சூரசம்ஹாரம் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,392
615
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

ராஜேஸ்வரி‌ சிவகுமார் அவர்களின் புதிய கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறார். படித்துவிடாடு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
  • Like
Reactions: Anuya

Anuya

Well-known member
Apr 30, 2019
262
128
63
அத்தியாயம் 1:

“என்ன தல! இன்னைக்கு என்ன விசேஷம்? பக்தி பழமா இருக்கீர்?” பத்தரை மணிக்கு சாவகாசமாக தன்னுடைய பணிக்கு வந்த இன்ஸ்பெக்டர். தேவாரம், அந்த காவல் நிலையத்தின் ஹெட் கான்ஸ்டபிள். திருவாசகத்தை வம்பிழுத்துக்கொண்டு தன்னிடத்திற்கு சென்றமர்ந்தான்.

சூரியன் தன் இருப்பை உக்கிரமாக உலகிற்கு காட்டத் தொடங்கியிருந்த முற்பகல் வேளையிலும் சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் அந்த காவல் நிலையம், சுறுசுறுப்பின்றி சோம்பிக்கிடந்தது.

சிறிது நாட்களுக்கு முன்பு வெளித்தோற்றத்தில் மட்டுமே பழையனவற்றை கழித்து புதிதாய் தன்னை புதுப்பித்துக்கொண்ட அந்த கட்டிடம், காவலர்களை தவிர வேறு யாருமின்றி அமைதியாக இருந்தது. காலம் எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும் இன்றும் பாதிக்கப்பட்டவர்கள் அதுவும் நடுத்தரவர்கத்தினர் காவல் நிலையத்திற்கு லேசில் வருவதில்லை.

மேல்மட்டத்திற்கும் கீழ்மட்டத்திற்கும் எல்லாமே சுலபமாகிவிட்ட இந்நாளில் அப்படியும் போகமுடியாது இப்படியும் போகமுடியாது இடையில் மாட்டிக்கொண்டு அல்லாடிக்கொண்டிருக்கும் மிடில்க்ளாஸ் மக்கள் அதிகமாக வசிக்கும் அப்பகுதியில் காவல்நிலையத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இல்லாததால் அந்நிலையத்தில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமாகவே இருக்கும்.

அத்திப்பூத்தாற்போல எப்போதாவது ஒன்றிரண்டு கேஸ்கள் வரும். அதுவும் கூட பெரும்பாலும் கணவன் மனைவி தகராறு, குடும்பத்தகராறு இப்படிபட்டதாகவே இருக்கும்.ஆகமொத்தம் இதுநாள்வரை அந்த நிலையம் காவல் நிலையாமாக செயல்பட்டதைவிட, கிராமப் பஞ்சாயத்தாக செயல்பட்டதுதான் அதிகம்.

அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை கொண்டே காவல் நிலையத்தில் காவலர்களின் எண்ணிக்கையும் அமையும் என்பதால் அந்த நிலையத்தில் காவலர்களின் எண்ணிக்கையும் அங்குவரும் கேசுகளை போல குறைவாகவே இருந்தது. பெயருக்கு இருந்த அந்த லாக்கப் நீண்ட நாட்களாக .திறக்காமலேயே இருந்தால் பூட்டு கெட்டுப்போய்விடும் என்பதால் அதன் பூட்டை அடிக்கடி திறந்து எண்ணெய் விடுவது அங்கிருந்த கான்ஸ்டபிளின் அன்றாட பணியாகும்.

அந்த காவல்நிலையத்தில் இருக்கும் அதிகாரிகளான தேவாரம் திருவாசகம் இருவரும் தங்களுடைய பள்ளி உயர்படிப்பை முடித்து, காவலர் பணிக்கு தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்று ஒரே இடத்தில் கான்ஸ்டபிளாக அமர்ந்தவர்கள். ஒரே ஊர்காரர்கள், ஒத்த வயதினர், இருவருமே கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இப்படி இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்ததால் அவர்களுக்குள் ஒரு சிநேகிதத்தன்மை ஆரம்பம் முதற்கொண்டே இருந்து வந்தது.

