Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சந்திரோதயம்-6 | SudhaRaviNovels

சந்திரோதயம்-6

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
சந்திரோதயம்-6

சந்துரு தன்னுடைய தூக்கத்தைக் கெடுத்து விட்டார்களே என்று எண்ணி ஏற்ற அழைப்பில் மறுபுறம் "நான் உங்களுக்கு என்ன சார் பாவம் செஞ்சேன்? டூருக்கு வந்த இடத்தில ஃப்ரெண்ட்லியா ரெண்டு வார்த்தை பேசுனது என்னோட தப்பா? ஏன் சார் இப்படி பண்ணுனீங்க?", என்ற அனுவின் தந்தையின் குரலை கேட்டு தூக்கத்தை துரத்தி அடித்தான்.

"சார்! கொஞ்சம் சொல்றதை புரியும்படியா சொல்லுங்க. நடு ராத்திரியில போன் பண்ணி என்ன காரணம்னு தெரியாம என் மேல குறை சொல்றீங்க?" என சந்துரு அப்பொழுதும் நிதானமாகவே வினவினான். "நீங்க எதுவும் பண்ணலை சார்! ஆனா நீங்க பெத்து வச்ச உத்தமபுத்திரன் செஞ்சு வச்ச வேலையால எங்க வீட்டுக்கு போலீஸ் வந்து இருக்கு .அவங்ககிட்ட நீங்க தான் என்ன ஏதுன்னு பேசி புரிய வையுங்க... நான் பேசி ஒண்ணுமே புரிய வைக்க முடியலை", என மிகவும் நொந்துபோய் கூறியதில் தனது அருகில் நித்திரை கொண்டிருந்த மகன்களை திரும்பிப் பார்த்த சந்துரு ஏற்கனவே தன்னுடைய சத்தத்தில் முழித்திருந்த மனைவியை கை சைகையால் ஹாலிற்கு வருமாறு அழைத்துவிட்டு அவனும் எழுந்து வந்து ஹாலில் அமர்ந்து கொண்டான்.

அமர்ந்தவன் "நீங்க யார் வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு அவங்ககிட்ட கொடுங்க சார்! நான் பேசுறேன்", என்றதும் அணுவின் அப்பாவும் வேறு ஒருவரிடம் தன்னுடைய அலைபேசியை கை மாற்றினார். அப்பக்கம் எடுத்ததும் அவர்கள் ஹிந்தியில் பேச ஆரம்பித்தவுடன் சந்துரு அவர்களை தடுத்து நிறுத்தி எனக்கு ஹிந்தி அவ்வளவாக வராது அதனால் ஆங்கிலத்தில் பேசவும் என்று ஆங்கிலத்திலேயே கூறினான்.

ஒருவழியாக அவர்களும் தங்களுக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசிய பொழுதுதான் சந்துருவுக்கு நிலைமையின் தீவிரம் நடு மண்டையில் நச்சென்று உரைத்தது. மறுமுனையில் சந்துருவிடம் பேசியவர்கள் இந்த வீட்டிலிருந்து சைல்டு லைன் சர்வீசுக்கு போன் செய்து தன்னை காப்பாற்றுமாறு அனு என்ற சிறுமி அழைத்துள்ளாள் என்றும் அதனைப் பற்றி விசாரிக்கவே நள்ளிரவிலும் சைல்ட் சர்வீஸ் மூலமாக காவல்துறையினர் அனுவின் வீட்டை அணுகிருந்தனர்.

அங்கு வந்து அவர்களிடம் பேசிய பொழுது தங்களின் மகளை தாங்கள் எவ்விதத்திலும் கொடுமைப்படுத்தவில்லை என அனுவின் தந்தையும்,தாயும் பல மணி நேரமாக வாதாடியும் அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் அனுவிடம் விசாரித்த பொழுது அவள்தான் தனக்கு எந்த பிரச்சனை என்றாலும் 1098க்கு அழைக்குமாறு ஆத்ரேயன் கூறியதாக தெரிவித்துள்ளாள்.

அவளது பேச்சில் ஆத்ரேயனின் பெயரை கண்டு கொண்ட அனுவின் தந்தை உடனடியாக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு அந்த நள்ளிரவிலும் சந்துருவை அழைத்திருந்தார்.

அவர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சந்துரு வருணாவை பார்த்துக் கொண்டே
"ஆத்ரேயன் என்னோட பையன்தான். அவனுக்கு இப்பதான் ஏழு வயசு ஆகுது. அதனால விளையாட்டுத்தனமா ஏதாவது சொல்லி இருப்பானே தவிர்த்து சீரியஸா எதுவும் இருக்காது.அனுவும் சின்னக் குழந்தை. அதனால புரிந்தோ புரியாமலோதான் சைல்டு லைன்க்கு கால் பண்ணி இருக்கணும். நீங்க அதை பெருசா எடுத்துக்காதீங்க. நான் ஒரு வக்கீல். உங்களுக்கு அதுக்கு மேல என்னை பத்தின டீடெயில்ஸ் எதுவும் வேணும் அப்படின்னா மெயில் ஐடி கொடுங்க. நான் உடனே அனுப்பி விடுறேன்", என பேசி முடித்தான்.

