தீயினில் வளர் ஜோதியே

Anuya

Well-known member
Apr 30, 2019
283
334
63
அத்தியாயம் - 43

உடை மாற்றிக்கொண்டு வந்த சுமித்ரா, “அத்தை!” என்றபடி அவரெதிரில் வந்து நின்றாள்.

”என்னம்மா! வெளியே கிளம்பறியா?” எனக் கேட்டார்.

“ஆமா அத்தை! இந்தர் வெளியே போகலாம்னு சொன்னார்.”

விழிவிரிய அவளைப் பார்த்தவர், “எங்கேன்னு சொன்னானா?” எனக் கேட்டார்.

“சஸ்பென்ஸ்ன்னு...” என அவள் சொல்லிக்கொண்டிருக்க, அங்கே வந்தான் இந்தர்.

“மணியாச்சு கிளம்பலாமா?” என பரபரத்தான்.

“உனக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு. இந்த நேரத்துல எங்கே கிளம்பிட்ட?”

“அந்த வேலையாதான் போறேன் மாம்!” என்றான்.

“அதுக்கு நீமட்டும் போகவேண்டியது தானே.”

“உங்களுக்கு வேலையாகணும்... அவ்வளவுதானே. நீங்க சொன்னதெல்லாம் முடிஞ்சிடுச்சின்னு நினைச்சிக்கோங்க” என்று அன்னையிடம் கூறியவன், “பேபி! கிளம்புவோம்” என்றான்.

அவனுடைய வாய்ஜாலத்தைக் கேட்டு அலுப்புடன் பார்த்த வித்யாவதி, அவன் சொன்ன ‘பேபி’ என்ற வார்த்தையில் திடுக்கிட்டுப் பார்த்தார்.

திகைப்புடன், “என்னது பேபியா? டேய்! அவள் உன்...” என்றவரை இடைமறித்தவன், “அண்ணிம்மா! அண்ணியைப் போய் யாராவது அப்படிக் கூப்பிடுவாங்களா! பாபியைப் போய்ப் பேபின்னு...” என்று போலியாகக் கோபித்துக்கொண்டவனைச் சலிப்புடன் பார்த்தார்.

“பெத்த பிள்ளைமேல அவ்ளோ நம்பிக்கை” என்றவன், “ஏன் பாபி உங்க காதிலேயும் அப்படியா விழுந்தது!” எனக் கேட்டான்.

அவனது பேச்சைக் கேட்ட சுமித்ரா ஓரவிழியால அத்தையைப் பார்த்துக்கொண்டே, உதட்டை அழுந்தக் கடித்துச் சிரிப்பைக் கட்டுப்படுத்தினாள்.

“நீங்க இப்படிச் சிரிக்கறதைப் பார்த்தா, எங்க அம்மா என்னைத் தப்பா நினைப்பாங்க பேபி!” என்றான் பரிதாபமாக.

அவள் அடக்கமட்டாமல் சிரித்துவிட, “அடிக்கழுதை! வரவர உன்னோட அலம்பலுக்கு அளவே இல்லாம போச்சு. சுமியாம், பேபியாம்…” என மகனைக் கடிந்துகொண்டார்.

“நீ தப்பா நினைச்சிக்காதே சுமி! அவன் சரியான அறுந்த வாலு. ஆனா, மனசுல எதுவும் வச்சிக்கமாட்டான்” என மருமகளுக்கு ஆறுதலாகவும், மகனுக்கு ஆதரவாகவும் ஒருசேரப் பேசினார்.

“நான் தப்பா எடுத்துக்கல அத்தை! இப்படி ஒருத்தரை ஒருத்தர் உரிமையா கிண்டல் பண்ணி அதுவும், மனசு நோகாம கேலி பண்ணிச் சிரிச்சிப் பேசறதெல்லாம் எனக்குப் புதுசாயிருக்கு. ஐ லைக் இட்!” என்றாள் மகிழ்ச்சியுடன்.

“என் கண்ணு!” என்ற வித்யாவதியின் நெஞ்சம் கனத்தது.

“ஹலோ! இப்போ என்ன நடந்துபோச்சுன்னு ரெண்டு பேரும், பாசத்தை ஜூஸ் போட்டுட்டு இருக்கீங்க. உங்க வேலையாக வேணாமா?” என்று அன்னையிடம் கடுப்புடன் கேட்டான் இந்தர்.
"போதும் அரட்டை! அவளைப் பத்திரமா கூட்டுட்டுப் போய்ட்டு வா. பார்த்துப் போய்ட்டு வாம்மா!” என இருவரையும் வழியனுப்பி வைத்தார் வித்யா.

காரைச் செலுத்திக்கொண்டே, “அண்ணி! தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்குப் பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நானும் தப்பா நினைச்சிக்க மாட்டேன்” என்றான்.

குறுஞ்சிரிப்புடன், “அதுக்கு அவசியமே இல்ல. இப்படி உரிமையா என்கிட்ட யாரும் பேசினதில்ல” என்றாள்.

ஒரு கையால ஸ்டியரிங்கை வளைத்தபடி, “அண்ணன் கூடவா...” எனக் கேட்டான்.

“ம்ம்... உங்க அண்ணன் எனக்கு ஸ்பெஷல் இல்லயா” என்றாள் அவளும்.

“ஹும்!” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டவன், “இப்படி நம்மள ஒரு பொண்ணு சொல்றதைக் கேட்கறதுக்காவது இந்தக் கருமம் பிடிச்ச லவ்வைப் பண்ணணும்” என அலுத்துக் கொண்டவனைப் பார்த்துக் கலகலத்தாள்.

பேசிக்கொண்டே வந்தவள், கார் செல்லும் பாதையைப் பார்த்ததும் வியப்புடன் இந்தரை நோக்கினாள்.

“அண்ணா கூட்டிட்டு வரச்சொன்னார். செய்துட்டேன். ஏன், எதுக்குனெல்லாம் நீங்க அவரைக் கேட்டுக்கோங்க” என்றபடி காரை தாத்தாவின் வீட்டின் முன்பாக நிறுத்தினான்.

போர்ட்டிகோவில் நின்றிருந்த காரைப் பார்த்தவன், “ஆல்ரெடி, அண்ணா வந்தாச்சு. நான் கிளம்பறேன்” என்றவன் அவளை இறக்கிவிட்டுச் செல்ல, விஜய்மித்ரனுடன் பேசும் ஆவலுடன் வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள் சுமித்ரா.

சல்யூட் அடித்த காவலாளிக்கு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, உள்ளே சென்றவளது கண்களில் வீட்டிலிருக்கும் பணியாளர்கள் ஒருவரும் தென்படவில்லை.

அவள் வருவதைக் கண்ட விஜய்மித்ரன், புன்னகையுடன் எழுந்து அவளை நோக்கி வந்தான்.

“வீட்டுக்கு வந்ததிலிருந்து என்கிட்ட பேசாம இருந்ததுக்கு, ஸ்பெஷல் சர்ப்ரைஸ் பார்ட்டியா?” என சிரித்துக்கொண்டே கேட்டபடி அவனை நோக்கி நடந்தவள், அவனுக்குப் பின்னால் நின்றிருந்த கிஷோரைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனாள்.

அதிர்ச்சியுடன் விஜய்மித்ரனைப் பார்த்தாள். பரிதவிப்புடன் அவனது கரத்தைப் பிடித்துக்கொண்டாள்.

அவனும் ஆறுதலாக அவளது விரல்களை இறுக்கிக் கொண்டவன், “வா!” என்றான்.

அவர்கள் இருவரையும் பார்த்த கிஷோரின் இதயம் வலித்தது.

‘எத்தனை அற்புதமான வாழ்க்கையை, தான் இழந்து நிற்கிறோம்’ என்ற உண்மை உறைக்க, ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

தயக்கத்துடன் தன்னை நோக்கியவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான். ஜீவனற்ற அவனது புன்னகை, அவளது நெஞ்சத்தில் வேதனையை மூட்டியது.

“எப்படியிருக்க சுமி?” எனக் கேட்டான்.

“நல்லாயிருக்கேன்” என்றாள்.

“மித்ரா! கிஷோர் உன்கிட்ட பேசணுமாம். நீங்க பேசிட்டு இருங்க. ஒரு போன் பேசவேண்டியிருக்கு. பேசிட்டு வந்திடுறேன்” என்றவன் அவளது கரத்தை அழுத்திக்கொடுத்துவிட்டு, மாடிக்குச் சென்றான்.

அவன் செல்லும்வரை பார்த்துக்கொண்டிருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக, “உட்காருங்க கிஷோர்!” என்றாள்.

“உன்னை இப்படிப் பார்க்கச் சந்தோஷமாயிருக்கு சுமி!” எனச் சொல்ல, அவள் மிருதுவாக முறுவலித்தாள்.

“அங்கிள் எப்படியிருக்காங்க?”

“ம், இருக்காரு. உன்னைப் பத்தின கவலைதான் அவருக்கு. அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு…” என்றவன் மேற்கொண்டு பேசமுடியாமல் முகத்தைத் துடைத்துக்கொண்டான்.

அவள் கைகளைக் கட்டிக்கொண்டு, மௌனமாகப் பார்த்தாள்.

“சாரி சுமித்ரா! வெரி சாரி. இன்னைக்கு நீ சேஃப் ஹேண்ட்ஸ்ல இருக்க. அப்படியில்லாம போயிருந்தா… நினைச்சிப் பார்க்கவே முடியல” என்றான் வருத்தத்துடன்.

ஆழமூச்செடுத்துக்கொண்டாள் அவள்.

“நான் உன்னைத் தேடி வந்ததே சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கவும், தெளிவுபடுத்தவும் தான்” என்றவன், அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“ஆரம்பத்திலேயே சரியா யோசிக்காம, மனம்விட்டுப் பேசாம இருந்ததுதான் இன்னைக்கு நம்மை இப்படியொரு சூழல்ல சந்திக்க வச்சிருக்கு. உங்களுக்குத் தெளிவா சொல்ல நானும் கடமைப்பட்டிருக்கேன்” என்றாள்.

சற்றுநேரம் இருவருக்குமிடையில் மௌனம் மட்டுமே துணையாக இருந்தது.

திடீரென, “ஏன் சுமித்ரா என்னை உனக்குப் பிடிக்காம போச்சு?” எனக் கேட்டவனைத் திடுக்கிடலுடன் பார்த்தாள்.

“கடைசிவரை என்னால, உன்னோட மனசைக் கவரமுடியாத ஒரு கையாலாகாதவனா இருந்திருக்கேன்னு நினைக்கும்போது, ரொம்ப வேதனையாயிருக்கு சுமி!” என்றவன் நெஞ்சை நீவியபடி எழுந்து நடந்தான்.

என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சூழலைச் சந்திக்கவேண்டி வரலாம், வராமலும் போகலாம். வந்தால், அதை எப்படி எதிர்கொள்வதென்று அவள் நினைக்காத நாளில்லை. ஆனால், இன்று அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் போது, அது கொடுக்கும் வலியை அவள் நினைத்தும் பார்த்ததில்லை.

“உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும், நான் இப்படிக் கேட்கறது தப்புதான். ஆனா, மூளை சொல்றதை மனசு கேட்கமாட்டேன்னுதே” என்றவன் ஜன்னலின் அருகில் சென்று நின்றான்.

