உனைக் கண்டு உயிர்த்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
5​

பிழையற்ற கவிதை
நீ!
உன்னில் பிரிந்த ஓர்
வார்த்தை நான்!”

டெல்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்திறங்கி வழக்கமான விதிமுறைகளை முடித்துக்கொண்டு தன் உடைமைகளுடன் வெளியே வந்த விஷால், தன்னை அழைத்துக்கொள்ள வருவதாகச் சொல்லியிருந்த நண்பனுக்காகக் காத்திருந்த போது, “பூர்ணிமா...! ஹவ் ஆர் யூ?” என்று யாரோ அழைக்க, அந்தப் பெயர் அவனது கவனத்தைத் திசைதிருப்பியது.

‘பூர்ணிமா!’ அவன் நினைவுகளை ஆக்ரமித்தாள். அவனது இதயம் கனத்தது. ஆனால், பின்னோடு ஒலித்த பூர்ணிமாவின் குரலில் சட்டெனத் திரும்பியவனின் இதயமோ படபடத்தது.

அவளே தான். யாரைத் தொலைத்துவிட்டதாக நினைத்து உள்ளுக்குள் மருகிக் கொண்டிருக்கிறானோ, அதே பூர்ணிமா தான்! அவனது கண்ணெதிரில், பத்தடி தொலைவில் நின்றுகொண்டிருக்கிறாள்.

சந்தோஷமும் பிரம்மிப்பும் கலந்த பார்வையால் அவளை அளவிட்டான். அன்றிருந்த குழந்தைத்தனம் மாறி, திடமான பார்வை அவளது விழிகளில் நிறைந்திருந்தது.

அவளருகில் செல்ல யத்தனித்த போது, “ஹாய் விஷால்!” என்றபடியே தனது தோளில் கை போட்டவரை திரும்பிப் பார்த்தான். அவனது தொழில்முறை நண்பர்.

“ஹலோ!” தவிர்க்கமுடியாத சூழலில் சிக்கித் தவிக்கும்படியாக, அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பூர்ணிமா அவனிடமிருந்து தூர விலகிக்கொண்டிருந்தாள்.

அவசரஅவசரமாக அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஓடி வந்தபோது, பூர்ணிமாவின் கார் நகர்ந்திருந்தது.

“சே...!” என்று சலிப்புடன் தலையைக் கோதியவனின் தோளில் ஒரு கரம் பதிய, திரும்பினான். அங்கே அவன் எதிர்பார்த்த நண்பன் நின்றிருந்தான்.

“என்னடா! நான் எதிரில் வருவது கூடத் தெரியாமல், இந்த ஓட்டம் ஓடுற?”

“எரிச்சலைக் கிளப்பாதே... எல்லாம் உன்னால் தான்!” அவனைக் கண்டதும் சுறுசுறுவென ஏறிய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும், வார்த்தைகள் மட்டும் கடுமையுடன் வந்தன.
“நான் என்னடா செய்தேன்? ஜஸ்ட், பத்து நிமிடம் லேட். அதுக்கா, ரன்னிங் ரேஸ் ஓடின? அங்கே பார்… எல்லோரும் நம்மைத்தான் பார்க்கறாங்க. அது சரி, அந்தக் காரில் உனக்கு வேண்டியவங்க இருந்தாங்களா?”

திரும்பி நண்பனை முறைத்தவன், “இது, உனக்குச் சொன்னால் புரியாது. விட்டுடு! நான் போய் லக்கேஜ் எடுத்திட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றவனைப் புரியாமல் பார்த்தான்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எதுவும் அவனுக்குத் தெரியாதே. தெரிந்திருந்தால் புரியாமல் பார்த்திருப்பானா?

‘இத்தனை நாட்கள் எங்கே இருந்தாய் பூர்ணிமா? எப்படி இங்கே வந்தாய்? இப்போது எங்கே இருக்கிறாய்? அவளுடன் வந்தவர் யார்… அப்பா என்று தானே அழைத்தாள்? அவளது தந்தை சிறுவயதிலேயே இறந்துபோன விஷயம் நன்றாகத் தெரிந்தது. பிறகு இவர் யார்? தந்தை வயதில் இருக்கும் இவர் ஒருவேளை, அவளுடைய கணவனின் தந்தையாக இருக்குமோ?’

தன்னிடமே கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டவன், கடைசியாக எழுந்த ஐயத்திற்குத் தன்னையே திட்டிக்கொண்டான்.

‘அவள், அப்படி எளிதில் எல்லாவற்றையும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக அவளைப் பார்த்த தினம், நினைவிற்கு வந்தது. அன்று எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயத்தில் அழுதவளை, தனியாக விட்டுவிட்டு வந்திருக்கக் கூடாது என்று எப்போதும் போல நினைத்துக்கொண்டான். அப்படி விடாமல் இருந்திருந்தால்...’ என்று நினைத்தவனுக்குத் தலை வலிக்க, நெற்றியைப் பிடித்துக்கொண்டான்.

காரை ஓரமாக நிறுத்திய அவனது நண்பன், “விஷால்! என்னடா ஆச்சு உனக்கு? என்கிட்டச் சொல்லக்கூடாதா?” என்று ஆதூரத்துடன் கேட்டான்.

“ப்ளீஸ்டா! என்னை எதுவும் கேட்காதே. இப்போதைக்கு உன்னிடம் எந்த விஷயத்தையும் சொல்ல முடியாத நிலைல இருக்கேன். சாரி...” எனவும், நண்பனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவனாக, ஆறுதலாகத் தோளைத் தட்டிக்கொடுத்தான்.

காரைப் பார்க்கிங்கில் விட்டுவிட்டு வரும்போது, தன்னைத் தாண்டி ஓடிய விஷாலையும், அவனது பார்வை சென்ற இலக்கையும் பார்த்திருந்தான். ஒரு நடுத்தர வயதானவரும், ஒரு பெண்ணும் காரில் ஏறிக்கொண்டிருந்தனர். ‘ஒருவேளை, அந்தப் பெண்ணும் விஷாலும்... ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்று அவனது மனம் வேகமாகக் கணக்குப் போட்டது.

திரும்பிப் பார்த்தான். முகத்தில் சிந்தனை ரேகையுடன், கண்களை மூடி நண்பன் அமர்ந்திருந்த காட்சி வேதனையைக் கொடுத்தது. தொலைவில் பார்த்த அந்தப் பெண்ணின் முகத்தை நினைவில் கொண்டுவர முயற்சித்தான் அவன். ஏனோ, நினைவில் வராமல் ஏமாற்றினாள்அவள்.

‘ஒருவேளை, மீண்டும் பார்த்தால் நினைவிற்கு வருமோ!’ என்று தன்னையே கேட்டுக்கொண்டான்.
 
  • Love
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
6

உன்னிடமிருந்து எனக்கான
அழைப்பு வரக்கூடும்.
உன் திசை நோக்கி
நகர்கிறது, என்
மொத்தப் பிரியமும்!

சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய பொருட்களையும், விலையையும் கூட்டிச் சரிபார்த்துவிட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டு, “மாதவேட்டா! ஈ சாதனங்கள எடுக்கனே, ஞான் இப்போ வரேன்” என்றவள், இன்னும் பத்து நாளில் வரவிருக்கும் பரசுராமன் - வதனாவின் இருபத்தி மூன்றாவது திருமண நாளுக்குப் ஏதேனும் பரிசளிக்க, கிஃப்ட் ஐட்டம் இருந்த இடத்தை நோக்கிச் சென்றாள்.

ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக்கொண்டே வந்தாள். தன் சிறுகுஞ்சை, மரக்கிளையில் அமர்ந்து இரண்டு ஜோடிப் புறாக்கள் பாசத்துடன் பார்ப்பது போலிருந்த கிறிஸ்டல் பொம்மையின் கலைநயம் கவரவும், அதைக் கையிலெடுத்தாள்.

யாரோ தன்னை உற்று நோக்குவதுபோல் தோன்ற, சட்டெனத் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளைத் தவிர அங்கே யாரும் இல்லாமல் இருக்க, ‘தன்னுடைய மனப்பிரமையோ’ என்று எண்ணிக்கொண்டே திரும்பினாள்.

அப்போது, ஷெல்பின் மறுபக்கம் அசைவு தெரிய, நிமிர்ந்து பார்த்தவள் ஸ்தம்பித்து நின்றாள். அவளது அடிமனத்தில் ஒளித்து வைத்திருந்த நினைவுகளெல்லாம், அவளது உத்தரவை எதிர்பார்க்காமல் சட்டென்று மேலெழுந்தது.

அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்த விஷால், “எப்படியிருக்க பூர்ணிமா?” என்று புன்னகையுடன் கேட்டதும், அவளையும் அறியாமல் இதழ்க்கடையோரம் லேசான முறுவல் தோன்றிய அடுத்த வினாடியே, அவளது முகம் வெறுப்பை உமிழ்ந்தது.

மெல்ல இரண்டடி பின்னால் நகர்ந்தவளின் மூளை, ‘இங்கே நிற்காமல், உடனே சென்றுவிடு!’ என்று எச்சரித்தது. கோபத்தில் நடுங்கிய உடலைக் கண்களை மூடி ஸ்திரப்படுத்திக் கொண்டு, அவனைத் தாண்டிச் செல்ல முயன்றவளைக் கை நீட்டித் தடுத்தான்.

சுற்றும்முற்றும் பார்த்தவள், “வழியை விடுங்க!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.

“நான் கேட்டதுக்கு… பதிலே சொல்லலையே?”

“கண்டவங்களுக்கும் பதில் சொல்லணும்ங்கற அவசியம், எனக்கு இல்லை!” என்றாள் கடுமையாக.

“உன் கோபம் எனக்குப் புரியுது. ஆனால், அதில் நியாயமே இல்லை...” என்றான் நிதானமாக.

ஆத்திரத்துடன், “உங்க புராணத்தைக் கேட்க எனக்கு நேரமில்லை. நான் இன்னும் பழைய பூர்ணிமா இல்லை, உங்களுக்குப் பயந்து ஓடிஒளிய. நான் ஒதுங்கிப் போகும் வரைக்கும்தான் உங்களுக்கு மரியாதை!” என்றவள், அவனைத் தாண்டிக்கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

காரில் மாதவனைக் காணாமல் சுற்றும் முற்றும் பார்க்க, சாலையின் எதிர்ப்புறமிருந்து அவர் ஓடிவருவது தெரிந்தது.

