தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
283
334
63
அத்தியாயம் - 35

“ஹலோ அம்மா! எப்படியிருக்கீங்க?” உற்சாகத்துடன் கேட்டான் விஜய்மித்ரன்.

“நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். நீ எப்படியிருக்க? எப்போ இங்கே வர்ற?”

“என்னைத் தான் அந்தப் பக்கமே தலைய வச்சிப் படுக்காதேன்னு சொல்லிட்டீங்களே…” என்றான் வேண்டுமென்றே.

“ம், நான் சொன்னதும் நீ கேட்டுடுவ. அப்படித்தானே…” வித்யாவும் வீம்பாக மகனிடம் வார்த்தையாடினார்.

“எத்தனை விஷயத்தில் அப்படிக் கேட்கலன்னு சொல்லுங்களேன் பார்ப்போம்” என்றான் விடாமல்.

“அதுக்குப் பத்து விரல் போதாதே…” என்றார் சிரிப்புடன்.

“என்கிட்ட பத்து விரல்கள், உங்ககிட்ட பத்து விரல்கள்ன்னு இருபது விரல்கள் இருக்கே… இன்னுமா தேவைப்படும்?” என்ற மகனின் வாதத்திற்குக் கிளுக்கெனச் சிரித்தார் வித்யாவதி.

“உன்கிட்ட பேசமுடியாதே…” என்றவர், “சரி, சொல்லு. எப்போ வர்ற? விடிஞ்சா நியூ இயர். தாத்தாவும் நீ வர்றதைப் பத்திக் கேட்டாங்க” என்றார்.

“ம், அதுக்குத் தான் இந்த என்கொயரியா?” எனச் சிரித்தவன், “சரி, அப்படியே போர்ட்டிக்கோவைக் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்” என்றான்.

“போர்ட்டிக்கோவா…” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே வந்து கதவைத் திறந்தவர், மகனின் கார் வந்து நிற்பதைப் பார்த்ததும் சிரிப்புடன் வெளியே வந்தார்.
“ஹா ஹா நீங்க நினைச்சாது போலவே வந்துட்டேனா…” எனச் சிரித்தான்.

“வர்றவன் கொஞ்சம் நேரத்தோட கிளம்பி வரக்கூடாதா! சரி கைகால கழுவிக்கிட்டு வா சாப்பிடலாம். மணி மூணாகப் போகுது” மகனைப் பார்த்தச் சந்தோஷத்தில் உற்சாகத்துடன் பேசினார் வித்யா.

“ம், கொஞ்சம் வேலை இருந்ததும்மா!” என்றவன், “வீடே அமைதியா இருக்கு. அப்பாவும், குட்டி ராட்சஷியும் எங்கே?” எனக் கேட்டான்.

“அப்பாவைத் தாத்தா எங்கேயோ அனுப்பி வச்சிருக்காங்க. பவி ஏதோ ஷாப்பிங் போறேன்னு கிளம்பிப் போயிருக்கா” என்றவர், “உன் தம்பி எங்கேன்னு விசாரிக்கலயா?” எனக் கேட்டார் அவனது அன்னை.

“அவன் வழக்கம் போல பைக்கை எடுத்துகிட்டு ரைட் போயிருப்பான்…” என சிரித்துக்கொண்டே சொன்னவன், “நீங்க லஞ்ச் எடுத்து வைங்கம்மா! நான் போய்த் தாத்தாவைப் பார்த்துட்டு வந்திடுறேன்!” என்றபடி எழுந்தான்.

“தாத்தா இப்போதான் படுத்தாங்க…”

“நான் சத்தம் போடாம பார்த்துட்டு வந்திடுறேன்” என இரகசியமாகச் சொல்லிவிட்டுச் செல்லும் மூத்த மகனை, மெச்சுதலுடன் பார்த்துவிட்டுச் சமையலறைக்கு நகர்ந்தார்.

மெல்லக் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே சென்றவன், அலுங்கிய தோற்றத்துடன் கண்களை மூடி ஈஸி சேரில் உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்தான்.
சுறுசுறுவென சுற்றித் திரிந்தே பார்த்தவரை, இப்படி ஒடுங்கிய உருவமாகக் காண அவனுக்கு வேதனையாக இருந்தது.

‘மூப்பு ஒரு காரணமாக இருந்தாலும், ஆறே மாதங்களில் ஒருவர் இத்தனைச் சீக்கிரத்தில் தளர்ந்துவிடுவாரா!’ என்ற கேள்வியும் எழுந்தது.

பெருமூச்சுடன் கதவை நோக்கி நடந்தவனை, “இந்தர்!” என அழைத்தார் இராமநாதன்.

சட்டெனத் திரும்பியவன், “தாத்தா! நான் மித்ரன்” என்றபடி அவரை நெருங்கியவன் அவரது கரத்தைப் பற்றிக்கொண்டான்.

“மித்ரன்!” என்றவரது குரலில், மனச்சோர்வையும் மீறி பேரனைக் கண்டுவிட்ட சந்தோஷத்துடன் வெளிப்பட்டது.

“என்ன தாத்தா இப்படிச் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கீங்க? நல்லா காலை நீட்டிக் கட்டில்ல படுத்துக்கலாம் இல்ல” என்றான்.

“எனக்கென்னப்பா சோர்வு! நீங்கள்லாம் என் பக்கதிலேயே இருக்கீங்களே…” என்றவரது குரலில் தொணித்த சிறு விரக்தியை அவன் கண்டுகொண்டான்.

மிருதுவாக புன்னகைத்தவன், “நீங்க நல்லா தூங்கி எழுந்து ஃப்ரெஷாகி வாங்க தாத்தா! ஈவ்னிங் பேசுவோம்” என அவரை எழுப்பி கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, கதவை மூடிக்கொண்டு வெளியே சென்றான்.

ஏதோ யோசனையுடனேயே, தட்டிலிருந்த சால்ட்டை எடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

“கிச்சடி ஆறிப்போகுது. சாப்பிடாம என்ன யோசனை?” என்றபடி மகனின் தட்டில் ஃபுல்காவை வைத்துவிட்டு அவனருகில் அமர்ந்தார் வித்யாவதி.

“ம்” என்றபடி திரும்பி அன்னையைப் பார்த்தவன், “நீங்க எல்லோரும் சேர்ந்து என்ன விஷயத்தை என்கிட்ட மறைக்கறீங்க?” என நேரடியாகக் கேட்டான்.
இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்த வித்யா, “நீயா ஏதாவது யோசிக்காதே. சாப்பிடும்போது எதையும் நினைக்காம சாப்பிடு” என்றார்.

“அப்போ, விஷயம் ரொம்பப் பெரிசு. அப்படித்தானே…” என்ற மகனைப் பார்த்தார்.

நீண்ட பெருமூச்சை வெளியிட்டவர், “தாத்தாவோட அனுமதியில்லாம, இப்போதைக்கு என்னால எதையும் சொல்ல முடியாதுப்பா” என்ற அன்னையை ஆழ்ந்து பார்த்தான்.

“அம்மா! நான் விஷயத்தைத் தெரிஞ்சிக்கக் கேட்கல. என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணத்தான் கேட்கறேன். தாத்தாவோட மனசுல அப்படி என்னயிருக்கு? அதுவும், எங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு” என்றான் ஆற்றாமையுடன்.

வித்யாவதி பதிலேதும் சொல்லாமல், மடியில் கோர்த்திருந்த கரங்களைப் பார்த்தார்.

“எனக்கும், உங்ககிட்ட எதையும் மறைக்கணுங்கற எண்ணம் இல்ல மித்ரன்! இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்டீங்க இல்ல. இன்னும் கொஞ்சநாள் காத்திருங்க. நம்ம தாத்தாவுக்காக…” என்றவர் ஆதரவுடன் மகனின் இடது கரத்தைப் பற்றினார்.

மித்ரன் ஏதோ சொல்லத் துவங்கும் முன், “ஹலோ ப்ரோ! எப்ப வந்தீங்க?” பைக் சாவியைச் சுழற்றிக்கொண்டே, அண்ணனின் எதிரில் வந்து அமர்ந்தான் இந்தர்.

“ஹாய்டா! அரைமணி நேரம் ஆகுது” எனத் தம்பிக்குப் பதிலளித்தான்.

“ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. ஃப்ரிட்ஜ்ல கீர் வச்சிருக்கேன் எடுத்துட்டு வந்திடுறேன்” என அங்கிருந்து எழுந்து சென்றார் வித்யா.

“அம்மா! எனக்கும் ஒரு கப் கொண்டுவாங்க… உங்க சீமந்தப் புத்திரனைப் பார்த்ததும் என்னை மறந்துடாதீங்க” என்றான் இந்தர்.

“இந்த வக்கணைல குறைச்சல் இல்ல…” என சலித்துக்கொண்டே அவர் செல்ல, “நாம யாரு… சிவராமனோட பிளட் இல்லயா” என்று பி.எஸ் வீரப்பாவைப் போல ஒரு சிரிப்புச் சிரித்தான்.

அண்ணனின் பக்கமாகத் திரும்பியவன், “என்னண்ணா! உன்கிட்டயாவது ஏதாவது சொன்னாங்களா?” எனக் கேட்டான்.

“உனக்குச் சொன்ன அதே பதில்தான் எனக்கும்” என்றான் மித்ரன்.

“அப்படியா!” என சலிப்புடன் தலையை அசைத்தவன், “அப்போ நம்ம வீட்ல நம்ம ரெண்டு பேரையும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்றாங்களா! இது தெரியாம இவ்வளவு நாள் என்மேல பாசமே இல்லன்னு நினைச்சி ஃபீல் பண்ணிட்டேனே” எனப் போலியாக அலுத்துக்கொண்ட பேசிய சகோதரனை மௌனமாகப் பார்த்தான் மித்ரன்.

ஓரக்கண்ணால் தமையனைப் பார்த்தவன், “சியர் அப் ப்ரோ! என்னைக்கா இருந்தாலும் விஷயம் வெளியே வந்துதான் ஆகணும். இன்னும் மூணு நாள் நான் இங்கே இருக்கப்போறேன் இல்ல… எப்படியாவது விஷயத்தைக் கறக்கப் பார்க்கறேன்” என்றான் சமாதானமாக.

“ம்” என்றவன், “இன்னும் மூணு நாள் இங்கே என்னடா செய்யப்போற? ஆஃபிஸைப் பார்க்கணும்னு, அக்கறையே இல்லயா. அப்பாவும் இங்கே இருக்காங்க. நீயாவது வரலாமில்ல” என்றான்.

“அடப்போங்க ப்ரோ! எப்போ சுமி கண்ணுல படுவேன்னு நானே தலைமறைவா இருக்கேன்” என்றவனை முறைத்துப் பார்த்தான்.

“என்னடா ரொம்ப உரிமையா சுமிங்கற?” என்றான்.

விஷமமாகச் சிரித்த இந்தர், “என்னோட ஸ்டாஃப் தானே. அதோட, என்னைவிட ரெண்டு வயசு சின்னப் பொண்ணு வேற. அப்புறம் என்ன?” என்றான்.

மித்ரன் எதுவும் சொல்லாமல் அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆனா, ஆளு செம ஷார்ப்! அன்னைக்கு மால்ல அவங்களைப் பார்த்ததுல இருந்து இந்த ஆதியும் அவங்களுக்குப் பயந்துகிட்டு நாலு நாளா ஃபேக்ட்ரியே கதின்னு இருக்கானாம். எனக்குப் போன் பண்ணி, உங்க கம்பெனில வந்து சேர்ந்த பாவத்துக்காக அண்ணனும், தம்பியுமா சேர்ந்து இந்த அப்பாவியோட வாழ்க்கைல விளையாடுறீங்களேன்னு புலம்பறான். எனக்கே அவனைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாதான் இருந்தது” என்றான் பாவனையுடன்.

“உன்னை யாருடா அந்தக் காரை எடுத்துட்டுப் போகச் சொன்னது? எடுத்துட்டுப் போன சரி. அவளுக்கு முன்னால போய் நிப்பியா நீ!” எனக் கடுகடுத்தான்.

“ஏன் கேட்கமாட்டீங்க? நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்க கேட்கறீங்க. வீட்ல எத்தனைக் கார் இருக்கு. நீங்க வேற காரை எடுத்துட்டுப் போக வேண்டியது தானே. என்னவோ காருக்கு வாட்ச்மேன் மாதிரி அங்கேயே நின்னுட்டிருந்தா நான் என்ன செய்றது?” எனக் கேட்டவன் தங்களது அன்னை வருவதைக் கண்டதும் சப்தமாக, “அப்புறம் ப்ரோ! உங்க ப்ரொஃபசரோட பொண்ணு என்ன சொல்றாங்க?” என விசாரித்தான்.

கீர் அடங்கிய கப்பை இருவருக்கும் கொடுத்த வித்யாவதி, “ஆமாம் மித்ரன் நானே கேட்கணும்னு நினைச்சேன். அந்தப் பொண்ணு எப்படியிருக்கா?” எனக் கேட்டார்.

