உந்தன் மடியில் - கதை திரி

#22
நண்பர்களே!

இதோ, 9வது எபி!

9.யாழினியும் கனகமும் ஒன்றாகப் பேசிச் சிரித்தபடி வருவதை தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு கோபம் கோபமாக வந்தது!

அம்மா வர வர எனக்காக எதையும் செய்ய மாட்டேங்கறாங்க.. அவ கிட்ட அப்டி என்னதான் இருக்கோ தெரியல.. அவளுக்கு இவ்ளோ இம்பார்டன்ஸ் குடுக்கறாங்க.. என்று நினைத்து நினைத்து குமுறிக் கொண்டிருந்தான்!

வீட்டுக்குள் அவர்கள் நுழையும் போது காலை ஏழு மணியாகி இருந்தது!

ராசாத்தி அரைகுறையாகப் பெருக்கிவிட்டு ஏனோதானோவென்று வாசலில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருந்தாள்!

தள்ளியிருந்தபடியே இதைக் காட்டிய கனகம்,

"பாத்தியா! வீட்ல தலைவன் சரியில்லன்னா எல்லாம் ஏனோதானோன்னுதான் இருக்கும்னு சொல்லுவாங்க.. இவளுக்கு நாம என்ன குறை வெச்சோம்.. வாங்கற சம்பளத்துக்கு நியாயமா வேலை பண்றாளா பாத்தியா? நீ உன் தோரணைய மாத்தலன்னா இந்த படிக்காத ராசாத்தி கூட உன்ன மதிக்க மாட்டா.. சொல்லிட்டேன்! அன்பு செலுத்து.. வேணாங்கல.. ஆனா அவ உன் அன்பை தவறா பயன்படுத்த நீ அனுமதிக்காத.. புரியுதா!" என்றாள் கனகம்!

"புரியுது அத்த!" என்ற யாழினி ஒரு புதிய அவதாரம் எடுக்க மனதுக்குள் நிச்சயித்துக் கொண்டாள்.

கோல மாவை எடுத்துக் கொண்டு வாசலில் கோலமிட வந்த ராசாத்தி இவர்கள் இருவரும் உள்ளே வருவதைப் பார்த்து,

"என்னா.. மாமியாரும் மருமகளும் சோடி போட்டுகிட்டு காலங்கார்த்தால எங்க சுத்திட்டு வரீங்க.." என்று கேட்டாள். அவள் சாதாரணம் போலக் கேட்டாலும் அதில் ஏளனம் இழையோடியது நன்றாகவே புரிந்தது யாழினிக்கு!

ராசாத்தியை நேருக்கு நேராகப் பார்த்து,

"அவசியம் தெரியணுமா ராசாத்தியக்கா!? உள்ள வாங்க.. பதில் சொல்றேன்!" என்றாள் யாழினி!

எப்போதும் அன்பாகப் பேசும் யாழினி இப்போது ஒரு மாதிரிக் குரலில் பேசியதைக் கேட்ட ராசாத்திக்கு குழப்பமாக இருந்தது!

நமக்கேன் வம்பு! என்று நினைத்து கோலமிடக் குனிந்தவளை நிறுத்தினாள் யாழினி!

"இதான் வாசல் தெளிக்கற லட்சணமா? வாசல் எதுக்கு தெளிக்கறாங்க தெரியும்தானே.." என்று குரல் உயர்த்தாமல் கோபமாகக் கேட்ட யாழினியை அதிசயமாகப் பார்த்தாள் ராசாத்தி!

"என்ன.. முழிக்கறீங்க.. ஒழுங்கா இந்த இடத்த சுத்தமா பெருக்கி எடுத்துட்டு நல்லா தண்ணி தெளிச்சி கோலம் போடுங்க!" என்று கடிந்து சொல்லிவிட்டு மாமியாரை அழைத்துக் கொண்டு உள்ளே போனாள் யாழினி.

ராசாத்தி ஏதோ முணுமுணுத்தபடி துடைப்பத்தை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டாள்.

"என்ன அங்க முணுமுணுப்பு!?" என்று திரும்பி நின்று ராசாத்தியை முறைத்தாள் யாழினி!

"ஒண்ணுல்லம்மா.." என்றாள் ராசாத்தி!

"ம்.. சீக்கிரம் கோலம் போட்டுட்டு வந்து காபி போடுங்க.." என்று கூறிக் கொண்டே உள்ளே போனாள் யாழினி!

யம்மா.. இந்த பொண்ணு இவ்ளோ நாள் நல்லாதான இருந்துச்சி.. இன்னிக்கு இதுக்கு என்னாச்சின்னு தெரீலயே.. என்று தனக்குள் நினைத்தபடி வேக வேகமாக வாசலை சுத்தமாக பெருக்கத் தொடங்கினாள்.

யாழினி வீட்டுக்குள் நுழைந்ததும் மாடியிலிருந்து இறங்கி வந்த அபி, நேராகத் தன் அம்மாவிடம் சென்று,

"இவ கால்ல விழுந்து கூட்டிட்டு வந்தீங்களாக்கும்.. அப்டி என்ன இவ உங்களுக்கு அவ்ளோ முக்கியமா போய்ட்டா.." என்று கோபமாகக் கேட்டான்.

"டேய்.. போடா.. காலங்கார்த்தால நல்ல மூடை கெடுக்கற மாதிரி எதையாவது உளறாத.." என்றாள் கனகம்.

"இவ கோவிச்சிகிட்டு போவாளாம்.. நீங்க அவ கால்ல விழுந்து கூட்டிட்டு வருவீங்களாம்.. நல்லா இருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு.." என்றான்.

"ம்ச்.. பேசாம இருடா.." என்றாள் கனகம்.

"எல்லாம் நீங்க குடுக்கற இடம்தான்.. அவ இப்டி திமிரு பிடிச்சி ஆடறா.. கல்யாணம் ஆகி வந்ததுமே உங்க மாமியார் அதிகாரத்த காட்டியிருந்தீங்கன்னா அவ அடங்கி ஒடுங்கி இருந்திருப்பா.."

"உன்ன பேசாதன்னு சொன்னேன்.." என்று கடிந்து கூறினாள் கனகம்.

தன் அம்மாவை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றான் அபி.

இவன் பேசியதெல்லாம் யாழினியின் காதில் விழாமல் இல்லை! நன்றாகவே விழுந்தது!

நா திமிரு பிடிச்சி ஆடறேனா.. இவருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. நா உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்.. இவர் என்னடான்னா நா திமிரு பிடிச்சி ஆடறேன்னு அத்த கிட்ட இப்டி கோவப்படறாரு.. அத்த சொல்ற மாதிரி சந்திரமுகியா மாறினாதான் சரிப்படும் போல.. என்று எண்ணிக் கொண்டாள் யாழினி.

அவள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே இவள் முன் வந்து நின்றான் அபி!

தன் பற்களைக் கடித்துக் கொண்டு இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

"அப்டி என்னடீ வசியம் பண்ணி வெச்சிருக்க.. எங்கம்மாவ.. பெத்த புள்ளைக்கு சப்போர்ட் பண்ணாம உனக்கு பண்றாங்க.." என்றான்.

யாழினி பதில் எதுவும் சொல்லவில்லையென்றாலும் கலங்கவுமில்லை! திடமாய் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

எப்போதும் அவன் அருகே வந்தாலே நடுங்கியபடி வியர்த்து வழிபவள், இப்போது திடமாய் நிற்கிறாளே என்று நினைத்து கோபமாக வந்தது அவனுக்கு!

"ஹூம்.." என்று ஏதோ கெட்ட வார்த்தையை சொன்னவனை இப்போது கோபமாகப் பார்த்தாள் யாழினி!

"என்னடீ மொறைக்கிற.. அப்டியே கண்ண நோண்டிடுவேன்.." என்றான் அபி!

