உனைக் கண்டு உயிர்த்தேன் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,552
1,107
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஷெண்பா அவர்கள் நாளையிலிருந்து உங்களுக்காக "உனைக் கண்டு உயிர்த்தேன்" கதையின் அத்தியாயங்களை பதிவிடவிருக்கிறார்.
 
  • Wow
Reactions: Rithi and Anuya

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
உன்னைக் கண்டு உயிர்த்தேன் – ஷெண்பா


1

உயிர்த்துக் கொண்டிருக்கிறேன்
உன் ஒவ்வொரு
பார்வை வீச்சுக்களிலும்!​

மழைக்கால நள்ளிரவு நேரம். மதியம் ஆரம்பித்த மழை இத்தனை நேரமாகியும் தன் ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொள்ளாமல் கொட்டிக்கொண்டிருக்க, செகந்தரபாத்திலிருந்து - திருவனந்தபுரம் நோக்கிச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸோ, சீரான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது.

ஏசி கோச். ஆங்காங்கே நீலநிற விடிவிளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்க, ரயிலின் தாலாட்டில் அனைவரும் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு, ஜன்னல் வழியாகத் தெரிந்த இருட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் பூர்ணிமா.

விதி வலியது அல்லவா!

‘எத்தனை உண்மையான வார்த்தை! இல்லையென்றால், தான் இனிமேல் பார்க்கவே போவதில்லை’ என்று நினைத்த இடத்திற்கு, இப்படி மூட்டை முடிச்சுடன் பயணம் செய்துகொண்டிருப்பேனா? அவளையும் அறியாமல், மனத்தின் ஓரத்தில் மெல்லிய சந்தோஷம் ஓடத்தான் செய்தது.

ஏசியின் குளுமை உடலை வாட்ட, சேலைத் தலைப்பால் கழுத்தைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு, கால்களை இறுகக் கட்டிக்கொண்டு கண்மூடி சாய்ந்து அமர்ந்தாள். மனத்திற்குள் ஏதேதோ எண்ணங்கள் தோன்றின.

‘தனக்கும், மழைக்கும் காலம் காலமாகத் தொடரும் பந்தம் போலும். இல்லையென்றால், தன் ஒவ்வொரு இடமாற்றத்தின் போதும், மழையும் தனக்குத் துணையாக வருவதேன்! அத்தோடு போனதா? மழை எனக்குத் துணை வந்தால், விதியும் தன் பங்கிற்கு என் வாழ்க்கையை அதன் போக்கிற்கு வளைத்துச் செல்கிறதே!’ என்று அவள் தனக்குள் பலமுறை சிந்தித்ததுண்டு.

எந்தப் பயணத்தையும், அவள் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும் அனுபவித்ததே இல்லை. ‘துயரமும், துக்கமும், இனி தன் வாழ்க்கை எப்படி அமையுமோ?’ என்ற பயத்துடனும் தான் கழித்திருக்கிறாள்.

இதே போன்ற ஒரு மழைநாளில் தான், அவளது முதல் பயணம் அமைந்தது.
சாலை விபத்தொன்றில் பெற்றவர்களை இழந்து, தேற்ற ஆளில்லாமல் அழுதுகொண்டிருந்தவளை, ஆதரவுடன் அணைத்துக்கொண்டது ஒரு கரம்.

“நான் யாருன்னு தெரியுமா…?” என்று கேட்டவரது கண்களில் ஒரு தவிப்பும், முகத்தில் ஒரு எதிர்பார்ப்பும், தன்னை யாரென்று தெரியவேண்டுமே என்ற படபடப்பும் இருந்தன.

“ம்ம்... அப்பாவோட அக்கா. எனக்கு அத்தை!” தேம்பலுடன் வந்தது அவள் பதில்.
அவருக்கோ, நெஞ்சில் பெரும் பாரம் நீங்கிய உணர்வு.

‘எங்கே… பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையில் வந்த மனக்கசப்பில், இருகுடும்பத்திற்கும் போக்குவரத்தே நின்று போய்விட, இத்தனைக் காலம் கழித்து வந்த தன்னை, அத்தை என்று அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்குமோ’ என்று அஞ்சிய கமலத்திற்கு, ‘அப்பாடா!’ என்று இருந்தது.

உறவுக் கூட்டம் அத்தனையும், வந்த வேலை முடிந்தது என்று கிளம்பிச் செல்ல, கமலமும், பூர்ணிமாவும் மட்டும் இருந்தனர். வீட்டின் உரிமையாளர் வீட்டைச் சீக்கிரம் காலி செய்து கொடுக்கும்படி கமலத்திடம் சொல்லிவிட்டுச் செல்ல, சுவற்றோடு ஒண்டியபடி சுருண்டு படுத்திருந்த தம்பி மகளைப் பார்த்தார்.

இதயத்தை யாரோ கசக்கி பிழிவதுபோல் வேதனை வாட்டியது. “பூர்ணிமா...!” என்று அவளது தோளைத் தொட்டு, தன் பக்கமாகத் திருப்பினார்.

அழுது அழுது அவளது கண்கள் சிவந்து, இமைகள் இரண்டும் வீங்கி இருந்தன.

“அத்தை ப்ளீஸ்! என்னை ஏதாவது ஆசிரமத்தில சேர்த்திடுங்க. என்னைத் தனியா விட்டுடாதீங்க... எனக்குப் பயம்மா இருக்கு. எனக்குன்னு யாருமே இல்லை. ப்ளீஸ்!” என்று தன்னிடம் கெஞ்சியவளை, மார்போடு அணைத்துக்கொண்டார் அவர்.

‘அந்த அணைப்பு, நான் இருக்கிறேன். உனக்கு நானும்… எனக்கு நீயும் தான் துணை!’ என்று சொல்வது போலிருந்தது அத்தையின் அறை.

அவரது மகனும், மருமகளும் சப்தமாகப் ஏதோ பேசுவதைக் கேட்டவள், கண்களில் மிரட்சியுடன் கூடத்திலிருந்தத் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அவர்கள் பேசியது சரியாகக் கேட்காவிட்டாலும், அறைக்குள்ளிருந்து கோபமாக வெளியே வந்து கமலம் சொன்ன வார்த்தைகள், இன்றும் அவளது மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்திருக்கிறது.

கண்கள் பனிக்க நின்றிருந்தவளின் தலையை ஆதரவாகத் தடவி, “பெற்றவளைவிட, கட்டினவ சொல் பெருசுன்னு போன யாருக்கும், என்னைக் கேள்வி கேட்கவோ… குறை சொல்லவோ… எந்தத் தகுதியும் இல்ல.

