காதல் சர்க்கஸ் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

சுபஸ்ரீ அவர்கள் "காதல் சர்க்கஸ்" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்.
 
#2
காதல் சர்க்கஸ்1

சிறிய பதாகை போன்ற ஒன்றில் “கிருஷ்ணா” என எழுதியிருந்தது. அதை கையில் பிடித்தபடி நின்றிருந்தான் கதிர். அதிக நேரம் பிடித்திருந்தபடியால் கை மரத்துப் போனது மறு கைக்கு மாற்றினான். கடந்த ஒரு மணி நேரமாக ஏர்போட்டில் காத்திருக்கிறான் அந்த கிருஷ்ணாவிற்காக.

கிருஷ்ணா கருப்பா? சிவப்பா? குட்டையா? நெட்டையா? என ஒன்றும் தெரியாது. பேய்க்கு வாக்கபட்டால் புளிய மரத்தில் தொங்கிதானே ஆக வேண்டும். அப்படிதான் அவனும் காத்திருக்கிறான் கோவை ஏர்போட்டில் கிருஷ்ண தரிசனத்திற்காக.

“சித்தப்பு . . இதை புடி” என டிரைவரிடம் தன் பாரத்தை சுமத்திவிட்டான். வேண்டா வெறுப்பாக அந்த பதாகையை பெற்றுக் கொண்டு டிராபிக் கான்ஸ்டபிள் போல் டிரைவர் அபினயம் பிடித்தான்.

கதிர் அணிந்திருந்த ஜேக்கெட்டை ஊடுருவியபடி குளிர் உடலை துளைத்தது. தன் இரு உள்ளங்கைகளை உரசி குளிரை துரத்த முயற்சி செய்தான். “அட போடா இதுகெல்லா நாங்க ஓடிடுவோமா?” என குளிர் சளைக்காமல் தாக்குதலை நடத்திய வண்ணம் இருந்தது.

கிருஷ்ணன் வந்து பல லீலைகளை புரிய இருக்கிறான். அவன் வருவதற்குள் நாம் கதிர் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

கதிர் எம்.பி.ஏ படிக்கையில் தான் ஒரு சஞ்சய் ராமசாமி போல சூட் கோட்டு, சன் கிளாஸ் சகிதம் டக் டக்கென நடப்பதும். அவனுக்கு முன்னும் பின்னும் ஆட்கள் வருவது போல பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தான். ஆனால் சஞ்சய் ராமசாமி அல்ல சரக்கு மாஸ்டர் ஆவது கூட அத்தனை எளிதல்ல என பின்பு புரிந்தது.

எப்படியோ எம.பி.ஏ முடித்துவிட்டு வேலைக்கு அலைந்து திரிந்தான். அம்மா காந்திமதி அப்பா ரங்கசாமி மூத்த சகோதரி கனகா என அழகான குடும்பம். எங்கு நோக்கினும் பணத் தேவை.

இறுதியாக ஊட்டியில் உள்ள டீ எஸ்டேட்டில் வேலை கிடைத்தது. மேனேஜர் வேலைக்கு அமர்த்தபட்டான். ஆனால பல சமயங்களில் சம்மந்தமே இல்லாத வேலையை செய்தாக வேண்டும். கேள்வி கேட்டால் வேலை போய்விடும். ஆதலால் வேறுவழியின்றி சொல்வதை செய்தான்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் ஊட்டியின் மலைமுகடு மேகம் என இயற்கை அழகை ரசித்து ருசித்து சொக்கி போனான். ஆனால் போக போக மந்தமாகி போனது வாழ்க்கை.
துவைத்த துணி காய இரண்டு மூன்று நாட்கள் ஆவதுதான் அவனின் உச்சபட்ச எரிச்சல். சப்பாத்தியை கல்லில் திருப்பி போடுவதைப் போல மாற்றி மாற்றி துணியை திருப்பி போடுவான்.


இப்பொழுத்தான் சென்னை வெய்யிலின் அருமை பெருமை புரிந்தது. துணி துவைத்து காய போட்டால் இரண்டு மணி நேரத்தில் இஸ்திரி போட்டது போல காய்ந்துவிடும். இங்கு அப்படியா?

கிருஷ்ணா விஜயம் செய்துவிட்டான். வாருங்கள் போகலாம்.

டிரைவர் கையிலுள்ள பதாகையை நோக்கியபடி கிருஷ்ணா வந்தான். கதிர் வேகமாக டிரைவர் அருகே போகவும். கிருஷ்ணன் வரவும் சரியாக இருந்தது.
டிரைவரிடம் “கிருஷ்ணா . . நான்தான் . . ” என்றவன் மேலும் பேசுவதற்குள் . . .


“கிலாட் டூ மீட் யூ கிருஷ்ணா சார்” என கதிர் இடையே புன்னகையுடன் பேசினான். பின்பு தன்னை அறிமுகமும் செய்துக் கொண்டான்.

“ஹாய் கதிர்” என ஸ்நேக புன்னகையை உதிர்த்தான் கிருஷ்ணா.

லக்கேஜ் ஏற்றபட்டு டீ எஸ்டேட்டை நோக்கி கார் புறப்பட்டது. அமைதியாக வண்டி சென்றது.

சுற்றிலும் அழகான மலை முகடுகள். மேகங்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி பல ஒவியங்கள் வரைந்தபடி இருந்தன. பியூட்டி பார்லர் சென்றதுப் போல சீராக வளர்ந்திருந்த மரங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக எங்கு காணினும் பச்சை நிறம். இவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை கதிர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவற்றை கண்டு சளித்துப் போய்விட்டது.

“கதிர் எதாவது பாட்டு போடுங்க” கிருஷ்ணா கேட்டான்.

“அந்த தம்பி வெளி நாட்டுல படிச்சிட்டு வந்திருக்கு . . இங்க்லீஸ் பாட்டு இருந்தா மட்டும் போடு” என கதிர் முதலாளி முன்னமே அறிவுரை வழங்கி இருந்தார்.

கதிரிடம் ஆங்கில பாடல் எதுவுமில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் செல்போனில் தேட தொடங்கியவனிடம்

“இளையராஜா பாட்டு செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் . . இருக்கா?”

“தப்பிச்சேன்டா சாமி” என நினைத்த கதிர் மியூசிக் சிஸ்டமில் இருந்ததை ஒட விட்டான்.

“உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லயே? எனக்கு ஹெட்ல பாட்டு கேக்கறது பிடிக்காது . . அதான்” என கிருஷ்ணா சொல்ல

“இல்ல . . சார் ஒரு பிரச்சனையும் இல்ல” என பவ்யமாக கதிர் பதிலளித்தான்.
கிருஷ்ணா கண்ணை மூடி சாய்ந்து பாட்டை ரசித்தான். கதிர் ஆச்சரியமாக அவனை பார்த்தான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் எஸ்டேட்டை வந்தடைந்தனர்.


எஸ்டேட் ஒனர் மற்றும் கதிரின் முதலாளி சத்யமூர்த்தியும் அவனின் மனைவி சந்திராவும் கிருஷ்ணாவை வரவேற்றார். அவனுக்கு பலமான உபசரிப்பு செய்யப்பட்டது.

“அங்கிள் இதெல்லாம் எதுக்கு?” என சங்கோஜப்பட்டான்.

“அட என்னதம்பி இப்படி சொல்லிட்ட? உன் அப்பாக்கும் எனக்கும் இருபது வருஷ ஸ்நேகிதம் . . தெரியும் தானே”

“க்லோஸ் பிரெண்ட்ஸ் தானே அப்புறம் இந்த பார்மாலடிஸ் எதுக்கு?”

“நட்பு எப்ப உறவாகுமோ?“ என மனதில் நினைத்தாலும் சொல்லாமல் இருந்தான் சத்யமூர்த்தி.
“அம்மா எப்படி இருக்காங்கபா? பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு” என சந்திரா கேட்டாள்.


“நல்லா இருக்காங்க ஆண்ட்டி . . ”
சம்பிரதாய பேச்சுகள் நடந்தேறின.


“இது என் பொண்ணு காவ்யா?” என சந்திரா அறிமுகப்படுத்த

“ஹாய் காவ்யா” என அவளுடன் கிருஷ்ணன் பேசினான்.
காவ்யா செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்த பெண். ஆதலால் அழகும் அறிவும் சலாம் போட்டு நின்றது அவளிடம்.


“சோ போட்டோகிராபி பண்றியா . . இன்ட்ரெஸ்டிங்” என அவளும் சகஜமாக அவனுடம் பேசியபடி இருந்தாள்.

இருவரையும் ஜோடியாக பார்த்து ரசித்தான் அவள் தகப்பன். படிப்பு பணம் அந்தஸ்து கௌரவம் என எல்லாவற்றையும் மனக் கண்ணில் தராசில் போட்டு பார்த்தான். அத்தனையும் சரிசமமாக இருந்ததில் மகிழ்ச்சி.

கதிர் கிருஷ்ணாவின் லக்கேஜ் முதலியவற்றை அவனுக்கென பிரத்தேயகமாக மாடியில் ஒதிக்கி இருந்த அறையில் வைத்தான்.

அனைவருடனும் பேசிய பின்னர் கிருஷ்ணாவை அறைக்கு அழைத்து வந்தான். எல்லா வேலைகளையும் மிக கச்சிதமாக செய்தான்.

“சார் உங்களுக்கு எது வேணுனாலும் போன் பண்ணுங்க சார்” என தன் அலைபேசி நம்பரை கொடுத்தான்.

-1-
 
#3
“நான் இங்கயேதான் சார் இருப்பேன். எப்பவேணா கூப்பிடுங்க சார்” என்றான். பேசிக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் அவ்வப்பொழுது பொருட்கள் சரியாக உள்ளனவா? என சுழன்றுக் கொண்டிருந்த்தை கிருஷ்ணா கவனித்தான்.

கதிர் கிளம்புகையில் “ஒன் செகண்ட் கதிர்” என நிறுத்தினான் கிருஷ்ணா.

“யெஸ் சார்” பவ்யமாக சொன்னான்.

“கால் மீ கிருஷ் . . சார் மோர்லாம் வேண்டாம்” என்றான் கிருஷ்ணா.

“சார் உங்கள எப்படி?” என தயங்கியவனிடம்

“என்னை பார்த்தா வயசான மாதிரி தோனுதா?” கண்ணாடியில் தன்னை பார்த்தபடி தன் இடதுகையால் தலையை கோதினான். கிருஷ் அவன் மனதைப் போல பார்க்க அழகாய் இருந்தான்.

“கதிர் கிருஷை சாப்பிட கூடிட்டுவா” என காவ்யாவின் குரல் கேட்டது.

“யெஸ் மேடம்” என பதில் கொடுத்தவன் “சாப்பிட வாங்க சார்”

“யார் இங்க சார்?” என கிருஷ் முன்னும் பின்னும் திரும்பித் தேடுவதைப் போல பாவணை செய்ய

“கிருஷ் சார்னு கூப்பிடறேனே” பாவமாக கதிர் கேட்க

“முடியாது”

மூச்சை இழுத்துவிட்டபடி “கிருஷ் சாப்பிட வாங்க”

“ங்க . . வேணாம் ஒன்லி கிருஷ்”

“ஐயோ” என பதறினான் கதிர்

“எனக்கு பசிக்குது . . ” என கிருஷ் குழந்தையாய் அடம்பிடிக்க

“சீக்கிரமா சாப்பிடவா கிருஷ்” என தன்னையும் மறந்து கதிர் சொல்லிவிட

“அப்பாடா உனக்கு இன்னிக்கு சோறு உண்டுடா” என கண்ணாடியில் தன்னைப் பார்த்து சொல்லிக் கொண்டான் கிருஷ்.

புன்னகைத்தபடி இருவரும் செல்கையில் “கிருஷ் . . சத்யமூர்த்தி சார் காவ்யா மேடமும் இருக்கும் போது இப்படியெல்லா கூப்பிட்டா என் வேலை போயிடும். அவங்க முன்னாடி மட்டும் சார்னுதான் கூப்பிடுவேன்.” என தன் கோரிக்கையை வைத்தான். மனமில்லாமல் கிருஷ் சம்மதித்தான்.

