சொப்பன சுந்தரி - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

விஷால் வேதா அவர்கள் "சொப்பன சுந்தரி " என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்......
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
#3
சொப்பனம் 1


மேகம் கூடி மழை வரும்போலிருந்தது. காற்றில் ஈரப்பதம் கூடி குளிர் மிகுந்தது. அந்த மலை பிரதேசம் ஏற்கனவே குளிரினால் கூட்டமில்லாமல் இருந்தது. இப்பொழுது மழையின் காரணமாக இருந்த ஓரிருவரும் கட்டிடங்களுக்குள்ளே புகுந்து கொண்டனர்.

அந்தக் குளிரும் இருட்டிக்கொண்டிருந்த பின் மாலைப்பொழுதும் பத்மினியைச் சிலிர்க்க வைத்தது. அவளுடன் வந்த அந்த அக்மார்க் ( ஆறடி உயரம், அகன்ற மார்பு, திண்மையான தோள்கள், செதுக்கிய முகவெட்டு, அடர்ந்த சிகை, முறுக்கு மீசை etc..) கதாநாயகன் அவளை அணைத்துக் கொண்டு கிசுகிசுப்பான குரலில் "பப்பிம்மா..உள்ள போகலாமா?" என்று மீசையால் அவளைக் குறுகுறுக்கச் செய்ததில் அவள் கூசிச் சிலிர்த்தாள்.

"எந்திரிடி, மேம் நாலு தடவை கூப்டுட்டாங்க", பக்கத்திலிருந்த நிர்மலா உலுக்கினாள். திடீரெனத் தன் கனவு கலைந்ததில் எழுந்து நின்ற பத்மினி " 3247 தான் மேம் ஆன்ஸர்" என்றவுடன் வகுப்பே சிரித்தது. அந்த டீச்சர் வந்த கோபத்தையும் சிரிப்பையும் அடக்கியபடி, " பத்மினி! இது இங்கிலீஷ் க்ளாஸ். இன்னும் இருபது நாளில் பரீட்சை. இப்படியே போனா டிகிரி வாங்க முடியாது. ஏற்கனவே பழைய பாக்கி(அரியர்ங்க!) வேற இருக்கு. ஒழுங்கா படிக்கிற வேலையைப் பார்" என்றார். தலையைப் பலமாக ஆட்டிய பத்மினிக்கு பரீட்சையை விட அந்தக் கனவு நாயகனின் முகத்தைச் சரியாகப் பார்க்காத வருத்தமே அதிகமாயிருந்தது.

அமுதா, வெங்கடேசனின் இரண்டாவது மகள்தான் பத்மினி. வெங்கடேசன் தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் அக்கவுண்டண்ட். பத்மினிக்கு ஒரு அண்ணன், தேசிய வங்கியில் மேனேஜர். திவ்யாவுடன் திருமணமாகி எட்டு மாதங்களாகிறது. திவ்யா மிகவும் கட்டுப்பாடான நல்ல பெண். ஸ்கூல் டீச்சர். கடைசித் தங்கை அனுஷா ப்ளஸ் ஒன் படிக்கிறாள்.

பத்மினியும் பத்தாம் வகுப்பு வரை நன்றாகத்தான் படித்தாள். பிறகு அமைந்த நட்பு காரணமோ அல்லது வாழ்வின் சில ரகசியங்களை அறிந்துகொண்டதின் விளைவாகவோ கனவிலும் , கற்பனையிலும் வேறு உலகத்திற்குச் சென்று விடுவாள். பெண்கள் பள்ளியிலும் கல்லூரியிலுமே படித்ததால் இது வரை காதல் வரவில்லை.

இந்தப் பகற் கனவுகள் அவளது படிப்பைக் கெடுத்தது. பனிரெண்டாம் வகுப்பில் பார்டரில் பாஸ். கல்லூரியில் பலத்த சிபாரிசில் இடம் பிடித்தாள். வெவ்வேறு பின்புலத்தில் விதவிதமான கற்பனைகளுடன், முகமறியாக் கதாநாயகனோடும் நேரம் கழித்தாள். இன்டர்நெட்டும், புதிதாக அடம் பிடித்து வாங்கிய ஸ்மார்ட் ஃபோனும் அவளது உதவிக்கு வந்தன.

வீட்டினருக்கு பத்மினியின் பின்னேற்றம் கவலையைக் கொடுத்தாலும் காரணம் புரியவில்லை. இந்தக் கற்பனை சந்தோஷத்தில் அவளது வாழ்க்கையைப் பற்றிய எதிர்பார்ப்பும் தீர்மானங்களும் அதிகரித்தது. அதில் ராஜகுமாரனுக்கான எதிர்பார்ப்பு இருந்ததே தவிர சுய முன்னேற்றத்துக்கான சிந்தனை சிறிதுமில்லை.

நாட்கள் பறந்து பரீட்சை முடிவுகளும் வந்தது. பத்மினி வழக்கம்போல் முன்னுக்கும் போக முடியாமல் ஃபெயிலும் ஆகாமல் பி.ஏ பார்டரில் பாஸ் செய்து விட்டாள்.


வீட்டினர் அவள் டீச்சர் டிரெயினிங் படிக்க வேண்டுமென்று விரும்பினர். அவளோ கலர் கலராய் கனவு காணவே விரும்பினாள்.

கனவு பலிக்குமா?
 

sudharavi

Administrator
Staff member
#4
சொப்பனம் 2

முரளீதரன் ஒரு அரசுக் கல்லூரி ஆசிரியர். எளிமையும், நேர்மையுமே அவன் கொள்கை. செல்வம், மனோகரியின் இரண்டாவது மகன். ஒரு அக்கா, திருமணமாகித் துபாயில் இருக்கிறாள். ஒரு ஆண் குழந்தை. தம்பி ராணுவத்தில் அதிகாரியாகி ஒரு வருடமாகிறது. படித்த, பண்பான குடும்பம்.முரளிக்குத் திருமணத்திற்குப் பார்த்துக் கொண்டிருந்தனர். பத்மினியின் அண்ணி திவ்யாவின் பெரியப்பா மகன்தான் முரளி.திவ்யாவைப் பார்க்க லந்த அவரது தாய், அமுதாவிடம், "பத்மினிக்குப் படிப்பு முடிஞ்சிடுச்சா? மேல படிக்கப்போறாளா? இல்ல மாப்பிள்ளை பாக்கப் போறீங்களா? என்று கேட்டார்."இனிமேல்தாங்க முடிவு செய்யணும், நீங்கதான் நல்ல இடமாயிருந்தாச் சொல்லுங்களேன்", என்று தன் அன்னை கூறியதைக் கேட்ட பத்மினி மனதளவில் திருமணத்திற்குத் தயாராகிவிட்டாள்.இந்தப் பேச்சுக்களில் முரளியின் ஜாதகத்தையும், அவனது வீட்டின் போன் நம்பரையும் கொடுத்துச் சென்றார், மனோகரி. திவ்யா யோசனையுடன் அமைதியாக இருந்தாள்.பத்மினியின் சிறுபிள்ளைத்தனத்துக்கும் முரளியின் லட்சிய வாழ்க்கைக்கும் வெகுதூரமென்று நினைத்துக் கொண்பாள்.

பத்மினியோ சொப்பன வாழ்வில் மகிழ்ந்தாள்.கனவுகள் இலவசமல்லவா?


 

sudharavi

Administrator
Staff member
#5
பிறகென்ன?, ஜாதகம் பொருந்தி உறவினர் அதிலும் சம்பந்தி என்பதால் அமுதாவும் வெங்கடேசனும் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று வந்தனர். அவர்களின் பேச்சும் பண்பும் வெங்கடேசனை மிகவும் கவர்ந்து விட்டது. ஞாயிறன்று பெண் பார்க்க வருவதாகவும் அன்றே வீட்டளவில் தாம்பூலம் மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.திவ்யா அமுதாவிடம், "அத்தை! நம்ப பத்மினி முரளியைப் பார்த்தப்புறம் முடிவு செய்யலாமே என்றாள் தயக்கத்துடன். அமுதாவோ, " அவளுக்கென்ன தெரியும்? நல்ல பையன், தானாத் தேடி வரும்போது யோசிக்கக்கூடாதும்மா. உங்கம்மா நல்லவங்களா இருக்கறதால மகளோட நாத்தனாருக்கு இப்படி ஒரு வரனைச் சொல்லியிருக்காங்க" என்றாள் நன்றியுடன்.
திவ்யாவிற்குதான் சிறிது கவலையாக இருந்தது. பதின்பருவத்தினருக்கு ஆசிரியை என்பதால் பத்மினியின் கனவுலகம் அவளுக்குப் புரிந்தது. பத்மினியின் பிடிவாதமும் எதிர்பார்ப்பும் முரளிக்கும் பத்மினிக்குமே பிரசினையாகக்கூடாது என்று யோசித்தாள். அவள் கணவன் செந்திலிடம் சொன்னபோது, அதெல்லாம் ஒண்ணுமாகாது. பப்பி புரிஞ்சுப்பா, இல்லாட்டி முரளி அவளைச் சரிக்கட்டிடுவான்(he will size her up), இப்போ நீ வாம்மா என்று அணைத்துக் கொண்டான்
.
 

sudharavi

Administrator
Staff member
#6
ஞாயிறு காலை பரபரப்பாக விடிந்தது. அமுதாவும் திவ்யாவும் சிற்றுண்டி தயாரிப்பதிலும், வீட்டை ஒழுங்குபடுத்துவதிலும் பிஸியாக இருந்தனர். அமுதாவின் அக்கா, அவளது கணவர், வெங்கடேசனின் தம்பி, தங்கை, தங்கையின் பெண் எல்லோரும் வந்திருந்தனர். பத்மினியின் தங்கையும், அத்தை மகளும் அவளைக் கேலி செய்தவாறே மேக் அப் செய்ய உதவி செய்தனர்.சரியாகப் பத்து மணிக்குக் கால் டாக்ஸியில் முரளீதரன், மனோகரி, செல்வம் மற்றும் திவ்யாவின் பெற்றோர் அனைவரும் வந்தனர். பத்மினி ஜன்னல் வழியாகப் பார்க்க முடியாமல் அவளது அண்ணன் செந்தில் நின்றான். உடனே அவர்கள் உள்ளே வந்து அமர்ந்துவிட்டனர். அவளது அத்தை மகள் பார்த்து விட்டு வந்து, "கையில் பிரம்போடு வந்திருக்காருடி" , என்று சிரித்தாள்.பத்மினி கல்யாணம் , திவ்யாவின் அண்ணன் ,நல்ல படித்த குடும்பம் என்றவுடன் அமெரிக்காவிலிருக்கும் அண்ணியின் சொந்த அண்ணனைப் போலிருப்பான் என்ற கற்பனையிலிருந்தவள் மாப்பிள்ளை காலேஜ் லெக்சரர் என்றே அறிந்திருக்கவில்லை
.
 

