இன்றைய சிறுகதை

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,114
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

தினம் ஒரு சிறுகதை நாம் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்வோம்..
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,547
1,114
113
நிறைவான வீடு

சீனக் கதை

சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வர மாட்டார்கள்.

அன்றும் மருமகள்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர். பெரியவர், “போய் வாருங்கள். வரும்போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டுவர வேண்டும். கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

“சரிங்க மாமா. என்ன வேணும், சொல்லுங்கள்?” என்றனர் இரு மருமகள்களும்.

“ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று ஒரு மருமகளிடமும், “காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டுவர வேண்டும்” என்று இன்னொரு மருமகளிடமும் சொன்னார் பெரியவர்.

இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தனர். சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர். தாய் வீட்டில் சந்தோஷமாகச் சில நாட்கள் இருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும்தான் மாமனார் கேட்ட விஷயம் பற்றிய பயம் வந்தது.

இருவரும் கிளம்பினார்கள். வழியெங்கும் கவலையோடு புலம்பிக்கொண்டே நடந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஓர் இளம்பெண், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார். இவர்களும் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண், “இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார்.

முதல் மருமகளைப் பார்த்து, “ஒரு காகிதத்தில் விசிறி செய்து கொடு. நீ ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துட்டுப் போ” என்றார்.

மருமகள்கள் இருவருக்கும் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

மாமனாரிடம் அந்தப் பெண் கூறியபடியே விசிறியையும், சிம்னி விளக்கையும் தந்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டார். இருவரும் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.

“இவ்வளவு புத்திசாலியான பெண்ணை, என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார் பெரியவர். அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பினார். கண்டுபிடித்துச் சொன்னதும், சம்பந்தம் பேசினார். திருமணம் இனிதே நடந்து முடிந்தது. வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்தார் கடைசி மருமகள்.

பெரியவருக்கு மகிழ்ச்சி. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டு வாசலில், ‘இது நிறைவான வீடு’ என்று ஒரு பலகையை மாட்டி வைத்தார்.சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி இந்தப் பலகையைப் படித்தார். ‘யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப் பாடம் புகட்டி, திமிரை அடக்கப் போகிறேன்’ என்று முடிவு செய்தார்.

வீட்டில் நுழைந்த அவரை, கடைசி மருமகள்தான் வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாமே… அப்படியானால் எனக்கு இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.

“கண்டிப்பாக நெய்கிறேன். சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார் மூன்றாவது மருமகள். அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாது என்பதால் துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

“சரி, வேண்டாம். கிணற்று நீர் அளவு எண்ணெய் ஆட்டிக் கொண்டுவா” என்றார் துறவி.

“தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழாக்கு எண்ணெயை ஆட்டித் தந்துவிடுகிறேன்” என்றார் மூன்றாவது மருமகள் பணிவோடு.

துறவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில நொடிகள் யோசித்தார். இந்தப் புத்திசாலிப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்பதை உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.

“நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய். இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார் துறவி.

புத்திசாலி மருமகள் துறவியை வணங்கி, ”நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.

துறவி அமைதியாக இருந்தார். “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினார் மூன்றாவது மருமகள்.

“நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடுதான்” என்று சொல்லிவிட்டு, துறவி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
 
  • Like
Reactions: Anuya