Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சந்திரோதயம்-7 | SudhaRaviNovels

சந்திரோதயம்-7

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
சந்திரோதயம்-7

விதை விதைத்தால் விருட்சம் வளா்ந்திடதானேச் செய்யும். மனிதர்களின் வளர்ச்சியும் மழலையிலிருந்து மாறிடுவதும் அதுபோன்ற இயற்கை நிகழ்வுதானே!

காலத்திற்கேற்ப கள்ளங்கபடம் வளர்வது போன்று ஆரோகன், ஆத்ரேயனின் வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆறாம் வகுப்பு வரை பெண் பிள்ளைகளுடன் ஜோடி சேர்ந்து கொண்டு கோபிகையர் சூழ வாழ்ந்த கிருஷ்ணனுக்கு போட்டியாக திகழ்ந்து கொண்டிருந்த ஆத்ரேயனின் நடவடிக்கைகளில் அதற்குப் பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

திடீரென்று தான் படித்துக் கொண்டிருந்த பள்ளியிலிருந்து மாற்றி விடுங்கள் என்று வந்து நின்றவன் அடுத்த விடுத்த கோரிக்கையோ அவனது பெற்றோரை மட்டுமின்றி அங்கே சுற்றி இருப்போரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஏனெனில் ஆறாம் வகுப்பின் ஆண்டு விடுமுறையில் குடும்பத்தினர் அனைவரும் சூழ இருந்த பொழுது "என்னை பாய்ஸ் ஸ்கூல்ல சேர்த்துவிடுங்க. கோ-எஜூகேஷன்ல படிக்க எனக்கு விருப்பமில்லை", என்றக் கோரிக்கையை ஆத்ரேயன் வைத்த பொழுது மற்றவர்கள் அதிர்ச்சியுடன் நோக்கினாலும் சந்துரு மட்டுமே ஆராய்ச்சியுடன் நோக்கினான்.

"இதுல என்னடா உள்குத்து இருக்கு? நீதானே கேர்ள்ஸ் நிறைய இருக்க கிளாஸ்ல போடுங்கன்னு ஒவ்வொரு வருஷமும் டீச்சர் கூட சண்டை போட்டு அந்த கிளாஸ்ல போய் உட்காருவ...இப்ப என்ன வந்துச்சு?", எனக் கேட்டதற்கு "எனக்கு கேர்ள்ஸ் கூடப் பேச பிடிக்கலை. அம்மா கூட மட்டும் பேசினால் போதும்னு நினைக்கிறேன். பெரியம்மா,அத்தை இவங்க யார் கூடவும் பேசுறதுக்கு எனக்கு ஒரே கூச்சமா இருக்குப்பா. அதனால இந்த வருஷம் ஸ்கூல் மாத்தி விடுங்கப்பா",என தான் பிடித்த பிடியிலேயே நின்றவாறு இருந்தவனை சந்துருதான் மிகவும் வற்புறுத்தி பேசி அதே பள்ளியில் தொடர வைத்தான்.

ஆத்ரேயனிடம் ஏற்பட்ட மாற்றங்களை விட அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது ஆரோகனிடம் ஏற்பட்ட மாற்றங்கள்தான். இளவல் பெண் பிள்ளைகளிடம் இருந்து விலகிச் செல்ல ஆரோகனோ அனைவரிடமும் சென்று பேச ஆரம்பித்திருந்தான். அதுவும் மற்றவர் முன் பேசுவதில்லை. சுற்றுமுற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அப்பெண் பிள்ளைகளிடம் சென்று மிகவும் மெதுவான குரலில் பேசி விட்டு வர ஆரம்பித்தான்.

வருணாதான் சந்துருவிடம் "இவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி கேரக்டரா இருந்தா கூடப் பரவாயில்லை. இப்படி மாத்தி மாத்தி இருந்துகிட்டு நம்மளை வச்சு செய்றாங்க. ரோ நல்லாதானே இருந்தான். இவன் ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான்னு தெரியலையே! ரே தான் இதுல ஏதாவது குழப்படி பண்ணி வச்சிருப்பானோ!", என பலவிதங்களில் புலம்பி தீர்த்தாள்.

சந்துருதான் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட நிலை வரை தங்களுக்கு எதன் மீது பிடித்தம், எதனிடம் பிடித்தம் இல்லை என்பதை தெரிந்து கொள்ள மாட்டார்கள்.தெரிந்தபின் தெளிந்துவிடுவார்கள் என அவளை பலவிதமாகப் பேசி சமாதானப்படுத்தி வைத்தான்.ஆனால் ஆரோகன் சென்று பேசியவர்களிடமிருந்தும், அவர்களின் பெற்றோரிடமிருந்தும் எவ்வித கம்ப்ளெய்ன்டும் வராததால் வருணா சற்று நிம்மதியாகவே இருந்தாள்.

சந்துருதான் ஆத்ரேயனை மிகவும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்து இருந்தான்.எப்படி கவனித்தாலும் அவனது நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் உண்மையே என்று உறுதியான பின்னர்தான் தன்னுடைய கண்காணிப்பை விடுத்தான்.

பிரச்சினைகள் இன்றி நகர்வது போன்று தோன்றினாலும் ஆரோகனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களில் எதனையும் ஆராய இயலவில்லை. வருடங்கள் வளர வளர சூர்யாவிடமும், கார்த்திக்கிடமும் அவனின் நெருக்கம் மிகவும் அதிகம் ஆனது.

