தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
283
334
63
அத்தியாயம் - 38

இன்ப அதிர்ச்சியிலிருந்து மீண்டவனது கரங்கள், அவளது இடையை வளைத்தன. அவனது தொடுகையில் நிதானத்திற்கு வந்தவள், வெட்கத்துடன் அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.

“பார்பி! இன்ப அதிர்ச்சியில் என்னைத் தள்ளிட்டியே. எனக்கு மயக்கமே வருது” என்றான் குதூகலத்துடன்.

அவனது அணைப்பிலிருந்து விலகாமல், “உங்களுக்கு மட்டும்தான் சர்ப்ரைஸ் கொடுக்கத் தெரியுமா! இந்தச் சர்ப்ரைஸ் எப்படியிருக்கு?” என்றாள் குறும்புடன்.

“அதை என் வாயால சொல்லணுமா?” எனக் கேட்டுச் சிரித்தவனது நெஞ்சில், வலிக்காமல் குத்தினாள்.

அவளது முகத்தைக் கைகளில் ஏந்தியவன், “தேங்க்யூ பார்பி! என்னைப் புரிஞ்சிகிட்டதுக்கு” என்றான் ஆத்மார்த்தமாக.

அவனது தோளில் கைகளை மாலையாக்கியவள், “இன்னும்கூட உங்களைப் புரிஞ்சிக்கலன்னா, என்னை மாதிரி முட்டாள் யாருமே இருக்கமாட்டாங்க விஜய்! யாருமே இல்லன்னு இருந்த சூழல்ல, உனக்கு எல்லாமா நான் இருக்கேன்னு முன்னால வந்து நின்னீங்களே… உங்களைச் சந்தேகப்பட்டா, அந்தக் கடவுளே என்னை மன்னிக்கமாட்டார்” என்று தழுதழுத்தாள்.

“ஷ்! சந்தோஷத்துலகூட உனக்கு அழ ரைட்ஸ் கிடையாது. புரிஞ்சிதா..” என்று அவளது நெற்றியில் முட்டினான்.

“ம்…” எனச் சிரிப்புடன் தலையை அசைத்தாள்.

அவனது காதலில் கரைந்தவளாக, அவனது அணைப்பில் ஒன்றிப் போனாள். அவன் பேசிய மௌன மொழிகளை நாணத்துடன் பெற்றுக்கொண்டவள், அதற்குப் பதிலைச் சொல்லவும் தயங்கவில்லை.

தயக்கம் களைந்த போதும் அவளது நாணத்தையும், நெகிழ்ச்சியையும் உணர்ந்தவனாக தன்னை நிதானித்துக் கொண்டான். அவனது விலகலை உணர்ந்து சுயநினைவிற்கு வந்தவள் தன்னையே கடிந்துகொண்டாள்.

தனது முகம் பார்க்கமுடியாமல் அங்கிருந்து நகர்ந்தவளை, ஆழ்ந்து பார்த்தான். அவளது உணர்வுகளைப் புரிந்துகொண்டவன் மெல்லப் புன்னகைத்துக்கொண்டான்.

அவளைச் சகஜமாக்கும் பொருட்டு, “மித்ரா! சூடா டீ சாப்பிடுவோமா” எனக் கேட்டான்.

மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ம்” என்றாள்.

அதற்குமேல அவளது விழிகள், அவனது முகம் பார்க்கத் தயங்கின.

சிலநொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், சமையலறையை நோக்கி நடந்தான்.

பாத்திரங்களை உருட்டும் சப்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தவள், அங்கே அவன் இல்லாததைக் கண்டதும் சமையலறைக்குச் சென்றாள்.

கொதிக்க ஆரம்பித்த நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டவன், டீ தூளைப் போட்டான்.

“விஜய்! நகருங்க நான் போடறேன்” என்றாள் சுமித்ரா.

“காலம்பூரா உன் கையால தான் சாப்பிடப் போறேன். இன்னைக்கு நான் டீ போட்டுக் கொடுக்கறேன். குடிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லு” என்றான்.

