இவன் வேற மாதிரி - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 8

மாமாவை வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு வாரம் ஓடி இருந்தது. ஓடிக் கொண்டிருந்த மெஷினில் கவனக்குறைவுடன் கையை வைத்துவிட்டு மூன்று விரல்களை பறி கொடுத்திருந்தார். முதல் நாள் வந்து பார்த்ததும் அரண்டு போய் அக்காவை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தவள் இன்று வரை கண்களில் நீருடன் தான் சுற்றுகிறாள். எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவளின் அழுகை மட்டும் குறையவே இல்லை.

மூன்று விரல்கள் என்பது சாதாரண இழப்பில்லை. இனி, அவர் எப்படி வேலைக்கு செல்ல முடியும் அக்கா மட்டும் எப்படி சமாளிக்க முடியும் என்று யோசித்து சோர்ந்து போனாள். ஆனால் மாமா வேலை செய்த கம்பனியில் அவரின் இத்தனை கால உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்து வேறொரு துறையில் வேலை கொடுப்பதாக கூறினார்கள். அதற்கு முன்னர் ஒரு மூன்று மாதங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

“அக்கா! நான் இங்கேயே இருந்திடவா? நீ தனியா எப்படி சமாளிப்ப?”

மனதிற்குள் லேசான குழப்பம் இருந்தாலும் தங்கைக்கு படிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து அவளது கன்னத்தை தடவி “நீ மனசை போட்டுக் குழப்பிக்காதே. நானும் மாமாவும் சமாளிச்சிப்போம். இந்த ஒரு வாரமாவே நானும் பார்க்கிறேன் ரொம்பவே சோர்ந்து போயிருக்க. மாமா சமாளிச்சிப்பாங்க நதி”.

அவளை ஆமோதிப்பதை போல அவனும் “ஆமாம் நதி ! நான் சமாளிச்சுக்குவேன். நீ எத்தனை நாள் லீவ் போட முடியும்? படிக்கிறதை பாரும்மா”.

இருவரின் அன்பும் அவளை மேலும் நெகிழ்த்தியது. ஆனால் இன்னும் சிறிது நாட்களுக்காவது அவர்களுடன் இருந்து உதவி விட்டு செல்வதே நல்லது என்றெண்ணினாள். அதே சமயம் ஊருக்குச் சென்றாள் விஷாலை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை.

மெல்ல எழுந்து தன்னறைக்கு வந்தவளின் பார்வை படுக்கையின் மீது சார்ஜ் செய்யப்படாமல் இருந்த போனின் மீது விழுந்தது. தன்னிடமிருந்து எந்த தகவலும் வராது தவித்திருப்பான். நித்யாவிடமும் விசாரித்திருப்பான். அவனை எப்படி தன் வாழ்விலிருந்து விலக்குவது என்று புரியாமல் நின்றவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்து போனது. இதற்கு மேலும் அங்கேயே நின்றால் அழுகை காட்டிக் கொடுத்து விடும் என்கிற பயத்துடன் அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

கதவடைத்து அதன் மீதே சாய்ந்து நின்றவள் இரு கைகளால் வாயை பொத்திக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்.

நதியாவின் அக்காவும் தனது சோகத்தை மறைத்துக் கொண்டு தங்கையை அது பாதித்து விடக் கூடாது என்கிற எண்ணத்தில் தான் பேசினாள். தாய், தந்தை இறந்த பின்பு அவளுக்கு பெற்றவளாகவே மாறி வளர்த்தாள். திருமணம் செய்து கொண்டாள் வருகிறவன் அவளை எப்படி நடத்துவானோ என்கிற பயத்தில் திருமணமே வேண்டாம் என்றிருந்தாள். ஆனால் கதிரேசன் அவளுக்கு தந்தையாகவே மாறி போனான். தன்னை விட அவளிடம் ஒரு படி அதிகமாக அன்பை காட்டுவதை கண்டு மலைத்து போயிருக்கிறாள். தன்னைப் போலவே அவளின் நலனுக்காக தங்களின் கஷ்டத்தை மறைத்து அவள் படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டான்.

“உங்களை வந்து பார்த்ததிலிருந்து அழுது ஓயல. எனக்கு முன்னாடி அழக் கூடாதுன்னு தனியா போய் அழுதிட்டு வராங்க”.

“ஆமாம்மா! பார்த்தாலே தெரியுது. ரொம்ப சோர்ந்து போய் தெரியுறா. நீ போன் பண்ணினதும் பயந்து போயிருப்பா. அதிலும் என்னை ஆஸ்பத்திரியில் பார்த்ததும் மனசு தாங்கல அவளுக்கு”.

“அவ பிரெண்ட்ஸ் கிட்ட கூட பேசலைங்க. காலேஜுக்கு மெயில் அனுப்பிட்டு என் பின்னாடியே தான் சுத்திட்டு இருக்கா. அந்த போனை சார்ஜ் கூட போடலேன்னா பாருங்க”.

“நீ தான் பேசி அவளை அனுப்பனும். படிப்பு அவசியம்மா. நாம தனியா சமாளிச்சுக்கலாம்”.

“பேசிட்டேங்க...இன்னும் ஒரு வாரமாவது இருந்திட்டு போறேன்னு சொல்றா”.

“பதினஞ்சு நாளில் நிறைய பாடம் போயிடுமேம்மா”.

“நானும் சொன்னேன்ங்க...ஆனா அவ கெஞ்சுறா. எனக்கு இல்ல கிளம்புன்னு சொல்ல மனசு வரலைங்க”.

“ம்ம்...அவளால என்ன உதவி பண்ண முடியுமோ அதை செய்யணும்னு நினைக்கிறா”.

இந்த ஒரு வாரமுமே தினமும் இரவும், பகலும் பார்க்காது அவளது அலைப்பேசிக்கு அடித்து ஓய்ந்து போயிருந்தான் விஷால். ஏன் அவள் போன் சுவிட்ச் ஆப் ஆகஈ இருக்கிறது என்கிற காரணத்தை அறியாமல் தவித்து போயிருந்தான்.