சிறுவயதிலிருந்தே ஆத்ரேயன் மட்டுமே அவர்களுடன் அளவுக்கதிகமான நெருக்கத்தில் இருந்து வந்தான்.ஆனால் அவனோ இப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா என்றதுடன் தன்னுடைய பேச்சுவார்த்தையைய முடித்துக் கொண்டான். ஆனால் ஆரோகன் அவ்வப்பொழுது சூர்யாவிடம் அவன் கிராபிக்ஸ் துறையில் வேலை செய்வதால் அதனைப் பற்றி பல சந்தேகங்கள் கேட்க ஆரம்பித்தான்.

கார்த்திக்கிடம் அவனது வட்டத்தில் கதை,கவிதைகள் எழுதுவோர் சற்று அதிகமாக இருந்ததால் அவர்களை பற்றியும்,அவர்களின் கவிதைத் தொகுப்புகளைப் பற்றியும் நிறைய பேச ஆரம்பித்தான்.ஆனால் இவை அனைத்தையும் வருணாவின் முன்னோ, சந்துருவின் முன்னோ செய்வதுக் கிடையாது.

ஆரோகன் என்ன செய்கின்றான் என கார்த்திக்கும்,சூர்யாவும் கூறிதான் வருணாவும்,சந்துருவும் அறிந்தனர்.ஆனாலும் தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ளவே இதெல்லாம் செய்கின்றானோ என்றெண்ணி அவர்களும் அதனை கண்டுகொள்ளவில்லை.இரண்டு,மூன்று முறை கூறிய சூர்யாவும்,கார்த்திக்கும் அதற்குப் பின்னர் எதுவும் கூறாமல் இருந்து விட்டனர்.

அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் அபஸ்வரமாக அன்றைய முற்பகலில் ஆரோகன்,ஆத்ரேயன் படித்துக் கொண்டிருக்கும் பள்ளியிலிருந்து சந்துருவிற்கு அலைபேசி அழைப்பு வந்தது. கோர்ட்டில் சிறிது பிஸியாக இருந்ததால் அந்த அழைப்பை கண்டுகொள்ளவில்லை.பொதுவாக வேலை நேரத்தில் அலைபேசி சைலன்ட் மோடில் இருப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருந்தது.அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.

மதியம் உணவு இடைவேளையின் பொழுதுதான் சந்துரு தனக்கு வந்திருந்த எண்ணற்ற மிஸ்டு கால்களை கண்டு "ஸ்கூல்ல இருந்து இத்தனை கால் வந்திருக்கே! மறுபடியும் இந்த ஆத்ரேயன் என்ன பண்ணி வச்சான் தெரியலையே?", என்றவாறு மீண்டும் பள்ளியின் பிரின்ஸிபாலுக்கு அழைப்பு விடுத்தான். சந்துருவின் அழைப்பை ஏற்றவர் என்ன ஏதுவென்ற முகவுரை எதுவுமின்றி "சார்! உடனே உங்க ஓய்ஃபை கூட்டிட்டு ஸ்கூலுக்கு வாங்க..

வந்து உங்க பையனோட டிசியை வாங்கிட்டு போயிடுங்க", எனக் கூறினார். சந்துரு அவரிடம் விளக்கம் கேட்பதற்காக வாயைத் திறந்த பொழுது "நீங்க எதுவும் பேச வேண்டாம் சார்! நேரா வாங்க", என்றுக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

சாப்பிடுவதற்கு எடுத்து வைத்த உணவை அப்படியே மூடி வைத்துவிட்டு வருணாவை அழைத்த சந்துரு "வருணா! கிளம்பி ரெடியா இரு! நான் வீட்டுக்கு வரேன். நாம கொஞ்சம் வெளியே போகணும்", எனக் கூறினான். வழக்கமாக பிள்ளைகள் பள்ளிக்குச் சென்ற பின்னர் எப்பொழுதாவது கணவன்,மனைவி இருவரும் மதிய உணவுக்கு தனியாக வெளியே செல்வதுண்டு.

சந்துருவின் வார்த்தைகளைக் கேட்ட வருணாவிற்கு மிகவும் குஷியானது.ஓகே ஜி! ஓகே ஜி! என கூறிவிட்டு தனக்கு பிடித்தமான உடை எடுத்து அணிந்தவள் சிறிது அலங்காரமும் செய்துக் கொண்டாள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் சென்று வந்த சந்துரு வருணா தயாராகி இருக்கும் விதத்தை பார்த்து எதுவும் கூறாமல் வந்து காரில் ஏறு என்றவாறு அழைத்துச் சென்றான்.

கார் செல்லும் பாதையோ பள்ளியை நோக்கி சென்றதைக் கண்டவுடன் வருணா "என்ன ஜி!ஸ்கூல் பக்கமாப் போறீங்க? அப்ப நாம இன்னைக்கு பசங்களை நம்ம கூட சாப்பிட கூட்டிட்டு போறோமா? நாம தனியாப் போகலையா?", என தன்னுடைய கேள்விக் கணைகளை வீசினாள். அவளை திரும்பி ஒருப் பார்வை பார்த்த சந்துரு "இப்ப நான் சொல்றதை கேட்டு நீ டென்ஷன் டென்ஷனாகக் கூடாது", என ஆரம்பித்தான்.