ஃப்ரிட்ஜிலிருந்த இரசமலாயை எடுத்து அவளுக்குக் கொடுத்தான்.

“இதை சாப்டுட்டே இரு. டீயோட வரேன்” என அவளை ஹாலுக்கு அனுப்பி வைத்தான்.

மணக்க மணக்க டீயும், மூங்க்தால் ஃப்ரையுமாக வந்தான்.

“என்ன ஸ்வீட்டைச் சாப்பிடாம உட்கார்ந்திருக்க” என்றான்.
“உங்களுக்காக்த்தான்” என்றாள்.

“நல்லா ஆச்சு போ. சீக்கிரம் சாப்பிடு. இல்லனா டீ ஆறிடும்” என்றவன், அவள் ஸ்வீட்டைச் சாப்பிட்டு முடித்ததும், காரத்தை எடுத்துக் கொடுத்தான்.

“தேங்க்ஸ்!” என்று வாங்கிக் கொண்டு புன்னகைத்தாள்.

அவன் ஒரு ஸ்பூன் மூங்க்தாலை வாயில் போட்டுக்கொண்டதும், அவனது மொபைல் ஒலித்தது.

“அம்மா…!” என அவளிடம் மென்குரலில் சொன்னவன், போனைக் காதுக்குக் கொடுத்தான்.
“சொல்லுங்கம்மா!” என்றான்.

“டின்னருக்கு வருவியா. இல்ல வெளியிலேயான்னு கேட்கத்தான் போன் செய்தேன்” என்றார் வித்யாவதி.

“இன்னும் டிசைட் பண்ணலம்மா!” என்று சுமித்ராவைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“ஈவ்னிங் போன் செய்தப்போ, வீட்டுக்கு வரேன்னு சொன்னியே…” என்றார்.

“அப்போ நிலைமை வேற. இப்போ இருக்கற நிலைமை வேற” என்றான் குறும்புடன்.

“ரொம்ப அழுத்தக்காரனாகிட்ட நீ. என் மருமக எங்கேடா?” என்றார் நேரடியாக.

சுமித்ரா கொண்டுவந்து கொடுத்த டீயை வாங்கியபடி, “இதோ, இங்கே தான் இருக்கா” என்றான்.

“போனை அவகிட்ட கொடு” என்றார் அவர்.

“நான் கொடுக்கறேன். அவ பேசுவாளான்னு தெரியல. ட்ரை பண்ணுங்க” என்றவன், பேசு எனச் செய்கையில் சொன்னான். மாட்டேன் என்பதைப் போல செய்கை செய்தவளிடம், ‘தைரியமா பேசு’ எனப் போனைக் கொடுத்தான்.

படபடத்த இதயத்துடன், “ஹ..லோ!” என்றவளுக்குத் தொண்டைக் கமறியது.

“நல்லாயிருக்கியா மித்ரா!” எனக் கேட்டார் வித்யா.

அவரது அன்பு நிறைந்த குரலைக் கேட்டதும் உடலில் ஏதோ ஒரு உணர்வு பரவ, “நல்லாயிருக்கேம்மா!” என்றாள்.

“அத்தைன்னு சொல்லு…” என்று திருத்தினார் அவர்.

அவளும் தலையசைப்புடன், “சரிங்கத்தை!” என்றாள்.

அதன்பிறகு அவர் கேட்டதற்கெல்லாம் பதிலளித்தவள், “விஜய்கிட்டக் கொடும்மா!” என்றார்.

சிரிப்புடன் அவளிடமிருந்து போனை வாங்கியவன், “பேசியாச்சா மருமககிட்ட” எனச் சொல்லிக்கொண்டே தன்னருகில் நின்றிருந்தவளது தோளை வளைத்துக்கொண்டான்.

“ஏன்டா! அவளை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல” எனக் கேட்டார்.

“கண்டிப்பா ஒரு நாள் கூட்டிட்டு வரேம்மா! நீங்க இன்னைக்குத் தானே வீட்டுக்கு வந்திருக்கீங்க” என்றான்.

