Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அன்பென்ற மழையிலே!- கதை திரி | SudhaRaviNovels

அன்பென்ற மழையிலே!- கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஷெண்பா அவர்கள் அடுத்த கதையுடன் நம்மை சந்திக்க வந்து விட்டார்கள். கதையை படித்துவிட்டு கருத்துக்களை கருத்து திரியில் பதியுங்கள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 1

“அம்மா! நான் கிளம்பறேன்” என்று குரல் கொடுத்த வைஷ்ணவி, “வரேம்ப்பா!” என்று, வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தந்தையிடம் சொல்லிக்கொண்டு ஓட்டமும், நடையுமாகச் சென்றாள்.

"பத்திரமா போய்ட்டு வாடாம்மா!” என்றவர், மகள் ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு செல்வதை, பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சோமநாதன். கையைத் துடைத்தபடி கணவரின் எதிரில் அமர்ந்த கற்பகம், “வைஷுகிட்டப் பேசச் சொன்னேனே, பேசனீங்களா?” என்று கேட்டார்.

செய்தித்தாளை மடித்து வைத்தவர், “கற்பகம்! குழந்தைக்கு இப்போதான் இருபத்தி மூணு வயசாகுது. இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே” என்றார் இதமான குரலில். கணவரை முறைத்தவர், “நீங்க பேசறது கொஞ்சமாவது நல்லாயிருக்கா? பொறுப்பான அப்பாவா பேசுங்க” என்றார் கடுப்புடன்.

“இப்போ என்ன நடந்துடுச்சி, நான் பொறுப்பில்லாம போக?” சோமநாதனும் குரலை உயர்த்தினார்.

“முதல்ல சத்தத்தைக் குறைங்க. நாலு பேர் காதுல விழப்போகுது” என்றவர் எழுந்து உள்ளே செல்ல, சோமநாதனும் மனைவியின் பின்னாலேயே சென்றார்.

“இப்போ பேசுங்க. என்ன திட்டணுமோ திட்டுங்க” என்றார் கோபத்துடன். முப்பது வருட தாம்பத்தியத்தில் மனைவியைப் பற்றி அறியாதவரா அவர்? “நான் ஏன்டி உன்னைத் திட்டப் போறேன்? உன்னோட ஆதங்கம் எனக்கும் புரியுது” என்று மென்மையாகச் சொன்னார்.

ஆனாலும், கற்பகத்தின் முகம் வாடித்தான் தெரிந்தது. மனைவியின் தோளைப் பற்றி அமர வைத்தவர், “ஒரு வருஷம் போகட்டும்ன்னு சொல்றா. அவளோட விருப்பத்துக்கு விடேன். கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போய்ட்டா, இந்தச் சலுகையெல்லாம் கிடைக்குமா?” என்று தன்மையாகப் பேசினார்.

“எப்பவும் மாமியார் மேலேயே குறை சொல்லிப் பிரயோஜனம் இல்ல. ரெண்டு கையும் சேர்ந்தா தான் சப்தம் வரும். அவள் படிச்சிட்டு இருக்கும் போதே எத்தனையோ நல்ல நல்ல வரனெல்லாம் வந்தது. வேண்டாம் வேண்டாம்ன்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மறுத்தீங்க. வேலைக்குப் போகட்டும்ன்னு சொன்னீங்க. அப்புறம், ஒரு வருஷம் ஆகட்டும்ன்னு சொன்னீங்க.

