அன்பென்ற மழையிலே!- கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
197
410
63
அடுத்த பதிவு எப்போது ஷெண்பா சிஸ்
முடிந்த அளவு விரைந்து வருகிறேன் சிஸ்!
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
197
410
63
அத்தியாயம் - 7வேலைகளை முடித்துவிட்டு நாத்தனாருக்கு அருகில் வந்து அமர்ந்த வளர்மதி, “என்ன கற்பகம் வந்ததுல இருந்து பார்க்கறேன்… என்னவோ போல இருக்க?” என்று கேட்டார்.

தனது மனத்திலிருப்பதைச் சொல்லிப் புலம்ப ஆள் கிடைத்துவிட்டதில் ஆறுதல் அடைந்தவராக, மகளைப் பற்றிய கவலையை அவரிடம் கொட்டினார்.

“வைஷுவை நினைச்சாத்தான் கவலையா இருக்கு அண்ணி! கல்யாண பேச்சை எடுத்தாலே அவளோட இயல்பே மாறிடுது. தன் மனசுல என்ன இருக்குன்னும் சொல்ல மாட்டேன்றா. எவனையாவது லவ் பண்றியான்னும் கேட்டேன். அதுக்கும் முறைக்கிறா” என்றார் ஆற்றாமையுடன்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டபடி அருகில் வந்து அமர்ந்த ராஜேஷ், “அப்படியெல்லாம் ஏதாவது இருந்தா, அவளே உங்ககிட்டச் சொல்லிடுவா அத்தை! மனசைப் போட்டுக் குழப்பிக்காதீங்க” என்றான் அன்புடன்.

“சரியாகிடும் கற்பகம். எல்லா பொண்ணுங்களும், கல்யாணம்ன்னு சொன்னதும் சரின்னு சம்மதிச்சிடுறது இல்ல. அவளுக்கு ஏதாவது குழப்பமா கூட இருக்கலாம். அதோடு, எல்லாத்துக்கும் நேரம் காலம்ன்னு ஒண்ணு கூடி வரணும். நான் பேசிப் பார்க்கிறேன்” என்றார்.

“ம்ம், நீங்களே பேசுங்க. அப்படி ஏதாவது குழப்பம் இருந்தாலும், அவள் என்கிட்டப் பேசியிருக்கலாம். அதுக்கான சுதந்திரத்தோட தானே அவளை வளர்த்திருக்கோம்” என்றார்.

“ஆயிரம் தான் படிச்சிருந்தாலும், தைரியமா இருந்தாலும் எல்லாத்தையும் பிள்ளைங்க பெத்தவங்ககிட்டச் சொல்லிடுறது கிடையாது. பர்ஸனல் ஸ்பேஸ், மண்ணாங்கட்டின்னு அவங்களுக்குள்ள ஒரு வட்டத்தைப் போட்டுக்கிட்டு, பெத்தவங்களை அதில் விடமாட்டாங்க” என்றார் மதி.

“நாமெல்லாம் கல்யாணம் செய்துக்கலையா? குடும்பம் நடத்தலையா? என்னமோ! இந்தப் பிள்ளைங்க மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சிக்கவே முடியல. எல்லாத்தையும் உன் காலடில வச்சிடுறேன் கடவுளேன்னு நினைச்சிக்கிட்டாலும், இவளை நினைச்சாலே பயம்தான் வருது” என்று தன் மனத்திலிருக்கும் அச்சத்தின் வெளிப்பாடாக அவரது குரல் ஒலித்தது.

நாத்தனாரின் கவலையில் பங்குகொண்டிருந்த வளர்மதிக்கு, “நேரம் காலம் வந்தா, தானா தகையும். அதையே நினைச்சிட்டு இருக்காம நிம்மதியா இரு” என்றார்.

மனத்தில் இருந்ததைக் கொட்டியதில் கற்பகத்திற்கு சற்று ஆறுதலாக இருக்க, “சரிங்க அண்ணி! நான் போய்ப் படுக்கறேன். இல்லனா, கொஞ்ச நேரத்துல எனக்கு அழைப்பு வந்திடும்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “கற்பகம் நேரமாகுதே தூங்க வரலயா?” என்று சோமநாதனின் குரல் வர, பெண்கள் இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

கற்பகம் சென்றதும், “உன் அத்தையும், மாமாவும் ரொம்பப் பாவம். கற்பகம் புலம்பிட்டா. அண்ணன் மனசுக்குள்ளயே வச்சிட்டு அல்லாடுறார். அவங்களுக்காகவாவது இந்த வைஷுவை எப்படியாவது பிடிச்சி உட்கார வச்சிப் பேசணும்” என்ற வளர்மதியின் வார்த்தையில் உறுதி தெரிந்தது.

