Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript காற்றில் கலைந்த ரங்கோலிகள் | SudhaRaviNovels

காற்றில் கலைந்த ரங்கோலிகள்

Mukil dinakaran

New member
Aug 4, 2020
12
0
1
“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460

அத்தியாயம் - 7

“த பாருப்பா...என்னோட நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டவன் நீ ஒருத்தன் தான்!...அதே மாதிரி...என் கிட்ட உண்மையான விசுவாசத்தோட இருக்கறவனும் நீ ஒருத்தன் தான்!...அதனாலதான் உன் கிட்ட உரிமையோட கேட்டேன்!...உனக்கு விருப்பமில்லேன்னா...விட்டுடுப்பா” தொய்வானார் ஒய்.ராஜகோபால்.

மிரண்டு போனார் வெள்ளிங்கிரி, “ஆஹா...சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா இந்தக் கிழவன் உடனே “விருப்பமில்லேன்னா...விட்டுடுப்பா”ன்னுட்டானே?...அதுக்கா நான் இத்தனை நாள் இத்தனை திட்டம் போட்டேன்?...”

“அய்யா...என்னடா இவன் நாம சொல்றதை மறுத்துப் பேசறான்!னு நினைக்காதீங்க அய்யா!...உங்க மகளோட வயசு...என் வயசுல சரி பாதி!...அதான் யோசிக்கறேன்!” வெள்ளிங்கிரி சொல்ல,

“அதைப் பத்தி நீ கவலைப் படாதே!...நீ “சரி”ன்னு ஒரு வார்த்தை சொல்லு போதும்!...உன்னை என் மருமகனாக்கி என் மொத்த ஆஸ்திக்கும் உன்னை வாரிசாக்கறேன்”

“அய்யா...ஆஸ்தி...சொத்து...இதெல்லாம் எனக்குப் பெரிசில்லைங்க அய்யா!...எனக்குத் தேவை...நீங்க மனசு வேதனைப் படாம இருக்கணும்!...சிங்கம் சிங்கமாகவே இருக்கணும்!...அதான்” என்று சொல்லி விட்டு, “நான் சம்மதிக்கறேன் அய்யா!...உங்களுக்காக...உங்களை மகளைக் கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்கறேன் அய்யா” உடனே சொன்னார் வெள்ளிங்கிரி.

வேகமாய் வந்து அவரைக் கட்டிக் கொண்டு, “வெள்ளிங்கிரி...நீ என்னோட கௌரவத்தை மட்டும் காப்பாத்தலை...என் மகளோட உசுரையும் காப்பாத்திட்டே!” என்றார் ஒய்.ராஜகோபால் மகிழ்ச்சியுடன்.

“அய்யா...என் கிட்டக் கேட்ட மாதிரி உங்க மகள் கிட்டேயும் கேட்டு...அவளோட சம்மத்தையும் வாங்குங்க!...ஏன்னா...அவ சம்மதமில்லாம இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது!ன்னு நான் நினைக்கறேன்!” உலக மகா உத்தமன் போலப் பேசினார் வெள்ளிங்கிரி.

“அவ இப்ப இருக்கற நிலைமைல நிச்சயம் அவ ஒத்துக்குவா!...”

“எப்படியோ எல்லாம் நல்லபடியா நடக்கணும்!...நீங்க பழைய நிம்மதியைப் பெறணும்” சொல்லி விட்டு அங்கிருந்து சென்ற வெள்ளிங்கிரியை கண்களில் நீர் மல்கப் பார்த்தார் ஒய்.ராஜகோபால்.

தன் எண்ணம் முழுவதுமாய் ஈடேறிப் போன உற்சாகத்தில் “நினைத்ததை நடத்தியே முடிப்பவன்...நான்...நான்...நான்!” என்று சன்னமாய்ப் பாடிக் கொண்டே வீட்டை அடைந்தார் வெள்ளிங்கிரி.

அன்று இரவே மகளிடம் அந்த விஷயத்தைப் பற்றி, மிக மிக நிதானமாய்ப் பேசினார் ஒய்.ராஜகோபால்.

“இருபத்திரெண்டே வயதே ஆன எனக்கு....ஒரு நாற்பத்திஆறு வயசுக்காரனைக் கட்டி வைக்கப் பார்க்கிறீர்களே?...நீங்களெல்லாம் ஒரு தந்தையா?...என் அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தா இப்படியொரு காரியத்தைச் செய்யும் துணிவு வருமா உங்களுக்கு?....” என்றெல்லாம் கத்திப் பேசி, மாபெரும் களேபரத்தையே உண்டாக்குவாள், என்று எதிர்பார்த்திருந்த ஒய்.ராஜகோபாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாய்,

“நீங்க எது செய்தாலும் எனக்கு சம்மதம் டாடி” என்று அமைதியாய், ஒரே வார்த்தையில் பதில் சொல்லி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் கனிஷ்கா.

அவளது அந்தச் செயலால் மிகவும் மனம் நெகிழ்ந்து போன ஒய்.ராஜகோபால், அவராகவே கேட்டார், “என்னடா அப்பன் ஒரு அரைக் கிழவனைக் கட்டிக்கச் சொல்றானே?”ன்னு சங்கடப்படறியா கனிஷ்கா?”

“சத்தியமா இல்லை டாடி!...ஏன்னா?...நான் இருக்கும் நிலை அப்படி!...“எப்ப கறை பட்டோம்?...எப்படிக் கறை பட்டோம்?”ன்னே தெரியாம கறை பட்டுட்ட நான்....எதையும் பேசவோ...கேட்கவோ தகுதி இல்லாதவளாயிட்டேன்!...” சொல்லும் போது கனிஷ்கா தன்னையுமறியாமல் கண்ணீர் விட,

ஒய்.ராஜகோபாலும் அழுது விட்டார்.

ஆனாலும், தன்னுடைய அழுகை மகளின் மனதை மேலும் நோகடித்து விடக் கூடாது என்கிற எண்ணத்தில், அவசர அவசரமாய்த் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “அம்மா...வெள்ளிங்கிரி ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்ம்மா!...உண்மையைச் சொல்லணும்னா...என்னை விட அவர்தான் உன்னைய நல்லவிதமாய்ப் பார்த்துக்குவார்ம்மா!...நான் கூட ஹார்பர் வேலை...அதுஇதுன்னு உன் கூட உட்கார்ந்து பேசாமல் எந்நேரமும் வெளியிலேயே திரிஞ்சிட்டிருப்பேன்!...ஆனா வெள்ளிங்கிரி அப்படியில்லை...உன்னைத் தன் உள்ளங்கையிலேயே வெச்சுக் கவனிச்சிட்டிருப்பார்!...” புன்னகையோடு சொன்னார் ஒய்.ராஜகோபால்.

தந்தையை திருப்திப் படுத்தும் விதமாய் தானும் புன்னகைத்தாள் கனிஷ்கா. அந்தப் புன்னகையில் மகிழ்ச்சியின் விகிதத்தை விட சோகத்தின் விகிதமே அதிகம் இருந்தது.

****​

வயிற்றில் சிசுவைத் தாங்கிக் கொண்டிருக்கும் மகளுக்கு, எவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து முடிக்க முடியுமோ, எவ்வளவு சீக்கிரத்தில் செய்து முடித்து விட வேண்டும், என்கிற ஆவேசத்தில் அடுத்த வந்த சுபமுகூர்த்த தினத்திலேயே கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணினார் ஒய்.ராஜகோபால்.

“பெரியவாள் நான் சொல்றேன்னு தப்பா நினைக்கக் கூடாது!... ‘விவாகம்’ன்றது ரொம்பப் பெரிய விஷயம்...ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும்...நீங்க என்னடான்னா அடுத்த முகூர்த்த தேதியையே குறிக்கச் சொல்லுறீங்கோ...நடுவுல அஞ்சு நாள்தான் இருக்கு....உங்களுக்கு சாத்தியப்படுமோ?”

நாள் குறித்த ஜோதிடரே சந்தேகத்தோடு கேட்க,

“ஹும்...என்னால் நாளைக்கே கூட கல்யாணத்தை நடத்த முடியும்...”என்று கம்பீரமாய்ச் சொன்னார் ஒய்.ராஜகோபால்.

பண பலமும், ஆள் பலமும் கொண்ட அவர், தான் குறித்த அந்த முகூர்த்தத்திலேயே கனிஷ்கா-வெள்ளிங்கிரி திருமணத்தை வெகு விமரிசையாக செய்தும் காட்டினார்.

திருமணமாகி சில மாதங்கள் வரை சந்தோஷமாகவும், சாதூர்யமாகவும் இல்லறத்தை நடத்திக் கொண்டு சென்ற வெள்ளிங்கிரி, மெல்ல மெல்ல நிறம் மாறத் துவங்கினார். தன் இலக்கை நோக்கிக் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

“ஆமாம்...புதையலை பூதம் காக்கற மாதிரி உங்கப்பன் ஏன் இன்னமும் சொத்தையெல்லாம் தன் பேரிலேயே வெச்சிருக்கான்?...அதான் மாப்பிள்ளை நான் வந்தாச்சே?...என் பேரில் மாத்திட வேண்டியதுதானே?”

வெள்ளிங்கிரியின் அந்தப் புதுப் பேச்சு, கனிஷ்காவுக்கு வியப்பைத் தர, “என்னங்க நீங்க?...சொத்து அவர் பேரில் இருந்தால் என்ன?...உங்க பேரில் இருந்தால் என்ன?...அவரோட ஒரே மாப்பிள்ளை நீங்க...எப்படியும் அதெல்லாமே உங்களுக்குத் தானே வந்து சேரப் போகுது?” சாதாரணமாய்ச் சொன்னாள்.

“அப்ப...அதுவா வர்ற வரைக்கும் நான் அவர் எதிரிலேயும்...உன் எதிரிலேயே ஒரு வேலைக்காரனாவே கை கட்டி நிக்கணும்?...நீங்க அதட்டினாலும்...உருட்டினாலும்...மிரட்டினாலும் பொறுத்துக்கணும்!....அப்படித்தானே?”

“ச்சீய்...ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?...நாங்க எப்ப உங்களை எங்க வேலைக்காரனா நினைச்சிருக்கோம்?....உங்களுக்கு இங்க எல்லா உரிமையும் குடுத்திருக்கே?” கனிஷ்கா கோபமானாள்.

“என்ன உரிமை குடுத்திருக்கீங்க...பெரிய உரிமை?...என்னால பேங்க்ல இருந்து ஒரு பத்துக் காசு எடுக்க முடியுமா?...செலவுக்கும் பணம் வேணும்ன்னா முதல்ல உன்னைக் கேட்கணும்...நீ போய் உன் அப்பன்கிட்டக் கேட்பே...அவன் “போனாப் போகுது குடுத்துத் தொலை”ன்னு ஏதோ கொஞ்சத்தை வீசுவான்!...அதை நான் பொறுக்கிக்கணும்!”