நான் சம்பாதிக்கிறேன்… என் கணவர் கட்டிவச்சிட்டுப் போன இந்த வீட்டில இருந்து வாடகை வருது. எங்களோட தேவைக்கு இது போதும். இதுக்கு நடுவில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. இனிமேல், பூர்ணிமா என்னோடு தான் இருப்பா!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, அத்தையின் மகனும், மருமகளும் தன்னைக் குரோதத்துடன் பார்த்துவிட்டு வெளியேறிய காட்சி, இன்றும் அவள் மனத்தில் ஒரு நடுக்கத்தைக் கொடுக்கும்.

பொத்திப் பொத்தி வளர்த்த மகன். கல்யாணம் முடித்த அடுத்த மாதமே தனிக்குடித்தனம் சென்ற மகனை, ஒரு வார்த்தைக் கூடக் கடிந்துக் கொள்ளாதவர் கமலம். இன்று பூர்ணிமாவைத் தன்னுடன் வைத்துக் கொள்வதைத் தடைசொல்ல வந்த மகனை, தன் மனம் ஆறுதல் அடையும்வரை திட்டி ஓய்ந்தார்.

தனது பெற்றோரை அவரிடம் அழைத்துக் கொண்டாலும், அத்தை என்ற ஒரு அரிய உறவைத் தனக்கு அளித்த கடவுளுக்கு, தினமும் நன்றி சொல்லத் தவறியதே இல்லை அவள்.

மாமாவின் மறைவுக்குப் பின் அத்தனை அல்லல்பட்ட போதும், தன் தம்பியிடம் கூட கையேந்தாதவர் அத்தை. தன் மகனை வளர்த்த விதம் பற்றிச் சொல்லும்போதெல்லாம், அந்த வலி அவளையும் பாரம் சுமக்க வைக்கும்.

தனிமையில் வாடிய அத்தைக்கு, பூர்ணிமா ஒரு தோழி போல ஆகிவிட்டாள். தான் பணிபுரியும் பள்ளியிலேயே, அவளையும் சேர்த்துவிட்டார். வாரநாட்களில் பள்ளியில் ஆசிரியையாகப் பாடம் சொல்லிக் கொடுப்பது, வீட்டில் சமையல் கற்றுக் கொடுப்பது என்று அத்தையாக நடந்துகொண்ட கமலம், வார இறுதி நாளில் காவிரிக்கரைப் படித்துறையில் அமர்ந்து நேரம் போவது தெரியாமல், அக்கம்பக்கத்து வீட்டில் நடந்த நகைச்சுவையான விஷயங்கள் முதல், தற்போதய சினிமா நடிக நடிகையர் போலப் பேசி நடித்துக்காட்டும்போது, ஒரு தோழியாக மாறி சிரிக்க வைத்து விடுவார்.

இப்படி இனிமையாகச் சென்றுகொண்டிருந்த பூர்ணிமாவின் வாழ்வில், விதி தன் அடுத்த விளையாட்டை ஆரம்பித்தது. அந்த விளையாட்டில், அவள் வேருடன் பிடுங்கப்பட்டக் கொடியாகத் துவண்டு போனாள். பழைய நினைவுகளால் இமைகளை நனைத்த கண்ணீர் சூடாகக் கன்னத்தில் வழிந்து கைகளில் பட்டுத் தெறித்தது.

“ஏய் பூர்ணிமா! என்ன இப்படி உட்கார்ந்திருக்க?” கிசுகிசுப்பாக வந்தாலும், அதட்டலாக வந்தது… அப்பர் பர்த்தில் படுத்தபடி, எட்டிப் பார்த்துப் பேசிய மேகாவின் குரல்.

அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். “தூக்கம் வரலை மேகா! அதான்...”

“திரும்ப பீலிங்சா! சரியான சென்டிமெண்ட் ஃபூல். படுத்துத் தூங்குடி! விடியும் நேரம்…” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொள்ள, பூர்ணிமாவும் படுத்தாள்.

அதுவரை அவளிடம் நெருங்கிவராமல் எட்டி நின்று வேடிக்கை பார்த்த நித்திராதேவி, மேகாவின் அதட்டலுக்குப் பயந்தோ என்னவோ, இம்முறை தாவி வந்து அணைத்துக் கொண்டு தாலாட்டுப் பாடினாள்.

ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் மேகாவையும், பூர்ணிமாவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, விதி கேலியாகப் புன்னகைத்தது.

இதுவரை உன் வாழ்க்கையில் நான் ஆடியது ஒன்றுமே இல்லை பூர்ணிமா! நான் இனி, உன் வாழ்வில் ஆடப்போகும் ஆட்டம்… நீ எதிர்பார்க்காதது. எது நடக்கக்கூடாது என்ற வேண்டுதலுடன் கிளம்பி வந்தாயோ… அத்தனையையும் இனிமேல் நடத்தப்போகிறேன்.

யாரைத் தோழி என்று நினைத்திருக்கிறாயோ, யாருக்காக எல்லாவற்றையும் பொறுத்துப் போகிறாயோ... அவள் மூலமாகவே, என் விளையாட்டை நடத்தப் போகிறேன்.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
2​

உறக்கம் தின்னும்
கனவு நீ
உன்னில் தொலையும்
உறக்கம் நான்

கொல்லம் சந்திப்பு! அவசர அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு ட்ரெயினிலிருந்து கீழே குதித்தாள் மேகா. நடைபாதையில் தேங்கியிருந்த மழைநீர் சொத்தென அனைத்துப் பக்கமும் தெறிக்க, அவள் போட்டிருந்த ஜீன்சிலும் சகதி தெறித்தது.

“ஹய்யோ...!” என்று முகத்தை அஷ்டக் கோணலாக்கியவள், அங்கிருந்த பைப்பைத் திறந்து முகத்தைச் சுளித்துக்கொண்டே உடையில் பட்ட சகதியைக் கழுவினாள்.

வண்டியிலிருந்து இறங்கிய பூர்ணிமா தங்கள் பெட்டியைச் சரிபார்த்துக் கொண்டிருக்க, வானில் கடந்து சென்ற மேகம் பூந்தூரலாக சாரலைப் பன்னீர் தெளிப்பது போலத் தெளித்துவிட்டுச் செல்ல, கண்களை மூடி அதை அனுபவித்தாள்.

ஆழமூச்செடுத்து காற்றைத் தன் நுரையீரலில் நிறைத்துக்கொண்டவளின் உடலில், மெல்லிய நடுக்கம் பரவியது. காரணம் அவள் மேனியைத் தழுவிச்சென்ற குளிர்ந்த காற்றினாலா? இல்லை, தனக்குள் புதைந்திருக்கும் உண்மைகளை நினைத்தா? நிச்சயமாக அவளுக்கு விடைதெரியாத கேள்விகள்.