sudharavi

Administrator
Staff member
#7
அறிமுகங்கள், குசல விசாரிப்புகளுக்குப்பின் பெண்ணை அழைத்து வந்தனர். எந்த விதமான பாசாங்குமில்லாமல், பெற்றோர் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்த முரளிக்குப் பத்மினியைப் பார்த்ததும் முதலில் தோன்றியது 'சின்னப் பெண்ணாக இருக்கிறாளே' என்பதுதான். ஆனாலும் அவளது தோற்றம் அவனை வசீகரிக்கவே செய்தது.பத்மினிக்கு எல்லோரும் அவளையே பார்க்கவும் கூச்சத்தில் தலையைக் குனிந்து கொண்டாள். சில கேள்விகளுக்குப் பதில் சொன்னவுடன், திவ்யா அவளை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள்.உள்ளே செல்லுமுன் பக்கவாட்டில் முரளியைப் பார்த்தவள் அப்படியே ஷாக்காகி விட்டாள். 'இவனா மாப்பிள்ளை? இந்த எண்ணை வழியும் தலையும் பாக்கியராஜ் கண்ணாடியுமாக இருப்பவனையா குடும்பமே புழ்ந்தது? எவனாவது இந்தக் காலத்தில் வேட்டி கட்டிக் கொண்டு பெண் பார்க்க வருவானா? ' வென மேலும் யோசித்தவளை, "உங்க பொண்ணுக்கும் சம்மதம்னா இப்பவே பூ வைக்க நாங்க ரெடி", என்று செல்வத்தின் குரல் கேட்டது. இவள் தன் அன்னையை நோக்கி மறுப்பாக எதுவும் கூறுமுன், "அவளுக்கும் சம்மதம்தான்" என்று சொல்லிக்கொண்டே வெளியே சென்றுவிட்டார் அமுதா
.
 

sudharavi

Administrator
Staff member
#8
அறிமுகங்கள், குசல விசாரிப்புகளுக்குப்பின் பெண்ணை அழைத்து வந்தனர். எந்த விதமான பாசாங்குமில்லாமல், பெற்றோர் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்த முரளிக்குப் பத்மினியைப் பார்த்ததும் முதலில் தோன்றியது 'சின்னப் பெண்ணாக இருக்கிறாளே' என்பதுதான். ஆனாலும் அவளது தோற்றம் அவனை வசீகரிக்கவே செய்தது.பத்மினிக்கு எல்லோரும் அவளையே பார்க்கவும் கூச்சத்தில் தலையைக் குனிந்து கொண்டாள். சில கேள்விகளுக்குப் பதில் சொன்னவுடன், திவ்யா அவளை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள்.உள்ளே செல்லுமுன் பக்கவாட்டில் முரளியைப் பார்த்தவள் அப்படியே ஷாக்காகி விட்டாள். 'இவனா மாப்பிள்ளை? இந்த எண்ணை வழியும் தலையும் பாக்கியராஜ் கண்ணாடியுமாக இருப்பவனையா குடும்பமே புழ்ந்தது? எவனாவது இந்தக் காலத்தில் வேட்டி கட்டிக் கொண்டு பெண் பார்க்க வருவானா? ' வென மேலும் யோசித்தவளை, "உங்க பொண்ணுக்கும் சம்மதம்னா இப்பவே பூ வைக்க நாங்க ரெடி", என்று செல்வத்தின் குரல் கேட்டது. இவள் தன் அன்னையை நோக்கி மறுப்பாக எதுவும் கூறுமுன், "அவளுக்கும் சம்மதம்தான்" என்று சொல்லிக்கொண்டே வெளியே சென்றுவிட்டார் அமுதா
.
 

sudharavi

Administrator
Staff member
#9
ஆயிற்று, தட்டு மாற்றிப் பூ வைத்துப் பட்டுப் புடவையும் சிவப்பைக்கல் நெக்லஸும் போட்டுப் பரிசம் போட்டாயிற்று. ஒரு மாதம் கழித்துக் முரளி வீட்டினரின் குலதெய்வக் கோவிலில் கல்யாணமும் பின் இங்கே நட்புக்காக வரவேற்பும் என்று முடிவு செய்யப்பட்டது.பத்மினியின் மறுப்பையோ சம்மதத்தையோ கேட்பாரில்லை. மாப்பிள்ளையுடன் தனிமையில் பேச நேர்ந்தால் அவனிடமே சொல்லி விடலாம் என்றால் அவனோ அதெல்லாம் தேவையில்லை என்றான். பத்மினிக்குக் கோபமும் அழுகையும் கலந்து வந்தது. ஆனாலும் பட்டு, நகை என்று பரிசம் போட்டபோது சிறிது சந்தோஷமாகவும் உணர்ந்தாள். அவளுக்கு அந்தக் கல்யாணத்தில் மாப்பிள்ளையைத் தவிர எல்லாம் பிடித்திருந்தது. அவள் என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கேப் புரியவில்லை.


 

sudharavi

Administrator
Staff member
#10
மாப்பிள்ளை வீட்டினர் சென்றபின் பப்பியின் அதிர்ஷ்டத்தை ஓயாமல் பேசினர் அனைவரும். திவ்யா இவளையே பார்த்தவள் "என்ன பத்மினி?" என்றதற்கு ஒண்ணுமில்லை அண்ணி என்று விட்டாள்.மதிய உணவுக்குப்பின், கண்ணயர்ந்தபோது, பத்மினியின் கனவில் அவள் கனவுநாயகனின் தலையைக் கலைத்து விளையாட அவள் கையெல்லாம் எண்ணெய் வழிவது போல் வந்தது. தூக்கம் கலைந்தவள் ஒரு முடிவுடன் மாலைத் தேநீரின்போது தந்தையிடம் பேச வேண்டியதைத் தீர்மானித்துக் கொண்டாள். மீண்டும் உறங்கியும் போனாள்.கனவு ஏன் வந்தது?

 

Anuya

Well-known member
#11
சொப்பனம் 3


"எனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலப்பா", ஒருவாறு சொல்லியே விட்டாள் பத்மினி. வீட்டில் அனைவரும் கூடியிருந்தனர். காலையில் வந்திருந்தவர்களில் சித்தப்பாவைத் தவிர எல்லோரும் இருந்தனர்.

திவ்யாவைத் தவிர எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். அமுதாவோ அழத்தொடங்கி விட்டார். அவள் பெரியம்மாதான் சுதாரித்தவாறு, "என்னம்மா, பப்பி பரிசம் போட்டு நாள் குறிச்சப்பறம் இப்படி சொல்ற? நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல. அவங்க நம்ம சம்பந்தி வேற. யோசிச்சுப் பேசும்மா" என்றார்.

அனுஷா கூட " உனக்கு என்னக்கா பிரசினை? மாமாவுக்கு என்ன குறை?" எனக் கேட்டாள்.

" நீ சும்மாயிருடி. உனக்குப் புடிச்சிருந்தா நீயே கட்டிக்கோ" என்று முடிப்பதற்குள் காதில் ஙொய்ய்ய் என்ற சத்தத்துடன் தன் அத்தையின் அருகே போய் விழுந்தாள். அருகில் வந்து மேலும் இரண்டு அடிகள் போட்ட செந்திலைத் திவ்யா தடுத்தாள்.

"பத்மினி!! என உறுமிய அவள் தந்தை
நீ எவனையாவது மனசுல வச்சுக்கிட்டுதான் இப்படிப் பேசுறியா?, அவங்க பெண்ணைக் கட்டிக் கொடுத்த இடத்துல எவ்வளவு மதிப்பு வச்சிருந்தா உன்னைப் பொண்ணு கேட்ருப்பாங்க? உங்க அண்ணியப் பத்திக் கொஞ்சம் யோசிச்சியா? " வென முடிக்குன், "அப்பா!! " என்று கத்தினாள். "நான்
யாரையும் நினைச்சுக்கலை, எனக்கு யாரையும் தெரியவும் தெரியாது.
"ஏன் நீங்க யாராவது எனக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டீங்களா? நான் ஏன் மத்தவங்களைப்பற்றிக் கவலைப் படணும்?" என்றாள் திமிராக. இந்த எட்டு மாதத்தில் வீட்டினருடன் இயல்பாகப் பொருந்திய திவ்யா வருத்தத்துடன் எழுந்து உள்ளே சென்றாள். புது மனைவியின் முகவாட்டத்தைத் தாங்க முடியாத
செந்தில் கோபமாக" அப்பா ஒழுங்கா அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க. இல்லைன்னா நானும் திவ்யாவும் வெளியில் போயிடறோம் " என்று வீட்டையே அதிரச் செய்தான்.

"ஏண்டா? காத்துக்கிட்டிருந்தயோ? .எப்படா தப்பிக்கலாம்னு? இங்க பாரு பத்மினி, காரணமில்லாம நல்ல வரனை மறுக்கக் கூடாது. நாங்க உனக்குக் கெடுதல் பண்ண மாட்டோம்னு நம்பினா இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோ !, இதுக்கு மேல உன் விருப்பம், என்று வெங்கடேசன் சொல்லி முடிக்கவும், காலிங் பெல்லும் கூடவே" சார், உள்ளே வரலாமா?" என்றக் குரலும் கேட்டது.

உள்ளே நுழைந்த முரளியைக்கண்டுத் திகைத்தனர். 'இவன் எப்ப வந்து என்னெல்லாம் கேட்டான்னு தெரியலையே' என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஓடியது. பத்மினியோ எதிர்பாராமல் அவனைக் கண்ட அதிர்ச்சியிலும் அச்சத்திலும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்டிப்பான கணக்கு வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தது போல் சட்டென்று ஒரு அமைதி சூழ்ந்தது. அமுதா, அத்தை, பெரியம்மா எல்லோரும் வரவேற்று விட்டு சமையலறைக்குள் புகுந்து கொ.ண்டனர். அனுஷா தண்ணீர் கொண்டு வந்தவள் , முரளியிடம் கொடுத்துவிட்டு அத்தை மகளுடன் உள்ளே சென்று விட்டாள்.

வெங்கடேசன் சற்று சுதாரித்துக்கொண்டு, வரவேற்றுப் பேசவாரம்பித்தார். வரும்போதே ஒரு சில வாதங்களைக் கேட்டிருந்தவனுக்கு எப்படி ஆரம்பிக்க என்று தெரியவில்லை. திருமணத்திற்கு ஒரு மாதமே இருப்பதால், மறு நாளே நல்ல நாளாக இருப்பதால் தாலிக்குப் பொன்னுருக்க முடிவு செய்தனர் அவன் பெற்றோர். தாலிக் கொடியும் போடுவது அவர்கள் வழக்கமென்பதால் கொடியின் டிசைன் காண்பிக்கவே அவன் வந்திருந்தான்.