நன்றாக பேசிவிட்டு சென்றவளுக்கு அங்கு போய் என்னாவானது?ஒருவேளை கதைகளில் படிப்பது போல அவளின் அக்காவும், மாமாவும் உடல்நலம் சரியில்லை என்று பொய் சொல்லி மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்திருப்பார்களோ? என்று பலவாறு யோசித்து மண்டை காய்ந்தான்.

நித்யாவும் அவள் மேல் கோபத்திலிருந்தாள். ஒரு வார்த்தை சொல்லக் கூடவா நேரமில்லை அவளுக்கு? என்று பயங்கர கோபம். அலைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு லேசாக பயமும் இருந்தது.

மேலும் ஒருவாரம் கடந்தது. கிருஷ்ணா மும்பையிலிருந்து பத்து நாட்கள் முன்பே வந்துவிட்டிருந்தான். எப்பவும் போல வீட்டிலிருப்பதே தெரியாத மாதிரியே இருந்தான். விஷால் தான் பதினஞ்சு நாட்களுக்குள் தாடி மீசையுடன் தேவதாசை போல சுற்றிக் கொண்டிருந்தான். செல்வநாயகமும், பத்மாவும் கூட அவனது நிலையை கவனித்து விட்டிருந்தனர்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு நதியா சென்னைக்கு ரயில் ஏறி விட்டிருந்தாள். நித்யாவுக்கோ, விஷாலுக்கோ அவள் வருவதை கூறவில்லை. ரயில் நகர ஆரம்பித்ததும், அவன் அனுப்பிய செய்திகளையும், அவனது அழைப்புகளின் கணக்கையும் பார்த்து கண் கலங்கி அமர்ந்திருந்தாள். எப்படி இந்த அன்பை மறுக்க போகிறேன்? கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? அளவில்லாத அன்பை கண்ணில் காட்டிவிட்டு இப்படி பிடுங்கி எறியலாமா? என்று எண்ணி நொந்து போய் இரு நாட்களும் மனதிற்குள்ளேயே அழுதபடி சென்னை வந்து சேர்ந்தாள்.

நேரே ஹாஸ்டலுக்கு வந்துவிட்டு, குளித்து கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள். அந்நேரம் விஷால் வழக்கம் போல அவளது எண்ணுக்கு அழைத்து பார்ப்போம் என்று அழைக்க, அது அடிக்க ஆரம்பித்திருந்தது. ரிங் போகிறது என்றறிந்ததும் பதட்டத்துடன் அவளின் குரலை கேட்க காத்திருந்தான்.

விஷாலிடமிருந்து அழைப்பு என்றதும் எடுக்கலாமா வேண்டாமா என்று தவித்து பின் எடுத்து விட்டாள். ஆனால் ஹெலோ என்கிற வார்த்தை கூட சொல்லாது பேசாமல் இருந்தாள். அவளின் குரலை கேட்க ஆவலாக காத்திருந்தவனுக்கு ஏமாற்றம். அதை மறைத்துக் கொண்டு “ஹெலோ தியா? எப்படி இருக்க? எங்கே இருக்க?

அவனது குரலை உள்வாங்கிக் கொண்டிருந்தவளின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.

“தியா! என்னடா? ஏன் பேச மாட்டேன்ற?”

‘ஐயோ! இப்படி எல்லாம் பேசாதடா! என்னால முடியல...போன்லயே நீ பேசும்போது என்னால கட்டுப்படுத்த முடியலையே. நேராக பார்த்தால் உன் மார்பில் சாய்ந்து அழுதுடுவோனோன்னு பயமா இருக்குடா’ என்று துடிதுடித்து போனாள்.

“ஏதாவது பேசுடா? உன் குரலை கூட கேட்டு பதினஞ்சு நாள் ஆச்சு? எப்போ சென்னைக்கு வர?” என்று படபடத்தான்.

அதற்கு மேலும் தாங்காது என்றெண்ணியவள் பட்டென்று போனை கட் செய்து விட்டாள். அதில் பெருத்த ஏமாற்றம் அடைந்தவன் மீண்டும், மீண்டும் அடித்துப் பார்க்க அவள் எடுக்கவே இல்லை.

அடுத்த நிமிடம் தங்கையின் அறைக்கு ஓடியவன் படபடவென்று கதவை தட்டினான்.

“ம்ச்...என்னண்ணா? எதுக்கு இப்படி தட்டுற?” என்று கோபத்துடன் கதவை திறந்தாள்.

அவளை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் “உன் போன் எங்கே நித்தி?” என்று அறையை கண்களால் துழாவினான்.

“காலேஜுக்கு கிளம்புற நேரத்தில் இங்கே என்னண்ணே பண்ற?”

அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவனது நோக்கம் முழுவதும் அவளது போனை தேடி எடுக்க வேண்டும். மேஜை மேல் சார்ஜ் போடப்பட்டிருந்த போனை அவசரமாக எடுத்தான். அதை பார்த்ததும் பட்டென்று அவனது கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டவள் “என் போன் உங்களுக்கு எதுக்கு?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டவன் “நதியா போன் ரிங் போகுது” என்றான்.

“நதியா போனா? அவ போன் அடிக்குதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேட்டுக் கொண்டே அவன் முகத்தை பார்த்தவளுக்கு புரிந்து போனது.

‘நதியா...தியா! அண்ணே...நதி தான் உங்க லவ்வரா?” என்றாள் அதிர்ச்சியுடன்.

அவளது முகத்தை பார்க்காது “ஆமா...சீக்கிரம் போனை கொடு நித்தி” என்று அவள் கையிலிருந்து எடுத்துக் கொண்டான்.

அந்த போனிலிருந்து நதியாவின் போனுக்கு அழைக்க, சற்று நேரம் எடுக்கப்படாமல் போக, மீண்டும் அழைத்தான்.

போன் எடுக்கப்பட்டு “நான் காலேஜ் வரேன் நித்தி...அங்கே பேசிக்கலாம்” என்று கூறி போன் அணைக்கப்பட்டது.