“அம்மா! எனக்கு ஒரு யோசனை… சொன்னா நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியல?” என்றான் தயக்கத்துடன்.

“முதல்ல விஷயத்தைச் சொல்லு” என்றார் அவர்.

“வைஷுவை நம்ம ஸ்ரீக்குப் பார்க்கலாமா?” என்றான்.

விழிகள் மின்ன மகனைப் பார்த்த வளர்மதி, “நானும், உன் அப்பாவும் கூட இதைப் பத்தி ஒரு தடவை பேசினோம். ஆனா, அவள்தான் பிடி கொடுக்கவே மாட்டேன்றாளே!” என்று சிறு தாங்கலுடன் சொன்னவர், “ஆனா…” என்று இழுத்தார்.

“அம்மா! நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? இப்போலாம் உலகம் ரொம்ப முன்னேறிடுச்சி. இண்டட்காஸ்ட் மேரேஜ்லாம் சர்வ சாதாரணம். அங்கிளும், ஆண்ட்டியும் அவனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாமே கூடி வருது. ஜனனி வளைகாப்புக்கு அவங்க வரேன்னு சொல்லியிருக்காங்க. வைஷுவைப் பார்த்தால் அவங்க நிச்சயம் மறுக்கப் போறது இல்ல. அதுவும், அவனை மாதிரி ஒருத்தன் நம்ம வைஷுக்கு லைஃப் பார்ட்னராக வந்தால், ரொம்ப நல்லா இருக்கும்” என்றான் ஆத்மார்த்தமான அன்புடன்.

யோசனையுடன், “எல்லாம் சரி. சுந்தரம் அண்ணனைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா, ஜெயந்தியை நினைச்சா தான்… படபடன்னு பொரிஞ்சிட்டுத் தானே அவள் பேசினதைப் பத்தி யோசிப்பா!” என்றார்.

“இதெல்லாம் ஒரு காரணமாம்மா! உலகத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா தான் இருப்பாங்க. எல்லோரையும் எதாவது ஒரு விதத்தில் சமாளிச்சித் தானே வாழ்க்கையை ஓட்டணும்” என்றான்.

“ம்ம், கடவுள் புதுசா அவளுக்காக ஒருத்தனைக் கொண்டு வரப்போறதில்ல. விசேஷம் முடியட்டும். நல்லதை நினைச்சித் தான் ஆரம்பிக்கிறோம். எல்லாம் நல்லபடியா நடக்கணும்” என்றபடி வளர்மதி எழ, ராஜேஷின் செல்போன் ஒலித்தது.

‘ஸ்ரீ’ என்று ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் அவனது விழிகள் அன்னையிடம் ஓடின. வளர்மதியின் உதடுகளும் முறுவலித்தன.

“சொல்லுடா மாப்பிள்ளை! எப்படி இருக்க?” என்றான் சிரிப்புடன்.

“இந்த விஷயத்துல நீதான்ப்பா சீனியர்” என்று அவனும் உற்சாகமாக பதிலுரைத்தான்.

“சரிப்பா! சீனியர், ஜூனியர் வேணாம். நாம் ரெண்டு பேருமே ஒரே ஸ்டேஜ்ல தான் இருக்கோம்” என்று சமாதானத்திற்கு இறங்கினான் ராஜேஷ்.

“ம்ம்...” என்று சிரித்தவன், எல்லோரையும் நலம் விசாரித்தான்.

“அம்மா, பக்கத்தில் தான் இருக்காங்க. பேசு” என்று அன்னையிடம் போனைக் கொடுத்தான்.

அவரும், அவனையும், அவனது குடும்பத்தினரையும் விசாரித்துவிட்டு, “நீயும் விசேஷத்துக்கு வரலாமே ஸ்ரீ. உன்னைப் பார்த்து மூணு வருஷம் ஆகிடுச்சே” என்றார் அன்புடன்.

“அவ்வளவு தானே கட்டாயம் வந்திடுறேன்” என்று சிரித்தான்.

“ஆமாம். இப்படித் தான் சொல்ற. ஆனா, ஹரிணி, ஜனனி ரெண்டு பேரோட கல்யாணத்துக்குமே நீ வரல. சரியான ஏமாத்துக்காரன்டா நீ” என்றார் செல்லமான கோபத்துடன்.