"எங்க நோண்டுங்க.. நோண்டுங்க பாக்கலாம்.. கமான்.. ப்ளக் மை ஐஸ்.." என்று அவனை திரும்பக் கேட்டாள்.

அவன் ஒரு நொடி அதிர்ந்தான்!

என்ன இவ.. எதிர்த்து பேசறா.. இவ்ளோ நாள் நாம என்ன சொன்னாலும் கம்முன்னு இருக்கறவ இப்ப எதிர்த்துப் பேசறாளே.. தப்பாச்சே.. என்று நினைத்தவன்,

"ஏய்.. என்ன எகிறுற.. ஹும்.. பாவம் பொம்பளையாச்சேன்னு கம்முன்னு வுடறேன்.. ஒழுங்கா மரியாதையா அடங்கி ஒடுங்கி இருந்தா இந்த வீட்ல மூலையில ஒக்கார ஒரு இடம் குடுப்பேன்.. இல்லன்னா.."

"இல்லன்னா.. இல்லன்னா என்ன பண்ணுவீங்க.. என்ன பண்ணுவீங்க.." என்று யாழினி திரும்பவும் அவனை உசுப்பினாள்.

அவன்தான் மீண்டும் துவண்டான். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல்,

"சரி.. சரி.. போனா போகட்டும்.. உள்ள போ.. போய் காபி போட்டு எடுத்துட்டு வா.." என்று அதிகாரமாய் கூறிவிட்டு அங்கிருந்து நழுவப் போனவனை நிறுத்தினாள் யாழினி.

"இங்க பாருங்க.. இந்த சாடையா பேசறது.. பக்கத்தில வந்து யாருக்கும் கேக்காத குரல்ல கெட்ட வார்த்தை சொல்லி திட்றது.. இதெல்லாம் இனிமே என் கிட்ட வெச்சிக்காதீங்க.. சொல்லிட்டேன்.." என்று இப்போது யாழினி மிரட்ட,

"என்னடீ பண்ணுவ.." என்று திமிராய்க் கேட்டான் அபி!

"ரொம்ப சிம்பிள் மிஸ்டர் அபிமன்யூ! ஒரு போன்.. ஒரே ஒரு போன்.. பக்கத்தில இருக்கற அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கால் போட்டா போதும்.. வெர்பல் அப்யூஸ்ன்னு கம்ப்ளெயன்ட் பண்ணுவேன்.. வரதட்சணைக் கொடுமைன்னு சொல்வேன்.. அவங்க வந்து உங்கள கொத்தா தூக்கிட்டு போய்டுவாங்க.. அவ்ளோதான்.. வெளிய வரவே முடியாது.. ஒரு வேளை உங்க இன்ஃப்ளுயன்ஸ பயன்படுத்தினாலும், நீங்க வெளிய வர எப்டியும் ஏழெட்டு வருஷமாகிடும்.. கிட்டதட்ட அரைக்கிழவனாகிடுவீங்க.. எப்டி வசதி!" என்று அவனை விட அதிக திமிராய்க் கேள்வி கேட்டாள் யாழினி!

"ஏய்.. நா யாருன்னு தெரியுமா.. இந்த ஊர் பண்ணையார் மகன்.. நீ ஒரு அன்னக்காவடி.. நீ என்ன உள்ள தூக்கி போடுவியா.." என்று அவன் கோபமாகக் கேட்டான்.

"அஃப் கோர்ஸ்.. ஐ கேன் டூ.. இஃப் யூ டசின்ட் சேஞ்ச் யுவர்செல்ஃப்!" என்று கூலாகச் சொன்னாள் யாழினி.

"ஹும்.. உன்னல்லாம்.. உன்ன சொல்லி குத்தமில்ல.. தகுதியே இல்லாத உன்னப் போய் எனக்கு கட்டி வெச்சாங்கல்ல.. அவங்கள சொல்லணும்.. எல்லாம் என் தலையெழுத்து.." என்று தெளிவாக முணுமுணுத்தான் அபி!

யாழினிக்கு இதைக் கேட்டதும் சுறுசுறுவென்று கோபம் தலைக்கேறியது!

"என்ன தகுதியில்லன்னு சொல்றீங்க.. உங்கள மாதிரி ஃபாரின் போய் படிக்கலன்னாலும் உங்களுக்கு இருக்கற அதே கல்வித் தகுதி எனக்கும் இருக்கு.. இன்னும் சொல்லப் போனா உங்கள விட நா அதிகமா இரண்டு டிப்ளமாவும் முடிச்சிருக்கேன்.. அப்றம் என்ன சொன்னீங்க.. அன்னக்காவடி.. நாங்க ஒண்ணும் அன்னக்காவடி கிடையாது.. ஒரு நாளும் எங்கம்மா என்ன பட்னி போட்டது கிடையாது.. நல்ல ஆரோக்கியமான உணவு குடுத்துதான் என்ன எங்கம்மா வளர்த்தியிருக்காங்க..

இது எல்லாத்துக்கும் மேல உங்கள கல்யாணம் பண்ணிக்க மிக முக்கியமான ஒரு தகுதி எனக்கு இருக்கு.. என் மனசு.. இப்ப வரைக்கும் என் கிட்டதான் இருக்கு.. ஆனா உங்களுக்கு உங்க மனசு உங்க கிட்ட இருக்கா..

உங்க மனச யாருகிட்டயோ பறி குடுத்துட்டு என் கழுத்தில தாலிய கட்டியிருக்கீங்க..

சரி அதுவும் போகட்டும்.. மனசுங்கறது பெரிய விஷயம்.. அத லேசில மாத்திக்க முடியாது.. கொஞ்சம் கொஞ்சமாதான் மாறும்.. நாமதான் மாத்த முயற்சி பண்ணனும்..

அதனாலதான் நா அமைதியா இருந்தேன்.

ஆனா இன்னிக்கு காலையில.. மழைக்கு இந்த வீட்டு கதவெல்லாம் சரியா மூட முடியாதுன்னு என்ன விட உங்களுக்கு நல்லா தெரியும்! அதனால என் ரூம் கதவை நா சரியா மூட முடியாம விட்டேன்!

அதுக்கு என்ன பாத்து என்ன சொன்னீங்க.. பொம்பளையா நீ? ஏன்? பொம்பளன்னா உங்களுக்கு அவ்ளோ கேவலமா போய்ட்டாங்களா..

நீங்க என் கூட குடும்பம் நடத்தலதானே.. அப்றம் எந்த உரிமையில சாத்தியிருந்த கதவை திறந்துகிட்டு உள்ள வந்தீங்க..

குடும்பம் நடத்தற வீடான்னு கேட்டீங்களே.. நா என்ன நடு ஹால்ல நின்னு ட்ரஸ் மாத்தினேனா? இல்ல, நா உங்க முன்னால வந்து நின்னு ட்ரஸ் மாத்தினேனா? மூடியிருந்த ரூம் கதவ தள்ளி திறந்துகிட்டு வந்தது நீங்க.. ஆனா நா தப்பு பண்ணின மாதிரியே என்ன குத்தம் சொல்லிகிட்டு திரியறீங்க..

உங்க தப்பை உங்களால ஏத்துக்க முடியல.. அத அப்டியே என் பக்கம் கோவமா திருப்பிடறீங்க.. உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கான்னு தெரீல..

உண்மையாவே அத்தை மேல மதிப்பும் மரியாதையும் வெச்சிருந்தீங்கன்னா, அவங்க உங்களுக்கு நன்மை மட்டும்தான் செய்வாங்கன்னு நம்பினீங்கன்னா, என் கூட குடும்பம் நடத்தலன்னாலும் பரவால்ல.. அவங்க மனச நோகடிக்காதீங்க!" என்று கோபமாகக் கூறிவிட்டு,

"ராசாத்தியக்கா! இன்னுமா காபி போடல.." என்று சத்தமாகக் கூவியபடியே அங்கிருந்து நகர்ந்து கனகத்தின் அருகில் சென்று அமர்ந்தாள்.

