Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சந்திரோதயம்-9 | SudhaRaviNovels

சந்திரோதயம்-9

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
சந்திரோதயம்-9

வருணாவின் புலம்பல்களை தாங்கிடாத சந்துரு "வருணா! இப்ப நீ கொஞ்சம் பொலம்புறதை நிப்பாட்டுறியா? இப்ப நீ ஏன் என் மேல நம்பிக்கையை வச்ச அப்படின்னு ரோ கேட்டா என்ன செய்வ ?",என அமைதியானவளும் எதுவும் பேசவில்லை.

மீண்டும் வருணா பேசிட வாயைத் திறந்தபோது "வாயய மூடு வருணா!ரோ மேல என்ன நம்பிக்கை வச்சு இல்லாமப் பண்ணிட்டான்? அது எல்லாத்தையும் விட உன்னை யாரு பிள்ளைங்க மேல நம்பிக்கை வைக்கச் சொன்னது? முதல்ல நம்ம பெத்தவங்க நம்ம மேல வச்ச நம்பிக்கையை நாம காப்பாத்துனோமா?

அதெல்லாம் பசங்க திரும்பி கேட்டாங்கன்னா நமக்குதான் அசிங்கம். உனக்கு தெரியுமா உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி உங்க அப்பாவும்,நானும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். அதுக்கடுத்துதான் நம்ம கல்யாணம் நடந்துச்சு ஞாபகம் இருக்கா?",எனக் கேட்டான். அதுவரை ஆரோகன் விஷயத்தில் புலம்பிக் கொண்டிருந்த வருணா "நான் அதை எப்படி மறக்க முடியும்? அந்த ஒரு மணி நேரம் என்ன பேசிட்டு வந்தீங்கன்னு இன்னிக்கு வரைக்கும் நீங்களும் சொல்லலை.அப்பாவும் சொல்லலை.

ரெண்டு பேருகிட்டயும் மாத்தி மாத்தி கேட்டு எனக்குதான் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிடுச்சு. அதனாலதான் அந்த கேள்வியை கேட்குறதையே விட்டுட்டேன்", என அவள் கூறிய விதத்தில் சந்துரு அவளின் கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான்." அதெல்லாம் புரிஞ்சிக்கிற அளவுக்கு நீ தெளிவு கிடையாது",என நக்கலாகக் கூறினான்.

அவன் கூறியதையே சிறிது நேரம் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பியவள் புரிந்துகொண்ட பின் கையை உறுவிக்கொள்ள முயற்சித்து முடியாமல் போகவே சந்துருவை முறைத்துப் பார்த்தாள். அதற்கும் சந்துரு "முறைக்கிறேன் அப்படிங்கிற போ்ல காமெடி பண்ணாத", எனக் கலாய்த்து விட்டு அன்று தனக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே நடந்த உரையாடலை பற்றிக் கூற ஆரம்பித்தான்.

உங்க அப்பாவுக்கு நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டோம் அப்படிங்கறதை விட அவரோட பொண்ணு மேல அவர் வச்சிருந்த நம்பிக்கை ஒடஞ்சிருச்சு. அதுதான் பெரிய விஷயமா இருந்தது. இப்ப நீ சொன்னியே ரோ மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு இருந்தேன் தெரியுமா அப்படின்னு. அதே நம்பிக்கையைதான் உங்க அப்பா உன் மேல வச்சிருந்தாரு.

நீ என்கிட்ட நேரடியாக சம்மதம் சொல்லாம உங்க அப்பாகிட்ட போய் சந்துரு என்னை லவ் பண்றேன்னு சொல்லி ப்ரொபோஸ் பண்ணுனான். நான் என்ன முடிவு சொல்லணும்னு ஒரு வார்த்தைக்குக் கேட்டு இருந்தாகட கூட உங்க அப்பா ரொம்ப ஈசியா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பாரு.

அவர் நம்பிக்கை வச்சு வளர்த்த பொண்ணு தானா ஒரு முடிவு எடுத்து ட்டு கடைசியாக வந்து ஊர் உலகத்துக்காக தன் சம்மதத்தை கேட்குறா அப்படிங்கிற ஒரு மன வருத்தத்தில்தான் அவர் கடைசி வரைக்கும் அக்சப்ட் பண்ணலை. சம்மதம் தரவுமில்லை. என்கிட்ட அவர் பேசின அந்த ஒரு மணி நேரமும் நான் வச்சிருந்த நம்பிக்கையை உடைச்சுட்டாளே அப்படிங்கிற வார்த்தையைதான் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருந்தாரு.

நான் அப்பவே சொன்னேன். இல்லை சார்! உங்க பொண்ணு உங்களோட நம்பிக்கையை உடைக்கலை. நான் கேட்டதனாலதான் சம்மதம் சொன்னா அப்படின்னு சொன்னதற்கு நீங்க கேட்கலாம். ஆனா அவ சம்மதம் சொல்றதுக்கு முன்னாடி என்னை பத்தி யோசிச்சிருக்கணும் இல்லையா? அதெல்லாம் யோசிக்கவே இல்லைதானே! இதே மாதிரி நீங்க பெத்துக்க போற பிள்ளைங்க நாளைக்கு உங்க நம்பிக்கையை உடைக்கறப்பதான் வலின்னு சொல்லமுடியாது அந்த வருத்தம் புரியும் அப்படின்னு முடிச்சிட்டார்.

