உனைக் கண்டு உயிர்த்தேன் - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
43

சிதறிக்கொண்டிருக்கும் என் வெட்கத்தையெல்லாம்

ஒன்று சேர்த்து காதல் என்று அழைக்கிறாய்

பெயரற்றும் உடலற்றும் உன்னுள் ஊறித்திளைக்கும்

காதலாகிறேன் நான்


மறுநாள், ஜனத்திரளில் சிக்கி வழக்கமாக ஏறும் பெட்டியில் ஏறினாள்.

வியர்வையைத் துடைத்துக்கொண்டே திரும்பியவள், இரண்டு பேருக்கு முன்னால் ரிஷி நின்றிருப்பதைக் கண்டாள். திடுக்கிடலுடன் திரும்பியவள் அவன் தன்னைப் பார்ப்பதற்குள் இறங்கிவிட வேண்டும் என்று எண்ணும்போதே அவளைக் கண்டுகொண்டான்.

ஆனால், அவளைப் பார்த்தது போலக் காட்டிக் கொள்ளாமல், முகத்தைத் திருப்பிக் கொள்ள, வேதனையாக இருந்தது. முன்னால் நின்றிருந்தவர்களிடம் வழி கேட்டுக் கொண்டு அவனருகில் சென்றாள்.

அருகில் வந்து நின்றவளை சலனமே இல்லாமல் பார்த்தான். இவள் தான் வீணாக அவனிடம் அசடு வழியவேண்டியிருந்தது.

“நீங்க ஊருக்குப் போகலியா?” என்று தேவையில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்ட பிறகே, ‘இதென்ன கேள்வி?’ என்று தோன்றியது.

“என்னை ஊருக்கு அனுப்பறதுல உனக்கென்ன அவ்வளவு ஆவல்?” என்று பதில் கேள்வி கேட்டான்.

இதற்கென்ன பதில் சொல்வாள்? ‘தேவையா!’ என்று நினைத்துக்கொண்டு வழக்கம் போல மௌனமாக நின்றாள்.

அவனே, “இன்னும் இரண்டு வாரம் இங்கேதான் இருப்பேன். தினம் உன் ஆஃபிஸ் இருக்கும் காம்ப்ளக்ஸில் தான் எனக்கும் வேலை. இதே ட்ரெயின்ல தான் வருவேன்; போவேன். பழைய விஷயங்களை நான் நினைக்கலனாலும், நீ இன்னும் மறக்கல போல” என்று உணர்ச்சியை அடக்கியக் குரலில் சொன்னான்.

அவன் கோபத்தை அடக்குவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால், அதையும் மீறி அவளது மனத்தை ஆக்ரமித்திருந்தது அவன் சொன்ன காலக்கெடு.

‘இரண்டு வாரமா!’ என்று திகைத்துப்போனாள்.

இந்தத் திகைப்பு அவளது முகத்தில் வெளிப்பட்ட அடுத்த கணம், உள்ளத்தில் இதமான தென்றல் வீசியது. எதிர்பாராமல் கிடைத்த சந்திப்பு இப்போது, இரண்டு வாரம் இதே ஊரில், அவளுக்கு அருகில் தினமும் அவளோடு ஒரே இரயிலில் பயணிக்கப்போகிறான்.’

நினைக்கும் போதே உள்ளம் சந்தோஷத்தில் ஆனந்தக் கூத்தாடியது.

‘பூர்ணிமா! உனக்குக் கடவுள் கொடுத்திருக்கும் எதிர்பாராத வரம். இனி, காலம் முழுதும் நீ நினைத்து மகிழ உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொன்னான நாட்கள். இதை தவறவிட்டுவிடாதே. உன் கணவன், உன் அருகில் இருக்கப்போகிறான்’ எனச் சந்தோஷித்த மனத்தை, ‘ஆனால், இன்னும் சில நாட்களில் அவன் மேகாவின் கணவன்’ – என மனசாட்சி அவளது தலையில் தட்டியது.

ஒரே ஒரு நொடி தடுமாறியவளின் எண்ணம் அடுத்த நொடியே முதன்முறையாக சுயநலமாகச் சிந்தித்தது.

‘இருக்கட்டுமே இப்போது வரை, அவன் என் கணவன் தானே. எனக்குச் சொந்தமானவன் தானே! நான் நினைத்திருந்தால், உண்மையை சொல்லியிருக்கலாம் இல்லையா..? ஏன் சொல்லவில்லை?

நட்பிற்குக் கொடுத்த முக்கியத்துவம். நான் பட்டிருந்த நன்றிக்கடன். அதற்காக, என் மொத்த வாழ்க்கையையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தவள். அப்படிப்பட்ட என்னை உண்மை புரியாமல் மேகா தூக்கி எறியவில்லையா?

காலம் முழுக்க இந்த உறவைக் கேட்கவில்லையே. உடலால் ரிஷிக்கு மனைவியாக இருக்கப் போவதில்லையே? மனதால்... அவனது அருகாமையை சிறிது நாட்கள் அனுபவித்துக்கொள்வதில் தவறென்ன?’ என்று தனக்குள் போராடியவள் இறுதியில் இறைவன் கொடுத்த வரத்தைச் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வதென தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாள்.

தன் வசந்தகாலத்தைச் சந்தோஷமாக அனுபவிக்கத் தயாரானாள்.

“எக்ஸ்க்யூஸ்மீ...” என்று அவளை உரசாமல் தாண்டி சென்றதும் தான், தான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் என்று புரிந்து அவன் பின்னால் விரைந்தாள்.

“ரிஷி சார்! சாரி” என்றதும், நடந்துகொண்டே திரும்பிப் பார்த்தான்.

“ப்ளீஸ்!” என்று கெஞ்சியவளைப் பார்க்கச் சிரிப்பாக வந்தது அவனுக்கு.

அவனது புன்னகை அவளையும் தொற்றிக்கொள்ள, “தேங்க்ஸ்!” என்றாள்.

“எனக்குத் தேவை, தேங்க்ஸ் இல்லை...”

“வேற என்ன வேணும்?”

“இன்னைக்கு மதியம் லஞ்ச் என் கூடச் சாப்பிட வரணும்” என்றதும் பதில் பேசாமல் வந்தவளிடம், “என்ன நந்தா சாரிடம் பர்மிஷன் வாங்கணுமா?” என்றான்.

அவன் கேட்ட விதம் அவளுக்குக் கோபத்தைக் கொடுக்க, “அவருக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும். மதியம் எங்கே வரணும்?” என்றாள்.

சிரிப்புடன், “நானே வந்து கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

அன்று மட்டுமல்ல அதன்பிறகு வந்த மூன்று நாட்களும் இருவரும் மறந்தும் தங்கள் பழைய கதைகளைப் பேசவில்லை. மூன்று நாட்கள் தொடர்ந்து ஹோட்டல் சாப்பாடு அலுத்துவிட்டது என்றவனுக்கு, மறுநாள் காரசாரமாகச் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

வழக்கமாகச் செல்லும் ரயிலில் செல்லாமல் அலுவலகம் முடிந்ததும், ஸ்டேஷனிலோ, காஃபி ஷாப்பிலோ, கோவிலிலோ அமர்ந்து பேசிய பிறகே தங்கள் இருப்பிடத்திற்கு கிளம்பினர்.

ரிஷி சிரிக்கச் சிரிக்கப் பேசினான். அதையெல்லாம் அமைதியாக மனப்பெட்டகத்தில் பூட்டிக்கொண்டாள்.

புன்னகை முகமாகவே இருந்தபோதும் அவளை, இவ்வளவு சந்தோஷத்துடன் அவளே பார்த்ததில்லை. அடுத்தவர்கள் பார்ப்பார்களோ, அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டி வருமோ என்ற பயமில்லாமல் இருப்பதே நிம்மதியாக இருந்தது.

நாட்கள் இறக்கைக் கட்டிக்கொண்டு ஓடின. அவனது அருகாமை கொடுத்த மாற்றம், அவள் மனத்திலும், முகத்தின் பொலிவிலும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. உடன் பணிபுரிபவர்கள் கேட்கும் அளவிற்கு வித்தியாசம் தெரிந்தது.44


குறுகுறுக்கும் உன் மூச்சுக்காற்றை மட்டும்

எனக்கென அனுப்பி விடுகிறாய்

நான் தொலைந்து கொண்டே இருப்பதற்குவார இறுதி விடுமுறை நாளை நெட்டித் தள்ளியவள், திங்கட்கிழமை காலை அவசரம் அவசரமாக கிளம்பி ரிஷியைக் காணும் ஆவலில் ஸ்டேஷனுக்கு வந்து காத்திருந்தாள்.

ஆனால், அவனைக் காணவில்லை. விழிகள் அவனது வருகையை எதிர்பார்த்து அலைபாய்ந்தன. தூரத்தில் எங்கேனும் வருகிறானா என்று எதிர்பார்ப்போடு அந்தப் பிளாட்பாரத்தையே சுற்றிச் சுழன்றது. அவனைக் காணாமல் இரண்டு முறை அவனது செல்பேசிக்கு முயன்றும் அவன் எடுக்கவேயில்லை. அவள் செல்லவேண்டிய ரயிலும் வந்து சென்று அடுத்த வண்டியும் வந்தது. அவன் மட்டும் வரவேயில்லை.

பூர்ணிமாவின் மனத்திற்குள், பயம் துளிர் விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்புடன் நின்றாள். அவளுக்கிருந்த கடைசி வண்டியும் புறப்படத் தயாராகிவிட்டதை உணர்ந்தவள், வேறு வழியில்லாமல் மனத்திற்குள் ஆயிரம் வேண்டுதலுடன் ஏறவும் ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது.

‘கடவுளே...! என் ரிஷிக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது. நீதான் துணையா இருக்கணும்’ என்று வேண்டிக்கொண்டே வேதனை சுமந்த முகத்துடன் நின்றிருந்தவள் உள்ளுணர்வு உந்தத் திரும்பிப் பார்த்தாள்.

ரயிலை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்த ரிஷியைக் கண்டதும், அதுவரை சோர்ந்திருந்த அவளது விழிகளில் பிரகாசம் தெரிய, ரயில் வேகமெடுப்பதற்குள் அவன் ஏறிவிடவேண்டுமே என்ற பதட்டமும், பத்திரமாக ஏறவேண்டுமே என்ற தவிப்புமாகப் பதினைந்து நொடிகளில் அவளது முகம் பல பாவங்களை வெளிப்படுத்தியது.

“மேடம்! இங்கே நிற்காதீங்க” என்றவர்களின் குரல் அவளது செவிகளில் விழவேயில்லை.

வேகமாக ஓடிவந்தவன் ஒருமுறை கம்பியைப் பிடித்தும் கைவழுக்கி விழுவது போல போக தன்னையுமறியாமல், “நந்தா...” என்ற சத்தத்துடன் கீழே இறங்க முயன்றவளை, “மேடம் இப்படி வாங்க...” என்று சொல்லிக்கொண்டே அவளது கையைப் பிடித்து உள்ளே இழுத்த இளைஞன் ரிஷியின் கையைப் பிடித்து வண்டியில் ஏற உதவி செய்தான்.

ரிஷி பத்திரமாக ஏறியதும், ‘கடவுளே... நன்றி’ என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டவள் வேகமாக துடித்த இதயதுடிப்பை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சாய்ந்து நின்றாள்.

