அன்பென்ற மழையிலே!- கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் - 4

“கடைசி நேரத்துல, இவ இப்படித் தான் ஏதாவது செய்வான்னு எனக்கு அப்பவே தெரியும்” கணவரிடம் எரிச்சலுடன் பொருமிக் கொண்டிருந்தார் கற்பகம்.

“சரிம்மா! வேணும்னா வராம இருக்கா? அவளோட வேலை அப்படி. அவளும் தான் வர ஆசையா இருந்தா. என்ன செய்யறது?” என்ற கணவரை முறைத்தார்.

“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிருங்க. அப்புறம் நான் சொல்றதை அவள் எப்படி மதிப்பா?” என்றவரது முகம் கடுகடுவென இருந்தது.

“திரும்பத் திரும்பப் புலம்பிட்டு இருக்காதே. ரெண்டு நாள்ல வந்திடுறேன்னு சொல்லியிருக்காயில்ல. வந்திடுவா. வரலன்னா, நானே அவளைக் கேட்கறேன்” என்றார் சற்றுக் காட்டமாக.

“ம்க்கும்! அப்படியே கேட்டுட்டாலும்” என்று நொடித்துக் கொண்டவர், “கேட்கற லட்சணம் எனக்குத் தெரியாதாக்கும்?” என்று முணுமுணுத்துக் கொண்டார்.

“சரி சரி. முகத்தைக் கொஞ்சம் சிரிச்சது போல வச்சிக்க. பத்து நிமிஷத்துல வீடு வந்திடும்” என்றார் சோமநாதன்.

“ம்ம் தெரியும்” என்றார் மிடுக்காக. டாக்ஸி வந்து நிற்கும் சப்தம் கேட்டு வெளியே வந்த வளர்மதி, “வாங்க அண்ணே!” என்று முகம் கொள்ளா சிரிப்புடன் வாய் நிறைய அழைத்தார்.

“அண்ணி எப்படி இருக்கீங்க?” என்று காரிலிருந்து இறங்கியவரை, “கற்பகம் வாவா. அண்ணன் வீட்டுக்கு வர இப்போதான் உனக்கு வழி தெரிந்ததா?” என்று உரிமையுடன் கேட்டார் வளர்மதி.

“எப்படிம்மா இருக்க?” என்று விசாரித்த சோமு, எதிர்கொண்டு அழைத்த மைத்துனரிடம் பேசச் செல்ல, வளர்மதி நாத்தனாரை உள்ளே அழைத்துச் சென்றார்.

வளர்மதி, கற்பகத்தின் அண்ணன் மனைவி. மாமியார் இல்லாத குடும்பத்தைத் தனது குடும்பமாகவும், கணவனின் தம்பி, தங்கைகளைத் தனது உடன்பிறந்தவர்களாகவும் வரித்துக் கொண்டவர். இருவரும் அண்ணன் மனைவி, நாத்தனார் என்ற பாகுபாடில்லாமல் தோழிகளைப் போல உறவாடிக் கொள்வர்.

“அத்தை!” என்றழைத்தபடி வந்த ஹரிணி, “என்னத்த இந்த முறையும் டிமிக்கிக் கொடுத்துட்டாளா வைஷு” என்று கேட்டாள் சிரிப்புடன்.

“நாளன்னைக்கு வந்திடுவா ஹரிணி. அவசரமா அவங்க ஹெட் ஆஃபிஸ்லயிருந்து மெயில் வந்தது. இவள் போனாதான் விஷயம் ஈஸியா முடியும்ன்னு இவளை அனுப்பியிருக்காங்க” என்ற கற்பகத்தின் முகத்தில் அவ்வளவு பெருமை.

மைத்துனருடன் பேசிக்கொண்டிருந்த சோமநாதன் கிண்டலான ஒரு பார்வையை மனைவியின் பக்கம் வீசினார். இதைப் போல எவ்வளவு முறை பார்த்திருப்பேன் என்று கற்பகமும் பார்வையாலேயே சொல்லாமல் சொன்னார்.

உறவுகளைப் பார்த்தச் சந்தோஷத்தில் கற்பகம், மகளைப் பற்றிய கவலையைச் சற்றுநேரம் மறந்தார். ராஜேஷிற்கு ஒரு வரன் அமைந்திருப்பதாகவும், வளைகாப்பு முடிந்த மறுநாள் அனைவரும் சென்று பார்த்துவிட்டு வருவதென்றும் முடிவானது.

இரவு ஹரிணியும், ஜனனியும் வாட்ஸ் ஆப் கான்ஃப்ரன்ஸ் காலில், வைஷ்ணவியை பிடிபிடியென பிடித்துக் கொண்டனர்.