நம்மளுக்கு பொண்ணுதான் பிறக்கும்னு அவர் ரொம்பவும் ஆர்வமாக எதிர்பார்த்தா அதுவும் பசங்களாப் பிறந்து ஆத்ரேயன் சின்ன வயசுல இருந்ததைப் பார்த்த உடனே என்கிட்ட திரும்ப வந்துப் பேசினார். ஒரு நேரம் நான் விட்ட சாபத்தாலதான் இப்படி ஆயிடுச்சோ? இவன் இப்படி எல்லாம் பண்றான்னு ரொம்பவுமே புலம்பினார். அப்ப அவருக்கு நம்ம மேல பாசம் இல்லைன்னு அர்த்தமா? அதெல்லாம் கிடையாது.

வருணா நாமளே பிள்ளைங்க மேல அளவுக்கு அதிகமான நம்பிக்கையை உருவாக்கிக்குறோம். ஏதோ ஒரு சூழ்நிலையில் அவங்களுக்கு புடிச்ச மாதிரி வாழ ஆரம்பிச்சுட்டா என் நம்பிக்கையை உடைச்சிட்டான்னு ஈசியா குறை சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கோம். அது ரொம்பவே தப்பு. பிள்ளைங்ககிட்ட கேட்டு நாம நம்பிக்கை வைக்கலை.

அப்படி இருக்கறப்ப அவங்களோட வாழ்க்கையை அவங்க முடிவு பண்றதுல உன் நம்பிக்கை எந்த இடத்துல உடைஞ்சு போச்சு? இதை நீ உங்க அப்பாவோட பாய்ன்ட் ஆஃப் வியூல இருந்து யோசிச்சு பாரு. உன்னோட மனநிலைமை நம்ம கல்யாண சம்மதத்துக்கு வெய்ட் பண்ணுனப்ப எப்படி இருந்துச்சுன்னு யோசிச்சுப் பாரு.

அப்புறம் இன்னொரு விஷயம் ஆரோகன் இதை பண்ணி இருக்கான். என் நம்பிக்கையை ஓடச்சிட்டான் அப்படின்னு யோசிக்காம ஆரோ இந்த மாதிரி எல்லாம் செய்வானா? அவனுக்கு இந்த அளவு தைரியம் இருக்குமா அப்படின்னு யோசிச்சு பாரு. நான் நம்புறேன். இது ரோ பண்ணின வேலை கிடையாது.ரே தூண்டிவிட்டு அவனுக்காக ரோ ஏதோப் பிரச்சனையில் மாட்டிக்கிட்டான் அப்படின்னு நம்புறேன்.

இது இல்லாமலும் போகலாம். அப்ப என் நம்பிக்கை உடைஞ்சு போச்சுன்னு புலம்பிக்கிட்டு இருக்க மாட்டேன். பசங்க டீன் ஏஜில் இருக்குறப்ப சில விஷயங்கள் நடக்கதான் செய்யும். அதையே புலம்பிகிட்டு இருந்தா எப்படி இருந்தாலும் இவங்க புலம்பதான் போறாங்கன்னு தப்பான வழியில்தான் போவாங்க .சாதாரணமா விட்டுப் பழகு", எனக் கூறிவிட்டு தான் பேசிய பேச்சிற்கு வருணா தூங்கி விட்டாளா எனப் பார்த்த சந்துரு அவள் வேறு எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை கண்டவுடன் "இப்ப என்ன ஆச்சு? உன்னோட குட்டி மூளையில் அளவுக்கு அதிகமா வேலை வாங்குற மாதிரி சீன் போட்டுட்டு இருக்க?", என வினவினான்.

"இல்லை ஜி! நீங்க அப்பாகிட்ட பேசுனதை பத்தி சொன்னீங்க இல்லையா? அதுலதான் ஒரு சந்தேகம்", என ராகமிழுத்தவளை பார்த்தவுடன் ஏதோ மிகவும் தெளிவாக வில்லங்கமான வினாவை எழுப்ப போகிறாள் என்பது சந்துருவுக்கு புரிந்துபோனது. கேளும், கேட்டுத் தொலையும் எனக் கூறியவுடன்

"இல்லை நீங்க ப்ரொபோஸ் பண்ணுனதை மட்டும்தானே சொன்னீங்க? எப்படி ப்ரொபோஸ் பண்ணி அந்த சிக்கனுக்காகதான் ஒத்துகிட்டேன்னு சொல்லலைதானே! அதை சொல்லி இருந்தா எங்க அப்பா சிக்கனை நாங்களே வாங்கிக் கொடுத்திருக்கலாம்ன்னு ஃபீல் பண்ணி இருப்பார் இல்லை. அதுக்குதான் கேட்டேன்", என அதிமுக்கியமான கேள்வியை அவள் எழுப்பியவுடன் சந்த்ரு தன்னுடைய இரு கைகளையும் எடுத்து தலைக்கு மேல் வைத்து கும்பிட்டு "அம்மா தாயே!என்னை ஆள விடு", எனக் கூறி விட்டு படுத்து விட்டான். "புத்திசாலித்தனமாக் கேள்விக் கேட்டா பதில் சொல்றதுக் கிடையாது. எல்லாம் நம்ம நேரம்", என அவளும் சிரித்துக்கொண்டே கண் அயரச் சென்றாள்.

