சூரசம்ஹாரம் - கதை திரி

Anuya

Well-known member
Apr 30, 2019
262
128
63
அத்தியாயம் 2:

“அத்த! அவனுக்கு தான் விருப்பமில்லைன்னு சொல்றானில்ல. நீ எதுக்கு சும்மா அவனை போட்டுப்படுத்தி எடுக்கற” கோபம் குரலில் கொப்பளிக்க கேட்டவனை பார்த்த பாகீரதி,


“இதுவரைக்கும் எல்லாத்திலும் அவனோட விருப்பத்தைக் கேட்டா செய்தேன்? நான் என்ன கலைக்டருக்கா படிக்கச் சொல்றேன்.ஸ்கூல் படிப்பை ஒழுங்கா முடின்னு தானே தலையா அடிச்சிக்கறேன்” என்று தன் மனக்குமுறலை –துக்கத்தால் அடைத்த குரலை சரிசெய்துக்கொண்டே தன் நாத்தனார் மகனிடம் கொட்டினார்.


இதுவரை பெருங்குரலேடுத்து கத்திக்கொண்டிருந்தவனோ தன் அத்தையின் நியாயமான ஆசையை அவரின் தழுதழுத்த குரலில் கேட்டதாலோ என்னமோ அதன் பிறகு அடக்கி வாசித்தான்.


“அவன் என்ன வச்சிட்டா வஞ்சனை பண்றான்? வராததை வம்படியா இழுக்கவா முடியும்?” உள்ளே சென்றக்குரலில் இவன் பேசிமுடிக்கவும் களுக் என்ற சிரிப்பொலி காதில் விழவும் சரியாக இருந்தது.சத்தம் வந்த திசையில் திரும்பியவன்,அதன் சொந்தக்காரியின் மேல் ஒரு அக்கினிக் கணையை தன் பார்வையால் வீச, அதை தூசாகக்கூட மதிக்காதவள்,


“இனம் இனத்தோட சேருது பெரியம்மா!” என்றாள் நக்கலாக.


“ஒழுங்கு மரியாதையா வாய மூடிட்டு இருக்க முடிந்தா இங்க இருக்கலாம்.. இல்லன்னா அவங்கவங்க வீட்டுக்கு நடையக் கட்டுங்க.ஏற்கனவே எரிஞ்சிட்டு இருக்கறதை யாரும் இன்னும் விசிறி விடவேணாம்!” காட்டமாக சொன்னவனுக்கு,


“இப்படித்தான் இருக்கனும்னு எனக்கு யாரும் சொல்லித்தர வேணாம்.எங்க எப்ப எப்படி இருக்கனும்னு எனக்கே நல்லா தெரியும்.பட்டப் படிப்பு படிச்ச எங்களுக்கு படிக்காத மரமண்டைங்க எல்லாம் அட்வைஸ் பண்றேன்னு ஒன்னும் கிளம்பி வர வேணாம்” கழுத்தை ஒரு திருப்பு திருப்பி பதிலளித்தாள்.


“ஹேய்... யாருடி, யாரு மரமண்ட!” எகிறிக்கொண்டுவந்தவனைக் கண்டு கொஞ்சம் கூட அசராதவள்,


“அது கூட தெரியல பாரேன் இந்த மரமண்டைக்கு!” என்றாள் இதழில் நெளிந்த ஏளன சிரிப்போடு.


“காவ்யா என்னம்மா என்ன பண்ணிட்டு இருக்க.இங்க எவ்வளவு பெரிய பிரச்சனை ஓடிட்டு இருக்கு, இப்பவும் நீ இவன்கிட்ட மல்லுக்கு நிக்கற. டேய்! வேலு.. அவதான் சின்ன பிள்ளைத்தனமா உன்கிட்ட வாயாடறான்னா நீயும் பாஞ்சிக்கிட்டு போற” என சண்டைக்கு சிலுப்பிக்கொண்டிருந்த இருவரையும் சமாதானப்படுத்தினார் பாகீரதி.


இவர்களின் இந்த உரையாடலுக்கும் சண்டைக்கும் மூலக்காரணமான செந்தில் முருகனோ அடுத்து என்ன நடக்குமோ என்ற திகிலோடு ஒரு மூலையில் நின்றிருந்தான்.