“ம், நல்லாயிருக்கா” எனத் தம்பியை முறைத்துக்கொண்டே சொன்னவன், “உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவன் மித்ரா அவர்களது அலுவலகத்தில் வேலை செய்வது வரை சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி முடித்தான்.

“ஓஹ்! இவ்வளவு விஷயம் நடந்திருக்கா. நல்லவேலை செய்த. பாவம். சின்னப் பொண்ணு. நாங்க ஜெய்பூருக்கு வந்ததும், அவளை ஒரு நாளைக்கு வீட்டுக்குக் கூட்டிட்டு வாப்பா!” என்றார்.

“ம், சரிம்மா!” என்றான் மித்ரன்.

“என்ன அம்மா நீங்க? உங்க பையன், உங்களுக்குத் தெரியாம பேப்பர்ல அட் கொடுத்து இண்டர்வியூ வச்சி, வேலைக்கும் ஒரு பொண்ணை சேர்த்திருக்கார். ஏன்னு கேட்காம நல்ல வேலை செய்தன்னு பாராட்டு பத்திரம் கொடுக்கறீங்க…” என்றான் இந்தர்.

“போதும்டா திருடா! நீயும் தானே கூட்டுக்களவாணி வேலை பண்ண?” என்றதும், அசடு வழிய சிரித்தான்.

“உங்க அண்ணன் எது செய்தாலும், அதுல நியாயம் இருக்கும்” என்றவர் பெரியவனைப் பார்த்துச் சிரித்தார்.

“ஹப்பா! நீ டெபாசிட் இழந்த வேட்பாளராகிட்ட. இனி அடக்கி வாசிப்பா!” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

“இவன் ஒருத்தன் சும்மா…” என்றவர், “அந்தப் பொண்ணு, ப்ரொஃபசர் பொண்ணுன்னே சொல்லிட்டிருக்கோம். அவளோட பேர் என்னடா?” எனக் கேட்டார்.

மித்ரன் வாயைத் திறக்கும் முன்பே, “மித்ராம்மா! மித்ரா!” என்றான் இந்தர்.

“மித்ராவா!” என ஆச்சரியமாகச் சொன்னவர், மூத்த மகனின் முகத்தைப் பார்த்தார்.

அவனோ, மும்முரமாக அன்னையின் கைப்பக்குவத்தில் தயாரான கீர் –ஐச் சுவைத்துக் கொண்டிருந்தான். சற்றுநேரம் அவனது முகத்தையே பார்த்தவர், திரும்பி இளைய மகனைப் பார்த்தார். அவனும் அன்னையின் பார்வையைப் புரிந்துகொண்டு, அதை ஆமோதிப்பதைப் போல மெல்லப் புன்னகைத்தான்.

“அவளோட போட்டோ இருந்தா காட்டேன் மித்ரன்!” என்றார் ஆசையுடன்.

இந்தர் குறுகுறுவென அண்ணனைப் பார்க்க, “போட்டோவா! என்கிட்ட ஏதும்மா? நீங்க ஜெய்பூர் வந்ததும், நேர்லயே கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தறேன்” என்றான்.

“அப்போ உன்கிட்ட போட்டோ இல்ல…” எனக் கேட்டவருக்கு, “இல்ல” என்று கறாராகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

மெல்ல அன்னையின் அருகில் வந்து அமர்ந்த இந்தர், “நீங்க இப்படிக் கேட்டிருக்கக்கூடாதும்மா! உன் மொபைல்லை போட்டோ வச்சிருப்பியே அதைக் காட்டுன்னு கேட்டிருக்கணும்” என்றான்.

புருவத்தை உயர்த்தி கேள்வியாகப் பார்த்தவர், “டேய்! நீதானே அவனுக்குப் போன் பண்ணி வரச்சொன்ன?” எனக் கேட்டார்.

“மாம்! திஸ் இஸ் டூ டூ மச்! என்னைப் போய் இப்படிச் சந்தேகப்படலாமா? மீ பாவம்” என்றான்.

“சந்தேகமெல்லாம் இல்ல. உறுதியாவே சொல்றேன். மித்ரன்கிட்ட நீதான் ஏதோ சொல்லியிருக்க. கீர் எடுத்துடு வர்றதுக்கு எனக்கு அவ்வளவு நேரமாகுமா! நீ என்ன பண்றன்னு பார்க்கத்தான் அவ்வளவு நேரம் உள்ளேயே இருந்தேன். பெரியவங்களுக்குத் தெரியும் உங்ககிட்ட எதைச் சொல்லணும், சொல்லக்கூடாதுன்னு. புரிஞ்சிதா!” என்றார்.
அவன் விழித்தபடி தலையை ஆட்ட, அங்கிருந்து எழுந்து சென்றார் வித்யாவதி.

“ஹப்பா! இந்த லேடீஸெல்லாம் பின் லேடிங்களா இல்ல இருக்காங்க. பத்திரமா இருந்துக்கடா இந்தர்!” எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

மாலையில் எழுந்து வந்த தாத்தாவுடன், பேரன்கள் இருவரும் பேசிப் பேசி அவரைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தனர்.

“ரொம்ப நாளைக்குப் பிறகு, மனசுவிட்டுச் சிரிக்கிறேன் மித்ரன்!” என்ற பெரியவரை ஆறுதலுடன் அணைத்துக்கொண்டான் பேரன்.

“அதுக்குத்தான் நம்ம வீட்டுக்கு வந்திடுங்கன்னு சொல்றேன். நீங்களும் அங்கே வந்துட்டா எல்லோருக்குமே சந்தோஷம். நீங்களும் இப்படிச் சிரிச்சிகிட்டே இருக்கலாம். நாங்களும் நிம்மதியாக இருப்போம்” என்றான்.
“மனுஷன் வெளியே சிரிக்கிறா மாதிரி காட்டிக்கிட்டாலும், மனசுக்குள்ள இருக்கற சுமை உள்ளுக்குள்ள இருந்தே கொல்லுதே. சோகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம்னு தெரியாமலா சொன்னாங்க” மனம் சற்று இலகுவாக தன்னையறியாமல் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பேரன்கள் இருவரும், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஓஹ் கிராண்ட்ப்பா! நடக்கறதெல்லாம் நல்லதுக்குன்னு நீங்கதானே சொல்வீங்க. நீங்களே இப்படி மனசொடிஞ்சி போனா எப்படி? சியர் அப்! பிறக்கப் போற புது வருஷம் நம்ம எல்லோருக்கும் நல்லதையே கொடுக்கும்னு நம்புவோமே!” என்றான் இந்தர்.

மெல்லத் தலையை அசைத்தவர், “நம்புவோம்! நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கைத்தான் தெய்வம்” என்று மெலிதாகப் புன்னகைத்தார்.

“எஸ் தாத்தா!” என்றபடி பேரன்கள் இருவரும் பாட்டனாரை அணைத்துக்கொள்ள, அவரும் பாசத்துடன் அவர்களை உச்சிமோர்ந்தார்.

“சித்தப்பா சீக்கிரமே நம்ம கூட வந்திடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி. மித்ரன் முன்னமே வந்திருந்தா, எப்பவோ இது நடந்திருக்கும்” என்ற கணவனைப் பார்த்துச் சிரித்தார் வித்யாவதி.

“என்ன சிரிக்கிற?”

“இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். பார்த்துட்டே இருங்க சீக்கிரமே மாமாகிட்டயிருந்து அவன் விஷயத்தையும் வாங்கிடுவான்” என்றார் பெருமையாக.

“ஏன் நீயேதான் சொல்லிடேன்” என்றார் சிவராமன்.

“மாமா பேச்சை மீற, நான் தயாரா இல்ல. அவங்களே சொல்லட்டும்” என்றார்.
“என்ன கணக்கோ உன் கணக்கு” என்ற சிவராமன், “அப்பா! அம்மா! ஹேப்பி நியூ இயர்” என்ற மகளின் கூச்சலில் தானும் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்டார்.
“ஹேப்பி நியூ இயர் தாத்தா!” என்ற பேரன்களின் தலையைத் தடவிக்கொடுத்து, “ஹேப்பி நியூ இயர் மை சில்ட்ரன்” எனச் சிரித்தார் இராமநாதன்.

பூஜையறையில் விளக்கேற்றி வைத்து வணங்கிவிட்டு வந்த அனைவருக்கும் இனிப்பை வழங்கினார் வித்யாவதி.

“சரிசரி, நேரத்தோட தூங்குங்க. காலைல எழுந்து கோவிலுக்குப் போகணும்” என்றார்.

“ஓகே… குட் நைட்” என இந்தர் எழுந்து செல்ல, தாத்தாவுடன் அவரது அறைக்குச் சென்ற மித்ரன் அவர் உறங்கும் வரை பக்கத்திலேயே அமர்ந்திருந்தான்.

அவர் உறங்கிவிட்டதை உறுதிபடுத்திக்கொண்டு வெளியே வந்தவன், பெற்றோரின் அறைக்கதவைத் தட்டினான்.

உறங்காமல் விழித்திருந்த வித்யா கதவைத் திறந்தார். அவரது பார்வை, உன்னை எதிர்பார்த்தேன் என்று கூறுவதைப் போலிருந்தது.

“அம்மா! நான் ஜெய்பூர் கிளம்பறேன்” என்றான்.

அதைச் சற்றும் எதிர்பார்க்காதவர், “இந்த நேரத்திலேயா!” என கேட்டார்.

“டோண்ட் வொர்ரிம்மா! நான் பார்த்துக்கறேன். உங்க பர்மிஷன் மட்டும் போதும்” என்றான்.
தாய் அறியாத சூலா! அவனது முகத்தில் தெரிந்த பரிதவிப்பைக் கண்டு சிரித்துக்கொண்டார் வித்யாவதி.

“இன்னைக்கு என்ன புதுசா பர்மிஷனெல்லாம். எத்தனையோ முறை நோட் எழுதி வச்சிட்டுக் கிளம்பிடுவியே!” என்றார் கேள்வியாக.

“ம், இன்னைக்கு ஸ்பெஷல் டே இல்லயா!” என்றவன், “நாளைக்கு ப்ரொஃபசரோட பொண்ணைப் பார்க்கப் போறேன்ம்மா! தனியா இருக்கறதை நினைச்சி ஃபீல் பண்ணுவா. அதான்…” என இழுத்தான்.

கைகளைக் கட்டிக்கொண்டு மகனை ஆழ்ந்த பார்வை பார்த்தவரது இதழ்களில் புன்னகை உறைந்திருந்தது.

“ம், நீயா வாயைத் திறந்து என்கிட்ட எதுவும் சொல்லமாட்ட…” என்றார்.

தலையைக் கோதிக்கொண்டவன், “அவள் இன்னும் எனக்குச் சரியா பிடிகொடுக்கலம்மா! அவள் ஓகேன்னு சொல்லட்டும். முதல்ல உங்களுக்குத் தான் சொல்வேன்” என்றான்.

“ஹும்! போட்டோ கூட காட்டமாட்ட…” என்றார் போலியான வருத்தத்துடன்.

“என் மொபைல்லயிருந்த போட்டோ எப்படியோ டெலிட் ஆகிடுச்சி. போட்டோவைக் காட்டுறதுல எனக்கென்ன தயக்கம் இருக்கு” என்றான்.

“சரி, என் மருமகளை நான் நேர்லயே பார்த்துக்கறேன்” என்று பெருமூச்சு விட்டவர், “அவளுக்கு நியூ இயர் விஷ் பண்ணினேன்னு சொல்லு” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“தேங்க்யூம்மா! கண்டிப்பா சொல்லிடுறேன்” என்றவன், “இப்போதைக்கு வீட்ல யாருக்கும் தெரியவேணாம். ப்ளீஸ்!” என்றான்.

“ம், கிராண்டட்!” என்று புன்னகைத்தார்.

“ஓகேம்மா! பை” என்றவன தன் அறைக்குச் சென்றான்.
உடையை மாற்றிக்கொண்டு உற்சாகமாகச் செல்லும் மகனை மனங்குளிரப் பார்த்தார் வித்யாவதி.

************

‘இந்தப் புத்தாண்டின் முதல் நாள் உனக்காக பிறந்ததென நம்பிக்கைக் கொள். அந்த நம்பிக்கை உன்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும், தைரியப்படுத்தும், தன்னம்பிக்கைக் கொள்ளச் செய்யும். உனது ஆக்கங்கள் அனைத்தையும் வெற்றிபெறச் செய்யும். அன்புடன் உன் விஜய்!’

அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் படித்தவளுக்கு, உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.

எத்தனை முறை அதைப் படித்தாளென அவளுக்கே தெரியாத அளவிற்குப் படித்தாள் சுமித்ரா.

‘ஆனாலும், உனக்குக் கல் நெஞ்சம் சுமி! பதிலுக்கு ஒரு நன்றியாவது மெசேஜில் அனுப்பி இருக்கலாம்’ என தன்னையே திட்டிக்கொண்டாள்.