அவளின் குரலை கேட்டது ஒருபுறம் என்றால், அவள் தன்னிடம் பேச விரும்பவில்லை. அதோடு சென்னையில் தான் இருக்கிறாள். தன்னை அவாய்ட் செய்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்தான்.

அவனது நிலையை பார்த்த நித்தி வேகமாக உலுக்கி “அண்ணா! என்ன சொன்னா? நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?”

“பதினஞ்சு நாளா ஒரு போன் இல்ல. நான் பண்ணினாலும் எடுக்கவே இல்லை. இப்போ சென்னை வந்ததைப் பற்றியும் சொல்லல. நானே போன் பண்ணின பிறகும் என் கிட்ட ஒத்த வார்த்தை சொல்லல. இதோ உன் போனிலிருந்து பண்ணினதும் பேசினா. அப்போ என்னை அவாய்ட் பண்றான்னு தானே அர்த்தம்”.

“ஏன் அண்ணா? அவங்க மாமாவுக்கு விபத்து நடந்தப்ப உங்க கிட்ட தானே முதல்ல சொன்னாங்க. அதோட நீங்க தானே கொண்டு போய் விட்டீங்க? திடீர்னு என்னாச்சு?”

“தெரியல நித்தி! இன்னைக்கு நீ அப்பாவோட போ. நான் அவளை பார்த்து பேசணும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக தன்னரைக்குச் சென்றான்.

‘இந்த நதிக்கு ஓவர் கொழுப்பு தான். எங்க அண்ணன் மாதிரி ஒருத்தன் உருகி உருகி நிற்கிறான். இவ திமிர் காட்டிட்டு இருக்கா போல. காலேஜில் போய் கச்சேரியை வச்சுக்கிறேன்’ என்று எண்ணிக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

அவசரம் அவசரமாக உணவை கூட மறுத்து விட்டு நதியாவை பார்க்க ஓடினான். அவள் சரியாக ஹாஸ்ட்டலை விட்டு வெளியேறும் நேரம் அங்கேயே காத்திருந்து காரை அவள் முன்பு நிறுத்தி “தியா! பிரச்சனை பண்ணாம ஏறு” என்றான்.

இதை எதிர்பார்த்தே இருந்ததால் எதுவும் பேசாமல் அமைதியாக அவன் அருகே அமர்ந்தாள். உடனே காரை கிளப்பியவன் அவள் புறம் திரும்பாது தெருவை மட்டுமே பார்ப்பது குறியாக இருந்தான். அவளும் அவன் பக்கம் திரும்பாது, எங்கே போகிறாய் என்கிற கேள்வியும் எழுப்பாது ஜன்னலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.

ஆளில்லாத சாலை ஒன்றிற்கு சென்று மரத்தடியில் நிறுத்தியவன் மெல்ல அவள் பக்கம் திரும்பி “என்ன பிரச்சனை உனக்கு தியா? ஏன் என்னை அவாய்ட் பண்ற?’

வலுகட்டாயமாக வரவழைத்துக் கொண்ட இகழ்ச்சியுடன் “நீங்க தான் பிரச்சனை...எதுக்கு என்னை தொந்திரவு பண்றீங்க? உங்களை எனக்கு பிடிக்கல. அதனால ஒதுங்க நினைக்கிறேன்”.

இரு கைகளையும் இறுக கட்டிக் கொண்டு விழியசைக்காது அவளையே பார்த்துக் கொண்டு “பதினஞ்சு நாள் முன்னாடி இதை சொல்லி இருந்தேன்னா நான் நம்பி இருப்பேன். பிளைட் ஏறும் போது உன் கண்ணில் இருந்த காதலை கண்டவன் நான். பொய் சொல்லாதே!”.

“ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா? உங்களை பிடிக்கலேன்னு சொன்ன பிறகும் இப்படி தொந்திரவு பண்ண அசிங்கமாயில்லையா?”

அவளின் பேச்சு அவனுள் கோபத்தை தட்டி எழுப்ப, வேகமாக அவள் அருகே நெருங்கி அமர்ந்து “என் கண்ணைப் பார்த்து சொல்லு. என்னை பிடிக்கலேன்னு என்னை நேராக பார்த்து சொல்லு” என்றான் அதட்டலாக.

அவனது செயல் மேலும் கோபத்தை ஏற்படுத்த, தனது கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து அவன் கையில் வைத்து “பிளைட்டுக்கு நீங்க தந்தது. இதோட நமக்குள்ள இருந்த பிரெண்ட்ஷிப்பை முடிச்சுக்கலாம்”.

கையிலிருந்த காசையும், அவளையும் மாறி மாறி பார்த்தவன் சட்டென்று அவள் முகத்திலேயே காசை விட்டெறிந்து “உனக்கு முன்னாடி இதெல்லாம் தூசுடி. என்னோட அன்பை புரிஞ்சு வைத்திருப்பவள் நீ. ஏதோ பிரச்சனையின் காரணமா தான் இப்படி நடந்துக்கிற? என்ன பிரச்சனைன்னு சொல்லு நாம சேர்ந்து போராடுவோம்”.

அந்த வார்த்தைகள் அவளது கண்களில் கண்ணீரை வரவழைக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டு “உங்களை வேண்டாம்னு சொன்னா எனக்கு பிரச்சனையா? போதும் விஷால் இதோட விடுங்க. உங்க வழி தனி என் வழி தனி...விட்டுடுங்க”.

வலுக்கட்டாயமாக அவளது முகத்தை திருப்பியவன் “உனக்கு பொய் சொல்ல தெரியலடி. இந்த கண்ணுல இன்னமும் எனக்கான காதல் தெரியுது. ஊரில் உங்க அக்கா, மாமாவினால பிரச்சனை வந்திருக்கணும். என் கிட்ட மறைக்காம சொல்லு தியா. உன்னோட இன்பங்களில் மட்டுமில்ல துன்பத்திலும் நானிருப்பேன். தைரியமா சொல்லும்மா”.