‘விஷால் தன்னைப் பின்தொடர்ந்து வருவானோ!’ என்ற பதட்டத்தில் அவரிடம், “மதவேட்டா! எவிட போயி? நிங்களோடு ஞான் காரில் இருக்காம் பரஞ்சிலே” என்று எரிந்து விழுந்தாள்.
காரில் அமர்ந்தபடி, “அறியுன்னயாள் கண்டு, சம்சாரிக்கான் போயி” என்றார் தன்மையாக.

அவரின் நிதானமான பதில், அவளுக்குச் சங்கடமாக இருந்தது. “சாரி சேட்டா! போவாம்” என்றாள்.
கார் கிளம்பிய நேரத்தில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த பணியாள் ஒருவன் காரை நோக்கி கைகாட்டியபடி ஓடிவந்தான்.

“மேடம்! இது நிங்களதல்லே... நீங்களுடே பாகினின்னு தாழே வீனுபோய். ஆ சார் தராம் பரஞ்சு” என்று கற்றையாக மடித்து வைத்திருந்த பேப்பரை அவளிடம் நீட்டினான்.

இதற்குக் காரணமானவனை நினைத்ததும் உள்ளுக்குள் ஆத்திரம் மண்டினாலும், மற்றவர் எதிரில் எதையும் வெளிப்படுத்திக் கொள்ள விருப்பமில்லாமல், “தேங்க்ஸ்!” என்று வாங்கிக் கைப்பையில் வைக்கும்போதே, அது என்ன என்று அவளுக்குத் தெரிந்தது.

விசிட்டிங் கார்டின் வழுவழுப்பிலும், தோற்றத்திலேயுமே அவனது செழுமை தெரிந்தது. ‘பணமிருந்து என்ன ப்ரயோஜனம்?’ என்று நினைக்கும்போதே, கார் சாலைக்கு வந்துவிட்டது.

விஷால் வாசலில் நின்று தன்னைப் பார்ப்பது காரின் ரியர்வியூ வழியாகத் தெரிய, அவளது முகம் கோபத்தில் சிவந்தது.

‘எத்தனைத் தைரியம் இருந்தால், இதைத் தன்னிடம் கொடுப்பான்? இவனுக்குப் போன் செய்வேன் என்று எண்ணமா?’ என்று எண்ணியவளுக்கு ஆத்திரமாக வந்தது.

காரை நிறுத்திய மாதவன், “எந்த மோளே, எந்தப் பிரஷ்ணம்?” என்று அனுசரணையாக விசாரித்தார்.

‘தான் இருக்கும் மனநிலைக்கு, எந்த அனுசரணையான பேச்சும் கூடாது. இப்படி உன்னை நீயே காட்டிக் கொடுத்துக்காதே!’ என்று எச்சரித்துக்கொண்டு, சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள்.

“ப்ரஷ்ணம் ஒண்ணுமில்ல சேட்டா! போகாம்” என்று சொல்ல, மாதவனும் அவளைத் தோண்டித் துருவாமல் சாலையில் கவனத்தைச் செலுத்தினார்.

தன் அறைக்கு வந்தவள் விஷால் கொடுத்த கார்டிலிருந்த நம்பரை அழைத்தாள்.

மறுமுனையில் இருந்தவனை ‘ஹலோ’ என்று சொல்லக்கூட நேரம் கொடுக்காமல், “மிஸ்டர். விஷால்! உங்க மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

“தேங்க் காட்! எங்கே நீ போன் பண்ணாமலேயே இருந்திடுவியோன்னு நினைத்தேன்” என்றவனது குரலில், பெருத்த நிம்மதி தெரிந்தது.

“நான் என் வழியைப் பார்த்துப் போய்க்கிட்டிருக்கேன். என்னை ஆட்டிவைக்கிறதுல, உங்களுக்கு என்ன சந்தோஷம்?” என்றாள் காட்டத்துடன்.

“பூர்ணிமா! நீ வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. என் மனசுல என்ன நினைச்சிட்டிருக்கேன்னு கேட்குற நீ, அதைச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் மட்டும் கொடுக்க மறுக்கறியே?” என்றான் ஆற்றாமையுடன்.

“உங்களுக்கு அப்படித்தான் தோணும். தினம் தினம் என் மனசோடு நான் போராடிக்கிட்டிருக்கறது, எனக்கு மட்டும்தான் தெரியும். போதும்… இனியும், யாரிடமும் என்னால போராட முடியாது. இப்போகூட இனி என்னைத் தொல்லைச் செய்யாதீங்கன்னு சொல்லத் தான் போன் செய்தேன்!” என்றாள் எரிச்சலும், கோபமுமாக.

“நான் நினைச்சா… ரெண்டே மணிநேரத்துல, நீ இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சி… உன் முன்னால் வந்து நிற்க முடியும். ஆனால், அதனால உன் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதேன்னு தான், உன்னைத் தேடி வராமல் இருக்கேன்” என்றான் உறுதியான குரலில்.

கிண்டலாகச் சிரித்தவள், “அடடா! என்ன கரிசனம் சார் உங்களுக்கு? என் வாழ்க்கைக்காக இவ்ளோ யோசிக்கறீங்க. ஆனால், இதே யோசனை, அன்னைக்கு ஏன் உங்களுக்கு வரலை? ஒட்டுமொத்தக் குடும்பமும் சேர்ந்துதானே என் வாழ்க்கையை அழிக்கப் பார்த்தீங்க! பேசுங்க சார்... இப்போ சொல்லுங்க உங்க பதிலை. உங்களால நிச்சயமா சொல்ல முடியாது.

இன்னைக்குத் தைரியமா உங்க கார்டை என்னிடம் கொடுத்த நீங்க, நாளைக்கே என் வீட்டைக் கண்டுபிடித்து வர ரொம்ப நேரம் ஆகாதுன்னும் தெரியும். ஆனா, நான் அதை விரும்பல. இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு, என் வாழ்க்கையில் நடந்த எதுவுமே தெரியாது. மறைச்சிட்டேன்னு நினைக்காதீங்க, அதெல்லாம் மறக்கவேண்டிய கெட்டக் கனவுன்னு… சொல்லாம விட்டுட்டேன்.

இனியும், என்கிட்டப் பேசவோ, என்னை எந்தவிதத்திலும் தொல்லை செய்யவோ முயற்சி செய்யவேணாம்! இந்த வீட்ல, எல்லோரும் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க. அதைப் பாழாக்கிடாதீங்க” என்று உறுதியான குரலில் சொன்னாள்.

“என்னைத் தவறா புரிஞ்சிகிட்டிருக்க பூர்ணிமா! என் பக்க நியாயத்தைச் சொல்ல, ஒரே ஒரு சந்தர்ப்பம் தானே கேட்கறேன்? ஒரே ஒருமுறை, எனக்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்கிக்கொடு. அதுக்கப்பறம், நீ இருக்குற பக்கமே வரமாட்டேன்...” என்றான் கெஞ்சலாக.

“வேண்டாம். எதுவும் எனக்குத் தெரியவேண்டாம். ஒண்ணை மட்டும் நல்லாப் புரிஞ்சிக்குங்க, எந்த உறவையும் நான் புதுப்பிச்சிக்கவோ, எனக்காக நீதி கேட்கவோ வரல. இன்னும் கொஞ்சம் நாள், இங்கே இருக்கும் நாள்வரை… நான், நானாக இருந்துட்டுப் போயிடுறேன். இன்னொரு முறை என்னிடம் பேச முயற்சிக்காதீங்க! நான் எல்லாவற்றையும் மறந்துட்டேன்...! மறந்துட்டேன்...! மறந்துட்டேன்!” என்று உரக்கப் பேசியவளுக்கு மூச்சிரைத்தது.

விஷாலுக்கு வெறுத்துவிட்டது. ‘தான் ஏன் இவளிடம் கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டும்?’ என்ற ஆணவம் தலைதூக்கியது. அதேநேரத்தில், நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று தொண்டைக் கிழியக் கத்தினாலும், தான் எதையும் மறக்கவில்லை என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதை எண்ணிச் சிரித்துக் கொண்டான்.

‘ஒரு நாள், நீ நிச்சயம் என்னைத் தேடி வருவாய். அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்!’ என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டான்.

அன்றைய தினம், ஒருவிதமான போராட்டத்திலேயே கழிந்தது அவளுக்கு. விஷால் கொடுத்த அதிர்ச்சியில், வதனா வழக்கம் போல வீசிய வார்த்தை ஈட்டிகள் கூட, அவளது கவனத்தில் நிற்கவில்லை.

தான் மட்டும் கத்திக்கொண்டிருக்க, எப்போதும் அமைதியாகத் தலைகுனிந்து நிற்பவள், இன்று அதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல், தன் வேலையில் கவனமாக இருந்ததைப் பார்த்தவருக்கு, இரத்த அழுத்தம் எகிறியது தான் மிச்சம்.

இரவு படுத்தவளுக்கு, ‘வருவேனா!’ என்று தூக்கம் போக்குக் காட்டியது. மனத்தில் அழுத்திக் கொண்டிருந்த நினைவுகளெல்லாம் கட்டவிழ்த்துக்கொண்டு வெளிவரட்டுமா என்று துடித்துக் கொண்டிருக்க, அதை அடக்கிக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க, தன் மனத்தை ஒருங்கிணைத்து தியானத்தில் அமர்ந்தாள். முரண்டு பிடித்த மனம், மெல்ல நிதானத்திற்கு வந்தது.

அடுத்துவந்த இரண்டு மூன்று நாட்கள், எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்தன.

‘மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதுபோல் அல்லவா, அவனைத் தவிர்ப்பதாக நினைத்து, வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அடைந்து கிடக்கிறேன். செகந்திராபாத்தில் இருந்தவரை எத்தனை வேலையிருந்தாலும் மாலையில் செல்லும் நடைபயிற்சிக்குக் கூட, இங்கே வந்ததிலிருந்து செல்வதே இல்லை. இனி, இப்படி இருக்கக்கூடாது. இன்றே செல்லவேண்டும்!’ என்ற முடிவுடன் வதனாவின் எதிரில் சென்று நின்றாள்.

மெல்லிய குரலில், “மேடம்...” என்று அழைத்தாள்.

புத்தகத்தை விலக்கி, ‘என்ன?’ என்று பார்வையாலேயே விசாரித்தார் வதனா.

“நான் வாக்கிங் போய்விட்டு வரும்போது, அப்படியே மாதவன் அண்ணன் வீட்டுக்குப் போய் வரட்டுமா?” எனக் கேட்டாள்.

