அத்தியாயம் - 9

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,676
1,400
113
அத்தியாயம் –9

மாடியிலிருந்து வந்து சாப்பிட்டுவிட்டு தங்களது அறையில் படுத்த ரேணுவிற்கு, தங்கை கடற்கரையில் பேசியதே சுற்றி சுற்றி வந்தது. அவள் தெரிந்தே தான் தங்களை பிரித்து வைத்திருக்கிறேன் என்று சொன்ன செய்தி இதயத்தில் சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வை கொடுத்தது. அவளது மனம் கசந்து போனது.

பெற்றோர்களின் இழப்பிற்கு பிறகு தங்கையை குழந்தையாக எண்ணி வளர்த்தவளுக்கு, அவள் செய்த துரோகம் நெஞ்சை உலுக்கியது. எனது சுகங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு அவளுக்காக..அவளுக்காக என்று ஒவ்வொன்றையும் விட்டுக் கொடுத்து தானே வாழ்ந்தேன்? ஆனால், எனது உணர்வுகளுக்கும், எனது மனதை பற்றியும் கொஞ்சமும் சிந்திக்காது நடந்து கொண்டிருக்கிறாளே.

திருமணமான புதிதில் நிரஞ்சனின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்தாலாவது சரி. ஆனால் நான்கு வருடம் கழிந்த நிலையிலும், அவனது மனதை புரிந்து கொள்ளாமல் தங்களை பிரித்து விடுவான் என்று பயந்து தங்களது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி இருப்பவளை என்ன செய்வது? என்றெண்ணி கலங்கி போனாள்.

எப்பொழுதும் படுத்ததும் தங்களது அலுவலகத்தில் நடந்தவற்றை பற்றி அனைத்தையும் கூறுவாள் நித்யா. அன்று அது போல் கூற ஆரம்பித்ததும்..தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்த ரேணுவோ “மச்..எனக்கு தலைவலிக்குது நித்தி! நாளைக்கு பேசிக்கலாம்” என்று கூறி திரும்பி படுத்துக் கொண்டாள்.

நித்தியின் மனமோ ரேணு அவ்வாறு சொன்னவுடன் ‘நான் போன் பேச போயிருந்த கொஞ்ச நேரத்துக்குள்ள அக்கா கிட்ட ஏதோ சொல்லி மனசை மாத்தியிருக்கான் திமிர் பிடிச்சவன்’ என்று நிரஞ்சனை வசை பாடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் ரேணுவின் முதுகை வெறித்துக் கொண்டிருந்தவள் பொறுக்க முடியாது “அக்கா! மாடியில அந்த ஆள் உன் கிட்ட எதுவும் பேசினாரா?” என்றாள்.

அதுவரை தன் எண்ணங்களில் மூழ்கியிருந்தவள் தங்கை நிரஞ்சனை அந்த ஆள் என்று கூறியதும் அவசரமாக திரும்பி “அவர் என் கணவர் நித்தி! மரியாதையா மாமான்னு சொல்லு” என்றாள் கடுமையாக.

ரேணுவின் இந்த பேச்சு நித்தியின் மனதிற்குள் மணியடிக்க எழுந்தமர்ந்தவள் “ஜோக் அடிக்காத அக்கா! நாலு வருஷமா தோணாதது இப்போ என்ன திடீர்ன்னு?” என்றாள் கேலியான குரலில்.

அவளது பேச்சு ரேணுவின் மனதை காயப்படுத்த கண்ணீருடன் எழுந்தவள் “ஏன் நித்தி இப்படியிருக்க? நிரஞ்சன் நிச்சயமா நம்மை பிரிக்க மாட்டார். உனக்கு அது கொஞ்சம் கூட புரியலையா? நீ நாலு வருஷமா அவரோட வாழ்க்கையில் விளையாடிகிட்டு இருக்க..அது தெரிந்தும் உன் மேல கோபமோ, வருத்தமோ இல்லாம தான் இருக்கார். உன்னோட நன்மைக்காக எத்தனை விஷயங்கள் பண்ணியிருக்கார் தெரியுமா?” என்றவளை இடைமறித்து “அக்கா! நீ இன்னும் வெகுளியாவே இருக்க! உலகத்தை சரியா புரிஞ்சுக்கவே இல்லக்கா. எனக்கு இருக்கிற ஒரே உறவு நீ தான். எந்த காரணத்தை கொண்டும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்க்கா” என்றாள் அழுத்தமாக.