அத்தனை நேரம் அடக்கி வைக்கப்பட்டிருந்த அழுகை வெடித்து சிதற, முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகை அவனுக்கு எதையோ உணர்த்தியது. அமைதியாக அவள் அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தான். சற்று நேரம் அழுதவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமல் கண்ணீரை துடைக்க கர்சிப் தேட, டிஷ்யுவை அவளிடம் நீட்டினான்.

“தேங்க்ஸ்” என்று வாங்கிக் கொண்டு முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

“இப்போ சொல்லு...என்ன பிரச்சனை?”

நன்றாக முகத்தை சீர் செய்து கொண்டவள் “எதுவுமில்லை விஷால். உங்களை கெஞ்சி கேட்டுகிறேன். இதோட என்னை தொந்திரவு செய்வதை விடுங்க. உங்க தங்கையும், நானும் மட்டுமே பிரெண்ட்ஸ். நீங்க எனக்கு யாரோ தான். இதுக்கு மேலையும் என்னை கேள்வி கேட்டா உங்களுக்கு எந்த பதிலும் கிடைக்காது. விட்டுடுங்க! நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் மறந்திடுங்க”.

இறுகி போன முகத்துடனே “எத்தனை ஈஸியா சொல்லிட்ட எல்லாவற்றையும் மறந்திடுங்கன்னு. நிச்சயமா மறக்க முடியாது! உன்னை போல அத்தனை எளிதா தூக்கிப் போட முடியாது. இதோ இந்த நிமிஷம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. ஏதோவொரு பிரச்சனை காரணமா என்னைக் கண்டு ஒதுங்கி போற. நீ ஒதுங்கினாலும் நான் உன்னை என்னைக்கும் மறக்க மாட்டேன். உனக்கு எந்த நேரத்தில் என் உதவி தேவைபட்டாலும் உனக்காக நான் அங்கிருப்பேன். அதுக்காக உன்னை தொந்திரவு செய்வேன் என்றெல்லாம் நினைக்காதே. உன்னை மட்டும் தான் என் மனம் நேசிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றவன் வேகமாக காரை எடுத்தான்.

நதியாவை கல்லூரியில் கொண்டு விட்டு விட்டு திரும்பியும் பார்க்காது அலுவலகத்திற்கு சென்று விட்டான். வகுப்பிற்கு சென்று நித்யாவை பார்க்கும் வரை அவன் பேசியது எல்லாம் மனதில் ஓட, மனம் பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தது.

தோழியை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் நித்யா. மெல்ல அவள் அருகே சென்றமர்ந்தவள் “என்ன நித்தி? ஏன் என்னை பார்க்க மாட்டேன்ற?”

பல்லக் கடித்துக் கொண்டு “என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு போகணும்னு உனக்கு தோணவே இல்லேல்ல? அப்புறம் என்னடி பிரெண்டு?”

அவளது கைகளை அழுந்தப் பற்றிக் கொண்டவள் “அந்த நேரம் ரொம்பவே பதறி போயிட்டேன் நித்தி. என்ன செய்றதுன்னே தெரியல”.

“எங்கண்ணன் கிட்ட மட்டும் சொல்ல முடிஞ்சுதோ?”

அந்த வார்த்தையை கேட்டதும் எதுவும் சொல்லாமல் தலையை குனித்து கொண்டாள்.

“எங்கண்ணனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை நதி? பதினஞ்சு நாளா பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்காங்க. காலையில என்னடான்னா அவங்க போனிலிருந்து பேசினப்ப நீ பேசலையாம். அதனால என்னோட போனிலிருந்து பேசினாங்க”.

“அது..”

“இங்கே பார் நதி! எங்கண்ணன் என்பதற்காக சொல்லல. உன் மேல அத்தனை அன்பை வச்சிருக்காங்க. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கோங்க”.

“நித்தி! நிறைய பாடம் போயிருக்கும் உன் நோட்ஸ் எனக்கு தரியா?”

அவளை கூர்ந்து பார்த்தவள் “என்னவோ இருக்கு நதி. நீ எதையோ மறைக்கிற...நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் நீ சரியா இல்ல”.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
உள்ளுக்குள் கதறியவள் ‘அண்ணனும், தங்கையும் மாறி மாறி என்னை என் மனசை அறிந்து கொல்றாங்களே...நான் என்ன செய்வேன்? என்னை எத்தனை நாளைக்கு இந்த கேள்விகள் விடாம துரத்தப் போகுதோ?’ என்று எண்ணிக் கொண்டாள்.

அன்றைய தினத்திற்கு பின்னர் விஷால் மேலும் தன்னை சுருக்கிக் கொண்டான். அவனது உற்சாகமான மனது முற்றிலுமாக தொலைந்து போனது. எந்நேரமும் விட்டதை வெறித்தபடி அமர்ந்திருப்பதும், தன்னந்தனிமையில் இருப்பதுமாகவே இருந்தான்.

பத்மாவிற்கு அவனது இந்த போக்கு கவலைக்குள்ளாக்கியது. செல்வநாயகத்திடமும் பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர் அவரும் அவனை கவனித்து விட்டு, கவலையடைந்தார். நதியாவும் தனது இயல்புகளை தொலைத்து விட்டு நடமாடிக் கொண்டிருந்தாள். இருவரை பற்றிய உண்மையை அறிந்த நித்திக்கு அவர்களுடன் இடையே இருந்த ஊடல் தான் இதற்கு காரணம் என்று எண்ணினாள். இதற்கு மேலும் அப்படியே விட்டால் இருவரும் தேவதாஸ், பார்வதி போல சுற்றுவார்கள் என்றெண்ணி அதை தடுப்பதற்கான வேலையில் இறங்கினாள்.

காலை நேரம் உணவு மேசையில் அமர்ந்திருக்கும் போது “அப்பா! இந்த விஷால் அண்ணாவை பார்த்தீங்களா? எந்நேரமும் மோட்டுவளையை பார்த்துகிட்டே இருக்கு”.

அவள் ஆரம்பித்து வைத்ததை சாக்காக வைத்துக் கொண்டு “என்னடா ஆச்சு உனக்கு? நானும் கொஞ்ச நாளா உன்னை பார்க்கிறேன். நார்மலாகவே இல்லையே?”

