உனைக் கண்டு உயிர்த்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
10

வசமிழந்து போகிறேன்

உன் நினைவுகளைக்

கடந்து செல்ல

முயலும் நேரங்களில்...தன் வேலையில் மூழ்கியிருந்த நந்தாவின் மொபைல், அவனை அழைத்தது.

புன்னகையுடன், “அம்மா! சாரி சாரி..., வேலையை முடிசிட்டு நானே போன் பண்ணலாம்னு இருந்தேன்.”

“அதுக்குள்ள நான் முந்திட்டேன்” என்று சிரித்தார் நந்தாவின் அன்னை.

“அப்புறம், எப்படியிருக்கீங்க?”

“திவ்யமா இருக்கேன். நீ கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லு, இன்னும் சந்தோஷமா இருப்பேன்” என்று சொல்ல எதிர்முனையில் நிசப்தமாக இருக்க, “டேய்! லைனில் இருக்கியா இல்லையா?” எரிச்சலுடன் கேட்டார்.

“ஆ... ஹலோ..., என்னம்மா சொல்றீங்க? காதில் எதுவுமே விழமாட்டேன்னுதே... காது திடீர்னு அடைத்த மாதிரி இருந்ததும்மா” என்றான்.

“அடைக்குமே...! காது மட்டுமா அடைக்கும்? பேச்சு வராது, லைன் கட்டாகிடும்...” என்று சொல்லிக்கொண்டிருக்க மறுமுனையிலிருந்தவனுக்குச் சிரிப்பு வந்தது.

“சிரிச்சி என் எரிச்சலை அதிகமாக்காதே. ரிசாட் வேலை முடிந்ததும் கல்யாணம் செய்துக்கறேன்னு, எனக்கு வாக்குக் கொடுத்திருக்க. நான் மறக்கல...” என்றார் கண்டிப்பான குரலில்.

பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், “இதைத் தவிர பேச எதுவும் இல்லையா?” என்று சலித்துக்கொண்டான்.

“ஏன் இல்ல? நிறைய இருக்கு. ஆனா, இப்போதைக்கு இதுதான் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்.”

“ஆனா, எனக்கு இதைவிட முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு” என்றான்.

“நீ சொன்னதை நம்பி, நான் இங்கே பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லிட்டேன்.”

“அதுக்கு, நான் பொறுப்பாக முடியாதும்மா! என்னிடம் முதலிலேயே சொல்லியிருக்கணும். இப்போ, எனக்குப் பொண்ணு பார்க்கும் வேலையைவிட, இன்னொரு முக்கியமான வேலை வந்திருக்கு. ரகசியமும் கூட” என்று மெதுவாக கிசுகிசுத்தவன், “உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்லவா?” என்று பீடிகை போட்டான்.

‘கல்யாணப் பேச்சை மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வான்’ என்று நினைத்துக் கொண்டு, “என்ன ரகசியம்...?” என்று அசிரத்தையாக கேட்டார்.

“எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். நீங்க என்னடான்னா இத்தனை அசால்ட்டாக கேட்கறீங்க? சொல்லமாட்டேன் போங்க” என்றான் விளையாட்டாக.

“சொல்லலைனா போயேன். நான் போனை வைக்கிறேன்..” என்றார் கடுப்புடன்.

“கல்யாண விஷயம் பத்திச் சொன்னா கூடவா..” என்று வேகமாகச் சொல்ல,

“கல்யாணமா! யாருக்கு...? உனக்கா...?”அவனது வேகத்துக்கு ஈடுகொடுத்து அதே வேகத்தில் கேட்டவர், கடைசி வார்த்தையை மட்டும் கிண்டலாகக் கேட்டார்.

“கல்யாண விஷயம்தான். ஆனால், எனக்கு இல்ல விஷாலுக்கு...”

“விஷாலுக்கா?”

“அதுவும் சாருக்குக் காதல்ன்னு சொன்னால்?” என்றவன் மறுமுனையில் சப்தம் இல்லாமல் போக, “என்னம்மா? சத்தமே இல்ல. இப்போ, உங்களுக்குக் காது அடைச்சிடுச்சா?” என்று சிரித்தான்.

“உன் பையன் இப்படிச் செய்தான்னு, யாராவது சொன்னாக் கூட நான் நம்புவேன். ஆனா, விஷால் இப்படிச் செய்தான்னு சொன்னா, நிச்சயமா நம்பமாட்டேன்” என்றார்.

“பெத்த பிள்ளை மேலே, எங்க அம்மாவுக்கு எவ்வளவு நம்பிக்கை?” என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டவன், “அப்போ, நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்ல. அப்படித்தானே.”

“முதல்ல, இந்த மாதிரி உனக்கு யாரு இப்படி ஒரு கதையைச் சொன்னது?”

“என் ரெண்டு கண்ணாலும் பார்த்தேன்...”

”உனக்கு நிச்சயமா தெரியுமா?” இப்போது அவர் குரலில் சற்று ஆர்வம் கூட கேட்டார்.

“ம்ம்… ஒரு டவுட்தான்.”

“அப்படிச் சொல்லு...” நான் சொன்னது தான் சரி என்பது போல அவரின் தோரணை வெளிப்பட்டது.

“ஆனால், கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன்”

“வெங்காயத்தை உரிக்க உரிக்க, ஒண்ணுமிருக்காது.”

“நீங்க என்னை நம்பவே வேண்டாம். போகப் போகத் தெரியும்… அது வெங்காயமா! இல்ல விவகாரமான்னு...” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

“ஹும். அதெல்லாம் போகட்டும். நீ ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வர்றதானே!”

“வீட்டுக்கு வரேன். ஆனா, பொண்ணு பார்க்கவெல்லாம் என்னால் வரமுடியாது சாரி. முக்கியமான ஒருத்தருக்குப் போன் பேசணும். நாளைக்கு உங்களுக்குப் போன் செய்றேம்மா!” என்று மொபைலை அணைத்தவன், லாயர் பரசுராமனின் வீட்டு எண்ணிற்குத் தொடர்பு கொண்டான்.

****************​

மாலையிலிருந்து அழுகை, சினம், அவமானம் என்று அனைத்தையும் ஒருவருக்கும் தெரியாமல், வைராக்கியத்துடன் அடக்கி வைத்துக் கொண்டிருந்தவளது மனமும், அடுப்பிலிருந்த பாலைப் போலக் கொதித்துக் கொண்டிருந்தது.

இத்தனை ஆண்டுகளில் நடந்துமுடிந்த நிகழ்விலிருந்து, தான் வெளிவந்துவிட்டோம் என்று நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டிருந்த நிகழ்வுகள், அவளது கண் முன்னே வந்து நின்று கைகொட்டிச் சிரிப்பது போலிருந்தது.

சலனமில்லாமல் இருந்த தனது வாழ்வில் சலனத்தையும், சந்தோஷத்தையும், பிரியத்தையும், காதலையும், எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று மறையாத வடுவையும் உண்டாக்கிய அந்த நாளை நினைக்க நினைக்க, பெருங்குரலெடுத்து அழவேண்டும் போலிருந்தது. ஆனால், அவளது கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் கூட வெளிவர மறுத்தது.

உஸ்ஸென்ற சப்தத்துடன் பால் பொங்கிவர அடுப்பை அணைத்தவள், பனக்கற்கண்டைத் தட்டிப்போட்டு, கண்ணாடி டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு மாடிப் படியை நெருங்கினாள்.

அதேநேரம் தொலைபேசி ஒலிக்கும் சப்தம் கேட்டு வேகமாகத் திரும்பி வந்து ரிசீவரைக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ” என்றாள்.

எதிர்முனையில் இருந்தவன், அவளது குரலைக் கேட்டதும் திகைத்துப் போனான்.

‘இப்படி ஒரு குரலா! பலநாள் கேட்டுப் பழகியது போலப் பிரமை. பெரிய பூந்தோட்டத்தின் நடுவில் பரவியிருந்த பூக்களின் நறுமணத்தை முகர்ந்தது போல, ஒரு மோன நிலையில் இருந்தான்.

மறுபக்கம்... ஒரு கையில் பால் டம்ளரும், மற்றொரு கையில் போனுமாக நின்றிருந்த பூர்ணிமாவிற்கு எரிச்சலாக இருந்தது.

‘போன் பண்ணிட்டு யாராவது பேசாமல் இருப்பாங்களா?’ என்று எண்ணிக்கொண்டே நான்காவது முறையாக, “ஹலோ!” என்று உரக்கச் சொன்னாள்.

தன் உணர்வுக்கு வந்தவன், “சாரி! லைனில் ஏதோ ப்ராப்ளம்” என்று சமாளித்துவிட்டு, “லாயர் பரசுராமன் சார் வீடு தானே...” என்று கேட்டான்.

“ஆ..மாம்...” என்றவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்குவது போலிருந்தது.

“ஆனால், அப்பா ஒன்பதரை மணிக்கெல்லாம் தூங்கிடுவாங்களே மணி இப்போ பத்தாகுது.”

“சாரி! நான் கொஞ்சம் முன்னாலேயே போன் செய்திருக்கணும். இல்லைனா, காலையில் பேசியிருக்கணும்...” என்றான் சமாளிப்பாக.

“பரவாயில்லை சார்! உங்க பேர் சொன்னீங்கன்னா, அப்பாவிடம் காலையில் சொல்ல வசதியாக இருக்கும்” என்றாள்.

“ஒன்ஸ் அகைன் சாரி! நான் லஷ்மி குரூப் ஆஃப் கம்பெனீஸ் எம்.டி...” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “நந்தா!” என்றழைத்தபடி விஷால் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

மறுமுனையில் இருந்தவளது இதயம் படக்படக்கென அடித்துக் கொண்டது. யார் பேசுவது என்று தெளிவானது. பெயரை அழைத்தபடி வந்தவனையும், தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவனும் யாரென புரிந்து போக, ரிசீவரை அதனிடத்தில் வைத்தாள்.

‘இவன் எதற்காக இப்போது போன் செய்தான்? விஷால் ஏதேனும் சொல்லியிருப்பானோ?’ என எண்ணியவளுக்கு, அதற்குமேல் எதையும் யோசிக்க முடியவில்லை. தலைச் சுற்றுவது போலிருந்தது.

தன்னை அழைத்தபடி அறைக்குள் வந்த விஷாலுக்கு, இரு என்பது போலச் சைகை காட்டியவன் போன் துண்டிக்கப்பட்டிருப்பது புரிய, ‘மீண்டும் போன் செய்யலாமா!’ என்று நினைத்து அதே வேகத்தில் அந்த யோசனையைக் கைவிட்டான்.

“முக்கியமான போனா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” வருத்தத்துடன் கேட்டான் விஷால்.

யோசனையுடனேயே, “பரவாயில்லை. காலைல பேசிக்குவேன். சொல்லு, என்ன விஷயம்?” என்றவனுக்கு, போன் தானாகத் துண்டிக்கப்படவில்லை என்று தோன்றியது.

“இன்னைக்கு லாயர் சாரைப் பார்த்துட்டு வரேன்னு போனியே, என்ன ஆச்சுன்னு கேட்கலாமேன்னு...” என்றவனைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தான்.

“பரவாயில்லயே நினைவிருக்கா?” என்றவனது கேள்வியில் கேலி இழையோட, விஷால் பதில் சொல்லாமல் நின்றான்.

“மதியம் போனேன். நம்ம லாயர் அவரோட ஃபிரெண்ட் மிஸ்டர்.பரசுராமனைப் பற்றிச் சொன்னார். அவர்கிட்ட பேசறதா சொல்லியிருக்கார். நாளைக்குப் ப்ரீயா இருக்கேன். அதான், அவரைப் போய்ப் பார்த்துட்டு வந்திடலாமேன்னு அப்பாயின்மெண்ட் கேட்க போன் செய்தேன். பாதியில கட் ஆகிடுச்சி” என்றான்.

“லாயர் பேர் என்ன சொன்ன?” என்று திகைப்புடன் கேட்டான் விஷால்.

“பரசுராமன்... செகந்திராபாத்திலிருந்து வந்து இங்கே எரவிபுரத்துல செட்டிலாகியிருக்கார். நாளைக்கு, நீயும் என்னோடு வரணும்.”