“நீங்க எதுக்குங்க பொறுக்கணும்?...உங்களுக்கு எவ்வளவு வேணும்னு சொன்னா...நாங்க காரண...காரியம் கூடக் கேட்காம எடுத்துத் தர்றோமே?”

“ஏன்...ஏன்...அப்படி?...மாப்பிள்ளை மேல் நம்பிக்கை இல்லையா?...”

அவர் அப்படிக் கேட்டதும் சில நிமிடங்கள் அவர் முகத்தையே கூர்ந்து பார்த்த கனிஷ்கா, “ஓ.கே...அப்பா கிட்ட இதைப் பத்திப் பேசறேன்...உங்க ஆசை அதுதானே?...நிறைவேத்திடலாம்” என்று கணவனுக்கு வாக்குக் கொடுத்த கனிஷ்காவால் அந்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போனது.

காரணம், ஒரு மதிய நேரத்தில் ஹார்பரிலிருந்து வந்த தொலைபேசிச் செய்தி.

“ம்ம்...சொல்லுங்க நான் கனிஷ்காதான் பேசறேன்!”

“அம்மா...அங்க வெள்ளிங்கிரி அய்யா இருக்காருங்களா?”

“இல்லையே?...அவரு அங்கதானே வந்தார்?...ஏன் என்ன விஷயம்?”

“அம்மா...வந்து...வந்து...நம்ம பெரிய அய்யா திடீர்னு மயங்கி விழுந்திட்டாரும்மா...இங்க ஹார்பரில் இருக்கற ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம் அம்மா!...அவங்க செக் பண்ணிப் பார்த்துட்டு...பார்த்துட்டு...” எதிர் முனை தயங்க,

“சொல்லுங்க...செக் பண்ணிப் பார்த்திட்டு என்ன சொன்னாங்க?” பரபரப்பானாள் கனிஷ்கா. போனைப் பிடித்திருந்த அவள் கை நடுங்கியது.

“நம்ம பெரிய அய்யா...பெரிய அய்யா...நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாரும்மா” எதிர் முனையில் ஒரு பெரிய கதறல்.

அந்த அதிர்ச்சித் தகவலைத் தர, “அய்யோ....”என்று கதறியபடி அப்படியே தரையில் சாய்ந்தாள் கனிஷ்கா.

தனது நீண்ட வரலாற்றை மொத்தமாய்ச் சொல்லி முடித்த அந்தப் பெண்மணி, “நீங்க கேட்ட இந்தக் கதைல வர்ற...அந்த கனிஷ்கா...நான்தான்!...இது என்னோட மகள் சில்பா!...உன்னோட தங்கை” என்றாள்.

பொறுமையாய் அனைத்தையும் கேட்ட தியாகு, சில நிமிடங்கள் தரையையே பார்த்தபடி அமர்ந்திருந்து விட்டு, மெல்லக் கேட்டான். “இருபத்திரெண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் இங்க திரும்பி வர என்ன காரணம்?...எங்கள் மீதுள்ள பாசத்தால் வந்தாரா?...இல்லை அங்க ஏதாவது பிரச்சினையைப் பண்ணிட்டு...அதிலிருந்து தப்பிக்க இங்க வந்தாரா?”

“உண்மையைச் சொல்லணும்னா...அவர் பல பிரச்சினைகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் இங்க ஓடி வந்திட்டார்” கனிஷ்கா என்னும் அந்தப் பெண்மணி சொல்ல,

“அப்படியென்ன பிரச்சினை அவருக்கு?”

“எங்கப்பா இறந்து அவரோட காரியங்கள் நடந்திட்டிருக்கும் போதே உங்கப்பா...அதாவது என் கணவர்....என்னை அரிக்க ஆரம்பிச்சிட்டார்”

“த பாரு...உங்கப்பாவுக்கு ஒரே பொண்ணு நீ?...அதனால மொத்தச் சொத்தும் ஆட்டோமாடிக்கா உனக்கு வந்திடும்!...நீ என்ன பண்றே?...அதையெல்லாம் கையோட என் பேருக்கு மாத்திடு...அதுதான் சரி”

“எங்கப்பா போன பிறகு அந்தச் சிங்கப்பூரில் உறவுன்னு சொல்லிக்க உங்க அப்பாவைத் தவிர வேறு யாருமே இல்லை என்கிற காரணத்தாலும், எனக்கு வாழ்க்கை குடுத்த நல்ல மனிதர் என்கிற காரணத்தாலும் உடனே மொத்தச் சொத்துக்கும் அவரையே அதிபதியாக்கினேன்!...“எங்கப்பா செய்த அதே தொழிலை தான் எடுத்துச் செய்வார்... கடுமையா உழைச்சு..தன் கைக்கு வந்த சொத்தை இன்னும் பன் மடங்கு பெருக்குவார்!”ன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன்!...ஆனா உங்கப்பா என்னை ஏமாத்திட்டார்”

புருவங்களை நெரித்துக் கொண்டு தியாகு பார்க்க,

“அவர் ஹார்பர் பக்கமே போகலை..அதுக்குப் பதிலா மலேஷியா பக்கமும், பாங்காக் பக்கமும்தான் அதிகம் போனார்!...எதுக்கு?....குடியும் கூத்துமாய் ஜாலியாய் இருக்க!...எங்கப்பா கிட்ட வேலை பார்த்த காண்ட்ராக்ட் லேபர்களுக்கு சம்பளமே குடுக்கறதில்லை!...அவங்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி, வேற காண்ட்ராக்டர் கிட்டப் போய்ச் சேர்ந்திட்டாங்க!...அதே மாதிரி கண்டெய்னர் பாராமரிப்பிற்கான மெட்டீரியல் சப்ளை செய்த பார்ட்டிகளுக்கு பணம் போய்ச் சேரவேயில்லை!...எல்லோரும் என்னை வந்து நெருக்க ஆரம்பிச்சாங்க!...ஆண்டாண்டு காலமா என் அப்பா கையிலிருந்த அந்த ஹார்பர் கண்டெய்னர் பராமரிப்பு காண்ட்ராக்ட் முதன் முறையாக அடுத்த காண்ட்ராக்டருக்குப் போனது!”

“ஓ..” என்று மேவாயைத் தடவியபடி யோசித்த தியாகு, “நீங்க அவரோட மனைவிதானே?. நீங்கதானே அவருக்கு எடுத்துச் சொல்லித் திருத்தணும்?” பழியை அந்தப் பெண் மீதே ஏவினான் தியாகு.

“சொல்லாமல் இருப்பேனா?...சொன்னேன்...அதுக்கு அவர் சொன்ன பதில் என் ஈரக் குலையையே நடுங்க வெச்சிடுச்சுப்பா!...“த பாருடி...நான் உன்னைக் கெடுத்தது...அதுக்கப்புறம் தியாகி மாதிரி நானே உனக்கு வாழ்வு குடுத்தது...எல்லாம் எதுக்கு?...இந்த...இந்த சொத்து மொத்த்த்தையும் நானே அடையணும்!...அதை வைத்து உலகத்தின் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கணும்!...அதுக்குத்தான்”

“என்ன...என்ன சொன்னீங்க?...என்னைக் கெடுத்தது...நீ...நீங்களா?” அப்போதுதான் அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட கனிஷ்கா நொறுங்கிப் போனாள்.

“பின்னே?...முதல் நாள் உங்கப்பா “என் மகள் உச்ச பட்ச போதைல ஏதோவொரு கிளப்புல கிடக்கறா...அவளை அள்ளிக் கொண்டு போய் வீட்டுல போட்டுடப்பா”ன்னு கெஞ்சினார் அல்ல?....அன்னிக்கே நான் திட்டம் போட்டுட்டேன்!...அந்த திட்டத்தின் முதல் காரியமா..வீட்டுக்குக் கொண்டு போகும் வழியிலேயே...காரிலேயே வைத்து...உன்னை...உன்னை...”

சன்னமாய் அழுது விட்டு மேலே தொடர்ந்தாள் அந்தப் பெண்மணி.

“இருக்கற சொத்தை அழிக்கறது பத்தாதுன்னு...வெளிய பல இடங்கள்ல கடனையும் வாங்கிக் குவித்தார்....ஒரு கட்டத்துல கடன் குடுத்தவங்க...மெட்டீரியல் குடுத்தவங்க...எல்லோரும் அவரை சுற்றி வளைக்க ஆரம்பித்ததும்...சொத்துப் பத்திரங்கள் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு சொந்த நாட்டுக்கு ஓடி வந்திட்டார்” கனிஷ்கா சொல்ல,

“இப்ப....அவரைத் தேடிக் கண்டுபிடிச்சு...அந்த சொத்தையெல்லாம் திருப்பி வாங்கிட்டுப் போக நீங்களும் கிளம்பி வந்திட்டீங்க!...அப்படித்தானே?” தியாகு ஒரு வித எரிச்சலோடு கேட்டான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதில் அவனுக்குள் ஒரு இயலாமைக் கோபம்.

“இல்லைப்பா...நான்...அவர் வேணுமின்னோ...அவரோட சொத்து வேணுமின்னோ...இங்க வரலை!...நானும் என் மகளும் சிங்கப்பூர்ல நிம்மதியா...ஒழுக்கமா.. வாழ முடியாத அளவுக்கு கடன்காரங்க எங்களைத் தொந்தரவு பண்றாங்க!...என்கிட்டே அவ்வளவு பெரிய தொகை இல்லை!...இருந்திருந்தா நானே கடனையெல்லாம் அடைச்சிருப்பேன்!..இங்க வந்திருக்கவே மாட்டேன்!..என்னோட தேவையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்...மலை போல் அவர் வாங்கிக் குவிச்சு வெச்சிருக்கற அந்தக் கடன்களை மட்டும் அவர் அடைச்சுக் குடுத்திட்டார்!ன்னா...நான் பாட்டுக்கு என் வழில போயிட்டேயிருப்பேன்!...அங்க போயி...ஏதோ என்னால முடிஞ்ச வேலையைச் செய்து என் மகளை வளர்த்துக்குவேன்!”

எப்போதுமே, காசு...பணம்...வட்டி...அசல்...தவணைத்தொகை...என்று அதே எண்ணத்தில் திரிந்து கொண்டிருந்த தியாகுவின் மனதில் முதன் முதலாய் ஒரு நெகிழ்ச்சி உண்டானது. தலையைத் தூக்கி அந்தப் பெண்மணியை நிதானமாய்ப் பார்த்தான்.

இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே தவிப்போடுதானே தன் தாயும் நின்றிருப்பாள்?...என்கிற எண்ணம் அவனை உலுக்கியது. அவன் மனத்தை நெகிழ்த்தியது. தன் தாயை எதிரில் பார்ப்பது போலவே உணர்ந்தான்.

