Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 5 | SudhaRaviNovels

அத்தியாயம் - 5

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
59
45
18
அத்தியாயம் – 5

சஞ்சலாவை காணாமல் குணாளனும், பார்த்தியும் மற்றவர்களுடன் தங்களின் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். அவளால் தங்களின் மொத்த கூட்டமும் சிக்கலில் இருக்கிறது என்று எண்ணி ஒருவித பதட்டத்திலேயே இருந்தனர்.

அவர்களின் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் காரணமானவளோ பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அவளது மனம் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. அத்தனை பேரையும் எளிதாக சமாளித்து வந்தது நெருடலாக இருந்தது.

“ம்ம்...என்னை வெளியே விட்டு பிடிக்க பார்க்கிறானா?” என்று கேட்டுக் கொண்டவள் “சிவதாஸ் மச்சான்! இந்த சஞ்சலாவை அவ்வளவு ஈசியா எடை போட்ட இல்ல?” என்றவள் தலையை லேசாக சரித்து “நீயா நானா? பார்த்திடுவோம்” என்று கூறிக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள்.

அவளது உடலில் வைக்கப்பட்டிருந்த சிப் வேலை செய்ய அவளது நடமாட்டம் கண்காணிக்கப்பட ஆரம்பித்தது. சிவதாஸ் திரையில் தெரிந்து கொண்டிருந்த நகர்வை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். அவள் எந்தெந்த வழியில் செல்கிறாள் என்று. அதை வைத்து அந்த கூட்டத்தின் இருப்பிடத்தை பிடித்து விடலாம் என்கிற எண்ணம்.

இவர்கள் இங்கே ஒருவரை ஒருவர் குறி வைத்து ஓடிக் கொண்டிருக்க, ரத்னா தாம்பரத்தை தாண்டி பயணித்துக் கொண்டிருந்தாள். அவளை தொடர்ந்து பிரபுவும் அவனது கூட்டமும் சென்று கொண்டிருந்தது.

அதே நேரம் சென்னையின் உயர்தர ஹோட்டல் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்தான் ஜாக் வெஸ்லி. அவனது பழுப்பு நிற கண்கள் கோபத்தை சுமந்து கொண்டிருந்தது. போனில் பேசிக் கொண்டிருந்த அவனது முகம் இறுக்கத்தை காட்டியது.

கைகளை அருகே இருந்த குஷன் மீது குத்தியவன் “நோ வே! எவன் வந்தாலும் எனக்கு எல்லாம் சரியா நடக்கணும். நம்ம ஆட்கள் இங்கே உள்ளவங்களுக்கு வேண்டியவற்றை தயார் செய்துட்டாங்க. இன்னும் ஆறு மாதங்களில் கணிசமான அளவு ஆட்கள் நம்ம வழிபாட்டில் சேர்ந்திருக்கணும்” என்றான் அழுத்தமாக.

அந்தப் பக்கம் பேசிய குரலோ “ரொம்ப கஷ்டமான நேரம் ஜாக். இப்போ வந்திருக்கிற போலீஸ் ஆபிசர் மற்றவங்க மாதிரி இல்ல. கொஞ்ச நாள் நாம வெயிட் பண்ணி தான் ஆகணும்”.

“என்ன வேணும்னாலும் கேளு தரேன். நாங்க நினைப்பது நடந்தாகணும். அவர் பல வருஷமா காத்துகிட்டு இருக்கார். போதை, பெண்கள் என்று எதை எல்லாம் கொடுக்க முடியுமோ கொடுத்து ஆட்களை கொண்டு வா”.

“லுக் ஜாக்! நம்மள மாதிரி ஒரு கூட்டம் இருக்கிறதே இதுவரை வெளியில் யாருக்கும் தெரியாது. நீ அவசரபட்டா பெரிய பிரச்னையை கொண்டு வரும்”.

“வருண்! டோன்ட் கைட் மீ! நான் சொல்றதை கேட்க தான் நீ. அந்த அரசியல்வாதி பையன் அவன் பேர் என்ன? அவனை வச்சு எல்லா வேலையையும் ப்ளான் பண்ணு”.

தான் சொல்வதை அவன் கேட்க மாட்டான் என்பதை உணர்ந்து கொண்ட வருண் ‘ஓகே ஜாக்! நம்ம தேவனின் பானம் வந்து கொண்டிருக்கிறது. அதை முடிச்சிட்டு கால் பண்றேன்”.

“ம்ம்...ஐ வான்ட் டு டேஸ்ட்”.

“வாட்!”

“எஸ்!”

“நோ ஜாக்! இப்போ அதற்கான நேரமில்லை”.