“சரி, அவளை டின்னருக்குக் கூட்டிட்டுப் போ” என்றார்.

“அப்போ, நான் வீட்டுக்கு வந்து சாப்பிடவேணாமா!” எனக் குறும்புடன் கேட்டான்.

“ம், இந்தக் கிண்டல்ல ஒண்ணும் குறைச்சல் இல்ல. வீட்டுக்கு வா. உனக்கு இருக்கு” என்றார் அவரும் போலியாக மிரட்டினார்.

“சரிம்மா! நான் பதினோரு மணிக்குள்ள வந்திடுவேன். நீங்க தூங்குங்க” என்றவன் போனை வைக்கும் முன் அவசரமாக, “அம்மா! ஒரு நிமிஷம்” என்றான்.

“இன்னும் என்னடா?” என்றார் சலிப்புடன்.

“அன்னைக்கு உங்க மருமக பேரு என்னன்னு கேட்டதும், மித்ரான்னு சொன்னேன்ல…”

“ஆமாம்.”

“அவளோட முழுபேர் சுமித்ரா. சுமித்ரா கங்காதரன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

வேகமாக, “இப்போ ரொம்ப முக்கியம்…” என்றவர், “என்னது!” என்றார் திகைப்புடன்.

அவர் மறுவார்த்தைப் பேசும்முன், போனை ஏரோப்ளேன் மோடில் போட்டான்.

‘அம்மா! இன்னைக்கு நான் வர்ற வரைக்கும் நீங்க தூங்கப் போறதில்ல’ என்றவன், மித்ராவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“விஜய்! உங்க அம்மாவுக்கு…” என்றவளது உதட்டில் ஒற்றை விரலை வைத்து அவளை மௌனமாக்கினான்.

“உன் அத்தைக்கு… மட்டும் தெரியும்” என்றான்.

திகைப்புடன், “சொன்னது போலவே எனக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ்” என்றாள்.

“இதுக்கே இப்படித் திகைச்சா எப்படி பார்பி! இன்னும் இருக்கே…” என்றான் சிரிப்புடன்.

“என்னைப் பத்தின எல்லா விஷயத்தையும் சொல்லிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் சொல்லிட்டேன்…” என்றான்.

“அவங்க மறுத்து சொல்லவேயில்லையா…” நம்பமுடியாமல் கேட்டாள்.

அவளைக் கனிவுடன் பார்த்தவன், “இப்படி வந்து உட்காரு” என அவளது கரத்தைப் பற்றி அழைத்துவந்து ஜன்னலருகிலிருந்த மேடை மீது அமரவைத்தான்.

“நீ என்னை நம்பறதானே…” என்றதும், “என்ன விஜய்?” எனக் கவலையுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“அப்போ, இந்தச் சந்தேகமெல்லாம் உனக்குத் தேவையில்லாதது. அம்மாவை நேர்ல பார்த்துப் பேசினா உனக்கே புரியும்” என்றான் ஆறுதலாக.

அவள், அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.

“நீ தேவையில்லாம குழம்பிக்கிற” என்றான்.

“ஆமாம். முதல்ல கிஷோரைக் கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிட்டு, இது சரியான்னு குழம்பினேன். அடுத்து, அப்பாகிட்டச் சொல்லி எப்படி நிறுத்தறதுன்னு குழம்பினேன். கடைசில உங்க மேல வந்திருக்கறது உண்மையான காதலான்னு புரியாம குழம்பினேன். எனக்கு என்ன வேணும்னு, தெளிவா யோசிக்கத் தெரியாம இருக்கேன் விஜய்!” என்றாள்.

அவளைப் பரிதாபமாகப் பார்த்தாலும், “இப்போ, என்னைக் காதலிக்கிறேன்னு புரிஞ்சி கிளியராகிட்டியா?” எனக் கேட்டான்.
விழிகளை மட்டும் உயர்த்தி அவனது முகத்தைப் பார்த்தவள், “இது தேவையில்லாத கேள்வி” என்றாள் ஊடலுடன்.