மறுநாளைய விடியலில் சாதாரணமாக தூங்குவதை விட வருணா அளவுக்கு அதிகமான நேரம் தூங்கி விட்டாள். ஆத்ரேயனும், ஆரோகனும் எழுந்து வந்து பார்த்த பொழுது வருணா நல்ல நித்திரையில் இருப்பதைக் கண்டு தங்களின் தந்தையிடம் சென்றனர்.

"அப்பா! அம்மா என்ன இன்னும் தூங்குறாங்க?", எனக் கேட்டதற்கு "எழுப்பிவிட்டு ஏன் இவ்வளவு நேரம் தூங்குறீங்கன்னு கேட்டுப் பாருங்க", எனக் கூறிவிட்டு சந்துரு வெளியில் தன் நண்பர்களை பார்க்க சென்றுவிட்டான். ஆரோகன் சந்துருவின் பேச்சைக்கேட்டு வருணாவை எழுப்புவதற்கு சென்றபோது "டேய்!எங்கடாப் போற?", என ஆத்ரேயன் அவனை தடுத்து நிறுத்தினான்.

இவர்கள் பேச்சுக் குரலிலேயே ஏற்கனவே எழுந்திருந்த வருணா என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்பதற்காக பேசாமல் கண்ணை மூடி படுத்துக் கொண்டிருந்தாள். "இல்லைடா! அம்மாவை எழுப்பி ஏன் இவ்ளோ நேரம் தூங்குறீங்கன்னு கேடகப் போறேன் ", என ஆரோகன் கூறியதற்கு "தூங்குறாங்கன்னு தெரியுது. தூங்குறப்ப எழுப்பி இந்தக் கேள்வியை கேட்கணுமா? எந்திரிச்சு வந்ததுக்கப்புறம் கேட்கலாம். இன்னைக்கு சாட்டர்டே தானே!

கூட கொஞ்ச நேரம் தூங்கட்டும். வா! உனக்கு ஏதாவது வேணும்னா நான் செஞ்சு தர்றேன்", என ஆத்ரேயன் அவனை இழுத்துச் சென்றான். இரவில் சந்துரு கிளப்பிவிட்டதில் ஆத்ரேயன்தான் ஒரு நேரம் இவ்வாறு செய்திருப்பானோ என எண்ணிக் கொண்டிருந்த வருணாவிற்கு அவனுடைய பேச்சைக் கேட்டு என் பிள்ளைக்கு என் மேல இம்புட்டு பாசமா என்ற எண்ணம்தான் உதித்தது.

தான் பெற்ற மகன்களின் மேல் என்னதான் கோபம் இருந்தாலும் தன்னுடைய வழக்கமான குணத்தை மாற்றிக் கொள்ள விரும்பாத வருணா படுக்கையிலிருந்து எழுந்து தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு வெளியில் வந்த பொழுது ஆத்ரேயனும், ஆரோகனும் பால் அருந்திக் கொண்டிருந்தனர். வருணாவை கண்டவுடன் வேகமாக எழுந்து வந்த ஆரோகன் "அம்மா! ஆர் யூ ஓகே?", என பதட்டத்துடன் வினவினான்.

அவனது பதட்டத்தை கவனித்த வருணா "ஏன்டா! ஒரு நாள் நான் கொஞ்ச நேரம் கூட தூங்குனா உங்களால பொறுத்துக்க முடியாதா?", என அலுத்துக் கொண்டே டைனிங் டேபிளில் வந்துமர்ந்தவள் "டெய்லி உங்களுக்கு சமைச்சு கொட்டுறேன். இன்னைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வாங்க. எனக்குப் பசிக்குது", என சட்டமாகக் கூறினாள்.

வருணா இவ்வாறு பேசியதிலேயே அம்மாவிற்கு தங்கள் மேல் இருந்த கோபம் போய்விட்டது என உணர்ந்து கொண்ட இருவரும் அவளுக்கு இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தினால் ஏதாவது இனிப்பு செய்யலாம் என சமையல் அறைக்குள் சென்றனர். அவர்களிடம் சகஜமாக பேசினாலும் மனதினுள் ஏதோ ஒரு வருத்தம் வருணாவிற்கு இருக்கத்தான் செய்தது. அது சந்துரு முந்திய தினம் பேசிய பேச்சினாலா அல்லது தனது மகனின் செயலினாலா என அவளினால் பகுத்தறிய முடியவில்லை.