அதை கேட்ட ரேணு அவளது கையைப் பற்றி “எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அதே அளவு நிரஞ்சனும் முக்கியம் நித்தி. என்னோட வாழ்க்கை அவர் தான் புரிஞ்சுக்கோ!” என்றாள்.

தமக்கையின் தோள்களை பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டவள் “விடுக்கா! இப்போ எதையும் யோசிக்காதே! எல்லாம் நல்லதா தான் நடக்கும். நிம்மதியா படுத்து தூங்கு. நாளைக்கு பெருசுங்க ரெண்டும் வருதே.உனக்கு நிறைய வேலை இருக்கும்” என்று கூறி படுக்க வைத்தாள்.தங்கை தான் சொன்னவற்றை கேட்டு மனதை மாற்றிக் கொள்வாளா? என்கிற சிந்தனையுடன் அவள் முகம் பார்த்தவாறே படுத்துக் கொண்டாள்.

நித்தியின் மனமோ ‘விழித்துக்கொள்’ என்றது. ரேணுவின் மனதில் சலனம் ஏற்பட தொடங்கி விட்டது இது நல்லதல்ல என்று கூறியது. இன்று அவன் மீது ஏற்படும் பாசம் நாளை என்னை வெறுக்க வைத்தாலும் வைக்கும். அவன் அவளை அவ்வாறு மாற்றி விடுவான் என்று பயந்தாள்.

அவளது மனம் எப்படியாவது நிரஞ்சனிடமிருந்து ரேணுவை பிரித்து சென்றுவிட வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். சீக்கிரம் அது நடக்க வேண்டும்..அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக எழ ஆரம்பித்தது அவள் மனதில்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,676
1,400
113
திருநெல்வேலியில் இருந்து கிளம்பிய விச்சுவின் குழு தங்களது வேனிலேயே சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

சுந்தரும், வாசிமும் இயல்பாக விச்சுவிடம் பேசிக் கொண்டு வர சிவா மட்டும் சற்று விலகியே இருந்தான். அவ்வப்போது தங்களது பேச்சிற்குள் அவனை கொண்டு வர முயன்றவர்களை கண்டு மெலிதாக சிரித்துவிட்டு இருளை பார்க்க ஆரம்பித்துவிடுவான்.

அதை கண்டு மனம் வருந்திய விச்சுவிடம்,சுந்தர் “விடு விஸ்வா! நீ பேசினது சாதாரண வார்த்தையில்லை! அவன் தங்கையின் கரெக்டரையே தவறாக பேசி இருக்க..அந்த ரணம் ஆற டைம் எடுக்கும். கண்டிப்பாக அவனால் உன்னை வெறுக்க முடியாது. நிச்சயம் நிலைமை பழைய நிலைக்கு மாறும். அதுவரை பொறுமையாகவே இரு” என்று வலியுறுத்தினான்.

சிவாவை வருத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு லேசாக தலையை உலுக்கிக் கொண்டவன் “வார்த்தையை கொட்டிட்டேன்..அதற்கான பலனை அனுபவித்து தான் ஆகணும்” என்றான் பெருமூச்சுடன்.

சோகமான மனநிலையை மாற்ற எண்ணிய சுந்தர் “ஏன் வாசிம்? இந்த பொண்ணுங்க எல்லாம் காலையில் வேலைக்கு போகும் போது முகத்துக்கு பல லேயர் கோட்டிங் கொடுத்து..கண்ணுக்கு மை எழுதி பார்க்க தேவதைகள் மாதிரி போவாங்க..ஆனா திரும்பி வரும்போது எப்படி வருவாங்கன்னு சொல்லு பார்ப்போம்?” என்றான்.

அவன் ஏதோ ஏடாகூடமாக கேட்கிறான் என்பதை புரிந்து கொண்ட வாசிம் தெரியாது என்று உதட்டை பிதுக்கினான்.