‘அதற்கு எதற்காகக் கவலை? விடிந்ததும் போன் செய்து ஒரு நன்றியைச் சொல்லிவிடலாமே…’ என மனம் சொல்ல, அதுவும் சரிதான் என்ற எண்ணத்துடன் படுத்தவளுக்கு உறக்கம் தான் வரமறுத்தது.
அவனிடம் பேசப்போகும் அந்தநேரத்தை எதிர்பார்த்து உறங்காமல் காத்திருந்தாள் அவள்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
283
334
63
அத்தியாயம் - 36

ஹே மேரி ஹம்சஃபர் இக்குசரா இந்துசார்…
சுன் சதாயேங் தே ரஹிஹே மன்சில் ப்யார் ஃகி…
(ஓ! என் வாழ்க்கைத் துணையே, நம் காத்திருத்தல் முடிவுக்கு வருகிறது.
நம் காதல் கைக்கூடும் இடத்தை நோக்கி நம்மை அழைக்கிறது)

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சுமித்ரா, காலை நேரத்தில் இதமாக ஒலித்த பாடலின் இனிமையில் மெல்லப் புன்னகைத்தாள்.

மின்னஞ்சலின் விளைவால் மனத்திலேயே தங்கிவிட்ட விஜய், அவளது கண்களுக்குள் நின்று சிரித்தான். ஒலித்த பாடல் நின்றுவிட, ரஜாயை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு புன்னகையுடன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

மீண்டும் அதே பாடல் ஒலிக்க, சற்று உறக்கம் கலைந்தவள், அப்போதுதான் தனது மொபைல் ஒலிப்பதை உணர்ந்தாள். கையை மட்டும் நீட்டித் தட்டித்தடவி போனை எடுத்து யாரென்று பாராமலேயே, “ஹலோ!” என்றாள்.

“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மித்ரா!” என உற்சாகத்துடன் சொன்னான் விஜய்.

அவனது குரலின் தாக்கத்தில் பட்டென கண்களைத் திறந்தவள், “தேங்க்யூ! விஷ் யூ தி சேம்” என்றாள்.

“இன்னும் தூக்கம் தெளியலையா கும்பகர்ணிக்கு!” என்று சிரித்தான்.

“நடு ராத்திரியில போன் பண்ணிட்டு, கிண்டல் வேறயா!” என்றபடி ரஜாயை ஒதுக்கியவளது அறையின் வெளிச்சத்தில் கண்கள் கூசின.

“காலைல ஒன்பது மணி உனக்கு நடுராத்திரியா!” எனக் கிண்டலாகக் கேட்டான்.

வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் சுமித்ரா.

“சாரி விஜய்! நான் கொஞ்சநேரம் கழிச்சிப் பேசறேன். கோவிலுக்குக் கிளம்பணும்” என்றவள், அதே பரபரப்புடன் குளியலறைக்கு ஓடினாள்.

‘வருஷ முதல் நாளே, லேட்டா எழுந்தாச்சு. அப்படி என்ன தூக்கம் எனக்கு! காலைல இன்னைக்கு பட்டினிதான்’ என நினைத்துக் கொண்டே பெற்றோரின் புகைப்படத்தை வணங்கி எழுந்தாள்.

‘ஹேப்பி நியூ இயர்ப்பா!’ என முனகியவளது இமைகள் லேசாக நனைந்தன.

கண்களை மூடி கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு தலையை வாரினாள். கூந்தலை பின்னலிட்டு முடியின் நுனியை மடித்து சிறு கிளிப்பை மாட்டினாள். முதல் நாள் இரவு ஊறவைத்து வடிகட்டி வைத்திருந்த பச்சைப் பயிறு இருந்த டப்பர் வேர் டப்பாவைத் திறந்தாள்.

பச்சை நிற மேல் தோல் பிளந்து வெள்ளை நிறத்தில் அழகாக வால் முளைத்திருந்த பயிரை, ஒரு கை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். லேசான இனிப்புடன் நாவில் சுவைத்ததை மென்று விழுங்கி தண்ணீரைக் குடித்தாள்.

மீதமிருந்ததை மூடி கைப்பைக்குள் வைத்துக்கொண்டு, அறையைப் பூட்டிக்கொண்டு கிளம்பியவள், எதிர்பட்ட தோழிகளுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தபடி கையிலிருந்த கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு வாயிலை நோக்கி நடந்தாள்.

எதிரில் வந்த ஹாஸ்டல் வார்டனைக் கண்டதும், “ஹேப்பி நியூ இயர் மேடம்!” என்று புன்னகைத்தவளுக்குப் பதில் வாழ்த்துச் சொன்னவர், “உன்னைப் பார்க்க விசிட்டர் வந்திருக்காங்க…” என்றார்.

‘விசிட்டரா!’ என நினைத்தவள், “வி..ஜ..ய்!” என முனகியவளை பரபரப்பு தொற்றிக்கொள்ள இரண்டடி சென்றதும் தலையில் தட்டிக்கொண்டாள். திரும்பி வார்டனிடம், “சாரி மேம்! தேங்க்யூ!” எனச் சொல்லிவிட்டுக் ஓட்டமும் நடையுமாக ரிசப்ஷனுக்கு வந்தாள்.

‘அவன் எப்படி வந்தான்?’ என்று யோசிக்கக்கூடத் தோன்றாமல், அவனைக் காணும் ஆவலில் விழிகள் அலைபாய்ந்தன. ரிசப்ஷனில் யாரும் இல்லாமலிருக்க, வாயிற்படியில் நின்று விழிகளைச் சுழற்றித் தேடினாள்.

காரின்மீது சாய்ந்து நின்றபடி யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்த விஜய்மித்ரனைக் கண்டதும், உடலில் லேசாக மின்சாரம் பாய்ந்ததைப் போலச் சிலிர்த்துப் போனாள். ‘தனக்காக, தன்னைக் காணவேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறான்’ என்று உணர்ந்துகொண்டவளுக்கு, நெஞ்சம் குழைந்தது.

சந்தோஷத்தில் அழத்தான் தோன்றியது அவளுக்கு. இதழ்களை அழுந்த மூடித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு படிகளைக் கடந்து காரை நோக்கி நடந்தாள். அவன் சிரிப்புடன் தலையைக் கோதிக்கொண்டு போனில் பேசுவதையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டு நின்றாள்.

பேசிக்கொண்டே எதேச்சையாக காரின் மிரர்வியூவில் தெரிந்த சுமித்ராவைக் கண்டதும், “ஓகே பாஸ்! நான் பிறகு பேசறேன்” என்று போனை அணைத்து பாக்கெட்டில் வைத்தபடி அவள் புறமாகத் திரும்பி, “ஹாய்!” என்றான் உற்சாகமாக.

“ஹா..ய்!” என்றவளது விழிகள், அவனை முழுதாக உள்வாங்கிக் கொண்டிருந்தன.

இருவருமே தங்களுக்கிடையிலிருந்த தூரங்களைக் குறைத்து அருகில் வந்தனர்.

அவன் வழக்கம் போல இரு கரங்களையும் பாக்கெட்டில் விட்டபடி குறுஞ்சிரிப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருக்க, நாணத்தில் அவனது முகம் பார்க்கத் தவித்த விழிகளைத் தாழ்த்துவதும், சுழலவிடுவதுமாக அவனை அறைகுறையாகப் பார்த்தாள்.

“வெல்…” எனக் கைகளை விரித்தவன், “கேள்வியை நீ கேட்கறியா? இல்ல, நானே இங்கே வந்தது எப்படின்னு சொல்லிடட்டுமா?” எனக் கேட்டான்.

உதட்டைச் சுழித்து அவனைப் பார்த்தவள், “மிஸ்டர். சி.ஐ.டி! என்னைக்காவது இப்படி நடக்கும்னு எதிர்பார்த்தேன். அதனால, நீங்க வந்தது எனக்கொன்னும் பெரிய ஷாக்கெல்லாம் இல்லை” என்றாள் புன்னகையை அடக்கியபடி.

“ஹப்பா! எங்கே, நீ எப்படி இங்கே வந்தேன்னு? சினிமால கேட்கறது மாதிரி கேட்டுடுவியோன்னு நினைச்சேன். என் நல்லநேரம் தப்பிச்சிட்டேன்” என்றவனைத் தலையைச் சாய்த்துப் பார்த்தாள்.

“ஆனாலும், நீ வந்தது எனக்கு ரொம்பச் சந்தோஷம்னு ஒரு வார்த்தை வருதா பார்த்தியா?” எனப் போலியாக வருந்தினான்.

“உங்களைக் கேள்வி கேட்காம இருக்கறதுக்கே சந்தோஷப்படணும்” என்றாள் கெத்தாக.

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. கேள்வி கேட்காம, எங்க அப்பன் குதிருக்குள் இல்லன்னு உன் மனசை அப்படியே எல்.ஈ.டி மானிடர்ல படம் ஓட்டிட்டிருக்க. அது உனக்குப் புரியல…” என்று சிரித்தான்.

சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டவள், “ரொம்பத்தான் பெருமை! புது வருஷம் பிறந்திருக்கு. முதல் நாளே எதுவும் சொல்லவேணாம்னு அமைதியா இருக்கேன். இதை உங்களுக்கு அட்வாண்டேஜா எடுத்துக்க வேணாம்” என்றாள் சமாளிப்பாக.

இடுப்பில் கையை வைத்தபடி, “ம், உங்க ஆசைக்காக அப்படியே நினைச்சிக்கிறேன் மேடம்!” என்றவன் கைகளுக்கு நடுவில் கொட்டாவியை வெளியேற்றினான்.

“கும்பகர்ணின்னு கிண்டல் பண்ணவறே, காலங்கார்த்தால கொட்டாவி விட்டுட்டிருக்கார்” என்றாள் கிண்டலாக.

பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவிக்கொண்டவன், “உனக்காக, நைட் தூங்காம உதய்பூர்லயிருந்து ஓடோடி வந்திருக்கேன்” எனச் சொல்லிவிட்டுத் தண்ணீரைக் குடித்தான்.

அவனது சோர்ந்த விழிகளே அது உண்மை என உணர்த்த, “எதுக்கு இப்படி உடம்பைக் கெடுத்துக்கறீங்க?” எனக் கவலையுடன் கேட்டான்.

முகத்தைத் துடைத்துக்கொண்டே, “வராம போயிருந்தா இந்தத் தேவதையோட தரிசனமும், இப்படி அனுசரணையான வார்த்தைகளையும் கேட்டிருக்க முடியாதே” என்றான் ஆத்மார்த்தமாக.

காரின் பேனட்டின் மீது கைப்பையை வைத்தவள், “விஜய்! இப்போ உங்ககிட்ட பேசிட்டிருக்கறது, ஒரு ஃப்ரெண்டா மட்டும்தான்” என்றாள்.

அவளருகில் வந்து காரின் மீது சாய்ந்து நின்றவன், தாடையைத் தடவிக்கொண்டே, “இந்த வார்த்தைங்க மனசுலயிருந்து வரலன்னு, உன்னோட கண்ணு சொல்லுதே…” என்றான்.

சிலநொடிகள் அமைதியாக நின்றிருந்தவள், “நான்…” என ஆரம்பிக்க, அவன் இடைமறித்தான்.
“நீ என் ப்ரொஃபசரோட பொண்ணு. அண்ட் ஃப்ரெண்ட்! அந்த எல்லையிலேயே நின்னுக்கறேன்னு சொல்ற அதானே…” என்றான்.

“ம்ம், சரி. உன் மனசு என்ன சொல்லுதோ அதைத்தான் நீ செய்ய முடியும். அதேபோல என் மனசு என்ன சொல்லுதோ, அதைத்தான் நானும் செய்யமுடியும்” என்று தீவிரபாவத்துடன் சொன்னவனை விளங்காமல் பார்த்தாள்.

“உன் மனசு சொல்றதப் போல நீ இரு. என் மனசுல நீதான் என் பொண்டாட்டின்னு செதுக்கி வச்சிட்டேன். அதனால, நான் அப்படியே நடந்துக்கறேன்…” என்றவன், “சாரி, இப்போதைக்கு காதலி. கல்யாணத்துக்குப் பின்னால மனைவி. ஓகேவா” எனக் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

“உங்களுக்கு எல்லாமே விளையாட்டா இருக்கு” என்றாள் மெதுவாக.

“ம், எனக்கும் சேர்த்து எல்லாத்தையும் சீரியஸா பார்க்க நீ இருக்கியே..” என்றான்.

“விஜய்..!” என்றபடி திரும்பி அவனைப் பார்த்தாள்.

“ஓகே. முதல் நாளே நமக்குள்ள எந்த மனக்கசப்பும் வேணாம். உன்னை எந்த விதத்திலேயும் நான் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். இதைப் பத்திப் பேசவேமாட்டேன். ஆனா, எனக்காக நீ ஒண்ணு செய்யணும்” என்றான்.

“என்ன?” என்றாள்.

“இன்னைக்கு நைட் டின்னர் வரைக்கும், நீ என்னோடவே இருக்கணும்” என்றான்.

அவள் சற்றும் யோசிக்காமல், “சரி. நைட் பத்து மணிக்குள்ள என்னைக் கொண்டு வந்து விட்டுடணும்” என்றாள்.

“டன்!” எனத் தோள்களைக் குலுக்கினான்.

