23
உன் நினைவுகளில்லாத என் கனவின்
ஒரு மூலையில் கூட நானிருக்க
சாத்தியமில்லை...
“அத்தை! இன்னைக்கு நந்தாவைப் பார்க்க டாக்டர் வரார் இல்லயா... அவருடைய எல்லா ரிப்போர்ட்ஸும் வேணும். ஏற்கெனவே, எல்லாத்தையும் அவருக்கு அனுப்பியாச்சு. ஆனாலும், இப்போ அவர் கேட்டால் வேணுமில்ல.”
“விஷால்கிட்ட இருக்கு. வாங்கிக்கோம்மா!” என்றவர் தயக்கத்துடன், “பூர்ணிமா! இப்போ திரும்ப முதலிலிருந்து வைத்தியம் ஆரம்பிக்கணுமா?” என்று பயத்துடன் கேட்டார்.
“அத்தை! இத்தனை நாளாக வைத்தியம் பார்த்தும் குணமாகலைனா ஒண்ணு இன்னும் என்னன்னு கண்டுபிடிக்காமல் இருக்கனும் இல்லைனா நோய்கான சரியான மருந்தைக் கொடுக்காமல் இருக்கணும். எப்போதோ ஹாஸ்பிட்டலில் கொடுத்த மருந்தையே இன்னும் தொடர்ந்து கொடுப்பதும் செய்யக்கூடாது, மருத்துவரோட கவனிப்பு இல்லாமல் மருந்து கொடுப்பதும் கூடாது.
இப்போ வரப்போகும் டாக்டர் ரொம்பக் கைராசியான டாக்டர். ஃபேஸ்புக்கில் இவரைப் பத்தி நிறைய ஆர்ட்டிக்கில்ஸ், பேட்டி எல்லாம் வந்திருந்தது. இவர் நம்ம ஊருக்கு வந்திருப்பது, நம்ம நல்ல நேரம்னு நினைச்சிக்குவோம். அவர் வந்து பார்க்கட்டும். அதுக்கு மேலும் உங்க மனசுக்கு சங்கடமாயிருந்தா, நாம பழைய மருந்துங்களையே கொடுப்போம்...” என்று தற்காலிக சமாதானத்தைச் செய்துவிட்டுச் சென்றாள்.
“அக்கா எனக்கு என்னவோ நீ இந்தப் பொண்ணுக்கு அதிகமாக இடம் கொடுக்குறியோன்னு தோணுது”
“இல்ல சௌமினி! அவள் சொல்றதிலும் அர்த்தமிருக்கு. மாமா இறந்ததுக்குப் பின்னால, நாம ரிஷியை எந்த டாக்டரிடமும் கூட்டிட்டுப் போகலையே. வரட்டும்… இவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்” என்று முடித்துக்கொள்ள, சௌமினியின் உள்மனம் கோபத்தில் கனன்றது.
“ஹலோ! ரிஷிநந்தன் எப்படியிருக்கீங்க?” என்று விசாரித்த டாக்டரை ஆழ்ந்து பார்த்தான்.
“குட் மார்னிங் டாக்டர். ஃபைன்..” என்றான்.
மற்றவர்களை அனுப்பிவிட்டு, அவனிடம் தனிமையில் பேசினார்.
ஒருமணி நேரத்திற்குப் பிறகு, வெளியில் வந்த டாக்டர், “ரிஷியோட அம்மா நீங்க தானே?”
“ஆமாம் டாக்டர்...”
“பூர்ணா?” என்று கேள்வியாகப் பார்த்தார்.
“நான்தான் டாக்டர்...” என்று முன்னால் வந்தவளைப் புன்னகையுடன் பார்த்தார்.
“என்ன படிக்கிற?”
“ப்ளஸ் ஒன்...”
“நீதான் ரிஷியோட ஃப்ரெண்டா!” புன்னகையுடன் கேட்டார்.
“ஆமாம்” என்று தயக்கத்துடன் சொன்னாள்.
“ஏன் டாக்டர்? இனி, அவளைப் பார்த்துக்க வேண்டாம்னு சொல்லப் போறீங்களா?” சௌமினி அவசரமாக கேட்க, டாக்டர் ஏறயிறங்க அவரைப் பார்த்தார்.
“நீங்க...?”
“ரிஷியோட சித்தி.”
“ஓ...” என்றவர், பூர்ணிமாவிடம் சில கேள்விகள் கேட்டார்.
