஞ்சிக்கன்னு யாரு இருக்காங்க அந்தவீட்ல, உனக்கு என்ன தேவைன்னு கேட்கக் கூட ஆளில்லை. ஆனா இவனைப்பாரு என்னோட ஒரு பார்வைக்காக நாய் மாதிரி அலைஞ்சி எத்தனை முறை கோவித்தாலும் என்னோட சிரிப்புக்காக ஏங்கி, நான் சரின்னு சொன்னதும் கைநிறைய இனிப்பு, எப்போதும் என்னை பாராட்டிப் பேசறதும் என்னோட பிளஸ் எல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா என்னைப் பெத்த யாருக்கும் தெரியலை. அவள் கண்களில் சோகம் ஒரு கவரைப் பிரித்து சாக்லேட்டைத் திணித்துக் கொண்டாள்.

பதினைந்து நிமிடங்களில் நான்காவது சாக்லேட்....!

ஏன்டி இத்தனை சாப்பிடறே ? அதற்குள் பள்ளியில் அழைப்புமணியடிக்க எல்லாரும் வேகமாக ஓட காவ்யாவின் கால்கள் மட்டும் நிதானமாக வெகு நிதானமாக....! தொடர்ந்து வந்த நாட்களில் எல்லாம் அவளின் செயல்பாடுகள் வித்தியாசமாகவே தெரிந்தது. அர்த்தமில்லாமல் சிரித்துக் கொண்டு, எப்போதும் கண்களை ஒருவித சொறுகலோடு, சிலநேரம் கிளாஸூக்கு வராமல் பள்ளியில் வாசல்வரை வந்து விட்டு சட்டென்று எதிர்படும் ஆட்டோவில் ஏறிவிடுவாள். ஆனால் பள்ளிவிடும் நேரம் மீண்டும் தெருமுனையில் தோழிகளுக்காக காத்திருப்பாள். உடலிலும் மனதிலும் களைப்போடு பார்வைக்குத் தெரிந்தாலும் காவ்யாவைப் பொறுத்தவரையில் அவளின் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது.

ஒருமாத காலம் தோழிகளிடம் இருந்து விலகல் அதிகரித்தது. பள்ளிதேர்வுகள் ஆரம்பித்துவிட்டதால் அவர்களும் இவளைப் பற்றி கவலைப்பட நேரமில்லாமல் போனது கடைசி நாள் தேர்வு நடக்கும் போது பாதியிலேயே சலசலப்பு. வெளியே சப்தம். மாணவிகளின் பார்வைகள் அனைத்தும் விளையாட்டுத்திடலின் பக்கம்.

அதிகமாய் போலிஸ் தலைகள் அதில் சுனிதாவின் அக்கா சக்தியும், பள்ளி தலைமையாசிரியரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருக்க, கூடவே காவ்யாவின் அம்மாவும் அப்பாவும் அழுதபடியே, தேர்வு முடிந்ததும் சக்தியை நெருங்கியவள் என்னாச்சுக்கா ஏன் காவ்யாவோட அம்மாவும் அப்பாவும் வந்து இருக்காங்க அதுவும் போலீஸ் கூட ?! இன்னைக்கு காவ்யா ஸ்கூலுக்கு வரலையே ?!

இன்னைக்கு மட்டுமில்லை இனிமே என்னைக்குமே அவ வரமாட்டா வரக்கூடிய சூழ்நிலையில் அவ இல்லை என்று மெதுவாய் சக்தி சொன்னதும் தோழிகள் அனைவருக்கும் பயம் கலந்த வியப்பு

என்னாச்சுக்கா ?!

இங்கே வேண்டாம் வீட்டுக்குப்போய் பேசிக்கலாம் நீ முன்னாடி போ நான் கொஞ்ச நேரத்தில் வர்றேன் என்று அவள் மீண்டும் அந்த சிறுகும்பலில் போய் நின்றுகொண்டாள் சக்தி. கூட்டம் சேர்நத பிள்ளைகள் கலைக்கப்பட்டனர்.

பெத்தவங்க உங்களுக்கு இருக்கணுங்க அக்கறை உங்க பொண்ணு ரெகுலா ஸ்கூலுக்கு வர்றது இல்லை உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அவங்க அப்பா கையெழுத்தை அவளே போட்டு லீவ்லட்டர் கொடுத்திருக்கா இதுக்கு மேல வேறென்ன ஆதாரம் வேண்டும். உங்க பொண்ணால இங்கேயிருக்கிறே ஒட்டுமொத்த பிள்ளைகளும் கெட்டுப்போகப்போகுது. என்று தலைமையாசிரியரின் உயர்ந்த குரலுக்கு காவ்யாவின் பெற்றோர்கள் சற்று அடங்கி பின் அழுதார்கள். இவையெல்லாம் பார்த்தபடியே பிள்ளைகள் நகர்ந்தனர் அந்த கூட்டத்தில் சுனிதாவும். கையில் நேற்று முன்தினம் காவ்யா கொடுத்த மிட்டாய் ஆளுக்கொன்றை சரிகைப் பேப்பரைக் கடந்து அவர்களின் எச்சிலுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.