குளிர்காற்று அவனைத் தழுவியபோதும், அதன் சிலிர்ப்பை உணரமுடியாத அளவிற்கு மரத்த உணர்வுடன் நின்றிருந்தான்.

“என்னை நீ விரும்பி கல்யாணத்துக்குச் சம்மதிக்கலன்னு தெரிஞ்சபோதும், என்னோட அன்பால உன் மனசுல இடம் பிடிச்சிடலாம்னு நினைச்சேன். உன்னோட பார்வை, எப்பவும் என்மேல இருக்கணும்னு எதிர்பார்த்தேன். அப்போ, அதெல்லாம் எனக்குத் தப்பாவே தெரியல. அந்த நிலைப்பாட்டோடதான் உன்கிட்ட, அளவுக்கு அதிகமான உரிமை எடுத்துகிட்டேன்.
என்னைக்குமே உன்னைக் காயப்படுத்தணும்னு நான் நினைச்சதில்ல. உன்னை, எனக்கு ரொம்பப் பிடிக்கும் சுமி! மனசுக்குப் பிடிச்ச பொண்ணு, நம்மள விரும்பறான்னு தெரியும் போது எவ்வளவு சந்தோஷமாயிருக்கும். அந்தச் சந்தோஷத்தைத் தான் எதிர்பார்த்தேன். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல, இன்னொருத்தர் வரக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா…” விரக்தியாக புன்னகைத்தான்.

“என்னோட நடவடிக்கையெல்லாம், உனக்கு கசப்பைக் கொடுத்திடுச்சின்னு எனக்குப் புரியல. அதுவே, என்கிட்டயிருந்து உன்னைத் தள்ளி நிக்க வச்சிது. நீ விலகிப் போகப் போக, உன்னை நெருங்கி வரணும்னு துடிச்சேன். உன்வீட்ல மித்ரனைப் பார்த்ததும், அவனிடம் நீ உரிமையோட பேசிப் பழகினதையும் என்னால ஜீரணிக்கமுடியல. அவன்கிட்ட உன்னோட மனசு போயிடுமோன்னு பயந்தேன். உன்கிட்ட ஹார்ஷா நடந்துக்கவும் அந்தக் கோபம் தான் காரணம்” என்றவனை வெறித்துப் பார்த்தாள்.

“நான் சென்னைக்குக் கிளம்பிப் போன பின்னால, இதைப் பத்தி நிறைய யோசிச்சேன். அப்போதான், நீ என்னை எந்த அளவுக்குப் பொறுத்துப் போறேன்னு எனக்குப் புரிஞ்சது. உன்னைச் சந்தோஷமா பார்த்துக்கணும்னு நினைச்ச நானே, உன்னை வெறுப்புல தள்றேன்னு புரிஞ்சது. என்னோட தப்பை நான் உணர ஆரம்பிச்ச நேரம், நீ என்னைவிட்டு மொத்தமா விலகிப் போய்ட்டன்னு தெரியல. நான் ஊர்லயிருந்து வந்தபோது அங்கிள்…” என்றவன் கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தான்.

சுமித்ராவின் விழிகளில் ஈரத்தின் சாயல்.

“அங்கிளோட இறப்புக்குப் பின்னால, எங்க அம்மாவே இருப்பாங்கன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல சுமி!” என்றவன் நெற்றியைப் பிடித்தபடி தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவளுக்கு, எதிரில் வந்து அமர்ந்தான்.

“ஒரு நிதர்சனத்தை நான் நல்லா புரிஞ்சிகிட்டேன். எதையுமே வற்புறுத்தி செய்ய வைக்க முடியாது. ஆனா, எங்க அம்மா அதைப் புரிஞ்சிக்கவே இல்ல. நீ வீட்டை விட்டுப் போய்ட்டேன்னு எனக்கு தெரிஞ்சதும் முதல்ல நான் பெரிசா எடுத்துக்கல. ஆனா, நீ போனை எடுக்கலன்னதும் டௌட் வர ஆரம்பிச்சது.

வீட்டுக்கு வந்து பார்த்தேன். பக்கத்தில் விசாரிச்சேன். அவங்க உன்னைக் காலைலயிருந்து பார்க்கவே இல்லைன்னு சொன்னாங்க. உன்னைக் காணோம்னு தெரிஞ்சதும் பைத்தியக்காரன் மாதிரி தேடினேன். ஆனா, நீ என்னைவிட்டுப் போகணும்னு தான் போயிருக்கேன்னு புரிஞ்சிகிட்டேன். நீ எங்கே இருக்கன்னு கண்டுபிடிக்க ஒரு சின்னக் க்ளூ கூட கிடைக்கல.

அப்போதான் ஒரு மீட்டிங்ல எதேச்சையா சந்தீப்பை மீட் பண்ணேன். அவன்தான் கல்யாணத்துல நீ விஜய்மித்ரனோட பேசிட்டு இருந்ததைச் சொன்னான். மித்ரனோட செல் நம்பரை உன் வீட்ல தேடினேன். பிரயோஜனமில்ல. ஃப்ரெண்ட் நீத்துகிட்ட கேட்கலாம்னு விசாரிச்சா, அவங்க தெரியாதுன்னு சொல்லிட்டாங்க.

அந்தநேரத்துல தான் ஒரு நாள் மித்ரனோட அப்பா, உன்னைத் தேடி எங்க வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கிளம்பின பின்னால அம்மா திரும்பத் திரும்ப உன்னையும், அங்கிளையும் திட்டிகிட்டே இருந்தாங்க. அப்பாவும் மறுத்து ஏதோ சொல்ல, கோபத்துல அம்மா வார்த்தையை விட்டுட்டாங்க.

அப்பாவும், நானும் திகைச்சிப் போயிட்டோம். அப்பா துருவித் துருவிக் கேட்க, அம்மா மழுப்பினாங்க. அப்போதான் உனக்கு யார் மூலமா விஷயம் தெரிய வந்ததோ அந்த சமையல்காரம்மா எல்லார் முன்னாலயும் உண்மையைச் சொல்லிட்டாங்க. உனக்கும் இதெல்லாம் தெரியும்ணும் சொன்னாங்க.

நீ என்னைவிட்டு மட்டுமில்ல. எங்க குடும்பத்தையே விட்டுப் போகணும்னு முடிவெடித்திருந்தன்னு புரிஞ்சது. அப்பா ரொம்பவே உடைஞ்சி போயிட்டார். அன்னைக்குப் படுக்கைல விழுந்தவர் தான். பிஸினஸ், அப்பா, உன்னைப் பத்தின கவலைன்னு என்னால தாக்குப் பிடிக்க முடியல. பணத்துக்கு ஆசைப்பட்ட எங்க அம்மாவுக்கு மிஞ்சினது மனவருத்தமும், எங்க அன்பை இழந்ததும் தான்.

இன்னைக்கு வரைக்கும் நானும், அப்பாவும் அம்மாகிட்ட பேசறதில்ல. ஒரே வீட்லதான் இருக்கோம். ஆனா, அன்னியமா எதிலேயும் தலையிட்டுக்காம எங்க வேலையைப் பார்த்துட்டு இருக்கோம்.

நாலு நாளைக்கு முன்னாலதான் எங்க அம்மாவுக்கு தகவல் சொன்ன வக்கீல் அங்கிள் வீட்டுக்குப் போய்ப் பேசினேன். உன்னைப் பத்தி, அவருக்கும் எதுவும் தெரியல. அவருக்குத் தகவல் சொன்ன இன்னொரு வக்கீல் மூலமா விசாரிச்சோம். உங்க தாத்தாவோட டீடெயில்ஸ் சொன்னார். உங்க தாத்தா வீட்டு வக்கீல் வெளிநாட்டுக்குப் போய்ட்டு வந்ததாகவும், ஏதாவது தகவல் வேணும்னா அவரைக் கேட்டுத்தான் சொல்லணும்னு சொன்னாங்க.

அப்பாவும், ஒருவேளை சுமித்ரா அங்கே இருக்கறதுக்கான சாத்தியக்கூறு இருந்தால் என்ன செய்றது? நீ போய் பார்த்துட்டு வான்னு சொன்னார். மித்ரனோட அப்பா எங்க வீட்டுக்கு வந்திருந்தபோது அவரோட பிஸ்னஸ் கார்டை எங்க வீட்ல கொடுத்துட்டுப் போயிருந்தார். அதை அப்பா பத்திரமா எடுத்து வச்சிருந்தாங்க.

அந்தக் கார்டோட விஜய்மித்ரனோட கார்டும் இருந்ததை நான் அப்போதான் கவனிச்சேன். பார்த்தால் மித்ரன் டெல்லில இருக்கான்னு மட்டும்தான் எனக்குத் தெரியும். அந்தக் கார்டைப் பார்த்ததும் ரெண்டு பேரும், ஒருத்தராக இருக்க வாய்ப்பு இருக்குன்னு நம்பினேன்.

எனக்கென்னவோ உன்னைத் தாத்தா வீட்ல தேடுறதைவிட, மித்ரனிடம் விசாரிக்கறது தான் சரின்னு பட்டுச்சி. இன்னைக்குக் காலைல டெல்லிக்கு வந்தேன். மித்ரனுக்குக் கால் செய்தேன். என்னை ஜெய்பூர் புறப்பட்டு வரச்சொன்னார். ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசினோம். இப்போ உன்னைப் பார்த்துப் பேசிட்டு இருக்கேன்” என்றான்.

பொறுமையாக அனைத்தையும் கேட்டுக்கொண்டவள் அவனது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

“நீ சந்தோஷமா இருக்கேன்னு தெரிஞ்சதுமே ரொம்ப நிம்மதியாக இருக்கு சுமி! உன்னால முடிஞ்சா எங்க எல்லோரையும் மன்னிச்சிடு” எனக் கையெடுத்துக் கும்பிட்டவனைப் பார்த்துத் தடுமாறிப் போனாள்.

“என்ன கிஷோர் இது?” என எழுந்து அவனது கரத்தைப் பற்றிக்கொண்டாள்.

“என்னோட அவசர புத்தியால அழகான ஒரு எதிர்காலத்தை எட்டி உதைச்சிட்டு நிக்கிறேன்…” என்றவனை வேதனையுடன் பார்த்தாள்.

“தப்பு என்கிட்டயும் இருக்கு கிஷோர்! நான் மறுத்திருந்தா என்னை நிச்சயம் நீங்க வற்புறுத்தியிருக்கமாட்டீங்க. உங்களுக்கு ஒரு ஹோப் கொடுத்து அதை உதாசீனப்படுத்தி…” என்றவள் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

விரக்தியாக புன்னகைத்தவன், “நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும். எனக்கு ஒன்பது மணிக்கு ஃப்ளைட். நான் கிளம்பறேன்” என்றவன் அவளது வலக்கையைப் பிடித்து, “உன்னோட திருமண வாழ்க்கை மகிழ்ச்சியா அமைய என்னோட நல்வாழ்த்துகள்! விரும்பினவங்களையே கல்யாணம் செய்துக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைக்காது. உனக்குக் கிடைச்சிருக்கு…” என்றவன் அவளது கரத்தை அழுத்திக்கொடுத்துவிட்டு விடுவித்தான்.

அவள் உணர்ச்சிப் பிழம்பாக நின்றிருக்க, “மித்ரனைக் கூப்பிடுறியா! சொல்லிட்டுக் கிளம்பறேன்” என்றான்.

