சினிமா செய்திகள்

#26
அக்‌ஷராவின் அந்தரங்கப் படங்கள் வெளியாகக் காரணம் முன்னாள் காதலரா?

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாக, அவரது முன்னாள் காதலர் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகின. அப்படங்கள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகப் பரவின. இதுதொடர்பான செய்திகளும் இணையத்தில் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் அக்‌ஷரா ஹாசன் புகார் அளித்துள்ளார். அதில், தனது அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அக்‌ஷராவின் முன்னாள் காதலருக்குத் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்‌ஷரா ஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்மானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
“என்னிடம் அக்‌ஷராவின் அந்தரங்கப் புகைப்படங்கள் இருந்தது உண்மைதான். எங்களுக்குள் 4 வருடப் பழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு அந்தப் படங்களை அக்‌ஷரா எனக்கு அனுப்பினார். அதனை நான் என் கைபேசியில் இருந்து அழித்துவிட்டேன். அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியானதற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை" என்று தனுஜ் போலீஸ் தரப்பில் கூறியுள்ளார்.
தனுஜ் விர்மானி, நடிகை ரதி அக்னி கோத்தாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தனுஜின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''அக்‌ஷராவைப் பிரிந்து ஓராண்டு கடந்த நிலையிலும் இருவரும் நட்பில் இருக்கிறார்கள். தனுஜ் அப்படிச் செய்திருந்தால் எப்படி இருவரும் நட்பில் இருக்க முடியும்? தற்போது அக்‌ஷராவின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தனுஜால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு எல்லா விதத்திலும் துணை நிற்கவே தனுஜ் விரும்புகிறார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
#27
பத்திரிகையாளராக நடிக்க 10 கிலோ எடை குறைத்த நமிதா

திருமணத்துக்குப் பிறகு முதன்முதலில் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்கிறார் நமிதா.
நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை.
அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் நமிதா. சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்கும் ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். பெண் போராளிக்கும், சாதியை வைத்து அரசியல் பண்ணும் மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் இந்தப் படத்தின் கதை.
வராகி, மனோபாலா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘கோலிசோடா’, ‘சண்டி வீரன்’ படங்களுக்கு இசையமைத்த அருணகிரி, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
நாளை (நவம்பர் 20) இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பத்திரிகையாளராக நடிக்கும் நமிதா, இந்தப் படத்துக்காக 10 கிலோவுக்கு மேல் எடை குறைந்துள்ளார்.
11 வருடங்களுக்குப் பிறகு டி.ராஜேந்தர் இயக்க இருக்கும் படத்தில் வில்லியாக நடிக்கிறார் நமிதா என்று ஏற்கெனவே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
#28
விஷாலின் ‘அயோக்யா’: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

விஷால் நடித்துவரும் ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்துவரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன், இந்தப் படத்தை இயக்குகிறார். விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைக்கிறார். தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது என்று கூறப்படுகிறது.
‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங், கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஷால். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (நவம்பர் 19) வெளியிடப்பட்டது. அதில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போல் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் படம், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லகரி மியூஸிக் நிறுவனம் இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் இசை உரிமையையும் இந்த நிறுவனம் தான் வாங்கியுள்ளது.
 
#29
ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’: டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸ்

ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’ படம், டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரண், மிஷ்கின், அமீர் ஆகிய இயக்குநர்களிடம் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ் இசையமைப்பில், ரூபன் எடிட்டிங்கில் படம் உருவாகியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ், இந்தப் படத்தின் மூலம் சினிமாத் துறையில் கால் பதித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதன் தமிழ்நாடு திரையரங்க உரிமையை, க்ளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி பெற்றுள்ளார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.
‘அடங்க மறு’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர் 21) படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
#30
நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’: ஜனவரி ரிலீஸ்

