அத்தியாயம் - 39
“அம்மா! ரெடியா? டைம் ஆகுது. நான் ரெண்டு மணிக்கெல்லாம், என் ஆஃபிஸ்ல இருந்தாகணும்” ஷுவை மாட்டிக்கொண்டே பேசினான் மித்ரன்.
“ஹப்பா! ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண மாட்டியா? இந்தக் கத்து கத்தற?” என்றபடி வேகமாக வந்த அன்னையைப் பார்த்ததும் சிறு புன்னகையை வெளியிட்டபடி எழுந்தான்.
ஹாலில் அமர்ந்திருந்த இந்தர் பேப்பரிலிருந்து பார்வையை விலக்காமல், “ஆனாலும், இது கொஞ்சம் அதிகம்தான். கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கலாம்” என்றான்.
விரிந்திருந்த கூந்தலை சற்று ஒதுக்கிவிட்டபடி, “எதைக் கம்மி பண்ணணும்?” எனக் கேட்டார் வித்யா.
“உங்க மேக்கப்பைத் தான். பார்க்கற சுமித்ராவுக்கு நீங்க எங்களுக்கு அம்மாவா, இல்ல அக்காவான்னு சந்தேகம் வராம இருக்குமில்ல” என்றான்.
இளைய மகனை முறைத்தவர், “போட்டேன்னா ஒண்ணு. வரவர வாய் அதிகமா ஆகிடுச்சி உனக்கு” என்றார் எரிச்சலுடன்.
சீஸ் பர்கரை மென்றபடி, “அவன் சொல்றது கரெக்ட்மா! என் ஃப்ரெண்ட்ஸ் அப்படித்தான் கேட்கறாங்க. உங்க அம்மாவைப் பார்த்தா ஃபிஃப்டி த்ரீ இயர்ஸ் என்று சொல்லவே முடியாதுடீன்னு” என்றாள்.
“பின்ன, டின் பீர் மாதிரி இருக்கற நீ அவங்களுக்குத் தங்கச்சி மாதிரிதான் தெரிவ” என்று பவித்ராவின் காலை வாரினான் இந்தர்.
“சரிதான் போடா. நீ ஒண்ணும் என்னைச் சொல்ல வேணாம். நீ ரொம்ப ஒழுங்கோ…” என அவனிடம் மல்லுக்கு நிற்க, செய்வதறியாமல் இருவரையும் பார்த்தார் வித்யாவதி.
“இந்தப் பிரச்சனை இன்னைக்கு ஓயாது… நாம கிளம்பலாமா? இப்போ போனாதான், மித்ராவை ஸ்டேஷன்லயாவது பிடிக்கமுடியும்” என்றான் மித்ரன்.
“ம், கிளம்புவோம். வெளியே போன உங்க தாத்தாவும், அப்பாவும் வர்றதுக்குள்ள நான் வீட்டுக்கு வந்து சேரணும்” என்றபடி காரை நோக்கி நடந்தார்.
“ஏன் மித்ரன் மேக் அப் அதிகமா இருக்கா என்ன?” எனக் கேட்டுக்கொண்டே காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்.
“அதெல்லாம் இல்லம்மா! அவன் உங்களைக் கலாய்க்கறான்” எனச் சிரித்தான் மூத்தவன்.
“அதானே பார்த்தேன்” என்ற வித்யாவதி நிம்மதியடைந்தார்.
“அம்மா! அவசியமா மித்ராவை இப்படி அதிரடியா போய் மீட் பண்ணணுமா? ஆஃபிஸுக்கே போய்டலாமே” என்றான்.
“நோ நோ. என் நாத்தனார் பொண்ணு என்னைக் கண்டுபிடிக்கறாளான்னு பார்க்கணும்” என்றார் ஆசையுடன்.
“அவள், உங்களோட பழைய போட்டோவை மட்டும்தான் பார்த்திருக்கா. இப்போ, உங்களைப் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பா?” எனச் சிரித்தான்.
“கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவா. இந்தர்தான் சொன்னானே… என்னைப் பார்த்தா வயசு தெரியலைன்னு” என்ற அன்னையைத் திகைப்புடன் பார்த்தான்.
“இந்த இடத்துல நான் எது சொன்னாலும், அது தப்பாக போயிடும். அதுக்கு மேல உங்க இஷ்டம்” என்றான்.
