சூரசம்ஹாரம் - கதை திரி

Anuya

Well-known member
Apr 30, 2019
262
128
63
அத்தியாயம் 3:

மாலை நேரம்... சூரியன் தனதுரிமையை விட்டுக்கொடுக்கமனமின்றி இன்னும் சிறிது நேரம் தங்கிவிட்டுத்தான் செல்வேன் என வானில் அடம்பிடித்துக் கொண்டிருக்க, அவனின் ஒளியால் ஒளிவீசிக்கொண்டிருக்கும் வெண்ணிலவோ அவனைப் பகைத்துக்கொள்ளமுடியாமல் மேகத்தினூடே மறைந்து நின்றுக்கொண்டு அவன் எப்போது செல்வான் என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தது.


செந்திலைப் பற்றி விசாரிக்க தண்டபாணியின் இடத்திற்கு வந்திருந்தனர் தேவாரமும் திருவாசகமும். அவனைப் பற்றி எந்த ஒரு தவறான தகவலும் திரு.
கொடுத்த குறிப்பில் இல்லாததால் புகாரை எந்த போக்கில் கொண்டு செல்வது என புரியாத தேவாரம் தன்னுடைய விசாரணையை தண்டபாணியிடமிருந்து துவங்க எண்ணினான்.


செந்திலைப் பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ள வரலாமா என போனில் தேவாரம் கேட்டதும் முதலில் அதிர்ந்த தண்டபாணி பின் ஒருவாறு சமாளித்து தன்னுடைய கட்சி ஆபிஸிற்கு இவர்களை வரச்சொன்னார். அவரின் சில நொடிநேர மௌனத்தை தேவாரம் தன் மனதில் குறித்துக்கொண்டு, அவர் சொன்ன இடத்திற்கு திருவுடன் சென்றான்.


செந்திலின் அன்னையிடம் முதலில் விசாரணையை துவக்க நினைத்தான் தேவாரம். ஆனால் மகன் தன் ஆசைப்படி படித்து ஒரு நல்ல வேலையில் அமராமல், ஒருவரின் வீட்டில் எடுபிடி வேலை செய்துக்கொண்டிருப்பது செந்திலின் அன்னைக்கு அவன் மேல் ஒரு மனக்கசப்பை கொடுக்க, அதனால் அவர்களின் உறவு கடந்த மூன்று வருடங்களாகவே சுமூகமாக இல்லை என்பதை திருவாசகம் மூலம் அறிந்தவன் தன் விசாரணையை பின்பு அவரிடம் வைத்துக்கொள்ளலாம் என்றெண்ணி, இங்கு வந்தான்.


இவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கு அமர்ந்திருந்தவன்,டிடி போனில் கட்சித்தலைவரிடம் இடைதேர்தல் விஷயமாக பேசிக்கொண்டிருப்பதாகவும், அதை முடித்து அவர் வரும்வரை இங்கே அமர்ந்திருக்க சொன்னான். அதையேற்று அங்கு அமர்ந்த தேவாரம், தன்னுடைய கண்களை அவ்வறையின் நாலாபக்கமும் சுழற்றினான்.


“ஏன் தல! நிஜமாவே இவர் தலைவர்கிட்டையா போனில் பேசிட்டு இருப்பார்?தலைவர்கிட்ட ஸ்டெயிட்டா பேசற அளவுக்கு இந்த வட்டம் என்ன அவருக்கு அவ்வளவு நெருக்கமா?” காத்திருக்கும் நேரத்தில் திருவிடம் கடலை போட எண்ணி பேச்சை துவங்கினான்.


“ஆமாம் சார்! இவர் கொஞ்சம் சூதுவாது தெரியாத வெள்ளந்தி ஆளு.அதனால தலைவருக்கு இவரை பிடிக்குமாம்.கட்சி பணத்தோட சேர்த்து தன்னோட சொந்த பணத்தையும் தொகுதில போன தடவை கவுன்சிலரா இருந்தப்ப செலவு பண்ணி நல்ல பேரை சம்பாதிச்சி வச்சிருக்கார். அதுவுமில்லாம இந்த ஏரியால இவங்க ஆளுங்க அதிகம்.அதனால இந்த இடைதேர்தல்ல இங்க இவருக்கு சீட் கொடுப்பாங்கன்னு பேசிக்கறாங்க.அதைப்பத்தி கூட இப்ப பேசிட்டு இருக்கலாம் சார்” திரு இப்படி சொன்னதும்,


“அப்போ... நாம இப்ப இந்த தொகுதியோட வருங்கால எம்எல்ஏ கிட்ட பேசவந்திருக்கோம்னு சொல்லு.சோ... நாம கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியதுதான்...” தேவாரம் ரகசியம் பேசி முடிக்கவும் டிடி அவர்களை அழைக்கவும் சரியாக இருந்தது.


“என்ன தம்பி ! விசாரிக்க சொன்னவனையே, கைதி போல விசாரிக்க வந்துட்டீங்க?”கேட்ட டிடியின் குரலில் கிண்டல் இருந்தாலும் முகத்தில் சிறிது சுணக்கம் இருக்கத்தான் செய்தது.அது திருவிற்கு தெரிந்ததோ இல்லையோ தேவாரத்திற்கு நன்றாக தெரிந்தது.