“ஏய்! வராம ஏமாத்தலாம்ன்னு நினைக்காதே. அப்புறம் உன்கிட்டப் பேச்சே வச்சிக்க மாட்டேன். சொல்லிட்டேன்” என்று கடுப்புடன் சொன்ன ஜனனியை, சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது வைஷ்ணவிக்கு.

“கண்டிப்பா நாளன்னைக்கு வந்திடுவேன். ராஜேஷுக்குப் பெண் பார்க்கப் போறதா அம்மா சொன்னாங்களே. அதுக்காகவே வருவேன்” என்றாள் சிரிப்புடன்.

“வா வா. அண்ணனை ஒரு வழி பண்ணுவோம். அண்ணனைச் சமாளிக்க நீதான் கரெக்ட்டான ஆள்” என்றாள் ஹரிணி.

“ம்க்கும்! இவதான் நம்ம அண்ணியா வருவான்னு, நான் என் வீட்டுக்காரர்கிட்டக் கூடச் சொல்லிட்டு இருந்தேன். கடைசில இதுங்க ரெண்டும் சேர்ந்து எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்தாங்க” என்று அலுப்பும் சலிப்புமாகச் சொன்னாள் ஜனனி.

அவளது வார்தைகள் வைஷ்ணவிக்குச் சிறு சங்கடத்தை உண்டாக்கினாலும், சட்டெனச் சமாளித்துக் கொண்டாள். “ம்ம், இவ அண்ணியா வந்தா இங்கேயே டேரா போட்டு வேலை வாங்கலாம்ன்னு நினைச்சிருப்ப. அதுக்கு நாங்க இடம் கொடுக்கல இல்ல” என்று கிண்டலாகச் சொன்னாள்.

“ஆமாமாம். நீ அப்படியே வேலை செய்துட்டாலும்… எங்களுக்குத் தெரியாதா உன்னை? நீ வேணா பாரு, ரெண்டு மாமியார். நாலு நாத்தனார் இருக்க வீட்ல தான் உனக்கு மாப்பிள்ளை அமையப் போகுது” என்றாள் ஜனனி.

“அது சரி. நான் பார்த்து ஓகே சொன்னா தான் எங்க அப்பா கல்யாணத்துக்கு ஒத்துப்பார்” என்றாள் அவளும் விடாமல்.

“ஏற்கெனவே, என் ராஜகுமாரிக்கு ஏத்த ராஜகுமாரன் எங்கிருந்தாலும் வருவான்னு சொல்லிட்டு இருக்கார் மாமா. ஆக மொத்தத்தில் இவங்க ராஜ குமாரன் இல்ல, இவளுக்கு கூஜா தூக்கற ஆளைத் தான் பார்ப்பாங்க” என்றாள் ஹரிணி கிண்டலாக.

“நியாயமான விஷயத்துக்கு கூஜா தூக்கினா தப்பில்ல” என்றாள் வைஷ்ணவி வீராப்புடன்.

“எல்லோருக்கும் ஒரே விஷயம் நியாயமா படுமா என்ன?” என்ற ஜனனியை முறைத்தாள்.

“முறைக்காதே. உண்மையைச் சொல்றேன்” என்றாள் ஜனனி. சில நொடிகள் அமைதியாக இருந்த வைஷு, “உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கல்யாணம் செய்துக்கறதுல இப்போதைக்கு விருப்பம் இல்ல” என்றாள்.

“ஏண்டி! இன்னும் எவ்வளவு நாளைக்கு இதையே சொல்வ? எல்லாமே நம்ம விருப்பத்துக்கு நடக்கும்ன்னு எதிர்பார்க்க முடியாதில்ல” என்றாள் ஹரிணி.

“அதனால தான் நான் எந்த எதிர்பார்ப்பும் வச்சிக்கல” என்றாள் மென்குரலில்.

“மனசு இருக்கில்ல… அது நிலையா எப்பவும் இருக்காது. உனக்குப் பிடிக்கறது போல ஒரு ஆளைப் பார்க்கற வரை, நீ இப்படித் தான் பேசிட்டு இருப்ப. சீக்கிரமே அப்படி ஒருத்தன் உன் கண் முன்னால வந்து நிற்கட்டும்” என்றாள் ஹரிணி சிரிப்புடன்.

“நீ வாழ்த்து சொல்றியா? இல்ல…” என்று இழுத்தாள்.

“தேவதைகள் ததாஸ்து சொன்னது உனக்குக் கேட்கலாயா வைஷு” என்ற ஜனனியைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.
 