கைப்பையுடன் இறங்கிய வித்யா, “கொஞ்சம் நெர்வஸா இருக்கு மித்ரன்” என்றவரைப் ஆதூரத்துடன் பார்த்தான்.
“ட்ரெயினுக்கு இன்னும் டைம் இருக்கும்மா! கொஞ்சம் உட்கார்ந்துட்டுப் போங்க” எனக் கதவைத் திறந்துவிட்டான்.
“எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரெயின்? மித்ரா இப்போதான் கிளம்பியிருப்பா. காரைத் திருப்பட்டுமா? எனக் கேட்டான்.
”இல்ல மித்ரன்! காஞ்சனா என்மேல எவ்வளவு பிரியமா இருப்பா தெரியுமா! அவளோட பொண்ணை முதன்முதல்ல பார்க்கப்போறேன். ஒரு அத்தையா அவளைப் பார்க்கப்போயிருந்தா உரிமையா அவளிடம் பேசமுடிஞ்சிருந்தா நேர்ல போகலாம். இப்போதைக்கு அவளை என்னோட மருமகளா பார்க்கவேண்டிய சூழ்நிலைல இருக்கேனே. என்னோட உணர்ச்சிக் கொந்தளிப்பையெல்லாம் அவகிட்ட வெளிப்படுத்தமுடியாத இக்கட்டுல இருக்கேனே…” எனப் பெருமூச்சுவிட்டார்.
அவன் வாஞ்சையுடன் அன்னையின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆனா, ஒண்ணு மித்ரன்! இருபத்தி ஆறு வருஷத்துக்கு முன்னால நானும், காஞ்சனாவும் பேசிகிட்டது உண்மையாகும்னு நான் கனவுலகூட நினைக்கல” என்று மெல்லப் புன்னகைத்தார்.
வியப்புடன் அன்னையைப் பார்த்தான்.
“நீ எப்பவும் அத்தை, அத்தைன்னு அவகிட்டயே ஒட்டிகிட்டிருப்ப. அவளும் மருமகனேன்னு உன்னைக் கீழே விடாம கொஞ்சிட்டிருப்பா. ஒரு பொண்ணைப் பெத்துக் கொடுத்து, உன் வீட்டோட மருமகனாக்கிக்கன்னு சொல்வேன். அவளும் ஏன் என் மித்ரனுக்காக அதைக்கூடச் செய்யமாட்டேனான்னு சொல்லுவா” குறுஞ்சிரிப்புடன் சொல்லிமுடித்தவர் மகனின் முகத்தைப் பார்த்தார்.
அவனும், “அஸ்திவாரத்தை ரொம்பப் பலமா போட்டிருக்கீங்க போல” எனப் புன்னகைத்தான்.
“உன்னை அவளுக்கு, ரொம்பப் பிடிக்கும் மித்ரன். அதனாலதான் தன்னோட பொண்ணுக்கு மித்ரான்னு பேர் வச்சிருப்பான்னு நினைக்கிறேன்” என்றார்.
“ம், எங்க அம்மா என்னை மித்ரான்னும், அப்பா என்னைச் சுமின்னு கூப்பிடுவாங்கன்னு மித்ரா சொல்லியிருக்கா” என்று அவரது பேச்சை உறுதிப்படுத்தினான்.
“காஞ்சனா இருந்திருந்தா, ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பா” என்ற வித்யாவதியின் விழிகள் கண்ணீரை உகுக்க, ஆறுதலுடன் அவரது தோளை அணைத்து ஆசுவாசப்படுத்தினான்.
“ரிலாக்ஸ்மா! நடந்ததை நினைச்சி வருத்தப்படுவதைவிட, நடக்கப் போறதை நல்லபடியா நடக்கணும்னு நினைக்கலாம்னு சொல்வீங்க இல்ல. இதையும் அப்படியே நினைச்சிக்கோங்க” என்றவன் வாட்சைப் பார்த்துக்கொண்டே, “மித்ரா இந்த நேரத்துக்கு வந்திருக்கணுமே” என்றபடி பார்வையைச் சுழற்றினான்.
காரிலிருந்து இறங்கியவன் அவள் வழக்கமாக வரும் திசையைப் பார்த்துக்கொண்டிருக்க, அவனது முதுகிற்குப் பின்னால் சப்தமில்லாமல் வந்து நின்றாள் சுமித்ரா.