தன் கையிலிருந்த பைலிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தாள். காலையிலிருந்து அவன் செய்யும் வேலைகள், என்னென்ன சாப்பிடுகிறான். அவன் சாப்பிடும் மருந்து மாத்திரைகள், இரவு தூங்கும் வரை செய்யும் அத்தனை வேலைகளையும், தான் வந்தபோது அவன் இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று அனைத்தையும் தெளிவாக எழுதியிருந்தாள்.
ஆன்லைனில் தான் படித்தது, சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது என்று அனைத்தையும் அவரிடம் சொன்னாள்.
“கையைக் கொடு..., பிரில்லியண்ட் கேர்ள்” என்று பூர்ணிமாவை நோக்கித் தன் கையை நீட்டினார்.
“லஷ்மி மேடம்! வெரி குட் சாய்ஸ். அவரோட பேசினதில் நிறைய தெரிந்தது. அது எல்லாமும் பூர்ணிமா அழகா எழுதிவச்சிருக்கா. பழைய மெடிசின்ஸ் எல்லாத்தையும் நிறுத்திடுங்க. நான், புது மெடிசின்ஸ் தரேன். அதைக் கண்டினியூ பண்ணுங்க. அவருக்கு ஆக்சிடெண்டால் ஏற்பட அதிர்ச்சியில் தான் அவருடையை மூளை சமநிலையில் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக இருந்திருக்கார். மூளையில் பெருமளவு பாதிப்பு எதுவும் இல்ல.
சிலசமயம் அவர் வயலண்டா இருக்க இப்படி அடைத்து வைத்திருப்பது கூட ஒரு காரணம். ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து மெடிசின்ஸ் சரியாக எடுத்திருந்தால், இந்நேரம் கியூர் ஆகியிருக்க நிறைய சான்சஸ் இருந்திருக்கும். ஓகே போனதை விட்டுட்டு இனி, தொடர்ந்து பாருங்க. முதலில், நம்ம மகன் கூடிய சீக்கிரம் பழையபடி திரும்ப கிடைப்பான்னு நம்புங்க.”
“டாக்டர்! நந்தாவை வெளியே கூட்டிக்கொண்டு போகலாமா?” என்று கேட்டான் விஷால்.
“முதலில் உங்க வீட்டுக்குள்ளே கூட்டிப் போங்க. தனியா இருப்பதைவிட எல்லோரோடும் சேர்ந்திருப்பது பெட்டர். கொஞ்ச நாள் ஆகட்டும் பிறகு, வெளியே போகலாம். டிவியில் வரும் நல்ல ப்ரோகிராம்ஸ் போட்டுக்காட்டுங்க. அவர் பேசுறதை, காது கொடுத்து கேளுங்க.
அப்புறம், பழைய மெடிசின்ஸ் நிறுத்திடுறதால மீதம் இருப்பதைக் கொடுங்க. நான் அதையெல்லாம் எதாவது ஹாஸ்பிட்டலுக்குக் கொடுத்திடுறேன்” என்று வாங்கிக்கொண்டு கிளம்பியவர், பூர்ணிமாவிடம் எந்த ஸ்கூல்ல படிக்கிற என்று யதார்த்தமாக விசாரித்து தெரிந்துக் கொண்டு விடைபெற்றார்.
டாக்டர் வந்து சென்ற இரண்டு நாட்களில் விஷாலும், பூர்ணிமாவும் வீட்டையே தலைகீழாக மாற்றினர். ரிஷியின் பழைய அறையைச் சீரமைத்தனர்.
“அண்ணா... நந்தாவுக்குப் புளுகலர் தான் பிடிக்கும். சுவருக்கு லைட் புளூ, ஜன்னலுக்கெல்லாம் கொஞ்சம் டார்க் புளூ. ஸ்கிரீன் கடல் நீலத்தில் பூக்கள் போட்டது போல மாத்திடலாம். ரூஃபில் நட்சத்திரம், நிலான்னு ஸ்டிக்கர்ஸ் ஒட்டிடலாம். அவரோட வார்ட்ரோப் இந்தப் பக்கம், இங்கே ஜன்னல் ஓரமா ஒரு டேபிள் சிடி ப்ளேயர் சிடிஸ் வச்சிடலாம். கட்டிலை ஒட்டி அலமாரியில் புக்ஸ், எதிரில் டிவி வச்சிடலாம்” என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதை, லஷ்மி அம்மா புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்க, சௌமினி அழுத்தமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அன்று பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவள் யதேச்சையாக ரிஷிநந்தனைப் பார்த்துவிட்டுச் சென்ற டாக்டரைச் சந்தித்தாள். ஆனால், அது யதேச்சையானது இல்லை காரணத்தோடுதான் டாக்டர் தன்னை சந்தித்திருக்கிறார் என்று புரிந்தபோது அவளது மனநிலை மோசமாக இருந்தது.