அதற்கான விடை தேடும் அவகாசத்தையும் கொடுக்காமல், “நட்டநடு பிளாட்பார்ம்ல நின்னுட்டு, என்ன கனவு?’ என்று சீறலாக அவளது காதருகில் ஒரு குரல் ஒலித்தது.

திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்தவள், “ஹ... ஒண்ணுமில்லைம்மா! தூ...றல்... ம...ழை... சா... ரல்...’ என்று திணறியவளுக்கு, வதனாவின் முறைப்பில் பேச்சு திக்கியது.

‘உன்னை...! என்னை, அம்மான்னு கூப்பிடாதேன்னு, எத்தனை முறை சொல்லியிருக்கேன்!” என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார்.

‘சா...ரி மேடம்...!” என்றவளது அன்றலந்த தாமரை முகம், மலராத மொட்டாகக் கூம்பியது.
‘இதுல ஒண்ணும்குறைச்சல் இல்ல. எதுகை மோனைல வார்த்தை வேற வருது. மேகா எங்கே?’ என்றவரது பார்வை, ஆசையுடன் தனது செல்ல மகளைத் தேடியது.

“மம்மீ...!” என்று கூச்சலிட்டபடி வந்த மகளை, வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார்.

“எப்படிடா இருக்க?”

‘போங்க மம்மீ! என்கூடப் பேசாதீங்க. நான் அவ்ளோ சொல்லியும், அப்பாகூடச் சேர்ந்து… என்னை இந்த ஊருக்கு வரவச்சிட்டீங்க இல்ல?” என்றாள் ஊடலாக.

“போகப் போக, இந்த ஊர் உனக்குப் பிடிச்சிடும் பாரேன்” என்று சொல்லிச் சமாளித்தார்.

“பிடிச்சாலும் சரி, பிடிக்கலைனாலும் சரி... ஏற்கெனவே சொன்னபடி, ஆறு மாதம்தான் இங்கே இருப்பேன். அப்புறம் சொய்ய்ய்ங்...” என்று கையை விமானம் பறப்பது போலக் காட்ட, வதனா உள்ளுக்குள் நொந்து போனார்.

‘செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிட்டோம். சமாளித்துத் தானே ஆகணும்? சமாளிக்கிறேன்!’ என்று மனத்திற்குளேயே நினைத்துக்கொண்டு, பிரயாணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டே காரை நோக்கி நடந்தார்.

பார்க்கிங்கில் நின்றிருந்த காரைக் கண்டதும், “வாவ்... எனக்குப் பிடிச்ச மெட்டாலிக் ப்ளூ. டாடின்னா டாடிதான்!” என்ற துள்ளலுடன் காரில் ஏறினாள்.

ஒரு வாரத்திற்கு முன்பு தான் கொல்லத்திற்கு வந்து, தந்தையின் பூர்வீக வீட்டில் குடியேறிய அன்னையிடம், செகந்தராபாத்தில் நடந்த தங்களின் ஒரு வாரக் கதையையும் வளவளத்துக் கொண்டிருக்க, பூர்ணிமாவோ கேரள மண்ணின் அழகை ரசித்தபடி வந்தாள்.

‘கொல்லம் வந்தவங்க இல்லம் போகமாட்டாங்க!’ என்ற சொல்லிற்கு ஏற்ப, பச்சைப்பசேலென்று வளமையும், ஆங்காங்கே காயலுமாக, திரும்பிய பக்கமெல்லாம் அழகு கொஞ்சிய அந்த ஊரை, கண்களில் ஆர்வம் பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் பூர்ணிமா.

ஜங்ஷனிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் எரவிபுரம் என்ற பலகை இருந்த பக்கம் கார் திரும்பியது.

பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த தாயும், மகளும் ஏதேதோ பேசிக்கொண்டே வர, பக்கத்தில்அமைதியாக வந்த பூர்ணிமாவைப் பார்த்த டிரைவருக்கு என்ன தோன்றியதோ, “இங்கே இருந்து, பத்து நிமிடத்தில் நம்ம வீட்டுக்குப் போய்டலாம்மா!” என்று அறைகுறைத் தமிழில் சொல்லிவிட்டு, “மலையாளம் அறியுமோ?” என்று யோசனையுடன் கேட்டார்.

திரும்பிப் பார்த்து, “கொறச்சியறியும்” என்று புன்னகைத்தாள்.

ஒவ்வொரு வீட்டின் முன்னும் பச்சைப் பசேலென்று தோட்டம் அமைந்து, பல தென்னை மரங்கள் வளர்ந்திருந்ததைக் காண, கண்ணுக்குக் குளுமையாக இருந்தது. ஒரு சிறிய காயல் ஓடிக்கொண்டிருக்க, பாலத்தை தாண்டிச் சென்று ஒரு காம்பவுண்டின் வெளியே கார் நின்றது.
மூடியிருந்த மெயின் கேட்டைத் திறக்க இறங்க முயன்ற டிரைவரை முந்திக்கொண்டு, “சேட்டா! ஞான் துறக்கான்” என்று பூர்ணிமா இறங்கித் திறந்தாள்.

அமைதியாக வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே சென்ற மகளிடம், “வீடு எப்படியிருக்குடா?” என்று கேட்டார்.

“ம்ம்... பரவாயில்லை. பழைய வீடா இருந்தாலும் நல்லா பெரிதாவே இருக்கு. நாட் பாட். இன்னும் ஆறு மாதம் தானே… அட்ஜஸ் பண்ணிக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல, வதனா பெருமூச்சை வெளியேற்றினார்.

“அம்மா! நான் இந்த ரூம் எடுத்துக்கறேன். என் பக்கத்து ரூம் பூர்ணிமாவுக்கு” என்று மாடியிலிருந்து குரல் கொடுத்தாள்.

“இல்லடா. அதைக் கெஸ்ட் ரூமா வச்சிடலாம். அவ கீழே ஆஃபிஸ் ரூமுக்குப் பக்கத்திலிருக்கும் கடைசி ரூமை எடுத்துக்கட்டும். அப்போதான் அப்பாவுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்” என்று பூர்ணிமாவைப் பார்த்துக்கொண்டே சொன்னார் வதனா.

அவரது பார்வைக்கு அர்த்தம் புரிந்தவளாக, “ஆமாம் மேகா! நான் இந்த ரூமிலேயே இருந்துக்கறேன்” என்றாள் பூர்ணிமா.

பாதிப் படியில் வந்து நின்றவள், “அதுக்குப் பேர் ரூமா? டன்ஜன் மாதிரியிருக்கு. அது வேணாம்; நீ மேலே வா!” என்றதும் பூர்ணிமா வதனாவைப் பார்க்க, “அங்கே என்ன லுக்? வா வா! அப்படியே, என்னோட டிராவல் பேகையும் எடுத்திட்டு வந்திடு!” என்று கட்டளையிட்டு விட்டுப் படியேற, தயக்கத்துடன் வதனாவைப் பார்த்துவிட்டு மேகாவின் பின்னால் சென்றாள்.

