காத்திருந்தேனடி உன் காதலுக்காக!!- கதை திரி

#6
காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-5

ஒரு வாரம்வரை பொட்டிக் செல்ல அருணா அனுமதிக்கவில்லை ஒரு வழியாக கெஞ்சிக்கூத்தாடி அன்றுதான் பொட்டிக் வந்திருந்தாள்..

அங்கேயும் சுந்தரி செல்வி சந்தோஷ் என எல்லோரும் வந்து நலம் விசாரிக்க விவரம் சொன்னவள் சந்தோஷிடம் மட்டும் கொஞ்சம் திட்டு வாங்கிக்கொண்டாள்..

அன்று மாலை கடைக்கு தேவையான மெட்டீரியல் வாங்கவேண்டும் என நேரத்தோடு வெளியே வந்தபோது யாரோ தன்னை பார்ப்பதுபோல தோன்றியது திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை "பிரம்மை" என தலையை உலுக்கிக் கொண்டு லிப்ட்டை நோக்கி நடந்தாள்..

லிப்ட்டுக்கு காத்திருந்து வந்தவுடன் ஏறினாள் உள்ளே அவளுடன் இன்னொருவன் மட்டுமே இருந்தான்..

தன்னில் குறுகுறுப்பை உணர்ந்து திரும்பி பார்த்தபோது அவன் அவளைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்..

அவனின் ஆராய்தலான பார்வையில் தானும் அவனை ஆராய்ந்தாள்..

நல்ல உயரம் 6 அடியில் அழகனாக இருந்தான் சைதன்யாவும் உயரம் தான் இருப்பினும் அவனை அண்ணாந்து தான் பார்க்க வேண்டியிருந்தது..

மாநிறம் கூர்நாசி அழகான முகவெட்டு கை கால்கள் அவனது உயரத்திற்கேற்ப நீண்டிருந்தது அலை அலையான சிகை கம்பீரத் தோற்றம் கூர்மையான கண்கள் எதிராளியை எளிதாக எடைப்போட்டுவிடும்..

அவனின் கண்களை சந்தித்தபோது துளைத்தெடுத்த அவனது பார்வை மேலிருந்து கீழ் வரை அவளை ஆராய்ந்தது..

அந்தபார்வை அவளை பதற்றம் கொள்ள செய்தது.. காதல் பார்வை காமப் பார்வை இல்லாமல் ஆராய்தலோடுக்கூடிய துளைத்தெடுக்கும் பார்வை.. அவனது பார்வையில் மூச்சுவிடக்கூட முடியாதவாறு மூச்சு முட்டியது..

லிப்ட்டு நின்றவுடன் விட்டால் போதுமென விழுந்தடித்து வெளியே ஓடிவந்து ஸ்கூட்டியில் ஏறிய உடன்தான் அவளுக்கு சீரான மூச்சு வந்தது..

அது யாராக இருக்கும் என யோசனையுடன் சென்றவள் மெட்டீரியல் வாங்குவது அது சம்பந்தமான வேலை என அவள் அப்படியே அதனை மறந்துவிட்டாள்..

இடையில் இருமுறை பிஏ கருணாகரனை சந்தித்து விழா ஏற்பாடுகளை பற்றியும் அவளது டிசைன்களில் குழந்தைகளுக்கு எதுதேர்வு செய்திருக்கிறார்கள் என கேட்டாள்..

பைல் எம்டி சாரிடம் இருக்கிறது மேடம் அவர் உங்களை சந்திக்கும் போது அதுபற்றி சொல்வார் என்றான்..

உங்கள் எம்டி எப்பொழுது வருவார் என கேட்க அவர் வந்து 10 நாட்களாகிறது மேடம் என புது தகவலை சொன்னான்..

ஒருவாரம் முன்னமே உங்களை சந்திப்பது பற்றி கேட்டார் ஆனால் அப்போது நீங்கள் இல்லை உங்களுக்கு உடம்பு சரியில்லை வரவில்லை என சொன்னார்கள்..

அதற்குள் அவருக்கும் கம்பெனி தொடர்பான வேலைகள் வந்துவிட்டது நாளைதான் வருகிறார் அதனால் நாளை காலை 10 மணிக்கு உங்களுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார் நீங்கள் வந்து விடுங்கள் என கூறினான்..

