சந்திரபவனம் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,392
615
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

இன்று முதல் "சந்திரபவனம் " கதையின் அத்தியாயங்கள் பதிவிடப்படும்.


அத்தியாயம் – 1


அன்பெனும் பிடியுள் அகப்படும்மலையே

அன்பெனும் பிடியுள் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே

அன்பெனும் கரதமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே

அன்புருவாம் பரசிவமே!சந்திரபவனத்தின் தியான மண்டபத்தில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் தில்லையம்பதி. அவர் முன்னே இரு கைகளையும் கட்டியபடி அமைதியாக அவர் கண் திறப்பதற்காக காத்திருந்தாள் சந்திரவதனா.


அம்மாளிகையின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுக்காக உணவருந்தும் அறையில் காத்திருந்தனர். ஒவ்வொருவரின் மனதிலும் எதற்காக இந்த அழைப்பு என்கிற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.


தியானத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த தில்லையம்பதியின் பின்னே இறுகிய முகத்துடன் நடந்து வந்தாள் சந்திரா.


இருவரையும் ஒருசேர பார்த்தவர்களின் மனதில் எல்லையில்லாத வெறுப்பும், கோபமும் எழுந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தனர்.


நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அவர் அமர்ந்த பின்பு அவர் அருகிலிருந்த நாற்காலியின் அருகே சென்று நின்றாள் சந்திரா. அனைவரையும் பார்வையாலேயே அமர சொன்னவர் ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தார். பின்னர் தொண்டையை லேசாக செருமிக் கொண்டவர் “உங்க எல்லோரிடமும் முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்துக்கணும். அதற்கு தான் வர சொன்னேன்” என்றார்.


அவரின் சித்தப்பா மகனின் பேரன் அஸ்வின் “உங்க சொத்துக்கள் எல்லாம் எங்கப்பா பேருக்கு எழுத போறீங்களா பெரியப்பா?” என்றான்.


அவன் அப்படி கேட்டதை ரசிக்காத அவரின் ஒன்று விட்ட தங்கை நளினா “என்னடா அதிகப்ரசங்கிதனமா பேசிட்டு இருக்க...அண்ணன் சொல்லட்டும் சும்மா இரு” என்று அதட்டினார்.


அவனை கண்டுகொள்ளாமல் “நம்ம கம்பனி பொறுப்புகளை இத்தனை நாள் நான் தான் பார்த்துகிட்டு இருந்தேன். அதை இப்போ இளையவர்கள் கையில் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்” என்றார்.


அதைக் கேட்டதும் மகிழ்ந்து போன நளினா “என் பேரன் மகேஷுக்கு கொடுங்கன்னா. ரொம்ப பொறுப்பா பார்த்துக்குவான்” என்றார்.


அவரின் பேச்சில் கடுப்பான சிதம்பரம் “ஏன் என் பேரன் அஸ்வினுக்கு பொறுப்பில்லையா? அவன் பார்த்துக்க மாட்டானா?” என்று எகிறினார்.


இதன் நடுவே நளினாவின் நாத்தனார் புவனாவும் அவர் குடும்பமும் அங்கே தான் இருந்தார்கள்.


அவரும் அவர் பங்குக்கு “மாமா! என் பேரனுக்கும் பொறுப்பை கொடுங்க நல்லா பார்த்துக்குவான்” என்று தானும் உள்ளே நுழைந்தார்.


இதில் எப்படியாவது தங்கள் வாரிசுக்கு மொத்த பொறுப்புகளையும் வாங்கிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சற்று நேரத்தில் அந்த இடமே சந்தைக்கடை போலானது.


பொறுமையாக அமர்ந்திருந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் மேஜையில் அழுத்தமாக தட்ட ஆரம்பித்தார். அதில் அதிர்ந்து போய் அனைவரும் அவரை பார்க்க ஆரம்பித்தனர்.


தனது கூர்விழிகளால் அனைவரையும் பார்த்தவர் “இந்த பொறுப்பை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நான் முடிவு பண்ணிட்டேன். அதனால பொறுமையா நான் சொல்லப் போறதை கேளுங்க” என்றார்.


தங்கள் பேரனுக்கே கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மனம் திக் திக்கென அடித்துக் கொள்ள அவரின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.