அவளும் மித்ரனை அழைக்க, அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

“நான் உங்களை டிராப் பண்ணிடுறேன் கிஷோர்!” என்றான்.

“ஹேய்! இட்ஸ் ஓகே. கேப் இருக்கு. யூ கேரி ஆன்” என்றபடி சுமித்ராவைத் திரும்பிப் பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

ஏதோ உந்தித்தள்ள அவன் பின்னாலேயே சென்ற சுமித்ரா, “கிஷோர்!” என அழைத்தாள்.

“சொல்லு சுமி!” என்றான்.

“நீ என்னை மன்னிச்சிட்ட தானே…” கெஞ்சலாகக் கேட்டாள்.

சிரித்தபடி அவளது தோளில் தட்டியவன், “இது தேவையே இல்லாத கேள்வி” என்றான்.
“அப்போ எனக்கு ஒரு பிரமிஸ் பண்ணுங்க” என்றாள்.

அலுப்புடன் அவளைப் பார்த்தவன், “இதெல்லாம் சில்லித்தனமாயிருக்கு” என்றான்.

“என்னோட திருப்திக்காக. ப்ளீஸ்!” என்றாள்.

நெற்றியைத் தடவிக்கொண்டவன், “என் கல்யாண இன்விடேஷன் உனக்கு வரும்” என்றான்.

மனத்தில் தோன்றிய நிம்மதி முகத்தில் பிரதிபலிக்க, “தேங்க்ஸ்!” என்றாள்.

லேசான முறுவலுடன் விறுவிறுவென வாசலை நோக்கி நடந்தான்.

அவன் வாசலைத் தாண்டும் வரை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த சுமித்ரா, மித்ரனை நோக்கிச் சென்றாள்.

அவன் இளநகையுடன் அவளைப் பார்க்க, அவளோ, அவனைக் கடந்து சென்று சென்டர் டேபிள் மீதிருந்த தனது லெதர் கிளட்சை எடுத்துக்கொண்டு மீண்டும் அவனைத் தாண்டிச் சென்றாள்.

அவளது நடவடிகையை முறுவல் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தவன், தலையைக் கோதிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான்.

இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவள், ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மற்றவர்களைப் பார்த்ததும் முகத்தில் முறுவலைக் கொணர்ந்தாள்.

“என்ன சுமி! அதுக்குள்ள வேலை முடிஞ்சிடுச்சா? எங்கே அவன்?” எனக் கேட்டுக்கொண்டே வாசலைப் பார்த்தவர், மித்ரனைக் கண்டதும் ஏதோ விளங்க சட்டென பேச்சை மாற்றினார்.

சுமித்ரா, தாத்தாவின் அருகில் சென்று அமர்ந்துகொள்ள மித்ரன், தனது தந்தையின் அருகில் அமர்ந்தான்.

“சுமி! இங்கே வாம்மா!” என வித்யாவதி அழைக்க, எழுந்து சென்றாள்.

பழச்சாறுகள் அடங்கிய தட்டுடன் வந்தவள் , அனைவருக்கும் கொடுத்துவிட்டு மித்ரனின் முறை வரும்போது தட்டை அவனுக்கு அருகிலிருந்த டேபிள் மீது வைத்தாள்.

மற்றவர்கள் விளையாட்டில் மும்முரமாக இருக்க, இவர்களை யாரும் கவனிக்கவில்லை.
இரவு உணவின் போதும் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த பவித்ராவிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்த மித்ரன் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவளது இந்த பாராமுகத்திற்கான காரணம் அறிந்திருந்தவனுக்குக் கோபத்திற்குப் பதில் அன்புதான் பெருகியது.

“எல்லோரும் சீக்கிரமா படுங்க. காலைல நேரத்தோட எழுந்துக்கணும்” எனச் சொல்லிக்கொண்டே அனைவருக்கும் பால் டம்ளரைக் கொடுத்துவிட்டு தங்களறைக்குச் சென்றார் வித்யாவதி.

“குட் நைட் தாத்தா! குட் நைட் அண்ணா!” என்றபடி பவித்ரா செல்ல, பதிலுக்குச் சொன்ன மித்ரனும் எழுந்து தனது அறைக்குச் சென்றான்.

ஆரம்பத்தில் அவனாகவே வந்து பேசுவான் என அவள் நினைத்திருக்க, அவனோ இதுதான் சாக்கு என்பதைப் போலத் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க அவளுக்கு வெறுத்துப் போனது. உறங்குச் செல்லும் முன்பாக எப்படியும் தன்னிடம் பேச வருவான் என அவள் நினைத்ததற்கு மாறாக அவன் எழுந்து செல்ல, அவளுக்குக் கடுகடுவென வந்தது.

அவனுக்குப் பின்னாலேயே எழுந்து செல்ல முயன்றவளை அழைத்தார் இராமநாதன்.

மனத்திற்குள் எழுந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு, “என்னங்க தாத்தா?” எனக் கேட்டாள்.

“தூக்கம் வருதாம்மா!” எனக் கேட்டார்.

அவரது முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்க விரும்பாமல், “இல்ல தாத்தா!” எனப் புன்னகையுடன் அவரது கையைப் பிடித்துக்கொண்டு அவருடன் அறைக்குச் சென்றாள்.

இருவரும் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை.

மருந்தின் வீரியத்தில் மெல்ல அவர் கண் அயர, எழுந்து மாடிக்குச் சென்றாள்.

அவளது அறைக்கு அடுத்த மூன்றாவது அறைதான் மித்ரனின் அறை. மாடியில் நின்று பார்த்தாள். இந்தரின் அறையைத் தவிர மற்ற அறைகளில் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, மெல்ல மித்ரனின் அறையை நோக்கி நடந்தாள்.

மெல்லக் கதவைத் திறந்தவள் நிதானமான நடையுடன் உள்ளே சென்றாள்.
முன்னால் சிறு லாபியைப் போல இருந்த இடத்தில் இரண்டு பேர் அமரக்கூடிய அளவிற்கு இருக்கைகள் போடப்பட்டிருக்க, தடுப்பைத் தாண்டி உள்ளே நடந்தாள். விசாலமான அறையின் ஒரு பக்கத்திலிருந்த கிங் சைஸ் பெட் காலியாக இருந்தது.

குழப்பத்துடன் அவள் திரும்ப நினைத்த நேரத்தில், அவளது கழுத்தின் பின்புறம் உஷ்ணக் காற்றினால் உண்டான சிலிர்ப்பில் சுதாரித்து விலக நினைத்தவளது இடையை அவனது வலிய கரங்கள் வளைத்து இறுக்கின.

“ஹாய் பொண்டாட்டி! என்ன இந்த நேரத்துல இந்தப் பக்கம்?” அவனது கிசுகிசுப்பான குரல் அவளுக்கு சிலிர்ப்பைக் கொடுக்க, அவனிடமிருந்து விலக முயன்றாள்.

முடியாமல் போக, “விடுங்க விஜய்! நான் போகணும்” என்றாள்.

“நானா உன்னைக் கூப்பிட்டேன். போ” என அவளை விடுவித்தான்.

அவனை முறைத்தவள், “சரியான முசுடு” என்றாள்.

“உன்னையே ஏன் திட்டிக்கிற?” எனச் சிரித்தான்.

“உங்களை… ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசாதீங்க” என்றவள் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

“என்ன உன் ரூமுக்குப் போற ஐடியா இல்லயா?” என்றான் சிரிப்புடன்.

அவள் வேகமாக எழ, அவளது கரத்தைப் பற்றியபடி அமர்ந்தவன், அவளையும் இழுத்து அமரவைத்தான்.

“உனக்குக் கோபப்படக்கூடத் தெரியல. அப்புறம், ஏன் அதை ட்ரை பண்ற?” என்றான்.

அவள் மௌனமாக முறைத்தாள்.

“ஓகே. உன்கிட்ட சொல்லாம வரவச்சது தப்புதான். ஆனா, வேற வழி தெரியல. நீயும் அவனைப் பார்த்தா தைரியமா பேசுவேன்னு சொன்னயில்ல. எந்த சூழ்நிலையையும் நீ சமாளிச்சிடுவேன்னு நம்பிக்கை இருந்தது. அதான் வரவச்சேன்” என்றான்.

அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள், அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.

“ரொம்ப விவரம் தான். நான் கோச்சிக்கிட்டது அதுக்கு இல்ல” என்றாள்.

“பின்ன எதுக்காம்?” என்றபடி அவளது தோளை அணைத்தான்.

“என்னை மட்டும் பேசவிட்டுட்டு, போன் பேசணும்னு பொய் சொல்லிட்டுப் போனீங்களே அதுக்கு. நீங்க அங்கே உட்கார்ந்திருந்தா என்னவாம்?” என்றாள் கொஞ்சலாக.

“கிஷோர் பாவமில்ல… என் எதிர்ல அவன் எப்படி உன்கிட்ட எல்லாத்தையும் கொட்ட முடியும்? லவ் பண்றவங்க மனசு எப்படி இருக்கும்னு, எனக்கும் தெரியும். சோ, விஷயத்தைப் புரிஞ்சிகிட்டவனால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுன்னு தெரிஞ்சிதான் உன்கிட்ட பேச அனுமதிச்சேன். அவன்மேல ஒரு பர்சண்ட் டௌட் வந்திருந்தாலும், உன்னைப் பார்க்க இப்ப மட்டும் இல்ல எப்பவுமே அலௌவ் பண்ணியிருக்கமாட்டேன்” என்றான் உறுதியுடன்.

நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தவள் விழிகளில் நீர் அரும்ப, அவனது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

இடது கரத்தால் அவளது கூந்தலை ஒதுக்கியவன், “உன் கோபம் போயிடுச்சா. இப்போ போய் நிம்மதியா தூங்கு. குட் நைட்!” என்று அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

காதலும், கனிவும் பொங்கிய அவனது முகத்தை மனத்தில் நிறைத்தபடி, “குட் நைட்!” என்றாள்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
283
334
63
அத்தியாயம் - 44

சுமித்ரா குளித்துவிட்டு வெளியே வரும்போது வீடே பரபரவென இருந்தது. ஈரக்கூந்தலின் அடியில் முடிச்சிட்டு அதில் கொஞ்சம் பூவையும் வைத்துக்கொண்டு, புடவையை இழுத்துச் சொருகியபடி
வேலையாட்களை ஏதோ ஏவிக்கொண்டே திரும்பிய வித்யாவதி, மருமகளைக் கண்டதும் புன்னகைத்தார்.

“வா சுமி! கெட்டில்ல காஃபியிருக்கு. குடிச்சிட்டு தலையைத் துவட்டிக்கிட்டு இந்தப் பூவை வச்சிக்க” என்று குளிர்சாதனப் பெட்டியிலிருந்து கவரை எடுத்துக்கொடுத்தார்.

“நான் ஏதாவது ஹெல்ப் பண்றேன் அத்தை!” என்றாள்.

“ம், பூஜை ரூம்ல கொஞ்சம் வேலையிருக்கு. வா” என கையுடன் அழைத்துச் சென்றார்.

இருவரும் பூஜைக்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டு வெளியே வர, வீட்டிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக தயாராகி வந்தனர். அதன்பிறகு வீடே பரபரவென இருக்க, பூஜையை முடித்துவிட்டு அனைவரும் டைனிங்கில் அமர்ந்தனர்.

