Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript திருவாளர் கொசு | SudhaRaviNovels

திருவாளர் கொசு

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“இந்த மனுஷ பிறவிகளுக்கு நம்மளை கண்டா ஏத்தமா இல்ல இருக்கு. நம்ம கஷ்டம் இவனுகளுக்கு எங்கே தெரியுது. ஒரு பாட்டில் ரத்தம் எடுக்கிறதுக்குள்ள எவ்வளவு அடி வாங்க வேண்டி இருக்கு.” என்று முட்டு சந்தில் இருந்த சாக்கடை மேல் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார் நமது ஹீரோ மங்குனி கொசு.

‘இருக்கிற இடத்தை மாத்துரதுன்னா சும்மாவா அதுவும் நல்ல சாக்கடையா அமைய வேண்டாமா? நம்ம கஷ்டம் இந்த பொம்பளைங்களுக்கு எங்கே தெரியுது. போய் நல்ல சாக்கடையா பார்த்திட்டுவான்னு துரத்தி விட்டுடுறா. தேடுற நமக்கு இல்ல தெரியும் அந்த கஷ்டம்’ என்று மனதிற்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தார்.

சற்று நேரம் முன்னர் நடந்தவைகளை மனம் அசை போட தொடங்கியது.....

மங்குனியின் வருத்தத்திற்கு காரணம் அவர் தற்போது இருந்த குடித்தனத்தில் அந்த ஏரியா கௌன்சிலர் வருவதால் மண்ணை போட்டு மூடி ப்ளீசிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அதனால் மங்குனியின் மனைவி புது இடம் பார்க்க சொன்னாள்.

காலையில் இருந்து அலைந்து திரிந்து ஒரு இடமும் சரியாக அமையாததால் ஓய்ந்து போய் ஒரு அபார்ட்மென்ட்டிற்குள் நுழைந்தார். உள்ளே ஹாலிற்குள் நுழைந்ததும் டிவி ஓடிக் கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்து ஒரு குழந்தை பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அதன் பக்கத்தில் உட்காருவோம் என்று அமர்ந்தார் மங்குனி.

சிறிது நேரம் வரை குழந்தை அமைதியாய் இருந்தது . எதேச்சையாக தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மங்குனியை பார்த்ததும் ஆஆஆஆ.......என்று அலறிக் கொண்டு இறங்கி ஓட ஆரம்பித்தது. மங்குனிக்கு ஒன்றுமே புரியவில்லை இவன் தானே பெருசா இருக்கான் என்னை பார்த்து எதுக்கு கத்திகிட்டு ஓடுறான் என்று பார்த்தது. ஒருவேளை வேற யாராவது இருக்காங்களோ என்று சுற்றி பார்த்துக் கொண்டது. ஹாலில் தன்னையும் அந்த குழந்தையும் தவிர வேற யாரும் இல்லை அப்போ என்னை பார்த்து தானா? என்று உள்ளுக்குள் பெருமிதமும் வந்தது.

கத்திக் கொண்டே போன குழந்தை தன் அப்பாவுடன் திரும்பி வந்தது. அவன் கையில் பெரிய வலை கம்பு வைத்திருந்தான். குழந்தை மங்குனி அமர்ந்திருந்த நாற்காலியை காட்ட , கையில் இருந்த கம்புடன் மெல்ல அடியெடுத்து வந்தான். அதை பார்த்த மங்குனி கடுப்பாகி ‘ஏண்டா நீ தான் இம்மாம் பெருசு இருக்கிற உன்னோட வீரத்தை எல்லாம் இன்னொரு மனுஷன் கிட்ட காட்ட வேண்டியது தானே டா. அதை விட்டு போட்டு என்னவோ பெரிய ப்ரூஸ் லீ மாதிரி என்னை அடிக்க வரான் லூசு பய’ என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து பறந்து திரைசீலையில் போய் அமர்ந்தது.