“உன் கைக்கு வந்து சேர்ந்ததும் நான் வரேன்” என்று கூறி போனை வைத்துவிட்டான்.

சற்றே எரிச்சலுடன் “இந்த வெள்ளைக்கார நாயி சொன்னதை கேட்க மாட்டேன்றான்-டா. நாமலே செம ரிஸ்க்ல இருக்கோம். இவன் வேற தாலி அறுக்கிறான்”.

“என்னன்னே சொல்றீங்க?”

“கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தலாம்னு சொன்னா கேட்க மாட்டேன்றான். இதுல அந்த ரத்னா பொண்ணு வேணுமாம் இவனுக்கு”.

“அண்ணே! வேண்டாம்! இவன் சொல்றது எதுவும் நமக்கு புரியவும் இல்ல. இவன் கொடுக்கிற அந்த பொருளுக்காக தான் நாம இப்போ இவனுக்கு வேலை பார்க்கிறோம். புதுசா வந்திருக்கிறவன் கிட்ட சிக்கினா சிக்ஸ்டி பைவ் போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான்”.

சற்று நேரம் சோர்வான முகத்தோடு நின்றவன் “பொருளு மட்டும் இல்லடா பணமும் அதிகம் தான். இதை செஞ்சு விட்டுட்டா நம்ம தலைமுறையே அடுத்தவனை நம்பி இருக்க வேண்டாம்”.

“அதுக்காக ரிஸ்க் எடுக்க போறீங்களா?”

“வேறென்ன செய்ய சொல்ற? மாசமான்னா பொண்டாட்டி கேட்கிற காசை கொடுக்க முடியாம கடன் வாங்கியே செத்திருவோம் போல இருக்கு. அதுக்கு இதை சிக்காம செஞ்சிட்டா நமக்கு அதிர்ஷ்டம் தானே-டா”.

“அப்போ சரி! வாங்க போவோம்”
 
  • Like
Reactions: Kothai suresh

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
59
45
18
பார்த்தியும், குணாளனும் பல இடங்களில் தேடி ஓய்ந்து போயினர். அவள் எதற்காக சென்றிருப்பாள் என்று கூட யூகிக்க முடியாமல் படுகடுப்பில் இருந்தனர். சஞ்சலாவோ தான் சுற்றிக் கொண்டிருந்த பகுதியில் பூட்டிய ஒரு வீட்டினுள் நுழைந்தவள் அங்கிருந்து எங்கும் செல்லாது அங்கேயே இருந்தாள்.

அவளை கண்காணித்துக் கொண்டிருந்த சிவதாஸின் டீம் அதை அவனுக்கு தெரிவிக்க, தானும் திரை முன்பு சென்றமர்ந்து கொண்டான்.

“அந்த வீடு யாருடையது? அக்கம்பக்கத்து வீடுகள் என்று எல்லாவற்றை பற்றியும் தகவலை திரட்டுங்க”.

சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு அனைத்து தகவல்களும் அவனது கைக்கு கிட்ட, அவன் எதிர்பார்த்த ஒன்று அதில் இல்லை. மௌனமாக எதிரே தெரிந்த திரையையே வெறித்துக் கொண்டிருந்தான்.

அப்போது பிரதீப் மெல்ல “நம்ம டீமை அனுப்பலாமா தாஸ்?” என்றான்.

மறுப்பாக தலையசைத்து “அவ நம்மள கண்டுபிடிச்சிட்டா” என்றான்.

“வாட்!” என்றான் அதிர்வுடன்.

“ம்ம்...அவ இங்கேருந்து இப்போதைக்கு நகர மாட்டா. நாம வச்சிருக்கிற சிப்பை எடுத்த பின்பு தான் வெளியேறுவா”.

“அப்போ நம்ம ஆளுங்களை அனுப்பவா? பாலோ பண்ணி பிடிச்சிடலாமே?”

தன் நெற்றியிலிருந்த தழும்பை நீவி விட்டுக் கொண்டவன் “பண்ண முடியாது! நான் அவளை கொஞ்சம் ஈசியா நினைச்சிட்டேன். பட் இந்த கேம் ரொம்ப சுவாரசியமா இருக்கப் போகுது” என்றான் மெல்லிய முறுவலுடன்.

“நான் இப்போ என்ன பண்ணட்டும்?”

அவன் அருகே சென்று குனிந்து அவன் காதில் சில விஷயங்களை சொன்னவன் வேக நடையுடன் அங்கிருந்து வெளியேறினான்.