ஒருமுறை அனைவரையும் தனது விழிகளால் அளவெடுத்தபின் “என்னுடைய கம்பனி, மற்றும் இந்த அரண்மனை சம்மந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை” என்று நிறுத்தியவர் அனைவரையும் உற்று நோக்கி விட்டு “சந்திரவதனாவுக்கு கொடுக்கிறேன்” என்றார்.


அவர் சொன்ன செய்தியில் “என்ன!” என்று அதிர்ந்து போனார்கள்.


முதலில் சுதாரித்துக் கொண்ட நளினா “அண்ணா! இதை எங்களால ஒத்துக்க முடியாது...இவளுக்கும் இந்த அரண்மனைக்கும் என்ன சம்மந்தம்? உன்னோட வயதுக்கு நீ இவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த போதே நாங்க விரட்டி இருக்கணும். இதெல்லாம் நல்லாயில்லை” என்று கத்தினாள்.


சிதம்பரமும் தன் பங்கிற்கு “ஆமா அண்ணா! நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல” என்றார் கோபத்தோடு.


சிதம்பரத்தின் மனைவி மீனாட்சியோ “கண்ட கழிசடை எல்லாம் இந்த அரண்மனை பொறுப்பில் உட்கார கூடாது. உங்களுக்கு வேண்டியவளா இருக்கலாம் அதுக்காக இவளை நடுக்கூடத்தில் வச்சதே தப்பு. அதுக்கு மேல இவளுக்கு பொறுப்பு வேறையா?” என்று எகிறினார்.


அஸ்வினும், மகேஷும் அவளைப் பார்த்து “இதுக்கு தானே கிழவனா இருந்தாலும் தூண்டிலைப் போட்டு இங்கேயே செட்டிலான?” என்றனர் கேவலமாக.


அவர்கள் அனைவரின் பேச்சிலும் கற்பாறையாக இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.


சந்திராவை அனைவரும் தாக்கியதும் “அவள் தான் இந்த அரண்மனையோட பொறுப்புகளை பார்ப்பாள். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருந்தால் தாரளமாக வெளியே போகலாம். உங்களுக்கும் இந்த சொத்திற்கும் நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது. இது முழுக்க முழுக்க நான் மட்டுமே சம்மந்தபட்டது” என்று கூறி எழுந்து கொண்டார்.


அவர் எழுந்ததும் அவளும் எழுந்து அவரின் பின்னே சென்றாள்.


அனைவரும் அவரின் பேச்சில் கொந்தளித்து போய் அமர்ந்திருந்தனர்.


“இந்த கிழவனுக்கு இந்த வயசில் வைப்பாட்டி கேட்குது. இதுல இந்த அரண்மனையோட மானம் மரியாதை எல்லாம் அவ காலில் கொண்டு வைக்குதே” என்று புலம்பினார் மீனாட்சி.


நளினாவும் ‘ஆமாம் அண்ணி! இந்த அண்ணன் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்லை. அவளை நம்பி இருக்கனுமா? கருமம்! நம்ம பரம்பரை பெருமை எல்லாம் கேவலபடுத்திட்டாரே” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டார்.


அஸ்வினும், மகேஷும் தங்கள் பெற்றோரிடம் “நாம உஷாரா இல்லேன்னா அவளையே வாரிசா அறிவிச்சாலும் அறிவிச்சிடும் இந்த கிழம்” என்றான் கடுப்பாக.


“அப்படி என்ன தான் சொக்கு பொடி போட்டு வச்சிருக்காளோ அந்த சிறுக்கி” என்றார் எரிச்சலாக சிதம்பரம்.


அதே நேரம் தில்லையின் அறையில் அவரின் முன்பு கண்கள் கலங்க நின்றிருந்தவள் “ஐயா! உங்க குடும்ப வாரிசுகளுக்கு இந்த பொறுப்பை கொடுங்க...எனக்கு எதுவும் வேண்டாம்” என்றாள் மன்றாடும் குரலில்.


ஆயாசமாக சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தவர் “உனக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் சந்திரா. உன்னைப் பற்றி அவங்க பேசும் வார்த்தைகளுக்காகவே நான் நிறைய செய்யணும். உனக்கு என்ன தலையெழுத்தா இதையெல்லாம் கேட்க?” என்றார் வருத்தமான குரலில்.