வெள்ளித் தட்டிலிருந்த சர்க்கரைப் பொங்கலை ஆர்வத்துடன் பார்த்தாள். நெய்யும், வெல்லமும் கலந்து நாவில் ருசிக்க, ஆசையுடன் உண்டாள்.

“எப்படியிருக்கு சுமி!” என்றார் வித்யா.

“சூப்பராயிருக்கு அத்தை!” என்று புன்னகைத்தாள்.

அருகில் அமர்ந்திருந்த இராமநாதன், “சுமிம்மா! பொங்கல் எதுக்குக் கொண்டாடுறாங்க தெரியுமா?” எனக் கேட்டார்.

அவள் பதில் சொல்வதற்குள், “பொங்கல் சாப்பிடத்தான்” என்றான் இந்தர்.

“டேய்!” என்றார் சிவராமன்.

“எஸ் டாட்!” என்றான் பவ்யமாக.

எதற்கும் அசராத அவனைப் பார்த்து தலையிலேயே அடித்துக்கொண்டார் அவர்.

“நல்ல நாளும் அதுவுமா ஏன் அவனைக் கோச்சிக்கிறீங்க?” என மகனுக்கு ஆதரவாகப் பேசினார் வித்யாவதி.

“நல்லாக் கேளுங்க மாம்!” என்றான் அன்னையிடம்.

வாயை மூடுடா!” என்று முறைத்தார் அவர்.

“வளர்ற பிள்ளையை இப்படி மிரட்டினா எப்படி?” எனக் கேட்டுக்கொண்டே திரும்பியவன், “வந்துட்டானே நம்ம எண்டர்டெயின்மெண்ட்” என முணுமுணுத்தவன், “சுமி! யார் வர்றா பாரு” என்றான் சிரிப்புடன்.

அங்கே வந்த ஆதி, இராமநாதன் காலைத் தொட்டு வணங்கியவன், “எல்லோருக்கும் ஹேப்பி பொங்கல்! என்றான்.

“வா வா அதுக்குத் தானே வந்திருக்க. வந்த அவசரத்துல புதுசா இருக்கற ஆளுகூட உன் கண்ணுக்குத் தெரியல” எனக் கிண்டலாகச் சொன்னான்.

அப்போதுதான் சுமித்ராவைக் கண்டவன், “ஹலோ மேடம்!” என்றான்.

அவளும் சிரிக்காமல், “ஹலோ!” என்றாள்.

இந்தரின் அருகில் அமர்ந்தவன், “என்னை ஏன்டா முறைக்கறாங்க?” எனக் கிசுகிசுத்தான்.

“பின்ன, நாமல்லாம் கூட்டுக் களவாணிங்க இல்லயா” என்றான்.

“கூட்டுக் களவாணின்னு என்னையும் ஏன்டா சேர்த்துக்கற. மெயின் களவாணியே அண்ணன் தானே” என்றான்.

உடனே அவன், “அண்ணா! என அழைக்க, பட்டென அவனுடைய வாயை மூடினான் ஆதி.

“டேய்! தெரியாத்தனமா இந்த ஜென்மத்துல உன் ஃப்ரெண்டா போயிட்டேன். அதுக்குப் பரிதாபப்பட்டாவது கொஞ்சம் பேசாம இரு” எனக் கெஞ்சலாகச் சொன்னான்.

அவனையே சில நொடிகள் பார்த்தவன், “போய்த் தொலை” என்றான்.

இராமநாதன் பேத்திக்குப் பொங்கல் பண்டிகையைப் பற்றி விளக்கிக் கூற, அவளும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் அமர்ந்திருக்க, பேச்சு எங்கெங்கோ சுற்றி கடைசியில் சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட டீமானிடைசேஷனில் வந்து நின்றது. அதிலிருக்கும் சாதக பாதகங்களையும், அதனால் நாட்டில் உண்டான அவலங்களைப் பற்றியும், சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டதையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“இன்னைக்கும் இதே பேச்சுதானா. இதைவிட முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்திப் பேசணும்னு இருக்கேன். பேசலாமா?” எனக் கேட்டார் வித்யாவதி.

“பேசேன். உன்னை யார் வேணாம்னு சொன்னது. இவ்வளவு நேரம் நாங்களெல்லாம் பேசினோம். இப்போ, நீ பேசு” என்றார் சிவராமன்.

பொதுவாக சிரித்தவர், “மாமா! எப்பவும் உனக்கு என்ன வேணும் கேளும்மான்னு சொல்லிட்டே இருப்பீங்க இல்ல. இன்னைக்கு நான் உங்ககிட்ட கேட்கப் போறேன். நீங்க முழுமனசோட சம்மதம் சொல்லணும்” என்றார் பூடகமாக.

“தாத்தா! அவசரப்பட்டு சரின்னு சொல்லிடாதீங்க. இந்த இராமாயணம் இருக்கே இராமாயணம்…” என ஆரம்பித்தவனை முறைத்தார் வித்யா.

“கொஞ்சம் நேரம் நீ சும்மா இரேன்டா! உனக்கு வாய் வலிக்குமா வலிக்காதா…” என்று திடீரென பொங்கினாள் பவித்ரா.

“சரிங்க மேடம்!” என்றான் பவ்யமாக.

“மாமா! அன்னைக்குக் காஞ்சனாவும், நானும் விளையாட்டா பேசின பேச்சை இன்னைக்கு நிஜமாக்கணும்னு நினைக்கிறேன்” என்றார் வித்யாவதி.

நெற்றிச் சுருங்கப் பார்த்தவர், “அப்படி என்னம்மா கேட்கப் போற?” எனக் கேட்டார்.

“உங்க பேத்தி சுமித்ராவை, இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா அனுப்பி வைங்கன்னு கேட்கறேன்” என்றார்.

திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்த சுமி, விஜய்மித்ரனைப் பார்த்தாள். அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் குறும்பாகச் சிரித்தான் அவன்.

“வாவ்!” என்று இளையவர்கள் ஆர்ப்பரிக்க, இராமநாதன் புன்னகையுடன் மருமகளைப் பார்த்தார்.

“வித்யாம்மா! இது நான்மட்டும் முடிவு எடுக்கற விஷயம் இல்ல. என் பேத்தியும், பேரனும் மனசார சம்மதம்னு சொன்னா, எனக்கும் சம்மதம்” என்றார் அன்புடன்.

“மித்ரன்! முதல்ல நீ” என்றார்.

சுமித்ராவை ஓரப்பார்வை பார்த்தவன், “லேடீஸ் ஃபர்ஸ்ட் தாத்தா!” என்றான்.

சிரிப்புடன் பேத்தியைப் பார்த்தவர், “சுமி கண்ணா! உனக்குச் சம்மதம் தானே…” எனக் கேட்டார்.

நாணமும், சந்தோஷமுமாக சம்மதம் என்பதைப் போலத் தலையை ஆட்டினாள் சுமித்ரா.

“இன்னும் என்னப்பா! இப்போ நீதான் சொல்லணும்” என்றார் சிவராமன்.

“தாத்தாவுக்கு ஓகேன்னா, எனக்கும் ஓகே” என்றான் குறும்பாக.

“அண்ணி!” என்றபடி அவளை பவித்ரா அணைத்துக்கொண்டாள்.

சிறு புன்னகையை அவளுக்குப் பதிலாக்கிய சுமித்ரா குறுகுறுவென விஜய்மித்ரனைப் பார்க்க, மந்தகாசப் புன்னகையுடன் அவளை நோக்கினான் அவன்.

சலிப்புடன், “நாம ஏன் நல்லவனா பேர்வாங்க முடியலன்னு அடிக்கடி கேட்பியே… இதான்டா காரணம். எல்லாத்தையும் சப்தமில்லாம செய்துட்டு, கடைசில அப்படியே ப்ளேட்டை மாத்திப் போடுற டெக்னிக் நமக்கு வரமாட்டேன்னுதே” என்றான் இந்தர்.

“நான் எப்போடா கேட்டேன்?” என ஆதி சொல்ல, அவனை எரிச்சலுடன் முறைத்தான்.

“உன்னை மாதிரி அரிச்சந்திரனைக் கூட வச்சிருந்தா நான் உருப்பட்டுடுவேன். என் வாயே எனக்குச் சத்ரு!” எனக் கடுப்புடன் சொன்ன, நண்பனைப் பார்த்துச் சிரித்தான் ஆதி.

“அத்தை! நான் ரூமுக்குப் போறேன்” என சுமித்ரா எழுந்து செல்ல, “அப்பா! நான் என் ஃப்ரெண்ட்ஸுக்குப் போன் பண்ணிச் சொல்லப்போறேன்” என பவித்ராவும் எழுந்து ஓடினாள்.

மற்றவர்கள் மேற்கொண்டு கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, சந்தோஷ மனநிலையுடன் அறைக்குள் அமர்ந்திருந்தாள் சுமித்ரா. மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருக்க, உடலெல்லாம் பரபரவென இருந்தது. உண்மையான சந்தோஷம் என்பது என்ன என்று இப்போது அவளுக்குப் புரிந்தது.

பால்கனியில் நின்று உடலை ஊடுருவும் அந்தக் குளிர் காற்றையும், அதைத் தணிக்க வந்திருப்பது போல சூரியன் மெல்லிய சூட்டை எங்கும் பரவவிட்டுக்கொண்டிருந்தான். இதமான அந்தச் சீதோஷணத்தை அனுபவித்தபடி அவள் நின்றிருக்க, அவளருகில் வந்து நின்றான் விஜய்மித்ரன்.

அதுவரை உள்ளுக்குள் மறைந்திருந்த இருந்த சிறுகோபம் மெல்லத் தலைதூக்க, திரும்பி நின்று அவனைப் பார்த்தாள். அவனும் சாய்ந்து நின்று அவளைப் பார்த்தான்.

“உங்களை மாதிரி வீட்டுக்கு அடங்கின பிள்ளைய நான் பார்த்ததே இல்ல” எனக் கிண்டலாகச் சொன்னாள்.

“இது நல்லாயிருக்கே. நீ மட்டும் அப்பா சொல்ற மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லலாம். எங்க தாத்தா சொல்ற பொண்ணைக் கல்யாணம் செய்துக்க, நான் சம்மதம் சொல்லக்கூடாதா?” என்றான் குறும்புடன்.

சிறு சிணுங்கலுடன், “அதுக்கு… எல்லோர் முன்னாலயும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” என்றாள் கொஞ்சலாக.

“ஒரு கிஸ் பண்ணா, உன் கோபமெல்லாம் போயிடும் பார்பி!” என தீவிர பாவனையுடன் சொன்னவனை விழியகல பார்த்தாள்.

“பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா!” எனப் பாடிக்கொண்டே அவளை அணைக்க முயல, சடாரென விலகினாள்.

“தொட்டா அடிதான் விழும்” என்றாள் கண்டிப்புடன்.

“ஹேய்! ரொம்ப மிரட்ற” சிரித்துக்கொண்டே சொன்னான்.

“ம்ம், அதெல்லாம் எனக்கும் தெரியும். முதல்ல இங்கேயிருந்து கிளம்புங்க. கல்யாணம் முடியற வரை இனிமே இப்படியெல்லாம் மீட் பண்ண அலௌட் கிடையாது” என்றாள்.