அப்போதுதான் அவனது பெயரைச் சொல்லி அழைத்தது நினைவிற்கு வர, ‘ரிஷி கவனித்திருப்பானோ! என்ற பயம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது.

“தேங்க்யூ” என்று அந்த இளைஞனிடம் புன்னகையுடன் சொன்னவன், நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்தபடி அவளைப் பார்த்து, “ஹாய்...” என்று சிரித்தான்.

ஹப்பா! என்று ஆசுவாசமானவளது விழிகள் சட்டென கோபத்தை வெளிப்படுத்தியது.

கண்களை உருட்டி, “உங்களுக்கு ஏதாவது இருக்கா?” என்று ஆத்திரத்தை அடக்கிய குரலில் கேட்டாள்.

அவளது கண்களை ஊன்றி பார்த்தவனின் முகம் நெகிழ்ந்து போகச் சட்டென சமாளித்தவன், “அறிவு இருக்கான்னு நேராகவே கேளேன்” என்றான் சிரிப்புடன்.

கோபத்தில் வார்த்தை எவ்வளவு வீரியத்துடன் வந்துள்ளது என்று புரிய, “சாரி... டென்ஷன்ல...” என்றாள்.

“பரவாயில்ல. உரிமை இருக்கும் இடத்தில் தான் கோபம் வரும்” என்று அவன் சொல்ல உதட்டைக் கடித்தபடி திரும்பிக்கொண்டாள்.

“ஃப்ரெண்ட்ஷிப்பைத் தான் சொன்னேன்…” என்றான் நிதானமான குரலில்.

அவள் எதுவும் சொல்லாமல் மௌனமாக நின்றாள்.

தன் உரிமையை விட்டுக்கொடுத்து, தன்னைக் கண்டதும் இருமனதாகத் துடிப்பவளை நினைத்து கோபம் வந்தபோதும் அவளது துடிப்பும், தவிப்பும் அவனைப் பாடாய்படுத்தியது. தன்னைக் கடிந்து கொண்ட போது நனைந்திருந்த இமைகள் அவளது காதலைச் சொல்லாமல் சொன்னது. இழுத்து அணைத்துக்கொள்ளத் துடித்தக் கரங்களைக் கட்டுப்படுத்த, மேலேயிருந்த கம்பியை அழுந்தப் பற்றிக்கொண்டான்.

ட்ரெயினை விட்டு இறங்கியதும் நேராக அவனைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று சுவாமியின் சிகப்பு கயிறு ஒன்றை வாங்கிக் கட்டியவள் தேங்காய் உடைத்துவிட்டு வந்தாள்.

இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தபோதும் அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக நின்றிருந்தான்.

‘இதுக்கெல்லாம் இருக்குடி உனக்கு’ என்று மனத்திற்குள் கருவிக்கொண்டான்.

**********************​

சிகப்பு வண்ண ஷிஃபான் சேலையில் வெள்ளைக் கற்கள் ஒளிர, கையில் பூங்கொத்துடன் சங்கீதாவின் கல்யாண வரவேற்பிற்கு ஆட்டோவில் வந்து இறங்கிய பூர்ணிமா, வரவேற்பு நடக்கும் ஹோட்டலின் வாசலில் ரிஷி நிற்பதை பார்த்தாள்.

‘ரிஷி! எப்படி இங்கே?’ என்று ஆச்சரியத்துடன் பார்த்தாள். ‘ஒருவேளை என்னைப் பார்க்கவோ!’ என்று மனத்திற்குள் ஒரு ஆசை எட்டிப்பார்த்த அடுத்த நொடியே, ‘எதுக்கு உனக்கு இப்படி அல்பபுத்தி! நான் இங்கே வரப்போவது, அவனுக்கு எப்படித் தெரியும்? இதைப் பற்றிச் சொல்லவே இல்லயே. ஒருவேளை யாரையாவது பார்க்க ஹோட்டலுக்கு வந்திருப்பான்’ என்று நினைத்துக்கொண்டே அவனை நோக்கிச் சென்றாள்.

இடதுகையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் மணி பார்த்துவிட்டு நிமிர்ந்தவன், தன் எதிரில் வந்து நின்றவளை பார்த்தான்.

“ஹே...! நீ எங்கே இங்கே?” என்றான்.

“நான் கல்யாண ரிசப்ஷனுக்கு வந்தேன். கல்யாணப் பொண்ணு என் ஃப்ரெண்ட்.”

“அப்படியா? ஆனா, உள்ளே போனதும் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரப்போகுது, கல்யாணப் பொண்ணு யாருன்னு” என்றவன் புன்னகைக்க, பூர்ணிமாவின் கன்னங்கள் செம்மையைப் பூசிக்கொண்டது.

சட்டென சுதாரித்தவள் அவன் சொன்னதைக் காதில் வாங்காதது போல, “நீங்க என்ன இங்கே? யாரையாவது பார்க்கவந்தீங்களா?” எனக் கேட்டாள்.

“நானும் இதே ஃபங்ஷனுக்குத் தான் வந்தேன் என் ஃப்ரெண்டோடு. நடுவில் அவனுக்கு வேலை வரவும், என்னை மட்டும் கொஞ்சநேரம் இங்கே இருக்கச் சொல்லிட்டு அவன் ஃப்ரெண்டோடு கிளம்பிப் போய்ட்டான்.

“……………..”

“யாரையும் தெரியாத இடத்துல என்ன பண்றதுன்னு நினைச்சிட்டே இருந்தேன் நல்லவேளை நீ வந்த.”

“அப்போ, உள்ளே போகலாமா?” என்றபடி அவனுடன் இணைந்து நடந்தாள்.

பலரின் கண்கள் தங்கள் மீது விழுவதைப் பார்த்தும் பார்க்காதது போல, ரிஷியுடன் பேசிக்கொண்டே நடந்தாள். ரிஷி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, பூர்ணிமா சங்கீதாவின் அறைக்குச் சென்றாள்.

“பூர்ணிமா…” என்று தன் தோழியின் கையைப் பிடித்து தன் அருகில் அமரவைத்துக் கொண்டவள், அவளைத் தன் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

“சங்கீதா! உன்னை இப்படிப் பார்க்க, ரொம்பச் சந்தோஷமா இருக்கு.”

“எனக்கு மட்டும் இல்லயா என்ன? நீயும் உன் கணவரும் சேர்ந்து வந்ததற்கு நான் இல்ல நன்றி சொல்லணும்” என்றாள் சிரிப்புடன்.

சங்கீதாவின் பதிலைக் கேட்டதும் திகைத்து நின்றாள். ரிஷியுடன் சேர்ந்து வந்தபோதும், தான் ஒரு போதும் இந்த நிலையில் யோசிக்கவே இல்லையே என்று எண்ணிக்கொண்டே, “நீ எப்போ? எப்படிப் பார்த்தே?” என்று கேட்டாள்.

“இதோ... இதில் தான்” என்று அறையின் மூலையிலிருந்த டீவியைக் காட்டினாள்.

“நீங்க ரெண்டு பேரும் உள்ளே வரும் போதிலிருந்து, கேமரா ஃபோக்கஸ் உங்க ரெண்டு பேர் மேலேயும் தானே இருந்தது” என்று தோழியின் முகவாயைப் பற்றிச் சொன்னாள்.

‘இல்லை’ என்று மறுக்க நினைக்கும்போதே சங்கீதாவைத் தேடி உறவினர்கள் வர, பூர்ணிமா சற்று ஒதுங்கி நின்றாள்.

கிடைத்த நேரத்தில் அவளது மனம் அவளை மூளைச் சலவை செய்ய ஆரம்பித்தது.

‘ஏன் மறுக்க வேண்டும்? ரிஷி என் கணவன் தானே. இதில் என்ன தவறு இருக்கிறது? ரிஷி என்னுடன் வந்தது, என் தவறு இல்லையே. நானாக அவரைக் கூப்பிடவில்லையே... ரிஷியை, என் கணவன் இல்லை என்று சொல்வதில் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?

நானும் பெண் தானே எனக்கும் மனம் என்ற ஒன்று இருக்கிறதே. விலகி விலகிப் போனாலும், என்னைத் தேடி வரும் உறவை என்னால் ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியவில்லையே. இது நிரந்தரம் இல்லை என்று தெரிந்தபோதும், என் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சஞ்சலத்தில் தடுமாறுகிறதே. மூளை தவறு என்று சுட்டிக்காட்டினாலும், மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறதே’ என்று மனத்திற்குள்ளே ஒரு விவாதத்தை நடத்தி அதற்கு தன்னிலை விளக்கத்தையும் சொல்லிக் கொண்டாள்.

‘நானாக அவரைத் தேடிப் போகப் போவதில்லை. இந்த இரண்டு வாரச் சந்தோஷம் என் வாழ்நாள் முழுமைக்கும் போதும். வாழ்க்கையின் கடைசிப் படியில் திக்குத் தெரியாமல் நின்றிருந்த எனக்கு, இதுதான் வழி என்று அடைக்கலம் கொடுத்த மேகாவின் வாழ்வில் நிச்சயம் குறுக்கிடமாட்டேன்’ என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

அவள் தன்னைக் கவனிக்காமல் கடந்து செல்வதைக் கண்டு, “பூர்ணிமா...” என்று அழைத்தான்.

மனக்குழப்பத்திற்குத் தற்காலிக தடை போட்டுவிட்டு, “உங்களைக் கவனிக்கலை” என்று சிரித்தபடி அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

மேடைக்கு வந்த மணமக்களைப் பார்க்கும் சாக்கில் மேடையையே பார்த்துக் கொண்டிருக்க, தன்னிடம் அவள் கொடுத்துவிட்டுச் சென்ற பூங்கொத்தை அவளிடம் கொடுத்தான்.

“பேசாம வீட்டுக்கே போய் இருக்கலாம். நீ இருக்கும் தைரியத்துல வந்தா நீயும், எதுவும் பேசாம மேடையையே பார்த்துட்டிருக்க” என்று அவள் காதில் விழும்படி முணுமுணுத்தான்.

திரும்பிப் பார்த்தவள், “சாரி என்ன பேசறதுன்னு தெரியலை” என்றாள்.

“நம்பறது கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு” என்றான் கிண்டலாக.

“என்ன கஷ்டம்...?”

“பின்ன, இவ்வளவு நேரம் மேடையைப் பார்த்தியே என்ன கவனிச்ச?”

“ஸ்பெஷலா கவனிக்க என்ன இருக்கு? கல்யாண மாப்பிள்ளையும், பொண்ணும் தன்னைச் சேர்ந்தவங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கிறாங்க.”

“அவ்வளவு தானா...!”

“வேற என்ன?”

“மாப்பிள்ளை ஒரு வார்த்தைப் பேசினா, உன் ஃப்ரெண்ட் பத்து வார்த்தைப் பேசறாங்க. இப்படி ஒரு பிரெண்ட் இருந்தும் நீ…” என்று பேசிக்கொண்டே போனவனைத் தன் நீள்விழிகளால் முறைத்தாள்.

“சாரி சாரி சரண்டர்” என்று பயப்படுவது போல இரு கைகளையும் உயர்த்தி சமாதானம் செய்தவனைப் பார்த்து நகைத்தாள்.

