காதலே நிம்மதி!- ஹேமா

sudharavi

Administrator
Staff member
#1
காதலே நிம்மதி!

வீட்டில் வேறு யாருமற்ற தனிமையில் முன்காலை வெயில் மட்டுமே துணையாகக் கையில் சிப்ஸ் பொட்டலத்துடன் தொலைகாட்சி முன்பு அமர்ந்திருந்த சுகந்தி, மாமியாரைக் கொல்ல போகும் மருமகளின் புடவையைப் பார்ப்பதா இல்லை அக்காவின் கணவரை மையல் விழியால் நோக்கும் தங்கையின் அணிகலன்களைக் கவனிப்பதா என்ற ஆகப் பெரிய குழப்பத்தில் இருந்தபோது சாமந்தி உள்ளே நுழைந்தாள்.

“என்னடி இவ்ளோ லேட்டா வர?”


“அந்த கலாக்கா வீட்டுலயே நேரம் ஆயிடுச்சுக்கா. ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வராங்கன்னு பாத்திரமா குவிச்சு என் முதுகை உடைச்சிடுச்சு.”

“அதுக்கு என் வீட்டுக்கு நீ இஷ்டம் போல வருவியா?”

“நீ வீட்டில தானே இருக்க... எப்ப வந்தா உனக்கு என்ன, வேலை நடக்கணும் அவ்வளவு தானே... சரி, உனக்கு ஒரு நியூஸ் வச்சிருக்கேன், சொல்லவா?”

சாமந்தியின் குரல் ரகசியமாக குழைய, புடவையையும் நகை நட்டையும் தற்காலிகமாக மறந்த சுகந்தி “என்னடி?” ஆவலாக அவளருகே குனிந்தாள்.

“டைப்பிஸ்ட் அக்கா இருக்குல்ல... அதுதான் ரஞ்சனி... அது பையன் நம்ம கலாக்கா பொண்ணு பின்னாடியே சுத்துறானாம்... மொபைல்ல இரண்டும் பேசிக்கிறதைப் பார்த்து கலாக்கா சண்டை பிடிக்கப் போயிடுச்சாம்.”

“அடக்கடவுளே... இரண்டும் வாண்டுகளாட்டம் இருக்கு...? அதுக்குள்ளயா....” திரையில் ஓடும் கதைகளை விட இந்தப் புறணிகள் சுவாரஸ்யமாக இருக்க, சுகந்தி தன் அலைவரிசையைச் சாமந்தியின் அதிர்வெண்ணுக்கு மாற்றிக் கொண்டாள்.

“கோடி வீட்டு கோமதி மாமி வேற நடுவுல வந்து பஞ்சாயத்து பண்ணி இருக்கு...”

கதை பேசிக் கொண்டே பாத்திரங்களைப் பரபரவெனத் தேய்த்த சாமந்தி, “அந்த சி ப்ளாக் கோமளாக்கா இல்ல... காலைங்காட்டியும் அது பேன்ட் சட்டை போட்டுட்டு ரோடு ரோடா ஓடுதாம். கூடவே தடி தடியா நாலஞ்சு ஆம்பிளை பசங்களும் ஓடுறானுங்க....”

“ஏன்டி எஸ் எம் பொண்டாட்டி கோமளத்தையா சொல்ற? அந்த அம்மா என்னை விட பெருசு. அதுக்குப் பொண்ணு கூட இல்லையே...”

“அய்ய. எனக்கு அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது பாரு. நானே என் கண்ணால பார்த்தேங்குறேன். காலம் போன காலத்துல அதுக்கு இதெல்லாம் தேவையான்னு எல்லா ப்ளாக்லயும் இதே பேச்சு தான்...” சாமந்தி கெக்கே பிக்கே என்று சிரிக்க, சுகந்தி முறைத்தாள்.