வீட்டுக்கு வந்தவள் சிறிதுநேரம் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். அதேநேரம் லஷ்மி அத்தையிடம் சொல்லவும் தைரியமில்லை. அப்படியே விடவும் மனமில்லை. இரவு வரை பொறுமையுடன் காத்திருந்தவள், விஷாலின் பெற்றோர் தங்கியிருந்த வீட்டை நோக்கி நடந்தாள்.
ஆழ்ந்த யோசனையுடன் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்த சௌமினி, சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமாவைக் கண்டதும் விரைப்புடன் எழுந்து நின்றார்.
“எப்படி நந்தாவை முழுபைத்தியமாக்குவதுன்னு யோசிக்கிறீங்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.
“ஏய்...! என்ன வாய் நீளுது? அனாதை நாயே” என்று கோபத்துடன் அலறினாள்.
“சும்மா கத்தாதீங்க. நான் அனாதை தான். ஆனா, சொந்த அக்கா குடும்பத்தையே கெடுக்கும் வஞ்சகி இல்ல.”
“நான் நானா வஞ்சகி...” சௌமினியின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கு எகிறியது.
“சந்தேகம் வேறயா? இங்கே பாருங்க, உங்களைக் காட்டிக்கொடுக்க, எனக்கு ஒரு நிமிஷம் போதும். ஆனால், எனக்கு எந்தக் குடும்பத்தையும் கெடுக்கணும்ங்கறா கேவலமான எண்ணம் இல்ல. அது எவ்வளவு பெரிய அயோக்கியதனம் நிறைந்தவங்களாக இருந்தாலும். இதுதான் உங்களுக்கு முதலும், கடைசியுமான எச்சரிக்கை. உங்க மரியாதையை நீங்கதான் காப்பாத்திக்கணும்.
இனி, நந்தாவுக்கோ, அத்தைக்கோ ஏதாவது கெடுதல் பண்ணணும்னு நினைச்சீங்க, நான் சும்மா விடமாட்டேன். இப்போகூட அத்தையோட மனம் கஷ்டப்படக்கூடாதுன்னு தான் இதை அவங்ககிட்ட சொல்லாமல் விடுறேன்” என்று கோபத்துடன் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு வெளியேறியவளை ஆத்திரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
வீட்டுப் பொறுப்பு, அக்காவின் அன்பு, ரிஷியின் பிரியம், வேலையாட்களின் பாசம், இதற்கெல்லாம் மேலாக தன் மகனின் பாதுகாப்பு என்று பூர்ணிமா சகல சௌக்கியத்துடன் இருக்க, எல்லாமிருந்தும் எதுவும் இல்லாமல், தன்னால் எதுவும் செய்யமுடியாமல், நேற்று வந்த ஒருத்தியால் எச்சரிக்கப்பட்டு நின்றுகொண்டிருந்த சௌமினியால் எதையும் ஜீரணிக்கமுடியவில்லை.
மனத்திற்குள், வன்மம் அசுரவேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அவருக்கான நாளுக்காக வெகுநாட்கள் காத்திருக்கவேண்டி வந்தது. தான் விரித்த வலையில் பூர்ணிமா எனும் மீன் மாட்ட, ரிஷிநந்தனையே தூண்டி புழுவாக்கினார்.
24
உன்னைத் தாண்டிச் செல்லும்
ஒவ்வொரு நொடியிலும்
சுவாசம் தடுமாறச் செய்கிறாய்..
நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. பூர்ணிமா, பள்ளி இறுதியாண்டின் கடைசி நிலையில் இருந்தாள். ரிஷி நந்தன் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் அளவிற்கு முன்னேறி இருந்தான்.