மேலும் அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் அளித்த பின்னரே அவர்கள் அனுவிடம் என்ன காரணத்திற்காக சைல்டு லைன்க்கு போன் செய்தாள் என விசாரிக்க ஆரம்பித்தனர்.அவர்கள் அனுவிடம் கேள்வி கேட்க போகின்றனர் என்பதை உணர்ந்த சந்துருவும் தன்னுடைய மொபைலில் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு அவர்களிடம் நான் அனுவிடம் நீங்க கேள்வி கேட்கிறப்ப லைன்ல இருக்கலாமா எனக் கேட்டு தெரிந்து கொண்டால் அவர்களும் ஒத்துக் கொண்டதன் பெயரில் வருணாவும், சந்துருவும் மறு புறம் பேசுவதை கேட்க தயாராகினர்.

சந்துரு பேசுவதிலேயே ஆத்ரேயன் மீது செம கடுப்பில் இருந்த வருணா பேசி முடிக்கவும் அவனுக்கு இருக்கு கச்சேரி என கருவிக் கொண்டாள். அவர்கள் மெதுவாக "நீ ஏன்மா சைல்ட் லைன்க்கு கால் பண்ணுன?",எனக் கேட்ட பொழுது அவள் தமிழிலேயே பதிலுரைத்தாள். இருக்கின்ற பிரச்சனையில் இது வேறயா என நொந்து கொண்ட அனுவின் அப்பா அதையும் அந்த காவலர்களுக்கு ஹிந்தியில் மொழிபெயர்த்து கூற ஆரம்பித்திருந்தார்.

அனு தமிழில் பேசியதால் சந்துருவுக்கும், வருணாவிற்கும் எளிதாக விளங்கிக்கொள்ள முடிந்தது. காவலர் கேட்டவுடன் "எனக்கு ஆத்ரேயன் கூட போய் இருக்கணும்னு ஆசை. அவன் கூட இருந்தா ஜாலியா இருக்கும். அவனுக்கு தெரியாத விஷயமே கிடையாது. கையை பிடிச்சுட்டே சுத்தலாம். அதனால எங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி சென்னைக்கு ஆத்ரேயன் வீட்டு பக்கத்தில் வீடு பாருங்கன்னு சொன்னேன். முதல் நாள் சொன்னப்ப சிரிச்சிட்டு போயிட்டாங்க. அதற்கடுத்து நான் கேட்குறப்பெல்லாம் என்னை திட்டினாங்க. இல்லைனா அடிச்சாங்க.

அப்பதான் ஆத்ரேயன் என்கிட்ட சொல்லியிருந்தான். நான் அவன்கிட்ட சென்னைக்கு வரப்போறேன் அப்படின்னு சொன்னப்ப உங்க அம்மா அப்பாகிட்ட கேளு அப்படின்னு சொன்னான். அவங்க அடிச்சா நான் என்ன செய்யட்டும்ன்னு கேட்டப்ப நீ 1098க்கு கால் பண்ணிடு. அவங்ககிட்ட நீ உன்னோட அம்மா அப்பா அடிச்சு கொடுமைப்படுத்தறாங்கன்னு சொல்லிட்டா அதுக்கடுத்து உன்னோட அம்மாவும் அப்பாவும் உன்னை அடிக்கவே முடியாதுன்னு சொல்லிருந்தான்.

நேத்திக்கு அம்மாகிட்ட நான் கேட்டப்ப அம்மா என்ன அடிச்சு தூங்க வச்சுட்டாங்க. அதான் எந்திரிச்ச உடனே நான் ஆது சொன்ன மாதிரி 1098க்கு கூப்பிட்டேன்", என்று அனுக் கூறி முடித்த பொழுது பெரியவர்களுக்கு ஐயோ என்ற நிலைமை ஆகிப்போனது.

அனுவின் அப்பாவிடம் அவரது போனை ஸ்பீக்கரில் ஆன் செய்ய சொன்ன சந்துருஅனுவிடம் "அனு இப்ப நீ ரொம்ப குட்டிப்பாப்பா. அப்பாவும், அம்மாவும் அங்க இருக்கிற வேலையை விட்டுட்டு உடனே சென்னைக்கு வர முடியாது. நீ இன்னும் கொஞ்சம் அங்க படிச்சு பெரிய ஆளானதுக்கு அப்புறம் சென்னைக்கு வரலாம். லீவெல்லாம் விடுறப்ப ஆத்ரேயனை நான் அங்க அனுப்பி வைக்கிறேன்", என சில பல உறுதி மொழிகளை அளித்த பின்னர்தான் அனு சமாதானமானாள். அத்துடன் இனிமேல் தேவையில்லாமல் சைல்டு லைன்க்கு போன் செய்யக்கூடாது என்ற விஷயத்தையும் அவளுக்கு புரியுமாறுக் கூறிவிட்டு சந்துரு தன்னுடைய அலைபேசியை அணைத்த பொழுது மணி மூன்றை தாண்டியிருந்தது.

சந்துரு பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்த வருணா பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் மகனை அப்பொழுதே அடித்து துவைத்து விடும் எண்ணத்தில் வேகமாக உள்ளே சென்றாள். அவளது ஆத்திரத்தை உணர்ந்துகொண்ட சந்துரு பின்னாடியே ஓடி வந்து அவளது கையை பிடித்து இழுத்து "வருணா!பொறுமையா இரு. எதுவா இருந்தாலும் காலையில அவனுங்க எந்திரிச்சப்புறம் பேசிக்கலாம். இப்ப போய் பேசினால் அவனுக்கு ஒன்னும் புரியாது", என தன்னுடைய மனைவியை தோளில் சாய்த்து சமாதானப்படுத்தினான்.