வருணாவின் யோசனையை கலைத்து விடும் வண்ணம் அவளது முன்னர் பிரட் அல்வா மற்றும் அவல் தோசை அவளது புத்திரர்களால் வைக்கப்பட்டது. அதனை பார்த்தவளுக்கு முகம் மலர்ந்தாலும்
"ஏன்டா ஒரு இனிப்பு செஞ்சிருக்கீங்க, ஒரு தோசை செஞ்சிருக்கீங்க, அப்படியே ரெண்டு வடையும் போட்டுக்கொண்டு வந்திருக்க கூடாதா?", என வாய் வார்த்தையாகக் கூறிவிட்டு உணவு உண்ணும் படலத்தை ஆரம்பித்தாள்.

வருணா சாப்பிட்டு முடிக்கும்வரை கையை பிசைந்து கொண்டு நின்றிருந்த ஆரோகன் அவள் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்தவுடன் அவளின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

தன் கையை பிடித்தவனை எதுவும் பேசாமல் பார்த்தவள் அவ்விடத்திலிருந்து நகர ஆரம்பித்தாள் அவளுடன் சேர்ந்து நகர்ந்துகொண்டே
"அம்மா! ப்ளீஸ் மா! இப்படி இருக்காதீங்க... நான் எந்த தப்பும் பண்ணலை. நீங்க இப்படி இருக்குறதை பார்த்தா எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. என்னை நம்புறீங்கதானே!", என ஆரோகன் அழுகுரலுடன் கேட்டான்.

அவனது குரலையும், வார்த்தைகளையும் கேட்டவள் ஒன்றும் கூறாமல் தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் ஆரோகன் அவளது கையை விடாமல் பிடித்துக் கொண்டதால் முழுமையாக வேலைகளில் ஈடுபட முடியாமல் "ரோ! கையை விடு... நிறைய வேலை இருக்கு. லன்ஞ்சுக்கு தாத்தா,பாட்டி ரெண்டு பேரும் வர்றேன்னு சொல்லியிருக்காங்க.

ஊர்ல இருந்து ஆச்சியும் நாளைக்கு கிளம்பி வர்றாங்க. நான் அவங்களுக்கு ரூம் ரெடி பண்ணனும். என்னை டிஸ்டர்ப் பண்ணாம போய் உன்னோடப் பாடத்தை எடுத்துப் படி", என மிகவும் நிதானமாகவேக் கூறினாள். ஆனால் அவனுக்கு அவ்வார்த்தைகள் மட்டும் போதவில்லை.

வாய் வார்த்தையாக வருணாவின் நம்பிக்கையை கேட்டிடவே ஆரோகன் முயன்று கொண்டிருந்தான். ஆனால் அதை புரிந்தாலும் அவ்வார்த்தையை வருணாவால் கூற இயலவில்லை. சந்துரு கூறியதுபோல் ஆத்ரேயன் தூண்டிவிட்டு ஆரோகன் தவறு செய்திருந்தாலும் அதனை அவன் அவளிடம் நேராக கூறியிருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

எப்பொழுதும் நியாய தர்மங்கள் அவரவரின் பார்வையில் மட்டுமே வெல்லும். மற்றவரின் பார்வையை நிதானித்து,யோசித்துப் பார்க்க எவரும் விரும்ப மாட்டார்கள். அத்தவறையே வருணாவும் செய்து தான் மிகவும் சாதாரணமான மனித இனத்தை சேர்ந்தவள் என்பதை நிரூபித்தாள்.

ஆனால் அவளின் மனதை கரைக்கும் வண்ணம் ஆரோகன் அவளையே சுற்றி வந்ததால் வேறு வழியின்றி அவனிடம் அமர்ந்து பேச முடிவு செய்தாள். அதுவும் சந்துரு வருவதற்கு முன்னரே பேசி முடிக்க வேண்டும் என தீர்மானித்தாள்.

ஏனெனில் சந்துரு வந்துவிட்டால் அவளது மனதில் இருப்பதை கூற இயலாமல் போய்விடும். எப்பொழுதும் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு நேரிடையாகப் பேசாமல் சுற்றுவது மேலும் மேலும் இடைவெளியை அதிகப்படுத்துமே தவிர அன்பினை பலப்படுத்தாது. இதுவே வருணாவின் எண்ணமாக இருந்ததால் அவளும் அதனை செயல்படுத்த துணிந்தாள்.

ஆரோகன் தன்னையே சுற்றி வருவதை கடைக் கண்ணால் நோக்கிக் கொண்டிருந்த ஆத்ரேயனை பார்த்தவள் அவனையும் அருகில் அழைத்து "ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. மூணு பேரும் சேர்ந்து செஞ்சா சீக்கிரமா முடிஞ்சிடும். முடிஞ்சதுக்கப்புறம் உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் பேசணும்", எனக் கூறியவள் கார்த்திக்கை அழைத்து "கார்த்தி! எனக்கு இன்னைக்கு சமைக்கிற மூட் இல்லை. நீ கொஞ்சம் சீக்கிரமாவே பிரியாணி எனக்கு கொடுத்தனுப்ப முடியுமா?', என அவனிடம் கேட்டாள். அவனும் சரி என்றவுடன் மகன்கள் இருவருடனும் சேர்ந்து முடிக்க வேண்டிய வேலைகளை கடகடவென்று செய்ய ஆரம்பித்து விட்டாள்.

