தினம் ஒரு தகவல்

#31
கஜா' புயல்: மாற்றப்பட்டுள்ள ரயில்கள் விவரம்
'கஜா' புயல் இன்று நாகப்பட்டினம் அருகே கரையைக் கடப்பதை ஒட்டி முக்கிய ரயில்கள் மாற்றப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரங்களை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
'கஜா' புயல் இன்று இரவு 8 மணிமுதல் 11 மணி வரை நாகை அருகே கரையைக் கடக்கிறது. இதனால் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்களில் கடும் காற்றும் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இம்மாவட்டங்களில் இன்று இயக்கப்படும் ரயில்கள் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
அவை குறித்த விவரம்:
1) நவ.15 இன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 16851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் விழுப்புரம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்படும்.
2) நவ.15 இன்று தாம்பரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 16191 தாம்பரம் - திருநெல்வேலி விரைவு ரயில் விழுப்புரம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்படும்.
3) நவ.15 இன்று மதுரையில் இருந்து புறப்படும் வண்டி எண் 22624 மதுரை - சென்னை எழும்பூர் விரைவு ரயில் தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
4) நவ.15 இன்று திருநெல்வேலியிலிருந்து இருந்து புறப்படும் வண்டி எண் 16192 திருநெல்வேலி - தாம்பரம் விரைவு ரயில் தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
 
#32
கணிக்க முடியாத புயலா 'கஜா'?- இரவு 8-11 மணிக்குள் கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமேஷ் பேட்டி
'கஜா' புயலின் தற்போதைய நிலை குறித்து முதன்முறையாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமேஷ் பேட்டி அளித்தார்.
நுங்கம்பாக்கத்திலுள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனுடன் இணைந்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் புயல் நிலவரத்தைப் பற்றிக் கூறுகையில், ''இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் 'கஜா' புயல் கரையைக் கடக்கும். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்யும்.
மேலும், புயல் கரையைக் கடந்த பிறகு தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், கேரளாவிலும் மழை பெய்யும். நாளை மாலை கஜா புயல் அரபிக்கடலுக்குச் செல்லும் தமிழக அரசு எடுத்துள்ள சிறப்பான ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவை'' என்றார்.
பின்னர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'' 'கஜா' புயல் தற்போது நாகைக்கு வடகிழக்கே சுமார் 217 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது தொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். தற்போதைய நிலவரப்படி 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று இரவு 8 மணிமுதல் 11 மணி வரை இடைப்பட்ட காலத்தில் நாகப்பட்டினத்தை ஒட்டி கரையைக் கடக்கும். கரையைக் கடக்கும் நேரத்தில் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
இந்த மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 முதல் 90 கி.மீ. சமயங்களில் 100 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 'கஜா' புயலைத் தொடர்ந்து ரேடார் மற்றும் செயற்கைக் கோள் மூலம் தொடர்ந்து கண்காணித்து தமிழக அரசுக்குத் தேவையான எச்சரிக்கை தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது''.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பாலச்சந்திரன் பதிலளித்தார்.
புயலின் வேகம் காலையிலிருந்து கூடி குறைந்து வருகிறதே?
இது இயல்பு, ஒரே சீராக நகர்ந்து வராது. அது நிலையாக இருக்காது. ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
கடல் காற்று, அலை உயரம் எப்படி இருக்கும்?
கடல் அலை இந்த மாவட்டங்களில் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகரிக்கும். சில இடங்களில் கடல் நீர் உட்புகும் நிகழ்வும் நடக்கும். அதுகுறித்தும் தெரிவித்துள்ளோம். கரையைக் கடக்கும் நிகழ்வு 3 மணி முதல் 4 மணி நேர நிகழ்வு.
முதலில் முன்பகுதி நகரும். பின்னர் கண்பகுதி, அதற்குப் பின்னர் வால்பகுதியைக் கடப்பது என்ற மூன்று நிலையையும் கண்காணிப்போம்.
மழை எப்போதிருந்து தொடங்கும்?
மழை 4 மணியிலிருந்து தொடங்கும். நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கும். கடந்து உள்ளே சென்று அரபிக்கடலுக்கும் செல்ல வாய்ப்பு உண்டு.
கணிக்க முடியாத புயலா 'கஜா'?
கணிக்க முடியாத புயல் என்று ஒன்றில்லை. ஒவ்வொரு புயலும் தனித்தன்மை வாய்ந்தது. அது கணிக்கக்கூடியதுதான். இயல்புக்கு என்னென்ன கருவிகள் மூலம் கணிக்க முடியுமோ அத்தனை அறிவியல் சாதனங்களையும் வைத்து கணித்து வருகிறோம்.
சென்னைக்கு என்ன பாதிப்பு?
சென்னைக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை. புயல் கரையைக் கடக்கும்போது அதை ஒட்டி உள்ள மேகக்கூட்டங்கள் நகரும். அப்போது சென்னையில் மழை இருக்கும்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக எவ்வளவு மழை பெற்றுள்ளோம்?
தற்போதுவரை 27 செ.மீ. மழைக்கு குறைவாக மழை பெற்றுள்ளோம். இப்போது நடுப்பகுதியில்தான் உள்ளோம். இன்னும் ஒருமாதம் இருக்கிறது.
அடுத்து காற்றழுத்த தாழ்வு உருவாகும் சூழல் இருக்கிறதா?
தற்போது உள்ளதுதான் பெரிய புயல். இது முடிந்த பின்னர்தான் அடுத்த நிகழ்வு.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 
#33
புயல், மழை, வெள்ளம், பேரிடர் நேரங்களில் உதவும் ‘TN SMART’APP : தேசியப் பேரிடர் மேலாண்மையின் கீழ் வழிகாட்டும் மொபைல் ஆப்
புயல், மழை, வெள்ளம் போன்றவற்றின் நிலை, வானிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் டிஎன் ஸ்மார்ட் எனும் செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
அரசின் தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன்படி வரும் வடகிழக்குப் பருவமழையின் போதே அபாயக் குறைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை வருவாய்த் துறை தொடங்கியுள்ளது. அதே நேரம் பொதுமக்கள், சமூக எண்ணம் கொண்ட செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பேரிடர் மேலாண்மை குறித்த ஆர்வம் உள்ளவர்கள் பேரிடர் காலத்தில் உரிய தகவலைப் பெறும் வண்ணம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மழையின் அளவு, வெள்ளம் தொடர்பாக ஒவ்வொரு பகுதிக்குமான முந்தைய தகவல்கள், நிகழ்கால தகவல்களைப் பெற்று கணித்து, தகவல்கள் அனுப்பும் வகையில் டிஎன்-ஸ்மார்ட் எனும் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. “பாங்காக்கில் செயல்படும் ஆர்ஐஎம்இஎஸ் உதவியுடன் இந்த டிஎன்-ஸ்மார்ட் செயல்படும். இதன் மூலம் அந்தந்த நேரத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களையும், அதன் பாதிப்புகளையும் கணிக்க முடியும். இந்த மென்பொருள், தகவல்களை உடனுக்குடன் வழங்கி எச்சரிக்கை விடுக்கும்.
சாதாரணமாக அனைவரும் புழக்கத்தில் வைத்துள்ள ஆண்ட்ராய்டு செல்போனில் கூகுள் ப்ளேஸ்டோரில் இந்த ஆப் உள்ளது. பிளே ஸ்டோரில் #TNSMART என டைப் செய்தால் அந்தச் செயலி டவுன்லோடு ஆகும். பின்னர் அந்தச் செயலியில் உங்கள் பெயர், செல்போன் எண், இமெயில் முதலியவற்றை பதிவு செய்து உங்கள் பாஸ்வேர்டையும் பதிவு செய்தால் செயலி செயல்ப்டத் தொடங்கும்.
வானிலை குறித்த தவறான தகவல்களைப் பொதுமக்களை அச்சப்படுத்தும் வகையில் பலரும் வாட்ஸ் அப் வலைதளங்களில் பரப்பும் நேரத்தில், தெளிவாக உண்மைத் தகவலை நமது பாக்கெட்டில் உள்ள செல்போனிலேயே அறிந்துகொள்ள இந்தச் செயலி உதவுகிறது.
 