டிடி தன்னிருக்கையில் வசதியாக சாய்ந்துக் கொண்டு இவர்களை பார்த்து கேட்டதும், “என்ன சார்... விசாரணை அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க! இது சும்மா ஜஸ்ட் ஒரு என்கொயரி.இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா சார். உங்க கிட்ட விசாரணைன்னு நெருங்க முடியுமா என்ன? நீங்க நெருப்புன்னு இந்த ஊரே பேசுதே” என கொஞ்சம் கூட கூசாமல் டிடியை புகழ்ந்து வார்த்தைகளை அள்ளி வீசிய தேவாரம்,


“காணாம போனவன் உங்ககிட்ட தான் கொஞ்ச வருஷமா வேலையில் இருந்திருக்கான்.


அதுவுமில்லாம இங்க இருந்து தான் காணாம போயிருக்கான். அதனால அவனை எப்போ எங்க கடைசியா பார்த்தீங்க, அவன் எப்படி...எங்க தங்கியிருந்தான் இப்படி சில தகவல்கள் தெரிய வேண்டியிருக்கு. அதான் உங்களை பார்க்க வந்தோம்” என பவ்யமாக சொல்லிக் கொண்டிருந்தான்.


அதைப் பார்த்த திருவோ,‘என்ன சாமார்த்தியமா பேசி விஷயத்தை வாங்கறார் பாரேன் இவர்! இதான் இந்த சமத்து தான் இவரை இங்க கொண்டுவந்திருக்கு. இவர் இதோட நிக்காம இன்னும் இன்னும் மேல போகனும் என்னப்பனே!’ என மானசீகமாக வேண்டிக்கொண்டிருந்தான்.


கடந்த மூன்று நாட்களாக விபத்தில் சிக்கி யாராவது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்களா என்பதையும்,மார்ச்சுவரியில் உரிமை கோரி வராத அனாதை பிணங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் விசாரித்தாகிவிட்டது. அங்கு எந்த சாதகமான தகவலும் கிடைக்காத பட்சத்தில் தான் செந்திலை பற்றி உங்களிடம் கேட்டாலாவது ஏதாவது தெரியவருமென வந்தேன் என தேவாரம் சொன்னதை கேட்டதும் அவனின் கூற்றை மறுக்கமுடியாத தண்டபாணி விசாரணைக்கு தயாரானார்.


அதன் பிறகு அரைமணி நேரமாக தண்டபாணியிடம் பல கேள்விகள் கேட்டும் தேவாரத்திற்கு பலன் ஒன்றும் கிடைத்தப்பாடில்லை.போன வாரம் சனிக்கிழமை மாலை வீட்டில் காரை விட்டு சென்றவன், அதன் பின் வரவில்லை என்பது மட்டும்தான் அவரிடமிருந்து கிடைத்த உருப்படியான செய்தி. மற்றதெல்லாம் ஏற்கனவே திரு கொடுத்த ஃபைலில் இருந்தது தான்.


“அவன் காணாம போயிட்டான்னு உங்களுக்கு எப்போ தெரிய வந்தது சார்?” தேவாரம் இப்படி கேட்டதும்,


“ஞாயிற்றுகிழமை வேலைன்னு ஏதாவது இருந்தா மட்டும் அவன் இங்க வருவான். இல்லன்னா மறுநாள் தான் வருவான். அப்படி அவன் திங்கக்கிழமை சாயங்காலம் வரைக்கும் வராததால நான் அவன் தங்கியிருந்த வீட்டுக்கு ஆள் அனுப்பி பாக்க சொன்னேன்.அவன் அங்கேயும் இல்லன்னு தெரிந்து, அவன் வழக்கமா போற இடத்துக்கெல்லாம் ஆளனுப்பி விசாரிச்சப் பிறகுதான் எங்களுக்கு அவன் காணோம்னு தெரிந்தது.
பிறகுதான் நான் நம்ம ஏட்டுகிட்ட சொல்லி அவனை தேட சொன்னது” சொல்லி முடித்தவரின் வார்த்தைகளில் பொய் இருப்பதாக தேவாரத்திற்கு தெரியவில்லை.


அப்போது டிடிக்கு போனில் அழைப்பு வரவும் அதில் பேசி வைத்தவரின் நடவடிக்கைகள் அதன் பின் மாறிப்போயின.அடுத்து தேவாரம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவசரவசரமாக பதிலளித்து அங்கிருந்து இவர்களை கிளப்புவதிலேயே அவர் குறியாக இருந்ததைப் போல இவனுக்கு தெரிந்தது.


அவன் காணாமல் போன அன்றிலிருந்து வீட்டில் ஏதாவது பணமோ நகைகளோ விலையுயர்ந்த பொருட்களோ அவனோடு சேர்ந்து காணாமல் போனதா என்று இவன் கேட்டுக் கொண்டிருக்கும் போது, பருத்த உருவம் கொண்ட பெண்மணி ஒருவர் உள்ளே வந்தார். இவர்களின் யூனிஃபார்மை கண்டதும் அவரின் கண்களில் மிரட்சி தெரிய,


:என்னங்க... என்ன ஆச்சு? ரெய்டா?அதுக்கெல்லாம் நீங்க வார்த் இல்லன்னு இந்த ஏரியால இருக்க சின்ன புள்ள கூட இவங்ககிட்ட சொல்லுமே... என்ன விஷயம்?” எனக் கேட்டார் கலக்கக் குரலில்.


அவரின் புத்திசாலிதனக் கேள்வியையும் அதனோடு தொடர்ந்த பதிலையும் கொண்டே அவரின் திறமையை அறிந்துக்கொண்ட தேவாரம் அமைதிகாக்க,


“சீரியஸ்ஸா ஒன்னுமில்ல மேடம்! செந்தில் காணாம போனதைப் பற்றி சார் விசாரிக்க சொல்லியிருந்தார். அதான் அவனைப்பற்றி தெரிஞ்சுக்க வந்தோம்” என்றான் திரு.