‘யார் யாரை எங்கே வைக்கணும்னு, இன்னும் தெரியமாட்டேன்னுதே இந்தப் பொண்ணுக்கு!’ என்று நினைத்தபடி சோஃபாவில் அமர்ந்தார் அவர்.

விஸ்தாரமான அந்தப் பெரிய அறையிலிருந்த வேலைப்பாடு நிறைந்த பெரிய கட்டிலில், “ஹப்பா” என்றபடி சாய்ந்தவளோ, “பூர்ணிமா! கால் கடுக்குது; கொஞ்சம் பிடிச்சிவிடேன் ப்ளீஸ்!” என்று சொல்லியபடியே, காலை உயர்த்தி அவளது எதிரில் நீட்டினாள்.

தோளில் மாட்டியிருந்த கிட் பேக்கை ஷெல்பில் வைத்துவிட்டு வந்தவள், சிறிதும் முகம் சுளிக்காமல் மேகாவின் காலைப் பிடித்துவிட ஆரம்பித்தாள்.

“எனக்கு டயர்டா இருக்கு. நான் அப்படியே தூங்கறேன்”

“ரெண்டு நாள் டிரெயின்ல வந்த அலுப்புதான். ஹீட்டர் போடறேன்… குளிச்சிடு. அதுக்குள், நான் போய் டிஃபன் கொண்டுவரேன், சாப்பிட்டுட்டுப் படுத்துக்கோ.”

“ஹும்ம்...! எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. நீ ஏசியை மைல்டா வச்சிட்டுப் போ!” என்று சத்தமாக ஆரம்பித்தவள் குரல், ராகம் பாட ஆரம்பித்தது.

“அதுக்குள்ளே பாதித் தூக்கம் வந்தாச்சு. நல்ல பொண்ணுடீ நீ. இதில், ஃபாரின் போய்ப் படிக்கிறேன்னு… வீட்டில் சண்டை வேற” என்று சொல்லிச் சிரித்தாள்.

“அம்மாதான் புலம்பறாங்கன்னா... யூ டூ பூர்ணிமா?” என்று கண்களை மூடியபடி ராகம் இழுத்துவிட்டு உறங்கியவளது தலையை, வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள்.

‘இருபது வயசு முடிஞ்சாச்சு. இன்னும் சிறுபிள்ளையாகத் தான் இருக்கிறாள்!’ என்பதை நினைத்துப் புன்னகைத்தவளுக்கு ஒரு ஏக்கப் பெருமூச்சு எழுந்தது.

அவளது முகத்தைப் பார்த்தபடி சிறிதுநேரம் நின்றிருந்தாள். ‘படபடவென்று வெளிப்படையாகப் பேசும் குணம் மட்டும் கொஞ்சம் மாறினால், அவளைப் போன்ற அருமையான பெண்ணைப் பார்க்கவே முடியாது!’ என்று நினைத்துப் புன்னகைத்தவள், ‘கடவுள், உனக்காவது கடைசிவரை இந்தச் சிரிப்பை நிரந்தரமாகக் கொடுக்கட்டும்’ என்று எண்ணிக்கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள்.

“பூர்ணிமா!” என்ற வதனாவின் அதிகாரமான குரல் கேட்டதும், “இதோ வரேன் மேடம்...” என்றவள், கிட்டதட்ட ஓடினாள்.

“மேகா என்ன பண்றா?”

“தூங்கறா மேடம்...”

“சாப்பிடாமலேயே தூங்கிட்டாளா? நீ அங்கே தானே இருந்த. அவளைச் சாப்பிடச் சொல்லக் கூடாதா? இதெல்லாம் கூட, நான் சொல்லணுமா?” என்று கேட்க, அவளோ அமைதியாக நின்றாள்.

“என்ன சொன்னாலும், வாயைத் திறக்காம அமுக்கமா நிக்கறே!” என்று முணுமுணுத்துவிட்டு, “சரி, நான் சாப்பிடணும், நீ இந்தச் சாமானையெல்லாம் எங்கே வைக்கணுமோ வச்சிடு. அப்புறம், ஆபிஸ் ரூமை ரெடி பண்ணிடு. அதுக்கப்புறம் வந்து, டிஃபன் சாப்பிடு” என்று சொல்லிவிட்டு, அவளது பதிலை எதிர்பார்க்காமல் சென்றார்.

இந்த ஊருக்கு வரப்போகிறோம் என்று தெரிந்த நாள் முதலாக, தூக்கம் என்பது பாதியாகக் குறைந்திருந்தது. அதுவும் முழுதாக ஒன்றரை நாள் ரயில் பயணம். ஏசியாக இருந்தபோதும் பயண அலுப்பில் கசகசப்பும், சோர்வும் உடலை வருத்தியது. இதையெல்லாம் எப்போது எடுத்து வைத்து, குளித்து... பூர்ணிமாவிற்கு மலைப்பாக இருந்தது.

மேகாவின் அறைக்கு, ஒரு பெரிய பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு, பாதி படி ஏறிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த டிரைவர், “மோளே! இவிடே தரு, என்னை விளிச்சூடே? ஞான் எடுக்கட்டே கனமாய்ட்டுண்டு” என்று கேட்டுக்கொண்டே பெட்டியை வாங்கினார்.

“சாரமில்லை சேட்டா, நிங்களுக்கு எதுக்குச் சிரமம்?”

“அண்ணா!’ என்று உரிமையுடன் அழைத்தவள்மீது பாசம் பெருகியது.

“இதில் எந்தா சிரமம், இவ்விடேதரு” என்று வாங்கிக்கொண்டு, “எண்ட பேரு மாதவன்” என்றார்.
“எண்ட பேரு பூர்ணிமா!”

“எத்தர கொல்லம் இவிடே ஜோலி செய்யுன்னுண்டு?”

“ஞான் கொரயகாலமா சார் வீட்டில் தாமசிக்குன்னுண்டு, சாரே படிப்பிச்சதும்”
பேசிக்கொண்டே வேலையை முடித்தவுடன், பூர்ணிமாவிற்குக் கால்களை நீட்டி ஒய்வாக உட்காரவேண்டும் போலிருந்தது.

“மாதவச்சேட்டா… தாங்க்ஸ்!”

“இருக்கட்டே, எதேன்கிலும் வேணுமெங்கில்… எப்போ எங்கிலும் ஈ சேட்டனேடத்து பறயு!” என்று சொல்லிவிட்டு செல்ல, சற்றுத் தூரம் சென்ற மாதவனிடம், “சேட்டா! நாள சார் வருதுண்டு” என்றாள்.