வாழ்க்கையில் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிக்காத பாவப்பட்ட ஜென்மம் என்ற ஒன்று இருக்குமென்றால் அதுதான் இந்த பாகீரதி. வசதியில்லா பெற்றோருக்கு ஒரே மகளாய் பிறந்து படித்து அரசுப்பள்ளியில் ஆசிரியராக இவள் அமரும்வரை குடும்பத்துக்கு ஆண் துணையாக இருந்த இவளின் தந்தை, கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கும் நேரத்தில் திடீரென காலமானார். இவளின் கல்யாணத்தை பொறுப்பாக எடுத்து செய்ய உடன்பிறப்போ தாயின் பொறுப்பை சுமக்க உற்றத்தாரோ யாருமில்லாத காரணத்தால் இவளின் கல்யாண தேடல் தொங்கலில் நின்றது.அதன் பின் தாயும் மகளும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் மாறினார்.


ஒரு வழியாய் பாகீரதி தன் தாயை நன்றாக கவனித்து அவரை பொறுப்பாய் சிவனடியில் சேர்பதற்குள் நாற்பது வயதை எட்டியிருந்தார். அதன் பிறகு என்ன கல்யாணம் வேண்டியிருக்கு என இவர் தன் போக்கில் ஆசிரியர் பணியை தொடர்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவரைபோலவே காலம் கடந்த பின்னும் மணம்முடிக்காத மணவாளன் இவர் பணிப்புரிந்துக் கொண்டிருந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராய் வந்து சேர்ந்தார்.


இளவயது முதற்கொண்டே அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக்குறைவால் எதற்கு இன்னொரு ஜீவனையும் தன்னோடு சேர்த்து கஷ்டப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் மணவாளன் நாற்பத்தைந்து வயதுவரை திருமணத்தை தவிர்த்து வந்தார். இங்கே வந்து பாகீரதியை பார்த்ததும் அவரின் மனதில் கல்யாண ஆசை முளைவிட்டது.


இளமையில் துணையின்றி வாழ்ந்துவிடலாம், ஆனால் முதுமையில் அது முடியாது என்பதை அனுபவித்து அறிந்துக்கொண்ட இருவரும் ஒருமனதாய் யோசித்து திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர்.அதற்கு மணவாளனின் சித்தி பிள்ளையான பழனியப்பனும் அவனின் குடும்பமும் ஆதரவளித்தனர்.


ஆயிற்று... இருவரும் மணம் முடித்து ஆண்டு ஐந்து ஆயிற்று.ஆனால் குழந்தை செல்வம் தான் கிடைத்தப் பாடாய் இல்லை. தங்களின் வயதை மனதில் கொண்டு இனி நமக்கு பிள்ளை பாக்கியம் இல்லை என முடிவெடுத்து இருவரும் மனதை தேற்றிக்கொண்டிருந்த வேளையில் பாகீரதி கருவுற்றாள்.


இதுவரை இருவரும் அனுபவித்த துன்பத்திற்கு எல்லாம் ஈடுகட்டும் விதமாய் கடவுள் காலம் கடந்து தங்களுக்களித்த மழலை செல்வத்தை கண்டு கணவனும் மனைவியும் மனம் பூரித்துப் போயிருந்தனர்.மகனின் முதல் பிறந்தநாள் விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடிவிட்டு,அன்றைய இரவு நீண்ட நேரம் மனைவியுடனும் மகனுடனும் பேசி சிரித்து விளையாடிய பிறகு உறக்கத்திற்கு சென்ற மணவாளன் காலையில் விழிக்கவே இல்லை.


அவ்வளவுதான்! பாகீரதிக்கு காலதாமதமாக கிடைத்த கல்யாண வாழ்க்கை காலத்தோடு முடிந்துவிட்டது.வசிக்க கணவனின் சொந்த வீடு, வாழ அரசாங்க வேலை அதனோடு கணவனின் சேமிப்பு பணம், பென்ஷன்... இப்படி மீதமுள வாழ்க்கையை கடக்க தேவையான அனைத்தும் இவளுக்கு கிடைத்திருந்தது. ஆனால் என்ன... வழித்துணைக்கு தான் யாருமில்லை.