மனைவியின் பேச்சைக்கேட்டு அவரை ‘தத்தி... தத்தி!‘ என மனதினுள் திட்டிக்கொண்டிருந்த டிடி, “இந்த தகவலை உன்னை யாரு இப்ப இவகிட்ட சொல்ல சொன்னது?’ என திருவை முறைக்க,


அவரின் மனைவியோ, “ஐயோ... தங்கமான புள்ளைங்க அவன். அம்மா அம்மான்னு என்காலையே சுத்தி வருவான். ரொம்ப பொறுமைசாலி. இந்த காலத்து பிள்ளைகளைப் போல பட்டுன்னு ஒருவார்த்தை பேசமாட்டான். நான் என்ன சொன்னாலும் அமைதியா கேட்டுப்பான். அவந்தாங்க என்னோட கார் டிரைவர். ஆனா நான் எப்பவும் அவனை அப்படி நடத்தினது கிடையாதுங்க. என் சொந்தப் பிள்ளையை போல தான் நடத்துவேன். நம்பி என்னோட மூனு பொண்ணுங்களையும் அவன்கூட தனியா அனுப்புவேன். நாம என்னதான் உரிமை கொடுத்தாலும் அவனோட எல்லையவிட்டு வரமாட்டான்” சொல்லிக் கொண்டே திருவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டவர்,


“ரொம்ப பொறுப்பு. அவன் இல்லாம இந்த மூனு நாளா எனக்கு கை ஓடைந்தாபோல இருக்கு.இப்பக்கூட கடைக்கு போகனும்.அவன் இல்லாததால இங்க வந்து இவரை தொல்லைப் பண்றேன். எங்க போனான்னே தெரியல. நாங்களும் ஏதும் அவனை சொல்லல.அவன் அப்படி திட்றாப்போல நடந்துக்க மாட்டான்.அவன் அப்படி எங்கதான் போயிருப்பான் சார்?” என திருவின் அருகில் அமர்ந்திருந்த தேவாரத்திடம் அவனின் மேலே விழுந்து விடுவதைப்போல சாய்ந்துக்கொண்டு கேட்டார்.


அவர் அருகில் வருவது இடக்கண்ணின் ஓரவிழியில் தெரிந்ததும் ஃபானி புயல் தன்னை சுருட்ட வருவதை போல அச்சம் கொண்ட திரு, அலறியடித்துக்கொண்டு நாற்காலியோடு ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தான்.இதைப்பார்த்த தேவாரம் வந்த சிரிப்பை வாயில் அடக்க, டிடியோ தலையில அடித்துக்கொண்டார். இதையெல்லாம் கண்ணிலோ கருத்திலோ கொள்ளாத மிஸஸ்.வட்டம்,


”அவன் கூட படிச்ச பையன் ஒருத்தன் சைனா பஜார்ல செல்போன் கடை வச்சியிருக்கான்னு என்கிட்டே சொல்லியிருக்கான்.எங்களுக்கு கூட அவன்கிட்ட இருந்து போனெல்லாம் வாங்கி தந்தான். அவன் ஒருத்தன் தான் இவனோட பிரெண்ட். ஒருவேளை... அவனை பார்க்க போன இடத்துல அடிகிடி பட்டு ஆஸ்பிட்டல எங்கன்னா கிடக்கறானோ? கடவுளே... அப்படி ஏதாவது இருந்தா பார்த்து கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடிச்சிக் கொடுங்க சார். உங்களுக்கு புண்ணியமா போகும்.அவனுக்கு வைத்தியம் ஏதாவது தேவைப்பட்டாகூட நாங்க பார்த்துக்குறோம்” படபடத்து ஓய்ந்தார்.


டிடி எதற்கு தங்களை அவசரமாக இங்கிருந்து கிளப்ப நினைத்தார், திருவை எதற்கு முறைத்தார் என்பது இப்போது தேவாரத்திற்கு புரிந்தது. செந்திலைப் பற்றி தாங்கள் இவரிடம் ஏதும் கேட்காமலேயே இப்படி பேசுபவர், அவனைப் பற்றி விசாரிப்பதற்கு தாங்கள் இங்கு வந்திருப்பது தெரிந்துவிட்டால்... அவனைப் பற்றிய பலவருடக்கதைகளைப் பேசிக்கொண்டு இங்கேயே அமர்ந்துவிடுவார் என்பதாலேயே இவர் அப்படி செய்தார் எனப் புரிந்துக் கொண்டவனுக்கு அவரின் மனைவி மூச்சு விடாமல் பேசியது சிரிப்பை வரவைத்தாலும் முதலாளி அம்மாவிடம் இப்படி அன்னையைப் போல பாசத்தை பெற்ற செந்தில் நிச்சயமாக நல்லவன்தான் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.


இவர் இவ்வளவு சொல்லியப் பிறகு அவர்கள் வீட்டில் அவன் காணாமல் போன அன்றிலிருந்து அவனோடு சேர்ந்து ஏதாவது காணாமல் போனதா என்று கேட்பது அபத்தமாகப்பட்டாலும் கடமைக்காக தேவாரம் அப்படி டிடியிடம் கேட்டதும்,


அவரை முந்திக்கொண்டு அவரின் மனைவி,“என்னங்க சார் நான் இவ்வளவு சொல்லியும் இப்படி கேட்கறீங்க? அவனை நம்பி நான் எங்க பெட்ரூமில் கூட விட்டிருக்கேன்” என்றார் கொஞ்சம் கோபத்தோடு.