Shanti kamalnath

New member
Jun 21, 2018
5
6
3
ரொம்ப ஆவலோடு காத்திருக்கேன் வைஷூவின் ஜோடிக்காக.. இப்ப உள்ள நிறைய பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதே பெரிய சவால். எவ்வளவோ சாதிச்சாலும் என்னவோ? கல்யாணமட்டும் ஆயுதண்டனையா தெரியுது.. காலம் எவ்வளவோ மாறிடுச்சு.. பார்ப்போவைஷூவோட மனசை மாத்த யாரும் வராபோகப்போறாங்க?? அருமை ஷெண்.....
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் - 5

போனைத் துண்டித்துவிட்டு படுக்கையில் சாய்ந்த வைஷ்ணவிக்கு ஏதேதோ எண்ணத்தால் மனம் குழம்பித் தவித்தது.

கல்லூரியை முடிக்கும் வரை, அவளுக்குள் பெரிதாக எந்தக் கல்யாணக் கனவுகளும் இல்லாவிட்டாலும், உடன் படித்தத் தோழிகளின் திருமணம் அதனால் விளைந்த பேச்சு என்று அவளுக்குள்ளும் வண்ணக் கனவுகள் மின்னத் தான் செய்தன. அவள் இறுதியாண்டை முடித்தபோது, அவளுடன் தோழிகளில் நால்வருக்குத் திருமணம் முடிந்திருந்தது. அவர்களில் ஒருத்தி குடும்பச் சாகரத்தில் உண்டான சூறாவளிகளில் சிக்குண்டு உறவுச் சிக்கலில் தவிப்பதையும், மற்ற இருவரில் ஒருத்தி கணவனைப் பிரிந்து விட்டதையும் அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. மூவருமே மிகவும் தெளிவாகச் சிந்திக்கக் கூடியவர்கள். தைரியமாக சூழ்நிலையைக் கையாளும் திறமை கொண்டவர்கள். கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தவர்கள். ‘அவர்களுக்கா இந்நிலை!’ என்று ஆச்சரியத்துடன் சிறு தடுமாற்றமும் ஏற்பட்டது.

கற்பகம், அவளுடைய கல்யாணப் பேச்சை எடுத்த போதெல்லாம், ஏதோ ஒரு அவஸ்தை மனத்தில் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இயல்பாகவே படிப்பில் படுசுட்டியாக இருந்தவள் மேற்கொண்டு படிக்கப் போகிறேன் என்றதும், சோமநாதனும் மறுபேச்சில்லாமல் சம்மதித்தார்.

திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் மகளிடம் தெரியும் மாறுதலை, கற்பகம் கவனித்துக் கொண்டே இருந்தார்.

“ஏன்டி! எவனையாவது லவ் பண்றியா என்ன? அப்படியிருந்தா சொல்லு, பேசி முடிச்சிடறோம்” என்ற அன்னையை முறைத்தவள், “பொண்ணுகிட்டப் பேசறது போலப் பேசும்மா” என்றாள் எரிச்சலுடன்.

‘இவள், காதல் கீதல் என்று வந்து நின்றால், தனது அண்ணன், அண்ணியின் முகத்தில் விழிக்க முடியாமல் போய்விடுமோ!’ என்ற அச்சத்தில் இருந்தவருக்கு, மகளின் பேச்சு பெரும் ஆறுதலாக இருந்தது.

தனது அண்ணன் வீட்டிலும், பெண்கள் இருவரையும் திருமணம் செய்து கொடுத்த பின்பே மகனின் திருமணத்தை முடிக்க இருந்ததால், அதுவரை வைஷு படிக்கட்டும் என்று சொல்லிவிட்டதால் அவரும் அமைதியாக இருந்தார்.

ஹரிணியின் திருமணம் முடியும் வரை தன்னை, ராஜேஷிற்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் இரு குடும்பத்தினருக்கும் இருப்பதை அவர்கள் இருவருமே அறியவில்லை.

திருமணம் முடிந்த மறுநாள், ஹரிணியின் புகுந்த வீட்டினர், ‘தங்கள் உறவில் இருந்த பெண்ணை, ராஜேஷிற்குப் பேசலாமா?’ என்று கேட்டனர்.

தயாளனும் உடனே எப்படி முடியாது என்று சொல்வதென சமாளிப்பாகச் சிரித்து மழுப்ப, ‘என் நாத்தனார் பொண்ணு வைஷுவை, ராஜேஷுக்குப் பேசியிருக்கோம் சம்மந்தி. வீட்டுப் பெரியவங்களோட விருப்பம் அதான். அவங்க இல்லனாலும், அவங்களோட விருப்பத்தை நிராகரிக்க முடியாதில்லயா!” என்று பளிச்சென சொல்லிவிட்டார் வளர்மதி.

பெரியவர்கள் அத்துடன் அந்தப் பேச்சை விட்டுவிட்டனர். ஆனால், ராஜேஷ், வைஷுவிற்கு மட்டுமல்ல, அந்த வீட்டுப் பெண்கள் இருவருக்குமே அப்போது தான் விஷயம் தெரிந்தது.