கையில் பிறந்து ஓராண்டேயான பச்சிளங்குழந்தை, ஆத்திரவசரத்திற்கு உதவ கணவனின் சொந்தங்கள்... இவற்றின் துணையுடன் மீண்டும் வாழ்க்கையில் தனித்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் நின்றாள்.


எந்த துன்பம் வந்தாலும் அதைக்கண்டு சோர்ந்து போகாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழப்பழகிக்கொண்ட இவளுக்கு இப்போது தன் மகனை நன்றாக படிக்கவைத்து அவனை நல்ல இடத்தில் அமர்த்திப் பார்த்துவிட வேண்டுமென்ற ஒரே குறிக்கோள் தான் இருந்தது. அதற்கும் வழியில்லாது மகன் பத்தாவது வகுப்பில் இரண்டாம்முறையும் ஃபெயிலாகி வந்து நின்றால் இவள் என்ன செய்வாள்?


“செந்தில்! அம்மாக்காக இன்னும் ஒரே ஒரு முறை எக்ஸாம் எழுதிடு ராஜா!” என்று கெஞ்சிய அன்னையிடம்,


“ம்மா! எத்தனை தடவை எழுதினாலும் நான் பாஸாக மாட்டேன் ம்மா! வேணாம், ப்ளீஸ் ம்மா என்னை விட்டுடேன்” அவளுக்கும் மேல் கெஞ்சினான் மகன்.


எட்டாவது பெயிலான வேல்முருகனுக்கு, செந்தில் முருகனின் நிலை நன்றாக புரிந்தது. ’வராததை கையப் பிடிச்சா இழுக்கமுடியும்? என்னப் படிச்சாலும் அது மண்டையில ஏறினாதானே அங்க போய் எழுதமுடியும்.இது ஏன் இவங்களுக்கு புரியமாட்டேங்குது?’ நினைத்தவன்,


“அத்த! முதல் ரிசல்ட் வந்ததுமே அடுத்து எழுதமாட்டேன்னு அடம் பிடிச்சவனை உன்னோட ஆசைக்குதான் திரும்ப எழுதவச்சது. எழுதிட்டு வந்ததுமே எக்ஸாம் முடிவு என்ன ஆனாலும் அடுத்து எழுதமாட்டேன்னு அவன்தான் முன்னாடியே சொல்லிட்டானே.... பிறகு ஏன் இப்படி அவன் உசிர வாங்கற?” எரிச்சலாய் கேட்டவனுக்கு,


“எல்லாம் இவன் எப்படியும் இந்த முறை பாஸாகிடுவான்னு ஒரு நம்பிக்கைதான் வேலு. இந்த தடவை வந்தது எல்லாம் நாங்க நல்லா படிக்க வச்சது. அந்த தைரியத்துல அப்படி சொன்னேன். ஆனா இப்படி நடக்கும்னு நான் நினைக்கலையேடா!” பாவமாய் பதிலளித்தார் பாகீரதி.


“அதானே! டேய் செந்தில் இந்த தடவை வந்த கொஸ்டின்ஸ் எல்லாம் உன்னை பெரியம்மா நல்லா படிக்கவச்சது தானேடா! அப்புறம் எப்படிடா பெயிலான?”


“இந்த கொசுவேற சும்மா சும்மா காதுகிட்ட வந்து நொய்நொய்னிட்டு” என இல்லாத கொசுவை ஓட்டியவனை முறைத்தவள்,


“செந்திலு! கேப்பார் பேச்சைக் கேட்டு கெட்டு போகாதடா.ஒழுங்கா பெரியம்மா சொல்றதை கேட்டு இந்த தடவை நல்லா எழுதி பாசாகி ப்ளஸ் ஒன் சேரற வழியை பாரு” என்றாள்.


“என்னக்கா நீயும் அம்மா போல பேசற. எனக்கு தான் படிப்பு வரலைன்னு சொல்றேனே. ஏன் நீங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க” இவனின் சோகக்குரல் காவ்யாவை உருக்கிவிட்டது.