பூஜை முடித்துவிட்டு கற்பூரத் தட்டை அவன் முன்பாக நீட்ட, கண்களில் ஒற்றிக்கொண்டவனின் நெற்றியில் சந்தனத்தை வைத்துவிட்டாள். குங்குமத்தை வைக்கும் நேரம் வேண்டுமென்றே நிமிர்ந்து பின்னால் சாய, அவனது உயரத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் எட்டி அவனது நெற்றியில் குங்குமத்தை வைத்தவள், “வளர்ந்து கெட்டவனே...” என்று செல்லமாக வைதாள்.
சிரித்தவன், “குள்ளக் கத்திரிக்கா...” என்று வேண்டுமென்றே அவளைச் சீண்டினான்.
“நான் ஐந்தடி மூணு அங்குலம் தெரியுமா?” என்று சிலிர்த்துக்கொண்டு சொன்னாள்.
“வெவ்வேவே” என்று கேலி செய்தவன், ஆரத்தித் தட்டிலிருந்த குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் வைத்துவிட்டுச் செல்லவும், பூர்ணிமாவிற்கு ஜிவ்வென பறப்பது போலிருந்தது.
திரும்பியவள், கண்களில் குறுகுறுப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த விஷாலைக் கண்டதும், எங்கிருந்தோ ஓடிவந்த வெட்கம் அவளைப் பற்றிக் கொண்டது.
கற்பூரத்தட்டை வைத்துவிட்டுத் அறைக்கு ஓடிச்சென்றவள், ஜன்னலில் அமர்ந்து கொண்டாள். மனம் தனக்குப் பிடித்தப் பாடலை உற்சாகத்துடன் பாடியது.
“பூங்குயில் சொன்னது காதலின்
மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினில்
பெண்மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கை தொடவும்,
அந்த நாணத்தைப் பெண் விடவும்.”
நாணம் மிகுதியில் தன் கைகளிலேயே முகம் புதைத்துக்கொண்டாள்.
இதே ரிஷி நந்தன் ஆரம்பத்தில் தன்னைத் தொட்ட போது என்ன அமர்க்களம் செய்தோம்? என்று எண்ணிக்கொள்ள அவளுக்கே சிரிப்பாக வந்தது.
ஆரம்பத்தில் அவன் தொடுகைகள்… பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென அவள் மடியில் படுத்துக்கொள்வது, அவளது விரல்களுடன் விரல்களை கோர்த்துக்கொள்வது என்று சில செயல்கள் அவஸ்தையாக இருக்கும்.
அன்றொரு நாள் மழை பொழிந்து கொண்டிருந்த மாலை நேரம்..., ரிஷி நந்தன் படித்துக்கொண்டிருந்த பூர்ணிமாவிடம், “பூர்ணா... வாவா மழை பெய்யுது. நாம போய் ஜாலியா விளையாடிட்டு வரலாம்” என்று அழைத்தான்.
“வேண்டாம் நந்தா..., இந்த மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும். எனக்கு ரெண்டு நாளில் எக்ஸாம் இருக்கு” என்று மறுத்தவள், “நீங்களும் போகக்கூடாது. உங்க ரூமுக்குப் போய்ப் பாட்டுக் கேளுங்க... இல்லனா ஏதாவது புக் படிங்க” என்று சொல்லிவிட்டுத் தன் பாடத்தைத் தொடர்ந்தாள்.
சிறிதுநேரம் அப்படியும் இப்படியும் நடந்துக் கொண்டிருந்தவன், பூர்ணிமா கவனிக்காத நேரம் பார்த்து, வெளியே சென்று விட்டான். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவள், வேலையாட்களின் பேச்சையும் கேட்காமல் தானும் தெப்பலாக நனைந்து அவர்களையும் மழையில் இழுத்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தவனை கோபத்துடன் பார்த்தாள்.
“நந்தா! என்ன இது?” என்று சப்தமாக அதட்டினாள்.
“மழை பூர்ணா! ஜாலியாயிருக்கு நீயும் வா...” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே வேகமாக அவளது கையைப் பற்றி மழையில் இழுத்து விட்டான்.
தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள் முழுதுமாக நனைந்தவள் கோபத்துடன், “ச்சே..., நான் சொல்றதைக் கேட்கல இல்ல என்கிட்ட பேசாதீங்க...” என்று வீட்டினுள் சென்றவள் துண்டை எடுத்துப் பரபரவெனத் தலையைத் துடைத்துக் கூந்தலை அடியில் முடிச்சிட்டுக் கொண்டே கதவை மூடத் திரும்பினாள்.
