Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காற்றில் கலைந்த ரங்கோலிகள் | SudhaRaviNovels

காற்றில் கலைந்த ரங்கோலிகள்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

நாளையிலிருந்து முகில் தினகரன் சாரின் "காற்றில் கலைந்த ரங்கோலிகள்" கதையின் அத்தியாயம் பதிவிடப்படும்.
 

Mukil dinakaran

New member
Aug 4, 2020
12
0
1
“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460

அத்தியாயம் - 1

வீட்டின் முன் ஹாலில் அனைவரும் கூடியிருந்தனர்.

இறுக்கமான முகத்துடன் எல்லோரும் அமர்ந்திருக்க, காரமடையிலிருந்து நேற்றே தன் கணவர் தங்கவேலுடன் வந்திருந்த மூத்தவள் சரசு மட்டும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள்.

பருத்த உடலும், “பம்”மென்ற தலையும் கொண்ட அந்த சரசுவை பார்த்த யாருமே சட்டென்று கணிப்பது, “அய்யோ...இவ மூஞ்சியைப் பார்த்தாலே சரியான வம்புக்காரின்னு எழுதி ஒட்டியிருக்கே?” என்பதுதான். ஆனால் அவளுடன் பேசிப் பழக ஆரம்பித்த பின் அதே கணிப்பு, “ஆஹா...பொம்பளைன்னா இவ பொம்பளை!...என்னவொரு அன்பான பேச்சு...பக்குவமான பழக்க வழக்கம்?” என்று மாறிவிடும்.

உள்ளூரிலேயே வாழ்க்கைப்பட்டு, அம்மா வாழ்ந்த அதே வீட்டில் கணவர் ஞான மூர்த்தியுடன் வாழ்பவள் கடைசிப் பெண் திலகா. அவள்தான் தன் அக்கா சரசுவையும், ஒரே தம்பியான தியாகுவையும் தன் வீட்டிற்கு வரவழைத்திருந்தாள். அதன் காரணமாகவே, அவர்கள் எல்லோருக்கும் அவ்வப்போது காஃபி..மற்றும் டீ வழங்குவதில் பிஸியாயிருந்தாள்.

அந்த இரு சகோதரிகளுக்கும் அடுத்து, கடைசித் தம்பியாய்ப் பிறந்து இரண்டு அக்காக்களின் அன்போடு அரவணைப்போடும் வளர்ந்தவன் கடைக்குட்டி தியாகு. போன வருடம் அந்த அன்பான சகோதரிகளின் எதிர்ப்பையும் மீறி, தான் காதலித்த செல்வியைக் கைப்பிடித்தவன். அவனது அந்தச் செயல் சகோதரிகள் இருவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கிய போதும், அவர்கள் தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, அரை மனதுடன் அவன் திருமணத்தை முடித்து வைத்தனர். திருமணம் முடிந்த கையோடு மாமனார் வீட்டில் தஞ்சம் புகுந்து “வீட்டோட மாப்பிள்ளை” என்கிற அந்தஸ்தைப் பெற்றான்.
வெளித் தோற்றத்திற்கு நியாயவாதியாய்த் தெரியும் அவன் உண்மையில் ஒரு தீவிரவாதி. குடும்பத்திற்குள் வாழும் ஒரு ஸ்லீப்பர் செல். இங்கும் பேசி, அங்கும் பேசி, எங்கும் பேசி, மற்றவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டுத் தான் மட்டும் நிம்மதியாய் வாழும் சுவர்க்கோழி.

“த பாருங்க என்னுடைய அன்புச் சகோதரிகளே....நான் பார்க்கிற தொழில் ஃபைனான்ஸ் தொழில், வட்டிக்குக் கடன் கொடுத்து வசூல் பண்ணிப் பொழைப்பை ஓட்டிக்கிட்டிருக்கற...வசூல் ராஜா நான்!...எந்த நேரத்துல எவனைப் போய்ப் பார்த்தா வசூல் ஆகும்!...யாரை...எங்கே...போனால் பிடிக்கலாம்!...ன்னு ஒவ்வொரு நிமிஷமும் அதை பத்தியே நெனச்சிட்டு அலையறவன்!...அதனால...எதுக்கு என்னை அவசரமா வரச் சொன்னீங்க?ன்னு சீக்கிரம் சொன்னீங்கன்னா...கேட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன்” இருபத்தி நான்கு மணி நேரத்தில் இருபது மணி நேரம் “பணம்...பணம்...வட்டி...அசல்...” என்று மொபைலில் பேசிக் கொண்டேயிருக்கும் பக்கா ஃபைனான்ஸ்காரன்.

“டேய்...தியாகு நாங்க ஒண்ணும் உன்னைய விருந்து சாப்பிட இங்க அழைக்கலை!...ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி நாம நாலு பேரும் பேசி முடிவெடுக்கத்தான் இங்க கூடியிருக்கோம்” கோபமாய்ச் சொன்ன மூத்தவள் சரசு, “அது சரி...என்ன நீ மட்டும் வந்திருக்கே?...எங்க உன் காதல் பொண்டாட்டி...செல்வி?...ரெண்டு பேரும்தான் இப்பத் தனிக்குடித்தனம் போயிட்டீங்கல்ல?..அப்புறமென்ன அவளையும் கூட்டிக்கிட்டு வந்திருக்க வேண்டியதுதானே?” கேட்டாள்.

“அட...நான் வெளிய வேற இடத்திலிருந்து வர்றேன்...அதனாலதான்...அவளைக் கூட்டிட்டு வர முடியலை” என்றவன், மொபைலில் யாரையோ லைனில் வைத்துக் கொண்டே, “அந்த முக்கிய விஷயத்தைத்தான் கொஞ்சம் சீக்கிரமே சொல்லுக்கா!” கேட்டான்.

“அப்பா...சாமி...மொதல்ல அந்த மொபைலை ஆஃப் பண்ணி வெச்சிட்டு அப்புறமா பேசு” சலித்துக் கொண்டாள்.

“ப்ச்” என்று முணுமுணுத்துக் கொண்டே மொபைலை ஆஃப் செய்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, “ம்...இப்பச் சொல்லு” என்றான்.

“தயவு செய்து நான் சொல்றதை எல்லோரும் கூர்ந்து கவனிங்க!” என்று ஆரம்பித்த சரசு, “மொதல்ல நம்ம குடும்பத்துல இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடநத ஒரு விஷயத்தை உங்களுக்கெல்லாம் ஞாபகப்படுத்திடறேன்....1996-ல...நம்மையெல்லாம் பெத்த அப்பன்...மகாஸ்ரீஸ்ரீ வெள்ளிங்கிரி அவர்கள் நம்ம நாலு பேரையும்...நம்ம அம்மாவையும் விட்டுட்டு சிங்கப்பூருக்கு வேலை பார்க்கக் கிளம்பிப் போனார்!”

“இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே அக்கா?” குறுக்கே புகுந்து தியாகு சொல்ல,

“அடேய்....குறுக்கே பேசாதடா!”

“சரி...சரி...சொல்லு...இனிப் பேசலை” என்று தன் வலது உள்ளங்கையால் வாயைப் பொத்திக் கொண்டு, தியாகு சொன்னதும் சரசு தொடர்ந்தாள்.

“சிங்கப்பூர் போனவர் முதல் ஆறு மாசம் தவறாமல் கடிதம் போட்டார்...பணமும் அனுப்பினார்!..அதுக்குப் பிறகு ஏனோ அது கொஞ்சம் கொஞ்சமாய் நின்று போனது!...கடிதம் மட்டுமா நின்னு போச்சு?...அவர்கிட்டேயிருந்து வந்துக்கிட்டிருந்த பணமும் நின்னு போச்சு!......அம்மா ரொம்ப பயந்து போய்...யார்..யார்...காலையோ பிடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி...அவரோட சிங்கப்பூர் அட்ரஸுக்கு ஒரு லெட்டர் போட்டாங்க!...அந்த “அட்ரஸில் ஆள் இல்லை!”ன்னு...லெட்டர் செவுத்துல அடிச்ச பந்து மாதிரித் திரும்பி வந்திடுச்சு!...அதுக்கப்புறம் நம்ம குடும்பம் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது!...ஆனாலும் அம்மா எப்படியாவது நம்மையெல்லாம் காப்பாத்தி...ஆளாக்கியே தீரணும்கற ஒரு ஆவேச வெறில கடுமையா உழைச்சாங்க!...கட்டிட வேலைக்குப் போனாங்க...பங்களா வீடுகளுக்கு பத்துப் பாத்திரம் தேய்க்கப் போனாங்க!....பகலிரவு பார்க்காம கஷ்டப்பட்டு நாலு குழந்தைகளையும் வளர்த்தாங்க!” சரசு சொல்லி விட்டு நிறுத்த,

“சரசக்கா...நான் ஒண்ணு கேட்கலாமா?” சன்னக் குரலில் கேட்டான் தியாகு.

“ம்..கேளு”

“ஏன்...சிங்கப்பூர் போன அப்பாவுக்கு என்னாச்சு?...”

உதட்டைப் பிதுக்கினாள் சரசு, “யாருக்குத் தெரியும்?...உள் நாட்டுல எங்காவது இருந்திருந்தால் கூட நிச்சயமா யாராவது கண்ணுல பட்டிருப்பாரு!...ஆனா அவரு இருந்தது வெளி நாட்டிலாச்சே?...அதான் அவரைப் பற்றி எந்த தகவலுமே தெரியலை!...ஏழெட்டு வருஷத்துக்கும் மேலே அவரைப் பற்றிய தகவல் தெரியாமலேயிருக்க ஊர்ப் பெரியவங்கெல்லாம் சேர்ந்து... “அவரு இறந்திருப்பார்”ன்னு முடிவு பண்ணி...அவருக்கு காரியங்களைச் செய்யச் சொல்லி அம்மாவை வற்புறுத்தினாங்க!...”

“அடப்பாவிகளா...அதெப்படி செய்ய முடியும்?...ஒருவேளை அவரு உயிரோட இருந்திட்டா...அது தப்பா போயிடுமே?” தியாகு உடனே சொன்னான்.

“கரெக்ட்...அதே காரணத்தைச் சொல்லித்தான் அம்மாவும் இழுத்தடிச்சிட்டே இருந்தாங்க!...ஆனா...பதினஞ்சு வருஷத்துக்கு மேலே ஆனதும், குடும்பத்துல பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் கல்யாணத்தை முடிச்சதும், அம்மாவே தன்னோட மனசைக் கல்லாக்கிட்டு...அப்பாவுக்கு காரியத்தைப் பண்ணினாங்க!...ஆனா...அதைப் பண்ணிய மறு வாரமே அம்மாவுக்கு உடல் நிலை பாதிச்சுது...மூணே நாள்தான்..“பொசுக்”குன்னு உயிரை விட்டுடுச்சு” சொல்லும் போது சரசு கண் கலங்கி விட்டாள்.

சில நிமிடங்கள் அங்கு கெட்டியான அமைதி நிலவியது. எல்லோரும் தங்கள் மனதிற்குள் அந்தப் பழைய நினைவுகளைக் கிளறிப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

சரசுவே தொடர்ந்தாள், “இத்தனை வருஷத்துக்குப் பிறகு நாமெல்லாம் இங்க கூடி ஏன் இந்தக் கதையைப் பேசிட்டிருக்கோம்!ன்னா?” என்று சொல்லி விட்டு சஸ்பென்ஸாய் நிறுத்தி, தன் உடன் பிறப்புக்களின் முகத்தை ஆராய்ந்தாள்.

எல்லோர் முகத்திலும் புதிரான எதிர்பார்ப்பு. புருவ நெரிப்புக்கள்.

“இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னாடி...நம்மையும்...அம்மாவையும் விட்டுட்டு சிங்கப்பூர் போன அப்பா....மகா ஸ்ரீ ஸ்ரீ வெள்ளிங்கிரி அவர்கள்....வர்ற புதன் கிழமை திரும்பி வரப் போறாராம்”

அதிர்ச்சி மற்றும் திகைப்பில், வாயைப் பிளந்தனர் சரசுவின் உடன் பிறப்புக்கள்.

“இந்த தகவலை நம்ம லோகு மாமா...திலகா கிட்டே சொல்லியிருக்கார்!...அவ உடனே மூத்தவளான என்னைக் கூப்பிட்டுச் சொன்னா!..நான் உடனே கிளம்பி கோயமுத்தூர் வந்திட்டேன்!...நான் வந்த பிறகுதான் திலகா உங்களையெல்லாம் வரவழைச்சா” என்றாள் சரசு.

“சரி...லோகு மாமாவுக்கு...எப்படி...அந்த தகவல் கிடைச்சுது?” தியாகு உடனே கேட்டான்.

“போன வாரம் அவர்...பஞ்சு வியாபாரம் சம்மந்தமா மும்பைக்குப் போயிருந்தாராம்...அங்க வெச்சு அப்பாவைப் பார்த்திருக்கார்...நம்ம அப்பாவே சொன்னாராம்”
மீண்டும் அங்கு ஒரு குழப்பமான அமைதி நிலவியது.

தியாகு அந்த அமைதியை உடைத்தான், “என்னக்கா குழப்பறே?...அப்பா சிங்கப்பூர்ல இருக்காரு!ன்னு சொன்னே?...அவர் எப்படி மும்பைல?....”

“அதே கேள்விதான் எனக்குள்ளும் தோணிச்சு!... “சிங்கப்பூர்ல இருக்கறவர்...கோயமுத்தூர் வர்றதுன்னா...சென்னை ஏர்போர்ட்டில்தானே இறங்கணும்?...அவர் எதுக்கு மும்பை போனார்?”ன்னு லோகு மாமா கிட்டே கேட்டேன்,

“அதெல்லாம் எனக்குத் தெரியலைம்மா!...ரொம்ப அவசரமா எங்கியோ போயிட்டிருந்தவரை நான்தான் நிறுத்திப் பேசினேன்...அவரும் அடையாளம் தெரிஞ்சுக்கிட்டுப் பேசினார்...ஊருக்குத் திரும்பப் போறேன்...ன்னார்!...எனக்கு அதைக் கேட்டதும் சந்தோஷமாகிப் போயிடுச்சும்மா...உடனே திலகா வீட்டு அட்ரஸை...அவர் கேட்காமலே நான் குடுத்தேன்!...வாங்கிட்டு...அதே வேகத்துல போயிட்டார்”

“இப்ப எதுக்கு அவர் இங்கே வர்றார்?...இத்தனை வருஷம் நாமெல்லாம் உசுரோட இருக்கிறோமா?...செத்தோமா?ன்னு கூடப் பார்க்காத மனுஷனுக்கு இப்ப என்ன திடீர்னு நம்ம மேலே பாசம் பொத்துக்கிடுச்சு?” திலகா கேட்டாள்.