“இப்போ என்ன, அவங்க வீட்டுக்குப் போகவேண்டிய வேலை? வேலைக்காரங்க எல்லாம் சேர்ந்து யூனியன் ஆரம்பிக்கப் போறீங்களா?” என்று கேலியாகக் கேட்டார்.

“இல்ல... அண்ணன், வீட்டுக்குக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாங்க.” என்ன சொன்னாலும், நிச்சயம் ஏதேனும் ஒரு சொல்லடி கேட்க வேண்டியிருக்கும் என்ற தயக்கத்துடன் சொன்னாள்.

“சரிசரி. போய்ட்டு சீக்கிரம் வந்திடு. நிறைய வேலையிருக்கு” என்றதும், சரியெனத் தலையசைத்தாள்.

வீட்டிலிருந்து பதினைந்து நிமிட நடையில் மாதவன் சொல்லியிருந்த அடையாளங்களை வைத்து, வீட்டைக் கண்டுபிடித்து சென்றாள்.

“வாம்மா! ராஜி… யார் வந்திருக்காங்கன்னு பாரேன்?” என்று உள்ளறையிலிருந்த மனைவியை அழைத்தார். “நான் சொன்னேன் இல்ல, பூர்ணிமா… இவங்கதான்” என்று அறிமுகப்படுத்தினார்.

“வணக்கம் அண்ணி!” என்று முறைவைத்து அழைத்தவளைப் பார்த்ததும், ராஜிக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“வரு... இவிடே இருக்கு... முன்பே பரஞ்சிட்டுண்டேங்கில், எதேன்கிலும் உண்டாக்கிட் டுண்டாவும்” என்றபடி, அங்கிருந்த நீள பெஞ்சில் தன் பக்கத்தில் அமரவைத்துக் கொண்டார்.

“குழப்பமில்ல, இன்னொடு திவசம் வரட்டே.”

“இருக்கு…” என்றவர் உள்ளே செல்ல, அறைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த குழந்தைகள் இருவரையும் அழைத்தாள்.

வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே அருகில் வந்தவர்களை, தங்களருகில் அமரவைத்துக்கொண்டு, வாங்கி வந்தவற்றை அவர்களிடம் கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்தாள்.

“எந்துன இதெல்லம் மேடிச்சது...? இவிடே வரான் இதெல்லாம் ஆவஷ்யமில்லல்லோ!” என்ற ராஜி, பலநாள் பழகியவள்போல இயல்பாகப் பழகியது, மனத்திற்கு நிறைவாக இருந்தது.

ஒவ்வொரு நிமிடத்தையும் இறுக்கத்துடனும், ‘எந்த நேரத்தில் என்ன பேச்சைக் கேட்க நேரிடுமோ?’ என்ற பயத்துடனும் மேகாவின் வீட்டில் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பவளுக்கு, ராஜியுடன் வெளிப்படையான பேச்சும், சிரிப்புமாக இருப்பது, ஒருவிதப் புதுவிதமான அனுபவமாகவே இருந்தது.

“சேச்சி... சேச்சி!” என்று இரு குழந்தைகளும் அவளைச் சுற்றிவந்து பேச, அந்தப் புதுமையான சூழல், அவளுக்குக் குதூகலத்தைக் கொடுத்தது.

நேரமாகிறது கிளம்புகிறேன் என்றவளிடம் செல்லம் கொஞ்சி, ‘இன்னும் கொஞ்ச நேரம்’ என்று பிரியத்துடன் கைகளைப் பிடித்துக்கொண்டு இருக்க வைத்தனர். பாசப்பறவைகளிடம் சிறைப்பட்டிருப்பது ஒருவிதமான களிப்பையே கொடுக்க அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டாள் பூர்ணிமா.

“யாரெங்கிலும் வருதுண்டோ... ஞான் பீச் போனுண்டு” எனக் கேட்டதும், “ஞான்.. ஞான்...” என்று இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு தயாராகினர்.

“ஒகே...அரைமணிக்கூறு களிக்காம். பின்னே, எனக்குப் போகான் சமயமாயி...” என்று அவள் ஒப்பந்தம் போட, பீச்சிற்குச் செல்லும் குஷியில் இருவரும் சம்மதித்தனர்.

“சாரமில்ல பிள்ளாரயள்ளே... சமயமாயி போய்க்கோ… இல்லெங்கில் வீட்டில் எதேங்கிலும் பறையும்.”

“புதிதாய்யிட்டு அல்லல்லோ.. பரஞ்ஜோட்டே.. பிள்ளாரைகேண்டி மேடிக்காம். அம்மு, சின்னு போவாம்... அச்சன் அம்மையோடு பரஞ்சோ.”

ராஜி, குழந்தைகள் இருவருக்கும் சொன்னதையே திரும்பச் சொல்லி அவளுடன் அனுப்பிவைத்தனர்.

வெண்ணிற மணற்பரப்பில் வந்து நின்றவள், ஆர்பரித்த நீலக்கடலை ஆழ்ந்து பார்த்தாள். முழுதாக ஏழு ஆண்டுகள் ஆனபோதும் சுனாமியின் கோரத்தாண்டவம் நினைவுக்கு வர, அவளது உடல் ஒருமுறை குலுங்கி நின்றது.

‘அழகென்றால் ஆபத்து தானா? இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் சுனாமியின் தாக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. உன் அலைக்கரங்களால் பாதம் தழுவி முத்தமிட்ட உன்னை ஆசையுடன் பார்த்த நாட்கள் கனவாகி…, பயத்துடன் பார்ப்பது தான் அதிகமாகிவிட்டது’ என்று தன்னுடைய பாதங்களை நனைத்த அலைகளுடன் மானசீகமாக அளவளாவிக் கொண்டே கரையோரமாக நின்றுக் கொண்டிருந்தாள்.

“எந்தா ஆலோச்சிகுன்னுண்டு.. வெள்ளதிலேக்குப் போகாம்…” என்று ஆர்வத்துடன் கேட்டாள்
அம்மு.

“இவ்விட நிக்காம், உள்ளோட்டு போகேண்டாம். ரெண்டாளும் எண்டே கையைப் பிடிக்கனே” என்று அவாள் கூறா, “சரி...” என்ற கூச்சலுடன் அவளது கரத்தைப் பற்றிக்கொண்டனர்.

பௌர்ணமி நேரம் அலை சற்று அதிகமாக இருக்கவே, மூவரும் கரங்களைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு ஓடிச்சென்று அலையில் நின்றனர்.

அலையில் நின்ற கொண்டாட்டத்தில் சின்னு தன் கரத்தை அவள் பிடியிலிருந்து இழுத்துக்கொண்டு கடலை நோக்கி ஓட, பூர்ணிமா ஓடிச்சென்று அவனைப் பிடித்துத் தூக்கி வருவதுமாக உருண்டுபிரண்டு உடுப்புகள் நனைய ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

“மதி மதி. இங்கனே நடந்து வீட்டுக்குப் போகாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தவளின் கால் திடீரெனக் கூச, அனிச்சையாகப் பின்னால் நகர்ந்தவள் குனிந்து பார்த்தாள்.

சிறுசிறு நண்டுகள் குடுகுடுவென தன் வலைக்குள் செல்வதும் வெளியே அலையை நோக்கி ஓடுவதையும் கண்டவள், “ஹய்...! நண்டு...” என்று சுவாரஸ்யமாகப் பார்த்தாள்.

ஒடிய ஒரு நண்டை சட்டெனப் பிடித்த சின்னு அவளது முகத்தருகில் கொண்டுவர, “ஹேய்...! கீழே விடுடா... கையைப் பிடிச்சிக்கப்போகுது” என்று அவள் சப்தமிட சின்னு சிரித்துக்கொண்டே, “செய்யுல்லா, ஞான் எத்தரதரம் பிடிச்சிட்டுண்டு” என்று வீரமாகப் பேசினான்.

“எங்கன பிடிக்கனு இவ்விடேயுள்ள மீன் பிடிக்கிறான் செல்லுன ஆட்கள் பரஞ்சி தந்துட்டுண்டு” என்று பின்பாட்டுப் பாட, பூர்ணிமா அவனருகில் வந்து ஆர்வமாகப் பார்த்தாள்.

“எவ்வளவு அழகா இருக்கு இல்ல, வெள்ளை, நீலம், ஆரஞ்சு, எத்தனைக் கலரில்...” என்று விழிகள் மின்னப் பார்த்தவள் நிமிர்ந்து நிற்க, அங்கே கண்ட காட்சியில் இலயித்துப் போனாள்.

சூரியக் குழந்தை தன் கடைக்கண் பார்வையை அவர்கள் மீது செலுத்திவிட்டுக் கடலன்னையின் மடியில் முகம் புதைத்துக்கொள்வதைக் கண்டதும், “டாட்டா...” என்ற குழந்தைகளுடன் சேர்ந்து அவளும் விடைகொடுத்தாள்.

இவர்களது அத்தனை ஆட்டம்பாட்டத்தையும், குழந்தைகளுடன் குழந்தையாக மாறி குதூகலமாக இருந்தவளை, படகு ஒன்றின் மறைவிலிருந்து உதடுகளில் உறைந்த புன்னகையுடன் அவளைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

இது எதையும் அறியாதவளாக, குழந்தைகளுடன் வீட்டை நோக்கி நடந்தாள் பூர்ணிமா.
ஒருவேளை பார்த்திருந்தால்!
 
  • Love
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
7

வழிமறந்த பறவையானேன்
திசை மாறி நீ
சென்றதால்.

“இங்கே பாரு நான் சொல்றதைக் கேட்கப்போறியா இல்லயா?” தன் பொறுமையின் கடைசிப் படியில் நின்றிருந்த வதனா, மகளிடம் முடிவாக கேட்டார்.

அன்னையின் குரலிலிருந்த இழுத்துப் பிடித்த பொறுமை மேகாவுக்குச் சிரிப்பை வரவழைத்தது. “முடியாதுன்னா முடியாது!” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தாள்.

மகளின் பதிலில் கோபமடைந்த வதனா, முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார்.

“எல்லாம் உங்க அப்பா கொடுக்கும் இடம். பொம்பளைப் பிள்ளையை ரொம்பப் படிக்க வைக்காதீங்கன்னு சொன்னேன் கேட்டா தானே. இன்னைக்கு என்னையே எதிர்த்துப் பேசற. நாங்க என்ன நீ கெட்டுப்போகணும்னா சொல்றோம்? எங்களுக்கு நீ ஒரே பொண்ணு. உன்னை அவ்வளவு தூரம் அனுப்பிட்டு, நான் எப்படி நிம்மதியாக இருப்பது?”

