அத்தியாயம் - 3
வளைகாப்பு அழைப்பிதழில் பார்வையை ஓட்டியபடி, மொறுமொறுவென்று பொன்னிறத்திலிருந்த வடையை, சட்னியில் தோய்த்து வாயில் இட்டுக் கொண்டாள் வைஷ்ணவி. “இப்போதான் கல்யாணம் ஆனது போலயிருக்கு. அதுக்குள்ள, ஒரு வருஷம் ஆகப்போகுதும்மா!” என்று சிரிப்புடன் சொன்னாள்.
“ம்ம், காலம் யாருக்காகவும் நிக்கிறதில்ல” என்ற கற்பகம், “அவள் உன்னைவிட ரெண்டு வயசு சின்னவ” என்றார் அழுத்தமான குரலில். வடையை மென்றபடி ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்தவள், தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.
அவரும், மகளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். தந்தையும், தாயும் கூட்டணி அமைத்துவிட்டனர் என்று உணர்ந்துகொண்டவள், அன்னையின் பக்கமாகத் திரும்பினாள்.
“அம்மா! எல்லோரும் இருபது வயசுல கல்யாணம் செய்து, இருபத்தோரு வயசுல குழந்தை பெத்துக்கணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்ல. கல்யாணம் தான் ஒரு பொண்ணோட வாழ்க்கையை முழுமையாக்குதுன்னு இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடாதீங்க ப்ளீஸ்!” என்றவளை முறைத்துப் பார்த்தார் கற்பகம்.
“இப்போ முடிவா என்ன சொல்ற?” என்று கேட்ட மனைவியின் கரத்தைப் பற்றினார் சோமநாதன்.
‘நான் பேசிக்கொள்கிறேன்’ என்பதைப் போல ஒரு பார்வையை வீசியவர், மகளிடம் திரும்பினார். “வைஷும்மா! உன்னோட இலட்சியம் உனக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பெத்தவங்களா, எங்களுக்கும் சில கடமைகள் இருக்குமா” என்றார் பொறுமையுடன்.
“நீங்க சொல்றது எனக்குப் புரியுதுப்பா! ஆனா, நான் இன்னும் அந்த மைண்ட் செட்டுக்கு வரல. எனக்குன்னு விருப்பு வெறுப்பு இருக்கு. நேத்து வரைக்கும் யாருன்னே தெரியாதவன் கையால தாலியைக் கட்டிக்கிட்டு அவனையும், அவன் குடும்பத்தையும் சகிச்சிட்டு, எல்லோருடனும் அட்ஜஸ்ட் பண்ணி, விட்டுக் கொடுத்துக்கிட்டு, பிடிக்கலனாலும் அவங்ககிட்டப் போலியா பழகன்னு என்னால வாழ முடியாதுப்பா! புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்!” என்றாள் சற்றே எரிச்சலுடன்.
“வைஷும்மா! நீ ஏன்டா இப்படி மனசைக் குழப்பிக்கிற? உன் பாட்டியெல்லாம் கூட விட்டுடு, உன் அம்மாவை எடுத்துக்கோ. உன் அத்தை, சித்திகளை எடுத்துக்க எல்லோருமே தெரியாத ஒரு ஆணைத் தான் கல்யாணம் செய்து இன்னைக்கு வரைக்கும் சந்தோஷமா இருக்காங்க. இத்தனைக்கும், இவங்களெல்லாம் உன் அளவுக்குப் படிக்கல. உனக்கு இருக்க எக்ஸ்போஷர் அவங்களுக்குக் கிடையாது. நீ மட்டும் இல்ல வைஷு, ஆண்களும் இப்போ எவ்வளவோ விட்டுக்கொடுத்து, புரிஞ்சிகிட்டு நடந்துக்கறாங்க. எங்க காலத்திலாவது எங்க வீட்டுப் பெரியவங்களுக்குப் பயந்துகிட்டு நாங்க வீட்டம்மா பேச்சு சரியா இருந்தாலும், அதை ஏத்துக்க முடியாத சூழல்ல இருந்தோம். இன்னைக்குக் காலகட்டத்துல பேரண்ட்ஸே அதை ஆதரிக்கத் தான் செய்றாங்க. இவ்வளவு ஏன் நம்ம ஹரிணி, ஜனனியோட மாமியாருங்களையே எடுத்துக்கோ. என் அம்மாவை விட, எனக்கு என் மாமியார் தான் மாமா ஃபுல் சப்போர்ட்ன்னு ரெண்டு பேருமே பெருமையா சொல்றாங்க. எல்லாமே நாம எடுத்துக்கற விதத்துல தான் கண்ணா இருக்கு. கடமையேன்னு நினைச்சா எல்லாமே சுமை தான். அதையே விருப்பத்தோட செய்து பாரு, நிச்சயமா சந்தோஷத்தைக் கொடுக்கும். விட்டுக் கொடுக்கற யாரும், கெட்டுப் போகறது இல்லம்மா. அது தப்பான விஷயமும் இல்ல. நம்முடைய வாழ்க்கையைத் திகட்டத் திகட்ட அனுபவிச்சிடணும். எப்பவும் வேலை, மதிப்பு, மரியாதைன்னு அது பின்னாலேயே ஓடக்கூடாது. வாழ்க்கை சுலபமா இருக்கணுமே தவிர, சுமையா மாறக்கூடாது. உன்னோட இலட்சியங்களை மதிக்கிற கணவன் உனக்கு வரலாம். உன்னைவிட, அவனுக்கு உன் மேல அக்கறை இருக்கலாம். நீ பாசத்தைக் காட்டினா, திரும்ப உனக்கு அந்தப் பாசம் தான் கிடைக்கும். வாழ்க்கைங்கறது கண்ணாடி மாதிரி. நாம கொடுக்கறதைத் தான் திரும்ப வாங்கிக்குவோம்” என்றார் நிதானமாக.