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் ஜனவரி மாதம் ரிலீஸாக இருக்கிறது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, லண்டனில் தொடங்கியது. மொத்தப் படப்பிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டனர்.
இந்தப் படம், பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ளது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும்போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவனிடம் இருந்து அந்த எழுத்தாளர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை.
இந்தியிலும் ‘கொலையுதிர் காலம்’ உருவாகியுள்ளது. நயன்தாரா வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். தமன்னாவோடு இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபுதேவா மற்றும் பூமிகா இருவரும் நடித்துள்ளனர். இந்தியிலும் சக்ரி டோலட்டியே இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். ஆனால், என்ன தேதி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
 
#31
சுஜாவருணியின் திருமண ஆடைகள் இவ்வளவு ஸ்பெஷலானதா?
சுஜாவின், ப்ரீ வெடிங் போட்டோ ஷூட், நிச்சயதார்த்தம், திருமணம், ரிசப்சன் ஆகிய நிகழ்வுகளுக்கு, அவருக்குத் தேர்வு செய்த புடவைகள் அனைத்துமே பாரம்பர்ய முறையில் நெய்யப்பட்டவை


`பிக்பாஸ்' புகழ் சுஜா வருணியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. சிவாஜிகணேசன் குடும்பத்தைச் சேர்ந்த, நடிகர் சிவக்குமாருடன் தன்னுடைய மணவாழ்வைத் தொடங்கியிருக்கிறார் சுஜா. மணப்பெண் சுஜா வருணியின் ஆடை, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அதன் சிறப்பம்சம் பற்றி, அந்த ஆடையை டிஸைன் செய்த ப்ரியா ரீகனிடம் பேசினேன். ``சுஜாவின், ப்ரீ வெடிங் போட்டோ ஷூட், நிச்சயதார்த்தம், திருமணம், ரிசப்சன் ஆகிய நிகழ்வுகளுக்கு, அவருக்குத் தேர்வு செய்த புடவைகள் அனைத்துமே பாரம்பர்ய முறையில் நெய்யப்பட்டவை. அதற்கு ஏற்ப டிரெடிஷனலான முறையில் ப்ளவுஸ்களையும் வடிவத்தோம்.
ப்ரீ வெடிங் ஷூட்டுக்காக, சுஜா தேர்வு செய்திருந்த சிவப்புநிற புடவைக்குச் சற்று கான்ட்ராஸ்டாக, ரோஸ் நிறத்தில் கேப் டிசைன் ப்ளவுஸைத் தயாரித்தோம். இந்த மிக்ஸ் மேட்ச் டிரெடிஷனல் புடவையிலும் டிரெடிண்டியான தோற்றத்தைத் தந்தது.நிச்சயதார்த்தத்துக்கு, பச்சைநிற புடவைக்கு பிங்க் நிறத்தில் ப்ளவுஸ் வடிவமைத்தோம். மணமகன் சிவக்குமாரின் அம்மா பெயர் மீனாட்சி மேலும் அவருக்கு மதுரை மீனாட்சி அம்மன் மீது அதிக ஈடுபாடு என சுஜா சொல்ல, மணமகன் சிவக்குமாரை ஈர்க்கும் விதமாக ப்ளவுஸில் மீனாட்சி அம்மன் உருவம் வரைந்து ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்தோம்.
 
#32
முகூர்த்தப் புடவைக்கு மேட்ச் செய்யப்பட்ட ப்ளவுஸ் ஒரிஜினலான குந்தன் ஸ்டோன்களால் அலங்கரிக்கப்பட்டதுதான் இன்னும் சிறப்பு.

ரிஷப்சனுக்காக சுஜா தேர்வு செய்த கோல்டன்நிற புடவைக்கான ப்ளவுஸ் சம்திங் ஸ்பெஷல். கோல்டன் நிற மெட்டீரியலில், சில்வர் நிற ஜர்தோஸி வேலைப்பாடுகளால் மணமக்களின் முதல் எழுத்தான ` S' என்பதை வடிவமைத்திருந்தோம். இவ்வளவு சிரத்தையோடு இருந்ததுதான், சுஜா திருமண ஆடைகள் எல்லோரையும் கவர்ந்தது" என்றார் ப்ரியா ரீகன்.
 