“ஏன்மா இப்படிப் புலம்பற? அப்பா இல்லை... நான் கேட்டதும், சரின்னு சொல்லிட்டார். நீதான் இப்படி அழுது ஒப்பாரி வைக்கிற” என்றாள் எரிச்சலுடன்.

“ஆமாம்டீ. உங்க அப்பா கேஸ் கட்டும், கோர்ட்டுமே கதின்னு காலத்தை ஓட்டுவார். நான் அப்படியா? ஒத்தப் பொண்ணு உன்னைக் கண்காணாமல் அனுப்பிட்டு நான் கிருஷ்ணா ராமான்னு கோவில் குளத்தைத் தான் சுத்தி வரணும். எதையும் பார்க்காமலேயே பிடிக்கல வேணாம்ன்னு சொல்லிட்டிருந்தா என்ன அர்த்தம்?” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த அன்னையைப் பார்த்தவளுக்கு, சலிப்பு தான் வந்தது.

“ஏன் பூர்ணிமா இருக்காயில்ல… அவளைக் கொஞ்சு!” என்றாள் வெடுக்கென.

“வாயை மூடுடி. அவ என்ன நான் பெத்தப் பொண்ணா?” என்ற வதனாவின் முகம் சுருங்கியது.

“மெதுவா பேசும்மா! அவள் சமையலறையில தான் இருக்கா. நீ ஏன்மா இப்படியிருக்க? அவள் உன்னையும், அப்பாவையும் எப்படி பார்த்துக்கறா?”

“மேகா போதும்...”

”உன்னை மாத்தவே முடியாதும்மா!”

“நான் யாருக்காகவும், எதுக்காகவும் மாற மாட்டேன். நீ விஷயத்தை மாத்தாம பேசு.”

“நானும் உன்னை மாதிரிதான். யாருக்காகவும் எதுக்காகவும் மாறமாட்டேன். என்னோட முடிவுல நான் உறுதியா இருக்கேன். நான் படிக்கணும். அதுக்காகப் பாரின் போகத்தான் போறேன்” என்றவள் சமையலறைக்குச் சென்றாள்.

“மேகா... பஜ்ஜி போடப்போறேன், உனக்கு வெங்காய பஜ்ஜி போடட்டுமா?” என்று கேட்ட பூர்ணிமாவின் தோளைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினாள்.

“என்ன இன்னிக்குத் தான் புதுசாகப் பார்ப்பது போலப் பார்க்கிற” என்று புன்னகைத்தவளை பார்த்த மேகா, “பூர்ணிமா... அம்மா பேசினதைப் பெரிசா எடுத்துக்காதே...” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

தோளிலிருந்த கைகளை எடுத்துவிட்டவள், “அவங்க என்னைப் பொண்ணா நினைக்கலைனாலும், அவங்க எனக்கும் அம்மாதான். அம்மா திட்டினா யாராவது கோபிச்சிப்பாங்களா என்ன?” என்றாள் மென்குரலில்.

“ஆனா உனக்கு வருத்தமாக இருக்கும் இல்ல...” என்றவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல், விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர ஆரம்பித்தாள்.

“நீ போ. நான் உனக்குக் கொண்டு வரேன்” என்று பேச்சை மாற்றினாள்.

சிறிதுநேரம் நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்த மேகா அமைதியாக அங்கிருந்து வெளியேறினாள். அவள் நகர்ந்ததும் பூர்ணிமாவின் மனப்பாரம் தாங்காமல் கண்ணீர் இமைகளை நனைத்தது.

“ஹே... மேகா டியர், முகம் ஏன் வாடி இருக்கு?” பாசத்துடன் கேட்டு மகளின் தோளில் தட்டிக்கொடுத்தார் டைனிங் ஹாலில் நின்றிருந்த பரசுராமன்.

“ஒண்ணுமில்லைப்பா...”

“ஓகே..., நாம கொல்லம் வந்து ஒரு மாதம் ஆகப்போகுது. எங்கேயாவது வெளியே போய் வரலாமா? நாளன்னைக்கு அப்பா ஒரு வேலையாக திருவனந்தபுரம் போறேன். நீ, அம்மா, பூர்ணிமா மூணு பேரும் வாங்க. நானும், பூர்ணிமாவும் மீட்டிங்குக்குப் போறோம், நீயும், அம்மாவும் திருவனந்தபுரம் கோவிலுக்குப் போய்ட்டு வாங்க” என்றார்.

“சாரிப்பா! நாளன்னைக்கு எனக்கு ஆன்லைன் இண்டர்வியூ இருக்கு.”

“ஓகே... யூ கேரி ஆன். வதனா நீ?” என்று கேள்வியுடன் மனைவியைப் பார்த்தார்.

ஏற்கெனவே கோபத்தில் இருந்தவர், மகள் மேற்படிப்பிற்கான இண்டர்வியூ இருக்கிறது என்று சொன்னதற்கு மறு பேச்சில்லாமல் சரி என்ற கணவரின் மேல் ஆத்திரமாக வந்தது.

“வேண்டாம் சாமி! நான் வரல. உங்க மீட்டிங்குக்கு நீங்களே போங்க. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தத் தொல்லையெல்லாம் இருக்கோ. காலாகாலத்துல பொண்ணுக்குக் கல்யாணம் செய்யணும்னு கொஞ்சமாவது எண்ணமிருக்கா? அவள் சொல்றதைக் கேட்டுக்கிட்டு ஆடத்தான் உங்களுக்கு நேரமிருக்கு. எப்படியாவது போய்த் தொலைங்க” என்று ஆத்திரத்துடன் பேசியவர், கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

சுடச்சுட மாலைச் சிற்றுண்டியுடன் வந்த பூர்ணிமா ஆளுக்கொருபுறம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு நவக்கிரகம் போல அமர்ந்திருப்பதை வேதனையுடன் பார்த்தாள்.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
8

நீ ஒதுக்கிச் சென்றபோதும்,
உன் தீர்க்க முடியா காதல்…
தீர்ந்த புள்ளியாகவே,
என் ஒற்றை நிலை!

“வதனா கிளம்பட்டுமா?”

“ம்ம், பத்திரம். ஆல் த பெஸ்ட்!” என்றபடி கணவரின் சஃபாரி சூட்டில், ரோஜாப்பூ ஒன்றை அலங்காரமாகச் சொருகினார் வதனா.

இரண்டு நாட்களாக முகம் கொடுத்துப் பேசாத மனைவி, இன்று புன்னகையுடன் வாழ்த்தியது சற்று ஆறுதலாக இருந்தது பரசுராமனுக்கு.

“தேங்க்யூ!” எனப் புன்னகையுடன் சொன்னவர் மகளிடம், “இண்டர்வியூ நல்லா பண்ணு கண்ணா!” என்று நெற்றியில் முத்தமிட்டு விட்டுச் செல்ல, அதைக் கேட்டும் சிரித்த முகமாகக் கையசைத்து விடைகொடுக்கும் அன்னையைப் புரியாமல் பார்த்தாள் மேகா.

குளுகுளுவென வீசிய வாடைக் காற்று உடலை நடுக்கியபோதும், காலை நேர இனிமையை மறுக்க மனமில்லாமல், காரின் கண்ணாடியைப் பாதி இறக்கிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.

முதல் நாள் இரவு பெய்த மழையில் மரங்களெல்லாம் கழுவிவிட்டது போலப் பசுமையுடன் தலையாட்டிக்கொண்டிருந்தன.

பின் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்த பரசுராமனைத் திரும்பிப் பார்த்தாள். அவர் நெற்றியில் சிந்தனைக் கோடுகள். ஆறாண்டுகளாகப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள், அந்த வீட்டின் அமர்க்களங்களையெல்லாம். ஆனால், இத்தனை நாளாக பரசுராமனை அவள் இப்படிச் சிந்தனையுடன் பார்த்ததில்லை.

மேகா! எல்லாவற்றிலும் கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பவள் தான். ஆனால், மனத்தில் எதையும் வைத்துக் கொள்பவள் அல்ல. அவளை நினைக்கும்போது சில சமயங்களில் சிரிப்புத்தான் வரும். அப்படித் தானே, இந்த ஊருக்கு வரமாட்டேன் என்று வானத்துக்கும், பூமிக்கும் குதியாகக் குதித்தாள்.

‘இந்தப் பட்டிக்காட்டுக்கு நான் வரமாட்டேன்’ என்று குதித்தவளை, ‘இதை அந்த ஊர் ஆட்கள் கேட்டால், உன் தலையிலேயே இரண்டு போடுவார்கள்’ என்று புன்னகையுடன் சொன்னவள், “அப்பா அம்மாவுக்காகக் கொஞ்ச நாளைக்கு… நீ படிக்க வெளிநாடு போகும்வரை தானே” என்று அந்த நேரத்திற்கு அவளைச் சம்மதிக்க வைக்கச் சொன்னதை, இன்னும் அவள் தன் அன்னையிடம், ‘இது பூர்ணிமாவின் யோசனை’ என்று சொல்லாமல் இருப்பதே பெரிய விஷயம்தான்.

‘தெரிந்திருந்தால்... தான் இத்தனை ஒய்யாரமாக காரில் சாய்ந்து கொண்டு, ஊர்வலம் வரமுடியுமா?’ என்று நினைத்தவள் தன்னையும் மீறிச் சற்று உரக்கவே சிரித்தாள்.

காரைச் செலுத்திக்கொண்டிருந்த மாதவன், திரும்பிப் பார்த்துவிட்டுச் சாலையில் கவனத்தைச் செலுத்த, தன் சிந்தனைகளிலிருந்து விடுபட்ட பரசுராமனும், “என்னம்மா! எங்களுக்கும் அந்த ஜோக்கைச் சொன்னால், நாங்களும் சேர்ந்து சிரிப்போம் இல்லையா?” என்றார் முறுவலுடன்.

“அ..அது..ப்பா..., வந்து... மேகா இங்கே வர என்ன அமர்க்களம் செய்தான்னு நினைச்சிகிட்டேன். சாரிப்பா!”

“கூடவே, நீ அவளைப் ப்ரெயின் வாஷ் பண்றதுக்காகச் சொன்ன விஷயத்தை இன்னும் அவ அம்மாகிட்டச் சொல்லாமல் இருப்பதையும் நினைச்சிகிட்டியா?” எனச் சொல்லி விட்டு உரக்கச் சிரிக்க, அவள் சங்கடத்துடன் அவரைப் பார்த்தாள்.