"என்னை விட்ருங்கமா, நான் போகலை, நீங்களே பார்த்துக்கங்க" என்றவனை, " ஏண்டா, அவனவன் சான்ஸ் கிடைச்சா ஊர் சுத்தறாங்க, நீ என்னமோ" என்று வாரினார் மனோகரி. அம்மா நான் ஒரு ஆசிரியர். நானே ஊரச்சுத்தினா என் ஸ்டூடண்ட்ஸ் தப்பு செஞ்சா எப்படிக் கேட்கிறது என்றவனை அவர்களுக்கு ஒரு முக்கியமான திருமண வரவேற்பு இருப்பதால் சம்மதிக்க வைத்து , இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிறான்.

இரண்டு நிமிடங்களுக்குள் இவ்வளவும் நிகழ, அமுதா பத்மினியை உள்ளே வரக் குரல் கொடுத்தார். செலுத்தப்பட்டது போல் உள்ளே சென்றாள். சிறிது படபடப்பாகவும், பயமாகவும் உணர்ந்தாள். பிடிக்கவில்லையென்றதைக் கேட்டிருப்பானோ என்று கவலைப்பட்டாள். பிடிக்காத மாப்பிள்ளை கேட்டால் என்ன, நல்லதுதானே என்ற நினைவு வராதது ஏனென்று மட்டும் யோசிக்கவில்லை.

சங்கடமாக உணர்ந்த முரளி, "திவ்யாவும் மாப்பிள்ளையும் வெளியே போயிருக்காங்களா?" என்றான். "அனு! அண்ணனையும் அண்ணியையும் கூப்பிடு" என்றார் வெங்கடேசன்.

செந்திலும் திவ்யாவும் வந்து முரளியைப் பாரத்தவுடன், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஏதோ சரியில்லாதது போல் தோன்றியது, முரளிக்கு. நல்லவேளையாக அமுதாவும் , அனுஷாவும் காபி மற்றும் ஸ்நாக்ஸூடன் வந்து விட்டனர். வெங்கடேசன் "எடுத்துக்குங்க மாப்பிள்ளை" என்றார். வந்த விஷயத்தைக் கேட்பதிலும் சொல்லுவதிலும், யார் தொடங்குவது என்ற சங்கடமான அமைதியை வெங்கடேசனின் அலைபேசி கலைத்தது.

செல்வம்தான் அழைத்திருந்தார். முரளீதரன் வந்த காரணத்தைச் சொன்னதுடன், தாங்களே நேரில் வர இயலாமைக்கு மன்னிப்பும் கேட்கவே பதறி விட்டார் வெங்கடேசன்.

வீட்டுப் பெண்கள் அனைவரும் சம்பந்தியின் உயர்ந்த குணத்தை வியக்க, பத்மினிக்கோ பகல் கனவும் யதார்த்தமும் அவளைச் சுற்றிக் கும்மியடித்தது.

ஐந்தாறு டிசைன்களில் மெலிதான மாடல் சங்கிலிகளை எடுத்துக்காட்டினான் முரளி. எல்லோரும் டிசைன் பற்றிய விவாதத்தில் இருக்க அவனால் பத்மினியை நன்றாக அவதானிக்க முடிந்தது.

அவள் செயின்களை ஆர்வத்துடன் பார்த்தாலும் ஏதோ ஒரு அலட்சியமும் சுணக்கமுமாக இருப்பதை உணர்ந்தான். முரளி கனவுகளில் வாழ்பவன் அல்ல. ஆனால் பத்மினியை அவனுக்குப் பிடித்திருந்தது. கடைசியாக வெங்கடேசன் கூறியதைக் கேட்டிருந்தவனுக்கு பத்மினியின் பிடித்தமின்மை புரிந்தது.

இந்தக் கல்யாணம் நின்றால் பெற்றோருக்குத் தலை குனிவு என்றால், பிடிக்காதத் திருமணத்தால் தங்களிருவரின்
வாழ்க்கையே நரகமாகிவிடுமென்று எண்ணினான்.

ஒரு முடிவுக்கு வந்தவனாக எல்லோரையும் ஒருமுறை பார்த்தவன், வெங்கடேசனிடம் " மாமா நான் உங்க பொண்ணோடக் கொஞ்சம் தனியா பேச அனுமதி கிடைக்குமா?" என்றான்.
 

Anuya

Well-known member
#12
சொப்பனம் 4

பள்ளி மொத்தமும் சளசளெவனப் பேசுகையில், பி.டி மாஸ்டர் நீண்ட விசில் கொடுத்தவுடன் ஏற்படும் நிசப்தம் நிலவியது, வீட்டில். பெரியவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, திவ்யா முரளியின் முகத்தைப் பார்த்தாள். அவனோ வழக்கமான முக பாவத்துடன் 'சாப்பிடலாமா?' என்று கேட்டவனைப் போலிருந்தான்.

பத்மினியின் வீட்டினரும் தற்கால நடைமுறையை அறியாதவர்களல்ல. செந்திலும், திவ்யாவும் பெண் பார்க்கச் சென்றபொழுது அவர்களிருவரும் பேசிக்கொள்ளத்தான் செய்தனர். ஆனால் பத்மினியின் மறுப்பு பயம் கொள்ளச் செய்தது. பத்மினியோ ' இவன் பேசிட்டாலும்' என்று நினைத்துக் கொண்டாள். அவளது அழகான முகமும், பெரிய விழிகளும் அவள் மனதிலிருப்பதைப் பிரதிபலித்ததை அவள் உணரவில்லை.

"அண்ணா" என்ற திவ்யாவின் அழைப்பில் சுதாரித்த செந்தில், குறுக்கிட்டு " அதுக்கென்ன முரளி, தாராளமா பேசலாம். திவ்யா நீ உங்கண்ணனை மாடிக்குக் கூட்டிக்கிட்டு போ, பப்பி வருவா" , என்றான். அவர்கள் சென்றதும் அமுதா பத்மினியின் அருகில் வந்து "அவர் கிட்ட பார்த்துப் பேசு, எதாயிருந்தாலும் நாங்க சொல்லிக்கிறோம். நீ துடுக்கா எதையும் சொல்லிடாத" என்றார்.
அனுஷாவுடன் பத்மினி மேலே சென்றவுடன், பிரசவ அறைக்கு வெளியே நிற்பதைப் போல் எல்லோரும் பதட்டமாக இருந்தனர்.


திவ்யாவும் அனுஷாவும் கீழே சென்றவுடன், முரளியின் " நான் வேணா எங்க வீட்ல சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்திடவா ? " என்ற கேள்வி, தன்னைப் பிடித்திருப்பதாகச் சொல்வான், சம்மதம் கேட்பான், என்ன பதில் சொல்வது என்ற கற்பனையில் இருந்தவளை அதிர வைத்தது.

விழிகளை விரித்து அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கி, "உனக்கு இஷ்டமில்லன்னு நினைக்கிறேன். சரியா?" எனவும் பதட்டத்தில் பத்மினியின் தலை எல்லாப்பக்கமும் ஆடியது.

"உனக்குச் சம்மதம்னா தாலிக்கொடிக்கு இந்த டிசைனை செலக்ட் பண்ணி சொல்லு. ஏன்னா இது எனக்குப் பிடிச்ச மாடல்" என்று மொபைலில் காட்டினான். "இல்லன்னா நீங்க வேற டிசைன் கொடுத்தாலும் சரி நேராவே சொன்னாலும் சரி, இந்தக் கல்யாணம் நடக்காது" என்றவன் விடுவிடெனக் கீழிறங்கிப் போனான்.

எல்லோருக்கும் கை குவித்தவன் " நான் வரேன், நீங்க அப்பா அம்மா கிட்டப் பேசிக்கோங்க" என்றான். " இந்த மாடல் செயின்லாம்" என்ற செந்திலிடம் " நீங்க நாளைக்குக் கொடுத்தாப் போதும்" என்று கிளம்பி விட்டான்.

பத்மினி அசையாமல் பதுமை போல் நின்றிருந்தாள். அவனிடமிருந்து இந்த அதிரடியை எதிர் பார்க்காதவள், "பத்மினி" என்ற தாயின் குரலில் கீழே சென்றாள்.
எல்லோரும் அவளையே ஆவலுடன் பார்க்க, அவளோ மந்திரித்து விட்டது போல் நின்றாள் .

திவ்யாவிற்குத் தன் அண்ணன் ஏதோ சொல்லியிருக்கிறான் என்று புரிந்து விட்டது. அமுதாவிடம் " அத்தை, எட்டு மணி ஆயிடுச்சு. நாம சாப்பிட்ட பிறகு பேசலாமே" என பத்மினியைக் கண்காட்டவும், அனைவரும் உணவருந்தச் சென்றனர்.

ஒரு தோசையுடன் போராடிக்கொண்டிருந்தவளைக் கவலையாகப் பார்த்தனர் எல்லோரும். இரவு இரயிலுக்குக் கிளம்பிய அத்தையும் அவரது மகளும் கால்டாக்ஸியில் சென்றனர்.

பத்மினிக்கு முரளியின் மெதுவான ஆனால் அழுத்தமான குரல் காதில் ஒலிப்பது போலிருந்தது. ஆளுமை என்பது தோற்றத்திலும் உடையிலும் இல்லை என்பதை உணராத பத்மினி, முரளியின் அதிரடிப் பேச்சால் கவரப்பட்டிருந்தாள். அவன் சொல்வதை மறுக்க முடியாதது போன்ற அழுத்தம்.

மீண்டும் எல்லோரும் கூடி எதுவுமே நடவாதது போல், தாலிக்கொடியைப் பற்றிப் பேசினர். "இதான் லேட்டஸ்ட் மாடல்".

" இது நம்ம திவ்யாவோடது மாதிரியே இருக்கு".

" இது அம்மா போட்டிருக்கறது". ஆளாளுக்கு அபிப்பிராயம் கூறினர்.

பெரியம்மா " பப்பி, நீ ஒண்ணுமே சொல்லலையே " என்றவுடன், அவளையுமறியாமல் முரளீதரன் சொன்ன டிசைனையேக் காட்டினாள்.

" அக்கா! இது செம ஓல்ட் ஃபேஷன்", என்ற அனுஷாவிடம் " பரவாயில்லை" என்றாள்.

" சரிம்மா , நான் காலைல அவங்கள்ட்ட சொல்லிடலாமா? உனக்குச் சம்மதம்தானே? " என்றார் வெங்கடேசன். மெதுவாகத் தலையாட்டினாள்.