“நானா! நாளைக்கு எனக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. இந்தமுறை நீ மட்டும் போய்ட்டு வா. அடுத்தமுறை நான் வரேன்” என்று நழுவப் பார்த்தான்.

“அந்தக் கதையே வேண்டாம். நீ வந்தே ஆகணும்” என்று உறுதியான குரலில் சொல்ல, விஷால் என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றான்.

“வர்ற தானே...” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

“ம்ம்...” என்ற விஷால், தன் அறைக்குத் திரும்பினான்.

‘இனி என்ன நடக்குமோ?’ என்று பயமாக இருந்தது. அதிலும், இப்போதிருக்கும் சூழ்நிலையில் அவன் அதிகமாகப் பயந்தது பூர்ணிமாவை எண்ணித்தான்.

***************​

கையிருந்த பாலில் ஆடை படிய ஆரம்பித்ததைக் கூட உணராமல் நின்றிருந்தவளை, “ஏன்டி உன்னைப் பால் கேட்டால்… மாடு வாங்கி, பால் கறந்து... கொதிக்கவச்சி கொண்டு வர்றியா?” என்று மாடியிலிருந்து கத்தினாள் மேகா.

அது எதுவும் கருத்தில் பதியாமல் நின்றிருந்ததைக் கவனித்த மேகா, இறங்கி வந்து பூர்ணிமாவின் தோளில் பட்டென தட்டினாள்.

“ஏய்! சென்டிமெண்ட் பைத்தியம். இப்போ, என்ன நினைப்பில் இப்படி நின்னுட்டிருக்க?” என்று எரிச்சலுடன் சப்தமிட்டாள்.

திடுக்கிட்டு உணர்விற்கு வந்தவள், “அது... ஒண்ணுமில்லை... அப்பாவுக்கு ஒரு போன் வந்தது…” என்றாள்.

நெற்றிச் சுருங்க, “ஃபோனா! இந்த நேரத்துல… யாராம்?” என்று கேட்டுக்கொண்டே அவளிடமிருந்து பால் டம்ளரை வாங்கிக் கொண்டாள்.

“ஆ..மாம்... லஷ்மி க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் எம்.டி. மிஸ்டர்.ரி.ஷி. ந.ந்.த.ன்...” என்ற போது அவளது குரல் கம்மியது.

“ரிஷி நந்தன்! ம்ம்... நைஸ் நேம்” என்று புருவத்தை உயர்த்தி மெச்சியபடி, தன் அறையை நோக்கி நடந்தாள் மேகா.
 
  • Love
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
11எழுத நினைக்கும் ஒவ்வொரு கவிதையிலும்

அடம் பிடித்தமர்கிறது உன் காதல்.“விஷால்! கிளம்பலாமா?”

“நான், கட்டாயம் வரணுமா?”

“அவசியம் வரணும்” என்று அவனது முகத்தைப் பார்க்காமலேயே சொன்னவன் திரும்பி, “எனக்கென்னவோ உன்னைப் பார்த்தால் டவுட்டாகவே இருக்கு. என்ன மேன்? என்ன விஷயம்?” என்று குறும்பாகச் சிரித்தான்.

“ஹய்யோ! அதெல்லாம் ஒண்ணுமில்ல. இன்னைக்குச் சூப்பர் மார்க்கெட்ல கொஞ்சம் வேலை இருக்குடா! ஒண்ணு பண்ணலாம்… நீ முன்னால் போ. நான் வேலையை முடிச்சிட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.”

“இந்தக் கதையே வேண்டாம். அரைமணி நேர வேலை. அதை முடிச்சிட்டு சூப்பர் மார்க்கெட் என்ன, செவ்வாய் கிரகத்துக்கே போய்ட்டு வா” என்று பேசிக்கொண்டே காரில் ஏறினான்.

அதற்கு மேலும் அவனுக்கு மறுக்க வழியில்லாமல் போக, ‘சரி போய்த் தான் பார்ப்போமே. இப்போது, அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அவளை எதிர்கொள்வது சற்றுக் கடினம் தான். ஆனாலும், முன்பிருந்த அளவிற்குத் தள்ளி நிறுத்துவாளா? மாட்டாள்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு காரில் ஏறினான்.

**********​

“பூர்ணிமா! என்ன பிரிட்ஜ்ல ஒரு காய் கூட இல்ல?”

“இருந்ததை வச்சி மதிய சமையலை முடிச்சிட்டேன் மேடம்! மார்க்கெட்டுக்குத் தான் கிளம்பிட்டு இருக்கேன்” சமையல் மேடையைச் சுத்தம் செய்துகொண்டே சொன்னாள்.

“எதைக் கேட்டாலும், தயாரா ஒரு பதில்” என்று முணுமுணுத்த வதனாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.

“பூர்ணிமா! அப்பா உன்னைக் கூப்பிடுறாங்க” என்றபடி வந்தாள் மேகா.

“என்னவாம் உங்க அப்பாவுக்கு?” காட்டத்துடன் கேட்டார் வதனா.

“எனக்கென்னம்மா தெரியும்!” தோளைக் குலுக்கினாள் இளையவள்.

“நீ முதலில் வீட்டு வேலையை முடி. மார்கெட்டுக்குக் கிளம்பு. போய்வந்து என்னன்னு கேட்டுக்கோ” என்று பூர்ணிமாவிற்குக் கட்டளையிட்டு விட்டு, கணவரை நாடிச் சென்றார் வதனா.

“பூர்ணிமா!” என்றழைத்தபடி நிமிர்ந்த பரசுராமன், மனைவியைக் கண்டதும், “பூர்ணிமாவை வரச்சொன்னா, நீ வந்திருக்க?” என்று கேள்வியுடன் பார்த்தார்.

“அப்படியென்ன தலை போற வேலைன்னு பார்க்கத்தான்...”

“இன்னைக்குக் க்ளையண்ட்ஸ் வரேன்னு சொல்லியிருந்தாங்க. அவங்க வரும்போது பூர்ணிமாவும் இருக்கணும்.”

“அவள் எதுக்கு இருக்கணும்?”

“என்ன நீ புரிந்து தான் பேசறியா?” என்றவர் தன் முடிவைச் சொல்ல, முகம் சுளித்த வதனா, “நான் புரிஞ்சிதான் பேசறேன். நீங்கதான் புரியாம பேசறீங்க” என்று எரிந்து விழுந்தார்.

“வதனா! பூர்ணிமா இன்னும் எத்தனை நாளைக்கு நம்மளோடு இருப்பா! அவளுக்கும் லைப் இருக்கே. அவளுக்காக நாம எதாவது செய்ய வேண்டாமா?”

“இதுதான் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்ப்பதா?” என்ற மனைவியை, “எதுக்கு இப்படி எரிச்சல்படுற?” என்றார் காட்டமாக.

“பெத்தப் பொண்ணு இருக்கா. அவளுக்கு நல்லது செய்றதை விட்டுட்டு, இவளுக்கு வழி பண்றீங்களா?”

“வதனா! என் பொறுமைக்கும் அளவிருக்கு. அப்படிப் பார்த்தால் மேகாவைவிட, பூர்ணிமா தான் பெரியவ. அவளுக்குத் தான் முதலில் கல்யாணம் செய்யணும்.”

“செய்ங்களேன்… தாராளமாக செய்ங்க. எங்கேயோ கிடந்தவளை, இத்தனை நாள் இந்த வீட்ல வச்சிப் படிக்க வச்சதே பெரிய விஷயம். வளர்ப்புப் பொண்ணுன்னு பெருமையா சொல்றீங்களே, என்னைக்காவது அவள் யாரு? எந்த ஊருன்னு எந்த விபரமாவது நமக்கு முழுசா சொன்னாளா? இதுல, கல்யாணம் ஒண்ணுதான் பாக்கி. நாட்டை ஆள்ற மகராசன் வாசலில் வந்து நிற்பான். உங்க ஆசைப் பொண்ணைக் கட்டிக்கொடுங்க” என்று ஆத்திரத்துடன் சொல்லிக்கொண்டிருக்க, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

“உன் வாய் முகூர்த்தம், நீ சொன்னது பலிக்கட்டும்...” என்று சிரித்த கணவரை, ‘நீங்களும், உங்க பேச்சும்!’ என்பது போல முறைத்தார் வதனா.

“அப்பா! உங்களைப் பார்க்கக் கிளையண்ட்ஸ் வந்திருக்காங்க” என்று அவர்கள் கொடுத்த விசிட்டிங் கார்டை கொடுத்தாள் பூர்ணிமா.

“இவங்களைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். வரச்சொல்லும்மா…” என்றார்.

வராண்டாவில் அமர்ந்திருந்த ரிஷி, கதவைத் திறந்து இயல்பாகத் தங்களை யாரென விசாரித்துவிட்டு, விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

‘இவள் தானே அன்று எரவிபுரம் பீச்சிலும், நேற்று வீட்டின் அருகிலும் பார்த்தது. ஆனால், தன்னை யார் என்றே தெரியாதது போலப் பேசுகிறாளே!’ என்று நினைத்துக் கொண்டவன், விஷாலை திரும்பிப் பார்க்க, அவனோ தன் கையிலிருந்த செய்தித்தாளில் மும்முரமாக மூழ்கிப் போயிருந்தான்.

திரும்பி வந்தவள், இருவருக்கும் அலுவலக அறையைக் காட்டிவிட்டு வீட்டினுள்ளே சென்றவளை, ஆழ்ந்தப் பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான் ரிஷி நந்தன்.

வந்தவர்களை வரவேற்று, தன் மனைவியை அறிமுகப்படுத்தியவர், “வதனா! இவர் மிஸ்டர்.ரிஷி நந்தன். லஷ்மி குரூப் ஆஃப் கம்பெனீஸின் எம்.டி. இவர் மிஸ்டர்.விஷால் லஷ்மி குரூப் ஆஃப் கம்பெனீஸின் ஜெனரல் மேனேஜர். அதோடு, ரெண்டு பேரும் கசின் பிரதர்ஸ்” என்று அவர்களைப் பற்றி விளக்கமாகச் சொல்லிகொண்டிருக்க, சமையலறையில் தலையைப் பிடித்தபடி நின்றிருந்தாள் பூர்ணிமா.

‘இயல்பாக இருப்பதைப் போல நடிப்பது எத்தனைக் கொடுமையான விஷயம். ஆனால், வாழ்க்கையில் பலரும் எப்படி நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஏன் அப்படிப் பார்த்தால், நானும் நடித்துக் கொண்டு தானே இருக்கிறேன்’ என்று தனக்கே சொல்லிக் கொண்டவளை அடுப்பில் பொங்கி வர ஆரம்பித்த பாலின் சப்தம் நினைவிற்கு மீட்டு வந்தது.

அலுவலக அறைக்குள் வந்தமர்ந்த ஐந்து நிமிடத்தில், வரிசையாக தும்மல்கள் போட்டான் விஷால்.

“என்னாச்சு மிஸ்டர். விஷால்?” என்று விசாரித்தார் பரசுராமன்.

அவன் பதில் சொல்வதற்குள் மூக்கில் அரிப்புடன் அடுத்த தும்மல் வர, கைக்குட்டையை வைத்து மூக்கை மூடிக்கொண்டு தும்மலைப் போட்டான்.

“சாரி சார்! அவனுக்கு வார்னிஷ் ஸ்மெல் ஒத்துக்காது” என்று பதிலளித்தான் ரிஷி.

“ஓஹ்! சாரி. நேத்து தான் ஆஃபிஸ் பர்னிச்சர்ஸ்க்கு வார்னிஷ் செய்தோம். முதலிலேயே சொல்லியிருக்கலாமே. இட்ஸ் ஓகே. வாங்க நாம ஹாலில் உட்கார்ந்து பேசுவோம்...” என்று ஹாலுக்கு அழைத்து வந்தார்.

சில நொடிகளில் இஞ்சி டீயின் மணம் நாசியைத் துளைக்க, கையில் டீ ட்ரேயுடன் வந்த பூர்ணிமாவிடமிருந்து அவசரமாக வாங்கிக்கொண்ட வதனா, அனைவருக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தார்.