“என்னம்மா நீங்க? பொய் சொன்னபோதெல்லாம் நம்புனீங்க. இப்போ வரேன்னு உண்மையைச் சொல்றேன் நம்ப மாட்டேங்கறீங்களே” என்று போலியாக அலுத்துக்கொண்டான் ஸ்ரீநிவாஸ்.

கண்கள் மின்ன, “உண்மையாகவா சொல்ற?” என்ற வளர்மதிக்கு, மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.

“உண்மை. உண்மை, உண்மை. இந்த முறை பத்து நாள் உங்களோடு தங்கிட்டு, ஊரைச் சுத்திட்டு, நல்லா விருந்து சாப்பிட்டுட்டு அப்புறம் தான் கிளம்புவேன் போதுமா!” என்றான்.

“விருந்து என்ன விருந்து? உனக்குக் கல்யாணச் சாப்பாடே போடுறேன்” என்று வளர்மதியும் சொன்னார்.

“அப்போ நாளையிலிருந்தே வயிரைக் காலியா வச்சிக்கணும். அப்போதான் உங்க உபசரிப்புக்கு நம்மால ஈடுகொடுக்க முடியும்” என்றான்.

“சரிப்பா! நீ வர்றது ரொம்பச் சந்தோஷம். ராஜேஷ்கிட்டக் கொடுக்கறேன்” என்று செல்லை மகனிடம் கொடுத்த வளர்மதி, மானசீகமாக கடவுளிடம் ஏதோ பேசிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

சிரித்த ராஜேஷ், நண்பனிடம் பேசிவிட்டு அன்னையைப் பார்த்தான்.

“நாளன்னைக்குக் காலைல பாட்டி, தாத்தாவோடு வந்திடுவான்ம்மா! அங்கிள் ஆன்ட்டி இன்னொரு ஃபங்க்‌ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு வருவாங்க” என்றான்.

“அப்போ, நாளைக்கு உன் மாமா, அத்தை காதில் விஷயத்தைப் போட்டு வச்சிடுவோம். வைஷு என்னைக்கு வர்றா?” என்று கேட்டார்.

“ஃபங்க்‌ஷன் அன்னைக்குக் காலைல தான் அவள் வருவா!” என்றான்.

“வரட்டும் வரட்டும்” என்ற வளர்மதி முகம் மலர தங்கள் அறையை நோக்கி நடந்தார்.

“டேய் ஸ்ரீ! உனக்குப் பெரிய டாஸ்க் காத்துட்டு இருக்கு. உன்னோட சாமர்த்தியம்” என்று சிரித்துக் கொண்டான்.

முன்தினமே தயாளன் தனது நண்பரான சுந்தரத்தைப் பற்றி மைத்துனரிடம் சொல்லியிருந்தார். கற்பகம் அவர்களை ஓரிரு முறை சந்தித்திருந்தாலும், அந்தளவிற்குப் பரிச்சயம் இல்லை.

ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு ஒரே பிள்ளை. நேவியில் வேலை பார்க்கிறான். பார்க்கவும் நன்றாக இருப்பான். அவனது பெற்றோர் வேலை காரணமாக சிங்கபெருமாள் கோவிலில் இருப்பதாகவும். இவன், தனது தாத்தா, பாட்டியுடன் விசாகப்பட்டினத்தில் இருக்கிறான் என்று பொதுவாகச் சொல்லியிருந்தார்.

ஸ்ரீநிவாஸ் வந்து இறங்கிய போது, வீடே ஒன்றுகூடி வரவேற்றது.

அவனை நேரில் கண்ட கற்பகத்திற்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது. அவனுடன் பேசிக்கொண்டிருந்த சோமநாதனும், பையன் ரொம்ப ஷார்ப் என்று நற்சான்றிதழையும் சொன்னார். அவனது கலகலப்பான சுபாவமும், அனைவரிடம் சுலபமாகப் பழகும் பாங்கும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“ராஜேஷுக்கு, அத்தை, மாமான்னா எனக்கும் அத்தை, மாமா தான்” என்று அவன் அவர்களை முறைவைத்து அழைத்தது, கற்பகத்திற்கு அவனை வெகுவாகப் பிடித்துப் போனது.

எப்படியாவது இந்த வரனை முடித்துவிட வேண்டும் என்ற வேகம் எழுந்தது. அதேநேரம் மகள் என்ன சொல்வாளோ என்ற எண்ணமும் எழுந்தது.