மொட்டாகக் குவிந்திருந்த ரோஜா அழகாக இதழ் விரித்தது போல, பளீரெனச் சிரித்தவளைக் கண்களால் பருகினான். இத்தனை நாள் இல்லாத தவிப்பு ஒன்று, அவனைப் பாடாய்படுத்தியது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவனுக்குப் பெரும் கொடுமையாக இருந்தது. திரும்பி அவளது முகத்தைப் பார்த்தான். புன்னகையுடன் மேடையைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் கரத்தைப் பற்ற முயன்ற நேரம், பூர்ணிமா சட்டென எழுந்தாள்.

“என்ன ஆச்சு?”

“சங்கீதா நம்மள கூப்பிடுறா” தயங்கிக்கொண்டே சொன்னாள்.

“நீ போய்ட்டு வா. நான் இருக்கேன்...”

“இல்ல அவள் உங்களையும் கூட்டிட்டு வரச்சொல்றா” என்று மேடையிலிருந்து தங்களையே பார்த்துக்கொண்டிருந்த சங்கீதாவை பார்த்து சமாளிப்பாகப் புன்னகைத்துக்கொண்டே சொன்னாள். அவனும் ‘ஹுஃப்’ என்று பெருமூச்சை வெளியிட்டவன் எழுந்து பூர்ணிமாவுடன் சென்றான்.

புன்னகையுடன் இருவரையும் பார்த்த சங்கீதா, “ஹலோ சார்! உங்ககிட்ட இவளைப் பற்றிப் பெரிய கம்ப்ளெயிண்ட் சொல்லியே ஆகணும். வேலைக்குச் சேர்ந்து இத்தனை நாள் உங்களை, எங்க கண்ணிலேயே காட்டாமல் வச்சிருந்தா. எப்படியோ எங்க கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் சேர்ந்து வந்து காட்சி கொடுத்ததுக்கு ரொம்பவே தேங்க்ஸ்” என்று சிரித்தவள், தன் கணவனுக்கு இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

பதைபதைத்த மனதுடன், முகம் வெளிற நின்றிருந்தவளைத் திரும்பிப் பார்த்தான்.

“இல்லை ரிஷி அதுவந்து…” என்று ஏதோ சொல்ல வந்தவளை, “திரும்பி நில்லு! ஃபோட்டோ எடுக்குறாங்க” என்று அவளது தோளைப் பற்றித் திருப்பியவன், அவள் மீதிருந்த கையை எடுக்கவே இல்லை.

அவனது முகத்தைப் பார்த்துக்கொண்டே திரும்பியவளின் காதில், “கொஞ்சம் சிரி... கமான்” என்று அவளது தோளை அழுத்தினான்.

மேடையிலிருந்து இறங்கிய இருவரது முகமும், இறுக்கமாகவே இருந்தது. இதுவரை அவன் தன்னை எதுவும் கேட்காமல் இருப்பதே அவஸ்தையாகவும், என்னை உன் கணவன் என்று அறிமுகப்படுத்தும் போது, நீ ஏன் ஏதும் சொல்லவில்லை என்று கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது?’ என்று தெரியாமலும் மனம் பயத்தில் நிறைந்திருந்தது.

பெயருக்கு எதையோ கொறித்துவிட்டுக் கிளம்பினர்.

அவனது கார் வரை உடன்வந்தவள், “நான் கிளம்பறேன்” என்றாள்.

“இந்த நேரத்துல ட்ரெயின்லயா போகப் போற? வா நானே உன்னை டிராப் பண்ணிட்றேன்” என்று சொல்லிக்கொண்டே தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

“வேண்டாம்... ஐந்து நிமிடம் நடந்தா ஆட்டோ ஸ்டாண்ட்... அங்கே போய்…” என்று சாக்குச் சொன்னவள், அவனது முகத்தில் தெரிந்த கோபத்தில் கப்பென வாயை மூடிக்கொண்டாள்.

“ஏன் இங்கேயிருந்து நடந்தா ஒண்ணரை மணி நேரத்துல உன் வீடே வந்திடும். பேசாம நடந்து போயேன். ஆட்டோக்காரனை நம்பிப் போறவங்க, என்னை நம்பி வரலாம்” என்று எரிச்சலோடு சொன்னான்.

அப்படியும் தயங்கி நின்றவளது கரத்தைப் பற்றியவன், “வீணா சீன் க்ரியேட் பண்ணாம வா” என்றான்.

சிறிது தூரம் வரை இறுக்கமாகவே வந்தவன், திடீரென வாய்விட்டு நகைக்க வித்தியாசமாகப் பார்த்தாள்.

“உன் ஹஸ்பண்டை நீ யார் கண்ணிலும் காட்டியதே இல்லயா? மிஸ்டர். நந்தா மேலே அத்தனை நம்பிக்கையா? சரியான மாயக்கண்ணனோ?” என்று சீண்டினான்.

அவனது கிண்டலை ரசிக்காதவள் வீராப்புடன், “அவர் முன்னால் ரதி மாதிரி பொண்ணு வந்து நின்னாலும், திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்.”

“எப்படித் திரும்பிப் பார்ப்பார்? முன்னால் வந்து நிற்கும் பெண்ணை நிமிர்ந்து தானே பார்க்கணும்” என்று வெடிச்சிரிப்பு சிரிக்க, பூர்ணிமா அழுந்த உதட்டை கடித்துக் கொண்டு எப்போதடா வீடு வரும் என்று அமர்ந்திருந்தாள்.

“ம்ம்..., அவருக்கு ரதியெல்லாம் வேண்டாம், இந்த மதியே போதும்னு உன்னையே சுத்திசுத்தி வராராக்கும்” என்று சிரித்தான்.

அவளோ பதில் சொல்லாமல் தன்னை அலைக்கழிக்கும், விதியை நினைத்துக் கொண்டே வந்தாள். அவளது முகத்தில் எரிச்சல் தெரிய உள்ளுக்குள் புன்னகைத்துக்கொண்டான்.

அவளது அப்பார்ட்மெண்ட் வாசலில் இறக்கிவிடும் போது, “பூர்ணிமா! முக்கியமான விஷயமாக நாளைக்குப் பூனா போகிறேன். மூணு நாள் கழிச்சி வருவேன் உன்னைப் பார்க்க கல்யாண இன்விடேஷனோடு” என்று பெரிய குண்டைத் தூக்கி அவள் தலையில் போட்டுவிட்டுக் கிளம்பினான்.

எதிர்பார்த்த விஷயம் தான் ஆனால், வாழ்க்கையே அஸ்தமித்தது போலிருந்தது. மூச்சுவிட சிரமப்படுபவள் போலத் தன்னைச் சமாளித்துக்கொள்ள போராடினாள்.
 
  • Love
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
45

என் கூந்தலுக்குள் நுழையும் உன் கைகள்

என்னுள் நீ தொலைவதற்கான

ஆயத்தங்களையும் செய்து விடுகிறது..


அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தவளுக்கு எங்கு பார்த்தாலும், ரிஷி நிற்பது போலவே இருந்தது. தன் நிலை குறித்து அவளுக்கே அவமானமாக இருந்தது. இரண்டு வாரம் பொற்காலம் என்று எண்ணிய மனமே தன் செய்கையை நினைத்து வெட்கியது. காதல் இந்த அளவிற்குத் தன்னைத் தரம் தாழ்ந்து போகச் செய்ததே என்று தனக்குள் குமைந்து போனாள்.

தன்னைப் பலவீனமாக்கும் அழுகையை அடக்கிக் கொண்டதாலோ என்னவோ மூன்று நாட்களாக வானம் கிழித்துக்கொண்டு கொட்டியது. மும்பையின் பல பகுதிகள் நீரில் மூழ்க, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

மாலை இருள் கவிழ தொடங்கியது. மதியத்திலிருந்து விட்டிருந்த மழை மீண்டும் தன் ஆரவாரத்தை ஆரம்பித்தது. விளக்கை ஏற்றிவிட்டு பால்கனி வாசலில் சாய்ந்து நின்றுக்கொண்டு வெறுமையான மனதுடன் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, ரிஷியிடமிருந்து வந்த அழைப்பு கவனத்தை திருப்பியது.

ஆழமூச்செடுத்தவள், “ஹலோ” என்ற குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நிர்மலமாக இருந்தது.

“பூர்ணிமா...! நான் உன் அபார்ட்மெண்ட் மெயின் கேட்கிட்ட நிற்கறேன் உன் அப்பார்ட்மெண்ட் நம்பர் சொல்லு.”

தன் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தவள், அவன் டாக்சியை அனுப்பிவிட்டு அங்கிருந்த ஷெட்டின் அருகில் வந்து நிற்பதைக் கண்டாள்.

“நீங்க அங்கேயே இருங்க நான் வரேன்” என்றவள், ஒரு குடையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினாள்.

குடையை விரித்து அவனுக்கு நீட்டியவளிடம், “நீயும் வா” என்றான்.

“பரவாயில்ல” என்றவள் தலையில் துப்பட்டாவைச் சுற்றிப் போட்டாள்.

“ஹே... இது எவ்வளவு தூரம் தாங்கும். ரெண்டு பேரும் குடையை ஷேர் பண்ணிக்கலாம்” என்று சற்று நெருங்கி அவளுக்கும் சேர்த்து குடைபிடிக்க, சட்டென விலகி வேகமாகப் படிக்கட்டை நோக்கி ஓடினாள்.

‘இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படி ஓடுவேன்னு பார்க்கிறேன்’ என்று முணுமுணுத்துக்கொண்டு அவளைத் தொடர்ந்து சென்றான்.

அடித்த பேய் மழையில், இருவருமே நனைந்திருந்தனர். தன் அப்பார்ட்மெண்ட் கதவைத் திறக்கும்போதே, ‘ஏதாவது கதை கிடைக்குமா!’ என்று கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடிக் கொண்டிருக்கும் எதிர்வீட்டு குப்தா பாபி தலையை மட்டும் கதவுக்கு வெளியே வைத்து இருவரையும் சுவாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு ஈ..யென சிரித்துவிட்டுக் கதவைத் திறந்தாள். பின்னால் வந்த ரிஷி நந்தன் அவரைப் பார்த்து, “நமஸ்தேஜி” என்று சொல்ல ரொம்ப முக்கியம், என்று நினைத்துக்கொண்டாள்.

“உள்ளே வாங்க” என்றவள், ஓடிச்சென்று டவல் ஒன்றை கொண்டுவந்து கொடுத்தாள்.

“இது கரெக்ட்... இப்படிச் சிரிச்சிட்டே இருந்தால் தானே நல்லாயிருக்கு” என்றபடி சென்றான்.

அவன் சொன்னதைக் காதில் வாங்காமல், “காலையிலிருந்து கரண்ட் இல்லை. நீங்க கைகால் அலம்பிக்கோங்க” என்று பாத்ரூமைக் காட்டினாள்.

அப்போது, “பூர்ணிமா...” என்று எதிர்வீட்டு குப்தா பாபியின் குரல் கேட்க, எரிச்சலுடன் கதவைத் திறந்து, “என்ன வேணும்..?” என்றாள்.

“இல்ல… உன்கிட்ட டார்ச் இருந்தா வாங்கிட்டுப் போலாமேன்னு..” வாய் மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருக்க, பார்வை வீட்டை அலசியது.

அப்போதைக்கு எதுவும் பேசாமல் டார்ச்சைக் கொடுத்துவிட்டு, மறுபேச்சில்லாமல் கதவை மூடினாள்.