#33
இது பயோபிக் காலம்!- படமாகிறது நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை


பாலிவுட்டில் 'சஞ்சு', தெலுங்கிலும் தமிழிலும் சாவித்திரியின் 'மஹாநடி' போன்ற பயோபிக் படங்கள் அபார வெற்றி பெற்ற சூழலில் தற்போது தமிழ்த் திரையுலகின் காமெடி குணச்சித்திர ஜாம்பவான்களில் ஒருவரான சந்திரபாபுவின் கதை திரைப்படமாகவுள்ளது.
'ஜேபி: தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு' (JP: The Legend of Chandrababu) என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'சீவலப்பேரி பாண்டி, 'அமரன்', 'கோவில்பட்டி வீரலட்சுமி' போன்ற படங்களை இயக்கிய கே.ராஜேஸ்வர் இயக்குகிறார்.
இது குறித்து ராஜேஸ்வர் 'தி இந்து'விடம் பேசும்போது, சந்திரபாபு பாத்திரத்தில் நடிப்பது யார் என்று தேர்வு செய்யப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்தப் படத்தில் சந்திரபாபு நடித்த பல்வேறு படத்திலிருந்தும் பாடல்கள் தொகுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் படத்தை இந்தோ -ரஷ்ய நிறுவனமான ருரோ தயாரிக்கிறது. ரஷ்ய மொழியிலும் படம் டப் செய்யப்படவுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான ப.தங்கப்பன் கூறும்போது,"ரஷ்யாவில் எப்போதுமே இந்தியப் படங்களுக்கு மவுசு அதிகம். ஆனால், சோவியத் யூனியன் சிதைந்த பின்னர் அங்கு நிறைய இந்தியப் படங்கள் திரையிடப்படுவதில்லை" என்றார்.

ஜோசப் பனிமய மாதா பிச்சை
சந்திரபாபுவின் இயற்பெயர் ஜோசப் பனிமய மாதா பிச்சை. தூத்துக்குடி பனிமய மாதா திருக்கோயில் நினைவாக அவருக்கு அவரது பெற்றோர் அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர். சுதந்திர போராட்டத்தின் போது சந்திரபாபுவின் தந்தை ரோட்ரிக்ஸ் 7 முறை கைது செய்யப்பட்டார்.
ஹீரோவைவிட ஒருபடி மேல்
தூத்துக்குடியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ரோட்ரிக்ஸின் மகன் சந்திரபாபு. திரையுலகில், ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்பதாலேயே அவர் மிகவும் பிரபலம். 'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனைவிட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வாங்கினார். சென்னை சாந்தோமில் 20 கிரவுண்டில் பிரம்மாண்டமாக வீடு கட்டினார். கார், வீட்டின் இரண்டாவது தளம் வரைக்கும் செல்லும் வகையில் கட்டுமானம் இருந்தது.
'பாவ மன்னிப்பு' கதை சந்திரபாபு எழுதியது. அந்தப் படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 3000 அடி ஷூட் முடிந்த நிலையில் படம் கைமாறியது.
அவரது திறமைகள் ஏராளம். ஆனால் வாழ்க்கை அவருக்கு தாராளம் காட்டவில்லை. கடைசி காலத்தில் வாடகை வீட்டில், மின்சாரக் கட்டணம் செலுத்த கூட பணமில்லாமல் உணவுக்கு வழியில்லாம் இருந்தார். எல்லா பிரச்சினையும் எம்.ஜி.ஆரை வைத்து 'மாடி வீட்டு ஏழை' படத்தை எடுக்க முயன்றபோது ஆரம்பித்தது. எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு சரிவர வராததால் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. ஒருநாள் எம்ஜிஆர் வீட்டுக்குச் சென்ற சந்திரபாபு எம்.ஜி.சக்கரபாணியுடன் தகராறில் ஈடுபட்டார். நாற்காலியால் சக்கரபாணியைத் தாக்கவும் முயன்றார்.