அடுத்த இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு, மோட்டி துங்கரி விநாயகர் ஆலயத்தில் காரை நிறுத்தினான்.

“உனக்குப் பிடிச்ச கணேஷ்ஜி மந்திர். ஜெய்பூர்ல ரொம்ப விசேஷமான கோவில். வா!” என்றான்.

காரை நிறுத்திவிட்டு இருவரும் கோவிலை நோக்கி நடந்தனர். பிரசாத தட்டு ஒன்றை வாங்கி அவளிடம் கொடுத்தான். துப்பட்டாவால் தலையில் முக்காடு அணிந்து கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே செல்ல, அவளைப் பின் தொடர்ந்தான் மித்ரன்.

ஆளுயர விநாயகர் சிலை. செந்தூர மேனியனாய் உயரமும், பருமனுமாக சித்தி, புத்தியுடன் விசுவரூப தரிசனத்துடன் காட்சியளித்தார் கஜமுகன். ஐங்கரனின் அழகினை கண்களில் நிறைத்துக்கொண்டு, மனதாரப் பிரார்த்தித்தாள்.

ஆர்த்தியை எடுத்துக்கொண்டதும், தீர்த்தத்தை அனைவர் மீது தெளித்துவிட்டனர். பிரசாத தட்டை வாங்கிக்கொண்டு இருவரும் வெளிப்பிரகாரத்தில் வந்தமர்ந்தனர். இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, “கிளம்பலாமா?” எனக் கேட்டான்.

பக்கத்திலேயே இருந்த பிர்லா மந்திரைக் காட்டினான்.

அவளும் எழுந்து அவனுடன் நடந்தாள். காரில் அமர்ந்தவன், “நைட்டு தூங்காதது வேற ரொம்பப் பசிக்குது. இந்தக் கோவிலை நைட்ல பார்க்க ரொம்ப அழகா இருக்கும். ஈவ்னிங் வரலாம்” என்றான்.

“சரி” என்றவள், “ஸ்ப்ரௌட் சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டாள்.

“ஷ்யூர்! இருக்கற பசிக்கு எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன்” என்றான்.

ஸ்ப்ரௌட் டப்பாவில் ஒரு ஸ்பூனைப் போட்டு அவனிடம் நீட்டினாள். ஒரு கையால் காரைச் செலுத்திக்கொண்டே இரண்டு ஸ்பூன் அள்ளி வாயில் போட்டுக்கொண்டவன், “வெரி நைஸ்…” என்றான்.

“தேங்க்ஸ்!” என்றாள்.

“அதைக் கொஞ்சம் சிரிச்சிகிட்டே சொல்லலாமே. தப்பில்லையே…” என்றான்.

கடுப்புடன், “இப்ப வேணா சிரிக்கவா…” எனக் கேட்டவள், ஈஈ எனப் பற்களைக் காட்ட, தன்னையும் மீறிச் சிரித்தவனுக்குப் புரையேறிக்கொண்டது.

“ஹய்யோ! விஜய் பார்த்து….” என்றவள் அவனது தலையில் படபடவென நான்கைந்து முறை சற்று பலமாகவே தட்டினாள்.

அதற்குள் கவனமாகக் காரை ஒரு பக்கமாக நிறுத்தியிருந்தான் விஜய்மித்ரன்.

‘தண்ணீர் கொடு’ என்பதைப் போலச் செய்கையில் கேட்டவன் அவள் கொடுத்த பாட்டிலை வாங்கிக் கொண்டான். மளமளவென தண்ணீரைக் குடித்தவனது கண்கள் சிவந்து போயின.

“சாரி விஜய்! நான் வேணும்னே பண்ணல” என்றாள் இறங்கிய குரலில்.

“ஹப்பா!” என விழிகளை உருட்டியவன், “எத்தனை நாள் கோபமோ தெரியல. அடியா அது ஒண்ணொன்னும் இடி…” என்று பெருமூச்சு விடுவது போல நடித்தான்.

“நான் ஒண்ணும் வேணும்னு செய்யல…” என்றாள் சிணுங்கலாக.

“அடிச்ச அடியிலயே தெரியுதே… வேணாம்னு தான் செய்தேன்னு” என்றவனை உதட்டைக் கடித்துக்கொண்டு முறைத்தாள்.

“நீங்க இப்படியே கிண்டல் பண்ணீங்கன்னா, நான் அழுதுடுவேன்” என்றாள் முறைப்புடன்.

அவளது கெஞ்சலிலும், சிணுங்கலிலும் உள்ளம் கனிய, “வேணாம். நீ என்னைக்குமே அழக்கூடாது. இந்த வருஷத்து ரெசலூஷனாவே இதை எடுத்துக்க” என்று ஆழ்ந்த குரலில் சொன்னான்.

அவனது பார்வைக்கும், பேச்சிற்குமான அர்த்தம் விளங்க பார்வையை வெளியே திருப்பினாள்.

“மித்ரா! ஃபீலிங்கா…” என்றவன், “அப்படியெல்லாம் ஃபீல் பண்ணாத. நீ சிரிச்சாலே சுமாராதான் இருப்ப. அழுதா சகிக்காது…” என்று முகத்தைச் சுளித்துச் சொல்ல, வேகமாக அவனைத் திரும்பிப் பார்த்தவள் அவனது முகத்தின் போக்கைக் கண்டதும் கலகலவென நகைத்தாள்.

“பிள்ளையாரப்பா! இன்னொரு அடிலயிருந்து என்னைக் காப்பாத்திட்ட” என்றவன் புன்னகையுடன் காரை எடுத்தான்.

ஹோட்டலில் அமர்ந்திருந்த இருவரும், சற்று இயல்பாக உரையாட ஆரம்பித்தனர்.

திடீரென, “உங்க அம்மா தமிழ் தானே” என்றான்.

“ஆமாம்” என்றாள்.

“சாரும் தமிழ் ப்ரொஃபசர்! அப்போ உனக்குத் தமிழ் தெரியுமா?” எனக் கேட்டான்.

“ம்… எழுத படிக்கத் தெரியும். ஓரளவுக்குப் பேசத் தெரியும்” என்றாள்.

“ஓ! அப்போ நாம ரெண்டு பேரும் இனி, தமிழ்லதான் பேசப்போறோம்” என்றான்.

“பேசறதைப் பத்தி ஒண்ணுமில்ல. ஆனா, ஏன்?” எனக் கேட்டாள்.

“எங்க வீட்ல எல்லோரும் தமிழ்தான் பேசுவோம். உனக்கு அப்புறம் பிரச்சனையா இருக்கக்கூடாது இல்ல…” என்றான்.

அவள், “ஓ!” என்று எதார்த்தமாகச் சொல்ல, இவன் சட்டென சிரித்துவிட்டான்.

அப்போதுதான் அவன் சொன்னதற்கான அர்த்தம் முழுதாக விளங்க, “என்ன சொன்னீங்க?” என்றாள்.

“ஒருமுறை சொல்றதுக்குத் தான் அலௌட்!” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஆர்டர் செய்த உணவு வகைகள் வந்துவிட, இருவருமே அந்தப் பேச்சைக் கவனமாக கைவிட்டனர்.

காரை நோக்கி நடந்தபடி, “ஹவா மஹால் போயிருக்கியா?” எனக் கேட்டான்.

“இல்ல… வெளியிலயிருந்து பார்த்ததோட சரி” என்றாள்.

“அப்போ, அங்கே போவோம்” என்றான்.

காரிலிருந்து இறங்கியவள், ஹவா மஹாலை நிமிர்ந்து பார்த்தாள்.

“விஜய்! இந்தக் கட்டிடத்தைப் பார்க்க கிருஷ்ணரோட கிரீடம் மாதிரியில்ல…” என்றாள்.

“ம், பரவாயில்லயே கண்டுபிடிச்சிட்ட” எனச் சிரித்தவன், “இந்த பில்டிங்கை அப்படித்தான் டிசைன் பண்ணியிருக்காங்க. தேன்கூடு மாதிரி ஹெக்ஸகன் ஷேப்ல இதோட வேலைப்பாடு இருக்கும். வா மேலே போய்ப் பார்க்கலாம்” என அவளை அழைத்துச் சென்றான்.

ஒரு பெரிய அரண்மனையின் ஒருபக்கச் சுவர் மட்டும், தொள்ளாயிரத்து ஐம்பத்து மூணு சிறுசிறு ஜன்னல்கள் கட்டப்பட்டுள்ளன.

“இதைப் பார்த்தியா… அந்தக் காலத்துல லேடீஸ் இங்கேயிருந்து விழாக்களை பார்க்கவும், பொழுதுபோக்கா வந்து நிற்கவும் தான் இந்த சுவரைக் கட்டியிருக்காங்க. பார் காத்து எப்படி சுழண்டு அடிக்குது…” என்றான்.

“பியூட்டிஃபுல். சின்னச் சின்ன ஜன்னல். அதுக்குக் குட்டிக் குட்டியா கதவு வேற…” என இரசித்துச் சொன்னாள். “இந்த மாளிகை முழுக்க இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்” என்றவள் அவனுடன் இணைந்து நடந்தாள்.

“இப்போ ஒரு முக்கியமான இடத்துக்குப் போகப் போறோம்” என்றவன் மேற்கூரை முழுவதும் சிறு சிறு கண்ணாடிகள் பதித்திருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான். பக்கவாட்டுச் சுவரிலும் அழகுற சிறு கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

“எப்படியிருக்கு?” என்றான்.

“ம், நல்லாதான் இருக்கு. ஆனா, இதுல என்ன விசேஷம்?” எனக் கேட்டாள்.

“இப்போ பாரு” என்றவன் அங்கே இருந்த ஒருவரை அழைத்து ஏதோ சொன்னான். அவரும் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி உயர்த்திக் காண்பிக்க, அதன் ஒளிச்சிதறல் ஒவ்வொரு கண்ணாடியிலும் பட்டு அந்த அறையே இரம்யமாகக் காட்சியளித்தது.

“வாவ்! எவ்வளவு அழகு விஜய்!” என்றவள் தன்னையும் அறியாமல், அவனது முழங்கையைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.

மெழுகுவர்த்தியுடன் அந்த ஆள் அங்கிருந்து செல்ல, “சூப்பரா இருந்தது…” எனக் குதூகலத்துடன் உரைத்தவள், தான் செய்திருக்கும் காரியத்தை உணர்ந்து பட்டென அவனது கரத்தை விடுவித்தாள்.

அங்கிருந்த ஜன்னலருகில் சென்று அவள் நிற்க, “நான் ஒண்ணும் தீண்டத்தகாதவன் இல்லயே…” என்றவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவன் நகர, “விஜய்!” என அவனது கரத்தைப் பற்றினாள்.

அவன் திரும்பிப் பார்க்க, “கையைப் பிடிச்சிக்கிறதால ஃப்ரெண்ட்ஷிப் இல்லன்னு ஆகிடாது” என்றாள்.

அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை அவள் மீது வீசியவன், அமைதியாக நடந்தான். அவனும் கையை விடுவித்துக் கொள்ளவில்லை. அவளும் விடவில்லை.

கால்கள் ஓயும் வரை அந்த அரண்மனையைச் சுற்றிப் பார்த்தனர்.

“விஜய்! கொஞ்சநேரம் உட்காரலாமா?” எனக் கேட்டாள்.
“எனக்கும் கொஞ்ச நேரம் உட்காரணும்” என்றவன் அவளருகிலேயே அமர்ந்தான்.

“காலைலயிருந்து போனையே பார்க்கல. ஒரு பத்து நிமிஷம்” என்றவன், ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்த போனை உயிர்பித்தான்.

“ஏன் போனை ஆஃப் பண்ணி வச்சிருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண வந்திருக்கேன். போன் வந்தா டிஸ்டர்பா இருக்குமில்ல” என்றான்.

உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், “நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” எனக் கேட்டாள்.

“பின்னே, எனக்கு நீ அதிமுக்கியமான ஆள் இல்லையா…” என்றவன் முக்கியமான ஆட்கள் சிலரிடமிருந்து வந்திருந்த கால்களுக்கு மட்டும் போன் செய்து பேசினான்.

அவன் பேசுவதையே, அவள் ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

மனத்திற்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் முட்டிமோதின. அவற்றையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டு அவன்மீதான காதல் மட்டும் முன்னேறி வந்து கொண்டிருந்தது.

மீண்டும் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தவன், “பார்த்தது போதுமா! கிளம்பலாமா?” என்றான்.

லேசாகச் சிரித்துக்கொண்டவள், “ம்” என்றாள்.

காலை உணவு தாமதமானதால், மதிய உணவிற்குச் செல்லும் போது நேரம் கிட்டதட்ட நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது.

“ஹவா மஹால்ல ரொம்ப நேரம் இருந்துட்டோம்” என்றான்.

“எனக்கு அங்கேயிருந்து வர மனசே இல்ல…” என்றாள்.

“அதுக்கென்ன, இன்னொரு நாள் போவோம்…” என்றான் இலகுவாக.

“நீங்க உங்க வேலையைப் பார்க்காம, என்னோட ஊரைச் சுத்துவீங்களா?”