வருணாவிற்கு ஆத்திரம் என்பதைவிட அழுகைதான் வந்தது. "என்ன ஜி! இப்படி பண்ணி வச்சிருக்கான்? சும்மா வீட்டுக்குள்ள சேட்டை அப்படிங்கறது வேற. ஆனா வெளியில இப்படி மத்த வீட்லயும் பிரச்சனை செய்யறது தப்புதானே!", என அழுகையுடன் கூறி முடித்தாள். அதனை கேட்ட சந்துரு "சின்ன பையன் வருணா! போக போக புரியும். இப்ப நாம இப்படி செய்யாதே அப்படின்னா நாளைக்கு இதை விட ஜாஸ்தியாக செய்வான். நாளைக்கு பொறுமையா என்னன்னு பேசிக்கலாம். இப்ப நீயும் பேசாமல் போய் படுத்து தூங்கு" என்று அவளை ஆறுதல் படுத்தி தூங்கவைத்தான்.

விடியலில் தன்னை வெளுத்து எடுக்கக் காத்திருக்கும் வருணாவை பற்றி சிறிதும் அறியாமல் ஆரோகன் எழுந்து மேலும் அரை மணி நேரத்திற்குப் பின்னர் எழுந்த ஆத்ரேயன் நேராக வந்து நின்றது என்னவோ சந்துருவின் முன் தான். தூங்கி எழுந்து முகம் கூட கழுவாமல் வந்து நின்றதுடன் இல்லாமல் "ஏம்பா! ராத்திரி உங்களுக்கு போன் வந்துச்சுன்னா அதை எடுத்துட்டு உடனே வெளியில் வர மாட்டீங்களா?

தூங்குறப்ப நொய் நொய்ன்னு காதுகிட்ட பேசிட்டு இருக்கீங்க.தூங்கவே முடியலை. உங்களால என் தூக்கம் போச்சு. சரியான தூக்கமே இல்லை", என சந்துருதான் அனைத்திற்கும் காரணம் என்பது போல் பேசிவிட்டு இறுதியாக "இனிமே நைட்டு தூங்குறப்ப போனை சைலன்ட்ல போட்டுட்டு தூங்குங்க. இல்லைன்னா நீங்க ஹால்ல படுத்துக்கோங்க", என்பதுடன் மீண்டும் பெட்ரூமிற்குள் நுழைந்து கொள்ளப் பார்த்தான்.

அவனது சத்தம் கேட்டவுடன் மற்றொரு அறையில் வேலையாக இருந்த வருணா தனது கையில் பிரம்புடன் வெளியே வந்திருந்தாள். வருணாவின் கையிலிருந்த பிரம்பை கண்ட ஆரோகன் "ரே!அம்மா உன்னை அடிக்கப் போறாங்க. நீ அப்பாகிட்ட ஓடி வந்திரு", என வேகமாக சத்தம் கொடுத்தான். ஆனால் அவனோ மிகவும் தெனாவட்டாக "அம்மாவால என் மேல கை வைக்கவே முடியாது. இதுல பெரம்பு வீச்சு அடிக்கப் போறாங்களா? என்னம்மா இன்னைக்கு பிரேக்ஃபாஸ்ட்க்கு என்ன பண்ணி இருக்கீங்க? சீக்கிரம் ரெடி பண்ணுங்க. எனக்கு பசிக்குது", என தன்னுடைய அண்ணனிடம் ஆரம்பித்து தாயிடம் முடித்தான். அதுவரை அமைதியாக இருந்த வருணா இப்போது பிரம்பை அவனை அடிப்பதற்கு ஓங்கி விட்டாள்.

வருணாவை தடுத்து நிறுத்திய சந்துரு ஆத்ரேயனை குளித்து விட்டு வருமாறு அனுப்பினான். ஆனால் அவனோ "விடுங்கப்பா! இப்ப எதுக்கு காரணமே இல்லாம இவங்க என்னை அடிக்க வர்றாங்கனு தெரியணும்", என தன்னுடைய வாய் துடுக்கை தெளிவாக காண்பித்தான்.

"டேய்! அவளே கொஞ்சம் அமைதியா இருந்தாலும் நீ விடமாட்ட போல இருக்கே! போடா போய் குளிச்சிட்டு வா", என சந்துரு மீண்டும் அவனை துரத்தி அடித்த பின்னர்தான் உங்களுக்காக போறேன் என்றவாறே சென்றான். அவன் சென்ற உடன் வருணாவை சாந்தப்படுத்திய சந்துரு "வரு ரொம்ப ஸ்டிரிக்டா சொல்றேன். நான் மட்டும்தான் அவன்கிட்ட பேசப்போறேன். நீ எதுவும் பேசக்கூடாது. கைநீட்டவும் கூடாது.

அமைதியா பக்கத்துல உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறதா இருந்தா இரு. இல்லையா கிச்சனில் எதுவும் வேலை இருந்தா அதை போய் பாரு. அதுவும் உன்னால முடியாதுன்னா கீழே இறங்கிப் போய் கொஞ்ச நேரம் நடந்துட்டு வா", என தன் மனைவியிடம் சற்று அழுத்தமாகவேக் கூறினான்.

சந்துருவின் கூற்றில் சமாதானம் ஆகாவிட்டாலும் அமைதியாக இருந்தவள் கிச்சனில் சென்று காலை உணவை தயாரித்து ஆத்ரேயன் வருவதற்கு முன்னர் அதனை டேபிளில் வைத்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள். ஆரோகனுக்கு ஏதோ பிரச்சினை என்ற அளவில் புரிந்தாலும் ஆத்ரேயன் அளவிற்கு அவன் தெளிவு கிடையாது. ஒன்று தாயின் பின்னாலேயே அலைவான். இல்லையென்றால் தன்னுடைய இளவலின் பின்னே திரிவான்.