கன்னங்களில் வழிந்த நீரை துடைத்தபடி “யாரோட வார்த்தைகளும் என்னை காயப்படுத்தாது ஐயா. நீங்க எனக்காக பார்க்காம தயவு செய்து உங்க முடிவை மறுபரிசீலினை பண்ணுங்க” என்றாள்.


 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,392
615
113
மறுப்பாக தலையசைத்தவர் “முடியாது சந்திரா! யார் தடுத்தாலும் என்னுடைய இந்த முடிவில் மாற்றம் கிடையாது!” என்றார் அழுத்தம் திருத்தமாக.


அவரை சற்று நேரம் அமைதியாக பார்த்தவள் நீண்ட பெருமூச்சுடன் “நான் போய் சாப்பாடு எடுத்திட்டு வரேங்கையா” என்று கூறி வெளியேறினாள்.


செல்பவளையே பார்த்திருந்தவரின் விழிகளில் கண்ணீர் துளிகள். மனமோ ஓலமிட்டு அழுதது. தான் இவ்வுலகை விட்டு போவதற்குள் அவளுக்கான நியாயத்தை வழங்கி விட வேண்டும் என்று துடித்தது.


கீழே சென்றவள் சமயலறைக்கு சென்று அவருக்கான உணவை எடுக்க ஆரம்பித்தாள் வேலையாட்களின் உதவியுடன்.


தங்களது உணவை முடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தவர்கள் அவள் உணவெடுக்க செல்வதைக் கண்டு வார்த்தைகளால் குத்தி கிழிக்க ஆரம்பித்தனர்.


“இதெல்லாம் ஒரு பொழைப்பு! கிழவனை மடக்கி வயித்தை வளர்க்கிறது என்ன ஜென்மமோ” என்றார் நளினா.


அவரது பேரனோ பாட்டியின் முன்பு என்ன பேசுகிறோம் என்கிற அளவில்லாமல் “எங்க வயசு பசங்க கூட இருந்தாலாவது சரி. இப்போ கூட நான் ரெடி. கிழவனை விட்டுட்டு வந்துட்டா இந்த வசதியான வாழ்க்கையை நானும் தர முடியும்” என்றான்.


உணவு தட்டை ஏந்திச் சென்றவள் அவன் பேசியதில் அருவெறுத்து போய் அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு நேரே அவனிடம் வந்து யாரும் எதிர்பார்க்கும் முன் ஓங்கி அறைந்திருந்தாள்.


ஒற்றை விரலை நீட்டி “ஜாக்கிரதை!” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து மாடிக்கு சென்றாள்.


அவள் அறைந்ததில் பேயறைந்தவர்கள் போல் நின்றிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு சத்தமிட ஆரம்பித்தார்கள்.


“என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டு பிள்ளை மேலையே கையை வைப்பா?” என்று குதித்தார் சிதம்பரம்.


நளினாவோ ஒப்பாரி வைக்க ஆரம்பித்திருந்தார். அண்ணன் இருக்கும் போதே யாரோ ஒருத்தி என் பேரனை அடிப்பதா என்று அவர் அழ, அங்கே களேபரம் ஆனது.


இதை எதையும் கண்டு கொள்ளாமல் தனது உணவை முடித்தவர் ஆபிசுக்கு கிளம்ப தயாராகி சந்திராவையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தார்.


அவரை பார்த்ததும் சற்றே அமைதியானவர்கள் அவளைக் கண்டதும் முறைத்தனர்.


அவர்களை கண்டு கொள்ளாமல் வெளியே சென்றவரின் முன்பு நின்று “அண்ணா! இந்த வீட்டுல என்ன நடக்குது? கண்டவளும் என் பேரனை கை நீட்டி அடிக்கிற மாதிரி சூழ்நிலை இருக்கே” என்று கண்ணீர் விட்டாள்.


நின்று நிதானமாக பார்த்தவர் “வாயை அடக்கி ஒழுங்கா இருக்க சொல்லு உன் பேரனை” என்று விட்டு மடமடவென்று தனது காரில் ஏறி அமர்ந்து விட்டார்.


அவர் இப்படி சொல்வார் என்று எதிர்பார்க்காதவர் விக்கித்து நின்றார்.


அனைவரும் கூடி நின்று அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.


சிதம்பரமோ கோபத்தோடு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.