“வாரமெல்லாம் வேலை. ஒரு நாள் ரெஸ்ட். நாம என்ன மிஷினா ஓயாம உழைக்க” என்றான்.

“உங்க பேரண்ட்ஸ்கூட இருக்கமாட்டீங்களா?”

“மாசத்துல மூணு சண்டே ஃபேமலிக்கு. ஒரு சண்டே உனக்காக…”

“நான் ஒத்துக்கலன்னா…”

கிண்டலாகச் சிரித்தவன், “உன்னை யாரு பர்மிஷன் கேட்டது!” எனக் கேட்டவன், “ஆனா, நீ அப்படியெல்லாம் செய்யமாட்ட” என்றான் உறுதியான குரலில்.

“ஓஹ்! அவ்வளவு கான்ஃபிடெண்டா!”

“நிச்சயமா. இல்லனா, நான் சொன்னதும் என்னோட வந்திருப்பியா?” என்றான்.

“ஹலோ! வருஷ ஆரம்பத்திலேயே, உங்களை ஏமாத்தவேணாம்னு வந்தேன்” என்றாள் வேகமாக.

“ஏமாற வேணாம்னு… இதுதான் நீ சொல்ல வேண்டிய பதில்” என்றான்.

சுமித்ரா சற்றுநேரம் மௌனமாக இருந்தாள்.

“நான் தப்பு பண்ணிட்டேன்” என்றாள்.

“காலம் கடந்த ஞானோதயம்” என்றவன், உணவைத் தொடர்ந்தான்.

அவள் உண்ணாமல் கைகளால் அலைந்துகொண்டிருந்தாள்.

“மித்ரா! சாப்பிடு” என்றவாறு அவளது கரத்தைத் தட்டிக்கொடுத்தான்.

தட்டிலிருந்ததை மட்டும் காலிசெய்துவிட்டு, “எனக்குப் போதும்…” என எழுந்து சென்றாள்.

சிலநொடிகள் யோசனையுடன் அமர்ந்திருந்தவனும், வேகமாக உண்டுவிட்டு எழுந்தான்.

சுமித்ரா முகத்தைத் துடைத்துக்கொண்டே வந்து அமர்ந்தாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “சாரி மித்ரா! நீ சங்கடப்படும்படி நான் பேசியிருக்கக்கூடாது. உன்னை ஹாஸ்டல்ல விட்டுடுறேன்” என்றதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது பார்வையைச் சந்திக்காமல், “சாரி” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

கண்களின் விளிம்பில் நின்ற கண்ணீரைச் சிரமப்பட்டு வழியாமல் தடுத்தாள்.

அவன் காரை நோக்கி நடக்க, “விஜய்!” என அழைத்தாள்.

“ம்” என்றான்.

“ஈவ்னிங் பிர்லா மந்திர் கூட்டிட்டுப் போறேன்ன் சொன்னீங்களே” என்றாள்.

அவளைக் கூர்ந்து பார்த்தவன், “ம், போகலாம்” என்றவன் காரைத் திறக்க முயல, அவனது கரத்தைப் பிடித்தாள்.

“நடந்தே போகலாமே” என்றாள்.

அதற்கும் மறுப்புச் சொல்லாமல் தலையை அசைத்தான்.

அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையுடன் முன்னால் நடக்க, அவனையும் சாலையையும் மாறி மாறிப் பார்த்தபடி உடன் நடந்தாள் சுமித்ரா.

சாலையின் எதிர்புறத்திலிருந்த கோவிலுக்குச் செல்ல, சிக்னலில் நின்றிருந்தனர். நின்றிருந்தவர்கள் சாலையைக் கடக்க, இருவரும் கடைசியாக சென்றனர். ஆனால், திருப்பத்திலிருந்து சிக்னலை மீறி சீறி வந்த வாகனத்தைக் கவனிக்காமல் மித்ரன் செல்ல, கடைசி நொடியில் அதைக் கவனித்துவிட்டாள் சுமித்ரா.

“விஜய்!” என்று அலறியவள் வேகமாக அவனைப் பிடித்துப் பின்னால் இழுத்தாள்.

சூழ்நிலையை உணர்ந்த விஜய்மித்ரன் ஆயாசத்துடன் நெற்றியைத் தடவிக்கொண்டான்.
அவனது கரத்தைப் பற்ரியிருந்த சுமித்ராவின் கரங்கள் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்தன.

“மித்ரா! எனக்கு ஒண்ணுமில்ல…” என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.

அவளது மனம் மட்டும் சமாதானமாகவில்லை. ‘தன்னால் தான் இதெல்லாம்’ என்று உள்ளம் குமைந்தது.

சில படிகளைக் கடந்து சென்றதும் பெரிய பச்சைப் பசேலென்ற தோட்டத்திற்கு நடுவில் வெள்ளை நிற சலவைக் கற்களால் கட்டப்பட்டிருந்த லக்‌ஷ்மி நாராயணன் கோவில், கண்களைக் கொள்ளைக் கொள்ளும் எழிலுடன் காட்சியளித்தது.

அதிலும் அந்த மாலை நேரத்தில் விளக்கொளியில், ஜெய்பூருக்கு அணிவித்த வெள்ளி மகுடமாக ஜொலித்தது அக்கோவில். முகப்பிலேயே நின்று வரவேற்பதைப் போல, தோரண அலங்காரத்துடன் காட்சியளித்தார் முழுமுதற் கடவுளான விநாயகர்.

அதுவரையிருந்த மன உளைச்சல் சற்று குறைந்து அந்த அழகில் மனம் இலயிக்கத் துவங்கியது. அவனது கரத்தைப் பிடித்தபடியே கோயிலுக்குள் நுழைந்தாள். அலங்கார பூஷிதையாக காட்சியளித்த ராதா - கிருஷ்ணனின் அழகும், அலங்காரமும் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன.

சற்றுநேரம் அங்கே நடந்துகொண்டிருந்த பஜனையில் அவர்களும் கலந்துகொண்டனர். மனத்திலிருந்த கிலேசங்களெல்லாம் மறைந்து, வெளியில் வந்தபோது இருவருமே சற்று இயல்பிற்குத் திரும்பியிருந்தனர்.

பிரகாரத்தில் அமர்ந்தவள், “நம்ம மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்யும் போது ஒரு உற்சாகம் வருதில்ல” என்றாள் சிரிப்புடன்.

அவனும் ஆமோதித்துப் புன்னகைத்தான்.

“மணியென்ன?” என்றவள் அவனது கரத்தைப் பற்றி கடிகாரத்தைப் பார்த்தாள்.

“ஆறு தான் ஆகுதா! இப்பவே ஹாஸ்டலுக்குப் போனா, போர் அடிக்கும்” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.

“அதோட, ஹாஸ்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கே மரத்துப் போச்சு. அட்லீஸ்ட், என் கையாலயாவது சமைச்சி சாப்பிடணும்னு தோணுது. ரெண்டு வாரத்திலேயே எனக்கு இப்படித் தோணுது. நீங்கள்லாம் எப்படித்தான் ஹோட்டல் சாப்பாட்டை சாப்பிடுறீங்களோ தெரியல…” என வளவளத்தாள்.

“இதுவரை நீ பேசினதிலேயே, இதுதான் ரொம்ப லெங்தியான டயலாக்” என்றான் அவன்.

“இதைக்கூட கணக்கெடுப்பீங்களா நீங்க?” என ஆயாசத்துடன் கேட்டாள்.

சிரித்தவன், “சரி, உங்க ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாயிருக்காதா?” எனக் கேட்டான்.

“நல்லாதான் இருக்கும். ஆனா, மாற்றத்தை மனசு கேட்குதோ இல்லயோ, நாக்கு கேட்குது” என்றாள்.

“ம், அப்போ நான் ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். வர்றியா” என்றான்.

‘எங்கே’ என கேட்க நினைத்தவள், “ம்” எனத் தலையை அசைத்தாள்.

“அப்போ, ஹாஸ்டலுக்கு எத்தனை மணிக்குப் போவ?” எனக் கேட்டான்.

அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்பது புரிய, “பத்து மணிக்கு அங்கே இருந்தா போதும்…” என்றாள் கடுப்புடன்.

“சரி வா…” என்றான்.

இருவரும் சிக்னலில் வந்து நின்றதும், “நான் ரோடைக் க்ராஸ் பண்ணப் போறேன்” என்று அறிவிப்பு போலச் சொல்ல, குறுஞ்சிரிப்புடன் அவனது கரத்தைப் பிடித்துக்கொண்டாள் மித்ரா.

அவனும் பதிலுக்குச் சிரிக்க, சுமித்ராவின் உள்ளத்தில் ஏதோ ஒரு ஏக்கம் பரவியது. அவன் தன்னைக் கண்டுகொள்வதற்குள், இயல்பாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டாள்.

கார் அவளது கம்பெனியைத் தாண்டிச் செல்லும்போது, “விஜய்! இதுதான் எங்க ஆஃபிஸ். தேர்ட் ஃப்ளோர்ல தான் நான் வேலை செய்யறேன்” என்றாள்.

கவனமாக அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டவள், உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு, ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தினான். ஓடி வந்து கேட்டைத் திறந்த காவலாளி, “நமஸ்தே சாப்!” என்று ஒரு சல்யூட் வைக்க, பதிலுக்குத் தலையை அசைத்தவன் அவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.

“இறங்கு. நான் சொன்ன இடம் இதான்” என்றான்.

அவனைப் பார்த்துக்கொண்டே யோசனையுடன் இறங்கினாள். அந்த ஏரியாவே செல்வ செழிப்பில் புரளும், சீமான்களின் பங்களா இருக்கும் இடம் என்பதைப் பார்த்தவுடனேயே தெரிந்தது.

“இது யாரோட வீடு?” எனக் கேட்டாள்.

“எங்க தாத்தா வீடு. உள்ளே வா” என்றழைத்தான்.

கண்களில் ஒரு பிரமிப்பு படர, அவனோடு இணைந்து நடந்தாள்.

உள்ளேயிருந்து ஓடிவந்த வேலையாட்கள் வரிசையாக நின்று பவ்யமாக வணக்கம் வைத்தனர். அவர்களைச் சற்று தள்ளி அழைத்துச் சென்று ஏதோ பேசினான். அவள் திகைப்புடன் நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு நிமிடங்களில் திரும்பி வந்தவன், “உள்ளே வா!” என அழைத்தான்.

கோட்டை போலிருந்த வீட்டைப் பார்வையால் அளந்தவள், தயக்கத்துடன் முன் வாசலிலேயே நின்றாள்.

“என்ன அங்கேயே நின்னுட்ட? வா!” என்றான்.

அவள் அடி மேல் அடிவைத்து உள்ளே சென்றாள். ஹாலில் ஒரு பக்கச் சுவரில் பெரிதாக நால்வரது புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

“இவர் எங்க தாத்தா ராஜா ராமன், பாட்டி குமுதவல்லி! இவர் எங்க சின்னத் தாத்தா இராமநாதன், இவங்க என் பாட்டி அமுதவல்லி! எங்க சின்னத் தாத்தா உதய்பூர்ல இருக்கார். மத்தவங்கள்லாம் இறந்துட்டாங்க. இது, எங்க சின்னத் தாத்தாவோட வீடு! நாங்கதான் பராமரிச்சிட்டு இருக்கோம். அப்பாவும், அம்மாவும் இப்ப அவரோட தான் இருக்காங்க” என்று அவளுக்கு விளக்கினான்.

ராஜ கம்பீரத்துடன் இருந்த தாத்தாக்களையும், பட்டும் பீதாம்பரமும் அணிந்து வைர வைடூரியங்கள் அலங்கரிக்க நின்றிருந்த பாட்டிகளையும் பார்த்தவளது கண்களில் சிறு கலக்கம் பரவியது.

“இதோ பார்த்தியா! இவங்க தான் என்னோட அம்மா, அப்பா” என அவன் சுட்டிக்காட்டிய புகைப்படத்தைப் பார்த்தவள் மேலும் திகைத்தாள்.

அவனது பாட்டிகளின் அளவிற்கு நகை அணிந்திராத போதும் பார்வையின் தீட்சண்யமும், அழகும் செல்வத்திலேயே புரண்டவர் எனச் சொல்லாமல் சொல்லியது.
‘விஜய்மித்ரன் இவ்வளவு பெரிய செல்வந்தனா!’ தொண்டையில் எதுவோ அடைப்பதைப் போலிருந்தது அவளுக்கு.

“விஜய் நீங்க…” என்றவள் பேச்சு வராமல் தடுமாறினாள்.

“உன்னோட பயமெல்லாம் போச்சா?” எனப் புருவத்தை உயர்த்திச் சிரித்தான்.

“இப்போதான் ரொம்பப் பயமா இருக்கு” என்றாள்.

“ஹேய்! உன்னோட பயமெல்லாம் போகட்டும்னு தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தது. நீ என்னவோ பயமாயிருக்குன்னு சொல்ற… என் கையைப் பிடிச்சிக்க, பயமெல்லாம் போயிடும்” என்று சிரித்துக்கொண்டே அவளை நெருங்கினான்.