அதனால் நிலைமையை உணர்ந்து அம்மாவின் அருகில் வந்தமர்ந்தவன் அமைதியாக அவளின் கையை பிடித்துக்கொண்டான். வருணாவும் அவனுக்கு வேண்டிய உணவை வைத்துவிட்டு ஆத்ரேயனுக்காக காத்திருந்தாள். அவனோ ஆடி அசைந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்துதான் குளியல் அறையிலிருந்து வெளிவந்தான்.

அவன் வருவதற்கு முன்னர் மற்ற மூவரும் உண்டு முடித்து அமர்ந்திருந்தனர். வெளியே வந்தவனை பார்த்து வருணா முறைத்திட சந்துரு "ஏன்டா ஒரு மணி நேரம் என்னடா பண்ணுன?", எனக் கேட்டதற்கு "இன்னிக்கு வெளிய போகவேண்டியது இருக்குன்னு சொன்னீங்கதானப்பா. அதான் நல்லா குளிச்சிட்டு வந்தேன். என்ன என்னை விட்டுட்டு எல்லாரும் சாப்பிட்டீங்களா?", எனக் கேட்டு அவன் யாரையும் எதிர்பார்க்காமல் டேபிளில் இருந்த பிரட் துண்டை எடுத்து தன்னுடைய தட்டில் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

சந்துருவுக்கு அவனிடம் பேச வேண்டியது இருந்தாலும் அவனுடைய செயல்கள் அனைத்தும் ஒருவித சிரிப்பைத் தந்தது. இப்போது சிரித்தால் வருணா தன்னையும் மொத்திவிடுவாள் என்ற காரணத்தினால் அமைதியாக இருந்து கொண்டு "சீக்கிரம் சாப்பிட்டு முடி ராசா! உன்கிட்ட ஒரு பஞ்சாயத்து இருக்கு", என தன் இளைய மகனிடம் கூறினான்.

அவனோ "என்னதான் நீங்க வக்கீலா இருந்தாலும் நான் ஜட்ஜா இருக்கணும்னு ஆசைப்படுறீங்க பாா்த்தீங்களாப்பா! அங்க இருக்குது உங்க பெரிய மனசு", என தன்னுடைய தந்தைக்கு வாயை அடைப்பது எப்படி என கற்றுத் தந்தான். சந்துருவிற்கு பதிலளித்து விட்டு வருணாபுறம் திரும்பியவன் அவளது முகத்தில் இருந்த கோபத்தை உணர்ந்தவனாக அண்ணனிடம் திரும்பினான்.

"டேய் ரோ! ஏன்டா இந்த காஞ்சி போன இலை, தழையா திங்கணும்னு நினைக்குற? நீ மட்டும் என்னை மாதிரி சிக்கன், ஃபிஷ், கிராப் அப்படின்னு சாப்பிட்டால் காலையிலேயே நம்ம அம்மா ஆட்டுக்கால் பாயா வைச்சு அடிச்சு துவைச்சு எடுக்குற பரோட்டா செஞ்சு ஜமாளிச்சிருப்பாங்க. எல்லாம் உன்னாலதான் டா", எனக் கூறிக்கொண்டே பிரட் டோஸ்ட் சாப்பிட்டு முடித்து இருந்தான்.

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த சந்துரு வருணா புறம் பார்வையை செலுத்தி நீயும் வா என்றவன் ஹாலுக்கு மகனையும் கூட்டிக் கொண்டு சென்றான். வருணாவும், சந்துருவும் ஒரு சோபாவில் அமர்ந்து கொள்ள ஆத்ரேயனுக்கு அவனுடைய குட்டி சேரை ஆரோகன் எடுத்துவந்து போட்டான்.

அவன் சேரை எடுத்துட்டு வந்து போட்டவுடன் "டேய்! என்னடா நம்ம வீட்ல பஞ்சாயத்து நடக்கப்போகுதா? பயங்கரமாக எல்லாம் சீன் போடுறாங்க", என அதற்கும் பதில் பேசியவன் தலையில் யாரோ தட்டியது போல் உணர்ந்த உடன் தான் அமைதியானான். தட்டியது யார் என்று பார்த்தால் சந்துருவும் ,வருணாவும் அமைதியாகதான் இருந்தனர்.

அவனுக்கு அருகில் நின்றிருந்த ராஜேந்திரன் தான் தலையில் நன்றாக தட்டி இருந்தார். இந்த தாத்தா எப்ப வந்தாரு? எனக் கேள்விக் கேட்டவனுக்கு பதிலாக வருணா அவர் இப்பதான் வந்தார் எனக்கூறிவிட்டு "நீங்க வாங்கப்பா! இப்படி வந்து உட்காருங்க", என அவளுடைய அப்பாவை வரவேற்றாள். எல்லாம் ஒன்னு கூடிட்டாங்கய்யா என வடிவேலு காமெடியை அச்சுப் பிசகாமல் கூறியவன் ஆரம்பிங்க ஆரம்பிங்க எனவும் கூறினான்.