#34
கஜா புயல் கடக்கும்போது: செய்ய வேண்டியது... செய்யக்கூடாதது...
புயல் கரையை கடக்கும்போது பாதுகாப்பாக இருப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:
புயலுக்கு முன்பு...
* தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்; உண்மையான தகவல்களை செய்தித்தாள் இணையதளங்கள், தொலைக்காட்சி போன்றவை மூலம் தெரிந்து கொள்வது அவசியம்
* வீட்டில் முக்கிய ஆவணங்கள் இருந்தால் அவை தண்ணீரில் நனைந்து விடாமல் இருக்கும்படி பாலிதீன் கவர் கொண்டு மூடி பாதுகாக்கலாம்.
* அதிகமான மழை ஏற்பட்டால் வெளியே போக முடியாத சூழல் ஏற்படும். ஒரு சில நாட்களை கழிக்க தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
* மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்பதால் வெளிச்சத்துக்காக பேட்டரி போன்ற மாற்று ஏற்பாடுகள் அவசியம்
* தகவல் தொடர்பு இல்லாமல் போகும் என்பதால் டிரான்சிஸ்டர் போன்றவை பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
* மொபைல் போன் சார்ஜ் செய்ய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். பவர் பேக்கப் பேட்டரி போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* பழைய வீடாக இருந்தால் அதன் பாதிக்கப்பட்ட பகுதியை அறிந்து அதற்கு ஏற்றவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. பாதிப்பு ஏற்படும் என தெரிந்தால் முன்கூட்டியே வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது.
* வீட்டில் உள்ள மனிதர்களை போலவே நாய், பூனை போன்ற விலங்கினங்களுக்கும் தேவையான பாதுகாப்பை முன்கூட்டியே உறுதி செய்வது அவசியம்
* மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருப்பது அவசியம்