“நாள ராவிலே ஏர்போர்ட் செல்லான், ஐஞ்சு மணிக்குத் தயாராய்ட்டு உண்டாவும்” என்றார்.
“ம்ம்...” என்று இருவரும் ஒருவரைஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.
 
  • Love
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
3​

வழிமறந்த
பறவையானேன்…
திசை மாறி
நீ சென்றதால்!

திருவனந்தபுரம் விமான நிலையம்... அந்த அதிகாலை நேரத்திலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

“ஹப்பா! என்ன காற்று? குளுகுளுன்னு ஸ்ஸ்...” என்று பரபரவென கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்து,அந்த இளம் சூட்டை அனுபவித்தாள்.

“மழ இப்போயல்லே தொடக்கம், இனியரியாம் கண்டோ...”

“ஒஹ்...! அப்படியா...” என்று அவள் அறியாததைப் போன்று அவர் கூறியதைக் கேட்டுக்கொண்டு, “சேட்டா அகத்து வருதுண்டோ?” என்றாள்.

“ஞான் வருநில்ல, இவிடே இருக்கட்டே.”

“சரி” என்றவள் கையிலிருந்த பர்சை நெஞ்சோடு அணைத்தபடி வேகமாக உள்ளே சென்று, விமான வருகை, புறப்பாடு போர்டைப் பார்த்தாள்.

“ஹும்! ப்ளைட் அரைமணி நேரம் லேட்...” என்று முணுமுணுத்தவள், மாதவனுக்கு மொபைல் மூலமாகத் தகவல் சொல்லிவிட்டு, அருகிலிருந்த புத்தகக் கடையில் நுழைந்து, புத்தகங்களைச் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள், அரைமணி நேரத் தாமதம் என்றிருந்த இடத்தில், கூடுதலாக ஒருமணி நேரம் சேர்ந்து விட்டிருந்தது.

’தனியாக எவ்வளவு நேரம்தான் நிற்பது?’ சலிப்பாக இருந்தது. ’சரி, காருக்குப் போனால் மாதவனிடம் பேசிக்கொண்டிருக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டு அவள் வெளியில் வருவதற்குள், மழை பெரும் தூரலாப் பொழிய ஆரம்பித்தது.

கிழக்கே உதிக்கக் காத்திருந்த சூரியனை வரவிடாமல், மழைக்கால மேகம் வானைச் சூழ்ந்து சாம்பல் வண்ணமாகக் காட்சியளித்து, அனைவரின் அன்றைய நாளை சோம்பி இருக்கச் செய்த பெருமையுடன், மழைக் கச்சேரியை இடி ஓசையின் கைத்தட்டலுடன், கன ஜோராக நடத்திக்கொண்டிருந்தான் வருண பகவான்.

அதுவரை அவளிடம் தஞ்சமிருந்த சலிப்பு விலகி ஓடி மறைய, சுவாரசியமாக மழையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். குளிர்காற்று மேனியைத் தழுவியதால் சிலிர்த்த தேகத்தை, இரு கைகளையும் குறுக்காகக் கட்டிக்கொண்டு, நீண்ட காரிடாரில் நடந்தாள்.

உதடுகளோ, “தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல்... மழைச்சாரல்” என்று மெல்லிய குரலில் ரகசியமாகப் பாடியது.

’இன்று தன் மனம் ஏன் இத்தனைக் குதூகலத்துடன் இருக்கிறது?’ அதற்கான விடை அவளுக்கு நிச்சயமாகத் தெரியாது. அவளுக்குக் தெரிந்து இந்த ஆறேழு வருடத்தில், இது போன்று சந்தோஷத்துடன் இருந்ததில்லை. தன் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தவளை, மொபைல் அழைத்தது.

“சொல்லு மேகா!”

“----------”

“ஃபிளைட் ரெண்டு மணி நேரம் லேட்.”

“-----------”

“நீ அத்தனைக் காலையில் எழுந்துக்க மாட்டியே.”

“---------”

“சின்னக் குழந்தைமாதிரி அடம் பிடிக்காதே. உன்னைக் கூட்டிட்டு வந்திருந்தா, நான்தான் பிள்ளைப் பூச்சியை மடியில கட்டிட்டு வந்தது மாதிரி அவஸ்தைப்படணும். என்னவோ, என்னால்தான் பிளைட் லேட் ஆகுதுங்கற மாதிரி பேசுவ. என்னால் தாங்க முடியாது!”

“------------”

சிரித்தவள், “உன்னையே தான் சொன்னேன். நம்ம சண்டையை, வீட்டுக்கு வந்து கண்டின்யூ பண்ணலாம், ப்ளைட் அனவ்ன்ஸ்மெண்ட் வந்தாச்சு. பை!” என்று மொபைலை அணைக்கும் போதே, மறுமுனையில் மேகா கத்துவது கேட்க, புன்னகைத்துக்கொண்டே வந்த வழியில் நடந்தாள்.

“பூர்ணிமா...! ஹவ் ஆர் யூ?” என்று விசாரித்த பரசுராமன், செகந்தராபாத் ஹை-கோர்ட்டில் பிரபலமான, ஆனால், ,தகிடுதத்தம் செய்யாத நேர்மையான வக்கீல்.

இருபத்தைந்து வருட வக்கீல் வாழ்க்கையில் கிடைத்த பேரும், சம்பாத்தியமும் போதுமென்று மனைவி, ஆசை மகள் மற்றும் அவரின் பிரியமான வளர்ப்பு மகளுடனும் சொந்த ஊரான கேரள மாநிலமான கொல்லத்திற்குப் பத்து நாளைக்கு முன்புதான் குடியேறினார்.

ஒரு வேலையாக டெல்லி சென்றுவிட்டு வர, அவரை வரவேற்கவே பூர்ணிமா வந்திருக்கிறாள்.
“நான் நல்லா இருக்கேன்ப்பா! போன வேலை நல்லபடியா முடிந்ததா?”

“ம், பிரமாதமாக முடிந்ததும்மா. ஃப்ளைட் தான் லேட்” இருவரும், பேசிக்கொண்டே காரை நோக்கி நடந்தனர்.

“மாதவா... சுகம்தன்னே?” என்று விசாரித்தபடி பின் இருக்கையில் அமர்ந்த பரசுராமன், பூர்ணிமாவைத் தன் அருகில் அமரவைத்துக் கொண்டார்.

“எனிக்கி சுகமானு சாரே!”

“மாதவா! மேகா என் மகள். ஆனால், பூர்ணிமா என் மூத்த மகள்!” அதாவது, ‘மேகாவுக்கு நீ கொடுக்கும் அதே மதிப்பையும் மரியாதையையும், இவளுக்கும் கொடுக்கவேண்டும்’ என்ற தொனியில் சொல்ல, புரிந்து கொண்டதற்கு அடையாளமாக, மாதவனும் தலையசைத்துச் சிரித்தார்.