“யாரைத் தேடுறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்ற குரல் கேட்டதும் அவன் திரும்பிப் பார்க்க, “குட்மார்னிங்” என்று அழகாக புன்னகைத்தாள்.
கலங்கிய விழிகளைத் துடைத்துக்கொண்டிருந்த வித்யாவதி அவளது குரலைக் கேட்டதும் ஆவலுடன் அவளைப் பார்க்க முற்பட்டார். ஆனால், அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவளது முகத்தைப் பார்க்கமுடியாமல் இருக்க, கீழே இறங்கினார்.
“ஹாய்! குட்மார்னிங். என்ன இந்தப் பக்கமா வர்ற?” என்றான் சிரிப்புடன்.
“காலைல கிளம்பற அவசரத்துல கால்ல இரும்பு பக்கெட்டைப் போட்டுகிட்டேன். கட்டைவிரல்ல வெட்டிடுச்சி. அதான் ஆட்டோவில் வந்தேன்” என அவள் விளக்கம் கொடுத்தாள்.
“டாக்டர்கிட்ட போனியாம்மா! ஸ்டிச்சஸ் போட்டிருக்கா…” என விசாரித்துக்கொண்டே தன்னருகில் வந்த பெண்மணியைக் கண்டதும், அவள் திகைத்துப் போனாள்.
“அம்மா! உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான்.
“வ..ணக்..கம் அத்..தை!” என்றபடி இருகரங்களையும் கூப்பியவளுக்கு நா குழறியது.
கனிவு பொங்க அவளது கன்னத்தைத் தடவி, “அப்படியே, உன் அம்மா மாதிரியே இருக்க…” என்ற வித்யாவதியின் குரல் தழுதழுத்தது.
சுமித்ரா புரியாமல் விஜய்மித்ரனைப் பார்க்க, “மொபைல்ல இருந்த போட்டோவைக் காட்டினேன்” எனச் சமாளித்தான் அவன்.
‘அதற்கு எதற்கு இவர் இப்படி பூரிக்கவேண்டும்!’ என்ற எண்ணத்துடன் மெலிதாகப் புன்னகைத்தாள்.
“கால் வலியை வச்சிகிட்டு எதுக்கு நிக்கற. வா” என்று அவளை காருக்கு அழைத்தார்.
“இல்ல ஆட்டோல வந்தேன்…” என அவள் இழுக்க, “நீ உட்காரு நான் கட்பண்ணிட்டு வரேன்” என்று ஆட்டோவை நோக்கி நடந்தான் மித்ரன்.
அவள் லேசாக விந்தி விந்தி நடந்துவர, “ரொம்பப் பெயினாயிருந்தா, ரெண்டு நாள் மெடிக்கல் லீவ் எடுத்துக்கறது தானே. இவன் என்ன உன்னைக் கேள்வியா கேட்கப் போறான்?” என்றார்.
திரும்பி வந்தவன், “நீங்களே என்னோட ஸ்டாஃபுக்கு ஐடியா கொடுப்பீங்க போலயிருக்கே” எனச் சொல்லிக்கொண்டே காரைக் கிளப்பினான்.
“உன்னோட ஸ்டாஃபுக்கு யார்டா ஐடியா கொடுத்தது. என்னோட மருமகளுக்குச் சொல்றேன்” என்றார்.
அலுவலகத்திற்குச் செல்லும்வரை அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தார். நீ முதலிலேயே விஜய்யிடம் பேசியிருக்கலாம். இனியும் எந்த விஷயத்திற்கும் தயங்காமல் எங்களிடம் பேசு என வழிமுழுக்க அவர் தான் பேசினார். அவளுக்குத் தலையாட்டும் வேலை மட்டுமே இருந்தது.
அலுவலக கட்டிடத்தின் பின்புறத்தில் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் அவன் காரை நிறுத்தினான்.
“மித்ரன்! நான் முன்னால போறேன். நீ பேசிட்டு வா” எனச் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார்.
அவளருகில் வந்து அமர்ந்தவன், “எங்க அம்மா எப்படி?” எனக் கேட்டான்.
“என்னோட அத்தை!” என்றாள் அவள் பெருமையுடன்.
“உன் அத்தையேதான். யாராவது மறுக்கமுடியுமா!” என்றான் சிரிப்புடன்.