தங்கையோடு பிறந்த காவ்யாவிற்கு ஒன்றுவிட்ட பெரியப்பாவின் மகனான செந்தில் எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.மணாளன் பாகீரதியை பாதியில் விட்டு போனாலும் தனியாக விட்டு செல்லவில்லை. அவரின் சித்தி பிள்ளையான பழனியப்பனும் அவரின் குடும்பமும் இவர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தது. இவர்களுக்கு மணம் ஆகும் போதே மணாளனின் தம்பிக்கு கல்யாணம் முடிந்திருந்தது. அப்போதிலிருந்தே இருக் குடும்பத்திற்க்கும் நல்ல உறவு இருந்துவந்தது.


பிள்ளையில்லாமல் மணாளன் தம்பதியினர் தவித்துக்கொண்டிருந்த வேளையில் காவ்யா அவர்களின் வேதனைக்கு மருந்தானாள். சிறுவயதிலிருந்தே அவளுக்கு பாகீரதியிடம் ஒட்டுதல் அதிகம்.செந்தில் பிறந்த பின்பு அது அவனிடமும் தொடர்ந்தது.


மணாளனின் மரணத்திற்கு பிறகு, காவ்யாவின் அன்னையும் இவளும் பாகீரதி வேலைக்கு சென்ற நேரங்களில் செந்திலை பார்த்துக் கொண்டனர்.இவளுக்கும் செந்திலுக்கும் குறைந்த வயது வித்தியாமே இருந்தாலும் இவளுக்கு செந்தில் எப்போதும் ஒரு குழந்தைதான்.


“பெரியம்மா! அவனை கொஞ்சம் விட்டு பிடிக்கலாம். இந்த வருஷம் வீணா போனாலும் பரவாயில்லை. அடுத்த வருஷம் அவனை எக்ஸாம் எழுத வச்சிடலாம். அதான் உங்க ஸ்கூல் இருக்கில்ல அங்க அவனுக்கு அடுத்த வருஷம் அட்மிஷன் வாங்கிடலாம். பிள்ளைய போட்டு படுத்த வேணாம்.கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க” தம்பிக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்தவளைப் பார்த்து,


“ஆமாம்டி! இந்த வருஷமே ஒன்னுத்தையும் கிழிக்க முடியல. இதுல அடுத்த வருஷம் என்னப் பண்ணிடப்போறான்? இதுல அவனுக்குக் நீயும் வேற துணைக்கு நிக்கற” என்றார் கோபமாக.


“சும்மா சும்மா நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிள்ளைய படி படின்னு ரொம்ப மிரட்டிட்டோம். அதான் அது மிரண்டு போய் எல்லாத்தையும் மறந்துடுச்சி. கொஞ்சம் அவனை ரிலாக்ஸ் பண்ண வச்சி அடுத்த தடவை ஜமாச்சிடலாம் விடுங்க” தன்னை தாஜா பண்ணியவளிடம்,


“நீங்க ரெண்டு பேர் கொடுக்கற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்ட,ம் ஆடறான்” என்றார் மகனிடம் ஒரு பார்வையை செலுத்தி.


“அவன் என்ன ஆட்டம் ஆடறான் பெரியம்மா? சும்மா பிள்ளை மேல பழி சொல்லாதீங்க. அவன் ஒரு வாயில்லா பூச்சி.சேர்க்கை தான் சரியில்ல. அதை கட் பண்ணா பிள்ளை தானா உருப்பட்டுடுவான்” என்றாள் வேலுவைப் பார்த்துக்கொண்டே.


காவ்யாவின் பேச்சால் கோபம் கொண்டவன், ”அத்த எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு.நான் இப்ப போயிட்டு பிறகு வரேன்” என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான்.வேலு கிளம்பப்போகிறான் என்பதை பார்த்த செந்தில் அவனிடம் விரைந்து சென்று,


“மாமா! நான் சொன்னதை அம்மாகிட்ட சொல்லாம கிளம்பறீங்களே... அதை எப்ப சொல்ல போறீங்க?” எனக் காதைக் கடித்தான்.


“இப்ப நிலைமை சரியில்ல செந்தில்” என்றவன் காவ்யாவை ஒருப் பார்வைப் பார்த்து, ”இங்க இருக்கும் எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் கழண்டதும் நான் அத்தைகிட்ட மெதுவா பக்குவமா சொல்லிக்கறேன்” என வேலு சொன்னது காவ்யாவின் காதில் விழுந்தது.