“அதானே?...உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும் ஊரு உலகமெல்லாம் சுத்திட்டு...ஆட்டம் போட்டுட்டு...இப்ப ரத்தத்துல சத்தெல்லாம் போன பிறகு...கடைசி காலத்துல இழுத்துப் போட யாராவது வேணுமின்னு...நம்ம கிட்ட வந்து ஒட்டிக்கப் பார்க்கிறாரா?” தியாகுவும் கொக்கரித்தான்.

அது வரையில் அமைதியாயிருந்த சரசுவின் கணவர் தங்கவேலு பேசினார், “அம்மாடி...நீங்க இப்ப சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நேத்திக்கு சரசுவும் என் கிட்டச் சொன்னா!...யோசிச்சுப் பார்த்தா...ஒரு விதத்துல நீங்க சொல்றதுதான் சரி...இத்தனை வருஷமா பொண்டாட்டியும்...குழந்தைகளும்...என்ன ஆனாங்க?...எப்படி இருக்காங்க?ன்னே நெனச்சுக் கூடப் பார்க்காதவருக்கு இப்ப என்ன திடீர்ப் பாசம்?...”

ஃபைனான்ஸியராக இருந்து எல்லா விஷயங்களையும் ஃபைனான்ஸியலாகவே சிந்திக்கும் தியாகு, “நான் கண்டுபிடிச்சிட்டேன் சரசக்கா!...காசு பணம் நிறைய சம்பாதிச்சு சேர்த்து வெச்சிருப்பார்!...“வாழ்க்கையோட கடைசி அத்தியாயத்துக்கு வந்திட்டோம்!...இனிமே நாம தனியா இருக்க முடியாது!...திடீர்னு செத்துப் போயிட்டா...நமக்கு முறைப்படி காரியங்கள் செய்ய நாலு ஜீவன் வேணும்!...அதனால சம்பாதிச்சதை எல்லாம் கொண்டு போய் வாரிசுகளுக்குப் பிரிச்சுக் குடுத்தா...அவங்க பழசையெல்லாம் நம்மைச் சேர்த்துக்குவாங்க”ன்னு கணக்குப் போட்டிருப்பார்” என்றான்.

“அவர் குடுக்கற சொத்துக்கு மயங்கி இங்கிருக்கறவங்கெல்லாம் “ஈஈஈஈ”ன்னு பல்லை இளிச்சுக்கிட்டு அவரைச் சேர்த்துக்குவாங்களாக்கும்?” திலகா குமுறினாள்.

“நம்மைப் பெத்தவ ஒரு பெண் புலி!..ஒத்தை மனுஷியா நின்னு...தன்னோட ரத்தத்தைச் சிந்தி...சம்பாதிச்சு...நம்மையெல்லாம் ஆளாக்கினாங்களே?...அந்த மனித தெய்வத்தை உதறிட்டுப் போன இந்த மனுஷனை வீட்டுக்குள் சேர்த்தா...அம்மா பாவம் நம்மைச் சும்மா விடாது” என்ற சரசு, “டேய்...தியாகு...நீ என்னடா சொல்றே?” அதிரடியாய்க் கேட்டாள்.

“சகோதரிகள் ரெண்டு பேரும் என்ன சொல்றீங்களோ?...அதையேதான் நானும் சொல்றேன்!” என்றான் பொத்தாம் பொதுவாய்.

“ஓ.கே...எல்லோரும் நல்லாக் கேட்டுக்கங்க!...நாம இப்ப எடுக்கறதுதான் தீர்மானமான முடிவு...இறுதி முடிவு...“அப்பாகிட்டே லோகு மாமா எங்க வீட்டு அட்ரஸைத்தான் குடுத்திருக்கிறாராம்...அதனால அவர் நேரா இங்கதான் வருவார்!...அப்படி வந்தா, “நீங்க யார்?ன்னே தெரியலை...போயிட்டு வாங்க”ன்னு சொல்லி திருப்பி அனுப்பிடப் போறேன்!”...என்ன...சரியா?” எல்லோரையும் பார்த்துக் கேட்டாள் திலகா.

சரசுவும், தியாகுவும், “சரி”யென்று தலையை ஆட்டினர்.

தொடர்ந்து சரசுவின் கணவர் தங்கவேலு பேசினார், “அப்படிச் சொல்லிட்டா அவர் அதோட போயிடுவாரா?...அங்க...இங்க விசாரிச்சு...எல்லோரோட அட்ரஸையும் கண்டுபிடிச்சு...ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் வந்து கதவைத் தட்டுவார்!...அப்ப எல்லோருமே...ஒரே மாதிரி, “நீங்க யார்?ன்னே தெரியலை...போயிட்டு வாங்க”ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிடணும்”

அந்தப் பேச்சுக்கு துளியும் மாற்றுக் கருத்துக் கூறாமல் எல்லோரும் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

தியாகு இன்னும் ஒரு படி மேலே போய், “இல்லை மாமா...அன்பு, பாசம், பந்தம்..ன்னா என்ன?ன்னே தெரியாம இத்தனை வருஷம் எங்கியோ திரிஞ்சிட்டுத் திரும்பி வந்து நிக்கற மனுஷனை நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி நறுக்குன்னு கேட்கணும்!...எந்த ஊர் ஜனங்க முன்னாடி நம்ம அம்மா கூனிக் குறுகி கூலி வேலைக்குப் போனாங்களோ?...அதே ஊர் ஜனங்க முன்னாடி அந்த ஆளை டார் டாராய்க் கிழிக்கணும்!” கத்தினான்.

“த பாரு...அதெல்லாம் அவசியமேயில்லை தியாகு!...அவர் பெத்ததுக மூணும் அவரை “அடையாளம் தெரியலை...போயிட்டு வாங்க”ன்னு சொல்லித் திருப்பி அனுப்பினா...அதை விட அவருக்கு வேற என்ன தண்டனை வேணும்?...அதிலேயே அவர் மனசு புரிஞ்சுக்கும்..” என்றார் சரசுவின் கணவர் தங்கவேலு.

“இதுதான் தீர்மானம்...எல்லோரும் ஸ்ட்ராங்கா நில்லுங்க!...அதுக்கப்புறம் அந்த மனுஷன் என்ன செய்யறார்?ன்னு பார்ப்போம்!” என்றாள் சரசு.

“நம்மோட இந்த உறுதியும்....ஒற்றுமையும்...நம்மை வளர்த்து ஆளாக்கிய அம்மாவுக்கு நாம செய்யற பிரதியுபகாரம்!” என்றாள் திலகா.

“இவருக்கு நாம குடுக்கற அவமரியாதையைப் பார்த்து நாளைக்கு எவனுமே பொண்டாட்டி பிள்ளைகளை தவிக்க விட்டுட்டு ஓடக் கூடாது!” இது திலகாவின் கணவர் ஞானமூர்த்தி.

“இதே ஊர்ல நாதி இல்லாமக் கிடக்கணும்!...காசு பணத்தைக் குவிச்சு அது மேல் படுத்துக் கிடக்கட்டும்!...உசுரை விட்டாக் கூட நாம யாரும் எட்டியே பார்க்கக் கூடாது!” பொங்கினான் தியாகு.

“பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்” என்பார்கள். அப்படியிருக்கும் போது உயிருடன் இருக்கும் மனிதர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?.


அன்று இரவே, தன் மனைவி செல்வியிடம் தன் இரண்டாவது அக்கா திலகா வீட்டில் நடந்த விஷயங்களை அப்படியே ஒப்பித்தான் தியாகு.

“ஆக...எல்லோருமே சேர்ந்து பெத்த அப்பனை வீட்டுக்குள்ளார விடாமல் துரத்தியடிக்கப் போறதா தீர்மானம் பண்ணியிருக்கீங்க!...அப்படித்தானே?”

மொபைலை நோண்டிக் கொண்டே தியாகு ஏதோ பதில் சொல்ல வாயெடுக்க, அவன் கையிலிருந்த மொபைலை “படக்”கென பறித்துக் கொண்டாள் செல்வி.

“ஆமாம்...ஆமாம்!...அப்படித்தான் என்னோட ரெண்டு அக்காமார்களும்...அவங்க புருஷன்மார்களும் முடிவு பண்ணிருக்காங்க!” என்றான் தியாகு.

“சரி...அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?” தலையை இடது புறம் சாய்த்துக் கொண்டு, இடுப்பில் ஒரு கையை மட்டும் வைத்துக் கொண்டு கேட்டாள் செல்வி.

“நான் என்ன சொல்லுவேன்?...“சரி...நீங்க என்ன முடிவு பண்றீங்களோ...அதுதான் என் முடிவும்”ன்னு சொல்லிட்டேன்”

“நீங்க என்ன லூஸா?....உங்களுக்கு மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கா?... இல்லையா?” சற்று உரத்த குரலில் கேட்டாள் செல்வி.

“ஏண்டி...ஏண்டி...இப்படிக் கேட்கறே?” பரிதாபமாய்க் கேட்டான்.

“இருபத்திரெண்டு வருஷம் சிங்கப்பூர்ல வேலை பார்த்து திரும்பற மனுஷன் கொஞ்சம் நஞ்சம் சொத்தோடவா வருவார்?...அதுக்கெல்லாம் ஒரே ஆண் வாரிசு நீங்க!...உங்க அக்காமார்கள் எல்லாரும் ஏற்கனவே நல்லா சம்பாதிச்சு செட்டிலாயிட்டாங்க!...அதனால அவங்களுக்கு சொத்து தேவையில்லை!... “வேண்டாம்”னுட்டாங்க!...நாம அந்த நிலையிலா இருக்கோம்?... “ஃபைனான்ஸ் பண்றேன்...ஃபைனான்ஸ் பண்றேன்”ன்னு சொல்லிக்கிட்டு நீங்க காசை வெளிய குடுக்கறதுதான் தெரியுது!...திரும்பி வர்றது மட்டும் கண்ணுக்குத் தெரியவே மாட்டேங்குது!...அதனால...இந்த தொழிலை தலை முழுகிட்டு...நல்லா....புதுசா ஒரு தொழில் துவங்குங்க” என்றாள் செல்வி.

“கேட்க நல்லாத்தான் இருக்கு...ஆனா தொழில் ஆரம்பிக்கறதுக்கு பெரிய மூலதனம் வேணும்டி” என்றான் தியாகு.

“ம்ம்ம்...கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிச்சு...கொஞ்சம் என் பேச்சையும் கேட்டு...நடந்தீங்கன்னா....நீங்க சீக்கிரத்திலேயே “கிடு...கிடு”ன்னு கோடீஸ்வரன் ஆயிடுவீங்க” ஆசை காட்டினாள் செல்வி.

“என்னடி...இதென்ன சினிமாவா?...நான் என்ன அண்ணாமலை ரஜினியா?...ஒரே பாட்டுல பணக்காரன் ஆவதற்கு?” இதழோரம் இளக்காரப் புன்னகையோடு தியாகு சொல்ல,

“உங்கப்பாவோட சொத்தெல்லாம் உங்களுக்குத்தானே?...அதை வெச்சு தொழில் துவங்குங்க” செல்வி தன் எண்ணத்தை லேசாய்க் கோடு காட்டினாள்.

“எ..ன்..ன..டி சொ..ல்..றே?”

“த பாருங்க! உங்களோட ரெண்டு அக்காமார்களும் வேணும்ன்னா உங்கப்பாவை ஒதுக்கிட்டுப் போகட்டும்..நீங்க ஒதுக்க வேண்டாம்!...அவரு கோயமுத்தூர் வந்து இறங்கினதும் முதல் ஆளா போய் அவரை ஏர்போர்ட்டிலேயே பிக்அப் பண்ணி....இங்க....நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடுங்க” என்றாள் செல்வி.

“அய்யய்ய...அக்காக்கள் என்னை என்ன நினைப்பாங்க?...”

“அவங்க என்ன வேணா நினைச்சிட்டுப் போகட்டும்!...நீ நான் சொல்றதை செய்யுங்க!” செல்வி ஆணையிட்டாள்.

“அதெப்படி செல்வி?” மிகவும் தயங்கினான் தியாகு.

“பெரிய சொத்து உங்களைத் தேடி வரும் போது...யாரோ பேச்சைக் கேட்டுக்கிட்டு...வெட்டி வீராப்பு காட்டிக்கிட்டு...அதை இழந்திடாதீங்க!...வர்ற சொத்தை வாரி உள்ளார போட்டு ஒரு தொழில் துவங்கப் பாருங்க!...வாழ்க்கைல மனுஷனுக்கு சந்தர்ப்பம் ஒரே ஒரு தடவைதான் வரும்...அது வரும் போது அதை “கப்”புன்னு புடிச்சுக்கிட்டா பொழைச்சுக்கலாம்!...இல்லேன்னா...காலம் பூராவும் கஷ்டப்பட்டுக் கிட்டே கிடக்க வேண்டியதுதான்!...” என்றாள் செல்வி.

தொடர்ந்து அவனும், அவளும் செய்து முடித்த வாக்குவாதத்தின் இறுதியில், தியாகு மொத்தமாய் நிறம் மாறிப் போனான். இல்லை...மாற்றப்பட்டான். “ஏர்போர்ட்டுக்கு நீயும் என் கூட வந்தா...அப்பா இன்னும் சந்தோஷமாயிடுவார்” என்று அவளையும் அழைத்தான்.

“தாராளமா வர்றேன்!” என்றவள், “ஆமாம்...நீங்க உங்க அப்பாவை சின்ன வயசுல பார்த்தது...இப்ப அவரைப் பார்த்தா உங்களால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா?” தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“ஏன் முடியாது?....அவர் சிங்கப்பூர் கிளம்பிப் போனதே எனக்கு நல்லா ஞாபகமிருக்கு!...அப்ப எனக்கு ஆறு வயசு...” என்றான்.

“எதுக்கும் ஏர்போர்ட் போகும் போது...ஒரு பெரிய அட்டைல அவரோட பேரை எழுதிக் கொண்டு போயிடுவோம்!..அதைக் காட்டிட்டு நின்னா அவரா நம்ம கிட்டே வந்திடுவாரல்ல?” செல்வி ஐடியா தந்தாள்.

“ம்ம்...அதுவும் நல்ல ஐடியாதான்” என்றான் தியாகு.