எதுவும் பேசாமல் மௌனமாக தந்தையின் வார்த்தைகளை மனத்திற்குள் ஏற்றிக் கொண்டிருந்தாள். பாசமான பெற்றோர், அன்பான உறவுகள் அவளைச் சுற்றிலும் இருந்தாலும், தனது நெருங்கிய நட்பு வட்டத்தில் பேச, பகிரப்படும் கருத்துக்களும், செய்திகளும் அவளுக்கு உவப்பானதாக இல்லை. திருமணத்தின் மீது வெறுப்பைப் படரச் செய்திருந்தன.
அவளது அலுவலகத்திலேயே அவள் அன்றாடம் காணும், அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் வகையறா காதல்கள், ஒரே வாரத்தில் திசைக்கு ஒன்றாக பிய்த்துக் கொண்டு போன சம்பவங்களும், தனிப்பெருங்காதலால் இணைந்து வாழும் இணையர்களின் காதல்கள் நடுத்தெருவில் சந்திச் சிரித்த நிகழ்வுகளையும் அவள் அறியாததா?
தந்தை சொல்வதைப் போல, தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவன், என்மீது உயிரையே வைக்கலாம். அது ஒரு நம்பிக்கை மட்டுமே. அவனது கடந்த காலம் தனக்குத் தேவையற்றது என்று தன்னால் இருக்க முடியாது என்று திடமான எண்ணம் கொண்டிருந்தாள்.
திருமணத்தின் மீதான நம்பிக்கையை இழந்திருந்தவளுக்கு, தந்தை கூறியதைக் கேட்டதும் தலை சுற்றியது. ஒரு முடிவிற்கு வர முடியாமல், மௌனத்தைத் தத்தெடுத்திருந்தாள்.
மகளின் தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்த கற்பகம், “வேலை வேலைன்னு கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்டு ஓடாதே வைஷு. வேலை முக்கியம் தான். ஆனா, வேலைதான் எல்லாமேன்னு இருந்தா, வண்டி மாடு மாதிரி ஆகிடுவ. இப்போ நாங்க இருக்கோம். உன் விருப்பப்படி இருக்கற. இன்னும் பத்து வருஷம் கழிச்சிப் பார்த்தா, ஆரம்பிச்ச இடத்திலேயே வந்து நிற்ப” என்று எடுத்துச் சொன்னார் கற்பகம்.
ஆயாசத்துடன் நிமிர்ந்தவள், “இப்போ, என்னை என்னம்மா செய்யச் சொல்றீங்க?” என்று சலிப்புடன் கேட்டாள்.
“நாம இந்த உலகத்துக்கு வரும்போது தனியா தான் வரோம். போகும் போதும் அப்படியே தான் போகப் போறோம். ஆனா, இடைப்பட்ட வாழ்க்கைல நமக்குன்னு வர்ற சொந்தத்தை, சந்தோஷத்தை, பொறுப்பையெல்லாம் உதறித் தள்ளக் கூடாது கண்ணம்மா! ஒரு நேரம் இல்லனாலும், ஒரு நேரத்துக்கு எல்லோருடைய ஆதரவும், அன்பும் நமக்குத் தேவைப்படும். பத்து நாள் லீவ் போடு. ஊருக்குப் போவோம். உனக்கும் ஒரு மாற்றமா இருக்கும். மனசும் தெளியும்” என்றார் கற்பகம் ஆதூரத்துடன்.
யோசித்தவளிடம், “பத்து நாள் இல்லனாலும், ஒரு வாரமாவது போய் வரலாம் கண்ணா!” என்று அன்புடன் சொன்னார் சோமநாதன்.
தந்தையையும், தாயையும் மாறி மாறிப் பார்த்தாள். அவர்களது கண்களில் தெரிந்த ஆர்வத்தையும், ஆவலையும் கண்டவளுக்கு மறுக்க மனம் வரவில்லை. அரைமனத்துடன் தலையை அசைத்தவள், “சரிப்பா போகலாம்” என்றாள்.
பெரியவர்கள் இருவரும் சந்தோஷத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அங்கே சென்றபின், தன் வயதொத்த பெண்களிடம் பேசிப் பழகினால், அவளும் சற்று மாறுவாள் என்ற நம்பிக்கை கற்பகத்திற்கு உண்டானது. படிப்பு, படிப்பு என்றிருந்தவளை, விடுமுறை நாட்களில் பத்து நாளைக்காவது சொந்த பந்தத்துடன் பழக வைத்திருக்க வேண்டும் என்று இப்போது அவருக்குத் தோன்றியது.
தொடரும்.....