“உனக்கு வர வர வாய் அதிகம் ஆயிடுச்சு. பெரியவங்க சின்னவங்ககிற மரியாதை இல்லாம... எல்லாம் நான் கொடுக்கிற இடம். உள்ள போய் வேலையைப் பாரு”

“ம்க்கும்... உட்கார்ந்து எல்லாக் கதையையும் கேட்டுட்டு இப்ப மிரட்டுறதைப் பாரு. பால் இருக்குல்ல. நான் காபி போட்டுக்குறேன்” அவள் உள்ளே செல்ல, சுகந்தி மெல்ல எழுந்து பலகணி பக்கம் வந்து நின்று எட்டிப் பார்த்தாள்.

அந்தக் கோமளாவின் வீட்டுச் சமையலறை இங்கிருந்து தெரியும். எத்தனை எட்டிப் பார்த்தும் காய்ந்து கொண்டிருந்த நான்கைந்து துணிகளைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

மத்திய அரசின் தணிக்கைத்துறை அலுவலர்க்கான அந்தக் குடியிருப்பில் இருக்கும் அத்தனை பெண்களுக்கு இடையில் கோமளாவின் போக்கு மட்டும் எப்போதும் தனி விதம் தான். கைக்குழந்தையுடன் இங்கு வந்த நாளில் இருந்து இவள் பார்க்கிறாள்.

அரசாங்க வேலையில் இருந்து கொண்டே அந்தக் காலத்திலேயே நட்டுவார் வைத்து நடனம் கற்றது என்ன? தன் மகளுடன் சேர்ந்து தானும் அரங்கேற்றம் செய்தது என்ன? நரை முளைத்த இந்தப் பருவத்திலும் அழகு நிலையம் போவதில் இருந்து அழகழாய் சல்வார் அணிந்து நடப்பது வரை....

கோமளாவை பற்றி நினைக்க நினைக்கச் சுகந்தியின் பெருமூச்சு பிரஷர் குக்கராய் எகிறியது. அதற்கு மேல் ஆர்வம் தாங்காமல் உள்ளே வந்தவள், “சரி, என்னமோ சொன்னியே.. என்னது?” சுவாரஸ்யம் இல்லாதது போலச் சாமந்தியை நோண்ட, உதட்டின் மேல் படிந்திருந்த காபி நுரையை ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்கிற மாதிரி நாக்கை நீட்டி சப்பிக் கொண்ட சாமந்தி, “ஊருக்கதை நமக்கெதுக்குக்கா... எனக்குக் கொள்ளை வேலை கெடக்கு..”. சிலுப்பிக் கொண்டாள்.

’அடிப்பாவி சாயங்காலம் காபிக்கு வச்சிருந்த பாலையும் சேர்த்து ஆட்டையைப் போட்டுட்டியே...’ உள்ளுக்குள் புகைந்தாலும், வம்பு பேச்சை விட்டுக்கொடுக்க முடியாமல் தொடர்ந்து தாஜா செய்ததில் “என்னமோ மராத்தாவாமே.. அதுக்கு அந்தக்கா ஓடப் போகுதாம்.” என்றாள்.

“மராத்..தா???.. ஓ... மராத்தானா... அதுக்கு எப்படிடி இந்தம்மாவால ஓட முடியும். நடக்கவே எனக்கெல்லாம் மூட்டு கிடுகிடுன்னு ஆடுது.” சாமந்தி துணிகளை சோப்பு நீரில் முக்க, சுகந்தி வெறும் வாய்க்கு கிடைத்த அவலை விட்டுவிடாமல் கப்பென்று பற்றியபடி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள்.

பின்னே, அவளுக்கும் பொழுது போக வேண்டுமே!? பிள்ளைகள் இருவரும் வேலையிலும், கல்லூரியிலும் பிஸியாக இருக்க, கணவர் தன் உயர் பதவி ரேஸ்களில் ஓட, எந்தப் பொறுப்புகளும், கடமைகளும் பெரிதாக இல்லாமல் வெறுமை மிகுந்து கிடக்கும் தன் மெனோபாஸ் பருவத்தை வேறு எப்படித்தான் அவளால் கடக்க முடியும்?