சிக்கல் விளைந்தது
இதனால், அந்தப் படத்துக்கு மூடுவிழா நடந்தது. படத்துக்காக சந்திரபாபு வாங்கியிருந்த கடன்கள் அவருக்குச் சிக்கலை விளைவித்தன. கனவு இல்லத்தை அடமானம் வைத்தார். ஆனால், அதன்பின்னர் எம்ஜிஆர் சந்திரபாபு மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கொள்ளவில்லை என்பதற்கு சாட்சியாக 'பறக்கும் பாவை', 'அடிமைப்பெண்'ணில் சந்திரபாபு நகைச்சுவை நாயகனாக நடித்தார்.
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஒரு காட்சியில் எம்ஜிஆரும் - சந்திரபாபுவும் மனம் திறந்து பேசுவதுபோல் ஒரு காட்சியை யோசித்துள்ளதாக இயக்குநர் ராஜேஸ்வர் கூறியுள்ளார்.
அந்தக் காட்சிக்குப் பின் 'குமாரராஜா' படத்தில் வரும் ஒண்ணுமே புரியல உலகத்துல பாடலைப் பொருத்தவும் இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.
 
#34
அமலாபாலுடன் திருமணமா? - விஷ்ணு விஷால் காட்டம்


அமலாபாலுடன் திருமணம் என்று வெளியான செய்திக்கு விஷ்ணு விஷால் காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 27) சமூக வலைதளத்தில் விஷ்ணு விஷால் விரைவில் அமலாபாலை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து 'ராட்சசன்' படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
விஷ்ணு விஷால் - அமலாபால் திருமணம் என்று பரவிய செய்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எதுவும் எழுதாதீர்கள்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
இவரது நடிப்பில் அடுத்ததாக டிசம்பர் 21-ம் தேதி ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது
 
#35
கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்

மறைந்த இயக்குநர் கே.பாலசந் தரின் மனைவி ராஜம் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.
பாலசந்தரின் திரையுலகப் பயணத்துக்கு உறுதுணையாக 58 ஆண்டுகள் உடன் இருந்தவர் ராஜம். இவர் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவிலில் பிறந்தவர். கடந்த 4 ஆண்டுகளாக மகள் புஷ்பா கந்தசாமி, மருமகள் கீதா கைலாசம் ஆகியோருடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று காலமானார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், விவேக், டெல்லி கணேஷ், யூகி சேது, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் சரண், சமுத்திரகனி, அமீர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளை இளைய மகன் பிரசன்னா செய்ய உடல் தகனம் செய்யப்பட்டது.
 
#36
நான் ‘ராட்சசன்’ அல்ல! - சரவணன் பேட்டி


அறிமுகக் கதாநாயகர்களைவிட வில்லன்கள் பெயரெடுப்பது எப்போதாவதுதான் நிகழும். அண்மையில் வெளியான ‘‘ராட்சசன்’ படத்தின் மூலம் அப்படி ஒரு வில்லன் பேசப்பட்டிருக்கிறார். சைக்கோ கொலையாளியாக அந்தப் படத்தில் மிரட்டிய சரவணன்தான் அந்த வில்லன். ‘நான்’ படப்புகழ் சரவணன். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
உங்கள் பின்னணி என்ன?
அரியலூர்தான் எனக்குச் சொந்த ஊர். வேலை நிமித்தமாக அப்பா திருச்சிக்கு மாறியதால், அங்கே என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மெடிக்கல் ஷாப்பில் 7 ஆண்டுகள் வேலை பார்த்தேன். வாழ்க்கையில் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு துரத்தியபோது சினிமாவுக்குச் செல்லும் எண்ணம் வந்தது. எனது தந்தை ஒரு நாடகக் கலைஞர். அந்த வகையில் நாடகம், சினிமா மீது எனக்கும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தோடு 2004-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.
முதல் சினிமா வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
சென்னையில் நான் வாய்ப்பு தேடிய காலத்தில் ‘பருத்தி வீரன்’, ‘களவாணி’ போன்ற கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களே வந்தன. என் தோற்றத்துக்கேற்ற கதைகளைத் தேடினேன். நிறைய படங்களில் ஒரு சில சீன்களில் வருவதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பார்த்தால், 2009-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’தான் என் முதல் படம். ‘நான்’, ‘மவுனகுரு’ போன்ற படங்கள் ஓரளவு முகம் தெரிய வைத்தன. அப்படித்தான் ‘நான்’ சரவணன் ஆனேன்.
இப்போது ‘நான்’ போய் உங்கள் பெயருக்கு முன்னால், ‘ராட்சசன்’ வந்துவிட்டது இல்லையா?
ஆமாம்! ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் என்னுடைய நண்பர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த் போன்றவர்கள் நடித்தார்கள். அந்தப் படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை. இருந்தாலும் இயக்குநர் ராம்குமாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். ‘ராட்சசன்’ படத்தை அவர் இயக்கும் முயற்சியில் இருந்தபோது அவரைப் போய்ப் பார்த்தேன். முதலில் போலீஸ் கதாபாத்திரத்துக்குத்தான் கூப்பிட்டார்கள். பிறகு பார்ப்பதற்கு நான் ஆங்கிலோ இந்தியன்போல இருந்ததால் என்னை வில்லன் கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்தார்.