“எனக்கே ஒன் ஃபார்ட்டி ஃபோரா! நல்லா கேட்டுக்க. கிளம்பப் போறது நான் இல்ல; நீ! இன்னும் மூணு மாசத்துக்கு நினைச்சாலும் என்னை நேர்ல பார்க்க முடியாது” என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனைப் புரியாமல் பார்த்தாள்.

“ம்ம், இந்தக் கதையெல்லாம் வேணாம்” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “அண்ணி!” என்றபடி வந்தாள் பவித்ரா.

அண்ணனும் அங்கே இருப்பதைக் கண்டதும், “சாரி! டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” எனக் கேட்டாள்.

“குட்டி ராட்சஷி! உனக்கு ரொம்ப வாய் ஆகிடுச்சி. வந்த விஷயத்தைச் சொல்லு” எனத் தங்கையில் தலையைச் சிலுப்பிவிட்டு விட்டுச் சென்றான்.

“ம், அண்ணா!” எனச் செல்லம் கொஞ்சியவள், “அம்மா, உங்களைக் கூப்பிடுறாங்க அண்ணி!” என்றாள்.

ஹாலுக்கு வந்தவளிடம், “சுமி! உன் மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிகிட்டு ரெடியாகு. நாளன்னைக்குக் காலைல நீ உதய்பூருக்குக் கிளம்பற. இதோடு, கல்யாணம் முடிஞ்சிதான் உன்னை இந்த வீட்ல சேர்ப்பாங்க. அதுவரைக்கும் தாத்தாவோட அரண்மனைல உட்கார்ந்து, அண்ணனோட கனவுல தான் நீ டூயட் பாடணும்” என்ற இந்தரின் தலையில் செல்லமாகத் தட்டினார் வித்யாவதி.

“நான் சொல்லமாட்டேனா முந்திரிக்கொட்டை!” என்றவர், “அவன் சொன்னதையே அவளிடம் சொன்னார்.

சரியென அமைதியாகத் தலையை ஆட்டிக்கொண்டாள். இருந்த உற்சாகமெல்லாம் சட்டென வடிந்தது போலானது. ஆனாலும், அனைவருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

அதன்பிறகு, விஜய்மித்ரனிடம் தனியாகப் பேசவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவனது அறைக்குச் சென்று சந்திக்கவும் ஏனோ, தயக்கமாக இருந்தது. ஒருவேளை அவனாவது தன்னைத் தேடி வருவான் என்று நினைத்திருக்க, அதுவும் நடக்கவில்லை.

மறுநாள் மதிய உணவிற்குப் பிறகு, அவன் குடுகாவூனுக்குக் கிளம்பிவிட, மனச்சோர்வை மறைத்துக்கொண்டு அவனுக்கு விடைகொடுத்தாள்.

காரைக் கிளப்பும் முன் அவன் பார்த்த பார்வையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அதுவரை சற்று சோர்வுடன் இருந்தவள் மெல்லிய முறுவல் ஒன்றை புரிய, அவனும் சின்னச் சிரிப்புடன் கிளம்பினான்.

அவளது மனநிலை அறிந்தோ என்னவோ, வித்யாவதி அவளைத் தனியாக விடவில்லை. தாத்தாவிற்கு என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன மருந்துகள் கொடுக்கவேண்டும் என வரிசையாகச் சொல்ல, அவளும் கவனமாகக் கேட்டுக்கொண்டாள்.

மறுநாள் காலையிலேயே இந்தருடன் தாத்தாவும், பேத்தியும் கிளம்பினர். திரும்பி வரும்போது பேச்சுத் துணைக்காக ஆதியும் அவர்களுடன் கிளம்பினான்.

இந்தரும், ஆதியும் இருந்ததால் அவளுக்கு ஆறு மணிநேர பயண தூரத்தைக் கடந்ததே தெரியவில்லை. இராமநாதனும், பேத்தியுடன் வந்ததால் இரயில் பயணத்தைத் தவிர்த்துவிட்டு வந்திருந்தாலும், அவர்களது பேச்சிலும், சிரிப்பிலும் களைப்பை உணரவே இல்லை.

ஆரவல்லி மலைக் குன்றின் அடிவாரத்தில் பச்சைப் பசேலென்ற அந்தச் சூழலில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் சிறு கோட்டையைப் போலக் காட்சியளித்த அந்த வீட்டைப் பார்த்துத் திகைத்துப் போனாள்.

பத்தடி உயரத்திற்கு மதிற்சுவர்களுடன் காட்சியளித்த அந்தப் பிரம்மாண்டமான வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். ரிமோட்டின் மூலம் திறக்கப்பட்ட கேட்டைத் தாண்டி உள்ளே சென்றதும் அயர்ந்து போனாள்.

நவீன கட்டமைப்புடன் இருக்கும் அரண்மனைக்குள் வந்ததைப் போன்று இருந்தது அவளுக்கு.
பச்சை நிற வெல்வெட்டை விரித்து வைத்திருந்ததைப் போல வீட்டின் முன்புறமிருந்த தோட்டமும், இரு மருங்கிலும் வளர்ந்திருந்த விதவிதமான செடிகொடிகளும், மனத்தைக் கொள்ளைக் கொண்டன.

“சுமிம்மா! இறங்கலாம்டா!” என்றார் இராமநாதன்.

“ம்” என்றவளுக்கு தாத்தாவின் செல்வநிலை தான், மந்த்ராவின் செயலுக்குப் பின்னாலிருக்கும் எண்ணத்தின் காரணம் எனப் புரிந்தது.

வீட்டிலிருந்த வேலையாட்கள் பத்து பேரையும், அலுவலக ஆட்கள் ஐந்து பேர், வீட்டைக் கவனித்துக்கொள்ளும் கேர் டேக்கர் மூவர் மற்றும் இவர்கள் அனைவரையும் கவனித்துக்கொள்ள மேனேஜர் இருவர் (வீடு, அலுவலகம்) என்று மொத்தம் இருபது பேர் இருந்தனர்.
அனைவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

வேலையாட்கள் அவளது பெட்டிகளை மேலே அறைக்கு எடுத்துச் செல்ல, கிழேயிருந்த ஒரு அறையில் முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியில் வந்தவளுக்கு டவலுடன் ஒரு பெண்மணி காத்திருந்தார்.

“மேடம்! வீட்ல போட்டுக்கறதுக்கு உங்களுக்கு செப்பல்” என்று புத்தம்புது செருப்பு ஒன்றையும் கொடுத்துவிட்டுச் செல்ல, அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

மதிய உணவை மௌனமாகவே முடித்துக்கொண்டு எழுந்தாள்.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறியா சுமிம்மா!” எனக் கேட்டார்.

“இல்ல தாத்தா!” என்றாள் வேகமாக.

“அப்போ, சுமிக்கு வீட்டைச் சுத்திக் காட்டு இந்தர்!” எனப் பேரனுக்குப் பணித்தார்.

“ஏன்? நாங்கல்லாம் ரெஸ்ட் எடுக்க மாட்டோமா!” எனக் கிண்டலாகக் கேட்டான் அவன்.

“நீதானே” எனச் சிரித்துக்கொண்டே கேட்டவர், “கூட்டிட்டுப் போடா” என்றவர், தனது அறைக்குச் சென்றார்.

“அண்ணியார் அவர்களே வருகிறீர்களா!” என பவ்யமாகக் கேட்டவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“இந்தர் நீங்க என்னை இப்படி மரியாதையா கூப்பிடுறதுதான் என்னைக் கலாய்க்கிறது மாதிரி இருக்கு” என்றாள்.

“நான் மரியாதைக் கொடுக்கறதே அதிசயம். அதை வேணாம்னு சொல்லாதீங்க அண்ணி! ஏன்னா,” என்றவனை இடைமறித்து, “அண்ணின்னா அம்மா மாதிரி” என முடித்துவைத்தான் ஆதி.

புன்னகையுடன் அவனைப் பார்த்த இந்தர், “நண்பேன்டா!” என இறுக்கி அணைத்துக்கொள்ள, கலகலவென நகைத்தாள் சுமித்ரா.

ஐந்து அடுக்கு வீட்டின் ஒவ்வொரு தளத்திற்கும் சென்றுவர, லிஃப்ட் வசதி இருந்தது. கீழ்த் தளம் முழுவதும் ஹால், டைனிங், சமையல் அறை, அலுவலக அறை என்றிருந்தது.

“நாம நடந்து போவோம். அப்போதான் முழுக்க சுத்திப் பார்க்கலாம்” என்றவனைத் தொடர்ந்து சென்றனர்.
இரண்டாவது தளத்தில் நடுவில் மேலிருந்து ஹாலைப் பார்க்கும் வண்ணம் இருந்தது.

“இரண்டு பக்கமும் ஒரு பெரிய ஹால், அதுக்கு பிறகு இருக்கறது கெஸ்ட் வந்தா தங்கறதுக்கு ரூம்ஸ்” என்றவன் மூன்றாவது தளத்திற்கு அழைத்துச் சென்றான்.

“இந்தப் ஃப்ளோர் முழுக்க, சென்ட்ரலைஸ்ட் ஏசி. நம்ம வீட்டு ஆளுங்க தங்கறதுக்கு. இந்த ஹாலைச் சுத்தி மொத்தம் பதினாறு ரூம்ஸ் இருக்கு. பின்னால ஓபன் ஏரியா இருக்கு. ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். நைட்ல இங்கே உட்கார்ந்து பின்னால தெரியற மலையைப் பார்க்க, அருமையா இருக்கும். வெயில் காலத்துல எட்டு மணி வரைக்கும் வெளிச்சமிருக்கும். ஹில் ப்ளேஸ்ங்கறதால காத்துக்குப் பஞ்சமிருக்காது. சில நாள்கள்ல எங்க டின்னரே இங்கே தான் இருக்கும்” என்றான்.

அவன் சொல்வதையெல்லம் ஆழமாக உள்வாங்கிக் கொண்டாள். நான்காவது தளத்தில் ஜிம், விளையாட்டு அறை, ஹோம் தியேட்டர் அமைந்திருக்க, அதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல பின்னால் அமைந்திருந்த நீச்சல்குளம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. கச்சிதமான அளவில் அடியில் கடல்வாழ் உயிரினங்களின் படங்கள் வரையப்பட்டு அழகாக இருந்தது.

“பொதுவா நாங்க இங்கே வரமாட்டோம். பவி வந்தா பாதி நாள் இங்கேயே தான் இருப்பா. வீட்டுக்குப் பின்னால ஒரு பூல் இருக்கு” என்று அவளை அழைத்துச் சென்று காட்டினான்.

அது செவ்வக வடிவில் இல்லாமல், நடுவில் மரங்களும், இரண்டு ஹேமங்கும், அமர நான்கு கிரானைட் இருக்கை என சிறு தீவு போன்றும் அதைச் சுற்றி நீந்த ஏதுவாக அமைந்திருந்தது. ஒரு பக்கம் குன்றிலிருந்து அருவி விழுவது போல நீச்சல் குளத்தில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.