“யாரோ எங்கயோ ஓடட்டும். எங்களை மாதிரி சனமெல்லாம் எத்தனை ஓடினாலும் கைக்கும் வாய்க்கும் பத்தாத கதை தான். சரிக்கா, நான் வரேன். வினு ஸ்கூல்ல பீஸ் கட்ட கடைசி நாள் இன்னிக்கு. இவரு கடையை எடுத்து வச்சிட்டாருன்னா கூட்டிட்டுப் போய்க் கட்டிட்டு வந்து மீதி வேலையைப் பார்க்குறேன்.”

“ஏன்டி... பணம் ஏதாவது வேணுமா?”

சாமந்தி ரோஷக்காரி, தர்மசங்கடமாய் தலையைச் சொறிந்தாள்.

“ஒரு ஆயிரம் ரூபா குறையுது, இருந்தா கொடேன்..” சுகந்தி தன் பர்ஸில் இருந்து பணம் எடுத்து வந்து கொடுத்தாள்.

கணவன் இந்த வளாகத்திலேயே இஸ்திரி போட்டு கொடுக்க, சாமந்தி நாள் முழுக்க இங்குள்ள வீடுகளில் வேலை செய்து பிள்ளைகளைப் பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறாள். தாங்கள் எத்தனை சிரமப்பட்டாலும் அடுத்தத் தலைமுறையை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்கிற எளிய மனிதர்களின் தாகம்!

அவளை நினைத்துப் பெருமையாக இருந்தாலும், தகிக்கும் அனலில் விந்தி விந்தி நடந்து செல்பவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

‘பாவம், நாள் முழுக்க வேலை செஞ்சு பற்றாக்குறை வாழ்க்கை நடத்துறா. அதுவே இங்க? நீண்டு கிடக்குற பொழுதை மென்னு திங்க வேண்டியதா இருக்கு... இந்த கோமளா, என்னை விட வயசு அதிகம் இருந்தாலும் எத்தனை சுறுசுறுப்பு...?’ நிழல் சிறுத்த உச்சி வெயிலை வெறித்தபடி அப்படியே அமர்ந்து விட்டாள் சுகந்தி.

மனசுக்குள் மண்டுகிற வெறுமையும், தனிமையும்... ஒட்டடை பிடித்த சாளரம் போல காற்று அண்டாத புகைச்சல்... ஏனோ எல்லாமே வெறுப்பாய் இருந்தது சுகந்திக்கு.

“என்னக்கா, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போற?” அலைபேசியை மும்முரமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்த சுகந்தியை தரையை மாப் போட்டுக் கொண்டிருந்த சாமந்தி கலைத்தாள்.

“இந்த கோமளா பார்த்தியா, நேத்து டவுன்ல நடந்த மராத்தான்ல முழுசா நடந்து மெடல் வாங்கியிருக்கா, வாட்ஸ்-அப் குரூப்ல போட்டோ வந்திருக்கு... சாமந்தி உன்கிட்ட சொல்றதுக்கென்ன? இதெல்லாம் பார்க்கும்போது எனக்கே என்னை நினைச்சு வெக்கமா இருக்குடி.”
 

sudharavi

Administrator
Staff member
#2
“நாள் முழுக்கச் சும்மாவே உட்கார்ந்து உட்கார்ந்து மூளையெல்லாம் துருபிடிச்ச மாதிரி இருக்கு... எதைச் செய்யவும் பிடிக்கல. வெறுமனே சாப்பிடுறதும் தூங்குறதும் ஒரு வாழ்க்கையா, சொல்லு... பிள்ளைங்க வளர்ற வரைக்கும் அவங்களைத் தவிர வேற உலகமே தெரியல. இப்ப இரண்டும் வளர்ந்துடுச்சுங்க, இவருக்கு இப்பல்லாம் நின்னு பேசக்கூட நேரமில்ல. என்னமோ நான் எதுக்கும் உபயோகமில்லன்னு அடிக்கடி ஒரு நினைப்பு.”