“இவளும் ஒரு வகையில் எனக்குத் தாய்தானே?...இவளை நான் தவிக்க விடலாமா?...கூடாது!...இந்தப் பெண்ணை ஏமாற்றி என் அப்பா கொண்டு வந்திருக்கும் அந்தப் பாவச் சொத்தில் ஒரு பைசாவைக் கூட நான் தொடக் கூடாது!...அவரை வரவழைத்து மொத்த சொத்தையும் அவரிடமிருந்து பறித்து இந்தப் பெண்மணியிடம் ஒப்படைக்கணும்!...அதுதான் என்னைப் பெற்று...வளர்த்த தாய்க்கு நான் செய்யற பிரதியுபகாரம்”

“தம்பி....நீங்கதான் அவர் கிட்டப் பேசி...இதைச் செய்து குடுக்கணும்!...நான் அந்தச் சொத்தை எனக்காக கேட்கலை!...என்னை நிம்மதியாய் வாழ விடாமல் தொடர்ந்து கேவலமான முறைகள்ல எங்களை டார்ச்சர் பண்ணிட்டிருக்கற அந்தக் கடன்காரர்களின் வாயை அடைக்கத்தான் கேட்கிறேன்!” இரு கைகளையும் நீட்டி பிச்சை கேட்பது போல் கேட்ட அந்தப் பெண்மணியைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது தியாகுவிற்கு.

“அ...ம்...மா...” என்று முதல் முறையாக தன் வாயால் அந்தப் பெண்ணை அவன் அப்படி அழைக்க, கனிஷ்கா “பட்”டென்று அவன் கையைப் பற்றித் தன் முகத்தில் அழுத்திக் கொண்டு குமுறினாள்.

“அழாதீங்கம்மா!...நான் இருக்கேன்!....உங்க சொத்தை மீட்டு...உங்க கைல ஒப்படைச்சிட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போறேன்” என்ற தியாகு தலையைத் திருப்பி, அந்தச் சிறுமியைப் பார்த்தான். தன் தந்தையின் அகல முகம் அச்சிறுமியிடம் ஒட்டியிருந்தது.

இது நாள் வரையில் தன்னை விட வயதில் மூத்த சகோதரிகளின் அன்பை மட்டுமே பார்த்து வளர்ந்திருந்த தியாகுவிற்கு தனது குட்டித் தங்கச்சியைப் பார்க்க ஆனந்தமாயிருந்தது.

அவன் உணர்வைப் புரிந்து கொண்ட அந்தப் பெண்மணி, “சில்பா...வாம்மா...இவரு உன்னோட அண்ணாதான்..”என்றாள்.

அவள் நிமிர்ந்து தியாகுவை மிரட்சியோடு பார்க்க, தன் கையை நீட்டி அவளை அருகே அழைத்து கட்டிக் கொண்டான்.

அவனுக்குள்ளிருந்த பணத்தாசை...சொத்தாசை...வட்டி ஆசை...எல்லா ஆசைகளுமே அந்தச் சிறுமியின் இதமான மேனிச்சூட்டில் கருகிப் போயின.

“அப்ப நான் கிளம்பறேன்மா!...நான் இங்க வந்ததையோ...உங்களைப் பார்த்துப் பேசியதையோ நீங்க எங்க அப்பா கிட்டச் சொல்ல வேண்டாம்!...ம்ம்ம்...அப்படியே உங்களோட மொபைல் நெம்பரைக் குடுங்க நான் வரச் சொல்லும் போது...சொல்ற இடத்துக்கு உங்க மகளையும் கூட்டிக்கிட்டு வாங்க” என்றான்.

“சரிப்பா”

அந்த அறையிலிருந்து வெளியேறிய தியாகு, அடுத்த ஐந்தாவது நிமிடம் தனது அறையைக் காலி செய்து விட்டுக் கிளம்பினான்.

****​

அதே நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறிய வெள்ளிங்கிரி, நேரே அலுவலகத்திற்குச் செல்லாமல், சற்றுத் தள்ளியிருந்த ஒரு மது பாருக்குள் நுழைந்தார். அவர் மூளை பரபரவென்று இயங்கியது. “ச்சே...சொந்த நாட்டுக்கு வந்து பெத்த மகனோடும், மகள்களோடும் சந்தோஷமா வாழலாம்!னு பார்த்தா இவ வேற வெது இறங்கிட்டாளே?...ம்ம்ம்...இவளை எப்படி அகற்றுவது?...ஆபீஸ் வரைக்கும் வந்தவள்...நாளைக்கு வீட்டிற்கே வந்து தியாகுவைச் சந்தித்துப் பேச மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?...ம்ஹூம்...வேற வழியே இல்லை!...அந்தக் கனிஷ்காவையும்...அவ மகளையும் முடிச்சிட வேண்டியதுதான்” உள்ளே சென்ற சரக்கு விபரீத எண்ணங்களைத் தூண்டி விட,

இது நாள் வரையில், நம்பிக்கை துரோகம் செய்வது, அடுத்தவர் சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பது, போன்ற குற்றங்களைச் செய்து கொண்டிருந்த வெள்ளிங்கிரியின் மனத்தில் முதன் முதலாய் கொலைக் குற்றத்திற்கான வித்து விழுந்தது.

“இந்த ஹோட்டலை விட்டு அவங்க வெளியே போகக் கூடாது...இதுக்குள்ளார வெச்சே அவங்க கணக்கை முடிக்கணும்!...அதுக்கான வேலையை இப்பவே ஆரம்பிக்கணும்!...என்ன செய்யலாம்?”

“கனிஷ்கா ஒரு காலத்துல போதை மாத்திரைகளுக்கும், மதுவுக்கும் அடிமையாகிக் கிடந்தவள்தான்!...இப்ப அவ அந்தப் பழக்கங்களிலிருந்து விடுபட்டிருந்தாலும்...அவ கிட்ட பேசற விதத்துல பேசி அவளை மது பருக வைக்கணும்!...அந்த மதுவுல அதுக்கு முன்னாடியே விஷத்தைக் கலக்கி வெச்சிடணும்!...அவ போதைல விழுந்ததும் அவ மகள் வாய்ல பலவந்தமாய் மதுவைப் புகட்டி அதையும் முடிச்சிடணும்!...போலீஸ் வந்தா அவ ஏற்கனவே “போதை அடிமை” என்கிற ஒரு பிடி போதும்...நாம தப்பிச்சுக்கலாம்” தந்திரவாதியானார் வெள்ளிங்கிரி.

திட்டத்தை செயல் படுத்தும் விதமாய் அந்த பாரிலேயே, கனிஷ்காவிற்கு மிகவும் பிடித்த பிராண்டில் ஒரு மது பாட்டிலை வாங்கி, தன் பாண்ட் பாக்கெட்டினுள் மறைத்து வைத்தார்.

அங்கிருந்து வெளியேறி, ஒரு பூச்சி மருந்துக் கடையை அடைந்து, அதீத வீரியமுள்ள ஒரு பூச்சி மருந்து பாட்டிலையும் வாங்கிக் கொண்டார்.

ஒரு ஒதுக்குப் புறமான தெருவிற்குள் நுழைந்து, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, நிதானமாய் மது பாட்டிலின் மூடி மீதிருந்த ஸ்டிக்கரைப் எடுத்தார். பின்னர் மூடியைத் திறந்து. மெல்லச் சாய்த்து அதனுள்ளிருந்த மதுவைக் கொஞ்சமாய்க் கீழே கொட்டினார்.

மீண்டுமொரு முறை தெருவை ஆராய்ந்து விட்டு, அந்த கொடிய விஷத்தை மது பாட்டிலினுள் கொட்டி நன்கு கலக்கினார். பின்னர், அதை ஓப்பன் செய்த சுவடே தெரியாத அளவிற்கு இறுக மூடி, முன்பு இருந்ததைப் போலவே மூடி மீது ஸ்டிக்கரை ஒட்டினார். “ஹா...ஹா...சூப்பர்டா வெள்ளிங்கிரி...இதைப் பார்த்தா யாருமே புது பாட்டில்னு அடிச்சுச் சொல்வாங்க!” என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு, மது பாட்டிலை மீண்டும் பாண்ட் பாக்கெட்டினுள் வைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தார்.

மறுபடியும் ஹோட்டலுக்குச் சென்று, கனிஷ்காவைச் சந்தித்து, மிகவும் மென்மையாக, அன்பொழுகப் பேசினார் வெள்ளிங்கிரி.

அவர் மது அருந்தி விட்டு வந்திருக்கின்றார், என்பதைப் புரிந்து கொண்ட கனிஷ்கா அவருடன் அதிகம் பேசுவதைத் தவிர்த்தாள்.

(தொடரும்)
 

Mukil dinakaran

New member
Aug 4, 2020
12
0
1
“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460

அத்தியாயம் - 8

“ஏய்...கனி...உனக்காக உனக்குப் பிடிச்ச பிராண்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்...சாப்பிடு” பாண்ட் பாக்கெட்டிலிருந்து அந்த மது பாட்டிலை எடுத்தார்.

“ஸ்ஸ்ஸ்!....வேண்டாம் அதை உள்ளே வைங்க!...நான் அதையெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு!...”என்றாள் கனிஷ்கா.

“ப்ச்...எனக்காக...எனக்கு கம்பெனி குடுக்க....ப்ளீஸ்!” கெஞ்சினார். அந்தக் கெஞ்சல் எடுபடாத போது கொஞ்சினார். மகள் கண் விழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் கனிஷ்காவைத் தொட ஆரம்பித்தார்.

அதை வாங்கிக் கொள்ளா விட்டால் அவர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருப்பார் என்பதால், கையை நீட்டி அதை வாங்கித் தன் பேக்கினுள் மறைத்து வைத்தாள் கனிஷ்கா.

“ப்ச்...இப்பவே சாப்பிடும்மா”

“வேண்டாம்....பாப்பா இருக்கா...அப்புறமா சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்லி மழுப்பினாள் அவள்.

“எனக்காக...ஒரு வாய்...ஒரே வாய்” போதையில் அசிங்கமாய்ச் சிரித்தபடி அவர் கேட்க,

எரித்து விடுவது போல் பார்த்தாள் கனிஷ்கா.

அதற்கு மேல் பேசினால் அவள் சத்தம் போட்டுக் கூவி விடுவாளோ என்கிற அச்சத்தில், “சரி...எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு...போயிட்டு அப்புறமா வர்றேன்” சொல்லி விட்டு வெளியேறினார் வெள்ளிங்கிரி. “எப்படியும் ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி அதைக் குடிப்பா...அப்புறம் காலையில் கண் விழிக்க மாட்டா” தனக்குள் உளறிக் கொண்டே தெருவில் நடந்தார்.

தன் தந்தையின் திருவிளையாடல்களைப் பற்றி தியாகு சொன்ன விஷயங்களைக் கேட்ட செல்வி அரண்டு போனாள். “பார்த்தீங்களா...பார்த்தீங்களா?...நான் அவரை ஏர் போர்ட்டில் பார்த்தப்பவே என்ன சொன்னேன்?... “எனக்கென்னவோ அவரைப் பார்த்த முதல் பார்வையிலேயே பிடிக்கலைங்க!...இவரைக் கொண்டு போய் நம்ம வீட்டுல...நம்ம கூட வெச்சுக்கறதை நினைச்சா இப்பவே அடி வயித்துல புளியைக் கரைக்குதுங்க”ன்னு சொன்னேன் அல்லவா?...அதுதாங்க பொம்பளை!...ஒரு ஆம்பளையைப் பார்த்த முதல் பார்வையிலேயே மனசைப் படிச்சுப்புடுவா பொம்பளை!...உங்கப்பா ஒரு ஒழுக்கமான ஆள் இல்லைங்க!”