அவன் எதுவும் பதில் சொல்லாமல் தட்டிலிருந்த இட்லியை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அதை கவனித்த செல்வநாயகம் “அம்மா கேட்கிறால்ல பதில் சொல்லு விஷால். எதுவும் பிரச்சனையா?”

அப்போதும் அவன் அமைதி காக்க, அது பொறுக்காத நித்தி “ஆமாம் பா...என் பிரெண்டை லவ் பண்றாங்க. ரெண்டு பேருக்கும் என்னவோ பிரச்சனை. அது தான் அண்ணன் இப்படி சுத்துது” என்று போட்டுடைத்தாள்.

அதை கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டு எதிலும் தலையிடாமல் இருந்த கிருஷ்ணா நிமிர்ந்து விஷாலை பார்த்தான்.

பத்மாவோ “என்னது லவ்வா? என்னடா சொல்றா இவ?” என்றார் அதிர்ச்சியாக.

“ம்ம்..ஆமாம் லவ் தான் பண்றேன். அவளும் என்னை லவ் பண்றா. ஆனா திடீர்னு என்னை விட்டு விலகி போயிடுனு சொல்றா”.

யோசனையுடன் நெற்றியை சுருக்கிய செல்வநாயகம் “என்ன இது விஷால்! யார் அந்த பொண்ணு? உன் கிட்டேருந்து இதை எதிர்பார்க்கல”.

சற்றே தயக்கத்துடன் “அப்பா! என் பிரெண்ட் நதியா தான் பா. ரொம்ப நல்ல பொண்ணுப்பா. அண்ணன் தான் துரத்தி துரத்தி அவளை ஒத்துக்க வச்சிருக்கு” என்று அவள் கூறி முடிக்கவும் அவன் கோபத்துடன் முறைத்தான்.

கிருஷ்ணாவோ சிரிப்புடன் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைத்தையும் மறந்து இந்த பிள்ளையாவது கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறானே என்கிற எண்ணத்துடன் “நான் வேணா அந்த பொண்ணு கிட்ட பெசவாடா?” என்றார் பத்மா.

அதை கேட்டு கடுப்பான செல்வநாயகம் “பத்மா! என்ன பேசிட்டு இருக்க? உன் புள்ள நம்ம சம்மதம் இல்லாம லவ் பண்றேன்னு சொல்றான். அது உனக்கு தப்பா தெரியலையா?”

அவரை முறைத்து “சும்மா இருங்க! நானே சந்தோஷத்தில் இருக்கேன். ஒருத்தன் தான் சாமியாரா சுத்துறான். இவனாவது லவ் பண்ணட்டுமேங்க. டேய் விஷாலு! அந்த பொண்ணு போட்டோ எதுவும் வச்சிருக்கியா?” என்றார் ஆர்வமாக.

அன்னையை முறைத்தவன் “அவன் உங்க பிள்ளை வேண்டாம்னு சொல்றா” என்றார்.

“விடுறா! விடுறா! நீ எதுவும் சேட்டை பண்ணி இருப்ப. அது தான் போடான்னு சொல்லி இருப்பா”.

“மா! உண்மையா சொல்றேன் மா. அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. அதை என்கிட்டே சொல்ல மாட்டேன்றா. அதுக்காக தான் என்னை வேண்டாம்னு சொல்றா”.

அதை கேட்டதும் யோசித்தவர் “நான் போய் பேசினா என்னை கண்டு பயப்பட வாய்ப்பிருக்கு. இவர் போனா உருவத்தை பார்த்தே மயக்கம் போட்டு விழுந்திடும். நித்தி சின்ன பிள்ள. அப்போ யாரை அனுப்புறது?”

செல்வநாயகம் அவரை முறைக்க, நித்தியோ “மா! பெரிய அண்ணனை அனுப்புவோமா?”

அதுவரை சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்து விட, “யாரு இவனையா? இவனே பொண்ணுங்களை கண்டா காத தூரம் ஓடுறான். அந்த பிள்ள கிட்ட இவன் பேசினா அதுவும் சாமியாரா போயிடும்” என்றார் கிண்டலாக.

அதற்கும் அலட்டிக் கொள்ளாமல் டிஷ்யுவால் உதட்டை துடைத்துக் கொண்டு “சரி நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தான்.

அப்போது வேகமாக எழுந்த விஷால் அவனது கைகளைப் பற்றிக் கொண்டு “அண்ணா! அவ கிட்ட நீ பேசி பார்க்கிறியா?” என்றான் கெஞ்சலாக.

புருவத்தை லேசாக உயர்த்தியவன் “ஒரு பொண்ணுக்காக இவ்வளவு யோசிக்கனுமா விஷால்? வொர்த் தானா?”

“அண்ணா! அவ இல்லாம நானில்லை. எனக்கு வாழ்க்கையே அவ தான்”.

சற்று நேரம் அப்படியே நின்றவன் நித்யாவின் பக்கம் திரும்பி “எவனிங் பெசன்ட் நகர் பீச்சில் அவளை மீட் பண்ற மாதிரி அழைச்சுகிட்டு வா” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று அங்கிருந்து சென்றான்.

செல்வநாயகமோ “இவன் முகத்தை சிடுசிடுன்னு வச்சுகிட்டு போய் அந்த பெண்ணை மிரட்டிட போறான். உள்ளதும் போச்சுன்னு ஆக போகுது” என்றார்.


“இல்லப்பா! அண்ணன் அப்படி பண்ணாது. நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்”.
*************************************தொடரும் ********************************
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 9

நதியாவிடம் என்ன சொல்லி அழைத்துச் செல்வது என்கிற யோசனையுடன் கல்லூரிக்கு கிளம்பினாள் நித்யா. விஷாலை பார்க்க பாவமாக இருந்தது. எப்படியாவது இதை சரி செய்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் கிளம்பினாள்.