ஆசையுடன் அவனது தோளில் சாய்ந்துகொண்டு, “இவ்ளோ நல்ல அத்தையை எனக்குக் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்!” என்றாள்.
“இன்னும் மாமனார், மச்சினர், நாத்தனார், முக்கியமா தாத்தாவை நீ மீட் பண்ணணும். அப்புறம் சொல்லு, எல்லோரும் எவ்ளோ அருமையான சொந்தங்கள்ன்னு” என்றவனை அமைதியாகப் பார்த்தாள்.
“என்னாச்சு திடீர்னு முகம் சுருங்குது?” எனக் கேட்டான்.
“உங்க வீட்ல இருக்கவங்களைப் பத்திப் பேசும்போது நீங்க எவ்வளவு உற்சாகமா பேசறீங்க. உங்க அப்பா, அம்மா நம்ம காதலை அங்கீகரித்தது போல என் தாத்தாவும், பாட்டியும் எங்க அப்பா அம்மாவோட வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்டிருந்தா… ஒருவேளை எங்க அம்மா, அப்பாவை நான் இழந்திருக்கமாட்டேன்னு தோணுது…” என்றவளுக்கு உதடுகள் நடுங்கின.
கண்களை அழுந்த மூடி கண்ணீருக்கு அணை கட்டினாள்.
“கஷ்டமாதான் இருக்கும். இப்படியெல்லாம் யோசிச்சி உன் மனசைக் குழப்பிக்காதே. தைரியமா இரு. நானும் உன்கிட்ட சொன்னதுதான். உன் தாத்தாவைப் பார்த்துப் பேசுன்னு. நீதான் கேட்கவேமாட்டேன்ற” என்றான்.
“வேணாம் விஜய்!அவரைப் பத்திப் எதுவும் பேசவேணாம். எனக்கு நீங்களும், நம்ம குடும்பமும் மட்டும் போதும். இதுவரைக்கும் என் வாழ்க்கைல இல்லாத தாத்தாங்கற உறவு, இல்லாமலே இருக்கட்டும்” என்று உறுதியானக் குரலில் பேசியவளை ஆயாசத்துடன் பார்த்தான்.
“மித்ரா நான்…”
“ப்ளீஸ் விஜய்! எனக்காக ப்ளீஸ்!” என்றவளிடம் அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.
‘இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்!’ எனப் புரியாமல் குழப்பமாக இருந்தது அவனுக்கு.
“ஓகே டேக் யுவர் டைம். இதைப் பத்தி இன்னொரு நாள் பேசலாம்” என்றவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “அவசியம் இருக்காது விஜய்!” என்றாள் வேகமாக.
“கொஞ்சம் நிதானமா பேசலாமே மித்ரா!” என்றான் நயமாக.
“திரும்பத் திரும்பச் சொல்ல எனக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. ஐயம் சாரி…” என்றதும், சீறலாக மூச்சை வெளியிட்டான்.
இருவரது மனத்திலும், பெரும் சூராவளியே வீசிக்கொண்டிருந்தது. அதன் தாக்கம் எங்கே பேச்சில் வெளிப்பட்டு அடுத்தவரைக் காயப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில், இருவருமே மௌனமாக இருந்தனர்.
ஆழமூச்செடுத்தவன், “ஓகே மித்ரா! நான் இன்னும் டூ ஹவர்ஸ்ல டெல்லிக்குக் கிளம்பிடுவேன். இந்தமுறை நிறைய நாள் இங்கேயே தங்கிட்டதால, போகிக்குத் தான் வருவேன். உன்கிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றான்.
அவனது பிரிவை நினைத்து ஏக்கமாக இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு, “பத்திரமா போய்ட்டு வாங்க. டெய்லி என்னோட மெசேஜ் உங்களுக்கு வரும்” என்றாள்.
“நானும் முடியும்போதெல்லாம் பேசறேன். உனக்கு ஏதாவது வேணும்னா, அம்மாவுக்கோ, இந்தருக்கோ கால் பண்ணு. டேப்லெட்ஸை ரெகுலரா ஃபாலோ பண்ணு” என்றான்.
சரியென எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள்.
“ஓகேடா! நான் மேலே வந்துட்டு, ஒரு அரைமணி நேரத்துல கிளம்பறேன்” என்றவன் அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.