மறுநாள் காலை அருகில் இருந்த காட்டுபகுதிக்கு கதிர் கிருஷ் மற்றும் காவ்யாவும் செல்ல முடிவு செய்திருந்தனர். கதிர் வண்டி ஓட்ட முன்னிருக்கையில் அமர முயல “நான் டிரைவ் பண்றேன் . . நீ பின்னாடி உட்காரு” என்றாள்.

“மேடம்” என அவன் தயங்க

“கதிர்” என கட்டளையாய் வந்த காவ்யா குரலுக்கு மறுபேச்சு பேசாமல் பின்னிருக்கையில் கிருஷ் உடன் அமர்ந்தான்.

“வா நண்பா” என கிருஷ் கதிர் தோள் மேல் கை போட்டான்.
“சும்மா இரு” என கதிர் கண்களை உருட்டி ஜாடை செய்ய . .


“ரெண்டு தோஸ்து நடுல நா வர்ல என்ஜாய்” என்றாள் சிரித்தபடி காவ்யா.

மூவருமாய் பேசி சிரித்தபடி சென்றனர். அங்கு சென்று வனத்துறையிடம் அனுமதி பெற்றதும். காட்டு பகுதிக்குள் சென்றனர். இயந்திரதனமான வாழ்க்கையில் பின்னி பினைந்தவர்களுக்கு இந்த சூழல் ரம்மியமாய் இருந்தது.

கிருஷ் ஆங்காங்கே நின்று தன் பிரத்யேக கேமராவில் கிளிக்கினான். காவ்யாவும் கதிரும் கூட அவன் செய்கையில் சற்றே துணுக்குற்றனர். காரணம் அவன் போட்டோ எடுத்த இடங்கள் வெறும் மண் சரிவுகள், புல், மரக்கிளை போன்றுதான் இருந்தது.

ஒரிடத்தில் கிருஷ் முட்டி போட்டபடி அமர்ந்து போக்கஸ் செய்தான். சரியில்லாத்தால் இன்னமும் குனிந்தான் அப்பொழுதும் சரியாக வரவில்லை. படுத்தேவிட்டான் அப்படியே பல கோணங்களில் கிளிக் செய்தான். எதை படமெடுத்தான் என மற்ற இருவருக்கும் புரியவில்லை.

எழுந்து தன் சட்டை பேண்டில் ஒட்டியிருந்த மண்ணை கூட அகற்றாமல் தான் எடுத்த போட்டைகளை டிஜிட்டல் கேம்மில் பார்த்தபடி நடந்தான். ஒரிடத்தில் ஈரமண் சறுக்கவே அப்படியே விழுந்து அருகில் உள்ள பெரிய குழியில் விழ இருந்தவனை ஒரு கைப் பிடித்தது.

பிடித்தவன்தான் நம் கதையின் நாயகன்.

அஜித் விஜய் சூர்யா விக்ரம் போன்றவர்களின் அழகு வசிகரிப்பு ஸ்டைல் போன்றவை இவனிடத்தில் இருக்கும் என நீங்கள் நினைத்தால். அது தவறு . . .

முட்டை கண்கள்
சப்பை மூக்கு
தடித்த உதடு
உயரம் மூன்றடி . . .
பழக மிகவும் இனிமையானவன் அவன் பெயர் அப்பு.
அடுத்த அத்தியாயத்தில் அவனின் நாயகியை சந்திப்போம்.

வட்டமிடும் . . . .
 

ABC

New member
#4
Cool start sis 👏👏👏 Krish than kadhai-in nayaganga irupparu endru ninaithen...yaru andha 3 adi nayagan? Circus hero vaga iruparo😛 anyway like krish's humbleness and of course kadhir aka Sanjay too😁😁.. adutha chapter padika waiting. Thanks.wish you all the best 🙌👍
 
#5
Cool start sis 👏👏👏 Krish than kadhai-in nayaganga irupparu endru ninaithen...yaru andha 3 adi nayagan? Circus hero vaga iruparo😛 anyway like krish's humbleness and of course kadhir aka Sanjay too😁😁.. adutha chapter padika waiting. Thanks.wish you all the best 🙌👍
Thank you so much dear ABC :love: .. happy to see your sweet comment.
 
#6
காதல் சர்க்கஸ் 2

அந்த வனப்பகுதியில் யானையை பிடிப்பதற்காக பெரிய குழிகளை தோண்டுவதுண்டு. அக்குழியை மறைக்க அதன் மேல் சோளத்தட்டை, புல்கட்டுகள், இலை, தழை என போட்டு. குழி தெரியாதபடி செய்துவிடுவார்கள்.

அப்படியான ஒரு குழியில்தான் கிருஷ் விழ இருந்தான். அப்பொழுதுதான் அப்பு அவனை காப்பாற்றினான். அவனை லாவகமாக பிடித்து ஒரே நொடியில் மேலேயும் இழுத்துவிட்டான் அப்பு.

காவ்யாவும் கதிரும் ஒரு நொடி அதிர்ந்துவிட்டனர். அப்பு இல்லாமல் இருந்திருந்தால் எத்தனை இன்னல்களை சந்திக்க நேரிடும். அதோடு கிருஷ் என்னவாகி இருப்பான்? இருவரின் முகமும் பயத்தால் வெளிறிப் போனது.

அப்பு ஒரு பெரிய மரத்திலிருந்து கயிற்றை பிடித்தபடி லாவகமாக கிருஷ்ஷை காப்பாற்றிவிட்டான். மேலே வந்த கிருஷ் இன்னமும் அதிர்ச்சி விலகாதவனாக அப்படியே சரிந்தான் நிற்க முடியவ்ல்லை.

ஓரிரு நொடிக்கு பின் “கேமரா” என கிருஷ் தேட அது குழியில் விழுந்திருந்தது.

“நான் எடுக்கிறேன் கிருஷ்” என பெரிய கம்பை தேட தொடங்கினாள் காவ்யா.

இவற்றை கவனித்த அப்பு கயிற்றை பிடித்தபடி சர்ரென குழியில் இறங்கி கேமிராவுடன் வெளியே வந்தான். அவனின் ஒவ்வொரு அசைவும் லாவகமாக இருந்தது. எந்த இடத்திலும் கயிற்றையும் விடவுமில்லை. வேலையும் கச்சிதமாக இருந்தது. கேமிராவை வாங்கிய கிருஷ் “ரொம்ப தேங்க்ஸ் நீங்க இல்லனா” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே யானையின் பிளறல் கேட்டது.

“இந்த பக்கம் ஏன் வந்தீங்க? இங்க ஒத்த யானை போகும். அது ஆபத்தானது.” என்றான் அப்பு.

அப்பொழுதுதான் சற்றே தொலைவில் “அனுமதி இல்லை” என்கிற போர்ட்டை மூவரும் கண்டனர். அதை கவனிக்காமல் அவர்கள் அங்கு வந்துள்ளனர். கிருஷ் பதட்டத்துடன் எழுந்தான். ஆனால் அவனால் நிற்க முடியவில்லை. இடது காலில் பலமான அடி. குழியில் விழுந்த பொழுது கால் பலமாக ஒரிடத்தில் மோதி இருந்தது.

யானையின் பிளறல் சத்தம் இப்பொழுது அருகில் கேட்டது. மூவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. கதிர் கிருஷ்ஷை பிடித்துக் கொண்டு நடக்க முற்ப்பட்டான். ஆனால் இயலவில்லை.

“நீங்க மூணு பேரும் அந்த மரத்துக்கு பின்னாடி போய் நில்லுங்க. வேற எங்கயும் போகாதீங்க. நான் யானைய பாத்துக்கிறேன்” என அப்புவின் குரல் கேட்டது.

அருகில் தொங்கியவன் அடுத்த நொடி மரத்தின் பெரிய கிளையில் நின்றிருந்தான். கதிர் ஒரு பக்கம் காவ்யா மறுபக்கமென கிருஷ் நகர உதவினர். மிகுந்த சிரமத்துடன் நகர்ந்தனர்.

அது ஒரு பெரிய மரம் அதன் பின்னே மூவரும் நின்றுக் கொண்டனர். அப்பு மூவரும் சென்றதும் மரத்தில் இருந்து பழத்தைப் பறித்தான். அதை தன் சட்டையில் துடைத்து பின்னர் கடித்து தின்றான்.

இவர்களை பார்த்து “சூப்பர் ருசி” என்றான். மேலும் நான்கைந்து பழங்களை பறித்து தன் சட்டைக்குள் வைத்துக் கொண்டான். மூவருக்கும் இவன் செய்கை எரிச்சலை கிளப்பியது. இவன் உண்மையில் காப்பாற்றப் போகிறானா? அல்லது நடிப்பா? நம்பிக்கை தளர்ந்தது. தங்கள் குடும்பத்தை மூவரும் எண்ணிக் கொண்டனர். இதுவே தங்கள் வாழ்க்கையின் கடைசி தருணம் என்றெல்லாம் மனம் ஓலமிட்டது.

ஒரு பக்கம் மனம் இப்படி பயந்தாலும் அப்புவின் நடை உடை பாவணை முக்கியமாக உயரம். அவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. குள்ள மனிதர்கள் பற்றி கேளிவிபட்டதுண்டு. சினிமா சர்க்கஸ் போன்றவற்றில் இருப்பார்கள். ஆனால் நேரில் முதல்முறையாக பார்ப்பதால் அவர்களால் வியக்காமல் இருக்க இயலவில்லை.

யானை அருகே வந்துக் கொண்டிருந்தது. பிளறல் சத்தம் படுபயங்கரமாக இருந்தது. அப்பு இன்னும் ஒரு முறை பழத்தைக் கடித்தான். இவனை நம்பி ஏமாந்துவிட்டோம் என்றுதான் மூவரும் வேதனைப்பட்டனர்.

தொலைவில் யானை உருவம் தெரியத் தெடங்கியது. காட்டு யானை படுபயங்கரமாக இருந்தது. தன் தும்பிக்கையால் வழியில் கண்டதை எல்லாம் நாசம் செய்தது. காலில் மிதிப்பட்டவை எல்லாம் சொல்ல முடியா கதிக்கு ஆளாயின.

“இந்த அப்புகிட்ட உன் வீர ஆவேசமா? வா வா. நீ பெரியவனா? நான் பெரியவனா பாத்திடலாம்” என ஏதோ நாய்க் குட்டியிடம் பேசுவதைப் போல அப்பு பேசினான். இதைக் கேட்ட மூவர் இதயமும் நின்றேவிட்டது. அந்த யானையின் அசுர பலம் எங்கே? இவனின் உயரமும் உடல் வாகும் என்ன? நிச்சயம் இவன் பைத்தியம் என்றுதான் எண்ணத் தோன்றியது.
மூவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டனர்.


“மூணு பேரும் நல்ல குனிங்க. மிஷன் அப்பு ஆரம்பிக்கப் போகுது” என அப்பு குரல் கேட்டது. இவன் என்ன செய்யப் போகிறான் என ஆர்வமும் அச்சமுமாக பார்த்தனர்.

தன் கையில் இருந்த பழத்தை சற்றே தொலைவில் எரிந்தான். இரண்டு நொடியில் அடுத்த பழத்தை எரியவும் அங்கே யானை வரவும் சரியாக இருந்தது. மேலும் இரண்டு பழங்களை எரிந்தான்.

அவன் எரிந்தது தேன் கூட்டின் மேல் அதிலிருந்து தேனீக்கள் படையெடுத்து வெளியே வந்தன. யானைக்கு தேனீயின் ரீங்காரம் பிடிக்காது. அந்த சத்தம் ஒருவித எரிச்சலை கிளப்பும்.

யானை இப்பொழுது தேனீக்களிடமிருந்து தப்பிக்க வேறு வழியில் ஓடியது. தேனீக்கள் பின் தொடர்ந்தன. அடுத்த ஐந்து நிமிடத்திற்கு பிறகு அமைதி.

அப்பு மூவர் இருந்த இடத்திற்கு வந்தான். நடந்த எதையும் நம்ப முடியாமல் பேயறைந்ததை போல பார்த்தனர். இவனால் என்ன செய்துவிட முடியும் என நினைத்தவர்கள் இப்பொழுது அப்புவை மேதாவியாகவே பார்த்தார்கள். அவன் மேல் நல்ல அபிப்ராயம் உண்டாகியிருந்தது.

“சீக்கிரமா கிளம்புங்க” என அப்பு மூவரையும் துரிதப்படத்தினான்.