பார்த்ததும் போலீஸ் என சொல்லிவிடும் உருவத்தை தேவாரம் பெற்றிருக்க, திருவாசகமோ அதற்கு நேரெதிர் தோற்றத்தை பெற்றிருந்தான்.அவனிடம் கம்பீர,மும் இல்லை, அதுதான் இல்லை என்றால் போலீசின் ட்ரேட்மார்க்கான தொப்பையும் இல்லை. ஓட்டடைகுச்சிக்கு காக்கி யூனிஃபார்ம் போட்டதை போல இருந்தவனுக்கு கெத்தாக இருக்கும் தேவாரத்தின் மேல் ஒருவித மயக்கம்.
தேவாரம் தன்னுடைய திறமையால் பணியில் மூன்றாவது நிலையை அடைந்து, திருவாசகம் இருக்கும் அதே காவல் நிலையத்திற்கு வந்த போது, திருவாசகமோ பல ஆண்டுகள் பணியில் இருந்த அனுபவத்தால் முக்கி முனகி அடுத்த நிலையை அடைந்திருந்தான்.

இவனால் அடையமுடியாத இன்ஸ்பெக்டர் பதவியை குறுகிய காலத்தில் தன்னுடைய திறமையால் எட்டிப்பிடித்த தேவாரத்தின் மேல் ஏற்கனவே இருந்த மயக்கத்தோடு மரியாதை கலந்த பக்தியும் இப்போது சேர்ந்துக் கொண்டது. அவன் எதை சொன்னாலும் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு துணை செல்லவோ பாராட்டவோ செய்வான். மனைவி மட்டும் அல்ல, பணியில் நமக்கு கீழ் வேலை செய்பவர்கள் அமைவதும் கடவுள் கொடுத்த வரம் தான்!

ஹெட் கான்ஸ்டபிள் என்பதற்கு பதிலாக தல என்று திருவாசகத்தை தேவாரம் அழைப்பது வழக்கம். அந்த அழைப்பை ‘தல அஜீத்’ என்று சொல்வதாக எண்ணி எப்போதும் புளங்காகிதம் அடையும் திருவாசகம் இப்போதும் அதே பீலைக் கொடுத்து,
“அது ஒன்னும் இல்ல சார்! இன்னைக்கு என்னோட கல்யாணநாள். அதான் நானும் எங்க வீட்டம்மாவும் கோவிலுக்கு போனோம்.அங்க வச்சது தான் இதெல்லாம்” என்று தன் நெற்றியில் இருக்கும் விபூதி,குங்குமத்தை காட்டினான்.

“வாரேவா! யாரு வச்சிவிட்டது தல?” என குறும்பாக இவன் அவனைப் பார்த்துக் கேட்க,
“என்ன சார் இப்படியெல்லாம் கேட்கறீங்க?”எனக் கேட்டு அங்கே ஒரு பாம்பு நடனத்தை தன் உடலை நெளித்து நடத்திக் காட்டியவன், “கோவில் குருக்கள் தான்!” என்றான் ஓவராக வெட்கப்பட்டுக்கொண்டு.

“என்ன தல நீங்க! நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்க.கல்யாண நாள்ல கூடவா ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்காது?” என மேலும் அவனை வம்பிழுக்க,
“அச்சோ... போங்க சார் நீங்க!” என்றவன் தங்களின் உரையாடலைக் கேட்டு சிரித்துக்கொண்டிருந்த கான்ஸ்டபிளை முறைத்து,
“என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு? போ! போய் உன் வேலைய பாரு!” எனக் கடுகடுத்தான்

கான்ஸ்டபிளிடம் காய்ந்தவனைப் பார்த்த தேவாரம்,”இப்ப அவன் கிட்ட எதுக்கு இந்த கடுப்பு? அவனுக்கு சீனியர் ஆபிசருங்க, நமக்கே இங்க வேலை இல்ல. இதுல அவன் வேலைக்கு எங்க போவான்?” சிரித்துக் கொண்டே கேட்டான்.
“உங்க வீட்டுல ஏதாவது வேலையிருந்தா செய்ய சொல்லி இவனை அனுப்பி விடுங்க சார்.இங்க எதுக்கு வெட்டியா நின்னுட்டு இருக்கான்” திருவாசகம் இப்படி சொன்னதும்,

“என்ன தல! பழசெல்லாம் மறந்து போச்சா? எவ்வளவு உயரத்துக்கு போனாலும் பழச மறக்க கூடாது தல. அது நல்லதுக்கு இல்ல! நாம வேலைக்கு சேர்ந்த புதுசுல ஆபிசருங்க நம்மகிட்ட இப்படி அவங்க வீடடு வேலைய செய்ய சொன்ன போது என்ன பேசிக்கிட்டோம்? இவங்க நிலைமைக்கு நாம வரும்போது, இப்படி நம்ம வீட்டு வேலைய செய்ய சொல்லக் கூடாதுன்னு தானே முடிவெடுத்தோம். இப்ப என்ன இப்படி பேசறீங்க! நாம மக்களுக்கும் கவர்ன்மென்ட்க்கும் தான் சர்வென்ட்.. ஆபீசருங்களுக்கு இல்ல” தன்னுடைய முறுக்கேறிய மீசையை இன்னும் முறுக்கிவிட்டுக் கொண்டு சொன்னவனை காதல் பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாசகம்.