“அடுத்த வீட்டுக் கதைக்கு ஏன் இப்படி அலைகிறார்களோ?” என்று முணுமுணுத்துக்கொண்டே சமையலறைக்குச் சென்றாள்.

குக்கரில் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்துவிட்டு, டீக்குத் தண்ணீரை கொதிக்கவைத்து இரண்டு ஏலக்காய் இஞ்சியைத் தட்டிப்போட்டாள். டீயை வடிகட்டி பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துவிட்டு அரைவேக்காடாக வெந்திருந்த உருளைக்கிழங்கின் மேல்தோலைச் சீவி, சூடான எண்ணையில் நேராக சிப்ஸ் கட்டையை வைத்துத் துருவி பொன்னிறமாக பொரித்தெடுத்து, டைனிங் டேபிள் மீது கொண்டுவந்து அடுக்கினாள்.

இதற்குள் ஒரு குளியல் போட்டுவிட்டுத் தலையைத் துவட்டியபடி வந்தவனின் நாசியை ஏலக்காய் டீயின் மணமும், சிப்சின் மணமும் கலவையாகத் தாக்கின. அறையில் பரவிய சோப்பின் வாசனை, அவன் வந்ததை உணர்த்த திரும்பிப் பார்த்தாள்.

“வாங்க...” என்று புன்னகைத்தாள்.

“ம்ம்..., என்ன ஒரு மணம்? ரெண்டு நாளா ஒரே அலைச்சல். காலைலயிருந்து சாப்பிடக்கூட இல்ல. இப்போ இந்த மணம் என் வயிற்றில் பசியைத் தூண்டுது” என்றான்.

“வேலை நேரத்தில் சாப்பிடக்கூடாதுன்னு சட்டமா? இருங்க நான் தோசை ஊத்தறேன்” என்று நகர்ந்தவளை, “அதெல்லாம் வேண்டாம். இப்போதைக்கு இது போதும். நைட் டின்னர்ல பார்த்துக்கலாம்” என்றவன் அவள் திகைத்தபடி நிற்பதைக் கண்டுக்கொள்ளாமல், “தலையைக் கூடத் துவட்டாம என்ன பண்ணிட்டு இருக்க? போய் முதலில் துவட்டு” என்று கண்டிப்புடன் சொன்னான்.

“நீங்க, டீ சாப்பிடுங்க” என்று அவன் முன் வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றாள்.

ஒற்றைப் படுக்கை அறையுடன் இருந்த அந்த அப்பார்ட்மெண்ட் மிக நேர்த்தியாக அழகாக இருந்தது. ரிஷியின் பார்வை அறையை அலசிக்கொண்டிருக்கும் போதே அவனெதிரில் வந்து அமர்ந்தாள்.

“வீட்டை ரொம்பச் சுத்தமா வச்சிருக்க.”

“தேங்க்ஸ்! நான் ஒருத்தி தானே இருக்கேன். சுத்தம் செய்யப் பெரிசா என்ன இருக்கு?” என்றவள் தன் நாக்கை கடித்துக்கொண்டு எதிரிலிருந்தவனைப் பார்த்தாள்.

அவனோ நிதானமாக எழுந்து பால்கனியில் சென்று நின்றான். யோசனையிலிருந்தவனின் முகம் புன்னகையில் விரிந்தது.

“சில விஷயங்கள் மறக்கணும்னு நினைச்சாலும் முடியாது இல்ல” என்றபடி திரும்பி அவளைப் பார்த்தான்.

அந்த மழைநாள் அவளது நினைவிற்குவர, அவளது முகம் வெளிறியது. கைகளில் சிறு நடுக்கம் பரவ கையிலிருந்த டீ கப் விரல்களின் தடுமாற்றத்தால் டேபிள் மீதே விழுந்தது. டேபிள் மீதிருந்தப் புத்தகத்தை விரைந்து எடுத்தவள், அதிலிருந்து விழுந்த போட்டோவைக் கவனிக்கவில்லை.

ஈரத்துணியால் துடைத்தவள், “நேரத்தோடு டின்னர் ரெடி பண்றேன்” என்றபடி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். சற்று நிமிர்ந்து பார்த்திருந்தால், அவனது இறுகிய முகத்தைப் பார்த்திருப்பாள்.

யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க, சிங்கில் குழாய் திறந்திருந்ததால் பூர்ணிமாவின் காதில் சத்தம் கேட்கவில்லை. ரிஷியே சென்று கதவைத் திறந்தான். அதே குப்தா பாபி கையில் டார்ச்சுடன் நின்றிருந்தாள். ரிஷியைக் கண்டதும் பல்லைக் காட்டியவள், டார்ச்சை கொடுத்து விட்டுச் சப்தமில்லாமல் திரும்பிச் செல்ல, “ஒரு நிமிடம்...” என்று கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

இதை எதிர்பார்க்காதவர் நிற்க, “இப்போ உங்களுக்கு நான் யாருன்று தெரியணும். எனக்கும், பூர்ணிமாவுக்கும் என்ன சம்மந்தம்னு தெரியணும் அதானே...” என்றவன் அவர் மறுத்துச் சொல்லவந்ததைக் காது கொடுத்து கேளாமல், “நான் ரிஷிநந்தன். பூர்ணிமாவோட கணவன். போதுமா!” என்றான்.

முகம் அஷ்டக்கோணலாக வலிய வரவழைத்த சிரிப்புடன், தன் வீட்டை திறந்து கொண்டு சென்றவரைப் பார்த்துச் சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

சோஃபாவில் வந்து அமர, “எங்கே போய்ட்டீங்க? உங்க மொபைல் ரெண்டு தடவை ரிங் வந்து நின்னுடுச்சி” என்றாள்.

“உன் எதிர்வீட்டுக்காரம்மா வந்திருந்தாங்க. அவங்ககிட்ட பேசிட்டு வந்தேன்.”

“என்ன என்ன பேசினீங்க?” தடதடத்த மனதுடன் அவனைப் பார்த்தாள்.

“பேசவேண்டியதைத் தான் பேசினேன். ஆமாம். உன் ஹஸ்பண்ட் எப்போ ஆஃபிசிலிருந்து வருவார்.”

“அ...வ...ர் டூர் போயிருக்கார். நாளைக்குத் தான் வருவார். ஒரு ஐந்து நிமிடம் நான் முகம் கழுவிட்டு வந்திடுறேன். டிஃபன் தயாராகியாச்சு சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

பயத்தில் உடல் முழுதும் வியர்வையில் நனைந்தது. இவன் என்ன பேசினானோ, அந்தம்மா என்ன சொல்லியதோ இவனுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும்? அப்படி தெரிந்திருந்தால் இவ்வளவு நேரம் பேசாமலிருப்பானா? அவனை ஏமாற்றியதற்காக சண்டை போட்டிருப்பானே. ஒருவேளை, பொதுவாக எதாவது பேசி இருப்பானோ?’ என்று தனக்குள்ளேயே குழம்பிக்கொண்டு இருந்தாள்.

”பூர்ணிமா...” என்று கதவைத் தட்டவும், “இதோ வரேன்” என்று குரல்கொடுத்துவிட்டு அவசர அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள்.

இருவரும் மௌனமாகவே சாப்பிட்டுவிட்டு எழுந்தனர். கை கழுவிக்கொண்டு அமர்ந்தவனின் பார்வை, அவள் மீதே படிந்திருந்தது. அத்தனை நேரமில்லாமலிருந்த மின்சாரமும் வந்தது.46

உன் வருகைக்கு முன்னரே

வந்து சேர்ந்து விடுகிறது உன் காதலின்

வெப்பப் பெருமூச்சுகளும்

என் இதய தடுமாற்றங்களும்...பாத்திரங்களைக் கழுவிவிட்டுத் திரும்பியவள், கிச்சன் வாசலில் நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனைக் கண்டதும் அச்சத்துடன், “எதாவது வேணுமா?” என்று கேட்டாள்.

“ஆமாம். என் கேள்விக்கெல்லாம் விடை தெரியணும்” என்றான் மர்மமாக.

“கேள்வியா? என்ன கேள்வி?” தடுமாற்றத்துடன் வந்தது அவளது எதிர்கேள்வி.

“நீ சந்தோஷமா இருக்கியா?”

பாத்திரத்தை அடுக்குவது போலத் திரும்பிக்கொண்டவள், “ஏன்? எனக்கென்ன ரொம்...பச் சந்தோஷமா இருக்கேன். மனசுக்குப் பிடிச்ச கணவர், எனக்காக எதையும் செய்யக்கூடியவர். என் மேல உயிரா இருப்பவர். இதுக்குமேல, ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்?” பேசிக் கொண்டிருக்கும் போதே கண்கள் கலங்கின. உதட்டை மடக்கி அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரம் வேகமாக அவளது தோளைப் பற்றித் தன்புறமாகத் திருப்பினான். அவனது கண்கள் கோபத்தில் இடுங்கின. ஆத்திரத்துடன் அவன் பிடி இறுக அருகில் இழுத்தவன், “இன்னும் என்னிடம் எல்லாவற்றையும் மறைக்காதே பூர்ணா!” என்று பற்களைக் கடித்துக்கொண்டு சீறினான்.

“என்ன சொல்றீங்க?”

“நீ, என்னை ஏமாத்திட்டன்னு சொல்றேன். உண்மையை என்னிடம் மறைச்சிட்டேன்னு சொல்றேன்.”

“நான் யாரையும் ஏமாத்தல. ஏதாவது உளறாதீங்க?”

“ஓ...! ஒரு காலத்தில் பைத்தியமா இருந்தவன் தானே, நாம எதைச் சொன்னாலும் நம்பிடுவான்னு நினைச்சிட்டு இருக்கியா?”

“ப்ளீஸ்..., நந்தா இப்படியெல்லாம் பேசாதீங்க” என்று அவளையும் மறந்து அவனது பெயரை உச்சரித்தாள்.

தன் பிடியை இளக்கியவன், “நந்தாவா...?” என்று கேலியாகப் பார்த்தான்.

“இ..ல்லை, வாய்த் தவறி” என்றவளைக் கோபத்துடன் தன்னருகில் இழுத்தான்.

“எவ்ளோ நெஞ்சழுத்தம்டீ உனக்கு! நான் இவ்வளவு தூரம் கேட்டும் வாயைத் திறந்து, நீ தான் என்னோட நந்தா; உன் கழுத்துல தாலிகட்டினப்ப நான்தான்டி சுயநினைவு இல்லாம இருந்தேன். நீ நல்லாத்தானே இருந்த…” என்று மெதுவாக ஆரம்பித்தவன் கோபத்துடன் முடித்தான்.

‘அப்படியானால், இவ்வளவு நேரம் இவன் எல்லா உண்மையும் தெரிந்து தான் பேசிக் கொண்டிருந்தானா?’ என்று அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

“அப்போ, உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டே அவன் பிடியிலிருந்து விலகினாள்.