அவன் பேச்சு செயல் அனைத்தும் சந்த்ருவிற்கு சிரிப்பை வரவழைத்தது. இருப்பினும் நிலைமையின் தீவிரத்தை சற்றேனும் அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் "உனக்கு 1098 பத்தி என்ன தெரியும்?", எனக் கேட்டான். " அது சைல்டு லைன் சர்வீஸ் நம்பா் அப்பா! இப்ப அம்மா காலையில் பிரம்பு எடுத்து அடிக்க வந்தாங்க பார்த்திங்க இல்லையா?

அதே மாதிரி இல்லாம அந்த பிரம்பு வச்சு என்னை அடிச்சு இருந்தாங்கன்னா நான் 1098க்கு போன் பண்ணி என்னை கொடுமைப்படுத்துறீங்கன்னு சொல்லலாம். அவங்க உடனே வந்து அம்மாவை கூட்டிட்டு போய்டுவாங்க", என மிகவும் கூலாக ஆத்ரேயன் பதில் உரைத்தான். அவனது பதிலில் பெரியவர்கள் மூவரும் சற்றே வாயை பிளந்தனர். இவனுக்கு இது எப்படி தெரியும் என்ற எண்ணம்தான் அவர்களின் மூளையில் ஓடியது.

அதனை ராஜேந்திரன் "உனக்கு எப்படி இது தெரியும்?", என்றுக் கேட்டவுடன் "இது ஒரு பெரிய விஷயமா தாத்தா? அப்பா ஒரு நாள் கார்த்தி சித்தப்பாகிட்ட யாரையோ காப்பாத்துறதுக்கு சொல்லிட்டு இருந்தாரு... நான் அப்ப அரைகுறையாதான் கேட்டேன். ஆனால் கார்த்தி சித்தப்பாதான் திரும்ப கூப்பிட்டு வச்சு டேய் ரே! நீ பண்ற சேட்டைக்கு உங்க அம்மா அடி பின்னி எடுத்துடுவாங்க. அப்ப இந்த நம்பருக்கு நீ போன் பண்ணிடுன்னு சொல்லிட்டு போனாங்க", எனக் கூறிவிட்டு "இதுல என்ன பிரச்சனை", என்றுக் கேட்டான்.

"சரிடா! கார்த்தி உனக்கு சொன்னா நீ எதுக்கு அனுவுக்கு சொன்ன?", என சந்துரு கேட்டவுடன் ராஜேந்திரன் இது யாரு புதுசா வந்து இருக்க பொண்ணா என அதிர்ந்து போய் பார்த்தார். அதற்கான பதிலாக ஆத்ரேயன் "அனு எப்பவும் என் கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டா. சென்னைக்கு வந்துடுன்னு சொன்னேன்.சென்னைக்கு அம்மா,அப்பா கூட்டிட்டு வர மாட்டாங்களே அப்படின்னு சொன்னா. அதுக்கு நான்தான் சொன்னேன். கேட்டுப்பாரு கூட்டிட்டு வரலைன்னா இந்த நம்பருக்கு போன் பண்ணி அவங்ககிட்ட அம்மா,அப்பா உன்னை கொடுமைப்படுத்துறாங்கன்னு சொல்லு. அவங்களே கூட்டிட்டு வந்து உன்னை விட்டுடுவாங்க அப்படின்னு சொன்னேன்.

இதுல என்ன தப்பு இருக்கு?நீங்கதான் நமக்கு தெரிஞ்ச நாலு நல்ல விஷயத்தை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கணும் சொல்றீங்க. நான் சொல்லித் தந்தால் மட்டும் அது தப்பாயிடுமா? இப்படி மாத்தி மாத்தி பேசாதீங்கப்பா", என அவன் செய்ததுதான் சரி மற்றவர்கள் அவனை புரிந்து கொண்டதுதான் தவறு என்று பேசியவனை என்ன செய்தால் தகுமென அவனைப் பெற்ற இருவருக்கும் புரியவில்லை.

இது வேலைக்காகாது என்று எண்ணிய சந்துரு கார்த்திக் மற்றும் சூர்யா இருவரையும் அழைத்து இன்னைக்கு சாயங்காலம் வந்து சேரணும் எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

அதற்குப் பின்னரும் பெரியவர்கள் மூவரும் பேசிக் கொள்வதை கண்டு கொள்ளாமல் ஆரோகனை கூட்டிக்கொண்டு ஆலியா வீட்டிற்கு சென்று அங்கு சிறிது நேரம் விளையாடி விட்டே ஆத்ரேயன் தன் வீட்டிற்கு வந்தான். அவன் வந்த பொழுதும் வருணா அவனிடம் எதுவும் பேசவில்லை என்பதை கண்டு கொண்ட ஆத்ரேயன் நேராக சந்துருவின் முன் சென்று நின்று கொண்டு

"என்னதான் பிரச்சனை அம்மாவுக்கு? காலையிலிருந்து பேசாம மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காங்க... இது பாா்க்குறதுக்கே நல்லா இல்லை", எனக் கூறினான். "இங்க பாரு உங்க அம்மாவுக்கும், உனக்கும் நடுவுல நான் இன்டர்மீடியேட்டா் வேலை பார்க்க முடியாது எதுவா இருந்தாலும் நீயே போய் உங்க அம்மாகிட்ட கேட்டுக்கோ", எனக்கூறிய சந்துரு தன்னுடைய வேலையில் முழ்க ஆரம்பித்துவிட்டான்.

வருணாவிடம் சென்றவன் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவளது முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். வருணாவும் அவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆரோகனிடம் மட்டும் "கண்ணா! உனக்கு அம்மா ஜூஸ் போட்டு தரட்டுமா?", என வினவினார். அவனும் சரி என்றவுடன் அவனது கையில் ஜூஸ் டம்ளரை தந்தவள் ஆத்ரேயனுக்கும் ஒன்றினை எடுத்து தந்தாள்.

