அத்தியாயம் - 19
தூரத்து மலை முகட்டைத் தழுவிக் கொண்டிருக்கும் மழை மேகங்களையும், சிலுசிலுவென வீசிக்கொண்டிருக்கும் காற்றையும், மறுபக்கத்தில் தெரிந்த பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளும் மனத்தைக் கொள்ளை கொள்வதாக இருந்தது.
அதைப் பார்த்தபடியே கையிலிருந்த காஃபியை அருந்திக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
இவற்றையெல்லாம் மீறி அவளது மனத்தில் ஏதோ சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை, அவளது செய்கையே உணர்த்திக் கொண்டிருந்தது. தான் இங்கே வந்து அவளருகில் நிற்பதைக் கூட உணராத அளவிற்கு, அவள் சிந்தனைவயப்பட்டிருப்பதை ஆழ்ந்து பார்த்தான் ஸ்ரீநிவாஸ்.
“ஹாய்! என்ன பலமான யோசனை?” என்று அவனது குரல் ஒலிக்க, கனவிலிருந்து விடுபட்டவள் போல அவனைப் பார்த்தாள்.
அவனைக் கண்டதும் அவளையும் அறியாமல் இதழ்கள் மலர, “ஹாய்!” என்றபோது, அவளது விழிகளும் மலர்ந்து விரிந்தன.
“பாதி பதில்தான் வந்திருக்கு” என்றபடி கையிலிருந்த காஃபியைப் பருகினான்.
“அது…” என்றவள், அவன் கையிலிருந்த கப்பையும், அங்கிருந்த மேஜையையும் பார்த்தாள்.
சற்றுநேரத்திற்கு முன்பு, “க்ளைமெட் செமையா இருக்கு. மாடிக்குப் போய்க் காஃபி சாப்டுக்கிட்டே இயற்கையை ரசிப்போம்” என்று தன்னை வற்புறுத்தி அழைத்து வந்த ஹரிணி, இதோ வந்து விடுகிறேன் என்று கீழே சென்றதும், இவன் இங்கே வந்து நிற்பதும் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட்டி விடை கண்டதும், உடல் இறுக நிமிர்ந்து நின்றாள்.
“ரிலாக்ஸ் வைஷு! காஃபியைக் குடிச்சி முடிச்சிடுங்க” என்றான்.
அமைதியாக அவன் சொன்னதைச் செய்தாள்.
காஃபியைக் குடித்து முடித்தவன், அவளிடமிருந்து காலிக் கோப்பையை வாங்க கையை நீட்டினான்.
“இல்ல… நானே…” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “இட்ஸ் ஓகே” என்று அவளிடமிருந்து காலிக் கோப்பையை வாங்கி அங்கிருந்த மேஜையின் மீது வைத்தவன், சிறிது தண்ணீரை ஊற்றி வைத்தான்.
அவனது செயல்களை ஊன்றி கவனித்துக் கொண்டிருந்தாள். இது, தன்னைக் கவருவதற்காக அல்ல என்பது அவளுக்குப் புரிந்தே இருந்தது. இப்போது மட்டுமல்ல, சாப்பிட்டால் கையுடன் தட்டை எடுத்துக் கொண்டு செல்வது, முடிந்தால் அதைச் சுத்தமும் செய்வது என்று இந்த நான்கு நாட்களில் மட்டுமல்ல, முதன்முதலில் அவனைப் பார்த்த போதும், இதையெல்லாம் அவன் செய்தவன் தான் என்றும் அவளுக்குப் புரிந்தே இருந்தது.
கற்பகமும், வளர்மதியும் கூட இதைப் பற்றி சிலாகித்துக் கொண்டது, அவளது நினைவிற்கு வந்தது.
“ம்ம்… இப்போ பேசுவோமா?” என்று கேட்டான்.
நிகழ்வுலகிற்கு வந்தவள், “என்ன?” என்றாள் தடுமாற்றத்துடன்.
“நம்ம ரெண்டு பேர் வீட்லயும் கலந்து பேசினது, உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்” என்றவனிடம் ஆமென்பதைப் போலத் தலையை அசைத்தாள்.
“இன்னைக்கு, அம்மா சொல்லித்தான் தெரியும். அப்போதான் நீங்க காலைல என்னைப் பார்த்து, கொஞ்சம் நெர்வஸ் ஆனது எதனாலன்னு தெரிஞ்சுது. அப்புறமும், நீங்க ரெண்டு மூணு முறை என்கிட்ட என்னவோ சொல்ல முயற்சி செய்ததையும் கவனிச்சேன். பட், நானே அப்படி நினைச்சிக்கிறேனோன்னு ஒரு டௌட் இருந்தது. அம்மா என்னிடம் பேசின பின்னால தான், அது உண்மைன்னு புரிஞ்சிக்கிட்டேன்.