அவனது பிரிவால் விளைந்த கண்ணீருடன், மௌனமாகத் தலையசைத்தாள்.
************
“தாத்தா! அம்மாவும், இந்தர் அண்ணாவும் போகட்டும். நீங்க வாங்க” என்று இராமநாதனின் கரத்தைப் பற்றி இழுத்தாள் பவித்ரா.
“ஏண்டி இப்படி அழிச்சாட்டியம் பண்ற? இருக்கறதெல்லாம் போதாதுன்னு இன்னும் டிரெஸ் வாங்கப் போறாளாம்” தலையிலடித்துக் கொள்ளாத குறையாக சொன்னார் வித்யாவதி.
“தாத்தா தானே வாங்கிக் கொடுக்கிறார் நீங்க சும்மா இருங்களேன்” என்ற பேத்தியைப் பார்த்து முறுவலித்தார் இராமநாதன்.
“சரிடா, நீ போய் பார்த்துட்டே இரு. நான் ஐஞ்சு நிமிஷம் இப்படி உட்கார்ந்துட்டு வரேன்” என்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் அவர்.
“மாமா! ரொம்ப டயர்டா இருக்கா? கொஞ்சம் தண்ணி குடிங்க” என்று பாட்டிலை நீட்டினார்.
வாங்கிக் குடித்தவர், ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்தார்.
“என்ன மாமா உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” அக்கறையுடன் விசாரித்த மருமகளை ஆதூரத்துடன் பார்த்தார்.
“என் பேத்தியோட ஞாபகம்தாம்மா! என் குழந்தை எங்கே போய், எப்படிக் கஷ்டப்படுறாளோ! நான் ஒரு முட்டாள். அவகிட்ட முதல்லயே பேசியிருக்கணும்” எனப் பொருமினார்.
“எல்லாம் சரியாகிடும் மாமா! நீங்க எத்தனையோ பேரை வாழவச்சிருக்கீங்க. அந்த வாழ்த்தெல்லாம் அவளை நல்ல இடத்துலதான் வச்சிருக்கும். கவலைப்படாதீங்க” என மாமனாருக்குச் சமாதானம் சொன்ன வித்யாவதிக்கு மனம் தாளவில்லை.
மித்ரன் ஊருக்குச் செல்லும் முன்பு தன்னிடம் சொன்னதையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டவரால், பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது.
‘எப்படியாவது சுமித்ராவைச் சமாதானப்படுத்திவிட வேண்டுமென்று, மித்ரனும் இரண்டொரு முறை முயன்று என்ன செய்வதெனப் புரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான். மாமாவிடமும் எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லாமல் இருக்கமுடியும்? பொங்கலுக்கு நான்கு நாள்கள் தான் இருக்கிறது. இந்தப் பொங்கலுக்கு சுமித்ராவும் தங்களுடன் இருக்கவேண்டும், என்று தான் நினைத்தது நடக்குமா? கடவுளே! நீதான் வழிகாட்டணும்’ என மனத்திற்குள் வேண்டிக்கொண்டார் வித்யாவதி.
“தாத்தூ! வரீங்களா?” எனச் செல்லமாகச் சிணுங்கிக் கொண்டுவந்த பேத்தியைக் கண்டதும், “வரேன்டா!” என்று சிரித்துக்கொண்டே எழுந்தார் இராமநாதன்.
“பவித்ரா! நேரமாகுது… அந்த டிரெஸ்ஸை இன்னொரு நாளைக்கு வாங்கிக்கலாம். இந்தர் பார்க்கிங்க்ல வெயிட் பண்ணிட்டிருக்கான்” – வித்யாவதி.
“ஒரு பத்தே நிமிஷம்மா! ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சலாக.
“சரிம்மா! நீ போ அவன் கத்தப்போறான். சமாளி, நாங்க வந்திடுறோம்” எனச் சிரிப்புடன் சொல்லிக்கொண்டே பேத்தியுடன் நடந்தார்.
“ஹும்!” என்று தலையை அசைத்தவர் இருக்கையில் வைத்திருந்த பைகளை எடுத்துக்கொண்டு நகர்ந்தார்.
உடைகளை வாங்கிக்கொண்டு சந்தோஷத்துடன், “தேங்க்யூ தாத்தூ! சோ ஸ்வீட் தாத்தூ!” எனக் கொஞ்சிக்கொண்டாள்.