அந்த சைக்கோ பாத்திரத்துக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்ததோ?
படத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடையைக் குறைக்கச் சொன்னார்கள். இந்தப் படத்துக்காக 62 கிலோ எடையிலிருந்து 43 கிலோவுக்கு எடையைக் குறைத்தேன். படத்தில் மேஜிக் காட்சிகளும் பிரதானம் என்பதால், அந்தக் கலையை ஒரு மாதத்துக்கு மேல் கற்றுக்கொண்டேன். தயா என்ற மேஜிக் கலைஞர்தான் எனக்கு அந்தக் கலையைக் கற்றுக்கொடுத்தார். சைக்கோ கதாபாத்திரத்துக்கும், அம்மா கதாபாத்திரத்துக்கும் தினமும் நான்கரை மணி நேரம் மேக்கப் போடுவார்கள். அதற்காக சூட்டிங் இருக்கும் நாளில் அதிகாலையிலேயே வந்துவிடுவேன். இயக்குநர் சொன்ன எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டேன்.
நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் உங்கள் உண்மையான முகம் ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டதா?
உண்மையில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. படத்தில் வசனம் இல்லை என்றும் நான் வருந்தவில்லை. ‘ராட்சசன்’ படத்தில் சைக்கோ கதாபாத்திரம்தான் மிக முக்கியமானது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். தவிர, இந்தப் படத்தில் சரவணன் முகம் தேவைப்படவில்லை. ஆங்கிலோ இந்தியத் தாய் – மகன் உருவம்தாம் தேவைப்பட்டது. படத்தைப் பார்த்து யார் இந்த வில்லன் என்று ரசிகர்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். நான் நினைத்ததுபோலவே நடந்தது. அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சிதான்.
இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது?
என்னுடைய 14 ஆண்டுகள் கஷ்டம் இந்த ஒரு படம் மூலம் தீர்ந்தது. மிகவும் நேசித்த ஒரு துறையில் ஓரிடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி, அஜித் ஆகியோர் வாழ்த்தியதை மறக்க முடியாது. யார் அந்த வில்லன், அவரோட உடல்மொழி ரொம்ப ஸ்டைலா இருக்கே என்று ரஜினி சொன்னதைப் பெருமையாக நினைக்கிறேன்.
சரவணன் நிஜத்தில் எப்படி?
நிஜத்தில் சரவணன் மிகவும் சாது. இயக்குநர் என்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட, அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். மிகவும் இளகிய மனம் படைத்த ஆள் நான். நடிப்பு என்று தெரிந்தே படம் பார்க்கும்போதும் சென்டிமெண்ட் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன்.
‘ராட்சசன்’ வரவேற்புக்குப் பின்னர் புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளனவா?
இரண்டு பட வாய்ப்புகள் வந்துள்ளன. இனி வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ராம்குமார் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததுபோல எந்த இயக்குநர் வாய்ப்பு கொடுத்தாலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
 
#37
என்றும் மின்னும் ‘தங்கப் பதக்கம்’