அதான், வீட்டுக்கு வந்ததும் உங்ககிட்டப் பேசிடணும்ன்னு முடிவெடுத்தேன். ஹரிணி மூலமாக நான்தான் உங்களை இங்கே வரவழைச்சேன். உங்ககிட்டக் கலந்துக்காம நான் முடிவெடுத்துட்டேன். இப்போதைக்கு இங்கே யாரும் வரமாட்டாங்க. அதை ஹரிணி பார்த்துக்குவா. நீங்க மனசுவிட்டுப் பேச இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தெரியல… அதனால தான் இப்படி அதிரடியா உங்ககிட்டப் பேச வேண்டியதாக ஆகிடுச்சி. உங்களுக்கு ஓகேன்னா பேசலாம்” என்றான்.
உதட்டைக் கடித்தபடி தான் சொல்வதை மலங்க மலங்க விழித்தபடி கேட்டுக் கொண்டிருப்பவளை பார்க்கச் சிரிப்பு வந்தாலும், அவளது நிலை அவனுக்கும் புரிந்தே இருந்தது. ‘இப்படி திடுதிப்பென எதிரில் வந்து பேசு என்றால் அவளும் என்ன பேசுவாள்?’
படித்தவள், சுயமாகச் சிந்திப்பவள் என்றாலும், எதிர்பாராத நேரத்தில் ஒரு நிகழ்வைச் சந்திக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தில் அவள் இருந்தாள்.
பேசவேண்டும் என்று நினைத்தது தான். ஆனால், திடுமெனக் கேட்டால், எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று ஆயாசமாக இருந்தது. உடலை தழுவிச் செல்லும், குளிர்ந்த காற்றையும் மீறி அவளது வதனத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்தன.
துப்பட்டாவால், நெற்றியை லேசாக ஒற்றிக் கொண்டவளுக்கு, தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் தான், இப்போது பேசாமடந்தையாக மாறியதை எண்ணி வியப்புக் கூட உண்டாயிற்று.
“உங்களுக்குச் சங்கடமாயிருந்தா, இன்னொரு நாளைக்குப் பேசுவோம்” என்றவனை வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.
‘இன்னொரு நாளைக்கா… அவன் சொன்னதைப் போலச் சந்தர்ப்பம் அமையுமா? தனக்கும் சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்க வேண்டும். அதற்குப் பேசிவிடுவது நல்லது. இல்லாவிடில், திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டவள் படபடப்புடன் அவனைப் பார்த்தாள்.
அவனும் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“பேசிடுவோம். எனக்கும் சில விஷயங்களை சொல்லணும். நீங்க அதைச் சரியான விதத்தில் புரிஞ்சிக்குவீங்கன்னு நம்பறேன்” என்றாள்.
“ம்ம்… நிச்சயமா. நீங்க சொல்ற விஷயம் எப்போதும் என்னைத் தாண்டி வெளியே போகாது” என்றவனைப் பார்த்துச் சிநேகத்துடன் சிரித்தாள்.
பதிலுக்குப் புன்னகைத்தவன், “உட்கார்ந்து பேசுவோமா?” என்று கேட்டான்.
“இல்ல இப்படியே…” என்றாள்.
சரியென்பதைப் போலத் தோள்களைக் குலுக்கினான்.
தனது படிப்பு, வேலை என்று பொதுவாகப் பேசியவள், தனது திருமணம் பற்றிய பேச்சில் தனக்கும், பெற்றோருக்கும் நடந்த பேச்சு வார்த்தையைச் சொன்னாள்.
“நம்முடைய சமூக அமைப்புல திருமணம் ஒரு முக்கியமான அங்கம். ஆணோ, பெண்ணோ திருமணம் தான் அவங்களுடைய வாழ்க்கைக்கான ஒரு மைல் கல்லாக வச்சிருக்காங்க. பெத்தவங்களைப் பொருத்த வரைக்கும், தன் குழந்தைகளை செட்டில் பண்ணிட்றோம்ன்னு நினைக்கிறாங்க” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.
“எனக்கும் ஒரு நேரத்துல நமக்கு வரப்போற கணவன் இப்படி இருக்கணும். இப்படியெல்லாம் வாழணும்ன்னு ஆசை இருந்தது. ஆனால், என்னோட ஃப்ரெண்ட்ஸ் சிலரோட கல்யாண வாழ்க்கை பிரச்சனைக்கு உரியதாக ஆன போது, என்னை மீறின ஒரு பயம் எனக்குள்ள வந்தது. அவங்க எல்லோருமே ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போறவங்க.