பிறகு மளமளவென வேலைகள் நடந்துத் திருமண நாளும் வந்து விட்டது. இத்தனை நாளும் தன் கனவில் வந்த நவநாகரீகமான, ஸ்டைலான நாயகனிடத்தில் முரளியை வைத்துப் பார்க்க முயற்சித்துத் தோற்றுப் போனாள். 'நாம் நல்ல பெண்ணில்லையோ? திருமணத்திற்கு சம்மதித்தது தப்போ?' என்று பலவாறாகக் குழம்பினாள்.

குளிரூட்டப்பட்ட அந்த மண்டபத்தில் நல்லக் கூட்டம். முரளியின் உறவினர், பள்ளி, கல்லூரி நணபர்கள், வேலை பார்க்கும் கல்லூரியின் ஆசிரியர்கள், சில மாணவர்கள் என நிறைந்திருந்தது. இவர்களது பக்கமும் ஒரு ஐந்நூறு பேரிருப்பர்.

முரளியின் தம்பி முகுந்தன், அவனது அக்கா அவள் கணவர் குழந்தை எல்லோரும் மிகவும் அமெரிக்கையாகப் பேசினர். முதல்நாள் நிச்சயத்தின்போது பத்மினியின் அலங்காரத்தைப் பார்த்தவன் ரசித்தாலும் ஒன்றும் பேசவில்லை. சில அறிமுகங்கள். சடங்குகள் அவ்வளவே. உறவினர்களின் கேலி, கிண்டலை அனுபவித்தாலும் அவளால் ஒன்ற முடியவில்லை. அதே சமயம் அதை வெறுக்கவுமில்லை.

இதோ ,ஐயர் சொல்லும் மந்திரத்தைச் சொல்லியபடி முரளியும், மணப்பெண்ணுக்குரிய மேக் அப்பில் பத்மினியும் நிறைவாகத்தான் இருந்தனர்.

கெட்டிமேளம் முழங்க முரளியின் மாங்கல்யத்தை ஏற்றாள் பத்மினி. கதையில், சினிமாவில் வருவது போலல்லாமல் மங்கல நாண் பூட்டிய தருணத்தின் மகிம்ச்சியை விட இனி நான் என் வீட்டை, பெற்றோரை, அண்ணன்,தங்கையைப் பிரிய வேண்டுமே என்ற உணர்வுதான் மேலெழுந்தது. கண்களில் நீர் திரண்டது. முரளி அவளது நெற்றியில், மாங்கல்யத்தில், வகிட்டில் குங்குமம் வைத்தான். அந்தத் தொடுகையில் அவஸ்தையாக உணர்ந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் திருமணம் முடிந்த உடன் 11.30 மணிக்கு வரவேற்பு இருந்தது. கை குவித்து, சிரித்து, போட்டோ, வீடியோவிற்குப் போஸ் கொடுத்து என மதியம் இரணடு மணி வரை சென்றது. முரளியின் வீட்டுக்குச் சென்றனர். திவ்யாவின் அம்மாவும் முரளியின் அக்காவும் ஆரத்தி எடுத்தனர். விளக்கேற்றிப் பால், பழம் கொடுத்தபின் "நீ போய் கொஞ்ச நேரம் தூங்கும்மா, ஆறு மணிக்கு எழுந்து வந்தாப் போதும்" என்ற மனோகரி, " ராதிகா, பத்மினிக்கு ரூமைக் காட்டு" என்றார் மகளிடம்.

அவளது வீடும் வசதியானது என்றாலும், இங்கு பார்த்தவுடன் பணச் செழுமை தெரிந்தது. மாடிக்கு அழைத்துச் சென்ற ராதிகா," ரிலாக்ஸ் பத்மினி. தூங்கு, அப்றம் பேசிக்கலாம்" என்று ஒரு அறை வாயிலில் நின்று, கதவைத் திறந்து விட்டாள். அறையின் திரைச்சீலைகள் இழுத்து விடப்பட்டு பெரும்பாலும் இருட்டாக இருந்தது. சில்லென்றிருந்தது. பின்னாலிருந்து ராதிகா கதவைச் சாத்தி விட்டுச் சென்ற சத்தம் கேட்டது. இருட்டுக்குள் கண்களால் துழாவியவளுக்குக் கட்டில் தென்பட்டது. கீழேயே உடை மாற்றி வந்திருந்ததால் ஒரு பக்கம் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டாள். யாரோ பார்ப்பது போலிருந்தது. தூக்கம் கண்களைச் சுழட்டவேச் சட்டெனத் தூங்கி விட்டாள். பக்கத்தில் அசைவைக் கண்ட முரளி ஒருகணம் விழித்தவன் விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான்.

பத்மினிக்கு நிம்மதியான உறக்கம். கனவில் கைப்பிடித்த நாயகன் " முகம் அருகில் நெருங்கியது. அவள் தன் முகத்தை மூடிக் கொண்டாள். அந்த முகம் முரளீதரனின் முகமாகத் தெரிந்தது.

யாரோ தன்னை அடித்து, உலுக்கிக் கூப்பிடுவதைக் கேட்டு எழுந்தாள். முரளியைக் கண்டுக் கத்தப் போனவள், நிலமை புரிந்து அமைதியாகப் பாத்ரூம் சென்று ஃப்ரெஷ் ஆகி வந்தாள். அதற்குள் முரளி கீழே சென்றிருந்தான். பத்மினிக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.

தன் கனவிலும் கற்பனையிலும் வந்த முகமில்லாதவனுக்கு முரளியின் முகம் எப்படி வந்து? எனக் குழம்பினாள். அப்படியானால் எனக்கு அவங்களைப் பிடித்து விட்டதா? என்று அவளையேக் கேட்டுக் கொண்டாள்.

என் மன்னன் எங்கே என்றத் தேடலுக்குப் பதில் கிடைத்ததைப் பத்மினி புரிந்து கொள்ளவில்லை. 'அவன்', ' அவங்க' என்றானதையும் உணரவில்லை.

கண்களை மூடவிட்டு இன்பக் கனவுக்குக் காத்திருந்தாள்..

கண் திறந்தால் கலைந்திடுமோ?
 

Anuya

Well-known member
#13
சொப்பனம் 5


கற்பகப் பச்சையில் உடலைத்தழுவிய மைசூர் சில்க் புடவை, கழுத்தில் புதுத்தாலியும் இரண்டு செயினும், கைகளில் இரண்டிரண்டு வளையல்களும், தலையில் அளவாக வைக்கப்பட்ட மல்லிகைப்பூ என்று மிக அழகாக இருந்தாள். அவளைக் காண அங்குமிங்கும் நடந்தவன் அவளது அண்ணி வெளியேறிய சமயத்தில் சரியாக அவளைப் பார்த்து விட்டு மயக்கம் வருவது போல் சைகை செய்தான். "நீ நடத்தும்மா" -அத்தை பெண்ணின் கேலியில் முகம் சிவந்தாள். "ஆனாலும் மாமா ரொம்ப ஹேண்ட்ஸம்கா" என்ற அனுஷாவை முறைத்தாள்.

சிறிது நேரத்தில் நடக்கப் போவதைத் தன் கனவு நாயகனுடன் கனவாய்க் கண்டு கொண்டிருந்தவளை " பத்மினி! டையமாகுது பாரு, அப்புறம் நல்ல நேரம் போயிடும். வந்து சாமி கும்பிட்டு பெரியவங்கக் கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்ற பெரியம்மாவின் குரல் கலைத்தது.

கனவில் அவளது முகமறியா மிஸ்டர். பர்ஃபெக்ட்டுடன் முக்கியமான தருணத்தில் அழைத்ததும் திடுக்கிட்டாற் போல் உதறிக் கொண்டவளைப் பார்த்துப் பெரியம்மா, அத்தை, மனோகரி எல்லோரும் வெட்கம் என்றெண்ணிச் சிரித்தனர். அமுதா மகளைப் பார்த்தவர், அவளிடம் வந்து, " பப்பி, மாப்ளைகிட்ட நல்லபடியா நடந்துக்க. அமைதியாப் பேசு. நல்ல பேர் வாங்கணும்".
என்றதற்குத் தலையை ஆட்டி வைத்தாள்.

இரவு ஏழு மணி போல் மறுவீடு வந்தவர்களுக்கு இரவு உணவும் அதன் பின் சடங்குக்கான ஏற்பாடுகளுமாய் நேரம் பறந்தது. பத்மினியே விட்டாலும் கனவு அவளை விடாது போலிருந்தது. ஆசைக்கும், கற்பனைக்கும், குற்றவுணர்வுக்குமிடையே குழம்பினாள்.

முரளியின் அக்காவும் திவ்யாவும் அவளை அறை வாசலில் விட்டனர். "ஆல் த பெஸ்ட்" என்றவர்கள் கீழிறங்கிச் சென்று விட்டனர். மெதுவாக உள்ளே சென்றவள் "வா ஸ்ரீ" என்ற முரளியைக் கண்டு ப்ரேக் அடித்தாற் போல் நின்றாள். 'இவனா? ' என்பதைப் போல் பார்த்து வைத்தாள். அவளது முகத்தையே பார்த்திருந்தவனுக்கு அவளது முகத்தின் பாவங்கள் சுவாரசியமாய் இருந்தது.

"எவ்வளவு நேரம்தான் நிப்ப ஸ்ரீ?" என்றவனை 'லூசாய்யா நீ?' என்பது போல் பார்த்தாள்.

' ஓ, ஒரு வேளை அவனோட பழைய ஆள் பேரோ எனக் கோக்கு மாக்காக யோசித்தவள், சிறிதும் சிந்தனையின்றி " யாரு ஸ்ரீ?" என்றாள்.

" நீதான்" , சொல்லிக் கொண்டேக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டவன் தன் வலது கையை அவளுக்காக நீட்டினான். அதைக் காணாதது போல் அவளிருக்க, "பயமாயிருக்கா ஸ்ரீ?" என்றான்.

"என் பேரு பத்மினி", எனறாள் விரைப்பாக.

முரளீதரன் மிகவும் நல்லவன். பொறுமையானவன். நல்லவனாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வளர்ந்தவன், வளர்க்கப்பட்டவன். அவனது குடும்பத்திற்கு உறவினர் மத்தியிலும், கல்லூரியிலும், அவனது தந்தையின் தொழில்வட்டத்திலும் மிகுந்த மரியாதை உண்டு.