*****
புதன் கிழமை.

அதிகாலையிலேயே சரசுவிடமிருந்து போன் வந்தது. அதை அட்டெண்ட் செய்யப் போன தியாகுவைப் பாய்ந்து வந்து தடுத்தாள் செல்வி, “வேண்டாம்!...உங்க அக்கா கிட்டப் பேசாதீங்க!...அவங்க உங்களைப் “போக வேண்டாம்”னு தடுப்பாங்க!”

“சரி...சரி” என்று “பூம்...பூம்”மாடு போல் தலையாட்டினான் தியாகு.

இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்தால், அக்காமார்கள் நேரிலேயே வந்து விடுவார்கள், என்று அஞ்சிய செல்வி, “ஏங்க நாம் இங்க இருக்க வேண்டாம்!...இப்பவே கிளம்பிடுவோம்” என்றாள்.

“ஏய்...மதியம் பனிரெண்டரை ஃபிளைட்லதான் அப்பா வர்றார்!...இப்பவே போய் அங்க என்ன பண்ணப் போறோம்?” செல்வி சொல்வதன் உள்ளர்த்தம் புரியாமல் கேட்டான்.

“மரமண்டை...நாம் இங்க இருந்தால் உங்க அக்கா இங்க நேரிலேயே வந்தாலும் வந்திடும்!...அதான் வெளிய எங்காவது போய் பனிரெண்டு மணி வரை பொழுதைக் கழிச்சிட்டு அப்புறமா ஏர்போர்ட்டுக்குப் போயிடுவோம்” என்றாள்.

நிதானமாய் யோசித்தவன், “அதுவும் சரிதான்...நேர்ல வந்து தடுத்தாங்க!ன்னா பெரிய தர்ம சங்கடமாயிடும்!...கிளம்பு கிளம்பு...” என்றான்.

( தொடரும்)
 
Last edited by a moderator:

Mukil dinakaran

New member
Aug 4, 2020
12
0
1
“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460

அத்தியாயம் - 2

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களிருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறினர்.

பைக்கில் போகும் போது செல்வியிடம் கேட்டான், “ஆமாம்...இப்ப எங்க போறோம்?”

“ம்ம்ம்...”என்று யோசித்தவள், “எங்கம்மா வீட்டுக்கு விடுங்க!...அவங்கதான் ரொம்ப நாளா “வரலை...வரலை”ன்னு புலம்பிக்கிட்டிருக்காங்க!” என்றாள்.

அவள் பேச்சைத் தட்டாதவனாய் பைக்கை அனுப்பர்பாளையம் நோக்கிச் செலுத்தினான் தியாகு.

தாயிடம், தன் மாமனார் வரப் போகும் விஷயத்தையும், அதை தன் கணவரின் அக்காமார்கள் எதிர்க்கும் விஷயத்தையும் பெரிய குரலில் சொல்லி விட்டு, சட்டென்று குரலைத் தணித்துக் கொண்டு, “இவரும் அதுக கூட சேர்ந்துக்கிட்டு அப்பாவை திருப்பி அனுப்பி விடத்தான் பார்த்தாரு...நாந்தான் வேண்டாம்!னு சொல்லி என் மாமனாரை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன்” என்றாள் செல்வி.

“ஏண்டி...வேலில போற ஓணானை வலியப் போய் தோள்ல ஏத்திக்கறே?...” பழுத்த அனுபவசாலியான செல்வியின் தாயார் கண்ணம்மா சொல்ல,

“என்னம்மா?...எங்க வீட்டுக்காரருக்குத்தான் புத்திசாலித்தனம் கொஞ்சம் கூட இல்லேன்னா...உனக்குமா?” தலையிலடித்துக் கொண்டு சொன்னாள் செல்வி.

“ஏண்டி அப்படிச் சொல்றே?...நான் சரியாய்த்தானே சொன்னேன்?”

“என்ன சரியாய்ச் சொன்னே?...ஏம்மா...இருபத்திரெண்டு வருஷம் சிங்கப்பூர்ல வேலை பார்த்தவரு வெறும் கையோடவா வருவாரு?...எவ்வளவு சம்பாதிச்சிருப்பாரு?....எத்தனை சொத்து சேர்த்திருப்பாரு?ன்னு யோசனை பண்ணிப் பாரு” தாய்க்கே பாடம் சொல்லிக் கொடுத்தாள் செல்வி.

கண்ணம்மா நிதானமாய்த் தலையை மேலும், கீழும் ஆட்ட,

“பொட்டைப் புள்ளைக ரெண்டும் அப்பனை ஆகாது!ன்னு சொல்லிட்ட நிலைல ஒரே பையனான இவர் ஆதரிச்சு...அடைக்கலம் குடுத்தாரு!ன்னா...மொத்தச் சொத்தும் இவருக்கு வந்திடுமே?” சொல்லி விட்டு செல்வி ஒரு கண்ணை மட்டும் மூடித் திறந்தாள்.

“ஓ...உன் கணக்கு அதுவா?” என்று சன்னக் குரலில் சொன்னவள், “த பாரு செல்வி...கஷ்டப்படாம வர்ற காசு...நமக்குக் கஷ்டத்தைக் குடுத்திட்டுத்தான் போகும்!...” என்றாள்.

“கஷ்டத்தையும் குடுக்காது...குஷ்டத்தையும் குடுக்காது...நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு சும்மா இரு அது போதும்” முகத்திலடித்தாற் போல் மகள் சொல்ல,

தனக்கு அதில் விருப்பம் இல்லை என்ற போதிலும், மகளுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாதவளாய் அந்த இடத்தை விட்டு அகன்றாள் அவள் தாய் கண்ணம்மா. ஆனாலும், அவள் உள்ளம் மட்டும் மௌனமாய்க் குமுறியது, “அடிப்பாவி...சொத்துக்காக அந்த அக்காக்கள் ரெண்டு பேருக்கும் சங்கடத்தைக் குடுத்திட்டியேடி!...ஏற்கனவே உங்க கல்யாணத்தையே அவங்க ரெண்டு பேரும் அரை மனசோட ஏத்துக்கிட்டிருக்காங்க!...இதுல புதுசா இன்னொரு சங்கடத்தையும் சேர்த்துக்கிட்டியேடி”

ஏர்போர்ட்.

பனிரெண்டரை மணி ஃபிளைட் சரியான நேரத்தில் வந்து இறங்கியிருந்தது.

அந்த அலுமினியப் பறவையின் வயிற்றிற்குள்ளிருந்து பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர்.

வாசலருகே, கையில் பல்வேறு பெயர்ப்பலகைகளுடன் மக்கள் நின்று கொண்டிருக்க, தியாகுவும் செல்வியும் “வெள்ளிங்கிரி”என்கிற பெயர் தாங்கிய அட்டையைத் தூக்கிப் பிடித்து நின்றனர்.

தியாகுவின் மனதில் இனம் புரியாதவொரு குறுகுறுப்பு. “இருபத்திரெண்டு வருஷத்திற்குப் பிறகு அப்பாவைப் பார்க்கப் போகிறேன்!...எப்படி இருப்பார்?...ரொம்பவும் வயசாகித் தளர்ந்து போயிருப்பாரா?...இல்லை...அதே மாதிரி இருப்பாரா?...”

வயதான ஒரு மனிதர் ஒற்றை சூட்கேஸோடு இவர்களை நோக்கி வர, “இவரா?...இவரா?” பரபரத்தாள் செல்வி.

அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்த தியாகு, “ம்ம்ம்...இவரை மாதிரித்தான் தெரியுது!” என்றான் சந்தேகத்துடன்.

அவனது சந்தேகத்தை தெளிவாக்கும் விதமாய் அந்த மனிதர், அவர்கள் கையிலிருந்த போர்டைப் படித்து விட்டு, உதட்டைச் சுழித்துக் கொண்டு நகர, “ம்ஹூம்...இவர் இல்லை” என்று உறுதிபடச் சொன்னான் தியாகு.

ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற பின், தியாகுவைச் சுரண்டினாள் செல்வி. “ஒருவேளை உங்கப்பா...இந்த ஃபிளைட்ல வரலையோ?”

“ப்ச்...லோகு மாமா கன்ஃபர்மா சொன்னார்... “பனிரெண்டரை ஃபிளைட்டுலதான் வர்றார்”ன்னு!”என்றான் தியாகு. அவன் மனதிலும் லேசாய் ஏமாற்றம் துளிர்த்திருந்தது.

ஜிம் பாடி, “புசு...புசு”வென்றிருக்கும் வெள்ளைத் தலைமுடி, .அதிலிருந்து கொஞ்சம் எடுத்து தாடையில் ஒட்டி வைத்தது போன்ற ஒரு குறுந்தாடி, கண்களில் ரேபான் கூலிங் கிளாஸ், கீழே ஜீன்ஸ் பேண்ட், மேலே ஜெர்க்கின் போன்றதொரு மேற் சட்டை, அணிந்தபடி வந்த அந்த மனிதர், அவர்களுக்கு எதிரே சில நிமிடங்கள் நின்று தலையைச் சாய்த்துக் கொண்டு போர்டை வாசித்தார். கையில் ஒரு சிறிய சூட்கேஸ், தோளில் ஒரு லெதர் பேக்.

தியாகு அவர் முகத்தையே பார்க்க,

“நீ...நீ...தியாகுதானே?” அவர் ஆட்காட்டி விரலை நீட்டிக் கேட்டார்.

“ஆ...மா...ம்!” என்று தயக்கமாய்ச் சொன்னவனை, தாவி வந்து கட்டிக் கொண்ட அந்த மனிதர், “ஹரே...மை ஸன்!...நான்தாண்டா உன்னைப் பெத்த அப்பன்!...தி கிரேட் வெள்ளிங்கிரி” என்று உரத்த குரலில் சொல்ல,

ஆடிப் போனான் தியாகு.

அவன் எதிர்பார்த்தது, ஒரு வெள்ளை வேஷ்டி சட்டையுடன், சோடா புட்டிக் கண்ணாடியுடன், கையில் ஒரு மஞ்சள் பையுடன், ஒரு அரை வழுக்கைப் பெரியவரைத்தான். ஆனால், வந்திறங்கியவர் ஒரு அல்ட்ரா மாடர்ன் என்.ஆர்.ஐ.

“அப்பா...நீங்க...எனக்கு...அடையாளமே...தெரியலை” உளறினான்.

“ஹேய்ய்ய்....நெர்வஸ் ஆகாதே பாய்” என்றவாறே அவன் முதுகில் ஓங்கியடித்த வெள்ளிங்கிரி, “எங்கே உன்னுடைய அம்மா?...ஐ மீன் மை வைஃப்!...உன் கூட வரலையா?” கேட்டார். அவர் பார்வை அவர்களின் முதுகிற்குப் பின்னால் தேடியது.

“இல்லை” என்று வாயால் சொல்லாமல், தன் தலையை குறுக்கே ஆட்டினான்.

“ஓ...மை காட்!...” என்று தோள்களைக் குலுக்கிச் சொன்னவர், “ஓ.கே...எங்கே என் மகள்கள்?...அவங்களும் வரலையா?” கேட்டார். சுற்றும் முற்றும் பார்த்தபடியே கேட்டார்.

“இல்லை...அவங்களும் வரலை” இந்த முறை வாயால் சொன்னான்.

“வொய்?...ஓ...ஓ...அவங்களுக்கெல்லாம் என் மேல் கோபம்!...அப்படித்தானே?” சொல்லி விட்டு ஏர்போர்ட் என்று கூடப் பார்க்காமல் சத்தம் போட்டுச் சிரித்தார்.

“அக்காக்களுக்கு கோபம்!...பட் அம்மாவுக்கு கோபம் இல்லை!...ஏன்னா...அவங்க இந்த உலகத்திலேயே இல்லை!” பவ்யமாய்ச் சொன்னான் தியாகு.

“வாட்?...உன் அம்மா இறந்திட்டாங்களா?....எப்போ?...எப்போ?...” உண்மையான அதிர்வு அவர் குரலில் தெரிந்தது.

“ஆறேழு வருடங்களுக்கு முன்பே அம்மா இறந்திட்டாங்க” கரகரத்துச் சொன்னான் தியாகு.

“ஓ...மை காட்?” என்று கீழே குனிந்து கண்களை மூடித் தன் சோகத்தை மென்ற வெள்ளிங்கிரி, மெல்லத் தலையைத் தூக்க, கண்களின் ஓரம் ஈரம் உருவாகியிருந்தது.

தியாகுவுடன் ஒட்டிக் கொண்டு நின்றிருந்த செல்வியை மூலும் கீழுமாய்ப் பார்த்து விட்டு, “இது...உன் மனைவியா?” கேட்டார்.

“ஆமாம்” என்றான்.

“என்னப்பா...உன்னோட செலக்‌ஷன் அவ்வளவு நல்லாயில்லையே?” என்று சிறிதும் யோசிக்காமல் அவர் கூற,

பற்களை “நற...நற”வென்று கடித்துக் கொண்டாள் செல்வி.

“சரி...இப்ப நாம எங்க போகப் போறோம்?...” தியாகுவின் முகத்தைப் பார்த்து வெள்ளிங்கிரி கேட்க,

“என் வீட்டுக்குத்தான்”

“அப்ப...என் மகள்களை ஈவினிங் அவங்க வீட்டுல போய் சந்திக்கலாம்!ன்னு சொல்றே?.....அப்படித்தானே?”

அங்கு நடந்த விஷயங்களை அறியாத வெள்ளிங்கிரி, சாதாரணமாய்க் கேட்டார்.

“ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலைச் சொல்லி விட்டு முன்னே நடந்தான் தியாகு.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அவரை ஒரு டாக்ஸியில் ஏற்றியவன், டாக்ஸி டிரைவரிடம் தன் வீட்டு முகவரியைக் கொடுத்து முன்னால் அனுப்பி விட்டு, பைக்கில் அந்த டாக்ஸியைப் பின் தொடர்ந்தான் தியாகு.

“என்னங்க...உங்க அப்பா நம்மை மாதிரி இல்லாம...வேற மாதிரியாய் இருக்கார்!” பைக்கில் போகும் போது செல்வி தியாகுவின் காதோரம் சொல்ல,

“என்னடி சொல்றே?”

“எனக்கென்னவோ அவரைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவரைப் பிடிக்கலைங்க!...ஒரு பெரிய மனுஷன் மாதிரிப் பேசாம “உன்னோட செலக்‌ஷன் நல்லாயில்லை”ன்னு என்னைக் காட்டிச் சொல்றார்!...ம்ஹூம்...இவரைக் கொண்டு போய் நம்ம வீட்டுல...நம்ம கூட...வெச்சுக்கறதை நினைச்சா இப்பவே அடி வயித்துல புளியைக் கரைக்குதுங்க!...மோசமான கெழவன்” அந்தக் கடைசி இரண்டு வார்த்தைகளை மட்டும் சத்தமின்றி சொன்னாள் செல்வி.