“உன்னையா கேட்டாங்க? இல்ல இதெல்லாம் உன்னை சொல்ல சொன்னாங்களா? லூசாடி நீ? இந்தா கார் கீ. நான் பேசி முடிச்சிட்டு வரவரைக்கும் கார்ல உக்காரு. போடி! போ இங்கிருந்து” காரின் சாவியை தூக்கி எரிந்ததோடல்லாமல் மனைவி மேல் வார்த்தைகளாலும் எரிந்து விழுந்தார் டிடி.


உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்பதை போல அவரை நோக்கி ஒரு பார்வையை வீசியவர், “இன்ஸ்பெக்டர் தம்பி! எப்படியாவது அந்த புள்ளைய சீக்கிரம் கண்டுபிடிச்சிக் கொடுத்துடுங்கப்பா” என்று சொல்லிய பிறகே அங்கிருந்து சென்றார்.


வெளியே சென்றுக்கொண்டிருக்கும் மனைவியை முறைத்தவர், “அவ சரியான லூசு! யார்கிட்ட,எங்க,என்ன பேசறதுன்னு தெரியாம எல்லாத்தையும் உளறிவைப்பா.யாரை எங்க வைக்கறதுன்னு தெரியாம எல்லாரையும் நம்பி உள்ளவிட்டு என் உசுரை வாங்குவா” கொலைவெறியோடு பல்லைக் கடித்துக்கொண்டு வார்த்தைகளை துப்பினார்.அங்கிருந்த இருவரும் அவரை அதிசயமாக பார்ப்பதை உணராதவரோ,


“அதான்... நான் உங்களை வீட்டுக்கு வர சொல்லாம இங்க வர சொன்னது. ஆனா பாருங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இவளும் இங்க வரப் போறேன்னு போன் பண்றா. எல்லாம் என்னோட நேரம்.வேற என்னத்தை சொல்றது” என்று மேலும் புலம்பினார்.


புரிந்தது என அவரிடம் தலையாட்டிய தேவாரம் செந்தில் குடியிருந்த வீட்டைப் பற்றிக் கேட்டு, அங்கு அவனைப் பற்றி விசாரித்துவிட்டு ஏதாவது முக்கியமான தகவல் கிடைத்தால் அவரிடம் சொல்வதாக சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.


“தம்பி!” என்றழைத்து அவனை நிறுத்தியவர், சில நொடி அமைதிக் காத்து, “அவன் வீட்டுல ஏதாவது கிடைச்சதுன்னா என்கிட்டே உடனே தகவல் தருவீங்க இல்ல.எதாயிருந்தாலும் முதல்ல என்கிட்டே சொல்லுங்க” என ஒரு அலைப்புறுதலோடு சொன்னவரை புருவம் சுருக்கி பார்த்த தேவாரம் சம்மதமாய் தலையாட்டினான்.


அவன் அங்கிருந்து சென்றதும் அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கண்களை மூடிய தண்டபாணி, அவனைப் பற்றி விசாரிக்க சொன்னது சரியா? தேவையில்லாமல் நானாக வம்பை விலைக் கொடுத்து வாங்கப்போகிறேனா... அங்கு ஏதாவது எக்குத்தப்பாய் இவர்களிடம் சிக்கிவிட்டால்...? ஆனால் அதற்காக அவனை தேடாமல் எப்படி விடுவது? இன்னும் நான்கு நாட்களில் அவன் கிடைக்காவிட்டால் தன்னுடைய நிலைமை...?’ இனி எதுவந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் காலம் தன்னை நிற்கவைத்துவிட்டதை எண்ணி மனம் நொந்தவர், யோசித்தது போதும் என எண்ணி அங்கிருந்து கிளம்பினார்.
 

Anuya

Well-known member
Apr 30, 2019
262
128
63
அத்தியாயம் 4:

செந்தில், வேலுவிடம் வேலைக்கு வந்து ஆறு மாதங்கள் சென்றிருந்தன. படிப்பில் அவனுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்ததே தவிர எந்த வேலையாக இருந்தாலும் அதை அவனின் கண் பார்த்தால், கை செய்தது. அந்த அளவிற்கு சூட்டிகையாக இருந்தான்.


எந்த வேலையாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் செய்தான்.வேலு முதலில் அவனை வாட்டர்கேன் டெலிவரிக்கு அனுப்பாமல் ப்ளான்டிலேயே இருக்க சொன்னான்.ஆனால் இவனோ அதை ஏற்காமல் நாலு பேரிடம் பழகினால் தான் சீக்கிரமாக பெரிய மனிதனாக முடியும் என பெரிய மனிதனைபோல பேசி, காலையும் மாலையும் வீடுவீடாக சென்று டெலிவரியும் செய்தான்.


அப்படி ஒருநாள் இவன் தண்ணீர் கேனை தூக்கிக் கொண்டு இரண்டு மாடிஏறி செல்வதை பார்த்த காவ்யா, அன்று மாலையே வேலுவிடம் சண்டைக்கு வந்து நின்றாள்.


“உங்களுக்குதான் தண்ணிகேனை தூக்கி பிழைக்கனும்னு தலையெழுத்து . எந்தம்பிக்கு என்ன வந்தது? அவனை ஏன் அந்த வேலையெல்லாம் செய்ய சொல்றீங்க?” புசுபுசுவென்று மூச்சைவிட்டுக்கொண்டு மூக்கு விடைக்க தன்னிடம் சண்டைக்கு நின்றவளை பார்த்தவனுக்கு கோபத்திற்கு பதில் அவளை சீண்டிப்பார்க்கும் ஆசை வந்தது.