“ம், அதையேதான் நானும் சொல்றேன். இருக்குற கொஞ்சோண்டு மூளையை யோசிச்சி யோசிச்சி கரைச்சிடாதே…” என அவளது தலையைப் பிடித்து ஆட்டியவன், “நீ போட்டுட்டிருக்கற டிரெஸ்ஸை பார்த்தும் அந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது…” என அவன் இழுக்க, “விஜய்!” என்றபடி அவனது தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

சிரிப்புடன் அவளை அணைத்துக்கொண்டவன், “எங்க வீட்ல முதல் லவ் மேரேஜ் நம்மளோடது தான். உங்க வீட்ல ரெண்டாவது லவ் மேரேஜ் இல்ல… முதல்ல உன்னோட அப்பா, அம்மா. இப்போ நாம” என்றான்.

அவனது அன்பிலும், அணைப்பிலும் கட்டுண்டு இருந்தவள், மெல்ல நிமிர்ந்து அமர்ந்தாள். அதுவரை இருந்த சிரிப்பை அவளது முகம் முற்றிலுமாகத் தொலைத்திருந்தது.

“என்னாச்சு?” என மிருதுவாகக் கேட்டான்.

அழுந்தக் கண்களை மூடித்திறந்தவள், “அப்பாவோட நினைவு வந்துடுச்சி” என்றாள்.

“ம்ம், இன்னைக்கு ஓவர் செண்டிமென்டாகற. சரி, இங்கேயே இருக்க வேணாம் வா வெளியே போவோம். டின்னரை முடிச்சிகிட்டு உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டுக் கிளம்பறேன்” என்று நகர முயன்றவனது கரத்தைப் பிடித்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே, இப்படியே இருக்கணும்” எனச் சொல்லிக்கொண்டே அவனது நெஞ்சில் சாய்ந்தவள், கைகளை அவனது முதுகில் பிணைத்துக்கொண்டாள்.

அவளது மனநிலையை உணர்ந்துகொண்டவனாக, மென்மையாக அணைத்துக்கொண்டான்.

சற்றுநேரம் அமைதியாக இருந்தவன், “பார்பி! நீ இப்படியே இருந்தா, பின்விளைவுகள் கொஞ்சம் அதிகமா இருக்கும் பரவாயில்லையா…” என்றான் அவளைச் சீண்டும் குரலில்.

அவனது சட்டையிலிருந்த பொத்தானை நிமிண்டியபடி, “ஐ நோ யூ மிஸ்டர்.விஜய்! கூடவே உங்களுக்கு என் மேல இருக்கும், ரெஸ்பான்ஸிபிலிட்டியும் தெரியும். அதனால, அந்தப் பின்விளைவுகளைப் பத்தி நான் கவலைப்பட வேண்டியதில்லை” என்றாள் சிரிப்புடன்.

“அவ்ளோ நம்பிக்கையா உனக்கு! அப்போ டெஸ்ட் பண்ணிடவேண்டியது தான்” என்றவன் அவளது முகம் நோக்கிக் குனிந்தான்.

“விஜய்! வேணாம்…” என்றபடி விலக முயன்றவளை இறுக்கமாக அணைக்க, அவனது பிடியில் வசமாகச் சிக்கிக் கொண்டாள்.

கண்களை இறுக மூடிக்கொண்டு, “ப்ளீஸ்! ப்ளீஸ்! வேணாம்… இதெல்லாம் டூ மச்” எனப் புலம்பியவளைப் பார்த்து குறும்புடன் சிரித்தான் அவன்.

அவளது கண்களில் ஊதியவன், “ஓய்! என்ன?” என்றான் சிரிப்புடன்.

பட்டெனக் கண்களைத் திறந்தவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்ட, நாணத்துடன் அவனிடமிருந்து வேகமாக விலகினாள். அவள் விலகும் வரை காத்திருந்தவன் தனது வலதுகைச் சுண்டுவிரலால், அவளுடைய சுண்டுவிரலை கோர்த்துப் பிடித்தான்.