“ச்சூ...சும்மா தொண தொணக்காம கொஞ்ச நேரம் அமைதியா வா!...ஒரு வருஷம் ரெண்டு வருஷமல்ல...இருபது வருஷத்துக்கும் மேலா வெளிநாட்டுல வாழ்ந்தவர்...கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்!” என்றான் தியாகு.

அந்தப் பணக்காரக் கிழவனால் தங்களுக்குக் கிடைக்கப் போகும் பெரும் சொத்தை எண்ணி தன் வாயை அடைத்துக் கொண்டாள் செல்வி.

அதே நேரம் தியாகுவின் மனதில் ஒரு நெருடல் ஊர்ந்து கொண்டிருந்தது. “இவ சொல்றதும் ஒரு வகைல யோசிக்க வேண்டிய விஷயமாய்த்தான் இருக்கு!...எங்கப்பா இங்க இருக்கும் போது எப்படி இருந்தாரு?...எப்படி வாழ்ந்தாரு? என்பதெல்லாம் எனக்கு சுத்தமா ஞாபகத்துல இல்லை!...ஆனா...இப்ப அவரு வந்து இறங்கியிருக்கற ஷோக்கைப் பார்த்தா அவரைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் வர மாட்டேங்குதே!...என்ன பண்ணலாம்?” யோசித்தவாறே பைக்கைச் செலுத்தியவன் வீட்டை அடையும் முன் தன் நெருடலுக்கு ஒரு தற்காலிகத் தீர்மானம் போட்டு மூடி வைத்தான். “அவரு எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும்...சொத்து என் கைக்கு வர்ற வரைக்கும் அவரோட எல்லா அழிச்சாட்டியங்களையும் பொறுத்துக்குவோம்!...சொத்து கை மாறின மறுநாளே அவரை பேக் பண்ணி சிங்கப்பூருக்கே அனுப்பிடுவோம்!...“போக மாட்டேன்!”னு முரண்டு பண்ணினாருன்னா...இங்கியே ஏதாவதொரு முதியோர் இல்லத்துல கொண்டு போய்த் தள்ளிடுவோம்!”

அந்தக் கால் டாக்ஸி தியாகுவின் வீட்டு முன் நின்ற அடுத்த ஐந்தாவது நிமிடம், தியாகுவின் பைக்கும் வந்து சேர்ந்தது. கால் டாக்ஸிக்காரனுக்கு வாடகையைக் கொடுத்தனுப்பினான் தியாகு. செல்வியோ அவசர அவசரமாய்ச் சென்று கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டைத் திறந்தாள்.

டாக்ஸியை விட்டிறங்கி, வீட்டிற்கு வெளியில் நின்று அந்த வீட்டை நிதானமாய் நோட்டமிட்ட வெள்ளிங்கிரி கேட்டார், “சொந்த வீடாப்பா?”

“ஆமாம்ப்பா”

உதட்டைப் பிதுக்கியவர், “என்னப்பா வீடு இது?....சிங்கப்பூர்ல பறவைகளை வளர்க்கறதுக்கு!ன்னு ஒரு மூங்கில் வீடு கட்டுவாங்க!...அது மாதிரியல்ல இருக்கு உன்னோட வீடு?” என்றதும்,

“அப்பா...இது நான் கட்டிய வீடில்லை..ஏற்கனவே கட்டிய வீட்டைத்தான் வாங்கினேன்” உள்ளுக்குள் லேசாய்த் தலை தூக்கிய கோபத்தை விழுங்கிக் கொண்டு சொன்னான் தியாகு.

“ஓ...”என்று தாடையைத் தேய்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்த வெள்ளிங்கிரி, “ஆமாம் உனக்கு எத்தனை குழந்தைகள்?” கேட்டார்.

“இன்னும் குழந்தை பெத்துக்கலை”

“ஏன்?...கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு?” இதழோரம் ஒரு இளக்காரப் புன்னகை விரியக் கேட்ட தந்தையை விழிகளைச் சுருக்கிக் கொண்டு பார்த்த தியாகு, “ஒரு வருஷம்தான் ஆச்சு” என்றான்.

“அதனாலென்ன?...நானெல்லாம் கல்யாணம் பண்ணிப் பத்தாவது மாசத்துல உங்க பெரியக்காவைப் பெத்துட்டேன்” பெரிய சாதனையைப் போல் அவர் சொல்ல,

“நீங்களா பெத்தீங்க?...என்னோட அம்மா பெத்தாங்க” என்றான் தியாகு எரிச்சலோடு.

“ஹா...ஹா...ஹா”வென்று உரக்கச் சிரித்தார் வெள்ளிங்கிரி.

சமையலறைக்குள்ளிருந்த செல்விக்கு எரிச்சலாயிருந்தது. “ஹும்...இந்தாளெல்லாம் என்ன பெரிய மனுஷன்?...இருபத்திரெண்டு வருஷமா பொண்டாட்டி குழந்தைகளைத் தவிக்க விட்டுட்டு...எங்கியோ உருண்டு பொரண்டு திரிஞ்சிட்டு வந்து பேசற பேச்சைப் பாரு?...த்தூ...இது மூஞ்சில முழிக்கவே கேவலப்பட்டுக்கிட்டு இது பெத்த பொண்ணுக ரெண்டும் இதை உதறித் தள்ளிடுச்சுக...அது தெரியாம இது “பத்தே மாசத்துல பெரியக்காவைப் பெத்துட்டேன்....பதினஞ்சே மாசத்துல பேரீச்சம்பழத்தைப் பெத்துட்டேன்”ன்னு பேசிட்டிருக்கு”

அப்போது சமையலறைக்குள் வந்த தியாகு, “அப்பாவுக்கு லன்ச்...நீ பிரிப்பேர் பண்ணிடறியா?...இல்லை வெளிய போய் வாங்கிட்டு வந்திடவா?” கேட்டான்.

“ம்ம்ம்...அந்த வேலையே ஆகாது!...நான் வெளிநாட்டுல கண்ட கருமாந்தரங்களைத் தின்னு தின்னு நாக்கு செத்துப் போய் வந்திருக்கேன்...எனக்கு வீட்டு சமையல்தான் வேணும்!” கொஞ்சமும் லஜ்ஜையில்லாமல் சமையலறைக்குள்ளேயே வந்து நின்ற தன் அல்டாப்பு மாமனாரைப் பார்க்கப் பார்க்க உடம்பெல்லாம் எரிந்தது செல்விக்கு.

“அப்படின்னா....கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க...நானே சமைச்சுப் போடறேன்” வெளியில் புன்னகைத்துக்குக் கொண்டு, உள்ளே கொதித்துக் கொண்டு சொன்னாள் செல்வி.

“தட்ஸ் குட்” என்றவாறே வெள்ளிங்கிரி அங்கிருந்து நகர, தியாகுவை இடித்தாள். “ம்ஹூம்...எனக்கென்னமோ இந்த மனுஷன் கூட குப்பை கொட்டுறது சிரமம்!ன்னு தோணுது”

“ப்ச்...வேற வழியேயில்லை!...மொத்த சொத்தும் நமக்கே வரணும்!ன்னா...பொறுத்துத்தான் ஆகணும்!...அப்படியில்லாம நானோ...நீயோ...அவர் மேலே கோபத்தைக் காட்டினோம்!ன்னா....அவரு எப்படியாவது எங்க அக்காக்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடிச்சு அங்க போய் ஒட்டிக்குவாரு!...அதுக்கப்புறம் அவ்வளவுதான்....சொத்துல ஒரு பைசா கூட நமக்குத் தேறாது!” என்றான் தியாகு.

“அதுதான் நடக்காதே?...உங்க அக்காக்கள் ரெண்டு பேரும் இவரைச் சேர்த்துக்கறதில்லை!ன்னு உறுதியாய் இருக்காங்களே?...”என்றாள் செல்வி.

“ஏய்...மனுஷ மனசு எல்லா நேரமும் ஒரே மாதிரி...ஒரே உறுதில...இருந்திட்டா அது மனுஷ மனசே இல்லைடி!...எங்க அக்காக்களையும் நம்ப முடியாதுடி!...நான் எப்படி அங்க ஒரு மாதிரிப் பேசிட்டு வந்திட்டு...இங்க வேற மாதிரி நடந்துக்கறேன்!...அதே மாதிரி மத்தவங்ளும் நடந்துக்க மாட்டாங்க!ன்னு என்னடி நிச்சயம்?” தெளிவாய் விளக்கினான் தியாகு.

சில விநாடிகள் யோசித்த செல்வி, “ஆமாங்க...அப்படிக் கூட நடந்தாலும் நடக்கும்!...அதனால நாம உங்கப்பாவை மேக்ஸிமம் பொறுத்துக்குவோம்” என்றாள்.

“சரி...சரி...பேசிட்டே நிக்காதே...அப்பா இன்னொரு தரம் கேட்கறதுக்கு முன்னாடி சமையலை ஆரம்பிச்சிடு” என்றான் தியாகு.

“ஓ.கே.!...ஓ.கே.”
*****​

இரவு ஏழு மணி வாக்கில், வெள்ளிங்கிரி கேட்டார். “ஏம்பா...என் மூத்த பொண்ணு சரசு வீடு இங்கிருந்து ரொம்ப தூரமா?”

“அப்பா...சரசக்கா இருக்கறது காரமடையிலே...ஆனா இப்ப இங்க வந்திருக்காங்க!...திலகாக்கா வீட்டுல இருக்காங்க” என்றான் தியாகு.

“ஓ...நான் வருவேன்!...என்பதற்காக வந்திருக்காளா சரசு?” ஆசையோடு கேட்டார் வெள்ளிங்கிரி.

“ம்ம்ம்...உங்க மூஞ்சில காறித் துப்பறதுக்காக வந்திருக்கா” செல்வியின் மைண்ட் வாய்ஸ் கூவியது.

“ஆமாம்ப்பா” என்று சும்மாவாகிலும் சொன்னான் தியாகு.

“திலகா வீட்டுலதான் சரசுவும் இருக்கான்னா ரொம்ப சௌகரியமாய்ப் போச்சு...ஒரே நேரத்துல ரெண்டு பேரையுமே பார்த்திடலாமே?...என்ன சொல்றே?” என்றார் வெள்ளிங்கிரி.

அவரது அந்தக் கேள்விக்கு சரியானதொரு பதிலைச் சொல்ல முடியாமல் இறுக்க முகத்தோடு தியாகு உட்கார்ந்திருக்க, “என்னப்பா...என்னாச்சு?...ஏன் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கே?” கேட்டார்.

“அப்பா...அது வந்து...சரசு அக்காவும் சரி...திலகா அக்காவும் சரி...உங்களைப் பார்க்கவோ...உங்க கூடப் பேசவோ...உங்க கூட உறவைப் புதுப்பிச்சுக்கவோ விரும்பலை!...நீங்களே வலியப் போய் பேசினாலும், “நீங்க யாரு?ன்னு தெரியலை”ன்னு உங்க மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்லக் காத்திட்டிருக்காங்க!...” உண்மையைப் போட்டுடைத்தான் தியாகு.

சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்த வெள்ளிங்கிரி, “அவங்க கோபமும் நியாயம்தான்!...இருபது...இருபத்திரெண்டு வருஷமா பொண்டாட்டியும்...குழந்தை குட்டிகளும் என்ன ஆனாங்க?ன்னு கூடப் பார்க்காம எங்கியோ கண் காணாத தேசத்துக்குப் போய் ஒளிஞ்சுக்கிட்ட அப்பாவை எந்தப் பொண்ணுகளுக்குத்தான் பிடிக்கும்?...” தன்னிலையை உணர்ந்து பேசினார்.

அந்தச் சரியான நேரத்தில் தன் புருஷனின் பெருந்தன்மைக் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாய் செல்வி சொன்னாள். “அவங்க இவரையும் அதே மாதிரி இருக்கச் சொல்லி கட்டளை போட்டிருக்காங்க!...இவரும் அவங்க கிட்ட “சரி”ன்னு சொல்லிட்டு வந்துட்டாரு!...ஆனா...ரெண்டு நாள் ராத்திரி தூங்காம யோசிச்சு...யோசிச்சு...கடைசில, “என்ன இருந்தாலும் என்னைப் பெத்த அப்பன் அல்லவா?...அவருக்கு என்னை விட்டா வேற யார் இருக்கா?...இன்னிக்கும் நான் போடற “வி”ங்கற இனிஷியல் அவரோட பேர்தானே?...அட்லீஸ்ட் அந்த நன்றிக்காகவாது அவரை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தே ஆகணும்”ன்னு பிடிவாதமா முடிவு பண்ணினார்”என்றாள்.

திரும்பி, தன் மகனைப் பெருமையோடு பார்த்து, இறுக கட்டிக் கொண்டார்.

“பெருமையாய் இருக்குப்பா!” அவர் குரல் தழுதழுத்தது.

“அப்பா...அதுக்காக நாம அந்த அக்காக்களை ஒதுக்கிட வேண்டாம்!...வெய்ட் பண்ணுவோம்...அவங்க சூடு இன்னிக்கு இல்லாட்டியும் என்னிக்காச்சு ஒரு நாள் மாறும் அப்ப போய்ப் பார்ப்போம்....பேசுவோம்” நல்லவனைப் போல் பேசினான் தியாகு.

“சரிப்பா...சரிப்பா” என்றார் வெள்ளிங்கிரி.

“அப்பா...உங்களுக்கு அந்த லெப்ட் சைடு ரூமை ரெடி பண்ணியிருக்கேன்...அங்க படுத்துக்கங்க”என்று அந்த அறையைக் கை காட்டினான் தியாகு.

“ம்ம்” என்றவாறே தன் சிறிய சூட்கேஸை எடுத்துக் கொண்டு அந்த அறை நோக்கி நடந்தார் வெள்ளிங்கிரி.

அவர் முதுகிற்குப் பின்னால் அவரது நடையை பரிகாசம் செய்தாள் செல்வி.

காஸ் அடுப்பில், குக்கர் “உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று பெரிதாய் உஷ்ண மூச்சை வெளியேற்ற, அதை விட ஆவேசமாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் திலகா.