“வேலைன்னு வந்துட்டா எல்லாம்தான் செய்யனும். அத செய்யமாட்டேன், இத செய்யமாட்டேன்னு சொன்னா அவனை உன்கூட வீட்டுல வச்சி பூட்டிக்கோ. எனக்கொன்னும் குறைய போறதில்ல.அவன் இங்க வரலன்னா அவனைப் பார்க்க வரேன்னு சொல்லி இங்க வர உன்னோட தொல்லை இல்லாம நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்”


வேலு இப்படி சொன்னதும் நின்ற இடத்திலிருந்து வேகமாக வந்தவள் அவனின் டிசர்ட் காலரை இறுக்கிப் பிடித்து, “நான் உங்களுக்கு தொல்லையா? இல்ல தொல்லையான்னு கேட்டேன்” என்றாள் கோபமாக.


தன் சட்டையில் உரிமையாக கைவைத்து, கண்ணை உருட்டி தன்னை மிரட்டிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு குதூகலம் கொப்பளிக்க,


“ஆமா! இல்லையா பின்ன? நிச்சயமா நீ எனக்கு தொல்லைதான்!” என்றான் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து.


தான் கேட்டதை நம்பமுடியாது ஒரு வினாடி மலைத்து நின்றவள்,”ஹோ... அவ்வளவு தூரம் வந்தாச்சா? என்னை தொல்லைன்னு நினைக்கிறவங்ககிட்ட இனி நான் பேசினேன்னா என்னை ஏன்னு கேளுங்க. எங்களுக்கும் மானம் மரியாதை எல்லாம் இருக்கு” என்றாள் திடீரென முளைத்த ரோஷத்தோடு.


“அப்போ அதெல்லாம் இவ்வளவு நாளா எங்க போயிருந்தது?”கேட்டவனின் குரல் அவளின் பேச்சால் விளைந்த சிரிப்பால் நிறைந்திருந்தது.


அதுவேறு இவளை இன்னும் உசுப்பேற்ற, “ம்ம்ம்... இவ்வளவு நாளா ஒருத்தங்க மேல நான் வச்ச கண்மூடித்தனமான காதல் அதையெல்லாம் மறைச்சு வச்சியிருந்தது.இப்ப புத்தி தெளிந்து போச்சு” என்றவளின் குரலில் கண்ணீர் கலந்திருக்கவும் இத்தனை நேரம் அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தவனுக்கு அதற்கு மேல் தாங்கவில்லை.


தன்னைவிட்டு விலகி வெளியே செல்ல திரும்பியவளின் கைகளை எட்டிப் பிடித்தவன், ”ஹேய் லூசு! சும்மா விளையாண்டா அது கூட புரிஞ்சிக்காம முறுக்கிட்டு கிளம்பற” என்றான் கொஞ்சலாக.


“ஹாங்... இப்படியா விளையாடுவாங்க? அப்பப்ப இப்படித்தான் என்ன நாம மறச்சி வச்சாலும் உள்ளயிருக்கறது எல்லாம் தானா வெளிய வரும்” எங்கோப் பார்த்துக் கொண்டு இவள் சொல்ல,


இன்னும் கொஞ்சம் கூட தன் முறுக்கை குறைக்காதவளை நெருங்கி இறுக்கியவன்,,“ஆமாம்டி! பெருசா உண்மைய கண்டுபிடிச்சிட்ட.அப்படி உள்ளயிருக்கறது எல்லாம் வெளிய வந்திருந்தா இந்நேரம் நீ இப்படியா நின்னுட்டு இருப்ப?” என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டதோடு ஒரு மார்க்கமாய் அவளைப் பார்த்தும் வைத்தான்.


அவன் சொல்லவந்ததை அவனின் பார்வையே உணர்த்த, “ச்சீ... போ மாமா!” என்றவள் தன் கோபத்தை விடுத்து அவனிடம் சரணடைந்தாள்.


காவ்யா, வேலுவின் தாய்மாமன் மகள். பழனியப்பனின் தங்கையும் வேலுவின் அம்மாவுமாகிய தேவகி, பழனியின் நண்பன் வாசுதேவனைக் காதலித்தாள். தனக்கு ஒரே சொந்தம் என்றிருந்த வயதான தாயுடன் வாசு நண்பனின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்தான்.அவனுக்கு தங்கையை கொடுக்க பழனிக்கு விருப்பம் இருந்தாலும் வேறு இனமான வாசுவிற்கு பெண்கொடுத்தால் தன் சாதிசனம் தன்னை ஒதுக்கி வைத்துவிடும் என்ற அச்சத்தில் மறுத்துவிட்டான்.


அண்ணனின் எண்ணத்தை நன்கறிந்த தேவகி, இதற்கு மேலும் பழனியின் மனம் மாறும் என காத்திருந்தால்,வேறொருவனை தனக்கு மணமுடித்து வைத்துவிடுவார் என அஞ்சி வீட்டைவிட்டு வெளியேறி வாசுவிடம் தஞ்சம் புகுந்தாள்.அவனும் அவனின் தாயும் இவளை மகிழ்ச்சியோடு தங்களின் வீட்டு மருமகளாக்கிக் கொண்டனர்.