“அது...”

“இதுக்கா இவ்வளவு தயக்கம்?” என்று புன்னகைத்தவர், சற்றுநேரம் கலகலப்பாகப் பேசி மற்ற இருவரையும் சிரிக்க வைத்தார். தான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்க, பூர்ணிமாவும் ப்ரீஃப்கேசுடன் இறங்கினாள்.

“நீ எங்கே இறங்குற?” எனக் கேட்டார்.

இதென்ன கேள்வி என்பது போல பார்த்தவள், “மீட்டிங்...” என்றாள்.

“அதுக்குத் தான் நான் போகிறேனே” என்றவர் தன் பர்ஸிலிருந்து கத்தையாகப் பணத்தை எடுத்து அவளிடம் கொடுக்க, கேள்வியுடன் பார்த்தாள்.

புரியாமல் பார்த்தவளிடம், “நீ வீட்டிலேயே அடைஞ்சி இருக்கியேன்னு தான் உன்னை என்னோட கூட்டிட்டு வந்தேன்” என்றார் இலகுவாக.

“நீங்க கூட்டிட்டு வந்ததுக்குச் சந்தோஷம். ஆனால், இதெல்லாம் வேண்டாம்ப்பா! நீங்க, எனக்கு எந்தத் தேவையையும் வைக்கல. அதுக்கும் மேலே மேடமுக்குத் தெரியாம நான் எதையும் செய்யமாட்டேன்” என்றாள் உறுதியாக.

“இது நிறைவான உன் மனசைக் காட்டுதும்மா. நீ என் பொண்ணு மாதிரின்னு சொன்னாலும், மேகாவுக்குச் செய்யும் எல்லாத்தையும் உனக்கும், என்னால் செய்யமுடியல. சில விஷயங்களில் நானும் சூழ்நிலைக் கைதி தான். என்னைப் புரிஞ்சிக்கம்மா ப்ளீஸ்!” என்றார் நிதானமாக.

“அப்பா! நீங்க என்னை...” வார்த்தை வராமல் தடுமாறியவள், “இப்போ என்ன? இந்தப் பணத்தை வாங்கிக்கணும் அவ்வளவு தானே. கொடுங்க” என்று பணத்தை வாங்கிக் கொள்ள பரசுராமன் நிம்மதியாகப் புன்னகைத்தார்.

“மாதவன்! பூர்ணிமாவை அழைச்சிட்டுப் போய்க் கோவிலெல்லாம் சுற்றிக்காட்டு. என்ன வாங்கணும்னு நினைக்கிறாளோ, கூடயிருந்து வாங்கிக்கொடு. இந்தா, உனக்கும், உன் குடும்பத்துக்குத் தேவையானதை நீ வாங்கிக்க” என்று அவரிடமும் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு, “பத்திரமாக போய் வா. ஆறு மணிக்கு மீட்டிங் முடிந்திடும். அந்த நேரத்திற்கு வந்தால் போதும். இந்த நாள் உன்னோட நாள்” என்று அவள்து தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார்.

அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “கிளம்பலாமாம்மா?”

“புறப்படலாம் அண்ணா! முதலில் கோவிலுக்குப் போங்க” என்றாள்.

சமீப காலமாக உலகையே பிரம்மிப்புடன் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்று வணங்கினாள். அதன்பிறகு கடைத்தெருவிற்குச் சென்று மாதவனின் குழந்தைகளுக்கு உடுப்புகளும், விளையாட்டுச் சாமான்களும் வாங்கிக் கொண்டு திரும்பினாள்.

“அண்ணா! இந்தாங்க இதைச் சின்னுவுக்கும், அம்முவுக்கும் என்னுடைய அன்பளிப்புன்னு கொடுத்திடுங்க. அப்புறம், நீங்க தமிழ் கத்துக்கணும்னு சொன்னீங்க இல்லயா... அதனால் இன்னையிலிருந்து நாம தமிழில் பேசறோம். சரியா!” என்று வாங்கிக்கொண்டு வந்த பொருட்களை கொடுத்தாள்.

“ரொம்பச் சரி...” என்று சிரித்த மாதவன், அவள் கொடுத்தவற்றை பார்த்தபடி, “எந்தா இது! ஐயா, கொடுத்த பணத்தில் என் குழந்தைகளுக்கே வாங்கி... உனக்கு ஒண்ணும் வாங்கிக்கலையா?”

“வாங்கியிருக்கேனே இதோ...” என்று தனக்கு வாங்கியிருந்த அரை டஜன் கைக்குட்டையை எடுத்துக்காட்டிப் புன்னகைக்க, திகைத்துப் போய்ப் பார்த்த மாதவனும் அவளது சிரிப்பில் இணைந்துக் கொண்டார்.

“மிருககாட்சி சாலைக்குப் போகலாமாம்மா?”

“இல்லண்ணா! மேகா இருந்தா ரொம்ப ஆர்வமாகப் பார்ப்பா. இன்னொரு முறை அவளோடு சேர்ந்து வந்து பார்க்கலாம். நேப்பியர் மியூசியம் வேணா போகலாம். நானும் பார்த்ததே இல்லை.”
‘நானும் பார்த்ததே இல்லை!’ இதற்கு என்ன அர்த்தம்? என்று புரியாமல், அவளைப் பார்த்துவிட்டுக் காரை எடுத்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நேப்பியர் அருங்காட்சியகத்தின் அழகிய தோற்றத்திலும், கேரள, சீன, முகலாய, இத்தாலிய கூட்டமைப்பில் உருவான அதன் பிரம்மாண்டமான கட்டிடக்கலையிலும் லயித்துப்போனாள். பெரிய தோட்டமும், செயற்கை நீரூற்றும் ரம்யமாக அவளது மனத்தை ஆட்கொண்டது.

தொல்பொருள் ஆராய்ச்சியின் அரிய தொகுப்புகள், பழங்கால நகைகள், வெங்கலச் சிலைகள், யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட சிற்பங்கள், மற்றும், ஸ்ரீ சித்திர கலைக்கூடத்தில் ராஜா ரவிவர்மன், இன்னும் பிற கலைபடைப்புகளும் இடம்பெற்றிருந்த அனைத்தையும் ஆர்வத்துடன் கண்டுக்களித்தாள்.

“அண்ணா! இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒவ்வொரு விஷயத்திலும், இதற்கு பின்னால் இருக்கும் மனிதனின் உழைப்பைப் பாராட்டாம இருக்கமுடியல. உள்ளே இருந்த வரைக்கும் பசி தெரியலை. சிறுகுடல் பெருங்குடலை ஸ்வாஹா பண்றதுக்குள்ளே ஒரு நல்ல ஹோட்டலுக்குப் போங்க” என்றபடி காரில் அமர்ந்தாள்.

அதே நிலையில் இருந்த மாதவனும் தரமான ஒரு உணவகத்தில் நிறுத்தி, உணவை முடித்துக்கொண்டு கிளம்பினர்.

“அடுத்து எங்கே போகலாம்?” என்று மாதவனைக் கேட்டாள்.

“அடுத்து திருவல்லத்தில் ரெண்டு ஆறு சங்கமிக்கும் இடத்திலிருக்கும் பரசுராமர் கோவில். பரசுராமர் தன்னுடைய அம்மா ரேணுகாதேவியைக் கொன்ற தோஷம் நீங்கறதுக்காக சிவனோட கட்டளைப்படி, இந்தத் தலத்துக்கு வந்து இங்குள்ள கரமனை ஆத்துல குளிக்கும்போது அவருக்குக் ஒரு சிவ லிங்கம் கிடைச்சது.

அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்தார். தன்னோட தோஷம் நீங்கி, இந்தத் தலத்தில் தர்ப்பணமும் கொடுத்தார். இன்னைக்கும் இங்கே நிறைய பேர் பித்ரு கடன் கொடுக்கிறாங்க.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாள் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் பக்கத்தில் இருக்கும் திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் இருப்பதா ஒரு ஐதீகம்.

அதனால் ஒரே நாளில் இந்த மூன்று கோவிலையும் தரிசிப்பது ரொம்ப விசேஷம்” என்று சொல்லிக்கொண்டே பூர்ணிமாவின் முகத்தைப் பார்த்த மாதவன், குழம்பிப் போய்க் காரை ஓரமாக நிறுத்தினார்.

‘திருவல்லம்!’

பெயரை கேட்டதும் புன்னகையுடன் அமர்ந்த பூர்ணிமாவின் முகம், களையிழந்து இறுக்கமானது. தான் கீழே விழுந்துவிடுவோமோ என்பது போல, இருக்கையை இறுகப் பற்றிக்கொண்டாள். முகத்தில் முத்துமுத்தாக வியர்வை பூத்தது.

“என்னம்மா திடீர்னு டல்லாகிட்ட? வியர்த்துப் போகுது. உடம்பை எதாவது செய்யுதா?” என்று பதட்டத்துடன் விசாரித்தார்.

“அ..தெல்லாம் இல்ல... கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது” என்றவள் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.

“டாக்டர் யாரையாவது பார்க்கலாமா...?” கவலையுடன் ஒலித்தது மாதவனின் குரல்.

“அதெல்லாம் வேண்டாம்.”

“என் மாமனார் வீடு இங்கே தான் இருக்கு. அங்கே போய் கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துக்கம்மா.”

“அதெல்லாம் வேண்டாம் அண்ணா! கோவிலுக்குப் போகலாம்...”

“போ...க...லாமா...” மீண்டும் சந்தேகத்துடன் கேட்க, ஆமென தலையை மட்டும் அசைத்தாள்.

காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திய மாதவன், தான் புதிதாக வாங்கியிருந்த வெள்ளை நிறத் துண்டைக் கொடுத்து, “கோவிலுக்குள்ள போறபோது பெண்கள் இடுப்பில் துண்டைக் கட்டிக்கிட்டுப் போகணும். நீ இதைக் கட்டிக்கோம்மா” என்று நீட்ட, எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டாள்.

புடவையின் மீதே துண்டை சுற்றிக்கொண்டு கோவில் வாசலில் சிலநொடிகள் கண்களை மூடிக்கொண்டு நின்றாள். கண்களைத் திறந்த போது அவளது இமைகள் நனைந்திருந்தன. அருகிலிருந்த காயலில் கைகால்களை நனைத்துக்கொண்டு, சன்னதியை நோக்கி நடந்தனர்.