“தெரியும். நான் மும்பை வந்து இன்றோடு இருபது நாள் ஆகுது. பத்து நாள் உன்னைக் கவனிச்சிட்டே தான் இருந்தேன். உன் ஃப்ரெண்ட் சங்கீதா தான் எனக்கு எல்லா ஹெல்ப்பும் செய்தாங்க. அவங்க கூப்பிட்டுத் தான் அன்னைக்குக் கல்யாண ரிஷப்ஷனுக்கு வந்தேன்” என்றவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

“எப்படியாவது, எந்தச் சந்தர்ப்பத்திலாவது நீயே எல்லாத்தையும் என்கிட்ட சொல்ல மாட்டாயாங்கற நப்பாசையில் தான் உன் பின்னால பத்து நாள் சுத்தினேன். ஆனா, எனக்குக் கல்யாணம்... இன்விடேஷன் வைக்க வரேன்னு சொல்லிக்கூட நீ எதையும் காட்டிக்காம இருக்கன்னா, நீ எவ்வளவு பெரிய ஆள்” என்று உறுமினான்.

வருடக்கணக்காக நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த விஷயம், அதுவாகவே வெளியே வந்துவிட்ட நிம்மதியுணர்வில் அத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும், அவளுக்கு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருக்க, கண்களில் கண்ணீர் வழிய நிம்மதியுடன் சிரித்தாள்.

ரிஷியின் கோபம், கட்டுக்கடங்காமல் போனது. மிதமிஞ்சிய கோபத்தின் அளவு கண்களில் தெரிந்தது.

“கோபம் வருதா நந்தா! என் கழுத்தைப் பிடிச்சி நெறிக்கணும்ன்னு வேகம் வருதா? விஷயம் கேள்விப்பட்டு கொஞ்ச நாள் கூட உங்களால் தாக்குப் பிடிக்கமுடியலையே… கிட்டதட்ட ஏழு வருஷம், என் மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருக்கும் இந்த ரகசியம் என்னை எந்த அளவுக்குச் சித்திரவதை செய்திருக்கும்” அவள் சொல்லும்போதே அந்த வலி அவளது கண்களில் தெரிந்தது.

“பூர்ணா!” என்று தடுமாறியவன் சட்டென அவளை இழுத்துத் தன் மீது சாய்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

அவள் விலகிக்கொள்ளவில்லை. தன் வேதனைக் குறையும் வரை கதறினாள். தனக்குக் கிடைத்த ஆறுதலை விட்டுவிட மனம் வரவில்லை.

“என்னை மன்னிச்சிடுடா! என் கோபமெல்லாம் நீ என்கிட்ட எதையும் சொல்லாம மறைத்தது தான். என்னையும் அறியாமல் நான் உனக்குத் தாலி கட்டினேன். கௌரவமும், அவசரமும் நம்மள பிரிச்சிடுச்சி. ஆனா, திரும்ப நீ என் வாழ்க்கையில வந்தது, மனைவின்னு தெரியாம நான் உன்னையே காதலித்தது, இதெல்லாம் நாம சேரக் கடவுளே செய்த செயல் தானே. அப்பவும் நீ என்னை மறுத்துட்டுத் தானே போன. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்லயா?” என்று உருகினான்.

அவனிடமிருந்து விலகியவள், “என்ன சொல்ல சொல்றீங்க நந்தா? அடைக்கலம்னு வந்த என்னைப் பேசக்கூடாத வார்த்தைக பேசி, வீட்டைவிட்டுத் துரத்தி, வாழ என்ன வழின்னு தெரியாம என்னையும், என் வாழ்க்கையையும் காப்பாத்திக்க எவ்வளவு போராடியிருப்பேன். இதுக்கெல்லாம் காரணமானவங்ககிட்ட என்னை, வாழ்க்கைப் பிச்சைக் கேட்கச் சொல்றீங்களா?

நான் என்ன தப்பு செஞ்சேன்? எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை? சொல்லுங்க? உங்க மேல பாசம் வச்சது தப்பா? உங்களை ஓடிஓடிக் கவனிச்சிக்கிட்டது தப்பா? ஆரம்பத்துல, உங்க அம்மா மேலயிருந்த அன்புக்காகத் தான் அதையெல்லாம் செய்தேன். ஆனா, அந்தத் தடம் மாறி எப்படி உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சேன்னு எனக்கே தெரியாது. அதுகூட நான் தெரியாமல், என்னையும் அறியாமல் செய்தது தான் நந்தா!

என்னவெல்லாம் பேசினாங்க என்னை… கைகாரி, பசையுள்ள இடம்ன்னு வளைச்சிப் போட்டுட்டேன்னு. சொல்லவே எனக்கு அருவருப்பா இருக்கு. என் உடம்பெல்லாம் கம்பளிப் பூச்சி ஊருவது போல” என்று உடல் நடுங்கியவளை கண்கலங்க எட்டி அணைத்துக்கொண்டான்.

“வேண்டாம் பூர்ணா போதும். அமைதியா இரு. உணர்ச்சிவசப்படாதே” ஆதரவுடன் அவளது முதுகைத் தடவிக்கொடுத்தான். துவண்டு போனக் கொடியாய் காட்சியளித்தவளை, அவள் அனுமதியின்றி இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு படுக்கையில் கிடத்திவிட்டு அவள் அருகிலேயே சாய்ந்து அமர்ந்தான்.

அலைப்புறுதலுடன் கண்களில் அசைவைக் கண்டவன், “ரிலாக்ஸ்... பூர்ணா! தூங்கு எதையும் யோசிக்காதே. நீ எந்த முடிவையும் சரியா எடுப்பேன்னு எனக்குத் தெரியும். தூங்கு, காலையில் பேசிக்கலாம்” என்று கன்னத்தைத் தட்டிக்கொடுத்தான்.

மெள்ள அவளது விழிகளில் அசைவு நின்றது. ரிஷியின் கரத்தைப் பற்றித் தன் கன்னத்தின் அடியில் வைத்தபடி அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள்.

இரண்டு நாள் அலைச்சல், தன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்ற நிம்மதி இரண்டும் சேர்ந்து சிறிது கண்ணயர்ந்தான். உட்கார்ந்தபடி உறங்கியது ஒரு பக்கமாக கழுத்து வலிக்க, நிமிர்ந்து அமர முயன்றான்.

தன் கையை விடாமல் பற்றிக்கொண்டு நிர்மலமான முகத்துடன் உறங்குபவளைப் புன்னகையுடன் பார்த்தான். இத்தனைக் காதலையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் ஓடின! என்று சிரித்துக்கொண்டான்.

அவளது உறக்கம் கலையாமல் கையை விடுவித்துக் கொண்டு, அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டுத் திரும்பியவனின் குர்தா எதிலோ மாட்டி இழுக்கத் திரும்பினான். உறங்குவது போலக் கண்களை மூடிக்கொண்டிருந்த பூர்ணிமாவின் கை, கொத்தாக அவன் குர்தாவைப் பற்றியிருந்தது.

“ஹே! தூங்கலையா நீ?” என்றபடி அருகில் அமர்ந்தான்.

கண்களைத் திறக்காமலேயே, “ஊகூம்..” என்றவளின் இதழோரம் புன்னகைக் கசிந்தது.

மீண்டும் கட்டிலில் அமர்ந்தவனின் காலரை இருகைகளால் பற்றித் தன்னருகில் இழுத்தாள். அவள் நடவடிக்கையில் திகைத்துப் போனவன் தடுமாற்றத்துடன் குனிந்தான்.

“பூ...ர்ணா...!”

அவன் குரலில் என்ன இருந்தது? பயமா? எதிர்பார்ப்பா? தாபமா? அவனுக்கே தெரியவில்லை.

“ஐ லவ் யூ நந்தா!” அவன் காதில் அவளது உதடுகள் உரச மெல்லக் கிசுகிசுத்தாள்.

அவனது கன்னம், நெற்றி என்று முத்தமிட்டவள் சற்று தயங்க, அதன் தொடர்சியை ரிஷிநந்தன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான்.

தயங்கித் தவித்தவளை மேலும் தவிக்கவிடாமல் அவளது இதழ்களைச் சிறை பிடித்தான். குர்தாவைப் பற்றியிருந்தவளின் கரம் உயர்ந்து, கணவனின் கழுத்தைச் சுற்றி வளைத்தன. அவனது கரம், அவளது வெற்று இடையை சுற்றியது. உடலில் பரபரப்பு ஏற்பட்டது. தான் ஆரம்பித்து வைத்தது தான் என்றபோதும் இதயம் தறுமாறாக அதிர்ந்தது.

உடல் வியர்வையில் நனைய ஆரம்பித்தது. ‘முதன்முறை என்ற பயத்தினாலா இல்லை, இருவருக்குள்ளும் காற்றுகூட நுழைய முடியாத அளவுக்கு அணைத்திருந்ததில் எழுந்த மோகத்தீயினாலா!’ என்று இருவருக்குமே விளங்கவில்லை.

சட்டென அவளைவிட்டு விலகியவன், தன் பைஜாமாவிலிருந்து சிறுநகைப்பெட்டி ஒன்றை எடுத்தான். அவனது விலகலை உணர்ந்து கண்களைத் திறந்தவள், அவன் கையிலிருந்த தாலிக்கொடியைப் பார்த்துத் திகைத்துப் போனாள்.

அவளது திகைப்பை உணராதவன், “உன்னோடதுதான் பூர்ணா! நான் கிளம்பி வரும்போது அம்மாதான் கொடுத்தாங்க” என்று சொல்லிக்கொண்டே அவளது கழுத்தில் அணிவித்தான்.

அவள் விழிகள் ஊற்றெடுத்து, கன்னங்களில் வழிந்தது. அவளது கண்களைத் துடைத்து விட்டவன் இறுக அணைத்துக்கொண்டான்.
 
  • Wow
Reactions: Rithi

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
345
63
47

உன் தோளில் புதைந்து கொள்கிறேன்

எனக்கான வாழ்க்கையை விதைத்து

கொண்டிருக்கிறது உன் இதழ் முத்தங்கள்..


தன் இடையைச் சுற்றி வளைத்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கும் கணவனின் முகத்தைப் பார்த்தபடி அவனது தோளில் தலைசாய்த்துப் படுத்திருந்தவளின் கரம், கழுத்திலிருந்த தாலிக்கொடியை வருடிக்கொண்டிருந்தது.

‘ரிஷி தன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், தன்னால் அவனுடன் ஒன்றி வாழமுடியாது. அத்துடன் ரிஷியைக் காதலிக்கும் மேகாவிற்கும் தன்னால் துரோகம் இழைக்கமுடியாது’ என்று தன்னைத் தானே குழப்பிக்கொண்டு, ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

எப்படியாவது ரிஷியை, மேகாவைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்கச் செய்யவேண்டும் என்ற முடிவுடன் தான் அவனை நெருங்கினாள். ஆனால், அவன் திடீரென அவளுக்கான உரிமையை முறையாக வழங்கி, தன்னுடையவளாக்கிக் கொண்ட போது திகைத்துப் போனாள்.

ஆனால், ‘எப்படியும் ரிஷியுடன் தான் சேர்ந்துவாழ முடியாது’ என்ற கருத்தை மட்டும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள். அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் முடிவு செய்துகொண்டாள்.

காலையில் எழுந்தபோது சூரியன் தன் வெளிச்சத்தை பூமியில் பரப்பிக்கொண்டிருந்தான். இரவு நடந்ததையெல்லாம் நினைத்துச் சிரித்தபடி எழுந்தான். சமையலறையில் பாத்திரங்கள் உரசி சப்தமெழுப்பிக்கொண்டிருக்க, குளியலறைக்குள் நுழைந்தான்.