“ஒத்துக்கறேன்!...இப்ப நாம அடுத்து செய்ய வேண்டிய காரியம் என்ன?ன்னா...அப்பாகிட்டயிருந்து சொத்தை வாங்கி...அதை அந்த அம்மாகிட்டக் குடுத்து அவங்களையும்...அந்தக் குழந்தையையும் சிங்கப்பூருக்கு சந்தோஷமா அனுப்பி வைக்கணும்!...” தியாகு சொல்ல,

“க்கும்...நீங்க கேட்ட உடனே அவர் தூக்கிக் குடுத்திடுவார் பாருங்க?” பழிப்புக் காட்டிச் சொன்னாள் செல்வி.

“ஏய்...அதை நானோ...நீயோ கேட்டாத்தான் தர மாட்டார்!...நம்ம வக்கீல் சிவஞானத்தை வெச்சு...கேட்கற முறைல கேட்டா...தானா தந்திடுவார்”

“அது சரி...அவர் பணத்துலதான் இப்ப உங்க உங்களோட சில்வர் ஹில் ஃபைனான்ஸ் ஓடிக்கிட்டிருக்கு...அதை என்ன பண்ணப் போறீங்க?...”

“அதையும் அந்தம்மா கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு நான் அங்க சம்பளத்துக்கு வேலைக்கு உட்காரப் போறேன்” என்று சொன்னவனை வியப்பாகிப் பார்த்தாள் செல்வி.

“எப்படிங்க...ஒரேயடியா இப்படி மாறினீங்க?”

“சில உண்மைகள் நெஞ்சைப் பிறாண்டிய பிறாண்டலில்தான் நான் மாறினேன்!...இப்ப இந்தப் பெண் அனுபவிக்கற வேதனையைத்தான் எங்கப்பா இருபத்து மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்கம்மாவுக்கும் குடுத்திட்டுப் போனார்!...ஆனா எங்கம்மா தலைல எந்தக் கடனையும் அவர் கட்டிட்டுப் போகலை!...அந்த வகைல பார்த்தா இந்தப் பெண்ணோட வேதனை எங்கம்மாவை விட அதிகம்!...இளம் வயசுப் பொம்பளையை வெளிநாட்டுல அந்தக் கடன்காரனுக...கேவலமான முறைல டார்ச்சர் பண்றானுகளாம்!...கேட்கும் போதே நெஞ்சு பதறுதுடி!...ம்ம்ம்...அப்புறம் இன்னிக்கே போன் போட்டு எங்க அக்காமார்கள் ரெண்டு பேரையும் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லப் போறேன்!”

“எதுக்கு?...அவங்களை எதுக்கு வரச் சொல்றீங்க?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு செல்வி கேட்க,

“நாளைக்கு ஈவினிங் நீயே அதைப் புரிஞ்சுக்குவே” என்று சொல்லி விட்டு நகர்ந்த புருஷனை வினோதமாய்ப் பார்த்தாள் செல்வி.

தன் அறைக்குள் சென்ற தியாகு மொபைலை எடுத்து தன் மூத்த அக்கா சரசுவுக்குப் போன் செய்தான். ரிங் போய்க் கொண்டேயிருந்தது அவள் காலை அட்டெண்ட் செய்யவே இல்லை. “அக்காவுக்கு இன்னமும் என் மேல் கோபம் தீரலை போலிருக்கு” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, சின்ன அக்கா திலகாவுக்குப் போன் செய்தான்.

அவள் கணவன் ஞானமூர்த்திதான் போனை எடுத்தார். “சொல்லு தியாகு என்ன விஷயம்?”

“வந்து...நாளைக்கு ஈவினிங்...நீங்களும் அக்காவும் என் வீட்டுக்கு வரணும்”

“ஏம்ப்பா...என்ன விசேஷம்?”

“வந்து பாருங்க...என்ன விசேஷம்னு புரியும்!” சஸ்பென்ஸ் வைத்தான் தியாகு.

“என்னைப் பொறுத்தவரையில் பிரச்சினையில்லை...தாராளமா வருவேன்!...ஆனா உன் அக்கா வர்றது கொஞ்சம் கஷ்டம்!...அவ இன்னும் உன் மேல் பயங்கர கடுப்புல இருக்கா...” என்று ஞானமூர்த்தி சொல்ல,

“அது எனக்கு நல்லாவே தெரியும்!...அவ கிட்டக் குடுங்க நானே பேசறேன்” என்றான் தியாகு.

சில நிமிடங்களுக்குப் பிறகு லைனில் வந்த திலகா, எடுத்த எடுப்பிலேயே கோபமாய்ப் பேசினாள், “டேய்...தியாகு!... எங்க பேச்சை மீறி அப்பனைக் கூடச் சேர்த்துக்கிட்டு ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கியே?...அப்புறம் எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டுடா இப்ப எங்களைக் கூப்பிடறே?”

“உங்க ரெண்டு பேர் பேச்சையும் கேட்காம நான் அதைச் செஞ்சதினாலதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கு!”

“என்ன உண்மை?...பெரிய்ய்ய்ய்ய உண்மை?”

“அது என்ன?ன்னு தெரிஞ்சுக்கத்தான் உன்னையும்....உன் வீட்டுக்காரரையும் நாளைக்கு ஈவினிங் என் வீட்டுக்கு வரச் சொல்றேன்”

“ம்ஹூம்....எந்த உண்மையும் எங்களுக்குத் தெரிய வேண்டாம்!...நாங்க வர மாட்டோம்!...நாங்க ரெண்டு பேரும் உன்னை எப்பவோ தலை முழுகியாச்சு!...” இன்னும் அதே கோபத்துடன் பேசினாள் திலகா.

“அக்கா...நான் அப்பன் சொத்துக்கு ஆசைபட்டதென்னவோ உண்மைதான்!...அது எவ்வளவு பெரிய தப்பு!ன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன்” தியாகுவின் குரல் லேசாய்க் கரகரக்க,

“ஏன்?...என்னாச்சு?” திலகாவின் குரலும் தணிந்து வந்தது. தம்பி பாசம் அவளை நெகிழ்த்தியது.

“அதை நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னா...நாளைக்கு வாங்க!”

எதிர் முனையில் ஒரு நீண்ட அமைதி நிலவியது. பிறகு, “சரசு அக்கா கிட்டப் பேசிட்டு முடிவு பண்றேன்” என்று சொல்லி விட்டுத் திலகா போனை வைத்தாள்.

அவளுக்கு முன்னால் பெரிய அக்காவிடம் பேசி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் சரசுவின் எண்ணுக்கு கால் செய்தான் தியாகு.

இந்த முறை அவள் காலை அட்டெண்ட் செய்ய, தான் திலகாவிடம் பேசிய அதே வார்த்தைகளை தன் மூத்த அக்கா சரசுவிடமும் பேசினான்.

தோற்றத்தில் முரடாயிருந்தாலும் உள்ளுக்குள் பாசக்காரியான சரசு, தம்பியின் குரலைக் கேட்டதுமே கோபத்தை மறந்தாள். ஆனாலும், அவன் செய்த காரியத்தால் தனக்கு உண்டான சங்கடத்தை மறைக்காமல் சொன்னாள்.

“அக்கா நான்தான் ஒத்துக்கறேனே?....நம்ம மூணு பேரும் சேர்ந்து போட்ட தீர்மானத்தை நானே உடைச்சது என் தப்புத்தான்!...அது அப்போதைய சூழ்நிலை!...ஆனா இப்ப அந்தச் சூழ்நிலை அப்படியே தலைகீழா மாறிடுச்சு!...”

“த பாரு தியாகு!...நீ எதுக்கு எங்க ரெண்டு பேரையும் வரச் சொல்றேன்னு எனக்குப் புரியலை!...ஆனாலும் என் தோளில் நான் தூக்கி வளர்த்த என் தம்பி கூப்பிடறே...அதை என்னால் மறுக்க முடியலை!...வர்றேன்!...ஒரு கண்டிஷன்...எந்தக் காரணத்தைக் கொண்டு அந்த அப்பனையோ...அவன் கொண்டு வந்திருக்கும் பாவச் சொத்தையோ எங்க கூடச் சேர்க்க முயற்சி பண்ணாதே!...அது நடக்காது” சரசு கண்டிப்புடன் சொல்ல,

“சரிக்கா” யென்று சொல்லி இணைப்பைத் துண்டித்தவன், ஓட்டல் அறையிலிருக்கும் கனிஷ்காவிற்கும் போன் செய்து, “அம்மா...நான் தியாகு பேசறேன்!...நாளைக்கு ஈவினிங் ரெண்டு பேரும் ரெடியா இருங்க...நான் ஒரு கால் டாக்ஸியை அனுப்பறேன்...அதில் ஏறி இங்க எங்க வீட்டுக்கு வந்திடுங்க!” என்றான்.

“சரிப்பா?” என்ற கனிஷ்கா, ஒரு விநாடி இடைவெளிக்குப் பின், “எதுக்குப்பா?” கேட்டாள்.

“பயப்படாதீங்க!...எல்லாம் நல்லதுக்குத்தான்” என்று சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியேறினான் தியாகு.

தாங்கள் கொண்டு வந்திருந்த உடைகள் அனைத்தையும் சற்று முன்னால் வாஷிங்கிற்கு அனுப்பியிருந்த கனிஷ்கா யோசித்தாள். “அடக் கடவுளே!...அந்த டோபி வேற டிரஸ்ஸையெல்லாம் நாளைக்கு ஈவினிங்தான் தர முடியும்!னு சொல்லிட்டானே?...இப்ப என்ன பண்றது?..நாளைக்கு அவன் லேட் பண்ணிட்டான்னா...தியாகுவின் வீட்டிற்குப் போக முடியாமல் போயிடுமே?...ஓ.கே...ஒரு லைட் ஷாப்பிங் போய் புது டிரஸ் வாங்கிட்டு வந்திட வேண்டியதுதான்”

ரிசப்ஷனை அழைத்து, “ரூம் நெம்பர் 108ல் இருந்து பேசறேன்!...இம்மீடியட்டா ஒரு டாக்ஸி அரேஞ்ச் பண்ணுங்க மேடம்!...நான் கொஞ்சம் ஷாப்பிங் போகணும்” என்றாள்.

பத்தே நிமிடத்தில் முகப்பில் காலா ஸ்டில் ஒட்டப்பட்டிருந்த டாக்ஸி வந்து விட, ரிசப்ஷனில் காத்திருந்த கனிஷ்காவும், சில்பாவும் அதில் ஏறினர்.

வெள்ளை உடையில் ஸ்டைலாக இருந்த அந்த டாக்ஸி டிரைவரின் முகத்திலும், பேச்சிலும், அசைவிலும், நிறைய ரஜினித்தனம் தெரிய, ஷில்பா தாயின் காதைக் கடித்தாள். “ம்ம்மி...டூப்ளிகேட் ரஜினி”

கனிஷ்கா சன்னமாய்ச் சிரிக்க, “என்னா மேடம்?...என்னா சொல்றாங்க உங்க டாட்டர்?” அட்சரம் பிசகாத ரஜினி குரல்.

“உங்களை டூப்ளிகேட் ரஜினி”ன்னு சொல்றா” என்ற கனிஷ்கா, “நீங்க ரஜினி ரசிகரா?” கேட்டாள்.

“இல்லை...”

“இல்லையா?”

“ரசிகர் இல்லை....பக்தர்”

“ஓ...”என்று வாய் விட்டுச் சிரித்தாள் கனிஷ்கா.

காரில் போகும் போது, ஒருவித சந்தேகத்தில் பேக்கினுள் கையை விட்டு தன் கிரெடிட் கார்டுகள் பத்திரமாய் உள்ளனவா? என்று சோதித்தாள்.

அப்போது வெள்ளிங்கிரி கொடுத்துச் சென்ற அந்த விஷம் கலந்த மது பாட்டில் கையில் பட, “ச்சை”என்று முனகிக் கொண்டே, அதை சில்பாவிற்குத் தெரியாமல் வெளியில் எடுத்து, டிரைவர் இருக்கைக்குப் பின்னாலிருந்த ரெக்ஸின் கவரின் ஜிப்பைத் திறந்து அதனுள் வைத்து, ஜிப்பை இழுத்து விட்டாள்.

ஷாப்பிங் முடிந்ததும் அவர்களை பத்திரமாய்க் கொண்டு வந்து அதே ஹோட்டலில் டிராப் செய்து விட்டுச் சென்ற டூப்ளிகேட் ரஜினியிடம், “ஆமாம்...உங்க பேரை நீங்க சொல்லவே இல்லையே?” கனிஷ்கா கேட்டாள்.

“ஏ.எம்.கபாலி!...அதாவது..“அருணாசல முத்துக் கபாலி”

“ஹக்”கென்று அதிர்ந்த கனிஷ்கா, “எல்லாமே ரஜினி படப் பெயர்களாகவே இருக்கு...நீங்களா வெச்சுக்கிட்டீங்களா?”

“ய்ய்ய்யா”என்று ரஜினியைப் போலவே சொல்லி விட்டுச் சென்றான் அந்த ஏ.எம்.கபாலி.

காருக்குள், “சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!...சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

தம்பியின் வேண்டுகோளுக்கிணங்கி அக்காவும், தங்கையும் மறுநாள் மாலைக்கு முன்னதாகவே தியாகுவின் வீட்டிற்கு வந்து காத்திருந்தனர். அவர்களது பார்வை ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலைவதை வைத்தே அவர்கள் இருவரும் தங்களுடைய தந்தையைத்தான் ஆவலுடன் தேடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட தியாகு, “அப்பாவையா தேடறீங்க?” கேட்டான்.

அதற்கு “ஆமாம்” என்றும் பதில் சொல்லாமல் “இல்லை” என்றும் பதில் சொல்லாமல் அவர்கள் குறுஞ்சிரிப்பு சிரிக்க,

“அவர் ஆகாது!...அவர் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டோம்!ன்னு சொன்னீங்க...இப்ப இவ்வளௌ ஆர்வமாய்த் தேடறீங்க!” என்று தமாஷாய்க் கேட்டு விட்டு, “பக்கத்துலதான் போயிருக்கார்...இப்ப வந்திடுவார்” என்றான் தியாகு.

வெள்ளிங்கிரி வருவதற்கு முன்னால் கனிஷ்காவும், அந்தச் சிறுமியும் டாக்ஸியில் வந்திறங்கினர்.
உள்ளே வந்த அவர்களை, “வாங்க...வாங்க!” என்று தியாகு வாய் நிறைய வரவேற்க, சரசுவும், திலகாவும் குழப்பமாயினர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புருவத்தை உயர்த்திக் கொண்டனர். “யார் இவ?...இவளை ஏன் தியாகு விழுந்து விழுந்து வரவேற்கிறான்?”

அதை ஓரக் கண்ணால் பார்த்து விட்ட தியாகு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். “ம்ம்ம்...அக்காக்கள் ரெண்டு பேரும் மண்டையைப் பிய்ச்சுக்கறாங்க!”

ஓரளவிற்கு மேல் சஸ்பென்ஸ் தாங்க முடியாத திலகா “பளிச்”சென்று கேட்டாள், “இந்தாப்பா...தியாகு...எதுக்கு எங்களை வரச் சொன்னே?...சீக்கிரம் சொல்லு...நாங்க நேரம் காலமே ஊருக்குப் போய்ச் சேர்றோம்”

“சின்னக்கா...ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுக்கா...அப்பாவும் வந்திடட்டும்” என்றான் தியாகு.

அவன் சொல்லி வாய் மூட வில்லை, வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க, சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்த வெள்ளிங்கிரி, அங்கு அமர்ந்திருக்கும் புதிய ஆட்களைப் பார்த்ததும் ஒரு கணம் அப்படியே நின்றார்.

பிறகு நிதானமாய் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே வந்தவர், அந்த கனிஷ்காவையும், அவள் மகள் சில்பாவையும் பார்த்ததும் முகம் பேயறைந்தது போலானார். ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்,

“தியாகு...இவங்கெல்லாம் யாரு?” சன்னக் குரலில் கேட்டார். நடிப்புத் திலகம்.

புன்னகைத்தபடியே தந்தையின் அருகில் சென்று, அவரைக் கைத்தாங்கலாய் அழைத்து வந்து, சோபாவில் உட்கார வைத்தான் தியாகு.

“அப்பா...இந்த ரெண்டு பேரையும் உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தறேன்!...”என்று சொல்லி தன் சகோதரிகள் இருவரையும் தந்தைக்கு அறிமுகப்படுத்தினான். “இது உங்க மூத்த மகள்...சரசு!....இது இளைய மகள் திலகா!...என்ன கொடுமை பார்த்தீங்களா...பெத்த அப்பாவுக்கு மகள்களை மகன் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கு!” என்று சொல்லி விட்டுத் தலையிலடித்துக் கொண்ட தியாகு, ”இப்ப...இவங்க ரெண்டு பேரையும் நீங்க எங்களுக்கு அறிமுகப் படுத்துங்க” என்றான்.

மெல்லத் தலையைத் திருப்பி கனிஷ்காவையும் அவள் மகளையும் பார்த்த வெள்ளிங்கிரி, “என்னது?...நான் அறிமுகப்படுத்தறதா?...இவங்க...யார்?ன்னே எனக்குத் தெரியாதே?” பொய்யின் மொத்த உருவமானார்.

“அப்படியா?...அப்படின்னா இந்தப் போட்டோவுல இருக்கறது யார்?” என்று கேட்டவாறே அந்தப் பெண்ணிடமிருந்து அவளது திருமணப் போட்டோவை வாங்கி, அதைக் காட்டிக் கேட்டான் தியாகு.

பதில் பேச முடியாமல் வெள்ளிங்கிரி வாயடைத்துப் போக,

“அது என்ன போட்டோ...எங்களுக்கும் கொஞ்சம் காட்டறது?” சரசு உடனே கேட்டாள்.

சற்றும் தயங்காமல் அந்தப் போட்டோவை அவளிடம் தந்தான் தியாகு. வாங்கிப் பார்த்த அக்காவும், தங்கையும் வெள்ளிங்கிரியை எரிப்பது போல் பார்த்தனர். “அடப்பாவி மனுஷா!” இருவர் வாயும் ஒரு சேர அந்த வார்த்தையை உச்சரித்தது.

“இங்க நம்ம அம்மாவுக்கு துரோகம் செய்தது போதாது!ன்னு வெளி நாட்டுக்குப் போய்...அங்கேயும் ஒரு பொம்பளையை ஏமாற்றிக் கல்யாணம் பண்ணிக் குடித்தனம் நடத்திட்டு...கடைசில அவளோட சொத்தையெல்லாம் மொத்தமாய்த் தன் பேருக்கு மாத்திக்கிட்டு...கம்பியை நீட்டிட்டாரு...நம்மையெல்லாம் பெத்த மகராசன்...திருவாளர் வெள்ளிங்கிரி!” தியாகு விளக்கினான்.

“அடப்பாவமே!” இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.

“அந்தச் சொத்துக்காகத்தானே நீ எங்க பேச்சையும் மீறி அவருக்கு அடைக்கலம் குடுத்தே?” “வெடுக்”கென்று கேட்டாள் சரசு.

“ஒத்துக்கறேன்!க்கா...ஒரு நேரத்துல நான் அந்தச் சொத்துக்கு ஆசைப்பட்டது உண்மைதான்!...ஆனா அப்பாவைப் பற்றிய உண்மைகளையும்...அவர் கை விட்டுட்டு வந்த அந்தப் பெண்ணையும் அவளோட மகளையும் பார்த்த பிறகு எனக்கு அந்த ஆசை சுத்தமாய்ப் போயிடுச்சு!...அவங்க முகத்துல நான் நம்ம அம்மாவைப் பார்க்கறேன்!...அவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கறேன்!” தியாகு தழுதழுத்த குரலில் சொல்ல,

“உதவியா...நீயா?...என்ன உதவி செய்யப் போறே?” திலகா கேட்டாள்.

“அவங்க கிட்டேயிருந்து அப்பா பறிச்ச மொத்த சொத்தையும் அவங்களுக்கே திருப்பித் தரச் சொல்லப் போறேன்!...அவரால் ஏற்பட்ட எல்லாக் கடன்களையும் அடைச்சிட்டு அவங்க நிம்மதியா வாழ ஏற்பாடு பண்ணப் போறேன்!” தியாகு ஆணித்தரமாய்ச் சொன்னான்.

அதைக் கேட்டதும் வெள்ளிங்கிரியின் முகம் மாறியது. “நீ சொல்லிட்டா...நான் தந்திடணுமா?...ஒரு நாள் ரெண்டு நாள் கனவல்லப்பா...கிட்டத்தட்ட இருபத்திரெண்டு வருஷமா...கனவு கண்டு...திட்டம் போட்டு...அடைந்த சொத்து!...அதை அனுபவிக்கத்தான் என் பேர்ல எழுதி வாங்கினேன்...அனுபவிக்கறேன்!...என் மகனாச்சே...சும்மா ஆயிரம் ரெண்டாயிரத்தை வெச்சு பிசினஸ் பண்றானே?ன்னு உனக்கு ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி வெச்சுக் குடுத்தா...கடைசில என்னையே பதம் பார்க்கறியா?” வெள்ளிங்கிரியின் வில்லத்தனம் வெளியே பிதுங்கியது.

“ஹா...ஹா...ஹா...”என்று எல்லோரையும் திரும்பித் திரும்பிப் பார்த்துச் சிரித்த தியாகு, “பார்த்திட்டீங்கல்ல?...இது...இதுதான் நம்மைப் பெத்தவனோட நிஜ முகம்!...எல்லோரும் பார்த்திட்டீங்கல்ல...மறந்திடாதீங்க!” என்றான்.

“என்னடா...எல்லோரும் சேர்ந்து மிரட்டினா நான் பயந்திடுவேன்!னு நினைச்சிட்டீங்களா?...உங்களால் என்னை என்னடா பண்ண முடியும்?”

“அதை நான் சொல்ல மாட்டேன்...உங்க பின்னாடி நிற்கிறாரே அவர் சொல்லுவார்” என்று தியாகு சொன்னதும் சட்டென்று திரும்பி பின்னால் பார்த்தார் வெள்ளிங்கிரி.

வக்கீல் சிவஞானமும், உடன் ஒரு இன்ஸ்பெக்டரும் நின்று கொண்டிருந்தனர்.

வெள்ளிங்கிரி ஒரு கணம் ஆடிப் போனார்.

“மிஸ்டர் வெள்ளிங்கிரி...முதல் மனைவி இருக்கும் போதே இன்னொரு மனைவியை...முதல் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் செய்தது உங்களோட முதல் குற்றம்!” இன்ஸ்பெக்டர் நிதானமாய்ச் சொல்ல,

வெள்ளிங்கிரி புருவங்களை நெரித்தார்.

“தனக்குத் திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டியது உங்களோட இரண்டாவது குற்றம்”

பற்களைக் கடித்தார் வெள்ளிங்கிரி.

“போதையில் இருந்த ஒரு பெண்ணைக் கெடுத்து அவளைக் கர்ப்பமாக்கியது உங்களோட மூன்றாம் குற்றம்”

விழிகளைப் பெரிதாக்கிச் சிரித்தார் வெள்ளிங்கிரி.

“வெளிநாட்டு வங்கிகளிலும், மற்ற நிறுவனங்களிலும் ஏகப்பட்ட கடன்களை வாங்கிக் கொண்டு...எதையும் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவிற்குத் தப்பியோடி வந்தது...நான்காம் குற்றம்”

தலையை மேலும் கீழும் வேகமாய் ஆட்டினார் வெள்ளிங்கிரி.

“உங்க கண்டெய்னர் நிறுவனத்துல வேலை பார்த்த காண்ட்ராக்ட் வேலையாட்களுக்கு சம்பளம் குடுக்காம ஏமாத்தினது உங்களோட ஐந்தாம் குற்றம்”

இன்ஸ்பெக்டர் குற்றங்களை எடுக்கிக் கொண்டே போக, சரசுவும் திலகாவும் வெலவெலத்துப் போயினர். “அடப்பாவமே...இந்த மனுஷன் இத்தனை மோசமானவரா?...அய்யய்யோ...இவரு கூட சகவாசம் வெச்சுக்கிட்டா நம்மையும் கொண்டு போய் உள்ளார போட்டுடுவாங்க போலிருக்கே?” திலகா முணுமுணுத்தாள்.

(தொடரும்)
 

Mukil dinakaran

New member
Aug 4, 2020
12
0
1
“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460

அத்தியாயம் - 9

அமைதியாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வக்கீல் சிவஞானம் பேசினார், “எந்தப் பிரச்சினையும் பண்ணாம சொத்தையெல்லாம் நீங்களாகவே அந்தப் பெண்ணுக்குத் திருப்பிக் குடுத்திட்டா...அவங்க சிங்கப்பூர் போய் எல்லாக் கடன்களை அடைச்சு உங்களை அந்த ஒரு குற்றத்திலிருந்து காப்பாத்திடுவாங்க!...”

தான் வசமாய்ச் சிக்கிக் கொண்டோம், எட்டுத் திசையிலிருந்தும் தனக்கு எதிரான அம்புகள் புறப்பட்டு விட்டன, என்பதைப் புரிந்து கொண்ட வெள்ளிங்கிரி, “எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேணும்!...”என்றார்.

“கால அவகாசம்!ன்னா?”
“ஒரு நாள் டைம் குடுங்க!”

இன்ஸ்பெக்டரைப் பார்த்து வக்கீல் சிவஞானம் தலையசைக்க, “ஓ.கே....நாளைக்கு இதே நேரத்துல நாம எல்லோரும் இங்க கூடறோம்!...அப்ப நீங்க அபகரிச்ச சொத்து முழுவதையும் திருப்பிக் குடுக்கறீங்க” என்றார்.

வெள்ளிங்கிரி இறுக்க முகத்துடன் சம்மதித்தார்.

“லாயர் சார்...நீங்க ஃபர்ஸ்ட் செட் டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணிக் கொண்டு வந்திடுங்க!..மீதியை அப்புறமா ரெடி பண்ணிக்கலாம்” என்று வக்கீல் சிவஞானத்தைப் பார்த்து இன்ஸ்பெக்டர் சொல்ல,

“ஓ.கே...”என்றார் வக்கீல்.

வெள்ளிங்கிரி “விர்”ரென்று வெளியேற எத்தனிக்க, “த பாருங்க மிஸ்டர் வெள்ளிங்கிரி...நாளைக்கு மட்டும் நீங்க இங்க வரலை...அதுக்கப்புறம் எங்க போலீஸ் வேலையை நாங்க காட்ட வேண்டி வந்திடும்...ஜாக்கிரதை” இன்ஸ்பெக்டர் அதட்டாலாய்ச் சொன்னார்.

அதைக் கேட்டதும் வெளியே போக முயன்றவர் மீண்டும் வந்து ஹால் சோபாவிலேயே அமர்ந்தார்.

தன் சுயரூபம் எல்லோருக்கும் தெரிந்த பின், தியாகுவின் வீட்டில் தங்குவதற்குப் பிடிக்காமல் அங்கிருந்து புறப்பட்டார் வெள்ளிங்கிரி.

“அப்பா....எங்க போறீங்க?...இங்கேயே இருங்க” தியாகு சொன்னான்.

பதிலேதும் பேசாமல், அவனை முறைத்துப் பார்த்து விட்டு, அமைதியாய் வாசலைத் தாண்டி தெருவில் இறங்கினார் அவர்.

“சரி...எங்க போகணும்?ன்னு சொல்லுங்க நானே கொண்டு வந்து டிராப் பண்றேன்” பரபரத்தான் தியாகு.

நின்று அவனைத் திரும்பிப் பார்த்து, “என்னப்பா...நாளைக்கு இங்க வராமல் போயிடுவேனோ?ன்னு சந்தேகப்படறியா?...கவலைப்படாத!...இதுவரைக்கும் எல்லாமே நான் நினைச்சபடி நடந்தது!...இனி எல்லாமே நீங்க நினைச்சபடிதான் நடக்கும்!...” சொல்லி விட்டு “விர்”ரென்று வெளியேறினார்.
****​
இரவு மணி பத்தரை.

“பொதுவாக என் மனசு தங்கம்!...ஒரு போட்டியின்னு வந்து விட்டால் சிங்கம்” டாக்ஸியில் ரஜினி பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, சவாரிக்காக காத்து அமர்ந்திருந்தான் டாக்ஸி டிரைவர் ஏ.எம்.கபாலி.

“சவாரி வருமாப்பா?”

வெள்ளிங்கிரியை மேலும் கீழும் பார்த்த கபாலி, “என்ன பெருசு?...எங்க போகணும்?” ரஜினி ஸ்டைலில் கேட்டான்.

“மொதல்ல ஏதாவது ஒரு பாருக்குப் போ!...கொஞ்சம் சரக்கு உள்ளார போனாத்தான் என் மூளை வேலை செய்யும்” என்றார் வெள்ளிங்கிரி.

“என்ன பெருசு?...நக்கலா?...மணி இப்ப பத்தரை...பத்து மணிக்கே கடையெல்லாம் மூடிடுவாங்க!ன்னு தெரியாதா?” கபாலி சொல்ல,

“ப்ச்...ஏதாவதொரு சந்துல ஒண்ணு ரெண்டு கடை திறந்திருக்குமே....உனக்குத் தெரியாதா...என்ன?”

“தெரியாது” பளிச்சென்று பதில் வந்தது கபாலியிடமிருந்து.

“என்னப்பா டாக்ஸி டிரைவர் நீ?...எந்த சந்துல...எந்தக் கடை...எந்த நேரம் வரைக்கும் திறந்திருக்கும்!னு கூடத் தெரிஞ்சு வெச்சுக்காம நீயெல்லாம் என்னய்யா டாக்ஸி டிரைவர்” வெள்ளிங்கிரி எங்கோ இருக்கும் தன் கோபத்தை அந்தக் கபாலி மீது இறக்க,

“த பாருங்க பெரியவரே...எனக்குக் குடிப்பழக்கமெல்லாம் சுத்தமாய்க் கிடையாது!...உங்களுக்கு அந்த மாதிரி டாக்ஸி டிரைவர்தான் வேணுமின்னா...அப்படியே பொடி நடையாய்ப் போங்க...கொஞ்ச தூரத்துல ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் வரும்...அங்க கேட்டுப் பாருங்க” என்றான் கபாலி.

“எவ்வளவு தூரத்துல இருக்கு அந்த ஸ்டாண்ட்?”

“என்ன ஒரு ஏழு கிலோமீட்டர்தான்”

“என்னது?...ஏழு கிலோமீட்டரா?...அய்யோ சாமி அவ்வளவு தூரமெல்லாம் என்னால நடக்க முடியாது” என்றவாறே டாக்ஸியின் பின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் வெள்ளிங்கிரி.

சிரித்தபடியே டிரைவர் இருக்கைக்குக் சென்ற கபாலி, “இப்பச் சொல்லுங்க...எங்க...போகணும்?”

“ம்ம்ம்...ஊருக்கு வெளிய இருக்கற ஏதாவதொரு ஒரு லாட்ஜுக்குப் போப்பா!...நான் கொஞ்சம் தனியா இருக்கணும்” என்றார் வெள்ளிங்கிரி.

சில விநாடிகள் யோசித்து விட்டு, டாக்ஸியை ஸ்டார்ட் செய்தான் கபாலி.

பின் சீட்டில் உட்கார்ந்திருந்த வெள்ளிங்கிரி டிரைவர் சீட்டுக்குப் பின்புறமிருந்த ரெக்ஸின் கவர் சற்று உப்பலாயிருக்க, கையால் தொட்டுப் பார்த்தார்.

பாட்டில் போல் ஏதோவொன்று அவர் கைக்குப் பட, அந்த ரெக்ஸின் கவரின் ஜிப்பை சத்தமில்லாமல் நீக்கினார்.

உள்ளே ஒரு மது பாட்டில் இருக்க, முகம் மலர்ந்தார். “அடப்பாவி....குடிப்பழக்கமே இல்லை”ன்னு சொன்னானே இந்த டிரைவர்!...கடைசில பார்த்தா இங்க...சீட்டுக்குப் பின்னாடியே ஒளிச்சு வெச்சிருக்கானே!...ம்ஹூம்...என்னை ஏமாற்ற நினைச்ச இந்தப் பயலை..நான் ஏமாற்றியே தீரணும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, அந்த மது பாட்டிலை எடுத்து தன் பாண்ட் பாக்கெட்டினுள் செருகிக் கொண்டார்.

கனிஷ்காவால் அங்கு ஒளித்து வைக்கப்பட்ட விஷம் கலந்த அந்த மது பாட்டில் சந்தோஷமானது. “ஒரு பாவமும் அறியாத அந்தப் பெண்ணையா கொல்ல நெனச்சே?...கெழவா...இருடி...இன்னிக்கு எனக்குத் தீனி நீதான்” என்று அது சத்தமில்லாமல் முனகியது.

நகருக்கு மிகவும் தள்ளியிருந்த அந்த பாடாவதி லாட்ஜ் முன்னால் தன் டாக்ஸியை நிறுத்திய கபாலி, “சார்...இதான் கடைசி இதுக்கு மேலே லாட்ஜே கிடையாது” என்றதும்,

குனிந்து கண்ணாடி வழியே லாட்ஜைப் பார்த்தார் வெள்ளிங்கிரி.

“கவிதா லாட்ஜ்” என்ற பழைய போர்டு சாய்வாய்த் தொங்கிக் கொண்டிருக்க, அதன் தலை மீது ஒரு மஞ்சள் நிற பல்பு சோகையாய் அழுது வடிந்து கொண்டிருந்தது.

“பரவாயில்லைப்பா...இதுவே போதும்” என்று சொல்லியவாறே இறங்கிய வெள்ளிங்கிரி, அந்தக் கபாலிக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு லாட்ஜினுள் நுழைந்தார்.

அழுக்கும், தூசியும் அப்பியிருந்த அந்த ரிசப்ஷனில் வயதான ஒரு பெரியவர், கண்களில் தூக்கத்தை நிரப்பி வைத்துக் கொண்டு, “வா...ங்...க” என்றார்.

“ஒரு சிங்கிள் ரூம் இருக்குமா?”

“அட ஏன் சார் நீங்க வேற வயித்தெரிச்சலைக் கிளப்பறீங்க! இங்க...எல்லா ரூம்களுமே காலியாய்த்தான் இருக்கு!...சிட்டியை விட்டு இவ்வளவு தொலைவுல கொண்டு வந்து லாட்ஜைக் கட்டி வெச்சா...எவன் சார் வருவான்?...ஹூம்...எங்க முதலாளிகிட்ட பணம்தான் நிறைய இருக்கு...மண்டைல மூளை கொஞ்சம் கூடக் கிடையாது!” அந்தப் பெரியவரின் பேச்சிலிருந்தே அவருக்கு அங்க சரியான முறையில் சம்பளம் தரப்படுவதில்லை, என்பதைப் புரிந்து கொண்டார் வெள்ளிங்கிரி.

“எனக்கு ஒரு சிங்கிள் ரூம் புக் பண்ணுங்க பெரியவரே!” என்றார் வெள்ளிங்கிரி.

பெரியவர் லெட்ஜரை எடுத்து, நிதானமாய் விரித்து, எழுத ஆரம்பிக்க, அவரிடமிருந்து அந்த லெட்ஜரை தானே வாங்கி, அதில் எழுத வேண்டியவற்றையெல்லாம் தானே எழுதிக் கொடுத்து விட்டு, ரூம் சாவியை வாங்கிக் கொண்டு தாவித் தாவி, படிகளில் ஏறினார் வெள்ளிங்கிரி.

அறைக்குள் வந்ததும் சந்தோஷமாய் அந்த மது பாட்டிலை எடுத்து அதன் மூடி மீதிருந்த லேபிளை உரித்து வீசி விட்டு, “அந்தக் கனிஷ்காவுக்குப் பிடித்த பிராண்ட்!...”என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர், “ஹும்...ஒரு காலத்துல போதையிலேயே கிடந்தவ இன்னிக்கு என்னவோ பெரிய பத்தினித்தாய் மாதிரி பேசறா!” முணுமுணுத்தவாறே அண்ணாந்து அந்த பாட்டிலில் இருந்தவற்றைத் தன் வாய்க்குள் “மடக்...மடக்”கென்ற ஓசையோடு கொட்டினார்.

பாவம், அவருக்கு எப்படித் தெரியும்.....தான் விஷம் கலந்து வைத்த மது பாட்டில்தான் அது, என்பதும், அதை கனிஷ்காதான் இந்த டாக்ஸியில் ஒளித்து வைத்தாள், என்பதும்?

வழக்கமாய்த் தரும் போதையை விட, இன்று அந்த மது அதிகப்படியான போதையைத் தருவது போல் அவருக்குத் தோன்ற, “ம்ம்ம்...சரக்கு செம ஜோர்” வாய் விட்டு சொன்னார்.

அந்த ஜோர் சிறிது நேரம்தான்.

தொண்டையிலிருந்து புறப்பட்ட அந்த எரிச்சல் அடி வயிறு வரை சென்று அவரைப் புரட்டிப் போட, வயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உருண்டார். “அய்யோ....அய்யோ...தொண்டை எரியுதே!...வயிறு எரியுதே!...” கதறினார். கத்தினார்.

கண்கள் இருட்டிக் கொண்டே போக, மூச்சு விடத் திணறினார்.

“சர்ர்ர்ர்ர்ர்”ரென்று வேகமாய் கிணற்றுக்குள் விழுவது போல் உணர்ந்தார்.

அவரது கத்தல் ஓசை கொஞ்சம் கொஞ்சமாய் மாறி, ஹீனக்குரலாய் ஒலித்து, அதன் பிறகு ஓசையற்ற அமைதிக்குள் புதைந்து போனது.

பாவத்திற்கான சம்பளத்தை எளிதாய்ப் பெற்றுக் கொண்டார் வெள்ளிங்கிரி.

அவரது உயிரற்ற உடல் பாதி கட்டிலின் மீதும், பாதி கட்டிலுக்கு வெளியிலுமாய்த் தொங்கிக் கொண்டிருந்தது.

மாலை ஐந்து மணியிலிருந்தே தியாகுவின் வீட்டில் எல்லோரும் கூடி, வெள்ளிங்கிரியின் வருகைக்காக காத்திருந்தனர். ஆறு மணியாகியும் அவர் வராது போக, எல்லோர் மனதிலும் லேசான சந்தேகம் உருவாகத் துவங்கியது.

சரசுவும் திலகாவும் ஒருவரையொருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டனர்.

முந்தைய இரவு ஹோட்டல் அறைக்குச் செல்லாமல் தியாகுவின் வீட்டிலேயே மகள் சில்பாவுடன் தங்கி விட்ட கனிஷ்கா சமையலறையில் செல்விக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

“அப்பாவை வெளியே போக அனுமதித்து மறுபடியுமொரு பெரிய தவறைச் செய்து விட்டேனோ?” தியாகு மனம் நொந்தான்.

இன்ஸ்பெக்டர் அடிக்கடி வாட்சைப் பார்த்துக் கொண்டேயிருக்க, அவரது டென்ஷனைப் புரிந்து கொண்ட வக்கீல் சிவஞானம், “என்ன இன்ஸ்பெக்டர் சார்...ஏதாவது அர்ஜண்ட் வேலையா?” சன்னக் குரலில் கேட்டார்.

“யெஸ் மிஸ்டர் சிவஞானம்...சிட்டிக்கு வெளிய இருக்கற ஒரு தேர்ட் கிரேட் லாட்ஜுல எவனோ ஒரு கிழவன் சூஸைட் பண்ணிக் கிடக்கறானாம்...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போன் வந்திச்சு...”

“ஓ...”என்றவாறே மேவாயைத் தடவிய வக்கீல் சிவஞானம், “அப்ப...நீங்க வேணா கிளம்புங்க இன்ஸ்பெக்டர்...அந்தப் பெரியவர் வந்தா நான் பேசிக்கறேன்!...ஒருவேளை...உங்க உதவி தேவைப்பட்டா நானே உங்களுக்கு கால் பண்றேன்” என்றதும்,

“ரொம்ப தேங்க்ஸ்...வக்கீல் சார்” என்று சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் அவசர அவசரமாய்க் கிளம்பிச் சென்றார்.

தியாகுவே ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து வெள்ளிங்கிரியின் மொபைல் எண்ணுக்குக் கால் செய்தான். ரிங் போய்க் கொண்டே இருந்ததே தவிர, போன் எடுக்கப்படவில்லை.

“ச்சை!... மனுஷன் கடைசில நம்ம கிட்டேயே தன்னோட வேலையைக் காட்டிட்டார்!...இவரை நம்பி அவரோட சிங்கப்பூர் பொண்டாட்டி கிட்டே நான் வாக்கு வேற குடுத்திட்டேன்!...இவர் வரலைன்னா...எல்லாமே புஸ்வாணம் ஆயிடுமே?” உள்ளுக்குள் புழுங்கினான் தியாகு.

மெல்ல அவனை நெருங்கி வந்த சரசு, “ஏண்டா...அந்த மனுஷன் இருபத்திமூணு வருஷத்துக்கு முன்னாடியே “ஒண்ணாம் நெம்பர் ஃபிராடு”ன்னு பேரு வாங்கின மனுஷன்...அவரைப் போய் நம்பின உன்னை என்ன?ன்னு சொல்றது!ன்னு எனக்குப் புரியலை!” என்றாள்.

அவள் பின்னாடியே வந்த சின்ன அக்கா திலகா, “என்னப்பா...“உங்கம்மாவுக்கும் பெப்பே...உனக்கும் பெப்பே...உங்க எல்லாருக்கும் பெப்பே!”ன்னு பெப்பே காட்டிட்டுப் போயிட்டாரா உன்னோட அருமை அப்பா” சொல்லி விட்டுத் தலையிலடித்துக் கொண்டாள்.

தியாகுவின் நிலைமையைப் புரிந்து கொண்ட கனிஷ்கா அவனருகில் வந்து, “தம்பி...உங்களுக்கெல்லாம் அவரோட நம்பிக்கை துரோகம் புதுசு...ஆனா எனக்கு நிறையவே பழகிப் போச்சு!...அதனால விடுங்க தம்பி!...நான் சிங்கப்பூருக்கே திரும்பிப் போறேன்!...என்னால முடிஞ்ச அளவுக்கு கடன்காரங்களைச் சமாளிக்கறேன்!...முடியாத பட்சத்துல......”என்று கரகரத்த குரலில் சொல்லி, கையை மேலே காட்டிய அப்பெண்ணை நெகிழ்வுடன் தொட்டாள் சரசு,

“அம்மா...நீங்க இப்ப நிற்கிற இதே நிலைமைல என்னோட தாயும் ஒரு காலத்துல நின்னதை நான் பார்த்திருக்கேன்!....வாழ்க்கை முழுவதும் அவங்க அனுபவிச்ச அத்தனை துயரங்களையும், வேதனைகளையும், நானும் அனுபவிச்சிருக்கேன்!...அதனால...என்னால் உங்க மனக் கவலையை புரிஞ்சுக்க முடியுது!...நீங்க எதுக்கு மறுபடியும் அங்க போறீங்க?...இங்கியே எங்க கூட இருங்க!...” என்றாள்.