ஐந்து நட்சத்திர ஓட்டல் நான்கு பேர் புடைசூழ வந்த அவனின் லினன் சட்டையில் ஆங்காங்கே வியர்வை தன் பூக்களை சிதறவிட்டு இருந்தது. கண்களில் இருந்த கறுப்புகண்ணாடியும் அடர்ந்த மீசையும் அவனுக்குத் தனி அழகைத் தர சுற்றிலும் ஒருமுறை ஹோட்டலின் அழகைப் பார்த்து ரசித்தவன். திவாரி இங்கேதான் ரூம் போட்டு இருக்கானா ? என்று அருகிலிருந்தவனைப் பார்த்து கேட்டான்.

ஆமாம்....!

சரி நான் கூப்பிட்டேன்னு சொல்லி இங்கே கூட்டிட்டுவா...அருகிலிருந்த லன்ஞ் ஹாலில் நுழைந்தவன் ஒரு லெமன் டீ என்றான். பையன் டீக் கோப்பையோடு வர டேபிளின் மேல் இருந்த ரைபிளைப் பார்த்துவிட்டு ஒருமுறை பின்வாங்கினான்.

என்ன ? சிகரெட் புகை வழியும் வார்தைகள்...?! டீக்கோப்பையோடு ஹாலை ஒட்டியிருந்த நீச்சல்குளத்திற்கு அருகில் சென்றான். மீனைப் போல சிலர் தண்ணீருக்கு சவால்விட்டுக்கொண்டு நீந்தினார்கள். மிதமான வெய்யிலில் வெளிர் உடலை நிறம்மாற்றிக் கொண்டு இருந்தார்கள். நேற்று பெய்த சிறு மழையில் அளவாய் வெட்டப்பட்டு இருந்த குரோட்டன்ஸ் செடிகளின் மேல் நீர் முத்தமிட்டுக் கொண்டு இருந்தது. ரம்மியமான இடம் அவன் கண்கள் ரசனையுடன் விரிந்தன. இன்னும் சற்று நேரத்தில் தான் செய்யப்போகும் காரியம் என்ன இப்போது இயற்கையை ரசித்துக் கொண்டு இருப்பதென்ன என்று தன்னையும் அறியாமல் அவன் முகத்தில் முறுவல் பூத்தது. ரைபிள் டேபிளின் மேல் அமைதியாய் படுத்திருந்தது.

திவாரி...! கதராடையில் பளிச்சென்று இருந்தார். நேற்று அடித்த சரக்கின் வாடை இன்னமும் உடலில் மிச்சமிருக்க அதை மறைக்க வாசனை திரவியங்களைப் பீச்சிக்கொண்டு உடல் முழுவதும் நெற்றியில் விபூதிப்பட்டை, ராட்டையுடன் காந்திபோஸில் எடுத்த புகைப்படம் பிரிண்ட் போட்டு அவரின் பார்வைக்கு காத்திருந்தது. இன்னும் ஒருமணி நேரத்தில் பேசப்போகும் கூட்டத்தில் அனல்பறக்கும் வார்த்தைகளை யோசித்தபடியே, லிப்டில் இருந்து வெளிப்பட்டார்.

ரஜீவ்வின் சங்கீத ஒலி அஜய்யின் காதுகளை எட்டியது. அதுவரையில் இருந்த மென்மைத்தனம் மாறி முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொண்டது அலட்டிக்கொள்ளாமல் ரைபிளைக் கைகளில் எடுத்தவன். திவாரியின் முன் நின்று அவரின் பெரிய கண்களை வியக்க வைத்தான். அஜய்.....! மூன்றே வார்த்தைகள் இடைவெளி விட்டு அதிர்ச்சியாய் திவாரியின் கடைசி வார்த்தையை முடிக்கும் முன் ரைபிளின் புடைத்திருந்த வயிற்றில் இருந்த புல்லட்களை இலவசமாக உடலில் வாங்கிக்கொண்டு ஆங்காங்கே ரத்தப்பொட்டுகளோடு சரிந்தார். வந்தவேலை முடிந்தது என்று அஜய் ரஜீவ்வைப் பார்த்து தலையசைத்து கிளம்ப ஹோட்டலே ஸ்தம்பித்து நின்றது. பரபரவென்று ஆட்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். ரிசப்ஷன் லிப்ஸ்டிக் தீட்டப்பட்ட உதடுகளில் கலவரத்தைக் கலந்தபடியே செய்தியை காவல்துறைக்கு தெரிவிக்க போனை துணைக்கு அழைத்தாள். மும்பையில் பிரபல ஹோட்டலில் ஒரு பிரபல கட்சியின் பெயரைச் சொல்லி திவாரியின் புகைப்படத்தைக் காண்பித்தார்கள். இந்த களேபாரம் எதையும் அறியாமல் திவாரி கண்களை திறந்தபடியே செத்துப்போயிருந்தார். ஈக்கள் சந்தோஷமாய் அவரை எச்சில் படுத்திக்கொண்டு இருந்தது.
 
Need a gift idea? How about a dinosaur night light?
Buy it!