குளித்துவிட்டு சுவாமி படத்தினருகிலிருந்த சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொண்டவன், பூனை போலச் சமையலறையை நோக்கிச் சென்றான்.

தலையில் ஈரத்துண்டுடன் தான் வந்ததைக்கூட கவனிக்காமல், மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்த மனைவியைப் பின்னாலிருந்து அணைத்தான். அவளது கன்னத்தில் உதடுகளைப் பதித்தான். வெற்றிடையில் கணவனின் கைப்பட்டதும் திடுக்கிட்டுப்போனவள், அவனது முத்தத்திற்கு முகம் சிவக்கப் புன்னகைத்தாள்.

தன்புறம் திருப்பியவன் சிறிதுநேரம் தன் விளையாட்டால் அவளைத் தவிக்க வைத்தான். வெட்கத்துடன் விலகியவளை, ரசனையுடன் பார்த்துச் சிரித்தான்.

“நீங்க முதல்ல இங்கேயிருந்து போங்க. நான் காஃபி கொண்டுவரேன்” என்று அவனைத் தள்ளிக் கொண்டுவந்து வெளியே விட்டாள்.

சிரிப்புடன், பெட்ரூமில் சென்று அமர்ந்தான். அவள் கொண்டுவந்த காஃபியைப் பருகியபடி விழிகளால் மனைவியின் அழகை மனதுக்குள் நிறைத்துக்கொண்டிருந்தான். எதையோ சொல்லத் தயங்குவதைப் போல அமர்ந்திருந்தவளின் கரத்தைப் பற்றினான்.

நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தவள், “நந்தா!” என்று அழைத்தாள்.

“என்னடா!” என்று அவளது கூந்தலை ஒதுக்கிவிட்டான்.

“நான் ஒண்ணு சொல்லவா?” என்று கேட்டபடி அவனது தோளில் சாய்ந்தாள்.

புன்னகையுடன், “சொல்லுடா!” என்றான்.

நிமிர்ந்து அமர்ந்தவள், காதலுடன் அவனது நெற்றியில் முத்தமிட்டாள். புன்னகையுடன் அவளது தோளைச் சுற்றி வளைத்துக்கொண்டு தன் முத்திரைகளை பதித்தான்.

தயக்கத்துடன் புன்னகைத்தபடி அவனிடமிருந்து விலகினாள். “இப்போ நீங்க சந்தோஷமாக இருக்கீங்க தானே?”

அவளது விலகல் அவனுக்கு எதையோ கோடிட்டுக் காட்டுவதாக தோன்ற, கை நீட்டி தன்னருகில் அவளைக் கொண்டுவந்தவன், “என்ன திடீன்னு இப்படி ஒரு சந்தேகம்?” கேட்டவனின் பார்வை அவளை ஆராய்ந்தது.

அவனது பார்வை வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் தலைகுனிந்தவளின் முகவாயைப் பற்றி நிமிர்த்தி, “சொல்ல வந்ததை நேரடியா சொல்லு” என்றான்.

“அ... அது... வந்து...”

“வந்து...” அவனது பார்வைக் கூர்மைபெற, வார்த்தை அழுத்தத்துடன் வந்தது.

பயத்தில் வறண்ட நாவை ஈரப்படுத்தியவள், “நான்.. தான் உங்களுக்குக் கிடைச்சிட்டேனே. இனி, நீங்க மேகாவைக் கல்யாணம் செய்துக்க என்ன தயக்கம்?” ஒருவழியாக தைரியத்தை திரட்டிச் சொல்லி முடித்தவளிடமிருந்து விரைப்புடன் விலகினான்.

மனம் நிறைய அச்சத்துடன் இமைக்காமல், அவனது முகத்தைப் பார்த்தாள். அவன் விலகிய அடுத்த நொடி, அவனது கரம் இடியென அவளது கன்னத்தில் இறங்கியது.

அவள் சொன்ன வார்த்தைகளால், தன்னை யாரோ நடுரோட்டில் நிற்க வைத்து சாட்டையால் அடிப்பது போல துடித்துப்போனான். மெத்தை மேல் சுருண்டு விழுந்திருந்தவள் அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.கோபத்தின் உச்சியில் இருந்தவன் வெறித்தனமாக அவளது கரத்தைப் பற்றித் தூக்கினான்.

“உங்க வீட்ல, என்னை இப்படியெல்லாம் பேசிக் கேவலப்படுத்தினாங்கன்னு ஆவேசப்பட்டியே… இப்போ நீ மட்டும் என்னடி செய்திருக்க? யார் எக்கேடு கெட்டுப் போனா உனக்கென்ன! உனக்குத் தேவை உன்னோட பிடிவாதம். ஈகோ. உன் இஷ்டத்துக்கு எல்லோரும் ஆடணும். பெரிய தியாகியாடி நீ” என்றவன் வெறுப்போடு அவளை உதறித் தள்ளினான்.

“என்னோட காதல் எனக்குக் கிடைச்சிடுச்சின்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன். இப்படி... எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டியே. இதுக்கு நீ உன் கால்ல இருக்கும் செருப்பைக் கழட்டி என்னை அடிச்சிருக்கலாம்” என்று கோபத்துடன் கர்ஜித்தான்.

“ஐயோ...! ஏன் அப்படியெல்லாம் பேசறீங்க?” என்று நெருங்கியவளை தன் பார்வையாலேயே விலக்கி வைத்தான்.

“இதுக்கு மேல என் காதலைக் கொச்சைப்படுத்த முடியாது. இங்கே வரும்போது எப்படியாவது உன்னைச் சமாதானப்படுத்திக் கூட்டிட்டுப் போகலாம்ங்கற நம்பிக்கையோடு வந்தேன். ஆனா, இவ்வளவு வக்கிரமான எண்ணத்தோடு இருப்பவளோடு என்னால எப்படிக் குடும்பம் நடத்தமுடியும்? வேண்டாம். இனி, நீயே என்னைத் தேடி வந்தாலும், எனக்கு நீ வேண்டாம்” என்று சட்டையை எடுத்து மாட்டியவனின் பின்னாலிருந்து இறுக அணைத்துகொண்டாள்.

“நந்தா...!” என்று கதறியபடி இறுக அணைத்துக்கொண்டவளின் கண்ணீர் சூடாக அவன் தோளை நனைத்தது. அவளுடைய அணைப்பிலிருந்து அவன் விலகவுமில்லை; அதற்கு முயலவுமில்லை.

“என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. நானும் சாதாரண மனுஷிதான். எவ்வளவு வேதனையைத் தான் நான் சுமக்கமுடியும்? என் வயசுப் பெண்களுக்கு இருக்கும் ஆசாபாசம் எனக்கு மட்டும் இருக்காதா? ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தோடு சந்தோஷமா இருப்பவர்களைப் பார்க்கும் போது, வலியில் என் நெஞ்சடைக்கும்.

எல்லோரையும் போல ஒரு சராசரி மனிதனா உங்களைப் பார்த்தபோது, எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? உங்களை ஏத்துக்கவும் முடியாம, விட்டு விலகிப் போகவும் முடியாம, நீங்க நெருங்கி வந்து பழகும் போதெல்லாம் அதைத் தவிர்க்கவும் வழி தெரியாம எவ்வளவு பாடுபட்டிருக்கேன்.

மேகா உங்களை விரும்புகிறேன்னு சொன்னபோது, எனக்கு என்னோட காதல் பெரிசா தெரியல. அன்னைக்கு, ‘அடுத்தது என்னன்னு தெரியாத நேரத்துல தன் குடும்பத்தில் ஒருத்தியா ஏத்துக்கிட்ட குடும்பத்துல, என்னால ஒரு பிரச்சனை வரக்கூடாதுன்னு விலகி நின்னேன்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க, என்னால் முடியாது. அப்படி நடந்தால், என்னைப் போல ஒரு நன்றி கெட்டவள் இருக்கமாட்டாள்!” என்று இறுகக் கட்டிக்கொண்டு கதறியபோதும் இளகாமல் நின்றிருந்தவன் மீதிருந்து தன் பிடியைத் தளர்த்தினாள்.

இரண்டு கைகளாலும் கண்களைத் துடைத்துக்கொண்டு, முகத்தை அழுந்தத் துடைத்தாள். “என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் போராட்டத்தோட தான் கழிக்கிறேன். அன்பு, பாசம், குடும்பம்ன்னு வாழ எனக்குக் கொடுப்பினை இல்ல. இதெல்லாம் இல்லாம போனாலும், என்னை நேசிக்க நீங்க இருக்கீங்கன்னு இருந்த அந்தச் சின்னப் பிடிப்பும் இப்போ போயிடுச்சி...” என்றவள் தளர்ந்த நடையுடன் ஹாலுக்குச் சென்றாள்.

“எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ! ஒவ்வொரு முறையும், யாரிடமெல்லாம் பாசம் வைக்கிறேனோ, அவங்க மூலமாகவே காயப்பட்டுப் போறேன். ஆரம்பத்தில் கஷ்டம்னாலும், போகப் போகப் பழகிடும். காயப்பட்டே மரத்துப் போன மனசு இது. கொஞ்சம் நாளில் இதுவும் மரத்துவிடும். வலிக்காது...” என்று திரும்பத் திரும்பச் சொல்லியபடி அமர்ந்திருந்தாள்.

சுவற்றைப் பார்த்தபடி நின்றிருந்த ரிஷியின் இமைகள் நனைந்திருந்தன. காதலில் அவன் இதயம் கசிந்துருகியது. தன்னவள் சுமந்த வேதனைகளின் சுமை அவன் மனத்திற்கு இடம்பெயர்ந்தது.

‘தனியொரு பெண்ணாக இத்தனைச் சுமையையும் சுமக்க, அவள் எவ்வளவு பக்குவப்பட்டவளாக இருக்க வேண்டும். போதாதற்கு நானும், அவளது இதயத்தைச் சொல்லால் வதைத்துவிட்டேனே!’ என்று தனக்குள் குறுகிப்போனான்.

‘தன் மனத்தில் வைத்து ஆராதிக்க வேண்டிய தேவதைப் பெண் அவள். ஒரு பொக்கிஷத்தைப் போலப் பாதுகாப்படவேண்டியவள். அவளைக் கலங்க வைக்கக்கூடாது’ என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே ஹாலில் பொத்தென விழும் ஓசை கேட்கத் திரும்பிப் பார்த்தவன், “பூர்ணா...” என்ற அலறலுடன் அவளருகில் ஓடினான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு...

மும்பை தனியார் மருத்துவமனை...

“வெல் மிஸ்டர். நந்தா...! உங்க மனைவி பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்ன்னு சொல்லணும் ஆசைதான். பட் அவங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க.”

“டாக்டர்!” என்று பதறினான்.

புன்னகைத்த டாக்டர், “பெரிதா பயப்படத் தேவையில்ல. ஆனா, கொஞ்சம் நாளைக்குக் கவனமாகப் பார்த்துக்கோங்க. சின்ன வயதிலிருந்தே அன்புக்காக ஏங்கியிருக்காங்க. இந்த உறவாவது நமக்கு நிலைக்குமான்னு தனக்குள்ளேயே ஒருவித பயத்துடனும், இன்னும் தெளிவா சொல்லணும்னா, தன்மேல அன்பு காட்டுபவர்களுக்காக எதையும் செய்யும் அளவுக்கு... அதாவது தன்னுடைய காதலைக் கூட விட்டுக்கொடுக்கும் அளவுக்கு. நன்றிக்கடன்.”