பிரமோஷனுக்குப் படிக்கிறேன்னா; பிரமோஷன் வந்ததும், ஒர்க் லோட் அதிகம் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னா. அப்படி இப்படின்னு மூணு வருஷத்துக்கு மேலே ஆகிடுச்சி. இனியும், அமைதியா இருக்கறது முடியாத காரியம். அவளோட படிச்சி பொண்ணுகள்ள முக்கால்வாசி பொண்ணுங்களுக்குக் கல்யாணமாகிடுச்சி. பார்க்கறவங்கல்லாம், என்ன கற்பகம் உன் பொண்ணுக்கு வரன் எதுவும் தகையலையான்னு கேட்கும் போது, என் மனசு எவ்வளவு பாடுபடும்ன்னு யாராவது நினைக்கிறீங்களா? எனக்கும் பேரன், பேத்திக் கூட கொஞ்சி விளையாடணும்ன்னு ஆசை இருக்காதா? எல்லோருக்கும் அவங்க அவங்க சந்தோஷம் தான் முக்கியம்.

நான் எக்கேடு கெட்டா உங்களுக்கு என்னன்னு இருக்கீங்க” என்றவரது விழிகள் கலங்கின. “இப்போ என்ன நடந்துடுச்சின்னு கண்ணைக் கசக்கற? வைஷு வரட்டும் நான் பேசிப் பார்க்கறேன்” என்றார் அவரைச் சமாதானம் செய்யும் பொருட்டு. “என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இந்த வருஷக் கடைசியில அவளுக்கு நிச்சயத்தையாவது முடிச்சாகணும்” என்று கறாராகப் பேசினார் கற்பகம்.

“எல்லாத்துக்கும் கடவுளைக் கூப்பிடுவ இல்ல. இதையும் அவரிடமே விடு. வயசான காலத்துல இப்படி டென்ஷன் ஆகாத. அப்புறம் பிபி வந்திடும்” என்றார் அக்கறையாக.

கணவரை ஆழ்ந்து பார்த்தவர், “நான் வயசானவ, இவரு மார்கண்டேயன்” என்று முறுக்கலுடன் சொல்லிவிட்டு எழுந்து செல்லும் மனைவியை புன்னகையுடன் பார்த்தார்.

‘கற்பகத்தின் வார்த்தைகளும் தவறில்லையே. வைஷ்ணவியின் வயதையொத்த, இவளுடன் படித்த பெண்கள் சிலருக்குத் திருமணமாகி குழந்தைகள் கூட இருக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்களும் அதில் அடக்கம். காலாகாலத்தில் மகளுக்குத் திருமணமாகி, பேரக் குழந்தைகளைக் கொஞ்ச வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது தானே.

ஆனால், மகள் அதைப் புரிந்து கொள்ளவில்லையே’ என்ற ஏக்கம் மனத்திற்குள் இருக்கிறது. ஆனாலும், மகளின் சிரிப்பில் தானே அவர்களது உலகமே அடங்கி இருக்கிறது. அதை உதாசீனப்படுத்த அவருக்குத் தைரியம் இல்லாததாலேயே, இருவருக்கும் இடையில் மத்தளமாகப் பாடுபடுகிறார் அவர்.

‘வைஷு வந்ததும் பேசிப் பார்ப்போம். எடுத்துச் சொன்னால் நிச்சயம் புரிந்து கொள்வாள்’ என்ற நம்பிக்கையுடன் தனது வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.

தொடரும்......
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் - 2

அழைப்பு மணியின் ஓசை கேட்க, கதவைத் திறந்த சோமநாதன், “அடடே! ராஜேஷ் வாப்பா” என்று மைத்துனரின் மகனை அன்புடன் வரவேற்றார்.

“எப்படி இருக்கீங்க மாமா? ஆஃபிஸ் போயிருப்பீங்கன்னு நினைச்சேன்” என்றபடி உள்ளே வந்தான் ராஜேஷ்.

“ஆஃபிஸ் டூர் போய்ட்டு நேத்து நைட் தான் வந்தேன். இன்னைக்கு லீவ் போட்டாச்சு” என்றார்.

“அப்படியா! அத்தை எங்கே?” என்று கேட்டான்.