“வேணாம் விஜய்! கிஷோர் மூலமா உங்களுக்கு ஏதாவது தொல்லை வரும்னு நான் நினைச்சது உண்மைதான். ஆனா, இங்கே விஷயமே தலைகீழா இருக்கு. உங்களை விரும்பினேன். இல்லன்னு மறுக்கவே இல்ல. ஆனா, இப்போ பயமா இருக்கு. இதுக்கெல்லாம் எனக்குத் தகுதியே இல்லை” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளது கரத்தைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தான்.

“இப்போ என்ன சொல்ல வர்ற? நீ பணக்காரன், எனக்கு வேணாம்னு சொல்றியா? நினைச்சி நினைச்சி ஒண்ணொன்னு பேசுவியா நீ! உன்னோட பிராப்ளம்தான் என்ன? கிஷோருக்குச் சொன்னது போலவே, எனக்கும் ஏதாவது சொல்ல ரெடியா வச்சிருப்பியே… சொல்லு அதையும் கேட்டுக்கறேன்” என்றான் கோபத்துடன்.

“உன் மனசுல இருக்கும் ஆசையும், ஏக்கமும் உன் பார்வையிலேயும், நடவடிக்கையிலேயும் இன்னைக்கெல்லாம் பார்த்தேனே… நான் உன் கையைப் பிடிச்சது விடுறதுக்காக இல்லடி! காலம் முழுக்க நாம கைக்கோர்த்து நடக்கறதுக்கு. இவ்வளவுதூரம் உனக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணாலும்; நீ புரியாதது மாதிரியே நடிப்பேன்னா, இந்தக் கையை விட்டுடுறேன்…” என்றவன் அவளது கரத்தை விடுவித்தான்.

அவள் மலங்க மலங்க விழித்தபடி, “என்னை ஃபோர்ஸ் பண்ணமாட்டேன்னு சொன்னீங்க…” என்றாள்.

“இப்போ அதைத்தானே செய்திருக்கேன். இதைத் தானே நீயும் எதிர்பார்த்த. உன்னை விட்டுட்டேன்… தைரியமா போ! இனி, இந்த விஜய் உன் வாழ்க்கைலயும் தலையிடமாட்டேன். உன் கண்ணுலயும் படமாட்டேன்” அடக்கிய கோபத்துடன் நிதானமான குரலில் உரைத்தான்.

அவள் திகைத்த முகத்துடன் நிற்க, அவளை முறைத்தவன் கைகளை இறுக மூடி, தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “நீ கிளம்பு. உன்னைக் கூட்டிட்டு வந்தது போலவே கொண்டு போய் விட்டுடுறேன். இன்னையோட நம்ம ரெண்டு பேருக்கும் எல்லாமே முடிஞ்சி போச்சு. உனக்கும், எனக்கும் இனி எந்தச் சம்மந்தமுமில்ல. இது நீ சொல்ற மாதிரின்னு நினைச்சிக்காதே. நான் சொன்னா சொன்னதுதான். இந்த வீட்டை விட்டு இப்போ நீ கிளம்பினா உனக்கும், எனக்கும் எதுவுமே இல்ல” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுக் காரை நோக்கி நடந்தான்.

ஹாலின் நடுவில் நின்றிருந்தவள், “விஜய்!” என அவள் அழைத்தது அவளுக்கே கேட்காதபோது, பத்தடி தொலைவிற்குச் சென்றுவிட்டவனுக்கா கேட்கப் போகிறது!

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளது பார்வை, சிறிது சிறிதாக மங்கி அவனது உருவம் மறைய, மளுக்கென கண்ணீர் அணையுடைத்துக் கொண்டு வழிந்தது. வேகமாக கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவள் பார்த்தபோது, அவன் போர்ட்டிக்கோவை நெருங்கியிருந்தான்.

“விஜய்!” என்று சப்தமாக அழைத்தபடி, அவனை நோக்கி ஓடினாள்.

அவளது அழைப்பு காதில் விழுந்ததும் சட்டென நின்றவன், இரண்டொரு நொடிகள் அப்படியே நின்றுவிட்டுத் திரும்ப, அவனது நெஞ்சில் வேகமாக வந்து மோதினாள் அவனது மித்ரா.

அவளது முகம் நெஞ்சில் புதைந்திருக்க, கரங்கள் அவனது முதுகில் பின்னிப் பிணைந்தன. அவளது கண்ணீரின் வெப்பம், அவனது இதயத்தைச் சுட்டது. அதன்பின் அவன் யோசிக்கவேயில்லை. அவளை ஆரத்தழுவிக் கொண்டான்.

“ஐ லவ் யூ விஜய்!” என்றவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவளது தலையில் கன்னத்தைப் பதித்துக்கொண்டவன், “இவ்வளவு காதலையும் மறைச்சிக்கிட்டு, ஏன்டி என்னை விட்டுப் போறதிலேயே குறியாயிருந்த?” எனக் கேட்டான்.

“நீங்க மட்டும் என்னவாம்? இனி, என் வாழ்க்கைலயே வரமாட்டேன்னு சொன்னீங்க இல்ல. நீங்க மட்டும் அப்படிப் பேசலாமா? என்னைப் பத்தி நினைச்சிப் பார்த்தீங்களா?” தழுதழுத்தபடி அவனது நெஞ்சில் முகம் புதைத்தபடியே சொல்லி முடித்தாள்.

“தேவைதான் எனக்கு. உன்னைப் போர்ஸ் பண்ணக்கூடாதுன்னு நினைச்சா, எனக்கு ஏமாத்துக்காரன் பட்டத்தைக் கொடுத்திடுவ போலிருக்கே” என்றான்.

சட்டென அவனது வாயைப் பொத்தியவள், “என்னோட விஜய்யை நான் கனவுலகூட அப்படி நினைக்கமாட்டேன்” என்றாள்.

“அப்படியா?”

“அப்படித்தான்” எனத் தலையை ஆட்டினாள்.

“பார்ப்போம். இந்தப் புதுவருஷம் உனக்கு நிறைய சர்ப்ரைஸ் வச்சிருக்கு. ஒவ்வொன்னா வரும்போது தெரியும்” என்றான் சிரிப்புடன்.

“மொத்தமா வந்தாலும், தனித்தனியா வந்தாலும்... நான் சொன்னதை வாபஸ் வாங்கவேண்டிய தேவை எனக்கு இல்லப்பா!” என்றாள் இயல்பாக.

அவளது நெற்றியில் புரண்ட கேசத்தை ஒதுக்கிவிட்டவன், “என்மேல அவ்வளவு நம்பிக்கையா!” எனக் கேட்டான்.

அவனது கண்களை உற்று நோக்கியவள், “ரொ..ம்..ப…” என்றாள்.

முறுவலித்தவன், “சப்போஸ், கிஷோர் உன்னைக் கண்டுபிடிச்சி வந்தா!” என அவன் கேட்டதும் சற்றும் யோசிக்காமல், “அவனை நேராக நான் பேஸ் பண்ணுவேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன பயம்?” எனச் சொல்லிவிட்டுச் சிரித்தவளை, இறுக அணைத்துக்கொண்டான்.

“தேங்க்யூ மித்ரா! நம்பிக்கைதான் வாழ்க்கையோட அஸ்திவாரம். நாம அந்த அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்கா போட்டாச்சு. நம்முடைய எதிர்காலத்தை சந்தோஷத்தோட வரவேற்போம்” என்றான்.

“நிச்சயமா” என்றவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

“சரி மணியாகுது. நீ கேட்ட வீட்டுச் சாப்பாடு உனக்காக ரெடியாகிட்டிருக்கும். நீ பத்து மணிக்கு அங்கே இருந்தா போதுமில்ல” என்றான்.

“ம்ம்…” என நாணத்துடன் தலையசைத்தாள்.

அவர்களது ஸ்வீட் நத்திங்ஸுடன் அறுசுவை உணவையும் உண்டனர்.

சுமித்ராவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு பிரியா விடைபெற்று வீட்டிற்கு வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த தம்பியைப் பார்த்து வியந்து போனான்.

“என்ன இந்தர் மூணு நாள் கழிச்சி வரேன்னு சொன்ன இன்னைக்கே வந்துட்ட!” என ஆச்சரியத்துடன் கேட்டான்.

“முக்கியமான விஷயம் பேசணும்ண்ணா!” என்றவன் தம்பியின் குழப்பமான முகத்தைப் பார்த்தான்.

அவனது முகபாவத்திலிருந்தே விஷயம் பெரிதென புரிய, “சொல்லு” என்றபடி அவனருகில் அமர்ந்தான்.

கைகளைக் கோர்த்துப் பிரித்தவன் தயக்கத்துடன் எழுந்து இங்கும் அங்குமாக உலவினான். அவனது குழப்பத்தைப் புரிந்துகொண்டவனாக, அமைதியாக அமர்ந்திருந்தான் மித்ரன்.

“எனக்குப் பயமா இருக்குண்ணா! உங்ககிட்ட சொல்லலாமா வேணாமான்னு ரொம்ப யோசிச்சேன். சொல்லிடுறது தான் பெட்டர்னு தோணுச்சி” என்றபடி மீண்டும் அண்ணனின் அருகில் அமர்ந்தான்.

“ரிலாக்ஸ்டா! விஷயத்தைச் சொல்லு…” என்றான்.

ஆழமூச்செடுத்தவன், “இன்னைக்குக் காலைல, தாத்தாவோட போன் லாக் ஓபன் ஆகலன்னு என்கிட்ட கொடுத்தாங்க. நானும், எப்படியோ சரிபண்ணிட்டேன். லாக்கை ஓபன் பண்ணா கேலரில ஒரு போட்டோ தெரிஞ்சது…” என்றவன் அண்ணனின் முகத்தைப் பார்த்தான்.

“யாரோட போட்டோ?” என்றான்.

“ஒரு பொண்ணோட போட்டோ…” என்றான்.

“என்ன? பொண்ணா! யாரந்த பொண்ணு?” என விசாரித்தான்.

“இதோ பாருங்க” என்றபடி அவன் தனது போனைக் காட்ட, மித்ரன் சட்டென எழுந்து நின்றான்.
அதில், கையில் பூங்கொத்துடன் சிரித்தபடி நின்றிருந்தாள் சுமித்ரா.
 

Anuya

Well-known member
Apr 30, 2019
283
334
63
அத்தியாயம் - 37

உற்சாகத்துடன் அறைக்கு வந்த சுமித்ரா, பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி கட்டிலில் விழுந்தாள்.
மனம் முழுவதும் சந்தோஷம் ததும்பி வழிந்தது. தனது சந்தோஷத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டுமென மனம் துடித்தது. அதேநேரம் இதை எப்படிச் சொல்வது என்ற நாணமும் தோன்ற மனம் சுணங்கியது.

விஜய்மித்ரனின் வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் அவளுக்கு ஒரு செல்போனை பரிசளித்தான்.

“எதுக்கு விஜய் இதெல்லாம்?” எனக் கேட்டவளுக்கு, “கொடுக்கணும்னு தோணுச்சி…” என்றான்.

“என்கிட்ட இருக்கற போனே நல்லாதானே வேலை செய்யுது. இப்போ இதை யூஸ் பண்ண ஆரம்பிச்சா பழசு வீணாதானே இருக்கும்” என்றாள்.

“அது எனக்குத் தெரியாதா! அது பேசிக் மாடல் போன். இது ஆண்ட்ராய்ட். கொஞ்சம் காலத்துக்கு ஏத்தது மாதிரி மாறிக்கலாமே தப்பில்லையே” என்றான்.

“போன், பேசறதுக்குத் தானே. எந்தப் போன்ல பேசினா என்ன?” என்றவளைச் சிரித்துக்கொண்டே பார்த்தான்.

“ம், உன் போன்ல பேசலாம். இந்தப் போன்ல, இப்படிச் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கலாம்” எனச் சொல்லிக்கொண்டே அவளை நெருங்கி நின்று செல்ஃபி எடுத்தான்.

“இதுக்குத்தான் புதுப் போனா!” எனச் சிணுங்கினாள்.

“நானா ஆரம்பிச்சேன்!” என்றவன் அவளது தோளை வளைக்க, புன்னகையுடன் அவனது நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

வானிலிருந்த மூன்றாம் பிறை, அவர்களைப் பார்த்துச் சிரித்தது.

திடீரென நினைவு வந்தவளாக, “விஜய்! நீங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ செல்ஃபி எடுத்தீங்க இல்ல. அந்த போட்டோ இருந்தா எனக்கு அனுப்புங்களேன். அப்பாவோட லேட்டஸ்ட் போட்டோ என்கிட்ட இல்லவே இல்ல” என்றாள்.

அவன் சங்கடத்துடன், “சாரிடா! எப்படியோ அந்தப் போட்டோ எரேஸ் ஆகிடுச்சி” என்றான்.

“ஓஹ்!” என்றவளது குரலில் இறங்கிப் போனது.

“சாரி மித்ரா!” என்றான் வருத்தத்துடன்.