கிருஷ் கால் வீங்கி இருந்தது. வலி உயிர் போனது. அப்படியே வலியில் நடக்க முற்பட்டான். காவ்யா ஏம்புலன்ஸ் போலீஸ் என எதாவது ஒன்றிற்கு போன் செய்து உதவிக் கேட்கலாம் என முயற்சித்தாள். ஆனால் சுத்தமாக அங்கு சிக்னலே கிடைக்கவில்லை.

அவன் நிலைமையை கண்ட அப்பு “ எங்க இடம் இங்கிருந்து பக்கம். ஐஞ்சு நிமிஷத்துல போயிடலாம். என்னோட வாங்க” என அழைத்தான். இருபுறமும் கதிர் மற்றும் காவ்யா பிடித்துக் கொள்ள மெதுவாக கிருஷ் நடந்தான்.

அப்புவை தொடர்ந்துச் செல்வதை தவிர அவர்களிடம் வேறு வழியும் இல்லை. கிருஷ் உள்ள நிலையில் அவனை காவ்யாவும் கதிரும் வெகு தூரம் அழைத்து செல்ல முடியாது. அதோடு மீண்டும் விலங்குகள் வந்தால் என்ன செய்வது என்கிற அச்சமும் சேர்ந்துக் கொண்டது.

சில நிமிடத்தில் பெரிய மைதானம் போன்ற இடத்திற்கு வந்து சேர்ந்தனர். நடுவே மிகப் பெரிய கூடாரம் இருந்தது. அதன் மேல் ‘LEO CIRCUS’ THE WORLD OF JOY என எழுதியிருந்தது. சுற்றிலும் சின்னதாக நிறைய கூடாரங்கள் இருந்தன.
 
#7
அவர்களை ஒரு கூடாரத்தினுள் அழைத்துச் சென்றான். அங்கிருந்த படுக்கையில் கிருஷ்ஷை படுக்க வைத்தனர். அப்பு சென்று திரும்புகையில் அவனுடன் ஒருவர் வந்தார்.

அவர் “வணக்கம் நான் டாக்டர் அமர்நாத்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் கிருஷ் காலை சோதித்தார். பலமாக இடித்ததால் காயம் ஏற்பட்டிருந்தது. அதனால் வீக்கமும் உண்டாகியுள்ளதை கண்டவர். காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட்டு கட்டுப் போட்டார்.

“அப்பு இவங்க சாப்பிட்டதும் இந்த மாத்திரை கொடு” என மருந்து சீட்டை கொடுத்தவர்.

“ரெண்டு நாள்ல சரியாயிடும் . . காலை அதிகமா அசைகாதீங்க” எனச் சொன்னார்.

“நான் அப்பாக்கு போன் பண்றேன்” காவ்யா சொல்ல
“இல்ல . . ஏம்புலன்ஸ்க்கு இன்பார்ம் பண்ணலாம் . . சுலபமா போயிடலாம்” என கதிர் ஐடியா சொன்னான்.
கிருஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் படுத்திருந்தான். அவனால் வலியால் எதுவும் பேச இயலவில்லை.


அப்பொழுது ஒரு பெரியவர் உள்ளே வந்தார். “எப்படி தம்பி இருக்கீங்க?” என கிருஷ்ஷை நலம் விசாரித்தார். மற்ற இருவரையும் வரவேற்கும் பாணியில் “வாங்க” என புன்னகைத்தார்.

“உங்க கால் சரி ஆகுற வரை நீங்க இங்கயே தங்கலாம்.” என்றார்.

காவ்யாவும் கதிரும் அவசரமாக மறுக்க முனைகையில் “எனக்கு புரியுது . . இப்ப நீங்க எங்க விருந்தாளி . .உங்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் அப்பு செய்வான்.” என சிரித்தபடி சொன்னார்.

கதிர் தங்களை பற்றியும். அப்பு தங்களை காப்பாற்றியது பற்றியும் விளக்கமாக கூறினான்.

“அப்புவால முடியாததுனு எதுவும் இல்ல” என அப்பு சினிமா பாணியில் பேசினான்.அவனின் வெகுளிதனமான பேச்சு சிரிப்பை வர வைத்தது. அதற்குள் உணவோடு சிலர் வந்தனர்.

“இங்க சர்க்கஸ் நடக்கப் போகுதா?” என காவ்யா தயங்கி கேட்டாள். அவளுக்கு சர்க்கஸ் பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் ஆர்வமும் இருந்தது. கதிர் மற்றும் கிருஷ் இருவருக்கும் ஆசைதான். ஆனால் அவர்களுக்கு தொந்தரவா இருக்க வேண்டாம் என்கிற எண்ணமும் இருந்தது.

“ஆமாமா என் பேரு வரதன் இந்த லியோ சர்க்கஸை கடந்த பத்து வருஷமா நடத்திட்டு வரேன்.” பெரியவர் பதிலளித்தார்.

“எங்களால உங்களுக்கு தொந்தரவு” என கதிர் பேச

“இதுல என்ன தொந்தரவு . . நீங்க எல்லாரும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க . . இன்னிக்கு ராத்திரி ஏழு மணிக்கு ஷோ இருக்கு . . பாத்திட்டுதான் போகணும்” என்றார் அன்பு கட்டளையாக

அங்கு அப்புவை போல ஐந்தாறு குள்ள மனிதர்கள் இருந்தனர். ஆண்களும் பெண்களும் ஜிலுஜிலுவென விதவிதமான ஆடைகள் அணிந்திருந்தனர். யானை புலி சிங்கம் போன்ற விலங்குகளும் இருந்தன. அவற்றையெல்லாம் பார்க்க பார்க்க மூவருக்கும் அங்கிருந்த செல்ல மனமே வரவில்லை.

மூவரும் உண்டு முடித்ததும் அப்பு கிருஷ்ற்கு மருந்துகளை கொடுத்தான்.

“உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என காவ்யா மனதார நன்றி சொன்னாள். கதிரும் கிருஷ்ம் சேர்ந்து நன்றியுரைத்தனர்.

“அப்பு அதுதானே உங்க பேரு?” கிருஷ் கேட்டான். மற்றவர்கள் இவனை அழைத்ததை கவனித்தபடியால்

“உண்மையான பேரு சொல்லவா? பட்டப்பெயர் சொல்லவா?” ஔவையார் தொனியில் கேட்டான்.

“ரெண்டும்” என்றான் ஆர்வமாக

“உண்மையான பேரு வேலாயுதம். பட்டப் பெயர் அப்பு. திருக்குறளைவிட நான் உயரம் அதிகம் அது ரெண்டு அடிதான். நான் மூணு” என்றான் புன்னகை மாறாமல்.
மூவரும் சிரித்துவிட


“அனு இங்க வாயேன்” என வெளியே பார்த்து அழைத்தான்.
சில நொடியில் அப்புவை போலவே குள்ளமாக ஒரு பெண் வந்தாள்.


“இது அனு. நான் கல்யாணம் கட்டிக்கப் போற பொண்ணு” என அறிமுகப்படுத்தினான்.

மூவரும் “கன்கிராட்ஸ்” என சந்தோஷமாக வாழ்த்தினர்.

“எனக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு. எங்க லவ் ஸ்டோரில நோ வில்லன்” என அப்பு வம்பளக்க ஆரம்பித்தான்.
இல்லனா நானும் “உன்னை நினைச்சி பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமேனு” பாட்டு பாட வேண்டி வரலாம் என ஜாலியாக பேசியபடி இருந்தான்.

வட்டமிடும் . .
 
#9
காதல் சர்க்கஸ் 3

கிருஷ் சிறிது நேரம் இளைப்பாறினான். பின்பு கதிர் காவ்யாவுடன் நடுநாயகமாக இருந்த பெரிய சர்க்கஸ் கூடாரத்தை சுற்றிப் பார்த்தான். உள்ளே பெரிய உலக உருண்டை போல ஒன்று சுழன்றுக் கொண்டு இருந்தது. அதில் இரு பக்கம் சிங்கம் கர்ஜிப்பது போல உருவம் பொறித்து அதன் கீழே லியோ சர்க்கஸ் என்றும் அதற்கும் கீழே சிறிய எழுத்துகளில் த வோல்ட் ஆப் ஜாய் என எழுதியிருந்தது.

வரதன் ஒவ்வொன்றையும் காண்பித்தார். அவர் முகத்தில் இவை அனைத்தும் தான் கட்டிய அழகான கோட்டை என்கிற பெருமை நன்றாக தெரிந்தது.

சர்க்கஸில் பணியாற்றுப்பவர்கள் இந்தியாவை சேர்ந்த பல மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் எந்த பேதமும் இன்றி ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் பணியாற்றுவது தெரிந்தது. அப்புவும் அனுவும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டனர்.

கிருஷ் அதிகம் நடக்க வேண்டாம் என வரதன் நாற்காலி போட்டு அமர வைத்தார். காவ்யா அந்த சூழலில் தன்னை முழுமையாக தொலைத்துவிட்டாள். கதிர் கடமையும் கனவிற்கும் இடையே சஞ்சரித்தான்.

அருகில் ஓர் சிறிய கூடாரத்தில் அப்பு அனு மற்றும் மற்ற குள்ளமானவர்களுக்கு அவர்களின் உருவத்திற்கு ஏற்ற அளவில் கட்டில் நாற்காலி என சிறியதாக பிரத்யேகமாக வரதன் செய்துக் கொடுத்திருந்தார். அதை காண்கையில் காவ்யாவிற்கு தான் சிறுவயதில் படித்த “ஸ்னோ வைட் அண்ட செவன் டிவார்ப்” என்னும் கதை நினைவுக்கு வந்தது.

“ஷோக்கு எல்லாம் ரெடியா? நாங்க பாக்க ஆவலா இருக்கோம்” என்றான் கிருஷ்.


“ ம்ம் எல்லா ரெடி தம்பி . . . ஆனா இப்ப எல்லாம் சர்க்கஸ் பார்க்க யாரும் அதிகமா ஆர்வம் காட்டறதில்ல” என மன வருத்தமுடன் பேசினார் வரதன்.

“சினிமா டீவி வந்ததில இருந்து சர்க்கஸ் மவுசு குறைஞ்சி போச்சு. சினிமால எல்லாத்துக்கும் டூப் இருக்கு. இங்க எல்லாமே உண்மை. நடிக்க தெரியல பாட தெரியலானாலும் சினிமால பிரச்சனை இல்ல. ஆனா இங்க சின்ன விஷயத்துக்கு கூட நிறைய பிராக்டிஸ் தேவை.

இங்க எல்லாமே கண்ணு முன்னாடி லைவா நடக்குது. அது நிழல் படம். இது நிஜம் மட்டுமே. சர்க்கஸ்ல முக்கியமானது விலங்கும் மனிதனுக்கும் இருக்கிற நெருக்கம். சிங்கம் புலி இப்படி எல்லாத்தையும் பக்கத்துல பாத்து ரசிக்கிற ஒரு உணர்வு எங்கேயும் வராது. காட்டு விலங்க கூட நாம பாசமா அணுக முடியும்னு சொல்லுது சர்க்கஸ். ஆனா இப்ப டீவிலயே புலி சிங்கம்னு பாக்கறதனால காசுக் கொடுத்து இதை பாக்கணுமானு ஜனங்க நினைக்கிறாங்க.” குரலில் ஆதங்கம் தொனித்தது.

“சர்க்கஸ் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. காலப் போக்குல இது மொத்தமா இல்லாம போயிடும். இந்த கலைஞர்கள் மேல யாருக்கும் பாசம் பற்று இல்ல” என அங்கலாயித்தார். அவருடைய போன் சிணுங்க . . அவர் பேச அகன்றார்.

அங்கு பணிபுரியும் பலருக்கு சர்க்கஸை தவிர வேறு எதுவும் தெரியாது. வெளி உலகிற்கு அவர்கள் வந்தால் நிச்சயம் அல்லல் படுவார்கள். அவர் வேதனை மூவருக்கும் நன்றாகவே புரிந்தது.

அந்த இடம் கிருஷ் கண்ணுக்கு அத்தனையும் அழகாய் தெரிந்தது. அவற்றை தன் கேமிராவில் பதிந்தான். அவற்றில் அதிகம் அப்பு அனு இருந்தார்கள்.

அப்பு விடாமல் “இது என்ன? அது ஏன் அப்படி இருக்கு?“ என்றெல்லாம் கேமிராவில் உள்ளதை கேட்டபடி இருந்தான். அதிநவீன கேமிராவை அவன் பார்த்ததே இல்லை. கிருஷ் கேமிராவை அப்புவிடம் கொடுத்து படம்பிடிக்க சொன்னான். அவனின் சின்ன கைகள் சில புகைபடங்களை பிடித்தன.

கிருஷ் அப்புவையும் அனுவையும் வித்யாசமாக நிற்க வைத்து படம் பிடித்தான். பின்பு தன் செல்போனில் அதை மாற்றி சிறிது நேரம் எதையே செய்தவன். அவர்களிடம் காட்டினான்.

அதில் ஈபிள் டவர் நடுவே சின்னதாக காணப்பட்டது. பெரிய உருவங்களாக ஒருபுறம் அனு மறுபுறம் அப்பு நின்று தங்களின் ஒரு விரலால் அதை தொடுவதுப் போல புகைப்படம் இருந்தது.

அப்பு இதை மற்றவர்ருகளிடம் காட்டினான். தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக வைத்துக் கொண்டான். அப்பு அனு இருவருக்கும் அத்தனை சந்தோஷம்.

அப்புவும் அனுவும் அவர்களிடம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். சிறு வயதில் அப்பு உருவத்தை வைத்து கிண்டல் கேலி செய்தவர்களே அதிகம். “நான் குள்ளமா இருந்தா உனக்கென்னடா பிரச்சனை? உன் வேலய பாரு” என தொடக்கத்தில் சண்டைப் போட்டான்.

அவனை வேலாயுதம் என்று யாருமே அழைத்ததில்லை. “ஏய் குள்ளமணி குள்ளபய்யா” என கிண்டல் செய்தவர்கள்தான் அதிகம். மற்றவரின் குறையை சுட்டிக்காட்டி சந்தோஷப்படும் ஜன்மங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள். மனிதம் குறைந்துக் கொண்டே போகிறது.

“இவன் படிச்சி என்னத்த செய்யப் போறான்?” என கல்வி மறுக்க பட்டது.

பின்பு அவன் வேலைக்கு செல்ல முயற்சிக்கையில் அவனுக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. கிடைத்தாலும் இவனால முடியுமா? என மற்றவர்கள் தீர்மானிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டனர்.

அவன் மேல் அக்கறையுள்ள சிலர் சினிமாவில் முயற்சி செய் என சொன்னார்கள். அவனும் செய்தான்.

இப்படியாக பல இடங்களில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்தான். ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளான்.
“சினிமால நடிச்சிருக்கியா?” கதிர் ஆச்சரியத்துடன் கேட்டான்.


“ஆமா சிறுத்தை, ஏழாம் அறிவு அதுவுமில்லாம தெலுங்கு கன்னடம் ஹிந்தி படத்துல கூட நடிச்சிருக்கேன்.”

“ரியலி . . சூப்பர் . . கிரேட் பா” என கதிர் காவ்யா மற்றும் கிருஷ் வாயை பிளக்க . .

“வருஷத்துக்கு ஒரு படத்துக்கு மேல நான் கமிட் ஆகறதில்ல . யூ சீ நான் ரொம்ப பிஸி” என கால் மேல் காலை போட்டபடி ஸ்டைலாக அமர்ந்தான் அப்பு. அதையும் கிருஷ் கேமரா கிளிக்கியது.

“ஓவரா சீன் போடாத அப்பு” என தொடங்கினாள் அனு “இவன் நடிச்ச சீனெல்லாம் நூறு பேருக்கு மேல நிப்பாங்க. இவன் எங்க இருக்கானே தெரியாது. சில சமயம் குழந்தைங்க கிடைக்கலனா கூட இவன குழந்தையா நடிக்க வெச்சிடுவாங்க” என சிரித்தபடி அனு சொன்னாள்.
 
#10
“வாய மூடு” என முறைத்தான் அப்பு. அதில் கோபமில்லை. மானத்த வாங்காத என்னும் நிலைதான் இருந்தது. அப்போது ஒரு வேன் அங்கே வந்து நின்றது. அதிலிருந்து பொருட்கள் இறக்கப்பட்டன. அப்பு அங்கே சென்றுவிட்டான்.

அனு தொடர்ந்தாள் “இங்க குள்ளமா இருக்கிற எல்லாரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான பிரச்சனதான். நாங்க தலைநிமிர்ந்து நடக்கிறோம். மத்தவங்கதான் எங்க முன்னால தலைகுனியறாங்க. இதை யாரும் உணர மாட்டாங்க. கஷ்டங்கள மனசுல வெச்சிகிட்டு இருந்தா வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போக முடியாது.” என்றாள். வாழ்க்கையின் மீது அவளுக்கு இருந்த தெளிவான பார்வை இருந்தது.

“இப்படி ஒரு சூட்டிங்கலதான் வரதன் சார் அவனை பார்த்து இங்க கூடிட்டு வந்தாரு. இப்பகூட அப்புனு இல்ல யாருக்கும் சினிமா சான்ஸ் வந்தாலும் போயி நடிச்சிட்டு வருவாங்க. வரதன் சார் எதுவுமே சொல்ல மாட்டார்.” என்றாள் அனு.

“நானும் சின்னதுல இருந்து நிறைய கஷ்ட பட்டேன். இங்க வந்த அப்புறம்தான் கௌரவமா இருக்கேன். அப்பு திடீல்னு ஒரு நாள் காதலிக்கறதா சொன்னான். என்னால நம்பவே முடியல” என்றாள் வெட்க புன்னகையுடன் அனு. அவள் அத்தனை அழகல்ல ஆனால் அவள் மனம் மிக மிக அழகானது.

அங்கே வீரபாகு வந்தான். அவன்தான் சர்க்கஸில் உள்ள சிங்கம் புலி போன்ற விலங்குகளை பராமரிப்பவன். அவன் உருவம் கரடுமுரடாக இருந்தது. (இந்த கதை நடக்கும் காலகட்டத்தில் விலங்குகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.)

”வேன்ல என்ன வந்திருக்கு?” காவ்யா கேட்டாள்.
“மிருகங்களுக்கு உணவு” அனு.


அப்பு இறைச்சி துண்டுகளை எடுத்து பெரிய பாக்கெட் போன்ற ஒன்றில் போட்டவன். வீரபாகுவிடம் “நான் கொடுக்கவா?” எனக் கேட்க.

“அப்பு நீ சும்மா இருக்க மாட்டியா?” என வீரபாகு அதட்டினான்.

வீரபாகு சொன்னதை கேட்காமல் அப்பு தன் வேலையில் மும்முரமானான்.

அப்புவிடம் ஒரு விசேஷகுணம் இருந்தது. விலங்குகளை கையாலும் முறை. அவனிடம் பெரும்பாலும் விலங்குகள் அடங்கிவிடும்.

சின்ன வயதில் அவனுக்கு உற்ற நண்பனாய் இருந்தது ஒரு தெரு நாய். அதற்கு மணி என பெயர் வைத்தான். தந்தையின் வெறுப்பு நண்பர்கள் கேலி என்னும் சூழ்நிலையில் வளர்ந்தான்.

தாயின் பாசம் மட்டுமே அவனுக்கு இருந்த ஒரே ஆதரவு அதற்கு அடுத்து அந்த நாய். அதற்கு உணவு கொடுத்தான். அதுவும் அவனையே சுற்றி சுற்றி வந்தது. மற்றவர்களை கண்டால் குறைத்து குதறும் ஆனால் அப்புவிடம் பாசத்தை வெளிப்படுத்தும்.

இந்த உலகில் எனக்கும் உனக்கும் வாழ உரிமை உள்ளது என்பதைப் போல இருவரும் நட்பானார்கள். சர்க்கஸில் குதிரை குரங்கு என சாதுவானவை கூட நிமிடத்தில் நட்பாகிவிட்டது.

அப்பு என்ன மாயம் செய்தானோ தெரியவில்லை. அவன் முதலில் லேசான தொடுதலில் தொடங்குவான் பின்பு மிக அன்பாக வார்த்தைகளை உதிர்ப்பான். ஒரே ஒரு குதிரை மட்டும் தொடக்கத்தில் அடம்பிடித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவனுக்கு கட்டுபட்டு அடிமையாகிவிட்டது.
வீரபாகுவே அசந்துப் போய்விட்டான். சிங்கம் புலியும் கூட அவன் சொல்படி நடக்கும்.


இன்று அவன் இறைச்சி உணவை கொண்டு செல்வது ஒரு சிங்கத்திற்கு. அது வந்து சில வாரங்கள்தான் ஆகின்றது. பெரும்பாலும் அது அடங்காமல் சினத்துடன் கூண்டில் உலாவிக் கொண்டிருக்கும். அதற்கு இருக்கும் கோபத்திற்கு வெளியே வந்தால் என்ன நடக்கும் என கற்பனை செய்யகூட இயலாது.

அப்பு மெல்ல கூண்டருகே சென்றான். அங்கே இறைச்சி துண்டுகளை வைத்தான். அது கண்மூடி படுத்திருந்தது. “ராஜா” என சிங்கத்தின் பெயரை சொல்லி அழைத்தான் அப்பு.

ஒரு முறை கண்ணை திறந்து பார்த்தது. பின்பு கண்ணை மூடிக் கொண்டது.

அதன் செயலைக் கண்டு “என்ன கொழுப்புடா உனக்கு?” என மனதில் நினைத்தவன்.

“உனக்காக என்ன இருக்கு பாரு” என இறைச்சி துண்டுகளை காண்பித்தான். சிங்கத்திற்கு எப்பொழுதும் இறைச்சி துண்டுகள் சிகப்பாக இருந்தால்தான் பிடிக்கும். ரத்த நிறத்தில் இருத்தல் வேண்டும். அது சிங்கத்தின் சுபாவம்.

ராஜா அதைக் கண்டது ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கெத்தாக தன் போஸை மாற்றிக் கொண்டது.

“ஆனாலும் உனக்கு லொல்லுடா” என வாய்விட்டே கூறினான் அப்பு. பின்பு தன் கையை லேசாக இறைச்சி துண்டுகளுடன் உள்ளே நீட்டினான்.

அங்கு இருந்தபடி கிருஷ்ஷை பார்த்து “சிங்கத்தவிட சிறுத்தை புலிக்கு பலம் அதிகம் . . ஆனாலும் சிங்கத்த மட்டும் காட்டுக்கு ராஜானு ஏன் சொல்றாங்க சொல்லுங்க?”

கிருஷ் தெரியாது என உதட்டை பிதுக்கி மற்றவர்களை பார்க்க அவர்களும் தெரியாது என்றனர்.

“அதுக்கு காரணம் அறம். சிங்கம் என்னிக்கும் அறத்தை பின்பற்றும். அதுக்கு பசிச்சா மட்டும்தான் வேட்டை ஆடும். பசிக்கலன பக்கத்துல மான் போனா கூட வேட்டை ஆடாது. ஆனா மத்த புலி சிறுத்தை இதெல்லாம் அப்படி இல்ல” என விளக்கினான்.

அப்பு அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் ராஜா அப்புவின் கையை லபக் என தன் வாயால் கவ்வியது.

அனைவரும் அதிர்ந்து “அப்பு” என சத்தமிட்டனர்.

வட்டமிடும் . . .
 
#12
காதல் சர்க்கஸ் 4

அப்புவின் கையை சிங்கம் தன் வாயால் கவ்வியது. அனைவரும் அதிர்ந்தாலும் அப்பு கொஞ்சமும் அசரவில்லை.

“ராஜா என் கைக்கும் உன் உணவுக்கும் கூடவா வித்தியாசம் தெரியில” என கூலாக அதனோடு பேசினான். மற்றொரு கையால் இறைச்சி துண்டை காண்பிக்க சிங்கம் அதன் வாசனையால் கவரப்பட்டு அதை கவ்வியது.

“குட் பாய்” என அப்பு அதன் பிடரியை தடவிக் கொடுத்தான். அதற்கு அந்த தடவுதல் மிகவும் பிடித்துப் போயிற்று. இன்னமும் அருகில் வந்தது. அப்பு ஒவ்வொரு இறைச்சி துண்டுகளாய் அதற்கு ஊட்டிவிட்டான்.

அவனளவில் அது சிங்கம் என்றோ மிக பெரிய கொடுமையான விலங்கு என்றோ இல்லை. அதுவும் ஒர் உயிர் அதற்கும் அன்பு தேவை. இது மட்டுமே அவனுள் இருந்தது. தனக்கு கிடைக்காத அன்பை பலமடங்காக்கி அனைத்து உயிர்களுக்கும் அள்ளி வழங்கினான் அப்பு.

சிங்கம் முழுவதுமாய் தின்று முடித்ததும் அப்பு நகர முயன்றான். ஆனால் சிங்கம் மீண்டும் அவன் கையை கவ்வியது. “உன்னையே கொஞ்சிட்டு இருந்தா போதுமா? . . உன் பிரெண்டு பசியா இருக்கே பாரு”.என்றான்.

பிறகு நிதனாமாக அதன் வாயில் இருந்து கையை எடுத்தான். அதன் முகத்தை தன் இரண்டு கைகளாலும் பிடித்து கொஞ்சினான். முதுகை தடவிக் கொடுத்தான். அதுவும் அனைத்தையும் ஏற்றது.

சில நொடிகளுக்கு பின் அடுத்த சிங்கத்தை நோக்கி நகன்றான். வீரபாகு வேகமாக சென்று அப்புவை தூக்கி தன் தோளில் அமர்த்திக் கொள்ள மற்ற அனைவரும் அவனை சுற்றிக் கொண்டு சந்தோஷ கூச்சலுடன் ஆரவாரம் செய்தனர்.

இத்தனை நேரம் தன் உயரத்திற்கு இருந்த அப்பு உயரே சென்றுவிட்டதை கண்ட சிங்கம் கர்ஜித்தது. அதுவும் தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தியது போலும்.

அனு கண்கலங்கிவிட்டாள். முதலில் அவள் சிங்கத்தின் செயலால் கலவரப்பட்டாலும் பின்னர் அப்புவின் செய்கையால் நெகிழ்ந்துவிட்டாள். அனைவரும் அவனை கொண்டாடுவதைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைந்தது.

மாலை ஆறரை மணிக்கு கூடாரத்தில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமில்லை. இதைக் கண்ட வரதன் மனம் சோர்வுற்றது.

நடுவே வட்ட வடிவத்தில் அரங்கம் இருந்தது. சுற்றிலும் இருக்கைகள் வட்டவடிவில் படிபடியாக மேல் நோக்கியபடி இருந்தது. ஆங்கிலத்தில் கேலரி என கூறுவார்கள். இருக்கைக்கு நடுவே சிறியதாக நான்கு பக்கம் இடைவெளி இருக்கும். அரங்கத்திற்குள் ஆட்கள் மற்றும் விலங்குகள் வந்து செல்ல.

“ஏழு மணிக்கு தானே ஷோ . . கவலப்படாதீங்க கூட்டம் வரும்” என அனு அவரை தேற்றினாள். அவர் மனம் இன்னும் சரியாகவில்லை.

அனைவரையும் அழைத்தார். ”ஷோ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி . . நான் பேசப் போறேன்” என்றார்.
எப்பொழுதும் இப்படி இல்லையே என்பதைப் போல அனைவரும் அவரைப் பார்க்க பதில் சொல்லாமல் தயாராகச் சென்றார். பின்னர் அன்றைக்கான நிகழ்ச்சி அட்டவணையில் சில மாற்றங்களை செய்தார்.


ஏழு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு அனாதை இல்லத்தில் இருந்து இருபதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. அவர்கள் டிக்கெட் வாங்க வேண்டிய அவசியமில்லை என்றார் வரதன். அடுத்ததாக பொது மக்கள் வந்திருந்தனர். கூட்டம் அதிகமில்லை.

வந்திருந்தவர்களில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம். பல பெற்றோர் தங்கள் செல்போனில் முழ்கி இருந்தனர். அங்கு வந்திருப்பதை அத்தனையாக சிலர் விரும்பவில்லை என்பது அவர்கள் உடல்மொழியில் தெரிந்தது.

வரதன் அரங்கத்தில் தோன்றினார். அவர் தரித்த உடை மற்றும் அலங்காரத்தில் அவர் கம்பீரமாக மிடுக்குடன் காணப்பட்டார். அங்கே குழந்தைகள் அதிகம் என்பதால் அவருக்கு ஒரு வகையான மனத்திருப்தி. நாளைய இந்திய பிரஜைகள் குழந்தைகள். அவர்களுக்கு அனைத்தும் தெரிய வேண்டும் என நினைத்தார்.

முதல் வரிசையில் கதிர் காவ்யா மற்றும் கிருஷ் அமர்ந்திருந்தனர். கதிர் மற்றும் காவ்யா தங்கள் செல்போனில் பிடித்தவற்றை ரெகார்ட் செய்ய முனைந்தனர். கிருஷ் லைட்டிங் எபக்ட்டை சிலவற்றை மாற்றினான். இப்பொழுது அரங்கம் அழகாய் மிளிர்ந்தது. தன் கேமராவில் அனைத்தையும் அள்ள நினைத்தான்.

“அனைவருக்கும் மாலை வணக்கம்” எனத் துவங்கினார் வரதன்.

“குழந்தைகளா உங்களுக்கு சர்க்கஸ் பிடிக்கும்தானே?” என அவர் கேட்க

“ஆமா” என சில குழந்தைகள் சத்தமாக பதிலளித்தன. சில பெரியவர்கள் ஸ்வாரஸ்யம் இல்லாமல் பார்த்தனர்.

“வெரி குட் . . சர்க்கஸ்ல உங்களுக்கு என்ன பிடிக்கும்?”

“ஜோக்கர்” என ஒரு குழந்தை சொன்னது. அடுத்தது
“சிங்கம்” “யானை” என ஒவ்வொன்றாக சொன்னது. அடுத்த நொடி அக்குழந்தைகளுக்கு குட்டி பரிசு ஒன்றுக் கொடுக்கபட்டது.


விடையளித்தால் பரிசு கிடைக்கும் என தெரிந்ததும் அனைவரும் கவனிக்கத் தொடங்கினார்கள்.

“பரிசு பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்” என வரதன் சொல்ல அனைவரும் கைத்தட்டி பாராட்டினார்கள்.
அவரின் அடுத்த கேள்விக்காக அனைவரும் காத்திருந்தனர்.


“சர்க்கஸ் இதுக்கான தமிழ் சொல் என்ன ?” எனக் கேட்டார்.
அரங்கமே மௌனமாகியது. சிலர் கூகுளில் தேடத் துவங்க . .


“குழந்தைகளுக்கு காப்பி அடிக்க நாமே சொல்லிதரக் கூடாது” என்கிற வார்த்தைகள் அவர்களின் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

“இந்த ஸ்டேஜ் அதாவது அரங்கம் எந்த வடிவத்துல இருக்கு?” என வரதன் குழந்தைகளைக் கேட்டார்.

“சர்க்கிள்”

“குட் தமிழ்ல சொல்லுங்க?”

“வட்டம்” என குரல்கள் வந்தன.
 
#13
“ஸ்டேஜ் அதாவது அரங்கம் . . வட்டமான அரங்கம் . . வட்டரங்கு கூத்து இதுதான் சர்க்கஸ்கான சரியான தமிழ் வார்த்தை . . திரும்ப சொல்லுங்க” என்றதும்

“வட்டரங்கு கூத்து” என குழந்தைகள் சத்தமாக பதில் சொன்னது.

அடுத்ததாக “சர்க்கஸின் தந்தை என கூறப்படுபவர் யார்?” வரதன் கேட்க

“இவர் என்ன பாடம் நடத்தராரு? இப்படி பண்ணினா இருக்கிற கூட்டமும் போயிடும்” கவலைப்பட்டான் வீரபாகு. அனைவர் மனதிலும் இந்த எண்ணம் இருந்தது.

ஆனால் அப்பு அனு மட்டும் வரதன் இப்படி செய்ய பலமான காரணம் இருக்கும் என நம்பினர். அதை வெளிக்காட்டவில்லை.

“பிலிப் ஆஸ்லிதான் சர்க்கஸின் தந்தை என அழைக்கப்படுபவர்” என அவர் அருகே கோமாளி வந்து பதிலளித்தான். தன் வெறும் கையை அப்படியும் இப்படியுமாய் ஆட்ட பரிசு பொருள் வந்தது. அதை கோமாளிக்கு கொடுத்தார்.

அப்பொழுது இன்னும் இரண்டு கோமாளிகள் வந்தனர். அவர்கள் வரும் பொழுதே விழுந்து எழுந்து வரவே . . குழந்தைகள் கைத்தட்டி ரசித்து சிரித்தனர்.
மூவரும் அந்த பரிசு பொருட்காக அடித்துக் கொண்டனர்.


முதல் கோமாளியிடம் இருந்து இரண்டாமவன் பரிசை பரித்தான். முதலாமவன் இரண்டாமவனை அடிக்க எத்தனிக்க . . இரண்டாம் கோமாளி பரிசை கீழே தவர விட்டான். அதை எடுக்க குனிந்துப் பொழுது அவன் பின்னே மூன்றாம் கோமாளி நின்றிருந்தான்.

இப்பொழுது முதலாமவன் அடித்த அடி மூன்றாம் கோமாளி மேல் பட்டுவிட்டது. மூன்றாமவன் முதலாமவனை அடிக்க முயல இரண்டாமவன் எழ அவன் மேல் அடி விழுந்தது.
இப்படியே மாற்றி மாற்றி மூவரும் கோமாளித்தனம் செய்து அனைவரையும் சிரிக்க வைத்தனர்.


அப்பொழுது பலத்த ஓசை எழுந்தது. அங்கே துள்ளளுடன் அலங்கரிக்கபட்ட குதிரை தன் முன்னங் கால்களை இசைக்கு ஏற்ப ஆட்டியபடி வந்தது. அதன் மேல் அப்பு எந்த பிடிமானமும் இல்லாமல் நின்றிருந்தான். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் இரண்டு மூன்று முறை காற்றில் சுழன்று தரையில் இறங்கினான்.

குதிரை முதல் மூன்று கோமாளிகளை முட்ட துரத்தியது. மூவரும் உருண்டு பிரண்டு ஓட்டமிட்டனர். அப்பு குதிரையை பிடித்து இழுத்து நிறுத்தினான்.

வரதன் குழந்தைகளிடம் “உங்களுக்கு பிடிச்ச கோமாளி யாரு?” எனக் கேட்டதும். குழந்தைகள் ஆளுக்கொன்றாய் பதிலளித்தது.

“இப்படி சொல்லாம பேர் சொல்லுங்க?” என்றதும்
குழந்தைகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.


“சர்க்கஸ்ல மூணு வகையான கோமாளி இருக்காங்க . . உங்க ஸ்கூல்ல தனித்தனியா டீச்சர் இருக்காங்க இல்லயா? அது மாதிரி” என்றவர்.

“ஓஓ. .” என குழந்தைகளின் ஆச்சரியக் குரல்கள் கேட்டன.

“வெள்ளைக் கோமாளி இவன் பல சாகசங்களைத் தனியாக செய்யும் திறமை வாய்ந்தவன்.

சிகப்பு கோமாளி மற்ற கலைஞர்களுடன் சேர்ந்து திடீர் கோமாளித்தனம் செய்து சிரிப்பு மூட்டுவான்.

கேரக்டர் கோமாளி இவர் எந்த வேஷத்தையும் கையாண்டு மற்றவரை மகிழ்விப்பார். அவர்களில் யார் எந்த கோமாளி என தன்னோடு இருப்பவர்களில் சுட்டிக் காட்டினார்.

சர்க்கஸை சேர்ந்தவர்களுக்கு வரதனுக்கு என்னவாயிற்று என கவலைப்பட்டனர்.

வரதன் தொடர்ந்தார் “இந்த கோமாளிகள் முகத்துக்கு ஏன் மேக்அப் போட்டு முகத்தை மூடிட்டாங்க சொல்லுங்க?”

“சிரிக்க வைக்க” என பதில் வந்தது.

“இவங்க குள்ளமா இருக்காங்க இல்லயா? நீங்க கிண்டல்
பண்ண அவங்க முகம் சேட் ஆயிடும் இல்லயா?”