வழக்கம் போல வகுப்பறைக்கு சோர்ந்த முகத்துடனேயே வந்தாள் நதியா. அவளை பார்த்ததும் இவளுக்கு என்னதான் பிரச்சனை என்றே தோன்றியது. ஊருக்கு போகும் முன் நன்றாக இருந்தவள் தானே. இப்போது ஏன் சோகச் சித்திரமாக இருக்கிறாள்.

தன்னருகே அமர்ந்தவளை கண்டு “நோட்ஸ் எல்லாம் எழுத்திட்டியா நதி?”

எதையோ நினைத்தபடி அமர்ந்திருந்தவள் அவளின் கேள்வியில் தடுமாறி பின் சுதாரித்துக் கொண்டு “ஹான்!...எழுதிட்டேன் நித்தி” என்றாள்.

அவளது கைகளை இறுகப் பற்றி “என்ன பிரச்சனை உனக்கு? ஏன் இப்படி இருக்க?” என்றாள் மெல்லிய குரலில்.

கட்டாயமாக வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் “ஒரு பிரச்சனையும் இல்ல நித்தி. ரெண்டு நாளா தலைவலி அது தான்”.

“நதி! மதியம் கிளாஸ் எதுவுமில்ல. பீச்சுக்கு போகலாமா?”

“வேண்டாம் நித்தி! நான் ஹாஸ்டல் போய் கொஞ்ச நேரம் தூங்குவேன்”.

சற்றே தயக்கத்துடன் அவளின் கைகளை நன்றாக பற்றிக் கொண்டு “அண்ணன் உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க” என்றாள்.

அவள் அதை சொன்னதும் பதறி போனவள் “உங்கண்ணன் எதுக்கு என்னை பார்க்கணும்? நித்தி! எனக்கு புரியல?”

“ரிலாக்ஸ் நதி! விஷால் அண்ணனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?”

அதை கேட்டதும் முகம் மாறியவள் “நித்தி! வேண்டாம் விட்டுடு! நான் மதியம் ஹாஸ்டல் போறேன்”.

நித்தியோ விடாது “இங்கே பார் நதி! நீ விஷாலை பத்தி பேச வேண்டாம். எங்க பெரியண்ணன் உன் கிட்ட பேசணும்னு சொன்னாங்க”.

அவள் முகத்தில் இருந்த உணர்விற்கு என்ன பெயர் வைப்பதென்று தெரியவில்லை.

“என்கிட்டே பேச என்ன இருக்கு? ப்ளீஸ் என்னை தொந்திரவு செய்யாதே நித்தி”.

அவளோ விடாப்பிடியாக “இல்ல நதி! உனக்கு என் மேல அன்பிருந்தா எனக்காக வரணும். நீ பயப்படுற மாதிரி எதுவும் பேச மாட்டாங்க எங்கண்ணன். விஷால் அண்ணனாவது அதிகம் பேசும். இவங்க பெண்கள் கிட்ட பேசவே யோசிப்பாங்க. அவங்க வந்துட்டு போனதும் கொஞ்ச நேரம் பீச்சில் இருந்திட்டு போகலாம். கொஞ்சம் சேஞ்சாக இருக்கும்”.

“நீ சொல்றது எல்லாம் சரி நித்தி. ஆனா உங்கண்ணன் எதுக்கு என்னை பார்க்கனும்னு சொன்னாங்க?”

“தங்கையோட பிரெண்ட் நல்ல பெண்ணா இல்லையான்னு தெரிஞ்சுக்க தான்” என்று கூறி கண்ணடித்தாள்.

குனிந்து தனது கை விரல்களை பார்த்தபடி “எனக்கு யாரையும் சந்திக்க இஷ்டம்மில்லை நித்தி. பீச்சுக்கு போவதில் பிரச்சனை இல்ல எனக்கு”.

சற்று யோசிப்பது போல் அமர்ந்திருந்தவள் “சரி! நான் அண்ணனை வர வேண்டாம்னு சொல்லிடுறேன். நாம போயிட்டு வருவோம்”.

அதற்கு பதிலேதும் சொல்லாமல் வழக்கம் போல தனது யோசனைகளில் மூழ்கி இருந்தாள். மதியம் வரை வகுப்பில் கூட ஏனோ தானோவென்றே இருந்தாள். எதிலையுமே ஆர்வம் காட்டாது பிரமை பிடித்தது போலிருந்தாள். நித்திக்கு அவளது நிலையை பார்க்க பரிதாபமாக இருந்தது.

மாலை நான்கு மணி வாக்கில் நதியை அழைத்துக் கொண்டு பீச்சிற்கு கிளம்பினாள். அதற்கு முன்பே கிருஷ்ணாவை அழைத்து தாங்கள் வருவதை கூறிவிட்டே சென்றாள். எந்தவித ஆர்வமுமின்றி நித்தி அழைத்ததற்காக அவளோடு கடற்கரைக்கு சென்றாள்.

அலைகளின் ஓசையை கேட்டவளின் மனம் அதன் பின்னோடு போக, வேகமாக சென்று கரையை நோக்கி வரும் அலைகளை பார்த்தவண்ணம் நின்றாள். மெல்ல அவள் அருகே சென்ற நித்யா “அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு போயிட்டு வருவோமா நதி?” என்றாள்.

நித்தியை திரும்பியும் பார்க்காது “இல்ல நான் வரல. நீ போயிட்டு வா நித்தி” என்று கூறிவிட்டு அலைகளை தொடரும் பணியை செய்து கொண்டிருந்தாள்.

மெல்ல அவளை திரும்பி பார்த்து விட்டு சற்று தூரம் சென்றவள் அலைபேசியை எடுத்து “அண்ணா வந்துட்டீங்களா? நாங்க வந்தாச்சு”.

“ம்ம்...வந்தாச்சு காரை பார்க் பண்ணிட்டு வரேன். நீங்க எங்க இருக்கீங்க?”

அவனிடம் தாங்கள் இருக்குமிடத்தை கூறிவிட்டு காத்திருந்தாள். கிருஷ்ணா காரை பார்க் செய்துவிட்டு நடந்து வரவும், அவனை பாதி வழியில் எதிர்கொண்டவள் நதியா நிற்குமிடத்தை கை காட்டிவிட்டு “நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்னா நீ பேசு” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.