“இது தெரியாதா? இந்த சீனாவுல இருக்குமே பாண்டா கரடி அது மாதிரி வருவாங்க. முகத்துக்கு போட்ட லேயர் எல்லாம் அப்படியே அங்கங்கே அப்பிகிட்டு..கண்ணுல போட்ட மை பாண்டா கண்ணு மாதிரி கண்ணை சுத்தியும் கலைஞ்சு போய் சும்மா சூப்பரா வருவாங்க” என்றான்.

அதுவரை இருந்த இறுக்கமான மனநிலை மாறி அனைவரும் கொல்லென்று சிரிக்க..அவர்களுடன் இருந்த பெண்கள் மட்டும் சுந்தரை பார்த்து முறைத்தார்கள்.

குழுவிலிருந்த ஒரு பெண் “சுந்தரண்ணா! உங்களுக்கு வர பொண்டாட்டி கிட்ட இதெல்லாம் போட்டு காண்பிச்சா உங்க நிலைமை என்ன ஆகுறது?” என்றாள் நக்கலாக.

அவள் சொன்னதை கேட்டு சிறிது அதிர்ந்தவன் சமாளித்துக் கொண்டு “அதெல்லாம் பொண்டாட்டி வரப்ப பார்த்துக்கலாம் கவிதா. ஆனா, நீ பண்றது ரொம்ப தப்பு புள்ள..பேசிட்டு இருக்கும் போது ரெகார்ட் பண்ணி வைக்கிறது எல்லாம் நல்லதில்லை சொல்லிட்டேன்’ என்றான் கடுப்புடன்.

அவன் குரலில் இருந்த பயத்தையும் கடுப்பையும் கண்டு வேனில் இருந்தவர்கள் சிரிக்க தொடங்கினர்.

“விஸ்வான்னா உங்களுக்கு வர மனைவி எப்படி இருக்கனும்-னு நினைக்கிறீங்க?” என்று கேட்டாள் கவிதா.

அவளது கேள்வியை செவிமடுத்த விஸ்வாவிற்கு நித்தியின் முகம் வந்து போனது.

சுந்தரோ எகத்தாளமாக “ம்ம்..பொண்ணா இருக்குனும்-னு ஆசைப்படுவான் உங்க விஸ்வான்னா” என்றான்.

இவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க...

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசா பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ

சிரிப்பு மல்லிகை பூ

என்று தன் மனதிலிருந்தவளை பற்றி பாட ஆரம்பித்தான்.

அதை கேட்டு குழுவிலிருந்த பெண்கள் அதிசயமாக பார்த்திருக்க...சிவாவோ கடுகடுத்த முகத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏண்டா சுந்தர்! அந்த பொண்ணை நினைச்சு இவன் பாடுறானா என்ன?” என்று கேட்டான் வாசிம்.

ஆம்! என்று தலையாட்டி “அந்த மூதேவியை தான் ஊதாப்பூ, ரோசா பூ, அல்லி பூ, மல்லி பூ-ன்னு பாடுறார் இந்த காதல் மன்னன். ஆனா, அது கள்ளி பூ-ன்னு தெரியல இவனுக்கு” என்றான் கடுப்புடன்.

“விடுறா! விடுறா! அதிசயமா அவனே ஒரு பெண்ணை சைட் அடிச்சிருக்கான். அது தான் இப்படி பித்து பிடிச்சு அலையுறான்” என்றான் கேலியாக.

“இல்லடா! இவன் மனசில் நினைக்க கூட தகுதியில்லாதவ அந்த பொண்ணு. சரியான திமிர் பிடிச்சவ” என்றான்.

“வேண்டாம் சுந்தர்! அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணை பற்றி தவறா பேச கூடாது” என்றான் வாசிம்.

அதை கேட்டு கோபத்துடன் “நீயும் தான் பார்த்தே இல்ல. நடுத்தெருவில அவ்வளவு கூட்டத்துக்கு நடுவில்..கொஞ்சம் கூட மரியாதையோ, பயமோ இல்லாம எவ்வளவு திமிரா பேசினா? கண்டிப்பா அவளெல்லாம் நல்லவளாகவே இருக்க முடியாது” என்றான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,676
1,400
113
அன்று நடந்தவைகள் கண்முன்னே வந்து போக “போனது போகட்டும் சுந்தர்! அவன் ஏதோ ஒரு மயக்கத்தில் இருக்கான். அது தானா கலைஞ்சு போயிடும். எப்படியும் ஆன்ட்டி விஸ்வாவுக்கு நல்ல பெண்ணா தான் பார்ப்பாங்க” என்றான் வாசிம்.