டென்ஷன் ஆகக்கூடாது என்ற வார்த்தையிலேயே டென்ஷனான வருணா "என்ன மறுபடியும் இந்த ரே ஏதாவது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிட்டானா", என ஆரம்பித்தாள். "தெரியலையே! ஆனா ஸ்கூல்ல இருந்து பிரின்ஸிபல் கால் பண்ணிருந்தாரு. காலையிலிருந்து கால் பண்ணி இருக்காங்க.நான் சைலன்ட்ல போட்டதால மதியம் சாப்பிட உட்காா்ந்தப்பதான் பார்த்தேன். திரும்ப கூப்பிட்டுக் கேட்டதுக்கு எதுவுமே சொல்லாம வந்து உங்க பையனோட டீசி வாங்கிட்டு போங்க அப்படின்னு மட்டும் சொல்றாரு. ரொம்ப கோவமா இருந்த மாதிரி இருந்துச்சு. இப்ப நாம போய் பேசிப் பார்த்தாதான் தெரியும்", என சந்துருக் கூறியதும் தன் நெஞ்சில் கைவைத்து அதிர்ந்த வருணா "என்னது? டீசியா?

இவன் சின்ன வயசுலதான் ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு இருந்தான்.அப்பகூட டீசி கொடுக்கிறோம்ன்னு யாரும் சொன்னதில்லை. இப்ப என்ன பண்ணி வச்சான்னு தெரியலையே! ஒரு அஞ்சாறு வருஷமா நல்லவனாய்ட்டான்னு நெனச்சேன். இவனாவது திருந்துறதாவது", என பள்ளிச் சென்றடையும் வரை தன் இஷ்டத்திற்கு புலம்பிக் கொண்டே வந்தாள்.

பள்ளியை அடைந்தவர்கள் பிரின்ஸிபலை பார்த்திடச் செல்ல அவரோ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க என இருவரையும் அமர வைத்து விட்டார். அப்பொழுதுதான் சுற்றும் முற்றும் பார்த்த வருணா அவ்விடத்தில் ஆத்ரேயன், ஆரோகனின் பள்ளி ஆசிரியையுடன் வேறு ஒரு பெண்ணும் நிற்பதை பார்த்தாள்.

"ஜி! நான் அவங்ககிட்ட பேசிட்டு வரேன்", என நேராக அந்த ஆசிரியையிடம் சென்றவள் "ஹலோ மேடம்! எப்படி இருக்கீங்க? ஆத்ரேயன், ஆரோகன் எப்படி படிக்கிறாங்க. எதுவும் பிரச்சனையா?", என சாதாரணமாக ஆரம்பித்து இறுதியில் அப்படி எதுவும் இல்லை என்று கூறி விடுங்கள் என்ற தொனியில் அவரிடம் பேசினாள்.

அதற்கு அவரும் "அதைப் பத்தி பேசுறதுக்கு தான் பிரின்ஸிபல் காலையிலிருந்து உங்களை கூப்பிட்டுகிட்டு இருக்காரு. ஆனா நீங்க கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ணலை", என அவரின் பங்கிற்கு அவரும் பேசினார். ஆனால் வருணாவோ "என்னோட ஹஸ்பண்ட் கோர்ட்டில் இருந்தா மொபைலை சைலன்ட்ல போட்டுடுவாரு. அதான் அட்டென்ட் பண்ணலை. வேறு எதுவும் கிடையாது", எனக் கூறிவிட்டு மீண்டும் ஆரம்பத்தில் கேட்ட அதேக் கேள்வியை கேட்டாள்.

அதற்கு அவரோ "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேடம்! பிரின்ஸ்பல் சொல்லுவாரு. அதோட இந்த பொண்ணோட பேரன்ட்ஸ் வர வேண்டியது இருக்கு", எனக் கூறியதும்
என்னது பொண்ணோட பேரன்ட்ஸ் வரணுமா என மனதில் எண்ணிய வருணா நேராக சந்துருவிடம் வந்து "ஏதோ பெரிய பிரச்சனை பண்ணி வச்சுட்டான் போல இருக்கு. அந்த பொண்ணோட பேரன்ட்ஸை வேற வரச் சொல்லி இருக்காங்க",என்றதும் சந்துரு

"நீயா பெரிய பிரச்சனைன்னு முடிவு எடுக்காத வருணா! என்ன பிரச்சனை அப்படிங்கறதை பேசிட்டு முடிவெடுப்போம். எல்லா இடத்துலயும் நார்மலா குழந்தைகளை மிரட்டுறதுக்கு டீசி கொடுத்துடுவோம்ன்னு ஒரு சொல்லுவாங்க.அப்படிக் கூட இருக்கலாம். நீ பேசாம வாயை மூடிட்டு உட்காரு", என சற்றுக் கோபத்துடன் பேசினான்.

"பசங்களை ஒன்னும் கண்டுக்குறது கிடையாது.என்ன சொன்னாலும் அவங்களுக்கு சரி சரின்னு தாளம் போடுறது. என்கிட்ட மட்டும் கோபப்படுறது ",என முணுமுணுத்துகொண்ட வருணா அந்தப் பெண்ணின் பெற்றோர் வருவதைக் கண்டதும் வாயை மூடிக் கொண்டாள்.

வருணா காட்டிய திசையை நோக்கிய சந்துரு அங்கு இருவர் வருவதை கண்டான். "அவங்கதான் அந்த பொண்ணோட பேரன்ட்ஸ்ன்னு உனக்கு எப்படி தெரியும்", என வருணாவிடம் கேட்டதற்கு அவளோ "இவங்களை போன பேரன்ட்ஸ்,டீச்சர் மீட்டிங்ல நான் பார்த்து இருக்கேன். அதான் அவங்களா இருக்கும்ன்னு சொல்லுறேன்", எனக் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் நேராக பிரின்ஸ்பலின் அறைக்குள் நுழைந்து விட்டனர்.

