தினம் ஒரு தகவல்

#36
வலுவடையும் 'கஜா' புயல்: எப்படி இருக்கிறது மெரினா கடற்கரை?
கஜா' புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே உள்ளது.
'கஜா' புயல் தற்போது நாகைக்கு வடகிழக்கே சுமார் 217 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதுதொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் - பாம்பன் இடையே புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் போது, மணிக்கு 80-90 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்புயலால் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அதிக பாதிப்புகள் இருக்காது என வானிலை மையம் கூறியிருந்தாலும், கடலோர மாவட்டம் என்பதாலும், புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் மழை பெய்யக்கூடும் என்பதாலும், சென்னை மெரினா கடற்கரையிலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட சற்று உயரமான அலைகள் இன்று மதியம் முதலே உருவாகியுள்ளன. மேலும், பலத்த காற்று கரணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் கீழே விழுந்தும் காணப்பட்டன. வழக்கமாக காணப்படும் மக்கள் தொகையை விட குறைவாகவே பொதுமக்கள் உள்ள நிலையில், அவர்களை வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை அகற்றும் பணியில் போக்குவரத்துக் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும், அலைகளின் முன்பு செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

1542290749102.png
 
#37
25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்டா மாவட்டத்தை உலுக்கிய 'கஜா’ புயல்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
டெல்டா மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சீற்றத்துடன் 'கஜா புயல்' தாக்கியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
நாகை, வேதாரண்யம் பகுதிகளை ‘கஜா’ புயல் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரை கடக்கும் போது, மணிக்கு 110 கி.மீ முதல் 120 கி.மீ வேகம் வரை காற்று வீசியது.
வர்தாவாக மாறிய 'கஜா புயல்'

குறிப்பாக அதிராமபட்டினத்தில் அதிகாலை 2.30 மணி அளவில் மணிக்கு 111 கி.மீ வேகத்திலும், நாகையில் 2.30 மணி அளவில் மணிக்கு 100கி.மீ வேகத்திலும், காரைக்காலில் 92 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.
கஜா புயலில் வீசிய காற்று கடந்த ஆண்டு சென்னையைத் தாக்கிய ‘வர்தா’ புயலுக்கு ஒப்பாக இருந்தது. கடந்த ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலின் போது, மீனம்பாக்கத்தில் 122 கி.மீ வேகத்திலும், நுங்கம்பாக்கத்தில் 114கி.மீ வேகத்திலும், எண்ணூரில் 89 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது. தமிழகத்தை உலுக்கிய புயல் மெல்ல கேரள நோக்கி நகர்ந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று தெரிவித்திருப்பதாவது:

பிரதீப் ஜான்

தமிழகத்தை நோக்கி வந்த ‘கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்து, மத்திய மாவட்டங்களை வழியாகக் கேரளா நோக்கிச் செல்கிறது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களைக் கடந்து அரபிக் கடலுக்குள் செல்லும் போது வலுவிழந்த ஆழ்ந்த புயலாகச் செல்லும்.
தமிழகத்தைத் தாக்கி சேதப்படுத்திய ‘வர்தா’ புயலுக்கு அடுத்தார்போல், ‘கஜா’ புயலைக் கூறலாம். அதுமட்டுமல்லாமல், கடந்த 1993-ம் ஆண்டுக்குப்பின் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்த கடுமையான சேதங்களை விளைவித்தது ‘கஜா’ புயலாகும்.
டெல்டா மாவட்டங்களுக்குள் நுழைந்ததில் இருந்து ‘கஜா’ புயல் மிகவேகமாக நகர்ந்து சென்றது. நிலப்பகுதியைக் கடந்து, மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக, அரபிக்கடலில் சென்று ‘கஜா’ புயல் வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக மாறும்.
‘கஜா’ புயல் ஏறக்குறையத் தமிழகத்தை கடந்து விட்டதால், அதுபற்றிய வதந்திகளையும், மீண்டும் ‘கஜா’ வருகிறது என்பது போன்ற வீடியோக்களையும் நம்ப வேண்டாம்
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
#38
‘கஜா’ புயல் எதிரொலி: ரயில்கள் ரத்து, தாமதம், புறப்பாடு விபரம்
கஜா’ புயல் கரையை கடந்ததை அடுத்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சிக்கோட்டத்தில் ரயில்கள் ரத்து, தாமதமாக வருகை, புறப்பாடு குறித்த தகவல்.
ரயில்கள் குறித்த விபரம்:
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் 6 பயணிகள் ரயில்கள், திருச்சி கோட்டத்தில் 8 ப்யணிகள் ரயில் மற்றும் ஒரு விரைவு ரயில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
1. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் 2 பயணிகள் ரயில்கள்,
2.ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் 2 பயணிகள் ரயில்கள்,
3. திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ஒரு ரயில்,
4. ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி செல்லும் ஒரு ரயிலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
5.மயிலாதுறையிலிருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள்
6.திருச்சியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் 2 பயணிகள் ரயில்கள்
7. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பயணிகள் ரெயில்கள்
8. திருச்சியிலிருந்து மானாமதுரை செல்லும் ரயில்கள்
9. காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில்கள்
10. மன்னார்குடியிலிருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில்கள்
ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக மதுரை, திருச்சிக் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதே போன்று கஜா புயல் காரணமாக ராமேஸ்வரம் மற்றும் சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் 16.11.2018 (இன்று) ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது.
1. வண்டி எண் 56725 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று நவ. 16 வெள்ளிக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
2. வண்டி எண் 56726 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் இன்று நவ.16 வெள்ளிக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
3. திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகள் ரயில் திருச்சியிலிருந்து மாலை 6-25 –க்கு புறப்படுவதற்கு பதில் இரவு 7-30-க்கு புறப்படும்
4. இன்று நவ.16 புறப்படக் கூடிய வண்டி எண்.16852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பாது, அது ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 06.00 மணிக்கு புறப்படும்.
5. இன்று நவ.16 புறப்படக் கூடிய வண்டி எண்.22662 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயில், ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பாது. அது ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 09.20 மணிக்கு புறப்படும்.
6. சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் ரயில் 3.45 க்கு கிளம்ப வேண்டியது மாலை 7-15 மணிக்கு கிளம்புகிறது.
7. மதுரையிலிருந்து எழும்பூருக்கு மதியம் 2.30 மணிக்கு வரவேண்டிய வைகை ரெயில் மணப்பாறை அருகே மரக்கிளை விழுந்ததால் தாமதமாக வருவதால் மாலை 6-30 மணிக்கு எழும்பூர் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
#39
வரும் 18-ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல்
வரும் 18 -ம் தேதி தெற்கு வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "கஜா புயல் இன்று காலை 11 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவியுள்ளது. இதன்காரணமாக அடுத்து வரும் 24 மணிநேரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இந்த பகுதிகளில் காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
2-3 மணிநேரத்தில் புயல் முழுமையாக தமிழகத்தை விட்டு வெளியேறும். அரபிக்கடலில் ஒருநாளில் அப்புயல் செல்லும்.தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 18 -ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இது, 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கப்பகுதியில் நிலவக்கூடும். மீனவர்கள் இன்று மதியம் முதல் கடலுக்குச் செல்லலாம். வரும் 18 ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியிலும் 19, 20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
கடந்த 1 முதல் 16 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 22 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 29 செ.மீ. இது இயல்பை விட 23 சதவீதம் குறைவு. நேற்று வரை 29 சதவீதமாக இருந்த நிலை தற்போது 23 சதவீதமாக குறைந்துள்ளது. 6% அளவுக்கு மழை நமக்கு கிடைத்துள்ளது" என பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 
#40
ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் மருத்துவர் சென்னையில் காலமானார்