அவன் சொன்னதை ஒத்துக் கொண்டது போல் தலையசைத்து “ஆமாம்! அம்மா கண்டிப்பா அவனுக்கு பிடிச்ச மாதிரி நல்ல பெண்ணா தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க” என்றான் நிம்மதியுடன்.

இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த சிவாவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தான். தன்னையறியாமல் அவனுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

இவர்களின் பிரார்த்தனையை கண்டு மனதிற்குள் சிரித்த கடவுள் ‘எல்லோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அது தான் உலக நியதி. விஸ்வாவிற்கான நேரமிது. தனது துன்பத்தை இன்பமாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவனது சாமர்த்தியம்” என்று நினைத்துக் கொண்டார்.நிரஞ்சனின் இல்லம்..

ரேணு தன் புகுந்த வீட்டினரை வரவேற்க காலையில் சீக்கிரமாக எழுந்து அவர்களுக்கு தேவையான பலகாரங்கள் எல்லாம் தயார் செய்து கொண்டிருந்தாள்.

அலுவலகத்திற்கு கிளம்ப தயாராகி வந்த நித்யா சமையலறையை எட்டி பார்த்து இதழ்களில் தோன்றிய இகழ்ச்சி புன்னகையுடன் “ம்ம்..வரவேற்பு பலமா இருக்கு. பார்த்துக்கா! ரொம்ப கவனிச்சு இங்கேயே தங்கிட போகுதுங்க” என்றாள்.

அதை கேட்டு கோபமாக தங்கையின் புறம் திரும்பிய ரேணு “உனக்கு என்ன வேணும்? டிபன் எடுத்து டேபிளில் வச்சிருக்கேன்...சாப்பிட்டிட்டு கிளம்பு” என்றாள் வெறுமையான குரலில்.

தமக்கையின் குரலில் தெரிந்த விலகலில் பதறி வேகமாக அவளருகில் சென்று “என்னக்கா? என் மேல எதுவும் கோபமா? என்னவோ போல பேசுற?” என்றாள் பதட்டத்துடன்.

தங்கையின் பக்கம் திரும்பாமலே “நித்தி! எனக்கு நிறைய வேலையிருக்கு. தொந்திரவு பண்ணாம ஆபிஸ்-கு கிளம்பு” என்றாள்.

முதன்முறையாக அக்காவின் உதாசீனம் மனதை ஒருபுறம் வாட்ட, இன்னொரு புறம் தன்னை விட்டு விலக தொடங்குகிறாளோ என்கிற எண்ணம் எழத் தொடங்கியது. இந்த சமயத்தில் நிரஞ்சனின் பெற்றோர் வரவு வேறு மனதிற்குள் பயத்தை ஏற்படுத்தியது. முதல்நாள் தான் எடுத்த முடிவை நிறைவேற்றியாக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இனியும் தாமதித்தால் அக்கா முற்றிலுமாக தன்னை விட்டு பிரிந்து விடுவாள்/பிரித்து விடுவார்கள் என்று பயந்தாள்.

இப்படி மனதில் பல்வேறு எண்ணங்கள் சுழல...டேபிளில் வைத்திருந்த உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். அப்போது நிரஞ்சன் பரபரப்புடன் சமயலறைக்கு சென்று மனைவியிடம் பேசி விட்டு வந்தான். என்ன உணவு சாப்பிடுகிறோம் என்று கூட உணராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள்...அவன் தமக்கையிடம் இயல்பாக பேசி செல்வதையும், அவனது முகத்தில் தெரிந்த மகிழ்வையும் கண்டு மனதிற்குள் வசை பாட ஆரம்பித்தாள்.