அப்போது உள்ளே ஏதோ வேலையாக பாகீரதி செல்லவும், “என்ன செந்தில் இன்னும் என்ன? எதுவாயிருந்தாலும் அக்காகிட்ட சொல்லுடா.நான் பெரியம்மாவை சரிக்கட்றேன்” என்றாள் தம்பியைப் பார்த்து.


காவ்யாக்கா இருக்கும் போதே தன் ஆசையை சொன்னால் அவள் தனக்கு அம்மாவிடம் சப்போர்ட் செய்வாள் என்று எண்ணியவனும் தன்னுடைய விருப்பத்தை அவளிடம் சொல்லி அதற்கு உதவ வேண்டினான்.


இனி தனக்கு படிக்க விருப்பமில்லை.ஏதாவது தொழில் செய்து பெரிய ஆளாவதுதான் தன் லட்சியம். வெளியே பிறரிடம் வேலைக்கு செல்வதைவிட தன் மாமனின் மினரல் வாட்டர் ப்ளான்ட்டுக்கு போய் தொழில் பழக போவதாகவும் சொன்ன தம்பியை பார்த்தவளுக்கு ஐயோ... என்றிருந்தது.


அவளும் பெரியம்மாவை சிறுவயதிலிருந்தே பார்த்துக்கொண்டு தானே வருகிறாள். எதற்கும் பாகீரதி ஆசைப்பட்டது கிடையாது. பிறரின் மேல் கோபமோ பொறமையோ பட்டதும் கிடையாது. கடவுள் தனக்கென்று கொடுத்ததை எந்த ஒரு மனச்சினுக்கமும் கொள்ளாது அதை அப்படியே ஏற்று வாழ்ந்துக் கொண்டிருப்பவர். அவரின் அதிகபட்ச ஆசையே தன் மகன் நன்கு படித்து பட்டம் பெற்று நல்ல வேலையில் அமரவேண்டும் என்பதுதான்.அதற்கும் வழியில்லாது செந்தில் இப்படி சொல்வது...


“வேணாம்டா செந்தில். பெரியம்மா உன்னை நல்லா படிக்கவைக்கனும்னு ஆசையா இருக்காங்க. நீ இப்படி சொல்றதை கேட்டா அவங்க மனசு ரொம்ப கஷ்டப்படும். கொஞ்சம் யோசிச்சிப் பாருடா.இப்ப இருந்தே படிக்க ஆரம்பிச்சா கண்டிப்பா நீ அடுத்த வருஷம் பாஸாகிடுவடா. படிச்சி டிப்டாப்பா ட்ரஸ் பண்ணி நீ கார்ல ஆபீஸுக்கு போகனும்னு தான் இந்த அக்காக்கும் ஆசை.உனக்கு இந்த தண்ணி கேனை தூக்கற தலையெழுத்தெல்லாம் வேணாம்டா” என தன் தம்பியிடம் கெஞ்சினாள்.


காவ்யா பேச பேச வேலுவின் முகம் இறுகியது. அவள் மறைமுகமாக தன்னைத்தான் கேவலப்படுத்துகிறாள் என எண்ணியவனின் மனம் வேதனையில் வாடியது.


“அக்கா... நான் சொல்றது உனக்கு புரியவே இல்லையா? இந்த தடவை பாஸானாலும் அடுத்த கிளாஸ்? எனக்கு படிக்கறதுல கொஞ்சம் கூட இன்ட்ரெஸ்ட் இல்லக்கா. என்கூட படிச்சவனுங்க படிச்சி முடிச்சி அவனுங்க லைப்ல செட்டிலாகறதுகுள்ள நான் என்னோட லைப்ல பிஸினெஸ் பண்ணி எங்கையோ போயிருப்பேன்-க்கா. நிச்சயமா நான் சொன்னது நடக்கும். என்னை நம்பி எனக்காக அம்மாகிட்ட ப்ளீஸ் பேசுக்கா”


‘இவ்வளவு உறுதியாய் பேசுபவனிடம் இனி என்ன பேசி என்ன பிரயோஜனம்? இவன் சொல்வதும் சரிதானே. படித்தால் மட்டும்தான் வாழ்க்கையில் உயரமுடியுமா என்ன?சுயதொழில் செய்து பெரியமனிதன் ஆக முடியாதா? இங்குள்ள பெரிய பணக்காரர்கள் தொழிலதிபர்கள் எல்லாம் அப்படி வந்தவர்கள் தானே?’ நினைத்தவள் தன் தம்பிக்காக பெரியம்மாவிடம் தூது போக தன்னை தயாராக்கிகொண்டாள்.