அவர்கள் சென்ற பின்னர் அட்டெண்டர் மூலமாக சந்துருவையும், வருணாவையும் உள்ளே வரவழைத்த பிரின்ஸிபல் முதலில் இருவரையும் அமரச் சொன்னார். அப்பெண்ணின் அம்மாவோ இவர்கள் இருவரையும் வெட்டவா,குத்தவா என்ற நிலையில் பார்த்துக் கொண்டிருந்தார். "என்னய்யா இது? வழக்கை சொல்லாமலே நாட்டாமை தீர்ப்பு சொன்ன மாதிரி இந்தம்மா முறைக்குது", என வருணா மைண்ட் வாய்ஸில் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே பிரின்ஸிபல்

"உங்கப் பையன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா மிஸ்டர். சந்துரு?", என ஆரம்பித்தார். சொன்னாதானே தெரியும் என வருணா மைண்ட் வாய்ஸில் கலாய்த்துக் கொண்டிருக்க சந்துரு "சொல்லுங்க சார்! அதை தெரிஞ்சுக்கிறதுக்குதான் உங்ககிட்ட வந்து இருக்கோம்", என அமைதியாகவே வினவினான்.

பிரின்சிபல் பதில் பேசும் முன்னர் அப்பெண்ணின் அம்மா "உங்கப் பையன் என் பொண்ணுக்கு விதவிதமாக கவிதை எழுதி அதை டிசைன் பண்ணி டெய்லி ஒரு லவ் லெட்டர் கொடுத்து இருக்கான். இதை ஆறு மாசமா செஞ்சுகிட்டு இருக்கானாம். என்ன வளா்த்து வச்சிருக்கீங்க பையனை?", என எகிறினாள். வழக்கமாக அனைத்திற்கும் அதிர்ச்சி அடையும் வருணா அவர் கூறிய உடனே வந்த சிரிப்பை அடக்குவதற்கு சற்றே சிரமப்பட்டாள்.

சந்துருதான் நிதானம் தவறாமல் உங்களுக்கு இந்த விஷயத்தை யார் சொன்னாங்க என அப்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டான். "நானேதான் கண்டுபிடிச்சேன்", என அதற்கும் அந்தம்மாள் கூறியதும் "இதுல சம்பந்தப்பட்டது எங்களோடப் பையனும், அவங்களோட பொண்ணும்.

இரண்டு பேரையும் நேராக் கூப்பிட்டு வச்சுக் கேளுங்க. இவங்களா ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சுட்டு தேவையில்லாமல் பையனை பற்றி குறை சொல்லியிருக்காங்க. நீங்களும் அதை கேட்ட உடனே விசாரிச்சீங்களா?", என பிரின்சிபலிடம் கேட்டான். அதற்கு அவரோ "இல்லை. அவங்க வீட்ல இருந்து கால் பண்ணி நேத்து நைட் எல்லாம் என்னை தூங்கவிடாமல் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தாங்க. இன்னைக்கு மார்னிங் வந்த உடனே நீங்க இதுக்கான ஆக்சன் எடுத்து அந்த பையனை ஸ்கூலை விட்டு அனுப்பனும்.

இல்லைனா நாங்க வேற லெவல்ல பிரச்சனை பண்ணுவோம்ன்னு சொல்லி பேசினாங்க. ஏற்கனவே அந்த பொண்ணுகிட்ட கேட்டதுக்கு ஆமாம்ன்னு சொல்லி ஒத்துக்கிட்டா. அதனால்தான் நாங்க ஆக்சன் எடுக்க இருக்கிறோம். ஸ்டூடண்ட்ஸ் மேல் ஆக்சன் எடுக்கிறதை பேரன்ட்ஸ்க்கு தெரியப்படுத்த வேண்டியது எங்கக் கடமை", எனக் கூறி முடித்தார்.

பிரின்ஸ்பலின் பேச்சை கேட்ட அப்பெண்ணின் அம்மாவும் மிகவும் தெனாவட்டாக அமர்ந்திருந்தார். ஆனால் சந்துரு சிறிதும் அசராமல் "அந்தப் பொண்ணை கூப்பிட்டுக் கேட்டீங்க. அனேகமா எங்க பையன் லெட்டர் குடுத்தானான்னு மட்டும்தான் கேட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். முழுசா என்ன விஷயம்ன்னு விசாரிச்சு இருக்கணும். அது மட்டும் இல்லாம நீங்க இன்னொரு தப்பும் பண்ணிட்டீங்க. அந்த பொண்ணை கூப்பிட்டப்பவே எங்கப் பையனை கூப்பிட்டு விசாரிச்சிருக்கணும்.ஒரு பக்க நியாயத்தை மட்டும் கேட்டுட்டு பேசுறது தப்பு சார்!

நீங்க இந்த மாதிரி பேசினாதுக்காகவே நான் உங்க மேல கம்ப்ளையன்ட் பண்ண முடியும்", எனக் கூறி தான் ஒரு வக்கீல் என்பதை அவ்விடத்தில் நிரூபித்தான். பிரின்ஸிபல் பதில் கூறுவதற்கு முன்னரே "என்ன சார்! எங்க ராகவி பொய் சொல்வாளா? இல்லை நான் கண்டுபிடிச்சது தப்புன்னு சொல்றீங்களா? என்ன இவ்வளவு பேசிட்டு இருக்கீங்க? என் சொந்தக்காரங்க எல்லாம் எத்தனை பேரு வக்கீலா இருக்காங்கன்னு தெரியுமா?

நான் நினைச்சா உங்க பையனை எங்கேயுமே சேர்க்க விடாம பண்ண முடியும்?"என அப்பெண்ணான ராகவியின் தாயார் சந்துரு யார் என்று தெரியாமலேயே பேசினாள்.