கோவிலின் முன்னிருந்த ஒன்பது பீடங்களில் உணவு உருட்டி வைக்கப்பட்டிருந்தது.

“இதெல்லாம் திலக் ஹோமத்தில் நம்ம முன்னோர்களுக்காக வைக்கப்படுவது. அவங்கலெல்லாம் காகம், பறவைகள் ரூபத்தில் வந்து சாப்பிடுவதாக ஐதீகம்” என்று மாதவன் சொல்லிக் கொண்டிருந்தார்.

வடதிசை நோக்கி அமைந்திருந்த சன்னதியில் பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டிருந்தது.
சன்னதியிலிருந்து வெளியில் வந்தவள் காயலின் கரையில் வந்து அமர்ந்தாள்.

“என்னம்மா! இங்கே வந்து உட்கார்ந்துட்ட...” என்று கேட்டுக்கொண்டே சற்று நகர்ந்து அமர்ந்தார் மாதவன்.

“இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. கொஞ்சம் நேரம் தனியா இருக்கணும் போலிருக்கு.”
“சரி, நீ உட்கார்ந்திரு. நான் காருக்குப் போறேன். நீ வந்ததும் கிளம்பலாம்.”

“எனக்குத் தான் தனியா இருக்கணும் போலிருக்கு. உங்களுக்கு என்ன? உங்க மாமனார் வீடு இங்கே தானே இருக்குன்னு சொன்னீங்க. ஒண்ணு பண்ணலாம். நீங்க போய் அவங்களைப் பார்த்துட்டு வாங்க. மணி நாலரை தானே அஞ்சே முக்காலுக்குள்ளே நீங்க வந்தா போதும்.”

“என்னது உன்னைத் தனியா விட்டுட்டு நான் போகணுமா? இதெல்லாம் ஆகறது இல்லை. உனக்கு ஏற்கெனவே உடம்பு சரி இல்லை.”

“எனக்கு ஒண்ணுமில்ல. இங்கே பாருங்க எழுந்து நின்னுட்டேன். கைவீசி நடக்கட்டுமா? இல்லனா ஓடிக் காட்டட்டுமா?” என்று பாவனையுடன் கேட்க, மாதவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.
“முன்ன பின்ன தெரியாத இடத்துல, உன்னை எப்படிம்மா விட்டுட்டுப் போகமுடியும்? அதோடு சாருக்குத் தெரிந்தா அவ்வளவு தான்”

“நான் என்ன சின்னக் குழந்தை! என்னை யாராவது தூக்கிட்டுப் போக. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். அப்பா என்ன சொன்னாங்க! பூர்ணிமா என்ன கேட்டாலும் செய்ன்னு சொன்னாங்க இல்ல”

“சரிம்மா! உனக்குத் தனியா இருக்கணும். அவ்வளவுதானே. நீ சொன்னபடியே நான் போய் அவங்களைப் பார்த்துட்டு வரேன். இவ்வளவு தூரம் வந்துட்டுப் பார்க்காம போனா, உங்க அண்ணிக்கும் பதில் சொல்ல நம்மால் ஆகாது” என்று சிரிப்புடன் எழுந்தவர், “நீ பத்திரமா இரும்மா! எதாவது அவசரம்னா உடனே, எனக்குப் போன் பண்ணு. நான் வந்திடுறேன்...” என்று பலமுறை அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

கார், தனது பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள், அதற்கு எதிர் திசையில் வேகமாக நடந்தாள்.

வேகமாகத் தான் வந்தாள். ஆனால், தான் பார்க்கவேண்டும் என்று நினைத்து வந்த இடத்தை அடைந்தபோது, கால்கள் இரண்டும் தொய்ந்து போனது. தளர்ந்த நடையுடன் பூட்டியிருந்த பெரிய இரும்புக் கதவின் எதிரில் வந்து நின்றவளது கண்கள் அலைபாய, பார்வை வீட்டின் முன் வாசலில் படிந்தது. கடந்து போன இனிய நாட்கள் மனத்தில் ஏக்கத்தைக் கிளறிய அதேநேரம், தனது கனவுகளை அழித்த தினமும் நினைவில் வந்தது.

இரும்புக் கதவைப் பற்றியிருந்த கைகள் மீதே தலை சாய்த்து சுற்றுப்புறம் மறந்து எத்தனை நேரம் நின்றாளோ? தன்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பது போலக் குரல் கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள். வீட்டின் உள்ளேயிருந்து அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் விஷால்.

‘இவன் எப்படி இங்கே? அத்தனைத் தூரம் அவனிடம் கடுமையாக பேசிவிட்டு, இப்படி வாசலில் வந்து நிற்கும் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்?’ என எண்ணியவளுக்கு, தனது சுயகௌரவத்தைத் தானே தாழ்த்திக் கொண்டது போல அவமானமாக இருந்தது. விஷால் கேட்டை நெருங்க சில அடிகளே இருக்க, அவள் வந்த வழியே திரும்பி வேகமாக நடந்தாள்.

“பூர்ணிமா நில்லு!” என்று அவசரமாகப் பூட்டியிருந்த கேட்டைத் திறக்க முயன்றவனுக்கு, அவசரத்தில் உதவாமல் பூட்டும் வேடிக்கை காட்டியது.

அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே திருப்பத்தில் வந்த காரைக் கவனிக்காமல் விரைந்து வந்தவள் மீது, தேங்கியிருந்த மழைநீர் வீசி அடிக்கப்பட, அணிந்திருந்த சேலை முழுவதும் சகதியும் தண்ணீருமாக அபிஷேகமானது.

திடீரென ஒலித்த ஹாரன் ஓசை அவளைத் திடுக்கிட வைக்க, தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள் முகத்தில் அடித்த மழைநீரால் திணறிப்போனவள் முந்தானையால் முகத்தை துடைத்தாள்.

“சாரி! நீங்க வந்ததை நான் கவனிக்கவேயில்லை...” காரிலிருந்து இறங்கியவன் அழகான நுனி நாக்கு ஆங்கிலத்தில் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்க, முந்தானையால் முகத்தை துடைத்துவிட்டு நிமிர்ந்த பூர்ணிமாவை கண்டவன், “ ஹே...! யூ...” என்று ஆச்சர்யமான பார்வையுடன் வினவிய நேரம் அங்கே வந்த விஷால், பூர்ணிமாவை கண்டுக்கொண்டது போல பேசிய நந்தாவை அதிர்ந்த முகத்துடன் பார்த்தான்.

விஷாலையும், தன்னைக் கண்டுக் கொண்டதை போல பேசியவனையும் மாறிமாறி பார்த்தவளின் முகம் விதவிதமான முகபாவனைகளை வெளிப்படுத்தியது. காரிலிருந்து இறங்கியவன் புருவம் இடுங்க தன்னை ஆராய்வதை உணர்ந்தவள் சட்டென திரும்பி அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து இருவரின் கண்களிலிருந்தும் மறைந்தாள்.

அவளைத் தொடர இரண்டடி எடுத்து வைத்த விஷால் சூழ்நிலை உணர்ந்து நின்றான். அவளது நடவடிக்கைகளை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்த நந்தா அலட்சியமாக தோள்களை குலுக்கிக்கொண்டு, ஒருவிதமான பாவனையுடன் நின்றிருந்த விஷாலிடம், “என்னடா மோகினி அடிச்ச எபெக்ட்ல நிக்கிற...?” என்றான்.

“ம்ம்...! அந்தப் பொண்ணை உனக்குத் தெரியுமா?” தயக்கத்துடன் வந்தது அவன் கேள்வி.
“யாருக்குத் தெரியும்...” கைகளை விரித்தான்.

“பின்னே நீயா..ன்னு ஆச்சரியமாக கேட்டியே...?”

“அதுவா...! கொஞ்சம் நாளைக்கு முன் எரவிபுரம் பீச்சில் பார்த்தேன்...” என்று விட்டேத்தியாகப் பதிலளித்துக்கொண்டே காரில் ஏறியவன், “இந்த நேரம் நீ எங்கே கிளம்பின?”

“உனக்காக தான்... நீ வருவியேன்னு கேட்டை திறக்க வந்தேன். இன்னைக்கு வாட்ச்மேன் வரலையே...!”

“ம்..., நம்பிட்டேன்” என்று சொன்ன போதும், நான் நம்பவில்லை என்ற பாவனையுடன் காரைக் கிளப்பினான்.

பூர்ணிமா சென்ற வழியைப் பார்த்துவிட்டு வீடு நோக்கி நடந்த விஷாலுக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது. ஆனால், ஏனென்று புரியவில்லை.

உறக்கம் வராமல் ஜன்னல் வழியாக தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள். மாலையிலிருந்து அழுகை, சினம், அவமானம் என்று அனைத்தையும் ஒருவருக்கும் தெரியாமல் வைராக்கியத்துடன் அடக்கி வைத்துக் கொண்டிருந்தவள் தனக்கான தனிமையில் அடக்கி வைக்க முடியாமல் மனதை அதன் விருப்பத்திற்கு விட்டுவிட, மனமும் சுதந்திரமாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னோக்கி ஓடியது.

சலனமில்லாமல் இருந்த தன் வாழ்வில் சலனத்தையும், சந்தோஷத்தையும், பிரியத்தையும், காதலையும், எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போன்று மறையாத வடுவையும் உண்டாக்கிய அந்த நாளை நோக்கி ஓடியது.

மறக்க நினைத்த நிகழ்வுதான், இதயத்தை அடைக்கும் அளவிற்கு வலிக்கும் தான் ஆனால், அந்த வலி இப்போது அவளுக்குத் தேவையாக இருந்தது. அழவேண்டும் போலிருந்தும் அவள் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கூட வெளிவர மறுத்தது. கண்களை மூடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள். விழிகளுக்குள் பதினைந்தே வயது நிரம்பிய பூர்ணிமாவின் கள்ளமில்லா பால்முகம் தெரிந்தது.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
9தள்ளிச் செல்லும்

ஒவ்வொரு நிமிடமும்

இதயத்துக்குள் இறங்குகிறாய்

இரக்கமில்லாமல்...விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. பூர்ணிமாவுடன் வந்த லஷ்மி அம்மாவின் கார் ஒரு ஏரியின் அருகில் வந்து நின்றது.

“பூர்ணிமா..., எழுந்துக்கோம்மா... நாம இறங்கவேண்டிய இடம் வந்தாச்சு..” ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் காதில் லஷ்மி அம்மாவின் குரல் கேட்டது. கண்களை சிரமத்துடன் திறந்தவள் இமைகள் அசதியையும் மீறி விரிந்து தனக்கெதிரே தெரிந்த இயற்கை அழகை உள்வாங்கிக்கொண்டது.