காவல் துறை அதிகாரியின் கடமை உணர்வை மையப்படுத்தி மகேந்திரன் கதை ஒன்றை எழுதினார். மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அந்தக் கதையை நாடகமாக அரங்கேற்றினார் செந்தாமரை.
‘இரண்டில் ஒன்று’ என்ற தலைப்பில் அரங்கேறிய நாடகம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. சபாக்களில் இந்த நாடகத்துக்கு ‘முதல் மரியாதை’ கிடைத்தது. ஒரு முறை சென்னை அண்ணாமலை அரங்கில் நாடகத்தைப் பார்த்த சிவாஜி, நாடகக் கதையில் தன்னைத் தொலைத்தார். தனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருப்பதை உணர்ந்த சிவாஜி, தனது நாடக மன்றத்தின் மூலம் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தை அரங்கேற்ற விரும்பினார்.
தனது விருப்பத்தை செந்தாமரையிடம் தெரிவித்த சிவாஜி, கதையின் உரிமத்தை சிவாஜி நாடக மன்றதுக்கு வாங்கிக்கொண்டார். கதையில் சில மாற்றங்களைச் செய்து, தனக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை உருவாக்கி ‘தங்கப் பதக்கம்’ என்ற பெயரில் சிவாஜி அரங்கேற்றினார். காவல் துறை அதிகாரியாகத் தோன்றிய சிவாஜி கதாபாத்திரத்துக்குக் காவல் துறை அதிகாரி அருளனின் நடை, உடை, பாவணைகளைத் தனது ஒப்பனையில் காட்டினார்.
சிவாஜியின் கம்பீரமான நடிப்பில் நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றிட, சென்னையில் பிரபலமாக இருந்த அத்தனை சபாக்களும் தங்கள் அரங்கில் ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தை அரங்கேற்ற போட்டா போட்டி போட்டன. பிரபல அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், திரையுலகக் கலைஞர்கள் ஆகியோர் சிவாஜி காட்டிய கம்பீரத்தில் மிரண்டுபோனார்கள்.
சிவாஜியின் நடிப்பில் மைல்கல்லாய் ஆவணம் கண்ட ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தைப் படமாகத் தயாரிக்க சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் முடிவு செய்தது. ‘வியட்நாம் வீடு’, ‘புதிய பறவை’க்குப் பின் சிவாஜி கலைக்கூடம் ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தைப் படமாக்க கையில் எடுத்தது. படத்தை பி. மாதவன் இயக்கினார். 01-06-1974 அன்று படம் வெளியானது. படம் பெரும் வெற்றி பெற்றது. ‘தங்கப் பதக்க’த்தின் வெற்றி விழாக்கள் பல்வேறு ஊர்களில் நடைபெற்றன.
‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘கட்டபொம்மன்’, ‘வியட்நாம் வீடு’ போன்ற நாடகங்கள் சிவாஜியின் நடிப்பில் திரைப்படங்களாக வெளிவந்தபோது திரைப்பட வரலாற்றில் சாதனைகளாகத் தடம் பதித்தன. அந்த வரிசையில் ‘தங்கப் பதக்க’மும் இடம் பிடித்தது.
காவல் துறைக்கு அங்கீகாரம் கொடுத்த படமாக ‘தங்கப் பதக்கம்’ திகழ்ந்ததால், துறை சார்பில் நடைபெற்ற காவல் துறை விழாக்களில் ‘தங்கப் பதக்கம்’ அதிக அளவில் திரையிடப்பட்டது.
 