-ctd....
 
#23
-ctd....


அபிக்கு தலையே சுற்றும் போல இருந்தது.

அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அவனுக்கு சாட்டையடியாய் விழுந்தது!

சரியாதானே கேக்கறா.. அவ என் முன்னால வந்து நிக்கலதானே.. நா ஏன் இப்டி நடந்துகிட்டேன்.. உண்மைலயே அவ என்ன பண்றான்னு பாக்கதானே அந்த கதவிடுக்கு வழியா நா பாத்தேன்.. அவ ட்ரஸ் மாத்தறத கேவலமா நா ஔிஞ்சிருந்து பாத்தேன்.. நா பண்ணினது தப்பு.. ஆனா அவள குத்தம் சொல்லிட்டு திரியறேன்..

நா ஏன் இப்டி பண்றேன்.. சில சமயம் அவ நல்ல பொண்ணுன்னு தோணுது.. சில சமயம் அவ நடிக்கறான்னு தோணுது.. ஏன் இப்டி நா குழம்பறேன்.. என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு தவித்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

தள்ளியிருந்தபடி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்த கனகத்துக்கு இவர்களின் பேச்சு காதில் விழவில்லையென்றாலும், யாழினி தன் அதிரடி ஆட்டத்தை துவக்கிவிட்டாள் என்பது புரிந்தது.

கடவுளே! யாழினி நா நெனச்ச மாதிரியே ஆட்டத்துக்குள்ள வந்துட்டா.. அவளுக்கு துணையா இரு! எலீசாவோட சுயரூபம் வெளிய தெரியறதுக்கு முன்னாடி யாழினி ஸ்டெடியாகிடணும்.. அப்பதான் எலீசா என்ன பண்ணினாலும் யாழினியால தாக்கு பிடிக்க முடியும்! கடவுளே! உன்ன தான் மலமாதிரி நம்பியிருக்கேன்! என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்.

ராசாத்தி காபி கலந்து எடுத்து வந்து யாழினியிடமும் கனகத்திடமும் கொடுத்துவிட்டு அபியின் அறைப்பக்கம் செல்ல எத்தனிக்க,

"அங்க எங்க போறீங்க?" என்று யாழினி அவளை நிறுத்தினாள்.

"இல்ல.. சின்னய்யாவுக்கு காபி.." என்று இழுத்தாள் ராசாத்தி.

"இப்டி குடுங்க.." என்று அதை தான் எடுத்துக் கொண்டு அவளை அனுப்பிவிட்டு, அபியின் அறை நோக்கிச் சென்றாள்.

அவன் இன்னமும் தன்னுடைய அறைக்குச் செல்லாமல் யாழினியின் அறையிலேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்த யாழினி, அவனருகில் சென்றாள்.

"இந்தாங்க காபி! குடிச்சிட்டு ஃபேக்டரிக்கு கிளம்பற வழிய பாருங்க.. சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைகளம்னு சொல்லுவாங்க.. சும்மா நின்னா இப்டிதான் கண்டதையும் யோசிப்பீங்க.. ம்.. ம்.. கௌம்புங்க.." என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு நகர,

"ஏய்! நில்லு.. என்ன ரொம்ப பேசற நீ?" என்றான்!

"என்ன பேச வெக்கறது நீங்கதான்! காபிய குடிங்க!" என்று சலனமேயில்லாமல் சொல்லிவிட்டு அங்கிருந்து போயே விட்டாள்.

என்னமோ தெரியல.. இவ ஒரு மார்க்கமாதான் இருக்கா! என்று நினைத்தபடியே காபியை குடித்தான் அபி!

அவனுடைய கைபேசி அழைக்க, மற்றதெல்லாம் மறந்தவனாய் அதை எடுத்துக் காதில் வைத்தான். அந்தப்பக்கம் யார் என்ன சொன்னார்களோ,

"ம்! வரேன்!" என்று கூறிக் கொண்டே கைப்பேசியுடன் மொட்டை மாடிக்குச் சென்றான்!

அபி மாடிக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகி விட்டது! இன்னமும் அவன் பேசி முடித்துவிட்டு கீழே இறங்கி வரவில்லை!

இதற்குள் யாழினி காலைச் சிற்றுண்டியைத் தயார் செய்து முடித்து, மதிய சமையலுக்கும் பாதி தயார் செய்து வைத்து விட்டாள்.

கனகத்துக்கு தலை சுற்றலாய் உள்ளது என்று கூறி, தனக்கு கஞ்சி மட்டும் போதும் என்று கூறினாள். அதனால் யாழினி தானே நின்று தன் மாமியாருக்கு கஞ்சி போட்டு எடுத்து வந்து தந்தாள்.

"காலங்கார்த்தால கால்ல செருப்பு கூட போடாம நீங்க ஓடி வந்ததாலதான் இப்ப தலை சுத்துது உங்களுக்கு.. எல்லாம் என்னாலதான்.. சாரி அத்த!" என்றாள் யாழினி!

"எம் புள்ள வாழ்க்கைக்காக நா ஓடி வந்தேம்மா.. நா இது கூட செய்யலன்னா எப்டி.." என்றாள் கனகம்!

யாழினிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை! இருந்தாலும் அவளுடைய மன ஆறுதலுக்காக எதையாவது சொல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்தாள்! அதனால்,

"கவலப்படாதீங்க அத்த! எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்! நீங்க போய் ரெஸ்ட் எடுங்க!" என்று கூறிக் கொண்டே மாமியாருக்கு கஞ்சியை ஆற்றிக் கொடுத்தாள்!

"அததாம்மா நானும் வேண்டிக்கறேன்.." என்று கனகமும் பதிலளித்தாள்!

ராசாத்தியின் தங்கை காவேரி தன் ஒன்றரை வயதுக் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்திருந்தாள்.

தங்கையுடன் பேசியபடியே ராசாத்தி வேலை செய்து கொண்டிருந்தாள்.

காவேரியும் குழந்தையை கீழே இறக்கி கொல்லைப் பக்கத்தில் படிகட்டின் ஓரத்தில் அமர வைத்து விட்டு ராசாத்திக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்.

குழந்தை கொஞ்ச நேரம் சும்மாதான் இருந்தது. ஆனால் அங்கிருந்த வெந்நீர் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தணலின் பளபளப்பு குழந்தையை ஈர்க்க, குழந்தை தத்தித் தத்தி நடந்தபடி அடுப்பின் அருகே மெதுவாக சென்றது. மாடியிலிருந்து அபி இதைப் பார்த்துப் பதறினான்.

கனகத்துக்கு கஞ்சியைக் கொடுத்துவிட்டு கஞ்சி போட்ட பாத்திரங்களை தேய்க்கப் போட, பின் கட்டுக்கு வந்தாள் யாழினி.

ராசாத்தியை கூப்பிட்டு எச்சரிக்க நினைத்த அபி, அங்கே யாழினியைப் பார்த்ததும், பதற்றம் விலகியவனாய் தன் கைபேசிப் பேச்சைத் தொடர்ந்தான்!

காவேரி குழந்தையைப் பார்த்துவிட்டு ஓடி வந்தாள். அதற்கு முன் பாத்திரத்தைப் போடுவதற்காக அங்கே வந்த யாழினி குழந்தை அடுப்பின் அருகே செல்வதைப் பார்த்ததும் பதறிப் போய் குழந்தையைத் தூக்கினாள்.

"ஏண்டா ராஜா? இப்படி அமக்களம் பண்ற! உனக்கு வெளையாட வேற எதுவும் கிடைக்கலியா?" என்று கேட்டுக் கொண்டே யாழினி குழந்தையை கொஞ்சி முத்தமிட்டாள்.