“இதுக்கு மேல டெரஸ். முக்கியமான ஆஃபிஸ் பார்ட்டீஸ் அங்கே நடக்கும். அவங்கலாம் வர்றதுக்கு கார் பார்க்கிங் பக்கத்திலேயே லிஃப்ட் இருக்கு. சில சமயம் கீழே கார்டன்லயும் நடக்கும்” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு மூன்றாவது தளத்திற்கு வந்தவன், அவளது அறைக்கு அழைத்துச் சென்றான்.

அறை சற்று இருளாக இருக்க, விளக்கைப் போடாமல் மூடியிருந்த நீண்ட திரையை ரிமோட்டில் திறந்தான். எதிர் பக்கத்திலிருந்த ஃப்ரென்ச் விண்டோவின் வழியாக வெளியில் தெரிந்த காட்சியில் ஸ்தம்பித்துப் போனாள். கண்ணுக்குக் குளிர்ச்சியாக மலைத் தொடரும், ஏரியும் அவளது மனத்தைக் கவர்ந்தது.

“வாவ்! எவ்ளோ அழகு” என்றாள்.

சிரித்தவன், “இது அத்தையோட ரூம். அதையே தாத்தா உங்களுக்கும் கொடுக்கச் சொன்னார். அத்தை யூஸ் பண்ணின திங்ஸ் எதுவும் இப்போ இல்ல. இதெல்லாம் தாத்தா உங்களுக்காக ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி, ரெண்டு நாள்ல ரூமை ரீ ஃபர்னிஷ் பண்ணியிருக்காங்க” என்றான்.

சுமித்ராவின் விழிகள் தளும்பின.

“ஓகே. நீங்க ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் பார்க்கலாம். உங்களுக்கு ஏதாவது வேணும்னா இண்டர்காம்ல கூப்பிடுங்க. நம்பர்ஸ் இங்கே இருக்கு” என அவளுக்குத் தேவையான விஷயங்களைச் சொல்லிவிட்டு கதவருகில் சென்றவன், “பக்கத்து ரூம் அண்ணாவோடது” என கூடுதல் தகவல் ஒன்றையும் கொடுத்துவிட்டுச் சென்றான்.

ஜன்னலருகில் சற்றுநேரம் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவள், கட்டிலில் சாய்ந்தபடி கீழே அமர்ந்துகொண்டாள். ஏனோ, மனத்திற்குள் இனம்புரியா பயமும், குழப்பமும் மாறி மாறித் தோன்றியது.

“ஐ மிஸ் யூ விஜய்!” என்று முனகியவள், கட்டிலில் தலையைச் சாய்த்துக்கொண்டவள், அறையிலிருந்த இண்டர்காம் ஒலிக்க, திடுக்கிட்டு விழித்தாள்.

“அண்ணி! கொஞ்சம் கீழே வரீங்களா! உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” என அழைத்தான் இந்தர்.

“இதோ வரேன்” என்றவள் மளமளவென முகத்தைக் கழுவி லேசாக பௌடரை ஒற்றிக்கொண்டு தலையை ஒதுக்கிக் கொண்டு கீழே வந்தாள்.

அப்போதுதான் தனக்கு யார் பார்சல் அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே வந்தவள் அங்கிருந்த பார்சலைப் பார்த்ததும் வாயைப் பிளந்தாள்.

“பார்சல்ன்னு சொன்னதும் நான் சின்னதா இருக்கும்னு நினைச்சேன். என் உயரத்திற்கு இருக்கு. போட்டோவா! யார் அனுப்பி இருக்காங்க” என இந்தரிடமே கேட்டாள்.

“பிரிச்சிப் பார்த்தா, உங்களுக்கே யாருன்னு தெரிஞ்சிடப்போகுது” என்றான்.

அந்தப் படத்தைச் சுற்றியிருந்த சிகப்பு நிற சாட்டின் ரிப்பனை அவிழ்த்துவிட்டு மூடியிருந்த வெல்வெட் துணியையும் பிரித்தவள், படத்தைப் பார்த்ததும் திகைப்புடன் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டாள். அவளது பெற்றோரின் புகைப்படம் ஆளுயரத்திற்கு வெள்ளியில் கோல்டன் டிப் ஃப்ரேமால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அவளது செய்கையைக் கண்ட இந்தர், “யாருன்னு தெரிஞ்சிடுச்சா! ஒரு பத்து நிமிஷம் உங்க ரூம்ல இந்த போட்டோவைச் செட் பண்ணிட்டு வருவாங்க” என்றவன் ஆதியுடன் வந்திருந்த வேலையாட்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.

“சுமி கண்ணா! போய்ப் பாரு” என அனுப்பி வைத்தார் இராமநாதன்.

வந்தவர்கள் வேலையை முடித்துவிட்டுச் சென்றதும், வேலையாட்கள் அந்த அறையைச் சுத்தம் செய்துவிட்டு நகரும் வரை, சுவற்றில் மாட்டியிருந்த பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள் போனை எடுத்தாள்.

கஸ்டமரிடம் பேசிக்கொண்டிருந்த விஜய்மித்ரன், அவளது எண்ணைப் பார்த்ததும், “எக்ஸ்க்யூஸ் மீ!” எனக் கேட்டுக்கொண்டு பால்கனியில் வந்து நின்றான்.

“மித்ரா!” என்று அவளது பெயரை உச்சரித்து முடிக்கும் முன்பே, “ஐ லவ் யூ விஜய்!” எனத் தழுதழுத்தாள்.

“அதுதான் தெரியுமே” என்றவன், “ஓஹ்! போட்டோ வந்துடுச்சா!” என்று சிரித்தான்.

“ஏன் என்கிட்ட சொல்லல?” எனக் கேட்டாள்.

“சொல்லியிருந்தா என்ன செய்திருப்ப?” எனக் கொஞ்சலாகக் கேட்டான்.

“ஹுக்கும்! உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது” என்றாள் பதிலுக்கு.

சிரித்தவன், “நீ கொடுக்கணும்னு நினைக்கிறதை, மொத்தமா சேர்த்து வை. நான் வந்து வட்டியும் முதலுமா வசூல் பண்ணிக்கிறேன்” என்றான்.

“வட்டி, முதலெல்லாம் போட்டு கொடுக்க இது என்ன வட்டி பிஸ்னஸா! லவ்! அதெல்லாம் அப்பப்போ கணக்கு முடிஞ்சிடும்” என்றாள் குறும்புடன்.

“அப்போ, கணக்கை நீ எழுதி வை. வசூல் பண்ணிக்கிறதை, நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

“அது உங்க சாமர்த்தியம்!”

“என்னோட சாமர்த்தியம் என்னன்னு உனக்கு இன்னும் முழுசா தெரியல பார்பி! அதுக்கான நேரம் வரும் போது ஐ வில் ஷோ யூ!” என்றான்.

சிரித்துக்கொண்டே, “இட்ஸ் மை பிளஷர்!” என்றாள்.

“ஓகே. என்னோட முதலாளி ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கார். கிளம்பறேன்” என்றான்.

“முதலாளியா?” என்றாள் கேள்வியாக.

“கஸ்டமர் தானே நமக்கு முதலாளி! ஓகேமா பார்பி! லவ் யூ! நைட் பேசறேன்” என்றான் .
“லவ் யூ டூ!” என்றவள் புன்னகையுடன் போனை அணைத்தாள்.

*************

பதினைந்து நாள்களுக்குப் பிறகு, அன்று உதய்பூரிலிருந்த இராமநாதனின் வீடு ஜெகஜோதியாக காட்சியளித்தது. இராமநாதன் உற்சாகத்துடன் வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்.

“வாழ்த்துகள் சார்! பேத்தியையும், பேரனையும் ஒண்ணு சேர்த்துட்டீங்க” என்று சிலர் சந்தோஷமாகவும், சிலர் சற்று புகைச்சலுமாகக் கூறினர்.

அனைவருக்குமே புன்சிரிப்புடன் தேவையான பதிலை வழங்கிக் கொண்டிருந்தார் இராமநாதன்.
சுமித்ராவின் தோழிகள் மூவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

“சுமி! நீ கல்யாண சாப்பாடு போடுற இல்ல. இப்போ நம்ம வன்யாவும், சங்கீயும் உனக்கு ஸ்வீட் நியூஸ் சொல்லப்போறாங்க என்றாள் நீத்து.

தோழிகளின் நாணச் சிரிப்பிலிருந்து விஷயத்தைப் புரிந்துகொண்டவளாக, “ஹேய்! இத்தனை நாளா மூணு பேரும் என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கீங்க…” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

“நீங்க மட்டும் என்ன மேடம்? விஷயத்தைச் சொன்னீங்களா?” என மாறி மாறி அவளை கிண்டல் செய்துகொண்டிருக்க, “இதுக்கு அது சரியா போச்சு” என்று சமாதானக் கொடி உயர்த்தினாள் சுமித்ரா.

“அதெல்லாம் போங்கு…” என அவளை சீண்டிக்கொண்டிருந்தனர்.

“சரி சொல்லாதது தப்புதான்” என கிண்டலுக்கு முடிவு கட்டியவள், “எனக்காக நீங்க மூணு பேரும் ஃபேமலியோட வந்ததுக்கு ரொம்பத் தேங்க்ஸ்!” என்றாள்.

“ஹேய்! சென்டிமெண்டா… ஆனாலும், நீ சொல்லாதது தப்புதான்” என ஆரம்பித்தாள் வன்யா.

“அடராமா!” என தலையிலடித்துக் கொண்டாள் சுமித்ரா.

அங்கு வந்த இராமநாதன், பேத்தியின் சிரிப்பைக் கண்குளிரப் பார்த்துக்கொண்டிருந்தார்.

குறிப்பிட்ட நல்ல நேரத்தில் தமிழ் மரபுபடி தாம்பூலம் மாற்றி, நிச்சயப் பத்திரிகை வாசித்து முடித்தனர். வந்திருந்த அனைவரும் ஆர்வத்துடன் விழாவைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மணமக்கள் இருவரையும் ஒன்றாக அமரவைத்து ஆரத்திச் சுற்றினார் வித்யாவதி.

“ஓகே! எங்க அண்ணா, அண்ணியோட நிச்சயதார்த்தத்துக்கு வந்திருக்கும் அத்தனைப் பேருக்கும் பெரிய தேங்க்ஸ். இதுவரைக்கும் சௌத் இண்டியன் ட்ரெடிஷனல் எங்கேஜ்மெண்டைப் பார்த்தீங்க. இப்போ நம்ம நார்த் ட்ரெடிஷனல் எங்கேஜ்மெண்ட்” என்று சப்தமாகக் குரல் கொடுத்தவன் தனது ஷெர்வானியின் பாக்கெட்டிலிருந்து ஒரு நகைப் பெட்டியை எடுத்துத் திறந்தான்.

“அண்ணா! ஃபர்ஸ்ட் நீங்க” என்று அவனிடம் நீட்டினான்.

வி என்ற ஆங்கில எழுத்தில் பொடிப்பொடி வைர கற்கள் பதித்த மோதிரத்தை சுமித்ராவின் விரல்களில் அணிவித்தான் விஜய்மித்ரன். அதே போல அவளும் எம் என்ற ஆங்கில எழுத்திலிருந்த மோதிரத்தை விஜய்மித்ரனின் விரலில் அணிவித்தாள்.

ஆதி ஒரு பெரிய கேக்கை அவர்களுக்கு முன்னால் வைக்க, அனைவரது கரகோஷங்களுக்கு இடையில் இருவருமாகச் சேர்ந்து வெட்டினர்.