ஆலப்புழா

நீர்வளம் நிறைந்த கேரள மாவட்டம். ஆசியாவின் வேனிஸ் என்று அழைக்கப்படுவது மிகவும் பொருத்தம். பார்த்த இடமெல்லாம் பரவி விரவி கிடக்கும், தண்ணீர். பச்சைப் பசேலென்ற பின்னணி காட்சியுடன் மனதை ரம்யமாக்குகிறது. மேற்கில் புரண்டு கொண்டிருக்கும் அரபிக்கடலும், ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளும், உப்பங்கழியும் நிறைந்த இடம்.

இரவெல்லாம் கொட்டி தீர்த்த வருணபகவான் நிலமகளை குளிர்வித்த சந்தோஷத்துடன் சற்று ஓய்வெடுக்க, வரலாமா வேண்டாமாவெனும் இரட்டை மனதுடன் மேகத்துக்கிடையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன்.

சந்தோஷத்துடன் இனிய சப்தமெழுப்பியபடி இரை தேடக்கிளம்பிய புல்லினங்களும், தனக்கு முன் விரிந்து பரந்திருந்த வேம்பநாட்டு காயலில் தங்களின் தூண்டிலை வீசிக்கொண்டிருந்த மீனவர்கள் என்று திரைப்படத்தில் மட்டுமே கண்டிருந்த காட்சிகளை நேரில் கண்டதும் மெய்மறந்து நின்றிருந்தாள்.

“போகலாம்” என்று முன்னால் சென்றவர் சிறிய பாலம் அருகில் நின்றிருந்த மோட்டார் படகில் ஏறியவரை தொடர்ந்து அவளும் ஏறினாள்.

கிட்டதட்ட பத்துநிமிட படகு பிரயணத்திற்கு பிறகு, “அது தான் நம்ம வீடு..” என்று லஷ்மி அத்தை காட்டிய திசையைப் பார்த்தவள் மலைத்துப் போனாள்.

மூன்று உயர மாடி மூன்று புறமும் தண்ணீர் சூழ்ந்தத் தீபகற்பமாக இருந்த வீட்டின் வெளிப்புற தோற்றமே கம்பீரமாக இருந்தது. கரைஓரமாக நின்ற படகிலிருந்து இறங்கி வீட்டினுள் நுழைந்தனர். வீடு என்றதும் கமலம் அத்தை வீட்டின் அளவை விட சற்று பெரிதாக இருக்கும் என்று எண்ணி இருந்தவளுக்கு, போர்ட்டிக்கோவே அவள் அத்தை வீட்டை போல நான்கு மடங்கு பெரிதாக இருந்தது.

நான்கு பக்க கலைநயம் மிக்க தேக்கு மரத்தூணின் உதவியுடன் நின்ற அலங்காரமான மேற்கூரை. நுட்பமான வேலைப்பாடுடன் அரை அடி அகலத்தில் உறுதியாக நின்ற தேக்குமர இரட்டைக் கதவுகளை தாண்டிச்சென்றால் விசாலமான பெரிய தாழ்வாரம். அதைத்தாண்டினால் முதல் மாடியை சேர்த்து உயர்ந்த மேற்கூரையுடன் அமைந்திருந்த பெரிய கூடம்.

லஷ்மி அத்தை இத்தனை வசதியானவரா?

முதல் முறையாகப் பிரமிப்பையும், ஆர்வத்தையும் மீறி மனத்திற்குள் பயம் ஏற்பட்டது. ஆங்காங்கே வேலை செய்துகொண்டிருந்த வேலையாட்கள் எட்டிப் பார்ப்பதைக் கண்டதும் மிரண்டு போயிருந்தவள் தூணோரம் ஒடுங்கி நின்றாள்.

அங்கு வந்த பணியாளிடம், “விஷால் எங்கே..? என்றார்.

“தம்பி வெளியே போய் இருக்கார்.”

“இவள் பூர்ணிமா... இனி நம்மோட தான் இருக்கப்போறா..” என்று திரும்பியவர் பயத்துடன் நின்றிருந்தவளை தலையசைத்து அழைத்தார். “ரூம் தயாராக இருக்கா...?”

“இருக்கும்மா...”

“பூர்ணிமா... நீ போய் குளிச்சிட்டு வா. டிபன் சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு “கூட்டிட்டுப் போ காத்யாயினி” என்றார்.

குளித்துவிட்டு வந்தவள், இடியாப்பம், கொண்டைக்கடலை, வேகவைத்த கப்பா, சிகப்பரிசி புட்டு என்று பாத்திரங்கள் நிறைந்திருந்ததைக் கண்டவள் ருசிக்காக இல்லாமல் பசிக்காக உண்டுவிட்டு எழுந்தாள்.

“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ...” என்றவர் வீட்டின் பின்பக்கமாக சென்றார்.

அறைக்குச் சென்று ஜன்னல் வழியாகப் பின்னால் தெரிந்த ஆற்றை பார்த்துக்கொண்டிருந்தவள் மனம் கேள்விகளால் நிறைந்திருந்தது.

என்ன வீடு இது? இத்தனைப் பெரிய வீட்டில் அத்தை மட்டும் தனியாவா இருக்காங்க..? என்னவோ பேர் சொன்னாங்களே... விவேக்கோ..., விஷ்வாவோ...? யாரது? அத்தையோட மகனா...? இன்னும் யாரெல்லாம் இங்கே இருக்காங்க? மிரண்ட கணங்கள் போய் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆவல் எழுந்தது.

யோசித்தபடியே நின்றிருந்தவளின் பார்வை யதேச்சையாகப் பக்கவாட்டில் இருந்த சிறு வீட்டினுள்ளிருந்து லஷ்மி அத்தை வருவதை பார்த்தாள்.

பிரயாண களைப்பும், உண்ட மயக்கமும் கண்களை சுழற்ற கட்டிலில் அமர்ந்தாள். தேக்குமர கட்டில், சுகமான இலவம் பஞ்சு மெத்தை உறக்கத்தை அதிகப்படுத்த கண்களை மூடியது தான் தெரியும்.

டக்..டக்.,

டக்..டக்..டக்கதவு வேகமாக தட்டப்படும் ஓசை.

‘ஹக்’ உடல் தூக்கிப் போட எழுந்தாள்.

“யாரது...” - நிசப்தம். கதவு தட்டும் ஓசை நின்று போய் இருந்தது.

கனவா...! இல்லையே கதவு தட்டும் சத்தம் கேட்டதே..., மெல்ல எழுந்தவள் கதவை சிறிதாக திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி எட்டிப்பார்த்தாள். யாரையும் காணவில்லை.

“ஹலோ..” என்று மறுபுறம் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள். மார்புக்குக் குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்தபடி நின்றிருந்தவனைப் பார்த்தாள்.

“நீ தான் பூர்ணிமாவா?” அவன் பேசிய தமிழ், மலையாள சாயலுடன் வந்தது.

“ம்...” என்று தலை மட்டும் அசைந்தது.

“உன்னைப் பார்க்க வந்திருக்கேன் உள்ளே வா என்று கூப்பிடமாட்டியா..?”

‘ஙே...’ என்று விழித்தவள், இவன் மனத்தில் என்னதான் நினைச்சிட்டு இருக்கான். சரியான வம்புபிடிச்சவனா இருப்பான் போலிருக்கே. கூப்பிடாவிட்டலும் தப்பு, கூப்பிட்டாலும் என் வீட்டில் இருந்து கொண்டே என்னைக் கூப்பிடுகிறாயா...? என்பான் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு நிற்க அவனும் அலட்சியமாகப் பார்த்துக்கொண்டிருக்க,

“வாங்க” என்றாள்.

“இப்படிக் கதவை அடைச்சிக்கிட்டு நின்னு, வாங்கன்னா எப்படி வர்றது? உள்ளே போ” என்றபடி பாதி மூடியிருந்த கதவைத் தள்ள, இரண்டடி பின்னால் நகர்ந்து வழிவிட்டாள்.

வராண்டாவை ஒட்டியிருந்த ஜன்னலில் சாய்ந்து அமர்ந்தவன், “பிரயாணம் நல்லாயிருந்ததா?”

“ம்...”

“சாப்பிட்டு... களைப்புத் தீர தூங்கி எழுந்தாச்சா?”

“ம்...” மீண்டும் தலை மட்டும் அசைந்தது.

“நான் பேசுவது புரியுதா? இல்ல... கேட்கும் கேள்விக்கு எதாவது சொல்லணுமேன்னு ‘ம்’ மட்டும் கொட்டிட்டு தலையை அசைக்கிறியா?”

“புரியுது...”

“என்ன படிச்சிருக்க?”

“டென்த்.”

“சமைக்கத் தெரியுமா?”

விநோதமாக அவனைப் பார்த்தாள்.

“ஹலோ! உன்னைத்தான் கேட்டேன்.”

“கொஞ்சம் கொஞ்சம்…”

“தோட்ட வேலை..”

‘சம்மந்தா சம்மந்தமில்லாமல் என்ன கேள்வி?’ என்று நினைத்தபடி, “கொஞ்சம் கொஞ்சம்…” என்றவளது மனத்திற்குள் கேட்கப் பல கேள்விகள் எழ, “ஆ..” என்று எதையோ கேட்க ஆரம்பித்தவள், ஒன்றும் சொல்லாமல் நிறுத்திக்கொண்டாள்.

“என்னமோ கேட்கணும்னு வர... கேளு...”

“இல்ல, அத்..தை என்னைப் படிக்க வைக்கத் தான் இங்கே...” என்றவளை வேகமாக இடைமறித்தான்.

“என்னது! படிக்க வைக்கவா? இவ்ளோ பெரிய வீடிருக்கு, கார் இருக்கு, சொத்து இருக்குன்னு இஷ்டத்துக்கு ஏதாவது கற்பனைப் பண்ணிக்காதே. எல்லாமே இருக்கு. ஆனால், கடனில் இருக்கு. இப்போ, உனக்கு எல்லா வேலையும் தெரியும். ஆனால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும் இல்லயா… அது போல” என்று அவன் வக்கணையாகக் கூற, ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தாள்.

அவளது முகத்தைப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்தது.