“ஆமா”

“அது தெரியக் கூடாதுனு மேக்அப் போட்டிருக்காங்க. நீங்கலாம் இனி யாரையும் கிண்டல் கேலி பண்ணக் கூடாது சரியா? அவங்களும் பாவம்தானே” என்றார்

சில குழந்தைகள் “சரி” என்றன.

இதற்கு முன்பு சர்க்கஸ் பார்த்திராத கதிர் காவ்யா மற்றும் கிருஷ் ரசித்த வண்ணம் இருந்தனர். கிருஷ் நிறைய கிளிக்கினான்.

அடுத்ததாக அரங்கில் அனு தோன்றினாள். அனு பெண் கோமாளி. சர்க்கஸில் பெண் கோமாளிகள் மிகவும் குறைவு. மற்ற கோமாளிகள் குதிரையுடன் வெளியேறினர். அனு கையில் ஆப்பிள் வைத்திருந்தாள். அதை அவள் சாப்பிட முயல அப்பு பரித்தான். அவள் தலையில் அதை வைத்தான். அவளின் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டினான். கைகளிலும் ஆப்பிள்களை வைத்தான்.

சற்று பின்னோக்கி சென்று அவள் மேல் ஒரே சமயத்தில் பல கூர்மையான கத்திகளை எரிந்தான். மிகச் சரியாக பல கத்திகள் அத்தனை ஆப்பிள்களையும் வெட்டியது. ஒரு கத்தியின் குறி தவறினாலும் அவளுக்கு ரத்த காயம் நிச்சயம்.

அடுத்து நெல்லிகாயை எடுத்து தலையில் வைத்தவள் “இப்பொழுது கத்தியை வீசு” என அப்புவிடம் சொன்னாள். அனைத்தும் செய்கை மட்டுமே வசனம் இல்லை.

இதைக் கண்டு அப்பு பயந்து நடுங்கி தடாலென விழுந்தான். அரங்கம் சிரிப்பில் முழ்கியது. அனு அவனை எழுப்பி நிற்க வைத்தாள். அவன் துணியைப் போல துவண்டு விழுந்தான்.
ஒரு அடிக் கொடுத்து நிற்க வைத்தாள்.


இப்பொழுது அவன் நின்றான். அவன் கையை நீட்டினாள். பொம்மைக்கு கீ கொடுப்பது போல கையை சுற்றினாள். அதற்கு ஏற்றாற் போல பிண்ணனி சத்தம் வந்தது.

இரண்டு கைகளையும் நீட்டி அவனை முன்னே நடக்க வைத்தாள். அவனும் பொம்மை போல கைகளை நீட்டியது நீட்டியபடி தன் காலை முன்னே வைத்து அப்படியே நின்றிருந்தான்.

அவன் தலையில் னங் னங்கென குட்டினாள். அவன் சுயநினைவுக்கு வந்ததுப் போல நடித்தான். மீண்டும் நெல்லிகாயை தலையில் வைத்துக் கொண்டவள். குறி பார்த்து அடி என கட்டளையிட்டாள்.

அவன் அரங்கைவிட்டு ஓட முயன்றான். குழந்தைகள் ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து குதூகலித்தன. இறுதியாக பயந்து நடுங்கியபடி அப்பு அனுவை பார்க்காமல் மறுபக்கம் திரும்பி நடுங்கும் கைகளுடன் கத்தியை வீசீனான். அனைவரும் என்ன நடக்குமே என நடுக்கமாக பார்த்தனர்.

முதல் இரண்டு கத்தி எங்கெங்கோ சென்றது. அனைவரையும் பயத்தில் உரைய வைத்தான் அப்பு. பின்பு கத்தி வீச அந்த சிறிய நெல்லிக்கனியை கத்தி மிகச்சரியாக இரண்டாக பிளந்தது.

அனைவரும் விண்ணை பிளக்கும் வகையில் கரகோஷம் எழுப்பினர். வரதன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.

அடுத்ததாக நான்கு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அரங்கத்தை அலங்கரித்தது.

வட்டமிடும் . . .
 
#15
காதல் சர்க்கஸ் 5

நான்கு யானைகளும் அரங்கத்தை வட்டமடித்து அனைவருக்கும் வந்தனம் கூறியது. முதல் யானை மேல் ஒய்யாரமாய் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். யானையின் தும்பிக்கை மற்றும் முகத்தில் அழகான வர்ணங்கள் தீட்டப்பட்ருந்தன. யானையின் கால்களில் பெரிய பெரிய சலங்கைகள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பெரிய மரத்தினாலான முக்காலி போடப்பட்டிருந்தது.. அதற்கு அடுத்து அதைவிட சிறிய அளவிலான ஐந்து முக்காலிகள் வைக்கப்பட்டிருந்தன.

முதல் யானை பெரிய முக்காலி மேல் ஏறி அப்படியே சிறியவற்றில் காலை வைத்தபடி பாலத்தினை கடப்பதுப் போல மறுபக்கம் இறங்கியது. முதல் யானையின் வாலை பிடித்தபடி மற்றொன்று அதன் வாலை அடுத்தது என அனைத்தும் ஏறி இறங்கியது.

சிறிய முக்காலி யானையின் ஒரு பாதத்தைவிடவும் சிறியதாக இருந்தன. அடுத்ததாக ஒவ்வொரு யானையும் சிறிய முக்காலி மேல் தன் முன்னங் காலை வைத்தன. பின் முன்னங்கால் மடிப்பில் தன் மற்றொரு முன்னங்காலை வைத்து தன் உடல் முழுவதையும் அப்படியே தூக்கின.
தன் பெரிய உடம்பின் மொத்த பாரத்தையும் அந்த சிறிய முக்காலியில் பதிந்தன. பலத்த கரகோஷங்களுடன் அவை விடைப் பெற்றன.


ட்ரப்பீஸ் (TRAPEZE) என்னும் சாகசத்தை செய்ய அடுத்ததாக வீரர்கள் வந்தனர். இது தரையில் இருந்து இருபத்தைந்து அடிக்கு மேல் செய்யும் சாகசம். மேலே இருபக்கத்திலும் சிறிய கட்டை மற்றும் வளையம் என விதவிதமாக கயிற்றில் கட்டப்பட்டிருந்தது.

அதைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் லாவகமாக பறப்பதும் குட்டிக்கரணம் அடிப்பது என பல சாகசங்களை ஒய்யாரமாக செய்து அசத்தினர். ஒருவரைப் பற்றி மற்றொருவர் பறப்பது.

குழுவாக அவர்கள் செய்த சாகசம் பார்ப்பவர் மனதை வெகுவாக கவர்ந்தது. இதில் ஒருவர் செய்யும் சின்ன தவறு மொத்த சாகசத்தையே குலைக்கும் என்பதால் அனைவரும் கவனமாக செயல்பட்டனர்.

அடுத்து வீரபாகுவின் கட்டளையை ஏற்று சிங்கமும் புலியும் நாய்க்குட்டிப் போல சொன்னதை செய்தன. குரங்கும் நாயும் ஒரு சக்கரக் சைக்கிளை ஓட்டின.

திடீலென அரங்கம் முழுதும் கும்மிருட்டானது பிரம்மாண்ட ஒருண்டையினுள் இரண்டு மோட்டார் சைக்கிள் சீறி பாய்ந்து ஒரே வேகத்தில் ஓடியது.

பதற வைத்தும் சிரித்தும் சிலிர்த்தும் என அனைவர் நெஞ்சையும் கொள்ளைக் கொண்டது லியோ சர்க்கஸ் நிகழ்ச்சிகள். இறுதியாக லியோ சர்க்கஸில் பணியாற்றுபவர் அனைவரும் வரிசையாக அணிவகுத்து வந்தனர்.

முதலில் வீரபாகு நின்றான் கையில் லியோ சர்க்கஸ் கொடியை பிடித்த வண்ணம். அவனை அடுத்து அப்பு அனு என மற்றவர்கள் நின்றனர். கடைசியாக வரதன் நின்றார்.

வரதன் “அனைவருக்கும் மிக்க நன்றி. எங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறி வணங்கினார்.

அனைவரும் எழுந்து நின்று கரகோஷமிட்டனர். பலத்த கைதட்டலுடன் அன்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது. பார்வையாளர்கள் முகத்தில் தெரிந்த நிறைவு லியோ சர்க்கஸ் குழுவை மகிழ்வித்தது.

கதிர் கிருஷ் மற்றும் காவ்யா நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரிடமும் விடைப்பெற வந்தனர். கதிர் தன் மகிழ்ச்சியை அடக்க இயலாமல் அப்படியே அப்புவை தூக்கினான் “கலக்கிட்ட அப்பு” என்றான். பின்பு ஒவ்வொருவரையும் தனிதனியே பாராட்டினான்.

ஒவ்வொரு கலைஞனுக்கும் அவனின் கலை அல்லது படைப்பை மற்றவர் பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை. புகழ் பாராட்டு என்பது ஒருவகையான போதை. ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் ருசிக்க தூண்டும். இது ஆரோக்கியமான போதை. கலைஞனை நல்ல படைப்பை படைக்க உதவும்.

கதிர் எப்பொழுதும் தன் உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாதவன். கிருஷ் மற்றும் காவ்யா அவனின் செயலை கண்டு அசந்துப் போனார்கள். அவர்களும் மொத்த லியோ சர்க்கஸ் குழுமத்து நபர்களை தனிதனியே பாராட்டினார்கள். மூவரும் அனைவரோடும் செல்பீ எடுத்துக் கொண்டனர்.

காவ்யா ஒருபடி மேலே போய் குரங்கு குதிரை யானை என அனைத்தோடும் செல்பீ எடுத்துக் கொண்டாள். அப்பு சிங்கத்தோடு செல்பீ எடுத்துக் கொள்ள அழைத்தான். “அதுவே ஷோ முடிச்சி பசில இருக்கும். நான்தான் டின்னரா அதுக்கு . . ஆள விடுங்கபா” என எஸ்கேப் ஆனாள். ஆனால் அனைவரும் அவளை விடாமல் கலாய்த்தபடி இருந்தனர்.

வரதன் அவர்கள் பத்திரமாக வீட்டுக்குச் செல்ல ஏற்பாடு செய்தார்.

“நீங்க எடுத்த போட்டோவ எனக்கு வாட்ஸ்அப்ல அனுப்புங்க” என அப்பு கிளம்பும் தருவாயில் நூறாவது முறையாக அன்பு கட்டளையிட்டான்.

“உங்க கல்யாண இன்விடேஷன் அனுப்புங்க . . மறந்த கொன்னுடுவேன்” என உரிமையாக அனுவை மிரட்டினாள் காவ்யா. அனுவும் வெட்கத்தோடு சரியென்றாள்.

அப்பு “இன்றைய கம்பூயட்டர் உலகத்துல சர்க்கஸ் மிக சாதாரண ஏளனமாகூட இருக்கும். சர்க்கஸில் டெலிட் அண்ட் பேக்ஸ்பேஸ் பட்டன் சும்மா சும்மா பயன்படுத்த முடியாது. என்னடா குள்ளன் கம்ப்யூட்டர் வார்த்தை பயன்படுத்தரான் நினைக்காதீங்க. எனக்கும் கொஞ்சம் கம்ப்யூட்டர் தெரியும்.” என்றான் சிரித்தபடி.

தொடர்ந்து வரதன் “கணவன் மனைவி குழந்தை இப்படி குறைவான நபர்கள் இருக்கும் குடும்பத்துல நிறைய பிரச்சனை மனஸ்தாபங்கள் வருது. இங்க பலதரபட்ட எத்தனை எத்தனை மனிதர்கள் விலங்குகள்னு இருக்கு . . நீங்களே பாத்தீங்க. அப்ப எத்தனை நிறைவான நிர்வாகம் தேவை” என்றார்.

அப்பு “ இங்க இருக்கிற விலங்குகளும் சரி மனிதர்களும் சரி குழுவாதான் செயல்படுறாங்க. ஒருவர் மற்றொருவருக்கு பக்கபலமா இருக்காங்க. கவனம் எங்கள் தாரகமந்திரம் உஙகளோட கைதட்டலோ விசிலோ கிண்டலோ எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. கவனச்சிதறல் எங்களை சிதறடிக்கும். கர்மத்திலேயே கண்ணாயிருப்போம்.

அடுத்து எங்கள் விடாமுயற்சி. எங்களுடைய பயிற்சி முயற்சி இரண்டும் வெற்றியை கொடுக்குது. நீங்க பார்த்த சில நிமிட சாகசத்துக்கு பல வருட பயிற்சித் தேவை.
 