சஞ்சலாவோ தனது உடம்பில் எந்த இடத்தில் சிப் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தாள். உடலை முழுவதுமாக ஆராய்ந்து கழுத்தின் பின்பகுதியில் முடிகற்றைகளின் நடுவே சிறிய ஹேர்பின் போன்ற ஒன்று செருகப்பட்டிருந்தது. அதை எடுத்தவள் மிக கவனமாக கொண்டு சென்று வெஸ்டர்ன் கழிவறையில் போட்டு பிளஷ் செய்து விட்டு வந்தாள்.

மேலும் தன் வேறு எதுவும் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து விட்டு தன்னை தயார் செய்து கொண்டவள் ஜன்னலின் வழியே வீட்டை நோட்டம் விட ஆரம்பித்தாள். சுமார் ஒரு மணி நேரம் வரை சுற்றுவட்டாரத்தை ஆராய்ந்து விட்டு, ஆட்கள் நடமாட்டம் எதுவும் தென்படாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் பின்பக்க கதவின் பக்கம் சென்றாள்.

சற்று நேரத்தில் இருளடர்ந்த பகுதியில் ஓட ஆரம்பித்திருந்தாள். தன்னை யாரும் தொடர்கிறார்களா என்று கவனித்தபடி ஓடியவளுக்கு, யாரும் தொடரவில்லை என்பது ஆச்சர்யத்தை கொடுத்தது.

தங்களின் இருப்பிடத்தை அடைந்தவளுக்கு பெரும் ஆசுவாசம் ஏற்படுவதை விட, ஏதோவொன்று தவறாக தெரிந்தது. தன் மேல் சிப் வைத்தவன் நிச்சயமாக அதோடு விட்டிருக்க மாட்டான். பின் ஏன் யாரும் தன்னை தொடரவில்லை என்று புரியாமல் வீட்டினுள் நுழைந்தாள். அங்கோ அவளை தேடி அலுத்துப் போய் அமர்ந்திருந்தவர்கள் அவளின் வரவை கண்டதும் கோபத்தோடு பார்த்தனர்.

“எங்கே போன?” குணா அழுத்தமான குரலில் கேட்டான்.

அங்கிருந்த நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்தவள் “சிவதாசை பார்க்க போனேன்” என்றதும் எதிரே இருந்த இருவரும் நாற்காலியை விட்டு எழுந்து விட்டனர்.

“என்ன சொல்ற?”

அவர்களை நிமிர்ந்து பார்த்தவள் “உண்மையா தான்! அவன் என்னை பொறி வச்சு பிடிக்க நினைச்சான். அவன் இடத்துக்கே போய் பார்த்திட்டு சல்யுட் அடிச்சிட்டு வந்திருக்கேன்”.

அவள் சொல்லி முடிக்கும் முன்னே “இவ லூசா குணா? அவன் நம்ம பக்கம் திரும்பாம இருந்தாலும் இருந்திருப்பான். இப்போ இவளே அவனை திரும்ப வச்சிருக்கா”.

பார்த்தியை கிண்டலாக பார்த்தபடி “டென்ஷன் ஆகாத பார்த்தி. அவன் அல்ரெடி நம்ம பக்கம் ஆட்களை இறக்கிட்டான். எனக்கு எதை பற்றியும் கவலையில்லை. அந்த ஜாக்கை பிடிக்கணும். அதுக்கு நாம மட்டும் அவனை சுற்றி வளைத்தா போதாது. இந்த சிவதாஸ் கொஞ்சம் மூளைக்காரன் தான். அவனை தூண்டி விட்டா ஜாக் வெளில வருவான். அதுக்கு தான் போனேன்”.

நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டு பேச துவங்கியவனை தடுத்த குணாளன் “தப்பு பண்ணிட்ட சஞ்சு. சிவதாசுக்கு ஜாக் பற்றி எதுவும் தெரியாது. இப்படியொரு கூட்டம் இங்கே வளர்ந்து கொண்டிருப்பது நம்மளை தவிர யாருக்கும் தெரியாது. அவங்க செய்கிற குற்றங்கள் எல்லாம் யாரோ ஒரு கிரிமினல் செய்கிற குற்றமாக தான் பதிஞ்சுகிட்டு இருக்கு. ஆனா இதன் பின்னே உள்ள பயங்கரம் மக்களுக்கு தெரியாது”.

“அது இவன் மூலியமா தெரிய வரணும் குணா. நாம அவனுங்களை அழிக்க மட்டும் தான் செய்ய முடியும். இவன் மாதிரி ஒரு முரட்டு முட்டா பீசு போலீஸால தான் எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வர முடியும்”.

அவள் அருகே சென்ற பார்த்தி “யாரு அவனா முட்டா பீசு? நீ தான் அது. நாம செய்ய நினைத்தது எதையுமே செய்ய முடியாம செஞ்சிட்ட இல்ல” என்று எரிந்து விழுந்தான்.