“என்னம்மா! உன் ஃபிரெண்ட் என்ன சொல்றா? ஊர் பிடிச்சிருக்காமா?”

“அதெப்படிப்பா, இதுக்குள்ளே ஒத்துக்குவா? இந்த ஊருக்கு வரவேமாட்டேன்னு எத்தனைப் பிடிவாதமாக இருந்தா. இப்போதான் வீடு பிடிச்சிருக்கு. இனிமேல் தான், மெல்ல ஊரையும் பிடிக்கணும். இதைப் போல, கண்ணுக்குக் குளிர்ச்சியா பசுமையும்... சுத்தமான காற்றும், பரபரப்பில்லாத நிதானமான வாழ்க்கையும் பிடிக்காமப் போகுமா என்ன? பழக, கொஞ்சம் நாள் ஆகும் இல்லயா?”

“உண்மைதான்...” என்று ஒப்புதலாகத் தலையசைத்தார் பரசுராமன்.

வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டதும், “அச்சா!” என்று கன்றுக்குட்டியாக துள்ளிக் குதித்து ஓடிவந்து, அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டாள் மேகா.

கையிலிருந்த ப்ரீஃப்கேஸை பூர்ணிமாவிடம் கொடுத்துவிட்டு, மகளை அணைத்தபடி சோஃபாவில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

“என்னடா! வந்த ஒரே நாளில், மலையாளம் படிச்சாச்சா?”

“ஒரு நாளைக்கு, ஒரு வார்த்தை கத்துக்கணும்னு இருக்கேன்.” கண்கள் விரித்துத் தலையை ஆட்டிச் சிறு குழந்தையாக குதூகலிக்கும் மகளை, வாஞ்சையுடன் பார்த்தார்.

“வரவர, நீங்க இந்தப் பூர்ணிமாவுக்கு... ஓவரா இடம் கொடுக்கறீங்க டாடி. என்னை ஏன் ஏர்போர்ட் கூட்டிட்டுப் போகலைன்னு கேட்டா, என்னைப் பிள்ளை பூச்சின்னு சொல்றா...” என்று தந்தையிடம் குற்றப்பத்திரிகை வாசிக்க, பரசுராமனோ வாய்விட்டுச் சிரித்தார்.

“அவள் சொல்லிட்டா... நான் சொல்லலை! அதான் வித்தியாசம்” என்று சிரித்த தந்தையை, செல்லக் கோபத்துடன் முறைத்தாள்.

“பெத்தவ வளர்த்திருந்தா, எப்படிப் பேசறதுன்னு தெரியும்”

‘எதையாவது சொல்லி, அவளைக் காயப்படுத்துவதே தனது கடமை’ - என்பது போலிருக்கும் வதனாவிற்கு, குத்திக்காட்ட ஒரு செய்தி கிடைத்ததும், என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் சொன்ன சொல், பூர்ணிமாவின் நெஞ்சில் ஊசியால் குத்தியது போல வலித்தது. அத்தனை உற்சாகமும் தரையில் விழுந்த கண்ணாடியைப் போல் சுக்கு நூறாகச் சிதறிப் போனது.

ஆனால், பரசுராமனோ எதுவும் சொல்லாமல் மனைவி கொடுத்த காஃபியை குடிப்பதும், மகளிடம் பேசுவதாகவும் இருந்தார். தன்னை மூத்த மகள் என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டாலும், மனைவியின் எதிரில் மட்டும் தனக்கு ஆதரவாக எதுவும் பேசமாட்டார் என்பதை அறிந்திருந்ததால், அமைதியாகத் தன் அறையை நோக்கி நடந்தாள்.

அவளது அகன்ற விழிகளில் ஏக்கமும், மனத்தில் கனமும் ஏறியது. இப்போதெல்லாம் பெற்றோரின் இழப்பு அடிக்கடி மனத்தை வருத்துகிறது. அவர்கள் மட்டுமா நினைவில் வருகிறார்கள்?

நெஞ்சை அடைத்த துக்கம், கண்ணீராக வழிந்தது. ஆறேழு ஆண்டுகளாக இத்தனைச் சந்தோஷத்தை அனுபவித்தது இல்லை என்று நினைத்த அதே நாளில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அழுகிறாள்.

ஆனால், ஒன்று மட்டும் புரிந்தது. உன் சந்தோஷத்திற்கும் அழுகைக்கும், இது காரணமல்ல... வேறு! என்று அறிவு அவளிடம் ரகசியமாக உரைத்த செய்தியை, மனம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டதுதான் நிஜம்.

ஏற்றுக்கொண்டாலும், அதை ஜீரணிக்க முடியாமல் திணறியது மனம்.
 
  • Sad
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
4​

விடியல் தேடும்
குயிலாகினாய்!
உன் குரல் யாசிக்கும்
குழல், நானானேன்!

“ஹஹச்ச்!” தலையில் துண்டைக் கட்டிக் கொண்டே குளியலறையிலிருந்து கமலம் தும்மிக்கொண்டே வர, பாடப் புத்தகத்தில் கண்களைப் பதித்திருந்த பூர்ணிமா, நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன அத்தை இது? ராத்திரியெல்லாம்... மூச்சுவிட முடியாமல் எத்தனைக் கஷ்டப்பட்டீங்க? இப்போ, இத்தனைக் காலையில் பச்சைத் தண்ணியைத் தலையில் கொட்டிக்கிட்டு வந்திருக்கீங்களே!” என்று தவிப்புடன் கேட்டாள்.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமைடா. தலையை நல்லாத் துடைத்து, சாம்பிராணி போட்டால் சரியாகிடும்.”

‘இன்னும் சாம்பிராணி வேறயா?’ பதினைந்து வயது பூர்ணிமாவிற்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கமலத்திற்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பது முன்பே தெரிந்த போதும், அதைப்பற்றிக் கவலைப்படும் அளவிற்கு எதுவும் தெரியாதவளுக்கு, வீட்டுக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் குளிர்கால இரவிலும், சிலசமயம் ஒவ்வாமையாலும் அவர் படும் அவஸ்தையைப் பார்த்து, அச்சமாக இருந்தது. தன் பயத்தை அவரிடம் சொன்னாலும், சிரிப்பார்.

“நாம எதையெல்லாம் அனுபவிக்கணும்னு இருக்கோ, அதையெல்லாம் அனுபவித்துத் தான் ஆகணும். நீ, உன் படிப்பை மட்டும் பார்! என்னைப் பத்திக் கவலைப்படாதே. இந்த வருடம், உனக்கு ரொம்ப முக்கியமானது. உன் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வருடம். கவனத்தை... படிப்பில் மட்டும் வை!” என்று அவளிடம் சமாதானமாகப் பேசி திசை திருப்பிவிடுவார்.