#16
இதெல்லாம் அத்தனை சுலபம் இல்ல. நான் சொன்னதெல்லாம் பெரிய பெரிய அறிஞர் சொன்னது. சர்க்கசிலும் பாடம் கற்கலாம். சர்க்கஸில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். அவங்களையும் உலகம் மதிக்கணும்” என்றான்.

கிருஷ் “ எனக்கு சர்க்கஸ் பத்தி இத்தன நாள் எதுவும் தெரியில ஆனா உங்க உழைப்புக்கு ஈடுஇணையே இல்ல . . வெல்டன் சார்” என்றான். கதிர் காவ்யாகூட மெய் மறந்து போயினர்.

லியோ சர்க்கஸ் மூவருக்கும் பிரியா விடைக் கொடுத்தது. பல நாள் அல்லது பல வருடம் பழகினாலும் ஏனோ சிலரோடு மனம் ஓட்டாது. ஆனால் இங்கு சில மணி நேர பழக்கம் அவர்களை மனதளவில் பிரிக்க முடியாமல் இணைத்துவிட்டது.

மனமே இல்லாமல் மூவரும் கிளம்பினார்கள். இந்த ஒரு நாள் அனுபவம் அவர்கள் வாழ்க்கையின் இறுதி நொடிவரை பசுமையாய் இருக்கும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.

இரவு பனிரெண்டு மணிக்கு வீட்டை அடைந்தனர். காலையில் காட்டு பகுதி வழியாக சென்றதால் சர்க்கஸ் இருந்த இடம் சரியாக தெரியவில்லை. இப்போது சாலை மார்க்கமாக வீட்டை அடைந்தனர். வீட்டிலிருந்து அருகில்தான் உள்ளது என தெரிந்தது.

கிருஷ்ஷை கதிர் கைதாங்கலாக அழைத்து வந்தான். கிருஷிற்கு வலியும் குறைந்திருந்தது. அவன் இயல்பாகவே இருந்தான். தரையில் காலை ஊன்றினால் மட்டும் வலி எடுத்தது. இரண்டு நாட்கள் மருந்து உட்கொண்டால் அதுவும் சரியாகிவிடும்.

கிருஷ் மற்றும் அவன் சகாக்கள் காட்டுப் பகுதிக்கு சென்ற காரை காவ்யா தந்தை தன் ஆட்களைவிட்டு எடுத்து வந்துவிட்டார். கிருஷினால் இரவு சரியாக உறங்க இயலவில்லை.

அதிகாலை ஜன்னலை திறந்து இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்தான். அறை கதவு தட்டும் ஓசை கேட்கவே “கம் இன்” என்றான்.

கதவை திறந்து கதிர் டிரேயில் காப்பி மற்றும் காலை உணவுடன் வந்தான். “நானே வருவேன் நீ எதுக்கு இதெல்லாம் எடுத்துட்டு வரணும்” என உரிமையுடன் கோபித்தான் கிருஷ்.

கதிர் “நீ சும்மா படி ஏறி இறங்க வேண்டாம். என் பிரெண்டுக்கு நான் கொண்டு வரேன். இதுல என்ன இருக்கு? கால் வலி எப்படி இருக்கு?” கேட்டான்.

“மச் பெட்டர் . . பிரஷ் பண்ணிட்டு வரேன்” என குளியறைக்குள் சென்றான்.

கிருஷ் வரும்வரை என்ன செய்வதென்று தெரியாமல் கதிர் அங்கிருந்த கிருஷின் கேமிராவை எடுத்து பார்த்த வண்ணம் இருந்தான்.

அதில் அதிகமாக சர்க்கஸ் நிகழ்ச்சி படங்கள் இருந்தன. அப்படியே ஒன்றொன்றாக பார்த்த வண்ணமிருந்தான்.
கிருஷ் வெளி வந்தான். கதிர் அவனுக்கு சுடச்சுட காப்பியை கொடுத்தான். காலை உணவுக்கு ஏற்பாட செய்ய எத்தனிக்க கிருஷ் வேண்டாம் என்றான்.


“நேத்து நீ அங்கபிரதஷணம் பண்ணி என்ன போட்டோ எடுத்த காட்டு” கதிர் மீண்டும் கேமிராவை நோண்ட தொடங்கினான்.

“சாருக்கு கிண்டலா இருக்கு” என்றபடி கிருஷ் அவனை முறைத்து கேமிராவில் தான் எடுத்த போட்டோவை காண்பித்தான்.

அதில் சிறு புழுக்கள் அரிதான எறும்பு வகைகள் என சின்ன சின்ன ஜீவராசிகள் வித்யாசமான கோணங்களில் இருந்தன. பிரமித்து போனான் கதிர். இவற்றையெல்லாம் அவன் கண்டதே இல்லை. சில போட்டோக்கள் அத்தனை அழகாய் இருந்தது.

“உங்க எஸ்டேட்ல இதை மாதிரி நிறைய இருக்க வாய்ப்பிருக்கு. சன்ரைஸ் சன்செட் இந்த ரெண்டு வேளையும் போட்டோகிராபிக்கு கோல்டன் டைம் அதனால . .” என கிருஷ் தொடங்க

“கால் சரியாகற வரை எங்கயும் கிடையாது” என கதிர் முடித்தான்.

“அதெல்லாம் முடியாது . .” என கிருஷ் பேசிக் கொண்டிருக்கையில்

காவ்யா தந்தை சத்யமூர்த்தி அறைக்கு வந்தார். கதிர் வெளியேர முயன்றான். “இருப்பா கதிர் . . முக்கியமான விஷயம் பேசணும்” என்றார் சத்யமூர்த்தி.

“கிருஷ் இன்னிக்கு ராத்திரி பிளைட்ல உன் அம்மா அப்பா வராங்கபா” என்றவர் “கதிர் இன்னிக்கு நைட் நீ அவங்களை ஏர்போட்ல இருந்து கூடிட்டு வந்திடு” என்றார். கதிரும் சரி என்றான்.

“எதுக்கு இப்ப அம்மா அப்பா இங்க வராங்க?” கிருஷ் துணுக்குற்றான்.

“உனக்கும் காவ்யாக்கும் கல்யாணம் முடிவு பண்ணதான். உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு அப்புறம் என்ன?” என்றார் அர்த்தமுடன்.

சில நொடிகள் சிந்தித்த கிருஷ் “நான் காவ்யாகிட்ட தனியா பேசணும்” என்றான்.

“தாராளமா ரெண்டு பேரும் பேசுங்க” என வெளியேறிய சில நொடிகளில் காவ்யா உள்ளே வந்தாள்.

காவ்யா வந்ததும் “கதவை மூடு கதிர்” என்றான் கிருஷ்.
கதிர் தான் வெளியே சென்று கதவை மூட முற்பட “கதிர் உள்ள வந்து கதவ மூடு”


கதிர் ஒரு நொடி தயங்கியபின் கிருஷ் சொன்னதை செய்தான்.

கிருஷ் குரலை சரி செய்தபடி “உங்க காதலை எப்ப அங்கிள்கிட்ட சொல்லப் போறீங்க” என சாதாரணமாக இருவரையும் பார்த்துக் கேட்டான்.

கதிரும் காவ்யாவும் அதிர்ந்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“உனக்கு எப்படி . .” காவ்யா தட்டுதடுமாறி கேட்க

“இதுக்கு சீ.பீஐ. தேவையில்ல .. இந்த கிருஷ் போதும்” என்றான் புன்முறுவலுடன்.

வட்டமிடும் . . .
 
#18
காதல் சர்க்கஸ் 6

“அப்ப நிஜமாவே ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?” கிருஷ் முகத்தில் ஏமாற்ற சாயலோடு அதிர்ச்சி படர கேட்டான்.

“நீ சும்மா கேட்டயா? . . நான்தான் உளறிட்டேனா?” தலையில் கைவத்து அமர்ந்துவிட்டாள் காவ்யா.

“ஆஹா ஹா . . . இதைதான் போட்டு வாங்கறதுனு சொல்வாங்க . . அது என்ன மூவி வடிவாலு அண்ட் பார்த்திபன்?” என கிருஷ் காவ்யாவிடம் தீவிரமாக சிந்தித்ப்பதைப் போல கேட்டான்.

“இப்ப படம் பேரு ரொம்ப முக்கியம் . .” என பெருமினாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை மேலும் “சொல்லிடேனே இப்ப என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ” என மனதளவில் காவ்யா புலம்பினாள்.

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா காவ்யா? ஐ“ம் மேட்லி இன் லவ் வித் யூ” என கிருஷ் ஒரு காலை தரையில் மடக்கி மண்டியிட்டபடி இரண்டு கைகளையும் விரித்து காதலர்களுக்கே உரிய தோரணையில் கூற

அதிர்ந்துவிட்டாள் காவ்யா “கிருஷ் நான் கதிரை லவ் பண்றேன். நீ மரியாதையா எனக்கு காவ்யாவ பிடிக்கலனு அப்பாகிட்ட சொல்லிட்டு யூ.எஸ். கிளம்பி போ. . புரிஞ்சுதா?” என்றாள் கோபமாக கண்ணீர் எட்டிப் பார்க்க.

“நோ சான்ஸ் பியூட்டி . . நான் உன்னதான் கல்யாணம் பண்ண போறேன்” என்றான் கிருஷ் எழுந்து கட்டிலில் அமர்ந்துக் கொண்டே

“கிருஷ். . . வேணா” என பல்லை கடித்தபடி காவ்யா கிருஷின் சட்டையை பிடிக்க

“காவ்யா . . கிருஷ் நடிக்கிறான்னு கூடவா புரியல” என்ற கதிர் கிருஷ்ஷை காவ்யாவிடமிருந்து விடுவித்தான்.

“போடா . . பயந்துட்டேன்” என காவ்யா அழுதேவிட்டாள்.

“உன் காதல் உண்மையான காதலா என யாம் சோதித்தோம் மகளே” என கிருஷ் கூலாக பதிலளிக்க

“அடிங்க . . இங்க நாங்க டென்ஷன்ல இருக்கோம் . . சோதிக்றாராம்” என தலையணை எடுத்து கிருஷ்ஷை அடிக்க முற்பட்டவளை மீண்டும் கதிர் தடுத்தான்..

“ரெண்டு பேரும் சீரியஸா இருக்கீங்களா?” என கதிர் சீற்றத்துடன் கத்தினான்.

“கோபமா இருக்கும் போது பிரச்சனைக்கு என்னிக்குமே தீர்வு கிடைக்காது புரோ. கொஞ்சம் கூலா யோசி . . நீங்க இந்த பிராப்ளம்ல இருந்து ரிலாக்ஸ் ஆகணும்னு தான் இதெல்லாம் சொன்னேன்” என்றான் கிருஷ்.

அவனின் வார்த்தைகளில் இருந்த உண்மை நிலை அவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால் மனம் ஒரு குரங்கு ஆயிற்றே. எதை நினைக்க வேண்டாம் என அணைப் போடுகிறோமோ அதை மட்டுமே சுற்றி சுற்றி வரும். அந்த நிலையில்தான் கதிர் மற்றும் காவ்யா இருந்தனர்.

“நாளைக்கு காலையில நாம மூணு பேரும் சும்மா வெளியில போறமாதிரி கிளம்புறோம். நேர கோயிலுக்கு போயி அங்க உங்க கல்யாணம் நடக்குது. எப்படி பிளான்?” கிருஷ் சொன்னவுடனே சம்மதமாய் காவ்யா தலையசைத்தாள்.

“காவ்யா அப்பா அம்மா சம்மதம் இல்லாம எங்க கல்யாணம் நடக்காது” கதிர் பதில் திடமாக வந்தது.

“கிழிஞ்சிது” என கிருஷ் முணுமுணுக்க

“கதிர் அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல” காவ்யா எடுத்துரைத்தாள்.

“இல்ல காவ்யா பணத்துக்காக உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேனு தான் எல்லாரும் சொல்லுவாங்க. இதுல என் அம்மா அப்பா அக்கா வாழ்க்கையும் சேர்ந்திருக்கு. அதுமட்டுமில்ல எனக்கும் கௌரவம் இருக்கு” என்ற கதிரின் தீர்க்கமான பேச்சுக்கு காவ்யாவும் கிருஷ்ம் வாயடைத்துப் போனார்கள்.