ஆறு வருடங்களாகக் கல்லூரி விரிவுரையாளராக இருப்பவனுக்குப் பத்மினியைப் புரிந்து கொள்வது எளிதாயிருந்தது. அவளது சம்மதமில்லாமல் இத்திருமணம் நடக்கவில்லைதான். அவள் வேறு யாரையும் விரும்பவில்லை என்பதையும் அவள் வாயாலேயேக் கேட்டிருந்தான். ஆனால் அவளது வெட்கம், தயக்கத்தை மீறிய சுணக்கத்தின் காரணம்தான் தெரியவில்லை.

தொண்டையைக் கனைத்துக் கொண்டவன் " உட்கார்" என்றான் அழுத்தமாக.

சுற்றுமுற்றும் பார்த்தவள் மேஜையிலிருந்த பாலை டம்ளரில் உற்றி அவனிடம் நீட்டினாள். "பால்" என்றாள்.(பார்றா!)

வாங்கியவன் குடித்துவிட்டுக் காலி டம்ளரை நீட்டினான். அதைப் பார்த்தவளின் முகம் ஒரு நொடி ஏமாற்றத்தைக் காட்டியது, அவன் கண்களுக்குத் தப்பவில்லை. (என்னடீ உன் பிரசினை?)

கட்டிலின் மறுபுறமாக ஏறி அமர்ந்தவள் " நா..நான் தூங்கட்டுமா?" என்றாள். எதையும் முடிந்தவரை அமைதியாகவே அணுகுபவனாதலால் மெதுவாகத் தலையசைத்தான். பிகு செய்யாமல் படுத்துக் கொண்டவள் "குட்நைட்" என்று கண்ணை மூடிக்கொண்டாள் . 'இது வேறயா' என்று நினைத்தவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

விளக்கை அணைத்து விட்டுப் படுத்தவனுக்குப் பத்மினியின் நினைவாகவே இருந்தது. 'பாலைக் குடுக்குறா, குட்நைட் சொல்றா, இயல்பாகக் கட்டில்ல படுக்கறா, ஆனாலும் நம்பளால பேசவோ நெருங்கவோ முடியல. இவ என்ன மேக்குன்னே தெரியலையே' எனப் பலதும் யோசித்தபடி திரும்பிப்படுத்தவன் அவளைக் கண்டதும் மந்திரித்துவிட்டவன் போலானான். சேலையுடன் உறங்கிப் பழகாதவளிடம் சேலையும் தள்ளியே நின்றது. வளர்ந்த உடலும், குழந்தை முகமும், நெகிழ்ந்த ஆடையுமாக இதுநாள் வரை தடுமாறாத முரளியைத் தவிக்க விட்டாள். தனக்குத்தானே சிரித்துக் கொண்டவன் ஏ சியை கூட்டி வைத்து அவளுக்குப் போர்த்தி விட்டுத் தூங்க முயற்சித்தான்.

காலையில் ஆறு மணிக்குக் கதவைத் தட்டும் சத்தத்தில் விழித்த பத்மினி தன் ஆடையின் நிலையையும், போர்வையையும் பார்த்தவள் 'இவனென்ன இப்படித் தூங்கறான், சரியான சாமியார்' என்றெண்ணியவள், தன் கற்பனை ஹீரோவாக இருந்தால் என்று கனவு சீனுக்குப் போனவள், தான்தான் அவனிடம் சரியாகப் பேசவில்லை என்பதைத் தன் மெமரியிலிருந்து டெலீட் செய்து விட்டாள்.

ஏழைரை மணிக்குக் கண் விழித்த முரளி பத்மினியைக் காணவில்லையென்றதும், ' பரவாயில்லை சீக்கிரம் எழும் பழக்கமிருக்கிறது' என்றெண்ணினான்.

கீழே சென்ற பத்மினியைப் பார்த்தவர்களுக்கு ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. புடவை கசங்கியிருந்தது ஆனால் அவளோ ஊட்டி தக்காளி மாதிரி ஃப்ரெஷ்ஷாக இருந்தாள்.
அடுத்து முரளியைப் பார்க்க அவனோ கஞ்சி போட்டு இஸ்திரி செய்தாற் போல் க்ரிஸ்ப்பாக(crisp) இருநதான். ( பின்னே? வரலாற்றிலேயே எட்டு, எட்டரை மணிநேரம் முதலிரவன்று தூங்கிய பெருமைக்குரியவர்களாயிற்றே!).

அடுத்த மூன்று நாட்கள் குலசாமி, விருந்து, அவன் அக்காவும், தம்பியும் திரும்பப் போக ஏற்பாடு எனக் கழிந்தது. அறையில் இருவருக்குமிடையே நோ மாற்றம். அவள் நைட்டியுடன் தூங்குவதுதான் ஒரே முன்னேற்றம்.

ஐந்தாம் நாள் காலையில் பத்மினிக்கு முன்னரேக் கண் விழித்தவன் அவள் தயாராகியதும், " ஸ்ரீ! பத்து நாளைக்குத் துணிமணி எடுத்துக்கோ. இன்னிக்கு முணு மணிக்குக் கிளம்பணும்" என்று சொல்லிச் சென்றான்.

"நான் வரலை" - பத்மினி.

சட்டென ஏறிய கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், " ஹனிமூனுக்குத் தனியாப் போனா நல்லாவா இருக்கும்?" என்றான் சிறிது கேலியாக. அவனது புதுக்குரலில் திகைத்தவள் தன்னையறியாமலே புன்னகைத்தாள்.

பத்மினி இதைச் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. அவளது ஆவணங்களை வாங்கிச் சென்றது திருமணப்பதிவுக்கு என்றெண்ணினாளேத் தவிர முரளி தேநிலவுக்கு பாலித்தீவுகளுக்கு அழைத்துச் செல்வானென்று அணுவளவு கூட யோசிக்கவில்லை. முதன்முறையாகத் தோற்றத்தை மீறி அவனைப்பற்றி நல்லதாக நினைத்தாள்.

முரளீதரன் ஒன்றும் பழமைவாதியல்ல. அவனது தோற்றம் காதல் கொள்ள வைக்காது. ஆனால் மரியாதை கொள்ள வைக்கும். திக்காகக் கலந்த ஹாட் சாக்லேட் கலரில் இருந்தான். ஊரில் வேட்டியுடனேத் திரிந்தவன் ஜீன்ஸ் டீ ஷர்ட் என்று கலக்கியவன்., லோகல் டூரின்போது ஷார்ட்ஸ், ப்ரிண்டட் ஷர்ட் என ஸ்டைல் காட்டினான். அவை தனக்கு பிலிம் காட்டவோ என்று எண்ணமுடியாமல் மிக இயல்பாக அணிந்திருந்தான்.

.இவளும் சின்னப் பெண்ணானதால், ஸ்கர்ட், சன்ட்ரெஸ்,, த்ரீ ஃபோர்த் டாப்ஸ் எல்லாம் எடுத்துச் சென்றிருந்தாள். வந்து இறங்கி உணவு, ஓய்வுக்குப்பின் பீச்சுக்குக் கிளம்பினார்கள். அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்று ஒரு பட்டியாலா சல்வாரும் குர்தியுமாக வந்தவள் அவனது அரை டிராயரைப் பார்த்துப் பேந்தப் பேந்த முழித்தாள். சிரிப்பை அடக்கியவன், " போலாமா?" எனவும் " நான் ...எனக்கு..நான் " , பத்மினி முடிக்கும்முன் " இரண்டே நிமிஷம், போய் சேஞ்ச் பண்ணிட்டு வா" என்றான்.

அந்தக்கணத்தில் உடலும் உருவமும் அல்லாத ஒரு உணர்வாய், பத்மினியின் மனதில் நுழைந்தான் முரளீதரன்.

பகலிலும் பத்மினி கண்ட கனவுகள் நினைவாகுமா?
 

Anuya

Well-known member
#14
சொப்பனம் 6

தேநிலவில் இறவு, நிலவு, உறவு எல்லாமிருந்ததது, தேனைத்தவிர. இருவரும் இணந்து ஊரைச் சுற்றினர். அந்த ஊர் உணவைச் சுவைத்தனர். சகஜமாக பேசிக் கொள்ளா விட்டாலும் அவசியத்திற்குக் கேள்வி கேட்க, பதில் சொல்லப் பத்மினி பழகியிருந்தாள். அதேபோல் அவன் அவளது கைகளைக் கோர்த்துக் கொண்டு நடக்கையில் முதலில் அதிலேயே கவனமாக இருந்தாலும் இரண்டு நாட்களில் சாலையைக் கடக்கையில் அவளே அவன் கைகளைப் பிடிக்குமளவிற்கு முன்னேறினாள். அவளுக்கு முரளியின் ஆங்கிலம், அவன் சொல்லும் சுவாரசியமான கதைகள் அனைத்தும் பிடித்தது. அவர்கள் வெளியே கிளம்புமுன் ' யு லுக் குட்', ' லுக்கிங் கிரேட்' என்றெல்லாம் கூறும்பொழுது நன்றாகத்தானிருந்தது. முரளி உண்மையையே சொன்னாலும் அவள் அதை எதிர்பார்க்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். ஆயினும் அவள் ஒருவித விலகலுடன் இருந்ததைப் புரிந்து கொண்டான். தனது அருகாமையை பத்மினி வெறுக்கவில்லை ஆனாலும் ஒட்டாமலிருந்தது ஏனென்று அவனுக்குப் புரியவில்லை. அவளது மனம் அவளுக்கே புரியாதபொழுது அவனுக்கு எப்படிப் புரியும்?

பத்மினிக்கு அவனது அக்கறை, பார்வை வருடல்கள், பாராட்டுதல், பேசும் விதம் எல்லாம் பிடித்தாலும், மனதிற்குள் ஒரு உருவத்தை வைத்துக்கொண்டு அதில் முரளியைப் பொருத்த முடியாமலும் விலக்க முடியாமலும் திண்டாடினாள். தவறு செய்கிறோம் என்று பயந்திருந்தாள்.

பாலித் தீவுக்கு வந்திலிருந்து முரளியின் அருகாமையில் இருக்கையில் எந்தக் கனவும் வரவில்லையென்பதை அவள் உணரவில்லை. பருவத்தின் ஆசையும், மனவெழுச்சியுமே தன் கற்பனைக்குக் காரணம் , அது அந்த வயததினருக்குப் பொதுவென்றாலும் அதீதமான பகல்கனவே தன் குழப்பத்தின் அடிப்படை என்பது புரியாமல் தேநிலவின் இனிமையைத் தானும் அனுபவிக்காமல், மனைவிக்காக இருபத்தொன்பது வயது வரை கட்டுப்பாடோடு காத்திருந்த முரளியையும் சுற்றலில் விட்டாள். பிணைத்து வைத்த விதி இணைத்து வைக்காமல் போகுமா?