“அத்தனை தூரம் சொன்னோம்...மண்டையை மண்டையை ஆட்டிக் கேட்டுக்கிட்டு கடைசில பொண்டாட்டியோட நேரில் போய் ஏர்போர்டிலேயே அப்பனை வரவேற்று...வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் வெச்சிருக்கான் தியாகு!...இவனையெல்லாம் என்ன பண்ணினாத் தகும்?”
“எனக்கென்னமோ இதெல்லாம் அவனா பண்ணின மாதிரித் தெரியலை...அதான் காதல் பொண்டாட்டி ஒருத்தியைக் கூட வெச்சிருக்கானே?...அவதான் சொல்லிக் குடுத்துப் பண்ண வெச்சிருப்பா” இது சரசுவின் கருத்து.

“அம்மா செத்த போது கூட வராத அந்த மனுஷனை வீட்டுக்குள்ளார சேர்த்தா பாவம் பிடிச்சுக்கும்” திலகா சொல்ல,

சமையலறைக்குள்ளிருந்து ஹால் வரை கேட்கும் அந்தப் புலம்பல் சத்தங்களைக் கேட்டு, பேப்பர் படித்துக் கொண்டிருந்த திலகாவின் கணவர் ஞானமூர்த்தி எழுந்து வந்தார். “த பாருங்க....உங்க தம்பியோட தொழில் என்ன?” வந்தவுடன் கேட்டார்.

“ம்ம்ம் ஃபைனான்ஸ்”என்றாள் திலகா.

“அப்படின்னா என்ன?...தெளிவாய்ச் சொல்லு”

“வட்டிக்குப் பணம் குடுத்து வாங்கறது” விளக்கினாள் திலகா.

“கரெக்ட்...அதனாலதான் அவன் இந்தப் பிரச்சினையையும் ஃபைனான்ஸியலாவே பார்த்திருக்கான்!”

பெண்கள் இருவரும் எதுவும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள,

(தொடரும்)
 

Mukil dinakaran

New member
Aug 4, 2020
12
0
1
“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460

அத்தியாயம் - 3

“புரியலையா?...இருபத்திரெண்டு வருஷமா வெளிநாட்டுல சம்பாதிச்சு...அப்பன் நிறைய சொத்து சேர்த்து வெச்சிருப்பான்...அதைத் தனி ஒருவனாய்த் தானே அடையணும்!கற எண்ணத்துல உங்க தம்பி இந்த வேலையைச் செஞ்சிருக்கான்” ஞானமூர்த்தி தன் அனுமானத்தைச் சொன்னார்.

“ச்சீய்...யாருக்கு வேணும் அவரோட காசு..பணம்?...காட்ட வேண்டிய காலத்துல...முறையான...அன்பையும் பாசத்தையும் குழந்தைக மேலே காட்டி, அதுக கூடவே இருந்து, கஞ்சியையோ கூழையோ ஊட்டி, அதுகளை வளர்த்திருந்தா அது...அதுதான் உண்மையான வாழ்க்கை!...பெரிய சொத்து!...அதை விட்டுட்டு எங்கியோ கடல் கடந்து போய் தானாத் தனியா பொழைச்சிட்டு, பெத்த குழந்தைகளைத் தெருவுல அனாதைகளாய்த் திரிய விட்டுட்டு, கடைசில சொத்தை மட்டும் கொண்டு வந்து நீட்டினா...இழந்து போன அந்த சுகமெல்லாம் திரும்பக் கிடைச்சிடுமா?” பொரிந்து தள்ளினாள் சரசு.

“நீங்க அப்படிச் சொல்றீங்க...ஆனா உங்க தம்பிக்கு அந்தச் சொத்து வேண்டியிருக்கே” என்றார் ஞானமூர்த்தி.

மெல்ல சமையலறைக்குள் எட்டிப் பார்த்து, நிதானமாய் உள்ளே வந்த சரசுவின் கணவர் தங்கவேலு, “த பாருங்க...எதுக்கு சும்மா “வள...வள”ன்னு பேசிட்டிருக்கீங்க?...மூணு பேரும் சேர்ந்து உங்கப்பனை ஒதுக்கிடலாம்!னு தீர்மானம் போட்டீங்க!...அதுல ஒருத்தன் புட்டுக்கிட்டான்...அப்பனைச் சேர்த்துக்கிட்டான்!...ஆண் வாரிசே சம்மதிச்சிட்டுது....இனி உங்க அப்பன் இங்க இருக்கறதை யாராலும் தடுக்க முடியாது!...மொத்ததுல...உங்க ஆவேசம்...ஆக்ரோஷம்...தீர்மானமெல்லாம் நீர்த்துப் போச்சு...அதனால...நீங்களும் உங்கப்பன் கூட மனசார இல்லாட்டியும்...சும்மா மேம்போக்கா பேசிட்டுப் போய்க்கிட்டே இருங்க!...அதுதான் பொழைக்கற பிள்ளைக்கான வழி” என்றார்.
வலது உள்ளங்கையால், இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்திக் கொண்டாள் திலகா, “ச்சே...எல்லாத்தையும் ஒரே நிமிசத்துல முடிச்சுக் கட்டிட்டான் இந்த தியாகு!”

“விடு...விடு!....உங்க அக்கா வீட்டுக்காரர் சொன்ன மாதிரி நீங்களும் உங்கப்பன் கூட இணக்கமா இருக்கற மாதிரி நடிச்சு...கிடைக்கறதை வாங்கிட்டுப் புத்திசாலித்தனமா பொழைங்க” என்றார் ஞானமூர்த்தி. ஆண்கள் இருவரும் ஒரே கருத்தைச் சொல்லிய போதும், பெண்கள் சற்றும் இணங்கவில்லை.

“த்தூ...யாருக்கு வேணும் அந்தக் காசு?...”என்று உரத்த குரலில் சொன்ன சரசு, திலகாவின் பக்கம் திரும்பி, “ஏண்டி...உனக்கு வேணுமாடி?” என்று தங்கையைப் பார்த்துக் கேட்டாள்.

அவள் கையெடுத்துக் கும்பிட்டு, “அய்யோ...வேண்டவே வேண்டாம் சாமி” என்கிற மாதிரி தலையை வேகமாய்க் குறுக்கே ஆட்டினாள்.

“போதுமா...எங்க ரெண்டு பேர் உடம்பிலேயும் ஓடறது...எங்கம்மாவோட ரத்தம்!... அன்னிக்கே அவ தன்னோட மூணு குழந்தைகளையும் கிணத்துல தள்ளிட்டுத் தானும் தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கலாம்!...ஆனா அவ செய்யலை!..அப்படி அவ செஞ்சிருந்தாள்ன்னா...இன்னிக்கு நாமெல்லாம் ஏது?......ஊர் முன்னாடி கௌரவமா பொழைச்சுக் காட்டினாளே?...தன்னோட வியர்வையைச் சிந்தி சம்பாதிச்சுப் போட்டு அவ வளர்த்தின இந்த உடம்பு...எந்தப் பயலோட சொத்துக்கும் ஆசைப் படாது!...” சரசு தாயின் தியாகங்களை நினைவு கூர்ந்து பேசினாள்.

“இப்பச் சொல்றேன் எழுதி வெச்சுக்கங்க!...எங்களையெல்லாம் அனாதைகளாய்த் தவிக்க விட்டுட்டு...சம்பாதிச்ச அந்தப் பாவச் சொத்தை எங்கப்பனும் அனுபவிக் மாட்டான்!...அதுக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அவன் பின்னாடி ஓடுன என் தம்பியும் அனுபவிக்க மாட்டான்!...எவனோ மூணாம் மனுஷனோ...இல்லை மனுஷங்களோ...தான் அனுபவிக்கப் போறாங்க!” சாபமிட்டாள் திலகா.

“ஏய்...திலகா! பாவச் சொத்தை அனுபவிக்கப் பயப்பட்டதெல்லாம் அந்தக் காலம்!...இப்பெல்லாம் அந்தச் சொத்துலதான் ஒவ்வொருத்தனும் மேலே ஏறிக்கிட்டிருக்கான்!...அப்படிப் பாவ புண்ணியம் பார்த்தா இன்னிக்கு எவனுமே இந்தச் சமுதாயத்துல இருக்க முடியாது!...நூத்துல தொண்ணூத்து ஒன்பது சதவீத மக்கள் பாவச் சொத்துலதான் வாழ்ந்திட்டிருக்காங்க!...அரசியல்வாதிக சம்பாதிச்சுச் சேர்த்ததெல்லாம் நேர்மையான வழில சம்பாதிச்சதா?...சினிமாக்காரங்க கோடி கோடியாய்க் குவிக்கறதெல்லாம் நல்ல சொத்துக்களா?...பெரிய பெரிய பிசினஸ் மேக்னெட்டுகளெல்லாம் பேங்குல “ஆயிரம் கோடி...ரெண்டாயிரம் கோடி”ன்னு கடனை வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிடறானுக...அவனுகெல்லாம் செத்தா போயிட்டானுக!..அங்க போய் ஜாலியாய் இருக்கானுகளே!...” ஞானமூர்த்தி சொல்லிக் கொண்டே போக,

“இப்ப நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?” கணவரை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டாள்.

“ஒண்ணுமில்லை தாயி...நடைமுறை யதார்த்தத்தைச் சொன்னேன்!...அவ்வளவுதான்” என்று அங்கிருந்து நழுவினார் ஞானமூர்த்தி.

அந்த ஞானமூர்த்தியின் உள்ளத்தில் “வர்ற ஸ்ரீதேவியை வேண்டாம்”ன்னு சொல்றாளே மனைவி” என்கிற ஆதங்கம் லேசாய் இருந்தாலும், மூத்தவள் சரசுவின் கணவர் தங்கவேலுவின் மனம் அந்த சகோதரிகளின் உறுதிப்பாட்டை உள்ளுக்குள் மெச்சி..மகிழ்ந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

எங்கோ வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த தியாகுவிடம் வெள்ளிங்கிரி கேட்டார், “என்னப்பா...இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை...இன்னிக்குமா உனக்கு வெளி வேலை?”

“ஆமாம்ப்பா...சில ஆளுங்களை ஞாயிற்றுகிழமை மாதிரி லீவ் நாள்லதான் பிடிக்க முடியும்...வசூல் பண்ண முடியும்”

மெலிதாய்ச் சிரித்த வெள்ளிங்கிரி, “டேய் தியாகு...நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே?...சும்மா பத்தாயிரத்தையும்...இருபதாயிரத்தையும் வட்டிக்கு குடுத்துட்டு...அதை வசூல் பண்ண...பைக்கை எடுத்துக்கிட்டு ஊர் பூராவும் சுத்தறியே...பெட்ரோல் செலவு போக உனக்கு என்ன மிஞ்சும் அதுல?” கேட்டார்.

“என்ன பண்றது?....என்கிட்டே இருக்கறதைத்தானே வட்டிக்கு விட முடியும்?...ஆயிரக் கணக்குல கடன் குடுத்தா...அதுக்குத் தகுந்த அளவுக்கு வட்டி வரும்!...லட்சக் கணக்குல கடன் குடுத்தா அதுக்கேத்த மாதிரி வட்டி கிடைக்கும்?...ஆனா எனக்கு ஆயிரக் கணக்குல குடுத்து வாங்கத்தானே திராணி இருக்கு?”

“அதே கோடிக் கணக்குல குடுத்தா எவ்வளவு வட்டி கிடைக்கும்?” வெள்ளிங்கிரி கேட்க,

“ஹும்...கோடிக் கணக்குல கடன் குடுக்கற அளவுக்கு எனக்கு வசதியிருந்தா நான் இன்னேரம் மல்டி மில்லியனர் ஆயிருப்பேனே?” தியாகு சொன்னான்.

“நான் தர்றேன்...இனிமேல் ஆயிரத்துல பிசினஸ் பண்ணாம...கோடில பிசினஸ் பண்ணு...” வெள்ளிங்கிரி ஒரு இன்ப அதிர்ச்சியை அள்ளி விட்டார்.

உள் அறைக்குள்ளிருந்து ஓடோடி வந்த செல்வி, “வேண்டாம் மாமா!...வேண்டவே வேண்டாம்!...நீங்க குடுக்கற அந்தக் காசுக்கு ஆசைப்பட்டுத்தான் நாங்க உங்களுக்கு இங்கே அடைக்கலம் தந்திருக்கோம்!ன்னு இவரோட அக்காக்கள் நாக்குல நரம்பில்லாமல் சொல்லுவாங்க மாமா” என்றாள் பயப்படுவது போல் நடித்தவாறே. அவள் உள்மனம் “அப்பாடா இப்பத்தான் கிழவன் தன் வாயாலேயே “நான் குடுக்கறேன்”னு சொல்லியிருக்கான்!...இது போதும்...இது போதும்” என்று குதூகலித்தது.

“அதிலென்ன தப்பிருக்கு?...இருபத்திரெண்டு சிங்கப்பூர்ல உழைச்சு, நான் சேர்த்துக் கொண்டு வந்திருக்கற சொத்துல என் மகனுக்கு ஒரு பங்கு குடுக்கறேன்!...அதை யார்...எப்படி...குறை சொல்ல முடியும்?” வெள்ளிங்கிரி கேட்டார்.

“இல்லை...அவங்களுக்கும் அந்தச் சொத்தில் பங்கு உண்டல்லவா?” தியாகு பொடி வைத்தான்.
“நிச்சயமா உண்டு!...ஆனா அது எப்போ?ன்னா..அவங்களும் என் மேல் உள்ள கோபத்தை மறந்து...என்னைத் தேடி வர்றாங்களோ...அப்பத்தான்” என்றார் வெள்ளிங்கிரி.

“அது சரிதான்!...ஆனாலும்..சட்டம்!ன்னு ஒண்ணு இருக்கே?”

“இருக்கட்டும்!...நான் தர மாட்டேன்!னு சொன்னாத்தானே சட்டம் பேசும்?...நாந்தான் என்னைத் தேடி வந்தா தர்றேன்!னு சொல்றேனே?...”என்றவர், “டேய்...தியாகு!...எப்பவும் சட்டத்தை மட்டுமே பார்க்கக் கூடாது!...அதில இருக்கற ஓட்டைகளையும் பார்க்கணும்!...சட்டத்தை மட்டுமே பார்த்தா சம்பாதிக்க முடியாது!...நேர்வழில போனா....நெல்லிக்காய் அளவுதான் கிடைக்கும்...குறுக்கு வழில போனா கோபுர அளவு கிடைக்கும்!” வித்தியாசமாய்ச் சொன்னார் வெள்ளிங்கிரி.