கோப்புப் படம்

புயல் கரையை கடக்கும் போது...
* வீட்டுக்குள் இருப்பது முக்கியம். வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
* மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும்
* சமையல் காஸை அணைத்து வைக்க வேண்டும்
* வீட்டின் கதவும், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்
* புயல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியம்
*கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை பருக வேண்டும்.
* புயலுக்கு பிறகு தொற்று நோய்கள் பரவும் ஆபத்து இருப்பபதால் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை அவசியம்
 
#35
தீவிரமடைகிறது 'கஜா புயல்'; கரை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
கஜா' புயல் கரையைக் கடக்கும் போது வலுவிழக்கும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'கஜா' புயல் தீவிரமடைந்து வருகிறது. கடலூர், வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
அதிகபட்சம் 120 கி.மீ. வேகம்
தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் 'கஜா' புயல் வலுவிழந்து கரையைக் கடக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது தீவிரமடைந்து வரும் 'கஜா' புயல் வர்தா புயலுக்கு இணையாக மாறுகிறது. கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே 'கஜா' புயல் இன்று நள்ளிவரவு கரையைக் கடக்கும் போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும்.
குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்கள் 'கஜா' புயலால் மிகுந்த விழிப்புடன், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பிரதீப் ஜான்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 'கஜா' புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே 'கஜா' புயல் கரை கடக்க வாய்ப்புள்ளது.
அதிகாலை
'கஜா' புயல் நகர்ந்துவரும் போது, அடர்த்தியான மேகக்கூட்டங்களோடு நகர்ந்து வருகிறது. எதிர்பார்க்கப்பட்டதுபோல் பலவீனமடையாது. மாறாக, மிகுந்த தீவிரத்தோடு கரை கடக்கும். தற்போது தமிழகக் கடற்கரையில் இருந்து 150 கி.மீ. முதல் 175 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மணிக்கு 25 கி.மீ. முதல் 30 கி.மீ. வேகத்தில் 'கஜா' புயல் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினம் பகுதியில் 'கஜா' புயல் கரையைக் கடப்பதற்கு இன்னும் 6 மணிநேரம் ஆகலாம். அதாவது 16-ம் தேதி அதிகாலை (நாளை) 'கஜா' புயல் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து கரை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரை கடக்கும்போது..


படம் உதவி: பேஸ்புக்

'கஜா' புயல் கரை கடக்கும்போது, ஏறக்குறைய 3 மணிநேரம் முதல் 4 மணிநேரம் வரை எடுத்துக்கொள்ளும். முதலில் திருவாரூர் மாவட்டத்தில் காற்று வடமேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும், அதன்பின் காற்று தென்கிழக்காக வீசத்தொடங்கும்.
'கஜா' புயல் கரையைக் கடக்கும் நடுப்பகுதியில் காற்று வீசும் திசை மாறக்கூடும். அப்போது சூழல் மிகுந்த அமைதியாக இருக்கும். அதனால், புயல் கரை கடந்துவிட்டது என்று எண்ணிவிடக்கூடாது. தென்கிழக்கில் இருந்து வரும் காற்று முழுமையாக நின்றுவிட்டதை மரங்கள் வேகமாக அசைவது நின்றுவிட்டதை வைத்துமுடிவு எடுக்கலாம்.
கடலூர் மற்றும் டெல்டா பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்து சென்ற புயல் குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன.
1. 2011-ம் ஆண்டு தானே புயல் கடலூரைக் கடந்து சென்று. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
2. 2008-ம் ஆண்டு நிஷா புயல் காரைக்கால் பகுதியைக் கடந்தது. அப்போது, மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. ஒரத்தநாடு பகுதியில் 24 மணிநேரத்தில் 657 மி.மீ. மழை பதிவானது.
3. 2000-ம் ஆண்டில் நிஷா புயல் கரை கடந்தது. அப்போது கடலூர் பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. தொழுதூரில் 454 மி.மீ. மழை பதிவானது.
4. 1993-ம் ஆண்டு காரைக்கால் புயல் கரை கடந்தது. காரைக்காலில் 167 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
5. 1991-ம் ஆண்டு காரைக்கால் புயலின் போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
6. இந்த 'கஜா' புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிகத்தீவிரமான மழை பெய்யும்.
கனமழை பெய்யும் இடங்கள்
ராமநாதபுரம், திருச்சி, கடலூர், விருதுநகர், மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களான கோவை, வால்பாறை ஆகியவற்றிலும் கன மழை பெய்யும்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.