“தும் பாஸு ஆயே, யூஹ் முஸ்குராயே; தும்ந்னே நா ஜானே க்யா சப்புனே திக்காயே…” என மெல்லியக் குரலில் அவன் பாட, விழிகளில் நேசம் பொங்க அவனைப் பார்த்தாள்.

அவன் கையை இழுக்க, காந்தம் போல அவனை நெருங்கி வந்தாள்.

“ஹேய்! பயந்துட்டியா?” எனக் கேட்டதும், இல்லையென்பதைப் போலத் தலையை அசைத்தாள்.

“இப்போ நார்மல் ஆயாச்சா. கிளம்பலாமா?” எனக் கேட்டான்.

“ம்” எனத் தலையை அசைத்தாள்.

“சரியான தலையாட்டி பொம்மை” என்றபடி அவளது நெற்றியில் முத்தவிட்டவன், அவளது கரத்தைவிடாமல் அழைத்துச் சென்றான்.

இரவு உணவை முடித்துக்கொண்டு அவளை ஹாஸ்டலில் இறக்கிவிட்டவன், வீட்டிற்கு வந்து சேரும் போது மணி பதினொன்றைக் கடந்திருந்தது.

அவன் காரை நிறுத்தியதும், போர்ட்டிக்கோ வராண்டாவில் நடந்துகொண்டிருந்த இந்தர் வேகமாக அவனருகில் வந்தான்.

“ப்ரோ! ஆர் யூ ஓகே!” என்றவனது பார்வை தமையனை ஆராய்ந்தது.
“டேய் கிண்டலா!” என்றபடி வீட்டினுள்ளே நுழைந்தான்.

“வந்துட்டியா மித்ரன்!” என்றபடி மூத்த மகனை நோக்கி வந்தார் வித்யாவதி.

“தூங்காம இந்த நேரத்துக்கு ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டிருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டே ஷுவைக் கழற்றினான்.

“என்ன பண்றோமா? சுமித்ராவைக் கூட்டிட்டுப் போனீங்களே… திரும்ப வரும்போது, நடக்க முடியாம வருவீங்கன்னு எதிர்பார்த்து, வழிமேல் விழி வச்சி காத்திருந்தேன்” என்ற தம்பியை முறைத்தான்.

“ஒரு அக்கறை தான் ப்ரோ!” என்று தோளைக் குலுக்கினான் இந்தர்.

“இவன் ஒருத்தன். கொஞ்சம் சும்மா இருடா…” என்ற வித்யாவதி மித்ரனின் அருகில் அமர்ந்தார்.

“மித்ரன்! நீ போன்ல சொன்னது உண்மையா?” எனக் கேட்டார்.

இரு கைகளையும் சோஃபாவில் நீட்டிக்கொண்டு கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன், “உண்மையான்னா, எந்த விஷயத்தைப் பத்திக் கேட்கறீங்க?” எனக் கேட்டான்.

“அவளோட பேரு சுமித்ரா கங்காதரன்னு சொன்னியே” என்றார் படபடப்புடன்.

“ஆமாம்” என்றவன் எழுந்து தனது அறையை நோக்கி நடந்தான்.

வேகமாக அவனைத் தொடர்ந்து வந்தவர், “நான் பேசிட்டே இருக்கேன். இப்படி ஓடினா என்ன அர்த்தம்? நில்லு” என்று மகனைப் பிடித்து நிற்க வைத்தார்.

“காலைல பேசிக்கலாமேம்மா! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. இன்னைக்கெல்லாம் ஓடிட்டே இருக்கேன்” என்றான்.

மகனின் நிலைமை புரிந்தாலும், அவருக்கு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் மண்டை வெடித்துவிடும் நிலையில் இருந்தார்.