தந்தையின் அடிமனதில் தன் இரு மகள் மீது ஒரு பாச இழை ஓடிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்ட தியாகுவும், அவன் மனைவி செல்வியும், எப்பாடு பட்டாவது அதை மாற்றி, அவரது மொத்தக் கோபமும் அந்த மகள்கள் மீது பாயும்படி செய்வதற்காகவே அவரிடம் போலித்தனமாய் அன்பு காட்டி, பாசாங்குத்தனமாய் நடித்தனர். அவரை விழுந்து விழுந்து கவனித்தனர். அவரது சொத்தின் மீது துளியும் ஆர்வமில்லாதவர்களைப் போலவே நடந்து கொண்டனர்.

செல்வி மட்டும் ஒவ்வொரு இரவும் தன் கணவருக்கு புதுப் புது வித்தைகளை தலையணை மந்திரமாய் ஓதிக் கொண்டேயிருந்தாள், “அன்னிக்கு உங்கப்பா என்ன சொன்னார்?...“கோடில பிசினஸ் பண்ணு...பணம் நான் தர்றேன்”னு சொன்னார் அல்ல?...அதை மறுபடியும் மறுபடியும் ஞாபகப்படுத்தி...ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்!னு சொல்லுங்க!...அவர் தயங்கினார்!ன்னா அவரையும் பார்ட்னரா போட்டுக்கலாம்!னு சொல்லுங்க!...”

இந்த உலகில் எந்த மந்திரம் பலிக்கின்றதோ இல்லையோ...தலையணை மந்திரம் மட்டும் பலிக்காமல் போனதேயில்லை.

அடுத்த நாளே தியாகு கேட்டு விட்டான்.

“அப்பா...முந்தா நாள் நீங்க சொன்னதை நல்லா யோசனை பண்ணிப் பார்த்தேன்!...சும்மா ஆயிரத்துல பிசினஸ் பண்ணிட்டிருந்தா சின்ன அளவு லாபத்தைத்தான் பார்க்க முடியும்!னு புரிஞ்சுக்கிட்டேன்!...அதனால...உங்க உதவியோட...“சில்வர் ஹில் ஃபைனான்ஸ் கம்பெனி”ன்னு ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கலாம்!ன்னு இருக்கேன்!...அதுல நீங்களும்...நானும் பார்ட்னர்ஸ்!...நாம அப்படித் தொழில்ல இறங்கிட்டோம்ன்னா...அக்காக்கள் ரெண்டு பேரும் குறுக்கே வர மாட்டாங்க!” தியாகு விளக்கினான்.

“ம்ம்ம்...அதுவும் நல்ல யோசனைதான்!” என்ற வெள்ளிங்கிரி, “அது செரி...அதென்னப்பா சில்வர் ஹில்?” தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“சில்வர்...ன்னா வெள்ளி” ... “ஹில்....ன்னா மலை...அதாவது கிரி”... என்றான் தியாகு.

“ஓ...என் பெயரைத்தான் ஆங்கிலத்துல மொழி பெயர்த்திருக்கியா?” சந்தோஷமானார் வெள்ளிங்கிரி.

அவரது அந்த சந்தோஷ மனநிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் எண்ணதோடு, “அப்பா...நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?” பீடிகை போட்டான் தியாகு.

“ம்ம்ம்...கேளு” என்றார் வெள்ளிங்கிரி ஒரு சிறிய யோசனைக்குப் பின்.

“வந்து...உங்களோட மொத்தச் சொத்து எவ்வளவு இருக்கும்?னு நான் தெரிஞ்சுக்கலாமா?” லாவகமாய்க் கேள்வியை வைத்தான் தியாகு.

சட்டென்று முகம் மாறிய வெள்ளிங்கிரி, “நோ...இப்போதைக்கு அதைக் கேட்காதே!...அதுவா தெரிய வரும் போது தெரிஞ்சுக்கோ” என்றார்.

அவரது அந்த பதில் தியாகுவுக்குள் லேசான அதிர்வை உண்டாக்கிய போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஸாரிப்பா...நான் கேட்டிருக்க கூடாது!...தெரியாமல் கேட்டுட்டேன்!...என்னை மன்னிச்சிடுங்க!” என்றான் நல்ல பிள்ளையைப் போல்.

“பரவாயில்லைப்பா...” என்றவர், “ஃபைனான்ஸ் கம்பெனி துவங்குவதற்குத் தேவையான பூர்வாங்க வேலைகளை நீ உடனே ஆரம்பி...நான் என்னோட பேங்க் அக்கௌண்டிலிருந்து பணத்தை வெளிய எடுக்கற வேலைகளைப் பார்க்கிறேன்” என்றார்.

“எந்த பேங்க்ல உங்க அக்கௌண்ட்?” தியாகு கேட்டான்.

“ம்ம்ம்...எட்டு பேங்க்ல அக்கௌண்ட் இருக்கு!...அஞ்சு பேங்க்ல டெபாஸிட் இருக்கு!...மூணு பேங்க்ல லாக்கர் இருக்கு” என்று வெள்ளிங்கிரி அடுக்கிக் கொண்டே போக,

வாயைப் பிளந்தான் தியாகு. “ஆஹா...இவரு கைவசம் பல கோடிகள் இருக்கும் போலிருக்கே!...ம்ஹூம்...என்ன ஆனாலும் இவரை மட்டும் விட்டுவிடக் கூடாது!...அதே சமயம் இவரோட சொத்திலிருந்து ஒரு பைசா கூட அக்காக்களுக்கும் போகாமலும் பார்த்துக்கணும்!”

தவறு செய்த மனிதர்கள் நேர்மைக்குத் திரும்ப நினைத்தாலும், அவர்கள் செய்த தவறுகளுக்கான பதில் வினைகள் அவர்களைத் துரத்திக் கொண்டுதானிருக்கும். இதைப் புரிந்து கொள்ளாத சிலர் தவறான படிகளில் ஏறி சிகரத்தைத் தொட்டு விட்டு, அங்கிருந்தவாறே நல்ல படிக்கட்டுகளை நோக்கித் தாவி, கீழே விழுந்து தலை சிதறிப் போகிறார்கள்.

பணம் பாவத்தை மறைக்கலாம். ஆனால், பாவம் தான் தர வேண்டிய சம்பளத்தை மட்டும் தராமல் இருக்காது.
****​

காரமடை திரும்பியிருந்த சரசுவைப் போனில் அழைத்து, கோபாவேஷமாய் வார்த்தைகளைக் கொட்டினாள் திலகா.

“இந்த தியாகு என்ன வேலை பண்ணியிருக்கான் பார்த்தியா அக்கா?”

“என்னடி...என்ன பண்ணிட்டான்?” சரசு நிதானமாகவே கேட்டாள்.

“நம்ம பேச்சையெல்லாம் மீறி அப்பாவைப் போய்க் கூட்டிட்டு வந்து தன்னோட வெச்சிருக்கான்!...அதுவே தப்பு!...இப்ப அவர் கூடச் சேர்ந்து “சில்வர் ஹில் ஃபைனான்ஸ் கம்பெனி”ன்னு ஒரு கம்பெனி வேற ஆரம்பிக்கப் போறானாம்!” திலகா சொல்ல,

அதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போனாள் சரசு. மூத்தவளாய் இருந்த காரணத்தால், தன் தாய் பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் நேரில் பார்த்து உணர்ந்திருந்தாள் அவள். “ச்சே...அந்தப் பெண் தெய்வத்தை உதறித் தள்ளிட்டுப் போன கேவலமான மனுஷனுக்கு...அவர் தரப் போற சொத்துக்கு ஆசைப் பட்டு அடைக்கலம் குடுத்து வெச்சிருக்கானே இந்த தியாகு...இதுக்காகவா இவனை எங்கம்மா அத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க?”

“என்னக்கா நான் சொல்லிட்டேயிருக்கேன்...நீ பாட்டுக்கு அமைதியாயிருக்கே?” திலகா கொதித்தாள்.

“அதைத்தான் யோசனை பண்ணிட்டிருக்கேன்!” என்றவள் ஒரு சிறிய அமைதிக்குப் பின், “ஏண்டி திலகா நாம் ரெண்டு பேரும் தம்பியை நேரில் வரச் சொல்லிப் பேசலாமா?” கேட்டாள்.

“அவனா வருவான்?...வந்தா...எங்கே நாம் ரெண்டு பேரும் அவனுக்குக் கிடைக்கப் போற சொத்துக்குப் பங்கு வந்திடுவோமோ?ன்னு பயந்திட்டு வரவே மாட்டான்” என்றாள் திலகா.

“அப்ப இதுக்கு என்னதான் வழி?”

“அம்மாவோட ஆன்மா மேலேயிருந்து எல்லாத்தையும் பார்த்திட்டுத்தான் இருக்கு!...அது கவனிச்சுக்கும்!...நீ கவலைப்படாதே!” தங்கையை நாசூக்காய்ப் பேசி சமாதானப்படுத்தினாள் சரசு.

ஆனாலும் சமாதானம் அடையாமல் தொடர்ந்து பொருமிக் கொண்டேயிருந்த திலகா, ஒரு கட்டத்தில் அவளே சோர்ந்து போய், “சரிக்கா...நீ சொல்றபடியே நான் அமைதியா இருக்கேன்!...என்னதான் நடக்குது?ன்னு பார்த்திடுவோம்” என்று சொல்லி விட்டுப் போனை வைத்தாள்.

“சில்வர் ஹில் பைனான்ஸ் கம்பெனி”யின் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நகரின் மத்தியிலிருந்த அந்தப் புது பில்டிங்கின் முதல் தளத்தில், நவ நாகரீகமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அதன் அலுவலகத்தை உள்ளூர் எம்.எல்.ஏ.ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்தார்.
தன்னுடைய முந்தைய ஃபைனான்ஸ் தொழில் தனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, பல முக்கியப் பிரமுகர்களைக் கொண்டு வந்து குவிந்திருந்தான் தியாகு.

சகோதரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்தும் அவர்கள் வராதது குறித்து அவன் சிறிதும் கவலைப்படவில்லை.

அவன் மனைவி செல்வியோ, ஒரு படி மேலே போய், அவர்கள் வராமல் இருந்ததற்காக சந்தோஷப்பட்டாள்.

முதல் தினத்திலேயே, பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி, பல வாடிக்கையாளர்களை உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டான் தியாகு.

மகன் மீதிருந்த நம்பிக்கையில் பெரும் தொகையை வெள்ளிங்கிரி முதலீடு செய்திருந்தார்.

அன்று மாலை செய்தித்தாளில் வந்திருந்த “சில்வர் ஹில் ஃபைனான்ஸ் கம்பெனி”யின் துவக்க விழா செய்திகளையும், படங்களையும் பார்த்த திலகாவின் கணவர் ஞானமூர்த்தி புலம்பல் மூர்த்தியானார். “ஹும்...அப்பவே சொன்னேன்...“எல்லாத்தையும் மறந்திட்டு உங்கப்பன் கூடப் போய் ஒட்டிக்கங்க!”ன்னு கேட்டீங்களா?...இப்ப பாரு உங்க தம்பி புத்திசாலித்தனமாய்க் காய் நகர்த்தி ஒரு படி...ஒரு படி அல்ல...பத்துப் படி மேலே போயிட்டான்!...அக்காவும் தங்கச்சியும் வீணா வெட்டி வீராப்புப் பேசிக்கிட்டு வாசலுக்கு வந்த ஸ்ரீதேவியைத் துரத்தியடிச்சிட்டீங்க”

“த பாருங்க!...நாங்க ரெண்டு பேரும் நல்லவங்க!...எங்கம்மா எங்களை அப்படித்தான் வளர்த்திருக்கா!...காசு பணத்துக்காக மானம் மரியாதையையும், சூடு சொரணையையும் பரண் மேலே துக்கிப் போட்டுட்டு நடமாடுற ஜென்மங்களல்ல நாங்க!” திலகாவும் பதிலடி குடுத்தாள்.

“இந்தக் காலத்துல நல்லவங்களுக்கு சாகற வரைக்கும், நல்ல சோறு கூடக் கிடைக்காதுடி!...அக்கிரமக்காரர்களுக்குத்தான் அறுசுவை உணவு அன்றாடம் கிடைக்கும்...தெரிஞ்சுக்க!”

“இப்ப என்னங்கறீங்க?...எங்கப்பா முன்னாடி போய் “ஈஈஈஈ”ன்னு இளிச்சுக்கிட்டு... “நான்தான் உங்க ரெண்டாவது பொண்ணு...எனக்கும் ஏதாச்சும் பிச்சை போடுங்க”ன்னு கேட்கச் சொல்றீங்களா?” கோபமானாள் திலகா.

“அப்படி நான் சொல்லிட்டாலும் நீ உடனே கேட்டு...உடனே செஞ்சிடுவே பாரு...போடிப் போடி பொழைக்கத் தெரியாத மூதேவி!...இதுவே நானாயிருந்தா தியாகுவைத் தூக்கிச் சாப்பிட்டிருப்பேன்!” திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார் ஞானமூர்த்தி.

அதே நேரம்,

காரமடையில் சரசுவின் கணவர் தங்கவேலு தன் மனைவி சரசுவையும், அவள் தங்கை திலகாவையும் மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தார். “இந்தக் காலத்துல ஆம்பளை.. பொம்பளை...எல்லோரும் காசு பணத்தையும், சொத்து சுகத்தையும் தேடி, அதுக்குப் பின்னாடி பேயாட்டம் தலைதெறிக்க ஓடிக்கிட்டிருக்காங்க!...ஆனா நீங்க ரெண்டு பேரும் மட்டும் உங்க அம்மாவை நெனச்சு...அவங்க உங்களுக்காக செய்த தியாகங்களுக்கு நன்றி காட்டும் விதமாய்...உறுதியாய் நிக்கறது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம் சரசு!...உன் இடத்துல நான் இருந்திருந்தால் கூட உன்னை மாதிரி ஸ்ட்ராங்கா இருந்திருப்பேனோ?ன்னு சந்தேகமாயிருக்கு”

*****​

காலம் தன் சக்கரத்தை எந்தவித மாற்றமும் இன்றி உருட்டிக் கொண்டே போக, தியாகுவின் வாழ்க்கை முறையும் மாறிக் கொண்டே போனது.

ஆறே மாதத்தில் ஒரு ஹோண்டா சிட்டி காரை வாங்கி நிறுத்தியவன், அடுத்த ஆறாவது மாதத்தில் ஒரு தனி பங்களாவை வாங்கி கிரஹப்பிரவேசம் செய்தான்.

ஏனோ, சகோதரிகளுக்கு மட்டும் கிரஹப்பிரவேச இன்விடேஷனை அனுப்பாமல் விட்டு விட்டான்.