“ஏன்கா... இப்படில்லாம் பேசுற?” சாமந்தி அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

‘பணம், காசு இல்லேன்னு நாங்க லோல்படுறோம். பாவம், தங்கக் கூண்டுக்குள்ள இருக்கிற கிளி மாதிரி இந்தக்கா விசனப்படுது. எத்தனை வசதி இருந்தாலும் வேலைன்னு ஒன்னு இல்லாம சும்மாவே இருந்தா பைத்தியம் பிடிக்கும் தான்..’ என்று நினைத்துக் கொண்டாள்.

“வேணா நீயும் அந்தக் கோமளாக்கா கூடச் சேர்ந்து வாக்கிங், ஜாக்கிங் எல்லாம் போயேன்...”

“அதுதான்டி செய்யப் போறேன், இத்தனை நாளும் எனக்குன்னு நட்போ, பொழுதுபோக்கோ வச்சுக்கணும்னு கூட தோணல... இனியாவது எனக்குன்னு ஏதாவது பண்ணிக்கணும்”

எத்தனை திட்டம் போட்டாலும் அடுத்த நாள் மாலை வெளியில் கிளம்ப விரும்பாமல் உள்ளிருந்து அழுத்தும் சோம்பல் அமுக்கவே செய்தது.

‘இன்னிக்குக் கண்டிப்பா கிளம்பியே ஆகணும்...’ அலுப்பை அடித்து விரட்டியபடி உடை மாற்றி நடைப்பயிற்சிக்கு கிளம்பிய சுகந்திக்கு புதிய உலகம் விரிய ஆரம்பித்தது சரியாக அந்த மாலை வேளை தான்.

அதே தெரு, அதே வானம், அதே பழகிய முகங்கள் தான். எனினும், கையை வீசி வெயில் தணிந்த வேனில் காற்றில் மூச்சு வாங்க நடப்பது புரிபடாத சுகத்தைத் தந்தது. எதில் இருந்தோ விட்டு விடுதலையானது போல!

ஆரம்பத்தில் தொந்தரவு செய்த மூட்டு வலி கூட நடக்க நடக்க இலகுவாகி வர, நட்பு வட்டமும் பெருகி இருந்தது, கோமளா உட்பட...

பேசி வைத்துக் கொண்டு ஒன்றாகவே நடக்கவோ, அருகில் இருந்த கோவில் பூங்காக்களுக்குச் செல்வதோ நடைமுறையாக...

அன்று சுகந்தி வெளியில் இருந்து வரும்போதே ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தாள். “வாட் மம்மி.. வயசு பசங்க நாங்க வந்துட்டோம்... நீ தான் வீட்டுல இருக்க மாட்டேங்குற...?” சின்னவன் கலாய்க்க, “போடா இவனே...” என்றபடி தன் காலணிகளைக் கழற்றினாள் சுகந்தி.

“டேய்.. இரண்டு பேரும் இங்க வாங்களேன், நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்”

“பிசினஸா? நீயா? அம்மா சும்மா காமெடி பண்ணாதே...”

“ஏன்டா எருமை, என்னைப் பார்த்தா பிசினஸ் பண்ற மாதிரி தெரியலையா?”

“அம்மா கண்டுபிடிச்சிட்டேன். வத்தக்குழம்பும் வடகம் வத்தலும் செஞ்சு விக்கிற பிசினஸ் தானே...” பெரியவன் ஓட்ட, சுகந்தி முறைத்தாள்.