சந்துரு பதில் கூறுவதற்கு முன்னரே முந்திக்கொண்ட வருணா
"நீங்க இனிமே போய் உங்க சொந்தக்காரங்கள்ல வக்கீலை தேடிப்பிடிச்சுதான் இப்ப சொன்னதெல்லாம் பண்ண முடியும். எங்களுக்கு அது தேவையே இல்லை. நாங்க ரெண்டு பேருமே வக்கீல்தான். இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்க என்கிட்ட சொல்லுங்க?", என ராகவியின் அம்மாவிடம் எகிறிவிட்டு அவரது அருகில் அமர்ந்திருந்த ராகவியின் அப்பாவை பார்த்து 'ஏன் சார்! நீங்க இங்க மட்டும்தான் டம்மியா இல்லை வீட்லயும் இப்படிதானா", என்றக் கேள்வியையும் எழுப்பினாள்.

"சும்மா இரு... நான் பேசுறேன்", என அவளை அடக்கிய சந்துரு பிரின்ஸ்பலை பார்த்து "சார் இவங்களும் பேசவேண்டாம். நானும் பேசலை. நீங்க பசங்களை கூப்பிடுங்க", என அவரிடம் கூறியதும் அவரும் வெளியில் நின்றிருந்த ராகவியை உள்ளே வரவழைத்தார். ராகவி வந்தவுடன் அவளருகில் சென்ற அவளின் அம்மா "சொல்லுடி! சொல்லு! அவன் உனக்கு எத்தனை மோசமா லவ் லெட்டர் கொடுத்து டார்ச்சர் பண்றான்னு சொல்லு"என அவளின் கொமட்டிலேயேக் குத்தினார்.

ராகவியின் தாயார் நடவடிக்கைகளை பார்த்த சந்துருவுக்கு ஏன் இந்த அம்மா ஓவரா ரியாக்ட் பண்றாங்க என்ற எண்ணம்தான் தோன்றியது. சந்துரு மனதில் நினைத்ததை வழக்கம்போல் வருணா
"நீங்க எதுக்காக இப்படி ஓவரா ரியாக்ட் பண்றீங்க? நீங்க உங்க பொண்ணுகிட்ட சொல்றதைப் பார்த்தா ஆமான்னு சொல்லணும்னு மிரட்டுற மாதிரி இருக்கு. இந்த மாதிரி எல்லாம் பண்ணாம வந்து உட்காருங்க. எங்கப் பையனும் வரட்டும்",எனக் கூறினாள்.

ராகவியின் அம்மாவிடம் பேசி விட்டு சந்துரு புறம் திரும்பிய வருணா "இந்த ரே வரட்டும். அவனுக்கு இருக்கு கச்சேரி!", என முணுமுணுத்தாள். சந்துருவும் மனதில் அதையே எண்ணிக் கொண்டிருந்தான். என்னதான் பிள்ளைகளிடம் தோழமையாக இருந்தாலும் சில விஷயங்களை கண்டித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம்தான் அவனது மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

இருவரும் ஆத்ரேயனை ஆத்திரத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அவர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் வண்ணமாக வந்து நின்றது ஆரோகன்! ஆரோகனை பார்த்த வருணா "சார்! நீங்க மாத்தி கூட்டிட்டு வர சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன்.ஆத்ரேயனுக்கு பதிலா ஆரோகனை கூட்டிட்டு வந்திருக்காங்க", எனக் கூறினாள்.

வருணாக் கூறியதை கேட்ட ராகவியின் அம்மா "என்னது இன்னொருத்தன் வேற உனக்கு டார்ச்சர் கொடுத்தானாடி?", என அவளிடம் வினா எழுப்பினார். அதற்கு பதிலாக பிரின்ஸிபல் வருணாவை நோக்கி "இல்லை மேடம்! ஆரோகன்தான் இதை செஞ்சிருக்கான்", எனக் கூறியதும் சந்துரு,வருணா இருவராலும் அதனை சிறிதும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

இருப்பினும் நேரடியாக ஆரோகனிடம் கேட்கலாம் என அமைதியாக இருந்தனர். ராகவியையும், ஆரோகனையும் பார்த்த பிரின்ஸிபல் முதலில் ஆரோகனிடம் தன்னுடைய கேள்விக்கணைகளை ஆரம்பித்தார். "ஆரோகன்! கிளாஸ்ல ரொம்ப நல்ல ஸ்டூடண்ட்ன்னு உனக்கு பேர் இருக்கு. உன்னோட டீச்சர் யாருமே இது வரைக்கும் உன்னை பத்தியோ, உன்னோட தம்பியைப் பற்றியோ குறை சொன்னதுக் கிடையாது.

அப்படி இருக்கறப்ப நீ ஏன்பா இந்த மாதிரி தப்பு செஞ்ச?", என அமைதியாகவே வினவினார். ஆரோகன் அதற்கு பதில் கூறும் முன்னரே முந்திக்கொண்ட சந்துரு "சார்! அவன் தப்பு செஞ்சானா இல்லையான்னு உங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கிறப்ப நீங்களா எதுக்கு தப்பு செஞ்ச அப்படிங்கற வார்த்தையை யூஸ் பண்றீங்க? என்ன நடந்துச்சுன்னு முதல்ல அவனுக்கு சொல்லிட்டு அதுக்கடுதஇது உங்க விசாரணையை ஆரம்பிங்க",என கண்டிப்பாகக் கூறினான்.