ஆனால், அதையெல்லாம் எந்தவொரு சிரமமும் இல்லாமல், நடத்திக் கொள்ளும் சாமர்த்தியக்காரன் இங்கே வந்திருக்கிறான் என்பதை அறியாமல் அவரது மனம் மகளின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
 

lakshmi

Active member
May 9, 2018
341
48
43
வைஷு பதில்க்காக வெயிட்டிங், அடுத்த பதிவு எப்போ சிஸ்.
 
  • Like
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
197
410
63
வைஷு பதில்க்காக வெயிட்டிங், அடுத்த பதிவு எப்போ சிஸ்.
sorry lakshmi romba naal wait panna vachiten. mondayla irunthu thodarnthu kadhai vanthidum. thank you so much for your cmt.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
197
410
63
அத்தியாயம் - 8


அந்த முன் மாலைப் பொழுதில், ராஜேஷ், ஸ்ரீயைத் தவிர மற்றவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“ஏம்மா கற்பகம்! உன் பொண்ணு எப்போ ஊரிலிருந்து வர்றா?” என்று கேட்டார் ஸ்ரீயின் பாட்டி பத்மஜா.

கற்பகம் ஜாடையாக வளர்மதியைப் பார்த்தார். அவரும் அவர்களிடம் வைஷ்ணவியைப் பற்றி அவர்களிடம் சொல்லியிருப்பதாக கண்களாலேயே ஜாடையாகச் சொன்னார்.

“நாளைக்குக் காலைல வந்திடுவாம்மா” என்று அவளது வேலையைப் பற்றியும் அவரிடம் சொன்னார் கற்பகம்.

சோமநாதனும், மகளைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார்.

“ம்ம், அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன நாங்க வந்திருந்தபோது பார்த்தது. அப்பவே அவள் ரொம்ப அமைதியா, தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாளே!” என்ற ஸ்ரீயின் தாத்தா ஜனார்த்தனின் வார்த்தைகளில், இப்போதைய போட்டோ இருந்தால் காண்பிக்கும்படியான மறைமுக வார்த்தைகள் இருந்தன.

தனது மொபைலில் இருந்த மகளின் புகைப்படத்தைக் காண்பித்தார் சோமநாதன். பெரியவர்கள் இருவருக்குமே திருப்தி என்பது அவர்களது விகசித்த முகத்திலிருந்தே புரிந்துகொள்ள முடிந்தது.

“எங்க ஸ்ரீ ரொம்பப் பொறுப்பான பையன். தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு இல்ல… அவனுக்கு எல்லோரும் ஒண்ணு. சட்டுன்னு பழகிடுவான். அப்பா, அம்மான்னா அவனுக்கு உயிர். அவனுக்கு ஏத்தவளா வரணுமேன்னு நாங்க வேண்டாத தெய்வம் இல்லம்மா கற்பகம். என் பிள்ளையும், மருமகளும் வந்திடட்டும். இங்கே இருக்கும்போதே பேசி முடிச்சிடுவோம்” என்றார் பத்மஜா பாட்டி.

வீட்டினுள் நுழைந்த ஸ்ரீநிவாஸ், “என்ன பேசி முடிக்கப் போறீங்க பாட்டி?” என்று கேட்டுக்கொண்டே அவரருகில் தரையில் அமர்ந்தான்.

“நம்ம ராஜேஷோட கல்யாண விஷயம் தான்” என்றார் பாட்டிம்மா.

அவரை மேலும் கீழுமாகப் பார்த்தவன், “அப்படியா!” என்றான் ஆச்சரியம் போல.

“பின்னே! உன் கல்யாண விஷயமா? நீதான், உங்க அம்மாவுக்குப் பிடிச்ச பொண்ணைத் தான் கட்டுவேன்னு சொல்லிட்டியே. உனக்கா பேசப்போறோம்” என்றார்.

“கரெக்ட் பாட்டி! ஒரே ஒரு முறை, எப்போதோ சொன்ன விஷயத்தை எவ்வளவு கவனமா நினைவு வச்சிருக்கீங்க” என்றான் போலியான பாராட்டுதலாக.

அப்போதுதான் பாட்டியின் கையிலிருந்த மொபைலைப் பார்த்தவன், அதைத் தன் பக்கமாகத் திருப்பினான்.