‘என்ன ஒரு சந்தோஷம்! நீ நடத்து! கடைசியில் ஜெயிக்க போறது யார்-னு பார்ப்போம். நான் கூட இருக்கிறப்பவே அவளோட மனசை உன் பக்கம் திருப்பியிருக்க...இதில் உன் குடும்பத்து ஆட்கள் வேற வந்தாச்சுன்னா...அக்கா சுத்தமா மாறிடுவா. விடமாட்டேன்! எந்த காரணம் கொண்டும் என் அக்காவை உனக்கு விட்டு கொடுக்க மாட்டேன்’ என்று வெறி பிடித்தவள் போல் மனதில் சபதம் எடுத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்து விட்டு கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியில் வந்தாள்.

அந்நேரம் வாயிலில் கார் வந்து நிற்க..தனது கேப் தான் வந்துவிட்டதோ என்றெண்ணி அவசரமாக அதனருகில் சென்றாள். நெருங்கி சென்றதும் தான் அது தனது கேப் இல்லை என்று புரிய..நிமிர்ந்து பார்த்தபோது..கதவை திறந்து கொண்டு சுமதி இறங்கினார்.

அவரை பார்த்தபடி நின்றிருக்க...அவரோ வேகமாக அவளருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு “நல்லாயிருக்கியாடா நித்தி?” என்றார் பாசமாக.

அவருக்கு பதில் சொல்லும் முன்பு அவரை அடுத்து இறங்கிய உருவத்தைக் கண்டு அதிர்ந்து நின்றாள். மனமோ ‘இந்த கிழவி எதுக்கு இப்போ இங்கே வந்திருக்கு? எல்லாம் ஒரு பிளானோட தான் இருக்காங்க போலருக்கு. இனி, நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்’ என்று நினைத்தவள் “ம்ம்..இருக்கேன்” என்று சுமதிக்கு பதிலளித்தாள்.

நிரஞ்சனின் தந்தையும் அவளைப் பார்த்து விசாரிக்க, சிவகாமி பாட்டியோ அவள் ஒருத்தி அங்கே நிற்பதை பார்க்காதவர் போல..தன்னருகே வந்த பேரனிடம் பேச ஆரம்பித்தார்.

அதைக் கண்டு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள்.

நிரஞ்சனுக்குமே சிவகாமி பாட்டி வருவது தெரியாததால் மிகவும் மகிழ்வுடன் “பாட்டி! எப்படி இருக்கீங்க? இப்போவாவது இந்த பேரனை பார்க்கனும்-னு மனசு வந்துச்சே” என்றவன் அன்னையின் புறம் திரும்பி “ஏம்மா பாட்டி வர போறாங்கன்னு சொல்லல?” என்றான்.

சுமதி பதில் சொல்லும் முன்பு முந்தி கொண்ட பாட்டி “நான் தான் உங்க முகத்தில் வர சந்தோஷம்/அதிர்ச்சி எல்லாத்தையும் பார்க்கணும்-னு தான் சொல்ல வேண்டாம்-னு சொன்னேன்’ என்றவரின் பார்வை கேலியாக நித்யாவை தொட்டு மீண்டது.

அவரது பதிலை கேட்ட இவளுக்கு கோபத்தில் முகம் ஜிவு-ஜிவு என்று சிவக்க..மூச்சுகள் பெரிதாக எழுவதை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவர்..தன்னருகில் நின்ற ரேணுவிடம் “என்ன ரேணு எப்படியிருக்க? உன் புருஷன் ஏன் இத்தனை நாள் வரலேன்னு கேட்கிறான்? கொள்ளு பேரனையோ/பேத்தியோ பொறந்தா வரலாம்னு நானும் நாலு வருஷமா காத்துகிட்டு இருந்தேன்” என்றவர் ஓரக் கண்ணால் நித்தியை பார்க்க..அவளோ எரித்து விடுபவள் போல் பார்த்து வைத்தாள்.

பாட்டியின் பேச்சில் முகம் சுண்டி போன ரேணுவை கண்ட நிரஞ்சன் “முதலில் உள்ள வாங்க பாட்டி” என்று கைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

அவர்கள் அனைவரும் உள்ளே சென்றதும் அவர்களை தொடர்ந்த ரேணுவின் கையைப் பிடித்து நிறுத்திய நித்தி “எப்படி உன் மனசை நான் இருக்கும் போதே புண்படுத்துறாங்க பாருக்கா. வந்ததுமே ஆரம்பிச்சாச்சு. உனக்கு நான் இருக்கேன் அக்கா. நீ எதுக்கும் கவலைப்படாதே” என்று அவள் கைகளை வருடிக் கொடுத்து சமாதானப்படுத்தினாள்.