அவன் வார்த்தைகளில் இருந்த நியாயம் புரிந்ததோ என்னவோ பிரின்ஸிபல் ஆரோகனிடம் "நீ ராகவிக்கு எதுவும் லவ் லெட்டர் எழுதி கொடுத்தியா?",எனக் கேட்டார். அவரது கேள்வியில் அவனின் முகத்தை பார்த்து பார்த்திருந்த அனைவருக்குமே அவன் அதிர்ந்து போனது புரிந்தது.

அதனை அதிர்ச்சி என்பதை விட அப்படி ஒரு விஷயம் நடந்ததா என்ற உணர்வே அவனது முகத்தில் பிரதிபலித்ததை அனைவரும் உணர்ந்திருந்தனர். "இல்லை சார்! நான் எதுவுமே ராகவிக்கு கொடுக்கலை", என ஆரோகன் பதில் கூறியதும் ராகவியின் புறம் திரும்பினார்.ராகவியிடம் வினாவினை தொடுக்கும் முன்னரே இடை புகுந்த அவளின் அம்மா "என் பொண்ணு ஒத்துக்கிட்டா... அவன் பொய் சொல்றான். நீங்க அவனை வெளியில் அனுப்புங்க", என ஆரோகன் மேல் தவறுதான் என்பதை முடிவு செய்தது போல் பேசினார்.

அது வரை எதுவுமே பேசாமல் இருந்த ராகவியின் அப்பா "ரதி! நீ கொஞ்ச நேரம் பேசாம இரு. அவங்க விசாரிச்சுகிட்டு இருக்காங்க. நான் திரும்பத் திரும்ப உங்கிட்ட சொல்றேன். நீயா ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டு தேவையில்லாம படிக்கிற பிள்ளைங்களோட வாழ்க்கையை பாழாக்கக் கூடாதுன்னு. நீ கேக்குறதே இல்லை",என மெதுவான குரலில் தன் மனைவியை அடக்கி வைத்தார்.

இப்பொழுது ராகவியின் புறம் திரும்பிய பிரின்ஸிபல் "நீ சொல்லு ராகவி! என்ன நடந்துச்சுன்னு நீ சொல்றதை பொருத்துதான் நாங்க முடிவெடுக்க முடியும் எனக்கூறியவுடன் தன் அம்மாவை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்த பிரின்ஸிபல் "மேடம் !நீங்க கொஞ்ச நேரம் வெளியில இருங்க. நான் பேசிட்டு உங்களை உள்ளக் கூப்பிடுறேன்",எனக் கூறி ராகவி அம்மாவை வெளியில் அனுப்ப முயற்சித்தார். ஆனால் அவரோ "இல்லை, நான் இங்கதான் இருப்பேன். என் பொண்ணை நீங்க மிரட்டி அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்ல வச்சிட்டீங்கன்னா? அதனால இங்கேயேதான் இருப்பேன்", என வீம்பு பிடித்தார்.

"நீங்க இப்ப வெளியில போகலைன்னா நான் எதையுமே விசாரிக்காமல் அவங்கவங்க கிளாஸ்ல போய் வேலையை பாருங்கன்னு சொல்லிடுவேன். உங்கப் பேச்சை கேட்டுதான் ஆரோகனோட பேரன்ட்ஸையும் வர வச்சிருக்கேன். உங்களால எனக்குதான் இப்ப பிரச்சனை. நீங்க அமைதியா இருக்க முடியுமா? இல்லைன்னா வெளியில போய் உட்கார முடியுமா?",என பிரின்ஸிபல் உயர்ந்தக் குரலில் கேட்டவுடன் நான் இங்கேயே இருக்கேன் என ரதி அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

இப்பொழுது ராகவியிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட பிரின்ஸிபலை பார்த்தவள் "இல்லை சார்!", என்ற பதிலை கூறினாள். "என்னது இல்லையா? பிறகேன் உங்கம்மா அப்படி சொன்னாங்க", எனக் கேட்டதும் தன் தாயை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிய ஆரம்பித்திருந்தது.

"என்ன விஷயம்னு நீ சொன்னால்தான் மேற்கொண்டு நாங்க பேச முடியும்", என அவளின் வகுப்பு ஆசிரியை அதட்டியதும் நடந்ததைக் கூற ஆரம்பித்தாள். "நான் மூணு வருஷமா ஆத்ரேயன், ஆரோகன் கிளாஸ்லதான் தொடர்ந்து படிக்கிறேன்.ரெண்டு பேருமே என்கிட்ட சாதாரணமாகக் கூடப் பேச மாட்டாங்க. ஆனா இப்ப கொஞ்ச மாசமா ஆரோகன் கிளாசுக்கு வரப்ப எல்லாம் ஒரு ஃபைல் மாதிரி எடுத்துட்டு வருவான்.
நான் இந்த வருஷம் ஸ்டார்ட் பண்ணனுனதுமே அப்படி என்ன அந்த ஃபைலில் இவன் கொண்டு வர்றான்னு யாருமில்லாதப்ப எடுத்து பார்க்க ஆரம்பிச்சேன். அதுல டிசைன் பண்ணி நிறைய கவிதையா எழுதி இருந்துச்சு. எல்லாமே லவ் சொல்ற போயம் தான். ஆத்ரேயன் எந்த பொண்ணுங்ககிட்டயும் பேச மாட்டான். ஆனா ஆரோகன் எல்லா பொண்ணுங்ககிட்டயும் போய் தனியா பேசிட்டு வருவான். என்கிட்ட மட்டும் ஒன்னுமே பேசுறதுக் கிடையாது.