“இதுக்கு ஏதாவது வழி பண்ணனும். அவளை இந்த வீட்டுலருந்து விரட்டினா தான் நம்ம பசங்க இந்த சொத்துக்கு வாரிசாக முடியும். இல்லேன்னா அண்ணன் அவ பேருக்கு எழுதுறது நிச்சயம்” என்றார்.


அவரை ஆதரித்த மகேஷ் “ஆமாம் தாத்தா! எப்படியாவது அவளை இங்கிருந்து வெளியேற்றனும். அதுக்கு வழியை சின்னவங்க நாங்க ஏற்பாடு பண்றோம். நீங்க பெரிய தாத்தாவோட மனசை மாற்றுகிற வழியைப் பாருங்க” என்றான்.


பெண்களும் அவன் சொன்னதை ஒத்துக் கொள்ள, அடுத்து என்ன செய்வது என்று அஸ்வினும், மகேஷும் தங்களுக்குள் பேசிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.


ஆபிசிற்கு வந்தவர்கள் தங்களது வேலையில் தலையைக் கொடுக்க, வீட்டில் நடந்த பிரச்சனைகள் மறந்து போனது.


தில்லையம்பதி தனது பொறுப்பை கைமாற்றும் வேலையை செய்ய, அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.


அதே நேரம் ஆதித்யா க்ரூப் ஆப் கம்பனீஸ் எம்டி அறையில் அமர்ந்திருந்தவர்கள் மூவரும் தீவிரமாக எதையோ விவாத்திதுக் கொண்டிருந்தனர்.


அப்போது அலைப்பேசி ஒலிக்க அதை எடுத்தவன் அதில் வந்த செய்தியைக் கேட்டு நெற்றி சுருங்க யோசனையுடன் நண்பர்களைப் பார்த்தான். அலைபேசியை வைத்து விட்டு திரும்பியவன் “கைஸ்! அரண்மனை பொறுப்பு எல்லாம் கை மாறப் போகுதாம். யார் கிட்ட தெரியுமா? தி கிரேட் சந்திரா கிட்ட” என்றான் இகழ்ச்சியாக.


அதைக் கேட்டவர்கள் அதிர்ந்து “வாட்? அவ கிட்டேயா? பெரியவருக்கு மூளை குழம்பி போச்சா?” என்றனர்.


அவனோ டேபிளை முஷ்டியால் குத்தி “நாம எதிரியா நினைப்பதற்கும் ஒரு தராதரம் வேண்டும். இவளெல்லாம்..சை!” என்று ஓங்கி அடித்தான்.


“அப்போ கம்பனி பொறுப்பும் அவ கிட்ட தான் வருமா?” என்று அதிமுக்கிய சந்தேகத்தை கேட்டான் மணி.


இருவரும் அவனை முறைத்து “டேய்! எனக்கெதிரா அவ வந்து உட்காருவாளா?” என்றான் கடுப்பாக ஆதித்யா.


“எப்படிடா அந்த பெரியவர் கூட போய்” என்றவனை “ஏய்!...விடு..தேவையில்லாம பேச வேண்டாம்” என்றவன் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்தான். அவன் முகத்தில் அத்தனை வேதனை.
 