“எப்படி டாக்டர்? அப்படிப் பார்த்தால், நானும் அவள்மேல உயிரையே வச்சிருக்கேனே…”

“எஸ், கரெக்ட். இந்த இடத்துல இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா? அவங்க உங்களை அவாய்ட் பண்ணினதுக்குக் காரணம், அவங்க மனசுல பட்டக் காயம். நீங்க அவங்களைப் பாதிக்கும் நேரமெல்லாம், இந்த மனக்காயத்தை நினைச்சி நினைச்சி அவங்க மனசைக் கல்லாக்கிட்டிருக்காங்க. ஆனாலும், அவங்க உங்களை அளவுக்கதிகமா நேசிக்கிறாங்க. உங்களை விட்டு ஒதுங்கிப் போக நினைச்சவங்களால, உங்களுடைய நிராகரிப்பைத் தாங்கிக்க முடியல. அவங்க ஒவ்வொரு வாக்கியத்துக்கும் நடுவில் சொன்ன வார்த்தை, நந்தாவோட மனசை நோகடிச்சிட்டேன்” என்று சொல்ல ரிஷி நந்தனின் கண்கள் கலங்கின.

“ரிலாக்ஸ் ரிஷி! இப்போ அவங்களுக்குத் தேவை ஓய்வு; உங்களோட அருகாமை. ஆனா, அவங்களை ஒரு பேஷண்ட் போல நடத்தாதீங்க. இன்னைக்குத் தான் புதுசா காதலிக்க ஆரம்பிச்சக் காதலரா உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க. உனக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் துணையா இருப்பேன்னு நம்பிக்கையை ஏற்படுத்துங்க. தானா இந்த ஸ்ட்ரெஸ்சிலிருந்து வெளிய வந்திடுவாங்க. ஆல் த பெஸ்ட்...” என்று கைக்குலுக்கித் தன் வாழ்த்தைத் தெரிவித்தவர், “இப்போ அவங்க கூட யார் இருக்கா?” என்று கேட்டார்.48

வெட்கத்தை பூசி மறைத்துக்கொள்ளும் என் காதல்

என் விழிகளில் வெளியேறுகையில்

நீ வெற்றி பெற்று விடுகிறாய்..

நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன்

உன் விரல்களில்

“மேகா கேண்டீன் போறேன் ஏதாவது வேணுமா? என்றான் விஷால்.

“ரெண்டு பாக்கெட் குளுக்கோஸ் வாங்கிட்டு வாங்க விஷாலண்ணா! இவகிட்ட கத்திக் கத்தி இருக்குற தெம்பெல்லாம் போயிடும் போல” என்று பேசிக்கொண்டே ஜூஸரில் பிழிந்த சாத்துக்குடி ஜூசை டம்ளரில் ஊற்றி, “இந்தா… இதைக்குடி” என்று பூர்ணிமாவிடம் நீட்டினாள்.

தவறு செய்த சிறு குழந்தையைப் போல நிமிர்ந்து பாராமல், “இப்போ வேண்டாம்...” என்றாள்.

அருகிலிருந்த டேபிள் மீது டம்ளரை வைத்தவள் பூர்ணிமாவின் முகவாயைப் பற்றி நிமிர்த்தி, “எதுக்காக இப்படி என் முகத்தைப் பார்த்துப் பேசமாட்டேன்ற. தப்பு பண்ணின நானே, உன் முன்னால தைரியமா நிற்கிறேன். இன்னும், நீ என்னை மன்னிக்கலயா? இல்ல, என் முகத்தைப் பார்ப்பதே பாவம்ன்னு நினைக்கிறியா?” என்று பரிதாபமாகக் கேட்டவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

“அன்னைக்கு நான் எந்தத் தவறும் செய்யாத சூழ்நிலையில, என்னை நம்பிக்கைத் துரோகின்னு சொன்ன. ஆனா, இப்போ உண்மையாகவே உனக்குத் துரோகம் பண்ணிட்டேன்” என்று கண் கலங்கினாள்.

“ஏய்..! லூசு... யார் யார்கிட்ட மன்னிப்பு கேட்பது? கண்டபடி உளராதே. ரிஷியை எனக்குப் பிடிச்சிருந்தது என்னைவிட உன்னிடம் அவர் ஆர்வம் காட்டியது பொறாமையாக இருந்தது. அவரை கவரணும் என்று எனக்குள்ள ஒரு சபதமே எடுத்துக்கொண்டேன். ஆனால், இப்போ யோசித்துப் பார்த்தால் எல்லாவிதத்திலும் என்னைவிட கீழேயிருக்கும் உன்னை, அவருக்குப் பிடிச்சிருக்கேங்கற பொறாமையால தான் இதெல்லாம் செய்திருக்கேன்னு தோணுது. இதைச் சொல்ல எனக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, வேறவழி இல்ல. சாரிம்மா...”

“நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும், உண்மை அதானே...”

“முதல்ல கண்ணைத் துடை. எப்பப் பாரு வாட்டர் ஃபால்ஸ் மாதிரி தண்ணி கொட்டிக்கிட்டு” என்று பூர்ணிமாவின் முகத்தில் குறுநகை ஒன்றைப் பூக்க வைத்தாள்.

“வெரிகுட்... சிரிச்சிக்கிட்டே மீதி கதையைக் கேளு. நீ அவரோட வைஃப்ன்னு தெரிஞ்சதும் ஹீரோ சார் உனக்குச் சப்போர்ட் பண்ணி அவங்க அம்மாவை எத்தனைக் கேள்வி கேட்டார் தெரியுமா? எல்லோரும் அரண்டு போய்ட்டோம். திரும்பி உன்னோடு தான் வருவேன்னு, சொல்லிட்டு வந்துட்டார்.

நீ என்னடான்னா என்னென்னவோ ஜிகினா வேலையெல்லாம் செய்து, அவரைப் பணால் ஆக்கிட்ட? பாவம். நீ பண்ணின கலாட்டால மனுஷன் கதிகலங்கிப் போய்ட்டார். அவர் பண்ண ஆர்பாட்டத்துல நாங்க அடித்துப் பிடித்து ஓடிவந்தோம். மூணு நாளா அவர் உருகினதைப் பார்த்து எங்களுக்குப் பாவமாகிடுச்சி” என்றவள் பூர்ணிமாவைச் சற்று நெருங்கி வந்து, “உன்னை நான் என்னவோன்னு நினைச்சேன். ஆனா, நீ ம்ம்... செம ரொமான்ஸா” என்று கிசுகிசுத்தாள்.

“ஹய்யோ! கிண்டல் பண்ணாதே கொஞ்சம் சும்மா இரு மேகா! நானே அவர் முகத்தை எப்படிப் பார்க்கறதுன்னு கவலையாயிருக்கு” என்று சிணுங்கினாள்.

“ஹே! பூர்ணிமா வெட்கப்படுறியா?” என்று சிரித்தாள்.

உடன் இணைந்து நகைத்த பூர்ணிமா, “மேகா! அம்மா அப்பா...?” தயக்கத்துடன் கேட்டாள்.

“இங்கே பார். அவங்க என்ன சொல்வாங்க? இவங்க என்ன சொல்வாங்கன்னு யோசிக்காதே. அப்பாவைப் பத்தி உனக்கே தெரியும். அம்மாவைப் பத்தி அதைவிட நல்லாவே தெரியும். எல்லாம் காலப்போக்கில் சரியாகிடும். ஆனா, ஒண்ணுமட்டும் சொல்றேன். உலகத்தில் நல்லவளா இருக்கலாம். ஆனா, அநியாயத்துக்கு நல்லவளாக இருக்கக்கூடாது. விட்டுக்கொடுப்பதிலும் ஒரு அளவிருக்கு. தனக்கு மிஞ்சித்தான் தானமும், தருமமும் பெரியவங்க சொல்லியிருக்காங்க இல்லயா?” என்றாள்.

‘எதற்கெடுத்தாலும் சிணுங்கிக்கொண்டு விளையாட்டுத்தனமா இருக்கும் மேகாவா இது?’ என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சிரிப்புடன், “சரிங்க பாட்டிம்மா!” என்றாள்.

“நீ எவ்வளவு நல்லவ அக்கா...” என்று திடீரென உருக்கமான மனநிலைக்கு மாறிய மேகாவின் கண்கள் கலங்கின.

அவளது அக்கா என்ற அழைப்பு வியப்பைக் கொடுக்க, “ஹே! என்னைச் சொல்லிட்டு நீ சென்டிமெண்ட் ஆளாகிட்டியா?” என்றாள்.

“நோநோ... உன்னைக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தலாமேன்னு தான். மாம்ஸ் எப்போ வேணாலும் வந்திடுவார். வந்ததும் தைரியமா பேசு. அவரோட பேட்ச் அப் ஆகிக்க...” என்றவள் ரிஷி நந்தன் அறைக்குள் வருவதைப் பார்த்தாள்.

வெட்கத்துடன் சிரித்துக்கொண்டிருந்த மனைவியை இமைக்காமல் பார்த்தபடி வந்தவன், கட்டிலருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“இந்த விஷால் அண்ணாவைக் கேண்டீன் அனுப்பினா இன்னும் காணோம். நான் போய்ப் பார்த்துவிட்டு வரேன்” என்றவள் பூர்ணிமாவைப் பார்த்து, ‘க்ளுக்’ என்று சிரிக்க, “மேகா...” என்று பூர்ணிமா அழைத்ததைக் கண்டுகொள்ளாமல் வெளியேறினாள்.

இருவருக்கும் இடையிலிருந்த தயக்கத்தால், அறையில் மௌனமே நிலவியது. டேபிள் மீதிருந்த ஜூஸ் டம்ளரைப் பார்த்த ரிஷி தன் மௌன தவத்தைக் கலைத்தான். டம்ளரை கையிலெடுத்தவன், “ஜூஸ் குடிக்கலையா? முதலில் குடி” என்று அவள் வாயருகில் கொண்டு சென்றான்.

“நானே...” என்று டம்ளரை வாங்க முயன்றவளின் கையில் கொடுக்காமல் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருக்க வேறு வழி இல்லாமல் குடிக்க ஆரம்பித்தாள்.

டம்ளரை கழுவிக்கொண்டுவந்து வைத்தவன் சலைன் ஏற்றியதில் சற்று வீங்கி இருந்த கையைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு கட்டிலில் அவளருகில் அமர்ந்தான். சில நொடிகள் அவளது கரத்தில் முகம் புதைத்திருந்தவன் மெல்ல முத்தமிட்டான்.

“ஏன் பூர்ணா இப்படிச் செய்த? இப்படி நீ நடந்து கொண்டால் உன்னைத் தவறாக நினைத்து விலகிப் போயிடுவேன். இன்னொருத்தியைக் கல்யாணம் செய்துக்குவேன்னு எப்படி உன்னால் நினைக்கமுடிஞ்சது? என் காதலை அவ்வளவு இளப்பமாக நினைச்சிட்டியா?” என்று நெகிழ்ந்த குரலில் கேட்டுவிட்டு அவளது முகத்தைப் பார்த்தான்.

அதுவரை தன் செயலை நினைத்தே மறுகிக்கொண்டிருந்தவள், “என்னை மன்னிச்சிடுங்க நந்தா!” என்று அவன் மார்பில் சாய்ந்து குலுங்கி அழத் துவங்கினாள்.

அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு, தன் கன்னத்தைப் பதித்துக்கொண்டான்.

“போதும் நீ அழுததெல்லாம். இனி, நீ அழ அனுமதி கிடையாது. அப்படி அழுதா எப்படி கண்ட்ரோல் பண்ணணும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று முகத்தை நோக்கி குனிந்தவன், “இப்போ ஒரு சாம்பிள் பார்க்கறியா? என்றான்.

படபடத்த இமைகளில் முத்தமிட்டவன் நெற்றியுடன் நெற்றியை முட்டி எதிர்பார்ப்பும், தவிப்புமாக அலைந்த கண்களைக் குறும்புடன் பார்த்தவன் இதழ்களைச் சிறைபிடித்தான்.

“ம்ம்...” என்று திமிறியவளை லாவகமாகத் தன் கைச்சிறையில் கொண்டுவந்தான். அவளும், அவன் அரவணைப்பில் ஒன்றிக்கொண்டாள்.

சில பல நொடிகளில் அவனே அவளை விடுவித்த போது வெட்கத்துடன், “ஹப்பா முரடு...” என்று கட்டிலிலிருந்து இறங்க முயன்றவளை முந்திக்கொண்டு இறங்கினான்.

“முரடா! இவ்வளவு நேரம் இழைந்தபோது தெரியலையா” என்று தன் கைகளை அவள் மேனியில் விளையாடவிட்டான்.

“ஹய்யோ... சாமி! தெரியாம சொல்லிட்டேன். ப்ளீஸ் விடுங்க நந்தா! எனக்குக் கூச்சமா இருக்கு. பட்டப்பகலில் இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க. இது ஹாஸ்பிட்டல். நம்ம வீடு இல்ல...” என்று அத்துமீறிய கரங்களைத் தடுக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் சந்தோஷத்துடன்.

“இது ஹாஸ்பிட்டல்… அதான், இதோடு போச்சு” என்று உரக்க நகைத்தவன், “வாய்தான் வேணாம்ன்னு சொல்லுது. ஆனா, மனசு…” என்று அவளுடன் நெருங்கி இழைய, “ஹும்! மேகா, விஷால் அண்ணா யாராவது வந்தால் என்ன நினைப்பாங்க?”

“யாரும் வரமாட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் இங்கிதம் தெரியும். அதோட, மேகா போகும் போது டு நாட் டிஸ்டர்ப் கார்டை எடுத்துக்கொண்டு போனாளே பார்க்கலையா?” என்று குறும்பாகச் சிரித்தான்.

“ரொம்ப மோசம் நீங்க. இதுக்கெல்லாமா கூட்டுச் சேர்ந்துப்பீங்க?” என்று வெட்கத்துடன் சிரித்தவளைத் தன் மொபைல் கேமராவில் படபடடென வரிசையாகப் படமெடுத்து தள்ளினான். அவளது கூச்சம் பார்த்து விலகியவன், தன் அருகில் அமரவைத்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தான்.

அங்கே சுற்றி, இங்கே சுற்றி பேச்சு அவன் வீட்டில் வந்து நின்றது.

“அத்தையை ரொம்பக் கோவிச்சிக்கிட்டீங்களா?”

பெருமூச்சு விட்டவன், “உனக்குச் செய்த அநியாயத்தைத் தான் தட்டிக் கேட்டேன்.”

“என்ன இருந்தாலும், அவங்க உங்க அம்மா இல்லையா?” என்றவளைக் கூர்ந்து பார்த்தான்.

“நீ என் மனைவி இல்லையா பூர்ணா!” என்றவனின் குரலில் அவனது அத்தனைக் காதலும் குவிந்திருந்தது. தானாகவே அவன் கைகளில் தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டாள். தன்னோடு அவளை அணைத்துக்கொண்டான்.

“என் அம்மா என்பதால், அவங்க உனக்குச் செய்தது நியாயமா? அவங்க மட்டும் அன்னைக்கு ஒரு வார்த்தை வாய் திறந்து பேசியிருந்தா, நான் ஏன் இப்படிக் கேள்வி கேட்டிருக்கப் போறேன்?”

“சரி, நீங்க சொல்றது போலவே இருக்கட்டும். ஒருவேளை அத்தை என்னை வீட்டைவிட்டு அனுப்பாம வச்சிருந்து உங்களுக்குக் குணமாகிய பின், இவதான் உன் மனைவின்னு சொல்லியிருந்தா, சப்போஸ் உங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போயிருந்தால்… என்ன செய்திருப்ப?” என்பது போலப் பார்த்தாள்.

அவளை முறைத்துப் பார்த்தவன், “வக்கீலம்மா! குறுக்கு விசாரணை செய்றீங்களா?” என்றான் கிண்டலாக.

“இல்ல நந்தா! சதா சர்வகாலமும் அத்தையோட நினைப்பு முழுக்க நீங்கதான் இருந்தீங்க. அதை நான் கூடவேயிருந்து பார்த்தவ. அத்தை மட்டும் அன்னைக்கு என்னை, உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வரலனா இந்தப் பூர்ணிமா இன்னைக்கு எங்கே எப்படியிருந்திருப்பேனோ? நீங்க என்னடான்னா அத்தையிடம் முகம் கொடுத்துப் பேசுவதே இல்லன்னு விஷாலண்ணா சொன்னாங்க” என்றாள் வருத்தத்துடன்.

“இங்கே வந்து போட்டுக்கொடுக்கிறானா அந்த எட்டப்பன் வரட்டும்...” என்று கருவியவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“என்ன சிரிப்பு? இப்போ, நான் அம்மாவிடம் பேசணும் அவ்வளவு தானே பேசுறேன்” என்றவன் மொபைலில் தன் அன்னையைத் தொடர்பு கொண்டான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய மகனிடம், கண்ணீருடன் பாசத்தைப் பொழிந்தார். அவர்கள் பேசத் தடையாக இல்லாமல் தள்ளிச் சென்று வெளியே வேடிக்கை பார்ப்பது போல நின்றுகொண்டாள்.

கண்களைத் துடைத்துக்கொண்டு வந்தவன், “பூர்ணா! அம்மா உன்கிட்ட பேசணுமாம்” என்று மொபைலைக் கொடுத்தான்.

வாங்கியவள், “அத்தை!” என்று ஆத்மார்த்தமாக அழைக்க, லஷ்மி அம்மா உள்ளம் குளிர்ந்து போனார்.

“இந்த ஒரு வார்த்தை போதும்டி என் தங்கமே! நீ என்னை மன்னிச்சிட்டன்னு புரிய. எப்போம்மா ரெண்டு பேரும் இங்கே வரப்போறீங்க?” ஆசையுடன் கேட்டார்.

“இன்னைக்கு டிஸ்சார்ஜ். ஆபிஸ் வேலை கொஞ்சமிருக்கு. அதை முடிச்சிக் கொடுத்துட்டு ஒரு வாரத்தில் வந்திடுவோம்.”

“அப்போ நான் ஒரு நல்ல நாள் பார்க்கிறேன். எல்லோரையும் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுத்து, நீதான் என் மருமகள்ன்னு அறிமுகப்படுத்திடலாம்...” என்று பேசிக்கொண்டே போக பூர்ணிமாவின் முகம் செந்தாமரையாக சிவந்து மலர்ந்தது.

யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க, ‘நீ பேசு’ என்று செய்கை செய்தவன், கதவைத் திறந்து வெளியே சென்றான்.

“ரிஷியிடம் கொடும்மா” என்றதும் வராண்டாவில் பார்த்தவள், அவன் சற்று தூரத்தில் யாரோ ஒரு பெண்ணிடம் சிரித்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “அவர் யாரிடமோ பேசிட்டிருக்கார் வரட்டும் அத்தை! நான் பேசச் சொல்கிறேன்” என்று போனை வைத்தாள்.

சிறிதுநேரம் பொறுத்து உள்ளே வந்தவனிடம், “யாரிடம் இவ்வளவு நேரம் பேசிட்டிருந்தீங்க? அத்தை உங்களைப் பேசச் சொன்னாங்க” என்றாள்.

“இந்த ஹாஸ்பிட்டல் நர்ஸ் அவங்க. அவங்களுக்கு ஒரு ஆப்லிகேஷன்.”

“என்னவாம்?”

“வேண்டாம்மா! சொன்னா, உனக்குக் கோபம் வரும்.”

“பரவாயில்ல சொல்லுங்க.”

“அதுவந்து, அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாம்...”

“அதுக்கு?” என்று முறைத்தபடி கேட்டாள்.

“கல்யாணம் ஆகலைன்னு தானே சொன்னேன். அதுக்கு எதுக்கு என்னை இப்படி லுக்கு விடுற. இதுக்கே இப்படின்னா, மீதியை நான் எப்படிச் சொல்றது?” என்றான்.

“இப்போ சொல்லல, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”

“சரி சரி, கோபப்படாதே. அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்காம்...”

“ஓஹ்! அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”

“நான் கிளியரா சொல்லிட்டேம்மா. ஏற்கெனவே, எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சி. எனக்கு அழகான மனைவியிருக்கா. வேணும்னா ஒண்ணு பண்ணுங்க, என்னிடம் சொன்ன விஷயத்தை நேரா போய் என் மனைவிகிட்டச் சொல்லுங்க. அவளுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே!” என்று மிகவும் சீரியசாகச் சொல்லிக்கொண்டே வந்தவன், திடீரென, “ஏன்னா, அவ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டேம்மா” என்று வடிவேலு பாணியில் சொல்லிவிட்டுச் சிரிக்க, பூர்ணிமாவின் முகம் ஜிவுஜிவு என்று சிவந்தது.

அடக்கமட்டாமல் சிரித்தவனை, “உங்களை...” என்று கட்டில் மீதிருந்த தலையணையை எடுத்துக்கொண்டு விரட்டினாள்.

“ஹே! அடிக்காதேடீ. உன்னைப் பத்தி நல்லபடியாக தானே சொல்லியிருக்கேன். மீ பாவம்...” என்று கட்டில் மீது ஏறி ஓட, அவளது ஆங்காரம் சற்றுநேரத்தில் சிரிப்பாக மாறியது.

கட்டில் மீது தலையணையை வீசி எறிந்தவள், அவனது மார்பில் தஞ்சம் அடைந்தாள்.

மனநிறைவுடன் அணைத்துக்கொண்டவன், “என் வாழ்க்கையை முழுமையாக்கியவள் நீ என் வாழ்வின் மையப்புள்ளி நீ. ஒவ்வொரு நொடியும் உன்னைக் கண்டு உயித்தேன். எப்பொழுதும் உயிர்ப்பேன்” என்று நேசத்துடன் இறுக அணைத்துக்கொண்டான்.

அவள் காதோரம் மெதுவாக இருவருக்கும் மட்டுமே கேட்கும் குரலில், “காத்திருப்பேனோ டீ! - இதுபார்...” என்று நிறுத்தியவன் அவள் முகம் நிமிர்த்தினான்.

அவளது ஆவல் கொண்ட பார்வையும், கன்னத்துச் சிகப்பும் கண்டு வாய் விட்டுச் சிரித்தவன், “கன்னத்து... ம்ஹூம்... இதழ் முத்தமொன்று!” என்று அவளது இதழ்களைச் சிறைபிடித்தான்.
 
  • Love
Reactions: Rithi