அதனாலதான் நான் அவன் கொண்டுவர ஃபைலிலிருந்து அப்பப்ப கவிதை இருந்த பேப்பா்ஸை எடுக்க ஆரம்பிச்சேன்.அது எல்லாத்தையும் என்னோட புக்ல வச்சிருந்தேன். அம்மா ரெண்டு நாளைக்கு முன்னாடி என் புக்ஸ் எல்லாம் திறந்து பார்த்துவட்டு இதெல்லாம் யார் எழுதின கவிதைன்னுக் கேட்டாங்க.நான் ஆரோகன் எழுதின கவிதை அப்படின்னு மட்டும்தான் சொன்னேனே தவிர எனக்கு கொடுத்தான்னு சொல்லவே இல்லை.

உடனே அவங்களத ஒரு முடிவு கட்டிட்டு பிரின்ஸிபல்க்கு கால் பண்ணிட்டாங்க", எனக்கூறி நிறுத்தினாள். "உங்க அம்மா எதுக்காக இப்படி ஒரு முடிவை திடீர்னு எடுத்தாங்க? நீ அவங்ககிட்ட பேசி புரிய வைச்சு இருக்கலாமே?", என வருணாக் கேட்டதற்கு "இல்லை ஆன்ட்டி! ஆரோ கிளாஸ்ல ஃபா்ஸ்ட் தானே எப்பவும் எடுப்பான். இப்ப அவனை ஸ்கூல் விட்டு அனுப்பிட்டா நான் டாப்பராயிடுவேன்னு அம்மாவுக்கு ஒரு எண்ணம். அதனாலதான் கிளாஸ்ல ஃபா்ஸ்ட் வர்ற பையனானு என்கிட்ட கேட்டாங்க. ஆமான்னு சொன்னா உடனே ஆரோவை ஸ்கூல் விட்டு அனுப்புறதுக்கு இந்த மாதிரி பிரச்சனை பண்ணிட்டாங்க.

சாரி ஆன்ட்டி! ஆரோ மேல எந்த தப்பும் இல்லை", என ராகவி தன் தாயின் தில்லாலங்கடி தனத்தை கூறி வைத்தாள்.

சந்துருவும், வருணாவும் பேசுவதற்கு முன்னரே முந்திக்கொண்ட பிரின்ஸிபல் ராகவியின் அம்மாவை நோக்கி "மேடம்! நீங்க செஞ்சதுக்கு உங்க பொண்ணு மேலதான் இப்ப நான் ஆக்சன் எடுக்கணும். என்ன ஏதுன்னு சொல்லி தீர விசாரிக்காமல் நானும் ஆரோகனோட பேரண்ட்ஸை வர சொல்லி அவமானப்படுத்துற மாதிரி பேசிட்டேன்.

உங்க பொண்ணு கிளாஸ் ஃபா்ஸ்ட் வரணும்னு நீங்க நினைச்சீங்கன்னா அதுக்கு நல்லா படிக்க வைக்கனும். இப்படி இன்னொருத்தவங்க வாழ்க்கையை பாழாக்கி அதுல நீங்க வாழணும்னு நினைக்காதீங்க. என்ன ஒரு கீழ்த்தரமான புத்தியோட நீங்க இருக்கீங்க. இதுதான் லாஸ்ட் வார்னிங். இதுக்கு மேல நீங்க ஏதாவது இந்த மாதிரி பிரச்சனைகள் செஞ்சீங்கனா உங்களுக்கு கூப்பிடாமலேயே நான் ராகவிக்கு டீசி கொடுத்து வெளியே அனுப்பிடுவேன்", எனக் கடுமையாகப் பேசினார்.

அத்துடன் நில்லாமல் சந்துருவிடமும், வருணாவிடமும் அவர்களின் நேரத்தை வீணடித்ததற்காகவும், தேவையில்லாமல் அவர்களின் மகனை குற்றம்சாட்டியதற்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் பேச வாயைத் திறந்த வருணா தன் கையை பிடித்து அழுத்திய சந்துருவின் கண்பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

ராகவியும் சந்துரு, வருணா இருவரிடமும் மன்னிப்பை கூறியதுடன் ஆரோகனிடமும் "சாரி ஆரோ! நீ வச்சிருந்த கவிதை எல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. அதனால்தான் உனக்கு தெரியாமல் திருடிட்டேன். இனிமே திருடாம உன்கிட்ட இருந்து நேராவே வாங்கிக்கிறேன்", எனக் கூறிவிட்டு தன்னுடைய பெற்றோர்களுடன் வெளியே சென்றாள். ஆரோகன் நிற்பதைப் பார்த்த பிரின்ஸிபல் "ஓகே ஆரோகன் நீ கிளாஸ்க்கு போ", என அவனை அனுப்பிவிட்டு சந்துருவிடமும், வருணாவிடமும் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோரியதுடன் அவர்களையும் அனுப்பிவைத்தார்.

வெளியில் வந்த வருணா சந்துருவிடம் "அப்பாடி! பிரச்சினை முடிஞ்சது. இந்த ஆத்ரேயின் என்ன பண்ணி வச்சானோன்னு வந்தா ரோ மேல குத்தம் சொல்றாங்க. என்னத்த சொல்றது? இப்ப பிள்ளைகளுக்கு இருக்குற போட்டி மனப்பான்மையை விட பெத்தவங்களுக்குதான் ஜாஸ்தியா இருக்கு போல! இது தெரியாமல் நான் வெள்ளந்திதனமாக இன்னும் இருக்கேன். என்ன ஜி?", எனக் கேட்டதற்கு அவன் பதில் எதுவும் உரைக்கவில்லை. ஆனால் ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல் தோன்றியது.