இனி தன் தந்தையைக் கொஞ்சம் கொஞ்சமாய் பிசினஸிலிருந்து விலக்கி விட்டு, தானே தனிக்காட்டு ராஜாவாய் வாழ நினைத்தவன் மெல்ல ஆரம்பித்தான். “அப்பா...இதுக்கு மேலேயும் சொத்துக்களையெல்லாம் உங்க பேரிலேயே வைத்திருப்பது ஆபத்து!...பேசாம உடனே என் பேருக்கு மாத்திடுங்க!...இல்லாட்டி உங்க மகளுக பங்குக்கு வந்தாலும் வந்திடுவாளுக”

“ஏம்ப்பா...நான் சிங்கப்பூரிலிருந்து வந்து ஒரு வருஷத்துக்கும் மேலாச்சு...இதுவரைக்கும் வந்து அப்பன் மூஞ்சியை எட்டி நின்னு கூடப் பார்க்காதவங்க இனிமேலா வரப் போறாங்க?” வெள்ளிங்கிரி சொல்ல,

“அப்பா...இப்ப நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி நல்லா ஓடறதையும், நாம கார்...புது பங்களா...ன்னு உயர்ந்துக்கிட்டே போறதையும் கூர்ந்து கவனிச்சுக்கிட்டுத்தான் இருப்பாங்க!...எந்த நேரத்திலும் வந்து நிற்பாங்க!...எனக்குத் தெரியும் அவங்களைப் பத்தி” எப்படியாவது மொத்தச் சொத்தையும் தன் பெயரில் மாற்றி விட வேண்டும், என்பதிலேயே குறியாயிருந்தான் தியாகு.

“யோசிச்சுப் பார்த்தா நீ சொல்றதும் சரியாய்த்தான் இருக்கு!...வேணும்ன்னா இப்படிச் செய்வோம்” என்று சொல்லி வெள்ளிங்கிரி நிறுத்த,

“எப்படி?”

(தொடரும்)
 

Mukil dinakaran

New member
Aug 4, 2020
12
0
1
“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460

அத்தியாயம் - 4

“மொத்தச் சொத்தையும் ரெண்டு பங்கா போடுவோம்!...ஒரு பங்கை நீ வெச்சுக்க...ஒண்ணு என்கிட்ட இருக்கட்டும்!...ஒருவேளை எதிர்காலத்துல அவங்க வந்து நின்னாங்கன்னா...நான்...என் பங்கிலிருந்து அவங்களுக்குக் குடுத்துடறேன்!...எப்படியும் என் பங்கு மட்டுமே இருபது கோடி தேறுமே?”

“அப்படின்னா இவரோட சொத்து மதிப்பு நாற்பது கோடியா?” மலைத்தான். “எப்படி...எப்படி சாத்தியம்?”

தன் சந்தேகத்தைக் கேட்டே விட்டான், “டாடி நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே?”

“என்னப்பா...பெரிசா பீடிகை போடறே?...என்ன விஷயம் தயங்காமக் கேளு”

“வந்து....இவ்வளவு குறுகிய காலத்துல நாற்பது கோடி சொத்து...எப்படி டாடி?”

மகன் அவ்வாறு கேட்டதும் வெள்ளிங்கிரியின் முகம் வெளிறிப் போனது. ஆனாலும், வெகு சாமார்த்தியமாய் தன் தடுமாற்றத்தை மாற்றிக் கொண்டு, “உழைப்புப்பா...கடும் உழைப்பு!...நான் சிங்கப்பூர்ல என்ன வேலை பார்த்தேன் தெரியுமா?...கண்டெய்னர்களை மெயிண்டனென்ஸ் பண்ணும் ஒரு பெரிய காண்ட்ராக்டர் கிட்டே வேலை பார்த்தேன்!...அங்கெல்லாம் எதைத் தொட்டாலும் காசு!....அதுவும் ஆயிரம்...ரெண்டாயிரமல்ல...எல்லாமே லட்சத்துல....கோடில...”

அன்று இரவே அவன் செல்வியிடம் அந்த விஷயத்தைச் சொன்னான், “அடியேய்...நீயும் நானும் நினைச்ச மாதிரி எங்கப்பன் சின்னப் பணக்காரன் இல்லை!...பெரும் பணக்காரன்...மொத்தச் சொத்து மதிப்பு...நாற்பது கோடியாம்” என்றான்.

அவள் மிரண்டு போனாள். “ஏங்க...எங்கேயோ...ஏதோ...தப்பு இருக்கும் போலத் தோணுதுங்க!...”

“எனக்கும் அவர் சொன்னதிலிருந்தே உள்ளுக்குள் ஒரு நெருடலாவே இருக்குதுடி” என்றான் தியாகு.

“அவரோட சொத்துக்காகத்தான் அவருக்கு அடைக்கலமே குடுத்தோம்!...இப்ப அந்த சொத்தே நம்மை பயமுறுத்துதே?” செல்வி சொல்ல,

“அட...சொத்தோட அளவு கொஞ்சமா இருந்திருந்தா....நாம பயப்பட வேண்டிய அவசியமேயில்லை!...அது அளவுக்கதிகமா இருப்பதினாலேதான் நமக்கு உதறுது” தியாகுவும் ஒருவித கிலியோடுதான் பேசினான்.

“ஏங்க...நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?” தயங்கித் தயங்கிக் கேட்டாள் செல்வி.

“ப்ச்...எதுவானாலும் சொல்லுடி...” கடுப்படித்தான் தியாகு.

“இதெல்லாம் உங்க அப்பா நேர் வழில சம்பாதிச்ச சொத்துதானா?ன்னு சந்தேகமாயிருக்குங்க!...நம்ம வறுமைக்கு நாம அதை வாங்கப் போய்...கடைசில அது நமக்கே வினையாய் வந்திடுமோ?ன்னு பயமாயிருக்குதுங்க”

தலையை மேலும் கீழுமாய் ஆட்டி யோசித்த தியாகு, இறுதியாய் ஒரு சமாதானத்தைச் சொன்னான். “இங்க பாரு...அப்பா இங்க வந்து ஒரு வருஷமாச்சு...நாம நெனைக்கற மாதிரி அது குறுக்கு வழில வந்த சொத்தாயிருந்தா இந்த ஒரு வருஷத்திலேயே அந்தக் குட்டு உடைஞ்சிருக்குமே?...அப்படி எதுவுமே நடக்கலையே?”

அந்த வார்த்தைகள் செல்வியின் பயத்தைக் கொஞ்சமாய்க் குறைக்க, “அப்படின்னா...தைரியமா மாமாவோட சொத்தை ஏத்துக்கலாமா?”

“ம்...அவர் பாதிதானே குடுக்கறேன்!னு சொல்றார்?...வாங்கிக்குவோம்” என்றான் தியாகு.

தாங்களே சந்தேகப்பட்டு, தாங்களே பயந்து, கடைசியில் தாங்களே ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு உறங்கப் போனார்கள் தியாகுவும், செல்வியும்.

யார் யாருக்கு, என்னென்ன கிடைக்க வேண்டும், என்னென்ன கிடைக்கக் கூடாது, என்பதையெல்லாம் முடிவு செய்பவன் மனிதன் அல்லவே?

அது விதியின் கையில் அல்லவா இருக்கின்றது?....விதி மனது வைத்தால்தான் வீதியில் இருப்பவன் மாடி வீட்டுக்கு வருவான். மாடி வீட்டிலிருப்பவன் வீதிக்குப் போவான்.

செல்வத்தைச் சம்பாதிக்க வைப்பதும் அதுதான், அதே செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்ள வைப்பதும் அதுதான், ஊதாரித்தனமாய் ஊதிப் போக வைப்பதும் அதுதான். ஊருக்கு தானம் செய்து உத்தமனாக வைப்பதும் அதுதான்.


காலை பதினோரு மணியிருக்கும்,

“சில்வர் ஹில் ஃபைனான்ஸ் கம்பெனி” படு பிஸியாயிருந்தது.

அப்போதுதான் உள்ளே நுழைந்த தியாகு, விசிட்டர்ஸ் சோபாவில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியையும், அவருடன் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த அந்தச் சிறுமியையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே தனது அறைக்குள் சென்றான்.

உள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்ததும், ப்யூன் முருகனை அழைத்து விசாரித்தான். “யாரு முருகன் அவங்க?...என்ன விஷயமா வந்து வெய்ட் பண்ணிட்டிருக்காங்க?”

“பெரியவர் பெயரைச் சொல்லிக் கேட்டாங்க சார்!...நான்தான் வெய்ட் பண்ணச் சொன்னேன் சார்”

“யார் இவங்க?...” யோசனையுடன் எழுந்து, அறையின் கண்ணாடி ஜன்னலருகே வந்து அந்த இருவரையும் ஆராய்ந்தான். அந்தப் பெண்மணிக்கு சுமார் நாற்பது...நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். அவளது பொன்னிற தேகமே அவள் ஒரு உயர்ந்த...கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதைப் பறை சாற்றியது. செல்வச் செழிப்பினால் உண்டாகியிருந்த வனப்பு அவள் உடலில் மின்னியது. பார்வையில் தன்னம்பிக்கை கலந்த தைரியமும், உட்கார்ந்திருந்த தோரணையில் பெருந்தன்மை கலந்த தெளிவும் மிகுந்திருந்தது..

உடனிருந்த அந்தச் சிறுமிக்கு பதினைந்தோ...அல்லது பதினாறோ இருக்கும். அவள் முகத்தில் மட்டும் லேசாய் மிரட்சி தெரிந்தது. அவர்களிருவரும் தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தனர். சிறுமி அடிக்கடி கையை உதறி எதற்கோ அடம் பிடிப்பது போல் செய்ய, அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்மணி.

மீண்டும் வந்து தன் இருக்கையில் அமர்ந்த தியாகுவிற்குள் இனம் புரியாத ஒரு டென்ஷன் வந்து புகுந்து கொண்டது. அவன் மனம் “என்னமோ நடக்கப் போகுது” என்று சொல்லிக் கொண்டேயிருந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு ப்யூன் முருகனை மறுபடியும் அழைத்து, “அவர்கள் என்ன கேட்டார்கள்?...எப்படிக் கேட்டார்கள்?” தெளிவாய் விசாரித்தான் தியாகு.

“உள்ளார வந்ததும் முதல் கேள்வியா....“இது வெள்ளிங்கிரி சாரோட ஃபைனான்ஸ் கம்பெனியா?”ன்னு கேட்டாங்க சார், நான் “ஆமாம்”ன்னு சொன்னதும், “சார் இருக்காரா?...அவரைப் பார்க்கணும்!”னு கேட்டாங்க சார்!... “அவர் வர இன்னும் அரை மணி நேரமாகும்...வெய்ட் பண்ணுங்க”ன்னு சொல்லி நாந்தான் சார் அவங்களை உட்காரச் சொன்னேன்!....ஏன் சார்?...ஏதாவது பிரச்சினையா?...சொல்லுங்க சார் அவங்களை இப்படியே வெளிய அனுப்பிடறேன்” ப்யூன் முருகன் பரபரப்பானான்.

“சேச்சே...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை!...புதுசா இருக்காங்களே...யாரு?...என்ன?ன்னு விசாரிச்சேன் அவ்வளவுதான்” என்று சொல்லி முருகனை அறைக்கு வெளியே அனுப்பி விட்டு குழப்பத்திலாழ்ந்தான் தியாகு.

“என்ன பண்ணலாம்?...நானே அவங்களைக் கூப்பிட்டுப் பேசலாமா?...இல்லை அப்பா வர்ற வரைக்கும் வெய்ட் பண்ண விடலாமா?”

காதலித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே, ஒவ்வொரு அசைவையும் செல்வியைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டிருக்கும் தியாகு, இன்றும் அதையே செய்தான்.

செல்விக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னான். “என்ன பண்றது?”என்று ஆலோசனையும் கேட்டான்.

“த பாருங்க...எதுக்கு அனாவசியமா டென்ஷன் ஆகறீங்க?... “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்கிற மாதிரி “நூறு கோடி ரூபாய் சொத்து”ங்கறது நம்ம ரெண்டு பேருக்கும் சந்தோஷத்தைக் குடுப்பதற்கு பதிலா, அதிகமான பயத்தைத்தான் குடுத்திருக்கு” என்றாள்.

“அப்ப...நான் அவங்களைக் கண்டுக்காம என்னோட வேலையைப் பார்க்கவா?”

“ஆமாம்...அப்படியே செய்யுங்க!...உங்கப்பாவே வந்து அவங்களோட பேசிக்கட்டும்” என்றவள், போனை வைக்கும் முன், “அதே மாதிரி பாதிச் சொத்தை உங்க பேருக்கு மாத்தற வேலையையும் இப்ப செய்ய வேண்டாம்...கொஞ்சம் தள்ளிப் போடுங்க!...அப்புறம் பார்த்துக்குவோம்” என்று சொல்லி விட்டு வைத்தாள்.

தொடர்ந்து தியாகு தன் வேலையில் மூழ்கினாலும், அவனது பார்வை அவ்வப்போது அவர்கள் மீது சென்று கொண்டேயிருந்தது.
அடுத்த இருபதாவது நிமிடம், வேக வேகமாக உள்ளே வந்த வெள்ளிங்கிரி அந்த இருவரையும் பார்த்ததும் முகம் வெளிறிப் போனார்.

அந்தக் காட்சியை தன் அறையிலிருந்தவாறே கவனித்து விட்ட தியாகு, வேகமாய் எழுந்து கண்ணாடி ஜன்னலருகே வந்து நின்று கூர்ந்து கவனித்தான்.

“கடு...கடு” முகத்துடன் வெள்ளிங்கிரி அந்தப் பெண்மணியிடம் எதையோ சொல்ல, அவள் சற்றும் கோபம் காட்டாமல் நிதானமாய் அவருக்கு பதில் சொன்னாள்.

அந்தச் சிறுமி வெள்ளிங்கிரியின் கையை ஆசையோடு பிடிக்க, அவர் கோபத்தோடு அதை உதறினார்.

“ஸம் திங் ராங்” மனசுக்குள் சொல்லிக் கொண்டான் தியாகு.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களிருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அவர் வெளியேற, அவர்களைப் பின் தொடர தானும் தயாரானான் தியாகு.

வெளியே வந்த வெள்ளிங்கிரியைக் கண்டதும் கார் டிரைவர் அவசரமாய் காரை நோக்கி ஓடினான்.

“இந்தாப்பா....கார் வேண்டாம்...நாங்க கால் டாக்ஸில போய்க்கறோம்” என்று சொல்லி விட்டு, அந்தப் பெண்மணியையும், சிறுமியையும் அழைத்துக் கொண்டு ரோட்டைக் கிராஸ் செய்தார் வெள்ளிங்கிரி.