ஓடிப்போய் தன் சொந்தங்களின் முன் அசிங்கப்படுத்திய தங்கையின் மீதும் அவளுக்கு துணைபோன நண்பன் மீதும் கடுங்கோபம் கொண்ட பழனி, வேலு பிறந்தபின்பும் கூட அவர்களிடம் சொந்தம் பாராட்டவில்லை. தன்னுடைய தூரத்து சொந்தமான வள்ளியை மணந்துக்கொண்ட போதும் தங்கையை தன் திருமணத்திற்கு அழைக்கவில்லை.


பழனி எப்படி நடந்தாலும் இளவயது தோழிகளான வள்ளியும் தேவகியும் அடிக்கடி வெளியே சந்தித்து தங்களின் உறவை வளர்த்துக் கொண்டிருந்தனர் .அப்படிப்பட்ட சந்திப்பின் போது தங்களின் தாய்க்கு துணையாக வந்த காவ்யாவும் வேலுவும் அந்த வயதுக்கே உரிய நட்புடன் நண்பர்களாக பழகத்தொடங்கினர்.


சிறிது வளர்ந்ததும் தாயின் மூலம் தன் தாய் மாமனின் முரட்டுப் பிடிவாதத்தை அறிந்த வேலுவோ அவன் மேல் கொண்ட கோபத்தினால் காவ்யாவிடமிருந்து விலக தொடங்க, அதே போல் தன் தாயிடமிருந்து அத்தையின் காதல் காவியத்தை அறிந்துக்கொண்ட காவ்யாவோ தானும் அதைபோன்ற ஒரு காவியத்தை படைக்க எண்ணி அந்த அறியா வயதிலேயே வேலுவிடம் தன் உறவின் துணைக்கொண்டு நெருங்க தொடங்கினாள்.


நண்பனின் இல்ல விழாவில் வாசு குடும்பத்தோடு கலந்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சாலைவிபத்தில் சம்பவ இடத்திலேயே தம்பதியினர் இறந்துபோக,அவர்களுடன் பயணித்த வேலு நீண்ட நாள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி ஒருவழியாக பிழைத்து வந்தான்.


தங்கையின் இந்த திடீர் மரணம் பழனியை நிலைக்குலைய வைக்க, இறுதிப் பயணத்திற்கு வந்தவர் பகையை மறந்து மருமகனை தான் வளர்த்துக் கொள்வதாக சொல்லி வாசுவின் அன்னையிடம் கேட்டார். தனக்கென இருக்கும் ஒரே சொந்தத்தையும் இழக்க விரும்பாத அவர், வேலுவை தர மறுக்க, பழனி அன்றுதான் முதல் முதலாக தன்னோடு வந்து விடும்படி வேலுவிடம் நேரடியாக பேசினார். மகனை இழந்து தவிக்கும் தன் பாட்டியை தானும் தனியாக விட்டு செல்வது சரியல்ல என நினைத்த பதினாறு வயதான வேலு, மாமனிடம் தன் மறுப்பை கூறினான்.


இத்தனை நாள் பேசாத தானே இறங்கிவந்து கூப்பிட்டும் தன்னுடன் வரமறுத்த மருமகன் செயல் பழனிக்கு கோபத்தை வரவழைத்தது. அன்றிலிருந்து தன் மருமகனை எங்கு பார்த்தாலும் முறைத்துக்கொண்டே திரிந்தார்.


பெற்றோரின் மரணத்திற்கு பிறகு வராத படிப்பை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது வீண்வேலை என்பதை புரிந்துக்கொண்ட வேலு, கிடைத்த சிறுசிறு வேலைகளை செய்யத்தொடங்கினான். தொழிலாளியாக நான்கு வருடங்கள் கற்றுக்கொண்ட பாடம் அவனை சிறுவயதிலேயே முதலாளியாக மாற்றியது.


இயற்கையாய் கிடைக்கும் தண்ணீரை விற்று நல்ல லாபம் பார்க்கலாம் என்பதை தெரிந்துக் கொண்டவன், பெற்றோர் விட்டுச்சென்ற பணத்தை முதலீடாக கொண்டு மினரல் வாட்டர் ப்ளான்ட் ஒன்றை தொடங்கினான். ஏற்கனவே வியாபாரத்தில் இருந்த நெளிவுசுளிவுகளை கற்றுதேறியவனுக்கு இந்த தொழில் நாளடைவில் நல்ல வருமானத்தை ஈட்டித்தந்தது.


அத்தியாவசியமான நேரத்தில் தன் பாட்டிக்கு துணையாகவும், தான் தொழில் தொடங்கும் சமயத்தில் படித்தவராய் தனக்கு பக்கபலமாய் உதவிய பாகீரதி மீது மதிப்பும்,தன்னைவிட இளவயதிலேயே தந்தையை இழந்த செந்திலின் மீது பாசமும் வேலுவிற்கு இருந்தது. அதனாலேயே வாலிபனாக இவன் வளரத் தொடங்கியதும் ஆண் துணையில்லாத அத்தையின் வீட்டிற்கு பொறுப்புள்ள தலைமகனாகிப்போனான் இவன்.


சிறுவயதில் தனக்கு மிகவும் பிடித்த அத்தையின் மகன் என்ற நினைப்பில் வேலுவிடம் பேசத்தொடங்கிய காவ்யா,பருவமடைந்தபோது அவனை தன் வருங்காலமாய் நினைக்க தொடங்கினாள்.எப்போது எப்படி என்று அவளுக்கு தெரியாமலே அவள் வேலுவின் மேல் வைத்த பாசம்,நேசமாக உருவெடுத்திருந்தது.