“ஏன், அது மட்டும் தொழில் இல்லையா? அதுவும் தான் செய்யப் போறேன். இப்போதைக்கு ஆள் வைச்சு ட்ரைகிளீனிங், பேன்ஸி புடவைகளுக்கு ஏத்த மாதிரி ஸ்டார்ச் போடுறதுன்னு சின்னதா ஒரு யூனிட் ஆரம்பிக்கப் போறேன்”

“சாமந்தியும் அவ வீட்டுக்காரரும் தினம் நாலு மணி நேரம் எனக்காக வேலை செய்ய ஒத்துட்டு இருக்காங்க... எனக்கும் பொழுது போகும், அவங்களுக்கும் வருமானம் வரும்”

அவள் விளக்கமாகச் சொல்ல, அம்மா விளையாடவில்லை, தீவிரமாகத் தான் பேசுகிறாள், தான் செய்யப் போகும் தொழில் குறித்து நிறையத் தகவல்களைச் சேகரித்து இருக்கிறாள் என்று புரிந்த பிள்ளைகள் இரண்டும் பிரமிப்பாய்ப் பார்த்தன.

“வாவ்.. கிரேட்மா, செம ஐடியா, என்ன பேர் வைக்கப் போற உன்னோட பிசினஸ்க்கு...?” என்று பெரியவனும், “சூப்பர்மா... நீ ஆரம்பி... ‘புயல் ஒன்று புறப்பட்டதே’னு நாங்க இரண்டு பேரும் கோட் சூட் போட்டுட்டு உன் பின்னாடியே வந்து பிஜிஎம் கொடுக்குறோம்... டேய்... இந்த வாரமே டைலர்கிட்ட போய் அளவு கொடுத்துட்டு வந்துடலாம்” என்று சிறியவனும் மாறி மாறிக் கிண்டலடித்தாலும் மகன்கள் கொடுத்த வரவேற்பு அவளுக்குப் பெருத்த உற்சாகமளித்தது.

ஆனால் இரவு வந்த கணவரோ, “மானத்தை வாங்காதே சுகந்தி, உனக்கென்ன பைத்தியமா? சீனியர் மேனேஜர் நான், என் வைப் மத்தவங்க துணியைத் தோய்ச்சு தேய்ச்சுக் கொடுக்குறதெல்லாம் நல்லா இல்ல... எல்லாரும் பின்னாடி கை கொட்டி சிரிப்பாங்க..”

அவர் பெரிய முட்டுக்கட்டை போட, மனம் சுணங்கிப் போனாலும் அப்படியே விட்டுவிட முடியவில்லை அவளால்.

உள்ளே தீயாக எரிந்த ஏதோ ஒரு வேகம் உசுப்ப, எப்படியோ கணவரை சரிக்கட்டி அடுத்த வாரம் தன் நகைகளை எடுத்துக்கொண்டு வங்கிக்கு விரைந்தாள்.

புது வருடத்தில் ‘ப்ளீட்ஸ்’ என்கிற சின்ன நியான் போர்டு தொங்க ஆரம்பித்தது வீட்டு வாசலில். பிள்ளைகள் உதவியால் முக புத்தகத்தில் பக்கம் ஆரம்பித்து அவள் தன் தொழிலை பிரபலப்படுத்த, அந்தக் குடியிருப்பிலும் சுற்று வட்டாரத்திலும் இருந்த பெண்கள் மெல்ல மெல்ல தங்கள் உடைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

செய்யும் வேலையின் நேர்த்தியும், குறித்த நேரத்தில் கொடுத்து விடும் நேரத் துல்லியமும் குறுகிய காலத்தில் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தர, சாமந்தியும் அவள் கணவரும் தங்கள் மற்ற வேலைகளை அவள் கொழுந்தனிடம் தந்து விட்டு இதே தொழிலாய் இறங்கினார்கள்.

இந்தத் தொழில் ஸ்திரப்பட்டு வரும் என்ற நம்பிக்கை வந்த நிலையில் சுகந்தி இன்னொரு பெண்ணை உதவிக்கு வைத்தபடி வாரத்திற்குத் தேவையான இஞ்சி பூண்டு கலவை, புளி தொக்கு என தயாரித்து சின்ன கண்ணாடி டப்பாக்களில் அடைத்து விற்க ஆரம்பித்தாள்.