நெற்றியைச் சுருக்கியபடி, “ம்ம்.. இது, நம்ம வைஷு தானே!” என்று கேட்டான்.

அங்கிருந்த அனைவரின் கண்களிலுமே சிறு பிரகாசமும், ஆச்சரியமும் ஒருசேரத் தோன்றியது.

“அவன் என்னென்னவோ டயலாகெல்லாம் சொல்லிட்டு இருந்தான். கடைசில, வைஷுவைத் தான் பார்க்கறீங்களா?” என்று கேள்வியுடன் கேட்டான்.

அவன் பலநாள் பழகியதைப் போலப் பேசிக்கொண்டிருக்க, அவனை ஆராய்ச்சியுடன் பார்த்தார் பாட்டி.

“உனக்கெப்படி வைஷுவைத் தெரியும்?” என்று கேட்டார்.

குறுஞ்சிரிப்புடன், “இதென்ன அவ்வளவு பெரிய அதிசயமா? அவள் காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் படிக்கும்போது சம்மர் வெக்கேஷனுக்கு வந்தபோது, நானும் இங்கே தானே இருந்தேன். அப்போ பார்த்திருக்கேன்” என்றான்

ஜனார்த்தன், மனைவியைப் பார்த்தார். இருவரது பார்வை பரிமாற்றத்திலும் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும் உறவினர்களையே நினைவு வைத்திருக்காதவன், கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன் பார்த்தவளை இவ்வளவுத் துல்லியமாக நினைவு வைத்திருப்பது அவர்களது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது.

அதற்குள் வெளியிலேயே நின்றிருந்த ராஜேஷ் அவனை அழைக்க, “வரேன்டா!” என்றபடி எழுந்து சென்றான்.

அங்கிருந்த அனைவருமே சிறு புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“கற்பகம்! இனி, உன் பொண்ணு கைல தான் எல்லாம் இருக்கு” என்று சிரித்தார் பாட்டி.

அதன்பிறகு, அனைவரும் வளைகாப்பு வேலையில் மூழ்கிவிட, தற்காலிகமாக இந்தப் பேச்சு நின்று போனது. ஆனால், ஸ்ரீநிவாஸின் மனத்தில் மட்டும் அவளது நினைவு மெல்லத் தலைதூக்க ஆரம்பித்தது.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாகப் பார்த்தேன் என்றுரைத்தவன், தற்செயலாக அவளை இரண்டாண்டுகளுக்கு முன்பு சந்தித்ததை மட்டும் ரகசியமாக வைத்துக்கொண்டான். அந்த நிகழ்வை நினைத்து மெல்லப் புன்னகைத்துக் கொண்டான்.

அன்று மாலை ஹரிணியின் வீட்டினரும் வந்துவிட, கலகலவென அந்த வீடே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தது.

“ஹும்! இந்த வைஷுவும் இருந்திருந்தா எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று கற்பகம் மகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்.

அதிகாலை நேரத்தில் கால் டாக்ஸியிலிருந்து இறங்கிய வைஷ்ணவி, அழைப்பு மணியை அழுத்தினாள்.

பூஜையறையில் இருந்த வளர்மதி வெளியே வர, “நான் பார்க்கிறேன் அண்ணி” என்றபடி கற்பகம் வாசலை நோக்கி நடந்தார்.

“யாரு?” என்ற அவர் குரல் கொடுக்க, அன்னை எனத் தெரிந்ததும் சட்டென சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டாள்.

அவர் இரண்டு மூன்றுமுறை குரல் கொடுத்தும் சப்தம் வராமல் போக, மெல்லக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவரை, “அம்மா!” என்றபடி அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

ஒரு நொடி சப்த நாடியும் அடங்கியதைப் போல ஆனது கற்பகத்திற்கு.

தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “என்னடி விளையாட்டு இது? காலங்கார்த்தால… ஆமாம், நீ ஏழு மணி ட்ரெயினுக்குத் தானே வருவேன்னு சொன்ன. ஐந்தரை மணிக்கெல்லாம் வந்து நிக்கிற” என்றார்.

“முதல்ல என்னை வீட்டுக்குள்ள விடுங்கம்மா!” என்றவள், அவரைத் தள்ளிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

அவளது குரலைக் கேட்டு சிரிப்புடன் வந்த வளர்மதியை, “அத்தை! எப்படி இருக்கீங்க?” என்றபடி அவரை அணைத்துக்கொண்டாள்.