தண்ணீர் வழிய முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அறையின் வாசலில் நின்றிருந்தான் ரிஷி நந்தன். அவன் நின்றிருந்த தோரணையைக் கண்டதும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டாள்.
“பூர்ணா…” என்று ஆரம்பித்தவனை, “பூர்ணாவுக்கு என்ன? நான் சொல்றதைக் கேட்காதவங்க, இங்கே வரத் தேவையில்ல. உங்க ரூமுக்குப் போய் உடுப்பை மாத்துங்க...” என்று சொல்லிவிட்டுத் தன் பீரோவைத் திறந்தாள்.
அவளுக்குப் பின்னால் வந்து நின்றவன், “சாரி பூர்ணா! இனி, இப்படிச் செய்யமாட்டேன் என்கிட்டப் பேசு. ப்ளீஸ்!” என்று கெஞ்சலாகச் சொன்னான்.
நைட்டி ஒன்றை எடுத்தபடி, “உங்க சாரியை நீங்களே வச்சிக்கோங்க...” என்று அதட்டலாகச் சொல்லிவிட்டுச் சிரிப்பை அடக்கியபடி அங்கிருந்து நகர்ந்தவளை, பின்னால் நின்றிருந்த ரிஷியின் கரங்கள் இடுப்பைச் சுற்றி வளைத்தன.
ஒரே ஒரு கணம் என்ன நடந்தது என்று அவளுக்குப் புரிந்து கொள்ளமுடியாமல் தடுமாற்றமாக இருந்தது. இடுப்பைச் சுற்றி அணைத்தவன், அவளது கழுத்தில் முகத்தை வைத்தபடி நிற்க, அவளது கால்கள் பலமிழந்து தள்ளாடின.
இடுப்பைச் சுற்றியிருந்த கரத்தை எடுத்து விடக்கூட முடியாமல், அவள் கைகள் நடுங்கின. முதுகுத் தண்டில் சில்லெனப் பய உணர்வு தோன்ற, மயங்கி விழுந்து விடுவோமோ என்று பயமாக இருந்தது.
“நந்தா! கையை எடுங்க...” நடுக்கத்துடன் குரல் அவளுக்கே கேட்காத வண்ணம் இருந்தது.
“மாட்டேன். இப்படியே இருக்கலாம் இதுவே நல்லா இருக்கு...” என்று கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் எந்தவித கல்மிஷமும் இல்லாமல் சொன்னான்.
“ப்ளீஸ் நந்தா! நான் உங்க சாரியை ஏத்துக்கறேன். தள்ளி நில்லுங்க...” என்று கூறும்போது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
அழுகையில் அவளது உடல் குலுங்க, கண்களைத் திறந்து பார்த்தான்.
“அழாதே பூர்ணா! இனி, இப்படி மழையில் நனையமாட்டேன். நீ சொல்றதைக் கேட்கிறேன்” என்று அவளெதிரில் வந்து நின்று கண்ணைத் துடைக்க முயன்றான்.
“முதல்ல வெளியே போங்க...” என்று அதட்டலாகச் சொல்ல, தயங்கி நின்றவன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அறையிலிருந்து வெளியேறினான்.
மறுநாள் அவளது அறைக்கதவு திறக்கப்படாமலேயே இருக்க, லஷ்மி அம்மா அவளது அறைக்கு வந்தார். பலமுறை அவள் பேர் சொல்லி அழைத்தும் சப்தமில்லாமல் போகப் பயந்துவிட்டார். விஷால் வந்து அழைத்தும் கதவு திறக்கவில்லை.
பார்த்துக்கொண்டு நின்றிருந்த ரிஷிக்குத் தவிப்பாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தவன் விஷாலை விலக்கிக் கொண்டு, “பூர்ணா... கதவைத் திற பூர்ணா...” என்று தட்டினான்.
இத்தனை நேரம் அனைவரும் சப்தமிட்டு தட்டியதாலா, இல்லை ரிஷிநந்தனின் குரலில் விழித்தாளோ படுத்திருந்தவள் மெல்ல அசைந்தாள். சிரமத்துடன் எழுந்துவந்து கதவைத் திறந்தவள், கூடியிருந்த அனைவரையும் பார்த்தபடியே மயங்கி விழுந்தாள்.
வெளிச்சம் கண்ணில் பட உடல் எங்கோ பறப்பது போலிருந்தது.
“என்ன பூரி... எப்படியிருக்க?”