சற்று ஏமாற்றமாக இருந்தபோதும், “பரவாயில்ல விஜய்!” எனப் புன்னகைத்தாள்.

இப்போது அது நினைவிற்கு வர, செல்போனை எடுத்தவள் தனது பெற்றோரின் புகைப்படத்தின் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டாள்.

“உங்க மாப்பிள்ளை வாங்கிக் கொடுத்த செல்போன்ப்பா!” என்று பெற்றோரின் புகைப்படத்தினருகில் போனை வைத்தவள், “விஜய் உங்க மாப்பிள்ளையா வரப்போறாருன்னு தெரிஞ்சிருந்தா, நீங்க ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பீங்க இல்லப்பா!” என்றவளுக்கு நா தழுதழுத்தது.

சட்டென தன்னை மீட்டுக்கொண்டவள், தான் எடுத்த போட்டோவை விஜய்மித்ரனுக்கு அனுப்பினாள்.

************

நெற்றியைத் தடவியபடி மொபைலிலிருந்த சுமித்ராவின் போடோவையே பார்த்துகொண்டிருந்தான் விஜய்மித்ரன்.

தம்பியின் பக்கமாகத் திரும்பியவன், “ம்ம், போட்டோஸ்லாம் காப்பி பண்ணி வச்சிருந்த இல்ல. அதை எடுத்துட்டு என் ரூமுக்கு வா!” எனப் பணித்தான்.

“போட்டோஸ் எதுக்குண்ணா!” புரியாமல் கேட்டான் இந்தர்.

தாடையைத் தடவிக்கொண்டே, “எனக்கு ஒரு டௌட் இருக்கு. இதை நான் எப்பவோ செய்திருக்கணும். என் நினைவுக்கு வராமலேயே போய்டுச்சி. இன்னைக்கு அதைக் கிளியர் பண்ணியே ஆகணும். சீக்கிரம் வா” எனச் சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
மூன்று நிமிடங்களில் போட்டோக்கள் இருந்த ஹார்ட் ட்ரைவுடன், மித்ரனின் அறைக்கு வந்தான் இந்தர்.

ஒவ்வொரு போட்டோக்களாக பார்த்துக்கொண்டே வந்தவன், தனது அத்தையின் புகைப்படங்கள் வந்ததும் பெரிதாக்கினான். மித்ராவின் புகைப்படத்தை லேப்டாப்பிற்கு மாற்றி இரண்டு போட்டோக்களையும் அருகருகே வைத்தான்.

திகைப்பில் இமைகள் விரிய, “ப்ரோ! என்ன இது?” என்றவன் இரு புகைப்படங்களையும் உற்று நோக்கினான். “அண்ணா! ரெண்டு போட்டோவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கலாம் போல…” என்றான் வழக்கமான குறும்புத்தனத்துடன்.

பதில் சொல்லாமல் நின்றிருந்த தமையனை, நிமிர்ந்து பார்த்தான் இந்தர்.

புகைப்படங்களை ஆழ்ந்து நோக்கியவனது முகத்திலிருந்து, இளையவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“என்னண்ணா! ரொம்ப யோசிக்கிறீங்க? ஏதாவது பிராப்ளமா?”

“ம்ம், தாத்தா ஏன் நம்மகிட்ட இதை மறைக்கணும்? சின்ன வயசுல நான் அத்தையைப் பத்திக் கேட்டப்போலாம் அவங்க இறந்துட்டாங்கன்னு தான் சொல்வார். ஆனா…” என்றவன் சலிப்புடன் தலையைக் கோதிக்கொண்டான்.

“இப்போ என்னண்ணா செய்யப்போறீங்க? அம்மாகிட்ட பேசப்போறீங்களா? இல்ல நேரடியா தாத்தாகிட்ட பேசப்போறீங்களா?” எனக் கேட்டான்.

இல்லை என்பதைப் போலத் தலையை அசைத்த விஜய்மித்ரன், “முதல்ல மித்ராகிட்டதான் பேசணும். விஷயம் கன்ஃபார்ம் ஆகட்டும். அப்புறம், என்ன செய்யலாம்னு யோசிப்போம்” என்றான்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு? தாத்தாகிட்ட சுமித்ராவோட போட்டோவைக் காட்டி உங்க ப்ரொஃபசரோட பொண்ணுன்னே சொல்லுவோமே. அப்பவாவது தாத்தா மனசுல இருக்கறதை நம்மகிட்ட சொல்ல சான்ஸ் இருக்கு இல்லயா” என்றான்.

“தாத்தாவோட மனசுல இருக்கறதைத் தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, மித்ராவோட மனசுல இருக்கறதை தெரிஞ்சிக்கணும். இந்த விஷயங்கள் அவளுக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு நமக்குத் தெரியணும். அப்படித் தெரிஞ்சிருந்தா, அவள் தாத்தாவைத் தேடி வந்திருக்கணும். இல்ல, அவளுக்குத் தெரிஞ்சி கோபத்தில் ஒதுங்கி இருக்காளான்னும் தெரியணும். அவள் அத்தனைச் சீக்கிரம் மனசை விட்டுப் பேசறவ இல்ல” என்றான்.

தீவிர பாவனையுடன் கேட்டுக்கொண்ட இந்தர், “ப்ரோ நான் வேணா அவங்ககிட்ட பேசிப்பார்க்கட்டுமா?” எனக் கேட்டான்.

அவனை உறுத்துவிழித்த மித்ரன், “தயவுசெய்து நடுவுல வந்து குட்டையைக் குழப்பாதே. நானே பார்த்துக்கறேன்” என்றான்.

அண்ணனை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே, “சால்வ் பண்ண வழி கிடைக்காம தடுமாறுறீங்களேன்னு ஒரு சஜஷன் சொன்னேன். அது பிடிக்காதே உங்களுக்கு…” என்றபடி அறையிலிருந்து வெளியேறினான் இளையவன்.

மெல்லப் புன்னகைத்துக்கொண்ட விஜய்மித்ரன், ‘மித்ரா! கடவுளின் விளையாட்டைப் பார்த்தியா! எங்கேயோ இருந்த நம் ரெண்டு பேரையும் சந்திக்க வச்சி, பிரிந்து போன நம்ம குடும்பத்தை இப்போ ஒன்றாகச் சேர்க்கப் போகிறார். இதுல உனக்கும் சந்தோஷம் இருக்கும்னு நம்பறேன். என்னை ஏமாத்திடாதே கண்ணம்மா!’ என அவளது புகைப்படத்திடம் மானசீகமாகப் பேசினான்.

குறுஞ்செய்தி வந்திருப்பதாக அவனது மொபைல் ஒலியெழுப்ப எடுத்தான்.

அவள் அனுப்பியிருந்த படத்தைப் பார்த்ததும், “கடவுளே! உன்னுடைய விளையாட்டிற்கு அளவே இல்லையா!’ என எண்ணிச் சிரித்துக்கொண்டான்.

‘சுமித்ராவிற்கு அழைத்துப் பேசவேண்டும்’ என எண்ணியவன் உடனே, அந்த முடிவை மாற்றிக்கொண்டான்.

இனியும் அவளிடம் எதையும் மறைக்கக்கூடாது என முடிவெடுத்துக்கொண்டான்.

காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பும் நேரத்தில், “இந்தர்! நீ ஆஃபீஸுக்குக் கிளம்பு. நான் மித்ராவைக் கூட்டிட்டு வரேன்” என்றான்.

“முடிவே பண்ணிட்டீங்களா!” என திகைப்புடன் கேட்டான் இந்தர்.

“அதைத் தானேடா சொல்லிட்டிருக்கேன். உனக்கும் டோஸ் விழ நிறைய சான்ஸ் இருக்கு. அதுக்கும் தயாரா இரு…” எனச் சொல்லிவிட்டுச் சிரித்த அண்ணனைப் பரிதாபமாகப் பார்த்தான்.

கடகடவெனச் சிரித்தவன், “எனக்காவது சான்ஸ் இருக்கு. உங்களுக்குச் சாய்சே இல்ல. நீங்க பத்திரமா இருந்துக்கோங்க. ஏற்கெனவே, கிராஸ் க்வெஸ்டியன் குயின் வேற…” என்றான்.

“ஆகமொத்தம் இன்னைக்குப் பொழுது, நமக்கு ரொம்பவே எண்டர்டெயினிங்கா இருக்கும்” என்றான் மித்ரன்.

“இடுக்கன் வருங்கால் நகுக’ -க்கு உண்மையான அர்த்தத்தை நேர்லயே பார்க்கறேன். உங்களை என் அண்ணன்னு சொல்லிக்கிறதுல, ரொம்பப் பெருமைப்படுறேன்” என்றான் போலியான நெகிழ்ச்சியோடு.

தம்பியைக் குறுகுறுவெனப் பார்த்தவன், “உனக்கு ரொம்ப ஏத்தமாகிப் போச்சு. வாவா உனக்கிருக்கு” என்றபடி வாசலை நோக்கி நடந்தான்.

“எதையும் தாங்கும் இதயம் எங்களுக்கு!” என வீராவேசத்துடன் பேசிய சகோதரனைப் பார்த்துச் சிரித்தபடி காரைக் கிளப்பினான் மித்ரன்.

காரை எதிர்சாரியில் நிறுத்திவிட்டுக் காரிலேயே காத்திருந்தான் அவன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் நிதானமான நடையுடன், ஹாஸ்டலிலிருந்து வெளியே வந்தாள் அவனது மித்ரா. அவளது உடையைக் கண்டதும், விழிவிரியப் பார்த்தவனது உதடுகள் புன்னகையில் மலர்ந்தன.

கைப்பையை வலது தோளிற்கு மாற்றியபடி விழிகளைச் சுழற்றியவள், காரில் அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் கண்கள் மின்ன, “ஹாய்!” எனக் கையை அசைத்தாள்.

“ஹாய்! குட் மார்னிங்!” என்றபடி கையை உயர்த்தி விரல்களை அசைத்தான் மித்ரன்.

அவன் காரின் கதவைத் திறந்துவிட, “குட்மார்னிங்! என்றபடி அவளும் அமர்ந்தாள்.

“இன்னைக்கு எனக்கு ஆஃபிஸ் இருக்கு” என்றாள் புன்னகையுடன்.

“ம்” எனக் கிண்டலாகச் சொன்னவன், “என்னைப் பார்த்தால் ஊர்சுத்தி மாதிரி தெரியுதா!” எனக் கேட்டான்.

“சாரி சார்! தெரியாம கேட்டுட்டேன். நீங்க ஒரு கம்பெனிக்கு எம்.டி இல்ல… மறந்தே போச்சு” என்றாள் அவளும் கேலியுடன்.

“பரவாயில்லயே… நல்லா கௌண்டர் கொடுக்க கத்துகிட்டயே…” என்றான்.

“இது வஞ்சப் புகழ்ச்சி…” என்றாள் அவள்.

ஆச்சரியத்துடன் அவன் திரும்பிப் பார்க்க, ‘என்ன?’ என்ற கேள்வியுடன் புருவங்களை உயர்த்தினாள்.

சாலையில் பார்வையைப் பதித்தபடி, “கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்னு சொன்ன பொண்ணு, இப்படித் தமிழ் இலக்கணத்துல பின்னி எடுக்கறாங்களேன்னு பார்க்கறேன்” என்றான்.

“தமிழ்ப் பண்டிட் கங்காதரனோட பொண்ணுக்கு இதுகூடத் தெரியலைனா எப்படி?” என்றாள் சிரிப்புடன்.

சிக்னலில் காரை நிறுத்தியவன் தனது செல்போனில் ஏதோ செய்துகொண்டே, “ம்ம், தப்புத்தான்!” எனச் சொல்லிச் சிரித்தவன், “தமிழ்ப் பண்டிட்டோட பொண்ணுக்கு, ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவா!” எனக் கேட்டான்.

மொபைலைப் பார்த்தவள், “பக்கத்துல இருக்கும்போதே மெசேஜா!” எனக் கேட்டுக்கொண்டே குறுஞ்செய்தியைப் பார்த்தவள் சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள்.

வேகமாக அவனைத் திரும்பிப் பார்த்தவள், “இந்த இமேஜ் டெலிட் ஆகிடுச்சின்னு சொன்னீங்களே… எப்படி எடுத்தீங்க!” வியப்பும், சந்தோஷமுமாகக் கேட்டாள்.

“நீ முதன்முதல்ல என்கிட்ட கேட்ட விஷயமாச்சே செய்யாம இருப்பேனா! ரெக்கவரி சாஃப்ட்வேர் யூஸ் பண்ணி எடுத்தேன்” என்றான்.

சிரிப்பும், மகிழ்ச்சியுமாக அவனது கரத்தை இறுகப் பற்றிக்கொண்டவள், “தேங்க்ஸ் விஜய்!” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

அதற்குள் சிக்னல் விழ, “தேங்க்ஸை இப்படித்தான் சொல்லணும்னு இல்ல. வேற மாதிரியும் சொல்லலாம்” எனச் சொல்லிக்கொண்டே காரைக் கிளப்பினான்.