எடுத்த எடுப்பிலேயே உண்மையை சொன்னால் பாகீரதி சம்மதிக்க மாட்டாள் என்பதையறிந்தவள், பகல் முழுதும் வீட்டில் சும்மா இருந்து பொழுதை வீணடிக்காமல் செந்தில், வேலுவின் வாட்டர் ப்ளான்ட்டுக்கு போவானென்றும் மாலையில் தன்னிடம் வந்து படிப்பானென்றும் சொல்லி செந்திலின் ஆசைக்கு அனுமதி வாங்கினாள்.


எப்படியோ தம்பி நினைத்ததை அடைய வழிவகை செய்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வீட்டிற்கு செல்ல கிளம்பியவள் அப்போதுதான் முகம் இறுகி அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.’ என்ன ஆச்சு என் முசுட்டு மாமனுக்கு! மூஞ்சிய முழநீளத்துக்கு தூக்கிவச்சிருக்கு?’ எண்ணிக்கொண்டே கதவு வரை சென்றவள் திரும்பி வேலுவைப் பார்த்தாள்.


எப்போதும் இவள் இங்கு வந்து திரும்பும்போது அங்கு அவன் இருந்தால் அவளுடன் கண்டிப்பாக வீடுவரை துணைக்கு வருவான்.எதுவும் பேசிக் கொள்ளாத போதும் தெருமுனையில் நின்று அவள் வீட்டினுள் செல்லும் வரை பார்த்துவிட்டே செல்வான்.ஆனால் இன்றோ அப்படி எந்த எண்ணமும் இல்லாது அங்கேயே அமர்ந்திருக்கவே ‘சம்திங் ராங்’ எண்ணியவள் அவனிடம் வந்தாள்.


“இருட்டிடுச்சு. எனக்கு கொஞ்சம் துணைக்கு வரீங்களா?” அவள் நேரிடையாக கேட்டதும் கொஞ்சம் மனம் குளிர்ந்தவன் ஏதும் பேசாது அவளின் முன் சென்றான்.


வீட்டிலிருந்து சிறிது தூரம் செல்லும்வரை அமைதியாக இருந்தவள்,” என்ன எப்போதும் செய்யற வேலைய கூட நாங்க இனி கேட்டுதான் வாங்கனுமோ?” என்றாள் உரிமை நிறைந்த குரலில்.


“டிப்டாப்பா டிரஸ் பண்ணாத நான் உங்க கூட வந்தா அசிங்கமா பீல் பண்ணுவீங்களோன்னு தான் நான் அங்கேயே இருந்துட்டேன்” கொஞ்சம் நக்கல், நிறைய வருத்தம் நிறைந்திருந்த குரலைக் கேட்டவள் அங்கேயே அழுத்தமாக நின்றதோடல்லாமல் அவனை அப்படியே ஒரு பார்வைப் பார்த்தாள்.


“நீ எப்படி இருந்தாலும் நீ... நீ மட்டும் தான் காலத்துக்கும் என்கூட வரனும்னு நான் ஆசைப்படுவேன்னு சொல்லித்தான் உனக்கு புரியனுமா மாமா?” என்றவள், அவனின் பதிலை எதிர்பாராது தங்களின் வீடிருக்கும் தெருமுனையில் திரும்பி வேகமாக நடந்தாள்.


வீட்டின் வெளி கேட்டிற்கு அருகில் வந்ததும் அனிச்சை செயல் போல தெருமுனையைப் பார்க்க அங்கே அதற்காகவே காத்திருந்தவன் அவளைப்பார்த்து முகம் முழுதும் பல்லாக சிரித்து வைத்தான்.அந்த சிரிப்பை கழுத்தை ஒரு திருப்பு திருப்பி அலட்சியப்படுத்தியவள் அவனை முறைத்துக்கொண்டே வீட்டினுள் சென்றாள்.அப்போதும் அதே சிரிப்புடனே அங்கேயே தன்னுடைய வலக்கையால் மார்பை தடவிக்கொண்டு நின்றுக் கொண்டிருந்தான் வேல் முருகன்.