தோட்டத்தில் பஃபே முறையில் உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, ஹாலிலிருந்த சுமித்ராவின் தோழிகளைச் சாப்பிட அழைத்த வித்யாவதி, “சுமி! நீ கொஞ்ச நேரம் உன் ரூம்ல இரும்மா. நான் கூப்பிடுறேன்” என அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.

“மாலையைக் கழட்டிடட்டுமா அத்தை!” எனக் கேட்டாள்.

“இரு” என்றவர் மூத்த பெண்மணி ஒருவரை அழைத்துக் கழற்றச் சொல்லி அவளிடமே கொடுத்தார்.

“இதே புடவைல இரு மாத்திடாதே” எனச் சொல்லி அனுப்பினார்.

மாலையை பெற்றோரின் படத்திற்குக் கீழிருந்த டேபிள் மீது வைத்துவிட்டுத் திரும்பியவள், தன்னைச் சுற்றிவளைத்த வலிய கரங்களில் சிக்கிக்கொண்டாள்.

“விஜய்!” என்று காதலுடன் அழைத்தவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

“உன்னை நேர்ல பார்த்து முழுசா பதினேழு நாள் ஆச்சு. திரும்ப உன்னைப் பார்க்கணும்னா இன்னும் ஒரு மாசம் வெயிட் பண்ணணும். அதுக்குத் தான் நீ மேலே வர்றதைப் பார்த்துட்டு வேகமா வந்தேன்.”

அவனை ஆழ்ந்து பார்த்தவள், “பொய்!” என்றாள்.

“கண்டுபிடிச்சிட்டியா?” எனச் சிரித்தான்.

“உங்களை எனக்குத் தெரியாதா! அத்தையோட பர்மிஷனோட தான் நீங்க வந்திருக்கீங்க. என் ஃப்ரெண்ட்ஸ் இப்போதைக்கு வரமாட்டாங்கன்னு எனக்கும் தெரியும்” என்றாள்.

சிரித்தவன், “அது உண்மைதான். ஆனா, நான் எர்லி மார்னிங் கிளம்பிடுவேன்” என்றான்.

“ஈவ்னிங் தானே வந்தீங்க” எனப் பரிதாபமாகக் கேட்டாள்.

“கொஞ்சம் பிஸிம்மா! நிறைய எக்ஸ்போர்ட் ஆர்டர்ஸ். நம்ம கல்யாணத்துக்குள்ள அதையெல்லாம் ஷிப்பிங்ல போட்டு முடிச்சாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கமுடியும்” என்றான்.

“ஓ!” என்றாள்.

“ம், அப்புறம்” எனக் கேட்டுக்கொண்டே சுவற்றில் சாய்ந்தவன் அவளையும் தன்னுடைய அணைப்பிலேயே வைத்திருந்தான்.

“ரொம்பத் தேங்க்ஸ் விஜய்! நீங்கமட்டும் இல்லன்னா…” என்றவள் அவனது நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்வ. இப்போ நீ உன்னோட வீட்ல இருக்க. சேஃபா இருக்க. அந்தச் சந்தோஷத்தோட இரு” என்று ஆறுதலுடன் கூறினான்.

“ம்ம். தாத்தா ரொம்பப் பாவம் விஜய்! இங்கே வந்த பின்னதான் தாத்தாவோட நிலைமை புரிஞ்சிது. என்ன இருந்தாலும், அம்மா அப்படி செய்யாம இருந்திருக்கலாம்” என்றாள் கவலையுடன்.

“ஹேய்! இருக்க இருக்க பழசையெல்லாம் தோண்டியெடுத்து கவலைப்படுவ போல…” என்றான் கேலியாக.

“கவலை இல்ல. ஆதங்கம்… அப்புறம், தாத்தாகிட்ட நான் சாரி கேட்டுட்டேன் தெரியுமா!” என்றாள்.
“தெரியுமே…” என்றான் இலகுவாக.

“தாத்தா சொன்னாங்களா!”

“கெஸ் பண்ணினேன். உன்னோட குணம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும் மித்ரா. தப்பை தப்புன்னு சொல்ல நீ தயங்கனது இல்ல. அதேபோல நீ புரியாமல் தெரியாமல் செய்த விஷயத்தைத் தப்புன்னு உணர்ந்தால் மன்னிப்பு கேட்கவும் செய்வன்னு தெரியும்” என்றான்.

“என்னைப் புரிஞ்சிகிட்டதுக்குத் தேங்க்ஸ்!” என்றாள்.

”எனக்கு இப்போ தேவை தேங்க்ஸ் இல்ல…” என அவன் விஷமமாகச் சிரித்தான்.

அவள் சுதாரித்து விலக முயல, அதற்கு அவன் அசைந்து கொடுத்தால் தானே…

“விஜய்!” என்று குழைந்தவளிடம், “பார்பி!” என அவனும் குழைந்தான்.
 
  • Like
Reactions: saru

Anuya

Well-known member
Apr 30, 2019
283
334
63
அத்தியாயம் - 46

அலங்காரங்களைக் கலைத்துவிட்டு முகத்தைக் கழுவி ஒற்றிக்கொண்டு ஈரத்தில் கலைந்திருந்த உச்சிவகிட்டு குங்குமத்தைச் சரிசெய்தவளது அதரங்கள் மெல்ல மலர்ந்தன.

கழுத்திலிருந்த தடித்த மஞ்சள்கயிறைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். திருமண சடங்கு சம்பிரதாயம் என நாளெல்லாம் அலைச்சலில் சோர்ந்திருந்த விழிகளில் நாணத்தின் சாயல் தெரிந்தது.

“அண்ணி! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்களுக்குக் காஃபி கொண்டு வந்திருக்கேன். ஆறிடப் போகுது சீக்கிரம் வாங்க” என்று குரல் கொடுத்தாள் பவித்ரா.

குளியலறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த சுமித்ரா, “தேங்க்யூ!” என்றபடி நாத்தனாரிடமிருந்து காஃபி கப்பை வாங்கிக்கொண்டாள்.

“உங்களுக்குப் ஃபிஃப்டீன் மினிட்ஸ் தான் டைமாம். அம்மா, இந்தச் சாரியைக் கட்டிக்கிட்டுச் சீக்கிரமா கிளம்பி வரச்சொன்னாங்க” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பவித்ரா.

உதய்பூர் வீட்டிலேயே உறவினர்களும், நட்புகளும் சூழ திருமணம் முடிந்திருந்தது. வார கடைசியில் ஜெய்பூரில் திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதிய உணவிற்குப் பிறகு, சற்றுநேரம் ஓய்வெடுத்துக் கொள்ளும்படி வித்யாவதி சொல்ல, அவள் அறைக்கு வந்துவிட்டாள். இரண்டு நாள்களாக போதிய தூக்கமின்மையால் இப்போது விழிகள் ஓய்விற்காக இறைஞ்ச, தன்னையும் அறியாமல் தூங்கி விழித்தாள்.

இராமநாதன் பேரனுக்கும், பேத்திக்குமாக மூன்று நாள்களுக்கு பிச்சோலா ஏரியிலிருக்கும் தாஜ் ஹோட்டலில் தேன்நிலவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இப்போது அங்கேதான் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர்.

வெள்ளை நிறச் சேலையில் வையலட் நிறப் பூக்களும், கொடிகளுமாக மெல்லிய இழையாக ஓடிய தங்க நிறச் சரிகையால் நெய்யப்பட்டிருந்த டிசைனர் புடவையை உடுத்திக்கொண்டாள்.

லேசாகக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த வித்யாவதி, மருமகளைப் பார்த்துத் திருப்தியாக முறுவலித்தார்.

“திரும்பு” என்றவர் கொண்டுவந்திருந்த மல்லிகைச் சரத்தை அவளது கூந்தலில் சூட்டினார்.

ஆசையுடன் அவளது கன்னத்தைத் தடவியவர், “நேரமாச்சு கிளம்பு…” என்றபடி தன்னுடன் அழைத்துவந்தார்.

மாடியிலிருந்த ஹாலில் வீட்டினரும், அவளது தோழிகள் மூவரும் கூடியிருந்தனர். தாத்தாவின் பக்கத்தில் நின்றிருந்த விஜய்மித்ரன் மென்மையாகப் புன்னகைக்க, வெட்கத்துடன் தாத்தாவின் மற்றொரு பக்கத்தில் நின்றாள்.

பேத்தியைப் பேரனுக்கு அருகில் நிற்கவைத்தவர், “பத்திரமா போய்ட்டு வாங்க. மித்ரன்! என் பேத்தியைப் பார்த்துக்க வேண்டியது, உன் பொறுப்பு. ஆஃபிஸ் வேலையைப் பத்தி விசாரிக்க போன் பண்ணவே கூடாது” என்று செல்லமாக மிரட்டிச் சொன்னார்.

“ஓகே தாத்தா! அப்படியே செய்திடுறேன்” எனச் சிரித்துக்கொண்டே அவரது பாதத்தைப் பணிந்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

அவள் ஒருவித பதட்டத்துடன் அமர்ந்திருப்பதை ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்துக்கொண்டே காரைச் செலுத்தினான். சில நிமிடப் பயணத்திற்குப் பிறகு இருவரும் படகுத் துறையை வந்தடைந்தனர்.

காத்திருந்த படகின் மூலமாகப் பிச்சோலா ஏரியின் நடுவில் அமைந்திருந்த தாஜ் ஹோட்டலுக்குப் புறப்பட்டனர். அதுவரை ஒருவார்த்தை கூட பேசிக்கொள்ளாத இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

மெல்ல அவளது கரத்தைப் பற்றிக்கொண்டவன், “டென்ஷனா இருக்கா?” எனக் கேட்டான்.

இல்லை என்பதைப் போலத் தலையை அசைத்தவள், மெல்ல ஆமாம் என்பதைப் போல மேலும் கீழுமாகத் தலையை ஆட்டினாள்.

சிரித்தவன், “ரிலாக்ஸ்! உன்னை மாதிரிதான் நானும்” எனக் கூறிக் கண்களைச் சிமிட்ட, இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தாள்.

படகிலிருந்து இறங்கியவன், அவளது கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டான். இருவரும் ஹோட்டலின் வாசலருகில் சென்றதும், மேலிருந்து ரோஜா இதழ்களைத் தூவி அவர்களை வரவேற்க, சிலிர்ப்புடன் அவற்றை இரசித்துச் சிரித்தாள் சுமித்ரா.

முழுவதும் வெள்ளை நிற சலவைக் கற்களால் அழகுற கட்டப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்ட அரண்மனையைக் கண்டு பிரமித்தாள். விதான வளைவுகளும், கண்ணாடியிலும், கண்ணாடிக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுவர்களும், மாடங்களும் கருத்தைக் கவர்ந்தன.

அந்தி மயங்கும் அந்த நேரத்தில் சூரியனின் செந்நிறக்கதிர்கள் நீரிலும், சுவற்றிலும் பட்டுப் பிரதிபலித்தன.

அவர்களது செக் இன் முடிந்து அறைக்குச் செல்வதற்குள் செந்நிறச் சூரியன் மறைந்து லேசாக இருள் கவிழ ஆரம்பித்திருந்தது. அரண்மனையைச் சுற்றிலும் அலங்கார விளக்குகள் பளீரென உயிர்பெற, ஏதோ தேவலோகத்தில் இருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

“திருமண நல்வாழ்த்துகள்!” என்றபடி வரவேற்புப் பெண்மணி அவளிடம் ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட பூங்கொத்தைக் கொடுக்க, புன்சிரிப்புடன் நன்றி கூறி வாங்கிக்கொண்டாள்.