”நல்லாயிருக்கேன்டா! நீ எப்படி இருக்க? என்ன இப்படி மெலிஞ்சி போயிருக்க?” என்று வாஞ்சையுடன் அவளது கன்னத்தை வருடி விசாரித்தார்.

”ம்ம்… சூப்பராயிருக்கேன்” என்றவள் குழந்தையுடன் அங்கே வந்த ஹரிணியைக் கட்டிக் கொண்டாள்.

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்றாளா பார்த்தீங்களா? அவளோட இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்கா” என்று அண்ணியிடம் முணுமுணுத்தார் கற்பகம்.

“சரி விடு. மெதுவா அவளே சொல்வா” என்றார் வளர்மதி.

”ஹேய்! உன் பையனா? டேய் குட்டிப் பையா!” என்று அவனை வாங்க, முகமறியா புதியவளைக் கண்டதும் குழந்தை அழ ஆரம்பித்தான்.

“பார்த்துப் பழகியிருந்தாதானே குழந்தை வரும்” என்ற அன்னையை போலியாக முறைத்தாள்.

“எங்க அம்மாவுக்கு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்கணும்” என்று அலுப்புடன் சொன்னாள்.

“சரிம்மா! ஃப்ரெஷ் ஆகிட்டு வா. காஃபி கலந்து வைக்கிறேன்” என்று வளர்மதி சொல்ல, தங்களது அறையை நோக்கி ஓடினாள்.

ஒவ்வொருவராக எழுந்து வர, காஃபியைப் பருகியபடி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“என்னடாம்மா! இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட? அப்பா ஸ்டேஷனுக்கு வரேன்னு சொல்லியிருந்தேனே” என்றார் சோமநாதன்.

“கடைசி நிமிஷத்துல ப்ளான் மாறிடுச்சிப்பா! என்னோட கொலிக் ஒருத்தர் தென்காசி வரை வந்தார். அவரோடவே கார்ல வந்து அங்கேயிருந்து கால் டாக்ஸியில் வந்துட்டேன்” என்றாள்.

”என்னைக்கு உனக்கு நிலையான புத்தியிருக்கு. அது எப்பவும் மாறிட்டே தானே இருக்கும்” என்றார் கற்பகம்.

பெற்றவளை முறைத்தவள், “இன்னும் உங்கக் கோபம் போகலையா? அதான் சொன்னது போல வந்துட்டேன் இல்ல” என்றாள் சிறு கடுப்புடன்.

“அந்தக் கோபமெல்லாம் இல்லடா! நீ தனியா வந்ததுக்குத் தான் இந்த ரியாக்‌ஷன்” என்றார் அவளது தந்தை.

“போதுமே! சொல்லாமல் கொள்ளாமல் அவள் செய்திருக்க வேலையைப் பத்தி எதுவும் கேட்காம, கூடச் சேர்ந்து என்னைக் கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க” என்றார் அவர்.

“அத்தை! ஏன் டென்ஷன் ஆகறீங்க. அவள்தான் பத்திரமா வந்துட்டாளே” என்ற ஹரிணி, “நீ வா வைஷு” என்று அவளைக் கையோடு அழைத்துச் சென்றாள்.

சற்றுநேரம் இருவரும் பேசிக்கொண்டிருக்க, ஹரிணியின் கணவன் எழுந்து வந்தான். அவனை நலம் விசாரித்தவள், “ஓகே நீ உன் அத்தானை கவனி. நான் போய் இந்த அம்பாசமுத்திரம் அம்பானியை கவனிச்சிட்டு வரேன்” என்று சிரிப்புடன் இரண்டாம் தளத்தில் இருந்த ராஜேஷின் அறையை நோக்கி நடந்தாள்.

உள்ளே ஏதோ பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது அவளுக்கு. அறைக்கதவும் தாளிடப்படாமல் இருக்க, மெதுவாகத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

குளித்துவிட்டு இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு குனிந்து கட்டில் மீது ஏதோ செய்துகொண்டிருந்தவனின் முதுகில் ஓங்கி ஒரு தட்டுதட்டி, “ஹாய் மாப்பிள்ளை! சௌக்கியமா?” என்றாள் சிரிப்புடன்.

எதிர்பாராமல் முதுகில் விழுந்த அடியில் சட்டெனத் திரும்பிப் பார்த்தவனைக் கண்டதும், சிரிப்புடன் நின்றிருந்தவளின் முகம் திகைப்பில் ஆழ்ந்தது.
 
  • Like
Reactions: Indhupraveen