பார்வையை வெளியே வீசியபடி, “நடக்க வேண்டிய நேரத்துல எல்லாம் நடக்கும்” என்றாள் முறுவலுடன்.

“ஹும்! எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்” எனப் போலியாகப் பெருமூச்சுவிட, அவள் உதட்டைக் கடித்துச் சிரிப்பை அடக்கினாள்.
அலுவலக வாசலில் அவன் காரை நிறுத்தியதும், “தேங்க்யூ விஜய்! பை” என்றாள்.

“ம், பை” என்றவன், மனத்திற்குள் சிரித்துக்கொண்டான்.

அலுவலகத்திற்குள்ளே சென்றவள் திரும்பி அவனுக்குக் கையசைத்துவிட்டுச் செல்ல, பெருமூச்சு விட்டபடி காரைக் கிளப்ப முயன்றவனது மொபைல் ஒலித்தது.

போனை எடுத்தவன், “ஹலோ சார்!” எனப் பேச ஆரம்பித்தவன், மறுமுனையில் பேசியதைக் கேட்டுச் சற்று யோசனையுடன், “ஓ..கே வரேன்” என்று போனை வைத்தான்.

“சாரி மித்ரா! உன்கிட்ட பேசணும்னு நினைச்சி வந்தேன். முக்கியமா போகவேண்டிய கட்டாயம்…” என முணுமுணுத்தான்.

ஆனால், அவன் நினைத்தபடி வேலை முடியாமல் போக, அலுவலக தேநீர் இடைவேளையின் போது அவளுக்கு அழைத்தான்.

“இன்னைக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். ஆனா, வேலைல ஹெல்ட் அப் ஆகிட்டேன். முடிஞ்சா, ஈவ்னிங் நேர்ல வரேன்” என்றான்.

“ம், சரி” என்றாள்.

“என்ன இப்படி பட்டுன்னு முடிச்சிட்ட? முக்கியமான விஷயம்னு சொல்றேன்… கொஞ்சமாவது கியூரியாசிட்டியோட என்ன விஷயம்னு கேட்கணுமில்ல…” என்றான்.

“ம்ம், அப்படி என்ன விஷயம்னு மண்டையைக் குடையுதுதான். ஆனா, முக்கியமான விஷயம்னு சொன்னீங்களா… அதைச் சொல்லாம என்னைவிட உங்களுக்குத் தான் பெரிய குடைச்சலா இருக்கும். அதனால, வெயிட் பண்றேன்” என்றாள்.

“தேங்க்ஸ்! இந்தக் கர்ட்டசி நான் சொன்னதைக் கேட்ட பின்னாலயும் இருந்தா சரி…” என்றான் போலியான பரிதாபக் குரலில்.

கிளுக்கென நகைத்தவள், “அப்போ எனக்குக் கோபம் வரக்கூடாதுன்னு வேண்டிகிட்டு வாங்க…” என்றாள் விளையாட்டாக.

“உன் கோபத்தை எப்படிப் போக்கறதுன்னு எனக்குத் தெரியும். அதனால…”

“அதனால…” என்றாள் ஆர்வத்துடன்.

“ம், டைம் ஆச்சு. நான் அப்புறம் பேசறேன்” என போனை அணைத்தான்.

அவளும் சிரித்துக்கொண்டே போனை வைத்தாள்.

புன்சிரிப்புடன் அன்றைய பகல் பொழுது கழிந்தாலும், ‘அப்படியென்ன முக்கியமான விஷயம்!’ என்ற எண்ணமும் வராமல் இல்லை.

விஜய் சொல்லாமலேயே அவளது எண்ணத்திற்கு பதிலளிப்பதைப் போல வந்து சேர்ந்தார், அவனது தந்தை சிவராமன்.

மதியம் மூன்று மணிவாக்கில் வேக நடையுடன் அலுவலகத்திற்குள் வந்தவரைக் கண்டதும் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, எழுந்து அனைவரும் வணக்கம் தெரிவிக்க, சுமித்ராவும் எழுந்தாள்.

தங்களது வணக்கத்தை ஏற்றுக்கொண்டவராக தலையசைத்தபடி சென்றவரைக் கண்டதும், அவளது புருவத்தின் மத்தியில் முடிச்சி விழுந்தன. அவர் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தவளை அழைத்தார் அவளது சீஃப்.

“என்ன ஸ்டன்னாகி நிக்கிற? அவர்தான் நம்ம பெரிய எம்.டி சிவராமன் சார்!” என்றார் அவர்.

ஏதோ புரியாத பாஷையைக் கேட்பதைப் போல அவள் திருதிருவென விழித்தாள்.

“இவர்தான் எம்.டியா?” எனத் திணறலுடன் கேட்டாள்.

புருவங்கள் இடுங்க அவளைப் பார்த்தவர், “ஆமாம்” என்றார்.

முதல்நாள் மாலையில் விஜய், தனது பெற்றோர் என அவர்களது போட்டோவைச் சுட்டிக்காட்டிக் கூறியது அவளது நினைவிலிருந்து சற்றும் மறையாதிருக்க, அவரைத் தங்களது அலுவலகத்திலேயே அதிலும், தனது முதலாளி என்ற நிலையில் அறிந்துகொண்டதில் அவளுக்கு அதிர்ச்சிதான். இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் இருக்க முயன்றவளுக்கு அது முடியாமல் போனது.

“என்ன சுமி?” என அவளது தோளைத் தொட்டார் அவர்.

“ஆஹ்… ஒண்ணுமில்ல” என்றவள் தனது இருக்கையில் அமர்ந்தாள்.

ஆனால், மனம் மட்டும் அதிலேயே உழன்றுகொண்டிருந்தது. குறுகுறுவென்ற மனத்தை அடக்கமுடியாமல், சீஃப் டிசைனரின் அருகில் சென்று அமர்ந்தாள்.

“மேடம்!” என்றவள் தயக்கத்துடன், “இல்ல… பெரிய எம்.டின்னு சொன்னீங்களே… அப்போ இன்னும் எம்.டி இருக்காங்களா?” எனக் கேட்டாள்.

சற்று யோசித்தவர் தீர்க்கமாக அவளைப் பார்த்தார்.

“இப்போ உனக்கு என்ன தெரியணும்?” எனக் கேட்டார்.

அவரது கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அவள் தவிக்க, “கொஞ்சநேரம் வெயிட் பண்ணு உனக்கே தெரியும்” என்றார்.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஆதி சில ஃபைல்களுடன் எம்.டியின் அறைக்குச் சென்றான். அவள் பரபரப்புடன் காத்திருக்க, சற்றுநேரத்தில் எம்.டியின் அறைக்கதவு திறந்தது.
சிவராமனைத் தொடர்ந்து வெளியே வந்தவனையும், ஆதியையும் கண்டதும் அவளது இமைகள் மேலும் விரிந்தன.

‘அப்படியானால் தான் நினைத்தது மிகமிகச் சரி. இவன் விஜய்யின் சகோதரனே தான்’ என தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

சிவராமன் ஏதோ சொல்லியபடி நகர, மற்ற இருவரும் அவரோடு இணைந்து நடந்தனர்.

சற்றுநேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தாள் அவள்.

விஜயேந்திரன், தன்னைப் பார்த்தபடியே அறைக்குள் சென்றதை அவள் கவனிக்கவில்லை.

அவனுக்குப் பின்னாலேயே வந்த ஆதி, “அண்ணி, பார்க்கல இல்லடா!” எனக் கேட்டான் இந்தரிடம்.

“பார்க்கலன்னு சொன்னா, சமாதானம் ஆகிடுவியா?” எனக் கேட்டான்.

ஆதி பரிதாபமாக விழிக்க, “இல்லயில்ல. அடங்கு! பயப்பட வேண்டிய எங்க அண்ணனே, எவ்வளவு கூலா இருக்கார். நீ ஏன் இப்படி நடுங்கற! என்னைக்காவது ஒருநாள் தெரியணும். இன்னைக்குத் தெரிஞ்சிடுச்சி” என்றான் நிதானமாக.

“உங்களுக்கு என்னப்பா! நாளைக்கு எல்லோரும் ஒரே குடும்பமா ஆகிடுவீங்க. நான் அப்படியா!” எனப் பெருமூச்சு விடுத்தான்.

“விடுடா! நம்ம அண்ணிதானே. திட்டினா வாங்கிக்க. அண்ணிலாம் அம்மா மாதிரி” என்றான்.

திகைப்புடன் நண்பனைப் பார்த்தவன், “அவ்வளவு நல்லவனாடா நீ!” எனக் கேட்டான்.

“என்னை ரொம்பப் புகழாத. அது எனக்குப் பிடிக்காது” என்றவன் எழுந்து சென்று சுமித்ராவைப் பார்த்தான்.

“பாவம்டா! செம டென்ஷன்ல இருக்காங்க. அண்ணன் முதல்லயே சொல்லியிருக்கலாம்” என்றான் ஆதி.

“அதையெல்லாம், ஹீரோ பார்த்துக்குவார்!” என்றான் இலகுவாக.

அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பிச் சென்றபின், எழுந்து ஜன்னலருகில் வந்து நின்றான் இந்தர். கீழே மெயின் கேட்டினருகில் நின்றிருந்த சுமித்ராவைக் கண்டதும், யோசனையுடன் வாட்ச்மேனை போனில் அழைத்து விசாரித்தான்.

“நானும் கேட்டேன் சாப்! ஃப்ரெண்டுக்காக வெயிட் பண்றேன்னு சொன்னாங்க சாப்!” என்றான் வாட்ச்மேன்.

ஒற்றை விரலால் நெற்றியைத் தடவிக்கொண்டே, “சரி” என்றபடி போனை வைத்தான்.

அவளைப் பார்த்துக்கொண்டே தமையனுக்கு அழைத்தவன், “அண்ணா! வேலை முடிஞ்சதா?” எனக் கேட்டான்.

“பத்து நிமிஷத்துல வந்திடுவேன்” என்றான் மித்ரன்.

“சுமித்ரா செம மூட் அவுட்ல இருக்காங்க போல…” என்றான்.

சற்றுநேரம் மௌனமாக இருந்தவன், “காலைலயே சொல்லவேணாமேன்னு பார்த்தேன்...” என இழுத்தான்.

“சொல்லியிருக்கலாம்… வாட்சையும், ரோட்டையும் மாத்தி மாத்தி பார்த்துட்டிருக்காங்க. சீக்கிரம் வாங்க” என்று போனை வைத்தான்.
சற்று தொலைவில் வந்துகொண்டிருந்த அவனது காரைக் கண்டதும், விறுவிறுவென நடக்கத் துவங்கினாள் சுமித்ரா. வேகமாக அவளைத் தாண்டிச் சென்று காரை நிறுத்தினான் விஜய்மித்ரன்.

எதுவுமே சொல்லாமல் காரில் அமர்ந்தாள்.

“மித்ரா!” என்றவனைத் திரும்பிக்கூட பார்க்காமல், “உங்ககிட்ட நிறைய பேசணும். எந்த டிஸ்டர்பென்ஸும் இல்லாத இடத்துக்குப் போங்க” என்றாள்.

அவளது முகத்திலிருந்து எந்த உணர்வுகளையும், அவனால் கண்டறிய முடியவில்லை.

ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி,“என் முகத்தைப் பார்த்தது போதும் வண்டியை எடுங்க” என்றாள் கடுப்புடன்.

நீண்ட பெருமூச்சுடன் காரைக் கிளப்பினான் அவன். கார் நின்றது முன்தினம் அவன் அழைத்து வந்திருந்த தாத்தாவின் வீடு. தயக்கத்துடன் அவள் வீட்டைப் பார்த்தாள்.

“தாத்தா வீட்டைவிட சேஃபான, டிஸ்டர்பென்ஸ் இல்லாத இடம் இருக்கும்னு எனக்குத் தோணல” என்றான்.

காரிலிருந்து இறங்கியவன் தன்னிடமிருந்த சாவியால் மெயின் கேட்டைத் திறப்பதைப் புருவச் சுழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

“வா!” என்றபடி அவன் முன்னே செல்ல, அவனைப் பின்தொடர்ந்தாள்.

வீட்டிலும் யாரும் இல்லை என்பதை அங்கு நிலவிய நிசப்தமே உறுதிபடுத்தியது. கதவைத் திறந்து உள்ளே சென்றவன் சாவியை டீபாயின் மீது போட்டான்.

இரு கைகளாலும் தலையை அழுந்த கோதிக்கொண்டு, “என்ன திட்டணுமோ திட்டு. என்ன கேட்கணுமோ கேளு. பதில் சொல்லத் தயாரா இருக்கேன்” எனச் சொல்லி இரு கரங்களையும் பக்கவாட்டில் விரித்தான்.

வீட்டினுள்ளே வந்தது முதலே அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், அவன் சொல்லி முடித்ததுமே ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டவள், அவனது கன்னங்களில் தனது முத்திரைகளைப் பதித்தாள்.

அவளிடமிருந்து வரப்போகும் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தவன், இந்த நேசத்தின் வெளிப்பாட்டை எதிர்பார்க்காமல் இன்ப அதிர்ச்சியில் திளைத்தான்.
 
  • Like
Reactions: saru