ட்ரைகிளீனிங் கொடுக்க வரும் பெண்களே அவற்றையும் வாங்கிக் கொள்ள, “அப்படியே காய்கறியும் நறுக்கிக் கொடுக்குற மாதிரி பாருங்களேன். வேலைக்குப் போய்ட்டு வந்து செய்ய அலுப்பா இருக்கு... கீரை வாழைப்பூ இதெல்லாம் செஞ்சே மாமாங்கம் ஆகுது” அடுத்தத் தொழில் வாய்ப்பை அவர்களை எடுத்துக் கொடுத்தார்கள்.

“செஞ்சுட்டா போகுது. இன்னிக்கே ஒரு குரூப் ஆரம்பிச்சு யார் யாருக்கு என்ன தேவைன்னு கேட்குறேன்” சுகந்தி உற்சாகமாகச் சொன்னாள். தொழிலில் முதல் அடி எடுத்து வைக்கத் தான் சிரமமாக இருந்தது. சோர்வுறாமல் நடக்க நடக்க அடுத்தடுத்த அடிகள் தானே சாத்தியமாகின.

அக்கம்பக்க வீடுகளில் யார் யாரைக் காதலிக்கிறார்கள், யார் யாரோடு ஊர் சுற்றுகிறார்கள் என்று புறணி பேசாமல் தன் நேரத்தை உபயோகமாகக் கழிப்பது உள்ளுக்குள் ஊவா முள்ளாக உருத்திக் கொண்டிருந்த வெற்றிடத்தை அகற்றி பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்க, மூச்சு விடவும் நேரமில்லாமல் அவள் தன்னை வேலைகளுக்குள் புகுத்திக் கொண்டாள்.

இனி வரும் நாட்களில் சலிப்புக்கோ அலுப்புக்கோ கொஞ்சமும் இடமில்லை. ஆணோ, பெண்ணோ - பணம், காசு, படிப்பு, வேலை, வீடு, வாசல் என ஆயிரம் இருந்தாலும் தேடலும், சுய காதலும் உள்ளவரை மட்டும் தானே வாழ்க்கை ருசிக்கிறது!?

“Love yourself, adore yourself and respect yourself” - வர இருக்கும் மகளிர் தினத்திற்கு வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதற்காக அச்சாகி வந்திருந்த வாழ்த்து அட்டைகளை மென்மையாகத் தடவிக்கொடுத்த சுகந்தி அலைபேசியில் வந்த அடுத்த அழைப்புக்கு செவி சாய்க்கத் தொடங்கினாள்.

“ப்ளீட்ஸ்னு பேரைப் பார்த்ததும் பெண்களுக்கு மட்டும்னு நினைச்சிட்டீங்களோ.... ஹ ஹா... இல்ல... இல்ல.... கோட் சூட்னு எல்லாமே ஹாண்டில் பண்றோம்... அட்ரஸ் மெசேஜ் பண்றேன்.... கொண்டு வாங்க...” பேசிக்கொண்டிருந்தவளின் கண்கள் மீண்டும் ஒருமுறை அந்த வாழ்த்து வரிகளை பெருமிதத்துடன் வருடிக் கொண்டன.-
நம்மை நாமே காதலிப்போம், கொண்டாடுவோம், நம்மைப் பற்றிய சுய மதிப்பீடுகளை உயர்த்திக் கொள்வோம். தோழிகள் அனைவருக்கும் மதிப்புமிகு மகளிர் தின நல்வாழ்த்துகள்! -- அன்புடன், ஹேமா
 

Madhini

New member
#4
வாழ்த்துக்கள் ஹேமா கதை அருமை 👌🏻👌🏻💐💐
நமக்குனு ஒரு அடையாளம் கண்டிப்பா வேணும் அப்ப தான் நாம் உயிர்பாவே இருக்க முடியும்