14
ஆன்லைன் மீட்டிங்கை முடித்துவிட்டு, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள் வைஷ்ணவி. லேப்டாப்பின் அருகிலிருந்த டிஜிட்டல் கேமரா அவளது கண்களில் பட்டது. எடுத்து தனது லேப்டாட்டுடன் இணைத்து அதிலிருந்த படங்களைப் பார்க்கத் துவங்கினாள்.
ஒவ்வொரு படத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்னால் ஜனனி வந்து நின்றதை அவள் கவனிக்கவே இல்லை.
“ஹேய்! வைஷு இந்த போட்டோல நீ ரொம்ப அழகா இருக்கப்பா. நான் ஏன் இவ்ளோ டல்லா தெரியறேன்” என்று அவள் பேச, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“நீ எப்போ வந்த?” என்று மாமன் மகளைக் கேட்டாள்.
“ரெண்டு நிமிஷம் இருக்கும்” என்றவள், “எதுக்கு நீ தனியா இங்கே உட்கார்ந்து பார்த்துட்டு இருக்க? வெளியே வா டிவில கனெக்ட் பண்ணா எல்லோரும் பார்க்கலாமே” என்றவள், அவளது பதிலுக்குக் காத்திருக்காமல் கேமராவை தனியாக எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.
அவளது வார்த்தைகளைத் தாமதமாகவே உணர்ந்த வைஷு, சுதாரித்துத் தடுப்பதற்குள், ஜனனி அறையிலிருந்து வெளியேறியிருந்தாள்.
பதட்டத்துடன் அவள் பின்னால் ஓடினாள்.
“தாத்தா, பாட்டி, அத்தான், அக்கா, அத்தை, மாமா, ஸ்ரீ அண்ணா, ராஜேஷ் அண்ணா, அப்பா, அம்மா எல்லோரும் ஹாலுக்கு ஆஜராகுங்க. ஃபங்க்ஷன் போட்டோஸ் பார்ப்போம்” என்று அவள் ஊரையே அழைத்தாள்.
பின்னாலேயே வந்த வைஷுவின் முகம் பேயறைந்ததைப் போல ஆனது. எல்லோரும் சேர்ந்து தனக்கு எதிராகச் சதி செய்வது போலவே இருந்தது.
‘இவன் செய்து வைத்திருக்கும் வேலையை, இன்று வீடே பார்க்கப் போகிறது. ராஜேஷின் எதிரில் போன மானம் இப்போது மொத்தமாகப் போகப் போகிறது’ என்று எண்ணியவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தன.
ஓரிருவரைத் தவிர மொத்தக் குடும்பமும், ஹாலில் தான் குடியிருந்தது. நேராக டிவியும் கேமராவை ஜனனி இணைக்க, ஆர்வத்துடன் அனைவரின் பார்வையும் டிவியைப் பார்க்க, வந்த வழியே பின்னாலேயே நகர்ந்தவளை யாரோ பிடித்து நிறுத்தினர்.
திரும்பிப் பார்த்தால், ஜெயந்தி.
“மீட்டிங் முடிஞ்சிடுச்சாம்மா!” என்று அன்புடன் கேட்டார்.
“ம்ம்” என்று அவள் தலையை உருட்ட, “அப்போ, உட்காரு” என்று தன்னுடனேயே அழைத்து வந்தார்.
ஒவ்வொரு புகைப்படமும் நகர நகர, நெஞ்சத்தின் படபடப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. ‘நிறுத்துங்க’ என்று ஓவெனக் கத்தவேண்டும் போலிருந்தது.
ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒருவரின் விமர்சனமும், அதைக் கிண்டல் செய்வதைப் போல அடுத்தவரின் கேலி என்று வீடே கலகலப்புடன் இருந்தது.
அவர்களைப் பார்க்கப் பார்க்க, ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என்று புரியாமல் தனது விதியை நொந்து கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால், பார்வை மொத்தமும் ஒருவித கலக்கத்துடன் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தன.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அவள் எதிர்பார்த்ததைப் போல ஒரு புகைப்படம் கூட இதுவரையில் வரவில்லை. அவ்வளவு ஏன்? தன்னை முன்னிலைப்படுத்துவதைப் போலவோ, தனியாகவே அதில் ஒரு படம் கூட இல்லை.
அச்சமும், கலக்கமுமாக பார்த்துக் கொண்டிருந்தவளது முகம் குழப்பத்தையும், யோசனையையும் ஒருசேர பிரதிபலித்தது. ஹாண்டி கேமை அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றபின் அவன்மட்டுமே எடுத்த புகைப்படங்களில் கூட, அவள் எதிர்பார்த்ததைப் போல எதுவுமே இல்லை.
நியாயமாகச் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மனத்தில் ஏதோ ஒரு வெறுமை படர்ந்தது. மெல்லத் திரும்பி அவளுக்குப் பக்கவாட்டில் சற்று பின்னால் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.