அவங்களுக்கே இந்த நிலைன்னா, நான் எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுவேன். இருக்கறதை ஓபனா பேசும் ஆள். அவ்வளவு சீக்கிரம் என்னைக் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன். பிடிவாதம் கொஞ்சம் அதிகம். இந்தக் க்வாலிட்டீஸோட இருக்கும் எனக்கு எப்படி கல்யாண உறவு ஒத்துப் போகும்?” என்றவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனும் தாடையைத் தடவியபடி, அவள் சொல்வதை ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘என்ன இவன் எதற்கும் வினையாற்றாமல் மௌனமாக இருக்கிறானே!’ என்று யோசித்தபடி மேலே பேசினாள்.
“லைஃப்ல பிரச்சனை கண்டிப்பாக வரும். ஆனால், முன்னபின்ன தெரியாத ஒருத்தரைக் கல்யாணம் செய்துட்டு, அவங்களோட சந்தோஷம், துக்கங்களை நம்முடையதாக எல்லோராலும், எல்லா நேரமும் ஏத்துக்க முடியுமா? லைஃப்ல கமிட்மெண்ட் இருக்கணும். அது கம்பல்ஷனா மாறக்கூடாது.
மனதார நான் செய்றதை, என்னைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைத்தால் அது எப்படி எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்? இதையெல்லாம் என் பேரண்ட்ஸ்கிட்டச் சொன்னா, நாங்களெல்லாம் இல்லையான்னு கேட்பாங்க. அவங்களுக்கு எப்படிப் புரிய வைக்கறதுன்னும் எனக்குத் தெரியல” என்றாள்.
“ஓஹ் இப்போ என்ன செய்யலாம்? உங்களுக்கு என்னைப் பிடிக்கலன்னு சொல்லிடுங்க. இப்போதைக்குப் பிராப்ளம் சால்வ்ட்” என்றான் தீவிர பாவனையுடன்.
சிறு அதிர்வுடன் அவனைப் பார்த்தவள், “இல்ல இல்ல உங்களைப் பிடிக்காமலெல்லாம் இல்ல…” என்று இழுத்தாள்.
“ஓஹ்! அப்போ பிடிச்சிருக்கா?” என்று குறும்பாகச் சிரித்தான்.
அவனது பார்வையும் பேச்சும், அவளுக்குள் பரபரப்பையும், தவிப்பையும் அதிகமாக்கியது. சொல்லமுடியாத பாவனையுடன் அவனைப் பார்த்தாள்.
சட்டெனச் சிரித்தவன், “ஜோக்ஸ் அபார்ட்! நீங்க ரொம்பச் சீரியஸா பேசினீங்க. அதனால தான் கொஞ்சம் விளையாடினேன்” என்றவன் தீவிர பாவனைக்கு மாறினான்.
“ம்ம், வெல்! நீங்க ஓபனா என்கிட்ட பேச நினைச்சதுக்கும், என்னை நம்பிச் சொன்னதுக்கும் ரொம்பத் தேங்க்ஸ்” என்றவனைப் பார்த்து மெல்ல முறுவலித்தாள்.
“உங்க கல்யாண வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயம். உங்க ஃப்ரெண்ட்ஸ் லைஃப் போலவே, உங்க லைஃபும் பிரச்சனையாக ஆகிடுமோன்னு பயப்படுறீங்க. ரைட்!” என்றான்.
ஆமென்பதைப் போலத் தலையை அசைத்தாள்.
“இது, பெரும்பாலானவருக்கு வரும் சின்ன மனக்குழப்பம் தான். இதுக்கு நீங்க இவ்வளவு யோசிக்கணும்ன்னு இல்ல. உங்க பேரண்ட்ஸ் சொன்னதுல எந்தத் தப்பும் இல்லை” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“பிரச்சனை இல்லாத இடமே கிடையாது வைஷு! அதை பெரிதாக மாற்றுவதும், ஒன்றுமே இல்லாம நீர்த்துப் போகச் செய்றதும், நம்ம கைல தான் இருக்கு. நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் சொன்னதைத் தான் கேட்டிருக்கீங்க. அது அவங்க தரப்பு நியாயம். ஆனா, அவங்க மேல என்ன தப்பிருக்குன்னு வெளியே இருந்து பார்க்கறவங்களுக்குத் தெரியாது. அதுக்காக எல்லோருமே அப்படின்னு சொல்லலை.