யாருக்கு வரும் இந்த நல்ல மனசு. கொஞ்சம் மேல வந்ததும் அவனவன் என்ன ஆட்டம் போடறான்? இவர் இன்னும் பழசை மறக்காம இருக்கறதை பாரேன்...! ‘இதுதான்! இந்த நல்ல மனசுக்கு தான் சார் கடகடன்னு இந்த நிலைமைக்கு வந்து நிக்கறார்! போதும்... இவர்கூட இப்படியே ஹெட் கான்ஸ்டபிளா காலம் முழுசுக்கும் இருக்கும் வரம் கிடைத்தா அதுவே போதும் எனக்கு. வேற ஒன்னும் வேணாம். ஆண்டவா! இதுக்கு மட்டும் எனக்கு வழி பண்ணுப்பா!’ கல்யாண நாள் அதுவும் இப்படி ஒரு வேண்டுதல் வைத்தவனை அந்த கடவுளே காறித்துப்ப நினைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அடுத்த இரண்டு மணிநேரம் எந்த வேலையுமில்லாமல் பொழுதை ஓட்டிக் கொண்டிருந்த தேவாரத்தை அவனின் கைபேசி அழைத்தது.அதை ஆன் செய்ததும்,
“வணக்கம் தம்பி! நான் டிடி பேசறேன்” என்ற வெண்கலக் குரல் காதில் வந்து மோதியது.

‘டிடியா...?’ அதிர்ந்த தேவாரம்,”ஒரு நிமிஷம் சார்!” என்று போனில் வாயைப் பொத்தி,
“யோவ் தல! டிடின்னு நம்ம ஏரியால பெரிய தலை யாரவது இருக்காங்களாயா?” என்றான்.

“ஆமாம் சார்! நம்ம ஆளுங்கட்சி வட்டம். அவர்தான் டிடி. நேத்து ஒருத்தனை காணோம்னு விசாரிக்க சொன்னாருன்னு சொன்னேனே... அவருதான் சார் இவர்!” என்று விளக்கியதும்,
“ஸாரி சார்! லைன்ல கொஞ்சம் ப்ராப்ளம். அதனாலதான் நீங்க முதலில் சொன்னது சரியா கேட்கல.இப்ப ஓகே சார். என்ன சார் சொல்லவந்தீங்க?” என பவ்யமாய் கேட்டான் தேவாரம்.

“அது ஒன்னுமில்ல தம்பி. நம்ம பையன் ஒருத்தனை மூனு நாளா காணோம்.அப்பா இல்லாதவன்.அம்மாவும் ரொம்ப வயசானவங்க.அவங்ககூட இப்ப அவன் இல்ல.வீட்டுப்பிள்ளையாட்டம் எங்க குடும்பத்தில் ஒருத்தனா பழகிட்டான். அவனைப் பத்தி விசாரிக்க சொல்லி உங்க ஹெட் கான்ஸ்டபிள் கிட்ட சொல்லியிருந்தேன். அதான்... ஏதாவது தெரிந்ததான்னு கேட்டேன்” என்றவரிடம், இன்று மாலை அவனை பற்றிய தகவலோடு வந்து சந்திப்பதாக தேவாரம் சொல்ல,
“அப்புறம் தம்பி! நான் கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுக்கல.மீடியாக்கு தெரிந்தா தேவையில்லாத பிரச்சனை வரும்.எனக்காக கொஞ்சம் அன்அஃபிஷியலா தேடனும்...” என அவர் கோரிக்கை விடுக்க,அதற்கு சம்மதித்து போனை கட் செய்தான்.

சில நொடிகள் எதையோ யோசித்த தேவாரம்,தன்னுடைய தாடையை வலக்கையால் தடவிக்கொண்டே,.
“அது என்ன தல டிடி? இவர் பெரிய இடத்துக்கு சொந்தமா?” ஆர்வம் நிறைந்த குரலில் கேட்டான்.

“அய்யோ... அப்படியெல்லாம் இல்ல சார்.இவர் எல்லாக் கூட்டத்திலும் ‘எதிர்க்கட்சிக்காரர்களிடம் தாழ்மையுடன் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்’, ‘வாக்காளப் பெருமக்களே.. உங்களிடம் தாழ்மையுடன் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன்...’ இப்படி எப்போ பேசினாலும் தாழ்மையை சேர்த்துக்கறதால அவரை தாழ்மை தண்டபாணின்னு அவர் கட்சிக்காரங்க சொல்லி சொல்லி அது டிடின்னு மாறிடிச்சு சார்!” நீண்ட விளக்கம் அளித்த திருவை பார்த்து வெடிச்சிரிப்பை வெளியிட்டான் தேவாரம்.