#38
திரை விமர்சனம்: திமிரு புடிச்சவன்

போலீஸ் ஏட்டாக பணி யாற்றுபவர் விஜய் ஆண்டனி. தன் தம் பியை போலீஸ் அதிகாரி யாக்க வேண்டும் என்று வெறித் தனமாக பயிற்சி அளிக்கிறார். இது பிடிக்காமல் வீட்டைவிட்டு ஓடும் அவன், சென்னைக்கு சென்று குற்றவாளியாக உரு வெடுக்கிறான். பதவி உயர்வில் எஸ்.ஐ.யாகி, சென்னை வரும் விஜய் ஆண்டனி, தம்பியை என்கவுன்ட்டரில் கொன்றுவிட்டு இன்ஸ்பெக்டர் ஆகிறார். போலீ ஸார் செய்யும் தவறுகளை நிறுத்தி, அவர்களையும் திருத்தி, காவல்துறை மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்துகிறார்.இதற்கிடையில், தன் தம்பிபோல பல சிறுவர்களை மூளைச் சலவை செய்து, குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவது பெரிய ரவுடியான சாய் தீனா என்று தெரிகிறது. சிறார் குற்றவாளிகளை திருத்த முடிவெடுக்கிறார். அதில் சாதிக் கிறாரா என்பது மீதிக் கதை.
வழக்கமான போலீஸ் - ரவுடி கதையில் சிறார் குற்றவாளிகள், அவர்கள் குற்றச் செயல்களுக்கு ஈர்க்கப்படுவதற்கான காரணங் கள் ஆகியவற்றை சேர்த்து வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் கணேஷா. தெருவுக்கு நாலு சிறுவர்கள் தடம்மாறி திரியும் இந்த காலத்தில், இது அவசிய மான களம்தான். அவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று குரல் எழுப்பா மல், புதுவிதமாக சிந்தித்திருப் பதும் பாராட்டுக்குரியது.
இவ்வாறு, கதை அளவில் பாராட்டத்தக்க அம்சங்கள் பல இருந்தாலும் திரைக்கதை, பட மாக் கம் சொதப்பல். நாயகனின் நோயைப் பற்றி தெரிந்துகொண்ட தாலேயே காவல்துறை அதிகாரி கள் எல்லோரும் திருந்தி விடுகிறார்கள். இதுபோல, அழுத்த மான காரணங்கள், வலுவான திருப்பங்கள் இல்லாமல் பல காட்சிகள் நகர்கின்றன.
சிறார்களில் ஒருவனது அப்பா முருக பக்தர், இன்னொருவனின் அப்பா முஸ்லிம், கதாநாயகியின் அப்பா கிறிஸ்தவர். இது மதநல் லிணக்கத்தை காட்ட வேண்டும் என்பதற்கான திணிப்பு என அப்பட்டமாக தெரிகிறது.
சாக்கடை அடைப்பை போலீஸே இறங்கி நீக்குவது, நீண்ட வசனம் பேசி மக்களை திருத்துவது, கண்ணியமாக நடந்துகொண்டு, மக்களின் நம் பிக்கையைப் பெறுவது போன்ற காட்சிகள், படத்தில் காமெடி இல் லாத குறையைத் தீர்க்கின்றன.
பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் இருக்கும் தலைமைக் காவலரை தேசியக்கொடி ஏற்ற வைத்து கவுரவப்படுத்துவது, முருகனுக்கு மாலை போட்டிருக் கும் விஜய் ஆண்டனி யாரை யும் அடிக்க முடியாத நிலையில், ஆசிட் தாக்குதலில் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது என்று ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. திருநங்கை கதாபாத்திரத்தை காவல்துறை அதிகாரியாக கண்ணியமாக சித் தரித்து, படம் முழுவதும் அவருக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதும் சிறப்பு.
இதுவரை கதையின் நாயக னாக நடித்துவந்த விஜய் ஆண் டனி, இந்த படம் மூலம் தன்னை ஒரு மாஸ் நாயகனாக முன் னிறுத்த முயற்சித்திருக்கிறார். நடிக்கத் தேவையில்லாத காட்சி கள், சண்டைக் காட்சிகளில் ஓரளவு தேறியும் விடுகிறார். சென்டி மென்ட், உணர்ச்சிவசப்பட்டு வச னம் பேசும் இடங்களில்தான் பார்வையாளர்களை சோதிக்கிறார்.
சென்னை தமிழ் பேசும் காவல் அதிகாரியாக கதாநாயகி நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனியை காதலித்துக்கொண்டே, சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவ ருக்கு பல்பு கொடுத்தும், சில இடங்களில் பல்பு வாங்கியும் ரசிக்க வைக்கிறார்.
விஜய் ஆண்டனியின் தம்பி உள்ளிட்ட இளம் சிறார்களின் மிகை நடிப்பு மகா எரிச்சல்.
விஜய் ஆண்டனி இசையில் ‘நக நக நக’ பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. முருகக் கடவுளுக்கு இணையாக சித் தரிக்கப்படுவதால் பார்க்கத்தான் முடியவில்லை.
மொத்தத்தில் ஓரளவு நல்ல கதை, ரசிக்கத்தக்க சில ஐடியாக் களை மட்டுமே நம்பி எடுக்கப் பட்ட படம். ‘பிச்சைக்காரனை’ நம்பிப் போனவர்களை இவன் ஏமாற்றிவிட்டான்.
 