வேலைகளை முடித்து விட்டு ஹாலில் வந்து மூவரும் அமர்ந்த பொழுது ஏறத்தாழ 11 மணி ஆகியிருந்தது. நேரத்தை பார்த்தவள் தன் மகன்களையும் பார்த்தாள். அவள் நேரத்தை பார்த்துவிட்டு தங்களைப் பார்த்தவுடன் ஆத்ரேயன்
" அம்மா! என்ன பேசனுமோ நேரடியாப் பேசுங்க. நீங்க எங்ககிட்ட பேசுறதுக்கு யோசிக்க வேண்டாம்.

இல்லை மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு சொல்லி பார்க்கவும் வேண்டாம். உங்களுக்கு தோணுறதை பேசுவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு மட்டுமே இருக்கு", எனக் கூறினான். அவனதுப் பேச்சில் சிரித்தவள் "ரே! என்னோட உரிமையை நான் எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆனா பேசப்போறது உங்களை பத்தி அப்படிங்கிற பட்சத்தில் நான் யோசிச்சுதான் ஆகணும்.

என்னை பத்திப் பேசுறதுக்கு மட்டும்தான் எனக்கு உரிமை இருக்கு. ஒரு வயசுக்கு மேல பிள்ளைங்களே ஆனாலும் அவங்களை பத்தி பேசுறதுக்கு யோசிக்கிற நிலைமைக்கு பெத்தவங்க வந்துடுவாங்க", எனக் கூறி நிறுத்தியவள் இருவரின் முகத்தையும் ஆராய்ந்தாள்.

ஆத்ரேயனின் முகம் மிகவும் சாதாரணமாக இருந்தாலும் ஆரோகனின் முகம் சிறுத்துப் போனது. அவனது முக வாட்டத்தைப் பார்த்து அவனின் தலைமுடியை கலைத்து விட்டவாறு "நான் உன்னை சொல்லலை ரோ! பொதுவாச் சொல்றேன்", எனக் கூறிவிட்டு தன்னுடைய பேச்சை தொடர்ந்தாள்.

"மத்த அம்மாக்கள் மாதிரி ரொம்ப கண்டிப்பா உங்ககிட்ட நான் நடந்துகிட்டேனா? அது கிடையாது. ஒரு நேரம் அப்படி நடந்துக்கிட்டு இருந்தா நீங்க என்கிட்ட ஃப்ரண்ட்லியா பழகாமல் இருக்கிறதுல நியாயம் இருக்கு. எனக்கு நேத்திக்கு நடந்த விஷயம் பிரச்சனை அப்படிங்கறதை விட என் பசங்க என்கிட்ட மறைச்சுட்டாங்களே அப்படிங்கறதுலதான் கஷ்டமாப் போச்சு.
தப்பு செஞ்சாலும் நேரடியா என்கிட்ட வந்து நீங்க சொல்ல யோசிக்கக்கூடாது", எனக் கூறியவள் ஆத்ரேயன் இதழோரம் புன்முறுவல் பூத்ததை பார்த்துவிட்டு நிறுத்தினாள்.

வருணா தன்னை பார்த்துவிட்டதை உணர்ந்தவன் "அம்மா! நீங்க இந்த மாதிரி பேசுறது உங்களுக்கு செட் ஆகலை. நாங்க எப்பவுமே உங்களை எங்களோட பெஸ்ட் ஃப்ரண்டாதான் நெனச்சி இருக்கோம்.அப்படி இருக்கறப்ப எல்லா விஷயத்தையும் உங்ககிட்டதான் ஷேர் பண்ணுவோம்", எனக் கூறினான்.

"அப்படி ஷேர் பண்ணிக்கிறவங்க எதுக்காக ஆரோகன் கவிதை டைப் பண்ணி கொண்டு போனதை என்கிட்ட சொல்லலை", என நிறுத்தி நிதானமாக வருணா தன்னுடைய வினாவினை வீசினாள். அதற்கு பதில் கூற ஆத்ரேயன் வாயை திறந்த பொழுது ஆரோகன் முந்திக்கொண்டு "நீ பேசாம இரு ரே! அம்மாவுக்கு இதுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னோட கடமை", எனக்கூறிவிட்டு வருணாவின் புறம் தன் பார்வையை செலுத்தியவன்

"நான் சொல்றது உங்களுக்கு தப்பாக் கூடத் தெரியலாம். ஆனால் இதுதான் நிதர்சனம். எனக்கு அந்த கவிதையை டைப் பண்ணி எடுத்துட்டு ஸ்கூலுக்கு கொண்டு போனது தப்பா தெரியலை. ஆனா உங்க கட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு சூர்யா சித்தப்பாகிட்டயும், கார்த்திக் சித்தப்பாகிட்டயும் நான் அதை வாங்கி இருக்கலாம். அதுதான் நான் பண்ணின தப்பு.