‘பாவம்! சின்னப் பெண். ரொம்பவும் படுத்துகிறோமோ!’ என்ற எண்ணம் தோன்றினாலும், அவளைப் பற்றி அறிந்தது முதல் அவள் மேல் பரிவு ஏற்பட்டிருந்தது. என்னவோ அவளிடம் இப்படிப் பேசுவது தான், அவனுக்குப் பிடித்திருந்தது.

“ஆ..! உன் கேள்வியால் சொல்லவந்ததை பாதியில் நிறுத்தியாச்சு. அப்புறம்... மற்ற வேலைகளாவது முழுசாக தெரியுமா?”

“மற்ற வேலைகள்னா...!” புரியாமல் கேட்டாள்.

“துணி துவைப்பது..., பாத்திரம் கழுவுவது..., வீடு சுத்தம் செய்றது..., அதைவிட முக்கியமா யானை...” என்று சொல்லிக்கொண்டே வந்தவன், அவளது குழப்பமான முகத்தைப் பார்த்துப் பாதியில் நிறுத்திவிட்டு, “என்ன?” என்றான்.

“யா..யானையா...!”

“என்ன இப்படி வாயைப் பிளக்கற? யானைதான். தினமும் காலையில் எழுந்ததும் யானையைக் கட்டிவச்சிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்யணும். தீனிப் போடணும். இதைவிட முக்கியமானது… நல்லா கேட்டுக்க வீட்டுக்குப் பின்னால் பெரிய பெரிய பானைங்க இருக்கு. அதுல தண்ணியைச் சுடவச்சி வெதவெதன்னு விளாவி…”

“விளாவி...”

“யானையைக் குளிப்பாட்டணும்...” என்று பாவனையுடன் சொன்னான்.

‘தண்ணீரைச் சுடவச்சி வெதவெதன்னு விளாவி, யானையைக் குளிப்பாட்டணுமா! இவன் என்ன லூசா?’ என்ற எண்ணத்துடன் அவனை ஏறயிறங்கப் பார்த்தாள்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றவன், அவள் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தே இருந்தான்.

‘இவன் தன்னைக் கலாய்க்கிறானா!’ என முதன்முறையாக அவளுக்குச் சந்தேகம் எழ, அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

“தம்பி! உங்க ரெண்டு பேரையும் அம்மா கூப்பிடறாங்க” என்று பணியாள் வந்து சொல்ல... விட்டால் போதுமென்று குடுகுடுவென வேலையாளின் பின்னாலேயே சென்றவளைக் கண்டவனுக்குச் சிரிப்பாக வந்தது.

வெளி வராண்டா ஊஞ்சலில் லஷ்மி அம்மா அமர்ந்திருக்க, இருக்கையில் புதியவர்கள் இருவர் அமர்ந்திருந்தனர். அங்கு வந்தவளைப் பார்த்தவர்களது பார்வையே, தன்னைப் பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்டாள்.

வேகமாக வந்தவள் தயங்கி நிற்க, “வா பூர்ணிமா...” என்று அழைத்தார் லஷ்மி.

“கூப்பிட்டீங்களா அத்தை” என்று அருகில் வந்து நிற்க, விஷால் லஷ்மி அம்மாவின் அருகில் அமர்ந்தான்.

“இவங்க என் தங்கை சௌமினி. இவர் அவங்க கணவர் நாராயணன். இவன் விஷால், இவங்களோட பையன்” என்று மூவரையும் அறிமுகப்படுத்த கீற்றாகப் புன்னகைத்தபடி சௌமினியைப் பார்த்தாள்.

அவரது முகம் வெளிப்படையாக காட்டிய வெறுப்பில், உள்ளம் கசந்து போனது.

இனி இவர்கள் தான் தன் பந்தம் என்று நினைத்து வந்தவளுக்கு லஷ்மி அத்தையைத் தவிர அனைவரும் அன்னியமாக தெரிய, பெரியம்மாவின் அருகில் அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த விஷாலின் கண்களில் தெரிந்த கனிவில் மனத்திற்குள் சிறு சந்தோஷம் பரவியது.

“எனக்கென்னமோ நீ தேவையில்லாமல் பிரச்சனையை இழுத்துப் போட்டுக்கறியோன்னு தோணுது. எதுக்கும் ஒருமுறைக்கு ரெண்டு முறை யோசித்துச் செய்...” என்ற சௌமினி, “விஷால் கொஞ்சம் வீட்டுக்கு வா. பேசணும்” என்று சொல்லிவிட்டு தன் கணவருடன் வெளியேறினார்.

“சரி பெரியம்மா! நைட் வரேன்” என்றவன், “வரட்டா பூரி...” என்று அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டுச் சென்றான்.

சிந்தனையுடன் நின்றிருந்தவளை, “இங்கே வா...” என்று கைநீட்டி தன்னருகில் அமரவைத்துக் கொண்டு, “ஏன் ஒருமாதிரி இருக்க?” எனக் கேட்டார்.

“ம்ம், அத்..தை! என்னை எதாவது ஹாஸ்ட்டல்ல சேர்த்து விட்டுடுங்க. நான் அங்கேயே தங்கிப் படிச்சிக்கிறேன்” என்று மெல்ல முனகினாள்.

“ஏம்மா! என்னாச்சு? இந்த இடம் உனக்குப் பிடிக்கலையா? புது இடம் புது மனிதர்கள், புது பழக்கவழக்கம் எல்லாம் புதுசாக இருக்கே இங்கே எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று யோசனையா..?”

“உங்களை என் கமலம் அத்தையாகத் தான் நினைக்கிறேன். பிடிக்கலைன்னு சொல்லும் தகுதி எனக்குக் கிடையாது. என்னால யாருக்கும், எந்தச் சங்கடமும் வரவேண்டாம். நான் அப்பப்போ வந்து உங்களைப் பார்த்துட்டுப் போறேனே” என்றாள் சங்கடத்துடன்.

ஆதரவாக அவளது கரத்தைப் பற்றிக்கொண்டவர், “பூர்ணிமா! என்னுடைய வருத்தத்தையும், கவலையையும் போக்க வந்திருக்கும் ஒரு தேவதையாகவே உன்னைப் பார்க்கிறேன். இத்தனைப் பணமும், வசதியும் இருந்தும் என் மனத்தில் கொஞ்சங்கூட நிம்மதி இல்லை. எவ்வளவு சந்தோஷமும், சிரிப்புமாக இருந்த வீடு தெரியுமா? இன்னைக்கு வெறும், கட்டிடமாக நிக்குது. எனக்காகத் தான் விஷால் தன்னோட பெத்தவங்களை விட்டுட்டு, என்னோடு இருக்கான். நீ வந்ததும், இந்த வீட்டுக்குப் புதுக் களை வந்தது போலிருக்கு. எனக்காக, என்கூட இருக்கமாட்டியா?” என்று தழுதழுத்தக் குரலில் கேட்க, பூர்ணிமா திக்குமுக்காடிப் போனாள்.

‘பார்த்த இரண்டே நாளில், தன் மீது இத்தனைப் பாசமா! அத்தைக்கு அப்படி என்ன பிரச்சனை? என்னால் அவங்க மனம் சந்தோஷப்படும் என்றால், நான் ஏன் அவங்க மனத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடாது.

அன்புக்கு ஏங்கிய அந்த ஜீவன், தன்னைத் தேடி வரும் அன்பை உதைத்துத் தள்ள மனமில்லாமல், அதேநேரம் தான் எத்தனைப் பெரிய விஷயத்திற்கு அடித்தள மிட்டிருக்கிறோம் என்று தெரியாமல் அந்த அன்புக் கூட்டில் ஐக்கியமானது.

மறுநாள் காலையில் விஷால் வந்தபோது தோட்டத்தில் நீரூற்றிக் கொண்டிருந்தவளைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே சென்றான். வீட்டினுள் வந்தவள் விஷால் அங்கில்லாமல் தேடிக்கொண்டே வர, பின்பக்கமிருந்து உள்ளே வந்தவன் தன்னைத் தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்று கண்டுக்கொண்டான்.

“ஹே பூரி! என்னைத் தானே தேடுற?”

“ஆமாம்...” என்று நேர் பார்வைப் பார்த்தாள்.

“எதுக்குத் தேடுற?”

“வார்ன் பண்ணாலாம்னு தான்...”

“யாரை! என்னையா...?”

“ஆமாம். அத்தைக்கு யாரும் இல்லைன்னு நினைச்சிக்க வேண்டாம். நான் இருக்கேன் அவங்களுக்கு. அத்தையோட முகத்தில் சிரிப்பை நிரந்தரம் ஆக்காமல் ஓயமாட்டேன்” என்றாள் தீவிர பாவனையுடன்.

தனக்குள் சிரித்துக்கொண்டவன், “என்ன பூரி? சபதமெல்லாம் போடுற” என வியப்புடன் கேட்டான்.

“அப்படித் தான் வச்சிக்கோங்க...” என்று சொல்லிவிட்டுத் தலையைச் சிலிப்பிக்கொண்டு நடந்தவளை, “வீராவேசமா பேசிட்டு, எங்கே இவ்வளவு வேகமாக போற?”

நின்று திரும்பிப் பார்த்தவள், “ம்ம்ம்... யா...னையைக் குளிப்பாட்ட...” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு விறுவிறுவெனச் செல்ல, விஷால் வாய்விட்டுச் சிரித்தான்.

சற்று தள்ளி நின்று இருவரின் உறையாடலையும் கவனித்துக்கொண்டிருந்த லஷ்மி, சிரிப்புடன் அங்கிருந்து அகன்றார். உடன் நின்றிருந்த சௌமினிக்கோ, கோபத்தில் உடலே எரிவது போலிருந்தது.

பூரிபூரி என்று விஷால் அவளை வம்பிழுப்பதும், அவனை முறைப்பதையே தன் கடமையாகவும், முணுமுணுவென திட்டுவதையே தன் பொழுதுபோக்காகவும் இருவரும் வைத்துக் கொண்டாலும், தனிமையில் இருவரும் தங்களுக்குள் நடப்பதை நினைத்து சிரித்துக்கொள்வர். இதெல்லாம் அவளுக்குப் புதிதாக இருந்தது.

இருவருக்கும் இடையில் புரிதலும், அழகிய நட்பு மலர்ந்து கொண்டிருந்தது. சிரிப்பும், கும்மாளமுமாகச் சென்று கொண்டிருந்த அவளது வாழ்க்கையில், விதி மீண்டும் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

பூர்ணிமா ஆலப்புழா வந்து சரியாக ஐந்தாவது நாள்...
 
  • Love
Reactions: Rithi