முதலில் காவ்யா வலியவந்து பேசத் தொடங்கிய போது அவளை கண்டுக்கொள்ளாமல் சென்றவன், நாட்கள் செல்லசெல்ல அவளின் அப்பழுக்கற்ற நேசத்தில் தலைக்குப்புற விழுந்துபோனான். ஆனால் அதை நேரிடையாக சொல்லாமல் அவளை சட்டை செய்யாதவனைப் போலவே கெத்துக்காட்டிக் கொண்டிருந்தான்.


பெண் என்பவள் நுண்ணிய உணர்வுகளை கொண்டவள் மட்டுமல்ல, நுண்ணறிவையும் அதிகம் பெற்றவள்.ஒரு ஆண் தன்னை எந்த எண்ணத்தில் பார்க்கிறான், தன்னிடம் எந்த நோக்கில் பழகுகிறான் என்பதை ஒரு பார்வையிலேயே அறிந்துக்கொள்ள கூடிய திறமை அவளிடமுண்டு.


தன் மாமனின் மன மாற்றத்தை எப்போதோ புரிந்துக்கொண்டவள், ‘நானும் பாக்கறேன் நீ எவ்ளோ தூரம் போறியோ போ! எங்க போனாலும் நான் இழுத்த இழுப்புக்கு வந்துதானே ஆகனும் மாமா’ என்ற மிதப்பில் காவ்யா இருந்தாள்.


பாகீ வீட்டிற்கு இவன் வரும் போதெல்லாம் அதை எப்படியோ மோப்பம் பிடித்து அங்கே வருபவள், வாயைவைத்துக் கொண்டு சும்மாயிராமல் அவனிடம் அடிக்கடி வம்பிழுப்பாள்.முதலில் அதை கண்டும் காணாமல் செல்பவன், பிறகு அவளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தான்.இப்படியாக இவர்களின் உறவு சென்றுக் கொண்டிருந்த போதுதான் செந்தில் வேலுவிடம் வேலைக்கு சேர்ந்தான்.


எப்போதாவது கிடைக்கும் தன் மாமனின் தரிசனம் செந்திலின் புண்ணியத்தால் இவளுக்கு அடிக்கடி கிடைத்தது. அதனால் இருவருக்குமிடையே இப்போதெல்லாம் நெருக்கம் அதிகரித்திருந்தது. தம்பியை பார்க்கும் சாக்கில் இங்கு வருபவள் மாமனிடம் காதல் பயிரை வளர்த்துக்கொண்டிருந்தாள்.


பழனிக்கும் மகளின் போக்கு புரிந்துதான் இருந்தது.தங்கையின் ஆசைக்கு சம்மதித்திருந்தால் தன் மருமகன் இப்படி தனியாக இப்போது நின்றிருக்க வேண்டியதில்லை என்ற குறுகுறுப்பில் இருந்தவர்,அவன் தன்னை மதித்து வந்து மகளை கேட்டால் காவ்யாவைக் கொடுக்கும் எண்ணத்திற்கு வந்திருந்தார்.அதனாலேயே மகளை அதிகமாக கண்டிக்காமல், சும்மா வார்த்தைக்கு எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்.


மார்பில் சாய்ந்திருந்தவளை மீண்டும் ஒருதரம் இறுக்கியணைத்தவன்,”அப்படி என்ன என்கிட்டே இருக்குன்னு இப்படி என்மேல உயிரா இருக்க?” தன் நெடுநாளைய சந்தேகத்தைக் கேட்டான்.


“ஏதாவது இருந்தாதான் உசுரை வைக்கனுமா?” தாய் முகத்தை அன்னார்ந்து பார்க்கும் கிளிக்குஞ்சை போல அவனைப் பார்த்து அவள் கேட்டதும், வேலு இதுவரை உணராத ஒருபுதுவித உணர்வை அனுபவித்தான்.


“உன் அளவுக்கு அழகு,கலரு,படிப்பு, உங்க அப்பாகிட்ட இருக்கற வசதி... இப்படி எதுவும் என்கிட்ட இல்ல.கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் உன்கிட்ட நான் முகம் கொடுத்து பேசினது கூட இல்ல. அப்புறம் எப்படி என்பின்னாடியே வந்த? இது உன்னோட காதல் மேல சந்தேகப்பட்டு நான் கேட்கல. உன்னை இப்படி சுத்த வைக்கற அளவுக்கு என்ன என்கிட்டே இருக்குன்னு கேட்கறேன்” உள்ளத்தில் இருப்பதை உண்மையாக கேட்பவனைப் பார்த்து,


“தெரியல மாமா! அப்படி என்ன உன்கிட்ட இருக்குன்னு நிஜமாவே எனக்கு தெரியல.நீ எனக்குதான்! எனக்காகதான் என்னோட அத்தை உன்னை பெத்ததுன்னு மட்டும்தான் மாமா எனக்கு தெரியும். வேற ஒன்னும் எனக்கு தெரியாது” கண்ணைப் பார்த்து பேசியவளின் காதலில் கரைந்து போனான் வேலு. இந்த நேசத்தை எப்போதும் எதற்காகவும் இழக்க கூடாது என்று முடிவெடுத்தவன்,


“இவ்வளவு தூரம் பேசிட்டு எங்க அப்பாக்கு பிடிக்கல,அம்மா அழறாங்கன்னு என்னை விட்டுட்டு போக நினச்ச... வீட்டுக்கு வந்து உன்னை வெட்டுவேன்டி” தன் காதலை கோபமாக வெளிப்படுத்தினான்.