“தீபாவளி வருது இல்லயா! மேல் வீட்டம்மாவுக்கு ஏதோ ஸ்வீட் செய்யக் கத்துக் கொடுக்கறேன்னு, உன் அத்தை சொன்னாங்களாம். அதுக்காக அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க” என்றவர் வந்தவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

“தேங்க்ஸ் மாமா!” என்று வாங்கிக் கொண்டவன், “அத்தை எப்போலயிருந்து இந்த வேலையெல்லாம் ஆரம்பிச்சாங்க?” என்றான் சிரிப்புடன்.

“இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? ஆஃபிஸ்ல ப்ரமோஷன் வந்திருக்குன்னு, உன் அத்தைக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கிக் கொடுத்தா வைஷு! அதிலிருந்து யூ - ட்யூப்ல ரெசிபிஸ் பார்க்கறது, கை வேலைகள் என்று பார்த்து மேல் வீட்டு அம்மாவோட டிஸ்கஷன்லாம் நடக்கும்” என்றார் சோமநாதன்.

“இண்ட்ரஸ்டிங்” என்றான் அவன் வியப்புடன்.

“அதுமட்டுமில்ல, சங்கமம் -ன்னு ஒரு யூ- ட்யூப் சேனல் துவங்கி இருக்காங்க. அதுல கிட்டதட்ட ஆயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்காங்கப்பா!” என்றார் அவர் பெருமிதத்துடன்.

“வாவ்! எத்தனை முறை போன் செய்திருக்கேன். அத்தை, ஒரு முறைகூட இதைப் பத்திச் சொல்லவே இல்லயே” என்று சிறு ஆதங்கத்துடன் கேட்டான் ராஜேஷ்.

“சில பெண்கள் இருக்காங்களே, எனக்கு இது தெரியும்ன்னு தானா சொல்லிக்க மாட்டாங்க. யாராவது கண்டுபிடிச்சிச் சிலாகிச்சாலும், ஒரு சிரிப்போட நகர்ந்திடுவாங்க. உன் அத்தை அந்த டைப்” என்றார் அவர்.

“அத்தை, வெரி டேலண்டட். நம்ம வைஷுவும் அதனால் தான் மாமா இவ்ளோ இண்டலெக்சுவலா இருக்கா” என்று மனதாரப் பாராட்டினான்.

“ம்ம், கடைசில நீயும் உன் மாமாவை இந்த லிஸ்ட்ல சேர்க்கல” என்று அவர் போலியாக பெருமூச்சு விட, “அவங்களோட ஊக்குவிப்புச் சக்தியே நீங்க தானே மாமா” என்று பெரிய ஐஸ்கட்டியைத் தூக்கி அவரது தலையில் வைத்தான்.

“போதும்டா மாப்பிள்ளை. உன் மாமாவுக்கு ஏற்கெனவே சைனஸ் பிரச்சனை இருக்கு” என்று அவர் தீவிர பாவனையுடன் சொல்ல, ராஜேஷ் வாய்விட்டு நகைத்தான்.

“சிரிச்சாலும், நான் சொன்னது உண்மை மாமா!” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. “உன் அத்தை வந்தாச்சு” என்றபடி சோமநாதன் எழ முயல, நீங்க இருங்க மாமா!” என்று ராஜேஷ் எழுந்து சென்றான். கதவைத் திறந்ததும், “ஹலோ அத்தை! எப்படி இருக்கீங்க?” என்று புன்னகையுடன் விசாரித்தவனைக் கண்ட கற்பகத்தின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“ராஜேஷ்! எப்போப்பா வந்தே? ரெண்டு நாளைக்கு முன்ன பேசும்போது கூட, வரேன்னு சொல்லவே இல்லயே” என்று உரிமையுடன் அண்ணன் மகனிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.

“சொல்லக்கூடாதுன்னு இல்லங்க அத்தை! நம்ம ஜனனியோட வளைகாப்புக்கு, அப்பாவும், அம்மாவும் உங்களை அழைக்க வரேன்னு சொன்னப்போ, அதெல்லாம் வேணாம். நம்ம வீட்டு விசேஷத்துக்கு எதுக்கு அழைப்புன்னு சொன்னீங்களாம். இருந்தாலும், நேர்ல போய் அழைக்கறது தான் மரியாதைன்னு, அம்மா ஒரே புலம்பல். சரி கிளம்பி வரலாம்ன்னு இருந்த நேரத்துல பாட்டிக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியல. அதான், நான் மட்டும் கிளம்பி வந்திருக்கேன்” என்றார் விவரமாக.

“பாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று அவர் விசாரிக்க, பேச்சு அப்படி இப்படிச் சுழன்று வைஷ்ணவியிடம் வந்து நின்றது. மகளைப் பற்றிக் கேட்டதுமே கற்பகம் தனது புலம்பலைத் துவங்க, சோமநாதன் மௌனமாக அமர்ந்திருந்தார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவன், “நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க அத்தை! அவளுக்குன்னு சில இலட்சியங்கள் வச்சிருப்பா இல்லயா?” என்றான்.

“என்ன இலட்சியமோ? பெத்தவங்க சந்தோஷத்தைவிட, இலட்சியம் பெருசா இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னயே, உங்க ரெண்டு பேருக்கும் பேசி முடிச்சிடலாம்ன்னு நானும், உன் அம்மாவும் நினைச்சோம். ஆனா, ரெண்டும் பேரும் எங்களுக்கு அந்த நினைப்பே இல்ல. சொந்தத்துல கல்யாணமெல்லாம் செய்யக் கூடாதுன்னு ஒரேடியா மறுத்துட்டீங்க. இல்லன்னா, ஹரிணிக்கும், ஜனனிக்கும் கல்யாணத்தை முடிச்சக் கையோட உங்களுக்கும் முடிச்சிருக்கலாம்” என்று அவர் பேச்சோடு பேச்சாகத் தனது ஆதங்கத்தை வெளியிட, ராஜேஷ் சங்கடத்துடன் நெளிந்தான்.

“கற்பகம், முடிஞ்ச கதையை விடு. அவங்க ரெண்டு பேரும் சின்னக் குழந்தைகள் இல்ல. நீ லஞ்ச் ரெடி பண்ணு” என்றார் பேச்சை மாற்றும் விதமாக.

“ஆமாம். நான் ஒருத்தி தேவையில்லாம பேசிக்கிட்டு” என்றவர் எழுந்து அடுப்படிக்குச் சென்றார்.

சோமநாதனுடன் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தவன், “அத்தை!” என்றபடி அவரருகில் வந்து நின்றார். “என்னப்பா? தண்ணி வேணுமா?” என்று கேட்டார்.

“இல்லங்கத்தை!” என்றவன் அவரது கரத்தைப் பற்றி, “சாரி அத்தை! உங்க மனசுல இருக்க ஆசை எனக்குப் புரியுது. ஹரிணி, ஜனனி மாதிரி வைஷுவும் என்னோட சேர்ந்து வளர்ந்தவ. அவளை எப்படி…” என்றவன் வாக்கியத்தை முடிக்க முடியாமல் தடுமாறினான்.

தனது பேச்சால் தான் அவனுக்கு இந்தச் சங்கடம் என்று உணர்ந்த கற்பகம், “ராஜேஷ்! நான் என்னோட ஆசையைப் பெரிசா நினைசேனே தவிர, இந்தக் கோணத்துல யோசிக்கவே இல்ல” என்றார் வருத்தத்துடன்.

“பரவாயில்ல அத்தை! வைஷுவுக்கு, என்னைவிட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். நீங்க கவலையேபடாதீங்க. அவளையும், வளைகாப்புக்குக் கூட்டிட்டு வாங்க. எல்லோரும் சேர்ந்திருந்து ரொம்ப நாள் ஆகிடுச்சி” என்றான் அன்புடன்.

“ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு, ஊருக்குப் போய் வரலாம்ன்னா, அவள் கேட்டா தானே. ஆபிஸ்லயிருந்து வந்ததும் நீயே சொல்லு” என்றார் அவர்.

“ம்ம், நிறைய பேரைக் கூப்பிட வேண்டி இருக்கு அத்தை! நான் உடனே கிளம்பியிருப்பேன். நீங்க மனசு கஷ்டப்படுவீங்கன்னு தான் லஞ்ச் முடிச்சிட்டுக் கிளம்ப நினைச்சேன்” என்றான்.

அவனது நிலையை உணர்ந்தவராக, “புரியுது ராஜேஷ். அடுத்த முறையாவது ரெண்டு நாள் தங்கறது போல சாவகாசமா வா” என்று அரைமனத்துடன் சம்மதித்தார்.

“நிச்சயமா அத்தை! வைஷுக்குப் போன் செய்து பேசறேன்” என்றான். “பேசு பேசு. உன் பேச்சையாவது கேட்கறாளான்னு பார்க்கலாம்” என்று சிரிப்புடன் தனது வேலையில் மும்முரமானார் கற்பகம்.

தொடரும்......
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் - 3

வளைகாப்பு அழைப்பிதழில் பார்வையை ஓட்டியபடி, மொறுமொறுவென்று பொன்னிறத்திலிருந்த வடையை, சட்னியில் தோய்த்து வாயில் இட்டுக் கொண்டாள் வைஷ்ணவி. “இப்போதான் கல்யாணம் ஆனது போலயிருக்கு. அதுக்குள்ள, ஒரு வருஷம் ஆகப்போகுதும்மா!” என்று சிரிப்புடன் சொன்னாள்.

“ம்ம், காலம் யாருக்காகவும் நிக்கிறதில்ல” என்ற கற்பகம், “அவள் உன்னைவிட ரெண்டு வயசு சின்னவ” என்றார் அழுத்தமான குரலில். வடையை மென்றபடி ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்தவள், தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.

அவரும், மகளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். தந்தையும், தாயும் கூட்டணி அமைத்துவிட்டனர் என்று உணர்ந்துகொண்டவள், அன்னையின் பக்கமாகத் திரும்பினாள்.

“அம்மா! எல்லோரும் இருபது வயசுல கல்யாணம் செய்து, இருபத்தோரு வயசுல குழந்தை பெத்துக்கணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்ல. கல்யாணம் தான் ஒரு பொண்ணோட வாழ்க்கையை முழுமையாக்குதுன்னு இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடாதீங்க ப்ளீஸ்!” என்றவளை முறைத்துப் பார்த்தார் கற்பகம்.

“இப்போ முடிவா என்ன சொல்ற?” என்று கேட்ட மனைவியின் கரத்தைப் பற்றினார் சோமநாதன்.

‘நான் பேசிக்கொள்கிறேன்’ என்பதைப் போல ஒரு பார்வையை வீசியவர், மகளிடம் திரும்பினார். “வைஷும்மா! உன்னோட இலட்சியம் உனக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பெத்தவங்களா, எங்களுக்கும் சில கடமைகள் இருக்குமா” என்றார் பொறுமையுடன்.

“நீங்க சொல்றது எனக்குப் புரியுதுப்பா! ஆனா, நான் இன்னும் அந்த மைண்ட் செட்டுக்கு வரல. எனக்குன்னு விருப்பு வெறுப்பு இருக்கு. நேத்து வரைக்கும் யாருன்னே தெரியாதவன் கையால தாலியைக் கட்டிக்கிட்டு அவனையும், அவன் குடும்பத்தையும் சகிச்சிட்டு, எல்லோருடனும் அட்ஜஸ்ட் பண்ணி, விட்டுக் கொடுத்துக்கிட்டு, பிடிக்கலனாலும் அவங்ககிட்டப் போலியா பழகன்னு என்னால வாழ முடியாதுப்பா! புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்!” என்றாள் சற்றே எரிச்சலுடன்.