சாலையின் மறுபுறம் சென்றதும், அவர்களைக் கடந்து சென்ற கால் டாக்ஸியை வெள்ளிங்கிரி நிறுத்த, மூவரும் அதில் ஏறிக் கொண்டனர்.

அடுத்த நிமிடமே தன் அறையிலிருந்து வேக வேகமாய் வெளியே வந்த தியாகு, தன் ஹோண்டா சிட்டி காரை நோக்கி ஓடினான். எதிரே வந்த கார் டிரைவரிடம், “நீ வேண்டாம்ப்பா...நானே டிரைவ் பண்ணிக்கறேன்” சொல்லி விட்டு அதே வேகத்தில் கார் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

அந்த ஹோண்டா சிட்டி அடுத்த விநாடி “சர்”ரென்று சீறிக் கொண்டு வெளியேற, குழப்பமாய்ப் பார்த்துக் கொண்டு நின்றான் டிரைவர்.

மெயின் ரோட்டிற்கு வந்த தியாகு, சற்றுத் தொலைவில் சென்று கொண்டிருந்த அந்த கால் டாக்ஸியை நிதானமாய் ஃபாலோ செய்தான்.

“யார் அவர்கள்?...அவர்களைப் பார்த்ததும் ஏன் அப்பாவின் முகம் மாறிப் போனது?..அவர்கள் என்னைப் பார்த்து விடக் கூடாது...என்னோடு பேசி விடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களை அப்பா அவசர அவசரமாய் அங்கிருந்து கடத்துகிறார் என்பது நன்றாகவே தெரிகின்றது!...ஏன்?...ஏன் அவர்கள் என்னைப் பார்க்கக் கூடாது!ன்னு அப்பா நினைக்கிறார்?...அவர்களைக் கண்டு பயப்படுகிறாரா?...”

அவன் முன்னால் மர்ம முடிச்சுக்கள் சரமாரியாய் விழுந்து கொண்டேயிருந்தன.

முன்னால் சென்று கொண்டிருந்த அந்த கால் டாக்ஸி “ஹோட்டல் லாவண்யா பேலஸ்”ன் கேட்டிற்குள் நுழைய, தன் காரை வெளியில் அந்த ஹோட்டலின் காம்பௌண்ட் ஓரமாய் பார்க் செய்து விட்டு, மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தான் தியாகு.

ரிசப்ஷனில் ரூம் சாவியை வாங்கிக் கொண்டு அந்தப் பெண்மணியையும், சிறுமியையும், அழைத்துக் கொண்டு லிப்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார் வெள்ளிங்கிரி.

இருபது நிமிடங்கள் கடந்த பின், தானும் அந்த ரிசப்ஷனுக்குச் சென்று, தனக்கும் ஒரு அறையை புக் செய்து கொண்ட தியாகு, “மேடம் இப்ப ரூம் புக் பண்ணிட்டுப் போனாங்களே ஒரு பெரியவரும் இரண்டு பெண்களும்...அவங்க ரூமுக்கு பக்கத்து ரூமோ அல்லது எதிர் ரூமோ இருந்தா பரவாயில்லை” என்று கேட்டு வாங்கினான்.

“சார்...அவங்க ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ரூம் நெம்பர் 108, அதுக்கு பக்கத்து ரூம் 109 காலியாய்த்தான் இருக்கு!...அதை உங்களுக்கு புக் பண்ணட்டுமா?” தன் அழகான முகத்தில், அற்புதமான சிரிப்பை, அலங்காரமாய்ப் பொருத்திக் கொண்டு அந்த ரிசப்ஷனிஸ்ட் கேட்க,

“ம்ம்...பண்ணிடுங்க” என்றான்.

சில நிமிடங்களில் அவனும் தனது 109-ம் அறையின் சாவியை வாங்கிக் கொண்டு லிப்ட்டினுள் புகுந்தான்.

பாக்கெட்டிலிருந்த மொபைல் சிணுங்க எடுத்துப் பார்த்தான். வெள்ளிங்கிரிதான் அழைத்திருந்தார். “ம்ம்...சொல்லுங்கப்பா” என்றான் இயல்பாய்.

“தியாகு...கொஞ்சம் மனசு சரியில்லை...சரின்னு வர்ற வழில ஒரு கோயிலுக்குள்ளார புகுந்திட்டேன்!...ஒரு மணி நேரம் கழிச்சு வர்றேன்ப்பா” என்றார் வெள்ளிங்கிரி.

“ஓ...ஹோட்டல் லாவண்யா பேலஸ்...உங்களுக்குக் கோயிலா?” என்று கேட்க நினைத்தவன் தன்னை அடக்கிக் கொண்டு, “என்னப்பா...என்ன பிரச்சினை...ஏன் மனசு சரியில்லை?” அக்கறையோடு விசாரிப்பவன் போல் கேட்டான் தியாகு.

“ஒண்ணுமில்லைப்பா...என் சொத்துல பாதியை இப்பவே உன் பேருக்கு மாற்றித் தந்துடறேன்!னு சொன்னேன் அல்ல?...அதுல சின்னதாய் ஒரு சிக்கல் கிளம்பியிருக்கு!...அதான் நான் கொஞ்சம் அப்ஸெட் ஆயிட்டேன்”

சன்னமாய் அதிர்ந்து போனான் தியாகு. “என்னப்பா என்ன சிக்கல்?”

“அதை போன்ல சொல்ல முடியாதுப்பா...நேர்ல வந்து சொல்றேன்” என்று சொல்லி விட்டு அவர் இணைப்பைத் துண்டித்து விட,

“சந்தேகமேயில்லை...செல்வி சொன்ன மாதிரி எங்கியோ...ஏதோ தப்பிருக்கு!...கண்டுபிடிக்கணும்!...அதைக் கண்டுபிடிச்சுட்டு அப்புறமா அந்தப் பாதிச் சொத்தை என் பேருக்கு மாத்தணும்”
அறைக்குள் வந்தவன் பக்கத்து அறையில் நடைபெறும் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் விதமாய் சுவற்றில் காதை வைத்துக் கேட்டுப் பார்த்தான். “ம்ஹூம்...ஒரு துளி கூட கசியவில்லை”

“ச்சே!...” உள்ளங்கையில் ஓங்கிக் குத்திக் கொண்டான். “எப்படிக் கண்டுபிடிப்பது?”.

சிறிது நேரம் படுக்கையில் அமர்ந்து யோசித்தவன், செல்விக்கு கால் செய்து இங்கு நடப்பவைகளைச் சொல்லலாமா? என்று யோசித்தான். “வேண்டாம்...அவளை ஏன் களேபரப்படுத்த வேண்டும்?...நாமே சமாளிப்போம்” என்று முடிவு செய்து கொண்டு அமைதியானான்.

ரிசப்ஷனுக்குப் போன் செய்து ஒரு காஃபி ஆர்டர் செய்தான்.

காஃபி வந்ததும் நிதானமாகப் பருகி விட்டுத் தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தான். தலையே வலித்தது. “அட...ஏதோ கைல இருந்ததை வைத்துக் கொண்டு...சின்ன அளவுல ஃபைனான்ஸ் பிசினஸ் பண்ணினப்பக் கூட இத்தனை டென்ஷன் இல்லை...இப்ப பெரிய அளவுல ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சதுக்கப்புறம் ஒவ்வொரு நிமிஷமும் புதுசு புதுசா பிரச்சினைகள்!...ச்சை...எங்கியோ...யாரோ சொன்னாங்க மனுஷனுக்கு காசு பணம் வர வர நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாய் வெளிய போயிடும்!ன்னு! எனக்கு காசு பணம் கைக்கு வராமலே நிம்மதி போயிடுச்சு!”

“சரி...எப்படியும்...எதோ ஒரு நேரம் அப்பா அவங்களை தனியா விட்டுட்டு வெளிய போகத்தானே செய்வார்!...அப்ப நாம் உள்ளார போய் அவங்க கிட்டப் பேசிட வேண்டியதுதான்”

ஒரு தீர்மானத்திற்கு வந்து, காத்திருந்தான்.

நேரத்தைக் கடத்த, தொலைக் காட்சியை ஓட விட்டான். பழைய பாடல்கள் சேனலில்,

“பாத்தா பசு மரம்...படுத்து விட்டா நெடு மரம்...கேட்டா வெறகுக்காகுமா ஞானத் தங்கமே!...தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?...ஞானத் தங்கமே!...தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?”

சிவாஜி கணேசன் விறகு வெட்டியாய்ப் பாடிக் கொண்டிருக்க, “படக்”கென்று அதை மாற்றி, அடுத்த சேனலுக்குப் போனான் தியாகு. டிஸ்கவரியில் ஒரு எருமையை மூன்று சிறுத்தைகள் குதறிக் கொண்டிருந்தன, அதில் ஒன்று குட்டிச் சிறுத்தை.

“ச்சை” எரிச்சலோடு தொலைக் காட்சியை ஆஃப் செய்து விட்டு, ஓய்வெடுக்கும் விதமாய் படுக்கையில் சாய்ந்தான்.

அந்த அறையின் ஏ.சி. குளிரும், அவனுக்குள்ளிருந்த அசதியும், உறக்கத்தை உடனே அவன் மீது ஏற்றி விட, படுத்த நான்காவது நிமிடம் உறங்கிப் போனான்.

உறக்கம் மட்டும் சும்மா இருக்குமா?...“என் பங்குக்கு நான் ஒரு கனவை அனுப்புகிறேன்!...பாரு” என்று சொல்லி ஒரு கனவை அவன் மீது ஏற்றியது.

வீடெங்கும் புகை மண்டலமாய் இருக்க, அந்தப் புகை மண்டலத்துக்கு மத்தியில் மிதந்து கொண்டிருந்தனர் செல்வியும், தியாகுவும்.

“ஏங்க....வட்டிக்கு விட்டு சம்பாதிச்சு...அந்த வட்டிப் பணத்துல நாம ரெண்டு பேரும் வயிறு வளர்ப்பதினாலதான் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி ஒன்றரை வருஷமாகியும்...இன்னும் குழந்தை உண்டாகலையாம்” செல்வி சிணுங்கலோடு சொல்ல,

“எவன் சொன்னான்?” கோபத்தோடு கேட்டான் தியாகு.

“நேத்திக்கு எங்க அம்மா வீட்டுக்குப் போயிருந்தப்ப...பக்கத்துக் கோயில்ல பிரதோஷ பூஜை நல்லாயிருக்கும்!னு சொல்லி அம்மா என்னைய அங்க கூட்டிட்டுப் போனாங்க!...”

“சரி...?”

“அங்க ஞானி மாதிரி ஒருத்தர் வந்து...ஆன்மீகச் சொற்பொழிவு உரை ஆற்றினார்”

“ஓ...அந்த சொற்பொழிவுல அவர் சொன்னாராக்கும்?” இதழோரம் ஒரு இளக்காரப் புன்னகையைத் தொங்க விட்டுக் கொண்டு கேட்டான் தியாகு.

“க்கும்....சொற்பொழிவுல சொல்லியிருந்தா நானும் “அடப் போய்யா”ன்னுட்டுப் போயிருப்பேனே?” செல்வி அலட்சியமாய்ச் சொல்ல,

“அப்புறம்?” புருவங்களைச் சுருக்கிக் கொண்டு, அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான் தியாகு.

“சொற்பொழிவெல்லாம் முடிஞ்ச பிறகு...பிரச்சினை உள்ள சிலர் அவர்கிட்ட தங்கள் பிரச்சினையை தனியாச் சொல்லி அறிவுரை கேட்டாங்க!...எங்கம்மாவும் “வாடி நாமும் போய்க் கேட்கலாம்!”னு என்னை இழுத்தாங்க!... “ம்மா...நமக்கு என்னம்மா பிரச்சினை இருக்கு....நாம் எதுக்குப் போய் அவர்கிட்டப் பேசணும்!”ன்னு மறுத்தேன்!... “இருக்குது வாடி”ன்னு சொல்லி என்னை பலவந்தமாய் இழுத்திட்டுப் போயிட்டாங்க!”

“ஓ...அந்தச் சாமியார்கிட்டப் போயி உங்கம்மா நமக்குக் குழந்தையில்லை!ன்னு சொல்லியிருக்காரு!..அவரு வட்டில வயிறு வளர்க்கறதினால குட்டிக இல்லை!ன்னு சொல்லியிருக்காரு அப்படித்தானே?”

“ஆமாம்ங்க” மிரளும் விழிகளை உருட்டியபடி செல்வி சொல்ல,

“மொதல்ல நீங்க அந்தச் சாமியார்கிட்ட நான் ஃபைனான்ஸ் தொழில் பண்றேன்!ன்னு சொல்லியிருக்கவே கூடாது!...நீங்க அதைச் சொல்லப் போகத்தான் அவன் அதைச் சொல்லியிருக்கான்” என்றான் தியாகு மிகவும் சாதாரணமாக.

“இல்லைங்க...நீங்க ஃபைனான்ஸ் தொழில் பண்றீங்க!ன்னு நாங்க சொல்லவேயில்லைங்க!...அவரே என் முகத்தைப் பார்த்துச் சொல்லிட்டாருங்க!” செல்வி சொல்ல,
முகம் மாறினான் தியாகு. “எப்படி...எப்படி...அவரு சொன்னாரு?”

“அதான் தெரியலைங்க!” என்ற செல்வி, தியாகுவின் அருகில் வந்து, “ஏங்க நமக்குக் குழந்தை பிறக்காதா?” சோகக் குரலில் கேட்டாள்.

“அடப் போடி...எனக்குத் தெரிஞ்சு பல பேர்...அதுவும் அநியாய வட்டி வாங்கற ஆசாமிக...ஏழெட்டுக் குழந்தைகளைப் பெத்துக்கிட்டு சந்தோஷமாய்த்தான் வாழ்ந்திட்டிருக்கானுக!” என்றான் தியாகு அவளது அச்சத்தைப் போக்கும் விதமாய்.

அவள் அப்படிச் சொன்ன மறு நிமிடமே, அவள் வயிறு உப்ப ஆரம்பித்தது. “என்னங்க...என்னங்க...இங்க பாருங்க...இங்க பாருங்க...நான் உண்டாயிட்டேன்” சந்தோஷமாய்க் கூவினாள் செல்வி.

“பாத்தியா...?...அந்தச் சாமியார்ப்பயல் பொய் புளுகியிருக்கான்!ன்னு இப்பவாது புரிஞ்சுக்கிட்டியா?” சந்தோஷமாய்ச் சொன்னான் தியாகு.
(தொடரும்)