பெரியவர்களுக்கான டிசைன்கள் அடங்கிய பைலை கொண்டு வரவா என கேட்டபோது இல்லை மேடம் அவர்கள் உங்களை நேரிலேயே வந்து அளவு எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள் அப்போதே அவர்கள் டிசைனை தேர்வு செய்கிறார்களாம்.. அவளுக்கும் அதுதான் சரியென பட்டது..

காலை எப்பொழுதும் போல தாமதமாக கிளம்பி விட்டு அவசர அவசரமாக பொட்டிக்கிற்குள் நுழைந்தாள்..

சுந்தரியிடம் ரெடியான ஆடைகளை வாங்கவருகிற கஸ்டமர்களை பற்றிகூறி அதை கொடுத்துவிடுமாறு எடுத்து வைத்தாள்..

நான் மேல்தளத்தில் எம்டியிடம் பேச செல்கிறேன் நீ இங்கே பார்த்துக்கொள்..

சரி அக்கா என கூறி ஆர்டர்களை சரி பார்த்தாள்..

மூன்றாவது தளத்திற்கு வந்து ரஞ்சனியிடம் எம்டியின் அப்பாயின்ட்மென்ட் பற்றி சொல்லிவிட்டு அவளிடம் கதையளந்து கொண்டிருந்தாள் அடிக்கடி அங்கே வருவதால் அவள் நல்ல தோழியாக மாறியிருந்தாள்..

எம்டியிடம் இருந்து அழைப்பு வரவே சார் கூப்பிடுகிறார் தன்யா நீ போ என்றாள்..

அவளிடம் தலையசைத்துவிட்டு கதவைத் தட்டி "மே ஐ கம் இன்" என்க,

"எஸ் கமீன்" என ஒலித்த கம்பீரமான குரலில் அவளது உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது..

உள்ளே சென்று அவனைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது அன்று லிப்ட்டில் பார்த்த அவன் அல்லவா இது இன்றும் அதே கம்பீரத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்தான்..

அவள் தன் முகத்தை கடினப்பட்டு சமன்படுத்திக் கொண்டு "குட் மார்னிங் சார்"., என் பெயர் சைதன்யா என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்..

அவனுக்கு அப்படியெல்லாம் எதுவும் தோன்றவில்லை போலும் "ஓ எஸ்" என அமர சொல்லிவிட்டு உங்கள் பைலை பார்த்தேன் சைதன்யா டிசைன்கள் எல்லாம் புதிதாகவும் நன்றாகவும் இருந்தது பாராட்டுக்கள் நீங்கள் இவ்வளவு தூரம் செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை..

அவனின் பாராட்டுதலில் இவளுக்கு படபடப்பாக இருந்தது..

நான் உங்களை இன்று வர சொன்னதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது சைதன்யா..

அவனுடைய கர்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் ஷாப் தயாரிக்கும் ஆடையை டிசைன் செய்ய இங்கே இடம் ஒதுக்கி இருந்தார்கள் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறை போலவே இன்னும் மூன்று அறை ஒதுக்கி இருந்தார்கள்.. எப்படியும் இதை டிசைன் செய்து சாம்பிள் ஆடைகளை பார்வைக்கு வைத்து விளம்பரம் செய்து பிறகுதான் தயாரிப்பு பணியில் ஈடுபடுவார்கள்..

அறிமுகவிழாவிற்கு தேவையான ஆடைகளை மட்டும் இங்கே தயார் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்..

அதற்காக அவனுடைய நண்பனின் டெக்ஸ்டைல் ஷாப்பில் இருந்து இரண்டு டிசைனர்களை வரவைத்திருந்தான்..

அவர்களுக்கும் இவனது கார்மெண்ட்ஸிலிருந்து தான் ஆடைகளை சப்ளை செய்வதாக இருந்தது..

முதலில் சிறுவர்களுக்கான ஆடையை தயாரிக்க திட்டமிட்டிருந்தார்கள்..

அவர்கள் வீட்டினருக்கு இந்த விழா தொடர்பான ஆடைகளை ரெடி செய்து கொடுத்துவிட்டு அவர்களது டிசைனர்களுடன் இணைந்து அவளும் சிறுவர்களுக்கான ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்க விருப்பமா என கேட்டான்..

அவளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவே தோன்றியது ஏனெனில் கடைகளில் ஆடைகளைப் பார்க்கும்போது தன்னுடைய டிசைன்களும் இதுபோல எல்லோரும் பார்க்கும் வண்ணம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறாள்..
இருப்பினும் யோசித்து சொல்வதாக கூறிவிட்டு விடை பெற்று வந்தாள்..

அடுத்த 2நாட்களில் நிரஞ்சனா சைதன்யாவை தேடி வந்தாள்..
 
#7
காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-6

அடுத்த இரண்டு நாட்களில் நிரஞ்சனா சைதன்யாவை தேடி வந்தாள் அவளது டிசைன்களை மனதாரப் பாராட்டிவிட்டு உங்களை தேர்ந்தெடுத்ததற்காக எனக்கு பெருமையாக இருக்கிறது சைதன்யா..

அண்ணன் முதன் முதலாக ஆரம்பிக்கும் கம்பெனி அதற்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என நினைத்தேன்..

அவனுக்கு டெக்ஸ்டைலில் கொஞ்சம் அறிமுகம் இருந்தாலும் உடை தயாரிப்பில் அவ்வளவு அனுபவம் கிடையாது..

அப்பா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த தொழிலை தொடங்கி இருக்கிறான் அதனால் இதில் வெற்றி அடைய வேண்டுமென எனக்கு பயம் இருந்தது..

இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது கண்டிப்பாக உங்களது டிசைன்கள் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது..

சைதன்யா முகத்திலிருந்த தெளிவின்மையை கண்டு என்ன சைதன்யா எதுவாக இருந்தாலும் என்னவென்று கேளுங்கள் உங்கள் மனதிலேயே வைத்திருந்தால் எனக்கு எப்படி தெரியும் என சிரிக்க.,

அவளும் லேசாக சிரித்து இல்லை மேடம் என்ன காரணத்திற்காக என்னை தேர்ந்தெடுத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா உங்களுக்கு நிறைய டிசைனர்களை தெரிந்திருக்குமே..

அவளிடம் மெச்சுதலாக ஒரு பார்வையை செலுத்தி விட்டு உங்களுக்கும் எனக்கும் ஓரிரு வயதுதான் வித்தியாசம் இருக்கும் சைதன்யா நீங்கள் என்னை பேர் சொல்லியே அழைக்கலாம் என சொல்ல..

இல்லை மேடம் உங்களை எப்படி என தயக்கத்துடன் பார்த்தவளை., உங்களைப் பார்த்தால் இயல்பாகவே ஒரு தோழமை உணர்வு வந்துவிடுகிறது சைதன்யா என்னை உங்களது தோழியாக நினைத்துக் கொள்ளுங்கள் என அவளது பதிலிற்காக ஆர்வமாக பார்த்தாள் அவளது பார்வையில் உண்மையான சினேகம் தெரிந்தது..

சைதன்யா இன்னும் தயங்கவும் ஏன் சைதன்யா என்பெயர் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறது இல்லையே எல்லாரும் நன்றாக இருப்பதாகதானே சொல்வார்கள் என சிரிக்க அவளுடன் சேர்ந்து சைதன்யாவும் சிரித்து உங்கள் பெயர் மிகவும் நன்றாகவே இருக்கிறது நிரஞ்சனா என மறைமுகமாகவே அவளை பெயர்சொல்லி அழைப்பதை ஒத்துக்கொண்டாள் புத்திசாலிதான் என மனதிற்குள் நினைத்தாள் நிரஞ்சனா..

ஆனால் நீங்கள் இன்னும் எனது கேள்விக்கு பதில் சொல்லவில்லையே என அதிலேயே நின்றாள்..

நீங்கள் சொல்வது போல எனக்கு சிறந்த டிசைனர்களை தெரியும் தான் ஆனால் அவர்களெல்லாம் உயர் வகுப்பினர் அணியும் வகையிலான ஆடையை மட்டுமே சிறப்பாக செய்கிறார்கள் மற்றவைகள் அவர்களுக்கு அந்தளவு ஆர்வம் இல்லை..

அவர்கள் டிசைன்கள் நன்றாக இருந்தாலும் உங்களுடையதைப் போன்று புதுவிதமாக இல்லை..

உங்கள் டிசைன்களில் எல்லா வகுப்பினரும் அணியும்படி ஆடைகள் நேர்த்தியாக இருக்கிறது சிறுவர் சிறுமிகளுக்கென பருத்தி ஆடைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்..

டிஐஜி வீட்டு கல்யாணத்தில் உங்கள் டிசைன்களை பார்த்தவுடன் புதுமையாகவும் நன்றாகவும் இருந்தது அதோடு சிறுவர்களுக்கான உங்கள் உடையின் நேர்த்தியும் துணிகளை கவனமாக தேர்ந்தெடுத்து அவர்களுடைய நலனில் அக்கறையெடுத்திருந்த விதமே நீங்கள் சிறந்த டிசைனர் என்பது தெரிந்தது..

இப்போதுகூட உங்கள் பைலில் உங்கள் டிசைன்களும் அதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் துணியை பின் செய்து வைத்திருக்கிறீர்கள் எல்லாம் பார்த்து எனக்கு முழு திருப்திதான்..

ஆனால் நீங்களும் உடைகளைப்பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்களே என சைதன்யா ஆச்சர்யமாக கேட்க,..

முதலில் நிர்வாகபடிப்பு தான் படித்தேன் எனக்கு இதிலும் ஆர்வம் அதிகம் இருப்பதால் இப்பொழுது இதையும் படித்துக்கொண்டிருக்கிறேன்..

இன்னும் கொஞ்சநாள் கழித்து நானும் உங்களுடன் வந்து சேர்ந்துகொள்கிறேன் என்றாள்..

அவளுடைய பேச்சில் ஒருசில நெருடல் இருக்கத்தான் செய்தது ஆனாலும் பந்தா இல்லாமல் அவள் பழகும் விதம் சைதன்யாவுக்கும் பிடித்துவிடவே அவளுடன் இயல்பாகபேச முடிந்தது விடைபெறும்போது நல்ல தோழியாக மாறியிருந்தாள்..

அவள் பேசி சென்றபிறகு புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்கள் புது விதமான டிசைன்களில் வேண்டுமென விரும்புகிறார்கள் இதற்கு மேல் யோசிக்க கூடாது அவளின் டிசைன்கள் டெக்ஸ்டைல்ஸ் ஷாப்பிற்கு வரப்போகிறது அதுதொடர்பான வேலை செய்யப் போகிறோம் என்பதே அவளுக்கு மனதுக்கு நிறைவாக இருந்தது,..
சந்தோஷிடம் எல்லாவற்றையும் சொன்னபோது நீ ஏன் யோசிக்கிறாய் சைதன்யா பொட்டிக்கை பற்றியா உன்னால் இரண்டு வேலைகளையும் திறம்பட செய்யமுடியும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என உடனே ஒத்துக்கொள்ள சொன்னான்..

இதற்குமேல் யோசிப்பது தவறு என தோன்றியதால் அவர்களிடம் தன்னுடைய சம்மதத்தை கூறிவிட்டாள்..

ரஞ்சனிக்கு நீ இங்கே வருகிறாயா எனக்கு ரொம்ப சந்தோஷம் என அவள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்..

சுந்தரிக்கும் செல்விக்கும் அவனுடைய கம்பெனிக்கு செல்ல போகிறோம் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது..

அப்பா அம்மாவிடம் சொன்ன போது அவர்களும் மகிழ்ந்தார்கள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு வந்தார்கள்..

எல்லோருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு மாதிரியான மனநிலையில் மகிழ்ச்சியாக இருந்தது..

ஐடி கம்பெனி வேலை முடிய ஒரு மாதம் ஆகும் ஆதலால் இவர்கள் இரண்டு கம்பெனிக்கும் பொதுவாக ஒரு பூஜை செய்து அவர்களது வேலையை தொடங்கி விட்டார்கள்..

அடுத்த ஒரு வாரத்தில் அவனது கம்பெனியில் இவர்களது வேலை தொடங்கியது..

முதலில் அவன் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கான ஆடைகளைத் தைத்து முடித்தாள்..

அப்போழுதும் சரி அதற்குப் பிறகு 10 நாட்கள் கடந்த நிலையிலும் மிதுர்வனைச் சந்திக்கவே முடியவில்லை..

ரெடியான ஆடைகளை வீட்டினரிடம் கொடுத்து சரியாக இருக்கின்றனவா எனப் பார்க்கச் சொல்லி பிஏ கருணாகரனிடம் கொடுத்தாள்..

அதோடு பெரியவர்களுக்கு அளவெடுக்கவும் டிசைன்கள் அடங்கிய பைலை காண்பிக்கவும் எப்பொழுது அவர்களுக்கு நேரம் கிடைக்கும் என கேட்கச் சொன்னாள்..

எம்டி சாரை பார்க்கவே முடியவில்லை என அவனிடம் கேட்ட போது அவருக்கு ஏகப்பட்ட வேலை மேடம் ஐடி கம்பெனி தொடங்குவதற்கு முன்னதாகவே பிராஜக்ட்கள் குவிந்த வண்ணமுள்ளது என அவன் சொல்ல.,

ஆனாலும் இதுவும் முக்கியம் தானே சார் நாங்கள் தயாரிக்கும் ஆடைகளை அவர்தானே சரி பார்த்து சொல்லவேண்டும் என எரிச்சலுடன் கூறியவள் இதில் நாங்கள் பயன்படுத்தி இருக்கிற ஆடைகளை தான் அவருடைய கார்மென்ஸ் தயாரிக்கும் ஆடைகளுக்கும் பயன்படுத்த இருக்கிறோம் இது அவருக்கு பிடித்தமானதாக இருக்கிறதா என சொன்னால் தான் மேற்கொண்டு நாங்கள் செயல்படுத்த முடியும்..

இப்பொழுது இதற்கெல்லாம் அவருக்கு நேரம் ஒதுக்க முடியாது மேடம் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்தால் போதும் என சொல்லிவிட்டார் சாம்பிள் ஆடைகள் தயாரிக்கும் போது பார்த்துக்கொள்வார் என சொல்ல அவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது..

அவர்கள் டிசைனர்களில் ஒருவராக பணிபுரிய தன்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள் அப்படி இருக்கையில் தான் செய்த வேலையை கூட காணவில்லை எனில் அவன் உண்மையிலேயே எனது டிசைன்களுக்காக என்னை தேர்ந்தெடுத்தானா இல்லை நிரஞ்சனா சொன்னதற்காக தன்னைத் தேர்ந்தெடுத்தானா என கோபம் வந்தது ..

ஆனால் அவளது நியாயமான மூளையோ அப்படி அவன் இரண்டாவது காரணத்திற்காக தன்னை தேர்வு செய்திருக்க மாட்டான் என்றுதான் தோன்றியது..

ஏனெனில் அவன் செயல்களில் நேர்த்தியும் தனக்கு தேவையான தான் கண்டிப்பாக வேண்டும் என்ற பிடிவாதமும் இருந்தது..

இந்த ஐடி கம்பெனியில் கவனம் செலுத்தும் போது புதிதாக ஒரு டெக்ஸ்டைல் பிசினஸ் தொடங்கினால் சரியாக இருக்காது என அவனது தந்தை எவ்வளவோ சொல்லியும் தன்னால் சமாளிக்க முடியும் என பிடிவாதமாக இருந்தானாம்..

அதோடு தெரியாத தொழில் என இதில் மட்டுமே கவனமாக இல்லாமல் தெரிந்த தொழில் என அதில் அலட்சியமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் சரியான அளவு முக்கியத்துவம் அளித்தான்..

இவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தான் பிறகு ஏன் தனக்கு ஏமாற்றமாக இருக்கிறது என தான் அவளுக்கு புரியவில்லை..

மேற்கொண்டு அதைப் பற்றி யோசிக்காமல் அடுத்த வேலையை கவனிக்க கிளம்பினாள்..

மிதுர்வனுக்கு என தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது அது இரண்டு கம்பெனிகளையும் இணைக்கும் இடத்தில் இருந்தது உள்ளே அவனது ஆபீஸ் அறையாகவும் அதற்கு அடுத்த பகுதியில் அவனுக்கு ஓய்வெடுக்கும் அறையும் ஒதுக்கப்பட்டிருந்தது..

சில நாள் அவன் கம்பெனியிலேயே தங்க வேண்டியது இருக்குமாம் அதனால் ஓய்வெடுக்கும் அறையில் சோபா செட், டைனிங் டேபிள், ஒரு தடுப்பை தாண்டி உள்ளே சென்றால் படுத்து ஓய்வெடுக்க கட்டிலும் இருந்தது..
பாத்ரூம் அருகே உடைமாற்றவும் தனி தடுப்பு வைத்து வசதி செய்யப்பட்டிருந்தது..

அந்த அறை ஒரு மினி சூட் ரூம் போல இருந்தது பணம் இருந்தால் இருக்கும் இடத்தை கூட ஹோட்டல் ரூமாக மாற்றலாம் போல என நினைத்தாள்..

விழா தொடர்பான வேலைகளை போல டெக்ஸ்டைல் டிசைனிலும் தன்னிடம் விட்டேற்றியாக இருந்தால் என்னவென்று கேட்டுவிட வேண்டியதுதான்..

ஏனெனில் மற்ற இரண்டு டிசைனர்களையும் இரவு பகல் பாராது வேலை வாங்கினான்..

கிறிஸ்டியனா மற்றும் ஹரிஷ் இருவரும் அவளிடம் நன்றாகப் பேசினார்கள்..

தான் ஐந்து மணிக்கு கிளம்பி விட அவர்களெல்லாம் சமயத்தில் ஏழு மணிக்கு கூட வீட்டிற்கு சென்றார்கள்..

கிறிஸ்டியனா கூட ஒரு முறை சொல்லியிருக்கிறாள் உனக்கு விழா தொடர்பான வேலைகளால் நீ தப்பித்தாய் இல்லையெனில் எங்களைப்போல வீட்டிற்கு 8 மணி அல்லது ஒன்பது மணிக்கு செல்ல வேண்டியதுதான்..

என்ன ஒன்பது மணிக்கா என கவலைப்பட்டவளிடம் ரிலாக்ஸ் தன்யா எப்பொழுதும் நம் எம்டி இப்படி கிடையாது சென்னையில் அவர்களது முதல் கம்பெனி அதோடு அவர்களது மற்ற கம்பெனிகளின் மதிப்பை காப்பாற்றியாக வேண்டும் அதனால் கொஞ்ச நாள் தான் இந்த கெடுபிடி ஆர்டர்கள் வர தொடங்கி விட்டால் அதன் பிறகு ரிலாக்ஸ் ஆகிவிடலாம்..

உனது டிசைன்களும் அதன் வேலைப்பாடுகளும் பிரமாதம் தன்யா நீ வந்த கொஞ்ச நாட்களில் எங்களை ஓரங்கட்டி விடுவாய் அந்த அளவுக்கு நன்றாக செய்திருக்கிறாய் என மனதார பாராட்டினாள்..

கிறிஸ்டியனா வெற்றிகரமான பல டிசைன்களை செய்தவள் அவளே தன் டிசைன்களை பாராட்டுகிறாளே என சந்தோஷமாக இருந்தது..

இதே யோசனையிலேயே வந்து கொண்டிருந்தபோது கதவு உள் பக்கமாய் திறப்பதை பார்க்காமல் வேகமாக திறந்த போது தடுமாறி விழப் போனாள்..

விழப் போகிறோம் என கண்களை டக்கென மூட இரு கைகள் அவளை இடையில் கரம் கொடுத்து தாங்கிப்பிடிக்க அவளை அணைத்தவாறு நின்றிருந்தான் மிதுர்வன்..

அதிர்ச்சிமாறி அவன் முகம் பார்த்து கண்களை சந்தித்தபோது அவன் கண்களிலேயே கட்டுண்டு இருந்தாள்..

அதே போல அவனும் அவளின் ஸ்பரிசத்தில் லயித்து இருந்தான்..

அவனேயறியாமல் அவளை நோக்கி குனிய சட்டென்று அவள் உடல் தொய்ந்து விழ போக அவளை பிடித்து நிறுத்தினான்..

அவன் முகம் பார்க்காமல் சாரி சார் நான் கவனிக்கவில்லை என கூறிவிட்டு வேகமாக அவளின் அறைக்குச் சென்றுவிட்டாள்..