“வைஷும்மா! நீ ஏன்டா இப்படி மனசைக் குழப்பிக்கிற? உன் பாட்டியெல்லாம் கூட விட்டுடு, உன் அம்மாவை எடுத்துக்கோ. உன் அத்தை, சித்திகளை எடுத்துக்க எல்லோருமே தெரியாத ஒரு ஆணைத் தான் கல்யாணம் செய்து இன்னைக்கு வரைக்கும் சந்தோஷமா இருக்காங்க. இத்தனைக்கும், இவங்களெல்லாம் உன் அளவுக்குப் படிக்கல. உனக்கு இருக்க எக்ஸ்போஷர் அவங்களுக்குக் கிடையாது. நீ மட்டும் இல்ல வைஷு, ஆண்களும் இப்போ எவ்வளவோ விட்டுக்கொடுத்து, புரிஞ்சிகிட்டு நடந்துக்கறாங்க. எங்க காலத்திலாவது எங்க வீட்டுப் பெரியவங்களுக்குப் பயந்துகிட்டு நாங்க வீட்டம்மா பேச்சு சரியா இருந்தாலும், அதை ஏத்துக்க முடியாத சூழல்ல இருந்தோம். இன்னைக்குக் காலகட்டத்துல பேரண்ட்ஸே அதை ஆதரிக்கத் தான் செய்றாங்க. இவ்வளவு ஏன் நம்ம ஹரிணி, ஜனனியோட மாமியாருங்களையே எடுத்துக்கோ. என் அம்மாவை விட, எனக்கு என் மாமியார் தான் மாமா ஃபுல் சப்போர்ட்ன்னு ரெண்டு பேருமே பெருமையா சொல்றாங்க. எல்லாமே நாம எடுத்துக்கற விதத்துல தான் கண்ணா இருக்கு. கடமையேன்னு நினைச்சா எல்லாமே சுமை தான். அதையே விருப்பத்தோட செய்து பாரு, நிச்சயமா சந்தோஷத்தைக் கொடுக்கும். விட்டுக் கொடுக்கற யாரும், கெட்டுப் போகறது இல்லம்மா. அது தப்பான விஷயமும் இல்ல. நம்முடைய வாழ்க்கையைத் திகட்டத் திகட்ட அனுபவிச்சிடணும். எப்பவும் வேலை, மதிப்பு, மரியாதைன்னு அது பின்னாலேயே ஓடக்கூடாது. வாழ்க்கை சுலபமா இருக்கணுமே தவிர, சுமையா மாறக்கூடாது. உன்னோட இலட்சியங்களை மதிக்கிற கணவன் உனக்கு வரலாம். உன்னைவிட, அவனுக்கு உன் மேல அக்கறை இருக்கலாம். நீ பாசத்தைக் காட்டினா, திரும்ப உனக்கு அந்தப் பாசம் தான் கிடைக்கும். வாழ்க்கைங்கறது கண்ணாடி மாதிரி. நாம கொடுக்கறதைத் தான் திரும்ப வாங்கிக்குவோம்” என்றார் நிதானமாக.

எதுவும் பேசாமல் மௌனமாக தந்தையின் வார்த்தைகளை மனத்திற்குள் ஏற்றிக் கொண்டிருந்தாள். பாசமான பெற்றோர், அன்பான உறவுகள் அவளைச் சுற்றிலும் இருந்தாலும், தனது நெருங்கிய நட்பு வட்டத்தில் பேச, பகிரப்படும் கருத்துக்களும், செய்திகளும் அவளுக்கு உவப்பானதாக இல்லை. திருமணத்தின் மீது வெறுப்பைப் படரச் செய்திருந்தன.

அவளது அலுவலகத்திலேயே அவள் அன்றாடம் காணும், அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் வகையறா காதல்கள், ஒரே வாரத்தில் திசைக்கு ஒன்றாக பிய்த்துக் கொண்டு போன சம்பவங்களும், தனிப்பெருங்காதலால் இணைந்து வாழும் இணையர்களின் காதல்கள் நடுத்தெருவில் சந்திச் சிரித்த நிகழ்வுகளையும் அவள் அறியாததா?

தந்தை சொல்வதைப் போல, தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவன், என்மீது உயிரையே வைக்கலாம். அது ஒரு நம்பிக்கை மட்டுமே. அவனது கடந்த காலம் தனக்குத் தேவையற்றது என்று தன்னால் இருக்க முடியாது என்று திடமான எண்ணம் கொண்டிருந்தாள்.

திருமணத்தின் மீதான நம்பிக்கையை இழந்திருந்தவளுக்கு, தந்தை கூறியதைக் கேட்டதும் தலை சுற்றியது. ஒரு முடிவிற்கு வர முடியாமல், மௌனத்தைத் தத்தெடுத்திருந்தாள்.

மகளின் தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்த கற்பகம், “வேலை வேலைன்னு கால்ல சக்கரத்தைக் கட்டிக்கிட்டு ஓடாதே வைஷு. வேலை முக்கியம் தான். ஆனா, வேலைதான் எல்லாமேன்னு இருந்தா, வண்டி மாடு மாதிரி ஆகிடுவ. இப்போ நாங்க இருக்கோம். உன் விருப்பப்படி இருக்கற. இன்னும் பத்து வருஷம் கழிச்சிப் பார்த்தா, ஆரம்பிச்ச இடத்திலேயே வந்து நிற்ப” என்று எடுத்துச் சொன்னார் கற்பகம்.

ஆயாசத்துடன் நிமிர்ந்தவள், “இப்போ, என்னை என்னம்மா செய்யச் சொல்றீங்க?” என்று சலிப்புடன் கேட்டாள்.

“நாம இந்த உலகத்துக்கு வரும்போது தனியா தான் வரோம். போகும் போதும் அப்படியே தான் போகப் போறோம். ஆனா, இடைப்பட்ட வாழ்க்கைல நமக்குன்னு வர்ற சொந்தத்தை, சந்தோஷத்தை, பொறுப்பையெல்லாம் உதறித் தள்ளக் கூடாது கண்ணம்மா! ஒரு நேரம் இல்லனாலும், ஒரு நேரத்துக்கு எல்லோருடைய ஆதரவும், அன்பும் நமக்குத் தேவைப்படும். பத்து நாள் லீவ் போடு. ஊருக்குப் போவோம். உனக்கும் ஒரு மாற்றமா இருக்கும். மனசும் தெளியும்” என்றார் கற்பகம் ஆதூரத்துடன்.

யோசித்தவளிடம், “பத்து நாள் இல்லனாலும், ஒரு வாரமாவது போய் வரலாம் கண்ணா!” என்று அன்புடன் சொன்னார் சோமநாதன்.

தந்தையையும், தாயையும் மாறி மாறிப் பார்த்தாள். அவர்களது கண்களில் தெரிந்த ஆர்வத்தையும், ஆவலையும் கண்டவளுக்கு மறுக்க மனம் வரவில்லை. அரைமனத்துடன் தலையை அசைத்தவள், “சரிப்பா போகலாம்” என்றாள்.


பெரியவர்கள் இருவரும் சந்தோஷத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அங்கே சென்றபின், தன் வயதொத்த பெண்களிடம் பேசிப் பழகினால், அவளும் சற்று மாறுவாள் என்ற நம்பிக்கை கற்பகத்திற்கு உண்டானது. படிப்பு, படிப்பு என்றிருந்தவளை, விடுமுறை நாட்களில் பத்து நாளைக்காவது சொந்த பந்தத்துடன் பழக வைத்திருக்க வேண்டும் என்று இப்போது அவருக்குத் தோன்றியது.

தொடரும்.....