இதை எதிர்பார்க்காதவன் அவள் செல்லும் திசையை பார்த்துவிட்டு ஒருவித சலிப்புடன் நதியாவை நோக்கி முன்னேறினான்.

வேகமாக கோவில் பக்கம் சென்ற நித்யாவோ பிரஹாரத்தில் நின்று நதியா தன் அண்ணனிடம் எப்படி பேசுவாளோ என்கிற பயத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.

நதியா நின்றிருந்த இடத்திற்கு அருகே வந்தவன் அவளை எப்படி அழைப்பது என்று தெரியாமல் சற்றே தயங்கி நின்றவன் பின்னர் லேசாக தொண்டையை செருமினான். அந்த சப்தத்தில் தனது மோன நிலையிலிருந்து சுயத்திற்கு வந்தவள் மெல்ல திரும்பினாள்.

தன்னை நோக்கி நின்றவளை அலட்சியமாக பார்த்தபடி நின்றான் கிருஷ்ணா. ஆனால் அவனை பார்த்த நதியாவின் முகமோ ஆத்திரத்தை பூசிக் கொண்டது. கண்களில் ரௌத்திரம் குடி கொண்டது. உடலில் ஒரு விறைப்பு வந்தமர்ந்து கொண்டது.

அவன் எதிர்பார்க்கும் முன் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள். உதடுகள் துடிக்க “என்ன தைரியம் இருந்தா என் முன்னாடி வந்து நிற்ப?”

இதை சற்றும் எதிர்பார்க்காத கிருஷ்ணாவின் கண்கள் கூர்மையாக அவளை ஆராய்ந்தது. தம்பியின் காதலியிடம் பேச வந்திருக்கிறோம் என்கிற நிலையில் இருந்தவன் கன்னத்தை தடவியபடி “நதி...யா”.

அவளோ அவன் தன் பெயரை சொன்னதை கேட்டு மேலும் அதிர்ந்து “ஏய்! என் பேர் உனக்கு எப்படி தெரியும்?” என்றாள் அவன் சட்டையைப் பற்றி.

தாடையிலிருந்து கையை எடுக்காமலே “சோ...விஷாலோட லவ்வர் நீ” என்றான் தலையை லேசாக சாய்த்து அவளை பார்த்தபடி.

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு பூகம்பத்தை வரவழைத்தது. அதிலும் விஷாலை பற்றி கூறியவுடன் ஓரடி பின்னே நகர்ந்து “நீ...நீ விஷாலோட அண்ணனா?’ என்றாள் கண்களில் அதிர்வை காண்பித்து.

நெற்றியை தட்டி யோசித்தவன் “எப்போ? எந்த மாதம்?”

அடுத்த நிமிடம் அவன் முகத்தில் காறி உமிழ்தவள் “நீ மனுஷனே இல்ல...உன் தம்பி காதலிச்ச பொண்ணு கிட்ட..”

அவனோ சிறிதும் கவலைப்படாது முகத்தை துடைத்துக் கொண்டு “லுக்! இந்த சினிமா டைலாக் எல்லாம் பேசுறதை விட்டுட்டு பிராக்டிகலா பேசலாமா?”

“நீ விஷால் கிட்ட என்ன சொன்னேன்னு தெரியாது. அவன் சோகமா இருக்கான். நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்ல”.

“ஏன் அப்படி பண்ணின? சொல்லு...ஏன்?”

அவளது முகபாவத்தை பார்த்துக் கொண்டே அலட்சியமாக “ஓவரா சீன் போடாதே! என் கணக்கு படி ஏப்ரல் மாதம். அதுக்கு பிறகு நல்லா தானே இருக்க?”

“ஏய்! உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?”

கையை வேகமாக உதறி “என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற நீ. என்னோட கேள்விக்கு பதில் சொல்லு. என் தம்பிக்கு என்ன சொல்லப் போற?”

முகத்தை அருவெறுப்புடன் வைத்துக் கொண்டு “இதை கேட்க வெட்கமாயில்ல”.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
“லுக் நதியா! எனக்கு ஒரு பொண்ணு மேல ஒரு முறை தான் இண்டரெஸ்ட் வரும். நல்லா நோட் பண்ணிக்கோ ஜஸ்ட் ஒன்ஸ். அது எவ்வளவு பெரிய ரதியாக இருந்தாலும். சோ நீ என் தம்பிக்கு என்ன பதில் சொன்னாலும் நோ ப்ராப்லம்”.

“தூ! ஒரு பெண்ணை கதற கதற கெடுத்திட்டு அவளை உன் தம்பி கல்யாணம் செஞ்சுகிட்டாலும் பரவாயில்லேன்னு சொல்ற உன்னை என்ன சொல்றது?”

“ஓகே...என் தம்பியை மனசை மாற்றிக்க சொல்லிடலாம் இல்லையா? பட் என்னை தொடர்ந்து வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்சேர் பண்ணலாம்னு ஐடியா எல்லாம் வச்சிக்காதே. என்னோட தேவை ஒரு பெண்ணோட முடியாது”.

பாய்ந்து அவனது சட்டையை பற்றியவள் “உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா நினைவிருக்கா? அவளை இப்படி ஒருத்தன் செஞ்சா சும்மா இருப்பியா நீ?”

லேசாக தோள்களை குலுக்கிக் கொண்டவன் “அது அவ ப்ராப்லம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கோவிலிலிருந்து நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த நித்யா, தன் அண்ணனை அடித்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்றெண்ணி ஓடி வந்தாள்.