“டேய்! டேய்! கண்ணா! உன்கிட்டப் பேசியே ஆகவேண்டிய கட்டாயம்” என்றார் கெஞ்சலாக.
அண்ணனும், தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ப்ரோ! பாவம் அம்மா! அவங்களோட சந்தேகத்தைத் தீர்த்து வச்சிடுங்களேன்” என்றான் போலியான பரிதாபத்துடன்.

“ஆமாம்னு சொல்லிட்டேன். திரும்பத் திரும்பக் கேட்டா என்ன சொல்றது?” என்றவன் அறைக்குள் சென்றான்.

“அவளோட போட்டோ காட்டேன்” என்றார்.

“எதுக்கு?” என்றான் பிடிவாதமாக.

“ஒரு விஷயத்தைக் கிளாரிஃபை பண்ணிக்கணும்” என்றார் அவர்.

“கிளாரிஃபை செய்துக்கற அளவுக்கு மித்ராவோட போட்டோவில் என்ன இருக்கு?” எனக் கேட்டான்.

மகனை ஆழ்ந்து பார்த்தவர், “நிறைய இருக்கு. உனக்கு உண்மை தெரியணும். அதானே…” என்று எரிச்சலுடன் கேட்டவரை அமைதியாகப் பார்த்தான்.

“நீ முதல்ல அவளோட போட்டோவைக் காட்டு. சொல்றேன்” என்றார்.

அவனும் எதுவும் சொல்லாமல், அவளது போட்டோவை மொபைலில் காட்டினான்.

‘கடவுளே! எங்கமேல கொஞ்சம் கருணை வை’ என்ற வேண்டுதலுடன் மகனின் மொபைலைப் பார்த்த வித்யாவதி ஆயாசத்துடன் கட்டிலில் அமர்ந்தார்.

காஞ்சனாவின் பிரதிபிம்பமாக இருந்த சுமித்ராவைக் கண்டதும் அவரது இமைகள் நனைந்தன. ‘அண்ணி! அண்ணி! என்று தன்னைச் சுற்றி வந்த அந்தப் பெண்ணின் முகம் இப்போதும் கண் முன்னால் தெரிய தன்னையும் மீறி அழுதார்.

“அம்மா!” என்று மகன்கள் இருவரும் ஆளுக்கொரு புறமாக அமர்ந்து அவரைச் சமாதானப்படுத்தினர்.

கண்களைத் துடைத்துக்கொண்டு தன்னைத் தேற்றிக்கொண்ட வித்யாவதி, “எப்பவோ முடிஞ்சிருக்க வேண்டிய பிரச்சனையை, நாங்களே சிக்கலாக்கிட்டோமே…” என்றார் வருத்தத்துடன்.

“சுமித்ராவைப் பத்தித் தெரிய இப்போதான் நேரம் வந்திருக்குன்னு நினைச்சிக்கோங்க” என்று அவருக்கு ஆறுதல் சொன்னான் இந்தர்.

“கொஞ்சம் முன்னாலேயே தெரிஞ்சிருந்தா, இந்த வீட்டுப் பொண்ணை இப்படிக் கஷ்ட்டப்பட விட்டிருக்க மாட்டோமே. அவளைக் கூட்டிட்டு வந்து, என் மகளா வளர்த்திருப்பேனே இந்தர்! எப்படி வளரவேண்டிய பொண்ணு… ஆயிரம் பேருக்குச் சம்பளம் கொடுக்கவேண்டிய இடத்துல இருக்கவேண்டியவ, இப்படி அடுத்தவங்ககிட்ட மாச சம்பளத்துக்கு வேலை பார்த்துட்டிருக்கணும்னு தலையெழுத்தா என்ன!” என்றவரை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.

“அம்மா! காரியத்தையே கெடுத்தீங்க. நீங்க மகளா வளர்க்கவா அண்ணன் இவ்ளோ முனைப்பா, சுமித்ராவைக் கூட்டிட்டு வந்தாரு…” என்ற தம்பியின் தலையிலேயே செல்லமாகத் தட்டினான் மித்ரன்.