பூர்ணிமாவும் தன் கவனத்தைப் படிப்பில் ஈடுபடுத்தினாள். அதன் பலனாக மதிப்பெண்கள் கூடி, பள்ளியிலேயே இரண்டாவது மாணவியாக வந்தவளை ஆதூரத்துடன் அணைத்துக்கொண்ட கமலம், புது உடை எடுத்துக்கொடுத்து, அன்று முழுவதும் தன் நாளை அவளுடனே கழித்தார்.

அன்று இரவு

“என்ன குரூப் எடுக்கப்போறே பூர்ணிமா?”

“செக்ரடேரியல் கோர்ஸ் அத்தை!”

“ஏன்டா... உன் மார்க்குக்கு, சயின்ஸ் குரூப்பையே கூப்பிட்டுக் கொடுப்பாங்க.”

“நான், இந்தக் கோர்ஸ்சே எடுத்துக்கறேன் அத்தை! எனக்கு மெடிக்கல், எஞ்சினியரிங் போவதில் விருப்பமில்ல.”

‘தன்னை மேலும் வருத்தக்கூடாது என்ற ஒரே எண்ணத்திலேயே சொல்கிறாள்’ என்று உணர்ந்த கமலம் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், “சரி...” என்றார்.

“இன்னும் ரெண்டு நாளில் நம்ம ஸ்கூலிலேயே அட்மிஷன் வாங்கிடலாம். படுக்கலாம்… நேரமாகுது” என்றவர் விளக்கை அணைத்தார்.

பூர்ணிமா உறங்கிவிட, கமலத்திற்கு உறக்கம் வரவில்லை. நெஞ்சை அடைப்பது போலிருந்தது. இரண்டுமுறை லேசாக இருமியவர், அருகிலிருந்த தைலத்தை எடுத்து தடவிக்கொண்டு படுத்தார். நேரமாக ஆக, வலி அதிகரித்தது. அவரின் முனகல் சத்தத்தில் விழித்தவள் அத்தையின் அவஸ்தையைக் கவனித்துவிட்டு அக்கம்பக்கம் இருந்தவர்களை அழைத்து வருவதற்குள் மயக்கநிலையை அடைந்திருந்த கமலத்தை, அவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தாள்.

இருள் சூழ்ந்திருந்த அறையில் செயற்கைக் கருவிகளின் உதவியுடன் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த அத்தையைக் கண்டவளுக்கு, கண்கள் குளம் கட்டியது. மெல்ல இமைகளைத் திறந்த கமலம், கதவருகில் நின்றிருந்தவளைப் பார்த்து லேசாக வலது கையை உயர்த்தி, “வா” என அழைத்தார்.
“பயந்துட்டியா...?” பலவீனமான குரலில் கேட்டார்.

கண்களில் கண்ணீருடன் இல்லையெனத் தலையசைத்தவள், “சீக்கிரமே நல்லாகிடுவீங்க அத்தை!” என்று அவர் கரத்தை பற்றிக்கொண்டாள்.

‘என் விதி எனக்குத் தெரியும்!’ என்பதுபோல் புன்னகைக்க முயன்றவர், “நான் உன்னிடம் ஒரு போன் நம்பர் கொடுத்தேனே நினைவிருக்கா...?” என்றார்.

“ஆமாம்... உங்க சின்ன வயதுத் தோழியோடது.”

“ஆஹ்... அந்த நம்பருக்குப் போன் செய்து, என் நிலையைச் சொல்லி வரச்சொல்லு...” என்றவருக்கு, மேலே பேசமுடியாமல் மூச்சிரைத்தது.

‘கொஞ்சம் கஷ்டம்தான். உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க; போய்ப் பாருங்க. ஆனா, ரொம்பப் பேசவிடாதீங்க’ என்று சொல்லி உள்ளே அனுப்பியது நினைவு வர, “நீங்க அலட்டிக்காதீங்க அத்தை. நான் அவங்களை வரச்சொல்லி போன் செய்றேன்” என்று வெளியில் வந்தாள். பக்கத்து வீட்டுப் பாட்டியைத் துணைக்கு வைத்துவிட்டு வீட்டுக்கு ஓடிவந்து பீரோவில் வைத்த போன் நம்பரையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு எஸ்.டி.டீ பூத்திற்கு ஓடினாள்.

ஒவ்வொரு எண்ணாக அழுத்தும் போதும் அவளுக்குள் கேள்விகள் எழுந்தன. யார் இவங்க? அத்தைக்கு உறவா… இல்லை தோழியா? இதுவரை, இவங்களைப் பற்றி பெரிதாக எதுவும் சொன்னதில்லையே!’ என்று தன்னைச் சுற்றிக் கேள்விகளைப் பின்னிக்கொண்டிருக்க, எதிர்முனையில், “ஹலோ...” என்று குரல் கேட்டது.

யோசனையிலேயே இருந்தவள், திடீரென குரல் கேட்டதும் என்ன பேசுவது என்று தெரியாமல் சிறிது தத்தளித்தாள்.

“ஹ...லோ..., நான் திருச்சியிலிருந்து பேசறேன்...” என்று பெயரை சொல்லாமல் ஊரை மட்டும் சொன்னாள்.

“பூர்ணிமா! கமலம் எப்படியிருக்கா?” அந்த நிலையிலும் தன் பெயரைச் சொல்லாமலேயே ஊரைச் சொன்னபோதும், தன்னைக் கண்டுபிடித்துவிட்டார்களே!’ என்று அதிசயித்துப் போனாள்.

“பூர்ணிமா! லைன்ல இருக்கியா?” என்று பதட்டத்துடன் ஒலித்தது எதிர்முனைக் குரல்.
“இ... இருக்கேன்... ஆன்ட்டி!”

“கமலத்துக்கு உடம்புக்கு முடியலையா?”

“அத்... அத்தைக்கு ஹார்ட் அட்டாக். உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க...”

மறுமுனையில், “கடவுளே...!” என்று சத்தம் கேட்டதோடு போனும் துண்டிக்கப்பட பூர்ணிமாவும், ஹாஸ்பிட்டலுக்குத் திரும்பினாள்.

ஆனால், லஷ்மி வருவதற்குள் எல்லாம் முடிந்து போய் இருந்தது. காரைவிட்டு இறங்கிய லஷ்மியின் காலடியில், ஒரு தோள் பை வந்து விழுந்தது.

“நல்லா ரெண்டு வருஷம் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட்ட இல்ல. இப்போ போ... யார் உனக்குச் சோறு போடறாங்கன்னு பார்க்கிறேன்.”