மலங்கமலங்க விழித்தவள், ‘எனக்கு என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் கொஞ்சம் சிரமத்துடன் எழுந்தவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து உட்கார வைத்தான்.
“விஷால் அண்ணா! எனக்கு என்ன ஆச்சு?”
“ஹப்பா! நல்லவேளை. விஷால் அண்ணான்னு கூப்பிட்டு, என் வயிற்றில் பாலை வார்த்த. எனக்கு என்ன ஆச்சுன்னு மொட்டையா கேட்டிருந்தா, நான் மயக்கம் போட்டு விழுந்திருப்பேன். ஒருத்தனைச் சமாளிப்பது போதாமல் இன்னொன்னா?”
அவனது ஜோக்கை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை என்று உணர்ந்தவன், “ரெண்டு நாளா எங்களையெல்லாம் பயமுறுத்திட்டியே பூரி...” என்றான் ஆற்றாமையுடன்.
“ரெண்டு நாளாகவா?”
“அதுகூடத் தெரியாம... ஹாயா ரெஸ்ட் எடுத்துட்டு, நாங்களெல்லாம் உனக்குப் பணிவிடை செய்துட்டு பயத்தோட இருந்தோம். இந்த ரிஷிதான் பாவம். அவன்தான் ராத்திரியெல்லாம் உன்கூடவே இருந்து, ஈரத்துணியால் நெற்றியில் ஒத்தடம் கொடுத்தான். இப்போதான் அசந்து தூங்கினான்” விஷால் சொல்லிக்கொண்டிருக்க அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“எல்லாரும், நீ மழையில் நனைந்ததால் தான் உனக்கு ஜுரம் வந்ததுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால், எனக்கு என்ன காரணம்ன்னு தெரியும்...” என்றதும் திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தாள்.
“ரிஷி சொன்னான்...” என்றான்.
“ஓ...” என்றவளது குரலில் ஸ்ருதி இறங்கியிருந்தது.
அவளருகில் அமர்ந்தவன், “பூர்ணிமா! அவன் யதார்த்தமா தான் நடந்துட்டிருக்கான்” என்றதும் அவள் அழத் துவங்கினாள்.
“ஹே... நான் சொல்றேன் இல்ல. அவன் இப்போதான் கொஞ்சங் கொஞ்சமாக குணமாகிட்டு வரான். அவனும், இப்போதைக்கு ஒரு குழந்தையைப் போலத் தான் பூர்ணிமா...” என்று அவளுக்குப் புரியவைக்க முயன்றான்.
“என்ன பேசறீங்க நீங்க? என் அறைக்குள் நடந்ததால போச்சு. இதுவே, அத்தனைப் பேருக்கும் முன்னால் நடந்திருந்தா, என்னைத் தானே எல்லோரும் கேவலமாக நினைச்சிருப்பாங்க” கோபத்தில் பேச்சுக் குழறினாலும், சொல்லவந்ததைச் சொல்லி முடித்தாள்.
“ஓகே ஓகே... உன் நிலைமை எனக்குப் புரியுது. உன் நிலையில் நான் இருந்திருந்தாலும் அதையே தான் செய்திருப்பேன். ஆனா, நீ அவன் நிலைலயிருந்து யோசிச்சிப் பாரேன்” என்று என்னென்னவோ சொல்லி அவளைச் சற்று தேற்றினான்.
“இனி, அவன் இப்படி நடந்துக்கமாட்டான். நான் பார்த்துக்கறேன் சரியா?”
“ம்ம்...”
“தேங்க்ஸ்! நீ குளிச்சிட்டு வா. கீழே வந்து எல்லோரோடும் பேசிட்டிருந்தா உனக்குக் கொஞ்சம் தெம்பாக இருக்கும்...” என்று சொல்லிவிட்டு சென்றான்.
“இரண்டு நாட்களாக வீடு வீடாகவே இல்லை” என்று வேலையாட்களும், “நீ இப்படிக் கண்ணுக்கு முன்னால, நடமாடிட்டிருந்தாலே போதும். ரெண்டு நாளா தவிச்சிப் போயிட்டேன்...” என்று லஷ்மி அத்தையும் சொல்ல, அவளுக்குச் சங்கடமாக இருந்தது.
அவளே ரிஷிநந்தனின் அறைக்குச் சென்று பேச, அவனுக்கும் உற்சாகமாகிவிட்டது. அவனது சிரிப்பைக் கண்டதும் தான், அவளது அகமும் மலர்ந்தது.