ஆனால் அவனோ கைகளை பின்புறம் கட்டியவாறு அவளது முகத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தான். சிறிது நேரம் கையில் டம்ளரை வைத்திருந்தவள் அதற்கு மேல் அவனிடம் நீட்டாமல் சமையலறை அடுப்பு மேடை மீது வைத்து விட்டாள். அப்பொழுதும் ஆத்ரேயன் அவ்விடத்தை விட்டு நகரவில்லை. வருணாவையே பார்த்துக்கொண்டே இருந்தான். அவளும் எதுவும் பேசாமல் தன்னுடைய வேலைகளைச் செய்தவாறு இருந்தாள்.

ஆரோகன்தான் "ரே! ஜூஸ் எடுத்துக்கோ... நாம திரும்ப ஆலியா வீட்டுல் போய் விளையாலாம்", எனக் கூறினான். அதற்கு பதிலாக ஆத்ரேயன் "ரோ! உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இப்ப இவங்க எதுக்கு என்கிட்ட பேசாம இருக்காங்கன்னு எனக்கு தெரியணும். அவங்களா என்கிட்ட பேசற வரைக்கும் அந்த ஜூஸை எடுத்து நான் குடிக்க மாட்டேன்", எனக் கூறிவிட்டு மீண்டும் அதே இடத்திலேயே நின்றான்.

ஆரோகனுக்கு இதில் என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. அவனுடைய அம்மாவிடமும் ஏன் பேசலை என்று கேட்கும் அளவிற்கு அவன் இன்னும் முன்னேறவில்லை. தம்பியிடம் அம்மா பேசாம இருந்தா என்ன? நீ பேசு என்றுக் கூறுமளவிற்கும் வளரவில்லை. இருவருக்குமிடையே பாவமாக நின்றவன் வேறுவழியின்றி ஹாலிற்கு சென்று தன்னுடைய தாத்தாவின் அருகில் அமர்ந்து கொண்டான். அவரும் பேரனிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.

அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆத்ரேயன் அவ்விடத்தை விட்டு நகரவுமில்லை, எதுவும் பேசவும் இல்லை.அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் வருணாவிற்கு இப்படி எல்லாம் அமைதியாக இருந்தால்தான் இவன் திருந்துவார் என்ற ஒரு எண்ணம் இருந்தது. அதனாலேயே அமைதியாக இருந்தாள்.

நேரம் கடந்தும் அவன் நகர்வதற்கான அறிகுறி சிறிதும் இல்லாததால் "இப்ப என்னடா உனக்கு பிரச்சனை? நீ பெரிய இவனோ!", என வருணா அவனிடம் எகிற ஆரம்பித்தாள். "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு என்ன பிரச்சனை? காலையில எந்திரிச்சதிலிருந்து என்கிட்ட நீங்க பேசலை. நியாயமா பார்த்தா நான்தான் கோபப்படனும். நீங்க காரணமே இல்லாமல் கோபப்படுறீங்க", என ஆத்ரேயன் பதிலுக்கு எகிறினான்.

"நீ அனு வீட்டுல செஞ்சு வச்சது மட்டும் சரியா? உன்னால என்ன ஆச்சுன்னு தெரியுமா? அனு சைல்டு லைன்க்கு போன் பண்ணி அவங்க வீட்டுக்கு போலீஸ் வந்துட்டாங்க. ராத்திரியெல்லாம் நானும்,உங்க அப்பாவும் தூங்காம அவங்ககிட்ட பேசி சாி பண்ணுனோம்", என வருணா கோபமாகக் கூறி முடித்தாள்.

"அதனால என்னமா வந்துச்சு? அனு போன் பண்ணி இருக்கான்னு அவ வீட்டுக்கு போலீஸ் வந்து இருக்கு. அதுக்கு அனுவோட அம்மா,அப்பாதான் அவ மேல கோபப்படனும். நான் போன் பண்ணி நம்ம வீட்டுக்கு போலீஸ் வந்தாதான் நீங்க என்கிட்ட கோவப்படனும். நான் அந்த மாதிரி எதுவும் பண்ணலையே", என வியாக்கியானம் பேசினான் வருணாவின் மைந்தன்.

"ராஸ்கல்! நீ அது கூட பண்ணுவியா? எங்க பண்ணிதான் பாரேன்", என வருணா அவனைத் துரத்த ஆரம்பித்தவுடன் "இன்னொருத்தவங்ககிட்ட ஹெல்ப் வாங்கி உங்களை சமாளிக்கிற அளவுக்கு நான் திறமை இல்லாதவன் இல்லை. என்னோட திறமையே ரொம்ப ஜாஸ்தி உங்களை சமாளிக்கிறதுக்கு. அதனால நீங்க ஏன் கோபமா இருந்தீங்க அதுக்கு மட்டும் காரணம் சொல்லுங்க", என அவனுடைய பிடியிலேயே நின்றான்.

" நீ அனுவுக்கு இந்த மாதிரி சொல்லிக் கொடுத்தது தப்பு", என வருணா தன்னுடைய நிலையிலிருந்து சிறிது இறங்கி வந்து அவனிடம் சமரசம் பேச முயற்சித்தாள்.