மாலை நான்கு மணிக்குக் கிளம்பி பக்கத்து ஷாப்பிங் மாலுக்குச் சென்றவர்கள் சில பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வரும் வழியில் சடசடவென மழைப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருவதற்குள் ழுழுவதும் நனைந்து விட்டனர். லிஃட்டில் சென்றபொழுதுதான் முரளி முகத்தில் வழியும் நீரைத் துடைத்தபடியே திரும்பியவன், முதலில் கண்ணாடியில்தான் அவளைப் பார்த்தான். பத்மினியின் ப்ளூ கலர் ஸ்லாக்ஸும் சந்தனக் கலர் ஷர்ட்டும் தொப்பலாக நனைந்திருந்தது. உடலோடு ஒட்டியிருந்த உடை அவளது செழிப்பான உடலைக் காட்ட , மிக அருகிலிருந்தவனைக் குளிரும் வெப்பமும் ஒரே நேரத்தில் தாக்கியது. 'நல்லவேளை வேற யாருமில்லை' என நினைத்துக் கொண்டான். அவனால் அவன் கண்களைப் பிரிக்க முடியவில்லை.

அறைக்குள் நுழைந்த மறுகணம் பத்மினி முரளியின் இறுகிய அணைப்பிலிருந்தாள். முதலில் அனிச்சையாகத் திமிறிய பத்மினி இதை எதிர் பார்க்கவில்லை. அவன் அணைப்பு இறுகியது. ஒரு கையால் அவள் முகத்தை நிமிர்த்தியவன் வேகமாகவும் அழுத்தமாகவும் அவள் இதழ்களில் முத்தமிட்டான். பத்மினி மூச்சுக்குத் திணறுவதைக் கண்டு நிமிர்ந்தவன் 'ஸ்ரீ' என்று முனகியவாறு அவளைப் பார்த்தான். மயக்கத்திலிருந்து விழிப்பது போல் கண் திறந்தவள் விலக முயற்சித்ததை முரளி வெட்கம் என்று நினைத்தான். பிடி சிறிது தளர்ந்தவுடன் உடை மாற்றும் அறைக்குள் ஓடி விட்டாள்.

ஈர உடையை மாற்றியவள், முரளியைக் காணத் தயங்கி (வெட்கம்??) யோசனையுடன் அங்கேயே அமர்ந்து விட்டாள். அவளைக் காணாது உள்ளே வந்தவன், பாத்ரூமுக்குச் சென்று உடை மாற்றி , ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வெளியே வந்தான். மேல் சட்டையில்லாமல் வெற்றுடம்புடன் அவனை முதலில் பார்த்தவள் லஜ்ஜையுடன் வேகமாக எழுந்து முன்னறைக்குச் சென்றாள். முதலில் புரியாமல் பார்த்தவன் பிறகு சிரித்துக் கொண்டான். 'சின்னப்பெண்ணுக்கு ஒரே நாளில் ஒவரா ஷாக் குடுத்திட்டமோ ' என்று நினைத்துக் கொண்டான்.

"ஸ்ரீ! சாப்பிடப் போலாமா? " என்றதற்குத் தலையை மட்டும் ஆட்டினாள். அவளுக்குப் பிடித்த சூப்பும் ஸ்டார்ட்டரும் ஆர்டர் செய்தவன் " என்ன சாப்பிடலாம் ?" என்றான்.

அதுவரை அமைதியாக இருந்த பத்மினி, ' அவனுக்கு என்ன பிடிக்குமென்று நமக்குத் தெரியவில்லை, ஆனால் அவன் தன்னைப் பற்றி நிறைய அறிந்து வைத்துள்ளான் ' என்று எண்ணினாள்.

" உங்களுக்குப் பிடிச்சதையேச் சொல்லுங்க" தன்னையறியாமல் அவள் சொன்னதில் இருவருமே மகிழ்ந்து கொண்டனர்.
இரவு படுக்குமுன் "குட் நைட்" என்றவன் அவளை லேசாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டு உறங்கிப்போனான். பத்மினி தூக்கமும் விழிப்புமாக , பிடித்தமும் குழப்பமுமாக வெகு நேரம் வரை விழித்திருந்தாள்.

மறு நாள் மங்கி ஃபாரெஸ்டுக்குச் சென்றனர். பாலியின் பழங்குடிகளால் பாதுகாக்கப்பட்டு வரும் அடர்த்தியான அந்தக் காட்டில் 1400 க்கும் மேற்பட்ட நீள்வால் குரங்குகள் வசிக்கின்றன. Tropical country எனப்படும் வெப்பமண்டல நாடான பாலித்தீவின் பசுமை மிகவும் பிரசித்தம்.

சக மனிதர்களுடன், ஏன் உறவினரிடமே முறுக்கிக்கொள்ளும் மனிதர்களுடன் குழந்தைகளைப் போல் விளையாடின குரங்குகள்.

அந்தக் காட்டின் பசுமையிலும், அமைதியிலும், குரங்குகளின் விளையாட்டிலும் வேறு உலகிற்குச் சென்றனர். முரளி தடுக்கும் முன்பே அவற்றை செல்போனில் படமெடுக்க முயன்ற பத்மினியைத் திடீரென இரு குரங்குகள் நெருங்கி ஒன்று போனைப் பறித்துக்கொண்டு ஓடியது. அதன் பின்னே ஓடிய மற்றொன்று திரும்பிய வேகத்தில் தன் நீண்ட வாலால் பத்மினியின் முகத்தில் அறைந்து விட்டுச் சென்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டதில் அதிர்ச்சியில் விழப் போனவளைப் பிடித்து அணைத்துக் கொண்டான். பயத்தில் அவளும் அவனிடம் ஒன்றினாள். சிறிது நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பியவர்கள் மறுநாள் ஊருக்குத் திரும்புவதால் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தனர். இருவரும் பாக்கிங் செய்தனர்.

வரும்பொழுது அவனது பெட்டி எதென்றே தெரிந்திறாத பத்மினி அவளறியாமலே முரளியின் உடமைகளையும் சேர்த்து பாக் செய்தாள். அமுதாவின் வளர்ப்பில் வீட்டு வேலை, சமையல் எல்லாம் நன்றாகவே செய்வாள். நேர்த்தியாகவும், விரைந்தும் வேலை செய்தவளைப் " போதும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.

ஒருகணம் இறுகித் தளர்ந்தவள் அசையாமல் நின்றாள். அவளது கழுத்தில் முகத்தை உரசியவனின் வெப்ப மூச்சு அவளைத் தீண்டியது. அவளைத் தன் புறம் திருப்பியவன் இறுக்கி அணைத்துக்கொண்டான். காலையிலிருந்து அவனுடன் நெருக்கமான பயணமோ, அந்தக் காட்டின் அமைதியோ , அவளது பயத்தைப் போக்கிய அவனது அண்மையோ, ஆண்மையோ அல்லது வேறொன்றோ பத்மினி அவனது அணைப்பில் கட்டுண்டு அமைதியாகவே இருந்தாள்.

அவளது முகத்தை நிமிர்த்தியவன் கண்டது அவளது மூடிய கண்களைத்தான். ஒரு வித தயார் நிலையில் எதிர்பார்ப்புடன் இருந்தவளைப் பார்த்து தன்னை மறந்தவன் காட்டாற்று வெள்ளமாய்ப் பாய்ந்தான். நீந்திக் கரையேறியவன் "ஸ்ரீ" என்றான் திருப்தியும் நிறைவுமாய். அவளுமே மயக்கத்திலிருந்தவள் ' முன்ன மாதிரி பப்பின்னு சொல்லுங்க' என்றாள்.

முரளியின் மயக்கம் தீர்ந்து குழப்பம் வந்தது, கூடவே கோபமும். பத்மினிக்கோ தன் மனதிலிருந்த பிம்பம் மறைந்து முரளீதரனே முழுதாக நிறைந்தான். ஸ்ரீ என்பது அவனுக்கு நெருக்கமான பெண்ணின் பெயரென்றே நினைத்தாள்.

பத்மினி என்றால் லக்ஷ்மி. லக்ஷ்மியின் சுருக்கமே ஸ்ரீ என்று ஆராய்ச்சி பண்ணித் தான் ஸ்பெஷலாக அழைக்க வேண்டுமென்ற ஆசையுடன் வைத்த பெயரை முதலில் இருந்தே அவள் ஏற்கவில்லை என்றுணர்ந்தவன் , 'முன்ன மாதிரின்னு சொன்னாளே, ஒருக்கால் அவளுக்கு வேற யாரும்….' என்று குழம்பினான். 'அவசரப்பட்டு விட்டோமோ' ஹாலில் நடந்து கொண்டே யோசித்தவன் நான்கு மணியளவில்தான் கண்ணயர்ந்தான்.

முரளியை முழுதாக மனதாலும், உடலாலும் ஏற்றுக் கொண்ட பத்மினி நிம்மதியாக உறங்கினாள்.

ஓராயிரம் வினாக்களும் உலா வரும் கனாக்களுமாய் தாயகம் திரும்பினர். 

Anuya

Well-known member
#15
சொப்பனம் 7


வீட்டுக்குள்ளே நுழைந்தவர்களைப் பார்த்தவுடன் மனோகரிக்குப் புரிந்துவிட்டது, ஏதோ சரியில்லையென்று. பத்மினி சாதாரணமாத்தான் இருந்தாள். முதல்நாள் நெருக்கத்துக்குப் பிறகு முரளியின் திடீர் விலகலும் பாராமுகமும் ஏனென்று அவள் யோசிக்கவில்லை. சொல்லும் எதிர்ச்சொல்லும்,செயலும் எதிர் வினையுமான உறவுகளுக்கு மத்தியில் வளர்ந்தவளுக்கு இந்த உறவின் நுட்பம் பிடிபடவில்லை.

" குளிச்சிட்டு சாப்பிட வாங்க" என்ற மனோகரிக்குத் தலையாட்டிய பத்மினி அவர்களது அறைக்குச் சென்றாள். முரளி ஏற்கனவே பாத்ருமில் இருந்ததால் பயணத்தில் உபயோகித்த இருவரது அழுக்குத் துணிகளையும் திரட்டினாள். பாத்ரும் திறக்கும் ஓசையில் மாற்றுடை எடுத்துக் கொண்டு பின்னால் நகர்ந்தவள், அவன் கால்களை நன்றாக மிதித்து விட்டாள். ஏற்கனவே குழப்பத்திலும் கோபத்திலுமிருந்தவன் வலி பொறுக்காமல் "ஏய், உனக்குக் கண்ணு தெரியல? மேல வந்து விழற வேலையெல்லாம் இங்க வச்சுக்காதே" என்றவன் முடிக்கும் முன்பே தன் தவறை உணர்ந்தான.