நதியாவிடம் வந்தவள் அவளை கன்னத்தில் ஓங்கி அறைந்து “என்ன தைரியம் இருந்தா எங்கண்ணனை அடிப்ப? நீ என்ன விஷால் அண்ணனை வேண்டாம்னு சொல்றது நானே சொல்றேன் டி. நீ எங்க அண்ணனுக்கு வேண்டாம்” என்று கூறி கிருஷ்ணாவின் கையை பற்றி அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவளை பாவமாக பார்த்துக் கொண்டு நின்ற நதியா ‘புத்துக்குள்ள இருக்கிற விஷ நாகத்தை பற்றி நீ தெரிஞ்சுக்கல நித்தி. அந்த நாகம் உங்க குடும்பத்தையே அழிக்க போகுது’ என்றெண்ணிக் கொண்டு அங்கேயே தொய்ந்து போய் அமர்ந்தாள்.

அவளது கண்ணீர் கன்னம் தொட்டு வழிந்தோட ஆரம்பித்தது. மனமோ நடந்தவற்றை எண்ணி கதறிக் கொண்டிருந்தது. எப்படி சொல்வேன் விஷால்? இத்தனை நாள் யாரிடமோ என்னை இழந்து விட்டேன் என்று உடைந்து போயிருந்தேன். ஆனால் அது உன் அண்ணன் விஷால். எப்போது என் பெண்மையை இழந்தேனோ அப்போவே உனக்கு நான் தகுதியில்லேன்னு தான் ஒதுங்கி போனேன். ஆனா இன்னைக்கு உன் அண்ணன் தான் என் நிலைமைக்கு காரணம்னு தெரிஞ்ச பிறகு உன் முகத்தை பார்க்க கூட எனக்கு விருப்பமில்லை. சத்தியமா இதை எதிர்பார்க்கவே இல்லை.

உனக்கு இப்படியொரு அண்ணன் இருப்பான்னு நினைக்கவே இல்லை. வேண்டாம்! நான் இந்த ஊரை விட்டே போயிடுறேன். உங்க யார் கண்ணிலும் படல. என்னால உன் கிட்ட எதையும் மறைக்க முடியாது. அந்த தைரியம் எனக்கில்லை. நான் இங்கேருந்து போயிடுறேன் என்று யோசித்துக் கொண்டு கண்களை துடைத்து விட்டு அங்கிருந்து மெல்ல நடந்து வந்து ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள்.

அதே நேரம் கிருஷ்ணாவும், நித்யாவும் காரில் சென்று வீட்டில் இறங்க, மிகுந்த கோபத்துடன் வீட்டினுள் நுழைந்தவள் “அம்மா! அண்ணா! இங்கே வாங்க” என்று கத்தினாள்.

அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் அவசரமாக வர விஷால் மட்டும் அவளிடம் சென்று “என்ன நித்யா தியாவை பார்த்து பேசிட்டீங்களா?” என்று கேட்டு கிருஷ்ணாவை பார்த்தான்.

விஷாலை முறைத்து விட்டு அன்னையிடம் திரும்பியவள் “அவ என் பிரெண்டே இல்லம்மா. நம்ம அண்ணனை கை நீட்டி அடிச்சிட்டா” என்றாள் கண்ணீருடன்.

இதை சற்றும் எதிர்பார்க்காத விஷால் “ஏய் என்ன சொல்ற? அண்ணனை அடிச்சாளா?” என்றான் ஆத்திரமாக.

கிருஷ்ணாவோ எதற்கும் எந்த பாவனையும் காட்டாது அங்கிருந்த சோபாவில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆமாண்ணா! ஒரு அடியில்ல பல தடவை அடிச்சிட்டா...அவ்வளவு அடியையும் வாங்கிகிட்டு அண்ணன் அமைதியா தான் இருந்தது” என்றாள் கண்ணீருடன்.

வேகமாக கிருஷ்ணாவிடம் ஓடிச் சென்றவன் ‘என்ன சொல்றா அண்ணே? அவ உண்மையாகவே அடிச்சாளா?” என்றான் தவிப்புடன்.

நன்றாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டவன் “விடுடா சின்ன பொண்ணு ஏதோ கோபப்பட்டு...”

அவன் சொன்னதை கேட்டு முற்றிலுமாக அதிர்ந்தவன் “அண்ணா! சாரி! நான்..னா...இதை எதிர்பார்க்கல”.

அப்போது பத்மாவோ “என் மகனை கை நீட்டி அடிச்சிருக்கா உனக்கு கோவமே வரலையா விஷால். உங்கண்ணனை பத்தி உனக்கு தெரியும். அவனை கை நீட்டி அடிச்சிருக்கான்னா அவ பொண்ணே இல்லை. அதை பார்த்திட்டு நீயும் சும்மா நிக்கிற” என்று உசுபேத்தி விட்டார்.

நித்யாவோ “நானும் நல்லா நாலு வச்சிட்டு தானம்மா வந்தேன். ச்சே! அவ இப்படிபட்டவளா இருப்பான்னு தெரியாம போச்சு” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

இத்தனை நடக்கும் போதும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணா “சாரி டா விஷால். என்னால உனக்காக பேச முடியல. அவளோட சேர்த்து வைக்கனும்னு தான் நினைச்சேன் பட் அவ அதற்கு இடமே கொடுக்கல” என்றான் ஒன்றுமே அறியாதவன் போல.

மனதிற்குள் அத்தனை நாள் இருந்த வெறுமை ஒருபுறமும், அண்ணனை அவள் அவமதித்து விட்டாள் என்கிற கோபமும் ஒன்று சேர, வேகமாக சென்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு கீழே வந்தான். அவனது நோக்கம் தெரிந்து பத்மாவும், நித்யாவும் அவன் பின்னோடு ஓட, மெல்ல அவர்களை திரும்பி பார்த்துவிட்டு தோள்களை லேசாக குலுக்கிக் கொண்டு தனதறைக்கு சென்று விட்டான் கிருஷ்ணா.

பத்மாவும், நித்யாவும் செல்வதற்குள் பைக் காம்பவுண்டை தாண்டி இருந்தது. கோபம்..கோபம்...அதன் வேகத்தை பைக்கில் காட்ட, பதினைந்து நிமிடத்தில் ஹாஸ்டலை அடைந்திருந்தான். அங்கு அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

*********************************தொடரும்*****************************************
 
Status
Not open for further replies.