“சந்தோஷமாடா!”
“ரொம்பச் சந்தோஷம் தாத்தா!” என்றாள் துள்ளலுடன்.
“உனக்கு வேணுங்கறது உடனே கிடைச்சிடுதுன்னு, எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாதுடா! போட்டுக்க நல்ல துணிகூட இல்லாம எத்தனைப் பேர் இருக்காங்க தெரியுமா!” என்ற தாத்தாவை முகத்தை அஷ்டக்கோணலாக்கிக் கொண்டு பார்த்தாள்.
“ஹய்யோ! வீட்ல இருக்கற எல்லோருக்குமே இதைத்தான் சொல்வீங்களா? இனி, நான் டிரெஸ்ஸே வாங்கல போதுமா…” என்றவள் எஸ்கலேட்டரின் படியை வேகமாக இறங்கிக் கடந்தாள்.
“அம்மாடி! பவி…” என்று அழைத்தவர் கடைசி படியில் தடுமாற, “ஹரே பாப்ரே…!” என்றபடி அவரைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்தாள் சுமித்ரா.
அவளது குரலில் அருகிலிருந்தவர்கள் திரும்பிப் பார்க்க, பவித்ராவும் கவனித்துவிட்டு அங்கே ஓடிவந்தாள்.
“தியான் ரஹே தாதாஜீ!” என்று அவரது தோளைப் பற்றிக் கூறியவளை நிமிர்ந்து பார்த்த இராமநாதன் திகைத்து நின்றார்.
“ஓ மை காட்…” என்று அலறலுடன் ஓடிவந்த பவித்ரா, “தாத்தூ…” என்றபடி அவரைப் பிடித்துக்கொண்டாள்.
“ப்ளீஸ் டேக் கேர்…” என்றபடி அங்கிருந்து விலகிய சுமித்ராவையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த இராமநாதன் பவித்ராவின் குரலில் இயல்பிற்குத் திரும்பினார்.
“தாத்தா! ஆர் யூ ஓகே…” என்று மீண்டும் அவரை உலுக்கினாள் பவித்ரா.
“பவிம்மா… அவள்… சு..மி.. சுமித்ராவைக் கூப்பிடும்மா…” என்றவர், “அம்மாடி சுமித்ரா…” என்று அழைத்தபடி வேகமாக அவள் சென்ற திசையை நோக்கி நடந்தார்.
“தாத்தா! யாரு சுமித்ரா?” என்றபடி அவரது கரத்தைப் பிடித்து நிறுத்தினாள்.
“பவிம்மா! அவள்தான்டா என் பேத்திடா…” என்றவரை புரியாமல் பார்த்தார்.
இராமநாதன் பரிதவிப்புடன் அந்தப் பிரம்மாண்டமான மாலைச் சுற்றிப் பார்த்தார். அங்கிருந்த ஜனத்திரளில் அவள் சென்ற திசை தெரியாமல் தவிப்புடன் தேடினார்.
“தாத்தா! ப்ளீஸ் வாங்க போகலாம். உங்க பேத்தி நான் இங்கே இருக்கேன்..” என்று அலுப்புடன் அவரைப் பிடித்து இழுத்தாள்.
“சுமி கண்ணா! எங்கேடா போய்ட்ட? இந்தத் தாத்தாவை நீ அடையாளம் தெரிஞ்சிக்கலையா? அம்மாடி… என் இராஜாத்தி…” என்று முனகியபடி சுற்றும் முற்றும் தேடியவரை சற்று எரிச்சலுடன் பார்த்தாள் பவித்ரா.
அவளது மொபைல் ஒலித்ததும் எடுத்தவள், “இந்தர் அண்ணா!” என்றழைத்து நடந்த அத்தனையையும் சொல்லி முடித்தவள், “தாத்தூ இங்கேயிருந்து நகரமாட்டேங்கறார். நீ கொஞ்சம் வா” என்றாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் இந்தரும், வித்யாவதியும் அங்கே ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தனர்.
“மாமா! வாங்க மாமா போகலாம்” என்று தவிப்புடன் அழைத்தார் வித்யா.
“வித்யாம்மா! என் பேத்தியைப் பார்த்தேம்மா! சுமித்ராவைப் பார்த்தேன். இங்கதான் இந்த மால்லதான் இருக்கா… நீ அவளோட போட்டோ பார்த்திருக்க இல்ல. வாம்மா தேடுவோம். அவளை நம்மோட கூட்டிட்டிப் போயிடுவோம்…” எனச் சிறுகுழந்தையைப் போல ஆர்ப்பரிப்பும், தேடலுமாக சுற்றிலும் பார்த்துக்கொண்டே கூறினார்.
“மாமா சுமி இங்கே எப்படி வருவா?” என மாமனாரைச் சமாதானப்படுத்த முயன்றார்.
“நீங்க யாரையோ பார்த்துட்டுப் பேசிட்டிருக்கீங்க தாத்தா… வாங்க. எதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்றான் இந்தர்.
“நீ சும்மா இருடா. அவளை உனக்கு யாருன்னே தெரியாது…” என்றவர் அவனது பிடியிலிருந்து கையை உருவிக்கொண்டு விறுவிறுவென சுமித்ரா சென்ற திசையை நோக்கி நடக்க, இந்தர் செய்வதறியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அவருக்குப் பின்னாலேயே சென்றான்.
“யாரும்மா அந்தச் சுமித்ரா?” என்ற மகளை முறைத்த வித்யா, “வாயை மூடிக்கிட்டு வா. எல்லாம் உன்னாலதான்…” என்றபடி அவளைத் தரதரவென இழுத்துக்கொண்டு அவர்களைத் தொடர்ந்தார்.
“மாம்! ஐயம் நாட் எ கிட்…” என்று அவரது பிடியிலிருந்து கையை உருவிக்கொண்டாள்.
“இந்த வக்கணையெல்லாம் பேசு. வாடின்னா அப்போவே வந்திருந்தா இந்தப் பிரச்சனை வந்திருக்குமா? இப்போ நான் எப்படி சமாளிக்கப் போறேனோ!” எனப் புலம்பியவரை புரியாமல் பார்த்தாள் பவித்ரா.
சுமித்ராவைத் தேடிக்கொண்டே மாலின் பக்கவாட்டிலிருந்த கேஃபடேரியாவிற்கு வந்த இராமநாதன் ஐஸ்கிரீமைச் சுவைத்தபடி தோழியுடன் பேசிக்கொண்டிருந்த தனது பேத்தியைக் கண்டுவிட்டார்.
‘கடவுளே! சுமித்ராவை தாத்தா கண்ணிலே காட்டிவிடாதே’ என வேண்டுதலுடன் அவரைத் தாஜா செய்தபடி வந்துகொண்டிருந்த இந்தரின் பார்வைக்கும் அந்தக் காட்சி தப்பவில்லை.
‘கூண்டோட மாட்டினோம்!’ என எண்ணிக்கொண்டே, “தாத்தா…” என அவரைப் பிடிக்க முயன்றவனுக்கு காற்றுதான் கைக்குக் கிட்டியது.
பேத்தியைக் கண்ட இராமநாதனுக்கு உற்சாகம் ஊற்றெடுக்க, வேகமாக அவளருகில் சென்றார்.
“சுமித்ரா! எப்படிம்மா இருக்க?” என ஹிந்தியில் கேட்டவரைப் புரியாமல் பார்த்தாள்.
மெல்ல எழுந்தவள், “சாரி! நீங்க யாருன்னு…” என இழுத்தாள்.
மனத்திற்குள் எழுந்த வலியுடன் நடுங்கும் கைகளால் அவளது கன்னத்தைப் பற்றியவர், “என்னடா அப்படிப் பார்க்கற? நான்தான்டா உன் தாத்தா!” என்று பாசத்துடன் சொன்னார்.
அவரது கண்கள் பாசத்தையும், கண்ணீரையும் பொழிந்ததென்றால், அவளது விழிகள் அதிர்ச்சியையும், அவருக்குப் பின்னால் வந்து நின்ற இந்தரையும், வித்யாவையும் கண்டதும் திகைப்பிலும் ஆழ்ந்தன.
அவளது மருண்ட விழிகளைக் கண்ட இராமநாதனுக்கு, தவிப்பாக இருந்தது.
சுற்றிலும் இருந்த மக்கள் தங்களையே பார்ப்பதைக் கண்டு சுதாரித்த வித்யாவதி, “மாமா! ப்ளீஸ் வாங்க நான் பேசறேன்” என்று முன்னால் வந்தார்.
“வித்யாம்மா! நான் சொன்னப்போ, சுமித்ராவா இருக்காதுன்னு சொன்னயில்ல. இப்போ பாரு, சுமித்ரா தானே. என் பேத்தி தானே! நீதான், அவளோட போட்டோ பார்த்திருக்கயில்ல…” என வேகமாகச் சொன்னவர், தனது மொபைலிலிருந்த அவளது போட்டோவை எடுத்து அவளிடமே காட்டினார்.
“இங்கே பாருடா… உன்னோட போட்டோவைக்கூடப் பத்திரமா வச்சிருக்கேன்” என்ற மாமனாரை என்ன சொல்வதெனத் தெரியாமல், உள்ளுக்குள் தவித்துக்கொண்டிருந்தார் வித்யா.
அருகிலிருந்த அவளது தோழி, “சுமி! என்னப்பா இதெல்லாம்? இவங்கள்லாம் யாரு?” எனக் கேட்டாள்.
“நான் சொல்றேம்மா…” என்ற வித்யா, “சுமித்ரா! என்னோட வா” என்று அவளது கையைப் பிடித்துக்கூட்டிச் செல்ல, இயந்திரப் பாவையைப் போல அவருக்குப் பின்னால் சென்றாள் அவள்.
“சுமித்ரா! இவர்தான் உன்னோட அம்மாவோட அப்பா! உன் தாத்தா. நான் உன் மாமாவோட மனைவி. உனக்கு அத்தை…” என்றார் மெதுவாக.
அதுவரை மௌனமாக இருந்தவள், “அப்போ, என்னை உங்க எல்லோருக்கும் முன்னாலேயே தெரியுமா?” தவிப்புடன் கேட்டாள்.
“எங்களுக்கெல்லாம் தெரியும்மா! ஆனா…” என்றவரைக் கைநீட்டித் தடுத்தாள்.
“ஏன் அத்தை இத்தனை நாளா இந்த விஷயத்தை மறைச்சீங்க?” என்றவளுக்குக் கோபம்தான் வந்தது.
“சுமி! உன்கிட்ட மறைக்கணும்னு இல்ல. சொல்ல நேரம் வரல…” என்றார் வித்யா.
இருவரும் பேசுவதைப் பார்த்த இராமநாதனுக்குக் குழப்பமாக இருந்தது.
“வித்யா! என்ன நடக்குது இங்கே? சுமித்ரா இங்கேதான் இருக்கான்னு உனக்கு முன்னாலயே தெரியுமா?” என அதிர்ச்சியுடன் கேட்டார்.
“தெரியும் மாமா! அவள் நம்ம கம்பெனில தான் வேலை செய்றா” என்றார் மெதுவாக.
“என்னது?” என்றவருக்கு கோபத்தில் கைமுஷ்டி இறுகியது.
“எல்லாம் தெரிஞ்சும், நீ என்கிட்ட மறைச்சிருக்க. என் பேத்தியை என் கண்ணுலயிருந்து மறைக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்றார் கோபத்துடன்.
“அப்படியில்ல மாமா!” என வித்யா ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, “எக்ஸ்க்யூஸ்மீ! நான் யாருக்கும் பேத்தி இல்ல. தயவுசெய்து எனக்குத் தாத்தான்னு யாரும் உறவு கொண்டாடிட்டு வரவேணாம். மீறி வந்தால்…” என்றவள் எதுவுமே சொல்லாமல் விறுவிறுவென அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
“சுமித்ரா! ப்ளீஸ் கொஞ்சம் நில்லுங்க” என்று அவளுக்குக் குறுக்காகக் கையை நீட்டினான் இந்தர்.
“ஹலோ! என்னை என் வழியில போகவிடுங்க. அதான் உங்களுக்கு மரியாதை…” என்று அவள் கடுகடுக்க, அவன் உதட்டைக் கடித்தபடி வழியை விட்டான்.
“சுமித்ரா!” என்று வித்யாவதி அழைக்க, “விடும்மா! என் பேத்தி இல்ல. அந்த வீராப்பும், கோபமும் எப்படிப் போகும்? நம்மகிட்டதானே இருக்கா… வருவா. என்னைப் புரிஞ்சிக்குவா…” என்று தன்னைத் தேற்றிய மாமனாரைக் கவலையுடன் பார்த்தார் வித்யாவதி.