முதலில் விக்கித்துப் போய் நின்றவள் கண்கள் கலங்க குளியலறைக்குள் ஓடி விட்டாள். அதற்குள் சத்தம் கேட்டு"என்னப்பா முரளி? " என்ற செல்வத்தின் குரலில் "ஐயோ ! இப்போ விசாரணை வைப்பாங்களே" என்று தன்னையே நொந்து கொண்டான். பத்து நிமிடமாகியும் பத்மினி வெளியே வராததால், பாத்ரும் கதவைத் தட்டியவன், வெளி வந்தவளிடம், எங்கேயோ பார்த்துக்கொண்டு " ஸாரி, வலிலதான் கத்திட்டேன். ஆனா எதாயிருந்தாலும் நமக்குள்ளயே இருக்கட்டும்" என்றான். ' 'நமக்குள்ள என்ன ரகசியம் இருக்கு ' எனக் குழம்பினாள் பத்மினி.

சாப்பிடுகையில் பொதுவாகப் பேசினர். பாலியிலிருந்து வாங்கியவற்றைக் காட்டினர். மனோகரியின் கேள்விகளுக்குப் பத்மினிதான் பதிலளித்தாள். பத்மினியிடம் எல்லோருக்கும் பால் கொண்டு வரச் சொன்னவள் "முரளி" எனும்முன்னே செல்வம்," ஆரம்பத்துல அப்படிதாம்பா இருக்கும். அவளும் பழகணுமில்ல. சின்னப் பொண்ணு. கொஞ்சம் விட்டுப்புடி" என்றார்.
முரளி, மனோகரி இருவருக்குமே ஆச்சரியம், சாதாரணமாக அதிகம் தலையிடாதவரின் பேச்சில். "சரிங்கப்பா", மண்டையை ஆட்டியவன் மாடிக்குச் சென்று விட்டான்.

பகல்கனவிலிருந்து மீண்டிருந்த பத்மினி தான் வருவதற்கு முன் தூங்கிவிட்டவனை ஏமாற்றத்துடன் பார்த்தபடி உறங்கிப்போனாள்.

ஆயிற்று. இந்தக்கண்ணாமுச்சி விளையாட்டு ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. பத்மினியின் சமாதான முயற்சிக்குப் பலன் பூஜ்யமே. முரளீதரனின் விடுப்பு முடிந்து கல்லூரி செல்லத் துவங்கினான்.

பத்மினி புகுந்தவீட்டில் பொருந்திப்போனாள். பொறுப்புடன் தனக்கென சில வேலைகளை எடுத்துக் கொண்டாள். சில நேரம் முழுச்சமையலும் செய்தாள். முரளிக்குப் பிடிக்கும் என்று மனோகரி கூறியவற்றைச் செய்து பார்த்தாள். அவளின் பெற்றோர் வந்து பார்த்து மகிழ்ந்து போனார்கள். எப்பொழுதுமே அதிகம் பேசாததால் முரளியின் மாற்றம் மனோகரிக்கும் செல்வத்துக்கும் தெரியவில்லை. பத்மினியின் நடவடிக்கைகளைப் பார்த்தவன் மேலும் குழம்பினான். 'ஒன்றி வாழும் மருமகளைப் போல் இருக்கிறாளே!' என நினைத்தான்

அன்றுக் கல்லூரி விடுமுறையாதலால் முரளி வீட்டிலிருந்தான். மனோகரியுடன் கிச்சனிலிருந்த பத்மினி மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்தாள். ஜாரின் முடி சரியாக மூடாமல் இவள் அரைக்க ஆரம்பித்தவுடன் தானே சுற்றி மூடிக்கொண்டது. ஆனால் மூடியின் மேல் பிடித்துக் கொண்டிருந்தவளின் விரலை சுற்றும் வேகத்தில் நன்றாகச் சிராய்த்து விட்டது. சில நொடிகளில் ஸ்விட்சை அணைத்து விட்டாலும். சிறிது ரத்தமும் எரிச்சலும் மிகவே பத்மினிக்குக் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. பதறிய மனோகரி, " என்னம்மா பார்த்து செய்யக்கூடாதா? " , சொல்லிக்கொண்டே அவள் கையைக் கழுவி தேங்காயெண்ணெய் தடவினார்.

செல்வம் பர்னால் கொண்டு வந்து கொடுத்தார். முரளி இந்தப் பரபரப்பை வேடிக்கை பார்த்தானே தவிர ஒன்றும் செய்யவுமில்லை, சொல்லவுமில்லை. மனோகரியால் முரளியின் அலட்சியத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லை. யாருக்கேனும் ஏதேனும் என்றால் பதறுபவன் புது மனைவியிடம் காட்டிய பாராமுகத்தால் யோசனையுடன் அமர்ந்து விட்டார். முரளிக்கேக் கோபமென்றால் மேட்டர் சீரியஸ் என்றுப் புரிந்து கொண்டார்.

அவரது மனம் எண்ணாததெல்லாம் எண்ணியது. மறுநாள் திவ்யாவுடைய அம்மாவுடன் ஜோசியரைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தார். அறைக்குள் சென்ற பத்மினிக்கு வலது கையில் மூன்று விரல்களில் சிராய்ப்பினால் பாத்ரூம் கதவைத் தாளிட, போர்த்திக்கொள்ளச் சிறிது சிரமப்பட்டாள். முரளியிடம் உதவி கேட்டக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது.

அவளுக்கு உதவலாமா, வேண்டாமா என முரளி யோசிக்குமுன் அவள் படுத்துவிட்டாள். அவளுக்கு ஆறுதலான வார்த்தைகளும், அரவணைப்பும் தேவையாயிருந்தது. அதைக் கற்பனையில் பெற நினைத்தவளின் மனதில் முரளியே வந்தான்.

தூங்குபவளைப் பார்க்கப் பாவமாயிருந்தது. ' நான்தான் தவறு செய்கிறேனோ?' என்று முதன்முறையாகச் சரியாக நினைத்தான். அவளிடம் பேச வேண்டும் . அவளைப் பார்த்த முதல் 'ஸ்ரீ' யாகவே மனதில் நினைப்பதைச் சொல்லி விடுவோம் என யோசிக்கைலேயே அவள் மனதில் யாரோ இருக்க நான் ஏன் கீழிறங்க வேண்டும் ? என்று U டர்ன் அடித்தான். ஒருவர் மனதில் ஒருவர் இருந்தும் ,ஆசையிருந்தும், அருகருகில் இருந்தும் தீவுகளாய் இருந்தனர்.

அன்று தன் தாயின் பார்வை தன்னைத் துளைத்ததை நினைத்தவன், இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமென தீர்மானித்த பின்னரே உறங்கச் சென்றான்.

எழுதி மேற்செல்லும் விதியின் கைகள் முரளி குறித்த தேதியை ஒத்திப் போட்டது.

அதிகாலை ஐந்து மணியளவில் பத்மினியின் பாட்டி,, வெங்கடேசனின் தாய் பின்னிரவில் காலமாகிவிட்டதாகவும், அவர்கள் வேன் எடுத்துக் கொண்டு மதுரைக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் செந்தில் போன் செய்தான். செல்வம் பத்மினியையும், முரளியையும் போகும் வழியில் ஏற்றிக் கொள்ளச் சொல்லிவிட்டு இவர்களை எழுப்பினார். அடுத்த முக்கால் மணியில் மதுரையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். ,

மறுநாள் மாலைக்குள் எல்லாம் முடிந்து இரவு பஸ்ஸில் முரளி தனியாக ஊர் திரும்பினான். பத்மினியை மட்டுமாவது காரியம் முடியும்வரை இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டதால் அவன் பறப்பட்டு விட்டான். பத்மினிக்குத்தான் இருமனதாய் இருந்தது. முரளியோ பிரிவு தெளிவைக் கொடுக்குமென்று நம்பினான். 'நம்பிக்கை அதானே எல்லாம்?' , விளம்பரம் போல் தனக்குள் சொல்லிச் சிரித்துக் கொண்டான்.


இதற்கிடையே, மனோகரி இவர்கள் மதுரை சென்றவுடன் திவ்யாவுடைய தாயுடன் ஜோசியரைப் போய்ப் பார்த்து வந்தார். ஜோசியர் திருஷ்டி இருப்பதாகவும், குல தெய்வத்திற்கு நேர்ச்சை செய்யும்படியும் கூறினார். "எதாவது நேர்த்திக்கடன் நிலுவையா? லேட் ஆனாலும் செஞ்சுடுங்கம்மா" என்றார். தனக்கு ஞாபகம் இல்லையென்றார் மனோகரி. ஒருநாள் முழுவதும் யோசித்தபின் தன் கணவரிடம் கேட்டார்.

செல்வத்துக்கும் ஒன்றும் தெரியாததால், பத்மினி வந்ததும் குலசாமிக்கு பொங்கலிட்டு ஆடு விடுவதாக வேண்டிக் கொண்டனர்.

முரளி பத்மினியுடன் பேசா விட்டாலும் அவளில்லாமல் இருப்பதை வெறுத்தான். முரளிக்கு இருந்த விலகல், சந்தேகம் போலல்லாமல் பத்மினி அவனை முழுவதுமாக ஏற்றுக்கொண்டதால் பிரிவைத் தவிர வேறு சங்கடமில்லை. அவனுக்குத் ,தன்னால், தன்மீதுதான் கோபம் என்று அவள் யோசிக்கவில்லை.

கனவினில் வந்த உயிர் உறவாகியது அவளுக்கு. நனவாகுமா?
 

Anuya

Well-known member
#16
சொப்பனம் 8


பத்மினிக்கு வருத்தமாக இருந்தது. தேநிலவின்போது போன் தொலைந்தபின் வேறு வாங்கவில்லை. கேட்கத் தயங்கினாள். முரளிக்கோ அதைப் பற்றிய சிந்தனையே இல்லை. மனோகரியிடம் பேசுகையில் அவனைப்பற்றிக் கேட்கக் கூச்சமாக இருந்தது. மற்றவர்களின் போனை அடிக்கடிக் கேட்கத் தயங்கினாள். அவளது அண்ணி திவ்யாவிற்கு பத்மினி எதனாலோ நிலைகொள்ளாமல் தவிப்பது புரிந்தது. எப்படிக் கேட்பதெனத் தயங்கினாள்.

மனோகரி, செல்வம் இருவரும் பதினாறாம் நாள் காரியத்துக்குப் போய் வருகையில் பத்மினி, செந்தில், திவ்யாவும் அவர்களுடனே திரும்பினர். பத்மினியின் பெற்றோர் நான்கு நாட்கள் கழித்து வருவதாக இருந்தது.

வழியெங்கும் பத்மினி யோசனையுடனே வந்தாள். அதிகம் பேசவில்லை. ஒருவேளை அந்த ஸ்ரீயின் நினைவில் முரளிக்குத் தன்னை பிடிக்கவில்லையோ? ஆனால் தேநிலவு வரை நன்றாகத்தானே பேசினான்? என்று சிந்தனையில் உழன்றாள்.

திவ்யாவிடம் , மனோகரி ஜோசியர் சொன்னதைப் பற்றிச் சொன்னதற்கு, " பெரியம்மா! முதல்ல அவங்க கல்யாணத்த குலதெய்வ கோவில்லதானே தடத்தறதா இருந்தோம்? அதனால இருக்குமோ ?" வென, மனோகரிக்குத் தெளிவு வந்தாற் போலிருந்தது. செல்வத்துடன் பேசிவிட்டுச் சொல்வதாகச் சொன்னார்.

வீட்டிற்கு வரும்பொழுது இரவு பதினோரு மணியாகிவிட்டது. கதவைத் திறந்த முரளி பத்மினியை அவர்களுடன் எதிர்பார்க்கவில்லை. அவளைக் கண்டதும் சட்டென மலர்ந்த முகம் நொடியில் மாறிவிட்டது. பத்மினி அவன் முகத்தைப் பார்ப்பதையும் அவன் தவிர்ப்பதையும் செல்வம் கவனித்து விட்டார்.

அவர்களது அறைக்குள் நுழைந்தவள் முகம் கழுவிப் படுத்துக் கொள்ளும் வரை ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக் காண்டிருந்தான்.

திடீரென," உனக்குப் பிடிக்கலைன்னா நாம பிரிஞ்சிடலாம்" எனவும் அதிர்ச்சியானாள் பத்மினி. திருமணத்திற்கு முன் அழுத்தமாகப் பேசிச் சம்மதிக்க வைத்தவன், தேநிலவில் அவனது இயல்பை மீறிப் பேச்சிலும் அக்கறையிலும், ஆக்கிரமிப்பிலும் அவளுக்குத் தெளிவைக் கொடுத்தவன் , பிரிவதைப்பற்றிப் பேசியதும் அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டது.

அவளால் பொறுக்க முடியாமல் , " உங்களுக்குதான் என்னைப் பிடிக்கலை. ஒரு போன் கூடப் பண்ணலை. யாரையோ நினைச்சுகிட்டு எங்கிட்டப் பேசறீங்க" என வார்த்தையை விட்டாள்.
முதலில் திகைத்தவன் பின்பு, கோபமாக "ஏய், யார் கிட்ட பேசற? நீதான் முன்னை மாதிரி பப்பின்னு கூப்பிட சொன்ன. முன்னாடி உன்னை யாரு அப்படி கூப்பிட்டாங்களோ?" என்றவன் , தன் தரம் தாழ்ந்த பேச்சால் தன்னையே நொந்து கொண்டு அறையை விட்டு வெளியேறினான். அதிர்ச்சியில் அழுதபடியே
உறங்கிய பத்மினி காலையில் அவன் கீழ் ஹால் சோபாவில் தூங்குவதைப் பார்த்தாள்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த
மனோகரியும் செல்வமும், காலை உணவின்போது, " முரளி ஒரு நாலு நாள் லீவு போட்டுக்கோப்பா, வர வெள்ளிக்கிழமை நம்ம குலதெய்வம் கோவில்ல பொங்கல் வச்சு கிடா வெட்டணும். ஞாயித்துக்கிழமை தாலி பிரிச்சுக் கோத்துடலாம். கல்யாணமே அங்க வச்சு செய்யல" என்க , அமைதியாக இருந்தவன் சில நொடிகளுக்குப் பின் "தாலிக்கொடி? " எனக் கேட்டான். " "அதெல்லாம் ரெடியா இருக்கு" .

பத்மினியை இந்த டிசைனை செலக்ட் செய் என்றானே தவிர, திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடந்ததில் அவன் அதை மறந்தே விட்டான். இப்பொழுது அதைப் பார்க்க லேண்டும் என்று சொல்லச் சங்கோஜமாயிருந்தது. " காலேஜ்ல பார்த்துட்டு சொல்றேன்" என்று கிளம்பி விட்டான்.

பத்மினியைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவளுக்கு மயக்கத்தில் தான் ஏதோ கூறியது ஞாபகத்திலேயே இல்லை. தன் கற்பனையின் விளைவு வார்த்தைகளாய் விளைந்து நிற்பதில் பயமும் அதிர்ச்சியுமாகக் குற்ற உணர்வில் தவித்தாள். அவளுக்கு முரளியை மிகவும் பிடித்திருப்பதை முழுதாக உணர்ந்து கொண்டாள். அவனைப் பிரியும் எண்ணமே அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது பெற்றோரையும் அண்ணைனயும் நினைத்தால் பயமாக இருந்தது.

முரளீதரனிடம் தன் கனவு பற்றிச் சொல்லிவிடத் தயாராயிருந்தாள். ஆனால் தவறே செய்யாத முரளிக்கு அவளது குற்றச்சாட்டை மன்னிக்க முடியவில்லை. முன்பிருந்த பேச்சுக்களும் நின்று போய் முற்றிலும் அந்நியர்களானார்கள்.

வியாழனன்று காலை ஒரு வேன் மற்றும் காரில் முரளி, பத்மினி இருவரது குடும்பமும் மற்றும் சில உறவினர்களும் கோவையருகில் உள்ள பூர்வீக கிராமத்துக்குச் சென்றனர். அருகருகே இருந்தாலும் சுற்றி உறவினர்கள் இருந்ததால் முரளியினால் இயல்பாக இருக்க முடிந்தது. பத்மினி அமைதியாகக் கேட்டால் மட்டுமே பதில் சொன்னாள். அவள் பயந்திருப்பதை முரளி உணர்ந்தான். ஆனாலும் பேச முற்படவில்லை. அமுதா கூட மகளை யோசனையாகப் பார்த்தார்.

மறு நாள் பொங்கல் வைத்துக் கிடா நேர்ந்து விட்டனர். பட்டுச் சேலையில் அழகாக இருந்தவளைப் பார்த்தவன் இந்தப்பிரசினையெல்லாம் தீர்த்து வை கடவுளே என்று அவனையறியாமல் வேண்டிக் கொண்டான். பத்மினியும் அதேநேரம் எல்லாம் சரியாகிவிட வேண்டுமென வேண்டிக்கொண்டாள். சனிக்கிழமையன்று சொந்தபந்தங்களுக்கு விருந்து வைத்தனர்.

ஞாயிறன்று காலை குலசாமி கோவிலில் தாலி பிரித்து தங்கச்சரட்டில் கோர்த்தனர். திவ்யாவின் அம்மா, வழக்கமா வயசான சுமங்கலிதான் செய்வாங்க. ஆனா கல்யாணம் இங்க நடக்காததால தம்பியே போடட்டும் என்றார். எல்லோருக்கும் அதுவே சரியெனப்பட முரளி தாலிக்கொடியைக் கையில் வாங்கிப் பத்மினியின் கழுத்தில் போடுமுன் அவன் சொன்ன டிசைனில் இருப்பதைக்கண்டு அவளைப் பார்த்தான். ஏதோ ஒரு நிம்மதியும் நம்பிக்கையும் பரவியது.

"போடுடா, என்ன யோசனை? என்றார் மனோகரி. அவளுக்கு அணிவிக்கையில் அவளது கண்கள் கலங்கி விட்டது. முரளி மீண்டும் 'அவளுக்குப் பிடிக்கவில்லை போல ' என்றே நினைத்தான். அவர்கள் உடனே கிளம்பி இரவு எட்டுமணியளவில் வந்து சேர்ந்தனர். வழியிலேயே டின்னரை முடித்துக் கொண்டனர்.

உடை மாற்றி ஃபிரெஷ் ஆனவர்களை மனோகரி அழைத்தார். சூடான பாலைக் கொடுத்தவர், "முரளி உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரசினையோ பேசித் தீர்த்துக்கோங்க. சந்தோஷமா இருங்க. இன்னும் ரெண்டு நாள் லீவு இருக்குல்ல, எங்கயாவது போய்ட்டு வாங்க. நீங்க குஷியா இருந்தாதான் நாங்க நிம்மதியா உன் தம்பிக்கு வரன் பார்க்கலாம்." என்று கூறிவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார்.

படுக்கையில் உட்கார்ந்தவனை ஏறிட்டவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு " எனக்குக் கதை படித்து, சினிமா பார்த்து, ஃபரெண்ட்ஸ் கூட பேசி ஹஸ்பண்டுன்னா மில்ஸ் & பூன்ஸ் ல வர ஹீரோ மாதிரி கற்பனை பண்ணி பண்ணி அதுவே மனசுல பதிஞ்சு போச்சு. தப்புதான். ஆனால் நான்...யாரையும்....நான் ஒரு தப்பும்...என்றவள் மடிந்து உட்கார்ந்து அழத் தொடங்கினாள்.

முரளி அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்துவிட்டான். தன்னைக் கேலி செய்வதாக நினைத்து மேலும் அழுதவளை நெருங்கி எழுப்பி அணைத்துக் கொண்டான். " இன்னிக்குதான் தாலி டிசைனைப் பார்த்தேன். அப்பவே புரிஞ்சுக்கிட்டேன். இந்த வயசுல இதெல்லாம் சகஜம்தான். ஆனாலும் நீ கொஞ்சம் ஓவர்தான் " என்று சிரித்தான். யாரிடமும் பேசாமல், பகிர முடியாமலிருந்தவள் அழுது தீர்த்தாள்.

"ஸ்ரீ" என்று அழுத்தமாக அழைத்தவுடன் விலகப் பார்த்தவளை இறுக்கி " அம்மா தாயே சொப்பன சுந்தரி. ஸ்ரீங்கறது நீதான். பத்மினிங்கறத பப்பின்னு சுருக்கிதான் எல்லாரும் கூப்பிடுவாங்க. பத்மினின்னாலும் ஸ்ரீன்னாலும் லக்ஷ்மின்னுதான் அர்த்தம். உனக்கு நான் மட்டும் கூப்பிட ஸ்பெஷலா பேரு வச்சா நீ என்னையே சந்தேகப்படற" என்றவனைப் பார்த்தவளின் மயக்கம் கலந்த பார்வை மாற்றத்தைக் கண்டவன், " திரும்பியும் கனவுக்குள் போய்டாதம்மா.. இப்ப உனக்கு ப்ராக்டிகல் க்ளாஸ்" , சொன்னபடியே அவளது உதட்டிலிருந்துப் பாடத்தை ஆரம்பித்தான் அந்தப் பேராசியன். இந்தமுறை நன்றாகப்படிக்கத் தொடங்கினாள் சொப்பன சுந்தரி.

முற்றும்