இருவரையும் பார்த்த விஷால், தனக்குள் சிரித்துக்கொண்டான்.
நாட்கள் இறக்கைக் கட்டிக்கொண்டு பறந்தன. பூர்ணிமா, பள்ளி இறுதித் தேர்வை நல்லபடியாக முடித்துவிட்டு வந்தாள். விஷால் அவளிடம் கல்லூரியில் சேருவது பற்றிப் பேசினான்.
“பூர்ணிமா! இது லைஃப்ல முன்னேற வேண்டிய தருணம். நீ ரெசிடென்ஷியல் காலேஜில் சேர்ந்துப் படி.”
தயங்கியவள், “இல்லண்ணா நந்தா...” என இழுத்தாள்.
“அடேங்கப்பா! எங்களுக்கும் அவன்மேல அக்கறையிருக்கு...” என்று சிரித்தவன், “உன் மேலேயுமிருக்கு. இங்கேயிருந்து நீ காலேஜ் போய் வர்றது உனக்கு நேர விரயம், அலைச்சல். ஹாஸ்டல்ல சேர்ந்துட்டா, வெள்ளிக்கிழமை ஈவ்னிங் வீட்டுக்கு வந்துட்டு, திங்கட்கிழமை காலைல ஹாஸ்டலுக்குக் கிளம்பிடலாம்” என்று பொறுமையாக விளக்கினான்.
அவள் மனமோ, சமாதானம் அடையவில்லை. நந்தாவைப் பார்க்காமல் இருப்பது அவளுக்கே கடினம் என்று தோன்றியது. எப்படிச் சொல்வது என்று புரியாமல், தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.
அவளது தவிப்பு எதற்கென்று புரிய, விஷாலுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. அதேநேரம் பாவமாகவும் இருந்தது.
“மூணு வருஷம் தானே… ஓடியே போயிடும்.”
“ம்ம்... நந்தாவிடம் எப்படிச் சொல்றது?”
வாய்விட்டுச் சிரித்தவன், “அவனைக் கூடச் சமாளிக்கலாம் போல. இப்போ, உன்னைத் தான் எப்படிச் சம்மதிக்க வைக்கறதுன்னு தெரியல...” என்று சொல்ல பூர்ணிமா தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதோ... என்று தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவளை, பாசத்துடன் பார்த்தான்.
யோசிக்கட்டும் என்று அவளுக்குத் தனிமை கொடுத்துச் சென்றான்.
யோசித்தவளுக்கு, விஷால் சொன்னது சரி என்று பட, அவனைத் தேடிச்சென்றாள்.
“நீங்க சொன்னதுக்குச் சம்மதிக்கிறேன். அத்தையிடமும்...”
“உங்க, அத்தையிடம் நேத்தே பேசிட்டேன். மருமகளோட பதிலுக்காகதான் காத்திருக்கேன்” என்று புன்னகைத்தான்.
பூர்ணிமா திடுகிட்ட மனத்துடன், ‘மருமகள் என்று வெறும் வார்த்தைக்காகச் சொன்னானா! இல்லை, என்னைப் புரிந்து கொண்டு சொல்கிறானா?’ என எண்ணிக்கொண்டு அவனை ஓரப்பார்வை பார்த்தாள்.
ஆனால், அவன் ஏதோ வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அதேநேரம் மருமகள் என்ற ஒற்றை வார்த்தை அவள் முகத்தையே பிரகாசமாக மாற்றியது. இது எத்தனைத் தூரம் சாத்தியம் என்று அவளுக்கு நினைக்கத் தோன்றவேயில்லை.
“பூர்ணா! கங்கிராட்ஸ்” என்ற ரிஷி கையிலிருந்த ஸ்வீட்பாக்ஸிலிருந்து லட்டு ஒன்றை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, பூர்ணிமா மறுக்காமல் உண்டாள்.
லஷ்மி அம்மாவும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அருகில் வந்த சௌமினி, “பாஸ் பண்ணிட்டியாமே கை கொடு” என்று சொல்ல, முதன்முறையாக தன்னிடம் இன்முகத்துடன் பேசுபவரை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டே கையை நீட்டினாள்.
“கோவிலுக்குப் போய்ட்டு வரலாமா?” என்று அவர் கேட்டதை, இன்னும் நம்பமுடியாமல் நின்றாள்.