ஹரிணி அருகிலிருந்த வைஷுவை, “அடி அண்ணி! என்கிட்டச் சொல்லவே இல்லயே நீ!” என்று அவளை அணைத்துக் கொள்ள, “ஹப்பா! அக்கா நீ எப்போ வேணாலும், எத்தனை நாள் வேணும்னாலும் அம்மா வீட்டுக்கு வந்து டேரா போட்டுக்கலாம். நம்ம வைஷு தானே அண்ணி!” என்றாள் சிரிப்புடன்.

“ஆமாம். நான் மட்டும் அம்மா வீட்டுக்கு வருவேன் நீ வரமாட்ட பாரு” என்று நறுக்கென தங்கையின் கரத்தைக் கிள்ளினாள்.

“அத்தான்! இந்த அக்காவைப் பாருங்க என்னைக் கிள்றா!” என்று தனது அத்தானிடம் அவள் குற்றப்பத்திரிகை வாசிக்க, “சும்மா இருடி!” தங்கையின் கையைப் பிடித்து இழுத்தாள் ஹரிணி.

இவர்களது சந்தோஷக் கலாட்டாவில் கலந்து கொள்ளாமல் தீவிர யோசனையில் இருந்த வைஷு, நிமிர்ந்து ராஜேஷைப் பார்த்தாள்.

அவனோ, தனது தந்தையிடம் எதைப் பற்றியோ தீவிர பாவனையுடன் பேசிக்கொண்டிருந்தான். அன்னையையும், தந்தையையும் அவளது விழிகள் தேடின. அனைவருமே அங்கேயே தான் இருந்தனர். ஆனால், இப்போது யாரிடமும் தனிமையில் பேச முடியாத சூழ்நிலை. வேறு வழியில்லாமல் தனக்கான நேரத்திற்காகக் காத்திருந்தாள். ஆனால், அன்று அவளுக்கு அந்தத் தனிமை கிடைக்கவே இல்லை.

ஹரிணியை பெங்களூருவில் இருந்த மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போதும் கற்பகத்தையும், அவரது கணவரையும் உடன் சென்று வரச்சொல்ல, வைஷுவிற்கு ஏமாற்றமாக இருந்தது. தன் மனத்தில் ராஜேஷின் மீது இருப்பது பாசம் தானே தவிர, நேசம் அல்ல என்று பெற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற வேகம் எழ தங்களது அறைக்குச் சென்றாள்.

“அம்மா! உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள். “என்னடி? சீக்கிரம் சொல்லு” என்றபடி தனது உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தார். அவள் வாயைத் திறப்பதற்குள் அங்கே வந்த வளர்மதி, “வைஷு இங்கேயா இருக்க. உன்னை ஹரிணி கூப்பிடுறா பாரு” என்றவர் நாத்தனாரிடம் ஏதோ பேசத் துவங்க, ‘இனி இது சரிபடாது’ என்று எண்ணியவளாக வெளியே சென்றாள்.

தந்தையைத் தேடினாள். அவர் வெளியே காரைத் துடைத்தபடி அந்த வீட்டுச் சம்மந்தியுடன் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார். ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டவள் உள்ளே செல்லத் திரும்ப, பின்னாலிருந்த சமையல் பாத்திரங்களைக் கவனிக்காமல் இடித்துக்கொண்டு தடுமாறியவளை பின்னாலிருந்து பற்றி நிறுத்தினான் ராஜேஷ். “ஹேய்! பார்த்து. என்ன கனவு கண்டுட்டு நடக்கற” என்றான் கிண்டலாக.

அவனைக் கண்டதும், ‘இவனிடமே தன் மனத்தில் இருப்பதைச் சொல்லிவிட வேண்டியது தான்’ என்று எண்ணிக்கொண்டு அவனிடம் பேச முயல, அதற்குள் யாரோ அவனை அழைத்தபடி அங்கே வர, அவருடன் பேசியபடியே வெளியே சென்றான்.

ஏமாற்றம் ஒருபுறம், எரிச்சல் ஒருபுறம் என அவள் நின்றிருக்க, “நியாயமான கோபம் தான். ஆனா, இப்படிக் கும்பல்ல நின்னு எப்படி ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ண முடியும்?” என்ற ஜனனியைத் திரும்பி முறைத்தாள்.

“சரி சரி. வா. அக்கா உன்னைக் கூப்பிடுறாங்க” என்று அவளது கையைப் பிடித்து இழுத்துச் செல்ல, வேறு வழி இல்லாமல் அவளுடன் நடந்தாள். மனத்திற்குள் முனகியபடி அவளுடன் நடந்தாள். ஆனால், அவள் எதிர்பார்த்தத் தனிமையை வளர்மதியே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.