தங்கையின் கைகளில் இருந்து தனது கையை உருவிக் கொண்டவள் ‘அவங்க யாரும் என்னை காயப்படுத்தல நித்தி. எல்லாவற்றுக்கும் காரணமே நீ தான்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வெற்று பார்வை ஒன்றை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.

மனதில் கோபம் எரிமலையாக பொங்க தெருவை வெறித்துக் கொண்டு நின்றாள். அப்போது வாயில் அடக்கி வைத்திருந்த வெற்றிலை பாக்கு எச்சிலை துப்ப வெளியில் வந்த பாட்டி..அவளைக் கண்டு “அடியே! நட்டுவாக்கிளி! எப்படியிருக்க?” என்றார்.

அதைக் கேட்டு மேலும் கொதிநிலைக்கு போனவள் ஆழ மூச்செடுத்துக் கொண்டு தரை அதிர அவர் அருகில் சென்று “இந்தா கிழவி! என்ன குசும்பா? நானும் வந்ததிலருந்து பார்த்துகிட்டு இருக்கேன் ஜாடை மாடையா பேசிட்டு இருக்க?” என்றாள் ஆங்காரத்துடன்.

அவள் பேசுவதை தாவங்கட்டையில் கைகளை வைத்துக் கொண்டு அதிசயமாக பார்த்த பாட்டி “உனக்கு நட்டுவாக்கிளி-னு சரியா தாண்டி பேர் வச்சிருக்கேன். என்னா கொட்டு கொட்டுற?சரி! அதை விடு! என் பேரன் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு,நல்லா கொழுப்பு ஏறி தான் கிடக்கு” என்றார் கேலியாக.

அதை கேட்டவள் “இது எங்க அக்கா வீடு!” என்றாள் அழுத்தமாக.

கழுத்தை திருப்பி முகவாயை தோளில் இடித்துக் கொண்டவர் “உங்க அக்கா என் பேரன் பொண்டாட்டி. அது ஞாபகம் இருக்கா” என்றார் இடக்காக.

அவளோ பாட்டியை எதிர்த்து பேச வேண்டும்..தன் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் “எங்க அக்கா வீடு என் வீடு மாதிரி எல்லா உரிமையும் எனக்கு உண்டு” என்றாள்.

“ஓஹோ..அப்போ சரி என் சோலி சீக்கிரமா முடிஞ்சு போயிடும். நான் கூட ரொம்ப கவலைபட்டுட்டுகிட்டு இருந்தேன்” என்றார் கிண்டலாக.

அவர் என்ன சொல்கிறார் என்று புரியாதவளாக “என்ன சோலி” என்றாள் கேள்வியாக.

“உனக்கு மாப்பிள்ளை பார்க்கிற சோலியை தான் சொன்னேன். நீயே தான் இப்போ சொல்லிட்டியே எங்க அக்கா வீடு என் வீடுன்னு. ஒரு நல்ல நாளா பார்த்து நிரஞ்சனை உன் கழுத்தில் தாலியை கட்ட சொல்லிப்புடுவோம். அக்காளும், தங்கச்சியும் பிரியாம ஒரே வீட்டில் ஒண்ணா இருக்கலாம்” என்று அசராமல் சிக்ஸர் அடித்தவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

அவர் சொல்லிச் சென்ற செய்தி புரிய ஒரு நிமிடம் எடுத்தது. அதன் அதிர்விலிருந்து மீண்டவள் மிகுந்த கோபத்துடன் கால்களை தரையில் உதைத்து ‘எங்க அக்காவையே இவன் கிட்ட இருந்து பிரிக்கணும்னு நான் சொல்லிட்டு இருக்கேன். இந்த கிழவிக்கு லந்தை பாரேன். என்னையும் கட்டி வைக்குதாமில்லை’ என்று நினைத்தவள் ‘முதலில் இந்த கிழவியை இங்கே இருந்து கிளப்பணும்’ என்று எண்ணிக் கொண்டாள்.