“ஆன்ட்டி!” என்று வியப்புடன் பார்த்தாள்.
“என்னம்மா! இவளா இப்படி மாறிட்டான்னு ஆச்சரியமா இருக்கா?” எனக் கேட்டார்.
“அதெல்லாம் இல்லை ஆன்ட்டி! கோவிலுக்குத் தானே. தாராளமாகப் போகலாம்” மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
“சித்தி! நானும் வரேன்” என்று ரிஷிநந்தனும் உடன் கிளம்பினான்.
“இல்லை நந்தா...” என்று ஆரம்பித்த பூர்ணிமாவை இடை மறித்தார் அவர்.
“வரட்டும்மா! டாக்டர் தான் வெளியே கூட்டிட்டுப் போகலாம்ன்னு சொல்லிட்டாரே... முதல்ல கோவிலுக்கே போகலாமே. அக்கா, நீ, நான், விஷால் இத்தனைப் பேர் இருக்கோமே பார்த்துக்கலாம்” என்றார்.
“விஷால்! கார் சாவியைக் கொடு நான் ஒட்டுறேன்...” என்றான் ரிஷி.
“ஐயா சாமி! நாம கோவிலுக்குத் தான்டா கிளம்பறோம்... நீ முதலில் போய் ஸ்டடியா உட்கார கத்துக்கோ. பூரி! இவனைப் பிடித்து உனக்கும், பெரியம்மாவுக்கும் நடுவில் போடு...” என்றான்.
“நீங்க வாங்க நந்தா” என்று அவனுக்கு வழிவிட்டாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, வெளியே செல்வது ரிஷி நந்தனுக்குக் குதூகலத்தைக் கொடுக்க, ஒவ்வொன்றையும் பார்த்து இது என்ன? அது என்ன? என்று குழந்தையைப் போலக் கேட்டுக்கொண்டே வந்தான்.
அவனுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வந்தனர் பூர்ணிமாவும், லஷ்மி அம்மாவும்.
தரிசனம் முடித்து பிரகாரத்தைச் சுற்றி வந்தனர். பின்னாலிருந்த மண்டபத்தில் ஒரு கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. ரிஷிநந்தன் கல்யாணத்தைப் பார்த்துவிட்டுப் போகலாமெனச் சொல்ல, லஷ்மி ஒரு ஓரமாக அமர்ந்து கொள்ள, மற்ற நால்வரும் அங்கிருந்த மண்டபத்தின் அருகில் நின்றனர்.
அட்சதைத் தூவி ஆசிர்வதிக்க, கல்யாணம் நடந்தது. தன் மீது விழுந்த அட்சதைகளை பார்த்துக் குஷியானவன், அருகில் தொங்கிக்கொண்டிருந்த பூச்சரத்திலிருந்த பூவை உருவித் தன் மீதே போட்டுக்கொண்டு சிரித்தான்.
“ஷ்... நந்தா! இப்படியெல்லாம் செய்யக்கூடாது. பாருங்க எத்தனைப் பேர் உங்களையே பார்க்கிறாங்க” என்று அவனைக் கட்டுப்படுத்தினாள்.
“அவங்க மேலே போடுறாங்களே பூர்ணா!”
“அவங்களுக்குக் கல்யாணம். ஆசிர்வாதம் செய்ய பெரியவங்க பூத்தூவி வாழ்த்துறாங்க...”
“அப்போ கல்யாணத்துக்குத் தான் இப்படிப் போடுவாங்களா?”
“ஆமாம்...”
“எதுக்குப் பூர்ணா கல்யாணம் செய்றாங்க?”
அவனது அத்தனைக் கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டு வந்தவளுக்கு, என்ன சொல்வதென தெரியாமல் உதவிக்கு அருகிலிருந்த சௌமினியைப் பார்த்தாள்.
அவரும் சிரித்துக்கொண்டே, “கல்யாணம் செய்துகிட்டா ரெண்டு பேரும் ஒரே வீட்டில், எப்போதும் ஒண்ணா இருக்கலாம் அதுக்குதான்” என்று சொன்னதைத் தீர்க்கமாகக் கேட்டுக் கொண்டான்.
அவனது பாவனையைப் பார்த்த பூர்ணிமா, சிரித்துக்கொண்டாள்.
ஆனால், இந்தப் பதில் தன் வாழ்க்கை பாதையை மாற்றப்போகிறது என்று அப்போது அவளுக்குத் தெரியவில்லை.