Anuya

Well-known member
Apr 30, 2019
262
128
63
அத்தியாயம்-2

அன்று முழுவதும் மிக கனமான நாளாக இருந்தது சந்திராவிற்கு. அதை குறைக்க தோட்டத்தின் இருளில் வந்தமர்ந்திருந்தாள். குளிர் காற்று மேனியை வருடிச் சென்றாலும், மனதிலிருந்த புழுக்கம் குறையவில்லை.தன்னையும், ஐயாவையும் இணைத்து மற்றவர்கள் பேசும் பேச்சு அமிலமாக உடலைக் கழுவிச் சென்றது. ஆரம்பத்தில் மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்போது உடலைப் போல மனமும் மரத்து விட்டது. எதை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்...நாவிருக்கிறது என்பதற்காக அடுத்தவரின் வாழ்க்கையை விமர்சிக்கும் உரிமையை தாங்களே எடுத்துக் கொள்ளும் இவர்களைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.ஆனால் ஐயா அனைத்து பொறுப்புகளையும் தனக்களிக்க வேண்டும் என்று எண்ணுவது மனதிற்கு வருத்தமாக இருந்தது. சொத்துக்களை நாடி வரவில்லை என்றாலும் அன்பை மட்டுமே நாடி வந்தவளுக்கு பணமோ, பதவியோ தேவையில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.பணத்தாலோ, பதவியாலோ தனக்கான அங்கீகாரம் கிடைத்து விடாது. நடந்த எதையுமே அவற்றால் மாற்றி விட முடியாது. நடப்பது நடக்கட்டும் என்று கண்களை மூடி அமர்ந்தவளுக்கு யாரோ தன்னருகில் அமர்வது போல தோன்ற மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள்.நளினா அவள் அருகில் அமர்ந்திருந்தார். அவள் தன்னைப் பார்த்ததும் மெல்லிய புன்னகையை இதழில் படரவிட்டு அவளுக்கு மயக்கத்தை வரவழைத்தார்.“சாப்பிட்டியா சந்திரா?” என்று கேள்வியும் கேட்டு அடுத்த அதிர்வையும் கொடுத்தார்.“ம்ம்..”“உன்கிட்ட பேசணும் சந்திரா...உனக்கு ஒரு இருபத்தஞ்சு வயசு இருக்குமா? எங்கண்ணனுக்கு என்பது வயசு. சின்ன வயசில் நிறைய கஷ்டப்பட்டியோ? அதனால தான் கிழவனா இருந்தாலும் பரவாயில்லேன்னு ஒத்துகிட்டியோ?” என்றவரை வெற்றுப் பார்வை பார்த்தாள்.“உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு...என் பேரன் கிட்ட சொல்லி உனக்கு உதவ சொல்றேன். நல்ல வேலையா வாங்கித் தரேன். பாங்கில் ஒரு தொகை போடுறேன். இந்த கண்றாவி வாழ்க்கையை விட்டு நல்லதா ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ” என்றார்.மௌனமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள் “பேசி முடிச்சிட்டீங்களா? உங்க கிட்ட வந்து என் வாழ்க்கை சரியில்லேன்னு புலம்பி இருக்கேனா? எனக்கு இதெல்லாம் செய்ய நீங்க யாருங்க? உங்க பேரன் யாருங்க எனக்கு வேலை வாங்கி கொடுக்க? அப்புறம் இன்னொரு விஷயம்...என்னையோ, என் வாழ்க்கையையோ விமர்சிக்கிற உரிமை உங்களுக்கோ, உங்க குடும்பத்தாருக்கோ கிடையாது. அனாவசியமா என்கிட்ட மோதாதீங்க...தாங்க மாட்டீங்க!” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.அவளது அழுத்தமான பேச்சில் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தவர் “இவ சாதாரண ஆளு இல்ல. இவளை இங்கிருந்து அகற்றுவது பெரிய பாடா தான் இருக்கும்” என்றெண்ணிக் கொண்டே தங்கள் அறைக்குச் சென்றார்.அப்போது அவரை வழிமறித்த சிதம்பரம் “என்ன நளினா பேசினியா அவ கிட்ட?” என்றார் ஆர்வமாக.அவரை நிமிர்ந்து பார்த்து “அண்ணா! நாம நினைக்கிற மாதிரி அவ லேசுபட்டவ இல்ல. என்னம்மா பேசுறா...நாம உஷாரா இருக்கணும். அவளை இங்கிருந்து விரட்டுறது அவ்வளவு ஈஸி இல்ல” என்றார் யோசனையாக.“என்ன சொல்றா நளினா?”மெல்லிய குரலில் நடந்தவைகளை அவரிடம் பகிர்ந்து கொண்டாள். அதைக் கேட்டு தாடையை தடவிக் கொண்ட சிதம்பரம் “ம்ம்ம்...சரி பெண்ணாச்சே பேசி ஒத்துக்க வச்சு விலக்கிடலாம்னு நினைச்சேன். அது சரி வராது போல” என்றவர் தங்கையிடம் “நான் பார்த்துகிறேன். மகேஷ் மூலமா காயை நகர்த்துவோம். நீ போய் தூங்கு” என்று கூறி விட்டு தன்னரைக்குச் சென்றார்.அந்த அரண்மனை முழுவதும் பலவிதமான எண்ண அலைகள் சுற்றிக் கொண்டிருந்தது. தனதறையில் உறக்கம் வராமல் ஜன்னலோரம் நின்று இருட்டை வெறித்துக் கொண்டிருந்தாள். கண் மூடி அந்த ஏகாந்தத்தை அனுபவித்தவளுக்கு காதில் அந்த பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.எந்தன் உயிரும் உணர்வும் உனதே

நானும் நீயும் நாமாக மாற்றம்
கொண்ட

காலம் இனிதே


கண்களில் கண்ணீர் வழிய, இருளில் அவர்களின் உருவம் தெரியாதா என்று தேட ஆரம்பித்தாள்.


அதே நேரம் ஆதித்யா உறக்கம் பிடிக்காமல் பால்கனியில் நின்று சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். அவனது விழிகள் சிவந்திருந்தது. மனமோ அவளுக்கு பொறுப்புகள் கொடுக்கப் பட போகின்றது என்பதையே சுற்றி சுற்றி வந்தது.‘நீயெல்லாம் என் எதிரில் எதிரியா வந்து உட்கார்ந்திடுவியா?’ என்று கோபமாக எண்ணிக் கொண்டான்.அரண்மனை அவள் கையிலா? என்றெண்ணி மனம் எரிந்தது.அந்நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அவன் அன்னை உமா “இன்னும் தூங்கலையா ஆதி?” என்றார்.கையிலிருந்த சிகரெட்டை அவரறியாமல் கீழே போட்டுவிட்டு அவரருகில் சென்றவன் “நீங்க தூங்காம இங்கே என்ன பண்றீங்க?” என்றான்.“பாத்ரூம் போக எழுந்தேன். உன் ரூமில் லைட் எரிவதை பார்த்து வந்தேன்பா” என்றார்.“தூக்கம் வரலம்மா. உங்களுக்கு விஷயம் தெரியுமா?”“என்ன ஆதி...கம்பனியில் எதுவும் பிரச்சனையா?”“இல்லம்மா! இது வேற. அரண்மனை பொறுப்புகளை கை மாற்ற போறாங்களாம்” என்றவன் அவரின் முகத்தை ஆராய்ந்தான்.“ஒ...“யாருக்குப்பா அவர் தம்பி பிள்ளைக்கா இல்ல தங்கச்சி பிள்ளைக்கா?”“அவங்க யாருமில்ல...அவரோட தங்கி இருக்காளே சந்திரவதனா அவளுக்கு தான்” என்றான் கடுப்போடு.“என்னது அவளுக்கா? யாருப்பா அவ? இந்த கிழவருக்கு ஏன் இப்படி புத்தி போகணும்?”“தெரியலம்மா! அவ அந்த அரண்மனை பொறுப்புக்கு வரக் கூடாதும்மா...அது அசிங்கம்” என்றான் அருவெறுப்பாக.“நமக்கென்ன உரிமை இருக்கு ஆதி...இது அரண்மனை விவகாரம். ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்க மட்டும் தான் முடியும். விடு! அவங்க பரம்பரையை அவங்களே அசிங்கப்படுத்திக்கிறாங்க. நீ தூங்கு...நமக்கெதுக்கு இந்த விவகாரம் எல்லாம்” என்று கூறி விட்டு நகர்ந்தார்.அன்னை சொன்ன போதும் அவனால் எரிச்சலை அடக்க முடியவில்லை முஷ்டியால் சுவற்றில் குத்தி “இப்படியொரு வாழ்க்கை வாழ உனக்கு அசிங்கமா இல்லையாடி” என்று மேலும் மேலும் குத்தினான்.“விட மாட்டேன்! உன்னை இந்த பொறுப்புக்கு விட மாட்டேன்!” என்று கூறிக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.நாளா பக்கமும் எதிரிகளை வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் சந்திரவதனா.அவளது முகத்தில் ஆழ்ந்த சோகமும், வலியும் வேதனையும் நிறைந்திருந்தது. அதை மீறி அமைதியான அழகும் இருந்தது. அவளது அறைக் கதவின் ஓரத்தில் நின்று பார்த்தவரின் கண்களில் கண்ணீரின் சாயல்.மெல்ல அங்கிருந்து தன்னறைக்கு வந்தவர் மனைவியின் படத்திற்கு முன் நின்று “நீ சொன்ன மாதிரி அந்தக் குழந்தையை கூட்டிட்டு வந்து பொறுப்புகளை ஒப்படைக்க போறேன் லலிதா. ஆனா இங்கிருப்பவர்கள் அவள் மனதை குத்தி கிழித்து காயப்படுத்திட்டு இருக்காங்க. பாவம் அந்த சின்ன மனசு என்ன பாடுபடுதோ” என்றார்.“அவளைப் பற்றிய உண்மைகளை வெளில சொன்னா அவளுக்கு ஆபத்துகள் அதிகம். இப்போவே அவளை அழிக்க நினைப்பவர்கள் தயாராகி இருப்பார்கள். ஆனா அவளுக்கு மிக தைரியமான மனசு. நான் தான் விழிப்பா இருந்து அவளுக்கு வரப் போகும் ஆபத்திலிருந்து காப்பாற்றனும்” என்று கூறி கண்களைத் துடைத்துக் கொண்டார்.அவர் மனைவி லலிதா புகைப்படத்திலிருந்தே அவருக்கு சமாதானம் செய்து கொண்டிருந்தார்.சாய்வாக தனது படுக்கையில் படுத்துக் கொண்டு கண்களை மூடியவரின் விழிகளில் அந்தக் காட்சிகள் வந்து மறைந்தது. அது கொடுத்த வலி அவர் முகத்தில் வந்து போனது. இருபத்தைந்து வருடங்களாக உறக்கத்தை இழந்திருக்கும் எனக்கு அவளின் நல்வாழ்வு மட்டுமே உறக்கத்தை தர முடியும் என்றெண்ணிக் கொண்டார்.மறுநாள் விடியலின் முன்பே எழுந்து கொண்டவள் குளித்து முடித்து சிகப்பு வண்ண காட்டன் புடவை அணிந்து ஈரத்துடன் இருந்த முடியில் சிறிய முடிச்சிட்டு சிறு துண்டு பூவை அதில் வைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பிச் சென்றாள்.இறைவனின் முன்பு கண் மூடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தவளை கலைத்தது குருக்களின் குரல்.“வந்துட்டியாம்மா? ஒரு நிமிஷம் இரு...பூவெல்லாம் சுவாமி பாதத்தில் வச்சிட்டு வந்திடுறேன்” என்று கூறி விட்டு சென்றார்.அவரை பார்த்து மென்மையாக சிரித்து “சரி சாமி” என்று கூறி மீண்டும் கண் மூடி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.அப்போது கோவிலின் உள்ளே நுழைந்த உமா பூக்கூடையை ஆராய்ந்து கொண்டே வந்து சன்னதியில் நின்றார். சுவாமியை தரிசனம் செய்தவர் எதிரே இருந்தவளின் மீது பார்வையை பதிக்க, அந்த நிமிடம் அவருக்கு உச்சபட்ச அதிர்ச்சி.ஒரு நிமிடம் உறைந்து நின்றவர் சுதாரித்துக் கொண்டு கண்களை கசக்கிக் கொண்டு அவளைப் பார்த்து தான் பார்ப்பது நிஜம் தானா என்று உறுதி செய்து கொண்டார்.தன்னை மீறி அவரின் கண்கள் கலங்கி விட்டது. அது கன்னங்களில் வழியும் முன் சுதாரித்துக் கொண்டவரின் விழிகள் அவளை சொந்தத்தொடும், உரிமையோடும் வருடியது.அந்நேரம் குருக்கள் தீபாராதனை காட்ட, அவசரமாக தனது விழிகளை அங்கே திருப்பினார். சந்திராவும் கண்களைத் திறந்து இறைவனை பூஜிக்க ஆரம்பித்தாள்.தீபாராதனை தட்டை எடுத்துக் கொண்டு வந்த குருக்கள் உமாவிடம் வந்தவர் “என்னம்மா இன்னைக்கு விசேஷம்? இவ்வளவு காலையிலேயே வந்திருக்கீங்க?” என்றார்.சட்டென்று இன்று கோவிலுக்கு வந்த காரணம் நினைவுக்கு வர, உள்ளடங்கிய குரலில் “அக்காவோட நினைவு நாள்” என்றாள்.அவளை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு “ஆமாம்மா அதை மறந்துட்டேன் பாருங்க. உங்கக்கா மேல இத்தனை அன்பு வச்சிருக்கிற நீங்க ஏன் அவங்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்ய மாட்டேன்றீங்க?” என்றார்.பெருமூச்சுடன் “நான் எப்படி செய்ய முடியும்? அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க தான் செய்யணும்” என்றார்.குங்குமத்தை எடுத்து சந்திராவின் கையில் கொடுத்துக் கொண்டே “இல்லம்மா! அகால மரணம் அடைந்தவங்களுக்கு நிச்சயம் இதை செய்தே ஆகணும். அவங்க ஆத்மா சாந்தி அடையாம சுத்திட்டே இருக்கும்” என்றார்.அவர் சொன்னதின் தாக்கம் அவர் முகத்தில் தெரிய “நீங்க சொல்றது புரியுதுங்க. ஆனா, நாங்க செய்வதை விட அவர் புகுந்த வீட்டு சொந்தங்கள் தான் இதை செய்வது முறை” என்றார்.“நீங்க சொல்றதும் சரி தாம்மா” என்றவர் சந்திராவிடம் “நீயும் இன்னைக்கு சீக்கிரம் வந்திருக்குறியே எதுவும் விசேஷமா?” என்றார்.“ஆமாம் சாமி. என்னுடைய பிறந்த நாள்” என்றாள்.குருக்களிடம் பேசி விட்டு பிரகாரத்தை சுத்திக் கொண்டிருந்த உமாவுக்கு அவள் சொன்னது காதில் விழ, அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள். இதை எப்படி மறந்தேன் என்று அவள் மனம் குத்தியது. மயக்கம் வரும் போல தோன்ற பக்கத்தில் இருந்த தூணை பற்றிக் கொண்டாள்.அப்போது அங்கே வந்த சந்திரா “ஆண்டி! என்ன பண்ணுது” என்று அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.“ஒண்ணுமில்லம்மா” என்றவள் அவளது பிடியிலிருந்து விலகி தூணோரம் அமர்ந்து விட்டாள்.“ஆண்டி! தண்ணி வேணுமா? என்ன செய்யுது?” என்றாள் பதட்டமாக.மெதுவாக கண்களைத் திறந்தவளின் கண்களில் கண்ணீர் “வேண்டாம்மா” என்றவளின் கைகள் உயர்ந்து அவளது கன்னத்தை வருடியது.உமாவின் பார்வை சந்திராவின் இதயத்திற்குள் நுழைந்து ஏதோ செய்தது. அதிலும் ஆசையோடும், உரிமையோடும் வருடும் அந்தக் கைகள் ஏதோ செய்தியை உணர்த்தியது.தன்னை சுதாரித்துக் கொண்ட உமா “நீ போம்மா நான் பார்த்துகிறேன்” என்றார்.“சரியாகிடுச்சா ஆண்டி...சமாளிச்சுப்பீங்களா?” என்று பல முறை கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள்.அவள் சென்றதும் கண் மூடி அங்கேயே அமர்ந்து விட்டாள். மனமோ புலம்பித் தவித்தது.‘என்னை எந்தப் பக்கமும் பார்க்க விடாமல் இப்படி கட்டி போட்டுட்டியே? யாருக்காக நான் யோசிப்பேன்? பல வருஷமா என் மனசில் புதைஞ்சு கிடந்ததெல்லாம் இவளை பார்த்ததும் நினைவுக்கு வந்து வலிக்குதே...இங்கே யார் மேல குற்றம்னு சொல்ல முடியாத அளவுக்கு அவங்க அவங்களுக்கு ஒரு ஞாயம் இருந்தது. இதில் நடுவில் அகப்பட்டவங்க நிலையை யோசிச்சு பார்க்கலையே...ஒரே நிமிடத்தில் அத்தனை பேருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இந்த நிமிஷம் வரை குற்ற உணர்வோட வாழ வச்சுட்டியே’ என்று புலம்பித் தள்ளினாள்.எந்தன் உயிரும் உணர்வும் உனதே

நானும் நீயும் நாமாக மாற்றம் கொண்ட

காலம் இனிதே!
 

Chitra Balaji

New member
Feb 5, 2020
8
2
3
Woooww.... என்னமோ ரகசியம் இருக்கு..... சந்திரா யாரு....aathi யாரு avaluku.... Avan அம்மா ஏன் avala avala பாத்து appadi shock 🤯 aanaga..... அவல suthilum எதிரி எப்படி சமாளிக்க poraalo.. Super Super Super pa... Semma episode...