"என்னாச்சு?", என வருணாக் கேட்டதற்கு "ஒன்னும் இல்லை. நாம வீட்ல போய் பேசிக்கலாம்", என்றவாறு காரை கிளப்பினான். காரை கிளப்பியவுடன் சந்துருவின் முகத்தை திரும்பி திரும்பி பார்த்த வருணா " ஜி! நான் ஒன்னு சொன்னா நீங்க டென்ஷனாக மாட்டீங்களே", எனக் கேட்டாள். அவன் கேட்ட விதத்திலேயே
"என்னாச்சு வருணா! எதுவா இருந்தாலும் நீ சொல்லு. நான் உன்மேல ஏன் டென்ஷனாகப் போறேன்? அதெல்லாம் எப்பவுமே ஆக மாட்டேன்", என உறுதிமொழிக் கூறியதும் வருணா மகிழ்ந்துப் போனாள்.

மகிழ்ச்சியுடன் "வந்தது வந்துட்டோம் ஜி! நீங்க கிளம்பி ரெடியா இருன்னு சொன்னதும் பிரியாணி சாப்பிடதான் போறோம்ன்னு நினைச்சிட்டு சாப்பிடக் கூட இல்லை. மதியத்துக்கு வீட்டுல சமையல் எதுவும் நான் செஞ்சு வைக்கலை. அப்படியே வெளில கூட்டிட்டு போய் என்னை சாப்பிட வச்சு பிறகு வீட்டுக்கு போகலாமே!", என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறினாள்.


"அதானே! ஊரே பத்திகிட்டு எரிஞ்சாலும் நமக்கு சோறு முக்கியம். வா கூட்டிட்டுப் போறேன்", என அவளைக் கூட்டிச் சென்றாலும் சந்துரு தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அச்சிந்தனை வீட்டுக்கு வரும் வரை தொடர்ந்தது. வீட்டிற்கு வந்தவுடன் வருணாவை அமர வைத்த சந்துரு முதல் வேலையாக கார்த்திக்கையும், சூர்யாவையும் அலைபேசியில் அழைத்து ரெண்டு பேரும் இன்னைக்கு சாயங்காலம் வந்து சேருங்க எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

சந்துரு பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த வருணா "எதுக்கு அவங்களை வரச் சொல்றீங்க? அவங்களுக்கும் குடும்பம்,குட்டின்னு இருக்கு. நீங்க இப்படி அடிக்கடி வர சொல்றது தப்பு", என தன் கணவனுக்கு பாடம் எடுத்தாள். "அவங்களை வர சொன்னதுக்குக் காரணம் இருக்கு. ஆரோகன் அந்த கவிதை எல்லாம் நேரடியா யாருக்கும் தரலைன்னாலும் அவன் எதுக்காக அதை வச்சிருந்தான்.

நீ ராகவி சொன்னதை கவனிச்சியா? டிசைன் பண்ணி அதுல கவிதை இருந்துச்சுன்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு. எனக்கு தெரிஞ்சு டிசைன் பண்ணி தந்தது சூர்யாவா இருக்கணும். ஆரோகன் கவிதை எழுதி நீயோ,நானோ பார்த்தது கிடையாது. அதனால அது நம்ம கார்த்திக் சைடுல இருந்து தான் போய் இருக்கணும். இவங்க ரெண்டு பேருக்கும் தெரியாம இந்த விஷயம் நடந்து இருக்க வாய்ப்பே கிடையாது.

இவங்க ரெண்டு பேரும் சாயங்காலம் வரட்டும். பசங்களும் ஸ்கூல்ல இருந்து வந்துருவாங்க. நாலு பேரையும் ஒன்னா வச்சுதான் பேசணும்", என சந்துரு விளக்கியவுடன்தான் வருணாவும் அதையெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால். சந்துருக் கூறியதைக் கேட்டு சிறிது யோசித்தவள் "ஏன் ஜி! ரோ வச்சிருந்தா எதுக்கு ரேவை உட்காரவைக்கனும்னு நீங்க சொல்றீங்க?", என மீண்டும் ஒரு கேள்வி எழுப்பினால்.

" வழக்கமா ரோக்கு ஏதாவது பிரச்சனைனா ரே தான் முன்னாடி நிா்பான்.அப்படி இருக்கறப்ப இது அவனுக்கும் தெரிஞ்சிருக்கும்", எனக்கூறிய சந்துரு தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் "இது நிஜமாவே ஆரோகன் பண்றானா? இல்லை ஆத்ரேயன் செஞ்சு ஆரோகன் மேல பழியை தூக்கி போடுறானா", எனக் கூறி வருணாவின் சிந்தையை மேலும் தூண்டி விட்டுக்கொண்டிருந்தான்.

இப்பிரச்சினையின் அடித்தளம் நால்வர் கூட்டணியா? இல்லை இருவரின் கூட்டணியா? இல்லையென்றால் ஒருவன் இயக்கி மூவர் ஆடுகின்றனரா? என சந்துருவும் வருணாவும் பல கோணத்தில் ஆலோசித்து கொண்டிருக்கும் பொழுது அன்றைய தினத்தில் கொண்டு செல்லப்பட்ட கவிதை பள்ளியில் யாரிடம் சேர வேண்டுமோ அவ்விடம் எவ்வித பிரச்சனையும் இன்றி சேர்ந்துவிட்டது.

அப்படியெனில் ஆரோகன் மறுத்தது அபத்தமா? மாலை விசாரணையில் ஆரோகன் அளித்திட போகும் பதில்தான் என்னவோ?