காலி டிரேயுடன் அங்கிருந்து செல்ல முயன்றவளை, “பூர்ணிமா! நீயும் உட்கார்” என்றார் பரசுராமன்.

“கிச்சன்ல கொஞ்சம் வேலையிருக்குப்பா! முடிச்சிட்டு...” என்றவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவர், “உட்கார்...” என்று அழுத்தமாகச் சொல்ல, எதிர் சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த வதனாவைத் தயக்கத்துடன் பார்த்தவள், பட்டும் படாமலும் அமர்ந்தாள்.

“மிஸ்டர்.ரிஷி...! இவள் பூர்ணிமா. பூர்ணிமா பி.எல்” என்று அறிமுகப்படுத்த விஷால் ஆச்சரியத்துடன் பார்க்க, ரிஷி நந்தன், “ஹாய்” என்றும், விஷால் “வணக்கம்” என்று கையிரண்டை கூப்பிச் சொல்ல, இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

பரசுராமனின் மொபைல் ஒலிக்க, “எக்ஸ்க்யூஸ்மீ...” என்று அங்கிருந்து செல்ல, தன் எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்க்கப் பிடிக்காமல் விஷாலிடம் வதனா பேச ஆரம்பிக்க, ரிஷி ஆராயும் பார்வையுடன் பூர்ணிமாவைப் பார்த்தான்.

சிறு புன்னகை ஒன்றை அவன்பக்கம் வீசிவிட்டு, குறுகுறுவென தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாலும், பூர்ணிமாவின் இதயம் வேகமாகத் துடித்தது. காலையிலிருந்து எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று யோசித்து வைத்திருந்ததெல்லாம் நினைவில் வராமல் ஆட்டம் காட்டியது.

தன்னைக் கண்டதும் தடுமாறுபவளை சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்த ரிஷி நந்தன், டக்டக்கென தன் குதிகால் உயர செருப்பின் உதவியால் சப்தமிட்டபடி படியிறங்கி வந்து கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.

அடர்நீல நிற ஸ்டோன்வாஷ் ஜீன்சும், மஞ்சள் வண்ண குர்தியுமாக ஷாம்புவில் பளபளத்த ‘யூ’ வடிவக்கூந்தல் தோளில் புரள வேகமாக இறங்கி வந்தாள் மேகா. ஹாலில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்துப் புன்னகைத்தபடி, பூர்ணிமா அமர்ந்திருந்த சோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்து அவளது தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டாள்.

மகளைக் கண்ட வதனா, “இவள் எங்க ஒரே பொண்ணு மேகா” என்றவர், “மேகா! இவங்க ஆலப்புழாவில் ரொம்பப் பெரிய குடும்பம். சொந்தமா ஏற்றுமதி பிசினஸ் செய்துட்டு இருக்காங்க. முந்திரி, மிளகு, இறால்... இப்படிச் சொல்லிட்டே போகலாம்...” என்று அவர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போனார்.

‘அம்மாவின் இந்த அறிமுகப்படலம், இன்னைக்கு முடியாது’ என்று எண்ணியவள், “ஹாய்...” என்று புன்னகையுடன் ரிஷியிடம் கைக்குலுக்கி விட்டு, விஷாலிடம் புன்னகையுடன் கை நீட்டினாள். அதுவரை சற்று மட்டுபட்டிருந்த தும்மல், மேகாவுடன் கைகுலுக்கும் போதா வர வேண்டும்.

விஷால் கை நீட்டும் போதே தும்மல் வந்துவிட, கைகுட்டையால் மூக்கை மூடிக்கொண்டு தும்மினான்.

சட்டென முகம் சுருங்க மேகா கையை இழுத்துக்கொண்டாள். அதைக் கண்ட விஷாலுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

மகளின் செயல் கண்ட வதனா, “தப்பா எடுத்துக்காதீங்க… அவளுக்கு இதெல்லாம் கொஞ்சம் அலர்ஜி. மழையில் கூட நனையமாட்டான்னா பார்த்துக்கோங்களேன்…” என்று சொல்ல, விஷால் கடுகடுத்த முகத்துடன் அவளைப் பார்த்தான்.

‘பெரிய மகாராணி! உனக்குச் ஜலதோஷமே பிடிக்காதா? மழை வேற பிடிக்காதா…. அதான், இந்த ஊருக்கு வந்து மாட்டியிருக்க’ என்று மனத்திற்குள் மேகாவைத் திட்டிக்கொண்டிருந்தான்.

ஏனோ, முதல் சந்திப்பே அவள் மீது ஒரு கசப்பை ஏற்படுத்தியது.

“சாரி! முக்கியமான போன்...” என்றபடி வந்த பரசுராமன், “சொல்லுங்க ரிஷி...” என்றார்.

“நான் போனில் சொன்னது தான் சார். வர்க்கலை பீச் ரிசாட் பிரச்சனையை நீங்க பேசித் தீர்த்து வைக்கணும். எங்க கம்பெனியின் லீகல் அட்வைசராக சம்மதிக்கணும்” என்றவன் வர்க்கலை பீச் ரிசார்ட்டின் பத்திரத்தை அவரிடம் கொடுத்தான்.

“கேஸ் விஷயமா எந்த விபரம் தேவையா இருந்தாலும், எப்போ வேண்டுமானாலும் நீங்க பூர்ணிமாவைக் காண்டாக்ட் பண்ணலாம். மத்தபடி, என்னோட முடிவை ரெண்டு மூணு நாளில் சொல்றேன்” என்றபடி பத்திரத்தை வாங்கிக் கொண்டவர், பூர்ணிமாவிடம் கொடுத்தார்.

“கண்டிப்பாக சார்! உங்களுடைய நல்ல பதிலுக்காகக் காத்திருப்பேன்…” என்று புன்னகையுடன் இருவரும் விடைபெற்றுக் கிளம்பினர்.

பரசுராமன் வாசல் வரை வந்து வழியனுப்ப, காரை ரிவர்ஸ் எடுக்க எட்டிப் பார்த்த ரிஷி யதேச்சையாக நிமிர்ந்து மேலே பார்த்தான்.

தனது அறையின் ஜன்னலருகில் நின்றிருந்த பூர்ணிமா, அங்கிருந்து விலகிப்போவது தெரிந்தது. யோசனையுடன் தாடையைத் தடவிக்கொண்டவன், புன்சிரிப்புடன் காரைக் கிளப்பினான்.

வழியெல்லாம் அவளது நினைவே தொடர்ந்தது. அன்று பீச்சில் குழந்தைகளுடன் விளையாடியவள், நேற்று தங்களைக் கண்டதும் காணக்கூடாததைக் கண்டது போல தலை தெறிக்க ஓடியவள், இன்று தங்களை அறிந்திருந்தும்; அறியாதது போலிருந்தவள், கிளம்பும் நேரம் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் பார்த்தது என்று அவளது ஒவ்வொரு செய்கையும் அவனுக்குள் மலர்ந்து கொண்டே இருந்தது.

“விஷால்! பரசுராமன் சார் பத்தி என்ன நினைக்கிற?” கார் ஓட்டியபடி ரிஷி கேட்டான்.

“ம், நல்ல மனுஷன்.”

“அவங்க, ஃபேமலி பற்றி?” என்று ரிஷி விடாமல் கேட்டான்.

திரும்பிப் பார்த்த விஷால், “நல்லவங்க தான்” என்றான் பட்டும்படாமல்.

“அப்புறம்...” என்று சற்று தயங்கியவன், “பூர்ணா பற்றி…” என்றான்.

விழிகள் தெறிப்பதைப் போலப் பார்த்தவன், “பூ...பூர்ணாவா...? உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க? கிளம்பும் போதும் இதே பேர் சொல்லிக் கூப்பிட்ட. அவ பேர் பூர்ணா இல்லை பூர்ணிமா” என்றான் கடுப்புடன்.

“ம்ச்சு... ரொம்ப முக்கியம். அவளைப் பத்தி என்ன நினைக்கிற?” என்று கேட்டான்.

“நினைக்க என்னயிருக்கு? நல்லப் பொண்ணு” என்றான்.

“அவ்வளவு தானா?”

“எதுக்கு இப்படித் துருவித் துருவிக் கேள்வி கேட்குற? பார்த்ததுமே எல்லோரையும் புரிஞ்சிக்க முடியுமா?” என்று எரிச்சலுடன் கேட்டான்.

அவனது எரிச்சலை கண்டுக்கொள்ளாமல், “அதில்லைடா, நான் கேட்பது உனக்குப் புரியல. எனக்கென்னவோ… பூர்ணா அந்தக் குடும்பத்தோடு ஒட்டாமல் தெரியறா” என்றான்.

இவன் எப்போது அவளது பேச்சை விடுவான் என்று நினைத்த விஷாலுக்கு, உள்ளுக்குள் எரிச்சல் மண்டியது.

“ஒட்டித் தெரியறது... ஒட்டாம தெரியறது எதுவும் எனக்குத் தெரியலை. இதோட, இந்தப் பேச்சை விட்டுட்டு காரை ஒழுங்கா ஓட்டு” என்று சிடுசிடுத்தான்.

“ஏன்டா கடுப்பாகற? பூர்ணா அவங்கள்ல வேறுபட்டு தெரியறா. அவரோட மனைவி, இவள் எங்க ஒரே பொண்ணுன்னு மேகாவை அறிமுகப்படுத்தறாங்க. பூர்ணா, வக்கீல் சாரை அப்பான்னு கூப்பிடுறா. ஒரே குழப்பமாக இருக்குடா” என்று தாடையைத் தடவிக்கொண்டே சொன்னான்.

“அதுக்கு நான் என்னடா செய்யணும்?’ என்பது போலத் தமையனைப் பார்த்தான்.

சிறிதுநேர மௌனத்திற்கு பின், “ஒருவேளை இப்படியிருக்குமோ?” என்று வினவ, விஷால் ‘இப்போ என்ன?’ என்பதைப் போலப் பரிதாபமாகப் பார்த்தான்.

“இந்தம்மா சாருக்கு இரண்டாம் தாரமாக…” என்று இழுக்க, அசுவாரசியமாக ரிஷியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், பதறிப்போய் நிமிர்ந்து அமர்ந்தான்.

“டேய்… எப்போல இருந்துடா இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்ச...? அப்படியே இருந்தாலும் நாம என்ன பண்ணமுடியும்?” எனப் பதற்றத்துடன் சொன்னவன், ’இந்த விஷயம் மட்டும் அந்தம்மா காதுக்குப் போகணும், அப்போ தெரியும் சேதி..’ என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டு, “ஏன் பூர்ணிமா அந்த வீட்டுப் பெண்ணாக இல்லாமல் கூட இருக்கலாமே...” என்று சொன்னதும், ரிஷி சட்டென பிரேக்கை அழுத்த கார் கிறீச்சிட்டு நின்றது.

அவனுக்கென்னவோ, அந்த நினைப்பே பிடிக்கவில்லை. ஆனால், நடந்ததையெல்லாம் தனக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தான். வக்கீல் சார் உட்காரச் சொன்னதும், அவள் தயக்கத்துடன் அனுமதிக்காக வதனாவைப் பார்த்ததும், அவரோ வெறுப்புடன் உட்கார்ந்து தொலை என்பதுபோல முகத்தைத் திரும்பிக் கொண்டதையும் கண்டவனுக்கு, இதயத்தைப் பிசைவது போலிருந்தது.

‘தான் இருக்கும் வீட்டிலேயே எந்தச் சுதந்திரமும் இல்லாமல்... ச்சே! என்ன வாழ்க்கை இது? யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது...’ என்று நினைத்துக்கொண்டான்.

“விஷால்...” என்றழைத்தபடி திரும்பியவன், காதில் ஹெட் போனுடன், கண் மூடி அமர்ந்திருப்பதைக் கண்டதும் சொல்லவந்ததை நிறுத்திவிட்டுச் சாலையில் கவனத்தைச் செலுத்த முயன்றான்.

ஆனால், அனுமதி இல்லாமல் பூர்ணிமா, அவனது மனம் முழுதும் வியாபித்து அவனது நினைவுகளையும் ஆக்ரமிக்க ஆரம்பித்திருந்தாள்.

ரிஷியின் கேள்விகளிலிருந்து தப்பிக்க, காதில் ஹெட்போனுடன் கண்களை மூடி அமர்ந்திருந்தாலும் விஷாலின் மனம், பூர்ணிமாவின் நினைவுகளால் நிரம்பியிருந்தது.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
12

மிதந்து வரும் காற்றாய் நீ

சுவாசமிழந்து தவிக்கிறேன் நான்“அப்பா!” வராண்டாவில் நடந்து கொண்டிருந்தவரை அழைத்தாள் பூர்ணிமா.

“வா பூர்ணிமா! வேலையெல்லாம் முடிஞ்சிதா?”

“ஆச்சுப்பா!” என்றபடியே அவருடன் சேர்ந்து நடந்தவள் ஏதோ சொல்ல முயல்வதும் பின் தயங்குவதையும், கண்டும் காணாமல் இருந்தார் பரசுராமன்.

“என்னப்பா முடிவு செய்திருக்கீங்க?” என்று மெலிந்த குரலில் கேட்டாள்.

“எதைப் பற்றிம்மா?” என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

“அ..தான்ப்பா, லஷ்மி குரூப் ஆப் கம்பெனியோட ஆஃபர்...” என்று இழுத்தாள்.

நடந்து கொண்டிருந்தவர் நின்று திரும்பிப் பார்த்து, “என்ன சொல்லலாம்னு நீ நினைக்கிற?” என்று அவளையே திருப்பிக் கேட்டார்.

தயக்கத்துடன், “நா...ன் என்னப்பா சொல்றது? உங்க முடிவை நீங்க தானே சொல்லணும்” என்றாள்.

“முடிவு என்னுடையதா இருக்கலாம். ஆனா, இத்தனை ஆர்வமா கேட்கறியே… அதனால கேட்டேன்” என்றார் பிடிகொடுக்காமல்.

‘காலையிலிருந்து மனத்திற்குள் நமநமத்துக் கொண்டிருந்த கேள்விக்கு விடைதெரியாமல் இரவு நிம்மதியாகப் படுக்கக்கூட முடியாது, என்று நினைத்துத் தான் இவரிடம் பேசவந்ததே. அதுவே முதலுக்கு மோசமாகப் போய்விடும் போல் இருக்கிறதே’ என்று நினைத்தபடி, தவிப்பை வெளிக்காட்டாமல் இருக்க பெரும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தாள்.

“சொந்த ஊருக்கு நீங்க வந்ததே... சம்பாதித்தது போதும். இனி, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடணும்னு நினைச்சித் தானே. இதில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் மல்ஹோத்ரா கேஸ் மட்டும் பாக்கியிருக்கு. அதுக்காகவும் நீங்க மாதத்தில் ரெண்டு, மூணு நாள் டெல்லி போக வேண்டியிருக்கு. இதில் இந்த வேலையை எப்படிப்பா ஏத்துக்க முடியும்?” என்று சொன்னாள்.

அவளைக் கூர்ந்து பார்த்தவர், “அப்போ, என் நிலைமை உனக்கு நல்லா புரிஞ்சிருக்கு” என்று புன்முறுவல் பூத்தார்.

பதிலுக்குச் சிரித்தவளிடம், “அதுக்குத் தான் நான் ஒரு முடிவு செய்திருக்கேன்” என்றவர் தன் முடிவையும் சொல்ல, பூர்ணிமா அதிர்ந்து போனாள்.

திகைப்புடன், “நான் எப்படி இந்த வேலைக்கு? அவங்க உங்க அனுபவத்தை வச்சித்தானே உங்களிடம் கேட்டிருப்பாங்க. நான் என்றால், அவங்க எப்படிச் சம்மதிப்பாங்க?” என்றாள் திணறலுடன்.

“அவங்க என்ன சொல்வாங்களோன்னு நினைத்து நீ தயங்கினா, அதை விட்டுவிடு. நான் அவங்ககிட்டப் பேசிக்கிறேன். அங்கே வேலைக்குப் போக உனக்குச் சம்மதமா இல்லையான்னு மட்டும் சொல்லு” என்றார்.

பதில் சொல்லாமல் மௌனமாக குழப்பத்துடன் சில நொடிகள் நின்றவள், “இல்லப்பா! இது சரியா வராது. வீணான பிரச்சனைகள் தான் வரும்” என்றாள் தவிப்புடன்.

“என்ன பிரச்சனை வரும்னு சொல்ற?” என்றபடி அவளை ஆழ்ந்து பார்த்தார்.

“அது வந்து..., வேலையில் பிரச்சனை வரும்னு சொல்றேன்...”

சற்று சத்தமாகச் சிரித்தவர், “பூர்ணிமா! உன்னை இந்த வேலைக்கு அனுப்பறேன்னு சொன்னா, அதுக்கு உன்மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையும், உன்னுடைய திறமையும் தான் காரணம்ங்கறத ஏன் மறந்துட்ட? அதுக்கும் மேலே என்னுடைய ஒத்துழைப்பு உனக்குக் கட்டாயம் உண்டு. நான் நாளைக்கே, ரிஷியிடம் பேசிடுறேன்...” என்று அழுத்தமாகச் சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

செய்வதறியாமல் எப்போதும் போல தலையை மட்டும் அசைத்துத் தன் அரைகுறை சம்மதத்தைச் சொல்லிவிட்டு, “குட் நைட்ப்பா...” என்றவள் திரும்பி நடந்தாள்.

இரண்டடி நடந்தவளை, “பூர்ணிமா... உனக்கு விஷாலையும், ரிஷியையும் ஏற்கெனவே தெரியுமா?” என்று கேட்டார்.

அவள் சற்றும் எதிர்பாராத கேள்வி தான். ஆனால், பட்டென, “தெரியாதுப்பா! ஆனால், பார்த்திருக்கேன்” என்றாள்.

“எங்கே... ஆலப்புழாவிலா?”

அவசரமாக தலையசைத்து மறுத்தவள், “நேத்து.. திருவல்லத்தில் கோவில் போன போது அவர் கார் வருவதைக் கவனிக்காமல் போனதில் சகதி மேலே தெறிச்சிட்டுது. அப்படித் தான் தெரியும்…” என்று மென்று விழுங்கி திக்கித் திணறிச் சொல்லிமுடிக்கும் வரை, பரசுராமன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஓ...! உன் அத்தை வீடு ஆலப்புழா தானே. அதான், ஒருவேளை உனக்கு இவங்களைத் தெரியுமோன்னு கேட்டேன்” என்று சொன்னதும் தான், அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.

“நான் போகட்டுமாப்பா...” என்றாள்.

“ம்ம்...” என்று உத்தரவு கொடுத்ததும் தன் அறைக்குச் சென்றவளுக்கு அப்போது தெரியவில்லை, பரசுராமனின் மனத்தில் தான் சந்தேக வித்தை விதைத்துவிட்டு செல்கிறோம் என்று .13


விலகிச் செல்ல முடியாத என்

நிழல் நீயாகிறாய்.

உனைச் சேர முடியாத

உடலாய் நான்.அடுத்த இரண்டு நாட்களில் பரசுராமன் என்ன சொன்னாரோ பூர்ணிமாவை, ல‌ஷ்மி குரூப் ஆஃப் கம்பெனீஸின் சட்ட வல்லுனராக நியமிக்கப்படுவதாக, வேலைக்கான ஆவணத்துடன் வீட்டிற்கே வந்துவிட்டான் ரிஷி நந்தன்.

வேலைக்கான உத்தரவைப் பரசுராமனிடம் கொடுக்க அவரோ, பூர்ணிமாவை அழைத்து அவளிடமே கொடுக்கச் செய்தார்.

“லஷ்மி குழுமத்தின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக உங்களை வரவேற்கிறோம்...” என்றவன் தன் கையை நீட்ட, உத்தரவு கடிதத்தை வாங்கிக்கொண்டவள் தயக்கத்துடன் தன் கரத்தை அவனது கரத்துடன் கோர்க்க, அந்த நொடி என்ன தோன்றியதோ இருவரின் பார்வையும் ஒன்றாக சங்கமிக்க, பூர்ணிமா சட்டென கையை இழுத்துக்கொண்டாள்.

சிரித்தபடி மற்றவருடன் பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள்ளே பயமாக இருந்தது.

‘தான் இந்த வேலைக்குச் சம்மதித்திருக்கவே கூடாது’ என்று மிகத் தாமதமாக நினைத்துக் கொண்டாள். ‘வரக்கூடாத இடத்திற்கு வந்தாயிற்று. பார்க்கக் கூடாதவனைப் பார்த்தும் ஆயிற்று. இனி, நடக்கக் கூடாதது என்னென்ன நடக்கப் போகிறதோ?’ என்று எண்ணிப் பார்த்தவளுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வருவது போலிருந்தது.

***************​

“வாங்க சார்! வெல்கம் பூர்ணிமா!” என்று புன்சிரிப்புடன் தங்களை வரவேற்ற ரிஷி நந்தனுக்குப் போனால் போகிறது என்பது போல ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, பரசுராமனுடன் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.

“சார்! நம்ம ஸ்டாஃப்ஸுக்கு அறிமுகப்படுத்த ஒரு சின்ன மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கேன்” என்று அவர்களை மீட்டிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.

“நம் கம்பெனியின் புதிய சட்ட வல்லுநர்” என்று அவளை அறிமுகப்படுத்தி வைத்தான். அலுவலகச் சம்பிரதாயங்கள் முடிந்ததும், “அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கேபினுக்கு அழைத்துச் சென்றான்.

“உட்காருங்க...” என்று சுழல் நாற்காலியைப் பிடித்தபடி சொன்னான் ரிஷிநந்தன்.

மனத்திற்குள் தன் பெற்றோரையும், அத்தையையும் வணங்கியவள், பரசுராமனின் காலைத் தொட்டு வணங்கிய போது, அவளையும் அறியாமல் கண்கள் கலங்கின.

அவளது தலையில் கைவைத்து ஆசிர்வதித்தவர், வாழ்த்தி விட்டுக் கிளம்ப, வழியனுப்ப எழுந்தவளைத் தடுத்து, அமரச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். அவரை வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்த ரிஷி, அவளது இருக்கையின் எதிரில் அமர்ந்தான்.

சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவளுக்கு, உள்ளுக்குள் சந்தோஷமாகவே இருந்தது. அவள் முகமும் அதை பிரதிபலித்ததைப் புன்னகையுடன் பார்த்தான்.

“வெல். நான் ஒரு பதினோரு மணி வாக்கில் வந்து உங்களை நம்ம ஃபேக்டரீஸைச் சுத்திக் காட்டக் கூட்டிட்டுப் போகிறேன்” என்றான்.

சரியென தலையை ஆட்டினாள்.

“ஓகே மிஸ்.பூர்ணா! தயாராக இருங்க” என்றவன் கிளம்ப எத்தனிக்க, “ஒரு நிமிடம் சார்...” என்று அவனை அழைத்தாள்.

திரும்பிப் பார்த்தவனிடம், “என் பெயர் பூர்ணிமா!” என்றாள்.

அவனோ சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், “சோ...” என்று கண்கள் இடுங்கப் பார்த்தான்.

எரிச்சலுடன் அவனைப் பார்த்தவள், “என் பெயர் பூர்ணிமா. பூர்ணா இல்ல” என்றாள் அழுத்தமாக.

அலட்சியமாக தோளைக் குலுக்கியவன், “இரண்டுக்கும் பெரிதா எந்த வித்தியாசமும் இல்லையே. அதோடு, பெயரில் என்னயிருக்கு?” என்று கேட்டான்.

அவளுக்கு, ‘ஏன் இவனிடம் வாயை கொடுத்தோம்!’ என்றிருந்தது.

அவளது அமைதியைக் கண்டு மனத்திற்குள் சிரித்துக்கொண்டவன், “பதினோரு மணிக்குத் தயாராக இருங்க பூர்ணா!” என்று அவளது பெயரை அழுத்திச் சொல்லிவிட்டுச் சென்றதும், பொத்தென இருக்கையில் அமர்ந்தாள்.

‘இவன் எல்லோரிடமும் இப்படி அடாவடியாகத் தான் பழகுவானா! வந்த முதல் நாளே தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டாள்.

சொன்னபடியே வந்தவன், அவளை அழைத்துக்கொண்டு முதலில் முந்திரி தோப்பிற்குக் கூட்டிச் சென்றான்.

“முந்திரி, சாப்பிட எத்தனை நல்லா இருக்குமோ, அதேபோல அதைப் பத்தின விஷயங்களும் ரொம்பவே சுவாரசியமானது. வாங்க, நம்ம தோப்புக்குள்ள அப்படியே நடந்துட்டு வருவோம்...” என்றவன், அவளை அழைத்துக்கொண்டு நடந்தான்.

முந்திரி மரம் அழகாகப் பக்கவாட்டில் படர்ந்து அடர்த்தியாக ஒரு குடை போலக் காட்சியளித்ததை, ரசித்தபடி அவனுடன் நடந்தாள்.

“உங்களுக்கு, முந்திரியோட பிறந்த வீட்டைப் பத்தித் தெரியுமா?” எனக் கேட்டான்.

அவனது கேள்வியை முழுவதுமாக உள்வாங்காதவள், “என்ன கேட்டீங்க?” என்றாள்.

“முந்திரியோட, அம்மா வீடு தெரியுமான்னு கேட்டேன்?” என்றான் மீண்டும்.

“அம்மா வீடா!” என நெற்றிச் சுருங்க வினவினாள்.

“ஓ! நீங்க லாயர் இல்லயா… அதான், கேள்வியா கேட்கறீங்க” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அவனைப் போலியாக முறைத்தாலும், அவளது மனத்தை வெளிப்படுத்துவதைப் போல இதழ்கள் முறுவலைச் சிந்தின.

அவளது சிறு நகையை இரசித்தவன், ‘ஹப்பா! உங்களுக்குச் சிரிக்கத் தெரியுமா!’ என்னும் அதரப் பழமையான வார்த்தைகளை அங்கே உபயோகப்படுத்தாமல், தனது பேச்சில் கவனமானான்.

“முந்திரிக்கு, அம்மா வீடு பிரேசில்” என்றவனைச் சுவாரசியமாகப் பார்த்தாள்.

“போர்ச்சுகீஸ் தான் அதை நம்ம ஊருக்குக் கடத்திட்டு வந்து பயிரிட்டாங்க. ஆனால், இதைக் கொண்டு வந்தபோது, ஒரு காலத்தில் இந்த முந்திரி இத்தனை விலையில் விற்கப்படும்னு அவங்க நினைத்திருக்கவே மாட்டாங்க.

ஆரம்பத்துல கடற்கரை ஓரமா கடல் அரிப்பைத் தடுக்கத் தான் இந்த மரம் பயிரிடப்பட்டுச்சி. முந்திரிப் பழம், பூவிலிருந்து உருவாகும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்புன்னு கலர் கலரா இருக்கும்.

இது பழம்னாலும், பழவகை கிடையாது. இதோட டேஸ்டுக்காகவும், கொட்டையோட அளவுக்கு ஏத்தமாதிரி விலையோட இருக்கும். இந்த முந்திரிக்காக கப்பல்காரர்கள், தாங்கள் வந்த கப்பலையே விற்று வாங்கித் தின்றதா ஒரு நாட்டுப்புறக் கதைகூட இருக்கு” என்று அவன் சொல்லிக்கொண்டிருந்ததை, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“போரடிக்கிறேனா!” என்றான்.

“இல்லயில்ல. இதையெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றாள் மென்மையாக.

வரவேற்பாகப் புன்னகைத்தவன், “முந்திரியோட பழம் ஒயின், மதுபானம் தயாரிக்கவும், மரத்தோட அடிப்பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் பிசின், மரப்பொருட்களை பூச்சியிடமிருந்து பாதுகாக்கவும் பூசப்படுது.

பச்சைக் கொட்டையை அப்படியே, தொடவும், சாப்பிடவும் கூடாது. அதிலிருந்து வரும் பால் கைல பட்டா, அலர்ஜியாகிடும். மதம் பிடித்த யானையை அடக்க அந்தப் பாலை பாரம்பரியமாகப் பயன்படுத்தறாங்க” என்று பல விவரங்களைச் சொல்லிக்கொண்டே அருகிலிருந்த முந்திரி ஃபாக்டரிக்கு அழைத்துச் சென்றான்.

மாடியிலிருந்த அலுவலக அறையில் அமர வைத்தவன், தாகத்திற்கு எலுமிச்சைப் பழமும், வெல்லமும் சேர்த்து கலந்த பானகம் கொண்டுவரச் செய்து கொடுத்தான். அதைக் குடித்ததும், அவளுக்குச் சற்று புத்துணர்ச்சியாக இருந்தது.

அங்கிருந்தே முழு ஃபாக்டரியையும் பார்க்கும் வகையில் கட்டப்பட்டிருந்த அலுவலக அறையின், வெளிப் பகுதிக்கு அழைத்து வந்தான்.

“இந்த இடத்துல தோலோடு கூடிய முந்திரிக்கொட்டையை சிலிண்டருக்குள் போட்டு, சூடுபடுத்துவாங்க. அந்தப் பழம் வெடித்து, முந்திரி தனியாகப் பிரியும். உடையாமல் இருக்கும் முந்திரிப்பருப்பு முதல் ரகம்ன்னும், இரண்டாகப் பிளந்த பருப்பை இரண்டாம் ரகம்ன்னும், தூள் தூளான முந்திரிப் பருப்பை மூன்றாம் ரகம்ன்னும் தரம்பிரிச்சி அனுப்புவாங்க.

அதிலும், கடுகு அளவில் கிடைக்கும் முந்திரிப் பருப்பையும் சேல்ஸ்க்கு அனுப்பிடுவோம். மசாலாக்களில் சேர்த்து அரைக்க, இது உதவும். நம்ம ப்ராடக்ட்ஸ் எல்லாமே நல்ல தரமானதா இருக்கும். பாரின் எக்ஸ்போர்ட்டும் இருக்கு” என்று அவளுக்கு ஒரு பாடமே எடுத்து முடித்தான்.

ஆரம்பத்தில் அவனது பேச்சை அசுவாரசியமாக கேட்க ஆரம்பித்தவள், அவன் சொன்ன விதத்தில் லயித்துப் போனாள். காலையிலிருந்த எரிச்சல் மறைந்து, இயல்பாக அவனுடன் உரையாட முடிந்தது.

“சார்! நீங்க இன்னொரு பானகம் வாங்கிக் குடிங்க. எனக்குப் பாடம் எடுத்து நீங்கதான் ரொம்ப டயர்டா தெரியறீங்க” என்று சிரித்தவளை ரசனையுடன் பார்த்தான்.

மதிய உணவு நேரம் ஆனதால், அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல், “இன்னைக்கு என்னுடைய ட்ரீட்” என்று அவளை அழைத்துக்கொண்டு ரெஸ்டாரண்டிற்குச் சென்றான்.

விஷாலுக்குப் போன் செய்து வரச்சொல்ல அவனோ, தனக்கு முக்கியமான வேலை இருக்கிறது என்று மறுத்துவிட்டான்.

இருவரும் உணவை முடித்துக்கொண்டதும் அவளை, வர்க்கலை பீச் ரிசாட்டிற்கு அழைத்துச் சென்றான். பாதி கட்டிமுடிக்கப்பட்ட நிலையிலிருந்த கட்டிடத்தைச் சுற்றிக் காண்பித்துவிட்டு, அவளை அலுவலகத்திற்கு அழைத்து வந்தான்.

காரிலிருந்து இறங்கியவள் அவன் அமர்ந்திருந்த பக்கமாக வந்து, “சார்! சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. காரை இத்தனை வேகமா ஓட்டாதீங்க. அது உங்களுக்கும் நல்லதில்ல; எதிர்ல வருபவருக்கும் நல்லதில்ல” என்று சொல்லிவிட்டுத் தன் அறையை நோக்கி நடந்தவளை, மலர்ந்த புன்னகையுடன் பார்த்தான்.

மனத்திற்குள் சில்லென்ற ஒரு உணர்வு தாக்கியது. அந்த உணர்விற்குப் பெயர் என்ன என்று ம் அவனுக்குத் தெரிந்திருந்தது.
 
  • Love
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
14

யாருக்கும் கொடுக்காமல் சேர்த்து

வைத்திருக்கும் அத்தனைக் காதல்களும்

நம் காதலில் உயிர்த்துக்கொண்டிருக்கிறது.சந்தோஷத்துடன் பாடல் ஒன்றை விசிலடித்தபடி வீட்டிற்கு வந்தவன், தனது அறை பால்கனியில் வந்து நின்றான்.

மனத்தில் தென்றல் வீசியது. வானில் மேகங்களுக்கிடையே ஒளிந்து ஒளிந்து தன் முகம் காட்டிக்கொண்டிருந்த முழுநிலவில் கூட, அவளது முகம். மேனியைத் தழுவிய குளிர்க் காற்று, அவனது உடலைச் சிலிர்க்கச் செய்தது. அவளது நினைவோ, அவனது மனத்தைச் சிலிர்க்க வைத்தது.

முதன்முதலில் அவளைப் பார்த்த நொடி நினைவில் வந்தது. எரவிபுரம் பீச். விஷால் முக்கியமாக என்னவோ பேசவேண்டும் என்று தன்னை வரச்சொன்னதால் அவனுக்காக காத்திருந்தவனுக்கு நேரமாக ஆக எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது.

அதேநேரம் அவன் யாருக்காக காத்திருந்தானோ அவனிடமிருந்து மொபைலில் அழைப்புவர, கோபத்துடன், “என்னடா நினைச்சிட்டு இருக்க...?” என்று கத்த ஆரம்பிக்கும் போதே,

“சாரிடா முக்கியமான வேலையில் மாட்டிக்கிட்டேன். நீ வீட்டுக்குக் கிளம்பு...” என்று சொல்லிவிட்டு பட்டென போனை வைக்க ரிஷிக்குக் கோபத்தில் மொபைலைத் தூக்கி வீசியடிக்கவேண்டும் என்று ஆத்திரம் எழுந்ததது.

வேகமாக பேண்ட்டில் ஒட்டியிருந்த மணலை தட்டிக்கொண்டே எழுந்தவன், சற்று தூரத்தில் ஒரு பெண் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தவள், நிமிர்ந்து கீழ் வானம் சிவக்க ஓய்வெடுக்க சென்றுக்கொண்டிருந்த சூரியனைப் பார்த்ததும் அவள் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தையும் பார்த்தவன், அந்தப் பெண்ணை அதிசயமாகப் பார்த்தான்.

ரோஜா வண்ண சுடிதாரில், இடுப்புவரை நீண்டிருந்த கூந்தல், அதில் கொஞ்சமே கொஞ்சம் கிள்ளி வைத்திருந்த முல்லைப் பூ. காதுடன் ஒட்டியிருந்த ஒற்றை முத்துத் தோடு, மூக்கில் டாலடித்த ஒற்றை வெள்ளைக்கல் மூக்குத்தி. ஒற்றைச் சரமாகக் கழுத்தோடு ஒட்டியிருந்த முத்து மணி, கைகளில் கண்ணாடி வளையல், என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வந்தவனது பார்வை அவளது பாதத்தில் பதிந்தது.

‘அழகான பாதம்... கொலுசு போட்டிருந்தால் நன்றாக இருக்கும் போட்டிருக்கிறாளா? தெரியவில்லையே’ என்று ஆராய்ந்து கொண்டிருக்க மீண்டும் அவனது மொபைல் ஒலித்தது.

எரிச்சலுடன், “ஏன்டா படுபாவி..., வரச்சொன்னியேன்னு இருக்கும் வேலையெல்லாம் விட்டுட்டு உனக்காக இங்கே வந்து அரைமணி நேரமா உட்கார்ந்திருக்கேன். நீ என்னடான்னா நிதானமா, வேற வேலை வந்ததால் வரமுடியாதுன்னு பொறுமையா சொல்ற. நான் இப்போ உன்னிடம் பேசும் நிலைல இல்ல. முதல்ல போனை வை” என்று சினந்தவன் நிமிர எதிரில் நின்றிருந்தவள் இப்போது நேராக இவனைப் பார்த்தபடி நின்றிருக்க, பக்கவாட்டில் தெரிந்த அவளது தோற்றம் இப்போது முழுதாக அவனுக்குத் தெரிந்தது.

அவனது இமைகள் விரிந்தன. ‘இனிமை ததும்பும் முகம்?’ என்று யோசித்தவன், நொடியில் சுதாரித்துக்கொண்டான்.

‘இதென்ன! முன்பின் தெரியாத பெண்ணை, இப்படிப் பார்த்துக் கொண்டு’ என்று தலையில் தட்டிக்கொண்டு காரை நோக்கி நடந்தான்.

அதன்பிறகு, அவளை மறந்தும் போனான். ஆனால், மீண்டும் அவளைத் தன் வீட்டருகில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டுப் போனான்.

‘தன்னைக் கண்டதும் அவள் விழிகளில் தெரிந்தது என்ன? என்ன பார்வை அது? நீண்ட அகன்ற விழிகளால், ஆளை விழுங்கும் பார்வை. ஆனால், நொடியில் மாறிப்போனாளே? இல்லை… தனக்குத் தான் அப்படித் தோன்றியதா?’ என்று நினைத்தவன் மறுநொடியே அந்த நினைவைக் கைவிட்டான்.

‘நிச்சயமாக இல்லை. நான் முதலில் நிமிர்ந்து பார்த்தபோது அவள் முகத்தில் ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, சந்தோஷம் தான் தெரிந்தது. தான் எதிர்பார்க்காத ஒன்றைப் பார்த்தால் எப்படி அதிசயப்படுவோமோ, அப்படித்தான் இருந்தது அவளது பார்வை. ஆனால், திடீரென அவளது முகம் மாறக் காரணம் என்ன?’ குழம்பிப் போனான்.

‘விஷால், தன்னிடம் அவளைத் தெரியுமா? என்று கேட்டதற்குக் கூட இயல்பாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாலும், என் மனம் முழுவதும் அவள் நிரம்பியிருந்தாள்.

இரவு படுத்தபோதும் அவளது பார்வையை மறக்கமுடியவில்லை. பார்த்தவுடன் மனத்தில் ஒட்டிக்கொண்ட முகம். சுண்டியிழுக்கும் நிறமில்லை. ஆளை வீழ்த்தும் அழகில்லை. ஆனால், அந்த அழகில் ஒரு அமைதி இருந்தது. நளினமிருந்தது. மருண்ட அந்தப் பார்வைக்கூட அழகாகவே இருந்தது. கணப்பொழுது தான் இருவரது பார்வையும் சந்தித்துக்கொண்டன. ஆனால், அதற்குள் என் மனத்தை ஆக்கிரமித்துவிட்டாளா?

ரிஷி தன் நிலையிலேயே இல்லை. அவனுக்கு இப்போது தெரிய வேண்டிய ஒரே விஷயம் தன்னைக் கண்டு பிரமித்து நின்றவள், அச்சத்துடன் ஓடக் காரணம் என்ன? அதுமட்டும் புரியவில்லை. யோசித்து யோசித்துக் குழப்பம் தான் அதிகரித்தது.

முன்தினம் இரவு அம்மா போன் செய்து பெண் பார்க்க வரச்சொன்ன போதுகூட, இல்லாத வேலையை இருப்பதாகக் கூறி மறுக்க ஒரே காரணம் பூர்ணிமா. அவளது நிலவு முகம், அவனது தூக்கத்தைத் தூர விரட்டியடித்திருந்தது. எங்கே? எப்படி? அவளைச் சந்திப்பதென்ற யோசனையுடனேயே, பரசுராமனைச் சந்திக்கச் சென்றவனுக்கு மீண்டும் தன் தேவதையை அங்கே கண்டபோது இதயம் வேகமாகத் துடித்ததை உணரமுடிந்தது.

அப்போதே, முடிவு செய்துவிட்டான். எப்படியும் பரசுராமனைச் சம்மதிக்கச் செய்வது. அத்துடன், பூர்ணிமாவையும் எப்படியாவது நெருங்க வேண்டும். அவளும் ஒரு வக்கீல் என்று தெரிந்ததும், அதற்காக அவளுக்கு ஒரு புதிய வேலையைக் கூட உருவாக்கிக் கொடுக்கும் அளவிற்கு முடிவெடுத்திருந்தான்.

பூர்ணிமா என்ற பெயரைக்கூட, பூர்ணா என்று சுருக்கிவிட்டான்.

‘பூரணமானவள்! தனக்காக மட்டுமே படைக்கப்பட்ட, பரிபூரணமானவள்’ என்று உறுதியாக நம்பினான்.

பரசுராமனின் பதிலுக்காகக் காத்திருந்தவனுக்கு, அவர் சொன்ன செய்தி மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது. சற்று யோசித்துச் சொல்வதாகப் பேச்சுக்குச் சொன்னாலும், இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கமுடியாமல், வேலைக்கான உத்தரவுடன் தானே நேரில் கிளம்பிவிட்டான்.

சில மணித்துளிகள் மட்டுமே பார்த்த ஒரு பெண்ணுக்காக, இப்படிப் பித்துப் பிடித்து அலைவாய் என்று யாரேனும் சொல்லியிருந்தால், சப்தம் போட்டுச் சிரித்திருப்பான். ஆனால், இவள் மீது வந்தது வெறும் ஈர்ப்போ, காதலோ அல்ல. அதற்கும் மேலே, ஏதோவொரு பந்தம்.

மனத்தில் நிறைந்திருந்த மகிழ்வுடன் முகம் விகசிக்க நடந்து கொண்டிருந்தவனை நோக்கி வந்தான் விஷால்.

“வாடா! காலையில் மீட்டிங் முடிஞ்சி ஓடின. லஞ்சுக்குக் கூப்பிட்டாலும் பிகு பண்ணிக்கொண்டு போன. இப்போ, என்னைத் தேடி வந்திருக்க…” என்றான் கிண்டலாக.

பேசிக்கொண்டிருந்தாலும், அவனது முகமும், கண்களும் தான் இந்த இடத்திலேயே இல்லை என்பதைத் தம்பட்டம் அடிக்காத குறையாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தன.

“அதெல்லாம் இருக்கட்டும். நீயென்ன ஒரே பரபரப்பா இருக்கறது மாதிரி தெரியுது? ஆளே வித்தியாசமா தெரியற” என்று புன்னகையுடன் கேட்டான்.

“அப்படியாடா தெரியுது?” என்றவன் தன்னைச் சற்று நிதானித்துக்கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“பின்னே! நான் இங்கே வந்து நிக்கறது கூடத் தெரியாமல், யோசனையுடன் சுத்திட்டேயிருந்த. நானா குரல் கொடுத்ததும் தானே என்னைக் கவனித்த” என்றான்.

சிரித்தவன் தலையை கோதிக்கொண்டான். இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு, “ஒண்ணுமில்லை. முக்கியமான விஷயம்னா, நானே சொல்வேன்” என்றான்.

“ஓகே...” என்று அதற்குமேல் எதுவும் துருவாமல், “நீ எப்போ ஆலப்புழா கிளம்பற? பெரியம்மா போன் செய்தும், நீ எடுக்கலையாம். எனக்குப் போன் பண்ணிக் கேட்டாங்க...”

“இப்போதைக்குப் போற ஐடியா இல்ல” என்றான் விட்டேத்தியாக.

“நீ செய்றது கொஞ்சங்கூட நல்லாயில்ல சொல்லிட்டேன். எப்போ வேணும்னாலும் கிளம்பிப் போ. ஆனா, பெரியம்மாக்குப் போன் செய்து பேசு. ரொம்ப வருத்தப்படறாங்க” என்றான் கவலையுடன்.

“ஓகே ப்ரதர்! இப்பவே பேசுறேன்...” என்று ஆலப்புழாவிலிருந்த தன் வீட்டுத் தொலைபேசி எண்ணை அழுத்தினான்.

பேசிவிட்டு வெளியே வந்த விஷாலுக்கு, எதிர்காலத்தை நினைத்துப் பயமாக இருந்தது. முக்கியமாகப் பூர்ணிமாவை நினைத்தபோது, அவனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.

ரிஷியின் மனநிலையைச் சொல்லாமலேயே புரிந்து கொண்டான்.

‘பூர்ணிமா, நிச்சயமாக இந்த வேலைக்கு வரமாட்டாள்’ என்று நினைத்துக்கொண்டிருக்க, அவள் வந்தது விஷாலுக்குப் பெரும் அதிர்ச்சியென்றால் இனி, என்ன நடக்கும் என்று நினைத்து நினைத்துத் தலை பாரமாகியது.15

பார்வையினைத் தந்து

காட்சிகளைப்

பிடுங்கிச் செல்கிறாய்..

பரிதவிக்கிறேன் நான்..பூர்ணிமா வேலைக்குச் சேர்ந்து கிட்டதட்ட ஒருமாதம் ஓடிவிட்டது. ஆரம்பத்தில் சற்று பிடித்தமில்லாமல் வேலைக்கு வந்தபோதும், இப்போதெல்லாம் அலுவலக வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள்.

அன்று, வெளிநாட்டுக் கம்பெனி ஒன்றுடன் ஒப்பந்தம் போடுவதைக் குறித்து ரிஷியுடன் விவாதித்துக் கொண்டிருந்தாள். விஷாலும் அவர்களுடன் அமர்ந்து அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தான்.

“விஷால் உன்னுடைய ஒப்பீனியன் என்ன?” என்று கேட்டான்.

“அப்ஜக்ட் பண்ற அளவுக்கு எதுவும் இல்ல. குட்...” என்று தோளைக் குலுக்கியவனைக் கடுப்புடன் பார்த்தாள்.

அதைக் கண்டு கொள்ளாதவனாக, “ரிஷி! இந்த டாக்குமெண்டில் சைன் பண்ணு...” என்று கத்தையாகப் பாண்ட் பேப்பர்களை நீட்ட, வாங்கிய ரிஷி மளமளவென கையெழுத்தைப் போட, திகைத்துப் போனாள் பூர்ணிமா.

“ஒரு நிமிடம் ரிஷி சார்!” என்று அவன் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த பேப்பர் மீது கைவைத்து தடுக்க, கேள்வியுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

விஷாலை ஒரு பார்வை பார்த்தவள், “சார்! தப்பாக நினைக்காதீங்க. என்னதான் உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், எதையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடாதீங்க” என்றவளது முகம் அவனைக் கெஞ்சுவது போலிருந்தது.

விஷாலின் முகம் அவமானத்தில் சுருங்க, சட்டென அங்கிருந்து எழுந்து வெளியேறிச் சென்றான்.

“விஷால்...!” என்று ரிஷி அழைத்ததை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

பூர்ணிமாவின் பக்கமாகத் திரும்பிய ரிஷி, “மிஸ். பூர்ணிமா! உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என்று கோபத்துடன் கேட்டான்.

‘என் முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடு’ என்று சொல்லியும் வம்பாகத் தன்னைப் பூர்ணா என்று அழைப்பவன், இன்று அவனது அழைப்பிலேயே தன் மீது அவனுக்கிருந்த கோபம் புரிந்தது.

“இல்லை சார்...” என்று ஆரம்பித்தவளை, கை உயர்த்தி தடுத்தான்.

“இங்கே பாருங்க பூர்ணிமா! திஸ் இஸ் த லிமிட். நானும் ஆரம்பத்திலிருந்து கவனிச்சிட்டு வரேன். விஷால் மேலே உங்களுக்கு என்ன கோபம்னு எனக்குத் தெரியல. அது உங்க பிராப்ளம். அதுக்காக, எங்க எல்லா விஷயத்திலும், நீங்க தலையிடுறது சரியில்ல. எங்க ரெண்டு பேரையும் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? உங்களுடைய வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க...” என்று குரலை உயர்த்தாமல், அழுத்தமாகச் சொல்லி முடித்தவன் ஜன்னலருகே சென்று வெளியே பார்ப்பது போலத் தன் கோபத்தைத் தணித்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தான்.

பூர்ணிமாவின் முகம் கோபத்திலும், அவமானத்திலும் சிவந்தது. அங்கே அமர்ந்திருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், சம்பளம் கொடுக்கும் முதலாளியிடம் முறுக்கிக் கொண்டு எழுந்து செல்லவும் முடியாது.

ஆனாலும், ‘தான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லையே!’ என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

தலையை அழுந்தத் தடவிக்கொண்டு திரும்பியவன், பூர்ணிமாவின் முகத்தைப் பார்த்தான். அதிலிருந்த வேதனை அவனைக் கசக்கிப் பிழிந்தது.

‘வரவர நமக்கு ஏன் இப்படிக் கோபம் வருகிறது?’ என்று சலித்துக்கொண்டு அவளருகில் வந்தான்.

“சாரி பூர்ணா! விஷால் மேலயிருந்த பாசத்துல நீங்க சொன்னதும் எனக்குக் கோபம் வந்துடுச்சி. அவன் ரொம்ப நல்லவன். எனக்காக அவன் என்னவெல்லாம் செய்திருக்கான்னு உங்களுக்குத் தெரியாது. இன்னைக்கு நான் இந்த நிலைமைக்கு வரக்காரணமே அவன்தான். அவனை நான் எப்படி...?” என்று சொல்லிக்கொண்டிருக்க, அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்து நின்றாள்.

“சாரி சார்! உங்களோட எந்தப் பர்சனல் விஷயமும் எனக்கு வேண்டாம். ஏன்னா, நான் உங்க ஸ்டாஃப். செய்ற வேலைக்கு உங்ககிட்டக் கைநீட்டிச் சம்பளம் வாங்கும் வேலைக்காரி. அந்த விசுவாசத்திலேயும், இதுவும் என்னுடைய வேலையில் ஒன்றாகவும் நினைத்துத்தான் சொன்னேன். மத்தபடி, உங்க நட்பை அசிங்கப்படுத்தும் எண்ணம் எனக்கில்ல. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு நான் கிளம்பலாமா!” என்று அவனது உத்தரவைக் கேட்டாள்.

படபடவெனப் பேசியவளையே இமைக்காமல் பார்த்தவன், “ம்..” என்று ஒற்றைச் சொல்லால் அவளுக்கு அனுமதியளிக்க, டேபிள் மேலிருந்த ஃபைல்களை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் விஷாலுக்குப் போன் செய்து, “பூர்ணிமா பேசினதை மனசுல வச்சிக்காதே. பாண்ட் பேப்பர்ல கையெழுத்துப் போட்டு அனுப்பிட்டேன்” என்றான்.

சரியென கேட்டுக்கொண்ட விஷால், அவனது குரலில் வழக்கமான உற்சாகம் இல்லாததைக் கவனித்தான்.

“ரிஷி! பூர்ணிமாவை ஏதும் சத்தம் போட்டியா?” என்று கவலையுடன் கேட்டான்.

சீறலாக மூச்சுவிட்டவன், “அதெல்லாம், நான் பார்த்துக்கறேன். டோண்ட் வொர்ரி” என்று போனை அணைத்தான்.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
16

மிச்சமின்றி பூத்துவிடுகிறேன்

உன் காதல் சொல்லும்

தருணங்களில் எல்லாம்.

பருவமழைக் காலம் முடிந்து பசுமையும், ஈரமுமாகக் காயல்கள் நிறைந்து பச்சைப் பசேலெனக் காட்சியளித்த கேரள மாநிலம்.

ஹஸ்த நட்சத்திரத்தில் துவங்கி, திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் நடக்கும் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகைக்கும், சத்ய விருந்துக்கும் தயாராகிக் கொண்டிருந்தது.

ரிஷி, பூர்ணிமாவைக் கடிந்து பேசி, இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. சாதாரணமாகத் தன்னிடம் வேலை விஷயம் தவிர வேறெதையும் பேசாதவள், நான்கு நாட்களாக அதையும் குறைத்துக்கொண்டு, எதுவாக இருந்தாலும் மெயில் மூலமாகவே அவனைத் தொடர்பு கொண்டாள்.

காலையிலிருந்து பொறுத்துப் பார்த்தவன், இனி முடியாது என்று எண்ணிக்கொண்டு அலுவலகம் முடியும் நேரத்தில் அவளை அலுவலகத் தொலைபேசியில் அழைத்தான்.

“வீட்டுக்குக் கிளம்பியாச்சா பூர்ணா?”

“ஆமாம் சார்!”

“கொஞ்சம் என் கேபின் வரைக்கும் வந்துவிட்டுப் போகமுடியுமா?” என்று கேட்டான்.

“வரேன் சார்!” என்றவள், யோசனையுடன் போனை வைத்தாள்.

சிறிது நேரத்தில் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தவளை, இருக்கையைக் காட்டி அமரச் சொன்னான்.

அவளது வலப்புறம் அமர்ந்திருந்த விஷாலைப் பார்த்தவள், சிறு தலையசைப்புடன் அமர்ந்தாள்.

“பூர்ணா! நாளன்னைக்கு ஓணம். எங்க வீட்டில ரொம்ப விசேஷமா கொண்டாடுவாங்க. இந்த வருஷம் ஓணத்துக்கு, நீங்க வரணும்னு விருப்பப்படுறேன். நீங்க வந்தால், எங்க அம்மாவும் ரொம்பச் சந்தோஷப்படுவாங்க” என்றான்.

விஷாலோ, ‘இப்படித் திடுதிப்பென்று கேட்டுவிட்டானே!’ என்று கலக்கத்துடன் அவளது முகத்தைப் பார்த்தான்.

அவளது இதழோரம் கேலியாகச் சுருங்கியது.

“மன்னிக்கணும் சார்! நான் வந்தால் தேவையில்லாத பல பிரச்சனைகள் வரும்” என்றவளை நெற்றிச் சுருங்கப் பார்த்தான்.

“அதாவது, என்ன சொல்றேன்னா… என்னை மட்டும் ஸ்பெஷலா கூப்பிட்டா, மத்தவங்க பார்வைல தப்பா தெரியும்” என்றாள்.

“நீங்க வரப்போறது யாருக்குத் தெரியப் போகுது? எனக்கும், விஷாலுக்கும் மட்டும் தானே. நீங்களும், யாரிடமும் சொல்லப் போறதில்ல. நாங்களும் சொல்லப் போறதில்ல. பிறகென்ன?” என்று சிரித்தான்.

கண்களை மூடி நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவள், எழுந்து தன் கைப்பையை மாட்டியபடி, “சாரி சார்! எனக்கு இதிலெல்லாம் இண்ட்ரஸ்ட் இல்ல. அதோடு, நம்ம ரிலேஷன்ஷிப் ஆஃபிசோடு இருப்பதைத் தான், நான் விரும்பறேன். எனக்கு நேரமாகுது… கிளம்பறேன் சார்!” என்று பிடிவாத முகத்துடன் நின்றவளை ஆராய்ச்சியுடன் பார்த்தான்.

“சரி, கிளம்புங்க” என்றான்.

நிமிர்ந்த நடையுடன் செல்பவளை பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். யோசனையுடன் தாடையைத் தடவிக் கொண்டவன், விஷாலைப் பார்த்தான்.

“என்னடா! இப்படித் திடுதிப்புன்னு அவங்களை வீட்டுக்குக் கூப்பிட்டுட்ட. அம்மாவிடம் இவங்களைக் கூப்பிடப்போறேன்னு சொல்லிட்டியா?” என்று கவலையுடன் கேட்டான்.

“இன்னுமில்ல. அது பிரச்சனையும் இல்லை. ஆனா, பூர்ணாவை ஓணத்துக்கு வரவச்சே தீருவேன். ஏன்னா, அம்மா அவங்க மருமகளைப் பார்க்கவேணாமா?” என்று அவன் இலகுவாகச் சொல்ல, விஷால் திகைத்துப் போனான்.

“என்னடா சொல்ற? இ...இது பூர்ணிமாவுக்குத் தெரியுமா?” என்று பதட்டம் மாறாமல் கேட்டான்.

தோளைக் குலுக்கியவன், “இன்னும் சொல்லல” என்றான்.

“வேண்டாம் ரிஷி! இது பெரிய பிரச்சனையில் தான் முடியும். பூர்ணிமா இதுக்கு நிச்சயம் சம்மதிக்கமாட்டா” என்று படபடவெனப் பேச, ரிஷி கண்களில் கூர்மையுடன் அவனைப் பார்த்தான்.

“பிரச்சனை வரும்னு எப்படி அவ்வளவு தீர்மானமாக சொல்ற?” என்று கேட்டான்.

“அது...” என திணறியவன், “அ..வள்தான் சொன்னாளே… ஆஃபிஸ் ரிலேஷன்ஷிப் தவிர வேறெதையும் எதிர்பார்க்கலன்னு” என்று சமாளித்தான்.

ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல், “அது நான் பாஸ்... அவள் ஸ்டாஃப்ங்கறதால. நான் அவளோட கணவன்னு ஆகிட்டா...” என்று புன்னகையுடன் சொன்னவன், “சீக்கிரமே என் காதலைச் சொல்லிடுவேன். இப்போ, உன் பைக்கை நான் எடுத்துட்டுப் போறேன்” என்றான்.

விஷாலின் திகைப்பைப் பார்த்துத் தோளில் தட்டிவிட்டுச் சாவியுடன் கிளம்பியவன், திரும்பி வந்தான்.

“விஷால்! உனக்குப் பூர்ணிமா மேல எந்தக் கோபமும் இல்லையே…” என்று கேட்டான்.

விறைப்புடன் நிமிர்ந்த விஷால், “அதெல்லாம் ஒண்ணுமில்லடா! எதுக்கு இந்தத் தேவையில்லாத கேள்வி?” என்றான்.

“எனக்கு, உன்னுடைய சம்மதமும் வேணும்டா! பூர்ணிமா எதாவது தவறா பேசியிருந்தாலும், நீ பெருசா எடுத்துக்காதே. அவளுக்கு உன்னைப் பத்தி எப்படியும் புரிய வச்சிடுவேன். நம்மைப் பத்தி அவளுக்கு எதுவும் தெரியாது இல்லயா!” என்றான் சற்று கவலையுடன்.

“நீ என்னை இந்த அளவுக்குக் கன்வின்ஸ் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. எனக்கு, உன் சந்தோஷம் ரொம்பவே முக்கியம். ஆனால், இந்தக் கல்யாணம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடக்கணும். அதை மட்டும் நினைவில் வச்சிக்க” என்றான்.

“கண்டிப்பா!” என்று சந்தோஷத்துடன் அவன் தோளில் தட்டிச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

நிலைமை கைமீறிப் போவதை நினைத்து உள்ளுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான் விஷால்.

**************​

வீட்டு வாசலை அடையும்போதே உள்ளிருந்து மேகாவின் குரல் ஓங்கிச் சப்தமாக ஒலித்தது.

‘தெரிந்தவர்கள் யாரோ வந்திருக்கிறார்கள் போலும்’ என எண்ணியபடி செருப்பைக் கழட்டிய பூர்ணிமா, ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்தவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

‘இவன் எப்படி? நான் கிளம்பும்போது, ஆஃபிசில் தானே இருந்தான்’ என்று நினைத்துக்கொண்டே அவனைப் பார்தாள்.

அவனும் குறுஞ்சிரிப்புடன், அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் அமர்ந்திருந்த சோஃபாவின் கீழேயிருந்த ஹெல்மெட், அவன் எப்படி வந்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

“வாங்க...” என்று பெயருக்கு அழைத்தவள், தன் அறையை நோக்கிச் செல்ல முயன்றாள்.

ரிஷியிடம் ஏதோ சொல்லிவிட்டு, அவளைப் பின்தொடர்ந்து வந்தாள் மேகா.

“ஹே… புல்மூன்... உன்னோட பாஸ் வந்திருக்கார். அவரைக் கவனிக்காமல் நீ பாட்டுக்குப் போற? வீட்ல அம்மாவும் இல்ல. நீதான், அவரைக் கவனிச்சி அனுப்பணும்” என்றவளை அமைதியாகப் பார்த்தாள்.

“நான் கிளியராக சொல்லிட்டேன்ப்பா, நீங்க, என்னுடைய டீயைக் குடிப்பதும், சுடுதண்ணீர் குடிப்பதும் ஒண்ணுதான். அதனால் எங்க கிச்சன் குயின் வந்ததும், சூப்பரா டீ போட்டு உங்க வயிற்றுக்குக் கொடுப்பாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் செவிக்கு உணவா என் பேச்சைக் கேளுங்கன்னு சொல்லிட்டேன்” என்றாள்.

புன்னகைத்த பூர்ணிமா, “சரி, நான் பார்த்துக்கறேன்” என்றவள் கைக்காலை கழுவிக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

“மேகா! இந்த ஸ்நாக்ஸையாவது அவருக்குக் கொடுத்திருக்கலாம் இல்ல” என்று கேழ்வரகு மாவில் செய்திருந்த துணுக்கையும், காலையில் துருவி வேகவைத்துவிட்டுச் சென்றிருந்த மரவள்ளிக்கிழங்கில் தேங்காய் பூவையும், ஏலக்காயுடன், சர்க்கரையையும் போட்டுக் கிளறி, கிண்ணத்தில் வைத்து ட்ரேயை மேகாவின் கையில் கொடுத்தாள்.

“ஹய்யோ! கலக்குற புல்மூன். இதுக்குத்தான் நீ வேணும்ங்கறது” என்று அவள் கழுத்தைக் கட்டிக்கொள்ள, “ஹே! விடுடீ. கொண்டு போ. நான், டீ எடுத்துட்டு வரேன்” என்று புன்னகையுடன் அவள் முதுகில் ஒரு தட்டுதட்டி விட்டு திரும்பினாள்.

பூர்ணிமா அடுப்பு மேடையின் பக்கமாகத் திரும்பியதும் சட்டென அவளது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டுச் சிரித்துக்கொண்டே சென்றாள் மேகா.

அவளது செய்கையில் முதலில் தடுமாறிப்போன பூர்ணிமா புன்னகையுடன், “இன்னும் இந்த விளையாட்டுத்தனம் போகவே இல்ல” என்று சொல்லியபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

பூர்ணிமா டீயுடன் ஹாலுக்கு வரும்போது ரிஷி, மேகாவிடம் ஏதோ ஜோக் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான்.

டீயை டீபாய் மீது வைத்துவிட்டு திரும்பிச் செல்ல முயன்றவளை, “பூர்ணிமா!” என்று அழைத்த மேகா தன் சிரிப்பைக் கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்தாள்.

அவள் சிரிப்பதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவளை, ரிஷியின் பார்வை எடைபோட்டுக் கொண்டிருந்தது.

சிரிக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே வயிற்றைப் பிடித்தபடி, “முடியல ரிஷி!” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “பூர்ணிமா! உன் பாஸ் செம கலக்கல் பார்ட்டி. ஜோக்கில் சும்மா பின்னி எடுக்கிறார்” என்றவள், “ரிஷி! இவளுக்கும் ஒரு ஜோக் சொல்லுங்களேன்...” என்றாள்.

“உன் அக்காவுக்கு, ஜோக்கெல்லாம் சரிப்பட்டு வராதே...” என்று யோசித்தவன், “ம்ம்... ஒரு விடுகதை சொல்வோம். சரியான குற்றவாளி யார்ன்னு சொல்லட்டும். வக்கீலம்மாவோட வாதத் திறமையைப் பார்ப்போம்” என்றபடி பூர்ணிமாவைப் பார்த்தான்.

“எங்க பூர்ணிமா பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என்று ரிஷியிடம் சண்டைக்கு வந்தவள், “பூர்ணிமா! விடாதே. உங்க பாஸ் இன்னைக்கு அசந்து போய் ஏன்டா இந்தக் கேள்வியைக் கேட்டோம்னு நினைக்கணும்” என்று பூர்ணிமாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாள்.

அவனை நேராகப் பார்த்த பூர்ணிமா, “வேலைக்கு இண்டர்வியூ வைக்காத எம்.டி சார், இப்போ என் திறமையை சோதிக்கிறாராமா?” என்றாள் காட்டமாக.

“தப்பாக சொல்லாதீங்க மேடம்! என்னோட செலக்ஷன் என்னைக்குமே சோடை போனதில்லை. இது உங்க வாதத் திறமையை நாங்க பார்க்க ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கலாமே” என்றான்.

“சரி சொல்லுங்க...” என்றபடி சமாதானமானவளாக சோஃபாவில் அமர்ந்தாள்.

“வெளிநாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம் இது. ஒருத்தன் அவங்க அப்பார்ட்மெண்ட் பன்னிரெண்டாவது மாடியிருந்து தற்கொலை செய்துகொள்ள குதித்தான். ஆனால், அவனுக்குத் தெரியாத ஒரு விஷயம், அவங்க அப்பார்ட்மெண்ட் ஒன்பதாவது மாடியில் கட்டுமான வேலை நடந்ததுகொண்டு இருந்ததால் எட்டாவது மாடியின் ஆரம்பத்தில் வலை கட்டி வைத்திருந்தாங்க. இது தெரியாமல் அவன் தற்கொலை செய்துகொள்ள மாடியிலிருந்து குதிச்சிட்டான்.”

“அடராமா! அப்போ அவன் சாகலையா?” என்று அவசரமாக கேட்டாள் மேகா.

“சொல்லிக்கொண்டு இருக்கும் போது நடுவில் பேசக்கூடாது. கேளு...” என்றவன் தொடர்ந்தான்.

“அவன் விழுந்தது என்னமோ வலையில் தான். ஆனாலும், அவன் இறந்து போயிட்டான்.”

“அதெப்படி முடியும். அவன் வலையில் தானே விழுந்தான். கல் ஏதாவது அவன் மேலே விழுந்துடுச்சா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் மேகா.

“இல்லை...” என்று பூர்ணிமாவை பார்த்தான். அவளோ, ‘இவன் வேண்டுமென்றே தன்னைஅ சீண்டத்தான் இந்தக் கதையை சொல்லிக்கொண்டிருக்கிறான்’ என்று புரிந்து கொண்டாள்.

அவளது பார்வையிலிருந்தே அவளது எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்டவன், ‘உன்னால் இப்போது இங்கிருந்து பாதியில் எழுந்தும் போக முடியாது. நாலு நாளாக என்னைப் பார்க்காமல் பேசாமல் அலைகழிச்ச இல்லையா’ என்று சவால் விடும் பார்வை பார்த்தான்.

”ரெண்டு பேருக்கும் தெரியலையா? சரி நானே சொல்றேன். இறந்து போனவனைப் போஸ்ட்மார்ட்டம் செய்தாங்க. அப்போ, அவன் பின்னந்தலையில் ஒரு தோட்டா துளைத்திருந்ததைக் கண்டுபிடிச்சாங்க. எப்படி குண்டடி பட்டதுன்னு ஆராயும் போது அந்தக் குண்டு அந்த அப்பார்ட்மெண்ட் பத்தாவது மாடியை அவன் கடக்கும் போது பட்டிருக்கு என்று தெரியவர, பத்தாவது மாடியில் குறிப்பிட்ட அந்த வீட்டிலிருந்த வயதான தம்பதியரில் அவருடைய கணவர் மேல் சந்தேகப்பட்டு அரெஸ்ட் பண்ண போனாங்க.”

“ஏன்? அந்த வயதானவர் தான் சுட்டிருக்கணுமா… அந்த லேடி செய்திருக்கலாமில்லையா?” என்று தனக்கெழுந்த கேள்வியைக் கேட்டாள் மேகா.

“அதுக்குக் காரணமிருக்கே. அந்த வயதானவர் தன் மனைவியிடம் சண்டை போடும் போதெல்லாம் உன்னைச் சுட்டுடுவேன்னு எப்போ பார்த்தாலும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவாராம். ஆனால், அந்த வயதானம்மா, நிச்சயம் என் கணவர் இதைச் செய்திருக்கமாட்டார். ஏன்னா, அவர் என்னை மிரட்டினாலும் ஒரு நாள் கூட அதில் அவர் குண்டு போட்டு வைத்ததில்லை, அப்படினு ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தாங்க.

இப்போ போலீஸ் என்னடா இது சிக்கலா இருக்கேன்னு ரொம்பத் தீவிரமா துப்பறிய கடைசியில் அவங்க கண்டுபிடித்த உண்மை அவங்களுக்கே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்ததாம். அது என்னன்னா. இறந்து போனவன் அந்தப் பத்தாவது மாடியில் குடியிருந்த தம்பதியரோட ஒரே மகன். அவன் குடிக்க எப்போதும் அம்மாவிடம் பணம் கேட்டு நச்சரிப்பான்” என்று சொல்லும் போதே,

“இதுக்கு மேலே என்ன நடந்திருக்கும்னு நான் சொல்றேன்” என்ற பூர்ணிமா, “சிலசமயம் பணம் கொடுக்கும் அம்மா அன்னைக்குக் கொடுக்கமாட்டேன்னு ரொம்ப தகராறு செய்ய, அவன் சாகும் அளவுக்கு விரக்தியாகிட்டான். ஆனாலும், அவன் குறுக்குபுத்தி தான் செத்தாலும் பரவாயில்லை, நம்ம அப்பா, அம்மா நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைத்து அவங்க அப்பாவோட துப்பாக்கியில் தோட்டாவை போட்டு வைத்துவிட்டு, தற்கொலை செய்துக்க போய் இருக்கான்.

வழக்கம் போல அப்பா, அம்மாவுக்குச் சண்டை வர, அப்பா துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் சுட, அம்மா அவரோட குறியிலிருந்து தப்பிக்க, அதேநேரம் தற்கொலை செய்துகொள்ள குதித்தவன் அந்த மாடியைத் தாண்டிக் கீழே விழும்போது அப்பா சுட்ட தோட்டா, அவன் தலையில் பாய்ந்து அவன் இறந்து போய்விட்டான்...” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள்.

“வெல்டன்...” என்று ரிஷி கைத்தட்ட, மேகா அவளை அணைத்துக்கொண்டு, “நான் சொன்னேன் இல்ல. எங்க பூர்ணிமா கிரேட்ன்னு” என்று பாராட்டி சொல்ல, பின்னலிருந்து கை தட்டும் ஓசை கேட்டது.

மூவரும் ஒரே நேரம் திரும்பி பின்னால் பார்க்க, வெளியே சென்றிருந்த பரசுராமனும், வதனாவும் நின்றிருந்தனர். பரசுராமன் புன்னகைத்தபடியும், வதனா முகம் நிறைய எரிச்சலுடனும் அவ்வர்களை நோக்கி வந்தனர்.

பூர்ணிமா அவசரமாக எழுந்து நின்றாள். அந்த நேரத்திலும் ரிஷி இதைக் கவனிக்கத் தவறவில்லை.

பொதுவான பேச்சுக்குப் பிறகு, “சார்! நம்ம வர்க்கலை ரிசாட் பிரச்சனையை சுமுகமாக முடிச்சிக் கொடுத்ததற்கும், பூர்ணிமாவின் மேற்பார்வையில் வெளிநாட்டு ஆர்டர் ஒண்ணு நமக்குக் கிடைத்திருப்பதற்கும் சேர்த்து ஒரு பார்ட்டி கொடுக்கலாம்னு இருக்கேன். இன்னும் ரெண்டு நாளில் ஓணம் வருது. அதனால, ஒரே கல்லில் நாலு மாங்காயாக, விருந்தும் ஆச்சு, நீங்க எங்க வீட்டுக்கு வந்ததாகவும் இருக்கும், அம்மாவும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஓணம் பண்டிகைக்கு நீங்களெல்லாம் வந்தால் அம்மா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க” என்றான்.

யோசித்த பரசுராமன், தன் மனைவியைப் பார்க்க, அவரும் சம்மதம் என்பதுபோல் தலையாட்ட, ரிஷியின் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாட வருவதற்குச் சம்மதித்தார்.

தான் வந்த காரியத்தை முடித்துவிட்ட திருப்தியுடன் அவன், பூர்ணிமாவைப் பார்த்தான்.

அவளோ, என்னவென்று சொல்லமுடியாத பாவனையுடன் நின்றிருந்தாள்.
 
  • Love
Reactions: Rithi