கால் மேல் கால் போட்டு நன்றாக அமர்ந்து கொண்டவள் “ஏன் முடியாது? நான் போயிட்டு அவனையே பார்த்திட்டு வந்திருக்கேன். உனக்கு தைரியம் இல்லேன்னு சொல்லு” என்றாள் கிண்டலாக.
 

SudhaRavi50

Administrator
Staff member
Nov 28, 2022
59
45
18
இவர்கள் இங்கே ஒருவரை ஒருவர் தாக்கி வழக்கடித்துக் கொண்டிருக்க, ரத்னா திரிசூலம் அருகே அந்த இருளில் மலைப் பாதையில் நடந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் அத்தனை இன்பம். கண்டிப்பாக இன்று அவரை பார்த்து அருளை பெற்று விடுவோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. எந்த இருளும் அவளுக்கு பயம் காட்டவில்லை.

அவள் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் எனும் இருளில் இருந்ததால் அவளுக்கு அது புதிதாக தெரியவில்லை. பிரபு மற்றும் அவனது குழுவினரும் வேகம் வேகமாக கல் மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

“அவ வந்துடுவாளா-டா?”

“தாம்பரம் கிட்ட வந்துட்டேன்னு சொன்னா-டா” என்றான் ராஜேஷ்.

அதை கேட்டதும் மேலும் வேக நடையுடன் நால்வரும் கல் மண்டபம் நோக்கி சென்றனர். அங்கே அவள் வந்திருக்கவில்லை. அதுவே அவர்களுக்கு ஒருவித பயத்தை தர, அமைதியாக அங்கிருந்த தூண்களின் மேல் சாய்ந்த வண்ணம் மலைப் பாதையை கவனிக்க ஆரம்பித்தனர். சற்று நேரம் வரை அங்கே காற்றின் சப்தத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு சருகுகளின் ஓசை கேட்க ஆரம்பித்தது.

ராஜேஷை பார்த்து தலையசைத்து விட்டு மற்ற மூவரும் மறைவாக நின்று கொண்டனர். கையில் மொபைலை வைத்து வெளிச்சம் ஏற்படுத்திக் கொண்டு மெல்ல புதர்களின் ஊடே நடந்து வந்தாள் ரத்னா.

அவளை பார்த்ததும் கல் மண்டபத்தின் வாசலுக்கு வந்து கைகளை உயர்த்திக் காட்டி “ரத்னா வா வா!” என்று அழைத்தான்.

அவனைக் கண்டதும் வேகமாக வந்தவள் “வந்துட்டீங்களா? நீங்க வர நேரம் ஆனா என்ன செய்றதுன்னு யோசிச்சேன். நல்லவேளை வந்துட்டீங்க” என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டு மண்டபத்தின் உள்ளே சென்றாள்.

அவளது விழிகள் மண்டபத்தை ஆராய ராஜேஷோ “உனக்காக வர மாட்டேனா? அதுவும் நீ அவரை பார்க்க இவ்வளவு ஆர்வமா இருக்கும் போது எப்படி வராம இருப்பேன்?” என்றான்.

“இங்கேயா இருக்கார்? என் கண்களுக்கு தெரிவாரா ராஜேஷ்?”

“ம்ம்..தெரிவார் வா போகலாம். இன்னும் கொஞ்ச தூரம் போகணும்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மற்ற மூவரும் மறைவிலிருந்து வெளியே வந்தனர்.

அவர்களை பார்த்ததும் விழிகள் விரிய பார்த்தவளுக்கு முதன்முறையாக பயம் எழ “யார் இவங்க ராஜேஷ்” என்றாள் குரல் நடுங்க.

அவளின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு “அவர் கிட்ட நம்மள அழைச்சிட்டு போறவங்க” என்றான்.

அவள் மனதில் பீதி எழ “வே...வேண்டாம்! வா நாம இங்கேருந்து போகலாம்” என்று அவனது கைகளைப் பற்றி இழுக்க ஆரம்பித்தாள்.

அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவன் “வா போகலாம்” என்று நடக்க முயல, அவளோ அவனது கைகளை வேகமாக உதறி விட்டு இருளில் ஓட ஆரம்பித்தாள்.

அதை எதிர்பார்க்காதவர்கள் ‘டேய்! பிடிடா! பிடி! சிறிய கீறல் கூட இல்லாம கொண்டு போகணும்-டா. நம்ம கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம்’ என்று சொல்லி துரத்த ஆரம்பித்தார்கள்.
 
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!