நல்லவேளை குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று எண்ணிக் கொண்டான் அபி.

குழந்தையுடன் யாழினியைப் பார்க்க அவனுக்கு ரொம்பப் பிடித்தது. என் குழந்தையைக் கூட இவள் இப்படித்தான் கொஞ்சுவாள் என்று நினைத்துக் கொண்டான்.

அவனுக்கு உள்ளமெல்லாம் இனித்தது. அவ அழகா இருக்கா! அமைதியா, தான் உண்டு தன் வேல உண்டுன்னு இருக்கா! அம்மா கிட்டயும் மத்தவங்க கிட்டயும் அன்பாதான் நடந்துக்கறா! நான் கோபப்பட்டாலும் தாங்கிக்கறா! நல்லா படிச்சிருக்கா! நிறைய டேலண்ட்ஸ் இருந்தாலும் துளிகூட கர்வமில்லாம இருக்கா! நான் ஏன் அவள இன்னும் சேத்துக்க முடியாம தவிக்கறேன்னு எனக்குப் புரியலையே! சம்திங் இஸ் ராங் வித் மீ! எவ்வளவு யோசிச்சாலும் இது ஏன்னு புரியலயே.. என்று குழம்பித் தவித்தான் அபி!

“ரொம்பத் தேங்குசும்மா! நல்ல வேள புள்ள அடுப்பில கை வெக்கல!” என்று கூறியபடியே காவேரி குழந்தையை யாழினியிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

“இனிமே கவனமா இருங்க!” என்று சொல்லி நகர்ந்தாள்.

இது வரை எல்லாம் ஒழுங்காகவே நடந்தது.

ஆனால் அதற்குப் பின்தான் எல்லாமே தலை கீழாய் மாறியது.

யாழினியிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு காவேரி நகர்ந்தாள். அவள் பின்னாலேயே நடந்த யாழினி அங்கே விழுந்திருந்த தேங்காய் உரிக்கோலில் வலது காலை வைத்தாள். அதன் கூரான முனை அவள் உள்ளங்காலை ஆழமாகப் பதம் பார்க்க, வலியால் துடித்தபடி அலறிக் கொண்டே கீழே விழுந்தாள். அடுப்பின் அருகில் இருப்பது நினைவில்லாமல் விழும்போது அடுப்பின் அருகில் விழுந்தாள். அவளுடைய கைகள் அடுப்பிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கொள்ளிக் கட்டையை தொட்டுவிட அது அவளுடைய இரண்டு உள்ளங்கைகளையும் பொசுக்கிவிட்டது.

“அம்மா! ஆ...........” அலறித் துடித்தாள்.

மாடியிலிருந்து இதைப் பார்த்த அபி பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தான். அவளுடைய அலறல் கேட்டு கனகமும் ராசாத்தியும் ஓடி வந்தனர்.

யாழினியின் காலிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கைகள் இரண்டும் வெந்து போயிருந்தது. அவள் வலியில் துடியாய் துடித்து அப்படியே மயங்கினாள். அவள் துடிதுடித்து மயங்கிதைப் பார்த்த அபிக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று பின் துடித்தது.
இனியாவது யாழினியை அபி ஏற்றுக் காெள்வானா?


- தாெடரும்....

 
#25
நட்பூக்களே!

இதோ 10வது - இறுதி எபி! படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...10.


யாழினியின் கால்களிலிருந்து ரத்தம் வழிவதையும் உள்ளங்கைகள் இரண்டும் வெந்து போயிருப்பதையும் பார்த்த அபி, பதறினான்! அவசரமாக அவளுடைய பூந்துகிலாடையையே (Duppatta) அவளுடைய காலிலிருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த இறுக்கமாகக் கட்டினான்! அவளுடைய கைகளை தண்ணீரில் முக்கியெடுத்து துடைத்துவிட்டு, மயங்கியவளை தன் ஜீப்பில் தூக்கிப்போட்டுக்கொண்டு, தன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனை விரைந்தான்!

கனகத்துக்கு மனம் பாரமாகிப்போனது! இந்த இக்கட்டான நேரத்தை எலீசா தப்பா பயன்படுத்துவாளே.. இப்ப நா என்ன செய்யறது.. யாழினி இந்த பிரச்சனைக்கு நல்ல முடிவு குடுப்பான்னு எதிர்பார்த்தா அவளுக்கே இப்ப ஆபத்து வந்துடுச்சே.. கடவுளே.. இதென்ன சோதனை.. என்று மனதுக்குள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள்!

விஷயமறிந்து மரகதமும் பாண்டித்துரையும் ஓடி வந்தனர்!

மருத்துவமனையில் கவலை படிந்த முகத்துடன் அபியும் கனகமும் அமர்ந்திருப்பதைக் கண்டவர்கள் கனகத்துக்கு ஆதரவாக அவளருகில் அமர்ந்தனர்.

ஒவ்வொரு நிமிஷம் அவ முகமும் வாசனையும் என் மனசுக்கு அமைதிய தருதுன்னு தோணுது! உடனேயே அவ அழகைக் காட்டி என்ன மயக்கி என் வாழ்க்கையை நாசப்படுத்த வந்தவன்னு ஒரு குரல் கேக்குது.. ஏன் இப்டி நடக்குதுன்னு புரியல.. என்று நினைத்து நினைத்து அபி குழம்பித் தவித்துக் கொண்டிருந்தான்! எப்படியிருந்தாலும் அவள் இப்படி வலியில் துடிப்பதை அவனால் காண முடியவில்லை!

யாழினியின் கைகளிலும் காலிலும் மருந்து வைத்து கட்டு போட்டு அவள் வலி மறந்து உறங்க ஊசியும் போட்டனர்! கைகளில் ஏற்பட்ட தீப்புண் விரைவில் ஆறிவிடும். ஆனால், காலில் வெட்டுக்காயம் ஆழமாக இருந்ததால் அவள் நடக்க ஒரு வாரம் ஆகும் எனவும், இரண்டு நாட்கள் அவள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றும் கூறிவிட்டுப் போனார் மருத்துவர்!
அபி, அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ செல்லாமல் மருத்துவமனையிலேயே, தன் மனைவியின் அருகிலேயே இருந்தான்!

கனகமும் மரகதமும் அவனிடம் எத்தனையோ முறை சொல்லியும் கேட்கவில்லை.

யாழினிக்கே வியப்பாய் இருந்தது! இவரு உண்மையாவே அன்பு செலுத்தறாரா இல்ல என்ன மேலும் காயப்படுத்த சந்தர்ப்பம் பாத்துகிட்டிருக்காரா.. சரி! என்னதான் நடக்குதுன்னு பாத்துடலாம்.. என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்!

நடு நடுவே அவனுக்கு கைபேசி அழைப்பு வரும் நேரங்களில் அவன் அறையை விட்டு வெளியே போய் பேசி விட்டு திரும்பும் போது கடுகடுவென்று வருவது கண்டு யாழினி குழம்பினாள்!*************


மறுநாள் மதியம் அவளுக்கு உணவு ஊட்டிவிட்டுவிட்டு அபி சாப்பிட அமர்ந்தான்!

அவனுடைய கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பேசியவன்,

"அரைமணி நேரத்தில வரேன்!" என்று சாப்பிடாமலேயே எழுந்தான்!

செவிலியர்களை அழைத்து யாழினிக்கு துணையிருக்கச் சொல்லிவிட்டு அவன் அவசரமாகக் கிளம்பினான்.

"என்னங்க.. எங்க போறீங்க.. யார் ஃபோன்ல.. சாப்பிட்டு போங்க.." என்று யாழினி கூப்பிட, அவளைத் திரும்பிப் பார்த்து,

"ரொம்ப முக்கியமான வேலை! ஃபேக்டரி வரைக்கும் போய்ட்டு வந்திடறேன்.." என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டான்.

அவன் சென்றதைப் பார்த்துக் கொண்டே தம்பதியர் இருவர் அந்த அறைக்குள் நுழைய, அவர்களை வியப்பாய் பார்த்தாள் யாழினி.

"நீங்க.." என்று அவள் ஆரம்பிக்கும் போதே,

"அக்கா! நா உங்க காலேஜ்தான்.. உங்க ஜூனியர்! ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்க்கா.." என்றாள் அந்தப் பெண், படபடப்பாக!

யாழினி என்ன என்பது போல பார்க்க, அந்தப் பெண்ணுடன் வந்தவன் பேசினான்.

"மேடம்! அவரு மிஸ்டர் அபிமன்யூதானே?"

"ஆமா! என் ஹஸ்பண்ட்தான்! ஏன் கேக்கறீங்க?" என்று யாழினி கேட்க,

"மேடம்! அவரு ஃபாரின்ல இருந்தப்ப எலீசான்னு ஒரு பொண்ண லவ்.." என்று அவன் ஆரம்பிக்கும் போதே,

"தெரியும்! அத சொல்வா வந்தீங்க?" என்று கேட்டாள் யாழினி!

"அதில்ல மேடம்.. அவ ரொம்ப டேஞ்சரஸ் லேடி! ஹிப்னாடிசம் தெரிஞ்சவ.. பக்கத்தில இல்லன்னா கூட ஃபோன்லயே யாரையும் தன் ஹிப்னாடிசம் மூலமா வசியப்படுத்தி அவங்க கிட்டேந்து எல்லாத்தையும் லூட் பண்ணிகிட்டு ஈசியா எஸ்கேப் ஆகிடுவா.. பெரிய பெரிய ஆளுங்கல்லாம் தனக்கு வேணுங்கற ஆளுங்க கிட்ட வேணுங்கற காரியத்த சாதிச்சுக்க இவள அனுப்பற அளவுக்கு இவ ஹிப்னடிசம்ல கை தேர்ந்தவ.. கிட்டதட்ட பெய்ட் கில்லர் மாதிரி.. ஏன்னா.. லாஸ்ட் வீக் அந்த எலீசாவை உங்க ஃபேக்ட்ரீல பாத்த மாதிரி இருந்தது! கொஞ்சம் கவனமா இருங்கன்னு சொல்லதான் வந்தேன்! நாங்க வரோம்!" என்று கூறிவிட்டு அவர்கள் சென்றனர்!

யாழினிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் அடுத்து செய்வது என்று யோசிக்கும் முன், சில கல்லூரி மாணவர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.

"யார் நீங்கல்லாம்.." என்று அவள் பதறிப் போய் கேட்க, வந்தவர்களில் ஒருவன் சொன்னான்.

"அக்கா! நாங்கல்லாம் நம்ம ஊர் இஞ்சினீரிங் காலேஜ்ல ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்ஸ்.. எங்க ப்ராஜெக்ட்டுக்காக நாங்க ஒரு ட்ராக்கிங் டிவைஸ் உருவாக்கினோம்! அத டெஸ்ட் பண்ணும் போது சில சிக்னல் கிடைச்சது.. அந்த சிக்னல்ஸ் ஃபாலோ பண்ணி பாத்தப்போ, உங்க நிலத்தில பெரிய புதையல் இருக்கறதாகவும் அத யாருக்கும் தெரியாம அவங்க இன்னிக்கு எடுத்து வெளிநாட்டுக்கு கடத்தப் போறதாகவும் எங்களுக்கு தகவல் கிடைச்சது.. அதான் நாங்க இந்த விஷயத்த சொல்ல உங்க வீட்டுக்கு போனோம். உங்க மாமியார் உங்க வீட்ல இல்ல.. இங்க இருப்பாங்களோன்னு இங்க வந்தோம்.." என்றான் வேகமாக!

அத்த வீட்ல இல்லையா? என்று யாழினி சிறிது யோசித்துவிட்டு கனகத்தின் தோழி முத்துலக்ஷ்மியை அழைத்தாள். ஆனால் முத்துலக்ஷ்மி இவளுடைய அழைப்பை ஏற்கவேயில்லை!

யாழினி இரண்டு மூன்று முறை முயன்று தோற்றாள்! அவளுடைய தவிப்பை அதிகரிக்கும் வகையில் வந்திருந்த மாணவன் ஒருவன்,

"மேடம்! நாங்க புரிஞ்சிகிட்ட வரைக்கும் உங்க ஹஸ்பன்டை ஏதோ சிக்னல் கிடைச்சதும் போட்டுத்தள்ள ப்ளான் பண்ணிருக்காங்க.." என்று தயங்கித் தயங்கிக் கூற, யாழினி அலறினாள்.

"பயப்படாதீங்க மேடம்.. நாங்க அந்த சிக்னல் இவங்களுக்கு கிடைக்காத மாதிரி அரை மணி நேரத்துக்கு நிறுத்தி வெச்சிருக்கோம் மேடம்!" என்றான் அவன்.

"ஆனா எங்களுக்கு அரை மணி நேரத்துக்கு மேல அந்த சிக்னலை நிறுத்தி வெக்க தெரியாது மேடம்!" என்றான் மற்றொருவன்!

யாழினி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்!

"என்ன எங்க ஃபாக்டரிக்கு கூட்டிட்டு போக முடியுமா?"

"கூட்டிட்டு போறோம்.." என்று மாணவர்கள் அவளிடம் சொல்ல, யாழினியை அந்த மாணவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் அழைத்துக் கொண்டு அபியின் கரும்பாலைக்குச் சென்றடைந்தனர். ஆலைக்குள் செல்லாமல் கொஞ்சம் தள்ளியே அவர்களுடைய வாகனத்தை நிறுத்தச் சொன்னாள். அவர்களும் அப்படியே செய்தனர்.

யாழினி சொல்லச் சொல்ல அந்த மாணவர்கள் தங்கள் மடிக்கணிணியில் ஏதோ செய்ய, ஆலையில் கணிணி மற்றும் இணைய வலையமைப்பை (computer and internet networking) நொடியில் விளங்கிக் கொண்டாள் யாழினி. அங்கே அவர்களுடைய இணையத் தொடர்பு தவிர இன்னும் இரண்டு அருகலை (Wi-Fi என்ற கம்பியில்லாத் தொடர்பு வசதி) தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது!

எல்லாவற்றையும் தன்னுடைய நெட்வொர்க்கிங் படிப்பு தந்த அறிவால் கட்டுப்படுத்தி இணைய இணைப்பை துண்டித்தாள்.

ஆலையிலிருந்தோ அல்லது ஆலைக்குள்ளோ எந்த தகவல் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஆலைக்குள் செல்ல முடிவெடுத்தாள்.

"வேண்டாம் மேடம்.." என்று சில மாணவர்கள் அவளுடைய கால் காயத்தைக் காட்டி தடுத்து நிறுத்த,

"கால விட வாழ்க்கை முக்கியம்.." என்றபடியே நொண்டிக் கொண்டு வாகனத்திலிருந்து இறங்கினாள்.

கால் வலியைப் பொருட்படுத்தாமல் ஆலைக்குள் வேக வேகமாக நடக்க, ஆலைக்குள் தொழிலாளர்கள் யாருமே இல்லை!


என்ன வேலை செய்யறவங்க யாருமே இல்ல.. இவரு எங்க இருக்காரு.. என்று சுற்றும் முற்றும் தன் கணவனைத் தேடலானாள்!
-ctd....
 
#26
- ctd...."இங்க பார் எலீசா.. நீ என்ன சொன்னாலும் நா இந்த டாகுமென்ட்ல சைன் பண்ண மாட்டேன்.. இது என் தாய் மண்ணு.. இந்த மண்ணிலதான் நா பொறந்து வளர்ந்து உருண்டு பொரண்டு வெளையாடினது.. இது எனக்கு அம்மா மாதிரி.. சோறு போடற தெய்வம்.. இத எப்டி உனக்கு குடுக்கறது.. இவ்ளோ நாளா நீ சொன்னத எல்லாம் முட்டாள் மாதிரி நம்பிட்டிருந்தேன்.. ஆனா நீ ஒரு விஷக்கிருமின்னு இப்பதான் புரிஞ்சிகிட்டேன்.. நீ என்னை என்ன பண்ணினாலும் சரி.. நீ சொல்றதுக்கு ஒரு போதும் நா கட்டுப்பட மாட்டேன்.."

"ஹே.. ஹப்பி.. ஆர் யூ மேட்? நா உன்ன கன் பாயின்ட்ல வெச்சிருக்கேன்.. இப்ப கூட நீ என் பேச்ச கேக்க மாட்டியா?" என்று ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து ஸ்டைலாகப் பேசினாள்.

முன்னொரு காலத்தில் இனிப்பாக இருந்த இவளுடைய குரல் இப்போது நாராசமாகக் கேட்டது அபிக்கு.

அவனை ஒரு நாற்காலியில் அமர வைத்து, கயிற்றால் கட்டிப் போட்டிருந்தாள் எலீசா!

"நீ என்னை கொலையே பண்ணினாலும் சரி.. நீ சொல்றத ஒரு நாளும் நா செய்ய மாட்டேன்.. இந்த மண்ண உனக்கு தாரை வாத்து தர மாட்டேன்.."

"யூ ஆர் மேட்! இன்னும் கொஞ்ச நேரத்தில சிக்னல் வந்துடும்.. சிக்னல் வந்ததும் நா உன்ன நெஜமாவே கொன்னுடுவேன்.. நா உன்ன கொன்னுட்டா ஆட்டோமேட்டிக்கா இந்த சொத்து உன் வைஃப் பேருக்கு மாறிடும்.. அவ ஒரு வில்லேஜ் கேர்ள்.. படிச்சிருந்தாலும் அறிவு கம்மியாதான் இருக்கும்.. அவள ஈசியா ஏமாத்தி.. ஹிப்னடைஸ் பண்ணி.. நா எல்லா சொத்தையும் வாங்கிடுவேன்.. அவ்ளோல்லாம் செய்ய வேணாம்னு பாக்கறேன்.."

"ஹா.. ஹா.. என் மனைவிய பத்தி என்ன தெரியும் ஒனக்கு.. அவளுக்கு என்ன விட அறிவு அதிகம்.. அவள ஏமாத்த எந்த கொம்பனாலயும் முடியாது.."

"இஸ் இட்.. அதையும் பார்த்திடலாம்.." என்று கூறிக் கொண்டே தன் கைப்பேசியை குடைந்தாள்.

"உன்னால என்னையே சரியா ஹிப்னடைஸ் பண்ண முடியல.. என் மனைவியையா ஹிப்னடைஸ் பண்ணுவ.." என்று அபி அவளை ஏளனமாகக் கேட்க, அவளுடைய கவனம் கைப்பேசியில் லயிக்கவில்லை!

"யா.. அதான் ஏன்னு எனக்கு புரியல.. என்னால உன்னை முழுசா ஹிப்னடைஸ் பண்ண முடியல.. நீ என்ன போதி தர்மர் ஃபேமிலியா? நோக்கு வர்மம் தெரியுமா உனக்கு.." என்று சந்தேகமாய்க் கேட்டாள் எலீசா!

"போதி தர்மரும் இல்ல.. நோக்கு வர்மமும் இல்ல.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் அன்பும் ஒழுக்கமும் மட்டும்தான்.. ஒழுக்கமா வளர்க்கப்படற ஒவ்வொருத்தரும் இந்த மண்ணோட மகிமை தெரிஞ்சவங்கதான்! உன்னால எங்கள ஒண்ணும் பண்ண முடியாது.. ஏன்னா நாங்க எப்பவுமே அலர்ட்டா தான் இருப்போம்! எங்க மண்ணை காப்பாத்தணும்ங்கற கான்ஷியஸ்னஸ் எப்பவும் எங்க ரத்தத்தில கலந்திருக்கும்.."

"ஆமா.. உங்க ராஜ மம்மியும் இததான் அன்னிக்கு சொன்னாங்க.. இந்த மண்ணு.. தாய் மண்ணு.. அப்டீன்னு.. சம்திங்.. பட் ஐம் ஹேப்பி.. ஏன் தெரியுமா? நா உன்ன, உன் வைஃப் கூட சேர விடாம உன்ன ஹிப்னடைஸ் பண்ணுவேன்னு சொன்னேன்..

உனக்கு மேரேஜ் ஆனப்றம் நீ என்ன திரும்பி பாக்க மாட்டே.. அப்டீன்னு.. உங்க ராஜ மம்மி என் கிட்ட சேலஞ்ச் பண்ணாங்க..

பட் ஷீ ஃபெயில்ட்.. எஸ்! அவங்க தோத்துட்டாங்க.. அவங்க கிட்ட நா சொல்வேன், ராஜ மம்மி! ராஜ மம்மி! உங்க பையன நா ஹிப்னடைஸ் பண்ணி உங்க மருமகள் கிட்டந்து பிரிச்சிட்டேன்னு சொல்வேன்.." என்று சிரித்தாள் எலீசா.

இப்போதுதான் அவளைத் திருமணம் செய்து கொள்ள அவனுடைய தாய் மறுப்பு தெரிவித்தது ஏன் என்று அபிக்கு புரிந்தது.

அம்மா! உங்களுக்கு புரிஞ்சத என்கிட்ட மொதல்லயே சொல்லியிருந்தா நா இவள மறுபடியும் பார்த்த உடனேயே வெரட்டியிருப்பேன்.. என்று மனதுக்குள் நினைத்தான்.

அதற்குள் எலீசா திரும்பவும் தன் கைப்பேசியை கவனிக்க, அதில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதை கவனித்தாள்.

"ஹே.. என்ன நெட்வொர்க் வரல.. வாட் ஹேப்பன்ட்.." என்றாள்.

"என்ன கேட்டா.. இதையும் யாராவது ஹிப்னடைஸ் பண்ணிருப்பாங்களா இருக்கும்.." என்றான் அபி ஏளனமாக.

"நெட்வொர்க் இல்லன்னா சிக்னல் வராது.. சிக்னல் இல்லன்னா உன்ன கொல்ல முடியாதுன்னு நெனக்காத ஹப்பி! ப்ளான் ஏ வொர்க் அவுட் ஆகலன்னா ப்ளான் பி எப்பவுமே தயாரா இருக்கும்! யூ நோ!" என்றாள் எலீசா கிண்டலாக!

"எனக்கு ப்ளான் ஏவும் ஒண்ணுதான்.. ப்ளான் பியும் ஒண்ணுதான்.. நா செத்தா நீயும் சாகப் போறன்னு அர்த்தம்." என்றான் அபி.

"யூ ஆர் டாக்கிங் டூ மச்! இப்ப இதுல சைன் போட போறியா இல்லையா?" என்று எலீசா கோபமாகக் கேட்க,

"முடியாது எலீசா! நீ எத்தன முறை கேட்டாலும் என்னை கொலையே பண்ணினாலும் நா இதுல சைன் பண்ண மாட்டேன்!" என்று அபியும் கோபமாகச் சொன்னான்.

"உங்க ராஜ மம்மிய கொலை பண்ணினா.. அப்ப கூட சைன் போட மாட்டியா?" என்று எலீசா கேட்க,

"ஏய்.." என்று அதிர்ந்து போய் அபி அலறினான்.

"அங்க பாரு ஹப்பி!" என்று எலீசா பக்கத்து அறையின் திரைச்சீலையை விலக்கிக் காட்ட, அங்கே கனகத்தை ஒரு நாற்காலியில் கட்டிப் போட்டிருந்தாள் எலீசா!

"எலீசா! வேணாம்! அம்மாவ ஒண்ணும் பண்ணிடாத.. ப்ளீஸ்.. உன்ன கெஞ்சி கேக்கறேன்.. அம்மாவ விட்டுடு.." என்று அவளிடம் கெஞ்சத் தொடங்கினான் அபி!

"விடணுமா.. ஹா.. ஹா.. நா உன் கிட்ட கேட்டதுமே சைன் பண்ணியிருந்தா உன் ராஜ மம்மிய விட்டிருப்பேன்.. ஆனா இப்ப.. நோ சான்ஸ்.." என்று திமிராகக் கூறிய எலீசா தன் துப்பாக்கியை கனகத்தை நோக்கித் திருப்ப,

"நோ!" என்று அபியும் யாழினியும் ஒரே குரலில் அலறினார்கள்!

யாழினியின் குரல் கேட்ட எலீசா வியந்தாள்; அபி அதிர்ந்தான்.

"வாவ்! மிஸஸ் அபிமன்யூ! வெல்கம்! வெல்கம்!" என்று யாழினியை எலீசா வரவேற்க,

"யாழினி! நீ ஏன் இங்க வந்த.. எப்டி வந்த.." என்று அபி பதற்றமாகக் கேட்டான்.

யாழினி நொண்டிக் கொண்டே அபியின் அருகில் வர, எலீசா தன் துப்பாக்கியை அபியின் புறம் திருப்பி, யாழினியை தடுத்து அபியிடமிருந்து தள்ளி நிற்க வைத்தாள்.

"ஒன்ன எப்பவும் திட்டிட்டே இருக்கற ஹஸ்பண்ட்காக நீ இவ்ளோ தூரம் ஹாப் பண்ணிட்டே வந்திட்ட.. க்ரேட் லவ்.. க்ரேட் லவ் மிஸஸ் அபிமன்யூ.." என்று ஏளனமாகச் சொன்னாள் எலீசா!

யாழினி எலீசாவைப் பார்க்கக் கூடப் பிடிக்காமல் திரும்பிக் கொண்டாள்.

"என்ன.. நா கேட்டுட்டே இருக்கேன்.. நீ திரும்பிக்கற.. ஹும்.. ஆனா என் ஹப்பி அப்டியில்ல.. எப்பவும் என் ஃபேஸ் பாத்துட்டே இருப்பான்.." என்று யாழினியை வம்பு செய்தாள்.

இதற்கும் யாழினி எந்த எதிர் வினையும் புரியாமல் இருக்க, எலீசா கடுப்பாகிப் போய், அபியிடம் திரும்பினாள்!

"என்ன ஹப்பி.. உன் வைஃப்க்கு சூடு சுரணைல்லாம் இல்லயா.. நீ என் ஃபேஸ்தான் எப்பவும் பார்ப்பன்னு சொன்னா கண்டுக்க மாட்றா.." என்று அபியை உசுப்ப,

அவனோ கடகடவென்று சிரித்தான்!

அவர்கள் இருவரும் தன்னை வெறுப்பேற்றுவதாக நினைத்த எலீசா கடும் கோபத்தோடு துப்பாக்கியை கனகத்தின் புறம் திருப்பி அவளுடைய காலருகே சுட்டுக் காட்ட, மூவரும் அலறினார்கள்.

"இப்ப இதுல சைன் போடலன்னா நா உன்னோட ராஜ மம்மிய ஷூட் பண்ணிடுவேன் ஹப்பி!" என்று துப்பாக்கியை கனகத்தின் நெற்றிப் பொட்டுக்கு குறி வைத்தபடி சொன்னாள் எலீசா!

"வேணாம்.. வேணாம்.." என்று அபியும் யாழினியும் அலற,

"கையெழுத்து போடாத அபி.. எனக்கு என்னாவானாலும் சரி.. நம்ம மண்ண காப்பாத்து.." என்று கனகம் கூறினாள்.

"ராஜ மம்மி.. நீ ஷட் அப் பண்ணு! ஹப்பி.. நீ சைன் பண்ணு!" என்று ரைமிங்காக சொன்னாள் எலீசா!

"ஏய்.. நீ அம்மாவ மொதல்ல விடு.." என்று அபி கத்த,

"ம்ச்.. நீ சரிப்பட மாட்ட.." என்று கூறிக் கொண்டே எலீசா தன் கையிலிருந்த துப்பாக்கியை கனகத்தின் நெற்றிப் பொட்டை குறி வைத்து விசையை அழுத்த, அடுத்த நொடி,

"ஆ...." என்று அலறியபடியே கீழே விழுந்தாள்!

யாழினியும் அபியும் கனகமும் அதிர்ந்து பார்க்க,

கையிலிருந்து ரத்தம் வழிந்தோட, வலியால் துடிதுடித்த எலீசா, அதிர்ந்தவளாய் சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே சிங்கப் பெண்ணாய் காக்கிச் சீருடையில் முத்துலக்ஷ்மி ஐபிஎஸ் கம்பீரமாய் நடந்து வந்து எலீசாவைக் கொத்தாய் தூக்கி நிறுத்தினாள்.

அதற்குள் அபியையும் கனகத்தையும் நாற்காலியிலிருந்து அவிழ்த்து விட்டனர் காவல் துறையினர்!

தான் அமர்ந்திருந்த நாற்காலியில் யாழினியை அமர வைத்தான் அபி! கனகம் வந்து மருமகளின் தலையைக் கோதி விட்டாள்.

யாழினிக்கு உதவிய கல்லூரி மாணவர்கள் எல்லாம் ஓடி வந்து அவர்களை காப்பாற்றிய மகிழ்ச்சியை காவலர்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டு யாழினியிடமும் அபியிடமும் விடைபெற்றனர்!- ctd....
 
#27
- ctd...."ஏண்டீ.. இண்டியா வந்தமா.. மீனாட்சி கோவில் நாயக்கர் மஹால்ன்னு ஊரச் சுத்தி பாத்தமா.. செல்ஃபீ எடுத்தமா.. ஐ லைக் இண்டியான்னு ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் போட்டு லைக்க அள்ளினமா.. இட்லி வடை சாம்பார், தலப்பாகட்டி பிரியாணின்னு வயிறு முட்ட சாப்ட்டுட்டு வாவ்! ஆசம்! மோசம்! நாசம்ன்னு எதையாவது டீவீட் பண்ணிட்டு போனமான்னு இல்லாம.. பணக்கார வீட்டு புள்ளைங்கள ஹிப்னாடிஸம் பண்றது.. அவங்க சொத்த எழுதி வாங்கறதுன்னு என்னடீ பொழப்பு இது.." என்று கேட்டுக் கொண்டே எலீசாவை அறைந்தாள் முத்துலக்ஷ்மி!

"ந.. நீ.. எப்டி இங்க வந்த போலீஸ்.. என் ஆளுங்கல்லாம்.." என்று எலீசா கோபமாகக் கேட்க,

"எல்லாரையும் உன் மாமியார் வீட்டுக்கு தள்ளிட்டு போயாச்சி.. நீ மட்டும்தான் பாக்கி.. போ.." என்று சொல்லிக் கொண்டே, எலீசாவை தன் காவல் குழுவினரிடம் ஒப்படைத்தாள் முத்துலக்ஷ்மி!

"ஏய்.. உன்ன.." என்று எலீசா கத்த,

"போ.. போ.. அப்றமா என்ன பழி வாங்கலாம்.. மொதல்ல கைய டாக்டர் கிட்ட காட்டு.. இல்லன்னா நாளைக்கு இந்த கையே எடுக்க வேண்டி வரும்.." என்று அக்கரை கலந்த ஏளனத்துடன் எலீசாவிடம் கூறிவிட்டு யாழினியின் பக்கம் திரும்பினாள் முத்துலக்ஷ்மி!

"ஆன்ட்டி.. நீங்க என் ஃபோனை அட்டன்ட் பண்லயேன்னு ரொம்ப டென்ஷனாய்ட்டேன்.." என்றாள் யாழினி.

"உன் மாமியார் ஏற்கனவே எனக்கு சொல்லிட்டாம்மா.. உன் கல்யாணம் ஆனதிலிருந்தே நாங்கல்லாம் அலர்ட்டாதான் இருக்கோம்!" என்றாள் முத்துலக்ஷ்மி!

"என்ன ஆன்ட்டி சொல்றீங்க?" என்று வியப்பாகக் கேட்டான் அபி!

"எல்லாருக்கும் நம்ம ஊர் மண்ணுதான் டார்கெட்! பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிலேர்ந்து வந்து இந்த மண்ணை விலைக்கு கேட்டாங்க.. உங்கம்மா குடுக்கவே மாட்டேன்னு உறுதியா நின்னுட்டா.. உடனே எலீசாவ அனுப்பி உன்ன ஹிப்னடைஸ் பண்ணி நிலத்த எழுதி வாங்க ப்ளான் பண்ணினாங்க.. எந்த தெய்வத்தோட அருளோ.. உன்ன அவளால ஹிப்னடைஸ் பண்ண முடியல.. உடனே ப்ளானை மாத்தி உன்ன லவ் பண்ற மாதிரி நடிச்சி ஊருக்கு வந்தா.. அவ ப்ளானை கனகம் கண்டு பிடிச்சிட்டா.. எலீசாவை நானும் கனகமும் சேர்ந்து விரட்டினோம்! ஆனா அவ இண்டியாவ விட்டு போகாம இங்கியே சுத்திட்டு இருந்து உன்ன ஃபோன்ல புடிச்சி மறுபடியும் ஹிப்னடைஸ் பண்ண ட்ரை பண்ணியிருக்கா!

அவ ஹிப்னாடிசம் முதல்ல சரியா வேலை செய்யல.. ஆனா அவ உன்ன வசியம் பண்ண உன் ஃபேக்டரீ முழுசயும் அவ கன்ட்ரோல்ல கொண்டு வந்து, ஃபேக்ட்ரீல அங்கங்க நெகடிவ் வைப் வர மாதிரி செடிகள், சிம்மிங் பெல்ஸ், ம்யூசிக்ன்னு அடுத்த லெவலுக்கு போய் உன்ன ஹிப்னடைஸ் பண்ண ஆரம்பிச்சா!

ஆனா அப்பவும் அவளால உன்ன முழுசா ஹிப்னடைஸ் பண்ண முடியல.. பட் நீ கொஞ்சம் கொஞ்சமா குழம்ப ஆரம்பிச்சிட்ட.. யாழினிய பிடிக்கிது பிடிக்கலன்னு டயலம்மால நீ தவிக்கறன்னு புரிஞ்சிகிட்டு அதயே தனக்கு சாதகமா எடுத்துகிட்டு தன் வேலைய அடுத்த லெவலுக்கு கொண்டு போனா.. அதாவது உன் நிலத்தை எழுதி வாங்கறது.. கிட்டதட்ட அவ ஜெயிக்கற நேரம் யாழினிய நாங்க உசுப்பினோம்! அமைதியா இருந்தவள உன்ன எதிர்த்து பேச வெச்சோம்!

எல்லாம் சரியாதான் வந்திருக்கும்! யாருக்கும் எதுவும் பிரச்சனையாகாம காதும் காதும் வெச்ச மாதிரி எலீசாவை அரெஸ்ட் பண்ணிடலாம்னு நெனக்கும் போது யாழினிக்கு இந்த ஆக்ஸிடென்ட்!

பட் இதுவும் நல்லதா போச்சு! யாழினியோட நெட்வொர்க்கிங் டேலன்டால எலீசாவை முழு ஆதாரத்தோட பிடிச்சாச்சு! க்ரேட் யாழினி! நிச்சயமா கவர்மென்ட்லேர்ந்து உனக்கு விருது கண்டிப்பா கிடைக்கும்! நான் அதுக்கு பரிந்துரை செய்யறேன்!" என்று சொல்லி முடித்து யாழினியை பாராட்டினாள் முத்துலக்ஷ்மி!

"தேங்க்ஸ் ஆன்ட்டி! நா எதுவும் பண்ணல! எல்லாம் அந்த காலேஜ் பசங்கதான் பண்ணினாங்க ஆன்ட்டி!" என்றாள் யாழினி!

"இதான் தன்னடக்கம்ங்கறது!" என்றாள் முத்துலக்ஷ்மி.

"அம்மா! நீங்க ஒரு வார்த்தை என் கிட்ட இப்டின்னு சொல்லியிருக்கலாமேம்மா.." என்றான் அபி!

"நீ கேக்கற நிலையில இல்லடா! நா எலீசாவைப் பத்தி உன் கிட்ட பல முறை சொல்ல முயற்சி பண்ணினேன்! ஆனா நீ காதை பொத்திக்குவ.. அதுக்கப்றம் தான் நா யாழினிய உனக்கு கல்யாணம் பண்ணி வெக்க முடிவு பண்ணினேன்!" என்றாள் கனகம்!

"நீங்க என்கிட்ட சொல்லியிருக்கலாமே அத்த!" என்றாள் யாழினி!

"உன் கிட்ட சொல்லணும்னுதான் நெனச்சேன்! ஆனா நீ ராசாத்தி பேசறதுக்கு கூட பயந்து நடுங்கினம்மா.. நா உன்ன நார்மலுக்கு கொண்டு வந்தப்றம் நீ நம்ம வீட்ல எல்லார் கிட்டயும் அன்பா இருந்த.. சொல்றத செய்வ.. எந்த வம்புக்கும் போகாம நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருந்தியே தவிர, அபி பத்தியோ உன் வாழ்க்கைய பத்தியோ நீ யோசிக்கவே இல்ல.. அவன் உன்ன திட்டினா நீ அவன் கிட்ட கூட போகாம தள்ளி நிக்கதான் நெனச்சியே தவிர உன் வாழ்க்கைய வாழ நெனக்கல.. அதனாலதான் உன் கிட்ட நானா சொல்றத விட நீயா களத்தில இறங்கணும்னு நெனச்சேன்!" என்றாள் கனகம்!

அபியும் யாழினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!

"சரி! சரி! வலிய பாக்காம அவ ஓடி வந்துட்டா.. அவ கால் குணமாக இன்னும் ரெண்டு வாரம் ஆகும்! அவள பத்திரமா கூட்டிட்டு வா!" என்ற கனகம்,

"முத்து! நம்ம கிளம்பலாம் வாப்பா!" என்று கூறியபடி முத்துலக்ஷ்மியுடன் நடந்தாள் கனகம்!

யாழினி அபியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்க, அபி அவளை அலேக்காகத் தூக்கிக் கொண்டான்!

"ஹையோ.. யாராவது பாத்தா என்னதான் தப்பா நெனப்பாங்க.. ப்ளீஸ்.. இறக்கி விடுங்க.." என்று அவள் கூற,

"ம்ஹூம்.." என்றபடியே அவளைத் தூக்கிக் கொண்டு போய் தன் ஜீப்பின் முன் இருக்கையில் அமர வைத்துவிட்டு அவளருகில் அமர்ந்து கொண்டு ஜீப்பைக் கிளப்பினான்!

தங்களைத் தாயாய் காக்கும் தன் மண்ணைக் காப்பாற்றிய மன நிறைவோடு அவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை இனிதே தொடங்கினர்!♥♥♥♥♥♥♥♥

அவர்கள் இருவரும் பல்லாண்டு காலம்
வாழ்வாங்கு வாழ வாழ்த்தி
நாமும் விடைபெறுவோம்!

நன்றி.
வணக்கம்.