“அக்கா! என்னை இப்படித் திடீர்னு போகச் சொன்னா, எங்கேக்கா போவேன்? மாமா! நீங்களாவது சொல்லுங்க மாமா! ப்ளீஸ் மாமா! நம்ம வீட்டு வேலையெல்லாம் செய்துகிட்டு, இங்கயே இருந்துக்கறேன் மாமா. எந்தத் தொல்லையும் கொடுக்கமாட்டேன்ன்னு, அக்காகிட்டச் சொல்லுங்க மாமா!” என்று அத்தை மகனிடம் கெஞ்சியவளின் தோளைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினாள் அவள்.

“என்னடி மாமா? இத்தனை நாள் நீயும், அந்தக் கிழவியும் போட்ட ஆட்டமெல்லாம்… இனி ஆகாது. முதல்ல இடத்தைக் காலி பண்ணு. அழுது மாய்மாலம் பண்ணாதே!” என்று தரதரவென இழுத்து வந்து வாசலுக்கு வெளியே தள்ளி கதவை மூடினாள்.

தள்ளிய வேகத்தில் தரையில் விழுந்தவள் தட்டுத்தடுமாறி எழ, “அய்யோ! வயசுப் பிள்ளைய இப்படிக் கழுத்தைப் பிடிச்சி தள்ளிட்டுப் போறாளே... இவளும், புள்ளைக் குட்டிப் பெத்தவ தானே?” என்று முணுமுணுத்த பக்கத்து வீட்டுப் பாட்டி, அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டார்.

“அம்மாடி! உன் அம்மா வழிச் சொந்தம் ஏதாவது இருந்தா சொல்லும்மா. நான் கூட்டிட்டுப் போய் விடுறேன். என்னால, அது மட்டும்தான் முடியும்” என்ற முதியவரைப் பார்த்து, அவளால் அழ மட்டுமே முடிந்தது.

“பாட்டி! நீங்க வேலை செய்யற இடத்தில், எனக்கும் எதாவது வேலை வாங்கிக்கொடுங்க. நைட் மட்டும் உங்க வீட்டு வராண்டால தூங்க அனுமதி கொடுங்க. கொஞ்ச நாளைக்குள், நானே எனக்கு ஏதாவது ஏற்பாடு செய்துக்கறேன்” என்று அழுகையைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, தன் அடுத்த நிமிடத்தைக் குறித்து கவலைப்படத் துவங்கினாள் பூர்ணிமா.

ஆனால், இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லஷ்மிக்கோ, பிரமிப்பாக இருந்தது.

‘மிஞ்சிமிஞ்சிப் போனால், பதினைந்து வயது பெண். இவளுக்கு இருக்கும் மனோதிடத்தில், ஒரு சதவீதம் கூட தனக்கில்லையே!’ என்று நினைத்துக்கொண்டார்.

‘கமலத்தின் வாரிசு இல்லையா? அந்தத் தைரியத்தில் பாதியாவது இருக்காதா...?’ என்று அவளை மெச்சிக் கொண்டார்.

“பூர்ணிமா...!” மென்மையான குரலில், பாசத்துடன் அழைத்தார்.

திரும்பிய பூர்ணிமா, “நீ..நீங்க... அத்தையோட ஃபிரெண்ட்...” என்று அவள் தயக்கமாகக் கேட்டதும், ‘ஆமாம்’ என்று தலையசைத்தவரிடம், “ஆ... ஆனா, அத்தை...” என்றவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“வருத்தப்படாதேம்மா. இனிமேல், நீ என் பொறுப்பு! உன் அத்தைக்கு ஏற்கெனவே நான் வாக்குக் கொடுத்திருக்கேன்” என்றதும், கையெடுத்துக் கும்பிட்டாள். அவளது கரத்தைப் பற்றியவர், “நானும் உனக்கு அத்தைதான். என்னையும் அப்படியே கூப்பிடு!” என்றார்.

அன்றே, அவளைத் தன்னோடு அழைத்துக் கொண்டு புறப்பட்டார் லஷ்மி.

குளுகுளுவென ஏசி காரில் பயணம். ஆனால், பூர்ணிமாவிற்கு இதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. மனம் முழுதும் அத்தையின் நினைவு. ‘தனக்கு ஆதரவு கொடுத்தவரை, காலமெல்லாம் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எத்தனை ஆசைப்பட்டாள். இதே போல ஏசி காரில் அத்தையுடன் போகவேண்டும்’ என்று பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

“அத்தை! நான் நல்லா படிச்சி, வேலைக்குப் போய்… கை நிறையச் சம்பாதித்து, ராணி மாதிரி உங்களைச் சந்தோஷமா வச்சிக்குவேன்”

“ம்...! அப்புறம்...”

“அப்புறம், கார் வாங்குவேன்... ஏசி கார்!”

“ம்ம்...”

“பின் சீட்டில் நான் உட்கார்ந்திருக்க, நீங்க என் மடியில் தலைவச்சி, படுத்துக்கிட்டே வருவீங்களாம்.”

“ம்...” என்று சுவாரசியமாகத் தலையாட்டிய கமலம், “அப்போ கார் ஓட்டுவது யாரு… உன் வீட்டுக்காரனா?” என்று கேட்க, ஒரு கணம் திருதிருவென விழித்தவள், “ஹைய்யோ! போங்க அத்தை...” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

“போறேண்டி பொண்ணே போறேன்! உன்னைப் பொறுப்பான ஒருத்தன் கைல பிடிச்சிச் கொடுக்கணும்ற ஒரு கடமை பாக்கி இருக்கே, அதை நல்ல படியா முடிச்சிக் கொடுத்துட்டுப் போறேன்...”என்று விளையாட்டாக சொன்னார்.

ஆனால், பூர்ணிமாவையோ அந்தப் பதில் உலுக்கியது.

கமலத்தின் மடியில் படுத்துக்கொண்டு, “எனக்கு வேற யாரும் வேணாம் அத்தை! கடைசி வரைக்கும் என் கூட இருக்கறேன்னு நீங்க சொல்லுங்க, அதுவே போதும்!” என்று கண்கலங்கியவளை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார் அவர்.

இன்றைய கார் பயணத்தில், அத்தையுடனான பேச்சு அவளது நினைவிற்கு வந்தது. கண்களில் வரத்துடித்த கண்ணீரை, ஆழமூச்செடுத்து கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘இனி, எதை நினைத்தும் அழக்கூடாது. முடிந்தவரையில், இந்த அத்தைக்குப் பாரமாக இருக்கக்கூடாது!’ என்று முடிவெடுத்துக்கொண்டு, அதன்படியே நடக்கவும் செய்தாள்.

கடவுள் தனக்காகத் திறந்திருக்கும் கதவின் வழியாக திட மனதுடன் நுழைந்தவளுக்கோ, அப்போது தெரியவில்லை, தான் எத்தனைப் பெரிய வேதனைகளையும், வலிகளையும் தாங்க வேண்டியிருக்கும் என்று .
 
  • Sad
Reactions: Rithi