பெரும்பாலானவங்க, அடுத்தவங்ககிட்ட நம்மள நல்லவங்களா காட்டிக்கத் தான் முயற்சி செய்வாங்க. நடந்ததுக்கு நானும் ஒரு காரணம்ன்னு சொல்ல மாட்டாங்க. பலர் தனக்கு ஒரு முகமூடியைப் போட்டுட்டுத் தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா, அது வெளியே தெரியறது இல்ல. தெரியும் போது ரொம்பக் கேவலமா இருக்கும்.
மனசாட்சிக்கு பயப்படுறவங்க தான், உண்மையைச் சொல்வாங்க. ஆனா, அவங்க தான் எல்லோராலும் விமர்சிக்கப்படுபவராகவும் இருப்பாங்க. ஈகோங்கற மூணு எழுத்து வார்த்தை தான் இது எல்லாத்துக்குமே ஆரம்பப் புள்ளி. நமக்குப் பிடிச்சவங்களைக் கூட விட்டுக் கொடுப்போம். ஆனா, எல்லா பிரச்சனைகளுக்கும் காரணக்கர்த்தாவான இந்த ஈகோவைத் தூக்கித் தூரப் போட மாட்டோம்” என்றவனை ஆச்சரியமும், ஆர்வமுமாகப் பார்த்தாள்.
அவனது அன்னைக்கும், பாட்டிக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளை எவ்வளவு அழகாக, கவனமாகக் கையாள்கிறான் என்பதை, அவளும் இடைப்பட்ட நான்கு நாட்களில் பார்க்கத் தானே செய்தாள். அவன் மீதான அபிப்ராயம் மாறுவதற்கே அன்று வளைகாப்பில் கண்ட காட்சி தானே முக்கியக் காரணம் என்ற சிந்தனையில் இருந்தவளை, அவனது குரல் மீட்டுக் கொண்டு வந்தது.
“நீங்களே உங்களைப் பற்றிச் சொன்னீங்க. எதையும் ஈசியா எடுத்துக்க மாட்டேன்… காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன்... கோபம் வரும்ன்னு. ஆனா, நீங்க இந்தக் க்வாலிட்டீஸை எல்லோரிடமுமா வெளிப்படுத்தறீங்க? உங்க பேரண்ட்ஸ், ஃப்ரெண்ட்ஸ், ரிலேஷன்ஸ்…” என்றவனை அமைதியாகப் பார்த்தாள்.
“நிச்சயமா இல்லை. எங்கே உங்களுடைய சுயமரியாதை பாதிக்கப்படுதோ அங்கே… அந்த இடத்தில், அந்த நபரிடம் உங்க கோபம் வெளிப்படுது. இது, ரொம்ப நார்மலான விஷயம்” என்றவனை வியப்புடன் நோக்கினாள்.
“இதுக்கு முன்னமே நாம மீட் பண்ணியிருக்கோம். ஆனால், பெரிதா பழக்கம் இல்ல. ராஜேஷ் வீட்டில் யாருடன் பேசினாலும், எப்படியாவது உங்க பேச்சை எடுத்திடுவாங்க” என்றதும் கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.
“தப்பா இல்லங்க. நல்லவிதமாகத் தான் சொல்வாங்க. அதோடு, இந்த நான்கு நாட்களாக தான் எனக்கு உங்களோடு ஓரளவு பழக வாய்ப்பு கிடைச்சது. பார்த்த வரைக்கும் நீங்க ரொம்ப ஸ்ட்ரெய்ட் பார்வர்டான ஆள் என்று புரிந்தது. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் நடந்த நிகழ்ச்சிகளே அதுக்குச் சாட்சி” என்றவன், அவளைப் பார்த்து மிருதுவாகப் புன்னகைத்தான்.
“நாம செய்தது தப்புன்னு தெரிஞ்சாலும், எத்தனைப் பேர் அதுக்காக மன்னிப்புக் கேட்பாங்க? நீங்க கேட்டீங்க. பத்து பேர் சொல்லி, ஒருத்தரை தெரிஞ்சிக்கறதை விட, நாம நேரில் பார்த்துத் தெரிஞ்சிக்கறது அவங்க மேல ஒரு மரியாதையையும், மதிப்பையும் ஏற்படுத்தும். அந்த வகைல நீங்க என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க” என்றான் முறுவலுடன்.
கண்கள் விரிய அவனைப் பார்த்தவள், தனது கீழுதட்டைக் கடித்தபடி மெல்லத் தலையைக் குனிந்து கொண்டாள். மனம் படபடவென அடித்துக் கொண்டது. விரல்களில் மெல்லிய நடுக்கம் பரவ கண்களையும், கைகளையும் இறுக மூடி தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றாள்.