“அப்புறம் தல, அந்த பையனைப் பத்தி ஏதாவது விசாரிச்சீங்களா?” எனக் கேட்ட தேவாரத்திற்கு,
“எல்லாம் விசாரிச்சிட்டேன் சார். இதோ அந்த விவரங்களை எல்லாம் ஒரு ஃபைலாவே போட்டுட்டேன்!” என்று சொன்னதோடு தன்னிடத்திற்கு சென்று அங்கிருந்த ஃபைலை கொண்டுவந்து கையில் கொடுத்தான்.

பெயர்- செந்தில் முருகன், வயது- 2௦ என்றக் குறிப்பை பார்த்தவனுக்கு அங்கிருந்தவனின் படம் கண்ணில்பட்டு, கவனத்தை ஈர்த்தது..அதில் பால்வடியும் முகத்துடன் மீசைக் கூட சரியாக முளைக்காத சிறுவன் இருந்தான்.

அவனைப்பற்றிய விவரத்தில் அவன் அந்த அரசியல்வாதியின் வீட்டில் எல்லாமுமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவனின் முகத்திற்கும் அரசியல்வாதிகளின் அடாவாடித்தனத்திற்க்கும் துளிக்கூட சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை.எப்படி இது சாத்தியம்? என்று குழம்பிய தேவாரம்,

“என்ன தல அதிசயமா இருக்கு? நல்லா வெள்ளையா குச்சி குச்சியா கையையும் காலையும் வச்சிட்டு இருக்கிற இந்த பொடிப்பையன் எப்படி அரசியல்வாதிக்கு ஆலோசகனாவோ அடியாளாவோ இருக்க முடியும்? இவன் தான் அவரோட வீட்டில் ஆல் இன் ஆல்ன்னு வேற இங்க இருக்கு. எப்படி? இவன் எப்படி அந்த ஆளுக்கு அவ்வளவு க்ளோஸ் ஆனான்?ஒரு மூனே நாள் காணாமப்போனவனை அவரே ஸ்பெஷலா தேடச்சொல்ற அளவுக்கு இவன் என்ன அவருக்கு அவ்வளவு முக்கியமானவனா?” எனக் காணாததைக் கண்டவனின் குரலில் கேட்டான்.

“ஆமாம் சார். இந்த பையனை அவருக்கு ஒரு மூனு வருஷமாதான் பழக்கம். ஆனா அதுக்குள்ள அவரோட வீட்டுக்குள்ள சொந்த பிள்ளைபோல நடமாடற அளவுக்கு நெருக்கமாம். அவருக்கு மூனும் பொம்பள பிள்ளைங்க. அதனால அவங்க வீட்டம்மா இவனை மகனாட்டம் பாத்துப்பாங்களாம்.இதை அவங்க வீட்டுகிட்ட இவனை பத்தி விசாரிக்கும் போது சொன்னாங்க சார்.”

“இவன் அடியாளும் இல்ல, ஆலோசகனும் இல்ல சார்.மொதல்ல இவன் அவரோட வீட்டம்மாக்கு ட்ரைவரா தான் அங்க சேர்ந்தானாம்.படிப்பு ஒன்னும் அவ்வளவா இல்லைன்னாலும் இவனுக்கு இங்கிலீசும் ஹிந்தியும் தண்ணிப்பட்ட பாடாம். இதை தெரிஞ்சிகிட்ட நம்ம வட்டம் இதுக்காகவே இவனை அவர் எங்க போனாலும் கூடவே கூட்டிட்டு போவாராம்.அவருக்கு தமிழைத் தவிர வேறெந்த பாஷையும் சுட்டு போட்டாலும் வராது. இப்படித் தான் சார் இவன் அவருக்கு நெருக்கமானான்”

திரு, அந்த பையனைப் பற்றி சொன்னதைக் கேட்ட தேவாரத்திற்கு என்னதான் முக்கியமானவனா இருந்தாலும் விஷயம் இல்லாம ஒரு அரசியல்வாதி தன்னிடம் வேலை செய்தவனைக் காணோம்ன்னு தேடமாட்டாங்களே! அப்படியும் கம்ப்ளெயின்ட் கொடுத்தோமா வேலை முடிந்ததான்னு இல்லாம அவரே நேரடியா எனக்கு கால் பண்ணி அவனைப் பத்தி எதுக்கு இவ்வளவு அக்கறையா விசாரிக்கனும்? இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ... என போலீஸ் மூளை வில்லங்கமாகவே வேலை செய்தது.
தன் சந்தேகத்தை சொல்லி,“தல! இந்த டிடி எப்படி? அடாவடி ஆசாமியா?” சில வாரங்களுக்கு முன்புதான் இவன் பிரமோஷனில் அங்கு வந்ததால், பல வருடங்களாக அந்த காவல்நிலையத்தில் இருக்கும் திருவிடம் கேட்டான்.