குழந்தையின் அப்பாவுக்கு கொசு எங்கே போனது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பார்க்க, குழந்தையோ மங்குனியை சரியாக கவனித்து “பா அங்கே” என்று திரைசீலையை நோக்கி கையை நீட்டியது. அதை பார்த்ததும் கடுப்பான மங்குனி “ இந்த சின்ன பயலை முதல்ல கவனிக்கணும்.எம்புள்ள மாதிரி இல்லாம நல்லா அறிவா இருக்கான். இந்த பய உடம்புலே இருந்து ஒரு பாட்டில் ரத்தம் எடுத்திட்டு போய் அவனுக்கு கொடுக்கணும்.”

மங்குனி யோசித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தையின் அப்பா வேகமாக வலைகம்பை ஒரு சுழட்டு சுழற்றி திரைசீலை மீது வைத்தான். ஆனால் அவன் கையை தூக்கும் போதே அங்கிருந்து வேகமாக பறந்து சென்று கதவின் மேல் உட்கார்ந்து கொண்டார் திருவாளர் கொசு. ‘ஆஹா இதென்னா எல்லா வீட்டிலேயும் இந்த பேட் வச்சு இருக்கானுங்க . நம்மளை வச்சு ப்ராக்டிஸ் பண்ணி இவனுங்க விம்பிள்டன்னுக்கே போனாலும் போய்டுவானுங்க போல இருக்கே’ என்று நினைத்துக் கொண்டு இருந்தது.

கொசு மாட்டாத கடுப்பில் இருந்த குழந்தையின் தந்தை திரைசீலை எல்லாம் பிடித்து ஆட்டியும் தள்ளியும் பார்த்து ஓய்ந்து போனான். அப்போது அங்கு வந்த அவன் மனைவி “ என்னங்க நான் என்ன வேலை சொன்னேன் நீங்க என்ன ஹாயாக உட்கார்ந்து இருக்கீங்க...போய் அந்த வேலையை முடிங்க” என்று விரட்டினாள்.

அங்கு நடந்தவைகளை பார்த்த மங்குனி ‘எம் பொண்டாட்டி தான் இப்படின்னு நினைச்சேன்..ஆனா அது மனுஷ பொண்டாட்டியா இருந்தாலும் சரி கொசு பொண்டாட்டியா இருந்தாலும் சரி விரட்டிகிட்டே இருப்பாளுக தான் போல என்று நினைத்து “அம்மணி அவரே என்னைய தேடி இப்போ தான் அலுத்து போய் உட்கார்ந்து இருக்கார் . அவருக்கு பூஸ்ட் கொண்டாந்து குடுங்க’ என்று சொல்லி விட்டு அங்கிருந்த மேஜை மேல் விழுந்து பிரண்டு சிரித்தார்.

அப்போது குழந்தை “ அப்பா கொசு இங்கே “ என்று கத்தியது. குழந்தை கத்தியது காதில் விழுந்ததுமே மீண்டும் கையில் பேட்டுடன் மெதுவாக நடந்து மேஜை அருகில் வந்தான் குழந்தையின் தகப்பன். அதை பார்த்த மங்குனி குழந்தையிடம் “ உனக்கு ஏண்டா என் மேல இவ்வளவு கோவம். என் சோலிய முடிக்காம விட மாட்ட போல இருக்கே” என்று வேகமாக பறந்து சமையலறைக்கு சென்றார்.

கொசு பறந்ததும் எரிச்சலடைந்தவனை பார்த்து “ இதுக்கு எதுக்கு இவ்வளவு கோபபடுறீங்க. பேசாம கொசு மேட்டை போட்டு விட்டா எல்லாம் காணாம போய்டும் இல்ல” என்றாள் அவன் மனைவி.