#39

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும் வரவேற்புக்கு இடையே, ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் இன்று ரிலீஸாகின்றன.
அஜித் நடிப்பில் உருவான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஏற்கெனவே தீபாவளிக்கு ரிலீஸாகும் ஏற்பாட்டுடன் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்தன. திரைத்துறை பிரச்சினைகள், வேலைநிறுத்தம் போன்ற காரணங்களால் அதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில், திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ திரைப்படப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தன. கடந்த நவம்பரில் ரஜினியின் ‘2.0’ ரிலீஸானதால் அடுத்து ‘பேட்ட’ படத்தை பொங்கல் வெளியீடாக திட்டமிட்டு அந்த படக்குழுவும் களத்தில் இறங்கியது. ரசிகர்கள் போட்டிஅஜித் படம் ரிலீஸாகும் அதே நாளில் ரஜினி படமும் ரிலீஸ் என செய்தி வந்ததால், கடந்த சில வாரங்களாக இரு தரப்பு ரசிகர்கள் இடையேகடும் போட்டியும், சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.
வழக்கமாக அஜித் - விஜய் ரசிகர்கள் இடையேதான் போட்டிகள் உருவாகும். அது தற்போது ரஜினி - அஜித் ரசிகர்கள் இடையிலான போட்டியாக மாறியது. அதற்கேற்ப, ‘பேட்ட’ டிரெய்லரும், ‘விஸ்வாசம்’ டிரெய்லரும் ரசிகர்களின் போட்டி மற்றும் உற்சாகத்தை உச்சத்துக்கு கொண்டுசென்றன.
பொங்கல் விடுமுறைஇந்நிலையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 1,090 திரையரங்குகளில், ‘பேட்ட’ திரைப்படம் 450 முதல்500 அரங்குகளிலும், ‘விஸ்வாசம்’ திரைப்படம் 450-க்கு மேற்பட்ட அரங்குகளிலும் இன்று வெளியாகின்றன. ஒருசில அரங்குகளில் மட்டும் ஹாலிவுட், தெலுங்கு படங்கள் வெளியாகின்றன.
‘‘ரஜினி, அஜித் இருவரது படங்களும் சமமான அரங்குகளில் வெளியாவதால் படம் ரிலீஸாகி, விமர்சன ரீதியாக வரும் வரவேற்பை வைத்தே படத்தின் முன், பின் வெற்றி குறித்து கூற முடியும்’’ என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பினர்.
பொங்கலை முன்னிட்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாலும், படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ரஜினி, அஜித் ரசிகர்களும் போஸ்டர், பேனர் என உற்சாகமாகி உள்ளனர்
 
#40

ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆஸ்கார் விருதுக்கு பிறகு இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
கடந்த 2018-ல் ‘சர்கார்’, ‘2.0’, ‘செக்கச் சிவந்த வானம்’, அடுத்து வரவுள்ள ‘சர்வம் தாளமயம்’, இந்தியில் ‘சஞ்சு’ என திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில், 2019-ம் ஆண்டில் அதிக ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டு, சில படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிறகு, அந்த வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே, கிடைக்கும் நேரத்தை மணிரத்னம், ரஜினி, ஷங்கர் போன்ற நெருங்கிய நண்பர்களின் படங்களுக்கு மட்டும் செலவிடலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்.