ஆத்திரமாய் பேசியவனைப் பார்த்து கொஞ்சம் கூட அசராதவள்,“ஹொய் மாமா! பருத்திவீரன் டைலாக் எல்லாம் என்கிட்டே வேணாம் சொல்லிட்டேன். செத்தாலும் உன்னையும் கூட கூட்டிட்டு தான் போவேன்.சும்மா ஏதாவது சால்ஜாப்பு சொல்லி, என்கிட்டே இருந்து எஸ் ஆகலாம்னு கனவெல்லாம் காணாதடி மாப்ள” சொல்லிக்கொண்டே அவனின் காதை திருகியவள்,


“எங்க அப்பாகிட்ட வந்து ஒழுங்குமரியாதையா நீ பொண்ணைக் கேட்டு வந்தா... தாலிய நீ கட்டலாம். இல்லன்னா நான் உன் வீடு புகுந்து உனக்கு தாலிக் கட்டிடுவேன்.உனக்கு எது வசதின்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்றாள் கூலாக.


அவளின் கடுங்காதலில் உள்ளம் குளிர, “என்னோட ரௌடி ராக்கம்மா!” என செல்லம் கொஞ்சியவன்,


“எப்ப வரட்டும்?” எனக் கேட்டான்.


“இன்னைக்கே கூட வா!” என்றவளின் குரலில் இருந்த ஆசையில் அப்படியே நின்றவன்,


“என்னமோ... நான் டீச்சருக்கு படித்து இந்த ஊரையே மாத்தபோறேன்னு இத்தனை நாள் சொல்லி திரிஞ்ச. இப்ப என்னடி இப்படி கல்யாணத்துக்கு பறக்கற” வேண்டுமென்றே வாய்க் கொடுத்தான்.


“அட என் லூசு மாமா. கடமை வேற! காதல் வேற! அதையும் இதையும் சேர்த்து கன்ஃபூஸ் பண்ணிக்க கூடாது.இதெல்லாம் உனக்கெங்க தெரிய போகுது இதுக்கு தான் நாலு எழுத்து படிச்சியிருக்கனும்னு சொல்றது” என அவனை சீண்டியதற்க்கு அவனிடமிருந்து ஒரு இறுகிய அணைப்பை தண்டனையாக பெற்றும் அடங்காது,


“நாங்க எல்லாம் ஒரே நேரத்துல எல்லா பொறுப்பையும் சிறப்பா செய்து முடிப்போம். நீ கண்டதையும் நினைத்து கவலைப்படாம சட்டுபுட்டுன்னு என்னை கல்யாணம் பண்ற வழிய பாரு” என்றாள்.


“இல்ல காவி. இப்ப வேணாம். இன்னும் ஒரு ரெண்டு வருஷமாகட்டும். அதுக்குள்ள நான் இன்னும் ஒரு யூனிட் போட்டுடுவேன்.வசதி இன்னும் கொஞ்சம் கூடினதும் உங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேட்கறேன். அப்பத்தான் உனக்கு மரியாதையா இருக்கும்” என்றவன்,


“உங்க அப்பாக்கு என்னை பிடிக்குமா?”என கவலையாய் கேட்டான்.


திடீரென இந்த கேள்வியை கேட்டவனின் முகத்தில் இருந்த கலக்கத்தை பார்த்து, “அவருக்கு ஏன் உன்னை பிடிக்கனும்? அவரையா நீ கல்யாணம் பண்ணிக்க போற?” என்று அதிரடியாக கேட்டவளுக்கு அவனிடமிருந்து ஒரு முறைப்பு பார்சல் வந்தது.


“யாருக்கு உன்னை பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது.எனக்கு உன்னை பிடிக்கும். உன்னை மட்டும்தான் பிடிக்கும்.இது உன்னோட மனசுல காலத்துக்கும் இருந்தா போதும். மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்” அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்று அங்கிருந்து செல்ல திரும்பியவளுக்கு அப்போதுதான் இங்கு எதற்கு வந்தோம் என்பதே நினைவுக்கு வந்தது.


இனி செந்திலை வாட்டர்கேன் எல்லாம் தூக்கவைக்க கூடாது என்று கட்டளையாக சொன்னவளிடம்,


“நான் கூடத்தான் பல வருஷமா அதை தூக்கறேன்.அவன் மட்டும் என்னடி உனக்கு அவ்வளவு ஸ்பெஷல்?” பொறாமை குரலில் குதித்தோட கேட்டான்.


“ஆமாம்... அவன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்தான். அவன் என்னோட மூத்த பிள்ளை!” என்றவளை ஒரு மார்கமாக பார்த்துவைத்தவன்,


“அடுத்த புள்ளைய கொடுக்க போற புருஷனை விடவா அவன் உனக்கு உசத்தி?” என்றதும்,


‘முன்னெல்லாம் பச்சபிள்ள போல இருந்த மாமா இப்ப எல்லாம் பச்ச பச்சையா பேசும் போதே நீ உஷாரா இல்ல இருந்திருக்கனும் காவி. வெட்கமா...! வீசை எவ்ளோ? கேட்கறவன் கிட்ட வியாக்கியானம் பேசி வாயக்கொடுத்தியே... இப்ப என்னப் பண்ண போற?’ இவளின் மனசாட்சி கேட்க, மாமனின் குரலோடு மனசாட்சியின் குரலையும் தூக்கி தூரப் போட்டவள் அங்கிருந்து ஒரே ஓட்டம் பிடித்தாள்.
 
  • Like
Reactions: Chitra Balaji