வருணா கேட்டவுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் கூறாமல் சமையல் மேடையில் இருந்த ஜூஸை ஒரு பார்வை பார்த்தான். அவனதுப் பார்வையை உணர்ந்தவள் மீண்டும் சமையலறைக்கு சென்று அந்த ஜூஸை எடுத்துக் கொண்டு வந்து அவனது கையில் கொடுத்தாள்.அதை குடித்து முடித்தவுடன் "இப்ப பேசுங்க... நீங்க பேசுறதை கேட்குறதுக்கு எனக்கு தெம்பு வேணும்தானே!", என்றுக் கூறிவிட்டு அவனுடைய தாத்தாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

எல்லாம் என் நேரம் என நொந்து கொண்ட வருணா அவன் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டு "இங்க பாரும்மா ரே! இந்த மாதிரி விஷயம் எல்லாம் மத்தவங்களுக்கு சொல்லக்கூடாது. நம்மளால மத்தவங்களுக்கு எந்த கஷ்டத்தையும் தரக்கூடாது.அனு உன்கூட இருக்கணும் அப்படின்னு சொன்னா நீ அதை அம்மாகிட்ட சொல்லி இருக்கணும்.

இல்லைன்னா அவங்க அம்மாகிட்ட சொல்லி இருக்கணும். நீயே ஒரு முடிவு எடுக்கக் கூடாது" என பொறுமையாகக் கூறினாள். அதற்கு ஆத்ரேயனோ நான் எதுவும் தப்பா செய்யலைம்மா. யாரா இருந்தாலும் சரி குழந்தைகளை அடிக்கிறது தப்பு. அனுவோட அப்பா, அம்மா அவ அழுது அடம் பிடிச்சிருந்தா பொறுமையா பேசிப் புரிய வச்சு இருக்கணும்.

அதை விட்டுட்டு எப்படி அடிக்கலாம்? அவங்க அடிச்சிருப்பாங்க. அதனாலதான் அனுவும் போன் பண்ணியிருப்பா. இதுல தப்பு என் மேலேயும் இல்லை. அனு மேலேயும் இல்லை. அனுவோட அப்பா அம்மா மேலதான் தப்பு.அவங்க மேலே முதல் தப்பு. இரண்டாவது தப்பு உங்க மேலே. அவங்க போன் பண்ணி பேசினாங்கன்னா அதுக்காக கோவிச்சுக்கிட்டு நீங்க என்கிட்ட பேசாம இருந்தது ரொம்ப பெரிய தப்பு", என தப்பு, தப்பு என்ற வார்த்தையை பலமுறை உபயோகப்படுத்தி வருணாவையே தான் செய்ததுதான் தவறு என்று எண்ண வைத்து விட்டான்.

அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜேந்திரனுக்கும், சந்துருவுக்கும் வருணாவின் நிலையை எண்ணி பரிதாபமாக இருந்தது. இருவரில் யாரேனும் ஒருவர் தலையிட்டு அவளை காப்பாற்றலாம் என்று எண்ணினால் அவன் தங்களுக்கு இதே போன்ற உரை ஆரம்பித்து விடுவானோ என்ற பயமே பிரதானமாக அமைந்ததில் தங்களின் எண்ணத்தினை முற்று முழுவதுமாக அழித்து விட்டனர்.

ஆரோகன்தான் "ரே!இப்ப நீ சொன்னது எதுவுமே எனக்கு புரியலை. திரும்ப சொல்லுறியா?", என பாவமானக் குரலில் அவனிடம் கேட்டான். அதற்கு அவனிடம் திரும்பிய ஆத்ரேயன் "ரோ! இதெல்லாம் புரிஞ்சிக்கனும்னா நீ இன்னும் வளரணும். இந்த மாதிரி தொல்லை எல்லாம் நீ தெரிஞ்சுக்காம இருக்கிறதே நல்லது", எனக் கூறிவிட்டு வருணாவிடம் "நீங்க எப்ப என்கிட்ட சாரி கேட்க போறீங்க?", என வினா எழுப்பினான்.

"நான் ஏண்டா உன்கிட்ட சாரி கேட்கணும்?", என அவள் அதிர்ந்து வினவிய பொழுது "காலையில இருந்து என்கிட்ட பேசாமல் இருந்ததற்கு, அப்புறம் நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டேன் அப்படிங்கற மாதிரி என்னை மோசமாக ட்ரீட் பண்ணுனதுக்கு, இது எல்லாத்துக்கும் சேர்த்து சாரி கேளுங்க. தப்பு செஞ்சா சாரி கேட்கணும்மா. அதை விட்டுட்டு என்ன செஞ்சேன்னு கேள்வி கேட்கக் கூடாது", என அவளுக்கே வகுப்பு எடுத்தான். நீ ரொம்ப பெரிய ஆளா வருவடா என அவனின் செயல்களைப் பார்த்து ராஜேந்திரன் கூறியபொழுது

"கண்டிப்பா தாத்தா! ஒன்னு சினிமால சேர்ந்து பெரிய ஆளா வரணும். இல்லைனா போலீஸ்ல சேர்ந்து எல்லாரையும் போட்டு தள்ளுற மாதிரி பெரிய ஆளா வரணும். இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னுதான் நான் செய்வேன். வேற எதுவும் செய்ய மாட்டேன்", எனக்கூறிவிட்டு ஆரோகனுடன் மீண்டும் விளையாட ஆரம்பித்து விட்டான்.