எனக்கு அந்த கவிதைகள் பிடிச்சிருந்துச்சு. பிடிச்சவங்க யாருக்காவது கொடுக்கணும்னு அப்படின்னு தோணுச்சுன்னா எடுத்து கொடுக்குறதுக்காகதான் 10 காப்பி, 15 காப்பி அப்படின்னு பிரிண்ட் எடுத்து தரச் சொன்னேன். நீங்க அந்த கவிதைகளை படிச்சுப் பார்த்தா அதுல எதுவும் தப்பா இருக்கிற மாதிரி தெரியாது.

அடுத்த தடவை பிரிண்ட் அவுட் எடுக்குறா்ப உங்களுக்கு ஒரு காப்பி கொடுத்துட்டு நான் எடுத்துட்டுப் போறேன்", என தெளிவாக அவன் பேசிய விதத்தில் வருணா என்ன உணர்வுகளை காட்டுவது என தெரியாமல் திகைத்து விழித்தாள்.

வருணாவின் முழியை பார்த்த ஆத்ரேயன் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்."அம்மா இஸ் பேக்", என அவன் கூறியவுடன்தான் ஆரோகனுக்குப் புரிந்தது. "என்னங்கடா என்னை வச்சுக் காமெடி பண்றீங்களா?", என வருணா அவர்கள் இருவரையும் துரத்த ஆரம்பித்த பின்னர்தான் ஆரோகனின் மனம் நிம்மதி பெற்றது.

இடையிலேயே தாங்கள் ஆர்டர் செய்திருந்த உணவை கார்த்திக் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றவுடன் வருணா "இப்பவே பிரியாணி சாப்பிடுவோமா? இல்லை தாத்தா,பாட்டி வரட்டுமா?",எனக் கேட்டாள். "அம்மா! வந்திருக்கிறது நான் வெஜ் பிரியாணி. நீங்களும்,நானும் சாப்பிடுவோம். ரோ தாத்தா,பாட்டி வந்ததுக்கப்புறம் பருப்பு சாதத்தை சாப்பிடட்டும்", என ஆத்ரேயன் அதற்கானத் தீர்வை கூறி சாப்பிட அமர்ந்துவிட்டான்.

"அதுவும் கரெக்டுதான். தாத்தா வந்ததுக்கப்புறம் பிரியாணி சாப்பிட்டா அதுக்கும் ஏதாவது சொல்லுவாரு", என அவனுடன் அமர்ந்து வருணா வேகமாக உண்ண ஆரம்பித்தாள்.வருணா உண்ண ஆரம்பித்துவிட்டதால் ஆரோகன் கிட்சனுக்குள் சென்று தனக்கும்,தாத்தா பாட்டிக்கும் தேவையான சாப்பாட்டினை சமைக்க ஆரம்பித்தான். அவர்கள் சாப்பிட்டு முடித்து, அவனின் சமையலும் முடிந்த நேரத்தில் ராஜேந்திரனும், ஜானகியும் வந்து சேர்ந்தனர்.

வீட்டினுள் நுழைந்தவுடன் ராஜேந்திரன் முதலில் தன்னுடைய மகளைதான் கவனித்தார். ஆனால் ஜானகி எப்போதும் போல் தன் பேரன்களுடன் ஐக்கியமாகியவா் வருணாவிடம் "என்ன வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் வாசனை வேற மாதிரி வருது", எனக் கேள்வியை ஒரு புன்முறுவலுடன் எழுப்பினார்.

"ஏன்மா! ஏன்?கண்டுபிடிச்சிட்டா பேசாம இருங்க. அப்பாகிட்டே எனக்கு சாத்து வாங்கி கொடுக்குறதுக்கு தூண்டி விடுறீங்க", எனக் கேட்டுவிட்டு அவர்களுக்கான உணவை எடுத்து வைக்க வருணா சமையலறைக்குள் சென்றாள். ஆத்ரேயனும்,ஆரோகனும் தங்கள் பாட்டியுடன் பேசிக்கொண்டிருக்க ராஜேந்திரன் மட்டும் வருணாவை பின் தொடர்ந்துச் சென்றவர் அவளது முகத்தையே உற்று உற்றுப் பார்த்தார்.

"என்னப்பா அப்படி பார்க்கிறீங்க?", எனக் கேட்டவளிடம் "என்னாச்சு வருணாமா? எதுவும் பிரச்சனையா? உன் முகமே சரியில்லை", என மிகவும் கனிவானக் குரலில் வினவினார். "அப்படி எல்லாம் எதுவும் இல்லையே", என வருணா எப்பொழுதும் போல் தன்னுடைய முகத்தை வைத்துக்கொண்டுக் கூறினாலும் அவர் நம்பவில்லை.