தனது பாட்டியிடம், ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தவனை இமைக்காமல் பாத்தாள்.
‘தான் தான் அவனைத் தவறாக நினைத்துவிட்டோம். அவன் எத்தனை முறை சொன்னான். நான்தான் அவனது வார்த்தைகளை நம்பவே இல்லை’ என்று நினைத்தவளுக்கு, தன் மீதே வெறுப்பாக இருந்தது. முகம் சுருங்க, சட்டென எழுந்து தனது அறைக்குச் சென்றாள்.
அவனைச் சந்தித்த நேரத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் தனது நினைவிற்குக் கொண்டுவந்தாள். எந்த இடத்திலுமே அவன் மீது ஒரு சிறு தவறு கூட இல்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
இரண்டு முறை ராஜேஷ் என்று எண்ணி தான் செய்த மடத்தனத்தினால் தான் அவன் தன்னிடம் பேசியதே. அதன் பிறகும், ராஜேஷ் இல்லையென்றதால் தான் தன்னிடமிருந்த ஹாண்டிக்கேமை வாங்கினான்.
அவனிடமிருந்து ஹாண்டிக்கேமை பறித்தது, பார்க்கிங்கில் அவனிடம் தன்னைப் போட்டோ எடுத்ததாகக் குற்றம் சாட்டியது, அனுமதி இல்லாமல் அவனது பொருளைக் களவாடியது எல்லாவற்றிற்குமே தான் மட்டுமே காரணம் என்று இப்போது தெளிவாகப் புரிந்தது.
அத்துடன், அவனது தொடுகை கூட, விழ இருந்த தன்னைக் காப்பாற்ற மட்டுமே என்று உணர்ந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
சமாளித்துக் கொண்டு எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தாள். தவறு, தன் மீது தான். எல்லாவற்றிற்கும் அவனைக் குற்றவாளியாக்கி நிற்க வைத்ததற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவளாக, ஹாலுக்கு வந்தாள்.
ஸ்ரீயின் குடும்த்தினரையும், ராஜேஷையும் தவிர அனைவரும் இருந்தனர். ராஜேஷின் திருமணப் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு தினங்களில் நாள் நன்றாக இருப்பதாகவும், அன்றே பெண்ணைப் பார்த்துக் கையோடு தாம்புலம் மாற்றிக் கொள்ளலாம். ஜனனியின் குழந்தைப் பேற்றிற்குப் பிறகு, திருமணம் வைத்துக் கொள்வதாகப் பேசி முடிவெடுக்கப்பட்டது.
டைனிங் டேபிளில் அமர்ந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவளிடம், “வைஷு! எத்தனை நாள் லீவ் போட்டிருக்க?” என்று கேட்டார் வளர்மதி.
“ஒன் வீக் அத்தை!” என்றாள்.
“நீ லீவ் போட்டாலும் உன் ஆஃபிஸ்ல விடமாட்டாங்க போல. இன்னைக்கே ஆன்லைன் மீட்டிங்ல உட்கார வச்சிட்டாங்களே” என்றாள் ஜனனி.
”என்ன செய்றது? வேலையாச்சே செய்து தானே ஆகணும்” என்றாள் சிரிப்புடன்.
“அதுக்காக லீவில் கூடவா” என்ற ஹரிணி, “இந்தா, உன்னோட டிஜி கேம்” என்று கொடுத்தாள்.
“இது…” என்று ஆரம்பித்தவள், மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.
“ராஜேஷ் எங்கே?” எனக் கேட்டாள்.
“ஒரு வேலையா, ஸ்ரீ அண்ணாவோட தென்காசி வரைக்கும் போயிருக்காங்க” என்றாள் ஜனனி.
“ஓஹ்!” என்று கேட்டுக் கொண்டாள்.
“தாத்தா, பாட்டி எங்கே?”
“குடும்பத்தோடு வாக் போய்ட்டு வரேன்னு கிளம்பிட்டாங்க” என்ற ஜனனி, “திடீர்ன்னு ஏன் அவங்களைக் கேட்கற?” என்று கேட்டாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இருந்தாங்க. இப்போ காணோமேன்னு கேட்டேன்” என்றாள்.
வீட்டின் அருகிலிருந்த ஒரு கோவிலின் குளக்கரையில் தனது கணவர், மாமனார், மாமியார் சகிதம் அமர்ந்திருந்தார் ஜெயந்தி.
‘முக்கியமான விஷயம் பேசணும். கொஞ்சம் வெளியே போய் பேசலாமா?’ என்று கேட்ட மருமகளை வியப்புடன் பார்த்தார் பத்மஜா. ‘மகன் என்று வந்ததும், தேளாகக் கொட்டுபவள் கூட, இப்படிச் சாதுவாக மாறிப் போனாளே!’ என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை அவரால்.