"இவனை நான் எப்படிதான் திருத்தப் போறேன்?", என வருணா புலம்பிய பொழுது "அவனை திருத்துற அளவுக்கு எதுவும் பெருசா பண்ணலை வருணா! அவனோட வயசுக்கு கொஞ்சம் அதிபுத்திசாலியாக இருக்கான். எவ்வளவு தெளிவா நான் இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னுதான் செய்வேன்னு இந்த வயசுலயே சொல்றான். நீ தேவையில்லாம புலம்பாதே!", என அவளுக்கு அறிவுரை கூறியது சந்துரு இல்லை அவளின் தந்தை ராஜேந்திரன் தான். தன்னுடைய தந்தை இந்த மாதிரி அறிவுரை கூறிய பொழுது சற்று அதிர்ந்து விழித்த வருணா அதற்கு பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் இறங்கிவிட்டாள்.

ஒருவழியாக அன்றைய நாளை மற்றவர்கள் அவரவர் வேலையில் கடத்திக் கொண்டிருக்கும் பொழுது அன்றைய பொழுதின் மயங்கிய நேரத்தில் கார்த்திக்கும்,சூர்யாவும் வந்து சேர்ந்தனர். அவர்கள் வரும்வரை கார்த்திக்கின் மேல் இருந்த கோபத்தை சிறிதும் தனது நினைவில் வைத்திராத வருணா கார்த்திக் வீட்டினுள் நுழைந்த உடன் தன் கையிலிருந்த பாத்திரத்தை அவன் மேல் தூக்கி எறிந்தாள்.

"அண்ணி வர்றப்பவே இவ்வளவு பிரமாதமான வரவேற்பு கொடுக்குறாங்க என்னவாயிருக்கும்?" என தன்னுடன் வந்த சூர்யாவிடம் வினவியவனுக்கு சந்துருவிடம் இருந்துதான் பதில் கிடைத்தது. "அது நீ செஞ்சு வச்ச வேலைதான். வந்து உட்காரு. அப்புறமா உனக்கு தனியா கச்சேரியே வைப்பா", என அழைத்த சந்துரு தங்களின் பின்னாளைய நலத் திட்டங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தான்.

வந்து ஒரு மணி நேரமாகியும் எதுவும் சாப்பிட கொடுக்காத வருணாவை கண்டு வியந்த சூர்யா "என்னாச்சு அண்ணி?", என அவளிடம் சென்று வினவினான். அவளோ "உன்கூட வந்து இருக்காரே ஒரு தொரை அவர்கிட்ட கேளு. அவர்தான் ரொம்ப பெரிய ஆளா, பெரிய வித்தையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தராறில்லையா? இதுக்கான பதிலையும் அவரே சொல்லுவாரு",எனக் கூறிவிட்டு ஆத்ரேயனை தேடிச் சென்றுவிட்டாள்.

சூர்யா வந்து என்னாச்சு என சந்துருவிடம் வினவியபோது அவன்தான் நடைபெற்ற நிகழ்வுகளை அவ்விருவரிடமும் கூறினான்.அதனைக் கேட்டு பேய் முழி முழித்த கார்த்திக் இன்னைக்கு என் மண்டை உடையப் போறது உறுதி என்ற எண்ணத்தில் அவ்விடம் இருந்து நகர எத்தனித்தான்.

அவன் கிளம்ப போவதை உணர்ந்த ஆத்ரேயன் எங்கிருந்தோ ஓடிவந்து கார்த்திக்கின் கால்களைப் பற்றிக் கொண்டு"சித்தப்பா இப்ப இங்க இருந்து நீங்க போனீங்கன்னா அடுத்து வா்றப்பையும் அதே அடிதான் விழும். அதனால இந்த தடவை வாங்கிட்டு பேசாம போய்டுங்க ", என அறிவுரைக் கூறினான்.

அவனது அறிவுரையை பின்பற்றி அமைதியாக அமர்ந்து கொண்டு இருந்த கார்த்திக்கை பார்த்த வருணா "ஏன்டா! அவன்தான் அன்னைக்கு கவனிக்காமல் விளையாட போயிட்டானே! திரும்ப கூப்பிட்டு வச்சு உன்னை யாரு கிளாஸ் எடுக்கச் சொன்னது? அதுவும் என்னை பத்தி கம்ப்ளைய்ன்ட் பண்ண சொல்லியிருக்க. உனக்கு எவ்வளவு தைரியம்?", எனக் கேட்டதற்கு "அண்ணி! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்", என்ற பதிலுரைத்தான்.

இனிமே இந்தமாதிரி விளையாட்டுக்குக் கூட சொல்லித்தராதே என அவனுக்கு தன்மையாக கூறிய வருணா இருவருக்கும் சாப்பிடுவதற்கானவற்றை எடுத்து தந்தாள். இனிமே நான் சொல்லித்தர மாட்டேன் என்ற கார்த்திக்கும் அவனுக்கு ஒத்து ஊதிய சூர்யாவும் அப்போது அறியவில்லை.இனிமேல் தாங்கள் சொல்லித் தந்து ஆத்ரேயன் எதுவும் செய்யப்போவதில்லை.

ஆத்ரேயனின் சொல்லில்தான் தாங்கள் இருவரும் இனி ஆடப் போகின்றோம் என்பதை அந்த நொடியில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் நேரத்தில் அடிபடாமல் தப்பித்திடுவாா்களா? இல்லையெனில் ஆத்ரேயனின் ஆடுபுலி ஆட்டத்தில் பலியிடும் ஆடுகளாக மாறி விடுவார்களா?
 
  • Like
Reactions: Ramavaradharajan