சமையலறைக்கு போன மங்குனி அங்கே வைத்திருந்த ஒரு சட்டியின் மீது அமர்ந்தார். வேகமாக பறந்து வந்ததில் மூச்சிரைத்தது. அதுக்குள்ளே வயசாயிடுச்சு ஒரு அறையிலே இருந்து ஒரு அறைக்கு போறதுக்கே மூச்சிரைக்குது என்று எண்ணிக் கொண்டார். ஹாலில் கொசு மேட் பற்றி பேசியது காதில் விழுந்தது. ‘அதற்கு நாங்க இதெல்லாம் எவ்வளவோ பார்த்திட்டோம் இதை பார்க்க மாட்டாமா’ என்று எண்ணி சிரித்துக் கொண்டார்.

திடீரென்று மங்குனிக்கு நெஞ்சு அடைப்பது போல் இருந்தது, இருமல் வந்தது, மூச்சு விடவே சிரமமாக இருந்தது. எங்கிருந்தோ ஒரு துர்நாற்றம் வந்தது. ‘கொசு மேட் தானோ? ஆனா இந்த மாதிரி ஒரு நாத்தத்தை நான் பார்த்ததே இல்லையே’ என்று எண்ணி கண்கள் சொருக தள்ளாட்டத்துடன் சுற்றிலும் நோக்கியது.

அப்போது அங்கே வந்த குழந்தையின் அம்மா “ விக்கி உங்களுக்காக புது டிஷ் ஒன்னு செஞ்சேன், சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று மூடி வைத்திருந்த பாத்திரத்தை திறந்தாள்.

அவள் பாத்திரத்தை திறந்ததும் ஒரு டொர்னாடோ மாதிரி சுற்றி சுழன்று ஒரு நாற்றம் கிளம்பியது. அதில் மங்குனிக்கு மிச்சம் மீதி இருந்த தெம்பெல்லாம் குறைந்து அப்படியே மேடையில் சாய்ந்து விட்டார்.

அவள் பின்னேயே வந்த விக்கி அங்கு வந்த நாதத்தில் அவசரமாக மூக்கை மூடிக் கொண்டு “ அம்மா பரதேவதை , நீ செஞ்சு வச்ச டிஷ் கிளப்பின நாத்ததுல வீட்டில இருக்கிற கொசுவெல்லாம் செத்து போய்டும். ஆனா யாரும் இல்லாதப்ப இதை வச்சிட்டு வா இல்லேன்னா நாமளும் செத்துடுவோம் “என்றான்.

அவளோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ ஆமாங்க நாம இந்த டிஷ்ஷை கொசு மேட்டா யுஸ் பண்ணலாம்ன்னு பார்க்கிறேன் ” என்றாள்.

அரைகுறை மயக்கத்தில் இருந்த மங்குனி இதை கேட்டதும் அவசரமாக எழுந்து பறக்க முடியாமல் பறந்து ஜன்னலுக்கு வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசித்தது. எப்பா மயிரிழையில் உயிர் தப்பி இருக்கோம்டா என்று எண்ணியது. ஆனாலும் நாம தப்பிச்சிட்டோம் அந்த விக்கி தான் பாவம் இந்த ஜென்மத்துல மீள முடியாது .

நல்லவேளை நமக்கு இப்படி எல்லாம் சமையல்ன்னு ஒன்னு இல்லவே இல்ல இருந்திருந்தா நம்ம பொண்டாட்டி என்னைக்கோ சமைச்சு போட்டு பரலோகம் போக வச்சிருப்பா என்று தங்கள் பிறப்பை எண்ணி ‘நான் கொசுவா பிறந்ததோட மகத்துவத்தை இன்னைக்கு தான் உணர்ந்தேன்’ ஆண்டவா நல்லவேளை என்னை மனுஷ பிறவியா பிறக்க வச்சு இப்படி ஒரு பொண்டாட்டி சமையலில் மாட்டி விடாம விட்டியே என்று நன்றி சொல்லிக் கொண்டார் நமது திருவாளர் மங்குனி கொசு......
 
  • Like
Reactions: ugina begum