காவ்யா கையை பிசைந்தபடி இருந்தாள். அவளுக்கு நன்றாக தெரியும் அவள் அப்பா கதிரை மாப்பிள்ளையாக ஏற்க மாட்டார். அவருக்கு பணம் பதவி கௌரவம் இதெல்லாம்தான் முக்கியம்.

கதிரும் குழப்ப ரேகையுடன் அமர்ந்துவிட்டான். அப்படியே மனதில் நெருடிய கேள்வியை கேட்டும்விட்டான் “கிருஷ் எப்படி நாங்க லவ் பண்றதை கண்டுபிடிச்ச?”

“ஆமா எப்படி?” காவ்யாவும் சேர்ந்துக் கொண்டாள். “நாங்க வெளியில லவ் பண்றதை காட்டிக்கவே மாட்டோம். அதுவும் அப்பா அம்மா முன்னாடி நான் கதிரை கொஞ்சம் அதிகாரத்தோட வேலை வாங்குவேன். அவங்களுக்கு சந்தேகம் வரக் கூடாதுனு. அவங்களுக்கு தெரிஞ்சா கதிர் வேலையும் போயிடும்”

“கண்ணு இருக்கே அதுவும் ஒருவகையான லென்ஸ்தான். நமக்கு பிடிச்சவங்களை பார்த்ததும் ஒரு அழகான உணர்வை பிரதிபலிக்கும்.” கிருஷ் கூற

கதிர் தோளை குலுக்கி ஒன்றும் புரியவில்லை என்பதாய் சொல்ல

“நாள் முழுக்க கதிர்க்கு வேலை இருக்கு. அவனுக்கு ரெஸ்ட் வேணும்னு தானே காவ்யா நேத்து நீ டிரைவ் பண்ணே . . கதிர் பின்னாடி உட்காந்ததும் ரியர் மிரர்ல சைட் அடிச்சான் . . நான் பார்த்தேனே” என சிறுபிள்ளைப் போல கிருஷ் சொல்ல

“ஏண்டா சைட் அடிச்சே?” என்பதாய் காவ்யா செல்லமாய் முறைத்தாள். இதற்கு கதிர் என்ன பதில் சொல்ல முடியும்? அசடுவழிந்தான்.

“கதிருக்கு யாருக்கும் தெரியாம சாப்பாடு பரிமாறினது. இப்படி இன்னும் நிறைய இருக்கு” என்ற கிருஷ் “ சரி உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க கேட்கலாம்” என மஞ்சத்தில் ரங்கநாதர் கோலத்தில் சாய்ந்துக் கொண்டான்.

“பெருசா ஒண்ணுமில்ல லவ் அட் பஸ்ட் சைட்டுதான்” என்றான் கதிர்.

“திருக்குறளைவிட சின்னதா ஒரு லவ் ஸ்டோரியா?” கிருஷ் கேட்க மற்ற இருவரும் சிரித்தனர். கதிர் காவ்யா மனது வெப்பம் வெகுவாக தளர்ந்திருந்தது.

கதவு தட்டும் ஒசைக் கேட்டு கதிர் போய் கதவை திறந்தான். சத்யமூர்த்தி புயலாய் உள்ளே வந்தவர் “மாப்பிள்ள வர்ற வியாழக்கிழமை நல்ல நாளா இருக்கு . . அன்னிக்கே நிச்சயதார்த்தம் வெச்சிக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” என கிருஷ்ஷை கேட்டார்.

“நீ என்ன சொல்ற கதிர்” என கிருஷ் கிண்டலான பார்வையோடு கேட்டான். ஒரு நொடி கதிர் ஆடிப் போய்விட்டான்.

எரிச்சலை அடக்கியபடி புன்னகைக்க முயன்று தோற்று பின் தன் செல்போனில் முகத்தை புதைத்துக் கொண்டான். ஏதோ தோன்றியவனாய் “சார் வியாழக்கிழமை தொழிலதிபர் காயத்ரி தேவியோட டீ எஸ்டேட்டை நீங்க வாங்க போற டீல் சைன் பண்ணப் போறீங்க” என சத்யமூர்த்தியிடம் சொன்னான்.

கிருஷ் மனம் முகம் தெரியாத காயத்ரி தேவிக்கு ஜே போட்டது. சத்யமூர்த்தி மட்டும் “அட ஆமா . . இப்ப என்ன பண்றது?” என தனக்குதானே கேட்டார்.

“அவசரமில்ல அங்கிள் என் கால் முதல்ல சரியாகட்டும். இப்படியே கட்டோட இருந்தா ஓடியாட முடியாது. பாக்கரவங்களும் என்ன நினைப்பாங்க?” என்றான்.

“அதுவும் சரிதான்” புயலென வந்தவர் அடிபிரதஷணம் வைத்து சென்றார்.

“கதிர் இங்க வா” என சத்யமூர்த்தி குரல் கேட்டதும் அவன் அவர் அறை நோக்கி விரைந்து சென்றான். காவ்யா அவனை பின் தொடர்ந்தாள். ஆனால் அறைக்குள் செல்லவில்லை.

கிருஷ் தனக்காக வைத்திருந்த காலை உணவை ருசிக்க ஆரம்பித்தான்.

கதிர் சத்யமூர்த்தி கொடுத்த பைலை படித்தபடி வெளியே வந்தான். அங்கே யாருமில்லை கிருஷ் சத்யமூர்த்தி என அனைவரும் தத்தம் அறையில் இருந்தனர்.

காவ்யாவை கவனிக்காமல் கதிர் அவளை கடந்து செல்ல முயல்கையில் அவள் அவனை இழுத்து அவன் உயரத்திற்கு கால்களை எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

கதிர் இதயம் படபடத்தது. தன் காதலியின் அன்பு முத்த மழையை அனுபவிக்க இயலாமல் சுற்றிலும் நோட்டம்விட்டான். பின்பு
 
#19
காவ்யாவை முறைக்க . . அவளோ இன்னமும் மய்யலில் இருந்தாள்.

“எனக்கு” என்பதாய் அவள் கன்னத்தை காட்ட அந்த நொடி அவனுள்ளும் சூட்டில் தெர்மாமீட்டர் மெர்குரி ஏறுவதுப் போல காதல் ஜீரம் ஏறியது.

காதலர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்தது அந்த காட்சி அவர்களுக்காகவே வெள்ளை தேவதை உடையில் ஆயிரம் ஐஸ்வர்யா ராய்க்கள் “ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே” என பாட்டோடு நடனமாட . . கதிர் காவ்யாவின் இடையை வளைத்து இதழை நோக்கி குனிந்தான்.

“கதிர் காய்திரி தேவியோட பி.ஏ. நம்பர் என்ன?” என்ற சத்யமூர்த்தியின் குரல் இருவருக்கும் இடையே நந்தியாய் முளைத்தது. ஐஸ்வர்யா ராய்க்களும் இங்கு வேலையில்லை என கிளம்பிவிட்டார்கள்.

அதே நேரம் “அப்பு” என அனு அலுப்பாய் திரும்பி பார்க்க அங்கு எவரும் இல்லை.

லியோ சர்க்கஸ் மைதானம் வரதனும் வீரபாகுவும் தீவிர ஆலோசனையில் இருந்தனர். மற்ற கலைஞர்களும் அவரவர் வேலையில் மும்முரமாய் இருக்க . . அனு தன் தோழிகளோடு அளவளாவிக் கொண்டிருந்தாள்.

அப்போது அனுவிற்கு தன் பின்னலை யாரோ இழுத்தது போல இருந்தது. முதலில் துப்பட்டா பின்னர் பின்னல் என இம்சையாக இருந்தது. அப்புதான் என நினைத்தாள். ஆனால் அவன் எங்கும் காணவில்லை. அவள் தோழிகள்
அனைவரும் ஒரே திசையை பார்த்து அமர்ந்திருந்த்தால் அவர்களுக்கும் தெரியவில்லை.


இம்முறை சற்று பலமாகவே பின்னலை இழுக்க வலி தாங்காமல் “அப்பு” என அதட்டலாக சத்தமே போட்டுவிட்டாள் அனு.

அனைவரும் அவள் குரல் கேட்டு திரும்ப “என்னாச்சு அனு?” என வரதன் அவளை நோக்கி வந்தார். மற்றவர்களும் அவளையே என்னவென்று பார்க்க . . அனுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“இல்ல ஜடைய யாரோ இழுத்த மாதிரி” என மென்று முழிங்கி சொன்னாள்.

“யாரு இப்படி பிஹேவ் பண்ணது?” என வரதன் கோபமாக சுற்றி பார்த்தார்.

“அப்புவாதான் இருக்கும்” தைரியமாக சொன்னாள்.

“அப்பு எங்க? அப்பு அப்பு” என பல குரல்கள் கேட்க

கருமமே கண்ணாய் கையில் மடித்த தன் துணியுடன் பிரதட்சணம் ஆனான் அப்பு.

“அப்பு இதென்ன சில்லியான விளையாட்டு?” என வரதன் கடுமையாக கேட்க

“என்ன சார்? என்னாச்சு?“ என எதுவும் புரியாமல் அப்பாவியாய் வினாவினான்.

“ நீயே சொல்லு அனு” என்றார் வரதன்.

அனு சொன்னாள். அப்பொழுதும் அனைவரும் அவளையே கவனிக்க அந்த நொடி அப்பு “நான்தான் இழுத்தேன்” என அனுவிடம் வம்பாக ஜாடை செய்தான்.

“பாருங்க பாருங்க அவனே ஒத்துக்கிட்டான்” என பரபரப்பாக அனு சொல்ல

“நான் எப்ப சொன்னேன் . . பாருங்க அரைமணி நேரமா என் துணிய மடிச்சி வைச்சிட்டு இருக்கேன்” என கையில்
உள்ளதை அப்பு காட்டினான்.


“பொய் அத்தனையும் பொய்” என அனு சத்தமிட

“அனு ஒரு வாரமா பிராக்டீஸ் பண்ணதால சரியா தூங்கல போய் ரெஸ்ட் எடும்மா” என்ற வீரபாகு. “இதுக்கெல்லாம் பஞ்சாயத்தா?” என நகர்ந்தார்.

அவரை தொடர்ந்த மற்றவரும் அவரவர் வேலையை பார்க்க நகர்ந்தனர். கிளம்பும் போது சிலர் “அனு உடம்ப பாத்துக்க” என இலவச அட்வைஸ் அள்ளி வீசி சென்றனர். அப்புவும் எஸ்கேப்.

அனு அப்புவின் கூடாரத்திற்குள் நுழைய மடித்த சட்டையை மீண்டும் மடித்துக் கொண்டிருந்தான் அப்பு. அவனுக்கு அவளின் அடுத்த நடவடிக்கை தெரியாதா என்ன?

அவன் கையிலுள்ள சட்டையை பிடுங்கி எரிந்தவள் “எல்லாரும் என்னை கிண்டலா பாக்குறாங்க?” என்றாள்.

“நான்தான் இப்ப சண்டை போடணும். நீ என்னடானா சீனையே மாத்தி போடுற” காண்டாக பேசினான்.

“ உளறாத அப்பு” இன்னமும் கோபம் குறையாதவளாய்

“ஷோ முடிஞ்சி என்னை வந்து பாத்தியா? எத்தன நேரம் காத்திருந்தேன்”

“நான் சும்மா இல்ல வேலை இருந்திச்சி அப்பு”

“ பாத்தேனே இப்ப வம்பு பேசிட்டு இருந்ததை”

“அது” என தயங்கியவள். பின் “எல்லார் முன்னாடி எப்படி உன்னை பாக்க வர . . கிண்டல் பண்ணுவாங்க” என்றாள் ஸ்ருதி குறைந்தவளாய்.

“அம்மா நேத்து போன் பண்ணாங்க” என்றான்

“என்ன சொன்னாங்க?” முகம் மலர கேட்டாள்

“நீ தான் கோபமா இருக்கியே”
“கோபமா எனக்கா? . .கோபம் கிலோ என்ன விலை அப்பு. சரி அம்மா என்ன சொன்னாங்க சொல்லு”


“நம்ம கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்க” என்றான்.

ஆயிரம் ஐஸ்வர்யா ராய்க்கள் வந்துவிட்டார்கள்.

வட்டமிடும் . .