உடன் வந்த பணியாளரை அனுப்பிவிட்டு விஜய்மித்ரனே கதவைத் திறந்தான்.

வராண்டா, ஹால், படுக்கை அறை, என்றிருந்த சூட்டிற்குள் வந்தவள் அதன் விசாலத்திலும், அழகிலும் அயர்ந்து போய் நின்றாள். தான் எங்கோ தேவலோகத்தில் இருப்பதைப் போன்று தோன்ற, கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் கொண்டுவந்த பெட்டியிலிருந்த உடைகளை வார்ட்ரோபில் மாட்டிக்கொண்டிருந்தான். பக்கவாட்டிலிருந்த கோர்ட் யார்டிற்கு வந்தவள், அங்கிருந்த மாடத்தின் வழியாகத் தெரிந்த தோட்டத்தையும், நீரூற்றுடன் கூடிய தாமரைக் குளத்தின் அழகிலும் மெய்மறந்து நின்றாள்.

பெருமூச்சுடன் பின்னால் நகர்ந்தவள், அங்கே நின்றிருந்தவனது நெஞ்சில் மோதிக்கொண்டவள் குறுஞ்சிரிப்புடன் உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றாள்.

அவன் என்ன என்பதைப் போல, கேள்வியுடன் புருவத்தை உயர்த்தினான்.

“கீழே தோட்டம் அழகாயிருந்தது. அதை இரசிச்சிட்டிருந்தேன்” என்றாள்.

“நானும் அதைத்தான் செய்துட்டிருக்கேன்” என்றவனது பார்வை இரசனையுடன் அவளை வருடியது.

“நீங்க இங்கே தானே…” என வேகமாக ஆரம்பித்தவள், அவனது வார்த்தைக்கான அர்த்தம் புரிய, வெட்கத்துடன் கீழுதட்டைக் கடித்தாள்.

புன்னகையுடன், “எனக்கு டீ சாப்பிடணும் போலயிருக்கு. போகலாமா?” எனக் கேட்டான்.

அவளும் சம்மதிக்க, இருவரும் ரெஸ்டாரண்டிற்கு வந்தனர். அங்கே பாரம்பரிய இராஜஸ்தானிய நடன நிகழ்ச்சி நடைபெற அதைப் பார்த்தபடி சற்றுநேரம் அங்கே அமர்ந்திருந்தனர்.

“ஹோட்டலைச் சுத்திப் பார்ப்போமா?” எனக் கேட்டான்.

அவளது கரத்தைத் தனது கையில் பிணைத்துக்கொண்டு மெல்ல அரண்மனையைச் சுற்றி வந்தனர். இரவு உணவிற்காக அவளை மேல்தளத்திற்கு அழைத்துச் சென்றான்.

அந்த ஏகாந்த இரவில் பால் நிலவின் வெளிச்சமும், அங்காங்கே இருந்த மெல்லிய வெளிச்சமும் மட்டுமே இருக்க, இரம்யமான சூழலின் பின்னணியில் வித்தியாசமான அந்த விருந்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.

நேரம் செல்லச் செல்ல அவனது அருகாமை குறுகுறுப்பை உண்டாக்க, அதை உணர்ந்தது போல, “என்ன மித்ரா?” என்றான்.

“ஆஹ், ஒண்ணுமில்ல…” என்றாள் வேகமாக.

“ரூமுக்குப் போகலாமா?” எனக் கேட்டான்.

தயக்கத்துடன் தலையை ஆட்டினாள்.

அறைக்கு வந்தவன், “ஒரு போன் பேசணும். பேசிட்டு வந்திடுறேன்” என வரவேற்பறையிலேயே அமர்ந்துவிட, அவள் கோட்யார்டில் வந்து நின்றாள்.

மிதமான குளிர் காற்று மேனியைச் சிலிர்க்கச் செய்ய, இரு கரங்களையும் உரசி கன்னத்தில் வைத்துக்கொள்ள, பின்னாலிருந்து அவளது இடையை வளைத்தான் மித்ரன்.

இதயம் படபடவென அடித்துக்கொள்ள, வெற்றியிடையில் ஸ்பரிசித்த அவனது கரத்தைச் சட்டெனப் பிடித்தாள். உடலில் பாய்ந்த மின்சாரம், மனத்தினுள்ளும் இறங்கியது. சிலிர்த்துத் தடுமாறிய உடலில் ஹார்மோன்கள் தனது வேலையைக் காட்டின.

“பார்பி! நீ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க. ரிலாக்ஸ்!” என காதருகில் கிசுகிசுத்தான்.

ஒரு கரம் இடையை அணைத்திருக்க, மற்றொரு கரத்திலிருந்த செல்போனில் தங்களை ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டான்.

“எதுக்கு இப்போ இந்தப் போட்டோ?” என்றாள் மெல்லிய குரலில்.

“இந்தக் கோல்டன் டைம் இனி நமக்குக் கிடைக்குமா! முதன்முதலா நாம ரெண்டு பேரும் சேர்ந்து நமக்கான நேரத்துல ஒரு ஸ்நாப். இந்த வெட்கமும், சந்தோஷமும் அடுத்து எடுக்கப் போற போட்டோல கூட கிடைக்காது” என்றான் இலகுவாக.

“போதுமே. இதை என்னவோ எடுத்து எடுத்துப் பார்த்துட்டே இருக்கப் போறது மாதிரி பேசறீங்க” என்றாள் சிரிப்புடன்.

“போறது மாதிரியா! என்னோட மொபைல் போன்ல இருக்கப்போற டிஸ்ப்ளே இமேஜே இதான்” என்றவன் அதை அப்போதே செய்தும் முடித்தான்.

“யாராவது பார்க்கறதுக்கா!” என சிறு கோபத்துடன் கேட்டாள்.

“இது என்னோட பர்சனல் போன். நம்ம வீட்ல அப்படிப் பார்க்கற ஆட்கள் யாரும் கிடையாது. அதோடு, இது எப்பவும் என்கிட்டதான் இருக்கும். இப்போ, நீ பார்க்க மட்டும் அலௌட்” என்றான்.

அவள் அமைதியாக நிற்க, செல்போனை பாக்கெட்டில் வைத்தபடி, “கொஞ்ச நேரத்துக்கு முன்னால எப்படியிருந்த பொண்ணு, இப்போ எப்படி மாறிப்போயிட்ட” என்று கண்களைச் சிமிட்டிச் சிரிக்க, அவள் நாணத்துடன் தலைக் கவிழ்ந்தாள்.

அவளது முகத்தை ஏந்தியவன், “என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்? நாம் தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க நிறைய நேரம் இருக்கு. எல்லாமே அவசரமா நடக்கணும்னு அவசியம் இல்ல. நீ சந்தோஷமா இருக்கணும். அப்போதான் நாம சந்தோஷமா இருப்போம்” புரிதலுடன் கூறினான்.

ஆம் என்பதைப் போலத் தலையை ஆட்டியவள், அவனது நெஞ்சில் முகத்தைப் பதித்துக்கொண்டாள்.

“பிடிக்காம இல்ல விஜய்! ஒரு குட்டி பயம்…” என்று குழைந்தாள்.

“தயக்கமே இருக்கக்கூடாதுன்னா, பயம் மட்டும் இருக்கலாமா! கூடாதே. இப்போ என்ன பண்ணலாம்!” என யோசித்தவன், “உனக்கு என்ன பிடிக்கும்?” எனக் கேட்டான்.

விழிகளை உயர்த்தி, அவனது முகத்தைப் பார்த்தாள்.

“உன்னைத் தான் பிடிக்கும்னு டயலாக் அடிச்ச, ஷார்ப்பா இருக்கற இந்த மூக்கைக் கடிச்சிடுவேன்” என்றான் செய்கையுடன்.

கிளுக்கெனச் சிரித்தவள், “ம், இந்த மாதிரி அழகான இடத்தைப் பிடிக்கும். பௌர்ணமி நிலாவைப் பிடிக்கும். உங்க நெஞ்சில இப்படிச் சாஞ்சிக்கப் பிடிக்கும். என்னை எனக்காக மட்டும் விரும்பற, என் விஜய்யை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்றவளது குரல் கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போது தழுதழுத்தது.

“என்னைப் பாரு!” என அவளது முகத்தை உயர்த்த முயன்றவனுக்குத் தோல்வியே கிட்டியது.

“ப்ளீஸ் விஜய்! இந்த ஒரு முறை மட்டும்” என்றவள் அவனை இறுக அணைத்துக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

அவனும் ஆறுதலாக அணைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவளது மனத்திலிருக்கும் வேதனையையும், சந்தோஷத்தையும் தனது கண்ணீரால் தீர்த்துக்கொண்டாள். மெல்லக் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளை, அமைதியாகப் பார்த்தான்.

அழுத குரலுடன், “எனக்கு இன்னொன்னு பிடிக்கும். அதைச் சொல்லாம விட்டுட்டேன்” என்றாள்.

“சொல்லு” என்றான்.

“பாட்டுப் பாட ரொம்பப் பிடிக்கும்” என்றாள்.

“பாடலாம். ஆனா, இந்த ஙஞணநமன குரல்லயா?” என்றான் கேலியாக.
“ம்ஹும்” என்றவள் தொண்டையைச் செருமிக்கொண்டு, அவனிடமிருந்து விலகியவள், கைகள் இரண்டையும் கோர்த்து தாடையைத் தாங்கியவள், விழிகளை உயர்த்தி அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
அவனும் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு, லேசாக சாய்ந்து நின்று சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.
“சொல்லாமல் கொள்ளாமல், நெஞ்சோடு காதல் சேர;
நெஞ்சோடு காதல் சேர, மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும், கை கோர்த்துப் போகும் பாதை;
கை கோர்த்துப் போகும் பாதை, கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள், பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே; பாரம் கூடுதே.
தேடாத தேடல்கள், காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே
சின்னச் சின்ன ஆச, உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம், கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க, நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க, என்னை உன்னோடு சேர்க்க
என்னோடு நீ உன்னோடு நான், ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்.
என்னோடு நீ உன்னோடு நான், ஒன்றாகும் நாள்!”
பாடி முடித்தவள், அவனைப் போலவே புருவங்களை உயர்த்தி, ‘எப்படி!’ என்பதைப் போலக் கேட்டாள்.
நிதானமான நடையுடன் அவளை நெருங்கி, “இதுக்கும் மேல நான் சும்மா இருந்தா…” என்றவன் அவளைக் கைகளில் ஏந்திக்கொள்ள, கரங்களை அவனது கழுத்தில் மாலையாகக் கோர்த்தவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
ஒருவரையொருவர் புரிந்துகொண்ட காதல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்குப் பயணிக்க இருக்கும் அவர்களது நேசத்திற்கு, என்றுமே முற்றுப்புள்ளி வைக்கப்படப் போவதில்லை. இது அவர்கள் வாழ்க்கையின் துவக்கம்.

வாழ்த்துவோம்! விடைபெறுவோம்!
 
  • Like
Reactions: saru