“ஒண்ணுமேயில்லாத ஒரு விஷயத்தை மறைச்சி, இந்த அளவுக்கு கொண்டு வந்துட்டீங்க. இப்பவாவது எங்ககிட்ட சொல்லலாமில்ல…” என்று கேட்டதும், மளமளவென அதுவரை நடந்த அனைத்தையும் மூத்தவனிடம் கொட்டித் தீர்த்தார் வித்யாவதி.

இடையில் தலையிடாமல் முழுதாகக் கேட்டுக்கொண்டனர் இருவரும்.

“அடுத்தது என்ன? தாத்தாகிட்ட பேசிட்டு சுமித்ராவை வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றதுதானே” எனக் கேட்டான் இந்தர்.

வித்யாவும், “அவ்வளவுதான். பாவம் மாமா ரொம்பவே பேத்தியால ஏங்கிப் போயிருக்கார். காலைல எழுந்ததும் முதல் வேலையா அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடணும்” என்றார் சந்தோஷத்துடன்.

“இல்லம்மா! நீங்க முதல்ல மித்ராவைப் பார்த்துப் பேசிட்டா, நல்லதுன்னு நினைக்கிறேன்” என்றான் மித்ரன்.

“ஏன்ப்பா! ஏதாவது பிரச்சனையா?”

“தெரியல. நீங்க அவகிட்ட முதல்ல பேசினீங்கன்னா… அவளுக்கு மொத்தமா அதிர்ச்சி கொடுக்காம இருக்கலாம். எனக்குத் தெரிஞ்சவரைக்கும், மித்ராவுக்கு தன்னோட அம்மாவழி சொந்தத்து மேல அந்த அளவுக்கு ஈடுபாடும், பாசமும் இருப்பது போலத் தெரியல…” என்றான்.

“திடீர்ன்னு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுற!” எனத் திகைப்புடன் கேட்டார்.
“இது என்னோட யூகம் மட்டும்தான். அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஏன்னா, எங்க அப்பா, அம்மாவை ஏத்துக்காதவங்களுக்கு பேத்தி மட்டும் வேணுமான்னு தாத்தாகிட்டயே அவ கேட்டிருக்கா. அதான், நீங்க முதல்ல அவகிட்டப் பேசிப்பாருங்க. உங்களைப் புரிஞ்சிகிட்டா தாத்தாவை ஏத்துக்கறது அவளுக்கு அத்தனைக் கஷ்டமா இருக்காது” என்றான்.

“ம், நிச்சயமா அவளுக்கு மாமா மேல கோபம் இருக்கும். இப்போதைக்கு உங்க அப்பாவுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்றேன். மாமாகிட்ட மெதுவா சொல்லிக்கலாம்” என்றார் முடிவுடன்.

“தேங்க்ஸ்ம்மா! அதுக்குள்ள தாத்தாவைக் கொஞ்சம் தயார் படுத்தி வைக்கிறேன்” என்றான்.

“எல்லாம் நல்லபடியா நடக்கணும்…” என்ற வேண்டுதலுடன் வித்யாவதி அங்கிருந்து செல்ல, இந்தர் அண்ணனிடம் வந்தான்.

“ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டான்.

“அப்படித்தான்னு நினைக்கிறேன். அவள் எந்தநேரத்துல எப்படி நடந்துப்பான்னு, என்னால கெஸ் பண்ண முடியல” என்று பெருமூச்சுவிட்டான்.

“உங்களுக்கேவா…” என்றவன் சிரித்துக்கொண்டே, “நடக்கட்டும் நடக்கட்டும். ஆக மொத்தத்தில், ஏதோ ஒண்ணு நடக்கப் போகுது” என்றபடி இந்தரும் செல்ல, யோசனையுடன் தலையைக் கோதிக்கொண்டான் மித்ரன்.

‘தனது உள்ளுணர்வு பொய்த்துப் போகவேண்டும்’ என்று முதன்முறையாக நினைத்துக்கொண்டான் விஜய்மித்ரன்.
 
  • Like
Reactions: saru