சரசு தன்னுடன் இணக்கமாய்ப் பேசியதில் மகிழ்ந்து போன கனிஷ்கா, “உங்களோட அன்புக்கு ரொம்ப நன்றிம்மா...என்னால அவ்வளவு சுலபத்துல அங்கிருந்து வந்திட முடியாது தாயி!..இப்ப போறேன்...விதி இருந்தா எதிர்காலத்துல வர்றேன்” என்றாள் கண்ணீர் விழிகளுடன்,

அப்போது சிவஞானத்தின் மொபைல் சிணுங்க, எடுத்துப் பார்த்தார்.

இன்ஸ்பெக்டர்தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர்!”

“வக்கீல் சார்...ஒரு பிரச்சினை...நீங்க அங்க வருவார்!...வருவார்!ன்னு எதிர்பார்த்திட்டிருக்கற அந்த வெள்ளிங்கிரிதான் இங்க சிட்டிக்கு வெளிய இருக்கற ஒரு பாடாவதி லாட்ஜுல தற்கொலை பண்ணிக்கிட்டுக் கிடக்கார்”

“ஓ...மை...காட்” ஓங்கிய குரலில் சொல்லியபடி வக்கீல் நெற்றியில் கையை வைக்க,

அங்கிருந்த எல்லோரும் ஒரே நேரத்தில் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவரைப் பார்த்தனர்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க பாடியை ஜி.ஹெச்.சுக்குக் கொண்டு போயிடுவோம்...நீங்க அவங்க எல்லோரையும் கூட்டிட்டு ஜி.ஹெச்.வந்திடுங்க” என்றார் இன்ஸ்பெக்டர் மறுமுனையில்.

“ஓ.கே...இன்ஸ்பெக்டர்...நானே இவங்க எல்லோரையும் ஜி.ஹெச்.சுக்கு கூட்டிட்டு வந்திடறேன்” சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்த சிவஞானத்தின் அருகில் வந்த தியாகு, “என்ன வக்கீல் சார்...என்னாச்சு?” பதட்டமாய்க் கேட்டான்.

“உங்கப்பா வர மாட்டார் தியாகு!” என்றார் வக்கீல்.

“ஏன் சார்?”

“அவர் வர முடியாத இடத்துக்குப் போயிட்டார்...ஐ மீன்...இறந்திட்டார்”

பெண்கள் மூவரும் திகிலோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அய்யோ...வக்கீல் சார்...என்ன சொல்றீங்க?” தியாகு மறுபடியும் கேட்டான்.

“இப்பத்தான் இன்ஸ்பெக்டர் போன் பண்ணிச் சொன்னார்!...ஏதோ ஒரு ஹோட்டல் ரூம்ல...மதுவுல விஷத்தைக் கலந்து குடிச்சு உங்கப்பா சூஸைட் பண்ணிக்கிட்டாராம்!” என்றார் வக்கீல்.

தன் உயிரை எடுக்க அவர் கலந்த விஷம்தான், அவரது உயிரையே எடுத்திருக்கின்றது, என்பது புரியாமல் வெள்ளிங்கிரியின் மறைவிற்காக குலுங்கிக் குலுங்கி அழுதாள் கனிஷ்கா.

தந்தையின் பதினாறாம் நாள் காரியங்கள் முடியும் வரை காத்திருந்த தியாகு, அது முடிந்த மறுநாளே வக்கீல் சிவஞானத்தை தன் வீட்டிற்கு வரவழைத்தான்.

தியாகுவின் வேண்டுகோளின்படி கனிஷ்காவும், அவள் மகள் சில்பாவும், வெள்ளிங்கிரி இறந்த அன்றே ஹோட்டல் அறையைக் காலி செய்து விட்டு, அவன் வீட்டிலேயே வந்து தங்கியிருந்தனர்.

அந்தப் பதினாறு நாளில், அவன் சகோதரிகளான சரசுவும், திலகாவும் கனிஷ்காவுடன் மிகவும் அன்னியோன்யமாகப் பழகி நெருங்கியிருந்தனர். அவர்கள் “சித்தி...சித்தி” என்று விகல்பமில்லாமல் அழைக்கும் போதெல்லாம் கனிஷ்காவின் ரத்த நாளங்களில் உற்சாகப் பூக்கள் மலர்ந்து மலர்ந்து சிரித்தன. மேலும், சில்பாவை அவர்கள் தங்களுடைய குட்டித் தங்கையாகப் பாவித்துக் கொஞ்சி மகிழ்வதைக் கண்ட கனிஷ்காவிற்கு வாழ்நாள் முழுவதும் இந்த வீட்டிலேயே...இவர்களுடனேயே...வாழ்ந்து செத்து விடலாம் போலிருந்தது.

அடுக்கடுக்காய் துரோகங்கள் செய்திருந்தாலும், தன் கணவர் தனக்கு சேர்த்து விட்டுச் சென்றிருந்த அந்த பாச உறவுகளின் முன்னால், அவர் சேர்த்துச் சென்ற சொத்துக்களெல்லாம் தூசு போல் தெரிந்தன அவளுக்கு.

ஹால் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த வக்கீல் சிவஞானம், “என்ன மிஸ்டர் தியாகு...எதுக்கு என்னை வரச் சொன்னீங்க?”

“வக்கீல் சார்...நானும்...என்னோட சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் எங்களுக்குள்ளாகவே பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்!...அதாவது...எங்க அப்பாவோட பேர்ல இருக்கற எந்த சொத்துக்கும் நாங்க உரிமை கொண்டாடப் போறதில்லை!...என்பதுதான் அந்த முடிவு!...அதனால நீங்க எல்லா சொத்துக்களையும் எங்க சித்தி பேருக்கே டாக்குமெண்ட் பண்ணிடுங்க!...ஏன்னா...அந்தச் சொத்துக்கள் எங்கப்பா சம்பாதிச்ச சொத்துக்கள் இல்லை!...அதுக்கு உரிமை கொண்டாட எங்களுக்கு அருகதையும் இல்லை!...மேலும்...எங்கப்பா ஏற்படுத்தி வெச்சிட்டுப் போன கடன் சுமை அவங்களை அந்த நாட்டை விட்டே துரத்தியிருக்கு!..அவங்க அந்தக் கடன் சுமையிலிருந்து மீளணும்ன்னா...அதுக்கு இந்தச் சொத்துக்கள் நிச்சயம் அவங்களுக்கு வேணும்!” தெளிவாய்ச் சொன்னான் தியாகு.

வக்கீல் கனிஷ்காவைப் பார்க்க, அவள் அமைதியாய் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்ன மிஸஸ் கனிஷ்கா...நீங்க என்ன சொல்றீங்க?” வக்கீல் கனிஷ்காவிடம் கேட்க,

“வக்கீல் சார்...இவங்க முடிவுக்கு நான் மதிப்புக் குடுத்து...அந்தச் சொத்துக்களை ஏத்துக்கணும்!ன்னா...அவங்க எனக்காக ஒரு வாக்குக் குடுக்கணும்!” என்று சொல்லி விட்டு அங்கிருந்த அனைவர் முகத்தையும் ஒரு முறை நேருக்கு நேர் பார்த்தாள் கனிஷ்கா.

“இஸிட்?...ஓ.கே...ஓ.கே.....என்ன வாக்குக் குடுக்கணும்?” வக்கீலே கேட்டார்.

“இன்னும் நாலஞ்சு நாள்ல நானும் என் மகளும் சிங்கப்பூர் கிளம்பப் போறோம்! அங்க போய் ஒரு மாசமோ அல்லது ரெண்டு மாசமோ தங்கியிருந்து அங்கிருக்கும் அசையும் சொத்து...அசையா சொத்து எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணிட்டு...அந்தப் பணத்துல எல்லாக் கடன்களையும் அடைச்சிட்டு...திரும்பி இங்கேயே வரப் போறோம்!...அப்படி வரும் போது...வரும் போது” மேற்கொண்டு பேச முடியாமல் கனிஷ்காவின் குரல் கமறியது. கண்களில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய்ப் பெருகியது.

“ரிலாக்ஸ்...ரிலாக்ஸ்..” என்றார் வக்கீல் சிவஞானம்.

“சொல்லும்ம்மா...“வரும் போது...?” அன்பான குரலில் கேட்டாள் சரசு.

“நீங்க எல்லோரும்...இதே அன்போட...இதே பாசத்தோட எங்க ரெண்டு பேரையும் ஏத்துக்கணும்!...எங்களையும் உங்கள்ல ஒருத்தரா நெனச்சு இந்த வீட்டுல சேர்த்துக்கணும்!...ஏன்னா...எங்கப்பாவுக்குப் பிறகு அந்த சிங்கப்பூர்ல எங்களுக்குன்னு யாருமே இல்லை” எல்லோரையும் கையெடுத்துக் கும்பிட்டு அந்தக் கனிஷ்கா வாய் விட்டு அழ,

தியாகுவின் விழியோரமும் ஈரம் உருவானது.

திலகாவின் கண்களும் கலங்கின.

அந்தச் சூழ்நிலை இறுக்கத்தை மாற்ற மூத்தவள் சரசு முன் வந்தாள். “சித்தி...நீங்க என்னை விட வயசுல சின்னவங்களா இருந்தாலும்....நீங்க இருக்கற ஸ்தானம் என்னோட தாயின் ஸ்தானம்!...தாயை யாராவது ஒதுக்குவாங்களா?...இப்பவே நீங்க எங்க குடும்பத்துல ஒருத்தர்தான்!...அதனால கவலையே படாமல் போயிட்டு வாங்க...உங்க வரவுக்காக இங்க பல இதயங்கள் காத்திட்டிருக்கும்”

வக்கீல் சிவஞானம் நெகிழ்ந்து போனார்.

தங்களைப் பெற்ற தாயை, தகப்பன் புறக்கணித்து விட்ட போதிலும், அவன் கொண்டு வந்த மாற்றாந்தாயை இந்த விழுதுகள் புறக்கணிக்கவில்லை.

*****​
விமான நிலையம்.

மதிய வெயிலில் “பள...பள”த்து நின்று கொண்டிருந்தது சிங்கப்பூர் பறந்து செல்லப் போகும் அந்த அலுமினியப் பறவை.

கனிஷ்காவையும் சில்பாவையும் வழியனுப்ப விமான நிலையம் வரை வந்திருந்த தியாகு, அவர்கள் விமானத்தில் ஏறிய போது கனத்த இதயத்துடன் கையசைத்தான்.

சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வரும் போது பாதை மறந்த பயணமாயிருந்த அந்த விமானப் பயணம், இப்போது பாதை தெளிந்த பயணமாய்த் தோன்றியது கனிஷ்காவுக்கு.

(முற்றும்)