நம்பவில்லை என்பதை தலையசைத்துக் காட்டியவர் "இப்பவும் என்கிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னுதான் இருக்கியா?", என்ற ஒரு வார்த்தையை கூறிவிட்டு அவ்விடத்தில் நிற்காமல் நகர்ந்து விட்டார். நல்லாதானே இருக்கேன். இவர் ஏன் இப்படி பேசுறாரு என தனக்குள் புலம்பிக் கொண்டு வருணாவும் அவர்களை சாப்பிட வைத்த பின்னர் பேசிக் கொள்ளலாம் என அந்த வேலையை கவனித்தாள்.

சாப்பிடும் பொழுதும் ராஜேந்திரன் மகளின் முகத்தை திரும்பத்திரும்ப பார்ப்பதை பார்த்த ஆத்ரேயன் "என்ன தாத்தா இன்னைக்குதான் உங்க பொண்ணோட முகத்தையே பாா்க்குற மாதிரி திரும்ப திரும்பப் பார்த்துட்டு இருக்கீங்க. அதே வருணாதான், அதே முகம்தான், அதே மோசமான சமையல்தான்", என கலாய்த்துக் கொண்டிருந்தான். அவன் கூறியது என்னவோ விளையாட்டிற்குதான். ஆனால் அதற்கு ராஜேந்திரன் கூறிய பதில்

"எல்லா அப்பா,அம்மாவும் அவங்க பிள்ளைகளை எத்தனை வயசு கழிச்சுப் பார்த்தாலும் அவங்க பிறந்தன்னைக்கு இருந்த மாதிரிதான் தெரிவாங்க. பிறந்த குழந்தையை உத்து உத்து கவனிக்கிற மாதிரிதான் வயசான பிறகும் ஃபேரன்ட்ஸ் அவங்க பிள்ளைங்களை பார்த்துப்பாங்க", என்பதாக இருந்தது.

தாத்தாவின் பதிலைக் கேட்டவன் அருகில் அமர்ந்திருந்த பாட்டியிடம் "ஏன் பாட்டி ஒரு சின்னக் கேள்வி கேட்டதுக்கு இவர் எதுக்கு லெக்சர் அடிக்கிறாரு? தெரியாத்தனமா வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டேனா?", எனக் கேட்டு அதற்கு ஜானகி "ஆமாடா கண்ணா! வர வர கதாகாலட்சேபம் பண்ணிக்கிட்டு இருக்காரு. என்னால சுத்தமா முடியலை. தனியா கேக்குறதுக்கு போர் அடிச்சு போய்தான் இங்கக் கூட்டிட்டு வந்துட்டேன்", எனக் கூறி தன்னுடைய இடது கையால் பேரனிடம் ஹை-ஃபைவ் கொடுத்துக் கொண்டார்.

ராஜேந்திரன் சாப்பிட்டு முடித்தவுடன் நேரடியாக மறுபடியும் வருணாவிடம் வந்து நின்றார். "அப்பா! நான் நல்லா தான் இருக்கேன்.இப்படி
என்னையவே ஏனட பார்த்துகிட்டு இருக்கீங்க?", என அவள் கேட்டதற்கு "எதையும் மனசுல போட்டு யோசிச்சுக்கிட்டு இருக்கன்னு நினைக்கிறேன். என்ன விஷயம் சொல்லு .சந்துரு கூட எதுவும் சண்டை போட்டியா? இல்லை பசங்க ஏதாவது வம்பு செஞ்சாங்களா? இல்லை இன்னைக்கு பிரியாணி சாப்பிட்டதுல உனக்கு லெக் பீஸ் கிடைக்கலையா? என்ன பிரச்சனையா இருந்தாலும் சொல்லு.

ஆனா நீயா எதையும் மனசுல போட்டு யோசிச்சுகிட்டு இருக்க வேணாம். நான் கார்த்திக்கு போன் பண்ணி உனக்கு லெக் பீஸ் போட்ட பிரியாணி கொண்டு வர சொல்லட்டுமா?", எனக் கேட்டார்."அச்சோ! அப்பா நான் ஏற்கனவே கார்த்திக் கிட்ட சொல்லிதான் ஆர்டர் பண்ணி வாங்குனேன்.திரும்பலாம் போன் பண்ண வேண்டாம்.பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்லைப்பா", என்றவள் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு "அப்பா! எங்க கல்யாண சமயத்துல நீங்க எதுக்குப்பா நார்மலா இல்லாம கொஞ்சம் வித்தியாசமாக நடந்துகிட்டீங்க?

என்னோட சின்ன வயசுல இருந்து நீங்க அப்படி நடந்துகிட்டதுக் கிடையாது. நீங்க சொன்ன மாதிரிதான் எல்லாமே பண்ணுனேன். லா காலேஜ் கூட உங்களோட விருப்பத்துனாலதான் போனேன். அப்படி இருக்கறப்ப கல்யாணத்துக்கு மட்டும் நீங்க ஏன் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கலை", என வினா எழுப்பினாள்.