‘பேச வேண்டும் என்று அழைத்து வந்தவரால் பேச்சை எப்படி ஆரம்பிப்பது?’ என்று தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயந்தி.
அதைப் புரிந்தவராக, “என்னம்மா விஷயம்?” எனக் கேட்டார் ஜனார்தனன்.
நிமிர்ந்து கணவரைப் பார்த்தவர், மாலையில் வளர்மதியுடன் நடந்த உரையாடலை சொன்னார்.
“நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு செய்திருக்கீங்க?” என்று மீண்டும் அவரே கேட்டார்.
“மறுக்க எங்களுக்கு எந்தக் காரணமும் இல்ல. வீட்டுக்குப் பெரியவங்க நீங்க என்ன நினைக்கறீங்கன்னும் தெரியணுமில்ல” என்றவர், “ஸ்ரீநிக்கும் அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு” என்றார்.
‘ஹும்! ஆக மொத்தத்தில் என் பிள்ளைக்குப் பிடிச்சிருக்கு. எங்களுக்கும் சம்மதம். சொல்ல வேண்டிய கடமைக்கு உங்க ரெண்டு பேருக்கும் விஷயத்தை தெரியப்படுத்தி விட்டேன்’ என்று நாசூக்காகச் சொல்லிவிட்ட மருமகளை ஏற இறங்க பார்த்தார்.
”ம்ம், நல்ல குடும்பம். நமக்கு நல்லா தெரிஞ்ச குடும்பம். படிச்சி நல்ல வேலைல இருக்கா. எல்லாமே ஒத்துவந்தால் முடிச்சிட வேண்டியது தான். என்ன சொல்ற பத்மா?” என்று கேட்டார் ஜனார்த்தனன்.
“ம்ம், ஸ்ரீக்குப் பிடிச்சிருக்கில்ல அப்புறம் சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்றார் அவர்.
“அப்போ, இங்கேயே பேசிடலாமா? இல்ல…” – ஜனார்த்தன்.
“பேசிடுவோம் அப்பா! எதுக்குத் தள்ளிட்டே போகணும்? எல்லோரும் பக்கத்திலேயே இருக்காங்க. ஸ்ரீயும், வைஷுவும் பேசறதுன்னாலும் பேசி முடிவெடுக்கட்டும். அவங்களுக்கு மனசு ஒத்துப் போச்சுன்னா முகூர்த்தத்தைக் குறிச்சிடலாமே” என்றார் சுந்தரம்.
கோவிலிலும் கடைசி பூஜைக்கான மணியடிக்க, “கடவுளே உத்தரவு கொடுத்துட்டார். ஆராதனையைப் பார்த்துட்டுக் கிளம்புவோம்” என்று சுந்தரம் சொல்ல, அனைவரும் மனநிறைந்த சந்தோஷத்துடன் எழுந்தனர்.
மணி பத்தரை. தனது அறையிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள். வராண்டாக்களில் ஆங்காங்கே விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. கதவைப் பூட்டிக்கொண்டு ஓசை வராமல் படியேறினாள்.
அவளது வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பதைப் போல ராஜேஷின் அறையில் மட்டும் விளக்கெறிந்து கொண்டிருந்தது. மெல்லக் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த ராஜேஷ் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.
“தூங்கலையா நீ?” என்று கேட்டான்.
“உன் ஃப்ரெண்ட்…”
“இருக்கானே…” என்றான்.
“யாருடா? என்றபடி அங்கே வந்த ஸ்ரீயின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தன.
தயக்கத்துடன் அவனைப் பார்த்தவள், “ரெண்டு நிமிஷம் பேசணும். ப்ளீஸ்!” என்றாள்.
இருவரையும் பார்த்த ராஜேஷ், “அந்தப் ப்ளீஸை நீ எனக்குத் தான் சொல்லணும்” என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
அவன் மௌனமாக நிற்க, கையில் மறைத்து வைத்திருந்த டிஜி கேமை அவனிடம் நீட்டி, “சாரி!” என்றாள்.
எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டவன், “இட்ஸ் ஓகே!” என்றான் இலகுவாக.
மெல்ல விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்து, “தேங்க்ஸ்” எனச் சொல்ல, அவன் தோள்களைக் குலுக்கி, “யூ ஆர் வெல்கம்” என்றான் புன்னகையுடன்.
எப்படி எல்லாவற்றையும் இவனால் இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்று எண்ணியபடியே, “வரேன்” என்று நகர்ந்தாள்.
படியருகில் சென்றவளை, “வைஷு!” என்றழைத்தான்.
அசையாமல் நின்றவளிடம், “குட் நைட்” என்றான்.
முகத்தை மட்டும் திருப்பி, “குட் நைட்” என்றவள் ஓட்டமும் நடையுமாக தனது அறையை நோக்கிச் சென்றாள்.