மருத்துவர் டி எஸ் கனகா

ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் நிபுணர் டி.எஸ்.கனகா சென்னையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் நிபுணர் மட்டுமல்ல டி.எஸ். கனகா, உலகளவில் 3-வது பெண் அறுவை சிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் பிரிவில், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த மருத்துவர் டி.எஸ்.கனகா கடந்த 1990-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். நரம்பியல் பிரிவை ஏராளமான பெண்கள் தேர்வு செய்து படிப்பதற்கு முக்கியத் தூண்டுகோலாகவும், உந்து சக்தியாகவும் கனகா விளங்கினார்.
மருத்துவர் கனகாவின் மருமகளும், நரம்பியல் மருத்துவரான ஜி.விஜயா தற்போது வேலூரில் உள்ள சிறீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பணி புரிந்து வருகிறார். மருத்துவர் கனகா குறித்து மருத்துவர் விஜயா கூறியதாவது:
‘‘ஆசியாவில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதல் பெண் மட்டுமல்ல மருத்துவர் டி.எஸ்.கனகா, உலக அளவில் மூன்றாவது பெண் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய 11 வயதில் இருந்து நான் அத்தையைப் பார்த்து வளர்ந்து வந்தேன், அதனால்தான் அவரைப் போலவே நரம்பியல் நிபுணராக முடிந்தது. எங்கள் குடும்பத்தில் நான் 2-வது நரம்பியல்அறுவை சிகிச்சை நிபுணர்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்த போது, , ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாகவும் கனகா 2 ஆண்டுகள் பணியாற்றினார்.
மருத்துவர் கனகா தனது ஓய்வுக்குப் பின் ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவ விரும்பினார், இலக்காக வைத்திருந்தார். முதியோர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவர் கனகா விரும்பினார். குரோம்பேட்டையில் சிறீ சந்தான கிருஷ்ணா பத்மாவதி சுகாதார மையம் மற்றும் ஆய்வு மையத்தை நிறுவினார். கடைசிக் காலத்தில் தன்னுடைய ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் இந்த மையத்துக்கே செலவிட்டார். மருத்துவர் டி கனகாவுக்கு, 'மூளை தூண்டுதல்' அதாவது 'மூளை பேஸ்பேக்கர்' எனும் பிரிவில் அதிகமான ஆர்வத்துடன் இருந்தார்’’ இவ்வாறு விஜயா தெரிவித்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறையின் முன்னாள் தலைவர் கே.தெய்வீகன் கூறுகையில், “ ஸ்டீரியோடாக்டிக் பிரிவில் ஏராளமான முன்னோடி பணிகளை மருத்துவர் கனகா , பேராரிசியர் வி. பாலசுப்பிரமணியன் எஸ். கல்யானராமன் ஆகியோருடன் சேர்ந்து செய்துள்ளார். மற்றொரு ஆர்வமான பிரிவு என்பது, பெருமூளை வாதம்(செரிபல் பிளாசி) பிரிவாகும் “ எனத் தெரிவித்தார்.