"நீதான் சொன்னியே! லா காலேஜ் போனதுக் கூட என்னோட விருப்பத்தால போன.ஆனா கல்யாணத்துக்கு வந்து நீ என் விருப்பத்தை கேட்கலை. சம்மதத்தைதான் கேட்ட", என பதில் கூறினார். "ரெண்டும் ஒன்னுதானேப்பா!", என்றவளை பார்த்து சிரித்துவிட்டு "விருப்பம்,சம்மதம் ரெண்டுக்குமே வித்தியாசம் இருக்கு.

நீ ஒரு பொருளை விருப்பப்பட்டு, அதை நீ வாங்க போறன்னு முடிவு பண்ணிட்டு இதை செய்யறப்ப பக்கத்துல வந்து நில்லுங்க அப்படின்னு ஒரு தகவலை சொல்றது எப்படி விருப்பமாகும்? அதுக்கு பதிலா எனக்கு இந்த பொருள் பிடிச்சிருக்கு. நான் என்ன செய்யட்டும்? உங்களுக்கும் பிடிச்சு இருக்கான்னு பாருங்கன்னு நீ வந்து சொன்னா அதுலதான் எனக்கு சந்தோஷம் கிடைக்கும்.

எனக்கு சந்துரு பத்தி எந்தக் குறையும் கிடையாது. ஆனால் சின்ன வயசுல இருந்து என்னுடைய இஷ்டப்படி வளர்ந்த என் பொண்ணு திடீரென அவளோட இஷ்டப்படி செய்ய ஆரம்பிச்சதனால கொஞ்சம் ஏத்துக்க முடியலை. இப்ப வயசு ஆனதுக்கப்புறம் அந்த மெச்சூரிட்டி வந்துடுச்சு. அந்த டைம்ல வந்தது வெறும் ஈகோ மட்டுமே! இதுக்குதான் நீ வருத்தமா இருக்கியா? என்ன மாப்பிள்ளை எதுவும் உன்கிட்ட சொன்னாரா?", என சரியாக ராஜேந்திரன் வினா எழுப்பினார்.

ராஜேந்திரன் பேசியதைக் கேட்ட வருணா " சில நேரம் நீங்களும், சந்துருவும் பேசுறது எனக்கு சுத்தமா புரியறதே இல்லை. ஆனால் அதை புரியலைன்னு சொன்னா மறுபடியும் பக்கம் பக்கமா லெக்சர் கொடுப்பீங்கன்னு பயந்துட்டு புரிஞ்ச மாதிரி தலையாட்ட வேண்டியதா இருக்கு. அதே மாதிரிதான் இப்பவும் நீங்க பேசுறது எனக்கு புரிஞ்சுருச்சுன்னு தலையாட்டி வைக்க போறேன்", என மிகவும் தெளிவாக தான் செய்யும் தவறையும் அவரிடம் எடுத்துரைத்தாள்.

அதற்கு பதிலாக சிரித்தவர் "அதெல்லாம் சரி! அது எங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும்", எனக் கூறிவிட்டு "இப்ப எதுக்கு நீ டல்லா இருக்க? அதை மட்டும் சொல்லு", எனக் கேட்டார். அப்படியெல்லாம் எதுவுமில்லை என உரைத்தவள் முந்தைய இரவில் சந்துரு பேசியவற்றையெல்லாம் ஆரோகனின் விஷயத்தை தவிர்த்து தன் தந்தையிடம் கூறினாள்.

என்னதான் தன் மகன் தவறே செய்திருந்தாலும் அவர் தன் தந்தையாக இருந்த பொழுதும் அவளால் குறை கூற இயலவில்லை. அதைப்பற்றி யாரிடமும் கூறவும் அவள் சிறிதும் விரும்பவில்லை.வருணாக் கூறியதைக் கேட்ட ராஜேந்திரன் "மாப்பிள்ளை சொன்னதுல உனக்கு என்ன தோணுச்சு?", என்று வினவினார். அதுவா அதுவா என இழுத்தவள் சற்று தயங்கிவிட்டு "இவர் வக்கீலானதுக்கு பதிலா வாத்தியார் வேலைக்குப் போயிருந்தா அந்த பிள்ளைங்க ரொம்ப பாவம் அப்படின்னுதான் தோணுச்சு", எனத் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.

அதுவரை அவர்கள் பேசுவதை கேட்டிடாத தொலைவில் அமர்ந்திருந்த ஜானகியும், வருணாவின் பையன்களும் இவ்வார்த்தையை கேட்டுவிட்டு அடப்பாவி எனக் கோரசாக உரைத்தனர். அவர்களின் அடப்பாவியை கேட்ட ராஜேந்திரன் "அடப்பாவியா! இது ஒரு அப்பாவி", என தன் மகளை தன் பங்கிற்கு கலாய்த்துவிட்டார்.

இவர்கள் அனைவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வெளியிலிருந்து வந்த சந்துருவின் முகத்தில் அளப்பறியாக் கோபம் தாண்டவமாடியது. கோபத்துடன் வந்த சந்துரு வருணாவிடம் கேட்டக் கேள்வியில் அவ்வீட்டில் நிலவிய சிரிப்பு அவ்வாறே நிறைந்திருந்திடுமா?இல்லை தொலைந்திடுமா?