“சேச்சே! அப்படியெல்லாம் இல்ல சார். தானா ஏதாவது வந்தா தள்ள மாட்டார். ஆனா மனுஷன் வீணா யார்கிட்டயும் எதையும் கேட்டு போய் நிக்கமாட்டார் சார். கட்சி பணத்துல தனக்கு ஒரு பத்து நல்லது செய்துகிட்டு மக்களுக்கும் நாலு நல்லது செய்வார்.நல்ல மனுஷன்தான். இப்ப இருக்கிற அரசியவாதிங்க எல்லாம் ரொம்ப எல்லாம் நல்லவங்களா இருக்கவேணாம், இவரை போல இருந்தாலே நம்ம நாடு உருபட்டுடும் சார்!”

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூவாவது சர்க்கரையாக இருந்துவிட்டு போகட்டுமே என்ற மனநிலைக்கு மக்கள் வந்து நெடுங்காலம் ஆகிவிட்டது!

“சோ... நம்மை போலவே அவரும் ரொம்ப நல்லவருன்னு சொல்ல வரீங்க...?” அந்த ரொம்பவில் ஒரு அழுத்தத்தை கொடுத்து தேவாரம் கேட்க,
“நீங்க எப்படி சார் அவர் கூட கூட்டு சேருவீங்க! நீங்க யார் என்ன கொடுத்தாலும் கைய நீட்டி வாங்க மாட்டீங்களே! உங்கள மாதிரி யாராலயும் இருக்க முடியாது சார்!”தேவாரத்தின் மேலுள்ள தன்னுடைய காதலை கோபமான குரலில் வெளியிட்டான் திரு.


தன் மேல் திருவிற்கு இருக்கும் அபிமானத்தை அறிந்த தேவாரமும் ஒரு புன்சிரிப்பை வெளியிட்டு அதை அங்கீகரித்து,”சும்மா வருதேன்னு இன்னைக்கு கைய நீட்டிட்டா நாளைக்கு அதே கையால கண்டவனுக்கும் சலாம் போட்டுட்டு தலை குனிந்து நிக்கனும் தல. அதெல்லாம் நமக்கு சரிப்படாது.மனசுக்குள்ள நேர்மை இருந்தா தப்பு செய்றவன் முன்னாடி நம்மோட நெஞ்சு தானா நிமிரும் பாரு.. அப்போ வரும் பாரு ஒரு திமிரு! அப்ப்பா... அந்த போதை வேற எதிலும் இருக்காது தல!இந்த திருப்தியை காசு பணம் கொடுக்காது!” என்று சொல்லிக்கொண்டே போனவன்,

“அப்போ அந்த வட்டம் நம்ம சந்தேக வட்டத்துக்குள்ள வரமாட்டாரா?” ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றான்.

“உங்க அளவுக்கு இல்லைன்னாலும் அவரும் நல்லவருதான் சார்! அந்த பையன் மேல இருக்கும் அன்பினால் தான் விசாரிக்க சொல்லியிருப்பார்” அடித்து சொன்னவனை பார்த்துக்கொண்டிருந்த தேவாரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.
திருவின் வாசகத்தின் படி அந்த தண்டபாணி அப்படி ஒன்றும் மோசமாக தெரியவில்லை. உண்மையான அக்கறையினால் அவர் அந்த பையனைப் தேட சொல்லியிருந்தால்...? இன்று நேரிடையாக விசாரித்துவிடலாம் என்று எண்ணிய தேவாரம், அதை திருவிடம் சொன்னான்.அதைக் கேட்டவன் உடனே அவனுடன் கிளம்ப ஆயத்தப்பட,

“தல! ஓவர் பொறுப்பு உடம்புக்கு ஆகாது.ஆளில்லாத கடையில இப்ப யாருக்கு அவசரமா டீ ஆத்த கிளம்பிட்டீங்க? கல்யாண நாள் விருந்தை ஒருபிடி பிடிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நிதானமா வாங்க. சாயங்காலமா போய் விசாரிச்சிக்கலாம்” குறும்பு சிரிப்புடன் திருவை வழியனுப்பி வைத்தான்.
 
Last edited by a moderator: