தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 41

தூக்கத்தில் புரண்டு படுத்த விஜய்மித்ரனின் காதுகளில், எங்கோ ஒலிக்கும் அழைப்பு மணியில் ஓசை மெலிதாகக் கேட்டது. நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஆறாகியிருந்தது.

‘நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டோம்!’ என எண்ணிக்கொண்டே எழுந்தவன் மீண்டும் அழைப்புமணி ஒலிக்கும் சப்தம் கேட்டதும், வேகமாக எழுந்து கதவைத் திறந்தவன் உண்மையிலேயே ஆச்சரியத்தையும், திகைப்பையும் ஒருசேர அடைந்தான்.

தனது முகத்தைப் பார்க்காமல், எங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்த சுமித்ராவைக் கண்டதும், அவனுக்குச் சிரிப்புதான் வந்தது. அதுவரை அவள் மீதிருந்த கோபம் மறைந்து, நேசத்தின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்தது.

கதவைத் திறந்தவன் நகராமல் கையைக் கட்டிக்கொண்டு நிலைப்படியில் சாய்ந்து நின்றவனைக் காண, அவளுக்கு எரிச்சல் உண்டானது.

தாத்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவரைப் பார்த்ததும் அதிர்ச்சி என்றால், விஜய்மித்ரன் தனது தாய்மாமா மகன் என்ற மறைக்கப்பட்ட உண்மை, அவளுக்குப் பேரதிர்ச்சியையும், சந்தோஷத்தைக் கொடுத்தது.

அந்த நிமிடத்தில்கூட தன்னுடைய விஜய்யை அவளால் தவறாக எண்ணமுடியவில்லை. ஆனால், ‘இதைத் தன்னிடமிருந்து மறைத்துவிட்டானே’ என்ற கோபம் மட்டும்தான் எழுந்தது.

கோபத்தில் எதைப் பேசினாலும், அது அர்த்தமற்றது மட்டுமல்லாமல் வார்த்தைகள் கொடுக்கும் வீரியத்தால் நிகழக்கூடிய பின்விளைவுகளை அவள் நன்கு அறிந்திருந்ததால், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

விஜய் தொடர்ந்து தன்னை அழைத்தபோது, அவனது அழைப்பை நிராகரித்து குறுஞ்செய்தி அனுப்பியதற்கான காரணமும் அதுவே. அவனிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தாள். ஆனால், வெகுநேரமாகியும் வராததால் மனம் சோர்ந்து போனது.

‘உங்களுக்கும் என்மேல கோபமா விஜய்! உங்க கோபத்தைக்கூட என்மேல் நீங்கள் காட்டும் அக்கறை என்று நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்’ என தனக்கே சொல்லிக்கொண்டாள்.

ஆனால், அவனது கோபத்தின் அளவு கூடிக்கொண்டே போனதே தவிர, அதற்கு முடிவு மட்டும் வரவில்லை. தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு அவனிடமிருந்து அழைப்போ, குறுஞ்செய்தியோ வரவில்லை என்றதும் மனம் தவித்தது.

திடீரென தோழிகள் தன்னிடம் பேசியதற்கான காரணத்தை ஊகிக்க இயலாத அளவிற்கு அவள் அசடல்லவே. தன்மீது இத்தனை அக்கறைக் காட்டுபவன் இன்னமும், தன்மீது கோபத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு இருப்பதை அவளால் தாள முடியவில்லை.

அதைப் பற்றி நினைத்துக்கொண்டு அவள் பூங்காவில் அமர்ந்திருக்க, தன்னைப் பார்க்க ஆள் வந்திருப்பதாகக் கூறியது, விஜய் தான் தன்னைத் தேடி வந்துவிட்டான் என்ற சந்தோஷத்துடன் ஆவலுடன் ஓடிவந்தாள். ஆனால், அங்கே அமர்ந்திருந்த வித்யாவதியைக் கண்டதும் சிறுஏமாற்றம் நெஞ்சில் பரவியபோதும், அத்தையின் அன்பில் மனம் கனிந்து போனது அவளுக்கு.

அதிலும், அவருடைய எளிமையான பேச்சும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கையும் கண்டு நெகிழ்ந்து போனாள். பெரிதாக எதையும் பேசாதபோதும், தான் சொல்ல வந்த செய்தியை அவர் எத்தனைச் சுலபமாக தெளிவுபடுத்திவிட்டார்’ என்று வியப்புடன் நினைத்துக்கொண்டாள்.

ஆயினும், அவர் சொன்ன செய்தியில் விஜய் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியதை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கு மேலும், முடியாது என்று நினைத்தவள், இரவு இரயிலிலேயே கிளம்பிவிட்டாள்.

‘இதோ, உன்னைத் தேடி வந்துவிட்டேன். இப்போது என்ன செய்வாய்!’ என்று இறுமாப்புடன் அவனைப் பார்த்தாள். ஆனால், தான் வந்திருப்பதைச் சந்தோஷத்துடன் வரவேற்காமல், இப்படி மரத்தோடு மரமாக நின்றிருந்தவன் மீது எரிச்சல் வந்தது.

“உங்களைத் தேடி வந்திருக்கேன். வான்னு கூப்பிடமாட்டீங்களா?” என்றவளை அசராமல் பார்த்தான்.

கடுகடுவென வர, “வழியை விடுங்க” என்று அவனைத் தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

கதவை மூடிவிட்டு உள்ளே வந்தவனிடம், “நான் ஃப்ரெஷ் அப் ஆகணும்” என்றாள்.

அவளுக்கு விருந்தினர் அறையைக் காண்பித்துவிட்டு, முறுவலுடன் சமையலறைக்கு வந்தான்.

இருபது நிமிடங்களில் அவள் குளித்துவிட்டு வருவதற்குள், இருவருக்குமாக காஃபியுடன் காத்திருந்தான்.

வேலைக்காரம்மா சமையலறையில் மும்முரமாக இருக்க, அதைக் கண்ணுற்றபடியே அவனுக்கெதிரில் வந்து அமர்ந்தாள்.

கெட்டிலில் இருந்த காஃபியை கப்பில் ஊற்றி அவளெதிரில் வைத்தான்.

தலையை உயர்த்தியவள் தனது ஈகோவை ஒதுக்கிவைத்துவிட்டு, “ஏன் விஜய் என்னை அவாய்ட் பண்றீங்க?” என மெலிந்த குரலில் கேட்டாள்.

காஃபியை ஒரு மிடறு விழுங்கியவன், “நீ சொன்னதை, செய்திருக்கேன். இதுல தப்பு சொல்ல என்னயிருக்கு?” என்றவன், அவள் ஏதோ சொல்ல வந்ததைக் கைநீட்டித் தடுத்தான்.

“காஃபியைக் குடிச்சி முடி. நாம உள்ளே போய்ப் பேசுவோம்” என்றவன் காஃபி கப்புடன் சமையலறைக்குச் சென்றான்.

வேலைக்காரம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சிலநிமிடங்கள் கழித்து வந்தவன், அவளை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“இப்போ சொல்லு” என்றான்.

“என்னோட சந்தோஷத்தையும், துக்கத்தையும் மனசுவிட்டுப் பகிர்ந்துக்க, நீங்க மட்டும்தான் இருக்கீங்க. அந்த நம்பிக்கையோட, உங்களைத் தேடி வந்திருக்கேன். என்னைப் புரிஞ்சிக்காம ஏன் விலக்கி வச்சிப் பேசறீங்க?” என்றவளுக்கு விழிகள் தளும்பின.

ஆனாலும், முயன்று தன்னை நிதானித்துக்கொண்டாள். துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நீங்களே எல்லாத்தையும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே. அதை நீங்க மறைச்சிட்டீங்க என்ற கோபம் எனக்கு இருந்தது உண்மை. அந்தநேரத்துல நாம் பேசியிருந்தா, என்னையும் மீறி ஏதாவது வார்த்தையை விட்டிருப்பேன். அப்புறம் காலமெல்லாம் மனசுக்குள்ள அந்த வார்த்தை உறுத்திகிட்டேதான் இருக்கும்.

அதனால தான் என்னை நிதானப்படுத்திக்க நேரம் கேட்டேனே தவிர, உங்ககிட்டயிருந்து விலகிப் போக இல்ல. எனக்குக் கனவிலேயும் அந்த நினைப்பு வராது. நான் சொன்னது உங்களைக் காயப்படுத்தியிருந்தா, என்னை மன்னிச்சிடுங்க. நான் வேணும்னே எதையும் செய்யல விஜய்!” என்றவள் தன்னையும் மீறி உடைந்து போனாள்.

கையைக் கட்டிக்கொண்டு அசையாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன், அவளது வார்த்தைகளில் இருந்த உண்மையிலும், கண்ணீரிலும் கரைந்து போனான்.

‘அவளுக்குப் புரியவேண்டும் என நினைத்துச் செய்த செயல், அவளை இந்த அளவிற்குக் காயப்படுத்தும்’ என்று அவன் நினைக்கவே இல்லை.

“மித்ரா! ரியலி சாரி! நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி உனக்குத் தெரியறதுக்கு முதல் நாள்தான் உறுதியா தெரிஞ்சது. ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னால உன்கிட்ட பேசினபோது நீ தாத்தாவோட உறவே வேண்டாம் என்று பேசினதாலதான் நான் மேற்கொண்டு எதையும் சொல்லல. உன்கிட்ட மறைக்கணும்னு நான் நினைச்சதில்ல. கொஞ்ச நாள் ஆகட்டும்னு காத்திருந்தேன். உன்னுடைய உதாசீனம், தாத்தாவை எப்படிக் காயப்படுத்தும்னு உனக்குப் புரியவைக்க நினைச்சேனே தவிர, நான் உன்னைக் காயப்படுத்தணும்னு நினைக்கவே இல்ல” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

சட்டென நிமிர்ந்தவள், “அது தெரியாத குழந்தை இல்ல நான். எனக்கு அப்பா மட்டும்தான்னு நினைச்சிட்டு இருந்தப்ப, அம்மா வழி இரத்த உறவும் எனக்கு இருக்குன்னு தெரிஞ்சதும், துள்ளிக் குதிக்கணும் போலயிருந்தது. என்கிட்ட முதன்முதல்ல தாத்தா பேசும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்ததுன்னு தெரியுமா உங்களுக்கு!

ஆனா, அவர் என்கிட்ட போன்ல பேசும்போது, உன் அப்பா, என் மகளை ஏமாத்தி கல்யாணம் செய்துகிட்டார். இனி, உனக்கு நான் இருக்கேன். என்னோட வந்திடு. என் சொத்தெல்லாம் உனக்குத்தான்னு, ஒரு பிஸினஸ் மேனாதான் அவர் பேசினார். அவர் கொஞ்சமாவது பாசத்தோட பேசியிருந்தா, நானும் அவரை தாத்தான்னு ஏத்துட்டிருப்பேன்.

எங்க அப்பாவைப் பத்தி அவருக்கு என்ன தெரியும்? அம்மா இறந்ததும், அவர் நினைச்சிருந்தா இன்னொரு கல்யாணம் செய்துட்டிருக்கலாம். அவர், எனக்காகவே தன்னோட வாழ்க்கையை வாழ்ந்தார். அப்படிப்பட்டவரை விட்டுட்டு, புதுசா உறவு கொண்டாடிட்டு வர்றவர் கூப்பிட்டதும், நான் எப்படி விஜய் போவேன்?” என்றவளுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

சமாளித்துக்கொண்டு, “இன்னொன்னு தெரியுமா உங்களுக்கு! எங்க அப்பா ஒண்ணும் சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு, எங்க அம்மாவைக் கல்யாணம் செய்துக்கல. அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம நடுத்தெருவில் நிர்கதியா நின்னவங்களுக்குத்தான் வாழ்க்கைக் கொடுத்தார். ஆனா, ஒருநாள்கூட எங்க அப்பா, எங்க அம்மாவை விட்டுக்கொடுத்துப் பேசினதில்ல” என ஆக்ரோஷமாகப் பேசியவளைத் திகைப்புடன் பார்த்தான்.

சுமித்ராவின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘என்ன சொல்கிறாள் இவள்!’ என்றுதான் நினைத்தான். ஆனால், அவளது முகத்தில் தெரிந்த வேதனை அதை உண்மை எனக் காட்டியது. தனது அன்னையின் மூலமாக அவன் அறிந்துகொண்டதும், மித்ரா சொல்வது வேறாக இருக்கும் போலிருக்கிறதே’ எனக் குழம்பினான்.

“மித்ரா! என்ன சொல்ற?” எனக் கேட்டான்.

எழுந்து சென்று சோஃபாவைப் பிடித்தபடி, “நீங்க நினைக்கறது போல, எங்க அப்பா அம்மா காதலிச்சிக் கல்யாணம் செய்துக்கல. சந்தர்ப்பச் சூழ்நிலை அவங்களைச் சேர்த்து வச்சிடுச்சி” என்றவள், சற்று நிதானித்தாள்.

“எங்க அப்பா உதய்பூர்ல கொஞ்சநாள் டீச்சரா வேலை பார்த்திருக்கார். அப்போ ஊர் பெரிய மனிதரான ந.. உங்க தாத்தாவோட குடும்பத்தோட பழக்கம் கிடைச்சிருக்கு. அப்பாவுக்குத் தமிழ் மேல ரொம்பப் பற்று இருந்ததும் அதுக்கு ஒரு காரணம். தாத்தா மிலிட்டரில இருந்ததால பாட்டிக்குத்தான் அப்பாகிட்ட நல்லப் பழக்கம்.

பழகினாலும், அப்பா கொஞ்சம் ஒதுங்கியே தான் இருந்திருக்காங்க. அம்மா அப்போதான் காலேஜ்ல சேர்ந்த புதுசு. அந்த வருஷம் அரையாண்டு எக்ஸாம் முடிஞ்சதும் அப்பா மும்பைலயிருந்த கேஷவ் அங்கிளைப் பார்க்கப் போயிருக்கார். திரும்ப வரும்போது அங்கிளும் அப்பாவோட ஊருக்கு வந்திருக்கார்.

சூரத் ஸ்டேஷன்ல வண்டி நின்னதும் திடீர்னு அவங்க கூபேல ஒரு பொண்ணு ஓடிவந்து ஒளிஞ்சிகிட்டாங்க. அவங்களைப் பார்த்த அப்பாவுக்கு அதிர்ச்சி. அவங்க எங்க அம்மா…” என்றவள் மேற்கொண்டு சொல்லமுடியாமல் தலையைப் பிடித்துக்கொண்டாள்.

அவனுக்குமே இது அதிர்ச்சியாக இருக்க, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“அப்பா, விசாரித்தபோதுதான் அவங்க தன்னோட சீனியர் பையன் ஒருவனை நம்பி வீட்டைவிட்டு வந்துட்டதாக…” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.

அவளது நிலையைக் கண்டவன், “விட்டுடு மித்ரா! உன்னைக் கஷ்டப்படுத்திக்காதே முடிஞ்சி போனதைப் பத்திப் பேசி என்ன ஆகப்போகுது! அதோட இது யாருக்கும் தெரியாமலேயே இருந்துட்டுப் போகட்டும்” என்றான் ஆறுதலாக.

“இல்ல இல்ல விஜய்! அவங்க வீட்டைவிட்டு வந்திருந்தாலும், நகையையும், பணத்தையும் மட்டும்தான் இழந்தாங்க. மத்தபடி” என்றவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

“போதும் இதுக்கு மேல என்ன நடந்திருக்கும்னு என்னால புரிஞ்சிக்கமுடியுது. அத்தை வீட்டுக்குத் திரும்பி வர மறுத்திருப்பாங்க. அதனால மாமா அவங்களைத் தன்னோட கூட்டிட்டுப் போய் இருப்பார். அதானே…” என்றதற்கு நிமிராமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

“எங்க அப்பா நினைச்சிருந்தா என்னவேணும்னாலும் செய்திருக்கலாம். ஆனா, அவர் அப்படிச் செய்யல. அடைக்கலமா வந்தவங்களை தன்னோட வாழ்க்கைல இணைச்சிகிட்டார். இதுல அவரோட தப்பு என்ன இருக்கு சொல்லுங்க” என்றவள் அவனது மடியில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

அழுகையில் குலுங்கிய அவளது முதுகை, ஆதரவாகத் தட்டிக்கொடுத்தான். மனத்திலிருந்த அத்தனையையும் கொட்டிய நிம்மதியிலும், பயண அலுப்பிலும், தன்னவனது அருகாமை கொடுத்த இதத்திலும் மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிட, அவளது தலைக்குத் தலையணையை வைத்துவிட்டு கதவை மூடிக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.

தனது அன்னைக்குப் போன் செய்தவன், நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற, மறுமுனையிலிருந்த வித்யாவதி திக்பிரமையில் ஆழ்ந்ததைப் போல மௌனமாக இருந்தார்.

“எப்பேர்பட்டக் குடும்பத்துல பிறந்துட்டு, கடைசில அவள் தெரியாம செய்த தப்பால எல்லாமே தவறாகப் போயிடுச்சே!” என்றவருக்குத் தொண்டை அடைத்தது.

“இதை எப்படிம்மா தாத்தாகிட்ட சொல்றது?” கவலையுடன் கேட்டான்.

“சொல்லித்தான் ஆகணும். இல்லனா, ஒரு நல்ல மனுஷனை நாங்க எல்லோருமே வார்த்தையால மறைமுகமா வதைச்சிருக்கோமே. அதுக்குப் பிராயச்சித்தம் பண்ணியாகணுமே. கெட்டதிலேயும் ஒரு நல்லதா சுமி நம்மகிட்டயே வந்து சேர்ந்ததுதான். இதைப் பத்தின கவலை உனக்கு வேணாம். நான் பக்குவமா சொல்லிக்கிறேன். இந்த விஷயம் நம்ம நாலு பேரோட இருக்கட்டும் மித்ரன்!” என்றார்.

அவனும் புரிந்துகொண்டு சம்மதித்தான்.

“சரி, நீ கிளம்பி வரும்போது சுமியையும் கூட்டிட்டு வந்திடு. அவளைப் பத்திரமா பார்த்துக்க” என்றவர் போனை வைத்தார்.

சுமித்ரா உறக்கம் கலைந்து எழுந்துவந்த போது விஜய்மித்ரன் அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகியிருந்தான்.

கைக்குட்டையை மடித்துப் பாக்கெட்டில் வைத்தபடி ஹாலுக்கு வந்தவன், “ஹேய்! எழுந்துட்டியா? நானே எழுப்பணும்னு இருந்தேன். சாப்பிடலாமா?” எனக் கேட்டான்.

“ம்ம்” என்றாள்.

அமைதியாக உண்டு முடித்து எழுந்தனர்.

“நீ, தூங்கறதுன்னா தூங்கு. நான் ஒரு மணிக்கெல்லாம் வந்திடுவேன். லஞ்சுக்குப் போவோம். ஈவ்னிங் வரைக்கும் நான் ஃப்ரீதான். பேசுவோம்” என்றவன், அவளது கன்னத்தைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

சற்றுநேரம் டி.வி பார்த்தாள், படுக்கையில் புரண்டாள் நேரம் விரைவேணா என்றது. எழுந்து வந்து ஃப்ரிட்ஜை ஆராய்ந்தாள். காய்கறிகள் இருப்பதைப் பார்த்ததும் இருவருக்குமாக சமைத்துக் கொள்ளலாம் என காய்கறிகளை எடுத்தாள்.

அவள் வேலையில் மும்முரமாக இருக்க, யாரோ வரும் அரவம் கேட்க எட்டிப் பார்த்தாள்.

புன்னகைத்த விஜய், “என்ன பண்ணிட்டிருக்க?” என்க் கேட்டான்.

“சமைச்சிட்டு இருந்தேன்” என்றவள் விட்டவேலையைத் தொடரலானாள்.

“நான்தான் வெளியே போய்ச் சாப்பிடலாம்னு சொன்னேனே” சொல்லியபடி சட்டைப் பட்டனைக் கழற்றிக்கொண்டே தனது அறைக்குச் சென்றான்.

“சும்மாதானே இருக்கேன்னு நானே சமைச்சிட்டேன்” என்றவள் சமைத்தவற்றை டைனிங்கில் அடுக்கினாள்.

“ம், வாசனையே பசியைத் தூண்டுதே… என்ன சமைச்சிருக்க?” என்றபடி அமர்ந்தான்.

“வெஜ் புலாவ், மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை, பூந்தி ராய்தா.”

“வாவ்! செம மெனுவா இருக்கே” என்றவன், ஒரு வாய் சுவைத்தான். “ம், சூப்பர்! உன் கையைக் கொஞ்சம் காட்டு” என்றான்.

அவளும் இயல்பாக கையை நீட்ட, “எல்லோரும் சமைச்ச கைக்கு வளையல் போடுவாங்க. நான் கொஞ்சம் வித்தியாசமா” என்றவன் அவளது உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டான்.

மனத்திற்குள் மகிழ்ச்சி குமிழியிட்ட போதும், “ம், எச்சில். நான் திரும்பக் கையைக் கழுவணும்” என முகத்தைச் சுளித்தாள்.

“அத்தை மகளே! இதெல்லாம் சரியில்ல… ஏதோ நான் நல்ல மூட்ல இருக்கறதால தப்பிச்சிட்ட” என்றான்.

“ம், இல்லனா மட்டும்” என்றவள் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

“ஏய்! ரொம்பச் சீண்டாதே… உனக்கு நல்லதில்ல” என்றான் மிரட்டலாக.

என்ன நினைத்தாளோ அவள் மௌனமான போதும் இரகசியச் சிரிப்பைச் சிந்தியபடி உணவருந்திக் கொண்டிருந்தவளை, கண்டும் காணாமல் இரசித்துக்கொண்டிருந்தான்.

அவள் பாத்திரங்களைக் கழுவி வைக்க, டைனிங்கை சுத்தம் செய்தான் மித்ரன். கையைத் துடைத்துக்கொண்டு அவள் திவானில் வந்து அமரவும், அவளது மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான்.

“விஜய்! என்ன இது? எழுந்திருங்க” என்றவளைச் சிரிப்புடன் பார்த்தான்.

“முடியாது” என்றான் பிடிவாதமாக.

“ஏன் இப்படிப் படுத்தறீங்க?” எனச் சிணுங்கினாள்.

“நீகூட என் மடியில் தலை வச்சி படுத்திருந்த. அப்போ, நான் ஏதாவது சொன்னேன்…” எனக் கேட்டதும் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொள்ள, அவன் எழுந்து அமர்ந்தான்.

“அதான் எழுந்துட்டேனே. இன்னும் ஏன் முகத்தை எங்கேயோ திருப்பிட்டிருக்க” கண்களில் குறும்பு தவழக் கேட்டான்.

முகத்தைத் திருப்பாமல் அவனிடம் ஒரு டைரியை நீட்டினாள்.

“என்ன இது?”

“அப்பாவோட டைரி” என்றாள்.

வாங்கி எதிரிலிருந்து சென்டர் டேபிள் மீது வைத்தவன், அவளது முகத்தைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினான்.

“பார்பி! போதும். திரும்பவும் இந்த விஷயங்களைப் பேசவேண்டிய அவசியம் இல்ல. இப்போ பேசவேண்டியது, தாத்தாவைப் பத்தித்தான்” என்றான்.

அவள் மௌனமாக இருந்தாள்.

“தாத்தா, உன்கிட்ட உணர்ச்சி வேகத்தில் அப்படிப் பேசியிருக்கலாம். ஆனா, அவர் ரொம்ப நல்லவர் மித்ரா! உன்மேல உயிரையே வச்சிருக்கார். உன் அப்பாவுக்காக, நீ எவ்வளவு பேசற. அதேபோலதானே தாத்தாவும் மகள்மேல பாசம் வச்சிருப்பார். அவரும், மனுஷன்தானே. அன்பு, பாசத்துக்குக் கட்டுப்பட்டவர் தானே. ஒரே பொண்ணு காதலிச்சி வீட்டைவிட்டுப் போயிட்டான்னு தெரிஞ்சபோது எப்படித் துடிச்சிப் போயிருப்பார்ன்னு நினைச்சிப்பாரு.

அதுவும் இத்தனைக் கம்பெனிகளுக்குச் சொந்தக்காரர். சமுதாயத்துல அவருக்குன்னு ஒரு அங்கீகாரமும், கௌரவமும் இருக்கு. அத்தனைப் பேரையும் நேருக்கு நேராகப் பார்க்கும்போது, அவருக்கு எவ்வளவு அவமானமா இருந்திருக்கும்னு யோசிச்சிப் பாரேன்…” என்று வரிசையாக அவன் பேசிக்கொண்டிருக்க தலையிடாமல் கேட்டுக்கொண்டாள்.

அவளது கரத்துடன் பிணைத்துக்கொண்டு, “உன்னை வருத்தப்பட வைக்கணும்னு சொல்லலடா! நிதர்சனத்தைப் புரிஞ்சிக்க. நம்ம தாத்தாவோட அன்பை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. வயசான காலத்துல உன்னோட உதாசீனத்தால அவரை நோகடிச்சிடாதே” என்றான்.
அவனது கண்களை ஊடுருவியவள் , புன்னகையுடன் அவனது கரத்தை இறுக பற்றிக்கொண்டு தலையை அசைத்தாள்.

“தேங்க்யூ மித்ரா!” என்றவன் ஆசையுடன் அவளது கரத்தில் முத்தமிட்டான்.

“ஒரு சின்ன வேலையிருக்கு. நான் கிளம்பிப் போய்ட்டு வந்திடுறேன். ஈவ்னிங், சங்கீதா வீட்டுக்குப் போவோம். நைட் நீ அங்கேயே தங்கிடு. காலைல ஊருக்குக் கிளம்பும்போது, நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்” என்றவனுக்குச் சிரிப்பையே பதிலாக்கினாள்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
268
291
63
அத்தியாயம் - 42

“உன்னோட இந்த முடிவு, எங்க எல்லோருக்குமே ரொம்பச் சந்தோஷமாயிருக்கு சுமி! உங்க வீட்டுக்குப் போனப்புறம் எங்களையெல்லாம் மறந்திடமாட்டியே” எனக் கேட்டாள் சங்கீதா.

அவளது பேச்சில் தோழியின் நல்வாழ்க்கையைக் குறித்தான ஆனந்தமும், நிம்மதியும் நிறைந்திருந்தது.

“விளையாட்டுக்குக்கூட அப்படிச் சொல்லாதே சங்கீ! ஃப்ரெண்ட்ஸ்னா சந்தோஷமான நேரத்துக்கு மட்டுமில்ல, சங்கடத்திலேயும்னு நிரூபிச்சவங்க நீங்க. உங்களையெல்லாம் மறந்தா, நான் நன்றிகெட்டவளா ஆகிடுவேன்” என்ற சுமித்ரா தோழியை இறுக அணைத்துக்கொண்டாள் சுமித்ரா.

இருவரது விழிகளும் கலங்கியிருக்க, ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.

“பத்திரமா போய்ட்டுவா சுமி! கல்யாண தேதி குறிச்சதும், எங்களுக்கெல்லாம் சொல்லிடணும். நாங்க ஒருவாரத்துக்கு முன்னாலயே வந்திடுவோம்” என்றாள்.

“கண்டிப்பா. எனக்குன்னு இருக்கவங்க நீங்கதானே…” என்ற சுமித்ராவின் கரத்தை ஆதூரத்துடன் பற்றிக்கொண்டாள்.

“சங்கீதா! அவங்களுக்கு நேரமாகுது” என அவளது கணவன் ஹாலிலிருந்து குரல் கொடுத்தான்.

“இதோ வந்துட்டோம்” என்று அவனுக்குப் பதிலளித்தவள், தோழியுடன் ஹாலுக்கு வந்தாள்.

நாசூக்காக கண்களை ஒற்றிக்கொண்டே வந்த சுமித்ராவை, விஜய்மித்ரனின் விழிகள் அன்புடன் வருடிக்கொண்டன.

“ஓகேம்மா! உங்க எல்லோருடைய ஒத்துழைப்புக்கும் ரொம்ப நன்றி! நீங்க எல்லோரும் அவசியம் நம்ம வீட்டுக்கு வந்து, பத்து நாளாவது தங்கணும். எனக்காக இல்லனாலும், உங்க ஃப்ரெண்டுக்காக” என்றான்.

“இதை நீங்க சொல்லணுமாண்ணா!” என்ற சங்கீதா தனது கணவனைப் பார்க்க, “உங்களுக்காகவே நாங்க வர்றோம் சார்!” என மனைவிக்கு ஆதரவாக இணைந்துகொண்டான் நளன்.

நால்வரும் சிரித்துக்கொள்ள, “ரொம்பத் தேங்க்ஸ்! நாங்க கிளம்பறோம்” என்றான் மித்ரன்.
“வரேண்ணா! வரேன் சங்கீ!” எனப் பிரியாவிடை பெற்ற தோழிக்கு அன்பு கலந்த அணைப்புடன் விடைகொடுத்தாள் சங்கீதா.

கைக்கடிகாரத்தைப் பார்த்த மித்ரன், “நாம ஜெய்பூர் போய்ச் சேர எப்படியும் மூணு மணிநேரம் ஆகிடும். வழியில பிரேக்ஃபாஸ்டை முடிச்சிக்குவோம்” என்றான்.

“வேணாம் விஜய்! வீட்லயே போய்ச் சாப்பிட்டுக்கலாம். எல்லோரும் நமக்காக வெயிட் பண்ணுவாங்க” என்றவளை முறுவலுடன் பார்த்தான்.

“ஓகே. நோ பிராப்ளம்” எனத் தோள்களைக் குலுக்கியவன், “நீ தூங்கறதுன்னா தூங்கேன்” என்றான்.

“இல்ல… இருக்கட்டும்” என்று புன்னகைத்தாள்.

“இஃப் யூ டோண்ட் மைண்ட்! சாங்க்ஸ் போடட்டுமா” எனக் கேட்டதும், “ம்” என்றாள்.

டாஷ்போர்டிலிருந்த பெண்டிரைவ்களில் ஒன்றை எடுத்துப் போட்டான்.

“புத்தம் புது காலை, பொன்னிற வேளை
என் வாழ்விலே… தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும். எந்நாளும் ஆனந்தம்.”

பாடலை ஊன்றிக்கவனித்தவள், “நைஸ் சாங்!” என்றவள், “அமேஸிங் மியூசிக்” என்றாள்.

“என் தம்பியோட கலெக்‌ஷன்ஸ். அவன்தான் எப்பவும் பாட்டும், கும்மாளமுமா இருப்பான். வீட்ல அவன் இருந்தா, நம்ம டென்ஷன்லாம் மறந்து போயிடும்” எனச் சொல்லிச் சிரித்தான்.

“உங்க தம்பியா… சரியான முசுடு!” என்றாள்.

வியப்புடன் அவளைப் பார்த்தவன் , “உன்கிட்ட பேசினதை வச்சி சொல்றயா. அவன் உன்னைச் சீண்டிப் பார்த்திருக்கான். மத்தபடி அவன் ஹார்ம்லெஸ். இப்பக்கூட உன்னை ஏதாவது சீண்டுவான். நீ கண்டுக்காத” என்று சிரித்தான்.

அவள் திருதிருவென விழிக்க, அவன் வாய்விட்டு நகைத்தான்.

“இந்த ரியாக்‌ஷனெல்லாம் தேவையே இல்ல. நீயே புரிஞ்சிக்குவ” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அன்னைக்கு அவரைக் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்…”

“நீயாச்சு அவனாச்சு. என்னை நடுவில் இழுக்காதே” என்றான்.

பேச்சும், சிரிப்புமாக நேரம் சென்றதே தெரியாத அளவிற்கு அந்தப் பயணம், அவர்களது மனநெருக்கத்தை மேலும் ஒன்றிணைத்திருந்தது.

****************

நெற்றியில் திருநீற்றுடன் புன்னகை முகமாக பூஜையறையிலிருந்து வெளியே வந்தார் இராமநாதன்.

“மாமா! ஒரு ஐஞ்சு நிமிஷத்துல டிஃபன் வச்சிடுறேன்” என்றார் வித்யாவதி.

“மித்ரன் வந்துடட்டும்மா! எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்ற இராமநாதன் அமைதியாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டாலும், தன்னுடைய பேத்தி வரப்போகிறாள் என்ற சந்தோஷத்தில் பரபரப்புடன் இருந்தது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

புன்னகையுடன், “அவன் வர இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் மாமா! ” என்றார்.

“பரவாயில்லம்மா!” என்றவர் வாசலைப் பார்த்தவாறு ஹாலில் அமர்ந்தார்.

நடந்தவைகளைக் கவனித்தபடியே அங்கே வந்த இந்தர், “ம், பேத்தியைப் பார்க்கப்போற சந்தோஷம், அப்படியே முகத்துல தெரியுதே தாத்தா!” எனச் சொல்லிக்கொண்டே அவரருகில் அமர்ந்தான்.

“இருக்காதா இந்தர்! உங்களைப் போல அன்புலயும், செல்வத்திலேயும் வளர்ந்திருக்க வேண்டியவ, என்னோட பிடிவாதத்தால நியாயமா கிடைக்கவேண்டிய எதுவுமே என் பேத்திக்குக் கிடைக்கலையே…” என்றார் கவலையுடன்.
“டோண்ட் வொர்ரி கிராண்ட்ப்பா! நம்ம வீட்டுக்கு வந்ததும், இதுவரை கிடைக்காததை டபுளா சேர்த்துக் கொடுத்திடுவோம்” என்றான்.

“நீ டபுளா கொடுக்கறது இருக்கட்டும். உன் வாய் சாதுர்யத்தை என் மருமககிட்ட காட்டாதே. புரிஞ்சதா!” என்றார் வித்யாவதி.

“அடேங்கப்பா! என்னவோ உங்க மருமகளுக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறீங்க. என்னை என் வழியில போகவிடுங்க. அதான் உங்களுக்கு மரியாதைன்னு என் முன்னால கைநீட்டிப் பேசினதை நீங்க மறந்திருக்கலாம். நான் மறக்கல…” என நம்பியாரைப் போன்று கைகளைப் பிசைந்தான்.

மற்ற இருவரும் அவனைப் பார்த்துச் சிரிக்க, அவன் கண்களை உருட்டி விழித்தான்.

“டேய்! உனக்கு இந்த டெரர் கேரக்டர் செட்டாகவே இல்லடா! எனச் சிரித்தார் வித்யா.

“ஹலோ! நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன். என்னைப் பார்த்தா பஃபூன் மாதிரி இருக்கா?” என்றான் கேள்வியுடன்.

“இருக்கா, இல்லண்ணா! அதுதான் உண்மை. உன் பாஷையில சொல்லணும்னா, உன்னை நாங்க சிரிப்பு போலீஸ் ரேஞ்லதான் பார்க்கறோம்” எனச் சொல்லிவிட்டுச் சிரித்த தங்கையின் தலையில் குட்ட அவன் கையை ஓங்க, அவள் அவனிடம் சிக்காமல் ஓடினாள்.

“அந்தப் பயம் இருக்கட்டும்” என்ற அண்ணனைப் பார்த்து பத்திரம் காட்டிச் சிரித்தாள்.

இவர்களது ஆர்ப்பரிப்பில் நேரம் சென்றுகொண்டிருக்க, விஜய்மித்ரனின் கார் போர்ட்டிக்கோவில் வந்து நின்றது.

“ஹய்யா! அண்ணா வந்தாச்சு” என்றபடி பவித்ரா வாசலுக்கு ஓட, மற்றவர்கள் அவளைத் தொடர்ந்து சென்றனர்.

கூச்சத்துடன் காரிலிருந்து இறங்கியவளை ஆதரவுடன் அணைத்துக்கொண்ட வித்யாவதி, “வாம்மா!” எனப் பாசத்துடன் அழைத்தார். “இவர்தான் உன் மாமா!” எனக் கணவரை அறிமுகப்படுத்தினார் அவர்.

“மாமா!” என அழைத்தவள் அவரது காலில் விழ, “நல்லாயிரும்மா!” என்ற சிவராமனுக்குக் கண்கள் கலங்கின. “உள்ளே கூட்டிட்டுப் போ வித்யா!” என்றவர் நாசூக்காக கண்களைத் துடைத்துக்கொண்டார்.

சுற்றியிருந்தவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவள், கதவருகில் நின்றிருந்த பெரியவரை விழிவிரிய பார்த்தாள். தயக்கத்துடன் அவரருகில் சென்றாள். இராமநாதனும், பேத்தியிடம் பேசுவதா வேண்டாமாவென்ற குழப்பத்துடன், நெஞ்சில் அலைமோதிய பாசத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தார்.

மெல்ல அவரது கரத்தைப் பற்றியவள், “என்னை வான்னு சொல்லமாட்டீங்களா தாத்தா!” என்றாள்.

தாத்தா என்ற அழைப்பில் அதுவரையிருந்த அவரது கம்பீரம் கரைந்து, சிறுகுழந்தையாக பேத்தியின் கைகளில் முகம் பதித்துக் கண்ணீர் வடித்தார். இருவருமாக அழுது, தங்களுக்குச் சமாதானம் சொல்லித் தேற்றிக்கொண்டு இயல்பிற்குத் திரும்பியபோது அவர்களருகில் யாரும் இல்லை.

“வாம்மா! உள்ளே போலாம்” எனப் பேத்தியுடன் உள்ளே வந்தார்.

“முதல்ல சாப்பிட வாங்க. அப்புறம் நிதானமா பேசிக்கலாம்” என அனைவரையும் டைனிங்கிற்கு அழைத்துச் சென்றார் வித்யாவதி.

“அதெப்படி நீங்க எல்லோரும் இண்ட்ரடியூஸ் ஆகிட்டீங்க. நானும், இந்தர் அண்ணாவும் இண்ட்ரடியூஸ் ஆக வேணாமா” எனக் கேட்டவள், “ஹலோ! ஐயம் பவித்ரா. பிபிஎ செகண்ட் இயர் படிக்கிறேன்” என்றாள்.

“ஹாய்!” என முறுவலித்தாள் சுமித்ரா.

“நீங்க தாத்தாவுக்குப் பெரிய பேத்தியா இருக்கலாம். ஆனா, இங்கே நான்தான் உங்களுக்குச் சீனியர். அதனால, தாத்தாவுக்கு முதல்ல நான்தான் பேத்தி. அப்புறம் தான் நீங்க” என்றாள்.

அதற்கும் சிரித்துக்கொண்டே, “சரி” என்றாள் சுமித்ரா.

“ஓகே. உங்களை நான் என் ஃப்ரெண்டா ஏத்துக்கறேன்” என்றவளுக்கு, “ஓகே” என்றாள்.

இந்தர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான் என்றெண்ணி அவனைப் பார்த்தாள். அவனோ, அருகில் அமர்ந்திருந்த அண்ணனிடம் ஏதோ முக்கியமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
அவள், அருகிலிருந்த பவித்ராவிடம் பேச ஆரம்பிக்க, சகோதரர்கள் இருவரும் மற்றவர்கள் அறியாமல் இரகசியமாகப் புன்னகைத்துக்கொண்டனர்.

சிரித்துக்கொண்டே திரும்பிய இந்தர், தன்னையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அன்னையைக் கண்டதும், ‘ஐயையோ!’ என மனத்திற்குள் நினைத்துக்கொண்டாலும், வெளியில் ஒன்றும் அறியாதவனைப் போலப் புன்னகைத்தான்.

மென்குரலில் சகோதரனிடம், “ஏன்ண்ணா! அம்மா இப்படியிருக்காங்க?” என்றான்.

“எப்படி?”

“என்னைக் கொஞ்சங்கூட நம்பாம…”

“அம்மா மட்டுமா…!” எனக் கேலியாகக் கேட்டான் மூத்தவன்.

“இந்தமாதிரி ஒரு சதிகாரக் குடும்பத்தை நான் பார்த்ததேயில்ல” என்றான் எரிச்சலுடன்.

“அடங்குடா! அம்மா உன்னைத்தான் பார்த்துட்டிருக்காங்க” என்றபடி, வெள்ளரித் துண்டை வாயில் இட்டுக்கொண்டான்.

“இந்த பின்லேடி இருக்காங்களே…” என்றவன் நிமிர்ந்து அன்னையைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான்.

“சுமி! இந்த வீட்ல முக்கியமான ஒருத்தனை உனக்கு இன்னும் அறிமுகப்படுத்தல. இவன்தான் என் ரெண்டாவது பையன் விஜயேந்தர்!” என்றார் வித்யா.

அவளும் புன்னகையுடன், “ஹாய் இந்தர்!” என்றாள்.

அவனும், “ஹாய் சுமித்ரா!” என்றதும், அவளது பார்வை விஜய்யிடம் சென்றது.

அவளது பார்வையை உணர்ந்துகொண்டவனாக, “நீ, என்னைவிட முழுசா ஒரு வருஷம் நாலு மாசம் சின்னவ. எனி, அப்ஜெக்‌ஷன்!” எனக் கைகளை விரித்துக் கேட்டான்.

திகைத்த பார்வையுடன், “இ.ல்.ல…” என்றாள்.

“தட்ஸ் குட். இப்போ சாப்பிடு. உன்கிட்ட நிறைய பேசவேண்டியிருக்கு” என்றான்.

அவனது பேச்சும், தோரணையும் விஜய்மித்ரன் சொன்னதற்கு நேர்மாறாக இருக்க, குழப்பத்துடன் தலையசைத்துக் கொண்டான். காலை உணவிற்குப் பிறகு, அண்ணனும், தம்பியும் வெளியே கிளம்பிவிட பவித்ராவும் படிக்க இருக்கிறதென தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.
பெரியவர்கள் மூவரும் தோட்டத்தில் அமர்ந்து சுமித்ராவுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

சற்றுநேரத்தில் வித்யாவதி ஏதோ வேலையிருக்கிறதென செல்ல, சிவராமனும் போன் பேசவேண்டும் என அறையிலிருந்து வெளியே சென்றார். இப்போது தாத்தாவும், பேத்தியும் மட்டுமே இருந்தனர்.

பேத்தியிடம் எவ்வளவோ பேசவேண்டியிருந்தும், எப்படி ஆரம்பிப்பதென தயக்கத்துடன் அமர்ந்திருந்தார் இராமநாதன்.

“நீங்க ரெஸ்ட் எடுக்கணுமா தாத்தா?” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் இல்லம்மா! உன்கிட்ட நிறைய பேசணும். ஆனா” என்றவர் பாதியில் நிறுத்தினார்.

அவர் என்ன பேச விழைகிறார் என உணர்ந்துகொண்டவளாக, “பரவாயில்ல தாத்தா! உண்மை தெரிஞ்சி நீங்க எதுவும் செய்யலையே” என்றாள்.

“உண்மையைத் தெரிஞ்சிக்க முயற்சியும் பண்ணலயேம்மா!” என்றவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“பெத்த பொண்ணை ஒழுங்கா வளர்க்காம, என் மாப்பிள்ளையையும், பேத்தியையும் இல்லம்மா நான் தண்டிச்சிருக்கேன். உங்க அப்பாவோட கையைப் பிடிச்சி மன்னிப்புக் கேட்கற சந்தர்ப்பத்தைக்கூட, அந்தக் கடவுள் எனக்குக் கொடுக்கலையே. அந்த அளவுக்கு நான் பாவிம்மா!” என்று கலங்கினார்.

தந்தையை நினைத்ததுமே, அவளது விழிகளிலும் ஈரம் படர்ந்தன.

“நீங்க கவலைப்படாதீங்க தாத்தா! தெரியாம செய்யறது தப்பு ஆகாது” எனச் சமாதானம் சொன்னாள்.

“இல்லம்மா! நான் செய்த தப்புதான், உன் வாழ்க்கை வரைக்கும் வந்து விளையாடிடுச்சி” என்றவரை மௌனமாகப் பார்த்தாள்.
“உன்னோட மனசை நோகடிச்ச அந்தப் பொம்பளைய உன் கால்ல விழவைக்கிறேன். என்ன தைரியமிருந்தா, என் பேத்திகிட்டயே அவங்க வேலையைக் காட்டியிருப்பாங்க. இப்போ, இந்த இராமநாதன் யாருன்னு அவங்களுக்குக் காட்டறேன். இந்த பிஸ்னஸ்ல தலையெடுக்க முடியாதபடி செய்யறேன்” என்ற தாத்தாவைக் கலக்கத்துடன் பார்த்தாள்.

“அப்படிச் செய்தால், எங்க அப்பா திரும்ப வந்திடுவாரா தாத்தா! அப்படி வந்திடுவாருன்னா நிச்சயமா நீங்க சொன்னதைச் செய்ங்க” எனக் கேட்ட பேத்தியை வருத்தம் நிறைந்த முகத்துடன் பார்த்தார்.

“ப்ளீஸ் தாத்தா! ஆன்ட்டிதான் அப்படியே தவிர அங்கிளும், கிஷோரும் நீங்க நினைக்கறது போல இல்ல” என்றாள்.

“அந்தப் பையனை, உனக்கு ரொம்பப் பிடிக்குமாம்மா!” எனக் கேட்டவரது கண்களில் எதையோ அறிந்து கொள்ளும் ஆர்வம் தென்பட்டது.

அவரது விழிகளை ஆழ்ந்து பார்த்தவள், “ஒரு ஃப்ரெண்டா பிடிக்கும்” என்றாள்.

‘இந்தப் பதிலைத்தான் எதிர்பார்த்தேன்’ என்பதைப் போல தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறுபுன்னகை புரிந்தார்.

“நீ சந்தோஷமா இருக்கியாம்மா!” எனக் கேட்டார்.

கேள்விக்கான உள்அர்த்தம் புரியாமல், “என்ன தாத்தா கேட்கறீங்க?” எனக் கேட்டாள்.

“அது… இந்தக் கல்யாணம் நின்னுபோனதுல…”

“என்னோட முட்டாள்தனத்தாலதான் கல்யாண ஏற்பாடே நடந்தது” என்று பெருமூச்சுவிட்டாள்.

“சாரிடா! உன்னோட நல்ல மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்…”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல தாத்தா! அந்தக் கட்டத்தையெல்லாம் நான் எப்பவோ தாண்டி வந்துட்டேன்” எனச் சிரித்தாள்.

திருப்தியுடன் புன்னகைத்த இராமநாதன், சுமித்ராவுடன் பேசிக்கொண்டிருக்க கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான் இந்தர்.

“தாத்தா! பேத்தியோட ஐக்கியமாகிட்டீங்களா! நாங்களும் இருக்கோம் மறந்துடாதீங்க” என்றான்.

“உன்னை மறக்கமுடியுமா பேராண்டி!” என்றவர் பேத்தியைப் பார்க்க, அவளும், வரவேற்பாகச் சிரித்தாள்.

அவர்களெதிரில் அமர்ந்தவன், “எங்க வீடு பிடிச்சிருக்கா சுமி?” என்றான்.

சுமித்ரா திடீரென சுமியாக மாறியதைக் கேட்டதும், மனத்திற்குள் நமநமவென அரித்தது.
“ம், பிடிச்சிருக்கு.”

அதற்குள் சிவராமன் ஏதோ பேசவேண்டுமென சொல்ல, இராமநாதன் சற்றுநேரத்தில் வருவதாகக் கூறி சென்றார்.

அவளெதிரில் கால் மேல கால் போட்டு அமர்ந்த இந்தர், “எங்களை!” எனக் கேட்டான்.

“ம்” எனத் தலையை ஆட்டினாள்.

லேசாக தலையை ஆட்டியவன், “என்னை!” எனக் கூர்ந்த பார்வையுடன் கேட்டான்.

அவனது பார்வையும், பேச்சும் மனத்திற்குள் திகிலை ஏற்படுத்தியது.

“அதான் சொன்னேனே…” என்றாள் சமாளிப்பாக.

“அது பொதுவா எல்லோரையும் சொன்னது. நான் கேட்கறது என்னை” என்றான் அழுத்தமாக.

அவளுக்குப் படபடவென வந்தது. ‘விஜய் சொன்னதெல்லாம் நினைவிற்கு வந்தபோதும், இவன் தன்னைச் சீண்டிப் பார்க்கிறானா? அல்லது உண்மையிலேயே தீவிரமான எண்ணத்தில் கேட்கிறானா’ எனப் புரியாமல் திணறினாள்.
சுற்றும் முற்றும் பார்த்தாள். வீட்டு மாடியில் நின்று போன் பேசிக்கொண்டிருந்த விஜய்மித்ரன் கண்ணில் தென்பட்டான். ஆனால், அவனை எப்படி அழைப்பது?

“சுமி பேபி! நான் உன்னை என்ன கேட்டேன்? என்னைப் பிடிக்குமா பிடிக்காதான்னு சொல்றதை விட்டுட்டு, வீட்டைச் சுத்திப்பார்த்துட்டிருக்க” என்ற இந்தரின் குரலில் நினைவுக்கு வந்தாள்.

இவனை இப்படியே விட்டால் சரிவரமட்டான் என நினைத்துக்கொண்டு, “இங்க பாருங்க உங்களை எனக்குப் பிடிக்கும். விஜய்யோட தம்பியா பிடிக்கும். உங்க கேள்விக்குப் பதில் கிடைச்சிடுச்சா! வேற ஏதாவது கேள்வி இருக்கா?” எனக் கேட்டாள்.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன், கலகலவென நகைத்தான்.

“ஐ லவ் யூ பாபி!” என்று அவளது இருகரங்களையும் பிடித்துக் குலுக்கினான்.

அவள் திகைப்புடன் பார்க்க, “சாரி சாரி! சும்மாதான் உங்களைச் கலாய்ச்சேன். உங்க ரெண்டு பேரைப் பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும். அதை உங்க வாயாலேயே சொல்ல வைக்கத்தான் இப்படிப் பேசினேன். ஒனஸ் அகைன் சாரி!” என்றவனைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“ரொம்பப் பயந்துட்டீங்க போலயிருக்கு…” என்றவனைப் போலியாக முறைத்தாள்.

“ஒரு நிமிஷம் எனக்கு…” என்றவள் “அதை விவரிக்கக்கூட முடியல” என்றவள் சற்று இலகுவாக சிரித்தாள்.

“டோண்ட் வொர்ரி பாபி! அண்ணன் எதிர்ல நான் உங்களை ஏதாவது கலாய்ச்சா தப்பா எடுத்துக்காதீங்க. ப்ளீஸ்!” என்றான்.

“ம்” என்று சிரித்தவள், “எனக்கு ஒண்ணு சொல்லுங்க இந்தர்! உங்க அண்ணன்கிட்டயும் இதே டயலாக்கை ரிப்பீட் பண்ணுவீங்க தானே” எனச் சிரிப்புடன் கேட்டதும், அவன் விழிகளை உருட்டிச் சிரித்தான்.

“மை காட்! அண்ணனோட வேலையா…”

“இன்னும் சந்தேகமா?”

“நம்மள நல்லவனாக்கிப் பார்க்கறதே அண்ணனுக்கு வேலையா போச்சு. ஓகே… இன்னைக்கு ஏதாவது அப்பாயின்மெண்ட் இருக்கா?”

“இல்ல” என்றாள்.

“அப்போ, ஈவ்னிங் உங்களை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். இப்போ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க” என்றபடி எழுந்தான்.

“எங்கே?”
“சஸ்பென்ஸ்…” என்றான்.

“உங்க அண்ணா வருவாரா?”

“எனக்கு ஆட்சேபணை இல்ல” என்றவன் அங்கிருந்து சென்றான்.
சுமித்ரா நிமிர்ந்து மாடியைப் பார்த்தாள்.
அங்கே விஜய்மித்ரன் இன்னமும் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்க, பெருமூச்சுடன் சென்டர்டேபிள் மீதிருந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள்.

சற்றுநேரம் கழித்து அங்கே வந்த இராமநாதன், “சாரிம்மா ஒரு முக்கியமான வேலை. நீ ரெஸ்ட் எடு. நான் மதியம் வந்து பேசறேன்” எனச் சொல்லிவிட்டுச் செல்ல எழுந்து உள்ளே வந்தாள்.

ஹாலில் அமர்திருந்த வித்யாவதி, அவளுக்கான அறையைக் கீழிருந்தே காண்பிக்க தனது அறையை நோக்கி நடந்தாள்.

‘விஜய்யையும் ஈவ்னிங் தங்களுடன் வரச்சொல்ல வேண்டும்’ என அவள் நினைத்துக்கொண்டே படியேற அவன் வேகமாக அவளெதிரில் வந்தான்.

“விஜய்!” என அவள் அழைக்க, “ஒருத்தரைப் பார்க்கப் போறேன் மித்ரா! வந்து பேசறேன்” என்றவன் வேகமாக அவளைக் கடந்து செல்ல, முகத்தில் ஏமாற்றம் பரவ நின்றிருந்தாள் அவள்.
 
  • Like
Reactions: saru
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!